நண்பர்களே,
வணக்கம். சில நேரங்களில் பெரியதொரு காரணமே இல்லாது போனாலும், பேய் முழியோடு சுற்றித் திரியும் நாட்கள் புலர்ந்திடும் ! சில சமயங்களிலோ - பொழுது விடிந்த நேரத்திலிருந்தே 'கோபால் பல்பொடி' விளம்பர மாடல் போல் மொச்சைக்கொட்டைப் பற்களைக் காட்டிக் கொண்டு பவனி வரத் தோன்றும் ! இன்றைய பொழுது பிந்தைய ரகத்தைச் சார்ந்ததாய் இருப்பதால் - காலையிலிருந்தே லானாவைக் கண்ட ஷெரீப் டாக்புல்லைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறேன் !
மார்ச் இதழ்களின் reviews இன்னமும் முழுவீச்சில் அரங்கேறிடவில்லை என்றாலும் - இதுவரைப் பதிவாகியுள்ள கருத்துக்களின் பெரும்பான்மை 'தம்ப்ஸ் அப் ' தந்திடும் விதமாகவே இருப்பது எனது இளிப்பின் காரணமாய் இருக்கக் கூடும் ! டெக்ஸ் & கோ. "விதி போட்ட விடுகதை"யில் உங்களது கரகோஷங்களை ஈட்டியிருப்பதில் no surprises indeed ! சென்றாண்டின் பிற்பகுதியில் - டெக்ஸ் கதைத் தேர்வுக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்த போது - சிக்கிய இத்தாலியக் குடல்கள் அத்தனையின் நீள-அகலங்களையும் அலசிப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! அப்போதே இந்த சாகசத்தின் பிற மொழிகளின் reviews நிறையவே பார்த்திட முடிந்தது ! எல்லோருமே கதையோட்டத்தை ; சித்திரங்களை ; கிட வில்லரின் காதல் track -ஐ ரொம்பவே சிலாகித்திருந்தனர் என்பதால் - 2016-ன் டெக்ஸ் கதைத் தேர்வினில் நான் அடித்த மூன்றாவது 'டிக்' இது தான் ! (முதல் டிக் - நெடுங்காலத்து வாக்குறுதி நிறைவேற்றலின் பொருட்டு "திகில் நகரில் டெக்ஸ் " & இரண்டாவது டிக் - "பழி வாங்கும் புயல்" மறுபதிப்பு !) ஒரு பொறுப்பான, பாசமான தந்தையாகவும் டெக்ஸ் இதில் மிளிர்வதைப் பற்றி வேற்று மொழி வாசகர்கள் அவர்களது களங்களில் பதிவிட்டிருந்ததைப் படிக்க முடிந்த போதே இந்த ஆல்பம் நமக்கொரு சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்திடுமென்று தோன்றியது ! இத்தாலிய மொழிபெயர்ப்பு டிசம்பரிலேயே தயாராகி விட்ட போதிலும் - தமிழாக்கத்தினை பிப்ரவரி ஆரம்பம் வரையிலும் ஆரம்பிக்க இயலவில்லை ! முதல் பாதியைத் தாண்டிய போதே - இது டெக்ஸ் வரிசையில் ஒரு memorable இதழாக அமையப் போவது உறுதியென்று பட்சி சொன்னது ! சரியாக அதே வேளையில் பொன்னனின் அட்டைப்பட டிசைனும் அழகாய் அமைந்து போக - 'மார்ச் முதல் வாரம் எப்போது புலரும்டா சாமி ?' என்ற நமைச்சல் எடுக்கத் துவங்கிவிட்டது எனக்குள் ! எதிர்பார்ப்புகள் மெய்யாகும் போது அலையடிக்கும் ஒரு மெல்லிய திருப்தி - பல்லாயிரத்துக்கு ஈடாகும் உணர்வன்றோ ? அதே போலவே, கமான்சே சாகசம் பற்றிய யூகங்களும் பிசிறடிக்கவில்லை ! யதார்த்தத்தின் வெளிப்பாடான series இது எனும் போது - டெக்ஸ் வில்லர் / பௌன்சர் / டைகர் கதைகளின் 'பட்டாசு பாலு' பரபரப்பினை இங்கே எதிர்பார்த்தல் சாத்தியமில்லை என்பதில் இரகசியமேது ? So ஆக்ஷன் ரசிகர்களுக்கு இது உறக்கம் கிடத்தும் தாலாட்டைப் போலவும் ; யதார்த்த விரும்பிகளுக்கு தெம்மாங்குப் பாட்டாகவும் தோன்றுவது உறுதி தானே ? சாத்தானின் உள்ளங்கையில் " ஆல்பத்தில் - நாயகன் ரெட் டஸ்ட் - எப்போதும் போலவே ஒளிவட்டத்தைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டே - கதை முழுதிலும் ஒரு சராசரிக் கௌபாயாக வலம் வந்ததை கதாசிரியரின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகப் பார்த்தேன் நான் ! அந்தச் சித்திர அட்டகாசமும், அச்சின் துல்லியமும், வர்ணங்களின் இதமும் நான் ரசித்தவைகளாக மாத்திரமே இல்லாது - (இ. பி.பா. போராட்டக் குழு நீங்கலாக) பாக்கி அனைவரின் ரசனைக்கும் ஏற்புடையவையாக அமைந்ததால் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! கிளைமாக்சில் துப்பாக்கிச் சண்டைகளெல்லாம் நிறைவுற்றான பின்னர், ரெட் டஸ்டும், தான்காணும் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு பேசிக் கொள்ளும் இடம் எனக்குப் பிடித்திருந்தது ! எந்த (சீரியஸ்) ஹீரோவை இப்படியொரு போஸில் நாம் ரசித்திருக்க முடியும் ? 'வயதாவதற்கும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்' என்ற ரீதியிலான டயலாக்கினைப் பேசுமிடத்தில் கதாசிரியரின் presence 'பளிச்'செனத் தெரிவதாக நினைத்தேன் ! கதாசிரியர் க்ரெக்கின் ஒரிஜினல் வசனங்களுக்கு மொழிபெயர்ப்பில் நான் எத்தனை தூரம் நியாயம் செய்தேன் என்று தெரியவில்லை - ஆனால் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள பிரெஞ்சுக் கதைகளின் ஸ்க்ரிப்ட்களுள் one of the toughest என்பதில் சந்தேகமே கிடையாது ! இரண்டே வரிகளில் அவர்களது மொழியில் சொல்லச் சாத்தியமாகும் அந்த உணர்வுகளை சேதமின்றித் தமிழுக்குக் கொணர - கொஞ்சம் நீளமான வரிகளின் சகாயத்தை நாடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் !
மார்ச்சின் இதழ் # 3 - நமது கர்னல்ஜியின் கார்ட்டூன் கலாட்டா ! இன்னமும் நண்பர்களில் நிறையப் பேர் இந்த ஆல்பத்தினுள் புகுந்திருப்பது போல் தோன்றவில்லை என்பதால் இதற்கான விமர்சனங்களை ஜாஸ்தி பார்க்க முடியவில்லை ! Maybe இந்த வாரம் நமது focus -ஐ மீசைக்காரர் மீது திருப்பிடுவோமா ? "நில்..சிரி...திருடு" பற்றிய உங்கள் பார்வைகளை முன்வைக்கலாமே folks ?
கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றப்பட்ட நமது ஸ்பைடர்காருவின் ராப்பர் பற்றிய சிறுகுறிப்பு ! இது நமது ஓவியரின் தயாரிப்பே என்றாலும் - வெறுமனே வர்ணம் பூசுவதும், பின்னணியில் கலர் சேர்ப்பதுமே அவரது பங்களிப்பு ! வலைமன்னரின் டிராயிங் Fleetway -ன் LION வாரயிதலின் அட்டைப்படத்தின் ஜெராக்சே ! And அதனை வரைந்திருப்பதும் ஸ்பைடர் தொடரின் ஒரு மூத்த ஓவியரே என்பதால் அதனை நோண்டிட முற்படவில்லை ! ஆனால் புத்தகமாகப் பார்க்கும் போது - பக்கத்து வீட்டுப் புள்ளையைக் கையைப் பிடித்து இழுத்து விட்டு, ஊர் பஞ்சாயத்துக்குப் பயந்து ஓட்டம் பிடிக்கும் பாவனை லைட்டாகத் தோன்றத்தான் செய்கிறது ! Anyways ஒரு வலைமன்னனின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமே என்பதால் - அடுத்த முறை இதனை ஈடு செய்யும் விதமாய் ஒரு சூப்பர் ராப்பரை தயார் பண்ணிட உறுதி சொல்கிறேன் !
Talking of wrappers - இதோ பாருங்களேன் நமது நண்பரின் கைவண்ணத்தை ! நாம் அனுப்பியிருந்த black & white பக்கங்களைப் பார்த்து - அதனிலிருந்து frame களைத் தேர்வு செய்து ; லைன் டிராயிங்காகவே வரைந்து, பின்னர் வர்ணம் பூசியதொடு மட்டுமல்லாது - தலைப்பையும் அமைத்து ; லோகோவையும் வண்ணத்தில் அனுப்பித் தந்துள்ளார் ! பெயரில் ஸ்மர்ப் இருப்பினும், ஆற்றலிலும், காமிக்ஸ் நேசத்திலும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவர் யாரென்று any guesses ?
இன்னொரு நண்பரிடமும், இன்னொரு MMC இதழின் அட்டையினை டிசைன் செய்யும் பணியை ஒப்படைத்துள்ளோம் ! காத்திருப்போம் அவரது கைவண்ணத்தையும் ரசித்திட ! சும்மாயிருந்த நேரத்தில் மைதீனை நமது பரனை உருட்டச் செய்த போது சிக்கியவை தான் என்னவென்று பாருங்களேன் !!
1973 & 74-ல் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்னமும் ஒரு இம்மி மெருகு குறையாமல் டாலடித்துக் கொண்டுள்ளன நமது கிட்டங்கியில் ! அந்நாட்களில் ஓவியர்கள் பயன்படுத்தும் போஸ்டர் கலர்களில் கொஞ்சமாய் கோந்து சேர்த்துக் கொள்வதைப் பார்த்த ஞாபகம் உள்ளது ! அது ஏனென்று இன்றைக்குப் புரிகிறது ! இத்தனை இத்தனை ஆண்டுகள் கடந்து பின்னேயும் அந்த வர்ணங்கள் துளிகூட வீரியம் குறையாமல் தொடர்வதற்கு அந்தக் கொந்தும் ஒரு காரணம் போலும் !! ஒரிஜினல் பெயிண்டிங்குகள் பத்திரமாய் இருப்பதால் - அவற்றையே process செய்து - இயன்ற இடங்களில் ராப்பர்கலாக்கி விடுவோம் ! முதல் சுற்று முத்து மினி காமிக்ஸில் 6 இதழ்கள் ரூ.20 விலையில் வெளியாகிடும் ! எல்லாமே அந்நாட்களது கூட்டு எழுத்திலான ஸ்கிரிப்ட் என்பதால் ஒட்டு மொத்தமாய் புது டைப்செட்டிங் செய்திடவிருக்கிறோம் ! ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில் இவை தயாராகி விடும் !
தேர்தலின் பொருட்டு ஏப்ரலில் நடைபெறுவதாகயிருந்த சென்னைப் புத்தக விழா தள்ளிச் செல்கிறது ! So இந்த MMC இதழ்களை வேறு ஏதேனுமொரு புத்தக விழாவினில் வெளியிட வேண்டி வரலாம் ! தற்போது திருச்சியில் நடந்து வரும் புத்தக விழா - அளவில் அத்தனை பெரிதல்ல என்றாலும் ஆச்சர்யமூட்டும் விதத்தில் சரளமான ஜனத்திரளைச் சந்தித்தே வந்துள்ளது - முதல் இரு நாட்களிலுமே !! பஸ் நிலையமருகே சென்ற முறை புத்தக விழா நடந்த பொழுதே விற்பனை ரொம்ப மந்தம் என்ற புள்ளி விபரம் தலைக்குள் குடியிருக்க - இம்முறை விழா அரங்கு சற்றே ஒதுக்குப்புறம் என்று கேள்விப்பட்ட போது நான் மிரண்டு தான் போயிருந்தேன் ! ஆனால் நல்ல கூட்டம் ; decent விற்பனை என ஆரம்ப நாட்கள் உற்சாகமூட்டும் விதமாய் அமைந்துள்ளன ! பற்றாக்குறைக்கு, நமது (முன்னாள்) முகவர் ஒருவர் தற்செயலாக நம் ஸ்டாலுக்கு வந்திருக்க, உள்ளூர் வாசகர்களின் ஆர்வத்தை நேரடியாகப் பார்த்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் முதற்கொண்டு தன கடைக்கு மீண்டும் இதழ்களைத் தருவித்துக் கொள்ள உறுதி சொல்லியிருக்கிறார் ! ஸ்டாலுக்கு வந்திருந்த நண்பர்களின் செல்நம்பர்களைப் பெற்றுக் கொண்டு - இனி ரெகுலராகத் தொடர்பில் இருக்க சம்மதம் சொல்லியுள்ளார் ! தொடரும் நாட்களில் இது போல் இன்னம் சிறுகச் சிறுக கதவுகள் திறப்பின், மலைக்கோட்டை மாநகரில் நாம் "ஹி.ஹி.." என்று திரிய பெரியதொரு அவசியம் இருந்திடாது !
பரணில் பழைய பெயிண்டிங்குகளை உருட்டிக் கொண்டிருந்த தருணத்தில் கண்ணில்பட்ட இன்னுமொரு பழமையின் நினைவுச் சின்னம் முகம் நிறைய புன்னகையை வரச் செய்தது ! இதோ - அந்த இதழின் அட்டைப்படம் !
"உன்னை விட வயதில் மூத்த இதழிது - தெரியுமா ? " என்று ஜூனியரிடம் இதனைக் காட்டிய போது ஒரு மெல்லிய பெருமிதம் எனக்குள் இருந்தது நிஜமே ! நியூஸ்பிரிண்ட் இதழ்கள் என்றாலே காத தூரம் ஓடும் ஜூ.எ. ஒரு வித ஆச்சர்யத்தோடு இதைப் புரட்டிப் பார்த்தது வேடிக்கையாக இருந்தது எனக்கு ! 'இந்த ஆர்ட்பேப்பர் ; வர்ணம் ; இத்யாதி இத்யாதியெல்லாம் சமீபமாய்த் தான் அப்பு ; நாம் வளர்ந்ததே இந்தச் சாணித்தாள் எணியின் மீதேறித் தான் !" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன் ! 24 ஆண்டுகளுக்கு முன்னர், கோடை (பள்ளி) விடுமுறைகளின் சமயம் நாம் தயாரித்த இதழிது என்று ஞாபகம் !
ஸ்பைடர் மேனியா ஒரு விதத் தளர்நிலையில் இருந்த நேரமும் கூட என்ற ஞாபகமும் உள்ளது ! ஸ்பைடர் கதைகள் கிட்டத்தட்ட காலியாகிப் போகும் தருணம் என்பதால் மெது மெதுவாய் வேறு விதக் கதைக்களங்களுக்குள் கால் பதிக்கத் தொடங்கியிருந்தோம் ! அந்த நேரத்தில் இந்தக் கதையின் தலைப்பே ஒருவிதப் புத்துணர்ச்சியினை வழங்கிட - '90- களின் ஒரு மறக்க இயலா ஹிட்டாக இந்த இதழ் அமைந்தது அந்நாட்களது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம் ! நிஜத்தைச் சொல்வதானால் -கங்காரூ தன வயிற்றில் குட்டியைத் தூக்கிக் கொண்டே திரிவது போல் இந்தக் கதையை 1988 முதலே நான் சுமந்து கொண்டிருந்தேன் - simply becos காதினில் இது சூட்டியது புஷ்பங்களை மாத்திரமல்ல - ஒரு புஷ்ப மார்கெட்டையே ! பாட்டிலுக்குள் கர்கோ பூதம் ; சாத்தான் ; டைனோசார்கள் ; அழகு ராணி ; கொலைகார கொரில்லாக்கள் ; இவர்களோடு வலைமன்னன் மோதுவது என்று எங்கெங்கோ சுற்றித் திரியும் fantasy -ன் உச்சமாக இந்தக் கதை இருந்ததால் - தர்ம அடிக்குப் பயந்தே இதனை வெளியே கொண்டு வராது பத்திரப்படுத்தியிருந்தேன் ! ஆனால் கதைப் பஞ்சம் என்ற நிலை எழுந்த போது - "காதுலே புய்ப்பம்" - "அதிரடி ஆக்ஷனாக" காட்சி தர - ஹாலிடே சூப்பர் ஸ்பெஷல் தயாரானது ! அந்நேரம் நமது ஓவியர் மாலையப்பன் நம்மிடம் பணியாற்றவில்லை என்று நினைக்கிறேன் ; இந்த அட்டைப்படம் சிகாமணியின் கைவண்ணம். ! அதிலும் முதலில் பூதத்தை மட்டும் வரைந்து விட்டோம் ; அப்புறம் அட்டைப்படத்தில் 'தலைவர்' இல்லது போனால் மாஸ் இருக்காதென்று தோன்ற ஸ்பைடரின் அழகு வதனத்தை அப்புறமாய் இணைத்தோம் ! And டாலடிக்கும் ரோஸ் வர்ணம் இந்த ராப்பரில் கூடுதலாய் அச்சிடுவதெனத் தீர்மானித்ததால் - ஸ்பைடரின் முகத்தை பிங்கில் மட்டுமே வருமாறு பார்த்துக் கொண்டோம் ! அட்டையைப் பார்த்த போதே - நம்பிக்கை பிறந்தது - இது ஓடும் குதிரையென்று !
வழக்கமான கிறுகிறுக்கச் செய்யும் ஸ்பைடர் கதையை விட - நான் இந்த இதழில் ரசித்தது - ரிப் கிர்பியின் சாகசத்தை ! தன் கனவுக் கன்னியைத் தேடிச் செல்லும் மொழு மொழு மண்டை டெஸ்மாண்ட் கதை முழுவதிலும் சுற்றி வருவதால் - செம சுவாரஸ்யமாய் பக்கங்களைப் புரட்ட முடிந்திருக்கும் !! ரிப் கிர்பியும் காரிகனும் தான் அந்நாட்களில் நம் மானம் காத்த ரட்சகர்கள் என்பதால் காரிகனுக்கும் இந்த இதழில் இடம் தவறாது இருந்தது ! அட்டைப்படத்தில் தொங்கு மீசை பாட்டில் பூதமெனில் - காரிகனின் கதையிலும் தொங்கு மீசை டாக்டர் 7 இருந்தார் ! Dr 7 கதைகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்குமென்பதால் இந்தக் கதையைக் குறிப்பாகத் தேடித் பிடித்து தேர்வு செய்தேன். FLEETWAY -ன் பெருச்சாளிப் பட்டாளம் (War ) சிறுகதை ; ராடார் சிறுகதை ; இறுதியாய் "மறையும் மாயாவி ஜாக்கின் : கதையொன்று என நீளமான cast இருந்ததால் இதழ் நல்ல புஷ்டியாய் 224 பக்கங்களோடு அமைந்து போனது ! அந்நாட்களில் பத்து ரூபாய் என்பது இன்றைய நூறு ரூபாய்க்கு ஈடாகப் பார்த்திடலாம் எனும் போது - இயன்றதைச் செய்து இதழின் கனத்தை ஏற்றுவதே லட்சியமாக இருந்தது ! வெளியாகி ஒராண்டுக்குள்ளாகவே இந்த இதழ் காலியாகி விட்டதென்று தான் நினைக்கிறேன் ; இதனை ஸ்டாக்கில் அதிக நாட்கள் சுமந்து திரிந்ததாக நினைவில்லை ! And இந்த இதழினை தயாரித்துக் கொண்டிருந்த நாட்களை நினைவில் இருத்திக் கொள்ள கூடுதலாயும் ஒரு காரணமுண்டு ; அடியேனுக்குப் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் நடந்து வந்த ஆண்டும் அது ! So கலர் கலராய் அமைந்தவை அந்நாட்களது அட்டைப்படங்கள் மாத்திரமல்ல என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
Back to the future - இங்கி -பிங்கி-போட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குழுவின் மனவுறுதியை அசைத்துப் பார்க்கும் பல ஐட்டங்கள் விறுவிறுப்பாய் தயாராகி வருகின்றன ஏப்ரலுக்கு ! கோடீஸ்வரரின் பணிகளும், வுட்சிடிகாரர்களின் பணிகளும் ஏற்கனவே முடிந்து விட்டன - அச்சு மாத்திரமே பாக்கி ! இரவுக் கழுகாரின் மெகா அவதாரமும் தொடரும் வாரத்தில் நிறைவு பெற்றிடும் என்பதால் - போங்கு இல்லா இ.பி.பா. ஏப்ரலிலும் தொடருமாயின் சங்கத்துக்குள் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புகள் பிரகாசமெனத் தோன்றுகிறது !
Joking apart - "மாதமொரு டெக்ஸ்" என்ற அட்டவணை அமலுக்கு வந்த ஆரவாரத்தின் மத்தியினில் எனது பணிச்சுமை வெகுவாகக் கூடிப் போனதை உங்களில் பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை ! எழுதிட டெக்ஸ் கதைகள் சுலபமே என்றாலும் - 224 பக்கங்கள் என்பது குறுக்கைப் பதம் பார்க்கும் விஷயம் ! எழுதிய பின்னே - மூன்று முறைகள் என் மேஜைக்கு வந்து செல்லும் - டெக்சின் டைப்செட் செய்யப்பட்ட பக்கங்கள் ! "சாமி..இதுக்கு மேல் இந்தக் கதையைப் பார்த்தால் நான் சுவற்றைப் பிறாண்டத் தொடங்கி விடுவேன் !" என்ற நிலையில் தான் அவை அச்சுக்குச் செல்லும் ! இதன் மத்தியினில் "இது எனக்கே - எனக்கு" என பூதம் போல் கார்ட்டூன் கதைகளையும் நானே அடைகாத்துக் கிடக்க - அதன் பணிகள் இன்னொரு பக்கம் நடந்தேறிடும். சின்னதாய் ஏதேனும் ஒய்வு கிடைக்கும் சமயம் unwind செய்யும் விதமாய் ஏதேனும் எழுதுவோமே என்று யோசிக்கும் போது - "என் பெயர் டைகர்" ஜிங்கு ஜிங்கென்று மேஜையில் குதிப்பது கண்ணுக்குப் படும் ! அல்லது - எதிர்பாரா சிக்கல்கள் ஏதேனும் தலைதூக்கும் - ஏப்ரலின் சிக் பில் கதையினில் நேர்ந்ததைப் போல ! இது சென்றாண்டே வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கதை & இதனை நமது கருணையானந்தம் அவர்களை எழுதச் சொலியிருந்தேன் ! ஏதோவொரு ஞாபகத்தில் அவர் இந்தக் கதைக்குமே தூய தமிழ் நடையைக் கையாண்டிருக்கிறார் ! எழுதி வந்த ஸ்கிரிப்ட் பீரோவுக்குள் தூங்க, போன வாரம் அதனை நமது பணியாளர்களிடம் தந்து டைப்செட் செய்தும் வாங்கி விட்டேன் ! எப்போதுமே கார்டூன் கதைகள் ; அதுவும் சிக் பில் கதைகள் எனும் போது எடிட்டிங் வேலைகள் ஜாலியாக ஓடியே விடும் ! அந்த நம்பிக்கையில் இதனையும் வீட்டுக்குத் தூக்கிப் போய் இரவு புரட்டினால் - தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்த சீரியசான மொழிநடையைப் பார்த்தவுடன் ! டாக்புல்லும் , ஆர்டின்னும் சுத்தமான தமிழ் செப்புவதைப் பார்க்கப் பார்க்க மிரட்சியாக இருந்தது ! முழுக் கதையையும் rewrite செய்வதைத் தாண்டி வேறு வழி ஏதும் புலப்படவில்லை ; ஒரிஜினலை ரிப்பேர் செய்வதைவிட, புதுசாய் எழுதி விடுவது எப்போதுமே உத்தமம் ! So ப்ளஸ் 2 பரீட்சைக்குப் பிள்ளைகள் படிக்கும் வேலையினில் நானும் வேதாளம் போல் எழுந்து உட்கார்ந்திருந்தேன் - திங்கள் இரவும், செவ்வாய் இரவும் !!
இன்னமும் "என் பெயர் டைகர்" 250 பக்கங்கள் என்னை உக்கிரமாய் முறைத்துக் கொண்டு நிற்கும் போது - போராட்டக் குழுவின் அரைகூவல்கள், தலீவரின் சாந்த முகத்தைப் போலவே சாதுவாய்த் தெரிவதில் வியப்பில்லையோ ? என்னதான் டெர்ரர் face காட்ட எக்கச்சக்கமாய் எத்தனித்தாலும், அந்தப் பிஞ்சு முகங்களுக்கு அது ஒத்து வருமா - என்ன ? தை பிறந்தால் வழி பிறக்குமோ - இல்லையோ - "எ.பெ.டை" பிறந்தால் எனக்குக் கொஞ்சம் மூச்சு விட நேரம் பிறக்கும் ; மூச்சு விட நேரம் பிறந்தால் மற்றவை தொடரும்! என்ற நம்பிக்கையோடு - இ.பி..பா. போராட்டத்தை டெரர் பாய்ஸ் & girls (!!) கைவிடுமாறு கேட்டுக் கொள்வோமா folks ?
Before I sign off - ஒரு ஜாலியான குட்டிப் புள்ளிவிபரம் ! நமது ஆன்லைன் தளத்தில் பதிவாகியுள்ள வாடிக்கையாளர்களின் விபரங்களையும், சமீபமாய் (6 மாதங்கள்) ஆன்லைனில் விற்பனையாகியுள்ள இதழ்களின் விபரங்களையும் ஜூ.எ. எனக்குக் காட்டினார் ! அங்கு பதிவாகியுள்ளதில் 30% - பெண்களே ! (Maybe தம் வீட்டுப் பெண்களின் பெயர்களில் பிரதிகளை நம் நண்பர்கள் வரவழைத்திடவும் வாய்ப்புண்டு தான் !) And அவர்கள் தவறாது வாங்குவது நமது 'தல' சாகசங்களையே !! ஆண்களிடம் மட்டுமன்றி - மகளிரிடமும் இரவுக் கழுகார் ரொம்பவே popular என்பது புரிகிறது !!
சென்ற வாரம் சிவகாசியில் என்னை தயக்கத்தோடு சந்தித்த அன்பு நண்பர் ராஜசேகர் கூட - தன் இல்லத்தரசி ஒரு டெக்ஸ் ரசிகை என்று குறிப்பிட்டது நினைவில் உள்ளது ! இரண்டு பெரிய பாகெட் கடலை மிட்டாய்களை என்னிடம் தந்தவர் - தனது குட்டிப் பெண் வாரிசு தரை முழுக்க காமிக்ஸ் இதழ்களை நிரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மத்தியில் உற்சாகமாய்க் குதிக்கும் சின்னதொரு வீடியோ க்ளிப்பைக் காட்டிய போது - பசியோ, களைப்போ பெரிதாய்த் தோன்றவில்லை ! ஆந்தைகள் உறங்கும் வேளையிலும் விழித்துக் கொண்டு பணி செய்யும் சுமைகள் எல்லாமே இது போன்ற ஒற்றை நொடிகளின் மனநிறைவுகளின் முன்னே இலவம் பஞ்சுப் பொதியாய்த் தன் காட்சி தருகின்றன ! சொல்லுங்களேன் - நாள் முழுக்கப் புன்னகையோடு சுற்றி வர இது போன்ற காரணங்கள் போதாதா ? Bye for now !! Have a great weekend !!