Powered By Blogger

Sunday, August 31, 2014

வாசிப்பும், யாசிப்பும்....!

நண்பர்களே,

வணக்கம். இப்போதைக்கு பாட்டி வடை சுட்ட கதையை  மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறேன் ! மற்றபடிக்கு விக்ரமாதித்தன் - வேதாளம் கதையிலிருந்து ; ஆமையும், முயலும் kaun banega உசேன் போல்ட் ? விளையாடியது வரை சகலத்தையும் கரைத்துக் குடித்தாச்சு சமீப நாட்களாய் ! ஆர்ச்சியின் கால இயந்திரத்தில் ஏறி பயல் பால்யத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டானோ என்ற சந்தேகம் வேண்டாம் ; அன்றாட அவசியப் பணிகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்திற்குப் பின்பாக பாக்கி சமயங்களில் படிக்கிறேன் - படிக்கிறேன் - கதை, கதையாய்ப் படித்து வருகிறேன் ! 2015-ன் அட்டவணையை இறுதிப்படுத்தும் வேளை நெருங்கி வருவதால் - கதைத் தேர்வுகளின் பொருட்டு முடிந்த பல்டியெல்லாம் அரங்கேறி வருகின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன? பிரெஞ்சிலும், இத்தாலிய மொழிகளிலும் உள்ள கதைகளை இணையதள விமர்சனங்கள் வாயிலாகவும், படைப்பாளிகளிடமே கேள்விகளாய் கேட்பதன் மார்க்கமாகவும், நமது மொழிபெயர்ப்பாளர்களின் குடல்களை உறுவி, கதைச்சுருக்கங்களைத் தரச் செய்வதன் மூலமாகவும் பரிசீலனை செய்து வருகிறேன் ! ஆங்கிலப்பதிப்புகள் வெளிவந்திருக்கும் கதைகளுக்கான கோப்புகளை படைப்பாளிகளிடமிருந்தே தருவித்து, பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மாங்கு-மாங்கென்று படித்து வருகிறேன் ! (படிக்கும் நாட்களில் புத்தகங்களோடு இத்தனை அவகாசம் செலவிட்ட தருணங்கள் சொற்பமே என்பது வேறு கதை !!) இது தவிர, ஜூனியர் எடிட்டரின் உதவியோடு புதுத் தொடர்கள், புதுக்கதை வரிசைகளுக்கான தேடல்கள் தனியாக ஒரு தண்டவாளத்தில் ஓசையின்றியும் ஓடிக் கொண்டுள்ளது ! புதுப்புது பதிப்பகங்களின் கதவுகளையும் சந்தடிசாக்கில் தட்டிப் பார்க்கிறோம் - நம்பிக்கையோடு ! So மோட்டு வளையைப் பார்த்த வண்ணம் கட்டிலில் சாய்ந்தால் கூட அங்கே தெரிவது சவரம் செய்யாத குதிரை வீரர்களும், 'பாங்-பாங்' கென்று சுட்டுத் தள்ளும் சூட் போட்ட டிடெக்டிவ்களுமே ! அடுத்த 30 நாட்களுக்குள் 2015-ன் முழுமையான அட்டவணை பூர்த்தியாகிட வேண்டுமென்பதாலும், கடந்த ஆண்டுகளின் குறை-நிறைகளிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டுமென்பதாலும் தலைக்குள் சதா சர்வ காலமும் இதே சிந்தனையே ! கிட்டத்தட்ட 75% அட்டவணை எனக்குள் இறுதி வடிவம் பெற்றுவிட்ட போதிலும், புது வரவுகளை நாசூக்காய் உள்ளே நுழைப்பதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி அவசியமாகிறது ! அதுவும், புதுப் பதிப்பகங்களுக்கு நமது மார்கெட்டின் தனித்தன்மைகளைப் புரிய வைப்பதற்குள் திருவாளர் நாக்கார் பூமித்தாயை வருடாத குறை தான் ! நமது இதழ்களின் விலைகளை யூரோவிற்கு மாற்றிப் பார்க்கும் வரை சுமுகமாய் செல்லும் பேச்சுவார்த்தைகள் - 'ஒரு புக்கின் விலை 0-75 யூரோ தானா ??' என்ற கேள்வியோடு கரடுமுரடான பாதைகளில் சவாரி யைத் தொடங்கி விடுகிறது ! 'இதுநாள் வரைக்கும் ரூ.10 விலையில் இதழ்களை வெளியிட்டு வந்தவர்கள் நாங்கள் ; இதுவே எங்களுக்கொரு அசாத்தியத் தொகை என்று விளக்கம் சொல்வதை சிலர் புரிந்திட முயற்சிக்கின்றனர் ; ஒரு சிலரோ - 'ப்ச்ச்ச்' என்று உதட்டைப் பிதுக்கி விட்டு நடையைக் கட்டுகிறார்கள் ! எரிச்சல் மேலோங்கினாலும், நமக்கு முரட்டுத்தனமாய்த் தோன்றும் ராயல்டி பணங்கள், யூரோவாய் மாற்றம் செய்து பார்க்கும் அவர்களது கண்களில் பட்டாணிக்கடலையாய்த் தோற்றம் தருவதும் தவிர்க்க இயலா யதார்த்தமே என்பது புரிகிறது ! So சில தேடல்கள், சில வாசிப்புகள், (புதியவர்களிடம்) சில யாசிப்புகள் என்று கடந்த ஒரு மாதமாகவே நகன்று வருவதே என் பக்கத்து update ! 

இதன் மத்தியில் ஓசையின்றி இன்னொரு பணியையும் செய்து முடித்துள்ளோம் ! ஒரிஜினல் அட்டவணைப்படி இம்மாதம் 3 க்ஸ் ரூ.60 இதழ்கள் என்பதே திட்டம் ! ஆனால் LMS எனும் ஒரு 'திடும்' இதழுக்குப் பின்பாக இன்னுமொரு impact இதழ் வெளியானால் தேவலை என்று தோன்றியது ! So அக்டோபருக்கென திட்டமிட்டிருந்த மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் இதழை சற்றே அட்வான்ஸ் பண்ணி இம்மாதத்தினுள் நுழைத்து விட்டோம் ! So அசாத்தியமான சித்திரங்களோடும் ; திகைக்கச் செய்யும் வர்ணஜாலங்களோடும் தயாராகியுள்ள "தேவ இரகசியம் தேடலுக்கல்ல .!" தான் செப்டம்பரின் இதழ் # 3. இதுவுமொரு கிராபிக் நாவலே என்ற போதிலும் அழுகாச்சிகளுக்கோ, யுத்தப் பின்னணிகளுக்கோ ; வறட்சியான நிஜஉலக நிகழ்வுகளுக்கோ இங்கே இடம் கிடையாது ! திபெத்தில் துவங்கி, சீனா, காஷ்மீர், அமெரிக்க என பரபரப்பாய் நகன்றிடும் ஆக்ஷன் த்ரில்லர் இது ! சித்திரங்கள் வழியாகக்  கதைசொல்லும் நமது காமிக்ஸ் கலையினில் - ஓவியங்களுக்கு உச்ச மரியாதை வழங்கி இருக்கும் இக்கதையினை பார்த்த நாளே இதனை எப்படியும் தமிழுக்குக் கொண்டு வந்தே தீர வேண்டுமென்ற குடைச்சல் எனக்குள் ! புரட்டும் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஓவியம் போலக் காட்சி தரும் இந்த இதழ் நமது வண்ணப் பயணத்தில் நிச்சயமாய் ஒரு மறக்க இயலா இதழாய் அமையவிருப்பது உறுதி ! பாருங்களேன் - சின்னதாய் ஒரு teaser ! 

புராதன ஓவியம் போல அழகாய் புனையப்பட்டுள்ள இந்த இதழை எவ்வித ஜோடனைகளும் இல்லாது ; தலையங்கம் - filler pages இத்யாதி என்று நிரப்பிடாமல் ஒரிஜினலின் பொலிவோடு ஒரே இதழாக 160 பக்கங்களில் வழங்கியுள்ளோம் ! So அதன் அட்டைப்படமும் கூட மாற்றங்கள் ஏதுமின்றி அமைந்துள்ளதைப் பார்க்கப் போகிறீர்கள் ! "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" - காமிக்ஸ் கலையின் ஒரு ஆராதனை - இதனை முயற்சிக்கும் தூரத்துக்கு நாம் வளர்ந்துள்ளோம் என்பதை நிச்சயமாய் ஒரு பெருமையாய்க் கருதுகிறோம் ! அதிலும் இந்தக் கதையினை ஒரு பத்தோடு பதினொன்று தருணத்தில் வெளியிடாது ஒரு மில்லியன் பார்வைகளை கொண்டாடும் இது போன்றதொரு வித்தியாசமான தருணத்தில் வெளியிடுவது இன்னமும் பொருத்தமெ என்று தோன்றுகிறது ! புதிய பாதைகளில் பயணம் செல்லும் போது பேச்சுத் துணைகளாக சில வேளைகளிலும், வழிகாட்டிகளாக பல நேரங்களிலும், முதுகு நோகும் சமயங்களில் 'மூவ்' தேய்க்கும் ஆதரவுக் கரங்களாகவும் ; எங்களது உத்வேக அளவுகள் சற்றே குறைந்திடும் தருணங்களில் க்ளுகோஸ் ஊட்டும் தோழர்களாகவும் - எல்லாவற்றிற்கும் மேலாய் அற்புத காமிக்ஸ் காதலர்களாய் ; நண்பர்களாய் மிளிரும் இந்தச்  சிறு குடும்பத்திற்கு ஒரு mega-salute !!  நிறைய சந்தோஷங்களை ; சங்கடங்களை ; உற்சாகங்களை ; உளைச்சல்களை ; உயரங்களை ; பாதாளங்களை இத்தளம் நமக்கு  வெவ்வேறு தருணங்களில் அடையாளம் காட்டியுள்ளதென்பதில்   துளியும் ஐயமில்லை ! ஆனால் அத்தனை சமயங்களிலும் ; அத்தனை காயங்களுக்கும் நமது காமிக்ஸ் நேசம் ஒரு அருமருந்தாய் இருந்துள்ளதையும், கஷ்ட தருணங்களையும் மீறி நமது நட்பு தொடர்வதே மில்லியன் ; ட்ரில்லியன் என்ற எண்ணிக்கைகளுக்கு அப்பாலான நிஜ வெற்றியாக நான் பார்த்திடுகிறேன் ! This has been a fascinating online journey !!!


ஒரு 160 பக்க கிராபிக் நாவல் புரமோஷன் கண்டுள்ள காரணத்தினால் - இம்மாதம் வரவிருந்த 56 பக்க கிராபிக் நாவலான "காலனின் கைக்கூலி" அக்டோபரில் வெளிவந்திடும் ! So இம்மாதப் பட்டியல் பின்வருமாறு :
  • லயன் காமிக்ஸ் - செங்குருதிச் சாலைகள் - ரூ.60
  • முத்து காமிக்ஸ் - காதலிக்கக் குதிரையில்லை - ரூ.60
  • லயன் காமிக்ஸ் - மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்                                 (தேவ இரகசியம் தேடலுக்கல்ல")

மி.ஹி.ஸ்பெஷல் சற்றே பருமனான இதழ் என்பதால் பைண்டிங்கில் கூடுதலாய் ஒரு நாள் அவகாசம் அவசியமாகிறது ! ஆகையால் செவ்வாய்க்கிழமை (2 செப்டெம்பர்) காலையில் இம்மூன்று இதழ்களும் கூரியரில் உங்களைத் தேடித் புறப்படும் ! (சின்னதொரு நினைவூட்டலும் கூட - இந்த 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' சூப்பர் 6 சந்தாவின் இதழ் ! வழக்கமான சந்தாவினில் இது இடம் பெறாது என்பதை மறந்திட வேண்டாமே !)   

இரு வெவ்வேறு தருணங்களில் சந்தாக் கட்டணங்களை அறிவிக்கும் பாணி 2015-ல் தொடர்ந்திடாது ! வருடத் துவக்கத்திலேயே ரெகுலர் சந்தா + optional சந்தா என்று இரண்டையுமே அறிவிப்பதாய் உள்ளோம் ! அவற்றுள் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து ஆண்டின் ஆரம்பத்திலேயே சந்தாக்களைச் செலுத்திடலாம் ! சந்தா ; புக்கிங் என்ற தலைப்பினில் இருக்கும் வேளையிலேயே இதோ "மின்னும் மரணம்" The Complete Saga-வின் முன்பதிவுப் பட்டியல் (ஒரு வாரத்துக்கு முன்பான நிலவரப்படி )  : 

இவை முன்பதிவு கிடைக்கப் பெற்ற வரிசையில் இல்லையென்பதையும் ; இவையே உங்களின் முன்பதிவு நம்பர்கள் என்பதையும் சொல்லும் கடமை அடியேனுக்கு உள்ளது   ! ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை புக் செய்துள்ள நண்பர்களும் இப்பட்டியலில் உள்ளதால் இது வரை சுமார் 175 பிரதிகளுக்கு முன்பதிவாகியுள்ளது என்று சொல்லலாம் ! Obviously நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் நிறையவே உள்ளது ! இம்மாத முத்து காமிக்ஸில் இந்த இதழின் அறிவிப்பு வருவதைத் தொடர்ந்து வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களும் முன்பதிவுகளைத் துரிதப்படுத்துவார்கள் என்று நம்புவோம் ; fingers crossed !!

அப்புறம் கடந்த ஞாயிறின் பதிவில் நான் கேட்டிருந்த 15 கேள்விகளுக்கு உங்களிடமிருந்து வந்துள்ள (விரிவான) பதில்கள் real eye-openers!! நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு உங்களில் பலர் பதில்கள் தர முனைந்துள்ளதைப் பார்க்கும் போது உங்களின் அக்கறையும், ஈடுபாடும், தெளிவாகத் தெரிகிறது ! Thanks ever so much guys ; தொடருமொரு பதிவினில் அதைப் பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமே ?! இப்போதைக்கு "கதை படிக்கும் பணி" அழைப்பதால் அதனுள் நுழைந்திடப் போகிறேன் ! அதிலும் காத்திருப்பது 'தல' கதை எனும் போது கேட்கவா வேண்டும் ?   Adios amigos - மீண்டும் சந்திப்போம் ! Enjoy the day !

Sunday, August 24, 2014

விடை தேடிடும் வினாக்கள்...!

நண்பர்களே,

வணக்கம். வயசுக்கேத்த தோரணையைத் தக்க வைத்துக் கொள்ள எத்தனை தான் மொக்கை போட்டாலும், உள்ளுக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் திருவாளர் சிறுபிள்ளை அவ்வப்போது துள்ளிக் குதிக்கத் தவறுவதில்லை என்பதே கடந்த 2 வாரங்களில் நான் படித்த அனுபவப் பாடம் ! "LMS எனும் ஒரு மெகா முயற்சியை அரங்கேற்றியாச்சு ; இனி அடுத்த வேலைகளுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் ; 2015-க்கான திட்டமிடல்களைக் கவனித்தாக வேண்டும் !' என்று என் மண்டை ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பிக்க, வேலை செய்ய அமர்ந்தால் மனம் எனும் வானரம் தன்வாக்கில் எங்கெங்கோ ஜாலியாய்ச் சுற்றித் திரிகிறது ! 900+ பக்கங்களை ஆஞ்சநேயர் வால் போன்றதொரு நீ----ண்-----ட பட்டியலில் எழுதி வைத்துக் கொண்டு வேலை செய்த நாட்கள் திரும்பத் திரும்ப மண்டைக்குள் குறுக்கும், நெடுக்குமாய் சாலடிக்க, கையிலிருக்கும் 44 பக்க கமான்சே கதையும், ப்ளூகோட் கதையும் என்னைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் படுகிறது !! 'ஓஹோ..இது தான் hangover என்பதோ ? என்று தலையைச் சொரிந்து கொண்டே நிறையப் பிரயத்தனத்தின் பேரில் காத்திருக்கும் பனிகளுக்குள் என்னை ஆழ்த்திக் கொண்டேன் !   

இதோ - செப்டெம்பரின் வெளியீடு # 2-ன் preview  - கமான்சேவின் "செங்குருதிச் சாலைகள்" ரூபத்தில் ! லயனின் ALL NEW ஸ்பெஷலில் இத்தொடரின் கதை # 1 வெளியானதும், இந்தாண்டின் துவக்கத்தில் ஆல்பம் # 2 வெளிவந்ததும் நமக்குத் தெரிந்த சங்கதி தான் என்றாலும், இதன் கதை # 3 - பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க இயலாதென்று நினைக்கிறேன் ! வரிசைகளுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் தந்திடா அந்நாட்களில் ஆக்க்ஷனும், அதிரடியும் தூக்கலாய்த் தென்படும் பட்சத்தில் அக்கதை ''சட்'டென்று தேர்வாவது வாடிக்கை ! So - கமான்சே தொடரைப் பரிசீலித்த போது பாகம் 1 & 2 சற்றே சாத்வீகமான பயணப் பாதையில் இருப்பதையும், ஆல்பம் # 3 முதலாய் பரபரப்பு பற்றிக் கொள்வதையும் உணர முடிந்த மறு கணமே நேரடியாக # 3 -க்குள் டைவ் அடித்தோம் அன்று ! அதிர்ஷ்டவசமாய் கமான்சேவின் கதைகள் சகலமும் தனித் தனியாய் படிக்கக் கூடிய பாணியில் இருப்பதால் என் பாடு சற்றே சுலபமாகிறது ! 'ஓநாய் கணவாய்' இப்போது வரை நம்மிடம் ஸ்டாக்கில் இருந்த இதழ் என்பதால் அதனை மறுபதிப்பாக்காது - நேரடியாக ஆல்பம் # 4-க்குள் புகுந்திருக்கிறோம் ! இதோ நமது ராப்பரும், ஒரிஜினல் சித்திரமும் :



பின்னணி வர்ணங்களில் மட்டுமே லேசாய் மாற்றங்கள் செய்து விட்டு, ஒரிஜினல் சித்திரத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளோம் ! இங்கு பார்ப்பதை விட, அச்சில் இன்னும் அழுத்தமாய் நமது அட்டைப்படம் தோற்றம் தருவதைக் காணப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்த வரை படு வேகமான ; ஆக்க்ஷன் த்ரில்லர் இது என்று சொல்லுவேன் ! ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள் அற்புதங்கள் செய்கின்றன ; பாருங்களேன் ஒரே பக்கத்தில் top angle ; close up ; overview என்று வெவ்வேறு கோணங்களிலான சித்திர அமைப்புகளை !
கடந்த வாரம் முத்து காமிக்ஸின் ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" இதழின் preview-ல் அதன் அட்டைப்படத்தை உங்களிடம் காட்ட விடுபட்டுப் போயிற்று ; இதோ - மீண்டுமொரு background மாற்றத்தை மட்டுமே தாங்கியதொரு அட்டைப்படம் :


இரு அட்டைப்படங்களும் எவ்விதம் அமைந்துள்ளன என்ற ஆய்வை எப்போதும் போல் உங்களிடம் விட்டு விடுகிறேன் ! கடந்த சில நாட்களாகவே எங்கள் கந்தக பூமியிலும் வருண பகவான் அதிசயமாய்  ஆட்சி செய்து வருவதால் இம்மாத இதழ்கள் செப்டெம்பர் 1-ஆம் தேதி தான் இங்கிருந்து புறப்படும். ஈர நாட்களாய் இருக்கும் சமயங்களில் அச்சுப் பணிகளை நிதானமாய்ச் செய்வது அவசியம் என்பதோடு பைண்டிங்கிலும் பொறுமை கடைபிடிக்கத் தேவையாகிறது ! So "மும்முனைத் தாக்குதல்" செப்டெம்பரின் இதழ் # 3 பற்றிய preview அடுத்த ஞாயிறிலும், இதழ்களின் டெஸ்பாட்ச் திங்கட்கிழமையிலும் அரங்கேறிடும் ! இடைப்பட்ட இந்த வாரத்தை 2015-ன் திட்டமிடலுக்கு அவசியமாகும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் செலவிடுவோமா ? சென்றாண்டு நவம்பரில் பெரியதொரு பழுப்புக் காகிதத்தில் கேள்விகளாய் கேட்டு உங்களுக்கு அனுப்பி இருந்தது நினைவிருக்கலாம் ; பூர்த்தி செய்யப்பட்டு வந்த பதில்களைப் படிக்க இயன்ற போது எங்களது கேள்வி கேட்கும் படலம் சற்றே தாமதமானதோ ? என்ற கேள்வி எனக்குள் எழுந்திட்டது ! So அதே தவறை இந்தாண்டும் செய்திடாமல் - 2015-ன் அட்டவணையை செதுக்கும் இறுதிக் கட்டங்களுக்கு முன்பாகவே உங்கள் அபிப்ராயங்களையும் அறிந்திடல் நலம் என்று தோன்றுகிறது !  Here goes:

  1. (இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
  2. 2014-ன் 3 டப்பா இதழ்கள் ? 
  3. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)
  4. Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ? 
  5. 'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)
  6. தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ? 
  7. 2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....? 
  8. தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)
  9. ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?
  10. புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ? 
  11. புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?
  12. ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?
  13. வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ? 
  14. சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?
  15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ? 
உங்களின் பதில்களை இங்கு பதிவிட்டாலும் சரி ; எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலும் சரி - அவை நமது 2015 திட்டமிடலுக்கு நிறையவே பிரயோஜனப்படும் என்பது உறுதி ! So, please do spare time for this folks !!

Last minute Update : 

இத்தாலிய ரசிகர் மன்றங்கள் கலக்கலைத் தொடர்ந்து வருகின்றன !! டைலன் டாக் மன்றமும், மர்ம மனிதன் மார்டின் மன்றமும் கரம் கோர்த்துக் கொண்டு ஒரே முரட்டு பார்சலாய் LMS -ல் 110 இதழ்களுக்கு ஆர்டர் தந்துள்ளனர் !! இவர்கள் தவிர தனிப்பட்ட சேகரிப்பாளர்கள் தந்திருக்கும் குட்டிக் குட்டி ஆர்டர்களும் உண்டு !! (@கார்த்திக் : டெக்ஸ் மன்றம் என்றொன்று இருப்பதற்கான அடையாளங்களே இல்லை தான் !! சென்றாண்டு டயபாலிக் ஆர்வலர்களின் வேகத்தைப் பார்த்த போதே இந்த நினைப்பு எனக்கும் உதித்தது !!) 

மீண்டும் சந்திப்போம் folks ;  bye until then !

Sunday, August 17, 2014

Life after LMS.... !

நண்பர்களே,

வணக்கம். திருவிழாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் சந்தோஷம் ஒரு தினுசெனில் ; திருவிழாவின் கொண்டாட்டாங்கள் இன்னொரு ரகமெனில் ; அதனில் திளைத்தான பின்னே எழும் ஒரு வெற்றிடத்தை நிரப்பும் அனுபவம் முற்றிலும் வேறு மாதிரியானது என்பதைப் புரிந்து வருகிறேன் ! கிட்டத்தட்ட 1 மாதமாய் லார்கோவின் நாட்களைப் போலிருந்த எனது பொழுதுகள் தற்சமயம் டிடெக்டிவ் ஜெரோமின் சாகசங்களைப் (!!!) போல சாதுவாய் இருப்பதை உணர முடிகிறது ! LMS எனும் மேளா நம் நினைவுகளுக்குள் சிறுகச் சிறுக அமிழ்ந்திடும் தருணமும் புலர்ந்து விட்டதால் 'பழைய நினைப்புடா பேராண்டி !' என்ற பாட்டுக்களை மூட்டை கட்டி விட்டு what next ? என்ற கேள்வியோடு நடையைத் தொடருவோமே ? அடுத்ததாய் முன்நிற்கும் செப்டெம்பர் மாதத்து வெளியீடுகளில் பணி செய்வதை நாங்கள் துவக்கி கொஞ்ச காலம் ஆகிவிட்டதால் - இம்மாத இறுதியினில் 3 இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! LMS எனும் புஷ்டியானதொரு package-க்கென சமீபமாய் மாங்கு மாங்கென்று வேலை செய்து பழகியான பின்னே - மாதாந்திர 44 பக்கக் கதைகளைக் கையில் எடுக்கும் போது ஏதோ பச்சைப் பிள்ளையைத் தூக்கித் தோளில் வைத்தது போல் இலகுவாய்த் தெரிகிறது ! 

அதில் முதல் பிள்ளையானது நமது ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" ! இந்த ஸ்கூபி - ரூபி ஜோடியின் கதைகளை ஏற்கனவே நாம் ரசித்துள்ள போதிலும், இவற்றை முழுமையான நகைச்சுவை வரிசைக்குள் நுழைத்திடுவது சரியாகாது என்பதே எனது அபிப்ராயம் ! வரலாற்றுக் குறிப்புகள் ; போரின் சில நிஜ மனிதர்கள் ; உள்நாட்டுக் கலகங்களின் அர்த்தமின்மை ; யுத்தத்தின் மடமை என சகலத்தையும் தம் பாணியில் நையாண்டி செய்வதே இதன் படைப்பாளிகளின் நோக்கமாக நான் பார்க்கிறேன் ! சித்திர பணியினை இலகுவான கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்திருப்பதும், கவுண்டமணி-செந்தில் பாணியிலான இரு நாயகர்களின் மூலமாய் சொல்ல நினைக்கும் சேதியில் ஒரு நகைச்சுவைப் பூச்சு தந்திருப்பதுமே இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பேன் ! இன்று வரைத் தொடரும் இத்தொடரின் கதை # 16 நமது செப்டெம்பர் வெளியீடாக வரவுள்ளது ! இதோ அதன் சின்னதொரு teaser : 


கவுண்டமணி-செந்தில் பற்றியான topic -ல் உள்ள போதே ஒரு ஜாலியான சேதியும் கூட ! நமது கார்ட்டூன் உச்ச நட்சத்திரங்களான மொட்டை பாஸ் ஷெரீப்பும் ; அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! நமது அவ்வப்போதைய நச்சரிப்புகள் ஒரு பக்கமிருக்க, சிக் பில்லின் கதைகளை பெல்ஜியத்தில் முழுமையாய் மறுபதிப்பு செய்யும் எண்ணம் சூடு பிடித்து வருகின்றது ! அதன் பலனாய் சிக் பில்லின் துவக்க காலத்துத் (தரமான) கதைகளும் இப்போது டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டு வருகின்றன ! So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் ! கடைசி கடைசியாய் இத்தொடரில் உருவாக்கப்பட்டு வந்த ஒற்றைப் பரிமாணக் கதைகளுக்கு டாட்டா சொல்லி விட்டு, சிக் பில் கூட்டணியின் early '70s டாப் சாகசங்களைத் தேர்வு செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் சாத்தியமாகும் !  
பிரான்கோ பெல்ஜிய மார்க்கெட்டில் மறுபதிப்புகள் அத்தி பூத்தார் போலத் தலைகாட்டும் அதே சமயத்தில், புதுப் புதுக் களங்களைத் தேடியலையும் அவர்களது வேட்கையும் பிரமிப்பை உண்டாக்குகிறது ! சமீபமாய் நமக்கு வந்துள்ள அவர்களது புது இதழ்களின் previews ; கதைச் சுருக்கங்கள் ;  சித்திர டிரைலர்கள் என பார்க்கும் போது தலைசுற்றாத குறை தான் எனக்கு ! 'எல்லைகளே கிடையாது எங்கள் தேடல்களுக்கு !' - என உரக்கக் கூவுவது போலுள்ளது தற்சமயத்துப் படைப்பாளிகளின் ஆற்றல்களைப் பார்க்கும் போது ! இது போன்ற சூழல்களில் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு வித முறுக்கேருவதை உணர முடிகிறது ; என்ன ஆனாலும் இது போன்ற புதுமைகளை நாமும் முயற்சித்தே ஆக வேண்டுமென்று !! ஆனால் வேகம் மாத்திரமே வேலைக்கு ஆகாது என்பதை நரை முடிகளும், நடப்பு மார்கெட்டும் உணர்த்தும் போது சிறுகச் சிறுக கால்கள் தரைக்குத் திரும்புவதை தவிர்க்க இயலவில்லையே ! இன்றில்லாவிடினும், தொட்டு விடும் தொலைவிலான எதிர்காலத்திலாவது இந்த new wave காமிக்ஸ் படைப்புகளுக்கு நம் வாசல்களைத் திறக்கும் ஆர்வம் எனக்குள் உயிர் வாழ்ந்திடும் ! ("சார் - ஸ்பைடரின் "அந்த நீளமான கதை எப்போது ?"  என்ற கேள்வியும் என் காதுக்குள் இத்தருணத்தில் ரீங்காரமிடுவதை உணர முடிகிறது !!!)

Moving on to the land of Tex Willer - 2015-ன் அட்டவணையினில் இத்தாலிய நாயகர்களுக்கு ஒரு கௌரவமான இடம் தரும் எனது வேட்கைக்கு LMS -ன் ஒரு கூடுதல் உந்துதலாய் அமைந்துள்ளது என்றே சொல்லுவேன் ! டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் ஆகிய மூன்றே இத்தாலியப் பரிச்சயங்கள் ஓரிரு மாதங்களில் ஒரு மினி கும்பலாய் மாறி விட்டது நமக்கொரு சந்தோஷ முன்னேற்றம் எனப்படுகிறது என் மனதுக்கு ! டயபாலிக் ; மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; ஜூலியா என நமது இத்தாலிய உறவுகள் எண்ணிக்கையில் சட்டென்று உயர்ந்து விட்டனரே ! இதனில் ஜூலியா மட்டுமே இன்னும் முழுமையாய் நமது அபிமானத்தை சம்பாதிக்க வேண்டிய பொறுப்பைக் கையில் ஏந்தி நிற்கிறார் ! LMS-ல் வெளியான ஜூலியா சாகசம் (!!) அவரது ஆற்றல்களுக்கு முழு நியாயம் செய்ததென்று சொல்ல மாட்டேன் ; கதைக்களமும் அத்தகையது என்பதால் அங்கே மாடஸ்டி பிளைசியைப் போல காங்கோ வீசி எதிராளியை மடக்கிப் போடும் வாய்ப்புகளோ ; லேடி ஜேம்ஸ் பாண்ட் அவதாரம் எடுப்பதோ சாத்தியமாகி இராது ஜூலியாவுக்கு ! So அவரது துவக்க சாகசங்களில் இருந்து ஆரம்பித்து, இத்தொடரின் ஜீவனை நம்மாலும் உணர முடிகிறதா என்று பார்ப்போமே ? What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ? 

LMS -ன் டாப் கதைகளுள் ஒன்றாக "இறந்த காலம் இறப்பதில்லை" கிராபிக் நாவலை நண்பர்களில் நிறையப் பேர் தேர்வு செய்திருந்தது நிஜமாக என் முகத்திற்கொரு பெரிய புன்னகையைக் கொண்டு வந்தது !! வர்ண ஜாலங்களோ ; வள வளப்பான ஆர்ட் பேப்பரோ ; வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கதைப் பின்னணியோ இல்லாமல் - ஒரு சராசரியான க்ரைம் கதையின் பின்புலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நுணுக்கமாய் ஒரு நாவலைப் புனைய முடியும் என நமக்குக் காட்டியுள்ளார் கதாசிரியர் பாவ்லோ மோரால்ஸ் ! துரதிர்ஷ்டவசமாய் இத்திறமைசாலி தற்போது உயிரோடில்லை - இது போன்ற கதைகளை நமக்கு இன்னும் இன்னும் வழங்கிட !! LMS -க்கென கதைகளைத் தேர்வு செய்யும் வேளையில் இந்த 110 பக்க slot-ல் போடும் பொருட்டு என் மண்டைக்குள் 2 கதைத் தேர்வுகள் இருந்தன ! முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட  "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை ! இரண்டாவதோ - "இறந்தகாலம் இறப்பதில்லை" கிராபிக் நாவல் !  முதல் தேர்வானது safe என்பதில்  ஐயமே கிடையாது ; கதை சற்றே சுமாராய் இருப்பினும் அதற்கொரு பெரிய விமர்சனம் எழுந்திட வாய்ப்புகள் குறைவு என்பதால் ! ஆனால் choice # 2 -ஐப் பொறுத்த வரை அது ஹிட் அடிக்கவும் வாய்ப்புண்டு ; தலையைப் பிராண்டச் செய்யவும் வாய்ப்புண்டு என்பது புரிந்தது ! LMS போன்றதொரு out & out entertainer-ல் இந்த ரிஸ்க் தேவை தானா என்ற பயமும் இருந்தது ! ஆனால் நமது ரசனைகளின் மீதான எனது நம்பிக்கை ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுக்கத் துணியச் செய்தது ! இன்று அந்த கிராபிக் நாவல் உங்களின் பாராட்டுகளை ஈட்டும் போது அவற்றை உங்கள் பக்கமாகவே திருப்பி விடுவதே நியாயமாய் இருக்குமென்று தோன்றுகிறது ! ஸ்பைடர்களும்  , ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தானல்லவா ?

'இத்தாலி என்றாலே அட்டகாச சாகசங்கள் மட்டும் தானில்லை ; உயிரோட்டமான கிராபிக் நாவல்களும் எங்களுக்கு அத்துப்படி' என நிரூபிக்கும் இது போன்ற one shot கதைகள் அவ்வப்போது நம்மிடையே தலைகாட்டும் !  இத்தாலி பற்றிய பேச்சிலிருக்கும் வேளையில் நமது 'தல' பற்றிய சேதி இல்லாமலா ? இதோ வர்ணத்தில் இங்கே நீங்கள் பார்த்திடுவது எந்தக் கதையின் teaser என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ? 
இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக இங்கே அவ்வப்போது நிகழும் - டெக்சா ? டைகரா ? குத்துச் சண்டை பற்றிய எனது two bits ! நான் சாலமன் பாப்பையாவுமல்ல ; இது நக்கீரன் பொருட்குற்றம் கண்டறியும் ரகத்திற்கொரு பஞ்சாயத்துமல்ல என்பதால் please don't take me serious guys !

சமீபமாய் நாம் படித்து வரும் டைகர் கதைகள் எல்லாமே சற்றே தடுமாற்றமான ரகத்தில் இருப்பதை தளபதியின் ரசிகர் மன்றம் கூட நிச்சயமாய் மறுக்காது ! சலிப்பூட்டும் ஒரே விதமான knot ; அதே கதைக்களம் ; டைகருக்கென பெரிதாய் எதுவும் திட்டமிடப்படா சாகசங்கள் என்றே இக்கதைகள் பயணிப்பதால் - தங்கக் கல்லறைகளையும், மின்னும் மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன நமக்கு அல்வாவில் உப்புப் போடப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதில் வியப்பில்லை ! கடந்த மாதம் நமது படைப்பாளிகளை சந்தித்த போது கூட நைசாக - 'டைகர் விற்பனை எவ்விதம் உள்ளது ?' என்று கேட்டு வைத்தேன் ! "அந்தப் பெயருக்கே" போணியாகி விடும் எங்கள் மார்கெட்டில் என்று புன்சிரிப்போடு சொன்னார்கள் ! அடுத்த ஆல்பம் ( டைகரின் இளம் பருவம்) இந்தாண்டின் இறுதிக்குள் வந்து விடும் என்றும் உற்சாகமாய்ச் சொன்னார்கள் ! ரசனையில் அவர்களை விட நாம் மிகப் பெரிய அப்பாடக்கர்கள் என்பதை அக்கணம் நான் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது ! டைகர் போன்றதொரு ஜாம்பவான் சொதப்பினால் கூட நாம் அவரை மடக்கி விடுகிறோம் ; ஆனால் அங்கோ அவரது track record-ஐ மனதில் கொண்டு வாசகர்கள் அவரை 'அப்படியே' ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர் ! (ரசனை என வரும் போது நமது அளவுகோல்களே சரியானவை என்ற சிந்தனை மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை !) ஒரிஜினல் கதாசிரியரின் மறைவுக்குப் பின்னே டைகர் வரிசையில் புதிது புதிதாய் பணியாற்றும் creators தொடருக்கு நியாயம் செய்வதில்லையே ? - என்று நான் கேள்வியைப் போட்டு வைக்க - ' there can be just 1 Giraud !' என்று சிம்பிளாகப் பதில் சொல்லி முடித்து விட்டனர் !


ஜிராடின் படைப்பில் இருந்த ஆழமோ ; ஆற்றலோ ஒரு தலைமுறைக்குப் ப்ரேத்யேகமானது ; அதனை சராசரியான படைப்பாளிகளைக் கொண்டு replicate செய்திட முனைவது - நடிகர் திலகத்தின் இடத்தை ஒரு திறமையான துணை  நடிகரைக் கொண்டு நிரப்புவதற்கு இணையானது என்பதை அவர்களும் அறியாதில்லை ! எத்தனை நேர்மையாய் முயற்சித்தாலும் அந்த சிம்ம கர்ஜனைக்கு எங்கே போவது ? So ஏற்கனவே பள்ளமாக இருக்கும் அந்த உடைந்த மூக்கரின் மூக்கை 'தல' ரசிகர்கள் போட்டுச் சாத்தி மேலும் உள்ளே தள்ள நினைப்பது யுத்த தர்மமாகாது guys !  

அதே சமயம், உலக அரங்கில் கௌபாய் தொடர்கள் என வரும் போது கேப்டன் டைகர் பெற்றுள்ள அங்கீகாரத்தை டெக்ஸ் பெறவில்லை என்பதும் நிஜமே ! கறுப்பு-வெள்ளை கதைகளை ஒரு தரமான படைப்பாய் பார்த்திட நிறைய நாடுகள் தயங்குகின்றன ! ஒரு காமிக்ஸ் படைப்பானது - கதை ; சித்திரங்கள் ; வர்ணக் கலவை - என 3 சரிவிகிதத் திறமைகளின் உள்ளடக்கம் என்பது நிஜமெனும் போது அதனில் ஒரு 1/3 rd குறைந்திடும் டெக்சின் black & white சாகசங்களை குறிப்பிட்ட நாடுகள் நீங்கலாக இதர தேசங்கள் உயர்வாய்க் கொண்டாடவில்லை என்பது கண்கூடு ! So கொஞ்சமாய்ப் படைத்து அதில் உலகளவில் ஸ்கோர் செய்தது டைகரின் சாதனை எனில், ஏராளமாய் உருவாக்கி உச்சாணியில் வீற்றிருப்பது டெக்சின் சாதனை ! இருவரையும் ரசிக்கவும், கொண்டாடவும் நமக்கொரு வாய்ப்பிருக்கும் போது - சின்ன ஜட்டிகளைப் போட்டுக் கொண்டு எதிராளியை மூக்கிலேயே குத்தும் WWF உல்டாக்கள் நமக்குத் தேவையா ? 

நேற்று முதலாய் துவங்கியுள்ள நாகர்கோயில் புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண்: 59 ! சரியாக அதற்கொரு நாள் முன்பாக நம்மிடம் அச்சகப் பிரிவில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டதால் அலுவலகத்திற்கு விடுமுறை தந்திருந்தோம். So அதன் பின்பாக நேற்றைக்கு புத்தகங்களைப் பார்சல் செய்து கொண்டு நம் பணியாளர்கள் நாகர்கோவிலுக்கு பயணமாகியுள்ளனர் ! ரம்மியமான இந்நகரில் காமிக்ஸ் இதழ்களுக்கான வரவேற்பு எவ்விதம் இருக்குமென்று தெரியவில்லை ; எவ்விதம் இருப்பினும், முயற்சிகளின்றி வேரூன்றல் சாத்தியமாகாது என்பதால் நண்பிக்கையோடு காத்திருக்கிறோம் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now folks !

P.S : ஆகஸ்ட் 8-12 தேதிகளுக்குள் (WORLDMART) ஆன்லைனில் செய்யப்பட ஆர்டர்கள் ஏதோ சர்வர் பிரச்னையால் எங்களுக்கு நேற்றைக்கே கிடைக்கப் பெற்றது என்பதால் நம்பர் 648-668 வரையிலான ஆர்டர்களுக்குரிய இதழ்களை நாளைய தினமே அனுப்பிடுவோம் ! எதிர்பாரா இத்தாமதத்திற்கு எங்கள் apologies !

அதே போல - மின்னும் மரணம் முன்பதிவுப் பட்டியல் வரும் இதழினில் வெளியாகும் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் ! ஸ்டெல்லா நீங்கலாய் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த இன்னொரு பெண்மணி தற்போது நம்மிடம் பணியாற்றவில்லை என்பதாலும், சுகவீனத்தால் இராதாகிருஷ்ணனும் ஒரு மாதமாய் அலுவலகம் வராது இருப்பதாலும், ரொம்பவே தடுமாற்றம் ஸ்டெல்லா ஒற்றை ஆளாய் சமாளிப்பதற்கு ! இதர 2 பையன்களும் ஒரு மாதமாய் நெல்லை ; ஈரோடு ; இப்போது நாகர்கோவில் என சுற்றி வருவதால் திணறல் ஜாஸ்தியாகியுள்ளது ! முயன்று வருகிறோம் புதிதாய் உதவியாளர்களை பணியமர்த்த ! Please bear with us for the moment folks ! 

Saturday, August 09, 2014

LMS - Lovely Memories Special !

நண்பர்களே,

வணக்கம். (நிர்மலா பெரியசாமியைப் போல வ-ண-க்-க-ம் !! என்று அழுத்தமாய்ச் சொல்ல ஆசை தான் ; but இங்கே sound effect -க்கு வழியில்லை என்பதால் அடக்கியே வாசிக்கிறேன் !!) சிரம் தாழ்த்துகிறோம் - சிந்தையில் நீச்சலடிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மாத்திரமே போதாதென்பதால் !! ஒரு அழகான வெற்றியை சாத்தியமாக்கியது உங்கள் முதல் சாகஸமெனில்  ; அதனை ஒரு திருவிழாவாய் ஈரோட்டிலும், இங்கேயும் கொண்டாடியது தான் icing on the cake !! 1985-ல் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" துவக்கி வைத்த நமது  'ஆண்டுமலர்'  கலாச்சாரத்தை - தொடர்ந்த வருடங்களில் நிறைய அழகான இதழ்கள் அலங்கரித்திருப்பினும், தற்போதைய LMS எனும் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு' ஏற்படுத்தியுள்ள impact முற்றிலும் மாறுபட்ட ரகம் என்பதில் ஐயமில்லை ! ஆனால் கோலம் எத்தனை அழகாய் வந்திருப்பினும், அதனை ரசிக்கவும், உற்சாகத்தின் உச்சியிலிருந்து முழு மனதாய்ப் பாராட்டவும் ஒரு பக்குவம் தேவை தானே ?! அதனில் துளியும் குறை வைக்காது கடந்த வாரத்தை ஒரு அசாத்தியக் காமிக்ஸ் மேளாவாய் மாற்றித் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு கத்தையாய் !! You are an editor's dream folks !!! Thanks a ton...and more !!!

மகத்தான வெற்றி ; நாங்கள் துளியும் எதிர்ப்பார்த்திடா சந்தோஷம் இது ;  ஆஹா..ஓஹோ...!! என்றெல்லாம் நான் இத்தருணத்தில் உதார் விடப் போவதில்லை ! LMS நிச்சயமாய் நமக்கொரு மறக்க இயலா இதழாய் அமைந்திடும் என்பதை இதழின் தயாரிப்புப் பணிகள் பாதி முடிந்த நிலையிலேயே என்னால் உணர முடிந்தது ! இது  ரொம்பவே கொழுப்பானதொரு பிரகடனமாய்த் தெரியலாம் தான் ; ஆனால் வெற்றி தந்த மமதையில் சத்தியமாய் இதனை நான் சொல்லவில்லை ! எடிட்டர் ; மொழிபெயர்ப்பாளன் ; கத்திரிக்காய் என்ற போர்வைகளுக்குள்ளே அடிப்படையில் நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் டெக்சையும், டைலனையும் 'பளீர்' வண்ண அச்சில் ; compact ஆன இந்த அளவினில் பார்த்த போதே ஒரு ஜிலீர் உணர்வு எனக்குள் !  நமது ஓவியர் மாலையப்பன் போட்டுக் கொண்டு வந்திருந்த அழகான அட்டைப்படங்களைப் பார்த்த போது எனது உற்சாக லெவல் ஒரு பங்கு கூடியதென்றால் ; நமது டிசைனர் பொன்னனின் உதவியோடு அவற்றை மெருகூட்டிய போது சந்தோஷ மீட்டர் இன்னும் ஜாஸ்தியானது ! Hardcover என்ற எண்ணம் என் தலைக்குள் லேசாய் முளைக்கத் துவங்கிய தருணமும் அதுவே ! அனைத்தும் அழகாய் அமைந்து வரும் ஒரு அபூர்வமான தருணத்தில் ஏதாவது வித்தியாசமாய்ச் செய்தால் இதுவொரு நினைவில் நிற்கும் இதழாக உருப்பெற்றுவிடும் என்ற நம்பிக்கை என்னுள் திடமானது அன்றே ! அதன் பின்னர் பைண்டிங்கினை கண்காணிப்பதோ ; அதற்காகப் பெரிய கம்பு சுழற்றுவதோ  என் முன்னே நின்ற மிகப் பெரிய சவாலாக இருந்திடவே இல்லை ; மாறாக எனது ஓட்டைவாயை LMS-ன் ரிலீஸ் தேதி வரையிலும் மூடி வைத்திருப்பதே பெரும் கஷ்டமாக முன்நின்றது ! இடைப்பட்டதொரு தருணத்தில் 'முன்பதிவுகள் குறைவு...செலவுகள் ஜாஸ்தி !' என்ற பஞ்சப்பாட்டைப் பதிவில் இங்கே பாடும் வேளையில் ' HARDCOVER BINDING ' என்ற சங்கதியைப் போட்டு உடைத்து விடுவோமே ? விலையேற்றத்திற்கொரு நியாயம் கற்பித்தது போல் இருக்குமே ? என்ற சபலம் மனதில் பலமாய்த் தோன்றியது ! ஆனால் கடைசித் தருணம் வரை மௌனத்தைக் கடைப்பிடித்தால், LMS டப்பாவை உடைக்கும் வேளையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டியான surprise தந்தது போலிருக்குமே என்ற உணர்வு மேலோங்க, பெரும் சிரமத்தோடு 'ஓட்டைவாய் உலகநாதனை' ஓரம் கட்டி வைத்திருந்தேன் ! எல்லாம் கைகூடி ; பைண்டிங்கில் நம்மவர்கள் அசகாயம் செய்து ; முதல் பிரதியை என் கையில் தந்த போது எங்கள் அணியின் உழைப்பின் ஒட்டு மொத்தப் பிரதிபலிப்பை அதனில் பார்க்க முடிந்தது ! ஏராளமானோரின் இந்த வியர்வைகள் நிச்சயமாய் சோடை போகாது என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாகியதும் அன்றே !! இதழ் வெளியாகி, அதனை நீங்களும் ரசித்து, சிலாகித்தான பின்னே - நமது ரசனைகளின் பெரும்பான்மை ஒன்றாய் இணைந்து பயணிப்பது மீண்டுமொருமுறை ஊர்ஜிதமாகியுள்ளதை நினைத்து மகிழ்கிறோம் !

நிறைய இதழ்களுக்குப் பணி செய்து விட்டோம் ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கு நாம் புதியவர்கள் அல்ல ; ஏகப்பட்ட சைஸ்கள் ; விலைகள் என்று வானரமாய் மரத்துக்கு மரம் தாவிய அனுபவமும் நமக்கு நிறையவே உண்டு - ஆனால் இம்முறை இந்த மெகா முயற்சிக்குள் தலை நுழைத்த போது எப்போதுமே இருந்திரா ஒரு புதுப் பளு எங்கள் தோள்களில் இருந்ததை உணர முடிந்தது ! உங்களின் எதிர்பார்ப்புகள் எனும் invisible சங்கதி தான் அது !! NBS வெளியான சமயம் - 'நாம் மீண்டு வந்ததே ஒரு பெரும் விஷயம் !'  என்ற ரீதியில் ஒரு பச்சாதாப உணர்விலாவது தலை தப்பித்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது ! ஆனால் அதன் பின்னே ஒன்றரை ஆண்டுகளில் நாம் படிப்படியாய் ரசனைகளின் மேலோக்கிய பயணத்தில் ஆழ்ந்திருக்கும் வேளைதனில் - LMS உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யாவிடின் தர்ம அடி நிச்சயம் ! என்ற சிந்தனை தலைக்குள் இல்லாமலில்லை ! So LMS -ன் திட்டமிடல்கள் துவங்கிய போது - 'சிவனே' என்று 2 மெகா டெக்ஸ் வண்ண சாகசங்களோடு ரிஸ்க் ஏதும் எடுக்காமல் இந்த இதழை அமைத்து விடலாமே ! என்ற சிந்தனை எனக்குள் இருந்தது ! இன்னும் சொல்லப் போனால் தற்போதைய 'சட்டம் அறிந்திரா சமவெளி" + இன்னுமொரு புது டெக்ஸ் சாகசம் என்று கதைகளைக் கூட shortlist செய்து வைத்திருந்தேன் ! ஆனால் உங்களிடம் அது பற்றிய அபிப்ராயக் கோரலை முன்வைத்த தருணத்தில்  "MIX N MATCH "-பாணியில் கதம்பமாய் ஒரு ஸ்பெஷலுக்கே எங்கள் ஒட்டு !' என்று பெரும்பான்மை  வாக்களித்த  பின்னர் - எனது துவக்கத்து சிந்தனையை கடாசி விட்டு combo தேடலைத் தொடங்கினோம் ! அதன் பின்னே போனெல்லி குழுமத்தின் கதைகள் நமக்கு வாகாய் அமைந்ததும், இந்த இதழ் ஒரு shape பெற்றதும் இனி லயன் 'மலரும் நினைவுகளின்' ஒரு அங்கம் தானே ?!  

உங்களில் இன்னமும் முக்காலே மூன்று வீசத்தினர் LMS-ன் கதைகள் சகலத்தையும் படித்திருக்கவில்லை என்பதாலும்  ; மெதுமெதுவாய்   ஒவ்வொரு கதையினையும் நீங்கள் ரசித்து அசை போட்டு வருவதாலும் - LMS பற்றிய எனது review-ஐ ஒட்டு மொத்தமாய் இப்போதே, இங்கேயே  எழுதி  - உங்களின் சுவாரஸ்யத்துக்கு வெடி வைக்கப் போவதில்லை ! இத்தாலிய ஐஸ்க்ரீம் இதழின் முதல் 3 கதைகளை (Tex ; Dylan ; Robin) majority நண்பர்கள் கடந்து வந்து விட்டபடியால் அந்த மூன்றைப் பற்றி மட்டுமே நானும் இங்கே பதிவிடுகிறேன் ! ஆட்டத்தைத் துவக்குவது  'தல' டெக்சின் "சட்டம் அறிந்திரா சமவெளி" எனும் போது எனது விமர்சனப் பார்வையையும் அங்கிருந்தே தொடங்கலாம் தானே ?!
Claudio NIzzi 
224 பக்கங்கள் ஓடும் இக்கதையின் மொத்தக் கருவையும் உள்ளங்கையில் எழுதிய பின்னே நிறைய இடம் மீதமிருக்கும் என்பதே நிஜம் ! அதுவும் கதை துவங்கிய முதல் ஐந்தாறு பக்கங்களுக்குள்ளாகவே plot என்னவென்று ஒப்பித்து விடுவது "டெக்ஸ்" எனும் இமயத்தின் மீது கதாசிரியருக்கு உள்ள அசைக்க இயலா நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது ! இன்னும் ஒரு படி மேலேசென்று சொல்வதாயின் கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸி நிச்சயமாய் நம்மை விட ஒரு மகத்தான டெக்ஸ் காதலர் என்றே சொல்லுவேன் !! சமீபமாய் வெளியான 'நில்..கவனி..சுடு..' கூட ஒரு அதிரடி மேளா தான் என்ற போதிலும், இங்கே நாம் காண்பதோ ஒரு ஒற்றை மனிதனின் ரௌத்திர தாண்டவம் ! கதையில் மொத்தம் எத்தனை பேருக்கு டெக்சின் முஷ்டி  முத்தம் பதிக்கின்றது ? என ஒரு போட்டியே நடத்தி விடும் அளவுக்கு இது ஒரு "கும்...ணங்..சத்.." படலம் ! So பெரிதாய் கதையையோ ; திருப்பங்களையோ எதிர்பாராமல் 'தல' ரசிகர்களாய் மாத்திரமே முன்வரிசையில் அமர்ந்து விசில் அடித்துப் பார்க்க வேண்டிய ஒரு action  மசாலா இது ! இதற்குப் பெரும் மெருகூட்டுவது வண்ணங்களின் செழுமை என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது ! அந்த பளீர் மஞ்சள் சட்டையை அப்பாவும் சரி , பிள்ளை கிட்டும் சரி கதை நெடுக போட்டு நடமாட - பின்னணி வர்ணங்கள் சகலமும் அழுத்தமான bright shades-ல் இருந்திட - ஒவ்வொரு பக்கமும் வசீகரிப்பது கண்கூடு ! So - "சட்டம் அறிந்திரா சமவெளி" - "ஒரு மஞ்சள் மசாலா மேளா "!! (எங்களுக்கு அச்சு மை சப்ளை செய்திடும் விற்பனையாளர் இப்போதெல்லாம் டெக்சின் தீர ரசிகர் ஆகி விட்டார் என்பது கொசுறுச் சேதி !! )

LMS -ன் கதை # 2 தான் இத்தாலிய ஐஸ்க்ரீமின் டாப் flavour எனது பார்வையில் ! டைலன் டாக் தொடர் ரொம்ப ரொம்ப காலமாய் என் கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றி வந்ததொரு தொடர் என்றே சொல்ல வேண்டும் ! 1985-ல் டெக்ஸ் வில்லரின் உரிமைகளுக்காக போனெல்லி குழுமத்தோடு தொடர்புகளைத் தொடங்கிய ஓராண்டுக்குப் பின்பாய் அறிமுகம் கண்ட இந்த dark தொடர் மீது எனக்கொரு லயிப்பு அந்நாட்களிலேயே இருந்தது ! ஆனால் அன்றைய நமது "ஆணழகர்" பிரிட்டிஷ் ஹீரோக்களின் மத்தியில் இந்த வத்தலான ஆசாமியோ ; சற்றே கீச்சலாய் (அந்நாள்களில்) தெரிந்த சித்திர பாணிகளோ எடுபடுமா ? என்ற தயக்கமும் நிறையவே இருந்தது ! தவிர இணைய தளம் இருந்திருக்கா அன்றைய நாட்களில் டைலனின் கதை பற்றியதொரு சரியான புரிதலோ ; அவற்றை நம்மால் சமாளிக்க முடியுமா ? என்ற ஊர்ஜிதமும் எனக்குக் கிட்ட வாய்ப்பிருக்கவில்லை ! So ஒவ்வொரு நாலைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை டைலனின் சாம்பிள் பிரதிகளைப் புரட்டுவது ; பின்னே பரணில் போடுவது என்ற வாடிக்கை தொடர்ந்தது ! ஆனால் நம் ரசனைகளின் பரிமாணங்களைப் பற்றிய சந்தேகம் துளியும்  இல்லா இத்தருணத்தில் டைலனை எப்படியும் களம் இறக்கியே தீர வேண்டுமென சென்றாண்டின் இறுதியில் தீர்மானித்தேன் ! 2014-ன் அட்டவணைக்கென போனெல்லியிடம் நாம் கொள்முதல் செய்த கதைகள் 3 ! அவற்றைத் தரம் பிரிப்பதெனில் - கதை # 1 : நிச்சயமாய் ரசிக்க முடியும் ; ஓவராக fantasy கலப்பிலா சாகசம் ; கதை # 2 : இதுவும்  ஒரு ரசிக்கக் கூடிய கதை ; துளியூண்டு அமானுஷ்யத்தின் கலப்போடு ; கதை # 3 - ஏராளமாய் fantasy ; அமானுஷ்யம் ; கற்பனைகளின் எல்லைகளைத் தொடும் சங்கதிகள் கொண்டது ; புரிந்த மாதிரியும்    இருக்கும் ; கேசக் கற்றைகளைக் கையோடு பிடுங்கச் செய்யவும் ஆற்றல் கொண்டது ! LMS -ல் டைலனை அறிமுகம் செய்வதென்று தீர்மானமான பின்னே, நான் முதலில் தேர்வு செய்தது ரிஸ்க் இல்லா - கதை # 2 தான் ! "நள்ளிரவு நங்கை" என்ற பெயரோடு அதன் விளம்பரமும் கூட துவக்கத்தில் உலா வந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் டைலனின் கதைகளை அறிமுகம் செய்வதென்று துணிந்தான பின்னே, அதில் முழு மனதாய் இறங்கினால் போச்சு என்ற சிந்தனை மேலோங்க - சீக்கிரமே கதை # 3-ஐத் தேர்வு செய்தேன் ! அது தான் "அந்தி மண்டலம்" ! விஞ்ஞானம் ; தெளிந்த சிந்தைகள் ; ஞானத்தின் எல்லைகள் சதா காலமும் விரிவாகிக் கொண்டே செல்லும் இந்த யுகத்திலும் கூட - 'மரணத்துக்குப் பின்னே என்ன ?' ; ஆன்மாவின் பயணம் எது நோக்கி ? என்ற கேள்விகளுக்கு நம்மிடம் பதிலேது ? So இதனைக் கையில் எடுத்துக் கொண்டு கதைகள் ; புதினங்கள் ; திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறையவே காமிக்ஸ் தொடர்களுமே உருவாகியுள்ளன ! டைலனின் 'அந்தி மண்டலமும்' இது போன்றதொரு முயற்சி தான் எனினும்,  கதாசிரியர் அதனைக் கையாண்டுள்ள விதம் அழகான (!!!) சித்திரங்களோடு ; கண்ணைப் பறிக்கும் வர்ணங்களோடு கை கோர்க்கும் போது கிடைப்பது ரொம்பவே மாறுபட்டதொரு படைப்பு ! "அபத்தம்" என்று ஒற்றை வார்த்தையில் இதனைப் புறம்தள்ளவும் முடியும் ; "என்னமோ சொல்றாங்களே....!!" என்று புருவங்களை சிந்தனையில் உயர்த்தவும் முடியும் ; "ஒ ..வாவ் ! " என பிரமிக்கவும் முடியும் ! எது எப்படி இருப்பினும், மீண்டுமொரு மழை நாளில் இதனைப் புரட்டும் ஆர்வம் மட்டும் மட்டுப்படாது என்பது என் அபிப்ராயம் ! ஹாரர் கதைகள் உருப்படியாய் நம்மிடம் இல்லையே என்பது ஒரு குறையாக இருந்து வந்த நிலையில் டைலன் அதனை நிச்சயம் நிவர்த்தி செய்வார் என்றே நினைக்கிறேன் ! (டைலனின் தொடரும் சாகசங்கள் வண்ணத்திலா - black & white போதுமா folks ?) இங்கே ஒரு wow சேதியும் கூட !! டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS புக் # 1-ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !!

LMS -ன் வர்ணக் கதைகளில் # 3 - CID ராபினின் சாகசம் ! நெடியதொரு ஓய்வுக்குப் பின்னே திரும்பும் ராபின் தன ஆதர்ஷக் களமான நியூ யார்க்கிலிருந்து வெளியேறி - கிராமம் தேடிச் செல்லும் போதே இது high voltage ரக சாகசமாக இராதென்பது புரிகிறது ! அமைதியான கதை ; ரிபோர்டர் ஜானியின் பாணியில் இடியாப்ப நுணுக்கங்கள் இல்லா சீரான ஓட்டம் என நான் ரசித்தேன் இக்கதையை ! நண்பர்களில் சிலர்  plot  ரொம்பவே யூகிக்கக் கூடிய விதமாய் இருந்ததென்று குறைபட்டிருந்தனர் ; ஆனால் மொத்தமே ஐநூறோ ; ஆயிரமோ மட்டுமே வசிக்கும் ஒரு குக்கிராமத்தில் நிறைய முடிச்சுகளை இணைப்பது இயல்பாய் இராதே என கதாசிரியர் நினைத்திருக்கலாம் ! தவிரவும் ஒவ்வொரு நிஜ புலனாய்வின் பின்னணியிலும் நாம் கதைகளில் ; திரைகளில் பார்த்து ரசிப்பது போன்ற த்ரில் நிகழ்வுகள் ஏராளமாய்க் குவிந்து கிடக்குமா என்பது சந்தேகமே ! So யதார்த்தத்தின் பிரதிபலிப்பான இக்கதைக்கு 6/10 போடலாம் என்பதே எனது எண்ணம் ! வண்ணக் கலவை நெருடலாய் இதனில் இருந்ததை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ; ஆனால் அதனில் நமது பங்கு ஏதுமில்லை ! போனெல்லி தங்களது ராட்சச கதைகளின் வைப்பறையில் ராபினின் இக்கதைக்கான டிஜிட்டல் பைல்களை தேடி எடுக்க முடியவில்ல என கை விரித்து விட்டார்கள் கடைசித் தருணத்தில் ! So அவர்களே அச்சான இதழ் ஒன்றினை ஸ்கேன் செய்து அந்த பைல்களை நமக்கு அனுப்பித் தந்தார்கள் ! அவற்றை இங்கு நாம் லேசாக பட்டி-டின்கெரிங்க் பார்த்தாலும் கூட - ஒரிஜினலின் அழுத்தம் இதனில் கிடைக்காது போனது ! ராபினின் கதை # 100 & 200 மட்டுமே வண்ணத்தில் என்பதால் - கதை - 200-ஐ இதன் இடத்தில் அனுப்பவா ? என போனெல்லியிலிருந்து கேட்டார்கள் ; ஆனால் மீண்டுமொரு இத்தாலிய மொழிபெயர்ப்பிற்கு அவகாசம் இல்லாத வேளையில் இந்தக் கோப்புகளைக் கொண்டே தொடர வேண்டிய நெருக்கடி ! ராபினை b&w-ல் வெளியிட்டு விட்டு, அதன் பதிலாய் மார்டினையோ ; ஜூலியாவையோ  வண்ணத்தில் வெளியிட்டுப் பார்ப்போமா ? என்ற சிந்தனை எழுந்த போதும் சிக்கல்கள் தொடர்ந்தன ! அதே மொழிபெயர்ப்புப் பிரச்னைகள் ஒருபக்கமிருக்க மார்டின் # 100 & ஜூலியா # 100 கதைகளின் சித்திர பாணிகள் செம சொதப்பலாய் இருந்தன ! So வேறு மார்க்கமின்றி தொடர்ந்தோம் ! Sorry guys !

இப்போதைக்கு LMS பற்றிய எனது பார்வையை இத்தோடு நிறுத்திக் கொண்டு - ஈரோடில் சென்ற சனிக்கிழமை நடந்த நண்பர்களுடனான குதூகலச் சந்திப்பைப் பற்றியும் புத்தக விழாவின் விற்பனை பற்றியும் பார்ப்போமே ? !

ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலைக்குள் இங்கே நம் அலுவலகத்தின் திருவிழாக் கோலத்தை முழுமையாய் ரசித்த பின்னே ; உங்கள் LMS பிரதிகளை கூரியருக்கு அனுப்பி விட்டு ஈரோட்டுக்கு நானும் ஜூனியரும் ரயில் ஏறினோம். அரங்கம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் வாசலில் தான் என்பதால் சனிக்கிழமை காலையில் 10-30 மணிவாக்கில் அங்கே சென்றால் நமக்கு முன்பாகவே ஈரோட்டு நண்பர்கள் மட்டுமல்லாது வெளியூர் நண்பர்கள் மட்டுமல்லாது ; வெளிநாட்டு நண்பரும் அங்கே உற்சாகமாய், ஆஜராகி நிற்பதை காண முடிந்தது ! பிரான்சில் இருந்து வந்திருந்த நண்பர் ராட்ஜா மறு தினம் தன மகளின் பரத அரங்கேற்றத்தை பாண்டிசேர்ரியில் வைத்திருந்த நிலையிலும், இங்கு நண்பர்களை சந்திக்கும் பொருட்டு புறப்பட்டு வந்திருந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்ட போது இந்த வாசகக் குடும்பத்தின் உறவுகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ! 'பளிச்' மஞ்சள் டி-ஷர்டில் பெரியதொரு வேதாளர் படத்தோடு முன்வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட நண்பர் மாயாவி சிவா (!!) "மின்னும் மரணம்" முன்பதிவுக்கு உதவும் விதமாய் ஒரு டைகர் படம் கொண்ட பிரிண்ட் அவுட் + ஒரு பெரிய ப்ளெக்ஸ் banner சகிதம் அசத்தினார் !

அரங்க வாசலிலேயே நண்பர்கள் ஒவ்வொருவராய் சேர்ந்து கொள்ள, உள்ளே நம் ஸ்டாலுக்குச் சென்றோம் ! இந்தாண்டு நமது லயன் ; முத்து காமிக்ஸ் இதழ்களோடு - ஆங்கில காமிக்ஸ் ரகங்கள் சிலவற்றையும் வாங்கி நமது ஸ்டாலில் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தோம் ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் விறு விறு வென்று நம் ஸ்டாலுக்குள்   நுழைந்து விட்டு - "இங்கிலீஷில் காமிக்ஸ் இல்லையா ?" என்ற கேள்வியோடு  நடையைக் கட்டும் 'ஆங்கில ஆர்வல பெற்றோர்களின்' தேர்வுக்கென இம்முறை இந்த முயற்சி ! லக்கி லூக் ; மதியில்லா மந்திரியார் + ஆர்ச்சி (அமெரிக்க ஆர்ச்சி !!) காமிக்ஸ்கள் நம் ஸ்டாலின் ஒரு கோடியை ஆக்கிரமித்திருந்தன ! (லக்கியார் மாத்திரம் கொஞ்சமே கொஞ்சமாய் விற்பனையாகின ; பாக்கி இதழ்கள் நம்மைப் பார்த்துப் புன்சிரிப்பை மாத்திரமே உதிர்க்கின்றன என்பது வேறு விஷயம் !! )  


நம் ஸ்டாலில் LMS பிரதிகள் பண்டல்களில் காத்திருந்த போதிலும், அவை அதுவரை வெளியே எடுத்திருக்கப்படவில்லை! இனியும் தாமதம் வேண்டாமென நான் கையில் கொண்டு சென்றிருந்த gift wrapped LMS பிரதியினை நண்பர்களின் மத்தியில் பிரித்து வெளியெடுக்க hardbound கவர் + இதழின் அழகான பருமனில் அனைவரும் மெய்மறந்து போனதைக் காணும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிட்டியது ! தினுசு தினுசான செல்போன் காமெராக்களும், வீடியோ காமெராக்களும் பளிச் பளிச் என்று ஒளி உமிழ நம் ஸ்டாலின் முன்பாக நண்பர்களின் திரள் கூடிக் கொண்டே போனது ! காலை 11 மணி தான் விழாவின் துவக்க நேரம் என்பதால் பார்வையாளர்களின் வருகை இன்னும் துவங்கி இருக்கா நிலைதனில், இதர ஸ்டால்களின் மிகச் சன்னமான கூட்டமே ; ஆனால் இங்கு நமது ஸ்டாலில் நிமிடத்துக்கு நிமிடம் கூடிச் சென்ற நண்பர்களின் எண்ணிக்கையும், கரைபுரண்டோடும் உற்சாகமும், அக்கம்பக்கத்துப் புருவங்களை உயரச் செய்தன !  பள்ளிகளிலிருந்து வருகை தந்திருந்த சிறார்கள் நம் ஸ்டாலைத்   தாண்டிச் செல்லும் போது - என்னமோ ; ஏதோவென மலங்க மலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது ! ஆளுக்கொரு LMS பிரதியை கையில் ஏந்திக் கொண்டு பக்கங்களைப் புரட்டுவது ; இது நாள் வரை இங்கு வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்த தோழர்களோடு மெய்மறந்து அரட்டையடிப்பது ; போட்டோக்கள் எடுத்துக் கொள்வதென கொஞ்ச நேரத்தில் அந்த இடமே ஒரு காமிக்ஸ் சரணாலயமானதென்று சொன்னால் அது மிகையாகாது !







கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "ஸ்பைடர் எப்போ ? " ;  "இரத்தப் படலம் எப்போ ?" ; "புதுசாய் என்ன வருது ?" ; "கிங் ஸ்பெஷல் இதழில் யார் ஹீரோ ?" ; "மில்லியன் ஹிட்ஸ் எப்படி இருக்கும் ?" என்ற ரீதியில் கேள்விகள் படலம் துவங்கியது ! நமது ஸ்டாலின் மறு பக்கமிருந்தது நடைபாதை என்பதால் அங்கே ஓரம்கட்டிட அரட்டை அதகளமானது !! LMS பற்றாதென "மின்னும் மரணம்" மறுபதிப்பும் அறிவிக்கப்பட்டிருந்ததால் நண்பர்களின் உற்சாகத்தின் அளவுகள் விண்ணைத் தொடும் நிலையில் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது ! 'அதற்கும் hardcover தானே ?' ; 'இரத்தக் கோட்டை' 5 பாகங்களையும் மீள்பதிப்பு செய்து விடுங்களேன்' என்ற ரீதியில் வேண்டுகோள்களும், கேள்விகளும் டெக்ஸ் வில்லரின் தோட்டாக்களைப் போல 'விஷ்.'விஷ்' என்று எனது மொழு மொழு முன்மண்டையைத் தாண்டிப் பறந்து சென்றன ! நான் விடிய விடிய விளக்கங்கள் சொன்ன பிறகும் "இரத்தப் படலம் வண்ணத்தில் எப்போது சார் ?" என்ற கேள்வியை உடும்புப் பிடியைப் பிடித்து நின்றார் நமது இரும்புக்கரத்தார் !! போராட்டக் குழுத் தலைவரோ அமைதியாய் வேடிக்கை பார்த்து நின்றவர் இது வரை நமது இதழ்கள் பற்றிய செய்தித் தாள் குறிப்புகள் ; நமது சுவாரஸ்யமான பதிவுகள் என நிறைய printout எடுத்து அதனை ஒரு புக்காகவே பைண்டிங் செய்து கொண்டு வந்து காட்டி விட்டு, 'சிங்கத்தின் சிறுவயதில்' தொகுப்பு எப்போது ? எனக் கேள்வியினை முன்வைத்தார் ! அது என்றைக்கு முடிகிறதோ  - அன்று ஒரு புக்காகப் போட்டு விடுவோம் என்று நான் பதிலளிக்க குழுத்தலைவர் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒப்புக் கொண்டார் ! வாழைப்பூக்கள் தப்பின !! இம்முறை நம்மை சந்திக்க வருகை தரும் நண்பர்களின் பெயர்கள் சகலத்தையும் குறித்துக் கொண்டாக வேண்டும் ; எனது காமெராவில் படங்கள் எடுத்தாக வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன் ; ஆனால் நண்பர்களின் உற்சாகத்தின் மத்தியினில் அத்தனையும் காற்றில் போயே போச்சு !  சேலம் நகரிலிருந்து வருகை தந்திருந்த நண்பர்கள் குழு - சேலம் ஸ்டீலின் பிரத்யேகத் தயாரிப்பான gift set ஒன்றினை என் கையில் திணிக்க ; சேலம் நகரிலிருந்து ஆண்டுதோறும் நம்மை சந்திக்கும் ஒரு அற்புதக் காமிக்ஸ் ஆர்வக் குடும்பம் 4 பாக்கெட் இனிப்புகளை தந்து அந்த இடத்தையே இன்னும் இனிப்பாக்கினார்கள் ! வாசக நண்பரும் , அவர்தம் தமக்கையும் நமது காமிக்ஸின் தீரா அபிமானிகள் ; இருப்பினும் அவர்களையும் விட ஒருபடி மேலே சென்று அவர்களது தந்தையார் மிகுந்த கரிசனத்தோடு நம்மை நலம் விசாரித்ததும், நமக்கு நல்லறிவுரைகள் சொன்னதும் மறக்க இயலா நிமிடங்கள் ! உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களை என்றும் வழிநடத்தும் !!

Salem Steel..!!

தூரங்களைத் துளியும் பொருட்படுத்தாது எங்கெங்கிருந்தோ வருகை தந்திருந்த நண்பர்கள் குழாம் சந்தோஷமாய் தோளோடு தோள் சேர்த்து நின்றது நிச்சயமாய் ஒரு மறக்க இயலா அனுபவமே ! மதியத்துக்கு மேலே மீண்டும் அரட்டை களை கட்ட, மாலை வரை தொடர்ந்தது ! திருப்போர் நகரிலிருந்து நண்பர் சிபி அன்று மாலை வர இருப்பதாகவும், அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அங்கேயே கொண்டாடி விடுவோமா ? என நண்பர்கள் வினவ - அதற்கான ஏற்பாடுகள் துவங்கின ! அந்தி சாயும் சமயம் நண்பரும் வந்திட, அரங்கின் பின்னே இருந்த மரத்தினடியில் அவரை அதிரடியைக் கேக் வெட்டச் செய்தனர் ! நண்பருக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை என்பதை அருகில் நின்ற என்னால் புரிந்திட முடிந்தது ! காமிக்ஸ் எனும் ரசனையின் புதல்வர்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டும் சுமந்து கொண்டு ; எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ; எங்கெங்கோ பிறந்து, வளர்ந்த 'முழு நிஜார் பாலகர்களால்' இத்தனை சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடிவதை மாறா வியப்போடு நான் ரசித்தேன் ! Privileged to be a part of this family folks !!



மறக்க இயலா ஒரு நாளின் இறுதியில் விடைபெறும் வேளை நெருங்கும் முன்பாக ஈரோட்டில் 2015-க்கான அறிவிப்பு என்னவென்று நண்பர்கள் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் மறியல் செய்ய ; 'பெவிகால் பெரியசாமி' அவதாரத்தை சற்றே தளர்த்திடும் அவசியம் நேர்ந்தது ! 2015-ல் இரட்டை TEX மெகா சாகசங்கள் (தலா 336 பக்கம் !!) வரக்காத்திருக்கும் ரகசியத்தை (?!) போட்டு உடைத்தேன் - 'தல' ரசிகர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு மத்தியினில் ! டைகர் ரசிகர்களும் தங்கள் தளபதிக்கொரு "மின்னும் மரணம்"  காத்திருக்கும் சந்தோஷத்தில் பெருந்தன்மையாய் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் !! அன்றிரவு நானும், ஜூனியரும் ரூமுக்குத் திரும்பிய போது என் முதுகும், காலும் பிசாசாய் வலித்த போதும், மண்டைக்கு அது துளியும் பதிவாகவில்லை ! ஒருவித மிதக்கும் நிலையில் இருந்தது போன்றதொரு உணர்வு !"சந்தோஷம்" எனும் வார்த்தைக்கு ஒவ்வொருவரின் அகராதிகளிலும் வெவ்வேறு பொருள்கள் இருப்பது இயல்பே ; சூழல்களுக்கேற்ப அவை மாறும் என்பதெல்லாம் புரிகிறது தான் ! ஆனால் நாம் நேசிக்கும் இந்த சித்திரக்கதை உலகிற்கு சந்தோஷத்தை உற்பத்தி செய்திடும் ஆற்றல் இத்தனை கணிசமாய் உள்ளதென்பதை மீண்டும் ஒருமுறை உணர முடிந்த போது - இத்துறையினில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பை நமக்குத் தந்த கடவுளுக்கு ஒரு மௌன நன்றியை சொல்வதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை !
அடுத்த தலைமுறைகளும் மெள்ள மெள்ள நம் உலகினுள் வரும் மாயாஜாலம் நிகழாது இல்லை !
நண்பர்களின் ஆரவாரங்கள் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் போதிலும், மண்டைக்குள் அடுத்த மாதத்து இதழ்களின் பணிகள் பற்றிய அலாரம் அடிக்கத் துவங்கிடும் போது தான் புரிகிறது - LMS இனி நம் முதுகுக்குப் பின்னுள்ளதொரு மைல்கல் என்று ! தீராப் பசி கொண்ட நம் காமிக்ஸ் குடும்பத்திற்கென புதிதாய் இலக்குகளும், புதிதாய் பயணங்களும் காத்துள்ளன என்பதால் fresh guard எடுத்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம்  அல்லவா ? அடுத்த பந்தில் கிளீன் போல்ட் ஆனால் சதம் அடித்த சந்தோஷங்கள் வெறும் நினைவுகளாக மாத்திரமே இருந்திடும் என்பதால் இன்றைய தினத்தின் இந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் மாத்திரமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் வேகமாய் நடை போட விழைவோம் !! அடுத்த இலக்காய்  'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' வெகு வெகு விரைவில் காத்திருப்பதால் எங்களின் டீமுக்கு ஸ்டார்ட் மியூசிக் தான் மறுபடியும் !!

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே...!! ஒரு மறக்க இயலா அனுபவத்தை நல்கியமைக்கு என்றென்றும் எங்கள் நன்றிகள் !! We feel truly blessed & humble !!

Before I wind up சில happy சேதிகளும் !!
  • டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS -ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! 
  • மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! 
  • ஈரோட்டில் முதல் இரண்டு நாட்களின் நமது LMS 170 பிரதிகள் விற்பனையாகியுள்ளன !! 
  • இது வரையிலான மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை 110-ஐத்  தொட்டுள்ளது ! ஏழே நாட்களின் பதிவுகள் என்ற முறையில் great going !!!
  • நமது ஈரோடு விற்பனையாளர் LMS-ல் 100 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார் !!
  • LMS வெளியான தினத்தன்று நமது Worldmart தளத்தின் பார்வைகள் எண்ணிக்கை 1093 ! இங்கு நம் பதிவுப் பக்கத்தில் 3100 !!
  • கடந்த பதிவிற்கு இது வரை கிட்டியுள்ள பார்வைகளே நமது record என்று நினைக்கிறேன் - இப்போது வரையிலும் 6430 ! 
P.S : எப்போதும் போலவே, ஈரோட்டில் நமக்கு அற்புதமாய் ஒத்தாசைகள் செய்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !!

Saturday, August 02, 2014

'தல'....தளபதி.....திருவிழா..!

நண்பர்களே,

வணக்கம்.'மாமா..டிரௌசர் கழண்டு போச்சு' ; "பெண்டு நிமிர்ந்து போச்சு' ; "டப்பா டான்ஸ் ஆடிப் போச்சு" ; என்ற ரீதியிலான தமிழின் யௌவனமான சொற்பதங்கள் சகலத்தையும் கடந்த சில நாட்களாய் பல முறைகள் நினைத்துப் பார்த்துக் கொண்டேன் ! 'ஆஹா...திரும்பவும் ஆரம்பிச்சிட்டானா இவன் புராணத்தை ?' என்று பேஸ்தடித்துப் போகும் நண்பர்களே - worry not ! இது நிச்சயமாய் LMS -ன் பின்னணிக் கதையின் மறு ஒளிபரப்பும் அல்ல  ; கழன்று போனது என் டிரௌசரும் அல்ல ! மாறாக கடந்த 3 நாட்களாய் எங்கள் அலுவலகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்து - உங்கள் ஒவ்வொருவரின் LMS பிரதிகளையும் சேகரித்து ; சரி பார்த்து ; பத்திரமோ பத்திரமாய்ப் pack செய்து அனுப்பிடும் பொருட்டு எடுத்துக் கொண்ட சிரத்தையைப்  பார்த்த போது எழுந்த கரிசனத்தின் குரல் அது  ! இன்று (சனிக்கிழமை) உங்களின் இல்லங்களை ; அலுவலகங்களை கூரியர் நபர் - முரட்டுப் பார்சலோடு தட்டும் விதமாய் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள்ளாகவே இங்கிருந்து சந்தாவின் அனைத்து LMS  பிரதிகளையும் நம்மவர்கள் அனுப்பி விட்டார்கள் ! Worldmart மார்க்கமாய் வியாழன் இரவு வரை ஆர்டர் செய்திருந்த நண்பர்களுக்கும் பிரதிகள் புறப்பட்டு விட்டன ! அனுப்பியது மட்டுமல்லாது மாலை நேரத்து கூரியர் வேன்களில் நமது பார்சல்கள் சகலமும் எற்றப்பட்டுவிட்டதையும் உறுதிப்படுத்தி விட்டார்கள் ! So இன்று உங்கள் நகரத்துக் கூரியர் ஆபீஸ்களை உறங்க விடாதீர்கள் ! இன்று காலை ஈரோட்டில் LMS விற்பனை துவங்கும் தருணமே உங்கள் அவைவரிடமும் அதன் பிரதி ஒன்று ஜொலிக்குமென்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது ! இவ்வாரத்தில் நம்மவர்கள் செய்த வேலைகளைப் பார்த்த பின்னே A.C அறைக்குள் அமர்ந்து கொண்டு பேனா பிடிக்கும் என் பிழைப்பு சாலச் சிறந்தது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன் ! அவர்கள் எதிர்கொள்ளும் practical சிரமங்களைப் பார்க்கும் போது   ஏதோ ஒரு மாமாங்கத்தில் முடிந்து போனது போல என் மண்டைக்குள் தோன்றிடும் எடிட்டிங் பணிகளின் பளுவானது - ஜூஜூபி போலவே தெரிகிறது ! பார்சலைப் பிரிக்கும் கணமே பாக்கிங் சிரத்தை புரியுமெனில் ; அதனைத் திறந்த மறு கணம் உங்களை திகைக்கச் செய்யப் போவது நமது பைண்டிங் பணியாளர்களின் தொழில் நேர்த்தி ! இம்முறை நிச்சயமாக பிரமிக்கச் செய்யும் பைன்டிங்கின் அட்டகாசம் ! ஓவராய் பில்டப் கொடுத்து விட்டு ; கூரியரில் ஏதேனும் ஏடாகூடமாய் சொதப்பிடும் பட்சத்தில் இங்கே அசடு வழிய நேருமே என்ற பயமும் கூட இம்முறை மிகக் குறைவான சதவீதமே என்னுள் ! So இது நாள் வரை the making of LMS பற்றி சிலாகித்தேன் என்றால், இதுவோ  the binding & shipping of LMS பற்றிய பீட்டர் படலம் !! மாறுபட்ட அளவுகள் ; புஷ்டியோ புஷ்டியான இதழ்கள் என்பதால் அவற்றை கூரியருக்குக் கொண்டு செல்வதே ஒரு தேர் திருவிழா போன்ற நிகழ்ச்சியாகிப் போனது ! இதனிடையே ஈரோடு விழாவிற்கென புத்தகங்களை பண்டல் செய்வது ; banner தயாரிப்பது என என்னைச் சுற்றி அத்தனை பேரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் ! நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இருதய அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் சூழலில் - அவரது absence அனுபவம் எனும் அருமருந்தின் மகிமையை உணர்ந்திடச் செய்கிறது ! விரைவில் நலமாய்த் திரும்புவார் எனக் காத்திருக்கிறோம் ! 

சரி...ஓட்டை வாய் உலகநாதனுக்கும் - பெவிகால் பெரியசாமியாக உருமாறும் வாய்ப்புகள் உண்டென்பதை நிரூபிக்கும் விதமாய் இத்தனை நாளாய் உங்கள் கண்களில் காட்டாமலே வைத்திருந்த LMS -ன் அட்டைப்படங்கள் இதோ ! போனெல்லி நிறுவனத்துக்கே நேற்றுத் தான் இதனைக் கண்ணில் காட்டினோம் என்றால் பெவிகாலின் மகிமை புரிந்திருக்கும் ! லைன் டிராயிங் + flat கலரிங் பாணிகளுக்குப் பழகிப் போன அவர்கள் - நமது பாலிவுட் ஸ்டைல் ஓவிய பாணிக்கு ரசிகர்கள் என்பதில் ரகசியம் இல்லையெனினும், இம்முறை அவர்களது சந்தோஷம் கரை புரண்டோடுவதை உணர முடிகிறது !! அவர்களே சிந்தித்துப் பார்த்திரா ஒரு COMBO இதழில் அவர்களது நாயகர்கள் டாலடிப்பதைப் பார்த்து விட்டு துள்ளிக் குதிக்கிறார்கள் !! 15 பிரதிகள் தங்களுக்கெனவும் ; மேற்கொண்டு 20 பிரதிகள் உலகெங்கும் உள்ள அவர்களது licensees -க்கு எனவும் ஆர்டர் தந்துள்ளனர் ! இது தவிர Dylan Dog ரசிகர் மன்றமும் தம் அங்கத்தினரின் பொருட்டு ஆர்டர் சேகரித்து வருகின்றனர் இத்தாலியில் ! காமிக்ஸ் எனும் ரசனைக்கு மொழிகள் ஒரு தடையே கிடையாது போலத் தோன்றுகிறது !!


அட்டைப்பட சித்திரங்கள் இதுவே எனினும் நீங்கள் பார்க்கப் போகும் ராப்பரில் - வார்னிஷ் ; லேமினேஷன் ; + ஒரு வித்தியாச வேலைப்பாடும் இணைந்து அழகாய் மெருகூட்டும் ! முன்னட்டையினில் 'தல' தான் தூள் கிளப்புவார் என்பது தீர்மானமான கணமே, வித்தியாசமான pose ஒன்றைத் தேடத் துவங்கினேன். NBS இதழின் அட்டைக்கு ஒரு டிசைன் மாதிரியைப் பிடிக்க நிறையவே சிரமப்பட்டேன் ; ஆனால் இம்முறை துளிச் சிரமும் இன்றி பார்த்த உடனேயே - 'கண்டேன் சீதையை' என்று குதூகலிக்க இயன்றது ! இதோ - நமது தற்போதைய ராப்பரின் inspiration :


கோடு மட்டும் போட்டுக் கொடுத்தால் 6 lane highway track போட்டு விடும் நமது ஓவியர் மாலையப்பனுக்கு இந்த முன் + பின் ஒரிஜினல் டிசைன்களைக் கொடுத்த தருணமே அவர் முகம் பிரகாசமாகியதைக் கவனித்தேன். அடுத்த 30-வது நாளில் இந்த அட்டகாச அட்டைகளோடு ஆஜரானார் ! டெக்சின் பின்னணி வர்ணத்தை வழக்கமான நீலத்தில் தீட்டி இருந்தது மட்டும் எனக்குக் கொஞ்சம் திருப்தி தரவில்லை ; எக்கச்சக்கமாய் அந்த ப்ளூ கலர் combination -ஐப் பார்த்து விட்டோமே என்று பட்டது ! So அதன் பின்னே நமது டிசைனர் பொன்னனைக் குடல் உருவும் படலம் துவங்கியது. இம்முறை நாமே வெவ்வேறு background கலர் options களையும் சொல்லி - விதவிதமாய் முயற்சித்துப் பார்த்தோம் ! பாருங்களேன் அவற்றில் ஒன்றிரண்டை ! எனக்கு அந்தப் பச்சை + மஞ்சள் கொஞ்சம் பிடித்தே இருந்தது - தற்போதைய மெட்டாலிக் grey சேர்க்கையைப் பார்க்கும் வரை. இந்த combination நமக்குப் புதிதாய்ப் பட்டதாலும், இருண்ட பின்னணியில் 'தல' இன்னமும்  பளீரென்று டாலடிப்பதாலும் கிரேக்கு ஓ.கே சொன்னேன் ! 



ஒரு மாதிரியாய் LMS - 1-ன் ராப்பரில் 'தல' தயாரான பின்னே - புக் 2-வின் பொருட்டு 'தளபதியை' தயார் செய்யும் முஸ்தீபில் இறங்கினோம் ! இம்முறையோ எனது பணியை சுலபமாக்கி இருந்தார் சித்திர மாந்த்ரீகர் வில்லியம் வான்ஸ் !  "மார்ஷல் டைகர்" கதையின் முன்னட்டையை நாம் முன்பே "இரத்தக்  கோட்டையின் " ராப்பருக்கு சுட்டு இருந்ததால் அதன் பின்னட்டையில் ஸ்டைலாக நின்ற தளபதியை அப்படியே தூக்கி வந்து விட்டோம் - வான்சின் ஒரிஜினல் பாணியிலேயே ! So 'தல' + 'தளபதி' தயாரான கதை இதுவே !! உங்களுக்குப் பிடித்துப் போய் விட்டால் எங்கள் முயற்சிகளுக்கொரு அர்த்தம் கிட்டி விடும் ! Fingers crossed big time !!! ஒரே ஒரு கொசுறுச் சேதி - LMS புக் 1-ன் முதுகைக் கவனித்தீர்களா ? :-) இதழைக் கையில் எடுக்கும் போதே காத்திருக்கும் surprise உங்களுக்குப் புலனாகும் ! பார்சல்களைப் பிரித்த பின்னே உங்களின் முதல் impression களைப் பகிர்ந்திட மெனெக்கெட்டால் நிச்சயம் மகிழ்வோம் !!


LMS கதைகளைப் பற்றிய முன்னோட்டங்களை நாம் ஏற்கனவே பார்த்தாகி விட்டோம் என்பதால் ; இனி நீங்கள் கதைகளைப் படிக்கத் துவங்கும் வேளைகளில் அது பற்றி மீண்டும் அலச ஆரம்பிப்போமே ? ! அப்புறம் ஒரு குட்டிப் போட்டி - LMS இதழ்களினுள்ளே 2 இடங்களில் ஸ்டிக்கர்கள் உள்ளன ; 2 factual  பிழைகளை மறைக்க ! எங்கே என்று கண்டு பிடியுங்களேன்?!

ஒரு மெகா வெளியீட்டிலிருந்து அடுத்த மெகா படலத்துக்கும் இன்று முதல் பாலம் போடுகிறோம் ! இதோ "மின்னும் மரணம்" இதழின் முன்பதிவுப் படிவம் ! சென்ற பதிவில் நண்பர் கார்த்திக்கும், வேறு சிலரும் அபிப்ராயப்பட்டது போல - டைகரின் ஒற்றைக் கதையின் இத்தொகுப்புக்கு "மின்னும் மரணம்" என்ற பெயரைத் தவிர்த்து விட்டு வேறு நாமகரணத்தைச் சூட்டுவது அத்தனை பொருத்தமில்லை என்பது புரிவதால் - "மின்னும் மரணம்" - The Complete Saga என்று பெயரிட்டுள்ளோம் ! தவிரவும் புத்தக விழாக்களில் நாம் வழங்கும் 10% கழிவை முன்பதிவுக்கும் தந்து - கூரியர் கட்டணங்கள் உங்கள் கையை ரொம்பப் பிடிக்கா வண்ணம் ஏற்பாடு செய்துள்ளோம். பெங்களுருக்கு Proff Courier கட்டணங்கள் தலை சுற்றச் செய்யும் ரூ.260 என்பதால் அதனில் கொஞ்சமே நம்மால் சலுகை செய்ய முடிந்துள்ளது ! இன்று ஈரோட்டில் இதன் முன்பதிவு துவங்கும் ; 500 எனும் மந்திர என்னை எட்டிப்பிடிக்க முயற்சிகளைத் துவக்குவோமா guys ?!
Before I sign off - சின்னதாய் ஒரு teaser !! See you at 10-30 / 11 this morning folks !! Bye for now !!

Friday, August 01, 2014

இது கடவுளின் ஸ்க்ரிப்ட் !

நண்பர்களே,

வணக்கம். கபாலத்தை காற்றோட்டமாக்கிடுவேன் !" ;"அடிவயிற்றின் ஆரோக்யத்தை அலசிப் பார்க்கவா ?" என்ற ரீதியில் நான் இங்கே அமர்ந்து எதைஎதையோ ஸ்கிரிப்ட் என்று நினைத்து எழுதித் தள்ளிக் கொண்டிருக்க - மேலேயுள்ள Supreme Editor நமக்கென எழுதிடும் ஸ்க்ரிப்டோ முற்றிலும் மாறுபட்டதொரு ரகம் ! LMS எனும் மைல்கல்லை நிலைநாட்டும் வேளை  ; ஈரோடில் நண்பர்கள் சந்திப்பு - என்ற ஒரு சந்தோஷத் தருணத்தோடு  நமது வலைப்பதிவின் மில்லியன் ஹிட்ஸ் நிகழ்வும் ஒத்துப் போகும் விதமாய் ஒரு சூழலைக் கற்பனை செய்ய நம்மால் முடியலாம் ; ஆனால் அதனை நிஜமாக்கிக் காட்டும் வல்லமை அவருக்குத் தானே உண்டு ?!! இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக என் பிள்ளையின் நச்சரிப்புக்கு பலனாகப் பிறந்த நம் வலைபூ - இன்றைய நமது காமிக்ஸ் பயணத்திற்கொரு திசைகாட்டியாய் உருப்பெற்றுள்ளது எனில் அந்தப் பெருமையின் ஒரு பங்கு கடவுளுக்கும் ; பாக்கிப் பங்கு கம்பியூட்டரின் கீ-போர்டுகளைத் தொடர்ச்சியாய்த் துவம்சம் செய்து வரும் உங்களின் விரல்களுக்குமே சாரும் ! பொதுவாய் வலையுலகிற்கும், சமூக வலைத்தளங்களுக்கும் அடியேன் அண்மையானவன் அல்ல என்பதால் "மில்லியன்" எனும்  இந்த மந்திர எண் ஒப்பீட்டில் எத்தனை பெரியது என்றோ ; சிறியது என்றோ எனக்கு கணிக்கத் தெரியவில்லை ! ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு நோஞ்சான் மழலையை மாத்திரமே மடியில் தூக்கிச் சீராட்டும் நமது சிறியதொரு உலகிற்கு இது ஒரு memorable milestone என்றே நினைக்கத் தோன்றுகிறது ! சென்றாண்டின் ஏதோ ஒரு சமயத்தில் ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய நண்பர்களின் வினவல்களின் போது - "ஒரு மில்லியன் அடிக்கட்டும் பார்ப்போம் !" என்று வாயை நான் விட்ட போது கூட நமது பயண வேகத்தை சரிவரப் புரிந்திருக்கவில்லை ! ஆனால் 2014-ன் அட்டவணையை கையில் எடுக்கும் சமயம் ; ஆண்டின் ஸ்பெஷல் இதழ்களை தீர்மானிக்கும் தருணம் - நமது ஹிட்ஸ் வேகத்தை மெல்லியதொரு கணக்குப் போட்டுப் பார்த்த போது தெள்ளத் தெளிவாய்ப் புலனானது செப்டெம்பர் வாக்கில் நாம் அந்த 7 இலக்க எண்ணை எட்டி இருப்போமென்று ! ஆனால் சூப்பர்  நண்பர்களின் ஆற்றல்களைக் கணக்கில் எடுக்கவில்லை என்பதால் ஜூலையின் இறுதிகளிலேயே மில்லியனை மடக்கிப் போட்டு விட்டோமே !! ஓரிரு மணிநேரங்களுக்கு முன்பாகக் கூட நான் இராதாகிருஷ்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாய் நடந்தேறிய சேதியைப் பதிவிட தலைகாட்டிய தருணம் சுமார் 200 ஹிட்ஸ் குறைவாக நின்றது ஒரு மில்லியனுக்கு ! ஆனால் நிறைய கீபோர்டுகளின் Refresh பட்டன்கள் இன்று செம பிசியாக இருந்துள்ளதை இப்போது கவனித்த மறு கணம் - விழுந்தடித்து ஓடி வந்தேன் பதிவிட !! 

பத்து லட்சம் பார்வைகள்' என்ற உடனே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் வாசஸ்தலமாய் நமது பதிவு உருப்பெற்று விட்டது என்ற ரீதியிலான கற்பனைகளில் நாம் யாருமே திளைத்துத் திரியவில்லை என்பதால் பெரியதொரு சொற்பொழிவு ஆற்றும் இக்கட்டு எனக்கு இல்லை ! சிறியதொரு வட்டம் ; அடர்த்தியான வட்டம் ; காமிக்ஸை மூச்சாய் நேசிக்கும் ஒரு வட்டம் - என்பது மாத்திரமே நமது வெளிப்படையான அடையாளங்கள் என்பதால் - நம் கூட்டு முயற்சியின் ஒரு சந்தோஷ பலனாய் இதனைக் கொண்டாடுவோமே ! வண்டி வண்டியாய் ; பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ; பதிவு பதிவாய் நமது இதழ்களைப் பற்றி ; நாயகர்களைப் பற்றி ; காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி ; சென்சார் பற்றி ; கிராபிக் நாவல்கள் பற்றி ; புதுப் பாதைகள் பற்றி ; மறுபதிப்புகள் பற்றி ; விற்பனை யுக்திகளைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக இங்கே அலசி ஆராய்ந்துள்ளோம் தான் ! இத்தாலியில் உச்சரிக்கப்படுவதை விடவும் அதிக முறைகள் மஞ்சள் சட்டை மாவீரரைப் பற்றி இங்கு நாம் பேசி இருப்போம் ; பெல்ஜியத்தின் பிடித்தமான பிள்ளை ப்ளூபெரியைப் பற்றி அவர்களை விடவும் நாம் அதிகமாய் தெரிந்து வைத்திருப்போம் ; இங்கிலாந்து மொத்தமும் ரசித்ததை விட, அவர்களது ஸ்பைடரையும், ஆர்சியையும் ஜாஸ்தி ரசித்த தலைமுறை நாம் ! நமது ஒட்டு மொத்தக் காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ள இது போல ஓராயிரம் காரணங்கள் என்னால் சிந்திக்க முடியுமென்ற போதிலும் - இந்த வலைப்பூவின் மூலமாய் சங்கமிக்கும் நாம் ஈட்டியுள்ள precious  புதையலாய் நான் கருதுவது ஒரேயொரு விஷயத்தையே !நம்மிடையே அபிப்ராய பேதங்கள் ஏராளம் உண்டு  ; ஒரு விஷயத்தை / ஒரு வினவலை / ஒரு கோரிக்கையை நான் சரியாக அணுகிடாது போன தருணங்கள் எத்தனை எத்தனயோ உண்டு ; நண்பர்களிடையே சலனங்கள் எழுந்த நாட்களும் பல உண்டு ; பால்யங்களைத் தேடிய நமது பயணத்தின்  சில வேளைகளில் நாம் பாலகர்களாகவே உருமாறிய தினங்களும் இல்லாதில்லை ! குதூகலம் ; கொண்டாட்டம் ; சங்கடம் ; ஏளனம் ; நையாண்டி ; ரௌத்திரம் ; மௌனம் ; வெறுமை ; கட்டுக்கடங்கா சிரிப்பின் ரீங்காரம் என இங்கே வியாபித்துள்ள உணர்வுகளைப் பட்டியலிட இரு கைகளின் விரல்கள் பற்றாது ! ஆனால் அத்தனையின் இறுதியிலும் கண்ணுக்குப் புலப்படா ஒரு camaraderie சகிதம் காமிக்ஸ்  மீதான ஈர்ப்பை நாம் விடாப்பிடியாய்த் தொடர்வது தானே நிஜமான சாதனை ? ஆறு பூஜ்யங்கள் கொண்டதொரு எண்ணைக் கொண்டாடும் இத்தருணத்தில் அதனை சாத்தியமாக்கியுள்ள அந்த நேசத்துக்கும் ஒரு சல்யூட் செய்வோமே ?! 

நமது இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிய தருணத்தில் என்ன எதிர்பார்ப்பதென்று எனக்குள் எவ்விதத் தெளிவும் இருந்திருக்கவில்லை ! வண்ண இதழ்கள் தொடர்ந்து ரூ.100 விலைகளில் என்ற தீர்மானம் சரியா ? தவறா ? ; ரசனைகளின் ஏணியில் நமது தற்போதைய நிலை என்ன ? நீண்டதொரு இடைவெளியில் நமது காமிக்ஸ் நேசம் மரித்துப் போகாது தொடர்கிறதா ? முகவர்களின் சகாயம் துளியும் இல்லாத நிலையில், நேரடி விற்பனைகளை மட்டுமே நம்பி நாம் காலூன்ற சாத்தியப்படுமா ? இம்முறை சொதப்பினால் it's a point of no return தானே ?  என்றெல்லாம் கேள்விகளுக்குப் பஞ்சமே கிடையாது 2012-ன் அந்தப் பொழுதுகளில் ! நேரில் நம்மை சந்திக்க வரும் சொற்ப வாசகர்களின் குரல்களும் ; 2012 சென்னை விழாவினில் சந்தித்த நண்பர்களின் குரல்களும் மிகச் சிறியதொரு input ஆக இருந்திட - எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் காலூன்றவும், உங்களின் நாடிகளை கற்றறியவும் ஒரு அற்புதக் கருவியாய் செயலாற்றத் தொடங்கியது நமது வலைப்பதிவு ! அதற்காக உங்களை பூரணமாய்க் கரைத்துக் குடித்து விட்டேன் என்றோ ; 'இனி எல்லாம் சுகமே' என்று பாட்டை எடுத்து விட்டுக் கொண்டே லக்கி லூக்கைப் போல sunset -க்குள் சவாரி செய்து செல்கிறேன் என்றோ நான் பசப்பப் போவதில்லை !  இடர்கள் ; பொறுமையின் பரீட்சைகள் ; சங்கடமான தருணங்கள் என  பல வாழைப்பழத் தோல்களை நாம் வழியில் சந்தித்தது நிஜமே ! ஆனால் கரம் பற்றிக் கொள்ளவும், நாம் அந்தர்பல்டி அடித்திடக் கூடாதே என்ற கரிசனமும் கொண்ட நண்பர்கள் இங்கு நிறைந்திருப்பதால் கோச் வண்டி கட கட வென்று பயணித்த்துச் செல்கிறது ! Thanks ever so much all...I owe you so much !! இங்கு நான் உலவும் நேரங்களை விடப் பன்மடங்கு அதிக அவகாசம் செலவிடும் நண்பர்களுக்கும் ; ஒவ்வொரு நாளையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடும் நண்பர்களுக்கும் ; ஆழமான பல சிந்தனைகளைப் பகிர்ந்திடும் தோழர்களுக்கும், அமைதியாய் படித்து விட்டு ரசித்துச் (?!) செல்லும் நெஞ்சங்களுக்கும் ; தொலைவில் இருப்பினும் ஒவ்வொரு வரியையும் படித்து விட்டு அவ்வப்போது மின்னஞ்சல்களிலும், தொலைபேசிகளிலும் வாழ்த்துச் சொல்லும் அன்பர்களுக்கும், ; அபிப்ராய வேற்றுமைகள் இருப்பினும், நம் மீதும் , காமிக்ஸ் எனும் ரசனையின் மீதும் கொண்ட நேசத்தால் நமக்குத் துணை நிற்கும் நெஞ்சங்களுக்கும் ; நம் நாட்களை தத்தம் பாணிகளிலான நகைச்சுவைகளால் களைகட்டச் செய்யும் ஆற்றலாலர்களுக்கும், இதனை ஒரு extended family ஆகக் கருதிடும் நேச நெஞ்சங்களுக்கும் நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம் ! 

'சரி...அந்தக் கடனை கொஞ்சமாகவேனும் அடைக்கத் தான் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் இருக்கே ? - அதைப் பற்றி வாயைத் திறக்கலாமே ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எப்போதும் போல் எனக்கு டெலிபதியாகிறது ! "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல ! சரி..ஓகே.....ஆனால் இந்த மில்லியன் ஹிட்சில் கூடவா ரகசியம் ?? என்று கேட்கிறீர்களா ? நியாயம் தான் ! ஆனால் அந்த 'தேவ இரகசியத் தேடலே' நமது மில்லியன் ஹிட்ஸ் தேடலும் கூட எனும் போது இது வரை அடக்கி வாசித்தது அதன் பொருட்டே ! THE FORBIDDEN MANUSCRIPT என்ற பொருள்படும் பிரெஞ்சு அதிரடி saga தான் நமது மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் ஆக முழுவண்ணத்தில் அற்புதம் செய்யக் காத்துள்ளது ! 54 + 54 + 54 பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களில் அசுர வேகத்தில் ஓடும் இந்த ஆக்ஷன் கதையினை எனக்கு அடையாளம் காட்டியது நமது ஜூனியர் எடிட்டரே ! 'சித்திரங்கள் நமது வழக்கமான பாணியில் இல்லை ; பரவாயில்லையா ?' என்ற கேள்வியோடு அவன் சென்றாண்டு என்னிடம் வந்த போது கதையை மேலோட்டமாய் மட்டுமே நோட்டமிட்டேன் ! சித்திரங்களும் சரி ; வர்ண சேர்க்கையும் சரி ஒரு அசாத்திய லெவெலில் இருப்பதைத் தான் முதல் பார்வையிலேயே கவனிக்க முடிந்தது ! ஒவ்வொரு frame-ம் ; ஒவ்வொரு பக்கமும், ஒரு ஓவியம் போல் இருக்கும் விதமாய் வண்ணங்கள் சேர்த்திருக்கும் இந்த பாணி நமக்குப் புதிதே எனினும், இதனை நம்மால் நிச்சயமாய் ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது ! ஒரே இதழாய் - வித்தியாசமானதொரு தருணத்தில் இந்தக் கதையை வெளியிட்டே தீர வேண்டுமென சென்றாண்டே தீர்மானித்த போது எனக்கு நினைவுக்கு வந்து நின்றது நமது மில்லியன் ஹிட்ஸ் தான் ! இதோ பாருங்களேன் அதன் பக்கங்களின் சில அற்புதங்களை :   


Awesome artwork by : Paolo Grella !!
பவலோ கிரெல்லா எனும் இத்தாலிய ஓவியர் அதகளம் செய்திருக்கும் இந்த சித்திர விருந்தின் கதையோ 'THE DA VINCI CODE' பாணியிலானதொரு தேடல் ! திபெத்தில் துவங்கி ; ஐரோப்பா சென்று ; அமெரிக்காவுக்குப்   பயணித்து, இடையே காஷ்மீருக்குள்ளும் நுழைந்து செல்லும் இந்தக் கதையினை நமது offbeat தேடல்களின் வெளிப்பாடாய் பார்த்து ; 'கிராபிக் நாவல்' என்று எண்ணி நண்பர்கள் ஒதுக்கிடும் பட்சத்தில் ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தைத் தவற விடும் ஆபத்து உள்ளது !  Yes - இதுவொரு கிராபிக் நாவலே ; ஆனால் இதனை அனைத்துத் தரப்பினரும் ரசிக்க முடியுமென்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ! So - "சிப்பாயின் சுவடுகளில்" தந்த சூடே போதுமடா சாமி ! - எனப் பதுங்கி இருக்கும் கிராபிக் நாவல் "டர்ராளர்கள்" தைரியமாய் பதுங்கு தளங்களில் இருந்து வெளியே தலைகாட்டலாம் !! "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல !" - கதையிலும், சித்திரங்களிலும், வர்ணங்களிலும் ஒரு மறக்க இயலா அனுபவமாய் இருக்கப் போவது நிச்சயம் ! செப்டெம்பர் இறுதியில் வரக் காத்திருக்கும் இதழ் இது ! Please don't miss it ! 

சரி...சூப்பர் 6 ரகசியங்களில் ஒன்றை முடிச்சவிழ்த்து விட்டாச்சு.... ! எஞ்சி நிற்பதோ "தீபாவளி மலர்" !! "இரவே..இருளே..கொல்லாதே ! " என்று மட்டும் சொல்லி விட்டுப் புறப்படுகிறேனே !! ஏன் ? - எதற்கு ? என்றெல்லாம் இன்னொரு நாள் அலசுவோமே ?! 

ஈரோட்டில் சந்திப்போம் ; அங்கு வர இயலா நண்பர்களை சனிக்கிழமை காலையிலொரு பதிவில் சந்திப்போம் ! Catch you on Saturday folks !! And..thanks a million for the million !! God be with us all ! Good night !