நண்பர்களே,
வணக்கம். பெங்களூரில் ஒரு நண்பர் உண்டு ; பெரியதொரு பைக் ரசிகர் அவர் ! ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் ! வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் ! சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் ! அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது ! இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும் ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது ! So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன ! தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை ! இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் ! ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது ! Anyways - all's well that ends well ! தொடருவோமே எப்போதும் போலவே !
விலையில் / பக்க நீளத்தில் அக்டோபரின் இதழ்களுள் முதன்மையாய் நின்றிடும் தோர்கலின் "சாகாவரத்தின் சாவி" அட்டைப்பட first look இதோ !இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் ! So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் ! என்ன - இரண்டாவது கதைக்கான டிசைன் கொஞ்சம் ஆக்ஷன் நிறைந்ததாய்த் தோன்றியதால் அதனை முன்னட்டைக்குப் புரமோஷன் தந்துள்ளது மட்டுமே மாற்றம் !
கதையின் மொழிபெயர்ப்பு நமது சீனியர் எடிட்டரின் கைவண்ணம் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் ; அதே போல எடிட்டிங்கின் பொருட்டு கதை # 2-க்குள் நான் நுழையவிருப்பதாகவும் அதே பதிவில் சொல்லியிருந்தேன் ! முதல் பாகம் பெரிதாய் சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன ! கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் ! முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது ! So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் ! திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள் பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் ! தற்போது மின்னலாய் தலைதூக்கி நிற்கும் மின்வெட்டுப் பிரச்சனை பெருசாய் வேட்டு வைக்காது போயின் புதன்கிழமை (30-sept ) நமது கூரியர்கள் புறப்படும் தினமாய் அமைந்திடும் !
கதையை முழுசாய் படித்துப் பார்க்கும் போது சமீப நாட்களில் நண்பர்களில் ஒருசாரார் வலியுறுத்தி வரும் - சகஜ நடை சாத்தியமாகி இருப்பதாகவே பட்டது ! 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் ! இந்த வார இறுதிக்குள் ரிசல்ட் தெரிந்து விடும் எனும் போது எனது ஈரைந்து விரல்கள் தவிர இன்னொரு பத்து விரல்களும் எங்கள் வீட்டிலிருந்தே குறுக்கப்பட்ட நிலையில் காத்திருப்பது நிச்சயம் !
இம்மாதத்து இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ஒரே அட்டைப்படமும் - இதோ உங்கள் முன்னே !
இந்தப் பதிவை நான் டைப் செய்யத் தொடங்கும் பொழுது தான் திருத்தங்கள் முடிந்த நிலையில் இது நமக்குக் கிட்டியது எனும் பொழுது - தற்போதையத் தயாரிப்புப் பணிகளுள் மிகப் பெரிய bottleneck தலைகாட்டுவது அட்டைப்பட டிசைனிங்கினில் தான் ! அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு ! இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே ! (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் !) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு ! பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version ! (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது !! )
Moving on, 2 வாரங்களுக்கு முந்தைய பதிவில் நான் ஜாலியாய் preview கொடுத்திருந்த கதைகளின் டிஜிட்டல் பைல்களை முழுமையாய் கோரிப் பெற்று கவனத்தை ஒவ்வொன்றின் மீதும் செலுத்த முனைந்தேன் ! (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது ! தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது ! So வேறு வழியே இன்றி PANDEMONIUM தொடரினை கடாசிடும் அவசியம் நேர்கிறது !!
அப்புறம், சமீபமாய் பிரெஞ்சில் வெளியாகியுள்ள ஆல்பங்களின் ரிப்போர்ட் வழக்கம் போல் படைப்பாளிகளிடமிருந்து நமக்கு வந்திருந்தது ! மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது ! Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது ! ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ! இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை ! மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் ! அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் ! இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது ! அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் !! தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் ! நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது ! இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ! ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ! எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது ! 'அய்யய்யோ..ஆரம்பிச்சாச்சா ?' என்ற அபாய மணிகள் மடிப்பாக்கங்களிலும், பேடா நகரங்களிலும் , மங்கள நகரங்களிலும் ஒலிக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயமே - ஆனால் படைப்பாளிகள் முயற்சிக்கும் புதுப் புது பாணிகளை அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது இது போன்ற தகவல்களின் (தற்போதைய) பின்னணி !
அப்புறம் புதுக் கதைகளின் குவியலுக்குள் உலக காமிக்ஸ் ரசனைகளின் ஒரு பிரபலமான கதைக்களம் கொண்டதொரு புதுத் தொடரும் கண்ணில் பட்டது ! அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை ! என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் ! இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ! ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் ! உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை "வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் ! 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys ? தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா ? யோசித்துப் பாருங்களேன் guys !! And I repeat - I am NOT looking at this for 2016 !
புறப்படும் முன்பாய் சின்னதொரு கோரிக்கை மட்டுமே ! சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் ! அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை! அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது ! உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் ! ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது ! இது எப்போதுமே உங்கள் தளமே என்பதில் என்றைக்கும் மாற்றம் இராது !
நான் கோருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் : 'இவன் இந்தக் கட்சியா ? - அந்தக் கட்சியா ? ' ; 'இவன் அவருக்கு நெருக்கமானவனா - எனக்கு தூரத்திலிருப்பவனா ?' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் ! கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் ! ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் ! So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் ! Thanks for reading folks ! மீண்டும் சந்திப்போம் - எல்லாம் நலமே !!
And - இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட !! (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது !! ) Good night !!