Powered By Blogger

Saturday, April 30, 2022

கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸ் !

 நண்பர்களே,

வணக்கம். டெஸ்பாட்ச் தினங்கள் எப்போதுமே ஒரு குஜாலான நாள் - at least என் மட்டிலாவது ! அதற்கு முந்தைய பொழுதுகளில் பேமானிகளாய்  நானும், நமது DTP செக்ஷனும் நாக்குத் தொங்க விடிய, விடிய பணியாற்றி வந்திருக்க, முன்னாபீஸிலோ டெங்ஷன்களின்றி 'ஆமாங்க சார் ; நெத்தப் படலம் அப்போவே காலிங்க சார் ! இல்லீங்க  - வேதாளர் புக் மட்டும் தனியா கிடைக்காதுங்க சார் !" என்ற ரீதியில் ஏதாச்சும் பேசிக்கொண்டிருப்பார்கள் ! ஆனால் டெஸ்பாட்ச் நாளிலோ நிலவரம் செம உல்டாவாகிப் போகும் !  சரேல்..சரேல் ...என்று உரிபட்டு, ஒட்டப்படும் செல்லோ டேப்களின் ஓசைகளையும், காதுக்குள் போனைச் செருகிக் கொண்டே "இல்லீங்க சார் ; புக் இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும் சார் !" என்று சொல்லியபடிக்கே முரட்டு டப்பிக்களை வளைக்க பிரயத்தனங்கள் மேற்கொள்வதையும் காலை ஆட்டிக் கொண்டே பார்த்தும், கேட்டுக் கொண்டுமிருப்பேன் !  சம்பள நாளில் வாசலில் ஆஜராகிடும் ஈட்டிக்காரனைப் போல அரை அவருக்கு ஒருவாட்டி முன்னே போய் - "DTDC-க்கு கிளம்பிடுச்சா ? ST-க்கு எவ்ளோ போயிருக்கு ?" என்று குடல்களை உருவிவிட்டு மறுக்கா கால்ஆட்டும் படலத்தினை கருமமே கண்ணாய் தொடர்ந்திடுவேன் ! 

இன்றைக்கும் no different ! ஆனால் ஒரு சன்னமான வித்தியாசத்துடன் ! இம்மாத டப்பிகளில் ஸ்மாஷிங் '70s சார்பினில் மெகா சைஸினில் நமது ஜென்டில்மேன் சாரும் பயணிப்பதால் மாமூலைக் காட்டிலும் 'பொட்டிகளின்' எண்ணிக்கை செம ஜாஸ்தி ! So மதியம் மூன்று மணிவாக்கினில் நிறைவுற வேண்டிய டெஸ்பாட்ச், இம்முறை பொழுது சாயும் நேரம் வரையிலும் தொடர்ந்தூ !! And சின்னச் சின்ன நடைகளாய் கூரியர் ஆபீசில் ஐக்கியமான பார்சல்களே இன்றைக்கு அங்குள்ளோரையும் இரவு ஒன்பது வரைக்கும் பிசியாக்கிடும் ! ஒரு ஜென்டில்மேன் டிடெக்டிவ், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தினைத் தேடிடும் இந்தப் படலமானது இனிதே துவக்கம் கண்டுள்ளது ; தொடரும் நாட்களில் கண்ணாடிக்கார அங்கிளையும், சறுக்குத்தலைத் தாத்தாவையும் நீங்கள் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டால் இந்த SMASHING '70s முயற்சியானது பாதிக் கிணறைத் தாண்டும் வைபவமானது  ஒரு smashing success ஆகியிருக்கும் ! நேர்கோட்டுக் கதையானந்தாவும், பால்யக்காதலானந்தாவும் நம்முடன் இருப்பார்களாக ! தொடரும் நாட்களில் புது இதழ்களின் மசி வாசனைகளோடும், புதுக் கதைகளோடும் 'பழகிப்' பார்க்கும் படலங்கள் விமரிசையாய்த் துவங்கியிடவுமே  புனித மனிடோ அருள்வாராக !

Before the spotlight goes on to the newbies - உங்களிடம் கேட்க ஒரு டஜனுக்கு அனுசரித்த கேள்விகள் வெயிட்டிங் ! "இந்த மாமாக்கு மனசிலே இடம் தரலாமா ? அட்டவணையில் தரலாமா ? இந்த அத்தாச்சிக்கு பரண் சுகப்படுமா ? தரையில் உலவ விடலாமா ? " என்ற ரீதியிலான மாமூலான கேள்விகளே அவை ! ஆனால் ரசனைகள் எனும் நீரோடை - நில்லாது ஓடிவரும் சுட்டிக் குழந்தை போலானதெனும் போது,  'நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று சங்கிலி முருகன் பாணியில் அவ்வப்போது ஊர்ஜிதம் தேடிக் கொள்ளும் அவசியம் எழுவதைத் தவிர்க்க வழிகளில்லை ! So 'எதிர்கட்சிக்காரன் இதையெல்லாம் பார்த்தா என்ன நினைப்பான் ?" என்று கவுண்டர் பாணியில் திகைத்திடாது - மனசில் படும் பதில்களை பளிச்சென்று அடித்திடுங்களேன் folks !! 2023 இன்னும் கணிசமான தொலைவினில் இருந்தாலுமே, அதற்கான முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்திடும் தருணங்கள் புலர்ந்துவிட்டன நமக்கு ! So உங்களின் inputs செம முக்கியம் இந்த நொடியினில் ! Here goes : 

நூற்றி நாற்பத்தியேழாவதுவாட்டியாய் கேட்பதாய்த் தோன்றினால் மன்னிச்சூ guys ; 'தல' தான் கேள்விகளின் முதற்புள்ளி ! காத்திருக்கும் 2023 செப்டெம்பர் 30 தேதிக்கு, நமது தலயின் 75-வது பிறந்தநாள் புலர்ந்திடவுள்ளது ! In effect - இது நமது டாப் ஸ்டாரின் மைல்கல் பொழுதெனும் போது அவருக்கான மருவாதிகளில் குறைச்சல்கள் இருக்கப்படாதே என்ற எண்ணம் உள்ளுக்குள் ! அதே சமயத்தினில் - "பொன்முட்டையிடும் வாத்தை தலப்பாக்கட்டிக்கு தாரை வார்த்த தேங்காமுடி !" என்ற பெயரை ஈட்டிடக்கூடாதே என்ற பயமுமே சமவிகிதத்தில் உள்ளுக்குள் ! So இந்த ஒற்றை topic gains more significance than the others to follow !!

கேள்வி # 1 : போன ஆண்டு + நடப்பாண்டில் இதுவரையிலும் - டெக்ஸ் சாகசங்களில் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ?

Answer

A .என்ன கேள்வி கேட்டுப்புட்டே சகோ ? அல்லாத்தியும் படிச்சுப் போட்டுப்புட்டோம்லெ !! 

B  ஆங்....ஒரு பாதி ?!  

C . அது வந்துங்கண்ணா...நெறய பக்கம் பொம்ம பாத்துட்டதுலாம் "வாசிக்க புக்ஸ்" லிஸ்டில் சேர்த்துக்கலாமா ?

கேள்வி 2 :ரு நம்பராய் மட்டும் சொல்லுங்களேன் - 2023-க்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் இருந்தால் நலமென்று ? (சைடு குறிப்பு :கவிஞர்களின் பதில்கள் தற்காலிகமாய் ஒரு சாக்குப்பைக்குள் போட்டு கட்டப்படும் ! )

கேள்வி # 3 : இதுவுமே 'தல' சார்ந்த கேள்வியே ! கலரில் TEX க்ளாசிக்ஸ் வெளியாவது அடுத்தாண்டிலுமே தொடரலாமா ? அல்லது 2023 க்கு மாடர்ன் டிரெஸ் போட்ட இந்த அபிதகுஜாலாம்பாட்கள் வேண்டாமா ? 

உங்கள் பதில்களை : YES / NO என்று அமைத்திடுங்களேன் - ப்ளீஸ் !

கேள்வி # 4 :

நடப்பாண்டினில் அறிமுகம் கண்டுள்ள நிறைய புது நாயக / நாயகியருக்கு தொடரும் மாதங்களில் மறு வாய்ப்புகள் வெயிட்டிங் ! So அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலங்கள் தொடர்ந்திடும் ! இந்த நொடிதனில் கீழ்க்கண்ட புதியவர்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ?

ஆல்பா

a )தொடரலாம் ! 

b )பேச்சைக் குறைச்சால் தொடரலாம் ! 

c)பரணில் LADY S-க்கு பேச்சுத்துணைக்குப் போகலாம் ! 

சிஸ்கோ

a நிச்சயமாய் ! 

b பார்ப்போமே !

டேங்கோ

a Oh yes !! 

b Oh no !!

ரூபின்

a தொடாமலே தெறிக்குதே ;நிச்சயமாய் வேணும் !! 

b ஒரு சாயலுக்கு ராணியிலே வர்ற குரங்கு குசலாவை ஞாபகப்படுத்துது பாப்பா ! டாப்பா வேற பார்த்துப்போமே !

கேள்வி # 5 : கார்ட்டூன் சார்ந்த கேள்வி இது :

க்ளிப்டன் - VRS தரப்பட்டு கேரட் மீசைக்காரர் புறப்பட்டாச்சு !

ஹெர்லக் ஷோம்ஸ் - கிட்டத்தட்ட கதைகள் காலி !

So எஞ்சியுள்ள லக்கி லூக் ; சிக் பில் ; ப்ளூகோட் பட்டாளம் ; மேக் & ஜாக் கூட்டணியில் வண்டி ஓடி வருகிறது ! 

My question is : இந்த நாற்கூட்டணியே ஓ.கே.வா ? போதுமா ? அல்லது கொஞ்சம் புதுமுகங்கள் உள்நுழைந்தால் 'கதவைத் திற..காற்று வரட்டும்' என்று feel பண்ணுவீர்களா ? 

கேள்வி # 6 : 

இறை ஊழியம் பண்ண வேண்டிய அந்த டேவிட் சாலமோன்  NYPD-ல் டாணாக்காரராய்ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் ! 

a SODA-வின் சேவை நமக்குத் தேவையா ? 

b அல்லது வேறு ஆணிகள் பிடுங்க முயற்சித்தல் நலமென்பீர்களா ?

கேள்வி # 7 :

கமல் மெரி பேசிடும் அந்த கி.நா.க்கள் தற்காலிகமாய் பின்சென்றுள்ளன ! ஸ்டெர்ன் ; அண்டர்டேக்கர் போன்ற கமர்ஷியல் கி.நா.க்களே தற்சமயம் நடைமுறையில் உள்ளன ! 

a இதுவே தொடரலாமா ? 

b அல்லது 300 times மூக்கைச் சுற்றவல்ல கதைகளிலும் ஒரு சுகம் உண்டென்பீர்களா ?

கேள்வி # 8 :

மாதமொன்றுக்கு வாசிக்க எத்தனை புக்ஸ் இருந்தால் தேவலாமோ ?

2 ? 3 ? 4 ?

கேள்வி # 9 :

என்னதான் நாங்கள் உருண்டு புரண்டு புதியவர்களைக் கண்ணில் காட்டி வந்தாலுமே, "ஆனாலும் அந்தக்காலத்து தியாகராஜ பாகவதர் போல வருமா ? !" என்று ஆங்காங்கே ஒரு அணியினர் குரல்கொடுப்பது ஒரு தொடர்கதையே ! 

So ஒரு பழைய பார்ட்டியை ; ஒரேயொரு பழைய பார்ட்டியை கைத்தாங்கலாய்க் கூட்டி வர நாங்கள் ரெடியெனில் - யாரை அழைத்து வரக் கோருவீர்களோ ?  உங்களின் நிகழ்காலத்து காமிக்ஸ் உலகினை ஜொலிக்கச் செய்யக்கூடிய அந்த ஒரேயொரு புராதனர் யாராக இருக்கக்கூடும் ? 

கேள்வி # 10 :

மறுபதிப்புகளே இல்லாததொரு ஆண்டு !! இதனை ஒருக்கா முயற்சித்துப் பார்த்தாலென்ன ? என்று உங்களுக்குமே எப்போதேனும் தோன்றியுள்ளதா folks ? இது குறித்து உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?

கேள்வி # 11 :

"குண்டூ புக்ஸ் ; மெகா புக்ஸ்" என்ற உங்களின் ஆர்வங்கள் நிஜமாகிடும் போது அவற்றை கொண்டாடும் கையோடு 

a ஏக் தம்மில் வாசித்துத் தள்ளி விடுவீர்களா ?

b தலைமாட்டில் வைத்தபடிக்கே வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பீர்களா ?

c ரொம்ப காலமாய் ஆடி வரும் அந்தக் கூடத்து மேஜையின் ஒரு காலுக்கு தாக்கானாக குண்டு புக்கைச் செருகுவதன் சாதக-பாதகங்களை மோட்டு வளையைப் பார்த்தபடிக்கே ஆராய்வீர்களா ? 

கேள்வி # 12 :

கௌபாய் ஜானருக்கான தற்போதைய ஸ்லாட்ஸ் பற்றி :

a ஓ.கே. இதுவே போதும் !

b ஊஹூம்...ஜாஸ்தியுள்ளது !

c இன்னும் கூட்டலாம் !

கேட்க இன்னமுமே கேள்விகள் உண்டென்றாலும், தற்சமயத்துக்கு இவையே போதுமென்று படுகிறது ! கேள்விகளின் அடுத்த அத்தியாயம் ஜூலையினில் ! So கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டு இப்போதைய பதில்ஸ் ப்ளீஸ் !! 

அப்புறம் மே இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் ரெடி ! Happy Shopping & happier reading guys ! Bye all ....see you around !! Have a cool weekend !

Saturday, April 23, 2022

மே...மே..மே...!

 நண்பர்களே,

வணக்கம். லேசான சாரல் ; மப்பும், மந்தாரமுமான வானம் ; ஒருபக்கம் IPL ; இன்னொரு பக்கம் Netflix ; கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு கத்தை காமிக்ஸ் ; இன்னொரு பக்கமோ 'தல' டெக்சின் இறுதிக்கட்டப் பணிகள் ! Saturdays cant get any better ....at least for me என்பேன் !! நீங்களுமே கவுண்டர் பாணியில் "ஒரே பிஷி"யாக இருப்பீர்கள் எனும் போது பதிவினை நறுக்கென்று அமைத்திட விழைவேன் !

First things first ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் - 2 எட்டுத்திக்கிலும் தனது solo பயணத்தினை நேற்றைக்கே துவக்கியிருக்க, பெரும்பான்மை நண்பர்களை அது இன்று எட்டியிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! And திருப்பூர் புத்தக விழாவிலுமே 'தல' முன்வரிசையில் காத்திருப்பதால், அங்கு விசிட் அடிப்போர், மசி மணம் மாறாத பிரதிகளை நமது ஸ்டாலிலும் வாங்கிக்கொள்ளலாம் ! நமது நண்பர்களுள் உள்ள சில முனைவர்கள், இந்த இதழுக்கான பிழைத்திருத்தங்களைச் செய்திருப்பதால் - மாமூலான spelling சொதப்பல்கள் இராதென்ற நம்பிக்கையில் fingers இறுக crossed ! இந்த இதழின் விற்பனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதமானது நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கெனச் செல்லவிருப்பதால் - இதுவரையிலும் இதற்கு ஆர்டர் செய்திரா நண்பர்கள் can go for it now !

Moving on, சந்தேகமேயின்றி மே மாதத்தின் highlight ஒரு க்ளாஸிக் நாயகரின் மறுவருகை என்பதனால் அவரை தேஜஸாக்கிட ஆனமட்டுக்கு முயற்சித்து வருகிறோம் ! And அந்த மெகா சைஸ் ராப்பரில் நகாசு வேலைகள் சகலமும் முடிந்து, ரிப்பும், டெஸ்மாண்டும் ஹாயாக காட்சி தருகின்றனர் ! இன்றுவரைக்கும் ஒரு journeyman நாயகராய் ஆங்காங்கே, அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வந்ததொரு நாயகர் இன்று ஒரு solo ; மெகா தொகுப்பினில் ஒரு மெகா ஸ்டாருக்கான அந்தஸ்த்தினை ஏற்றுக்கொள்ளத் தயாராகி வருகிறார் ! மொத்தம் 8 கதைகள் ; ஒவ்வொன்றுமே 20 முதல் 25 பக்கங்களுக்குள் ;  and உளுந்தூர்பேட்டை போக துபாய் வழியாய்ப் பயணம் பண்ண வேண்டிய மாதிரியான கட்டாயங்களை முன்வைக்காத சுலபக் களங்கள் எல்லாமே !! So போன மாசம் துவைத்த பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டே IPL மேட்ச்களையும், ஆபீஸின் ஆன்லைன் மீட்டிங்குகளையும் attend செய்த கையோடு, ரிப் ஸ்பெஷலுக்குள்  நீங்கள் புகுந்து, ஒவ்வொரு கதையாய் ஜாலியாய் வாசித்து விட்டு வெளியேறலாம் ; புரிதல்களிலும் எவ்வித lag இருந்திடாது ! 

And நேற்றைக்கு வெளியாகியுள்ள டெக்ஸ் க்ளாசிக்ஸ் 2 - 'தல' கோட்டாவினை நிரவல் செய்திருப்பினும், மே மாதத்திலுமே "விடாது வஞ்சம் !!" Yes - நம்மவருக்கொரு டபுள் ஆல்ப ஸ்லாட் வெயிட்டிங் again ! இந்த ஆல்பத்தினுள் புகுந்திடும் முன்பாய் வீட்டிலுள்ள புத்தக பீரோவினை உருட்டி, டெக்சின் - "நில்..கவனி..சுடு!"  மற்றும் தளபதியின் "என் பெயர் டைகர்" ஆல்பங்களை தேடியெடுத்து லைட்டாக ஒரு வாசிப்பு விட்டால் நலமென்பேன் ! Becos - வன்மேற்கின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அந்த O.K. Corral நேருக்கு நேர் மோதலே "விடாது வஞ்சம்" ஆல்பத்தின் துவக்கப் புள்ளி ! அங்கே அரங்கேறிய அதகள மோதலின் பின்தொடர்ச்சியினில் நம்ம 'தல' + தாத்தா கார்சனைப் புகுத்தி, சில பல நிஜ மாந்தர்களை உள்நுழைத்து, கதாசிரியர் மௌரோ போசெல்லி வலம் வந்திருக்கிறார் ! அவருக்குத் தோள் கொடுத்திருப்பதோ - ஒல்லிபெல்லி ஜூலியா ஆல்பங்களுக்கு ரெகுலராய் சித்திரங்கள் போட்டு வரும் ஓவியை - லாரா சுக்கேரி ! பாருங்களேன் அட்டைப்படத்தினையும், ஓவியையையும் :
ஒரிஜினல் அட்டைப்படத்தில் கொஞ்சமாய் வர்ணங்களை ஏற்றி, பின்னணியில் கொஞ்சம் வெற்றிடங்களை ரொப்பி, பாஷை தெரியாத பஸ் ஸ்டாண்டில் பிச்சிப் போட்ட ஜிலேபி மாதிரியான எழுத்துக்களிலான  போர்டுகளை வாசிக்க முனைபவரைப் போல விழித்துக் கொண்டிருந்த  டெக்ஸை லைட்டாக மாற்றியது - என்பனவெல்லாம் நமது டிசைனர் கோகிலாவின் கைவண்ணம் ! கதையைப் பொறுத்தவரை வன்மேற்கின் நிஜ மனுஷாளுமே ஒரு இணைத்தடத்தில் பயணித்து வருவதால், இயன்றமட்டுக்கு மிகைப்படுத்தாது பயணிக்க மௌரோ போசெல்லி முயற்சித்துள்ளார் ! For a change - 'பேச்ச குறைங்கடா டேய் !!' என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு இங்கே கதைச் சம்பவங்கள், நெடும் வரிகளுக்கு அவசியங்களை ஏற்படுத்துகின்றன ! And நெல்லையைச் சார்ந்ததொரு புது சகோதரி இதற்குப் பேனா பிடிக்க முனைந்திருந்தார் ; பாவம், முதற்பணிக்கு இது ரொம்பவே தப்பிதமான தேர்வு என்பது ஒட்டு மொத்தத்தையும் கடாசிவிட்டு, திரும்பவும் புதுசாய் எழுத உட்கார்ந்த  போது தான் எனக்கே புரிந்தது ! சுலபமான, ரெகுலரான டெக்ஸ் ஆக்ஷன் மேளா தானே ; கையாண்டுவிடுவார் என்று எண்ணியிருந்தேன் ; ஆனால்  "விடாது வஞ்சம்" அவரைப் போட்டுத் தாக்கியிருப்பது , பக்கத்துக்குப் பக்கம் புலனாகியது ! Guess I am partly to blame too !! எது எப்படியோ, கடந்த சில நாட்களில் விரல்கள் எனக்கு ஒடியாத குறை தான் !

ஆனால் நேர்மாறாய் செம ஜாலியாய்ப் பணியாற்றும் ஒரு வாய்ப்பினைத் தந்த மகானுபாவன் ஸ்ரீமான் டிரெண்ட் அவர்களும் இந்த மாதத்தில் இடம் பிடித்திருப்பதால் காய்ந்து போன மண்டை சற்றே ஜில்லென்றானது ! As always அலட்டலில்லா அந்த பாணியுடன், அசத்தலான ஓவியங்கள் + கலரிங் என்ற கூட்டணியில் "தேவையில்லா தேவதை" இம்மாதத்தின் ஒரே கலர் இதழ் என்ற குல்லாவை மாட்டிக் கொள்கிறது ! இதோ - preview : 


மொட்டைப் பையனாய்,கனடாவின் பிரேம்ஜியைப் போல ரொம்ப காலமாய் சுற்றித் திரிந்த டிரெண்டுக்கு ஒரு வழியாய் இந்த சாகசத்தில்  கண்ணாலத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார் கதாசிரியர் ! ஆனால் மனுஷன் சந்தோஷப்பட வேண்டிய பொழுதுகளில், தொல்லைகளை உட்புகுத்தி, கவுதம் கம்பீராட்டம் மூஞ்சைத் தூக்கிக் கொண்டே நெடுக ரவுண்டு அடிக்கும் வரத்தையுமே ஹீரோவுக்கு நல்கியுள்ளார் ! தொடரின் இறுதிக்கு முன்பான சாகசமிது என்பதால், 2023-க்கு இவர் தேர்வாகிட கூடுதலாய் ஒரு காரணம் கிட்டியது போலாகிறது ! இந்த ஆல்பத்தை ரசித்த பிற்பாடு மறவாது சொல்லுங்களேன் folks - டிரெண்டை சந்தோஷமாய் குடியும், குடித்தனமுமாய் குப்பை கொட்ட அடுத்தாண்டினில் ஒரு farewell ஏற்பாடு செய்து விடலாமா ? கடைசி ஆல்பத்துக்கு ஓ.கே. சொல்லிடலாமா ?

அதிர்ந்து பேசத்தெரியா ஒரு நாயகரிலிருந்து அதே போலான இன்னொரு நாயகருக்கு இனி தாவிடலாமா ? முன்னவர் டிரெண்ட் சிகப்புச் சட்டையில் தகதகப்பவரெனில், நான் குறிப்பிடும் பின்னவரோ கருப்பில் சுற்றித் திரிபவர் ! And yes - அது நம்ம நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தான் ! 

"வழியனுப்ப வந்தவன்" & "காட்டான் கூட்டம்" என 2 செம offbeat கதைகளுடன் நம் மத்தியில் entry தந்துள்ள இந்த ஏறிய நெற்றிக்காரரை சீக்கிரமே (மீண்டும்) சந்திக்கவொரு வாய்ப்பு எழுந்துள்ளது என்பது தான் நான் செல்லவிருக்கும் முன்பாய்ச் சொல்லவிருக்கும் சேதி ! ஜம்போ காமிக்ஸ் சீசன் # 4-ன் இறுதி இதழாய் அறிவிக்கப்பட்டிருந்த "வைகறைக் கொலைகள்" black & white-ல் ரூ.65 விலையினில் வந்திட வேண்டியது ! கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாய், பிரான்சில் நடந்த 3 கொலைகளின் புலனாய்வும், குற்ற விசாரணையும் தான் இந்த ஆல்பத்தின் கரு ! நிறைய பேசுகிறார்கள் ; நிறைய நிறைய தம் அடிக்கிறார்கள் ; அப்புறமாய் மேற்கொண்டும் கதைக்கிறார்கள் - கதை நெடுகிலும் ! ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் இதனை எழுதி ; DTP பணிகளும் நிறைவுற்று இருந்தாலும், கதையின் மையத்துக்குள் புகுந்திட சாத்தியப்பட்டிருக்கவில்லை என்பது அப்போதே புரிந்தது ! So 'அப்பாலிக்கா பாத்துக்கலாம்' என்றபடிக்கே தள்ளிப்போட்டிருந்தேன் ! ஆனால் போன மாதத்தினில் அம்மிணி மாட்டா ஹாரி ஆடிய தாண்டவத்தில் நிறைய சப்த நாடிகள் எங்கள் & உங்கள் தரப்பில் பியூசாகிப் போயிருக்க, இந்த ஆல்பத்தைப் பார்க்கப் பார்க்க - அந்த ஆடு...அந்த அருவா...!! இந்த மனுஷன்...இந்த குடை !" ரெண்டுக்கும் என்னமோ ஒத்துப் போற மாறியே எனக்கொரு பீதி கலந்த பீலிங்கு ! So இன்னொரு விஷப்பரீட்சை வேண்டாமே என்றபடிக்கு அந்த ஸ்லாட்டில் முழு வண்ணத்திலான ஸ்டெர்ன் ஆல்பம் # 3-ஐ புகுத்தத் தீர்மானித்திருக்கிறேன் ! Which means "மேற்கே...இது மெய்யடா !" என்று இலக்கிய ரசனையுடனான வெட்டியான் ஜூன் மாதம் வந்திடுவார் - ஜம்போவின் சீசனை நிறைவு செய்திட ! 


இதுவரைக்குமான 4 சீசன்களில் இந்த நடப்பு சீஸனின் கதைகளில் அத்தனை வலுவில்லை (அண்டர்டேக்கர் நீங்கலாய்) என்பதில் எனக்கு நிறையவே நெருடலுண்டு ! என்மட்டில்  "ஜெரோனிமோ - ஒரு தலைவனின் கதை" & போன மாதத்து மாட்டா ஹாரி ரொம்பவே சுமார் ரகங்கள் ! ஆனால் உங்களில் பலருக்கு "சித்திரமும் கொலைப்பழக்கம்" & "போர்முனையில் தேவதைகள்" ஆல்பங்களுமே அத்தனை ரசிக்கவில்லை என்பது புரிகிறது ! நிஜமாக அவை decent works என்றே எனக்குத் தோன்றியது ! Sadly you thought otherwise !! 

இது மாதிரியான நாயகரில்லா one shots தேர்வுகளின் முயற்சிதனில் கொஞ்சம் சொதப்பினாலும் கத்தியின் கூர்மையான முனையானது பிட்டத்தைப் பதம் பார்க்கும் என்பது தெரிந்த சமாச்சாரமே ; ஆனால் 'சுருக்'கென்று அது உள்ளே இறங்கும் போது சிரிச்சா மெரியே முகத்தை வைத்திருக்கச் சிரமப்படுகிறது ! Sorry guys ! 2023-ல் கூட க்ளாஸிக் நாயகர்களின் (வேதாளன்  ; ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) தனித்தடம் SUPER '60s என்று இடம்பிடித்திடும் என்பதால் 2024-க்கு முன்பாய் ஜம்போவின் சீசன் 5 சாத்தியமாகாது ! அதற்குள்ளாக உருப்படியான கதைத்தேர்வுகளைச் செய்து கொள்வேன் - thats a promise !

மீண்டும் சந்திப்போம் ; have a fun weekend all ! Bye for now !!

Saturday, April 16, 2022

ரிப்போடு ரன்டக்க ரன்டக்க...!

 நண்பர்களே,

வணக்கம். தாமதமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! சகோதரியின் வீட்டிலொரு சுப காரியம் ; அதனைத் தொடர்ந்தொரு திடீர் பயணம் ; அதனையும் தொடர்ந்தொரு நெடும் பயணத்தின் ரத்து - என்று இந்த வாரத்தின் நாட்களே வித்தியாசமான கலவையாய்ப் பயணிக்க, இங்கே ஆஜராக சாத்தியப்படவில்லை ! And இங்கேயுமே சமீப வாரங்களில் பலமாய் ஈ ஒட்டி வருவதே நிலவரம் எனும் போது - ஒரு அரூப சோம்பலும் என்னைத் தொற்றிக் கொண்டிருப்பதையும் மறுக்க மாட்டேன் ! இங்கு நிலவிடும் பரபரப்போ ; ஆயாசமோ வண்டிக்குக் காற்றேற்றுவதும், பிடுங்கி விடுவதுமே நடைமுறை எனும்  போது, தற்சமயத்து குறைச்சலான காற்றோடு லொடக்கடி..லொடக்கடி என்ற உருட்டலிலேயே பயணிக்க வேண்டியுள்ளதே !

பணிகளின் பக்கத்திலோ - SMASHING '70s இதழ் # 2 சார்ந்த இறுதிக்கட்ட வேலைகள் அட்சர சுத்தமாய் பெண்டுகளைக் கழற்றிக் கையில் தந்து விடுகின்றன ! ரிப் கிர்பி தான்....செம சுலபக் கதைகள் தான்... குழப்படிகள் லேது தான்....கருணையானந்தம் அங்கிளின் ஸ்கிரிப்டில் மேலோட்டமாய்த் திருத்தங்கள் + பட்லர் டெஸ்மாண்டுக்கு ஆங்காங்கே டப்பிங் குரல் தருவதென்ற பணிகள் மாத்திரமே தான் எனக்கு ....ஆனாலும் - அந்த மெகா சைசில் 200 பக்கங்களெனும் போது-  ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்திடும் குட்டிக் குட்டி வேலைகள் செம intense ரகங்களாகவே அமைந்து போகின்றன ! ஒரு வழியாய் அவற்றை நிறைவு செய்து விட்டு செவ்வாயன்று அச்சுக்கு அனுப்பிட all is set ! இதோ - நமது சென்னை ஓவியரின் அட்டைப்பட உருவாக்கத்தின் முதற்பார்வை ! இதன் மேலே ஒரு வண்டி நகாசு வேலைகளும் இடம்பிடித்திட, கையில் ஏந்திப் பார்க்கும் வேளையில் செமையாய் ஜிலுஜிலுக்கின்றது ! 

ரிப்பும், அவரது டாவும் ராப்பரில் ஒயிலாய்ப் போஸ் கொடுக்க, நம்ம டெஸ்மாண்ட் மாத்திரம் பின்னணியில் கோழித்திருடுனாட்டம் முழித்துக் கொண்டு நிற்பதை நிவர்த்திக்க நேரம் இருக்கவில்லை ! நிஜத்தைச் சொல்வதானால் "ரிப்பின் ராப்பர் - நடந்தது என்ன ?" என்றொரு புரோக்ராமே பண்ணி விடலாம் என்றிடும் அளவுக்கு அத்தனை மொக்கைகள் அட்டைப்படத்தில் பின்னணியினில் இம்முறை உள்ளன ! சிக்கல் என்னவெனில், நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்புக்கு எந்தவொரு மொழியிலும் , பிடரியில் அறையும் பாணியினில் யாருமே அட்டைப்படங்களினை உருவாக்கியிருக்கவில்லை - at least எனக்குக் கண்ணில்பட்ட வரைக்குமாவது ! ஒரு தெளிவான reference இருந்தால் அந்த டிசைன் அழகாகிடும் என்பது பால பாடம் ! ஆனால் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெட்டில் உருட்டோ-உருட்டென்று உருட்டியும், உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை !  

சரி ரைட்டு...வேலைன்னு வந்துப்புட்டா வெள்ளைக்காரன் தான் இதுக்கு சுகப்படுவான் ; என்ன தான் நம்மாட்கள் கில்லியாய் நமது நாயகர்களின் முகங்களை வரைய முயற்சித்தாலும், வினு சக்ரவர்த்திக்குச் சித்தப்பாரு ஜாடை அவற்றினில் எட்டிப் பார்ப்பதை  தவிர்க்க நிரம்பவே பிரயாசைப்படுவது கண்கூடு ! ஆனால் அங்கன வாழும் வெள்ளைக்கார தொரைமாருக்கோ அவுக ஆட்களை வரையுறதுன்னா சொலபமா இருக்குமில்லீங்களா ?  So அந்த மாபெரும் சிந்தனையோடு கடல் கடந்த தேசத்தினில் recruit செய்த நமது ஓவியரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன் ! ஒரு வண்டி reference களையும் தந்திட, 'இம்புட்டு காசு ஆகும் நைனா ; அதிலே முன்கூட்டியே இம்புட்டு தரணுமாக்கும் !" என்றெல்லாம் கண்டிஷன் போட்டார் ! 'சரிங்க ஆபீசர் !' என்றபடிக்கே அவர் கேட்டதை செய்து தந்தேன் ! "சரியா 24 மணி நேரம்....ஒரு அவர் கூடேயும் புடிக்காது ; அரை அவர் கம்மியாவும் ஆகாது - டிசைன் உம்மே கையிலே இருக்கும் !" என்று அவர் தகவல் தந்த நேரம் முதற்கொண்டு கடிகாரத்தையே பார்த்தபடி இருந்தேன் ! ஆச்சு...24 மணி நேரமும் ஆச்சு ; ஆனா டிசைனையும் காணோம், திரட்டுப்பால் பால்கோவாவையும் காணோம் ! 'ஏனுங்னா....நம்ம ஊரிலே கடியாரம் சித்தே மொள்ளமா ஓடுதோங்கண்ணா ? - இன்னும் மெயில் எதையும் காங்கலியே ?' என்று வினவினேன் !  ஒருக்கால் நாம் தந்த அட்வான்ஸ் காசில் அந்த ஊர் டாஸ்மாக்கில் க்வாட்டரைப் போட்டுப்புட்டு மனுஷன் அப்பீட் ஆகியிருப்பாரோ ? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது ! "இதோ ஆச்சு ப்ரோ ; அல்லாம் ரெடி...மீத காசு ரெடியா கீதா ?" என்று பதில் கேள்வி கேட்டார் அவர் ! "ஏமண்டி...நாங்க இக்கட 50 வருஷமா குப்பை கொட்டற கம்பெனியாக்கும் ; டிசைனைக் கண்ணிலே காட்டுமய்யா !" என்று லைட்டாய்க் குரலை ஒசத்தினேன் ! சற்றைக்கெல்லாம் வந்த file இது தான் !!

நான் தந்திருந்த references ; குறிப்புகள் ; பின்னணிக்கான details மொத்தத்தையும் அச்சிட்டால் -  ஒரு கோடீஸ்வரர் வூட்டுக் கல்யாணவீட்டுப் பலசரக்குச் சிட்டை நீளத்துக்கு வந்திருக்கும் ! 'இந்த கலரில் background ; இந்தந்த கலர்களில் பில்டிங்குகள் ; அவற்றில் இன்னன்ன மாதிரி lighting effect ; ஓரமாய் வெடிக்கும் effect இந்த மாதிரி ; ஈரோ சாரின் டிரஸ் இன்ன கலர் ; ஈரோயினி இன்ன கலர்' என்றெல்லாம் ஒரு வண்டிக்கு நீட்டி முழக்கியிருந்தேன் ! ஆனால் நம்ம அமெரிக்க ஓவியரோ, கொரோனா காலத்துக் கல்யாணவீட்டு பந்தியாட்டம் சகலத்தையும் பிம்பிலிக்க பிளாக்கி ஆக்கி இருந்தார் ! And ரிப் image + ஹனி image என இரண்டையுமே நெட்டிலிருந்து சுட்டு அப்படியே ஒட்டியிருந்தார் மேலே ! அது பற்றாதென - "ஏலே மக்கா ...ஆப்பியாலே இப்போ ? என் மிச்ச காச ஒடனே போட்டு விடுதியாலே ? நமக்கு பல சோலிகள் இருக்குதுலே " என்று கேட்க, எனக்கு காதிலிருந்து புகை வராத குறை தான் ! சுக்காவைக் கருக விட்டு எடுத்து வரும் வெயிட்டரை மண்டகப்படி செய்திடும் கார்சனைப் போல என் கடுப்பை மொத்தமாய்ப் பகிர்ந்திட்டேன் ! பச்சக்கென்று எனது நம்பரை ப்ளாக் செய்து கிளம்பிவிட்டார் "ஓவியர்" !

அடச் சை ! "நம்ம ஊரே நமக்கு உதவி !" என்றபடிக்கே நமது சென்னை ஓவியரை தொடர்பு கொண்டு - எங்கிருந்தோ தேற்றியதொரு reference தந்து சித்திரம் போடக்கோரினேன் ! அவரும் கச்சிதமாய் பென்சில் ஸ்கெட்ச் போட்டுத்தந்தார் ! ஆனால் எனக்கோ உள்ளுக்குள் பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது - இது நிச்சயம் தேறாதென்று !! But ஓவியர் நாம் தந்திருந்த concept-ல் பிழையின்றிப் பணியாற்றியிருக்க, கலர் செய்திடச் சொன்னேன் ! And ஜெமினி கணேசன் ஜாடையில் நம்மவர் வந்து சேர்ந்ததே பலனாகியது ! நிறைய மாற்றங்கள் செய்து பார்த்தோம் ; ஆனால் 'மச்சானை பாத்தீகளா ? மலைவாழை தோப்புக்குள்ளே ?" என்ற அன்னக்கிளி பாட்டுத் தான் மண்டைக்குள் ஓடியது ! 'போதும் சார்...இதுக்கு மேலே உங்களை பெண்டைக் கழற்றலை ! தப்பு உங்க மேலே இல்லை இதில் !' என்றபடிக்கே அவருக்கான ஊதியத்தினை அனுப்பி விட்டு, மேற்கொண்டு ஏதாச்சும் reference தேடி உருட்டலைத் தொடர்ந்தேன் ! Here are those images :


'ரைட்டு...புதுசாயத் தேடறோம் ; புதுசாய் படம் போடறோம் !' என்றபடிக்கே லோகமெல்லாம் தேடினேன் ! இன்னொரு concept சிக்கியது போலிருக்க, அதை ராவோடு ராவாய் நமது ஓவியருக்கு அனுப்பி, அதனில் பணியாற்றக்கோரினேன் ! இம்முறையோ ரிப் கிர்பி - பத்தியம் இருந்து எழுந்து வந்தவராய் எனக்குக் காட்சி தர - "வேண்டாம் சார்; இதை பென்சில் ஸ்கெட்சோடு ஊத்தி மூடிடுவோம் ; இதனைத் தொடர்ந்தால் சத்தியமாய் திருப்தியாய் வராது !" என்றபடிக்கே அவரது ஊதியத்தில் பாதையினை இதற்குத் தந்து விட்டு அவசர அவசரமாய் அடுத்த reference தேற்றினேன் ! இதோ - அந்த பாதியில் கைவிட்ட முயற்சி  :

'முக்கா முக்கா மூணாட்டை !' என்றபடிக்கே இம்மி கூட முகம் சுளிக்காது, நமது சென்னை ஓவியர் போட்டுத் தந்த மூன்றாவது பென்சில் ஸ்கெட்ச்சைப் பார்த்த போது எனக்கு வாயெல்லாம் பல் !


And அதனில் தொடர்ந்த output தான் நீங்கள் பார்த்திடவுள்ள அட்டைப்படம் ! எனக்கு ஓவியங்கள் சார்ந்த சமாச்சாரங்களில், சுட்டுப் போட்டாலும் திறன்கள் தேறாதென்பதே இத்தனை மொக்கைகளின் பின்னணி ! கதையிலிருந்து படங்களை ஒன்று திரட்டி ஒரு collage effect-ல் ரெடி செய்து, அதனிலிருந்து அட்டைப்பட டிசைனை வரைந்திடலாம் தான் ; ஆனால் அதற்கான ஞானமும் நமக்கு நஹி ; அவ்வித ஞானம் கொண்ட சிகாமணியும் கைக்கெட்டும் தூரத்தில் நஹி எனும் போது மொக்கை படலங்கள் தொடர்கதைகளாகின்றன ! Anyways - நகாசு வேலைகளோடு டாலடிக்கும் ரிப்பை இப்போது பார்க்கும் போது பின்னணிக் கூத்துக்கள் மறந்து விடுகின்றன ! For sure அடுத்த ஆண்டினில் ரிப் கிர்பி ஸ்பெஷல்-2-க்கு அட்டைப்படம் போடும் சமயத்திலும் கூரை மேலேறி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பேன் தான் - but அதற்குள்ளாக ஏதேனும் உருப்படியான references கிட்டும் என்று நம்புவோமாக ! 


Moving on, TEX க்ளாசிக்ஸ் 2 பைண்டிங் ஆகி வருகின்றது ! இந்த வாரத்தின் முழுமையிலுமே பின்மதியங்களில் வெளுத்து வாங்கி வரும் மழையானது பைண்டிங்கை ரொம்பவே சுணங்கச் செய்து வருகிறது ! அச்சான காகிதங்கள் காய்ந்திட சிரமம் ; அவற்றை இயந்திரங்களில் மடிப்பதில் சிரமம் ; புக்கை ஓட்டினால் அட்டையினில் உள்ள ஈரப்பதம் காய்வதில் சிரமம் - என்று வர்ணபகவானின் எதிர்பாராக் கோடைக் கொடை நம்மை வாட்டி வருகின்றது ! அடுத்த சில நாட்களில் அவை டெஸ்பாட்ச் ஆகிடும் & திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழாவின் ஸ்டாலுக்கும் அனுப்பிடப்படும் ! And நண்பர்கள் இதுவரையிலும் பேரன்புடன் பழனியின் குடும்பத்துக்கென அனுப்பியுள்ள தொகையுடன் நமது பங்களிப்பையும் இணைத்து, இம்மாதத்து இறுதியினில் பழனியின் மனைவி + மழலைகளைச் சந்தித்து அதனை ஒரு வங்கி வைப்புத் தொகையாக ஒப்படைத்திட உள்ளோம் ! Of course நமது டாக்டர் AKKR அவர்கள் இதனில் நம்மை வழிநடத்திடுவார் ! அதற்கு முன்பாக - சின்னதாகவும், பெரிதாகவும் நண்பர்கள் அனுப்பியுள்ள தொகைகளுக்கு ஒற்றை ரூபாய் விடுதலின்றி  நம்மவர்கள் ரசீதுகள் போட்டு அனுப்பிடுவார்கள் ! பழனியின் குடும்பத்துக்குச் சென்றடையவுள்ள தொகையினைப் பற்றி பொதுவெளியினில் பேசுவது முறையாகாது என்பதோடு, "நன்கொடையாளர்கள் பட்டியல் இது" - என்று வெளியிட்டு, உதவிடும் நிலைகளில் அல்லாத நண்பர்களை தர்மசங்கடங்களில் ஆழ்த்திடுவதும் ஆரோக்கியமானதாகிடாதே ?! தவிர, பழனியின் இல்லத்திலும் தொகைகள் சார்ந்த வெளிப்பாடு தேவையற்ற மனத்தாங்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்பதால் இதனில் ஓசைகளின்றிச் செயல்படுவதே நலமென்று நினைத்தேன் ! Rest assured - நண்பருக்கென நீங்கள் அனுப்பியுள்ள தொகைகள் சிந்தாமல், சிதறாமல் அவரது வாரிசுகளைச் சென்றடைந்திடும் guys !

அப்புறம் திருப்பூரில் 14-ம் தேதி முதலாயத் துவங்கியுள்ள புத்தக விழாவினை சிறப்பித்து வரும் நமது நண்பர்களின் அன்புகளைப் பற்றிக் குறிப்பிட்டே தீர வேண்டும் ! 80 ஸ்டால்கள் மட்டுமே & முதல்நாள் மாலையில் வெளுத்தெடுத்த மழையில் அரங்கில் குளம் கட்டாத குறை தான் !  ஆனால் மறு நாளே அதனை நிவர்த்தி செய்து விட்டனர் அமைப்பாளர்கள் ; and கொங்கு மண்டலத்து வாசக உற்சாகங்கள் கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாம் மறந்தே போயிருந்த புத்தக விழா விற்பனைகள் சார்ந்த உற்சாகங்களை நமக்கு நினைவூட்டி வருகின்றன ! Not by a long shot - இங்கன ஆகிடக்கூடிய விற்பனைகள் சென்னையின் அளவுகளை தொடக்கூட இயலாது தான் ; ஆனால் வெள்ளி & சனியின் விற்பனைகள் தொடரும் நாட்களிலும் தொடர்ந்திடும் பட்சங்களில் - இந்த மண்ணுக்கு ஒரு மெகா சலாம் வைக்கும் கடமை நமக்கிருக்கும் ! Has been silently brilliant !!! And இதற்கான பங்கு, ஆர்வமாய் ஏதேதோ போட்டிகளை ; சந்திப்புகளை அக்கட திட்டமிட்டுள்ள நண்பர்களைச் சார்ந்திட வேண்டும் ! 

இதோ - அவர்களின் முன்னெடுப்பு :

திருப்பூர் புத்தக விழா 2022 கொண்டாட்டம்*

திருப்பூர் புத்தக விழாவில் *"லயன்-முத்து"* ஸ்டாலில் புத்தகங்கள் வாங்கும் *"திருப்பூர் புத்தக விழா2022" வாட்ஸ்ஆப் குழு* நண்பர்களுக்கு மட்டுமே...

*தினந்தோறும் பரிசு& மெகா பரிசு* காத்திருக்கிறது..

தினந்தோறும் பரிசு:- *உயிரைத்தேடி*

*11நாட்கள்..... 11பரிசுகள்.....*

லயன்- முத்து ஸ்டாலில் ஏப்ரல் 14 முதல் 24வரை  ரூ700 & அதற்கு மேல் புத்தகங்கள் வாங்கும் நண்பர்களில் குலுக்கள் முறையில் தினம் ஓருவருக்கு உயிரைத்தேடி பரிசளிக்கப்படவிருக்கிறது. அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன???

*லயன்-முத்து ஸ்டாலில் ரூ700க்கு மேல் புத்தகம் வாங்கும் நண்பர்கள் தங்கள் பில்லை போட்டோ எடுத்து இங்கே பதிவிடவேணும்...! ஒருவர் மட்டுமே எண்ட்ரி ஆகி இருந்தால் அவருக்கே பரிசு. ஓன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் பதிந்து இருந்தால் அவர்களில் இருந்து குலுக்கள் முறையில் ஒருவருக்கு பரிசு...*

தினம் பரிசளிக்க *திருப்பூர் வாசகர் வட்டம்* ரெடி; வாங்க நீங்க ரெடியா நண்பர்களே????

*மெகா பரிசு:-*

தினம் ஓரு புத்தகம் மட்டுமா??? காத்திருக்கிறது *அதிரடி Super60 சந்தா ஒருவருக்கு....*

தினம் தங்களின் பில்லை இங்கே பதிவிடும் நண்பர்கள் அனைவரும் குறித்துக்கொள்ளப்பட்டு, புத்தகவிழாவின் கடைசி நாளில் அதில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்த்தெடுக்கப்பட்டு அவருக்கு *2023ன் Super 60 சந்தா*(Smashing 70-சீசன்2) பரிசளிக்கப்படவிருக்கிறது....

மெகா பரிசையும் தினந்தோறும் பரிசையும் அள்ளிக்கொள்ள அனைவரையும் திருப்பூர் புத்தக விழா வருக வருக என *திருப்பூர் வாசகர் வட்டம்* அன்போடு அழைக்கிறது🙏🙏🙏🙏🙏

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்; பரிசுகளயும் அள்ளிச்செல்லுங்கள் நண்பர்களே!

https://chat.whatsapp.com/Fs50U1MCKy6LNc1X1LqcAG

*பரிசுகளை வெல்ல இப்போதே இணையுங்கள் திருப்பூர் புத்தகவிழா 2022வில்...*

நம் வீட்டுச் சரக்கை விற்றுத் தர, தம் நேரங்களையும், பணத்தையும் செலவிட முன்வரும் நண்பர்களுக்கு ஒரு பெரும் நமஸ்காரத்தை செய்து கொள்வதோடு - அறிவிக்கப்பட்டிருக்கும் அந்தப் பரிசுகளை நாமே வழங்கிடும் வாய்ப்பினையும் ஏற்றுக்கொள்ள விழைகிறோம் ! Guys - உங்களின் ஆர்வங்களும், உழைப்புகளும், நேரங்களுமே போதும் - குறைந்த பட்சமாய் அந்த சன்மானங்களை நாங்கள் செய்திட அனுமதியுங்கள் !

Before I sign out - ஒரு சிறு சேதி - நமது புத்தக விழா ஸ்டால்களில் நிரந்தரராய் இடம்பிடித்து வரும் மூத்த பணியாளர் அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் பற்றி ! திருப்பூர் புத்தக விழா ஆரம்பித்த இரண்டாவது மணி நேரத்துக்கெல்லாம் அவரிடமிருந்து போன் - தனது வயோதிக மாமனார் இயற்கை எய்தி விட்டாரென்று !! எனக்கோ கையும், ஓடவில்லை ; காலும் ஓடவில்லை becos நம்மிடம் பணியாற்றி வந்த இன்னொரு புத்தக விழா ஊழியரான பரமசிவம் சொந்தமாய்த் தொழில் செய்யும் பொருட்டு ரொம்ப சமீபத்தில் விலகிக் கொண்டிருந்தார் &  தற்போதைக்கு நாம் ஏற்பாடு செய்திருக்கும் புது வரவு க்ளிண்டன் ஒரு தற்காலிக ஊழியர் மாத்திரமே ! So வந்த வேகத்திலேயே  அண்ணாச்சி ஊருக்குத் திரும்பிடுவதில் தீவிரமாய் இருந்திருப்பின், மாற்று ஏற்பாடுகளுக்கு வழியோ, அவகாசமோ இருந்திராது ! ஆனால் நமது இக்கட்டைப் புரிந்து கொண்டவராய் - "திருப்பூரில் வேலை முடிந்த பிற்பாடு நான் வந்துக்கிறேன் ; ஆக வேண்டியதை நீங்களே பார்த்துக்கோங்க !" என்று சொல்லி விட்டு, எப்போதும் போலான ஈடுபாட்டோடு திருப்பூரில் ஸ்டால் பணிகளைக் கவனித்து வருகிறார் ! இத்தகைய அஸ்திவாரங்களே இந்த 50 ஆண்டுகால பொம்ம புக் பயணத்தின் அடிநாதங்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெருமிதமாய் உள்ளது !! 

Bye all...see you around !! Have a pleasant Sunday !

Saturday, April 09, 2022

அம்மணிகளின் ஏப்ரல் !

 நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு திரும்பிடுகிறது - at least இந்த நொடியினில் & at least எங்கள் பகுதிகளில் ! மதுரையில் மீண்டும் சித்திரைத் திருவிழா களை கட்டி வருகிறது  ; 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் எங்கள் ஊரிலும் ; சுற்றியுள்ள நகரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் இரட்டிப்பு உற்சாகங்களுடன் அரங்கேறி வருகின்றன ! ஈராண்டுகளின் இழப்புகளை இந்தாண்டே தொட்டுப் பிடித்து விடும் உத்வேகங்களில் மக்கள் ரவுண்டு கட்டியடித்து வருவதை ரதவீதிகள் பறைசாற்றி வருகின்றன !! ஆனால் நமக்கோ மாட்டா ஹாரியைப் பார்த்த ஜெர்மானியர்களைப் போல இன்னும் பீதி அடங்கிடவில்லை எனும் போது - 'தெய்வமே...இந்த சகஜ நிலை தொடரட்டுமே !!" என்ற பிரார்த்தனையை முகமூடிக்குப் பின்னிருந்து  சொல்ல மட்டுமே முடிகிறது !! இதோ - நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு எங்கள் ஊரே total விடுமுறை மூடில் தெறிக்க விடவுள்ளது !

ஆனால் லீவோ, வேலையோ ; வெயிலோ, புயலோ ; திருவிழாவோ, லாக்டவுனோ  - நம்ம புழைப்பில் மாற்றங்கள் லேது என்பதால் - வழக்கம் போல மேஜை முழுக்க கதைகளை பப்பரக்கா என்று பரப்பிப் போட்டு வைத்துக்கொண்டு பொழுதுகளை ஒட்டி வருகின்றேன் !! And ஏப்ரலின் முக்கூட்டணி, இதுவரைக்குமாவது ஆன்லைன் விற்பனைகளில் செமையாய் ஸ்கோர் செய்து வருவதை சுவாரஸ்யமாய்ப் பார்த்தும் வருகின்றேன் ! Without a doubt - இந்த ஏப்ரலானது  2 பெண்களின் மாதமே - நம்மைப் பொறுத்தமட்டிலுமாவது ! யூத்தான இன்ஸ்பெக்டர் ரூபின் உருப்படியான காரணங்களுக்காகவும், யூத்தாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் அம்மணி மாட்டா ஹாரி உருப்படியற்ற காரணங்களுக்காகவும் ஒளிவட்டத்தினைப் பகிர்ந்து வருகின்றனர் ! 

Rubine !! இந்த கேரட் மண்டை பட்டாசுப் பார்ட்டி நம் கரைகளில் ஒதுங்கியது தற்செயலே ! போன வருஷத்து லாக்டௌன் பொழுதுகளின் போது முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலருக்கென புதுசாய் நாயக நாயகியரைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் - மகளிருக்கும் பிரதிநித்துவம் தந்தாலென்ன ? என்ற மகா சிந்தனை எழுந்தது ! ரைட்டு....இதைக்காரணமாக்கி இளவரசியை உள்ளாற புகுத்தலாமென்றால், ஊற வைத்தே நொங்கிட அநேகர் இருப்பது புரிந்தது ! கட்டுப் போட்டுவிட்டு ஆறுதல் சொல்ல சிலபல டாக்டர்கள் இருந்தாலுமே, இளவரசியாருக்கு மனசில் தரும் சீட்டே பாதுகாப்பானது என்று தீர்மானித்தேன் ! ஜூலியா ; லேடி S போன்ற சமகால அம்மணிகளுமே உங்களுக்கு சொர்ணக்காக்களையே நினைவூட்டுகிறார்கள் எனும் போது அவர்களையும் தொந்தரவு செய்திடத் தோன்றவில்லை ! தவிர, கதம்ப இதழ் என்ற template க்கு அவர்கள் சுகப்படமாட்டார்கள் என்பதுமே புரிந்தது ! So கூட்டணி இதழுக்கு ஓ.கே. சொல்லியிருந்த லொம்பா குழுமத்தின் படைப்பாகவே நாம் தேடும் அம்மிணியுமே இருந்திட வேண்டி வந்தது ! அந்தக் கோணத்தினில் தேடலைத் தொடர்ந்த போது ஒரு 2 பாக லேட்டஸ்ட் த்ரில்லர் கதை தான் முதலில் கண்ணில் பட்டது ! அவரும் ஒரு டிடெக்டிவ் தான் என்பதால் வேக வேகமாய் கோப்புகளை வரவழைத்து தலையை உள்ளே விட்டுப் பார்த்தேன் ! அதிர்ஷ்டவசமாய் அதற்கான இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினையுமே படைப்பாளிகள் தந்து விட்டிருந்ததால் - அரை அவரிலேயே படித்திட முடிந்தது ! கதை சூப்பருமல்ல ; மோசமும் அல்ல என்று பட்டது ; தவிர சித்திரங்களுமே just about ஓ.கே. என்றிருந்தன ! ரைட்டு...வேறு ஏதும் சிக்காத பட்சத்தில் இந்த அத்தாட்சிக்கு slot தந்துப்புடலாம் என்று தீர்மானித்தபடிக்கே மேற்கொண்டும் உருட்டினேன் ! அப்போது எனது பழைய டயரியினில் குறித்திருந்ததொரு பெயர் கண்ணில்பட, 'அட...ஆமால்லே ....அந்த ஏர் ஹோஸ்டஸ் நடாச்சா பிள்ளையை பரிசீலிக்கலாமோ ?' என்றுபட்டது ! 

கார்ட்டூன் பாணி சித்திரங்கள் ; பப்ளிமாஸ் கன்னங்கள் ; ஏர் ஹோஸ்டஸ் உத்தியோகம் - என்று இந்த நாயகி 1970 களில் துவக்கம் கண்டவர் ! நான் பிராங்கபர்ட் புத்தக விழாவுக்குப் போன கி-பி- ; கி-மு. காலங்களிலேயே இவரைப் பார்த்திருக்கிறேன் ! ஆனால் அன்றைக்கெல்லாம் - 'குட்டைப் பாவாடையா ? அபச்சாரம் ; அபச்சாரம் !! துணியைக் கழட்டுற பாப்பாவா ?!! நாசமாய் போச்சு !! ' என்று தெறிச்சடித்து ஓடுவதே நமது இயல்பு என்ற போது நடாச்சா திசைக்கு ஒரு பெரும் கும்பிடு போட்டிருந்தோம் ! ஆனால் இப்போதோ நம்ம 'தெகிரிய ரேஞ்சே' வேறு என்பதால் ஆவலாய் நடாச்சாவின் கோப்புகளை வரவழைத்து வாசிக்க முனைந்தேன் ! ஆனால் 1971-ல் துவங்கிய தொடர் என்பதாலோ, என்னவோ, கதைக்களங்கள் ரொம்பவே சுமாராய் ; ஓவர் நேர்கோட்டு பாணியில் இருப்பதாய்ப்பட்டது ! 'இது வேலைக்கு ஆகாதே'என்றபடிக்கே மண்டையைச் சொறிந்த போது தான் நடாச்சாவினை உருவாக்கிய அதே ஓவியரின் கைவண்ணத்தில் இன்னொரு லேடி டிடெக்டிவ் இருப்பது கண்ணில்பட்டது ! 

அவர் தான் நமது சிகாகோ போலீஸ் டிபார்ட்மென்டின் அதிரடிப் பார்ட்டி - ரூபின் ! இவரது கதைகள் ஆங்கிலத்தில் இல்லை என்ற போது - படித்துப் பார்த்து எதையும்  தீர்மானிக்கும் சூழல் சாத்தியமாகிடவில்லை ! So நெட்டில் கிட்டிய அலசல்கள் ; ரிவியூக்கள் என்பனவே ஒரு தளமாகிட வேண்டியிருந்தது ! பார்த்தமட்டிற்கு நமது இன்ஸ்பெக்டரம்மாவுக்கு எல்லோருமே thumbs up தந்திருக்க - "ரைட்டு..ரிஸ்கின்றி ரஸ்கில்லை ! ஜெய் மூ.ச. !! " என்று தீர்மானித்தபடிக்கே ரூபினின் தொடருக்கு உரிமைகளை வாங்கியும் விட்டேன் ! 14 ஆல்பங்கள் கொண்ட தொடரினில் top rating பெற்றிருந்த ஆல்பத்துக்கு ஆர்டரும் தந்து விட, கோப்புகளும் இரண்டாம் நாளே நம் கைகளில் ! அது நமது மாமூலான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் சுகவீனமாய் இருந்த தருணம் என்பதால் - புதிதாய்ப் பணியாற்றி வந்த சென்னை மாணவியிடம் french to english மொழிபெயர்ப்புக்கென அனுப்பி வைத்தேன் ! ஒரே வாரத்தில் அதுவும் கைக்கு வந்திருக்க, மேலோட்டமாய் வாசித்துப் புரிந்து கொள்ள முயற்சி பண்ணிப் பார்த்தால் - ஊஹூம்....தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை ! 'ஆஹா....பரணில் சயனம் பண்ணும் நாயக / நாயகியருக்குப் பேச்சுத் துணைக்குப் புதுசாய் ஒரு பார்ட்டியை தேற்றிப்புட்டோம் போல் தோணுதே ?!!' என்றபடிக்கே மோட்டைப் பார்த்தேன் ! அதற்குள்ளாக "FFS இதழ் இன்னும் கிராண்டாய் வேணும் ; பெரிய விலையினில் வேணும் !!" என்ற உங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்துவங்கிட - கதைகளில் rejig அவசியமென்ற தீர்மானத்துக்கு வந்தேன் ! எதுவும் பிடி தந்திரா ரூபினையுமே அப்பாலிக்கா பார்த்துக்கலாமென்ற தீர்மானத்தில், FFS ஸ்லாட்டிலிருந்து அவரைக் கழற்றிய கையோடு 'கோடை மலர்' ஸ்லாட்டுக்கு நகற்றினேன் ! 

கோடையுமே நெருங்கிய வேளையினில் ரூபினை மறுக்காவும் கையில் எடுத்த போது புரிந்த முதல் விஷயம் - 'இந்தம்மா ஜானி சுடும் இடியாப்பங்களை லெப்ட்டுக்கா வாங்கி, ரைட்டுக்கா கடாசக் கூடிய வல்லமை கொண்டவர் !" என்பது ! So இவரது கதையில் நுனிப்புல் மேய்ந்தபடிக்கே  புரிந்து கொள்ள முயற்சிப்பதென்பதெல்லாம் ஓவர் நப்பாசை ; ஓவர் குசும்பு என்பதுமே உறைத்தது ! கர்மசிரத்தையாய் பணிகளைத் துவக்கிய போது தான், கதாசிரியரின் ஆற்றல்களின் முழுப் பரிமாணமும் சிறுகச் சிறுகப் புரியத்துவங்கியது ! ஓவியருமே தன் பங்குக்கு போட்டுத் தாக்கியிருக்க, இந்த அம்மிணியைக் கண்டு ஓட்டமெடுத்தவனுக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது ! தவிர, 'எவனா இருந்தா எனெக்கென்னடா ?' பாணியிலான ரூபினின் அந்த attitude சூப்பராக ரசித்தது !! இயன்றமட்டுக்கும் இவரது கதாப்பாத்திரத்தை கதாசிரியர் சிருஷ்டித்திருந்த விதத்திலேயே உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் பக்கத்துக்குப் பக்கம் மேலோங்க - சென்சார்கள் ஏதும் செய்திடாது, வசனங்களில் தெனாவட்டோடு பயணிக்கும் தீர்மானம் உருப்பெற்றது என்னுள் ! அதனால் தான் எங்கேயுமே கத்திரியோ ; தார் பெயிண்ட் டப்பியோ கையிலெடுத்திடாது விட்டுவிட்டேன் ! 

And பேனா பிடிக்கும் போது வித்தியாசமான சவால் முன்நின்றது ! ஒரு SODA ஆல்பத்தின் வறண்ட ஹ்யூமர் சகிதம் வரிகளை அமைப்பதில் பெருசாய் சிரமங்கள் இருக்கவில்லை - டேவிட் சாலமனும் ஒரு ஆம்பிளைப் பையன்  என்பதால் ! நக்கலும், நையாண்டியும், குசும்புமாய் சுற்றித் திரியும் டெட்வுட் டிக்குக்குமே பெரிதாய் மொக்கைகள் எழவில்லை - அவனைப் போலவே கோக்கு மாக்காய்ச் சிந்திக்க நமக்கும் சாத்தியப்படுவதால் ! அட, அவ்வளவு ஏன் - தாத்தாவ்ஸ் யாருமே கூட தொல்லையே தரலை தான் ; ஆனால் அவர்களோடு உலவிடும் அந்தப் பேத்தி கேரக்டருக்கு என்ன மாதிரியாய் வசனங்கள் செட் ஆகுமென்று பிடிபட மொக்கை போட்டேன் ! Likewise with ரூபின் !! ஒரு பெண் தெனாவட்டாயப் பேசினால் எப்படியிருக்கும் என்று யோசித்தால் வைஜயந்தி IPS களும், சொர்ணக்காள்களுமே நினைவுக்கு வந்தனர் ! ஆனால் நம்மூரிலே விஜயசாந்திக்கள் சித்தே நேரம் விறைப்பாய் நின்று வஜனம் பேசிப்புட்டு அப்புறமாய் மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடி டான்ஸ் போட ஆரம்பித்துவிடுவதே வாடிக்கை என்றிருக்க, அந்த templates இங்கே வேலைக்கு ஆகாதென்றுபட்டது ! சரி, ரைட்டு...'தெனாவட்டில் ஆண்பாலென்ன ? பெண்பாலென்ன ? அல்லாமே ஒண்ணா தானே இருக்கும் ?' என்று மனசைத் தேற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன் ! கொஞ்ச நேரத்தில் கதையின் flow நம்மைக் கைபிடித்து நடத்திச் செல்வது ஆரம்பித்திட, ஒரு மாதிரியாய்க் கரை சேர்ந்தேன் ! கதையினூடே இன்னமும் எனக்கு ஒரு இடத்தில் கொஞ்சம் குழப்பம் உண்டு தான் ; சாவகாசமாய் புக்கை இன்னொருக்கா புரட்டும் போது அது தெளிகிறதாவென்று பார்க்க வேணும் ! அப்புறம் நடாச்சாவும் ; ரூபினும் இணைந்து வரும் frame ஒன்றினை படைப்பாளிகள் அமைத்துள்ளதைப் பார்த்தீர்களா ?  

ஆக தடுமாற்றத்தோடு உட்புகுந்த நாயகி ஒரு திட ஸ்லாட் ஈட்டியிருப்பது ஒருபக்கமெனில், திடமான தேர்வாய் உள்ளே புகுந்து, தடுமாற்றத்தோடு ஏமாற்றம் தந்திருப்பது இன்னொரு நாயகி ! And அந்த நாயகியின் பெயர் மாட்டா ஹாரி ! வரலாற்றில் முக்கிய ஒற்றர்களாய் அறியப்பட்டோரைக் கொண்டு ஒரு மினி தொடர் உருவாகும் தகவல் கிடைத்த போது ஆர்வமாய் உள்ளே மண்டையை நுழைத்ததே "உளவும் கற்று மற" இதழின் துவக்கப் புள்ளி ! And அம்மணி மாட்டா ஹாரி ஐரோப்பிய உளவு சீனில் ஒரு பெரும் புள்ளி என்ற நம்பிக்கையுடன் தொபுக்கடீரென தேர்வுக்கு ஓ.கே.சொல்லியிருந்தேன் ! ஆனால் மாட்டாவின் சாகசங்கள் எந்த ரகம் என்பதையும், அவரது 'ஒளவு' எந்த பாணி என்பதையும் நான் புரிந்திட நேரிட்ட போது காலம் கடந்திருந்தது ! 

So இந்த நொடியில் என் முன்னிருக்கும் குயப்பம் - ஜம்போ சீசன் 4-ன் இறுதி இதழையாச்சும் சொதப்பாது உருப்படியான கதையுடன் வெளியிட  என்ன செய்வதென்பதே ! அறிவிக்கப்பட்டிருக்கும் "வைகறைக் கொலைகள்" black & white-ல் செமத்தியான சித்திரங்களுடன், ரூ.65 விலையில் வந்திட வேணும் ! ஆனால் அதுவும் ஒரு நிஜ கொலைக்கேஸின் காமிக்ஸ் சித்தரிப்பே ! 1952-ல் பிரெஞ்சு கிராமீய பகுதியினில் ஒரு இளம் பெண் உட்பட மூன்று பேர் செத்துக் கிடக்க, அருகிலிருக்கும் பண்ணை வீட்டிலுள்ளோர் மீது சந்தேகம் விழுகிறது ! தொடர்ந்திடும் (நிஜப்) புலன்விசாரணை & கோர்ட் ஹியரிங் தான் இந்த ஆல்பத்தின் களமே ! இந்த ஆல்பத்தினை நான் தேர்வு செய்ததே grey shades கலந்த அந்த அசாத்திய black & white ஓவியங்களின் பொருட்டே ! ஆனால் கதையின் ஓட்டம் எவ்விதமென்பது மில்லியன் டாலர் கேள்வியே ! ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் இதனை மொழிபெயர்த்து நம்மாட்கள் DTP செய்தும் வைத்துள்ளனர் ! ஆனால் கதையோட்டத்தினை உள்வாங்கிடாதே அதனுள் பயணித்துள்ளார் என்பது புரிந்தது ! So ஒரு சாவகாச வேளையில் மொத்தமாய் முழுசையும் மாற்றி எழுதிடும் முனைப்பினில் இருக்கிறேன் ! சற்றே மூச்சு விட அவகாசம் கிடைக்கும்  முதல் தருணத்தினில் இதனுள் புகுந்திட வேணும் ; and கதை மிதமே என்றிருப்பின், நிச்சயமாய் மாற்றாய் எதையேனும் தேடிடவே வேண்டி வரும் ! இன்னொரு மாட்டா ஹாரியை பூமி தாங்காது !

Moving on, திருப்பூர் புத்தக விழா 14-ம் தேதி துவங்கிடவுள்ளது & கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பாய் நமது புத்தக கேரவன் நகர்ந்திடவுள்ளது ! TEX க்ளாசிக்ஸ் 2 இதழானது இந்தத் திருவிழா விடுமுறைகள் நிறைவுற்ற கையோடு அச்சாகி, அடுத்த ஞாயிறு முதலாய் திருப்பூர் புத்தக விழாவிற்கு அனுப்பிடவுள்ளோம் ! 

And டெக்ஸ் என்ற subject-ல் உள்ள போது - ஒரு ஜாலி நியூஸ் ! கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் போனெலியே மறந்திருந்த வில்லன் மெபிஸ்டோ நேற்றைக்கு இத்தாலியில் வெளியாகியிருக்கும் ஒரு நெடும் ஜாகஜத்தில் மறுவரவு செய்திருக்கிறார் ! கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணத்தில் துவங்கியுள்ள இந்த ஆல்பம் ஆறோ-ஏழோ பாகங்களுக்கு நீண்டிடக் கூடும் போலும் ! ஓவியர் சிவிடெல்லி ஒரு பாதிக்கு சித்திரம் போடவுள்ளார் & மீதப் பாதிக்கு  ரௌல் & கியான்லுக்கா சகோதரர்கள் ! கடைசியாய் கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் 2002-ல் தலை காட்டிய இந்த விட்டலாச்சார்யா வில்லன் - 20 ஆண்டுகளுக்குப் பின்பாய் போசெலியின் canvas-ல் இடம் பிடிக்கிறான் ! பார்ப்போமே - சமகாலத்து டெக்ஸ் எடிட்டரின் கைவண்ணத்தில் மெபிஸ்டோகாரு  எவ்விதம் பயணிக்கிறானென்று !! 


Further down the line, அண்டர்டேக்கரின் ஆல்பம் # 6 தெறிக்கத் தெறிக்க ரெடியாகி வருகிறது ! இதோ - அதன் அட்டைப்பட முதல்பார்வை !

And புறப்படும் முன்பாய் இதோ - தயாராகி வரும் ரிப் கிர்பியின் உட்பக்கப் preview !! அம்சமான சித்திரங்களுடன், தெளிந்த நீரோடை போலான கதைகளை இந்த மெகா சைசில் ரசித்துப் பழகி விட்டால், அப்பாலிக்கா இந்த மூக்கை முன்னூறு தபா சுற்றும் non-linear கதைகளெல்லாம்  ரசிக்குமோ - என்னவோ ?  

Bye all ..... see you around ! Have a cool weekend !

Friday, April 01, 2022

ஏப்ரலின் புதுத் துவக்கம் !

 நண்பர்களே,

ஏப்ரலின் வணக்கங்கள் ! தகிக்கும் கோடைக்கு maybe நமது காமிக்ஸ் கூட்டணி சற்றே இதமளிக்குமா ? என்று பார்த்திட ஏதுவாய் நேற்றைக்கே கூரியர்களில் சந்தாப் பிரதிகள் கிளம்பிவிட்டன ! And இன்றைக்கு நமது ஏஜெண்ட்களுக்குமே பார்சல்கள் புறப்படவுள்ளன என்பதால் இந்த வாரயிறுதியினை  'பொம்ம புக்'  சகிதம் நகற்றிடலாமே folks ?! ஆன்லைனில் லிஸ்டிங்களும் போட்டாச்சு :

https://lion-muthucomics.com/latest-releases/942-april-pack-2022.html

https://lioncomics.in/product/april-pack-2022/

And இன்று முதலாக வாட்சப் வாயிலாகவும் நண்பர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம் ! புது இதழ்கள் சார்ந்த அறிவிப்புகளை,  சந்தாக்களுக்கு அப்பாலுள்ள பல நண்பர்களுக்கு இன்று 'ஏக் தம்'மில் அனுப்பியுள்ளோம் ! அவற்றுள் ஒரு குட்டியான சதவிகிதம் ஆர்டர்களாய் உருமாறினாலே கூட மகிழ்வோம் ! தவிர, 73737 19755 என்ற நமது அலுவலக எண்ணினை business account ஆக மாற்றியிருப்பதால் - அங்கேயே நமது ஒட்டுமொத்த புக்ஸ் லிஸ்டிங்களையும் Catalogue பகுதியினில் upload செய்திட முடிந்துள்ளது ! So அதனிலேயே புக்ஸைப் பார்த்துக் கொண்டு, வாட்சப்பில் ஆர்டர்களை அனுப்பிட செம சுளுவான வசதிகள் இருப்பதை பயன்படுத்திட முனைந்துள்ளோம் ! இதற்கென front office-ல் புதிதாய் ஒரு பெண்ணையும் நியமனம் செய்துள்ளோம் & இந்த ஒட்டு மொத்த ஆபரேஷன்களின் கதை-வசனம்-டைரெக்ஷன் ஜூனியர் எடிட்டரே ! 

நீங்களுமே நமது இந்த வாட்சப் business account நம்பரை (73737 19755) உங்களின் contacts பட்டியலில் இணைத்துக் கொள்ளலாமே folks ? 

ரொம்ப ரொம்ப முன்னாட்களது கோடைகளில் இது போலான கதம்பக் கூட்டணிகளில் ஸ்பெஷல் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்ததை இன்று வரைக்கும் நாம் மறந்திருக்கவில்லை தான் ; and இந்த முத்து கோடை மலர் '22 அந்தப் precious பட்டியலுக்குள் இடம்பிடித்தால், இந்த ஐம்பதாம் ஆண்டினில் இது இன்னொரு memorable தருணமாகிடும் என்பேன் ! In particular, புது வரவான டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ரூபின் சார்ந்த உங்களின் அபிப்பிராயங்களை செம ஆவலாய்க் காத்திருப்போம் ! And இம்மாதத்து 'எலியப்பா' லவ்ஸில்  விழுந்து கலக்குவது ஒருபக்கமெனில், 'பொசுக்..பொசுக்'ன்னு முடிஞ்சிப்புடுதே !!'  என்ற உங்களின் விமர்சனங்களைத் தொடர்ந்து, சீனியர் எடிட்டர் இம்முறை 'அந்தியும் அழகே' பகுதியினை விசாலமாய் எழுதியுள்ளது ஒரு highlight ! நிஜத்தைச் சொல்வதானால், போன இதழினில் மணிரத்னம் பட டயலாக் பாணியில் தனது இலண்டன் விஜயத்தை சீனியர் முடித்திருந்ததை பார்த்த போது - இந்தத் தொடரை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வழியிராதோ ? என்ற பயம் தொற்றியிருந்தது எனக்கு ! கொஞ்சம் மசாலாவைக் கூட்டுறேன் ; இனிப்பைக் கூட்டுறேன்' என்று நான் லைட்டான ghost writing செய்திடக் கூட அவசியப்படுமோ ? என்றுமே யோசித்துக் கொண்டிருந்தேன் ! ஆனால் மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க இயலாதென்ற கதையாய், எனது எழுத்து பாணி நிச்சயமாய்க் காட்டிக் கொடுத்து விடுமென்ற பயத்தில் அந்த வேலையைச் செய்திருக்கவில்லை ! Anyways all's well now !

அப்புறம் ஆர்வமாய் நான் காத்திருக்கப் போவது ஜம்போவின் "உளவும்   கற்று மற" இதழிற்கான உங்களின் ரியாக்ஷன்களுக்கு !! கதையின் இறுதியினில் Mata Hari-யின் வாழ்க்கை பற்றி விக்கிப்பீடியாவும், இன்ன பிற தரவுகளும் சொல்லிய சேதிகளை இணைத்துள்ளேன் ! கதையைப் படித்த பிற்பாடு, அந்த real life facts களுக்குள் புகுந்தீர்களெனில், கதையின் பின்னணி இன்னும் ஒரு லெவல் தெளிவாய்ப் புரியும் என்பேன் ! And மு.ச. ; மூ.ச. பக்கமாய் என்னை எக்ஸ்கர்ஷன் அழைத்துப் போவதாக இருப்பினுமே, அதற்கு முன்பாய் இந்த real facts-களை சித்தே வாசிச்சுப் போட்டுடுங்கண்ணா !! 

Bye all....see you around ! Happy Reading !

WHATSAPP NUMBER : 73737 19755