நண்பர்களே,
இன்னுமொரு ஞாயிறு வணக்கம் ! கண்மூடித் திறக்கும் முன்பாக 7 நாட்கள் கடந்து சென்ற தடமே தெரியவில்லை ! சூரிய பகவானின் உஷ்ணம் ஒரு பக்கமிருக்க, இதழின் இறுதிக்கட்டப் பணிகள் தந்த பரபரப்பு மறு பக்கமிருக்க, "சூப்பர் 6-ன்" அறிவிப்புகளைச் சரியாய்த் திட்டமிட வேண்டுமே என்ற தவிப்பு இன்னொரு பக்கமிருக்க - இவ்வாரக் கேச இழப்பு எக்கச்சக்கம் ! அதன் மத்தியினில் லேசாய் இளைப்பாற முடிந்ததெனில் - அது அழகாய் வந்துள்ள இம்மாத லக்கியாரின் புண்ணியமே ! "எதிர் வீட்டில் எதிரி"யும் பணி முடியும் தருணத்தை நெருங்கி விட்டதால் - அதன் பக்கங்களைப் புரட்டுவதே ஒரு ஜாலியான அனுபவமாய் இருந்தது ! என்ன தான் டெக்சும், டைகரும், ஷெல்டனும், லார்கோவும் அனல் பறக்க சாகசம் செய்தாலும் - கார்டூன்களின் இதமே ஒரு தனி ரகம் தான் என்று எனக்குத் தோன்றியது ! அதிலும், இந்த இதழ் கூடுதல் ரம்யத்தை எனக்குக் கொடுத்ததற்கொரு காரணம் இல்லாதில்லை ! "எதிர் வீட்டில் எதிரிகள் !" இதழின் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துள்ளது ஜூனியர் எடிட்டர் விக்ரம் ! Of course அவனது primary மொழியாக்கத்தின் மீது நான் நிறைய திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்துள்ளேன் என்ற போதிலும் - ஒரு முழு நீளக் கதையின் பணியை அவன் ஏற்றுச் செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் - ஆந்தையாருக்குள் வசிக்கும் தந்தையிடம் லேசாகவொரு பெருமிதம் ! தொடரும் மாதங்களில் நமது உதவி ஆசிரியர் பிரகாஷின் மொழிபெயர்ப்போடும் நமது இதழொன்று வரவிருக்கிறது என்பதால் - கருணையானந்தம் அவர்களும், நானும் மாத்திரமே மாறி, மாறி எழுதுவதனால் நேரக் கூடியவொரு மெல்லிய அயர்ச்சி தவிர்க்கப்படலாம் என்பதே இந்தப் புது முயற்சிகளின் பின்னணிச் சிந்தனை ! Anyways - எழுதுவது யாராக இருப்பினும், அதன் மீது இறுதியாய் நான் கை வைக்காது இருக்கப் போவதில்லை என்பதால் - உங்களுக்குக் பழக்கப்பட்டுள்ள அந்த ஸ்டைல் பெரிதாய் மாறித் தெரியாது தான் ! Is that a good thing ? Or a bad thing ? என்ற மண்டைச்சொரிதலில் உங்களை விட்டு விட்டு - இம்மாத இதழின் அட்டைப்படத்தினை உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன் :
மீண்டுமொரு படுக்கை வசத்திலான லக்கி ராப்பர் ! |
முன்னட்டை மாத்திரம் - in a closeup ! |
இந்த இதழுக்கான ஒரிஜினல் அட்டைப்படத்தில் லக்கிக்கு இடமில்லை என்பது மட்டுமல்லாது - அதனை ஏகப்பட்ட தடவைகள் விளம்பரங்களுக்கும் நாம் பயன்படுத்தியுள்ளதால் அதனை முன்னட்டையாய் பயன்படுத்த மனசு ஒப்பவில்லை ! நம் ஆர்டிஸ்டும் ஒரு கார்டூனை வரைந்து ஏக காலமாகி விட்டது என்பதால் அவரிடம் இந்த டிசைனை ஒப்படைத்தேன் ! நமது இதழ்களில் படுக்கைவச ராப்பரைப் பார்த்தே யுகங்களாகி விட்டதே என்பதால் அதனையும் ஏன் விட்டு வைப்பானேன் என அதற்கேற்றார் போல ஒரு படத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன் ! இதோ - மாலையப்பனின் ஓவியத்தோடு பொன்னனின் பின்னணிச் சேர்க்கையும் இணைந்த முன்னட்டை ! Back கவர் ஒரிஜினலே என்பதால் அதனில் படைப்பாளிகளின் முகங்களை நுழைப்பதைத் தவிர்த்துப் பெரிதால் நமக்கு வேலை இருக்கவில்லை ! வழக்கம் போலவே இங்கு தெரிவதை விட - ராப்பரில் இன்னும் அழுத்தமாய் வர்ணங்கள் அச்சாகியுள்ளன ! So - இம்மாதது 2 இதழ்களும் கிட்டத்தட்ட ஒரே color combination தான் ! இதோ உட்பக்கங்களில் இருந்து ஒரு preview -ம் உங்கள் பார்வைக்கு !
இந்தக் கதை ஒரிஜினலாய் உருவானது 1962-ல் ! பெல்ஜியக் காமிக்ஸ் படைப்பாளிகளுள் 2 அசாத்திய ஜாம்பவான்களான Goscinny & Morris இணைந்து பணியாற்றிய லக்கி லூக் கதைகள் அனைத்துமே சூப்பர் ஹிட் ரகங்கள் ! அந்தப் பட்டியலில் இக்கதையும் ஒன்று என்பதால் - இது வரை இதனை ஆங்கிலத்திலோ, வேற்று மொழிகளிலோ படித்திருக்காத நண்பர்களுக்கு ஒரு செம விருந்து காத்துள்ளது என்றே சொல்லுவேன் ! கதை தொடர்பான வேலைகளை பூர்த்தி செய்வதில் அதிக நேரம் பிடிக்கவில்லை ; ஆனால் இந்தாண்டின் highlight ஆன லயனின் 30-வது ஆண்டுமலரின் அறிவிப்பு ; அதன் கதைகள் பற்றிய விளம்பரங்கள் ; வழக்கம் போல் எனது ஹாட்லைன்கள் + சூப்பர் 6-ன் அறிவிப்பு என சகலத்தையும் இந்த இதழுக்குள் அடக்குவதற்குள் நாக்குத் தொங்கி விட்டது ! கடைசி நிமிடம் வரை 'இதைப் போடு - அதைக் காலி பண்ணு ' என்று நமது DTP பெண்மணியும், மைதீனையும் நான் குடலை உருவாத குறை தான் ! Anyways - ஒரு landmark இதழின் அறிவிப்பு சிறப்பாக அமைய வேண்டுமே என்ற ஆர்வம் அடங்கியபாடில்லை எனக்குள் !
இவ்வாரம் புதன்கிழமை (April 2nd) புதிய இதழ்கள் இரண்டும் இங்கிருந்து despatch ஆகிடும் - மறு நாளில் உங்களை வந்து சேரும் விதமாய் ! இதழ்களைப் பார்க்கும் வரையாவது அந்த அறிவிப்புகளை இங்கே போட்டு உடைக்க வேண்டாமே என்பதால் பெவிகால் பெரியசாமி இப்போதைக்கு ஆஜர் !
சென்ற பதிவினில் KBT - சீசன் 2014 பற்றியும், மொழிபெயர்ப்புப் போட்டியினில் வெற்றி பெரும் நண்பருக்கு லயனின் ஆண்டுமலரில் பணியாற்றவொரு வாய்ப்பும் தர எண்ணுவதை பற்றி நான் எழுதி இருந்தேன் அல்லவா ? அதற்க்குக் கண்டனம் தெரிவித்து ஏராளமாய் மின்னஞ்சல்கள் ! 'ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருக்கும் விஷயத்தில் ஏன் விஷப் பரீட்சை ?' என்ற ரேஞ்சில் ஆரம்பித்து - ' வாசகர்களுக்குளே தேவையற்ற மன வருத்தங்கள் ; வீண் மனஸ்தாபங்கள் விதைய வழி வகுத்து விடும் முயற்சி இது !' என்ற ரீதியிலும் அபிப்ராயங்கள் !! எவ்வளவு தான் நான் எனது சிந்திக்கும் குல்லாவைப் போட்டுக் கொண்டு செயல்பட்டாலும் - ஒவ்வொன்றையும் பல கோணங்களில் நோக்கும் நண்பர்களது எண்ணங்களை முழுமையாய் gauge பண்ண முடியவில்லை என்பதே நிஜம் ! எவ்வளவோ மாற்றங்களை நம்மால் வாழ்க்கையில் just like that ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் - காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது மாத்திரமே நாம் மாற்றங்களை கூடிய மட்டிலும் விரும்பாது போவது ஏனோ என்ற மகா சிந்தனையில் கேச இழப்பு அத்தியாயம் 2 தொடங்குகிறது எனக்குள் ! இதற்கு மேலும் தலையைப் பிய்த்துக் கொண்டால் - நண்பர் அஜய் சாமி வரைந்து அனுப்பியுள்ளது போலவே நானும் மெய்யாகவே ஒரு கௌபாய் தொப்பிக்கு ஆர்டர் தர வேண்டியதாகும் போல் படுகிறது ! பாருங்களேன் - நண்பரின் அட்டகாசத்தை !
See you soon folks ! Bye for now !