Powered By Blogger

Wednesday, May 29, 2013

யாதும் ஊரே ; யாவரும் வாசகரே !

வணக்கம் நண்பர்களே,
  • இத்தாலி : 45
  • சிங்கபூர்  : 5
  • பிரான்சு : 7
இது என்ன புதுவிதக் கணக்கென்று அதிகம் சிந்திக்க வேண்டாம் - வரவிருக்கும் நமது டேஞ்சர் டயபாலிக் சாகசமான "குற்றத் திருவிழா " இதழுக்கு அதி தீவிர அயல்நாட்டு டயபாலிக் ஆர்வலர்கள் அனுப்பியுள்ள ஆர்டரின் விபரமே இது ! அயல்நாடுகளுக்கு நமது இதழ்களை அனுப்பிடுவதில் புதிதாய் சங்கதிகள் ஏதும் கிடையாது தான் ; கடல் கடந்து ஆங்காங்கே வசிக்கும் நம் நண்பர்கள் சந்தாக்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். ஆனால் இம்முறை வந்திருக்கும் ஆர்டர்களோ தமிழின் சுவாசத்தைக் கூட அறிந்திரா இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் வேண்டுகோள்கள் !

தமிழ் சினிமா பாணியில் இதோ மேற்கொண்டு கொஞ்சம் நம்பர்கள் ; புள்ளி விபரங்கள் :
  • டயபாலிக் எனும் ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் இத்தாலியர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 55 லட்சமாம் ! 
  • இவரது facebook fan கிளப்பின் எண்ணிக்கை மலைக்கச் செய்யும் 50,000+ 
  • இவரது ரசிகர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு சொல்லும் சேதி : வாசக வட்டத்தின் 30 சதவிகிதம் - பெண்களே !! 
  • ஒவ்வொரு ஆண்டும் இத்தாலிய மொழியினில் மட்டுமே அச்சாகும் புது டயபாலிக் இதழ்களின் எண்ணிக்கை : 40,00,000 !
இத்தனை ஆரவாரத்தோடு வரவிருக்கும் நமது சூப்பர் ஜூனின் இறுதி இதழை COMIC CON -க்கு உரிய நேரத்திற்குள் தயாரிக்க இங்கே நாங்கள் அடித்து வரும் பல்டிகள் சொல்லி மாளா ரகம் ! கோடை வெயிலுக்கு இடையே வர்ண பகவான் சற்றே திடுமென கண் திறந்து சூறைக் காற்றோடு அனுப்பி வைத்திட்ட மழை - ஆங்காங்கே சில மரங்களை மல்லாக்கப் படுக்கச் செய்து விட்டது. அந்த மரங்களில் ஒன்று நமது பைண்டிங் அலுவலகத்தின் வாசலில் துயில் பயின்று விட்டதால் கடந்த 36 மணி நேரங்களாய் அங்கே மின்சாரமில்லை ! ஏற்கனவே சமச்சீர் கல்வியின் பாடநூற் பணிகளின் பரபரப்பிற்கிடையே முண்டியடித்து வரும் நமக்கு இது எதிர்பாரா போனஸ் மண்டைக்குடைச்சலே ! எப்பாடு பட்டாகினும் நமது இத்தாலியப் புதுவரவை ஜூன் 1-க்கு தயார் செய்தாக வேண்டுமென்ற வைராக்கியத்தில் வண்டி ஓடுகின்றது ! எப்போதும் சொல்லும் எனது தேய்ந்த டயலாக்கை எடுத்து விட - இதை விடச் சிறப்பான சந்தர்ப்பம் வாய்க்காது என்பதால் - fingers crossed !!

இதோ இதழின் அட்டைப்படம் :
முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணம் - எவ்வித டிஜிடல் ஜோடனைகளுமின்றி ; பின்னட்டை நமது நண்பர் ஷண்முகசுந்தரத்தின் அற்புத ஆக்கம் ! இரண்டுமே சிகப்புப் பின்னணியில் அமைந்திட்டது ஒரு happy coincidence! முன்னட்டைக்கும் நண்பர் ஒரு அழகான டிசைனை தயாரித்து அனுப்பி இருந்தார் - ஆனால் நாம் உபயோகிக்கும் அட்டையின் தரமும் , தற்சமய அச்சு முறையிலும் அதற்கு நியாயம் செய்திடல் சாத்தியமாகாது என்பதால் அதனை பயன்படுத்திட இயலவில்லை ! முழுவதும் metalic UV inks கொண்டு அச்சிட்டால் மட்டுமே அந்த தகதகப்பு சாத்தியாமாகும் ! Anyways - அட்டகாசமான அந்த டிசைனை பார்த்திருக்கா நண்பர்களின் பொருட்டு இதோ :

இத்தனை பில்டப் சகிதம் வருகை தரும் இந்த நெகடிவ் ஹீரோவின் சாகசங்களில் பெரிதாய் ஒரு கதைக் களத்தை எதிர்பார்த்திடல் சரி வராது என்பதை மொழிபெயர்ப்பின் போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது ! கொஞ்சம் கொஞ்சமாய் இந்தக் கதை வரிசையினில் ஆழ்ந்திட்டால் ; அந்தப் பிரதான பாத்திரங்களோடு ஒன்றிட்டால் மட்டுமே இந்தத் தொடரை ரசிக்க முடியும் போலும் ! டயபாலிக் இதழ்களில் அவரது சாகசத்தைத் தவிர்த்து வேறு கதைகள் ஏதும் இடம் பிடிக்கக் கூடாதென்ற "தடா" இருப்பதன் காரணத்தால் - இந்த இதழில் ஜாஸ்தி filler pages கிடையாது ! இதோ மாறுபட்ட சித்திரத் தரத்தோடு வரக் காத்திருக்கும் இந்த சாகசத்தின் சில பக்கங்கள் :


'அதோ - இதோ ' என்று இருந்த COMIC CON Bangalore திருவிழா இன்னும் சில நாட்களில் என்று நெருங்கி விட்டதும் ; 2013-ன் ஒரு பாதி கிட்டத்தட்ட நிறைவாகி விட்டதும், நாட்கள் பயணிக்கும் துரிதத்தைச் சுட்டிக் காட்டுகின்றன ! இதோ - நமது COMIC CON ஸ்டாலின் வரைபடம் :


நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்டாலின் எண் : B10. சனிக்கிழமை (ஜூன் 1) மாலை வரையிலும் & ஞாயிறு காலையிலும் (ஜூன் 2) நானும், விக்ரமும் அங்கே உங்களை சந்திக்கக் காத்திருப்போம் ! பாக்கி நேரங்களில் அனைவருக்கும் பரிச்சயமான நமது ராதாகிருஷ்ணன் + வேலு ஜோடியினர் ஸ்டாலில் இருப்பர் ! Please do drop in folks ! காமிக்ஸ் உலகின் சர்வதேச ஜாம்பவான்களும் பங்கேற்கும் இந்தத் திருவிழா சுவாரஸ்யமாய் அமைந்திடுமென்ற நம்பிக்கை என்னுள் நிறைய உள்ளது ! மீண்டுமொருமுறை fingers crossed !

விரைவில்  சந்திப்போம் :-)
========================================================================
P.S : மூச்சிரைக்க நேற்றைய பதிவை எழுதிய போது சின்னச் சின்னதாய் விஷயங்கள் விடுபட்டுப் போயின ...! அவற்றையும் தற்போது ஆங்காங்கே இணைத்துள்ளேன் !

  • திரைப்படமாகவும் ; டிவி தொடராகவும் ,வீடியோ கேம் ஆகவும் ; Play Station CD வடிவிலும் டயபாலிக் தலை காட்டியுள்ளார் !


  • 'COMIC CON -ல் ஒரு சின்ன surprise ' என நான் முன்னர் சொல்லி இருந்தது - வண்ணத்தில் வரும் டெக்ஸ் இதழை மனதில் கொண்டே ! அதைப் பற்றி சென்ற பதிவிலேயே எழுதி விட்டதால் - it will no longer be a surprise ! இந்த 4 இதழ்கள் தவிர புதிதாய் இப்போதைக்கு வேறு வெளியீடுகள் ஏதும் கிடையாது !
  • COMIC CON -க்காகத் தயாராகி வரும் பேனர்களில் ஒன்று இதோ : (சமீபமாய் புண்பட்ட டைகர் ரசிகர்களின் மனங்களை சற்றே குளிர்விக்க !!)
  • அடுத்த மாதம் வரவிருக்கும் ALL NEW SPECIAL பற்றிய விபரமான அறிவிப்புகள் இந்த இதழ்களில் உள்ளன  ! சற்றே அவகாசம் கிட்டிடும் போது அதைப் பற்றிய முன்னோட்டம் ஒன்றினைப் பதிவாக எழுதிடுவேன்!
  • நாளை மாலைக்குள் சந்தாப் பிரதிகளையும் அனுப்பிட தலை கீழாய் தண்ணீர் குடித்து வருகின்றோம் ! அனுப்பி விட்டு உங்களை update செய்கிறேன் ! 
Banner-2

Wednesday, May 22, 2013

சேதி சொல்லும் சித்திரங்கள் !

நண்பர்களே,

வணக்கம். கதை சொல்லும் படங்களான காமிக்ஸ்களுக்கு பத்தி பத்தியாய் முன்னுரை எழுதுவதற்குப் பதிலாக இம்முறை சித்திரங்களே சேதி சொல்ல அனுமதித்திட்டால் என்னவென்று தோன்றியது ..! பலனே நமது பதிவு எண் : 94 ! 

COMIC CON -ல் சின்னதாகவேனும் ஒரு புது ரிலீஸ் இருப்பின் சுவாரஸ்யமாக இருந்திடுமென்று மனதுக்குத் தோன்றிய போது - +6 அறிவிப்பு நினைவுக்கு வந்தது! So +6-ன் முதல் இதழாக மலரவுள்ள surprise-இதோ உங்களுக்காக சின்னதான preview -ல்! 

இந்த மினி பதிவு ஏராளமாய் அபிப்ராயங்களை உய்விக்குமென்பதை    நானறிவேன் ; பணிகளை முடிக்கும் பரபரப்பு சற்றே அடங்கிய பின்னே இது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதிடுகிறேன் ! அது வரை - have fun amigos ! 


19 cm x  12.5 cm (முந்தைய லயன் சைசில் - ஆர்ட் பேப்பரில் ...வண்ணத்தில்...) 
நமது அட்டைக்கு inspiration ! இதனைஆதாரமாகக் கொண்டு, கதைகேற்ற மாற்றங்களோடு  முழுமையாய், புதிதாய் நம் ஓவியர் தீட்டிய சித்திரமே  இந்த இதழுக்கான ராப்பர். 




சின்னதாய் ஒரு reminder : இது +6 வரிசையின் வெளியீடு என்பதால், மாதாந்திர லயன்-முத்து காமிக்ஸ் சந்தாவினில் இடம் பெறாது. So ஜூன் மாதத்து ரெகுலர் பிரதிகளோடு இந்த இதழும் கிட்டிட வேண்டுமெனில் ரூ.375 சந்தாத் தொகை அனுப்பிடல் அவசியம் ! (வழக்கமான சந்தாப் பிரதிகள் அனுப்பி முடிந்த பின்னே, இதனை மாத்திரமே தனியாக அனுப்ப நேரிடும் பட்சத்தில், கூரியர் கட்டணங்கள் கூடுதலாகும் என்பதையும் நினைவூட்டுகிறேன் !) Thanks in advance folks ! 

Friday, May 17, 2013

சூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ !

நண்பர்களே,

வணக்கம். சூப்பர் ஜூனின் அடுத்த ஆக்கத்தை அறிமுகம் செய்திடும் வேளை இது ! இந்தாண்டின் துவக்கத்தில் தலை காட்டிய நம் இரவுக் கழுகார் -  "பூத வேட்டை"யில் இறங்கிடும் சாகசத்தை இம்முறை ரசிக்கப் போகிறீர்கள் ! "பூத வேட்டை" இதழினை நாம் முதன் முதலில் விளம்பரப்படுத்தியது எந்த மாமாங்கத்தில் என்று யாருக்கேனும் நினைவிருப்பின் - Memoryplus மாத்திரைகளுக்கு விளம்பரப் பிரதிநிதியாகும் தகுதி அவர்களுக்கு நிச்சயம்  இருக்கும் என்பது எனது அபிப்ராயம் ! ஏறத்தாள 15+ ஆண்டுகளுக்கு முன்பே ட்ரைலராய் வந்து நிறையப் பேரின் ஆர்வத்தைக் கிளப்பி விட்ட பின்னே - ஓசையின்றி துயில் பயிலச் சென்ற பல கதைகளுள் "பூத வேட்டை" யும் ஒன்று ! அது வெளிச்சத்தைப் பார்த்திடும் தருணம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே ! (இந்தப் பட்டியலில் "திகில் நகரில் டெக்ஸ் " உள்ளதும் நினைவுள்ளது guys !!!)

டெக்ஸ் வில்லருக்கு அறிமுகம் என்பது அவசியமில்லா வேலை என்பதால், அதனில் நான் அதிக நேரம் செலவிடப் போவதில்லை ! டெக்சின் 90% கதைகள் பரபரப்பான த்ரில்லர்களே என்ற போதிலும் "பூத வேட்டை" அதில் ராக்கெட் பட்டாசு ரகம்!  சற்றே மாறுபட்டதொரு plot  + துவக்கம் முதல் இறுதி வரை  non -stop ஆக்க்ஷன் என இரவுக் கழுகாரும், குழுவினரும் அதிரடி அதகளம் செய்யும் adventure இது ! இதோ - மாலையப்பன் வரைந்த அட்டைப்பட ஓவியம், சின்னதாய் டிஜிட்டல் improvisation சகிதம். பல வாரங்களாய் முடியோ ; நகமோ வெட்டாத ; சவரம் செய்து கொள்ளாத சூப்பர்மேனைப் போல் காட்சி தருவது தான் இம்முறை டெக்ஸ் சந்திக்கவிருக்கும் பகைவன் !

இதழில் வண்ணங்கள் இன்னமும் அழுத்தமாக இருந்திடும் !


டெக்ஸ் கதைகள் இன்றளவும் வெளிவரும் ஒரு live தொடர் என்பதோடு மட்டுமல்லாது - ஆண்டுக்கு எக்கச்சக்கமான பக்கங்கள் அவசியமாகிடும் ஒரு மெகா ப்ராஜெக்ட் கூட என்பதால் - நிறைய ஆர்டிஸ்ட் குழுக்கள் இதனில் பணியாற்றுகின்றனர்  போன வாரம் தான் இதழ் # 631 வெளியாகி உள்ளது இத்தாலியில் ! (விசா போடுவது பற்றி விசாரித்தீர்களா ஈரோடு விஜய் ?)


துவக்க ஓவியரான காலெபினி மாத்திரமே சித்திரங்கள் தீட்டி வந்த சமயம் கதைக்குக் கதை டெக்ஸ் & கோ.வின் உருவங்களில் துளியும் வேறுபாடு இருந்திடாது maintain செய்வது சாத்தியமானது! ஆனால் கரங்கள் மாறிக் கொண்டே செல்லும் பொது அந்த பாணிகளிலும் வேற்றுமை தெரிவது தவிர்க்க இயலா சங்கதியாகி விடுகிறது !  இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி பணியாற்றும் இந்த சாகசம் ஒரு அசாத்திய ரக சித்திர விருந்து என்றே சொல்லுவேன் ! இதோ பாருங்களேன் :

இவை நான் வீட்டில் செய்த scans மாத்திரமே. நண்பகலுக்கு முன்னே இவற்றின் இடத்தினில் டிஜிட்டல் files இடம்பிடித்திடும் ! 
இனி வரும் அத்தனை டெக்ஸ் இதழ்களிலும், அதன் (துவக்க) படைப்பாளிகளின் பெயர்களை அட்டைப்படத்தில் குறிப்பிடக் கோரி அனைத்து மொழிகளிலுமான டெக்ஸ் வெளியீட்டாளர்களுக்கு உத்தரவாகி இருப்பதால் முதன்முறையாக நமது முன்னட்டையில் குட்டியாய் அவர்களது பெயர்களைப் பார்த்திடலாம் ! வழக்கமான பகுதிகள் அனைத்தும் இந்த இதழில் இடம் பிடிப்பதால், திருப்தியானதொரு இதழாக இது அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் ! வழக்கம் போலவே fingers crossed ! 

1985 முதல் நமக்கு ரொம்பவே பரிச்சயமான டெக்ஸ் வில்லரின் 50-வது இதழ் இது என்று நான் சில மாதங்களுக்கு முன்னே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் அது சரியான தகவல் அல்லவென்பது தொடர்ந்த நாட்களிலேயே நமது தீவிர சேகரிப்பாளர்கள் மூலமாய் அறிந்திட இயன்றது. இடைப்பட்ட 2 சிறுகதைகளை நான் கணக்கில் சேர்த்திடவில்லை என்பது காரணமெனினும், இதோ நமது நண்பர் ஈரோடு ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள comprehensive list : 
நன்றிகள் ஸ்டாலின் + சேலம் டெக்ஸ் விஜயராகவன் ! 
இவற்றில் அனைத்தையும் படித்தவர்கள் உங்களில் எத்தனை பேர் என்றறிய ஆவல் ! அவ்விதம் படித்திருக்கும் பட்சத்தில் - இந்தக் கதைகளில் best of the lot எது என்றும் அறிந்திட ஆவல் ! Do write in guys !! தொடர்ந்து சந்திப்போம்  ! Bye for now ! 

Friday, May 10, 2013

லக்கியின் luck !


நண்பர்களே,

வணக்கம். ஒரே இதழைப் பெரிதாய்த் தயாரிப்பதை விட - 4 இதழ்களைத் தனித் தனியாய் உருவாக்குவது எத்தனை சிரமம் என்பதை ஜூன் மாதப் பணிகள் எனக்கு உணர்த்தி வருகின்றன ! 4 தனித் தனி அட்டைப்படங்கள் ; பின்பக்க டிசைன்கள் ; ஒவ்வொரு இதழுக்கும் ஒரு filler pages batch - தலையங்கம் - என்று அத்தனை வேலைகளையும் 4 தடவை செய்திடும் அவசியம் எழும் போது - மெய்யாகவே பெண்ட் கழறுகிறது ! Anyways - மாறுபட்ட அனுபவங்களுக்குப் பஞ்சமே அல்லாத நமது இரண்டாம் வருகையின் இன்னொரு பரிமாணமாக இதனையும் எடுத்துக் கொள்கிறோம் ! பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON -க்கு இன்னமும் 3 வாரங்களே எஞ்சியுள்ளன என்ற நிலையில் - வரவிருக்கும் நம் இதழ்கள் ஒவ்வொன்றிற்கும் வாரம் ஒரு முன்னோட்டப் பதிவும்  ; இறுதி இதழுக்கு ஜூன் முதல் தேதியன்று ஒரு பதிவும் போடலாமென்ற எண்ணம் !  So, here goes :

மறுபதிப்பு என்பதால் எனது பணிகள் சற்றே மட்டுப்படுவதால், முதலில் தயாராவது நமது சன்ஷைன் லைப்ரரியின் "லக்கி ஸ்பெஷல்-1" தான் ! இதோ இந்த இதழுக்கான நமது அட்டைப்படம் :


"INTEGRALS " என்ற வரிசையில் பிரபல்யமான நாயகர்களின் கதைகளில் 2 அல்லது 3 சேர்ந்த hardcover ஆல்பம்கள் ஐரோப்பாவில் ரொம்பவே பிரசித்தம். நாமும் கூட இது போலெல்லாம் வெளியிடும் நாள் எப்போதாச்சும் புலருமா என்று நிறைய முறை கனவுலகில் நான் சஞ்சாரம் செய்தது உண்டு ! Hardcover எனும் அடுத்த நிலையினை எட்டிப்பிடித்திட இன்னமும் நிறைய தூரம் இருப்பினும், இந்த மட்டிற்காவது சாத்தியப்பட்டதே என்ற சின்ன சந்தோசம் இந்த இதழைப் பார்க்கும் போது ! இதோ - நமது அட்டைப்பட டிசைனின் inspiration:


1987-ல் நமது ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழில் சின்ன சைசில் - ஆனால் முழு வண்ணத்தில் வெளி வந்த "சூப்பர் சர்கஸ்" நமது இதழின் கதை # 1 ! 30 ஆண்டுகளுக்கு முந்தைய நம் ஊர்களில் - ஆங்கிலத்தைத் தாண்டிய காமிக்ஸ் இதழ்களின் சேகரிப்பு என்பது குதிரைக் கொம்பான சமாச்சாரம் ! இன்டர்நெட் எனும் தகவல் சுரங்கமும் இல்லாத நாட்கள் அவை என்பதால் இன்று சுலபமாய் சாத்தியப்படும் பல விஷயங்களை சாதிக்க அன்று ஏராளமான பிரயத்தனங்கள் தேவைப்படுவது வழக்கம். மும்பையின் பிளாட்பாரப் பழைய புத்தகக் கடைகளிலும், லெண்டிங் லைப்ரரிகளிலும் மாமூலாய் துளாவும் எங்களது routine -கள் நல்கிய  பொக்கிஷங்களில் ஒன்று தான் லக்கி லூக்கின் "Western Circus" ஆங்கிலப் பதிப்பு!  Egmont என்றதொரு பதிப்பகம் அந்நாட்களிலேயே லக்கியின் கதைகளில் சில தரமானவைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு புண்ணியம் சேர்த்திருந்தனர் ! இந்தக் கதையினைப் படித்த நாள் முதலே, எனக்குள் ஒரு வெறி - எப்படியாவது இதை தமிழுக்குக் கொணர வேண்டுமேவென்று ! பின்னாட்களில் அது சாத்தியமான போதும் சரி ; அதனை வண்ணத்தில் தயாரித்த பூரிப்பில் ஓராயிரம் முறைகள் ரசித்த போதும் சரி - ஏதோ இமயத்தையே தாண்டி விட்ட பெருமிதம் என்னுள் இருந்ததை இன்றும் நினைவலைகள் பதிவு செய்கின்றன ! நான் தயாரித்த முதல் வண்ண இதழ் என்ற முறையில் அந்த நியூஸ் பிரிண்ட் edition கூட எனக்கு அத்தனை அழகாய்த் தெரிந்தது ! இந்த இதழை வெளியான சமயமே படித்த அரை நிஜார் நண்பர்களுள் எத்தனை பேர் இப்போது இங்குள்ளனர் என்பதை அறிந்திட சின்னதாய் ஒரு ஆவல் ! கால் நூற்றாண்டுக்கும் முந்தையதொரு அனுபவத்தினை நம் புது வாசகர்களின் பொருட்டு பகிர்ந்திட்டால் சுவாரஸ்யம் கூடிடும் அல்லவா ? ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டோ ; அல்லது உங்கள் வீட்டுக் குட்டீஸ்களின் வண்டியைத் தள்ளிக் கொண்டோ - நினைவுகளைப் பின்னோக்கித் திருப்பிடலாமே guys ?


கதை நம்பர் 2 - இன்றளவும் நம் இதழ்களை சேகரிப்போர்க்கு பெரும்பாலும் எட்டாக்கனியாக இருந்து வரும் 1987 லயன் காமிக்ஸ் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் வந்திட்ட "பொடியன் பில்லி" ! ஒரிஜினலாய் பார்த்தால் - பொடியன் பில்லி தான் சீனியர் : 1962-ன் துவக்கத்திலேயே வெளி வந்திட்ட இதழ் இது ! (Western Circus உருவானது 1970-ல்!) பாக்கெட் சைசில் நமது தீபாவளி மலரில் வந்த கதையினை இப்போது பெரிய சைசில், அழகான ஆர்ட் பேப்பரில் படிக்கும் அனுபவம் நிச்சயம் சுகமானதாய் இருக்கக் காத்துள்ளது ! அது மட்டுமல்லாது, உங்கள் வீட்டில் நம் அடுத்த தலைமுறை வாசகர்கள்   இருப்பின், அவர்களுக்கு காமிக்ஸ் எனும் மாய உலகினுள் அடியெடுத்து வைக்கும் அனுபவத்தைத் தந்திட இந்த 2 கதைகளும் ரம்யமான துவக்கப் புள்ளிகளாய் இருந்திடும் என்பது எனது அபிப்ராயம் ! What say folks ? 


சன்ஷைன் லைப்ரரியில் கதைகளைத் தாண்டி, தலையங்கம் என்ற பாணியில் நான் எதனையும் எழுதிட டைகர் ஸ்பெஷலில் முயற்சித்திருக்கவில்லை ! இம்முறை - பிரத்யேகமாய் லக்கி லூக்கை அறிமுகம் செய்யும் விதமாய் ஒரு சின்ன piece எழுதியுள்ளேன் ! ஹாட்லைன் ; காமிக்ஸ்டைம் பாணிகளில் - இந்தப் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனை என்னுள் ! உங்களது suggestions -ம் உதவிடுமே ? 

விடை பெறும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி : விறுவிறுப்பாய் வந்திடும் ரூ.375 -க்கான +6 சந்தாத் தொகைகள் எங்கள் பணியாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் ; 4 இதழ்களின் தயாரிப்பின் சுமையில் நலிந்து நிற்கும்  எங்களது வங்கி இருப்பு லேசாய் போஷாக்குக் காட்டுவதற்கும்  உதவுகின்றது ! Many thanks all !! See you around soon ! 

Wednesday, May 01, 2013

விட்டத்தைப் பார்த்திடும் ஒரு விடுமுறை நாளில்..!


நண்பர்களே,

வணக்கம். பொழுது புலர்ந்த கணமே மலர்ந்தது "ஆஹா.. இன்றொரு விடுமுறை" என்ற சிந்தனை ! இன்னும் கொஞ்ச நேரம் குறட்டையைத் தொடரலாம்  என்ற ஆசை எழுந்த கணமே, 'நீ ஆணியே பிடுங்க வேண்டாம், எழுந்திருக்கும் வழியைப் பாரு' என்ற இலவசமாய் wake up call  கொடுத்தது கடமை தவறா நம் மின்னிலாக்கா ! தூக்கம் தெளிந்த சற்றைக்கெல்லாம் கிளைமாக்சில் தொங்கிக் கொண்டிருக்கும் டெக்ஸ் வில்லரின் மொழிபெயர்ப்பு ஞாபகத்திற்கு வர, சுவாரஸ்யமாய் அதனுள் புகுந்தேன். தடாலடி ஆக்க்ஷன் கதையென்பதால் ஏகப்பட்ட "டமால்-டுமீல்-சொய்ய்ங்"களோடு கார்சனும், டெக்சும் எதிரிகளை துவம்சம் செய்து விட்டு ஒரு வழியாய் புறப்பட்ட பின்னே - கொஞ்ச நேரம் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கும் படலத்தில்  ஆழ்ந்திடுவது உத்தமம் என்று தோன்றியது. மோட்டு வளையின் ஆராய்ச்சிக்கு மத்தியினில் சிந்தனைக் குதிரை (!!) - நேற்று நம் அயல்நாட்டுப் பதிப்பகத்திலிருந்து வந்திருந்த மின்னஞ்சலை நினைவுக்குக் கொணர்ந்தது ! இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குத் தேவையான கதைகளின் பட்டியலில் ஏதேனும் மாற்றம் உண்டா - அல்லது அதன்படியே கதைகளை அனுப்பிடலாமா ? என்று வினவி இருந்தனர். அதற்கு பதில் போடுவதைப் பற்றி மண்டைக்குள் அசை போட்டுக் கொண்டிருந்த போதே - வரவிருக்கும் 2014 பற்றிய planning  மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! 30 நாட்களைத் தாண்டிச் சிந்திக்க முனைந்திருக்காத நாம் - இப்போதெல்லாம் 200 நாட்களுக்கான முன்சிந்தினையில் ஆழ்ந்திடுவது சற்றே பிரமிப்பாய் இருந்தது ! நம்பிக்கையோடும், மிகுந்த உற்சாகத்தோடும்  வடம் பிடித்துத் தேர் இழுக்கும் உங்களின் கூட்டு முயற்சிகளின் பலனே இந்த சந்தோஷ மாற்றம் என்பதில் என்னுள் துளி ஐயமும் கிடையாது ! 


2013-ன் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் வரிசைக்கிரமங்கள் சற்றே மாறினால் கூட - அறிவிக்கப்பட்ட கதைகளில் பெரியதொரு மாற்றம் இருந்திடாது ! ஜூன் மாத 4 இதழ் மேளாவைத் தொடர்வது நமது ALL NEW ஸ்பெஷல் ! அது பற்றி தனியாக ஒரு பதிவு தொடரும் வாரங்களில் வந்திடும். 

ஆகஸ்ட் ; செப்டெம்பர் / அக்டோபர் மாதங்களில் இடம் பிடிக்கவிருக்கும்  இதழ்களும், விலைகளும் பின்வருமாறு இருந்திடும் :

  • சிப்பாயின் சுவடுகள் (முழு நீள கிராபிக் நாவல் ) - Rs.100
  • வேங்கையின் சீற்றம் (இ.ஒ.இ.கு.-வின் இறுதி பாகம்) - Rs.50
  • இரத்தப் படலம் - (2 புதிய பாகங்கள்) - Rs.100
  • "நீதியின் நிழலில்" (டெக்ஸ் வில்லர் b &w சாகசம் )- Rs.50

நவம்பரில் லார்கோவின் "ஆதலினால் அதகளம் செய்வீர்" (வழக்கம் போல் 2 பாக த்ரில்லர்) & டிசம்பரில் ஒரு டயபாலிக் b&w issue என்பது தான் திட்டம். சன்ஷைன் லைப்ரரியின் எஞ்சியுள்ள 4 வண்ண மறுபதிப்புகள் (அனைத்துமே ரூ.100 இதழ்கள் - முழு வண்ணத்தில்)  இடையிடையே புகுந்திடும் :
  • ஜூன் - லக்கி ஸ்பெஷல் -1
  • செப்டெம்பர் - பிரின்ஸ் ஸ்பெஷல் -1
  • நவம்பர் - சிக் பில் ஸ்பெஷல்- 1 ("விற்பனைக்கு ஒரு ஷெரிப் & விண்வெளியில் ஒரு எலி ")
  • டிசெம்பர் - ரிபோர்டர் ஜானி ஸ்பெஷல் -1 
இவை தவிர +6 இதழ்கள் அவ்வப்போது இந்த schedules -க்கு மத்தியினில் ஓசையின்றி நுழைந்து கொள்ளும். So +6 இதழ்களின் இரு குட்டி /சுட்டி  லக்கி கதைகளைத் தவிர்த்து - பாக்கியுள்ள 4 இதழ்கள் என்னவென்பது மாத்திரமே இப்போதைக்கு நீங்கள் அறிந்திருக்கா விஷயம் ! இந்தாண்டின் போக்கில் அந்த சஸ்பென்சும் சிறிது சிறிதாய் விலகிடும்.


Looking ahead, 2014--ல் நமது ஆதர்ஷ நாயகர்களில் - யாருக்கு எத்தனை slots தந்திடுவது என்பது பற்றி சின்னதாய் ஒரு சிந்தனை என் தலைக்குள் ஏற்கனவே ஓடி வருகின்றது. பட்டியல் போட்டுப் பார்த்தால் நமது ஹீரோக்களை - "தவிர்க்கவே இயலாத ஜாம்பவான்கள் பிரிவு" ; "வாய்ப்புத் தரலாம் -ஆனால் அளவாய்"என்றொரு பிரிவு ; "ம்ம்ம்ம்... யோசிப்போமே"..என்றொரு பிரிவு என 3 categories -ல் அடைக்கலாம் !

முதலாம் லிஸ்டில் - லார்கோ வின்ச் ; கேப்டன் டைகர் ; டெக்ஸ் வில்லர் & வேய்ன் ஷெல்டன் இடம் பிடிப்பர் என்று தைரியமாகச் சொல்லலாம் தானே ? பட்டியல் இரண்டில் - "லக்கி லூக் ; சிக் பில் ; டயபாலிக் ; மதியில்லா மந்திரி " ஆகியோர் தேர்வாகுவதும் ஒ.கே. தானே ? எஞ்சி இருப்போரை பட்டியல் 3-க்கு அனுப்பிடும் போது - " ப்ருனோ பிரேசில் ; ரிப்போர்டர் ஜானி ;  சாகச வீரர் ரோஜர் ; மர்ம மனிதன் மார்டின் ; மாடஸ்டி ப்ளைசி " என்று அமைந்திடும் அந்தப் பட்டியல். (இதனில் நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் தான் !!)  

12 புது இதழ்கள் கொண்டதொரு முழு ஆண்டிற்கு - யாருக்கு எத்தனை வாய்ப்புகள் தந்திடலாமென்பது பற்றிய உங்களது உரத்த சிந்தனைகளை அறிந்திட எழுந்த அவாவின் பலனே இந்தப் பதிவு ! மேலிருக்கும் எனது இந்தப் பட்டியல்களில் அல்லாத புதுமுகங்கள் சிலர் 2014-க்கு தயார் ஆகி வருவது ஒரு புறமிருக்க - உங்களின் ஆதர்ஷ ஹீரோக்களின் வாய்ப்புகள் எவ்விதம் அமைந்தால் சிறப்பாக இருக்குமென்ற ஆசைகளை இங்கு வெளிப்படுத்தலாமே ? 'தலைவர் ஸ்பைடருக்கு 2 இதழ்கள்' போன்ற அட்டகாசத் தேர்வுகள் அல்லாது ; நமது தற்சமய trend -க்கு ஏற்ப உங்களின் choices என்னவாக இருக்கும் என்று இங்கே பின்னூட்டப் பரிமாற்றம் நடந்தேறினால் அட்டகாசமாக இருக்கும் ! அதே போல் புதிய தொடர்கள் / நாயகர்கள் எனும் போது  உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்கும் என்பதனையும் லேசாகக் கோடிட்டுக் காட்டலாம். TINTIN போன்ற எட்டாக்கனிகளைத் தவிர்த்து விட்டு - உங்களின் யதார்த்தமான choices சுவை சேர்க்கும் ! 

End of the day, இறுதி முடிவுகளை எடுக்கப் போவது நான் தான் என்ற போதிலும், பகிரப்படும் உங்களின் எண்ணங்கள் என் தலைக்குள் ஓடிடும் திட்டமிடலில் ஆங்காங்கே தேவையான சில realignments செய்திட உதவும் ! அப்புறம் இன்னொரு விஷயமும் கூட : இது முழுக்க முழுக்க - 2014-க்கான 12 லயன் & முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான முன்னோட்டம் என்பதால், மறுபதிப்புத் தேர்வுகள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ?  அதனை இவ்வாண்டின் இறுதிப் பகுதியின் போது தனிப்பட்டதொரு பதிவில் பார்த்துக் கொள்வோம் ! So, get those thinking caps on guys !