நண்பர்களே,
வணக்கம். "இவன் ரொம்பப் பேசுவானே...!!" என்ற தயக்கத்தோடு நமது ஞாயிறுப் பதிவுகளை அணுகுவது உங்கள் வழக்கமெனில் - இவ்வாரத்துக்கொரு 'டாட்டா' காட்டிவிடுவது சாலச் சிறந்தது என்று துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே ! நிறையவே பேச / எழுத / டைப்படிக்க உள்ளேன்தான் இம்முறை ! And அவற்றுள் நிறைய விஷயங்கள் "மறு ஒளிபரப்பு"ப் போலவும் தோன்றிடலாம் தான் - but கோர்வையாய் சில நிகழ்வுகளை முன்வைக்கும் பொருட்டே இந்த "ம.ஓ".!!
சில நேரங்களில் பெரிதாய் நம் பக்கத்தினில் முயற்சிகளின்றியும் கூடப் பயணதிசை சரியாக அமைந்திடுவதுண்டு ! சமீபத்தைய சில பல நிகழ்வுகள் – பதிவுகள் – பின்னூட்டங்கள் எல்லாமே தற்செயலாய் ஒன்றன்பின் ஒன்றாய்க் கோர்வையாக அமைந்திட- சில முக்கிய 'செய் & செய்யாதேக்கள்' ஸ்பஷ்டமாய் நம் முன்நிற்கின்றன ! நிகழ்வு # 1 – ஈரோட்டுப் புத்தக விழாவும் அது சமயம் அரங்கேறிய வாசகர் சந்திப்பும் ! இதுவரை நாம் பார்த்திரா ஒரு அசாத்திய உற்சாகத்தோடு நடந்த நேர்முகச் சந்திப்பு ஏகப்பட்ட நூலான்படைகளை மூளைக்குள்ளிலிருந்து விலக்கியுள்ளது என்று சொல்வேன் ! காமிக்ஸ் வாசிப்பு ; காதல் என்பதெல்லாம் கருகிடவில்லை ; செழிப்பாய் ; ஆரோக்கியமாய் தொடர்கிறதென்பது அன்றைய தினத்தின் முதல் பாடம் ! அந்த காமிக்ஸ் காதலானது - சக வாசகர்களின் நட்போடு கைகோர்க்கும் போது ஒரு விவரிக்க இயலாப் புதுப்பரிமாணத்தை எட்டுகிறது என்பதை அன்றைய தினம் மட்டுமன்றி, தொடர்ந்த வாரங்களது பின்னூட்டங்களின் உற்சாகங்களும் பிடரியில் சாத்திச் சொல்லியதுதான் பாடம் # 2 ! அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியின் பிரவாகம் அட்டகாசமான புத்தக விமர்சனங்களாய் ஒரு கட்டத்தில் உருவெடுக்க – அவை கண்ணில்காட்டிய சூப்பர்- டூப்பர் பலன்களே நமது பாடம் # 3 ! Yes – ஆகஸ்ட் 6 முதல் இன்று வரைக்குமான நமது ஆன்லைன் ஸ்டோரின் வியாபாரம் – வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது ! ரெகுலர் வாசகர்கள் என்றில்லாத விளிம்புநிலை நண்பர்கள் இணையத்தில் பொங்கும் உற்சாகத்தினால் ஈர்க்கப்பட்டு இம்மாத இதழ்களை மாத்திரமின்றி - முந்தைய இதழ்களையும் சேர்த்தே வாங்கியுள்ளனர் என்பதே என் புத்திக்கு எட்டிய inference ! Of course - இந்த விற்பனை இரட்டிப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்தான் ; குருவி டேரா போட - பனம்பழம் ட்ராப் ஆன கதையாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் - எனது உள்ளுணர்வு சொல்வதோ - இம்மாத மேளாவின் நேரடிப் பலனே இது என்று !!
ரொம்ப காலமாகவே நான் சொல்ல நினைத்து; தயங்கி நின்று விடும் சமாச்சாரம் இது தொடர்பானதே ! பொதுவாய் ஒவ்வொரு இதழின் வருகையினைத் தொடர்ந்தும் நமது பதிவிலும், இன்னபிற சமூகவலைத்தள / வாட்சப் தகவல் பரிமாற்றங்களிலும் – பாராட்டுக்களும், குட்டுக்களும் ஒருசேர அரங்கேறுவதில் இரகசியங்கள் ஏதுமில்லை. சில தருணங்களில் பதிவாகிடும் அந்த நெகடிவ் விமர்சனங்களுக்கு நிறையவே முகாந்திரங்கள் இருப்பதுண்டு ! “கதை மொக்கை; அட்டைப்படம் சரியில்லை; மொழிபெயர்ப்பு சரியில்லை” என்று ஏதேனும் உருப்படியான காரணங்கள் இருக்கும் போது அவற்றைச் சரி செய்யும் உத்வேகத்தை எனக்குள் விதைத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன் ! வேறு சில வேளைகளிலோ - நண்பர்கள் நடத்திடும் நையாண்டி தர்பார்களின் நோக்கம் - ஜாலியான கலாய்ப்ஸ் அல்லது என்னை மண்டையில் தட்டி வைப்பதாக மாத்திரமே இருப்பதுண்டு ! அத்தகைய நிகழ்வுகள் அவர்களைப் பொறுத்தவரையிலும் ஒருத்தற்காலிக ‘புகை வெளியேற்றமாக‘ இருந்திடலாம் தான் ; ஆனால் ஒரு தொடர்விளைவாய் அவை உண்டாக்கக்கூடிய வியாபாரச் சுணக்கங்களின் அளவுகளை நாம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இன்றைக்கு லேசாய் சிந்திக்கச் செய்கிறது ! !
ஒரு உதாரணம் சொல்லுகிறேனே ! சின்னதொரு எண்ணிக்கையே நமது பிரிண்ட்ரன் எனும் போது- அச்சின் ஆரம்பகட்டத்துப் பேப்பர்களில் துல்லியம் குறைவாக இருக்கும் ! அவற்றை நாம் தூக்கிக் கடாசிவிட்டாலும் ஏதேனும் சில ஜோதியில் கலந்து, பைண்டிங்கிலும் பிரிக்கப்படாது உங்களை வந்து எட்டிடக்கூடும் ! அத்தகைய தருணங்களிலோ ; பைண்டிங்கில் பிழைகளுள்ள பிரதிகள் உங்களை சென்றடைந்திடும் சமயங்களிலோ- மறு கேள்வியின்றி மாற்றுப் புத்தகங்களை நம் செலவிலேயே அனுப்பியிருக்கிறோம். So அது போன்ற சிரமங்கள் நேரும் சமயங்களில் ஒரேயொரு பொறுமையான ஈ-மெயிலைத் தட்டி விட்டால் ஓசையின்றிப் பிரச்சனை தீர்ந்து விடும் ! மாறாக அந்தப் புத்தகத்தை போட்டோ எடுத்து, தத்தம் வாட்சப் / FB க்ரூப்களில் போட்டுக் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றும்போது அடங்கிடக்கூடியது நண்பர்களது எரிச்சலாக மாத்திரம் தானே இருக்கக் கூடும் ?! ‘எடிட்டரை சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டேன்லே !!‘ என்ற உற்சாகமும் உங்களதாகலாம் ! ஆனால் அந்தத் தற்காலிகச் சந்தோஷத்தையும், அவை ஈட்டித் தரக்கூடிய "லைக்"களையும் தாண்டி காரியார்த்தமாய் சாதித்திருக்கக் கூடியது என்னவென்று யோசிக்க அவர்கள் நேரம் எடுத்துக் கொண்டிருப்பின்- ‘பலன் பூஜ்யமே‘ என்பது புரிந்திருக்கும் ! ஸ்டேஷனுக்குள்ளேயே புகுந்து ஏட்டையாவை 'நச்'சென்று நடுமூக்கில் குத்தியதால் நீங்கள் ‘world famous’ ஆகப் போவதில்லையே - simply becos இந்த ஏட்டையா ஒரு சாதாரண சிரிப்புப் போலீஸ் மட்டும்தானே? இவரைச் சாத்தி நீங்கள் பிரசித்தி அடைவதை விட- ஒரு தவறை முறையான வழியில் சுட்டிக்காட்டி அதனைத் தொடர்ந்திடாதிருக்க உதவிய சிறு மௌனக் காரணியாக இருந்து விட்டுப் போவது – ‘காமிக்ஸ்‘ எனும் ரசனைக்கான long term உபகாரமாக இருந்திடாதா ?
‘ஆக விமர்சிக்கவே கூடாதாக்கும் ? ; நீ என்னத்தைப் போட்டாலும் பேஷ்-பேஷ் என்று பாராட்ட மட்டும்தான் செய்யணுமாக்கும் ?‘ என்ற கேள்வி உங்களுக்குள் ததும்புவது புரிகிறது ! என் நோக்கம் விமர்சனங்களில்லா இணையமல்ல ! கதைகளின் நிறை-குறைகளைத் தாராளமாய் விமர்சித்திடலாம் ! சொல்லப் போனால் - நாம் செல்வது முறையான பாதையில்தானா ? என்ற ஊர்ஜிதத்துக்கு உங்களின் விமர்சனங்கள் சர்வ நிச்சயமாய் அவசியம் ! "விடுதலையே - உன் விலை என்ன ? " ; "வானமே எங்கள் வீதி" ; "விண்ணில் ஒரு வேங்கை" போன்ற கதைகளின் சுமாரான அம்சங்களை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டியிராவிடின் அவற்றின் ரோதனை நிச்சயமாய்த் தொடர்ந்திருக்கும் ! நீங்கள் எனக்கொரு கோடி காட்டும் போதே நான் அத்தொடர்களின் எஞ்சிய கதைகளை பரணுக்கு பார்சல் பண்ணிவிட்டேன் - அவற்றுள் பல்லாயிரங்கள் முடங்கிக் கிடந்தாலும் !! So "விமர்சிக்க வேண்டாமே" - என்பதல்ல எனது கோரிக்கை !
ஆரோக்கியமான விமர்சனங்கள் ; ரசிக்கக் கூடிய நையாண்டி கொண்ட வரிகள் ; ஒப்பீடுகள் என்றைக்குமே படிக்கும் எவரையும் புன்னகைக்கச் செய்யும்தானே ? மாறாக - என்மீதான கோபங்களை இறக்கி வைக்குமொரு முகாந்திரமாய் அந்த அபிப்பிராயப் பகிரல் உருமாறும் போது - விமர்சனங்களின் நோக்கமே திசைமாறிடுகிறது என்பது மட்டும்தான் எனது ஆதங்கம் ! பாராட்டுக்களெனில் அவை கதைகளுக்கும், தயாரிப்புப் பணிகளுக்கும் உரியவை என்பதில் எனக்குள் எவ்விதக் குழப்பமுமில்லை ! அதே மூச்சில் - மண்டையில் குட்டெனில் அது எனது கதைத் தேர்வுக்கும், தயாரிப்பின் குறைகளுக்குமே - இதனில் தனிப்பட்ட எனது பாக்களிப்புகள் ஏதும் கிடையாது என்பதிலும் நான் தெளிவாக உள்ளேன் ! So – “இந்த இதழைப் பாராட்டித் தொலைத்தால் இந்தச் சொட்டைத்தலையனை ஏற்றி விட்டது போலல்லவா ஆகிவிடுமே ?” என்ற தயக்கங்களின் பொருட்டு நீங்கள் மௌனம் சாதிக்கத் தேவைகளே கிடையாது !! அதே போல "வசமாய் முதுகில் நெய் தோசைகள் வார்த்துவிட்டோம் - தொல்லை தீர்ந்தது !" என்ற நிம்மதிப் பெருமூச்சுக்கும் வழியிராது - ஏனெனில் அடுத்த முப்பதாவது நாளே புதுசாய் எதையேனும் ஏந்திக் கொண்டு உங்கள் முகங்களுக்குள் நான் நிற்கத்தான் போகிறேன் அல்லவா ?!
படைப்பாளிகளுக்கும் - உங்களுக்குமிடையிலான போஸ்ட்மேன் மட்டுமே நான் என்பதில் துளியும் குழப்பங்களில்லை என்னுள் ! So ஒவ்வொரு படைப்பையும் அவற்றின் நிறை-குறைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்திட்டால்- நெட்டைக்கொக்காய் இடையில் நான் நிற்பதை சுலபமாக மறந்திட முடியும் ! நிறைகளை நிறைவாய்ப் பாராட்டினீர்களெனில் – நீங்கள் உற்பத்தி செய்து தரும் உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறையப் புது வாசகர்களை வசீகரித்திட உதவுமே ! After all – இந்த 4 ஆண்டுப் பயணத்தில் சந்தோஷப்படும் சமாச்சாரங்கள் நிச்சயமாய் உண்டுதானே ?
- லார்கோ வின்ச் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- வேய்ன் ஷெல்டன் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- கமான்சே அறிமுகம்
- மின்னும் மரணம் தொகுப்பு
- LMS
- க்ரீன் மேனர்
-தலையில்லா போராளி
- லயன் 250
- XIII Spin Offs
- தோர்கல்
- பௌன்சர்
- கார்ட்டூன் தடம்
என்று சுவாரஸ்ய அனுபவங்களுக்குப் பஞ்சமிலாப் பயணமல்லவா இதுவரையிலாவது ? ‘பேப்பர் சரியில்லை‘; ‘அச்சு சரியில்லை‘ என் பொத்தாம் பொதுவாய் இடப்படும் புகார்களையும் கூடக் களைய தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்து வருகிறோம். இந்தாண்டின் அச்சுத்தரம் நிச்சயமாய் குறைசொல்லும் விதங்களில்லை என்பது உங்குளுக்கும் தெரியும் – எனக்கும் தெரியும் ! அதே போல இந்தாண்டில் - "மரண மொக்கை" என்ற ரேஞ்சில் அமைந்துபோன இதழாய் எதுவும் இருந்ததுபோலவும் எனக்கு நினைவில்லை ! ஆக முந்தைய நாட்களில் செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்க நமக்குத் தயக்கங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமே ? 'தொடர்ச்சியாய்த் தலையில் தட்டிக் கொண்டேயிராவிடின் மெத்தனம் குடிபுகுந்து விடுமோ ?' என்ற முன்ஜாக்கிரதைகளுக்கு அவசியமில்லை என்ற நம்பிக்கையில் சற்றே ரிலாக்ஸ் செய்திடலாமன்றோ ?
உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுமே - காமிக்ஸ்களுக்கான அசாத்தியமான தூதர்கள் என்பதை ஈரோடு நிரூபித்து விட்டது ! உங்களிடம் உறையும் அந்த ஆற்றலை முன்வைத்து, தொடரும் காலங்களில் இந்தப் பயண வேகத்தை இன்னுமொரு உச்சத்துக்கு எடுத்துச் சென்றால் ‘விற்பனைச் சுணக்கம்‘ என்ற பேய் நம்மைப் பீடிக்காது! அல்லவா ? உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கைதனில் எங்களது சுயநலம் நிச்சயமாய்க் கலந்துள்ளது தான் ! ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் சகாயமும்தானே இந்த வண்டியின் பெட்ரோலே - ஆரம்ப நாள் முதலாய் ? FB -ல் எழுதுங்கள் ; உங்களது காமிக்ஸ் வலைப்பதிவில் எழுதுங்கள் ; ஏதோவொரு ஆக்கபூர்வமான ரூபத்தில் காமிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய ஜுவாலை உயிர்ப்போடு தொடரட்டுமே ?
ஈரோட்டில் நாங்கள் கற்ற பாடங்களின் அத்தியாயம் 2 பற்றி இனி ! For that matter – கோவையிலும் அதே பாடத்தின் சாயல்களே என்றும் சொல்லலாம் ! இந்தாண்டின் ஜனவரியில் சென்னையில் மாமூலான புத்தக விழா நடந்திடாது போய் - இறுதி நிமிடத்தில் மாற்றாய் இன்னொரு விழா நடந்தது ; அப்புறமாய் ஜுனில் மறுபடியும் சென்னையில் ; ஆகஸ்ட் துவக்கத்தில் ஈரோட்டில் & இறுதியில கோவையில் புத்தகவிழாக்கள் என்று இந்தாண்டின் நமது விற்பனை pattern ரொம்பவே இப்படியும்-அப்படியுமானது ! முறையாகப் பார்த்தால் 50 title-கள் கைவசமுள்ள சமயம் கிட்டும் விற்பனைக்கும், 130+ title-கள் கைவசமுள்ள நேரங்களில் சாத்தியமாகிடக் கூடிய விற்பனைக்கும் நிச்சயமாய் ஒரு கணிசமான வேறுபாடு இருந்திட வேண்டுமல்லவா ? அத்தகைய கனவே எங்களிடமும் இருந்தது இந்தாண்டு ! நிறைய டெக்ஸ் கதைகள் ; சில பல ஸ்பெஷல் இதழ்கள் ; ஏகமாய் கார்ட்டூன்ஸ் ; கணிசமாய் மறுபதிப்புகள் என all round ரசனைகளுக்கு இதழ்கள் நம்மிடம் உள்ளன எனும்போது- விற்பனை நிச்சயமாய் முந்தைய நம்பர்களைத் தூக்கிச் சாப்பிடும் விதமாய் இருக்குமென்று எதிர்பார்த்தோம் ! ஆனால் அவை வெறும் கனவுகளாகவே இருந்து விட்டன ! ஒரு casual walk-in வாசகருக்கு உள்ளது ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் மாத்திரமே போலும் ; So நம்மிடம் எத்தனை ரகங்கள் குவிந்திருப்பினும் அவர் செலவிடப் போவது அந்த முன்தீர்மானிக்கப்பட்ட தொகையினை மட்டுமே தான் ! 10 டெக்ஸ் வில்லர் இதழ்கள் உள்ளனவா ? அவற்றுள் முதல் பார்வைக்கு அவரைக் கவரும் இதழ் எதுவோ- அதுவே அவரது அந்நேரத்தையக் கொள்முதலாக இருந்திடுகிறது ! ஆக நமது கையிருப்பு ரகங்களின் எண்ணிக்கை உயர்வு - விற்பனை எண்ணிக்கையின் உயர்வாக உருமாற்றம் காண்பதில்லை என்பதே இந்த ஆண்டின் bookfair அனுபவ பாடம் ! ‘அட... இது தான் எனக்குத் தெரியுமே! இதை நான் முன்கூட்டியே யூகித்திருந்தேனே!‘ என்று நீங்கள் தடாலடி அடித்தால் நீங்களொரு அசாத்திய தீர்க்கதரிசியே ! ஆனால் ஒரு 20% விற்பனை உயர்வு கூட இராது, வழக்கமான அதே விற்பனைகள் மட்டும் தான் சாத்தியமாகும் என்று யூகம் நிச்சயமாய் எங்களிடம் இருந்திருக்கவில்லை ! அந்த மட்டிற்கு 2017-ன் அட்டவணைத் திட்டமிடலின் இறுதிக் கட்டத்திலுள்ள வேளையிலாவது இந்த விடியல் புலர்ந்ததே என்ற சந்தோஷம் எனக்கு ! ஆண்டின் “புத்தக விழா விற்பனைத் தொகை” என்று இனியொரு realistic பட்ஜெட்டைப் போட்டு விட்டு எனது திட்டமிடல்களை நான் முன்கொண்டு சென்றால் - அடுத்தாண்டிலாவது கையிருப்புக் குவியலின் கஷ்டங்கள் மட்டுப்படுமல்லவா?
கையிருப்புகள் பற்றிய topic தான் அத்தியாயம் # 3 – சமீபத்தையத் தற்செயலான நிகழ்வுகளில் ! நண்பர் காமிக் லவர் சமீபமாய் முன்வைத்திருந்த ஸ்டாக் நிலவரப் பட்டியல் துல்லியமானதல்ல ; சில இதழ்களில் 300 / 400 என்ற ரீதியிலேயே ஸ்டாக் உள்ளது & பலவற்றில் கூடுதலாக ! So மொத்த எண்ணம் அத்தனை மெகா சைஸல்ல என்றாலும்- நிச்சயமாய் ஒரு கணிசமான / மிகக் கணிசமான ஸ்டாக் நம்மிடமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ! மொத்த மார்கெட்டில் வாங்கும் போது ஒரு கிலோ மாம்பழம் ரூ.225 ; அதே நேரம் 3 கிலோவாக வாங்கினால் கிலோ ரூ.150 என்று விலைகள் அமைவதுண்டு தானே ? நமது இதழ்களின் pricing–ல் உள்ள தத்துவமும் (!!!) அதுவே ! முறையான தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்தால் ஸ்டாக் சேராது ; ஆனால் இதழ்களின் விலை உயரத்தில் நிற்கும் ! அந்த விலையை எட்டும் தூரத்திற்கும் கொணர வேண்டுமெனில் உற்பத்தி எண்ணிக்கையைக் கூடுதலாக்கி விட்டு - மிஞ்சிடும் கையிருப்பை ஓராண்டுக்குள் விற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கை கொண்டாக வேண்டும் ! நாம் செய்து வருவது option # 2 தான் ! இந்தாண்டின் புத்தக விழா விற்பனைகள் நாம் எதிர்பார்த்தபடிக்குக் கூடியிருப்பின் இதே பாணியைக் கண தயக்கமுமின்றித் தொடர்ந்திடுவோம் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல எனும் போது - பிரிண்ட் ரன்னைக் குறைப்பது எனது தலை காக்கத் தலையாயப் பணியாகிறது ! அதற்காக இனிமேல் விலை ரூ.100 ; ரூ. 90 என்றிருக்கும் என்ற அச்சம் தேவையில்லை. தொடரும் 2017-ல் ரூ.75/- என்ற விலையில் – குறைவான பிரிண்ட்ரன்னில் தொடரவுள்ளோம் ! இது ஸ்டாக் சேரவிடாது தவிர்க்குமே தவிர - சத்தியமாய் தம்புடி இலாபம் ஈட்ட வழிதராது என்பது நிதரிசனம் ! (விலை கூடுதல் ; இதே வேலையை நான் செய்தால் சஸ்தாவாக வழங்கிடுவேன் ! என்று ஏற்கனவே வாட்சப்களில் முழங்கிடும் நண்பர்கள் மன்னிப்பார்களாக ! ஆனால் எனது சீட்டில் ஒரு மாதம் அமர்ந்து விழிபிதுங்கச் செய்யும் செலவுகளை நிர்வாகம் செய்து பார்த்தால் வீர முழக்கங்கள் mute mode-க்குப் போய்விடும் சாத்தியங்கள் ஏகம் !) ஒட்டுமொத்தமாய் விலையை ஏற்றுகிறேன் என்று நமது வாசக வட்டத்தை இன்னமும் குறுகலாக்கிடுவதை விடவும்- இப்போதைக்கு லாபம் இல்லை- நஷ்டமுமில்லை என்ற நிலை தொடர்ந்தால் போதுமென்று தீர்மானித்துள்ளோம் ! இது நிச்சயமொரு தற்காலிகத் தீர்வே ; எப்பாடுபட்டேனும் 2017-ல் நமது விற்பனையினை உயர்த்த வழி தேடியாகவேண்டும் என்பது புரிகிறது ! So இங்கே உங்களது புரிதலும், கரிசனமும் எங்களுக்குக் கிட்டின் - நம்பிக்கையோடு பணியாற்றுவோம் ! இங்கே ஒரு கொசுறுச் சேதி ! இதுவரையிலான சந்தா ஆண்டுகளில் நடப்பாண்டே THE BEST என்று சொல்லலாம் - சந்தாக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையினில் ! ஜனவரி - பிப்ரவரி என சோர்வாகவே சந்தாச் சேர்க்கை நடந்தது போல் தோற்றம் தந்தாலும் - இறுதி நம்பரானது இதுவரைக்கும் நாம் பார்த்துள்ளதில் டாப் !! 2017-ன் சந்தாவினில் இன்னமுமொரு சிறு அதிகரிப்பாவது நிகழும் பட்சத்தில் - துவக்கமே டாப் கியரில் இருந்திடும் ! Fingers seriously crossed !!
தவிர, ஒரு எதிர்பாரா திக்கிலிருந்து கிட்டியுள்ளதொரு சன்னமான- ஆனால் அசாத்தியமான ஊக்குவிப்பு நமக்குப் பெரும் பலம் தந்துள்ளது - மனதளவிலாவது ! அது என்னவென்பதை உரிய வேளையில் தெரிவிக்கிறேன் ! ஆக 2017-ன் நமது திட்டமிடலின் ஒரு மேலோட்டமான, பூர்வாங்க அறிவிப்பு இதுவே ! ‘இது தேறாது... இதை அப்படிச் செய்திருக்க வேண்டும் ; விலை கூட்டினால் அடுத்த தலைமுறையை எட்டாது ; எதிர்கால வாசகர்கள் மீது அக்கறை அவசியம்!‘ இத்யாதி... இத்யாதி என்ற விமர்சனங்களை இதற்குப் பின்தொடர்வாக அமைத்திடாது நண்பர்கள் எனக்குப் பணியாற்ற சுதந்திரம் நல்கினால் நிச்சயமாய் அழுத்தங்களின்றிப் பணியாற்றுவேன் ! தொடரும் தலைமுறை மீதும், காமிக்ஸ் எனும் ரசனை தொடர வேண்டியதன் அவசியம் மீதும் மிகுந்த அக்கறை நம்மிடமுள்ளது. ஆனால் ‘சுவர் இருந்தால் மட்டுமே சித்திரங்கள் சாத்தியம்‘ என்பதையும் ; இந்தக் கிழட்டுச் சுவரின் வலிமை என்னவென்பது பற்றியும் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் சில கட்டாயத் தீர்மானங்கள் நிறைவேற்றும் அவசியங்கள் எழுகின்றன !
‘பிள்ளைகளுக்கு இது எட்டாது‘; ‘நிறைய வாசகர்களைப் போய்ச் சேர்ந்திட நடவடிக்கை எடுக்கத் தெரியாதா ?‘என்று உங்களுக்குத் தோன்றலாம் தான் ! கண்ணில்படும் வினாக்களுக்கு என்னால் இயன்ற பதில்களைச் சொல்லிவிட்டு - நானுமே நகர்ந்திடுவேன் தான் ; ஆனால் ஆங்காங்கே பதிவாகிக் கிடக்கும் உங்கள் சிந்தனைகள் - புது வாசகர்களின் மனதுகளில் ஏற்படுத்தக் கூடிய சலனங்கள் long term ! குட்டிக் கரணமே அடித்தாலும் கூட ; உலகின் தலையாய காமிக்ஸ் கதைகளைக் கொணர்ந்தால் கூட- மேலோட்டமான பராக்குப் பார்வைகளைத் தாண்டிய சுவாரஸ்யத்தை பொதுமக்களிடையே உண்டாக்க முடிவதில்லை என்பதைக் கடந்த சில நாட்களில் கண்கூடாய்ப் பார்த்து வருகிறோம் !!
கோவைப் புத்தகவிழா நடைபெற்று வரும் கொடிசியா அரங்கின் இன்னொரு பாகத்தில் தினமலர் நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி கடந்த வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. So அங்கே வருகை புரியும் மக்கள் குடும்பங்களோடு புத்தகவிழா அரங்கிற்குள்ளும் வலம் வருவதால் வியாழன் முதலே புத்தக அரங்கு நிரம்பி வழிகிறது. நமது ஸ்டாலிலும் சொல்லி மாளாக் கூட்டம்! ஆனால் இரவு 9 மணிக்கு அன்றன்றைய விற்பனைத் தொகைகளைக் கேட்கும் போது காதை ஒன்றுக்கு இரு முறைகள் குத்திவிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டி வருகிறது - காதில் விழுந்தது சரியான தொகை தானா ? என்ற சந்தேகத்தில் ! ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை தயக்கத்தோடு அணுகப்பட வேண்டியதொரு ஜீவனாய் மட்டுமே இன்னமும், பெரும்பாலானோர்க்குத் தொடர்வதால் - கண்முன்னே ஒரு வண்டிக் காமிக்ஸ் புத்தகங்கள் கலர் கலராய்த் தட்டுப்படும் போது கூட அவற்றை மெதுமெதுவாய் முயற்சிக்க மட்டுமே மக்கள் முனைப்புக் காட்டுகிறார்கள் ! கடந்த 4 நாட்களில் கோவையில் நமது ஸ்டாலுக்கு வந்து சென்ற மக்கள் எண்ணிக்கை ஒரு மெகா பட்ஜெட்டிலான விளம்பர campaign-ல் கிடைத்திருக்கக் கூடிய கவனத்தை விடவும் ஜாஸ்தியாக ஈர்த்துள்ளது ! அற்புதமானதொரு விளம்பரமாய் அது அமைந்துள்ள போதிலும், அந்த ஜனத்திரளானது 10% விற்பனைகளாகக் கூட உருமாற்றம் காணவில்லை ! அதே போல - FB -ல் நமது விளம்பரப் போஸ்ட்களை பூஸ்ட் செய்திட ஓசையின்றி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட்டு வருகிறோம் -ஒரு வருஷமாய் ! இதன் பலனாய் நமது பக்கத்துக்கு கிட்டியுள்ள லைக்ஸ் ஓராண்டினில் இருமடங்காகியுள்ளது ! ஆனால் அவை விற்பனையாக உருமாற்றம் கண்டபாடைக் காணோம் ! ஆன்லைன் விற்பனையில் இந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும் விதமாய் எந்தவொரு உயர்வும் இருந்திருக்கவில்லை - "தலையில்லாப் போராளி" யின் ஏப்ரலில், இந்த ஆகஸ்டில் நீங்கலாக !
So ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை ஒரு வெகுஜனத் தேர்வாகிட நிறையவே நேரமும் ; முயற்சியும் தேவைப்படும் போலும்! சிறு தயக்கத்தோடு மேலோட்டமாய் மாயாவி, லக்கி லூக் என்று வாங்கிச் சென்றுள்ள அனைவருமே நமது ஆன்லைன் ஸ்டோர்கள் பற்றியும்; சந்தாக்கள் பற்றியும் கேட்டுத் தெரிந்து சென்றுள்ளனர் ! ஒரே ராத்திரியில் நிகழாது போயினும்- சிறுகச் சிறுகப் புது இரத்தம் உட்புகுவதற்கு கதவுகள் மெல்லத் திறந்து வருகின்றன என்பது தான் கோவையில் பார்க்க முடிந்துள்ள silver lining. இவர்களுள் பெரும்பாலானோர் இன்றைய தலைமுறையினர் என்பதால், இயல்பான அடுத்தகட்ட நிகழ்வாக FB-ல் ; இணையத்தில் ; பதிவுகளில் என காமிக்ஸ் தொடர்பான தேடல்களுக்குள் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கலாம் ! அவர்களை வரவேற்பது காமிக்ஸ் சார்ந்த அழகான விமர்சனங்கள் ; ஆரோக்கியமான விவாதங்கள் என்றிருக்கக் கூடிய பட்சத்தில் நிச்சமாய் ஆயுட்கால காமிக்ஸ் ஆர்வலர்களாய் அவர்கள் உருமாற்றம் காணும் சாத்தியங்கள் பிரகாசம் ! அதற்குப் பதிலாய் நையாண்டிகள் ; சிலபல ரௌத்திரங்களின் பலனாய் முன்வைக்கப்படும் சீற்றங்கள் ; நிறைகள் நூறு கண்ணில் பட்டாலும் - குறைகளை மட்டுமே பறைசாற்றுவேன் என்ற வைராக்கியங்கள் ; க்ரே மார்கெட் கூத்துகள் ; நமக்கிடையிலான ஈகோ மோதல்கள் என்ற சமாச்சாரங்கள் தாண்டவமாடின் - அதன் பலன் எவ்விதம் இருக்குமென்பதை யூகிக்கச் சிரமமிராது தானே ? நூறு பேரது கருத்துக்களும் ரசனைகளும் எல்லாத் தருணங்களிலும் ஒரே சாலையில் பயணிக்க வேண்டியது கட்டாயமல்ல ; ஆனால் அதன் பொருட்டு உருவாகும் கருத்து வேறுபாடுகளை ஒரு தொடர்கதையாகக் கொண்டு செல்லாது - நமது focus காமிக்ஸ் ரசனைகள் மீது மட்டுமே என்ற உறுதியோடு தொடர்ந்திட்டால் இங்கே உதயமாகும் வெளிச்சமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமது பயணத்தை புல்லட் ரயில் வேகத்துக்குக் கொண்டு சென்றிடாதா?
4½ ஆண்டுகளுக்கு முன்பாய் நான் இந்தப் பதிவுகள் படலத்தைத் தொடங்கிய போது இரு விஷயங்களை எனக்குள் இருத்திக் கொண்டேன் ! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் (நமது) காமிக்ஸ் சார்ந்த விஷயங்களைத் தவிர்த்து வேறு சமாச்சாரங்கள் எதன் மீதிலும் இங்கே மையல் காட்டிட மாட்டேனென்பது விஷயம் # 1. அதே போல எந்தவொரு சூழலிலும் ‘கருத்து கந்தசாமியாக‘ மாறி அட்வைஸ் மழை பொழியும் அபத்தங்களைச் செய்திடக் கூடாதென்பது தீர்மானம் # 2 ஆக இருந்தது ! முதன் முறையாக ‘அட்வைஸ்‘ ஜாடையில் இந்தப் பதிவு அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றினால் - மன்னியுங்கள் நண்பர்களே, எனது நோக்கம் அதுவல்ல ! எப்போதும் போலவே உங்கள் தோள்களில் கைபோடும் உரிமையை எனதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தோடு என் மனதில் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே நினைத்திருக்கிறேன் ! திறந்த மனதோடு இதனைப் படித்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களுக்குள் இறுக்கங்கள் ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பிராது ; அதே நேரம் என் மீதான ஏதோவொரு எரிச்சலைப் பின்புலத்தில் தக்க வைத்துக் கொண்டே வாசித்திருப்பின் – ‘இவனென்ன பெரிய புண்ணாக்கா? காமிக்ஸைக் காப்பாற்ற வந்த தேவமகனா - எனக்கு யோசனை சொல்ல??!‘ என்ற உஷ்ணம் உற்பத்தியாகலாம் ! இரண்டாம் ரகத்தவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பதிவின் துவக்க வரிகளை மட்டுமே மறுபடியும் என்னால் நினைவுகூர்ந்திடச் சொல்லிட முடியும் - with my apologies of course !
காமிக்ஸ் வட்டமென்பது சிறுகச் சிறுக நாமாய்ப் பராமரித்து; நாமாய் நீரூற்றி ; களையெடுத்து ; உரமிட்டு வளர்த்திட வேண்டியதொரு செடி - நமது மார்க்கெட்டிலாவது ! அந்தச் செடிக்கு நம்மாலான பணிவிடைகளைச் செய்வோமே, ஏதோவொரு ரூபத்தில் ? என்பது மட்டுமே எனது கோரிக்கை ! இந்தச் சின்ன உலகில் நாம் வளர- தெரிந்தோ, தெரியாமலோ நாமே நமக்குத் தடை போட்டுக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?
For sure - நமக்கு நாமே !!
இங்கே நான் எழுதியுள்ள சமாச்சாரங்களில் கலாய்ப்சுக்கு ஏகமாய் மேட்டர் கிட்டிடலாம் தான் ; ஆனால் அதனில் கிடைக்கக்கூடிய அப்போதைய நகைப்புகளைத் தாண்டியும், நையாண்டி செய்த திருப்திகளைத் தாண்டியும் ஆத்மார்த்தமாய் ஏதேனும் செய்யும் அவா உங்களுக்கு எழுந்திட வாய்ப்புகள் எக்கச்சக்கம் என்ற நம்பிக்கையிலேயே நிறைய எழுதியுள்ளேன் ! அந்த நம்பிக்கை மெய்யானால் - இனியெல்லாம் சுகமே ! பொய்யானால் - ஞாயிறு டிபனுக்கு மணக்க மணக்க தோசைகள் வார்க்கவொரு முதுகு தயார் - வழக்கம் போலவே ! மனதில் பட்டதை எழுதிட முனைந்துள்ளேன் ! வழியில் சிலபல கால்சுட்டுவிரல்களின்மீது நான் இடறியிருக்கக் கூடும் ; நாளைக்கு காலையில் எழுந்து இதே பதிவை இன்னொருமுறை வாசித்தால் - இன்னும் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ ? என்ற எண்ணம் தோன்றவும் கூடும் தான் ! ஆனால் மனதில்பட்டதை உங்களிடம் நகாசுகளின்றி இறக்கி வைத்த சின்னதொரு திருப்தி இப்போதைக்கு மிஞ்சுகிறது ! சொன்ன சமாச்சாரங்களிலோ ; சொன்ன விதத்திலோ குறைபாடுகள் இருப்பின் - முன்கூட்டிய கைகூப்பல் படங்கள் சிலபல ! புலரவுள்ள பொழுதும், காத்துள்ள நாட்களும் 'ஒரு தோசைத் திருவிழாவாக' இல்லாது போக புனித மனிடோ அருள்புரிவாராக !!
நீ-ண்-ட-தொ-ரு பதிவுக்கு இத்தோடு மங்களம் பாடி விட்டு ஒற்றை ரன்னில் (கிரிக்கெட்டில்) தோற்ற சோகத்தை விழுங்கச் சிரமப்பட்டுக் கொண்டே தூங்கப் செல்கிறேன் ! ஜாலியான சிலபல புள்ளி விபரங்ககள் கைவசமுள்ளன - தொடரவிருக்கும் அடுத்த சில நாட்களின் உப பதிவினில் எழுதிட ! Adios until then !
P.S : இம்மாத இதழ்கள் வரும் 31-ஆம் தேதி இங்கிருந்து கிளம்பிடும் - முதல் தேதியன்று உங்களுக்குச் சலாம் சொல்லிட !
And சந்தாவின் இரண்டாம் (இறுதியும்) தவணை செலுத்தியிருக்கா நண்பர்களுக்கு மீண்டுமொரு அவசர நினைவூட்டல் !! ப்ளீஸ் - இம்மாத இதழ்களை சுணக்கமின்றிப் பெற்றுக் கொள்ள உங்களின் பாக்கித் தொகைகளை உடனே அனுப்பிடலாமே ?