Powered By Blogger

Sunday, May 30, 2021

ஒரு சண்டே ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம்.  When it rains ..it pours !! 'மழையைக் காணோமே' என்று வானத்தை வெறித்துப் பார்க்கும் நாட்கள் நிறையவே ஓடியிருக்க, திடீரென்று மடை திறக்கும் வானமானது ஊற்றோ ஊற்றென்று ஊற்றித் தள்ளுமாம் ! இல்லீங்கோ...எங்க ஊருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் புயல், கியல் எதுவும் உருவாகியிருக்கவில்லை ; ஆகையால் நான் பெனாத்துவது வானம் வழங்கும் H2O கொடையினைப் பற்றியல்ல ; அதே வானத்தில் வசிக்கும் புனித தேவன் மனிடோ அருளும் காமிக்ஸ் மழையினைப் பற்றி !! Let me explain !!

"போன வருஷத்து லாக்டௌன் அனுபவம் இம்முறையும் தொடரலாகாது ; சோம்பேறியாய் உறங்கித் திரியாது , கிடைத்துள்ள அவகாசத்தினில் நடப்பு ஆண்டின் பணிகளை முன்கூட்டியே முடித்து வைக்கணும் ; இத்யாதி..இத்யாதி.. "என்ற தீர்மானங்களை என்ன தான் ஆவேசமாய் எடுத்திருப்பினும் - ஊடகங்களிலும், வாட்ஸப்பிலும் வந்து குவியும் ஊர் நடப்புகள் பணியின் மீது பெரிதாய் மையல் கொள்ள அனுமதிக்க மறுக்கின்றன ! இந்தக் கொடூரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் வரையிலும் வேறெதிலும் concentrate செய்வது சுலபமே அல்ல என்பது புரிகிறது ! பற்றாக்குறைக்கு 1 மாத முழு அடைப்பு எனும் போது - அந்தப் பணிகளின் முனைப்பானது குட்டிக்கரணம் போட்டாலும் வர மறுக்கிறது ! பற்றாக்குறைக்கு இங்கே 3 வாரங்களாக பதிவுப் பக்கத்தினில் அடிக்க முடிந்துள்ள லூட்டிகள் ; பஞ்சாயத்துக்கள் செம ஜாலியாய் இருந்திருக்க, சோம்பேறி சொக்கப்பானாக வலம்வந்திட கூடுதலாயொரு காரணமும் ஆகிப் போச்சு !

ஆனால் இந்த ஓய்வினில் ஒரு silver lining இல்லாமலும் இல்லை ! வாசித்து வருகிறேன்...வாசித்து வருகிறேன்...வண்டி வண்டியாய் வாசித்து வருகிறேன் ! கோரி வருகிறேன்..கோரி வருகிறேன்...காமிக்ஸ் மாதிரிகளை மலை மலையாய்க் கோரி வருகிறேன் ! அவர்களும் சளைக்காது மெயிலில் நான் கேட்பனவற்றையெல்லாம் அனுப்பித் தர, வீட்டுக்குக் கொண்டு வந்து மாட்டி வைத்திருக்கும் பிரிண்டர் கண்ணீர் வீட்டுக் கதறும் வரையிலும் துவை துவையென்று துவைத்து எடுக்கிறேன் ! இது பீற்றலுக்கானதொரு statement அல்ல guys - ஆனால் நமது சேகரிப்பில் உள்ள கதைகளின் மாதிரிகளைக் கொண்டே அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டே அட்டவணை போட்டு விடலாம் தான் ! Phew...!!  அந்த வாசிப்பினில் கிட்டிய புதையல் பற்றியே இந்த ஞாயிறின் குட்டி மொக்கை !

அது பற்றிப் பேசும் முன்பாய் - அதற்கு முன்னோடியாய் அமைந்திட்ட நிகழ்வு(கள்) பற்றி முதலில் ! முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 பற்றி கடந்த சில பதிவுகளில் செம அலசு அலசியிருந்தோம் அல்லவா ? அதன் முடிவில் உங்களில் கணிசமானோர்க்கு முழுசாய் திருப்தி நஹி ; ஒரு சிலருக்கு downright ஏமாற்றம் ; இன்னும் சிலருக்கோ - "இம்புட்டு தானாக்கும் ? இதுக்கு எதுக்குப்பு இந்த பில்டப் ?" என்ற கடுப்ஸ் என்று அழகாய்ப் புரிந்திருந்தது ! இந்த அலசல் இப்போ எதுக்கு ? என்ற ரீதியில் விசனங்களுமே விரவியிருந்ததை நான் கவனிக்கத் தவறிடவில்லை ! 

அந்தப் பதிவின் நோக்கங்கள் என்னளவில் இரண்டு !  யதார்த்தங்களின் வரையறைகளை ; தற்போதைய கதைகளின் தன்மைகளை ; அவற்றினுள் வூடு கட்டியடிப்பதன் சிக்கல்களை விளக்குவதும், உங்களின் வானளாவிய எதிர்பார்ப்புகளை சித்தே மட்டுப்படுத்திட முனைவதுமே  நோக்கம் # 1 ஆக இருந்தது ! நோக்கம் # 2 - எனக்குள் ஒரு லேசான ப்ளூபிரிண்டாக உருவாகியிருந்த இதழின் template குறித்து உங்களின் எண்ணங்களை புரிந்திட முயற்சிப்பதே ! உத்தேசமாய் சில கதைகள் ; சில கூட்டணிகள் என்று ஒரு பென்சில் ஸ்கெட்ச் போட்டிருந்தேன் & உங்களின் அங்கீகாரங்கள் கிடைத்திடும் பட்சத்தில் அதனை சற்றே develop செய்து வர்ணமூட்டி, மெருகேற்றிட எண்ணியிருந்தேன் ! ஆனால் அன்றைய ரவுசுகளில் எனது 2 நோக்கங்களுக்குமே கிடைத்திருந்தது என்னமோ ஷெரிப் டாக்புல்லின் பாணியிலான கும்மாங்குத்துக்கள் தான் !!

"நிலவரங்கள் புரியுது ; கஷ்டங்கள் மன்சிலாயி ; சிக்கல்கள் செசுகொண்டி ; ஆனா "நீ என்னமோ பண்ணிக்கோ ; எதுவோ பண்ணிக்கோ - ஆடலும் பாடலும் போட்ட்டட்டே தீரணும் !!" என்ற உங்களின் எண்ணங்கள் வெளிப்பட்ட போதே எனது நோக்கம் # 1 பப்படமாகி இருந்தது ! ரைட்டு....அட்டவணையில் வேறு எங்காச்சும் கொஞ்சம் கைவைத்து இங்கே நிரவல் செய்ய முயற்சிக்கலாமென்று நினைத்துக் கொண்ட போது விழுந்த ரெண்டாம் கும்மாங்குத்து தாடையைச் சுளுக்கிக்க வைத்தது ! நான் மனதில் கொண்டிருந்த கதை சார்ந்த அவுட்லைன் நிறைய ; நிறையவே மெருகூட்டிடப்பட வேண்டுமென்பதை "குத்தடி குத்தடி...சைலக்கா.....குமட்டிலே குத்தடி சைலக்கா !" என்ற உங்களின் தாண்டவங்கள் புரியச் செய்தன ! மூக்கில் ஒழுகிய தக்காளிச் சட்னிகளை துடைக்க தலீவரின் அந்நாட்களது கடிதக் கணைப் பேப்பர்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே 'கெக்கே பிக்கே'வெனச் சிரிப்பு தான் எழுந்தது எனக்கு  ! "ஆத்தி....ஆறு மாசம் முன்னமே வெறும் வாயாலே சுட்ட வடைக்கே இந்தச் சாத்து ; நான்பாட்டுக்குக் கமுக்கமா என்னோட ப்ளூபிரிண்டை நடைமுறைப்படுத்துறேன் பேர்வழின்னு ஒரு ஏப்ப சாப்பையான புக்கை மட்டும் ஜனவரி 2022-ல் இறக்கி விட்டிருந்தால்  - கார்சன் நள்ளி எலும்பைக் கடிக்கிறது போல ஆளுக்கு அரை கிலோவைக் கடித்திருப்பார்களே !! "என்பதை நினைத்தேன் - சிரித்தேன் !! 


ஆக, ஒரு அவசர திசை திருத்தம் செய்திடாவிட்டால், ஜனவரியில் கப்பலானது மடேரென எங்கயாச்சும் முட்டிக்கிடக்கும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! அது புரிந்த நொடியிலேயே நான் பொதுவெளிக்கு அத்தனையையும் கொண்டு வந்து அலசியதன் புண்ணியமுமே புரிந்தது ! So ரொம்பவே தெளிந்த மண்டையோடு புதிதாயொரு ரூட்டில் பயணிக்க போட்ட ஸ்கெட்சின் முதல் படி தான் அந்த வாசித்தல் & வாசித்தல் & more வாசித்தல் ! அந்த வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னொரு தொடரே இந்தப் பதிவின் முதல் வரிக்கான அச்சாரம் ! 

ஐம்பதாவது ஆண்டு மலருக்கென ஏற்கனவே 2 ஆக்ஷன் / spy த்ரில்லர்ஸ் பாணியிலான கதைகள் கண்ணில்பட்டிருப்பதை விவரித்திருந்தேன் ! And 2 நாட்களுக்கு முன்பான வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னும் இரு அதகள ஆக்ஷன் blocks செமத்தியாய் மெர்சலூட்டின !! அவற்றுள் முதல் தொடரானது ஒரு விதத்தில் எனக்கு முற்றிலும் புதிதல்ல தான் ; ஏற்கனவே  பரிசீலனைக்கு மேஜை வந்து, அன்றைய சூழலில் "ஸ்லாட் காலி இல்லையென்ற" காரணத்தினால் waiting list-ல் அமைதி காத்து வரும்  ஆக்கம் அது ! திரும்பவும் அதனைத் தோண்டி எடுத்து இம்முறை black & white பிரிண்ட்அவுட்களில் அல்லாது - கலரில், கம்பியூட்டர் ஸ்க்ரீனில் பார்த்த போது பிட்டம் நாற்காலியில் தங்கிட மறுத்தது !! முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆக்ஷன் ஐரோப்பாவின் சில பல அசாத்திய அழகிலான தலைநகரங்கள் வழியாய் "மின்னும் மரணம்" முன்பதிவு எக்ஸ்பிரஸின் அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி ! இது வெளியாகிடும் நாளில் சிலபல "இளவரசிப் பேரவைகள்" ராவோடு ராவாய் அஸ்தமனம் கண்டு ;  இங்கே லைனாக டாக்டர்கள், தொழிலதிபர்கள் ; செயலர்கள் ; சிஷ்யர்களென்று நிற்கவிருப்பது உறுதி ! And கதை !! லார்கோ sagas மிரட்டல் ரகமென்று எண்ணியிருந்த நம்மையெல்லாம் பார்த்து "ஹைய்யோ..ஹையோ..!!" என்று கெக்கெலி செய்கிறது இந்த stunner ! நாயகனோ - அகிலத்தையும் அடித்து, உடைத்து, துவம்சம் செய்திடும் ஆல்-இந்த-ஆல் தெரிந்த அழகேசன் அல்லவே அல்ல ; ஆனாலும் நம்மை தன்னோடு கட்டியிழுத்துப்  பயணிக்கும் சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் ! கதையைப் படித்து முடித்த வேளையில் என் முன்னே ஒரு கிழிந்த காகிதக் குவியல் இருப்பது தென்பட்டது ! அது வேறென்னவும் இல்லை ; இதற்கு முன்பாக நான் போட்டு வைத்திருந்த ப்ளூபிரிண்ட்களை என்னையும் அறியாமலே, கதையின் வாசிப்பினூடே கிழித்திருந்ததன் பலன் !! என்ன ஒரே சிக்கல் - கதையின் ஓட்டமும் சரி, வசன நடையும் சரி - செம contemporary ! இங்கே மொழிபெயர்ப்பில் குறுக்கு கழன்று விடுமென்பதில் இம்மியும் ஐயமில்லை எனக்கு ! தொடரும் நாட்களில் இதற்கான உரிமைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது முதல் வேலை ; அப்புறமாய் இந்தப் பணியின் தீவிரத்தை எண்ணி இப்போதிலிருந்தே உதறும் வலது  புஜத்தை சித்தே தாஜா செய்திட வேண்டும் ! Is going to be a mountain to climb for sure !!

ரொம்ப ரொம்ப காலம் ஆகி விட்டது - ஆற்றல் நிறைந்த ஆக்ஷன் / spy த்ரில்லர் ரக நாயகர்களைப் பார்த்து ; ஆனால் இங்கு சமீபத்தில் எனக்கோ ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பேர் கண்ணில் பட்டுள்ளனர் எனும் போது -அடை மழையோடு ஒப்பிடுவதில் தப்பில்லைதானுங்களே ? 

And இதில் கொடுமை இன்னமும் பாக்கியுள்ளது ! புதிதாய் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் advance preview files என இன்னொரு ஆல்பத்தின் பக்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்தன ! And அதுவும் கிஞ்சித்தும் சளைக்கா அதிரடி ரகம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு தேசத்தின் canvas தான் இந்த ஆல்பத்தின் பின்னணி ! புது நாடு ; புது ஜனம் ; புது ஆக்ஷன் ; புது கதையோட்டம் ; புதுச் சித்திர பாணி ; புது எல்லாமே இங்கே !! முதல் பாகம் மட்டுமே வந்திருக்க, அதனைப் பராக்குப் பார்த்ததிலேயே ஒரு பிஸ்லெரி பாட்டில் ஜொள் ஓடியிருக்க, அவசரமாய் ரெண்டு லிட்டர் பாட்டிலுக்கும், இரண்டாம் பாகக் கோப்புகளுக்கும் கோரிக்கையினை வைத்துள்ளேன் ! அவை வந்தான பின்னே ; பரிசீலித்த பின்னே - மறுக்கா ப்ளூபிரிண்ட் போடணும் - புதிய திக்கினில் ! "அட்டவணை போடறேன்" என்று வருஷா வருஷம் கிழிக்கும் காகிதம் ஒரு பக்கமெனில், இப்போது புதிதாய் இந்தத் திட்டமிடலும் சேர்ந்து கொள்ள - சீக்கிரமே TNPL மில்லில் உற்பத்தி வேகத்தைக் கூட்டினார்களென்றால் தமிழகம் தப்பிக்கும் என்று மட்டுமே தோன்றுகிறது !! It simply pours !!!

இவை தவிரவும், இன்னமும் வாசிப்புக்கோசரம் லைனில் உள்ள கதைகள் கத்தையாய்க் காத்திருக்க, தொடரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம்  காத்துள்ளனவோ - தாவாங்கட்டைக்குக் கீழே பிஸ்லெரி பாட்டில்களோடு வெயிட்டிங் !! So இன்னமும் என்ன காத்துள்ளது நமக்கு ? கதைகளின் கூட்டணியானது எவ்விதமிருக்கும் ? விலை என்னவாக இருக்கும் ? இறுதி காணவுள்ள கதைகள் எவையோ ? என்பதையெல்லாம் தொடரும் நாட்களிலும், வாரங்களிலும் - சிறுகச் சிறுக இறுதி செய்திட முனைவேன் ! Still miles & miles & miles to go in the planning !!

இந்த நொடியில் இன்னொருக்கா தரையில் உருண்டு புரண்டு சிரிக்கத் தோன்றுகிறது - "எல்லாமே டிராமா ; முன்கூட்டியே எடுத்த முடிவுகளைக் கொண்டு ஆடும் பொம்மலாட்டங்கள் !" என்ற ரீதியிலான விஞ்ஞானபூர்வக் கண்டுபிடிப்பினை எண்ணி ! இந்த நொடியில் "சுட்டீஸ் கார்னர்" பகுதியைத் தாண்டி வேறெந்தப் படைப்புமே தனக்கான இடத்தை துண்டு போட்டுப் பிடித்திருப்பதாக யாருக்கேனும் உறுதிபடத் தோன்றினால், அவர் nostradamus-க்கு சவால் விட்டுக் கொண்டிருக்க வேண்டியவர் ! யார் நம்பினாலும் சரி, நம்பாது போனாலும் சரி - சாயம் பூசா நிஜமிதுவே ! 

இந்தப் பயணத்தில் நான் எப்போதுமே மனதில் தோன்றுவதை அப்படியே செயலாக்கி விட்டு, அப்பாலிக்கா தான் அதன் சாதக-பாதக விளைவுகளை எண்ணி சந்தோஷம் கொள்வதோ, மண்டையைச் சொரிவதோ உண்டு ! Has been no different this time ; ஆனால் இம்முறையோ ஒரு மெகா நிம்மதிப் பெருமூச்சு என்னுள்ளே !  ஓட்டைவாய் உலகநாதனாய் ; நீண்ட பதிவு நித்தியானந்தனாய் இம்முறை இருந்துள்ளமையை எண்ணி நிச்சயமாய் நான் சந்தோஷம் கொள்கிறேன் !! ஜெய் கைலாஷா !!

சகலமும் இறுதி கண்ட பின்பாய், நவம்பரின் மத்தியிலிருந்து முத்துவின் இந்த ஸ்பெஷல் இதழின் டிரெய்லர்களை ஒன்றன் பின் ஒன்றாய்க் களமிறக்க எண்ணியுள்ளேன் ! So அக்டோபர் முதலாய் நமது IT அணியினை பிசியோ பிசியாக்கிட உத்தேசம் ! And இதோ பாருங்களேன் - நம்மள் கி லேட்டஸ்ட் IT அணியின் ஜாயிண்ட் !! மேலுள்ளவையும், கீழே தொடர்பனவும் யாருடையதென்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் ; அவருக்கும் விளம்பரங்களே பிடிக்காதென்பதால் memes-களில் பெயரெல்லாம் போட்டிருக்க மாட்டார் தான் ; அகஸ்மாத்தாய்  ABC எழுதிப் பழகும் முனைப்பில் சில பல எழுத்துக்களை இனிஷியல் போல ஆங்காங்கே பதிந்திருந்தால் அது அகஸ்மாத்தாயே அணுகிடப்பட வேண்டிய விஷயம்  மட்டுமே என்று சொன்ன கையோடு கிளம்புறேனுங்கோ ; reading waiting !!



Bye all !! See you around !! Safe days ahead !!

Saturday, May 29, 2021

சனிக்கிழமை ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம். இந்த வாரத்தின் ஒரு நாளில் முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்களுடனானதொரு ZOOM மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது ! கவலை தோய்ந்த முகங்களுடன், இங்குள்ள கொரோனா கொடும்தாண்டவம் பற்றியும், நமது தடுப்பூசி சாத்தியங்கள் பற்றியும் நிறைய நேரம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள், அக்கறையாய் நமது மார்க்கெட் நிலவரங்களையும் பற்றி விசாரித்தார்கள் ! கடைகளிலும், புத்தக விழாக்களிலும் பெரிய திண்டுக்கல் பூட்டுக்கள் தொங்குவதை பற்றியெல்லாம் ரொம்பவே விலாவாரியாய்ச் சொல்லி வைத்து, அவர்களது சங்கடங்களை மேற்கொண்டும் அதிகரிப்பானென்று, மேலோட்டமாய் மட்டுமே சொல்லி விட்டு - நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன் !

எனது முதல் கேள்வி, 'தளபதி' சாரின் இரண்டாம் (க்ளைமாக்ஸ்) ஆல்பம் எப்போது ரெடியாகும் என்பதாகவே இருந்தது ! "Not so good news" என்றார்கள் பதிலாய் ! தொடரினில் பணியாற்றி வரும் புது அணியின் ஓவியர் வேறு ஏதோவொரு project-ல் மும்முரமாய் இருப்பதால், 2022-ன் ஏதோவொரு தருணத்தில் ரெடியாகிடக்கூடும் என்று சொன்னார்கள் ! No dates as such ; ஆகையால் நமது 2022 அட்டவணையிலும் நம்பி, தைரியமாய் அறிவிக்க வழி தெரியக்காணோம் ! So  'தல' ஆண்டு # 75-ல் தான் தளபதியையும் கண்ணில் காட்ட இயலும் போலும் !!

எனது அடுத்த கேள்வி - மோனப்பார்வையாளரின் அடுத்த ஆல்பம் எப்போதென்பது குறித்தே இருந்தது ! XIII-ன் காத்திருக்கும் ஆல்பம் # 28 குறித்து இன்னமும் உறுதியான தேதிகளில்லை ; ஆனால் நடப்பாண்டின் இறுதிக்குள் இருந்திடுமென்று நம்பலாமாம் ! "2132 மீட்டரில்" (ஆல்பம் # 26) துவங்கிய அந்தத் 'திக் திக்' பயணம் - "நினைவோ ஒரு பறவை" (ஆல்பம் # 27) இதழினில் முற்றுப் புள்ளி காணும் கையோடு, மறதிக்கார XIII-ஐ வேறொரு திக்கில், இன்னொரு டபுள் ஆல்பப் பயணத்தில் இட்டுச் செல்லவுள்ளது போலும் ! இம்முறை (மறுக்கா) க்யூபாவுக்குப் பயணம் போகிறாராம் மனுஷன் ; அப்புறமாய்  ரஷ்யாவுக்கு ! திரும்பவும் ஜெயில்வாசம் அது, இதுவென்று ஜேசனைப் புரட்டியெடுக்க உள்ளனர் போலும் ! இந்த இரண்டாம் சுற்றின் ஓவியர் Jigounov சும்மாவே பட்டையைக் கிளப்புகிறவர், இதில் கதையோட்டம் தனது தாய் மண்ணான ரஷ்யாவுக்குச் செல்லும் போது ரகளை செய்வாரென்று எதிர்பார்க்கலாம் ! "RACE FOR A HACKER" என்ற தலைப்போடு உருவாகி வரும் புது ஆல்பத்தின் நெட்டில் கிட்டிய b&w பக்கப் பார்வை இதோ : 

நெட்டில் கண்ணில்பட்ட மேற்கொண்டான சில XIII சார்ந்த சில கொசுறுத் தகவல்களுமே சுவாரஸ்யமாய் இருந்தன :

சமீபமாய் வெளியான MEMORY RECHARGED ( "நினைவோ ஒரு பறவை" என நாம் வெளியிடவிருப்பது ) 160,000 பிரதிகள் பிரிண்ட்ரன் கொண்டதாம் ! (வான்ஸ் & வான் ஹாம் இணைந்து உருவாக்கிய துவக்க ஆல்பங்களெல்லாம் 4 இலட்சம் ரேஞ் !!) இது வரையிலும் ஒண்ணரைக் கோடி புக்ஸ் விற்றுள்ளனவாம் XIII-ன் தொடரினில் ! (நாம் சீக்கிரமே அச்சிடவுள்ள மறுப்பதிப்பைச் சேர்த்து "ஒண்ணரைக் கோடியும், முந்நூறும்" என்று தரவுகளைத் திருத்திக்கச் சொல்லணும் போலுமே !!

ரைட், on the subject of our reprint - போன வருஷம் துவங்கிய நமது XIII வண்ணத்தொகுப்பின் முன்பதிவு ரயிலானது, எக்ஸ்பிரஸாகத் துவங்கி, மெயிலாக மாறி, பின்னர் பேஸஞ்சர் வண்டியாய் உருமாற்றம் கண்டு, இப்போது தட்டுத் தடுமாறி இலக்கைத் தொட்டு விட்டுள்ளது ! நேற்றைக்கு முன்தினம் ஏஜெண்ட் ஒருவர் 50 பிரதிகளுக்கு ஆர்டர் செய்திட்டதால் ஒரு மாதிரி எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டுள்ளோம் ! So 210 முன்பதிவுகள் உங்களது & 100 ஏஜெண்ட்களினது ! பிந்தைய அந்த நம்பர் மட்டும் நமக்குக் கைதூக்கி விட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு வருஷத்துக்கு நொண்டியடித்துக் கொண்டிருந்திருப்போம் என்பது உறுதி ! Anyways "ஷப்பாடி" என்ற பெருமூச்சோடு ஆபீஸ் திறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் ! ஏற்கனவே ஜூன் இதழ்கள் சார்ந்த பணிகள் காத்திருக்கும் என்பதால் - ஆபீஸ் திறந்த உடன் அதனுள் பிஸியாகிடுவோம் ! அவை நிறைவு கண்ட பின்னே, XIII மறுபதிப்பின் பணிகளைக் கையில் எடுத்திட schedule - ஜூன் மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்துக்குள் ! (லாக்டௌன் நீண்டிடும் பட்சத்தில், எல்லாமே தள்ளிப் போகும் தான் ) ஆகையால் அச்சுப் பணிகளினை நாங்கள் துவக்கும் வரையிலும், XIII முன்பதிவுகளுக்கான ஆன்லைன் லிங்க் தொடர்ந்திடவே செய்யும் ! So மஞ்சகொடி பிடிச்சபடிக்கே கூட்டம் கூட்டமாய்க் கிளம்புவதாக இருப்பின் - இப்போதே கிளம்பிட்டால் தான் உண்டுங்க சார்ஸ் ! Absolutely the last & final call ! 

மூன்றாவது கேள்வி, அண்டர்டேக்கர் சார்ந்தது ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்று நாம் ஜம்போ சீசன் 4-க்கென விளம்பரப்படுத்தியுள்ளது - இந்தத் தொடரின் ஆல்பம்ஸ் # 5 & 6 இணைந்த தொகுப்புக்கு ! அதனில் # 5 போன வருஷமே வெளிவந்திருக்க, க்ளைமாக்ஸ் பாகம் நடப்பாண்டினில் வெளிவந்திடுவது திட்டமிடல் ! இதிலும் ஏதேனும் சொதப்பிடுமோ என்ற பயத்தில் கேட்டு வைத்தேன் ! ஆனால் இது முழுசும் ரெடி என்றும், நமக்கு டிஜிட்டல் கோப்புகள் maybe அடுத்த வாரத்தில் அனுப்பலாம் என்றும் சொல்லியுள்ளனர் ! இதோ - தெறிக்கும் அதன் அட்டைப்படம் ! 

இந்தச் சுற்றோடு தொடர் முற்றுப்புள்ளி காணவுள்ளதா ? என்றும் கேட்டேன் ; no ..no ...ஆல்பம் # 7 ஓவியப்பணிகள் ஓடிக்கொண்டுள்ளன என்றார்கள் ! கொஞ்சம் கொஞ்சமாய் பிரான்க்கோ-பெல்ஜிய கௌபாய் காமிக்ஸ் உலகினில், கேப்டன் டைகர் (Lt Blueberry ) விட்டுச் சென்றுள்ள காலி இடத்தினை இந்த வெட்டியான் ஆக்கிரமித்து வருவதாகச் சொன்னார்கள் ! மகிழ்ச்சியாக இருந்தது !!  

அட்டைப்படத்தில் சரி, இதோ, பாரிஸின் மெட்ரோ ரெயில் நிலைய சுவற்றில் உள்ள போஸ்டர்களிலும் சரி, டைகருடனான ஒப்பீட்டோடே தயார் செய்துள்ளனர் படைப்பாளிகள் ! போஸ்டருக்கு அருகே நிற்பவர் அதன் ஓவியர் ரால்ப் மெயர் ! பாரிசில் உள்ள நம் நண்பர்கள் இக்கட ஒரு போட்டோ எடுத்தால் இங்கே நாமும் கெத்தாய்ப் போட்டுக் கொள்வோமல்லவா ? 

Before I sign out - இதோ நமது IT அணியின் (!!!) இன்றைய ரகளைகள் !! லக்கி லூக் போஸ்டர் - நண்பர் கிரியின் கைவண்ணம் !

Memes - பிரசாந்த் கார்திக்கினது !! 



கலக்குங்க guys !! Just awesome !! போகிற போக்கில் உங்கள் கைவண்ணங்களை parade செய்யவாவது நான் தினமும் பதிவு போட வேண்டி வரும் போலும் ! Keep rocking !!

Bye all...stay safe !! See you around !

Friday, May 28, 2021

கொஞ்சம் lucky ஆகலாமுங்களா ?

 நண்பர்களே,

வணக்கம். நமது ஐம்பதாவது ஆண்டு காத்திருக்க, ஐரோப்பாவிலோ ஒரு ஜாம்பவானின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காத்துள்ளது ! அந்த ஜாம்பவான் நமக்கும் ரொம்பவே பரிச்சயமானவர் ; பிரியத்துக்கு உகந்தவர் ! In fact நம்ம திடகாத்திர மஞ்சள்சட்டைக்காரருக்குக் கூட இக்ளியூண்டு எதிர்ப்பாளர்கள் இருந்திடலாம் தான் ; ஆனால் இந்த மனுஷனுக்கோ உலகினில் பகையே கிடையாது ! வேடிக்கை என்னவெனில் இவரும் மஞ்சள்சட்டையாளரே & இவரும் அதே வன்மேற்கை வலம் வருபவரே ! ஆனால் "லக்கி லூக்" என்ற பெயரைக் கேட்ட நொடியில் முகமெல்லாம் மலர்ந்திடாத காமிக்ஸ் வாசகர்களே இருக்க இயலாது ! Oh yes - இந்த அக்டோபர் வந்தால் நம்ம ஒல்லியாருக்கு 75 வயதாகிறது ! 'தல' டெக்ஸை விட ரெண்டு வயசு சீனியராக்கும் இவர் !


1987  முதலாய் நமது அட்டவணையினில் ஒரு நிரந்தர அங்கமாகியிருக்கும் லக்கியின் சாகசங்களில் இதுவரைக்கும் நாம் 37 ஆல்பங்களை வெளியிட்டுள்ளதாக என் கணக்கு சொல்கிறது ! ஆபீஸ் திறந்த பிற்பாடு சரி பார்த்தால் அதை ஊர்ஜிதம் செய்திட இயலும் ! நடப்பாண்டில் காத்திருக்கும் 2 கதைகளையும் சேர்த்தால் 39 ஆல்பங்கள் எனும் போது 78 இந்தத் தொடரின் சரி பாதியினைத் தொட்டிருப்போம் ! நம்முடனான அவரது பயணம் 34 ஆண்டுகள் நீண்டிடுவதென்றாலும், post 2012 தான் ஒழுங்காய் கலரில், ஆர்ட்பேப்பரில், பெரிய சைசில் வெளியிடத்துவங்கி லக்கிக்கு நியாயம் செய்யத் துவங்கியுள்ளோம் என்பது எனது அபிப்பிராயம் ! Of course - நியூஸ்பிரிண்ட்டில், சின்ன சைசில் ரூ.2 விலையில் வெளியான அந்த முதன்முதல் லக்கி லூக் ஆல்பமான "சூப்பர் சர்க்கஸ்" எனக்கு ஒரு ஆயுட்கால நினைவாகவே தொடரும் தான் ; but still இன்றைக்கு பழைய புக்ஸைப் புரட்டும் போது எனக்குள் நிறையவே நெருடுகிறது ! 

ரைட்டு...இன்றைய பொழுதையும், நாளையையும் இந்த ஜாலியான ஜாம்பவானை அலசுவதற்கென செலவிடுவோமா guys ? லாக்டௌன் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் அத்தனை ஆரோக்கியமாய்த் தெரியக்காணோம் எனும் போது - இங்கே தான் போட்டுத் தாக்கிட வேண்டி வரும் போலும் !! So நகற்ற வேண்டிய நாட்களை எண்ணற்ற சந்தோஷ நாட்களை நமக்குத் தந்துள்ள ஒரு நாயகரோடு செலவிட்டால் என்ன guys ?

அலசல்களுக்கொரு திசைகாட்டியாய் எனது இந்தக் கேள்விகள் அமைந்திட்டால் சூப்பர் !!

1 .லக்கி லூக்கும் கார்ட்டூன் தான் ; இது வரையிலும் நாம் முயற்சித்து மண்ணைக் கவ்விய இதர சிரிப்புப் பார்ட்டிக்களுமே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளே ! ஆனால் what sets லக்கி லூக் apart ? இந்த மனுஷனை மட்டும் நமக்கு இத்தனை பிடித்திடக் காரணம் என்னவென்பீர்கள் ? Maybe முழுநீளக் கார்ட்டூன் என நம்மிடையே அறிமுகமான முதல் நாயகர் என்பதனாலா ? உங்கள் பார்வைகள் ப்ளீஸ் ?

2 லக்கி லூக் தொடரினில் focus நாயகரின் மீதே என்றாலும், உடன் பயணிக்கும் உப பாத்திரங்களுமே செம endearing !! அவர்களுள் உங்களின் favorite யார் ?

a ஜாலி ஜம்ப்பர்

b ரின்டின் கேன்

c ஜோ டால்டன்

d ஆவ்ரேல் டால்டன்

e மா டால்டன்

f கலாமிட்டி ஜேன்

g இவர்கள் அல்லாத வேறு ஒருத்தர் எனில் - யாரோ ?

3 உங்களின் மீள்வாசிப்புகளில் லுக்கி லூக்குக்கு இடமுண்டா ?

4 இது வரைக்குமான நமது லக்கி ஆல்பங்களுள் உங்களின் TOP 3 எவையோ ? பட்டியல் ப்ளீஸ் ?

லக்கியின் 75-வது ஆண்டினைக் கௌரவப்படுத்திடும் விதத்தில் பிரான்சில் நாணயங்கள், மெடல்களென அட்டாகாசப்படுத்தி வருகின்றனர் !! பாருங்களேன் : https://www.monnaiedeparis.fr/en/shop/lucky-luke 

வெறும் பொம்மை புக் தானே என்றில்லாது - பிரான்சில் என்னமாய் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமூச்சே விட முடிகிறது ! ம்ம்ம்ம்ம்ம் !!



அப்புறம் நமது கா.மு.க.ஏஜெண்ட் # 1-க்கு ஒரு assignment ப்ளீஸ் !! இதுவரையிலுமான நமது லக்கி ஆல்பங்களின் அட்டைப்படங்களை தமிழிலோ / Cinebook ஆங்கில பதிப்புகளிலிருந்தோ தேற்றி ஒரு போஸ்டர் போலாக்கிட இயலுமா நண்பரே கிரி ? அவற்றுள் எதெதெல்லாம் படித்தது - எவை படிக்காதது ? என்று நினைவுபடுத்திப் பார்த்திட நண்பர்களுக்கு உதவிடக்கூடும் ! Maybe if you find time today please ?

And இது நண்பர் அனுப்பிய latest graphics !!!! அந்த சிந்தனையாள செந்தில் படம் !!! !! 😁😁



கா.மு.க.ஏஜெண்ட் # 2 - நண்பர் வினேஷ், ஈரோடு : மேலேயுள்ளது போல "லக்கி லூக் 75 " என்று தமிழில் ஏதேனும் டிசைன் செய்திட முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? நமக்கொரு மின்னஞ்சல் தட்டி விட்டீர்களெனில் சில பல உயர் resolution images அனுப்பிடச் செய்கிறேன் !

அப்புறம் நமது கா.மு.க.ஏஜெண்ட் # 3 - பிரசாந்த் கார்த்திக் மீம்ஸ் போட்டுத் தாக்கிடக் கைதூக்கியுள்ளார் ! இதோ நேற்றைக்கு அவர் அனுப்பியது !! 

நண்பரே...ரெண்டு மஞ்சச்சட்டைக்காரர்களையும் கொண்டு ஏதேனும் ஜாலியான மீம்ஸ் போட முடிந்தால் அனுப்புங்களேன் ? திடகாத்திர TEX & ஒல்லிப்பிச்சான் லக்கி 


Bye folks....see you around !! Let's have some Lucky Days !!! 

Wednesday, May 26, 2021

பந்து உங்கள் பக்கம்...

 நண்பர்களே,

வணக்கம். இன்னமும் தாமதித்தால் காதில் தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, என்று சகல நிறங்களிலும் கவிஞர் பிரவாகமெடுக்கச் செய்து விடுவார் என்பதால் "பெயர் சூட்டல் விழாவினை" நிறைவுக்குக் கொணர நினைக்கிறன் ! நண்பர்கள் எக்கச்சக்கமாய் நேற்றைக்கு கீ-போர்டுகளை தட்டித் தள்ளியிருந்தும், பற்றிக் கொள்ளும் விதமாய் கண்ணில்பட்ட பெயர்கள் வெகு சொற்பமே ! And அதனை பரிந்துரை செய்த நண்பர்களுமே மறுக்க மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது எனக்கு ! சில நாட்களில் மோட்டைப் பார்க்கும் மூணாவது நிமிடத்தில் ஒரு பெயர் உதிப்பதுமுண்டு ; பல நாட்களில் தவமே கிடந்தாலும், பல்லியின் நடமாட்டம் மட்டுமே தென்படுவதும் உண்டு ! So no problems on that guys !!

வந்திருந்த தேர்வுகளில் கீழ்க்கண்டவை மட்டும் கொஞ்சம் பளிச்சென்று sound செய்தன :

FABULOUS FIFTY ஸ்பெஷல் - (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸும் பிடிக்கும்) -FFS-1

MUTHU MAGNIFICENT SPECIAL - MMS (P .கார்த்திகேயன், பாண்டி )

நண்பர் அனுப்பியிருந்த "MUTHU MILESTONE SPECIAL" கூட நன்றாகவே இருந்தது தான் ; ஆனால் ஏனோ தெரியலை - milestone என்பதும் tombstone என்பதும் கிட்டக்க,கிட்டக்க இருக்கும் வார்த்தைகள் என்பதாக எனக்கு தோன்றியது ! So அந்தப் பெயரினை இங்கே shortlist செய்திட தயக்கமே மேலோங்கியது !

இவற்றுள் ஒன்றை இறுதி செய்திடும் முன்பாய் நேற்றிரவு எனக்குத் தோன்றிய பெயரையும் இங்கே தருகிறேன் & மூன்றில் ஏதேனும் ஒன்றை இங்கி-பிங்கி -பாங்கி போட்டுத் தேர்வு செய்திடுங்களேன் guys ?

எனக்குத் தோன்றியது :

"The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!"  (FFS -2)

"ஐம்பதாவது ஆண்டின் மைல்கல் இதழ் மட்டுமன்றி, தொடரும் காலங்களுக்குமான இதழ்" என்பதான பொருள் இதனில்  சுகப்படுவதாய் பட்டது  ! 

ஆனால் பெயர் வைப்பதையும், விளம்பரங்களில் அதனை நுழைப்பதையும் தாண்டி, அடுத்த பணிகளுக்குள் புகுந்திட நான் போயிருப்பேன் ; பச்சே சூட்டப்படும் பெயரினை காலத்துக்கும் உச்சரித்திருக்கப் போவது நீங்களே எனும் போது - உங்களுக்கு இதனில் எது ரசிக்கிறதோ, அதுவே பெயராகிடும் ! So 'மானாட..மயிலாட' டான்ஸ் போட்டியிலே வாத்தியே இறங்கிப்புட்டாப்புலே' என்ற நோவுகளுக்கு இடம் தராது, இறுதி செய்திடும் பந்தை உங்கள் பக்கமே தூக்கிப் போட்டாச்சு ! இனி உங்க பாடுங்க மக்களே ! இந்த மூன்றில் எதைத் தேர்வு செய்யச் சொல்லி நீங்கள் பரிந்துரைத்தாலுமே ஓ.கே. தான் ! ஆனால் இதுக்கு அது ஏன் குறைச்சல் ? அதை விட இது ஏன் உசத்தி ? என்ற கேள்விகள் வேண்டாமே - ப்ளீஸ் !

Maybe சீனியர் எடிட்டருக்கும் இங்கொரு வோட்டு கொடுத்திடலாம் தான் ! What say guys ?

And maybe இந்தப் பெயர்களை உங்களின் FB அல்லது வாட்சப் க்ரூப்களில் ஏதேனும் ஒன்றிலோ, இரண்டிலோ போட்டு விட்டும் பாருங்களேன் - இங்கு ஆஜராகா நண்பர்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிறார்கள் என்று மேலோட்டமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டு ? 

Bye for now...stay home please ! See you around !


And by the way - இங்கே இது நமது 750-ம் போஸ்ட்டாம் !! Blogger சொல்கிறது !! அப்புறம் இந்த மே மாசத்தின் 22 -வது பதிவாம் இது !! ஹிக்க் !! 

Tuesday, May 25, 2021

The Game is afoot !!

 நண்பர்களே,

வணக்கம். இந்த ரெண்டு நாள் ரகளைகள் மத்தியில் ஒற்றை விஷயம் யாருக்கும் புலப்பட்டது போலத் தெரியக்காணோம் என்பதே எனக்கு செம ஆச்சர்யம் ! அது வேறொன்றுமில்லை - "டெக்ஸ்" எனும் அசாத்தியனை முன்னெப்போதையும் விட நான் ரொம்ப miss பண்ணியது நேற்றைக்குத் தான் ! 'அட..இது என்ன சொட்டை மண்டைக்கும்..முட்டிங்காலுக்குமான முடிச்சு ?" என்கிறீர்களா ? இருக்கே ...வல்லிய சம்பந்தம் இருக்கே  ! சின்னதாய் ஒரு கிரிக்கெட் உவமானத்தைச் சொல்ல முற்படுகிறேனே - எனது பாயிண்டை விளக்க ! 

நமது இந்திய அணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஸ்டார்ஸ் இருப்பர் ! எழுபதுகளில் கவாஸ்கர், விஸ்வநாத்..கபில் தேவ் ! எண்பதுகளில் ரவி ஷாஸ்த்ரி ; அசாருதீன் ; ஸ்ரீகாந்த் ! தொண்ணூறுகளில் சச்சின் ; காம்பிளி ; ஸ்ரீநாத் ; அணில் கும்ப்ளே ; இரண்டாயிரத்தில் டிராவிட் ; கங்குலி ; லக்ஷ்மன் ; இப்போது கோஹ்லி ; ரோஹித் ; பும்ராஹ் என்று ! ஆனால் நியூசிலாந்து அணியைப் பார்த்தால் உலகை மிரட்டும் அதிரடியாளராய் யாருமே அங்கே இருக்க மாட்டார்கள் ; ஒரு யுகத்துக்கு ஒருவாட்டி ரிச்சர்ட் ஹேட்லீ ; மார்ட்டின் க்ரோ ; கேன் வில்லியம்சன் என்ற பெயர்கள் அடிபடும் ! ஆனாலும் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் செம்மையாய் மல்லுக்கட்டுவார்கள் ! So வெளியிலிருந்து பார்க்கும் போது star power என்று கெத்தாய் எதுவும் தெரியாதுமே வேலையைச் செய்து முடிக்கும் திறனுண்டு அவர்களுக்கு !

சரி, இந்தப் பெனாத்தல் எதற்கென்கிறீர்களா ? 

இன்றைய முத்து காமிக்ஸ் கிட்டத்தட்ட நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியைப் போல காட்சி தருவதே இன்றைய இந்தக் கரைச்சல்களுக்கு மூல காரணம் என்பதில் எனக்கு ஐயமே இல்லை ! ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; SODA ; சிக் பில் ; மார்ட்டின் ; ராபின் - என்ற பெயர்கள் காதில் விழும் போது நம் முகங்களில் ஒரு சன்னப் புன்னகை பூத்திடலாம் ! ஆனால் அதே சமயத்தில், "டெக்ஸ் வில்லர்" என்று மட்டும் உச்சரித்துப் பாருங்களேன் ! மின்சாரம் பாய்ந்தது போல - சம்சாரம் தந்த கழனித்தண்ணியையும் ஓரம் கட்டி விட்டு எழுந்து நிற்கத் தோன்றும் ! இன்றைக்கு மட்டும் 'தல' முத்து காமிக்ஸின் நாயகராய் இருப்பின் - "மக்கா..ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்குலே ! என்ன - ஓ.கே.வா ? ..சரி..ரைட்டு...ரெண்டாயிரத்து ஐநூறா ? போதே..போதே.. வைச்சுக்கோ ! சரிதானுமலே ?" என்றபடிக்கே தோராயமாய் 2 கிலோ எடைக்கு ஒற்றை டெக்ஸ் வில்லரை உங்களிடம் ஒப்படைத்து விட்டு ஜாலியாய் நடையைக் கட்டியிருக்க மாட்டேனா ? And நீங்களும் என்னைக் கொண்டாடித் தீர்த்திருக்கமாட்டீர்களா - இன்றைக்குத் தீர்த்து விட்டுக் கொண்டாடுவதற்குப் பதிலாக ? 

WE MISS A REAL SUPER STAR in MUTHU COMICS today & that is the bottomline !

  • மாயாவி - தொடர் முடிஞ்சு ஒரு யுகமாச்சு !
  • லார்கோ - தொடர் முடிஞ்சதோ, இல்லியோ - அதன் மீதான ஈர்ப்பு முடிஞ்சது !
  • கேப்டன் டைகர் - தொடர் முடிஞ்சதோ, இல்லியோ - அதன் மீதான ஈர்ப்பு முடிஞ்சது !
  • ட்யுராங்கோ - தொடரே முடிஞ்சது !
  • தோர்கல் - At best இவரொரு கேன் வில்லியம்சன் ! ஆனால் கணிசமாய் டிக்கெட்டுக்குப் பணம் தந்து மேட்ச் பார்க்க வருவோர் தேடக்கூடியது ஒரு விராத் கோஹ்லியையே தவிர வில்லியம்சனை அல்ல !
  • சிக் பில் - ஆதர்ஷங்களுக்குரியவர் தான் ; ஆனால் உலகை அசைக்கப் போகிறவரல்ல !

So சொல்லவும் தெரியாது, மெல்லவும் முடியாது - 'இன்னாமோ குறையுதே..இன்னாமோ குறையுதே !' என நம்மில் பெரும்பான்மை புலம்புவது இந்த ஒற்றைக் காரணத்தின் பொருட்டே என்பதில் சந்தேகங்களும் இருக்க இயலுமா ? இதோ - இந்நேரம் "இளம் டைகர்" தொடர் மட்டும் தீயாய் இருப்பின் - இந்தப் பஞ்சாயத்தே கூடியிருக்குமா என்ன ? இதோ, இன்னமும் ட்யுராங்கோ தொடரில் கதைகள் பாக்கியிருப்பின், இப்படி முழிக்க அவசியப்பட்டிருக்குமா ? அவற்றிற்கு  சாத்தியமில்லை எனும் போது தான் தடுமாறுகிறோம் ! 

And காலமாய் ஹீரோக்களை ஆராதித்தே நமது (காமிக்ஸ்) வாசிப்புகள் அமைந்திருக்க, one-shot தொடர்கள் எத்தனை வீரியமானவைகளாக இருந்தாலுமே - அவற்றின் பக்கம் இது போன்ற ஸ்பெஷல் தருணங்களில் ஒதுங்கிட நம்மில் ஒரு பகுதியினருக்கு உதறுகிறது ! So அத்தனை காமிக்ஸ் சாமுத்ரிகா லட்ஷணங்களும் இருக்கப் பெற்ற நாயகர் யாரேனும் திடு திடுப்பென நம் மத்தியில் விழுந்து வைத்தாலொழிய - இந்த S.J. சூர்யா பாணியிலான - "இருக்கு...ஆனா இல்லே..!" ரவுசுகள் ஓய்ந்திடவே போவதில்லை ! So புனித தேவன் மனிடோவுக்கு பெட்டிஷன் போட்ட கையோடு, தேடல்களை வேகப்படுத்துவதே இனி நமக்கிருக்கும் வழி !

ஒற்றை வரியில் சொல்வதானால் - டெக்சின் ஆற்றல் சராசரி நாயகர்களின் அண்மையில் தான் நிஜமான பரிமாணத்தில் புரிகிறது ! திருவிழா ரிலீசுக்கு ஒரு "பாட்ஷா" தேவையெனில் - அங்கே பாட்ஷாவாய் ; அண்ணாமலையாய் ; கத்தியாய் ; கில்லியாய் ; பில்லாவாய் ; வலிமையாய் நிற்கும் திறன் அந்த மனுஷனுக்கு மாத்திரம் தானே இன்றைக்கு உள்ளது ?! 

'தல'.....பொலம்ப விட்டுப்புட்டியே தல ?!! 😁😁😁

புலம்பல் ஒருபக்கமிருக்க - இங்கு ஆக வேண்டிய பணிகளைப் பற்றிப் பேசிட்டால் மரம் நடும் படலம் இனிதே முடிந்தது போலிருக்கும் என்று நினைக்கிறேன் ! So let 's get on with it guys !!

பொறுப்பு # 1 : முதலில் இந்த இதழுக்கான பெயர் தேர்வு !! "ஐம்பதாவது ஆண்டு மலர்" என்று எழுதிக் கொள்ளலாம் தான் ; ஆனால் இன்னும் கெத்தாக ஏதேனும் தேறுமா என்று யோசியுங்களேன் all ? 'நச்'சென்ற பெயர் சூட்டுபவரின் போட்டோவுடன் அந்த ஸ்பெஷல் இதழில் credit வழங்கப்படும் ! So give it a shot guys !!

பொறுப்பு # 2 : நம் மத்தியிலுள்ள நண்பர்களின் டிசைனிங் ; கம்ப்யூட்டர் graphics ஆற்றல்கள் எத்தகையன என்பதை இதோ நண்பர் கிரிதரசுதர்சனின் ஆக்கங்கள் நிரூபித்து விட்டுள்ளன ! So முத்து காமிக்ஸ் லோகோவுடன் "50 ஆண்டுகளாய் உங்களுடன்" என்ற வாசகத்தை ஸ்டைலாக டிசைன் செய்து தந்திட உங்கள் சகாயங்களே தேவை guys ! இந்த logo 2022-ன் முழுமைக்கும் முத்து காமிக்ஸ் இதழ்களை அலங்கரிக்கும் ! And டிசைன் செய்து தரும் நண்பருக்கும் போட்டோ + credit இதழினில் இருக்கும் !

பொறுப்பு # 3 : ஒரு மைல்கல் இதழினில் பங்கேற்க விரும்பும் அனைவருக்குமே நமது கதவுகள் 'பப்பரக்கா'வென திறந்தே இருக்கும் ! இன்றைக்கு ஆளாளுக்கு சிலாகிக்கும் அந்த golden oldies நாயகர்களுக்கு இடமின்றிப் போனாலும், அவர்களுடனான உங்களின் மலரும் நினைவுகளுக்கு நிச்சயம் புக்கில் இடமிருக்கும் ! உங்கள் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கக்கூடிய classic சாகஸத்தைப் பற்றி ; அந்த இதழை நீங்கள் இன்னமும் ஆராதிக்கும் நினைவுகளை பற்றி அழகாய் எழுதி அனுப்பிடலாம் ! அவற்றுள் சுவாரஸ்யமானவற்றை சீனியர் எடிட்டர் தேர்வு செய்வார் & அவை இந்த ஸ்பெஷல் இதழில் இடம்பிடிக்கும் - again உங்களின் போட்டோக்களுடன் ! Of course - அதற்கு நேரமுள்ளது தான் ; October '21 வாக்கில் அனுப்பினால் போதும் ! (பி.கு. உங்களில் எத்தினி பேர் சும்மானாச்சும் பழைய புக்சின் தலைப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு, "மூச்சிலே கலந்திருக்கு ; மூக்குப்பொடியிலே கலந்திருக்கென" பீட்டர் விட்டு வந்திருக்கிறீர்கள் ? எத்தினி பேர் மெய்யாலுமே அந்நாட்களில் அவற்றை ரசித்துள்ளீர்கள் ? என்பதையும் அறிந்திட இது உதவக்கூடும் என்ற நினைப்புலாம் நிச்சயமா கிடையாதுங்கோ !!)

பொறுப்பு # 4 : மனஸ்தாபங்கள், மாற்றுக் கருத்துக்கள், முரண்பாடுகள் ; அபிப்பிராய பேதங்கள் என ஏதேதோ காரணங்களின் பொருட்டு விலகி நிற்கும் நண்பர்களுமே இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள முன்வந்தால், சர்வ நிச்சயமாய் வரவேற்றிட நாங்கள் காத்திருப்போம் ! பிரிந்தோர் கூடுவதற்கு இத்தகையதொரு once in a lifetime சமாச்சாரம் உதவிட்டால் அற்புதமாக இருக்காதா ? End of the day - விலகி நிற்போரின் வருத்தங்கள் என் மீதே தானன்றி - முத்து காமிக்ஸ் மீதோ ; அதன் கர்த்தாவான சீனியர் எடிட்டர் மீதோ அல்ல என்பதில் ஏது ரகசியம் ? காத்திருப்பது உங்கள் அபிமான இதழின் மைல்கல் தொடும் வேளை + அதன் பிதாமகரின் முயற்சியினை கொண்டாடும் வேளை எனும் போது - என் மீதான பிடித்தமின்மை உங்களை விலகி நிற்கச் செய்திடத் தேவையில்லையே ? So இந்த லோகோ டிசைனிங் ; பெயரிடல் ; நினைவலைகளை பகிர்தல் என சகலத்திலும் அவரவர் இயன்ற பங்கெடுத்திடலாமே guys ? 

பொறுப்பு # 5 : இது வரையிலான சுமார் 450+ இதழ்களின் பட்டியலைப் போட்டு விடலாம் தான் ! ஆனால் சில ஆலமரங்களுக்கு முன்பான பதிவினில் நண்பர் ஒருவர் கோரியிருந்தது போல - இதுவரையிலான இதழ்களின்  அட்டைப்படங்களை தொகுத்து ஒரு booklet ஆக்கிட இயன்றால், ஒரு அட்டகாச walk down memory lane போலிருக்கும் தான் ! 2012-க்குப் பின்பான சுமார் 140+ இதழ்களின் ராப்பர்கள் டிஜிட்டலில் நம்மிடமே உள்ளதால், அவற்றை திரட்டுவது சுலபமே ! ஆனால் அதற்கு முன்பான அட்டைப்படங்களை திரட்டிட நீங்கள் கரம் கோர்த்தால் maybe சாத்தியப்படக்கூடும் ! நிறையவே அவகாசம் உள்ளது நமக்கு...இப்போதிலிருந்து இதற்குப் பொறுப்பேற்று நண்பர்கள் குழுவாய் செயல்பட்டால் & அந்த முயற்சியினில் ஜெயம் கிட்டினால் - அதனை ஒரு வண்ண புக்காக்க ready ! முழுவதும் விலையின்றி இந்த புக்கினை உருவாக்க லயன் காமிக்ஸ் ஆவன செய்திட ரெடி !Are you game for it people ? 

And yes of course - இந்த முயற்சியில் ஈடுபடும் நண்பர்களுக்கு உரிய credits அந்த booklet-ல் தரப்படும் ! 

பொறுப்பு # 6 : கொஞ்ச காலமாகவே பேசிட எண்ணியது தான் ; ஆனால் ஒரு மாதத்துப் பணியிலிருந்து அடுத்த மாதத்துப் பணியென குதித்துக் குதித்து போவதிலேயே நாட்கள் கரைந்திருக்க, எதுவும் இயன்றிருக்கவில்லை  ! Instagram ; FB ; உங்களின் தனிப்பட்ட வாட்சப் குழுக்கள் என இன்றைக்கு ஏகமாய் சமூக வலைத்தளங்களில் ரவுண்டடித்து வருகிறீர்கள் ! ரெகுலராய் அங்கெல்லாம் நாம்  விளம்பரங்கள் செய்திட வேண்டுமென்பது சீனியர் எடிட்டரின் அவா !  நேற்றைக்கு நண்பர் கிரி அனுப்பியிருந்த கிராபிக்ஸ்களைப் பார்த்த போது - இந்தத் தரத்தில் அவ்வப்போது content + graphics உருவாக்கிட வேண்டியதன் அவசியம் ரொம்பவே அழுந்தப் புரிந்தது ! கரைவேட்டிக் கட்சிகளே இன்றைக்கு IT டீம்களென்று கலக்கி வரும் போது - நாமும் அந்த IT ஜோதியில் கலந்திட வேண்டிய வேளை புலர்ந்து விட்டதென்று படுகிறது !! So ஆர்வமுள்ள நண்பர்கள் மின்னஞ்சலில் கைதூக்கி தகவல் சொல்லிடும் பட்சத்தில், நமது சமூக வலைத்தளத் தேவைகளுக்கான graphics ; videos ; memes என உருவாக்கும் பொறுப்பினை ஒப்படைத்து விடலாம் ! (தமிழ்நாட்டில் வைகைப் புயலுக்கு அடுத்தபடியாக நிறைய content தந்திருக்கக்கூடிய ஆசாமிகளுள் அடியேன் பிரதானமாக இருப்பேன் எனும் போது memes போட கணிசமான நண்பர்கள் முன்வருவர் என்று நினைக்கிறேன் !!) எங்கே நமது பிரஷாந்த் கிஷோர் ? எங்கே..? எங்கே ?

So - அசோக சக்கரவர்த்தி காட்டிய வழியில், நம்மளின் மரம் நடும் படலம் இங்கே இனிதே நிறைவுறுகிறது ! இப்போதைக்கு நட்டியுள்ள மரங்களுக்கு இயன்ற நீர்ப்பாசனங்களை செய்திட்டிருப்போம் guys ; இடைப்படும் நாட்களில் நான் இந்த ஸ்பெஷல் இதழ்களுக்கான மேலதிகக் கதைத் தேடல் ; பணிகளென்று ஓசையின்றி இயங்கத் துவங்கிடுவேன் ! And ஆண்டவன் அருளுடன், இந்த மைல்கல் இதழ் ஜனவரி 2022-ல் அழகாய் வெளிவந்திடும் தருணத்தில் தான் நீங்கள் அதன் முழுமையான content என்னவென்பதைப் பார்த்திட இயலும் ! அக்டோபர் '21 -ல் வெளிவரக்கூடிய அட்டவணையில் கூட - "முத்து ஆண்டுமலர் # 50 ; இன்ன விலை" - என்று மட்டுமே இருந்திடும் ! என்ன கதைகள் ? என்ன திட்டமிடல் ? என சகலமுமே திரையின் பின்னேயே இருந்திடும் ! Sorry for that guys ; ஆனால் இது தவிர்க்க இயலா அத்தியாவசியம் என்பதை புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கை எனக்குள்ளது !

So  உங்கள் ஒவ்வொருவரையும் இயன்ற விதங்களில்   புளகாங்கிதமடையச் செய்ய (!!) ஏதாச்சும் சரக்கினைத் தேற்றி விட்டு, இன்றிலிருந்து 221 நாட்களில் உங்களிடம் அந்த ஸ்பெஷல் இதழை ஒப்படைப்பதே என் முன்னான சவாலாக இருக்கும் ! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நாவலில் ஒரு வரியானது ரொம்பவே பிரசித்தம் ; களமிறங்க வாட்சனை அழைக்கும் போது - "Come Watson ...the game is afoot !!" என்பார் ஹோல்ம்ஸ் ! இந்த நொடியில் எனக்கு நினைவுக்கு வருவது அதுவே !! 

எனது முயற்சியில் ஜெயம் கிட்டுமா  ; அல்லது பறந்து வந்து மூக்கின் மீது லேண்ட் ஆகும் கிட் ஆர்டினைப் போல சொதப்புவேனா ?  - 221 நாட்களுக்குப் பின்னேயே தெரியும் ; ஆனால் இயன்ற சகலத்தையும் முழுமூச்சுடன் செய்திட முனைவேன்  என்ற மட்டுக்கு உறுதியாய் நம்பிடலாம் ! Trust me, The Game is well & truly afoot guys !! 

Bye all !! See you around !!

Monday, May 24, 2021

ஒரு 'மிடிலே' பதிவு !!

 நண்பர்களே,

வணக்கம். அசோக மன்னர் எக்கச்சக்கமாய் மரம் நட்டினார் என்று பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் பாடங்களில் சொல்லித் தந்தார்கள் ! ஆனால் அங்கே சொல்லாது விட்டுப் போனது - அவருமே அந்நாட்களில் ஏதாச்சும் காமிக்ஸ் போடுபவராக இருந்து ; அவருமே ஒரு ஸ்பெஷல் இதழை உருவாக்கும் முனைப்பில் மண்டை காய, தெருத்தெருவாக  மரம்  நட்டிச் சென்ற ரகசியத்தையே  என்றே நினைக்கிறேன் ! இந்த "பழையவர்களுடனான ஆடலும்-பாடலும் போட்டே தீரணும்" பஞ்சாயத்துக்கள் இப்போதைக்குள் ஓயப்போவதில்லை எனும் போது நானும் ஆலமரம், அரசமரம், புங்கைமரம், வில்வமரம் என்று நட்டிய கையோடு, இறுதியில் ஏதாச்சும் முருங்கை மரத்தில் வேதாளமாட்டம் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறேன் என்றே தோன்றுகிறது ! 

கிரைண்டரே சலித்துப் போகும் அளவுக்குச் சுற்றித் தள்ளிய அதே மாவை கொண்டே நீ தோசை சுட்டாலே ஆச்சு ; இல்லாங்காட்டி தெய்வ குத்தமாகிப்புடும் ; இல்லாங்காட்டி நாங்க அண்டராயரே போட மாட்டோமென்ற ரேஞ்சுக்கு இங்கே ரவுசு நடப்பதை பார்க்கும் போது ஒரேயொரு விஷயம் தான் மனசில் ஓடியது ! நாலு பேர் ..நாற்பது பேருக்கான குரலில்...நானூறு இடங்களில் உரக்க சத்தம் எழுப்பும் போது - அது அசரீரி ரேஞ்சுக்கு எதிரொலிக்கும் என்பதே ! இந்த அசரீரிகளுக்குப் பதில் சொல்லும் முன்பாக இன்றைக்கு மின்னஞ்சலில் நண்பர் கிரிதரசுதர்ச்ன அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலின் இணைப்புகளை இங்கே present செய்திடுகிறேன் ; சும்மா தெறிக்க விட்டிருக்கிறார் !! Take a look guys :




போன வாரத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த பதில்களை நண்பர் STV தொகுத்து நம்பர்களில் சொல்லியிருந்தார் ! ஆனால் அந்த நம்பர்களையே இதோ graphics சகிதம் வழங்கிடும் போது அதன் தாக்கத்தைப் பாருங்களேன் !! எத்தனை சுளுவாய் நிலவரம் புரிகிறது & எத்தனை ஸ்பஷ்டமாய் நிஜங்கள் பிரதிபலிக்கின்றன ?!! In many ways - நமது காமிக்ஸ் கூட இதுவே தானே - ஒரு கதையினை ; ஒரு சேதியினை ; ஒரு நிகழ்வினை - சித்திரங்களின் துணை கொண்டு பிரம்மாண்டமாக்கி வழங்கிடுவது !! 

இந்த graphics மாடலை அப்படியே இந்த "அதே பழைய மாவில் சுட்ட தோசை தான் வேணும்" பஞ்சாயத்துக்குமே ஆட்படுத்திப் பார்த்திடுவோமெனில் - நிஜமும், யதார்த்தமும் புரிந்திடக்கூடும் ! என்மட்டில் இதனில் குழப்பங்கள் ஏதுமில்லை - simply becos நண்பர்களின் நர்த்தனங்களின் பின்னிருப்பது துளியும் சாத்தியங்களில்லா கோரிக்கைகள் ! And போகாத ஊர்களுக்கு தம் கட்டி ஆளாளுக்கு வழி சொன்னாலும், இதோ என்னிடம் இருப்பது மட்டுமே நிஜத்தின் ; சாத்தியத்தின் வரைபடம் !

கோரிக்கை # 1 : மறுபதிப்பே காணாத மாயாவி கதை வேணும் !

பதில் :ஏற்கனவே முந்தைய பதிவினில் சொன்ன சமாச்சாரத்தை இன்னொருவாட்டி மறுஒலிபரப்பு செய்கிறேன் : இங்கிலாந்தில் பழம் கதைகளின் பெரும்பான்மையினை டிஜிட்டல் கோப்புகளில் பத்திரப்படுத்த யாருமே அந்நாட்களில் முனைந்திருக்கவில்லை ! சில ஆண்டுகளுக்கு முன்பாய் REBELLION என்ற குழுமம் மொத்தமாய் Fleetway உரிமைகளை வாங்கியிருக்கும் நிலையில், இவற்றைத் தூசி தட்டி எடுத்து, முந்தைய இதழ்களின் நகல்களை டிஜிட்டலுக்கு உருமாற்றம் செய்து, அவற்றைத் துல்லியமாக்கும் நெடும் முயற்சியில் பொறுமையாய் ஈடுபட்டுள்ளனர் ! அங்கே அவர்களது பணிகள் நிறைவுறும் நேரமே நமக்கு கோப்புகள் இனி சாத்தியம் ! இப்போது நம் வசமிருப்பன எல்லாமே மக்கிப் போன பழைய நெகட்டீவ்கள் மட்டுமே எனும் போது - அவற்றிலிருந்து திரும்பவும் அச்சிடல் சாத்தியமே ஆகாது ! ஆகையால் முகமூடி போட்ட மாயாவி ; மூடாக்குப் போட்ட மாயாவி ; போர்வை பொத்திய மாயாவி - என சகலமும் அவர்கள் ரெடி செய்திடும் பொழுதில் மட்டுமே நமக்கும் சாத்தியம் ! இதோ இப்போது நாம் வெளியிட்ட "நியூயார்க்கில் மாயாவி" ; நான் வெளியிடலாமெனச் சொல்லும் "இரும்புக்கை மாயாவி" ; "யார் அந்த மாயாவி ?" ; ஆழ்கடலில் மாயாவி - ஆகியவையெல்லாமே அவர்கள் பணிமுடித்துள்ள கதைகள் ! So "தவளை மனிதர்கள்" ; "நண்டு மனிதர்கள்" - என தேடித் தேடி கேள்விகளை எழுப்பினாலும், பதில் இதுவே தான் ! There's NOTHING that can be done for now !!

கோரிக்கை # 2 : வேதாளன் ?

பதில் : அழுத்தமாகப் பதிவிடுகிறேன் - இந்தத்தொடருக்கான உரிமைகள் நம்மிடமில்லை ! கடந்த 2 ஆண்டுகளாய் முயற்சித்து, இதனில் முடக்கிட அவசியப்படும் தொகையினைக் கண்டு மலைத்து ஒதுங்கி விட்டேன் ! So இம்மியும் சாத்தியமில்லை - ஏதேனும் ஏழு இலக்கத் தொகையினை யாரேனும் நமக்கு தானம் தராத வரையிலும் !

கோரிக்கை # 3 : மாண்ட்ரேக் + காரிகன் + Rip Kirby

நல்ல நாளிலேயே நாழிப்பால் கறப்பார் மாண்ட்ரேக் ! அவரது கதைகளில் 3 உள்ளன நம்மிடம் கைவசம் ! மூன்றையும் சேர்த்தாலே 95 பக்கங்களைத் தாண்டிடாது பக்கங்களின் ஒட்டு மொத்த நீளம் ! And ஒவ்வொன்றும் பிடரி மயிர் வரைக்கும் நட்டுக்கச் செய்த கதைகள் - 25 ஆண்டுகளுக்கு முன்னமே !! அவற்றை இன்றைக்கு பந்திக்கு கொண்டு வராவிட்டால் வரலாற்றுப் பிழையாகிப் போய்விடுமெனில், நான் வரலாற்றுப் பாடம் இருக்கும் க்ரூப்பையே தேர்வு பண்ணலீங்க ! அட, நான் பள்ளிக்கூடத்துக்கே வரலீங்க !!

காரிகன் ஒரேயொரு கதையுள்ளது கையில் ! And நீங்கள் பார்த்துப் பழகிய அந்த classic பாணியின் கதாசிரியரோ, ஓவியரோ பணியாற்றியதே கிடையாது இந்தக் கதை ! டப்ஸாவிலும் டப்ஸா இந்த சாகசம் என்பதால், கையில் காசுமின்றி, கதையுமின்றித் திணறிய late '90-களில் கூட இதனை நான் தீண்ட முனையவில்லை ! இன்றைக்கு இவரைக் கொண்டு தான் ஒரு மெகா கோபுரத்தைக் கட்ட வேணுமெனில் நான் அந்த ஆட்டத்துக்கே வரலை சாமிகளா !  "கொரோனா காலகட்டத்தினை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன " என்ற போர்டை மாட்டி விட்டு, மாமூலான இதழ்களோடு 'சிவனே' என்று வேலையைப் பார்த்துப் போய்விடுகிறேன் !

ரிப் கிர்பி - கையில் உள்ளது ஒரேயொரு கதையே & அதுவும் முத்து காமிக்சில் ஏற்கனவே வெளியானதென்பதை கவனித்த பிற்பாடு தான் அதனை திரும்பவும் பரணுக்கு அனுப்பினேன் ! So இவர் விஷயத்தில் zero நமது புதுக் கதைகளின் ஸ்டாக் !

கோரிக்கை # 4 : விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; ரிப் கிர்பிய ; காரிகன் - இவங்களுக்குலாம்  கையில் கதைகள் இல்லாட்டியும் வாங்கி, போடலாமில்லே ?

பதில் : இவை சகலமுமே வேதாளனை சந்தைப்படுத்திடும் அதே King Features நிறுவனத்தின் உடைமைகள் ! இவர்களிடம் இன்றைக்கு ஒரு கதை வாங்கிக்குறேன் ; காக்கா  கடி கடிச்சிக்கிறேன் - என்று எந்தவிதத்திலும் கோரிக்கைகளை முன்வைக்கவே இயலாது ! குறைந்த பட்சமாய் ; ரொம்பவே குறைந்த பட்சமாய், ஒவ்வொரு தொடரிலும் 10 கதைகள் வீதம் வாங்கிடவும், அவற்றைத் தொடரும் 18 மாதங்களுக்குள் வெளியிடவும் சக்தி இருந்தால் மட்டுமே அவர்களின் தெருப்பக்கமே போக முடியும் ! இன்றைக்கு மலையாளத்தில் மட்டுமே வேதாளன் கதைகளை வெளியிட்டு வந்த ரீகல் காமிக்ஸ் - ஆங்கிலத்திலும் வேதாளன் & மாண்ட்ரேக் கதைகளை வெளியிடுவதன் முக்கிய காரணமே - அமெரிக்க நிறுவனத்தின் வியாபாரக் கட்டாயங்களைச் சமாளிக்கும் பொருட்டே ! தவிர, ஆண்டுக்குப் 12 மாதங்களும் அவர்களது ரிலீஸ் வேதாளன் மட்டுமே - simply because they need to !!

5 தொடர்கள் x 10 கதைகள் வீதம் = மொத்தம் 50 கதைகள் ! And இந்த ஐம்பதையும் அடுத்த 18 மாதங்களுக்குள் வெளியிட்டதாக வேண்டும் ! சொல்லுங்க தெய்வங்களா - இதற்கான முதலீடும், திட்டமிடலும் யாரிடமெல்லாமிருந்து வரவுள்ளதென்று ? மட மடவென்று வேலையை ஆரம்பித்து விடலாம் ! ஒற்றை "குண்டு" புக்கென்ன - மாசம்தோறும் ஒரு குண்டு புக் போட்டுத் தாக்கிபுடலாம் - நீங்களே தெறித்தடித்து ஓடும் வரையிலும் ! 

கோரிக்கை # 5 : 500 பக்கங்களில், கருப்பு-வெள்ளையில் compact சைசில் "குண்டு புக்" இல்லாட்டி நிறைவாவே இருக்காது !! புதுசு எப்போனாலும் வந்துக்கும்லே ? பழசுக்கு இதை விட்டா வேற வாய்ப்பு ஏது ? 

பதில் : கிட்டங்கியில் உள்ள classic மறுபதிப்புகள் நான்கை ஒன்றாக்கி பைண்ட் பண்ணினால் 500 பக்க புக் ரெடியாகிடும் ! 50 ரூபாய் விலைகளே ; அதிலும் 25% discount தருகிறோம் - so 4 புக் சேர்ந்தாலே ரூ.150 தான் ஆகிறது ! சந்தோஷமாய் அதை விலையின்றியே தர ரெடி ! ஒரு மாயாவி ; ஒரு லாரன்ஸ்-டேவிட் ; ஒரு ஜானி நீரோ என்று கலந்து கட்டி பைண்ட் பண்ணிடலாம் ! நான் ரெடிங்க !! ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அறிவிப்பில் சேர்த்திடலாம் ! 

கோரிக்கை # 6 : இதை - அதோடு போடலாமில்லே ; அதை அடுத்த வீட்டோடு சேர்க்கலாமில்லே ? முன்னெல்லாம் செஞ்சே ? இப்போ என்ன கொள்ளை உனக்கு  ?

நூற்றியெட்டாம் அறிவிப்பு ! ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நிறுவனத்தின் மாறுபட்ட படைப்புகளையே ஒன்றிணைத்து வெளியிடுவது தலை கீழாய் நின்று தண்ணீர் குடிக்கும் அசாத்தியம் எனும் போது - "அப்புசாமியோடு சாம்புவைப் போடலாம் ; வேம்புவோடு சீதாப்பாட்டியை கோர்க்கலாம் " என்ற ரீதியிலான பரிந்துரைகள் சத்தியமாய் out of question !!

நேற்றைக்கு Options வழங்கிய சமயம் நான் பழமை பார்ட்டிக்களையும் லிஸ்ட்டில் சேர்த்திருக்காவிட்டால் நிச்சயமாய் அதற்கும் செருப்படி வாங்கியிருப்பேன் என்பது தெரியும் ! அதனாலேயே அவற்றைப் பெயரளவிற்குச் சேர்த்திருந்தேன் !  இத்தனை எதிர்பார்ப்புகளை சுமந்து வரும் ஒரு இதழினில் அவற்றை நுழைக்கச் சொல்லிக் கோரிட யாருக்கும் மனசு வராது  என்றே நம்பியிருந்தேன்  ! ஆனால் இந்த டஜன் நண்பர்கள் இன்றைய பொழுதையும், பதிவையும் திசைதிருப்பும் அளவுக்கு செயல்படுவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை தான் ! 

"பழமைக் காதல் ; பழசை இன்னும் படிச்சா தான் அக்மார்க் காமிக்ஸ் ஆர்வலர் ; வளர்ந்து வந்த ஏணி ; புதுசுலாம் உருப்படாது" - என்ற இந்த வாதங்களை காதில் தக்காளிச் சட்னி வரும் வரையிலும் கேட்டாச்சு ! and  விரல் ரேகைகள் அழிந்திடும் வரையிலும் அவற்றிற்குப் பதில் சொல்லியும் விட்டாச்சு ! "ஆசானே...அய்யனே.." என்ற அடைமொழிகளை நான் ஒருபோதும் மண்டைக்கு எடுத்துச் சென்றதே கிடையாது and that was exactly for reasons like this !! உங்களுக்குப் பிடித்தமான திக்கில் வண்டியை இட்டுச் செல்லும் வரையிலும் "ஆசானாய்" தென்படுபவன், அவசியமான, ஆனால் உங்களுக்கு ரசிக்காத பாதையில் புகுந்திடும் முதல் நொடியில் வெறும் "ஆசாமியாய்" மட்டுமே தெரிவேன் என்பதை நாள் ஒன்றிலேயே நான் உணர்ந்து கொண்டேன் ! சிலாகிப்புகளின் ஆயுட்காலம் முதல் தோல்வி வரையிலுமே என்பதை புரிந்திருப்பதால், கொண்டாடப்படுவதையோ, குமட்டில் குத்தப்படுவதையோ நானொரு பெரிய சமாச்சாரமாகவே எடுத்துக் கொள்வதில்லை ! So இன்றைய இந்த "சுட்டா புளிச்ச மாவுத் தோசையைத் தான் !" என்ற வாதங்களின் பொருட்டு இதற்கு மேலும் நான் திராணியைச் செலவிடுவதாக இல்லை guys ! இது திமிராகத் தென்பட்டால் - so be it ! உரக்கக் கேட்கும் ஒரு சன்னமான அணியின் லாஜிக்கற்ற குரல்களின் முன்னே நான் நிதானத்தைத் தொலைப்பதாக இல்லை ! 

உருப்படியாய் எதையேனும் செய்திட உடம்பிலும், மனசிலும் வலு உள்ளவரைக்கும் எல்லோருக்கும் பிடித்தமான எதையேனும் பொதுவாய் செய்திடுவோமே என்ற எனது ஆர்வங்கள் / ஆதங்கங்கள் - அவரவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் முன்னே பொசுங்குவதை நான் உணர்வது இது முதன்முறையுமல்ல ; அடுத்த 6 ஆண்டுகளுக்குள் கடைசி முறையாக இருக்கப் போவதுமல்ல !  எனக்குப் பிடிச்ச கலரில் அலங்காரம் இல்லாங்காட்டி, நான் ஆங்காரமே கொள்வேன் என்பதை ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரத்திலுமே திரும்பத்திரும்ப ஊர்ஜிதம் செய்திடும் நண்பர்களே - பொதுநலத்திலும்  மகிழ்வு சாத்தியமே என்பதை உணர்ந்திடும்  நிலையில் நீங்களில்லை இப்போது ! என்றைக்கேனும் அது புரியுமென்று நம்புவதைத் தாண்டி இந்த நொடியில் நான் செய்திடக்கூடியது வேறென்னவாக இருக்கக்கூடும் ?! 

Anyways அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பு-வெறுப்புகள் இராதென்றாலுமே, இந்த ஒற்றை முயற்சியிலாவது அனைவருக்கும் ஏற்புடையதொரு common ground-ஐ  தேடிடவே நேற்றும், இன்றும் 'தம்' கட்டிப் பார்த்தேன் ! ஆனால்  நானல்ல ; ஸ்பைடரோ ; ஆர்ச்சியோ ; சூப்பர்மேனோ வந்தாலுமே அதெல்லாம் சாத்தியமாகாது என்பது புரிந்திடும் போது - போன லாக்டவுனின் சமயத்தினில் தொங்கலில் நின்ற "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மொழிபெயர்ப்புக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் guys ! வேலையாச்சும் ஆனது போலிருக்குமல்லவா ? எது எப்படியோ - "ஒவ்வொரு முகத்திலும் ஒரு புன்னகை" என்ற தேடலில் நானே அதைத் தொலைக்க நேர்வது தான் முரண்களின் உச்சம் போலும் !! Sighhhh !!

Bye all...stay safe !! அடுத்த (குட்டி) ஆலமரத்தை நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் ! See you around !


நேற்று..இன்று..நாளை..!

 நண்பர்களே,

வணக்கம். எதிர்பார்த்தபடியே ஒரு களேபர தினத்தின் அனுபவங்கள் நேற்றைய பொழுதை செம சுவாரஸ்யமாக்கியிருந்தன - என்மட்டிற்காவது ! வண்டி வண்டியாய் 2 பதிவுகள் என்று நேரமெடுத்துக் கொண்டிராது - சிம்பிளாக "அவரவரது பரிந்துரைகள் ப்ளீஸ் ?" என்று மட்டும் நான் கேட்டு வைத்திருக்கலாம் தான் ! அதைச் செய்திடாது, பதிவுகளில் நான் நீட்டி முழக்கியதற்குக் காரணம் இல்லாதில்லை ! 

இந்தச் சிரமமான ஆண்டின் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன ? 

நமது பட்ஜெட்களின் இடர்கள் என்ன ? 

செயலாக்கச் சிரமங்கள் என்ன ? 

என்பதை பகிர்ந்திடுவதன் மூலம் உங்களை சற்றே grounded ஆக வைத்திருக்க விழைந்தேன் ! Not that you were totally convinced !! ஆளாளுக்கு "மூவாயிரத்துக்கு புக் ; நாலாயிரத்துக்கு புக்" என்று பீதிகளைக் கிளப்பி வந்த நிலையில், இந்தப் பகிர்வு நமக்கான எல்லைகளை வரையறுத்துக் காட்டிட உதவுமென்று எண்ணினேன் ! தவிர,  "இதுக்கு அது தேவலாமா ? அதுக்கு அந்த இன்னொண்ணு தேவலாமா ?" என்ற ரேஞ்சில் option-களை சரளமாய் தந்ததன் மூலம், கதைத் தேர்வினில் நம் சாத்தியங்கள் என்னவென்பதை பட்டியலிட்டது போலாகவும் ஆகிடுமென்றுபட்டது ! 

அதுமட்டுமன்றி நம்மிடையே "அந்த NBS மாதிரிலாம் இனியொருக்க போட  வருமா ? அந்த மெகா ட்ரீம் ஸ்பெஷல் போல் வருமா ?" என்ற பெருமூச்சுச் சிந்தனைகள் நிலவுவது நான் அறிந்ததே ! ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷயத்தை ரசித்திட சாத்தியமாகும் போது, அந்த நாட்களின் சூழல்களுக்குமே அந்த ரசனையில் ஒரு முக்கிய இடமிருந்திருக்கும் ! பின்னாட்களில் அந்தச் சூழல்களை மறந்து விட்டு - "அந்த நாள் மாதிரி வருமாப்பா ?" என்று ஆதங்கப் புகைகளை மட்டும் காது வழியாய் நாம் விடுவதுண்டு ! So அன்றைக்கு NBS ஏன் க்ளிக் ஆனது ? இன்றைக்கு ஏன் ஆகாது ? என்று விளக்கிடவும் நேரமெடுத்துக் கொள்ள நினைத்தேன் ! Again யதார்த்தம் புரிந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள நிறைய பேர் தடுமாறுவது எனக்குத் தெரியாதில்லை ! போன பதிவினில் ஒரு நண்பரின் பின்னூட்டத்துக்குத் தந்திருந்த பதிலை இங்கேயும் இரவல் வாங்கிடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் : 

//ஒற்றை வரியில் சொல்வதானால் - சந்தாக்கள் மட்டும் இல்லையெனில் இங்கே "கன்னித்தீவு சிந்துபாத்" கதைகள் கூட சாத்தியமாகிடாது ! And இந்த நடப்பாண்டில் சந்தா சேகரிப்புக்கு நாங்கள் பட்ட பாடு என்னவென்பதை நேரடியாய் உணர்ந்தவன் என்ற ரீதியில், தொடரக்கூடிய அடுத்த சந்தாவின் பளுவைக் குறைத்திட வேண்டியதன் அவசியத்தை நன்றாகவே உணர்ந்துள்ளேன் ! 'வாத்து தான் முட்டையிடுகிறதே' என்ற மெத்தனத்தில் அதன் குரல்வளையைப் பிதுக்கிட நாம் முனைந்தால் - வாத்து பிரியாணியைப் போட்டு விட்டு நடையைக் கட்டவே வேண்டி வரும் !

சிந்தைகளுக்கு றெக்கைகள் இருந்திடலாம் தான் ; ஆனால் கால்கள் தரையில் நிலைகொண்டிருக்க வேண்டிய நாட்களிவை ! அதனை நானுமே உணராது போயின் - அது தான் வரலாற்றுப் பிழையாகிடக்கூடும்.//

ஐம்பதுக்குப் பின்னே ஐம்பத்தி ஒன்று ; ஐம்பத்தி ரெண்டு ; ஐம்பத்தி மூன்று என்று வருஷங்கள் தொடரவே செய்யும் தானே guys ?! ஆனால் 'இன்றைக்கு தெறிக்க விடுறோம் பாரேன்' என்ற முனைப்பில், காலத்துக்கு ஒவ்வா ஒரு பட்ஜெட்டை நாம் போட்டு வைத்திடும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் எவ்விதமிருக்கும் ? எத்தனை காலத்துக்கு இருக்கும் ? என்பதை நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்திடப் போகிறீர்கள் ? உங்கள் ஆர்வங்களுக்குத் தலைவணங்குகிறேன் guys ; உங்கள் வேகங்களுக்கு விசிலடிக்கிறேன் guys ; ஆனால் வேகத்தை மட்டுப்படுத்திடக் கோரும் ஸ்பீட்பிரேக்கரைப் பார்த்திடும் நொடியில் யதார்த்தத்துக்கும் ஸலாம் வைக்கிறேன் ! ஆரவாரங்களை தலைக்குப் போக அனுமதித்து விட்டு, சிக்ஸர் அடிக்கிறேன் பேர்வழியென்று பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து நிற்கக்கூடாது அல்லவா ?

நேற்றைய பின்னூட்டக் குவியல்களுக்கு இயன்ற மட்டிலும் பதிலளிக்க முனைந்திருந்தேன் ! தந்திருந்த option களுள் "கதைக்கே முக்கியத்துவம்" என்ற ரீதியிலானOPTION # 5 கணிசமான ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் நிற்பதாய் தோன்றியது & நண்பர் STV அதனை ஊர்ஜிதப்படுத்தியும் இருந்தார் ! So அதனை நமது துவக்கப் புள்ளியாய் அமைத்துக் கொண்டு மேற்கொண்டு திட்டமிடல் நலமென்று பட்டது ! ஆகையால்  முத்துவின் ஆண்டுமலர் 50 -ன் கொண்டாட்டங்களின் முதல் confirmed seat பெற்றிடுவது "ஒற்றை நொடி - ஒன்பது தோட்டா" ! சர்வ நிச்சயமாய் இந்த 5 பாக ஆல்பம் யாரையும் disappoint செய்திடாது என்பதால் ஒரு உத்திரவாதமான ஹிட் இருக்குமென்ற நம்பிக்கை கொள்ளலாம் !

அதே சமயம், "நாசியில் தூசி " என்றாலுமே பரவாயில்லை - பழைய பார்ட்டிஸ் இந்த மேளாவினில் கலந்திட வேண்டுமென்ற கோரிக்கைகளும் சற்றே ஒலித்ததைக் கவனிக்கவே செய்தேன் ! ஒரு மைல்கல் இதழில் மறுபதிப்புகளே வேண்டாமே என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது ! மும்மூர்த்திகளின் கதைகளுள் - CID லாரன்ஸ் தொடரில் மாத்திரமே சில புதுக் கதைகள் எஞ்சியுள்ளன - ஆனால் போன வருஷத்து "மீண்டும் கிங் கோப்ரா" ரேஞ்சிலான '60 s படைப்புகளே அவை ! அவற்றை உட்புகுத்தி இதழின் டெம்போவை மட்டுப்படுத்திட எனக்கு மனம் ஒப்பவில்லை ! அதே போல - "கையில் உள்ளன" என்ற ஒரே காரணத்துக்காக விற்பனையில் சொதப்போ சொதப்பென்று  சொதப்பிய மாண்ட்ரேக் & கோ.வை பவுடர் போட்டு விட்டு மரத்தைச் சுற்றி ஓடச் செய்திட தைரியமும் இல்லை ! So இப்படிச் செய்தாலென்ன guys - சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னே வெளிவந்திருந்த அந்த முத்து காமிக்ஸ் இதழ் # 1 ஆன  "இரும்புக்கை மாயாவி" புக்கை விலையின்றி black & white இணைப்பாகத் தருவோமா ? இதற்காகும் செலவினை சீனியர் எடிட்டர் sponsor செய்திட நிச்சயம் தயாராக இருப்பாரென்று தெரியும் எனக்கு ! வாசிப்புக்கு உதவுதோ இல்லியோ - நமது துவக்கப்புள்ளியை கண்முன்னே கொண்டு வரவாவது உதவிடும் அல்லவா ? 

"இல்லே...ஏற்கனவே மறுபதிப்புகளில் துவைத்துத் தொங்கப்போடப்பட்ட கதை இது ...! மறுக்காவும் வேணாமே !" என்பதே உங்களின் எண்ணமாக இருப்பின் - maybe முத்து காமிக்சின் இதழ் # 100 ஆன - "யார் அந்த மாயாவி ?" ஒரிஜினலாக வந்தது போலவே வண்ணத்தில் இம்முறையும் ? And விலையின்றி...?

முத்து காமிக்சில் இடம் பிடித்த பழையோர் சகலரும் நமது நன்றிகளும், வணக்கங்களும் உரியோரே - ஆனால் யாருக்கும் மாயாவியின் கிட்டக்க வந்து நிற்கும் ஆற்றல் கூடக் கிடையாது என்பதே யதார்த்தம் எனும் போது - "நேற்றைய பிரதிநிதியாய்" இம்முறையும், எல்லா முறைகளும் மிளிர்ந்திட மாயாவியாருக்கு மட்டுமே தகுதியுண்டு ! So உங்கள் தேர்வினை மாயாவியின் மத்தியில் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் !

நேற்றிரவு எனது கதைத்தேடல் குறிப்புகள் கொண்ட டயரியைத் தூக்கி வைத்துக் கொண்டு கண் அயரும் வரையிலும் உருட்டிக் கொண்டிருந்த போது 2 பொறிகள் தட்டின ! "Shortlist for the near future" என்று அடிக்கோடிட்டு 2 புதுத் தொடர்களை குறித்து வைத்திருந்தேன் ! அவை நினைவுக்கு வர, அதிகாலை 4 மணிக்கு தூக்கம் பிடிக்காது எழுந்து லேப்டாப்பை உருட்ட ஆரம்பித்தேன் - அவற்றின் digital files இன்னமும் உள்ளனவா என்று பார்த்திட ! ஹேய்..ஹேய்..ஹேய்...அவை ஒரு இண்டில் பத்திரமாய் குந்தியிருக்க அவசரம் அவசரமாய் பக்கங்களுக்குள் புகுந்து பார்த்தேன் ; ஒரு தெறிக்கும் இங்கிலீஷ் படத்தை NETFLIX-ல் பார்த்தது போலிருந்தது !! 

சமகால ஆக்ஷன் த்ரில்லர் ; நமக்கு ரொம்பவே பிடித்தமான துப்பாக்கிகளோடு அதிரடி காட்டும் சீக்ரட் ஏஜெண்ட்கள் ; மிரளச் செய்யும் car chases ; அழகான அம்மிணிகள் ; அளவான அஜால் குஜால்ஸ் ; ஐரோப்பாவின் அசாத்தியத் தலைநகர்களில் பயணிக்கும் கதை - என்று இந்தத் தொடர் ஓட்டமெடுக்கும் வேகம் நிச்சயமாய் நமக்குப் பிடிக்கும் என்றுபட்டது ! ஒவ்வொரு சாகசமும் 2 பாகங்கள் கொண்டதெனும் போது படிக்கவும் நிச்சயம் ஒரு சிரமமில்லா நீளம் இங்கு சாத்தியம் ! ஐந்து மணிக்கே ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டிருக்கிறேன் - இவற்றின் உரிமைகளைக் கோரி ; and  இன்று பொழுது சாய்வதற்குள் குட்டிக் கரணம் போட்டாவது அவற்றை வாங்கிடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது ! இது புது தொடர் # 1 பற்றி ! 

தொடர் # 2 சற்றே வித்தியாசமானது - in the sense that நாயகர் லார்கோவைப் போலான வித்தியாசப் பார்ட்டி ! மனுஷன் டிடெக்டிவோ ; ஷெரிபோ ; ரேஞ்சரோ கிடையாது ! தனியார் ஏஜென்சிக்களில் பாடிகார்டும் கிடையாது ! மாறாய் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் இவரை சாகசம் செய்யச் செய்கின்றன ! சிங்கிள் ஆல்பங்களான இவரது சாகசங்கள் ஒவ்வொன்றும் நிகழ்வது பூமியில் நாம் (காமிக்ஸ் களங்களில்) தரிசித்திருக்கா புதுப் புது இலக்குகளில் ! All out action என்றில்லாது - கதையோடு பயணிக்கும் ஆக்ஷன் ; இங்கும் சமகாலக் கதைப்பின்னல் ; இங்குமே அழகான பூனைக்கண் அழகிகள் ; இங்குமே பட்டும் படாது அஜால்ஸ் + குஜால்ஸ் என்று கதை நகர்வதை விடியும் வரைக்கும் பராக்குப் பார்த்தேன் ! With the right handling - இந்த நாயகருமே நமது எதிர்கால star பட்டியலில் இடம் பிடிக்கக்கூடும் என்று பட்டது ! இன்று பகலில் இன்னும் ஒருவாட்டி இவர் சார்ந்த அலசலை நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோடு நடத்தி விட்டு - இவருக்கும் உரிமைகளைக் கோரிட எண்ணியுள்ளேன் ! 

No வறண்ட பாலைவனம்ஸ் ; no குளிக்காத cowboys ....no அரிசோனா or டெக்சாஸ் ; மாறாக உலகின் exotic location களில் பயணிக்கும் சமகாலக் கதைகள் ; கதைக்கே முக்கியத்துவமென்ற one-shots - இவையே இனி நமது எதிர்காலமோ ? என்று தோன்றியது அதிகாலை 5 மணிக்கு ! அட..இதையே  இந்த முயற்சியின் tagline ஆக்கிட்டால் என்னவென்று தோன்றியது அந்த நொடியினில் ! 

So இன்றைய பொழுதை இந்த சிந்தனையோடு பயணிக்க எடுத்துக் கொண்டு: 

  • நேற்றின் பிரதிநிதியாக மாயாவியையும் ; 
  • இன்றின் பிரதிநிதிகளாக சிக் பில் & ஜானி போன்ற current நாயகர்களையும் ;
  • நாளையின் பிரதிநிதிகளாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" plus  இந்தப் புதியவர்களையும்

கொண்டு திட்டமிடலை finetune செய்திட விழைந்திடவுள்ளேன் ! And for sure, "நாளை" என்ற அடையாளத்துக்கு மெருகூட்ட இன்னமும் தேடிட முனைவேன் ; சிந்தித்திடவும் முனைவேன் ! Just will need some time !!

ஆட்டம் சூடு பிடித்துள்ளதுங்கோ !! 

கடைசி மரம், சித்தே ஜாலியான குட்டி மரம் ! அது மாலைக்கு ! Bye guys...bye for now !!


                        நேற்றைய நமது தளப்பார்வைகள் 4204 !!! Phew !!

Sunday, May 23, 2021

ஆலமரம் # 2 !

 நண்பர்களே,

ஆலமரத்தடி # 2-க்கு நல்வரவு !! 1 + 1 = 11 என்று ஐன்ஸ்ட்டின் ரேஞ்சுக்கு ஒரு ஒப்புதலுக்கு நாம் வந்திருப்போமென்ற நம்பிக்கையில் முன்கூட்டியே டைப்படித்துள்ள பதிவு இது ! If in case 1 + 1 = 111 என்று யாரேனும் ஒரு அசாத்திய முன்மொழிவை தந்திருந்து, அந்த ஸ்பெஷல் இதழை  சிக்கலின்றிச் செயலாற்றிடும் மார்க்கத்தையும் சுட்டிக் காட்டியிருக்கும் பட்சத்தில், இந்தப் பதிவைக் கதாசிட வேண்டியது தான் ! Anyways - நமது தேர்வு எதுவாக இருப்பினும், இந்தப் பதிவின் பெரும் பகுதி will still hold good என்பதால், உள்ளே புகுந்து தான் பார்ப்போமே ?!

கதை.....or rather கதைகள் ....!! ஒரு புது இதழ் சார்ந்த திட்டமிடலின் இரண்டாம் படி இதுவே ! 

முன்னெல்லாம் என்னிடம் சிம்பிளாய் ஒரு ஸ்பெஷல் இதழ் formula இருப்பதுண்டு ! லயன் காமிக்ஸ் ஸ்பெஷல் என்றால் ஒரு ஸ்பைடரைப் போட்டுக்கோ ; முடிஞ்சா ஆர்ச்சியைச் சேர்த்துக்கோ ; அப்புறம் லக்கி லூக் ! மீதமுள்ள இடங்களில் கன்சாமி ; கோயின்சாமி ; கொயந்தசாமி என்று கைவசமுள்ள நாயகர்களில் இங்கி -பிங்கி-பாங்கி போட்டு தேர்வு செய்வது ! பின்னாட்களில் ஸ்பைடரின் இடத்தில் டெக்ஸ் வில்லர் ; இன்ன பிற சமாச்சாரங்கள் மாற்றமின்றித் தொடர்ந்திட்டன ! And இதுவே முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் எனில், மாயாவி ; ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரை நிலைகொள்ளச் செய்து கொண்டு, அவர்களை சுற்றிக் கும்மியடிக்க அடுத்த கட்ட ஹீரோக்களை டிக் அடிப்பேன் ! Again இங்கே பின்னாட்களில் கேப்டன் டைகர் முன்னிலை கண்டு வந்தார் !

இவை எல்லாமே நமது black & white ; நியூஸ்பிரிண்ட் ; சொற்ப விலைகள் என்ற கால கட்டங்களின் நடைமுறைகள் ! நாம் ஆட்டைத் தூக்கிக் குட்டியை போட்டாலும் சரி, குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் சரி - படைப்பாளிகள் நம்மைப் பெருசாய்க் கண்டு கொண்டதில்லை ! ஆனால் இன்றைக்கோ, நாமும் ஒரு சிறு அளவிற்காவது தரத்தில் மேன்மை கண்டுள்ளோம் & most importantly தகவல்கள் மின்னல் வேகத்தில் பூமியெங்கும் விரவிடும் நாட்களிவை ! So நமக்கு கதைகளை விநியோகம் செய்திடும் நிர்வாகம் நமது "கூட்டணி இதழ் கூத்துக்களை" கண்டும், காணாது விட்டாலுமே - ஏதோவொரு விதத்தில் கதாசிரியர்களுக்கோ, ஓவியர்களுக்கோ நமது இதழ்கள் சார்ந்த தகவல்கள் ஏதேனுமொரு ரூபத்தில் பயணிக்காதிருப்பதில்லை ! இதோ - போன வருஷத்து உலகளாவிய லாக்டௌன் சமயத்தில் நடந்ததொரு கூத்தை சித்தே பகிர்ந்திடுகிறேனே :

"நில் கவனி..வேட்டையாடு..!" (Zaroff) இதழ் போன வருஷம் மார்ச்சில் லாக்டௌன் சமயத்துக்கு just முன்னே வெளியானது நினைவிருக்கும் ! இந்த ஆல்பத்துக்கான உரிமைகளை நாம் ஓரிரு மாதங்களுக்கு முன்னே தான் வாங்கியிருந்தோம் ! In fact ஒரிஜினலை பிரெஞ்சில் வெளியான ஒரே மாதத்துக்குள் நாம் துண்டைப் போட்டு வைத்திருந்ததாக ஞாபகம் எனக்கு ! அந்நேரத்துக்கெல்லாம்  ஐரோப்பாவில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்க, நமக்கு உரிமைகளை சந்தைப்படுத்திடும் குழுமம் பணியாட்களுக்கு Work from Home உத்தரவுகளைத் தந்திருந்தது ! So வீட்டிலிருந்தபடியே வேலை ஓடி வந்த நிலையில், ZAROFF ஆல்பத்தை தமிழுக்கு விற்பனை செய்துள்ள தகவலை அதன் கதாசிரியருக்கு கொஞ்சம் லேட்டாகவே தெரியப்படுத்தியுள்ளனர் ! அதன் மத்தியில் நாமிங்கே சடுதியாக இதழை வெளியிட்டிருக்க, அதன் அதகள சித்திரத் தரங்களும், கலரிங்கும் நம் மத்தியில் செமையாய்ப் பேசப்பட்டிருந்தது ! சற்றே ஓவராய் impress ஆகிப் போன நமது நண்பர்களுள் ஒருவர், நேரடியாய் ZAROFF ஓவியருக்கே தேடிப் பிடித்து  மின்னஞ்சலைத் தட்டி விட்டுள்ளார் - "ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்..உங்க படைப்பு பிரமாதம்" என்று ! அவரோ தமிழில் இது மாதிரியொரு  திட்டமிடல் இறுதி செய்யப்பட்டதையே கவனித்திராதவர் ! நம் நண்பரின் சிலாகிப்பு மின்னஞ்சலைப் பார்த்த உடனே திடுக்கிட்டுப் போய்விட்டுள்ளார் - எவனோ, ஏதோவொரு கேள்விப்படா இந்திய மொழியில் தனது படைப்பை சூட்டோடு சூடாய் வடை சுட்டு விட்டான் போலுமென்று !! பதறிப் போய் உரிமைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிக்கு போன் அடித்து - "போச்சு...அதுக்குள்ளாற எவனோ சுட்டுட்டன் ; நம்ம புக்கைச் சுட்டுட்டன் !!" என்று கலங்கியிருக்கிறார் ! அப்புறமாய்த் தான் அவர்கள் விளக்கியுள்ளார்கள் - ZAROFF இதழை பிரெஞ்சுக்கு அப்பாற்பட்டதொரு வேற்று மொழியில் முதன்முதலில் வெளியிட்டுள்ளது தமிழில் தான் என்று ! செம குஷியாகிப் போனவர் 'அந்த புக்ஸை நான் உடனே பார்க்கணுமே !!' என்று துடித்திருக்க, இங்கேயோ அந்நேரம் தேசம் தழுவிய லாக்டௌன் & ஏர் மெயில் முழுசுமாய்க் கடைப்பூட்டி இருந்தது ! So அன்றைக்கே அவசரம் அவசரமாய் ZAROFF கதையின் முழு தமிழ் கோப்புகளையும் உயர் resolution pdf ஆக்கி அனுப்பி வைத்தோம் அவரது பார்வைக்கோசரம் ! And மறு மாதம் ஏர்மெயிலில் இதழ்களையும் அனுப்பி வைத்திருந்தோம் ; பார்த்து விட்டு பூரித்துப் போய்விட்டார் !

இதே போலத்தான் வெகு சமீபத்தில் நமது ARS MAGNA இதழின் வெளியீட்டின் சமயம், கதாசிரியர் + ஓவியர் கூட்டணி நம்மிடம் முன்கூட்டியே அட்டைப்படங்கள், உட்பக்க விபரங்களை அவர்களாகவே அணுகிக் கோரிப் பெற்றிருந்தனர் ! And அந்த ஆல்பத்தின் நமது அட்டைப்படத்தை நமக்கும் முன்பாகவே அவர்களது FB பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தனர் ! இதோ - போன மாசத்து நமது "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் அட்டைப்படத்தையுமே தங்களது Twitter பக்கத்தில் ரொம்ப ரொம்ப அட்வான்சாகவே பகிர்ந்தது படைப்பாளிகளே !   So தகவல் தொடர்புகளின் வலிமை முன்னெப்போதையும் விட அசாத்தியமான வீறு கொண்டு நிற்கும் இந்த நாட்களில் நமது trademark 'கதம்ப குண்டு' புக் பாணிகள் இன்று சாத்தியமாவதில்லை ! இது தான் இன்றைய கால கட்டங்களில் ஒரு ஸ்பெஷல் இதழினைத் திட்டமிடும் சமயம் தடுக்கும் ஸ்பீட் பிரேக்கராக்கும் ! 

So இப்போது யோசியுங்களேன் guys - ஆயிரத்துக்கு, ரெண்டாயிரத்துக்கு என இந்த மைல்கல் இதழுக்கு விலை நிர்ணயம் செய்து விட்டால் - அவற்றினுள் எந்தக் கதைகளைக் கொண்டு ரொப்புவதென்று ? பேந்தப் பேந்த முழிக்காத மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு, கொஞ்சம் வேக வேகமாய் யோசனைக் குதிரைகளைத் தட்டி விட நீங்கள் முனையும்  அந்தக் காட்சி இங்கே என் மனத்திரையில் ஓடுதுங்கோ !! நீங்கள் விடைகளாக்கிடக் கூடிய சமாச்சாரங்களை யூகிக்க முயற்சிக்கட்டுமா இப்போது ?

Option # 1 : "இளம் டைகர் " !! இன்னும் 12 ஆல்பங்கள் தொங்கலில் உள்ள நிலையில் அவற்றை ஏக் தம்மில் வெளியிடலாம் !!

இது உங்க வேகமான மைண்ட்வாய்ஸ் !

இடைப்பட்டுள்ள இந்த ஒன்றரை மாத அவகாசத்தில் பிரெஞ்சில் உள்ள கதைகளை நமக்கு மொழிபெயர்த்துத் தரும் அம்மையாருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது ! So பெரிய கட்டோடு கட்டிலில் ஓய்வெடுத்து வருபவரை கொஞ்ச காலத்துக்கு எழுதச் சொல்லித் தொந்தரவு செய்திட நாம் முனையவில்லை ! அவரோ, 'போர் அடிக்கிறது ; வாசித்துப் பார்க்கவாவது ஏதேனும் கோப்புகள் இருப்பின் அனுப்பித் தாருங்கள் !" என்று கேட்டிருந்தார் ! So அவருக்கு நான் அனுப்பியது இளம் புலியாரின் எஞ்சியிருக்கும் சாகஸங்களையே ! முதல் இரண்டு அத்தியாயங்களை எப்படியோ கடந்து விட்டவர், அப்பாலிக்கா ஒரு பெரிய வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டு விட்டார் - 'மிடிலே !!' என்று !! அப்புறமும் எனக்கே மனசு கேட்கவில்லை ; நெட்டிலும் கொஞ்சம் மெனெக்கெட்டு ஆழமாகவே தோண்டினேன் - இளம் புலியாரின் கதைகள் சார்ந்த அலசல்களைத் தேடி !! பிரான்சில் surf போடுவார்களா ? Rin போடுவார்களா ? என்பதை அங்கே வசிக்கும் நமது நண்பர்களிடம் கேட்டால் தெரிந்திடும் தான் ; ஆனால் இளம் புலியாரை அங்குள்ள வாசகர்கள் கையில் கிடைத்த அத்தனை வஸ்துக்களாலும் கழுவி ஊற்றியுள்ளனர் ! So 2 நாட்களுக்கு முந்தைய தீர்மானமே இங்கே தீர்ப்பாகிடும் guys : "பழம் பெருமைகள் - புது ஜாகைகளுக்கான உத்திரவாதங்களாக ; பாஸ்போர்ட்களாக இனி இருந்திடாது !!" So இளம் புலியாரை untick செஞ்சிடுங்கோ !! 

"வேற வழியே இல்லை ; வீட்டுக்குப் பாலும் காய்ச்சியாச்சு ! இன்னிக்கு முழியங்கண்ணனுக்கு பாயசம் போட்டுப்புட வேண்டியது தான் !!"

இது கூட ரம்மியின் தலைமையிலான "தளபதி நற்பணி மன்றத்தின்" மைண்ட்வாய்ஸ் !

Option # 2கேப்டன் டைகர் புது சாகசம் - 2 பாகம் கொண்டது வர வேண்டியிருக்குதுல்லே ? அதையும், தோர்களில் கொஞ்சத்தையும் சேர்த்து ஒரு குண்டு புக் ?

Again mindvoice !!

Sorry guys,  அந்தப் புது டைகர் கதையின் ஓவியர் வேறேதோ project-ல் பிஸியாம் ! 2019 முதல் தொங்கலில் நிற்கும் ஆல்பத்தின் க்ளைமாக்ஸ் பாகமானது 2022-ன் ஏதேனும் ஒரு பொழுதில் வெளியாகலாமாம் ; ஆனால் அதுவும் இப்போதைக்கு concrete அல்ல ! ஆகையால் அவரை இந்த ஸ்பெஷல் இதழில் பங்கெடுக்கச் செய்வது நடைமுறை சாத்தியம் நஹி !

Option # 3 எப்படியாச்சும் , யார் கையிலே காலிலெயாச்சும் விழுப்பா ! ஒரேயொருவாட்டி ஒரு கதம்ப குண்டு புக்குக்கு அங்கீகாரம் கேட்டுப் பாருப்பா !! 

இது எரிச்சல் கலந்த மைண்ட்வாய்ஸ் !

ரைட்டுங்கண்ணா ; கல்லை வீசிப் பார்ப்போம் ! வந்தா மாங்காய் ! போனா கல்லு !! ஆனா எந்தக் கதைகளையெல்லாம் ஒன்றிணைப்பதுங்கண்ணா ? லயனின் நாயகர்கள் ; முத்துவின் நாயகர்கள் - என 2 அரூபக் கோட்டுக்களுக்கு மதிப்பளித்துப் பார்த்தோமெனில் - முத்துவில் தலைகாட்டக் கூடியோர் பின்வரும் ஜனமே :

லார்கோ வின்ச்

SODA 

ரிப்போர்ட்டர் ஜானி

தோர்கல்

க்ளிப்டன்

ப்ளூகோட் பட்டாளம் 

சிக் பில் 

மதியில்லா மந்திரி 

ப்ருனோ பிரேசில் 

சொல்லுங்களேன் guys - இவர்களை ஏதோவொரு ரூபத்தில்  ஒன்றிணைத்து ஒரு கதம்ப இதழுக்கு permission வாங்கவே செய்கிறேனென்று...... அந்த இதழ் மெய்யாகவே நீங்கள் எதிர்பார்க்கும் blockbuster ஆகிடுமா ? லைட்டாக தலையைச் சொறியவே செய்வேன் - நான் உங்கள் இடத்தினில் இருக்கும் பட்சத்தில் !! தனித்தனியாய் வெளியாகும் வேளைகளில்  average என்றே மார்க்குகள் வாங்கிய ஹீரோக்கள் ஒற்றை புக்குக்குள் தஞ்சம் காணும் போது மாறிடக்கூடியது என்னவாக இருக்குமென்று யோசியுங்களேன் - ப்ளீஸ் ?  ஒவ்வொரு நாயகருக்கும் . தொடருக்கும் - நீங்கள் போடக்கூடிய ரேட்டிங்குகளை நான் கடந்த 5 நாட்களாய் உங்களிடமிருந்தே கோரிப்பெற்றது ஏனென்று இப்போது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன் guys ?! NBS வெளியான நாட்களில் நமக்கிருந்த advantages இவையெல்லாம் :

1 லார்கோ வின்ச் எனும் அசாத்திய நாயகன் !

2 வெய்ன் ஷெல்டன் என்றதொரு அறிமுக ஆக்ஷன் ஹீரோ !

3 தளபதி டைகரின் main தொடரில் புதுக் கதைகள் எஞ்சியிருந்தன !

4 And சகலத்தையும் விட பிரதானமாய் - அவை நாம் முழுசாய் காமிக்ஸ் பசிகளில் ஆழ்ந்து கிடந்த நாட்கள் ! வர்ணங்களோ நமக்கு அன்றைக்கொரு புதுமை !! So அத்தனை கதைகளை ஒன்றிணைத்த இதழானது நம்மை பிரமிப்பின் உச்சத்துக்கு இட்டுச் சென்றது ! 

நம்ம கோவை இரும்புக் கவிஞர் கூட, இந்த லாஜிக்கை மறுக்க மாட்டாரென்றே நினைக்கிறேன் ! So சுலபத்தில் கிட்டிய அந்த NBS வெற்றியின் formula  இன்றைக்கு செல்லுபடியாகாதே ! Consider these facts please :

1 .அதே லார்கோவின் தொடரில் புதுசாய் ஒரு ஆல்பம் உள்ளது தான் ; ஆனால் அதைக் கண்டு தெறித்தடித்து ஓட்டமெடுக்கிறோம் ! 

2 அன்றைக்கு ரொமான்டிக் ஆக்ஷன் நாயகராய்த் தென்பட்ட வெய்ன் ஷெல்டனோ இன்றைக்கு கிட்டங்கியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் வில்லனாய்த் தென்படுகிறார் !

3 அன்றைக்கு "அட..டின்டின் பாணியில் சித்திரங்களா ?" என்று வியக்கச் செய்த ஜில் ஜோர்டனை ஊருக்குள்ளேயே சேர்க்க நீங்கள் இன்று தயாரில்லை !

4 மாயாவியாரைப் பற்றி no comments !

5 கோடஸ்டியாகியிருந்த மாடஸ்டி - இன்றைக்கு  "வளமாய்" வலம் வந்தாலுமே - சில பல டாக்டர்களைத் தாண்டி வசியமாகிட ஆளுண்டா நம் மத்தியில் ?

இவையே கால ஓட்டத்தின் தவிர்க்க இயலா மாற்றங்களெனும் போது - a குண்டு புக் is easier said than done these days !! 

யாரையாச்சும் கரண்டியை கொண்டே அப்பணும் போலிருக்குதே !!  

தொடரும் மைண்ட்வாய்ஸ் ! 

Option # 4 : ரைட்டு....கலந்து கட்டி ஹீரோக்களை அடிக்கத் தான் சுகப்பட மாட்டேங்குது ; தோர்கல் தொடர் மாதிரி எதையேனும் தேர்ந்தெடுத்து வரிசையாய் ஒரு ஐந்தாறு கதைகளை இணைத்து குண்டு புக்காக்கினால் ? 

சுலபமாய் செய்திடலாம் தான் ; ஆனால் தோர்கல் இன்னமும் நம் மத்தியில் ஒரு universal நாயகர் அல்லவே ?! அவரை மட்டுமே ஒரு மைல்கல் இதழின் தூண்களாக்குவது குருவி தலையில் மாடமாளிகை கட்ட முற்படுவது போலாகிடாதா ?

Option # 52019 ஈரோட்டில் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஒரு முற்றிலும் புது இதழாய் ; எவ்வித ஸ்டார் நாயகரும் இல்லா முயற்சியாய், கதைக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சிய இதழாய் களம்கண்டது ! உங்களுக்கு அது போலானதொரு முயற்சி இங்கேயும் ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? 

இப்போ மைண்ட்வாய்ஸ் அவசியப்படாதுங்கோ ; உரக்கவே ப்ளீஸ் ?

Option # 6 : போனெல்லியினில் உள்ள நாயகப் பெருமக்களை ஒரே இதழில் LMS போல நிறைத்திட permission கிட்டும் தான் ! 'தல' டெக்ஸை லயனின் ஆட்டக்காரராய் பார்த்தே பழகிப் போய்விட்டதால் - அவர் நீங்கலாய் :

மர்ம மனிதன் மார்ட்டின்

CID ராபின்

டைலன் டாக்

ஜூலியா 

அப்புறம் நாம் இன்னமும் பார்த்திரு சில (போனெல்லி) புதியவர்களான ZAGOR ; MISTER NO போன்றோரையும் ஒருங்கிணைத்து ஒரு டெக்ஸ் சைசிலான ஸ்பெஷல் இதழை தயாரிக்க இயலும் தான் ! அவர்களது ஸ்பெஷல் இதழ்கள் (இதழ் # 100 ; இதழ் # 250 போன்றவை)  கலரிலான சாகசங்களுடன் available எனும் போது இத்தகையதொரு தொகுப்பினை கலரிலும் நாம் திட்டமிட இயலும் ! 

இக்கட ஒரு ஜனம் நிறைந்த கூட்டணி இருக்கக்கூடும் தான்  ; ஆனால் அது போன எலெக்ஷனின் "மக்கள் நலக் கூட்டணி" போலாகிடுமோ ? என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் நீங்களே ! So உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?

Option # 7 : மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; செக்ஸ்டன் பிளேக் ; 13 வது தளம் - போன்ற fleetway தயாரிப்புகளை சுலபமாய் ஒருங்கிணைக்கலாம் தான் ; வர்ணங்களுமே சாத்தியமே ! இன்னாண்றீங்க ?

இந்தக் கோமுட்டித் தலையன் கிட்டே இந்த வாரம் முழுக்க நாமே சொன்ன சமாச்சாரங்களை மறுக்கா மறுக்கா நினைவுபடுத்த வழி பண்ணுறானே ? சதிகாரா !!

Option # 8 : வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் ? 

எனது பதில் : பீரோவில் மாண்ட்ரேக் கதைகள் கடந்த 25 வருஷங்களாய்த் துயின்று வருகின்றன ; காரிகனுமே கால் நூற்றாண்டாய் ! வேதாளன் கதைகளுக்கு மறுக்கா உரிமைகள் வாங்கிட நமக்கு  சாத்தியப்படுகிறது என்று வைத்தே பார்த்தாலுமே - மெய்யாலுமே இந்த தூசி தட்டும் படலம் இந்த மைல்கல் தருணத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடும் என்கிறீர்களா ? 😕😕

Option # 9 : ரைட்டு - குண்டு புக் முயற்சியினில் வேறு ஏதாச்சும் செய்ய முடியுமாவென்று யோசித்தால் :

தோர்கல் 

சிக் பில்

ரிப்போர்ட்டர் ஜானி 

இந்த மூவரும் உங்களின் good புக்சில் உள்ள நாயகர்கள் ! Maybe இவர்கள் மூவரையுமோ ; அல்லது இருவரை மட்டுமோ ஒரு அடித்தளமாக்கிக் கொண்டு, இவர்களோடு கரம் கோர்க்க புதுசாய் பிராங்கோ-பெல்ஜிய நாயகர்களின் மத்தியில் தேடலைச் செய்து பார்த்தாலென்ன ? நாம் தேடும் commercial ஹிட் நாயகர்கள் - ஆக்ஷன் / டிடெக்டிவ் ஹீரோக்களாகவோ, அதிரடிக் கௌபாய்களாகவோ மட்டுமே தானிருந்திட வேண்டி வரும் ! கார்டூன்களே வேலைக்கு ஆகாதென்று போட்டுத் தாக்கி விட்டீர்கள் ; இருண்ட களங்கள் ; அமானுஷ்யங்கள் ; கிராபிக் நாவல்கள் இத்யாதிகளெல்லாமே இந்த நாட்களுக்கோ , இந்த ஸ்பெஷல் இதழுக்கோ பொருந்திடா சமாச்சாரங்கள் ! So that leaves us with the tried & tested secret agents or cowboys ! 

இதுவே முன்செல்லும் வழியென்று உங்களுக்குத் தோன்றினால், எனது shortlist-ல் உள்ள சில புது ஆக்ஷன் நாயகர்களை இந்த சிக் பில் / ஜானி / தோர்கல் கூட்டணியுடன் கைகோர்க்க வழியேதும் இருக்கக்கூடுமா என்று முட்டி மோதிப் பார்த்திடலாம் ! படைப்பாளிகள் இசைவு சொன்னால் சூப்பர் ; இல்லையென்று சொன்னால் புதுசாய் இன்னொரு ஆலமரத்தைத் தேட வேண்டி வரும் ; அல்லது slip case இருக்க பயமேன் ? என்று மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டி வரும் ! 

தற்போதைக்கு அதற்குள்ளெல்லாம் மண்டையை விட்டு சிராய்த்துக் கொள்ளாது - OPTION 9 உங்களுக்கு ஓ.கே.வா ? இல்லையா ? என்று மட்டும் பதிவிடுங்கள் ப்ளீஸ் ! அப்புறமாய் மற்றதை யோசித்துக் கொள்வோமே ?

Option # 10 : ஓவியர் ஹெர்மனின் படைப்புகளில் இன்னமும் நிறைய one shots உள்ளன guys ! 'தனித்திரு...தணிந்திரு' பாணியிலான offbeat கதைகள் - அவற்றின் பெரும்பான்மை ! சிலவற்றிற்கு அவரது மகன் பேனா பிடித்துள்ளார் ; ஒரு சிலவற்றுக்கு வான் ஹாம் ! Maybe ஒரு தொகுப்பாய் ஹெர்மனின் இந்த oneshots அனைத்தையும் இணைத்திட முயற்சிக்கவும் செய்யலாம் தான் ! செம வித்தியாசமான முயற்சியாக இருக்கக்கூடும் என்பது இங்குள்ள பாசிட்டிவ் ! ஆனால் எல்லாமே one shots ஆக இருந்திடும் & கதைக்களங்கள் பற்றி இந்த நொடியில் என்னுள் சன்னமான கதைச் சுருக்கங்களைத் தாண்டிப் பெருசாய் அலசல்கள் நஹி என்பது நெகட்டிவ் ! தவிர, ஹெர்மனின் படைப்புகளில் எப்போதுமே ஒரு மென்சோகம் இழையோடக்கூடும் என்பதுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ! சொல்லுங்களேன் - THE MASTER'S SPECIAL என்று போட்டுத் தாக்கலாமா ? 

So  "சாத்தியம்" என்ற அடையாளத்துடன் இப்போதைக்கு எனக்கு தோன்றிய options மேற்படிப் பத்தே ! இவை தவிர்த்து - நீண்டு செல்லும் ஒற்றைக் கதைச் சங்கிலியுடனான பயணங்களை  (ALONE மாதிரியானவை) முயற்சிப்போமா ? என்ற எண்ணம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தான் ! ஆனால் அந்த கதையோட்டங்களில் நாட்டம் இல்லாதோருக்கு இந்த இதழ் ஒரு மெகா மொக்கையாய்த் தோன்றிடக் கூடும் என்பதால் மேற்கொண்டு அந்த ரூட்டில் பயணிப்பதில்லை ! 

And உங்களுக்குத் தோன்றிடக்கூடிய practical முன்மொழிவுகள் most welcome too ! 

சூப்பர்மேனுக்கு try பண்ணலாம் ; ஸ்பைடர்மேனுக்கு try பண்ணலாமென்ற ரீதியிலான எண்ணங்களும் option-களாக இந்நொடியினில் உங்களுக்குத் தோன்றிடக்கூடும் தான் ! ஆனால் நடைமுறையில் அமெரிக்க சூப்பர் ஹீரோக்களோடு ஒத்துப் போக நாம் ரொம்பவே திணறுவோம் என்பதால் not worth the ஆராய்ச்சி ! அதுமட்டுமன்றி, இந்த கூட்டான்சோறு proposal-களெல்லாம் அவர்களுக்கு எட்டிக்காய்கள் !  அப்புறம் "இரத்தப் படலம் spin-off கதைகளை லைனாய் போட்டுத் தாக்கிடலாமென்று" பழனிக்கு உதிக்கப் போகும் சிந்தனை ; "விண்வெளிப் பிசாசு + Sinister 7 கதைகளை இணைத்து வண்ணத்தில் " என்று கவிஞரின் பரிந்துரை ;  etc etc என இங்கே பதிவாகாது போகாது தான் ! But இது கலாய்ப்சுக்கும் ; கனாக்களுக்குமான வேளையல்ல என்பது நண்பர்களுக்கும் தெரியும் என்பதால், அவர்களே அந்த முன்மொழிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பேன் !  

ஆக - இனி பந்து உங்கள் தரப்பில் guys ! 

இங்கு ஒரு தீர்மானத்துக்கு நாம் வந்து விட்டோமெனில், அது சார்ந்த திக்கில் மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிக்க நான் பிஸியாகிடுவேன் ! And மெயினான 2 பஞ்சாயத்துக்கள் முடிந்சூ எனில், காத்திருக்கும் மீத இரண்டு செம சுளுவானவை ; ஜாலியானவை !!

இன்னும் ரெண்டாஆஆஆ ??? என்ற உங்களின் கூக்குரல் நடையைக் கட்டியவனுக்குக் கேட்குது !!  

அவை இரண்டுமே சும்மா இம்மியூண்டுப் பதிவுகளே & அவற்றை நாளைக்குப் பார்த்துக்கலாம் ! இன்றைய இந்த 2 மெயின் சமாச்சாரங்களில் ஓரளவுக்கேனும் ஒப்புதல் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் ! Bye for now !! See you around tomorrow !!