Powered By Blogger

Saturday, September 29, 2018

கண்களின் கதையிது...!


நண்பர்களே,

உஷார் : நெடும் பதிவு ahead & நெட் தின்னும் பதிவும் கூட !!! 

வணக்கம். ஒரு வசீகரிக்கும் கற்பனைக்கு இன்று வயது 70 ! நிஜத்தைச் சொல்வதானால் நம் வீட்டில் யாருக்கேனும் பிறந்த நாள் என்றால் கூட இத்தனை ஆரவாரமிராது நம்முள் ! ஆனால் எங்கோ ஒரு தூர தேசத்தில், முகமறியா ஒரு மனிதர் உருவாக்கியதொரு காமிக்ஸ் நாயகருக்கு இன்றைக்கு நாமெல்லாம் (at least நம்மில் பெரும்பாலானோர்) வாயெலாம் பல்லாய்த் திரிகிறோமென்பது அந்தக் கற்பனையின் வலிமைக்கொரு testimony ! Hail TEX WILLER & the Bonelli family !! அந்தக் குடும்பத்தின் முனைப்புகள் மட்டும் வேகமெடுத்திருக்காவிடின் இன்றைக்கு நமக்கேது இந்த ரேஞ்சர் அணியின் பரிச்சயம் ?!

இத்தாலியில் கொஞ்ச காலம் முன்பாகவே டெக்ஸின் இந்த மைல்கல் தருண சிலாகிப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டிருக்கிறார்கள் ! இந்த 70 ஆண்டுப் பயணம் சார்ந்த முக்கிய நினைவுகளைத் தாங்கியதொரு கண்காட்சி மிலனில் நடந்து வருகிறது ! ஒரு மொபைல் கண்காட்சியோ இத்தாலியில் தென்கோடியிலிருக்கும் ரோம் நகரத்திலிருந்து – ஒவ்வொரு பெரிய புத்தக ஸ்டோராகப் பார்த்துப் பார்த்துப் பயணித்து வருகிறது – TEX நினைவுகளையும் இதழ்களையும் சுமந்து கொண்டே! தவிர அவர்களது வலைப்பக்கத்தில்; Facebook-ல்; Instagram-ல் என சகல தளங்களிலும் அதகளம் செய்து வருகிறார்கள்! எழுபதுக்கே அந்த ரகளை எனும் போது அடுத்த மேஜர் மைல்கல்லான YEAR 75-க்கு என்னவெலாம் அதிரடிகள் காத்துள்ளனவோ ?! And அவர்கள் அணுகுண்டுகளைக் கொளுத்திப் போடும் வேளையில் நாமும் நம் சத்துக்கேற்றார் போல ஏதாச்சும் சீனி வெடியையாவது தயார் பண்ண வேண்டி வருமன்றோ? So இப்போவே 2023-க்கு துண்டு விரித்து வைக்கணுமோ ? அதுக்கோசரம் தலையை இப்போதே உருட்டத் துவங்கிடணுமோ ? 

Back to the present… THE DYNAMITE SPECIAL !
மொக்கை போடாத ஒரு மொக்கை இதழாக இதை அமைத்திட வேண்டுமே என்ற ஆதங்கம் – 2017-ல் துவக்கம் கண்டு விட்டது – நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த கணமே ! டெக்ஸின் நீ-ள-மா-ன இந்த சாகஸத்தின் முதல் துளிர் என் மண்டைக்குள் விட்டது 2016-ன் ஏதோவொரு பொழுதில் மிலனின் காமிக்ஸ் மியூசியத்தின் இந்த ஒரிஜினல் இத்தாலிய இதழ்களைப் பார்த்த கணத்தில் தான்! பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகள் சகலருமே ரொம்பவே சீராய், இத்தனை - இத்தனை பக்கங்களில் ஆல்பங்கள்; இத்தனை ஆல்பங்கள் இணைந்ததே ஒரு மினி தொடர் ; இத்தனை சுற்றுகள் கொண்டதே ஒரு நெடுந்தொடர் – என்ற திட்டமிடலில் பக்காவாக இருப்பார்கள் ! So ஒரு புதுக்கதை பற்றியோ ; தொடரின் சுவாரஸ்ய ஆல்பங்களின் விபரங்கள் பற்றியோ தெரிந்து கொள்வது அத்தனை பெரிய பிரயத்தனமாக இருப்பதில்லை ! ஆனால் போனெல்லியில் ; அதுவும் குறிப்பாய் TEX கதைக்குவியலுள் கதையே வேறு !

- இதழ் 130-ல் துவங்கிடும் கதை அந்த இதழில் ஒரு 10 பக்கங்கள் ஓடும்…

- தொடரும் 131-ல் முழுசுமாய் தடதடக்கும்...

- அப்புறம் 132-ல் ஒரு 19 பக்கத்தில் மங்களம் போட்டிருப்பார்கள் !

So ஒரு கதையின் முழுமையையும் கண்டுபிடிக்கவே நெட்டில் உருட்ட வேண்டி வரும் ! அப்புறம் தான் அந்தக் கதை நமக்கு சுகப்படுமா ; சுமார்ப்படுமா ? என்ற அலசல்களெல்லாம் ! ஆனால் இந்தத் தலைநோவுகளுக்கெலாம் அவசியங்களின்றி – லட்டு மாதிரி ஒரிஜினல் இதழ்களையே புரட்ட முடிந்திடும் போது வேலை சுலபமோ சுலபமாகிடும் தானே ? And அது தான் நேர்ந்தது மிலனில் அந்த ஞாயிறின் மதியம் ! ‘தல‘யை கையைக் கட்டி ‘தர தர‘வென இழுத்துப் போகும் அந்த ராப்பரைப் பார்த்த பொழுதே ஜெர்க் அடித்தது – ‘என்னங்கடா பண்ணுறீங்க?‘ என்று ! புரட்டத் தொடங்கினால் கதை ஓடுது… ஓடுது… சன் டி.வி.யின் மெகாத் தொடர் நீளத்துக்கு! ஒரிஜினலான இந்த சாகஸத்தின் black & white படைப்புகளின் பக்க நீளம் 511 ! மிஞ்சிப் போனால் 330 பக்க MAXI டெக்ஸ் கதைகளே நாம் அது வரைக்கும் முயற்சித்திருந்த மெகா கதைகளெனும் போது – இது மெகாவுக்கு மம்மியான இதழாக அமைந்திடக்கூடுமென்று மனதில் பட்டது ! அந்த நொடியில் TEX 70 பற்றிய ஞானமெல்லாம் இருந்திருக்கவில்லை என்பதால் எனது டயரிக் குறிப்புகளில் இந்தக் கதை பற்றிய விபரங்களைக் குறித்துக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டேன் ! அன்றைக்கே – அங்கேயே உருட்டிய போது நான் எடுத்த notes-களில் தான் DYNAMITE ஸ்பெஷலின் கதை # 2 கூட இடம்பிடித்திருந்தது ! இந்த b&w சாகஸத்தின் நீளமோ 266 பக்கங்கள் ! So இதுவுமே எனது டயரிக்குள் தஞ்சமானதோடு சரி- அப்போதைக்கு!

ஓராண்டு கழிந்த நிலையில் 2017-ன் மத்தியில் – நடப்பாண்டுக்கான அட்டவணைத் தயாரிப்புக்கான வேளை புலர்ந்திருக்கையில் – “TEX 70” காத்துள்ளது என்ற அறிவிப்பு மாதா கோவில் மணியோசையைப் போல நாலாதிக்குகளிலிருந்தும்  வந்து சேர்ந்திருந்தது ! So ஒரு அதிரடி ஸ்பெஷல் இதழ் வெளியிட வேண்டி வருமென்ற போதே என் டயரிக் குறிப்புகளைத் தான் புரட்டத் தோன்றியது ! 511 பக்க மெ-காாாாா சாகஸம் என் தலைக்குள் ஜிங்கு ஜிங்கென்று ஆடித் தீர்க்க – அதை வெளியிட “டைனமைட்” ஒரு சூப்பரான களமாகிடக்கூடும் என்ற எண்ணம் வலுவாகத் தொடங்கியது ! அது மட்டுமன்றி – இத்தனை பெரிய கதையை ”முழு வண்ணத்தில்” எனத் திட்டமிட்டால், அது இன்னமும் தெறிக்கச் செய்யுமே என்ற வேகமும் சேர்ந்து கொண்டது ! தொடர்ந்த நாட்களில் நெட்டில் இந்த நெடுங்கதை சார்ந்த விமர்சனங்கள்-அலசல்கள் என்று தேடத் துவங்கினேன் ! இத்தாலிய ரசிகர்கள் ஒட்டு மொத்தமாய் 'ஆஹா...ஓஹோ.." என்று சிலாகித்திருப்பதே சகல இடங்களிலும் கண்ணில் பட்டது !   அப்புறமென்ன ? விக்கிரமாதித்த மன்னரின் தாத்தாவே வந்தாலும் தலைக்குள் குடிகொண்டுவிட்டிருந்த வேதாளத்தை இறக்கிட முடியாதென்ற அளவுக்கு இந்தக் கதையோடு ஒன்றிப் போய் விட்டது மனசு ! 

அப்புறமும் “We want more எமோஷனல்!” என்று நீங்கள் கேட்பது போலவே எனக்குள் ஒரு பீலிங்கு! சரி… இன்னொரு taut ஆன black & white கதையையும் வால் சேர்த்து விட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன் ! எது? எது? எது? என்றபடிக்கே டயரியில் விரல்களை ஓடவிட்ட போது “266” என்ற பக்க நம்பரோடு நின்ற “தெற்கே ஒரு தங்கத் தேட்டை” பக்கமாய் ஹால்ட் அடித்தேன் ! இதுவுமே நெட்டில் செமத்தியாக review களை ஈட்டியிருந்தது இத்தாலிய ரசிகர்களிடம் மாத்திரமென்றில்லாது - பிரெஞ்சு வாசகர்களிடமுமே ! 

511 + 266 = 777 ! என்று ஏதோவொரு கூட்டணிக் கணக்கு தலைக்குள் ஓடிய மறுகணமே – “கண்டேன் மணாளனை; அதாச்சும் மணாளன் நம்பர் 2-ஐ!” என்று குஷியாகி விட்டேன்! (இதில் கொடுமை என்னவென்றால் - black & white கதையினைப் பின்னாளில் வர்ணமூட்டிய வேளையில் ஏதோ காரணத்துக்காக 4 பக்கங்களைக் குறைத்து விட்டனர் !! So வர்ண edition 507 பக்கங்களே !!) 70-வது வருட மலருக்கு ரூ.700 விலையில் 777 பக்க இதழ் என்றால் செமையாகப் பட்டது ! அடுத்த நொடியே – “நைனா… 777 என்பது சாத்தானின் நம்பர் என்பது ஒரு நம்பிக்கை ! So உஷார் !” என்றதொரு குரலும் உள்ளிருந்து கேட்டது ! அட வழக்கம் போல நமது ஹாட்லைன் ; தந்திலைன் ; புறாத்தூதுலைன் என்று எதை எதையாவது எழுதிப் போட்டால் பக்க எண்ணிக்கைகளை ஜாஸ்தியாக்கிடலாமென்ற தைரியம் இருந்ததால் டைனமைட்டின் திட்டமிடல் – சமோசாவுடனும், காபியுடனும் முடியும் பற்பல கூட்டங்களைப் போல என்னுள் இனிதே நிறைவுற்றது ! So பந்தாவாய் 2017-ன் அட்டவணையில் விளம்பரத்தையும் போட்ட கையோடு – மாமூல் பணிகளுக்குள் நுழைந்து விட்டேன்! 

அந்த அட்டவணை விளம்பரத்தில் நாம் பயன்படுத்தியிருந்த அந்த டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் திசைகளில் துப்பாக்கிகளை முழக்கிக் கொண்டிருக்கும் ஸ்டில் ரொம்பவே impressive ஆக இருப்பதாய்த் தோன்றிட – அன்றைக்கே நமது ஓவியரைக் கூப்பிட்டு, அதையே ஒரு பெயிண்டிங்காகவும் போட்டுத் தரச் சொல்லியிருந்தேன்! அவருமே அதைச் சூட்டோடு சூட்டாய்ப் போட்டுக் கொணர – ”ஆங்… இது டைனமைட்டுக்கு” என்றபடிக்கே பத்திரப்படுத்தி விட்டேன்!
இதற்கிடையே சென்றாண்டின் நமது “Early Bird” பேட்ஜ் தயாரிக்க வேண்டியிருந்த போது அதற்கானதொரு படத்தைத் தேடி நெட்டை உருட்டிய சமயம் இன்னொரு ஸ்டில் சிக்கியது ! டெக்ஸ் நிலவொளியில் நடந்து வர, அவரது தலைக்கு மேலாயொரு இரவுக் கழுகு ! பேட்ஜாக அதைச் செய்யச் சொன்ன சமயமே, 'இதுவுமே கூட டைனமைட்டின் அட்டைக்கு நல்லா வருமே?' என்ற எண்ணம் எழுந்தது! மறுக்கா – ஓவியர் – மறுக்கா இன்னொரு TEX ஓவியம் – மறுக்கா உள்ளே வைத்துப் பத்திரப்படுத்துதல் என்ற routine தொடர்ந்திட – “ஒன்றுக்கு இரண்டாய் ராப்பர் டிசைன்கள் ரெடி; So டைனமைட் இதழின் தயாரிப்பு டைமில் அட்டைப்படம் சார்ந்த பிடுங்கல்கள் எழாது !" என்று தைரியமாகத் திரிந்தேன்!
2018-ம் புலர்ந்து – துவக்க மாதங்களும் தடதடத்து, ஒரு மாதிரியாய் ஏப்ரலில் நிலைகொண்ட போது தான் வயிற்றுக்குள் ஒரு இனம்புரியா பீதி படரத் தொடங்கியது ! பந்தாவாய் “இரத்தப் படலம் தொகுப்பு + டைனமைட் ஸ்பெஷல் – என 2 மெகா இதழ்களுமே ஈரோட்டில் ரிலீஸ்!” என்று நான் அறிவித்திருந்தது எத்தனை பெரிய குடாக்குத்தனம் என்ற புரிதல் கொணர்ந்த பீதி அது ! 852 பக்கங்கள் – மூன்று ஆல்பங்களாய் இரத்தப்படலத்துக்கு ; 778 + பக்கங்கள் டைனமைட்டுக்கு எனும் போது – 1620 மொத்தப் பக்கங்கள் ஆகஸ்டுக்கு அவசியமாகிடும் என்ற கணக்கைப் போட்டுப் பார்க்கப் பார்க்க, வியர்க்கத் தொடங்கியது ! And மாமூலான பணிகளுக்கு இடையே இந்த ஸ்பெஷல் இதழ்களும் இணைத்தடத்தில் travel ஆகிட வேண்டியதிருக்கும் எனும் போது – என் முன்னே எஞ்சியிருந்த 4 மாத அவகாசம் செம துக்கடாவாய்த் தோன்றியது! ”மீசையிலே மண் ஒட்டுமே என்று பார்த்தாக்கா – முகரையே இரத்தக்களரியாகிடும் தம்பீ!” என்று லாஜிக் முன்வைத்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்த இயலவில்லை ! ”ஆங்… ஆகஸ்ட் லட்சியம்; இல்லாங்காட்டி ‘தல‘ பிறந்த நாளுக்கு முன்பாய் நிச்சயம்” என்று டைனமைட்டை அக்டோபருக்கு ஜகா வாங்கியது அதன் பிற்பாடே ! மேற்கொண்டு 2 முழு மாதங்கள் கிடைக்கின்றன என்ற போதே – காற்று வாங்கப் போயிருந்த தைரியமானது வீடு திரும்பியது ! ”முடிச்சுக்கிடலாம்… முடிச்சுக்கிடலாம்!” என்றபடிக்கே நாய் சேகரின் முறைப்போடு ஒரு பஞ்சுமிட்டாய் கோட் போட்டுக் கொண்டு ”இரத்தப் படலத்துக்கும்”; ஈரோட்டுக்கும் தயாராகத் தொடங்கினேன்!

ஆகஸ்டும் புலர்ந்திட… இரத்தப் படலமும் மலர்ந்திட… ஈரோடும் களைகட்டிட – ‘கடவுள் இருக்காரு குமாரு!‘ என்றபடிக்கே ஊர் திரும்பினேன் குஷியாய் ! ஆனால் அப்போதே வேறு மாதிரியான சில பயங்கள் இலவச இணைப்புகளாய் தோளில் தொற்றிக் கொண்டிருந்தன! இரத்தப் படலமும், அதன் making-ம் ஆண்டவன் புண்ணியத்தில் அழகாய் அமைந்து போயிருக்க – தொடரும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுமே இனிமேற்கொண்டு “இ.ப.”வின் அளவுகோல்களோடே எடை போடப்படுமே – அதற்கான தொடர் நியாயங்கள் செய்திட நமக்கு சாத்தியமாகிட வேண்டுமே ?!” என்பது Mr.பயம் # 1 ! அவருக்கு அடுத்தபடியாக நின்ற மிஸ்டர் பயம் # 2 – எனக்குள் குடிபுகுந்திருந்ததொரு சன்னமான flatness ! 

"வீட்டில் விசேஷம் வருது… சொந்தக்காரர்களுக்குச் சொல்லணும்… சமையலுக்கு ஏற்பாடு பண்ணனும்…துணிமணி வாங்கணும்...வர்றவங்களுக்கு தங்குற  ஏற்பாடு செய்யணும்  என்று அலுத்துக்  கொண்டே பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று வந்திருப்போம் ; பரபரவென சில பல மாதங்கள் அலைந்திருப்போம் ! அந்த முக்கிய நாளும் புலர்ந்து, எல்லாமே அமர்களமாய் நடந்தும் விட்டிருக்கும் ! 'இது சரியாக வருமா ? அதை ஞாபகமாய்ச் செய்திருப்போமா ? இதைக் கோட்டை விட்டிருப்போமோ ?' என்றெல்லாம் அடிமனசுக்குள் பதட்டத்தைக் கிளப்பியிருந்த அத்தனை சமாச்சாரங்களுமே - துளிகூட தலைகாட்டாது - எல்லாமே வழுக்கிக் கொண்டே smooth-ஆக ஓடியிருக்க, சந்தோஷமாய் சொந்த-பந்தகளெல்லாம் விடைபெற்ற பிற்பாடு – “ஷப்பா… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுத்து!” என்றபடிக்கு காலியான வீட்டின் கூடத்தில் அமர்ந்திருப்போம் ! மனதில் ஒரு திருப்தி வியாபித்திருப்பதை உணரும் நொடியிலேயே ஒரு மெலிதான வெறுமையும் கைகோர்த்திருப்பதைப் புரிந்திட முடியும் ! ”அந்த நாள் வந்தும் விட்டது… போயும் விட்டது !” எனும் போது – வீட்டில் தெரியும் வெறுமை, மனதிலும் பிரதிபலிப்பதை உணர முடியும் ! இனி மறுக்கா இப்படியொரு சந்தோஷம் சாத்தியமாகிடுமோ ? என்ற மௌனமான குழந்தைத்தனமான ஏக்கத்தை சொல்லவும் முடியாது ; விழுங்கவும் தெரியாது – மந்தமானதொரு சிரிப்போடு – all is well என்பதாகச் சுற்றி வருவோமல்லவா ? அதே syndrome தான் எனக்குள்ளும் – இரத்தப் படலம் & ஈரோடு என்ற உச்சங்களின் பிற்பாடு ! சத்தியமாய் இரண்டுமே அத்தனை சிறப்பாய் அமைந்தது எங்களது எந்தவொரு பெரிய திட்டமிடலின் காரணத்தினாலுமல்ல ! எல்லாமே தாமாய் அதனதன் இடங்களில் விழுந்து வைக்க, ஒட்டுமொத்தமாய் முன்னே நின்று கொண்டு ‘ரைட்… ரைட்!' என்று குரல் தருவது மட்டுமே எனது பொறுப்பாக இருந்து வந்தது. So எதிர்பாராது கிடைத்த எக்ஸ்ட்ரா சந்தோஷம் சேர்ந்து கொண்ட போது – ”அடுத்த மெகா இதழும் இதே போல அழகானதாய் அமையாது போயின் ஏமாற்றங்களின் பரிமாணம் கூடிப் போய் விடுமே ?” என்ற பயத்தோடு, எனது இனம்புரியா வெறுமையும் சேர்ந்து கொள்ள, டைனமைட்டுக்கு நிரம்பவே starting troubles !

And எப்போதுமே இது போன்ற 300… 400… 500 பக்கங்களது கதைகளெனில் – ‘மொத்தமாய் பார்த்துக்கலாம்‘ என்றே பொழுதை ஓட்டிவிடுவதில் நான் கில்லாடி! நம்மவர்களும் தடதடவென டைப்செட்டிங் பணிகளை 100-100 பக்கங்களாய் முடித்து, என் மேஜையில் அடுக்கித் தள்ள – ரொம்பச் சீக்கிரமே 800 பக்கக் குவியல் என்னை மிரட்டலாகவே முறைக்கத் துவங்கியது ! ஒரு நெடுங்கதையை எடிட் செய்யும் போது – நீண்ட இடைவெளிகள் இருத்தல் என்றைக்குமே சரிப்படாது ! கதாப்பாத்திரங்களுக்குள்ளேயான பேச்சு முறைகள் ; இந்தாளை ‘வாங்க... போங்க‘ என்று குறிப்பிட்டோமா ? ‘வா-போ‘ என்று எழுதியிருந்தோமா ? போன்ற சங்கதிகள்  மறந்து விட்டால் – 'ஏக் தம்'மில் கதை படிக்கும் உங்களுக்குக் கடுப்பாகிப் போகும் ! So தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க வேண்டுமெனில், பிட்டத்துக்குக் குளிர பெவிகால் தடவிக் கொண்டாக வேண்டுமென்பது புரிந்தது ! ஆனால் அநியாயத்துக்கு ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் தான் நமது மற்ற தொழில்களின் நிமித்தம் வேலைகள் சூடுபிடிக்கத் துவங்கின ! உள்ளூரிலும், வெளியூரிலும் சுற்று ; இதர பணிகள் சார்ந்த தேடல்கள் என்று நாட்கள் tight ஆக ஓடிட, “டைனமைட்… டைனமைட்…” என்று துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கைகள் போலான signals மனதில் ஓடிக் கொண்டே இருந்தன!

குட்டி போட்ட பூனை போகுமிடத்துக்கெல்லாம் குட்டிகளையும் கவ்விக் கொண்டே போவது போல, நேரம் கிடைக்கிறதோ – இல்லையோ ; பணியாற்ற முடியுமோ - இல்லையோ ; போகிற ஊருக்கெல்லாம் டைனமைட்டின் பக்கங்களும் என்னோடே பயணமாயின! பெரும்பாலும் இது போன்ற “மொடாங்குப் பணிகளை” வீட்டிலோ – ஆபீஸிலோ வைத்துப் பார்ப்பது தான் தேவலாம் ; On the road இவற்றினுள் புகுவது சுலபமேயல்ல என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் – ஆர்வக் கோளாறு எங்கே விட்டு வைக்கிறது ?! பெங்களூருக்கும், சென்னைக்கும், சான் பிரான்சிஸ்கோவுக்கும் ‘தல‘ என்னோடு ‘வித்-அவுட்‘ பயணியாகச் சுற்றி வந்தது தான் மிச்சம் ! இனியும் தாமதித்தால் டைனமைட் மூஞ்சோடு தெறித்து விடும் என்ற நிலை எழுந்த போது வரிந்து கட்டிக் கொண்டு ராக்கூத்துக்களைத் துவங்கினேன் ! வழக்கம் போல கூர்க்காவின் விசில் சத்தமே அடுத்த 10 நாட்களுக்குத் தாலாட்டாகிப் போக – 777+ பக்கங்களும் என் மேஜையிலிருந்து மறுக்கா நமது DTP டீமின் தோளில் தொற்றிக் கொண்டன  – திருத்தங்களைச் செய்து ; டமால் – டுமீல்களை இணைத்து ; அச்சுக்குத் தயாராக்கித் தரும் பொருட்டு ! பேப்பர் விலைகள் விண்ணைத் தொடத் துவங்கிய முதல் நாளே, நமது வழக்கமான பேப்பர் சப்ளையரைக் கையைக் காலைப் பிடித்து, பேப்பர் வாங்கிப் போட்டுவிட்டிருந்தபடியால் – சுடச் சுட அச்சும் சுபமாய் முடிந்தது ! And as always ‘தல‘ - மஞ்சள் மையை மட்டும் பாயாசம் குடிப்பது போல உறிஞ்சித் தள்ளியதன் பலனாய் தகதகக்கத் தொடங்கியிருந்தார் ! All is well என்றபடிக்கே – எஞ்சியிருந்த அட்டைப்படப் பணிகள் பக்கமாய் கவனத்தைத் திருப்பினேன் ! கைவசம் ஒன்றல்ல – இரண்டு பெயிண்டிங்குகள் தயார் எனும் போது சும்மா லாத்தலாய் வேலைகள் ஆகிவிடுமென்ற எண்ணத்தில் – உள்ளே துயின்று கொண்டிருந்த 2 படங்களையும் எடுத்து வரச் செய்தேன் !

இரண்டையும் சாவகாசமாய் எடுத்துப் பார்த்தால் – லைட்டாக ‘ஜெர்க்‘ அடித்தது ! டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் பெயிண்டிங் ஒரிஜினலை அப்பயே ஈயடிச்சான் காப்பியாகப் பிரமாதமாய் அமைந்திருந்த போதிலும் – 2 குறைகள் என் கண்ணுக்கு (தாமதமாய்) தெரிந்தன ! பெயிண்டிங் போடப்பட்டதோ ஓராண்டுக்கு முன்பாக எனும் போது – அப்போதே நமது ஆந்தை விழிகள் கலைக் கண்ணோட்டத்தோடு நோக்கியிருப்பின் – திருத்தங்களைச் சாவகாசமாகச் செய்திருக்க முடிந்திருக்குமே என்று உறைத்தது ! டெக்ஸ் கண்களை இறுக மூடிக் கொண்டு, பட்டாசுச் சத்தத்துக்குப் பயந்து போய் பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு நிற்பது போலப்பட்டது ! அப்புறம் ‘தல‘யின் தலையில் தொப்பியும் நஹி ! இரண்டையுமே அவசரமாய் சரி செய்தாக வேண்டுமே என்று நமது ஓவியரை வரவழைத்து – திருத்தங்கள் குறித்து விளக்கினேன். இப்போதெல்லாமே அவருக்கும் மூப்பின் தாக்கங்கள் தெரியத் துவங்கியிருப்பதால் – இது போன்ற நுணுக்கமான பணிகளைச் செய்திடச் சிரமப்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது ! So கொஞ்சம் தயக்கத்துக்குப் பிற்பாடே - மூடிக் கிடந்த டெக்ஸின் கண்களைத் திறக்கும் முயற்சி துவங்கியது ! முதல் நாளின் பணிகளுக்குப் பின்னே பார்த்தால் – அம்மா கவனிக்காத நேரமாய் அடுப்பங்கரையிலிருந்து தீபாவளிப் பலகாரத்தை ஆட்டையைப் போடும் போது ஒரு திருட்டு முழி முழித்திருப்போமே – அச்சு அசலாய் அதே ஜாடையில் தான் டெக்ஸ் நின்றிருந்தார் ! 'ஊஹும்… இது சரியில்லை; மறுபடியும் திருத்தம் ப்ளீஸ் !' என்று பணிக்க – மறு நாளோ குமரிமுத்துவின் ராஜபார்வையோடு நம்மவர் சுட்டுக் கொண்டிருந்தார் ! ஏற்கனவே அதே நேரத்தில் தான் மாடஸ்டியின் அட்டைப்படப் பஞ்சாயத்தும் இங்கே பதிவில் ஓடிக் கொண்டிருக்க – “ஆத்தாடியோவ்! இந்த அழகில் டெக்ஸை உங்கள் முன்னே நிறுத்தினால் – Ola-வைப் பிடித்து உருட்டுக்கட்டைகளோடு கிளம்பிவிடுவீர்களென்ற பயம் தெறிக்க வைத்தது ! மறுபடியும் திருத்தம் சொன்ன போது ஓவியருக்கே கை உதறத் துவங்கி விட்டது ! சரி, இதற்கு மேலும் பாவப்பட்ட மனுஷனை இம்சிக்க வேண்டாமென்று தோன்ற – எனக்கு நானே சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன் ! ”ஆங்… என்னயிருந்தாலும் இந்தப் படத்தை குட்டியாகவேணும் 2018 அட்டவணையில் ஏற்கனவே போட்டு விட்டோம் ! இதையே இப்போது டைனமைட்டின் ராப்பராகவும் போட்டால், ஒரு பழைய feel தான் மேலோங்கும் ! So இந்தப் புளிக்கும் பழம் வேண்டாமே !” என்று நினைத்துக் கொண்டேன்!

பெயிண்டிங் # 2-ஐ கையிலெடுத்துப் பார்த்தால், அதிலுமே லேசாய் டெக்ஸின் கண்கள் இடுங்கிக் கிடப்பது போல் பட்டது ! கன்னங்களும் லேசாய் அதைப்பாய் இருப்பது போலத் தோன்ற – மேலோட்டமாய் மட்டும் அவற்றை சரி செய்யச் சொன்னேன் ! அதைச் செய்தான கையோடு – அட்டைப்படத்துக்கான எழுத்துக்களைப் பதித்து தயாராக்கிப் பார்க்கும் முஸ்தீபுகளில் இறங்கினாம். வழக்கமாய் இது போன்ற ஸ்பெஷல் இதழ்களின் ராப்பர்களை நமது டிசைனர் பொன்னனிடம் ஒப்படைப்பதே வழக்கம் ; ஆனால் இம்முறையோ மனஷன் ஜவ்வாய் இழுத்தடிக்க, உள்ளேயே அடியேனின் மேற்பார்வையில் சிறப்பாய் ஆணிகளைப் பிடுங்கிவிடலாமென தயாரானோம் ! ஆனால் எனக்கும் ; இந்த டிசைனிங் மெருகேற்றல்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இன்னொரு தபா நிரூபணமானது ! ”ஆங்… இங்கே சிவப்பாக்குங்க… அங்கே பச்சையாக்குங்க!” என்று சரமாரியாய் நான் பிராணனை வாங்கிட – பலனாகக் கிட்டிய டிசைன்களைப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை ! Here's a sample....!
இதற்கே செப்டம்பர் முதல் வாரமாகியிருக்க, உள்ளுக்குள் உடுக்கை அடிக்கத் துவங்கியிருந்தது ! அதற்குள்ளாக பொன்னனும் ஒரு டிசைனை அனுப்பியிருக்க – தேவலாமே?! என்றுபட்டது! அவசரம் அவசரமாய் அதையொரு பிரிண்ட் போட்டுப் பார்த்தால் ‘திரு திரு‘வென முழிக்கத் தான் தோன்றியது ! ராப்பராக்கிப் பார்க்கும் போது ஒரு களையே இல்லாமல் ரொம்பவே மீடியமாய்த் தான் தோன்றியது ! அவசரம் அவசரமாய் பின்னணி கலரை மாற்றிப் பார்ப்போம் ; எழுத்துக்களை அமைக்கும் இடங்களை மாற்றிப் பார்ப்போம் என்று ஏதேதோ செய்தும் பருப்பு வேகக் காணோம் ! இதோ அந்தத் தருணத்து பணிகள் : 


மேலோட்டமாய்ப் பார்க்கையில் இவையெல்லாமே மோசமில்லை என்று தோன்றினாலும், அந்தக் காலத்து போட்டோ ஸ்டூடியோக்களின் வாசல்களில் குடையை ஊன்றிக் கொண்டு தாத்தாக்கள் ஸ்டைலாக இது போல் போஸ் கொடுத்து நிற்கும் படங்களை தொங்க விட்டிருப்பதே எனக்கு நினைவுக்கு வந்தது !! குடைக்குப் பதிலாய் இங்கே ரைபிள் !! பதட்டத்தில் உதறத் தொடங்க – அட… இத்தாலியில் ஓவியர் இருக்கிறாரே – அவரை அவசரமாய் ஒரு custom made ராப்பராத் தயாரிக்கச் சொல்லிக் கேட்போமே ! என்றபடிக்கு அவரை நாடினோம் ! அவர் மின்னல் வேகக்காரர் என்பதால் நாலே நாட்களில் ஒரு டிசைனைத் தயாரித்திடக் கூடியவர் என்ற தெம்பு பிறந்தது. கதையிலிருந்து வரும் அந்த கைதுப் படல சித்திரத்தையும் அட்டையில் incorporate செய்து ராப்பர் உருவாக்குமாறு அவருக்கான reference-களை மெயிலில் அனுப்பினோம்! அவரும் பிரமாதமானதொரு பென்சில் ஸ்கெட்சை மறுதினமே தயாராக்கி விட்டார் ! Here it is !!
“சூப்பரப்பு… சூப்பரப்பு” என்று thumbs up தந்திட – தொடர்ந்த மூன்றாவது நாளில் கலர் செய்து டிசைனையும் அனுப்பி விட்டிருந்தார் ! ஆர்வத்தோடு மின்னஞ்சலைத் திறந்தால் – நவீன பாணியிலான கலரிங் செய்திருப்பதைப் பார்த்துப் பேந்தப் பேந்தத் தான் முழிக்க முடிந்தது! ரொம்பவே அடர் வர்ணங்கள் என்றிருக்க – நிச்சயமாய் இதனை முன்னட்டைக்குப் பயன்படுத்த முடியாதென்றேபட்டது !
தலையைப் பிய்க்காத குறையாக அதனிலும் ஏதேனும் வர்ண மாற்றங்கள் செய்த முடிகிறதா ? என்று முயற்சிக்கத் துவங்கினோம் ! ஆனால் இதில் திருத்தங்களை டிஜிட்டலாக் செய்ய முற்படும் நேரத்திற்கு – புதிதாகவே ஒரு டிசைனைப் போட்டு விடலாமே என்றும் ஞானோதயம் உதிக்க – இம்முறை கொஞ்சம் தெளிவான விபரங்களோடு இத்தாலிய ஓவியருக்கு yet another அவசர டிசைனுக்குக் கோரிக்கை வைத்தோம் ! துளி கூடத் தயங்காது அவர் இம்முறையும் மின்னலாய்ச் செயல்பட்டு ஒரு டிசைனைப் பூர்த்தி செய்து அனுப்பினார் ! தனது முந்தைய டிசைனில் நமக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை என்பதாலேயே அடித்துப் பிடித்து இன்னொரு படம் கோருகிறோம் என்பதைப் புரிந்து கொண்டாரோ என்னவோ – ‘அவசியமாகும் மாற்றங்களைக் குறித்து மின்னஞ்சலில் விளக்குங்கள்; உடனே செய்து தருகிறேன்‘ என்றும் குறிப்பு அனுப்பியிருந்தார் ! நமக்குத் தான் வாலை மட்டுமேனும் உள்ளே விட்டுப் பார்க்கும் அளவுக்குக் கதவு திறந்திருப்பின் – பரங்கிக்காய் மண்டையையே நுழைத்துப் பார்க்கும் பேராசை உண்டாச்சே ?! “இன்ன-இன்ன திருத்தங்கள் பளீஸ்!” என்று கோரினோம் ! அவையும் ஏக் தம்மில் முடிந்து வந்த பிற்பாடு பிரிண்ட் அவுட் போட்டு மேஜையில் போட்டுக் கொண்டேன். 

அந்தக் காலங்களில் டைரக்டர் / நடிகர் விசு அவர்களின் மூத்த சகோதரர் (பெயர் ராஜாமணி என்று நினைக்கிறேன் ) நாடகங்களிலும், அப்புறமாய் விசு அவர்களின் படங்களிலும் மட்டுமே நடிப்பார். ஆந்தை விழிகள்; கழுத்தை வான்கோழி போல ‘திருக்‘ ‘திருக்‘கென்று திருப்பும் mannerism என்று வலம் வருவார்…! அவரைப் போலவே நானும் கழுத்தை இப்டிக்கா… அப்டிக்கா என்று திருப்போ திருப்பென்று திருப்பி டிசைனின் நிறை / குறைகளைப் பரிசீலிக்க முயன்றேன்! நான் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் கிட்டேயிருந்து பார்த்து வரும் மைதீன் சிரிப்பை எப்படி அடக்குவானோ தெரியாது – ஆனால் புதுசாய் யாரேனும் அன்றைக்கு என்னைப் பார்த்திருந்தால் புள்ளையாண்டான் மோனாலிசா ரேஞ்சுக்கான பெயிண்டிங்குகளை மதிப்பீடு செய்யும் நிபுணர் போலும் என்று நினைத்திருப்பார்கள்! என் முன்னே அப்போதிருந்த படங்கள் இவையே !! 

எல்லாம் ஓ.கே. ஆனால் வர்ணங்கள் இன்னும் சித்தே வித்தியாசமாய் இருந்தால் தேவலாமோ ? என்ற எண்ணம் தலைதூக்கியது ! விடாதே… பிடி… என்று பொன்னனை மறுபடியும் கதவைத் தட்டி – கலர் மாற்றம் செய்யக் கோரினோம் ! 

அன்றிரவு வீட்டுக்குப் போனால் தூக்கமே பிடிக்கவில்லை! தேதி 18 ஆகியிருந்தது ! உட்பக்க அச்சு முடிந்து ; பைண்டிங்கில் ராப்பருக்காக வெயிட்டிங் என்ற நினைப்பு குடைந்து எடுத்தது. நடுராத்திரியில் – ‘ஊஹும்… கலர் மாற்றத்திலும் முழுசாய் திருப்தி ஏற்படாது போனால் – அவசர மாற்றத்துக்கென என்ன செய்வது ?‘ என்ற பயம் தொற்றிக் கொண்டது ! அப்போது தான் டெக்ஸின் தீபாவளி மலருக்கென போட்டிருந்த 2 டிசைன்களுள் ஒன்று நினைவுக்கு வந்தது ! அதில் ஒரு கோடியில் டைகர் ஜாக் செம காண்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார் கையிலாரு கத்தியோடு ! அந்த டிசைனை எடுத்துக் கொண்டு; டைகருக்குக் கல்தா தந்து விடலாமென்று ராவில் மகாசிந்தனை எழ – காலையில் முதல் வேலையாக அதை ஸ்கேன் செய்து "டைனமைட்டின் ராப்பர் இது தான் !" என்று சொல்லி வைத்தேன் ! நல்ல நாளைக்கே நமக்கு மறையில் இறுக்கம் கம்மி என்பது தெரிந்தவர்களே நம்மாட்கள் என்பதால் – சத்தமேயின்றி அந்த டிசைனையும் பிராசஸ் செய்தார்கள் ! மாலையப்பனின் அந்த டிசைனுமே Tex-ன் ஒரிஜினல் கவரின் வார்ப்பு என்பதால் ஈயடிச்சான் காப்பியாகவே அமைந்திருந்தது – முகத்தில் மட்டும் லேசான தேஜஸ் குறைந்து ! அதையே முறைத்துப் பார்த்தவனுக்கு ‘பளிச்‘சென்று இத்தாலிய ஓவியரின் முதல் டிசைனின் முகமும் அதே ஆங்கிளில் இருப்பது நினைவுக்கு வந்தது ! So “மாப்பிள்ளை இவர் தான்; ஆனாக்கா அவர் போட்டிருக்கும் சட்டை அவரோடது இல்லை” என்ற கதையாக – இத்தாலிய மண்டையை இந்திய ஓவிய உடலோடு இணைக்கும் ராஜதந்திரத்தைச் செய்து முடித்தோம் ! அப்புறம் அதிலும் டைனமைட் எழுத்துக்களைக் கோர்த்து சின்னச் சின்ன நகாசு வேலைகளை டிசைனர் பொன்னனைக் கொண்டு செய்து முடித்த போது தேதி செப்டம்பர் 21 ! இதோ - அந்த முயற்சியின் பலன்கள் !! முதல் படம் - நம் ஓவியரின் TEX முகத்தோடு ! தொடரும் படம் - இரவல் முகத்தோடு ! 

அதற்கிடையே செம குளிர்ச்சியாய் ஒரு பிஸ்தா பச்சையோடு பொன்னன் அந்த இரண்டாவது இத்தாலிய ராப்பரையும் மெருகூட்டியிருக்க - நானோ ‘சேது‘ சீயான விக்ரம் பாணியில் தானிருந்தேன்! “ஆங்… இத்தாலிலே மாலையப்பன்; டெக்ஸ் கூட பொன்னன் ; ‘தல‘யோட தலையை காணோம் ? பச்சை தான் எனக்குப் புடிச்ச கலரு” என்று என்னென்னவோ கலவைகள் தலைக்குள் சடுகுடு ஆடின ! இறுதியாக 2 டிசைன்களையுமே பிரிண்ட் போட்டு “மேஜையில் வைத்து ஒப்பிட்ட போது தான் சன்னம் சன்னமாய் பிராணன் திரும்பியது!
இரண்டில் ஒன்று நிச்சயம் தேறிவிடுமென்ற நம்பிக்கை எழுந்த சமயம் தேதியோ Sept 22 ! 'பளிச்' பச்சையில் டெக்ஸ் மந்தகாசமாய் புன்னகைக்கும் ராப்பரா ? அடர் சிகப்பில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ராப்பரா ? என்ற கேள்வி மட்டுமே முன்நின்றது ! 

பச்சையில் டெக்ஸின் கண்களைப் பார்க்கப் பார்க்க, ஓவியரின் ஆற்றலைக் கண்டு வியக்காதிருக்க முடியவில்லை எனக்கு ! வழக்கமான அடிதடி பாணி டிசைனல்ல என்பது புரிந்தது ; “டைனமைட்“ என்ற அதிர்வேட்டுப் பெயருக்கு ‘தல‘யின் soft still சுகப்படுமா ? என்ற கேள்வியும் இருந்தது தான் ! நீங்களுமே இதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களென்ற பயமும் இருந்தது ! ஆனால் – ஆண்டு # 70 என்னுமொரு முக்கிய தருணத்தில் THE BIG MAN மட்டுமே ஒளிவட்டத்தில் பிரதானமாய் இருந்திட வேண்டுமென்று எனக்குள்பட்டது ! தவிர இதுவரையிலும் நாம் முயற்சித்தே இராத இந்த வர்ணக் கலவையையும் ; டெக்ஸின் வசீகரம் செய்யும் அந்தக் கண்களையும் பார்க்க எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது ! Truth to tell – இது வரையிலும் எந்தவொரு ராப்பரிலும் டெக்ஸை நாம் இத்தனை உயிரோட்டத்தோடு சித்தரித்ததில்லை எனும் போது – இந்த மெகா இதழில் அகஸ்மாத்தாய் கிட்டியிருந்த வாய்ப்பை நழுவ விட மனது ஒப்பவில்லை ! Come what may - சாத்துக்களோ ; ஏச்சுக்களோ – இந்த டெக்ஸ் வசீகரத்துக்காக வாங்கிக் கொள்ளலாமென்று தீர்மானித்த போது தேதி செப்டம்பர் 23 ! 

பார்சல்களை உங்கள் கைகளில் ஒப்படைக்க நான்கே நாட்கள் பாக்கி என்ற போது – தொடர்ந்த அத்தனை பணிகளுமே மின்னலை நாணம் கொள்ளச் செய்யும் வேகத்தில் அரங்கேறின ! பிராசஸிங்… பிரிண்டிங்… நகாசு வேலைகள்… பைண்டிங் என அத்தனையும் அடுத்த நாலே நாட்களில் தயாராகிட – பேக்கிங் செய்யத் தயாராகயிருந்தார்கள் நம்மாட்கள்!

உப்ப்ப்…Just miss !! என்ற பெருமூச்சோடு மதியம் வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது தான் “ஸ்வீட் எடு… கொண்டாடு” என்று உதித்தது மண்டைக்குள் ! "இஷ்டாப்… டப்பாக்களை அடைத்து விடாதீர்கள்… ஒரு சாக்லெட் வைத்தாக வேண்டும் !" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். இப்போதெல்லாம் நான் வேட்டியோடு ஆபீஸுக்கு வந்து சேர்ந்து, அதை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு குத்தைப் போட்டாலுமே நம்மாட்கள் புருவங்களைக் கூட உயர்த்தப் போவதில்லை! அந்தளவுக்கு அவர்கள் அத்தனை பேருக்குமே எனது குரங்குக் கூத்துக்கள் பரிச்சயமாகிப் போய் விட்டன ! So அவசரம் அவசரமாய் ஒரு சாக்லெட் டப்பாவை வாங்கி வந்து, அவற்றையும் உள்ளே சேர்த்து பேக் செய்யத் தொடங்கினார்கள் ! வீட்டுக்குப் போய் சோற்றில் கைவைத்த நொடியே தலைக்குள் இன்னொரு பீதி அலாரம் அடித்தது ! குண்டு புக்… செம கனம்… சாக்லெட்டை நசுக்கித் தொலைத்து விட்டால் - புக் சகலமும் சாக்லெட் கோட்டிங் போட்டது போலாகி விட்டால், அதைச் சுத்தம் செய்ய சர்ஃப் தேவைப்படுமோ இல்லையோ – என்னைக் குமுறியெடுக்க வண்டி வண்டியாய் சர்ஃப் / ஏரியல் தேவைப்படுமென்று புரிந்தது ! மறுநொடியே ஆபீஸுக்கு ஓடிப் போய் – 'ஒரு கண்ணாடிக் கவருக்குள்ளே சாக்லெட் & card-ஐ வைத்த பிற்பாடு, அப்புறமாய் பேக்கிங் பண்ணுங்க ; சாக்லெட் நசுங்கி பிதுங்கினாலும் கவருக்குள்ளேயே கிடக்கட்டும் ! என்ற மறுகணமே கச்சிதமாய் அந்த சைஸுக்கான பாலிதீன் கவரைப் பிடித்துக் கொணர்ந்தான் மைதீன் ! அதன் பின்னே நடந்ததெல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே !!

So thus ends the tale of a cover !! இந்த தபா ராப்பரை உங்கள் கண்ணில் காட்டாதே டகுல்பாஜி வேலைகளோடு நாட்களை நகர்த்தியதன் பின்னணியும் இதுவே ! அது மாத்திரமன்றி – புக்கின் கம்பீரத்தோடு இந்த டிசைன் இணைந்தே உங்களை எட்டிப் பிடித்தால் தேவலாம் என்றும் நினைத்தேன் ! இந்த பாணி ராப்பரில் உங்களுள் நூற்றுக்கு நூறு ஏற்பு இருக்குமென்ற கற்பனையில் நான் மிதந்திடவில்லை ! நிச்சயமாய் ‘ஙே‘ என்ற குரல்களும் இருந்திடத்தான் செய்யுமென்று யூகித்ததால் – முன்கூட்டியே ராப்பரை மட்டுமே இங்கே களமிறக்குவது உசிதமென்று நினைக்கவில்லை ! 

இப்போதும் – “இத்தனை கூத்தடிச்சு இதைத் தான் தயார் பண்ணினாயாக்கும்?” என்ற சில பல நண்பர்கள் அபிப்ராயப்படப் போவது உறுதி ! "இதுக்குப் பதிலா - அது தேவலாம் ; அதுக்குப் பதிலா மூணாவது பரவால்லே !!" என்ற அபிப்பிராயங்களும் இருக்கக்கூடுமென்றும் புரிகிறது ! ஆனால் அந்தக் கண்களின் வசீகரம் won the day for me என்பதே bottomline !! இந்த உருவாக்கத்தின் பின்னணியை ; இதனை நான் பிடிவாதமாய்த் தேர்வு செய்ததன் காரணத்தையும் சொல்லி விட்டால், என்னளவுக்கு இலகுவாய் உணருவேன் என்பாலேயே இந்த ஒப்பித்தல் படலம் ! தவிர, அந்த முகத்தையும், கண்களையும் தொடர்ந்து பார்த்திடுவோர் லயித்திடாது போக மாட்டார்களென்ற நம்பிக்கையும் என்னுள் ! அந்த எண்ணத்தோடே புறப்படுகிறேன் guys ! மதியிலா மந்திரியாரும், ஜெரெமியாவும் காத்துள்ளனர் எனது வாரயிறுதியை  சுவாரஸ்யமாக்கிட ! 

A small note too before I sign off : இந்த நெடும் பதிவு நிச்சயமாயொரு பீப்பீ smurf-ன் பீற்றல் படலம் அல்ல ! In fact - இத்தனை காலம் குப்பை கொட்டியும் ஒரு முக்கிய இதழின் ராப்பருக்கு இத்தனை அல்லலா ? என்ற கேள்வி எழும் போது நானொரு பேக்கு போல் காட்சி தருவேனென்பதும் புரிகிறது ! But ஒவ்வொரு மாதமும் நாம் அடிக்கும் கூத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாலேயே இந்த behind the scenes story ! 

Bye all! அக்டோபர் இதழ்களை தொடர்ந்து அலசிடுங்களேன் ப்ளீஸ் ! And HAPPY BIRTHDAY TEX ! We love you !

P.S : ஆன்லைனில் அக்டோபர் இதழ்களுக்கு ஆர்டர் செய்திட இங்கே க்ளிக் ப்ளீஸ்http://lioncomics.in/monthly-packs/539-october-2018-pack.html

Thursday, September 27, 2018

மீண்டுமொரு "4 புக் மாதம்" !

நண்பர்களே,

வணக்கம். ஆப்பிரிக்காவா ? அமெரிக்காவா ? துபாயா ?  உடுமலைப்பேட்டையா ? என்ற விவாதம் இங்கே செம பிசியாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் - நமது அலுவலகமுமே  பிசியோ பிசி !! ஒரு பிரேக்குக்குப் பின்பாய் மீண்டுமொரு "4 புக் மாதம்" ; அதிலும் ஒன்று செம புஷ்டியான பயில்வான் எனும் போது பைண்டிங் இறுதிக் கட்டப்பணிகள் ; பேக்கிங் ; டெஸ்பாட்ச் என்று பர பரப்பிற்குப் பஞ்சமே லேது !! பற்றாக்குறைக்கு 2019 அட்டவணைக்கான வேலைகளிலும் நமது டிசைனிங் டீம் பிசியாக வேண்டியிருப்பதால், ஆபீசுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்கு எதிலாவது மும்முரமாய் இருக்கும் காட்சிகள் தான் !! And இன்றைக்கு அதே ஜோரில் உங்களது கூரியர்கள் சகலத்தையும் பேக் பண்ணி அனுப்பியும் விட்டார்கள் !! So நாளைய காலையில் நமது 'தல' யின் 70 -வது பிறந்தநாளை  கொஞ்சம் அட்வான்சாகவே நாம் கொண்டாடிடலாம் !! 

இத்தாலியில் நிச்சயமாய் ஏதேனும் blockbuster இதழாகத் திட்டமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம் !! அதனை இப்போதுவரைக்கும் under wraps வைத்திருக்கிறார்கள் எனும் போது - நாமுமே அந்த பாணியை இந்த ஒரு தபா மாத்திரமே கடைபிடித்துப் பார்ப்போமே என்று தோன்றியது !! புலியைப் பார்த்து புளி கோடு போட்டுக் கொண்ட கதையாய் இருந்தாலுமே - இக்ளியூண்டு சஸ்பென்ஸ் நல்லது தானே ? So டப்பிகளை  உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன் ! ஆகையால் இப்போதைக்கு கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் இதழின் அட்டைப்பட தரிசனம் மட்டுமே !!

TEX - டைனமைட் ஸ்பெஷலின் அட்டைப்படமுமே ஒரு இத்தாலியத் தயாரிப்பு தான் !! நமக்கென பிரேத்யேகமாய் இத்தாலிய ஓவியர் போட்டுத் தந்திருக்கும் இந்த டிசைன் வழக்கமான - நமது  run of the mill பாணியில் இராது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ! So பயங்கரமான கம்பு சுத்தும் ஆக்ஷன் ராப்பரில் இராது  என்பது மட்டுமே இப்போதைக்கு preview தகவல் !!  ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதால் - "மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க" என்று சொல்வது தானே பொருத்தம் ?!

விடியும் வரைக் காத்திருங்கள் !! See you around folks !! Bye now !Monday, September 24, 2018

ஒரு அதகள ஞாயிறுக்குப் பின்னே..!

நண்பர்களே,

வணக்கம். எனக்கு ஒரு ஆசை !! ஒரேயொரு தபா நம்மாட்களை அமெரிக்க தேர்தல் நேரத்தில் அங்கனக்குள்ளே கூட்டிட்டுப் போய் களத்திலே இறக்கி விட்டுப் பார்க்கணும் !! நம்ம தேர்தல் பிரச்சார யுக்திகள் ; களப்பணிகள் ; பொட்டி கடத்தல் ; வேட்பாளர் கடத்தல் ; கோஷங்கள் ; மார்தட்டல்கள் ; பன்ச் டயலாக்குகள் ; பேன்னர்கள் ; கட்-அவுட்கள் ; நல்ல "குத்துக்கள்" ; நொள்ளைக் குத்துக்கள் என்று ராப்பகல் பாராது நாம் சுற்றிச் சுழல்வதைப் பார்த்தாக்கா -  வெள்ளை மாளிகையே சரண்டர்னு வெள்ளைக் கொடியாட்டி விடாதா ? மனது வைத்தால் - பவர்ஸ்டாரைக் கூட பவருக்கு கொணரும் பவர் நமக்குண்டு என்பதை நேற்றைக்கு இங்கே தரிசித்த அனுபவமிருக்கிறதே - ஆத்தாடியோவ் ; ஆயுசுக்கும் மறவாது !! லேசாயொரு கோடு போட்டதுக்கே - தார் ரோடு காண்டிராக்ட் ; எட்டு வழிச் சாலை காண்டிராக்ட் என்று flyover கட்டாத குறையாய் அதகளம் செய்துவிட்டீர்களே ; இதுக்கு முன்னே ஆளாளுக்கு பம்பாயில் என்னவா இருந்தீங்க சாமீஸ் ? Absolutely smashing show !!! நேற்றைய ஒரு நாளின் பார்வைகளின் எண்ணிக்கை மட்டும் : 3295 !!!!!

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் - இந்த மும்முனைப் போட்டியில் பெரிய fighter ஆக இருப்பாரென நான் எதிர்பார்த்த இத்தாலியின் பிரதிநிதி - கந்துவட்டிக் கோவிந்தன் ரேஞ்சுக்கு பொசுக்கென்று பின்தங்கி விட்டதே !! போட்டி மூன்று contestants மத்தியிலும் கடுமையாய் இருக்குமென எதிர்பார்த்தால் - வெகு சீக்கிரமே அது - ஆப்ரிக்கா  vs அமெரிக்கா என்ற நேருக்கு நேராகி விட்டது !! 

KENYA !!!! 

உள்ளதைச் சொல்வதானால் - எனது வோட்டு இக்கடயே இருந்திருக்கும் !! முற்றிலும் புதிய களம் ; ட்ரெண்ட் தொடரினில் நாம் பார்த்து ரசித்த கதாசிரியர்-ஓவியர் கூட்டணி ; நிறைய ஆக்ஷன் ; நிறைய fantasy ; மெலிதான விஞ்ஞானம் என்று இந்த 5 பாக த்ரில்லரில் நாம் ரசித்திட ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உண்டு !! Icing on the cake - இந்தத் தொடர் ஒரு நீண்டு செல்லும் பயணத்தின் முன்னோடி மாத்திரமே ! KENYA - 5  பாகச் சுற்று நிறைவுற்ற பின்பாய் அடுத்து NAMIBIA என 5 பாகங்கள் ; அதற்கும் பின்பாய் AMAZONIA என இன்னொரு 5 part த்ரில்லர் என்று ஏகமாய் புதுவுலக தரிசனங்கள் காத்துள்ளன !! ஆனால் KENYA-வின் வாசக ஸ்கேன்லேஷன் சுற்றில் இருப்பதாலேயே ஆப்பிரிக்காவுக்கு அல்வா கிட்டியுள்ளதென்பது உங்களின் பின்னூட்டங்களை படிக்கும் போது சங்கடத்தோடு புரிகிறது ! 

நாமிந்தத் தொடரை முயற்சிப்பதாகவுள்ளோம் என்பது ஸ்கேன்லேஷன் முயற்சியின் பின்னணியில் உள்ளோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ; ஆனால் இது போன்ற ஆர்வங்களின்  மேலோங்கல்களின் flipsides இத்தகைய நெருடல்களே !! Please guys - வரும் நாட்களிலாவது creative-ஆக ஏதேனும் செய்திட நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்கள் உழைப்புகளையும், நேரங்களையும் நமக்குத் தந்திட முன்வாருங்களேன் - நண்பர் கார்திகைப் பாண்டியனைப் போல ; நண்பர் J -வைப் போல ?!! சின்னதொரு வட்டத்தோடு  நின்று கொள்ளும் உங்களின் மெனெக்கெடல்களை நமது வட்டத்தின் முழுமைக்கும்  கொண்டு சென்றது போலவும் இருக்குமன்றோ ? And 15 ஆல்பங்கள் கொண்டதொரு நெடும் பயணத்தின் முனைப்பிலேயே இன்றைக்கு நாம் மோவாயைத் தடவிக் கொண்டு நிற்கும் சூழல்களும் எழுந்திராதல்லவா ? பவுன்சரின் புதுக் கதைகளும் வெகு சமீபமாய் இதே கதிக்கு ஆளாகியிருப்பதைக் கேள்விப்பட்டேன் ! Phew !!!

The same goes for pdf files of our back issues too guys !! வாட்சப் குழுக்களில் நமது முந்தைய இதழ்களின் pdf-களை ஸ்கேன் செய்து சுற்றில் விடுவதுமே  - பின்னாட்களில் நாம் அவற்றை மறுபதிப்பிட எண்ணிடும் பட்சத்தில் பொதுவான ஆர்வங்களை மட்டுப்படுத்திடாதா ? Grey மார்க்கெட்டை ஒடுக்க இது செம வழி என்று சொல்லும் அதே மூச்சில் - இது நமது எதிர்கால prospects-களையுமே ஒடுக்கிடக்கூடும் என்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் ப்ளீஸ் ? நமது  மார்க்கெட் சின்னது  ; நமது ஆற்றல்களும் சன்னமானது எனும் போது - எந்தத்  திக்கிலிருந்தும் சாத்தியமாகிடும்  ஒத்தாசைகளும் நமக்கு பலம் தர வல்லவைகளே !! ஆனால் பலங்களே, நமது பலவீனங்களுமாய் ஆகிடச் செய்வானேன் ? இது யாரை நோக்கியும் விரல் நீட்டும் எண்ணத்துடனான பதிவல்ல ; KENYA சார்ந்த disappointment-ன் வெளிப்பாடு மாத்திரமே ! So இதன் மீதான விவாதங்களில் இறங்கி இந்த நொடியின் சந்தோஷ மெருகைக் குலைத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? வரும் நாட்களிலாவது இந்த அரூப இணைதடம் வேண்டாமே - என்பது மாத்திரமே இந்த நொடியின் எனது கோரிக்கை !!

தொடரும் நாட்களில் உரிமைகளுக்கான ஏற்பாடுகளை செய்த கையோடு - FUN WITH 500 அறிவிப்பினை உங்கள் முன் கொணர்ந்திடுவேன் !! அதற்கு முன்பாய் - ஆக்டொபர் இதழ்கள் என்றொரு சமாச்சாரத்தை மறந்தே போயிருந்தோமல்லவா ? அதனை நினைவூட்டுகிறேன் - வியாழன்று உங்கள் கூறியர்கள் புறப்படும் guys !! Bye all..See you around !!

P.S : அச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??

Without a doubt : அமெரிக்கா தான் !!

P.P.S :  அப்புறம்  KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில்

Sunday, September 23, 2018

501....!

நண்பர்களே,

வணக்கம். ரொம்ப ரொம்ப நாளாகிப் போச்சு - இத்தகையதொரு உத்வேகத்தைப் பார்த்து !! பகலில் பின்னூட்டங்களுக்குப் பதில் போட்ட கையோடு ஜேம்ஸ் பாண்டுடன் உலா கிளம்பிய போது 260 -ல் நின்றது உங்களின் எண்ணப் பகிர்வுகளின் எண்ணிக்கை ! மதியமாய் லேசாய்க் கட்டையைக் கிடத்திய பின்பாய் மீண்டுமிங்கே எட்டிப்  பார்த்தால் அந்த நம்பர் 400-க்கு சித்தே குறைச்சல் என்று காட்டுகிறது  !! Oh Wow  என்பதைத் தாண்டி வேறென்ன சொல்லவென்று தெரியவில்லை ! புதுசாய் - பெருசாய் எதைத் திட்டமிட்டாலும்  அவற்றிற்கு நீங்கள் காட்டக் காத்திருக்கும் வாஞ்சைகளின் பரிமாணங்கள், நாளுக்கு நாள் பிரமாண்டமாகிப் போவதைப் பார்க்கும் போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் நாட்டியமாடுவதைத் தவிர்க்க இயலவில்லை !! எகிறிடும் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் ஆற்றல் எனக்கு சாத்தியமாகிட வேண்டுமே தெய்வமே - என்ற பயத்தில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் அவை !! 

இந்தாண்டு முன்னெப்போதையும்விடவும் கூடுதலான கதைகளைத் / தொடர்களை பரிசீலித்து வந்திருக்கிறேன் !! சொல்லப் போனால் கடந்த 2 மாதங்களில் புதுக் கதைகளைப்  பிரிண்ட்-அவுட் எடுத்துப் பார்க்கும் / படிக்கும் பொருட்டு நாங்கள் வாங்கித் தள்ளிய A4 பேப்பர் பாக்கெட்களில் எண்ணிக்கை - தலீவர் முன்னாட்களில் நமக்கு எழுதித் தள்ளும் கடிதக் கணைகளையும் விடக் கூடுதல் என்பேன் ! நிறைய westerns ; நிறைய fantasy ; நிறைய கார்ட்டூன்ஸ் ; நிறைய கி.நா. ; நிறைய சுய சரிதைகள் (!!!) என்று கலந்து கட்டி எல்லா ஜானர்களிலும் மண்டையை நுழைத்துப் பார்க்க யத்தனித்துள்ளேன் !! ஓரளவுக்கு promising என்று தென்படும் கதைகளை நமது மின்னல் நிகர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ஒப்படைத்தால் அடுத்த நான்காவது நாள் முழு ஸ்கிரிப்டும் இங்கிலீஷில் என் கைகளில் தவழ்ந்திடும் !! So சமீப மாதங்களில் உங்கள் பெயரைச் சொல்லி வண்டி வண்டியாய் புதுச் சரக்குகளை (சு)வாசித்துள்ளேன் !! பற்றாக்குறைக்கு நமது படைப்பாளிகளும் நமக்கு உதவட்டுமே என்ற எண்ணத்தில் - அமெரிக்காவிலோ ; இன்ன பிற ஆங்கிலம் பேசும் மார்க்கெட்களிலோ விரைவில் வெளியாகவுள்ள காமிக்ஸ்களின் ஆங்கில PDF களையும் அனுப்பித் தந்துள்ளனர் !! So  புரியா பாஷையின் பக்கங்களைப் புரட்டி பெ..பெ..பெ.. என கதையை யூகிக்க முயன்றிடும் நேரத்துக்கு, அவற்றை முழுசாகவே படித்து ஒரு தீர்மானத்துக்கு வர உதவிடுகிறது !! ஆனால் இந்த வாசிப்புப் படலத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன் ! 

இப்போதெல்லாம் நாயகர்களை முன்னிறுத்தி நீண்டு செல்லும் தொடர்களை முன்போல பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாளிகள் உருவாக்க அத்தனை முனைப்பு காட்டுவதில்லை ! சுற்றிச் சுற்றி அதே கௌபாய் ; டிடெக்டிவ் என்ற மாவை அரைப்பதற்குப் பதிலாய் இப்போதெல்லாம் மூன்றல்லது ஆறு ஆல்பங்களோடு நிறைவு காணும் குறுந்தொடர்கள் ; one shots ; இரண்டே பாகங்களுடனான ஆக்கங்கள் என பயணிக்கத் துவங்கியுள்ளனர் ! Of course - சூப்பர்மேன் ; பேட்மேன் ; ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் தொடர்களில் இன்னும் எத்தனை தசாப்தங்கள் கழிந்தாலும் அந்த central figure மாறிடும் வாய்ப்புகள் இராது ! இத்தாலியிலும் அந்த "ஹீரோ" centric கதைகளின் பாங்கே சுகமாய் ஓடி வருகிறது ! ஆனால் பிரெஞ்சில் ஒரு ஓசையிலா மாற்றத்தை உணர முடிகிறது !! 

நாம் பரிச்சயம் வைத்துள்ள தொடர்களிலேயே இதனைப் பரவலாய்ப் பார்த்திடலாம் :

லார்கோ - வான் ஹாம் கையைத் தட்டி விட்டார் - போதுமிந்தத்  தொடரென்று !! ஓவியர் மட்டும் விடாப்பிடியாய் இத்னை நீட்டிக்க முயன்று வருகிறார் !

தோர்கல் 2016 க்கு அப்புறமாய்த் தொடரக் காணோம் !

ரிப்போர்ட்டர் ஜானியின் தொடர் 2010 முதல் இஷ்டாப் ஆகியுள்ளது ; தற்போது ஜானியின் புது அவதாரில் கதைகள் மெதுவாய் வெளிவருகின்றன !

ஷெல்டன் தொடரிலும் slow progress !!

கேப்டன் பிரின்ஸ் எப்போதோ done & dusted !!

கேப்டன் டைகரின் மெயின் தொடர் 2005 -ல் ஓவர் ; இளம் டைகர் கூட 2015 க்கு அப்புறமாய்க் காணோம் !

கார்ட்டூன்களில் சிக் பில் சுபம் போடப்பட்டு விட்டது !!

லக்கி லூக் & Smurfs still going strong !!

மதியில்லா மந்திரி - மூன்றோ / நாங்கோ ஆண்டுகளுக்கு ஒரு ஆல்பம் என மெது நடை போட்டு வருகிறார் !

ட்ரெண்ட் தொடர் எட்டே கதைகளோடு ஓவர் !

Of course - புதுசாய் நாயக / நாயகியரின் அறிமுகங்களோடு தொடர்கள் ரிலீஸ் ஆகின்றன தான் ! ஆனால் அவை நாம் பழகிப் போயுள்ள அதே template-ல் இருப்பதாலோ ; அல்லது நமக்கு ரசிக்க இயலா விதத்தில் இருப்பதாலோ, என்னவோ - "கண்டேன் சீதையை !" என்ற கதையாய், புதியவர்களை நம் கரைகளுக்கு லவட்டிட முடிய மாட்டேன்கிறது ! ஆனால் - "மினி-சீரிஸ்" என்று களமிறங்கும் புதுக் கதைகளுள் நிரம்பவே சுவாரஸ்யம் உள்ளதாய் தோன்றுகிறது !! So சிறுகச் சிறுக, நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராது - கதைக் களங்களை மையமாக்கி உருவாக்கப்படும் கதைகளுக்கு நாமும் ரசனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் போலும் !!

Of course - 'நீ ரைட்ல போய்க்கோ ; இல்லாங்காட்டி லெப்ட்ல போய்க்கோ ; இல்லே ரிவர்ஸில் கூடப் போய்க்கோ - ஆனாக்கா என் வழி எப்போவும் போல தனி வழியா தானிருக்கும்' என்றபடிக்கே ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டை உருவம் மட்டும் புயலாய் முன்னே தட தடத்துப் போகிறது !! 

Somethings will never change I guess !!

ஆப்ரிக்காவா ? அமெரிக்காவா ? இத்தாலியா ? வோட்டெடுப்பை இங்கே carry forward செய்யுங்களேன் guys !! Bye now !! See you around !!

Saturday, September 22, 2018

ஒரு பயணத்தின் டைரிக் குறிப்புகள் !!

நண்பர்களே,

வணக்கம். 499-க்கும்… 501-க்கும் மத்தியிலான பதிவு தான் ! அதை எழுதப் போவதும் பழகிப் போன பழமான அடியேன் தான் ; வாசிக்கப் போவதும் ஜாலியான நீங்கள் தான் ! இதைப் படித்த மறுநொடிகளிலேயே இந்திய எல்லைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பிறந்து விடப் போவதில்லை தான் ; எட்டுவழிச் சாலைக்கு அர்த்தங்கள் புரிந்துவிடப் போவதில்லை தான் ; தலைவரின் கட்சிக்குப் பெயரும் புலப்பட்டு விடப் போவதில்லை தான் ! வழக்கமான கொட்டாவிகளை விட்டபடிக்கே – ”புரட்டாசி மாசம் ஊரே விரதம்னா சிக்கன் விலை குறைச்சலா இருக்குமோ?” என்ற மகா சிந்தனைகளோடே லுங்கியோடு தெருவில் இறங்கி நடைபோடப் போகிறோம் தான் ! ஆனாலும் என்னமோ தெரியலை – “பதிவு # 500“ என்றால் லைட்டாக ஜெர்க் அடிக்கத் தான் செய்கிறது ! இது போன்ற கிலோமீட்டர்கல் தருணங்கள் (!!!) எனும் போதே அந்த ப்ளாஷ்பேக்குகளுக்கே உரித்தான பேக்கிரவுண்ட் மியூசிக்கும் ; தமிழ் சினிமாவின் வட்ட வட்டமான முட்டைகளையும் தவிர்த்திட முடியாதே ! ‘திரும்பிப் பார்க்கிறேன் பேர்வழி!‘ என்ற கதையாக, கடந்து வந்துள்ள பாதைகளின் பக்கமாய் பார்வையை ஓட விடுவதும் ஒரு தவிர்க்க இயலா சம்பிரதாயம் என்பதால் – வடிவேலு பாணியில் கொஞ்சம் ‘டர்ன்‘ பண்ணி நின்று கொள்கிறேன் – நினைவலைகளை மீட்டெடுக்க வசதியாக ! And a word of extra caution please: பாதித் தூக்கத்தில் மசங்க மசங்க எழுந்த கையோடு ‘பதிவிலே என்ன எழுதியிருக்கான்?‘ என்று வாசித்திட முற்படும் சங்கத்தின் உறுப்பினராக நீங்களிருப்பின் – “விட்டுப் போன அந்தத் தூக்கத்தை மறுக்கா அரவணைக்க முயற்சிகளைத் தொடருங்க பாஸ்!” என்பதே எனது அறிவுறுத்தலாய் இருந்திடும் !

500 !! ஒரு சாதனையின் பரிமாணமாய் நிச்சயமாய் இந்த நம்பரை நான் பார்த்திடவில்லை ! மாறாக – ஒரு ஜாலியான பயணத்தில், ஒட்டு மொத்தமாய் நாம் அடித்து வந்திருக்கும் லூட்டியின் பரிமாணமாகவே இது எனக்குத் தென்படுகிறது !! எவ்வித எதிர்பார்ப்புமின்றி, 'அட...சும்மாக்காச்சு எழுதித் தான் பார்ப்போமே !' என்று இந்தப் பதிவுகளின் லோகத்தினுள் புகுந்தவனையும், அவனது one dimensional எழுத்துக்களையும் இத்தனை காலம் ; இத்தனை தூரம் ரசித்தோ / சகித்தோ வந்திருக்கும் உங்களின் அன்புக்கும், ஆதர்ஷத்துக்கும், பொறுமைகளுக்கும் ஒரு ஜெயமாகவே பார்க்கத் தோன்றுகிறது ! 
பிள்ளையார்சுழி போட்ட நாளிலிருந்தே – இங்கே (நமது) காமிக்ஸ் சார்ந்த சேதிகளின்றி – கூரை மேலேறி நின்று உலகத்துக்கு ரோசனை சொல்ல முற்படும் முஸ்தீபுகளில் இறங்கப் போவதில்லை என்பதில் தெளிவாகவே இருந்தேன் ! So சுற்றிச் சுற்றி நமது இதழ்கள் பற்றி; விமர்சனங்கள் பற்றி; புத்தக விழாக்கள் பற்றி; எனது ஊர்சுற்றல்கள் பற்றி; காத்திருக்கும் தொடர்கள் பற்றியே இந்த 500 பதிவுகளும் அமைந்திருப்பது கண்கூடு! Of course – துவக்க நாட்களது பரபரப்புகளோ; ‘ஹோ‘வென ஆர்ப்பரித்த அபிப்பிராய சங்கமங்களோ பின்நாட்களில் லேசாய் மட்டுப்பட்டது நிஜம் தான் ! இருந்தாலும் – இத்தனை பதிவுகளுக்கு என்னைச் சுமந்து பயணித்த பெருமை உங்கள் ஒவ்வொருவரையுமே சாரும் ! Simply becos – கிருஸ்துமஸ் தினத்துக்கு முன்பான அந்த 2011-ன் டிசம்பரில் – பதிவுகளுக்குள் கால்பதிக்கத் துணிந்த வேளையில், இதன் ஆயுட்காலம் பற்றி எனக்குள் சத்தியமாய் பெரியதொரு நம்பிக்கையோ – எதிர்பார்ப்போ இருந்திடவில்லை!

- கைவசம் குவிந்து கிடந்த முந்தைய இதழ்களின் பாரம் !

- இரத்தப் படலம் – B&W தொகுப்பினை விற்று கரை சேர்வதற்குப் பட்ட அல்லல்கள்!

- ரூ.10/- விலையிலான இதழ்களைக் கூட வெறும் 4000 பிரதிகளே அச்சிட்டும் ஆயிரம்+ பிரதிகள் மிஞ்சிக் கொண்டிருந்த நாட்களின் அயர்ச்சி !

- கையில்… பையில்… வங்கிக் கணக்கில் வறட்சி ! நிலுவைச் சிட்டைகளிலோ புஷ்டி!

என்று பலமாதிரியான பிசாசுகள் என்னைச் சுற்றிக் கும்மியடித்துத் திரிந்து வந்த நாட்கள் 2008-2011 ! என்னளவில் ‘மூட்டையைக் கட்டிவிடலாம்‘ என்ற எண்ணமும் கிட்டத்தட்ட பதிவாகவும் செய்திருந்தது தான் ! இன்றைக்கு “500” என்ற இந்தக் குஷனோடு பின்னோக்கிப் பார்க்கும் போது – சின்னச் சின்னதான பல புள்ளிகள் ஒன்று சேர்ந்தே தற்போதைய பூக்கோலத்தைச் சாத்தியமாக்கியுள்ளது புரிகிறது! Maybe இது போன்ற ப்ளாஷ்பேக் சமயங்கள் – சன்னமான நினைவு கூர்தல்களின் அவசியங்களை வலியுறுத்தத் தான் நடைமுறைகளில் உள்ளனவோ என்றும் தோன்றுகிறது !

Random ஆக இங்கொன்றும், அங்கொன்றுமாய் என்னைச் சுற்றி அன்றைக்கு சிறகு விரித்த நிகழ்வுகள் பல ! கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களில் துளியும் ஞானமின்றி; சகலத்தையும் ஆர்டிஸ்ட்கள் மூலமாகவே பணி செய்து வந்த நாட்களவை ! அப்போது +2 மாணவனான ஜுனியர் – ஒரு ஞாயிறு மதியம் லக்கி லூக் கலர் பக்கமொன்றை என் கண் முன்னேயே பிராசஸ் செய்து, தமிழாக்கத்தோடு ரெடி செய்து நீட்ட, எனக்கோ நிலாவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனை லெவலுக்கு நிகரான உற்சாகம் ஊற்றடித்தது ! அது நாள் வரைக்கும், கலரில் இதழ்களை வெளியிடுவதென்பது தியாகராஜ பாகவதர் காலத்துப் புராதன பிராசஸிங் யுக்திகள் துணையோடு தான் என்று இருந்தவனுக்கு, கம்ப்யூட்டர்களால் இதை அழகாய், நயமாய், சுலபமாய் சாதித்துக் காட்ட முடியுமென்று புலப்பட்ட போது – எக்கச்சக்கமாய் வண்ண வண்ணக் கனவுகள் பாரதிராஜா படத்தில் வருவது போலான வெள்ளை கவுன் முதிர்கன்னிகளின் நாட்டியத்தோடு துவங்கின! 

எப்போதுமே எனக்கு செமையாய் போரடித்தால் – என்னை நானே உசுப்பிக் கொள்ள எதையாவது கோக்கு மாக்காய் செய்து வைப்பது வழக்கம் ! முதன் முதலாக ரூ.100/- விலையில் “மெகா ட்ரீம் ஸ்பெஷல்” இதழை அறிவித்ததும் இது போன்ற தருணத்தில் தான்! If I remember right, அந்த நாட்களிலும் நமது வலைத்தளத்தில் ஒரு பதிவுகள் பக்கமிருந்தது. அங்கே உங்களது அபிப்பிராயங்களை (பாராட்டுக்களை) பதிவு செய்திடுவீர்கள்; நானும் எதையோ எழுதி வருவேன் ! அந்த routine சிறுகச் சிறுக போரடிக்கத் துவங்கியிருக்க, நமது இதழ்களுமே மூக்கு முட்ட தின்ற கையோடு மதியத் தூக்கம் போடும் நடுத்தர வயதுக்காரன் பாணியில் குறட்டை விடாத குறையிலிருந்தன ! எதையாச்சும் செய்யாங்காட்டி இது சரிப்படாது என்று தோன்றிய மறுகணமே “மெகா ட்ரீம்” என்றதொரு கனவை அறிவித்து விட்டு பேந்தப் பேந்த முழிக்கத் துவங்கினேன்! அதுவே தான் நமது Comeback ஸ்பெஷல் சமாச்சாரத்திலும் ! வண்ணத்தில் லக்கி லூக்கை கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்த நொடியே – ரொம்ப காலம் முன்பாகவே நான் மறந்தே போயிருந்ததொரு உணர்வு எனக்குள் ஓடுவதை உணர முடிந்தது ! “கொலைப் படை” (ஸ்பைடர்) கதையின் ஒரிஜினல்களை கையில் ஏந்திய நொடியில் 1984-ல் அதை உணர்ந்திருக்கிறேன்! “யார் அந்த மினி-ஸ்பைடர் ?” கதையைப் பார்த்த முதல் நொடியில் எனக்குள் அது ஓடிப் பிடித்து விளையாடுவதை உணர்ந்திருக்கிறேன்! “சூப்பர் சர்க்கஸ்” இதழின் ஒரிஜினல்களை பாரிஸின் ஒரு தம்மாத்துண்டு ஹோட்டல் ரூமில் கையிலேந்தி நின்ற சமயத்தில் ரசித்திருக்கிறேன் ! அந்த “சந்தோஷ ஜிலீர்” தான் இந்தப் பயணத்துக்கே பெட்ரோல் எனும் போது, ரொம்ப காலமாய் தொலைந்து போயிருந்த அந்த வஸ்து இல்லாத காரணத்தால் தான் தடுமாற்றமே என்பதும் புரிந்தது! So 'கண்டேன் சீதையை" என கலரில் லக்கியைப் பார்த்த நொடியில் - எனக்குள்ளேயே தீர்மானித்து விட்டேன் COMEBACK ஸ்பெஷல் என்றொன்றை உருவாக்கிட ! இதை எங்கே ? எவ்விதம் விற்கப் போகிறோமென்று யோசிக்கவெல்லாம் அந்த நொடியில் தோன்றவில்லை ! ஓவராய் மண்டையை உருட்டினால் மறுபடியும் நெகட்டிவ் சமாச்சாரங்கள் சூழ்ந்து தொலைத்து  பின்வாங்கச் செய்து விடுமோவென்ற பயம் தான் ! அப்போது சென்னைப் புத்தக விழாவென்றால் வீசம்படி எவ்வளவு ? என்று கூடத் தெரியாது தான் !! So வழக்கமான அந்தக் கட்டைவிரல் காதல் மட்டுமே துணைநிற்க பணிகளை துவக்க முற்பட்டேன் ! 

வேலைகளைத் துவக்க முற்பட்ட போது ரொம்பவே சந்தோஷப்பட்டது மைதீன் தான்! அதுவரையிலும் சோம்பிக் கிடந்த ஆபீஸ் மறுபடியும் சுறுசுறுப்பாகப் போவதை உணர்ந்தோ என்னவோ – பன்மடங்கு வேகமாகி விட்டான்! கதைத் தேர்வு; மொழிபெயர்ப்பு; கலரில் பிராசஸிங்; அச்சு என்று அந்த Comeback ஸ்பெஷலின் ஒவ்வொரு பணியுமே ஏதோ புதுசாய் வேலை கற்பவனின் தள்ளாட்டத்தோடே அரங்கேறின! எத்தனை கனத்தில் ராப்பர் இருக்க வேண்டும் ? உட்பக்கங்கள் இருக்க வேண்டும் ? அச்சில் வர்ணங்கள் தெறிக்க வேண்டுமெனில் – முதன்முறையாக பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளில் எவ்விதம் வேலை செய்திட வேண்டும் ? என்று தொட்டதுக்கெல்லாம் சந்தேகங்களே தலைதூக்கின ! ஆனால் அவற்றையெல்லாம் ஒருவித உற்சாகத்தோடு தாண்டிட முயன்றது – லக்கியின் பக்கங்களை அச்சில் பார்த்த நொடி முதலாய் ! ஜுனியர் எனக்குக் கண்ணில் காட்டியிருந்த அந்த கதையையே கேட்டு வாங்கியிருந்ததால் (ஒற்றர்கள் ஓராயிரம்) கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்திருந்த அதே வர்ண ஜாலத்தை அச்சிலும் பார்த்த போது – பச்சைப் பிள்ளையைப் போல துள்ளிக் குதித்தது மனசு ! இந்தத் தரமெல்லாம் சொப்பனங்களில் கூட நமக்கு சாத்தியமென்று எண்ணியதில்லை அல்லவா - so திறந்த வாயை மூடவே தோன்றவில்லை ரொம்ப நாட்களுக்கு ! 

இதற்கிடையே கோலத்தின் இன்னொரு புள்ளியும் எட்டும் தூரத்திலிருந்தது அந்த நாட்களில் ! Oh yes – பின்நாட்களில் ஏதேதோ காரணங்களால் விலகிச் சென்றது மாத்திரமின்றி, விரோதங்களையும் தமக்குள் வளர்த்துக் கொண்டதொரு சிறு அணி தான் நான் குறிப்பிடும் அடுத்த புள்ளி ! அந்நாட்களில் நமது அலுவலகத்திற்கு அடிக்கடி விசிட் அடிப்பது மாத்திரமின்றி – சென்னைப் புத்தக விழாவில் பங்கேற்றால், கைவசமுள்ள எக்கச்சக்க ஸ்டாக்கை கரைத்து விடவும் சாத்தியப்படுமென்று சென்னையிலிருந்து வருகை தந்திடும் அந்த அணியினர் என்னிடம் வலியுறுத்தி வருவது வாடிக்கை ! ஏற்கனவே சீனியர் எடிட்டரின் மூத்த சகோதரர் வாயிலாக சுமார் ரூ.30,000/- க்கான சரக்கை ஏதோவொரு சென்னைப் புத்தக வியாபாரியிடம் 2008-ன் சென்னைப் புத்தக விழாவிற்கு அனுப்பியிருந்தோம் ! ஆனால் அந்தப் புண்ணியவான் ‘ஏவ்வ்வ்‘ என்று விட்ட எப்பச் சத்தம் மாத்திரமே சிவகாசியை எட்டியடைந்ததே தவிர, பத்து நயா பைசாவைக் கூட கண்ணில் பார்க்க முடியவில்லை ! So “சென்னைப் புத்தக விழா” என்றாலே அந்தக் கசப்பு தான் என் நினைவுக்கு வந்திட – சென்னை அணியிடம் பிடிகொடுக்காதே பொழுதைக் கடத்தி வந்தேன் ! ஆனால் ஒரு கட்டத்தில் – கையில் மலையாய்க் கிடக்கும் பிரதிகளை கரையான்கள் புசிக்கும் முன்பாய் விற்றிட வேண்டுமெனில் “சலோ சென்னை” தான் ஒரே மார்க்கம் என்பது புலனானது ! So செ.அ. (நம்ம பொருளாளர் நஹி!!) வழக்கமாய் முன்வைத்திடும் கோரிக்கைக்கு 2011-ன் இறுதியில் தலையசைத்தேன் ! BAPASI-யின் விண்ணப்பத்தைப் பெற்று, நமக்காக விண்ணப்பித்தது ; ஸ்டால் கிடைக்காது போன சூழலில் இன்னொரு ஸ்டால்காரரிடம் பேசி – 50/50 என்று ஒண்டுக் குடித்தனம் நடத்த அனுமதி வாங்கியது ; ஸ்டாலுக்கான ஏற்பாடுகள் என சகலமும் அவர்களது முயற்சிகளின் பலன்களே ! So பழைய புத்தகங்களை மட்டுமல்லாது – புத்தம்புதுசான நமது Comeback ஸ்பெஷலையும் showcase செய்திட ஒரு அழகான மேடையும் சந்தடிசாக்கில் உருவானது ! பற்றாக்குறைக்கு முதல் இதழை வெளியிட திரு.S.இராமகிருஷ்ணன் அவர்களையும், பெற்றுக் கொள்ள திரு.டிராட்ஸ்கி மருது அவர்களையும் வரச் செய்ததுமே செ.அ. தான் ! பின்நாட்களில் பாதைகள் வெவ்வேறானதும் ; விரிசல்கள் வீதி வரை அகலமானதும் துரதிர்ஷ்டங்களே ! ஆனால் நிகழ்காலத்து மனத்தாங்கல்கள், முன்காலத்து ஒத்தாசைகளை மறக்கச் செய்திடக் கூடாதென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான் ! So இந்தப் பயணத்தின் ரம்யத்துக்கு தம் பங்கைச் செய்த வகையில் அவர்களும் நம் நன்றிகளுக்கு உரியவர்களே !

நான்காவது புள்ளி – கம்பியூட்டரில் சீட்டு விளையாடக் கூடத் தெரிந்திருக்கா என்னையும் - ஒரு blog பக்கத்தினை உருவாக்க ஜுனியர் வற்புறுத்தியதொரு டிசம்பரின் மாலைப் பொழுதின் மேஜிக் என்பேன் ! வழக்கமாய் எனக்கு நேரடிப் பரிச்சயமில்லா சமாச்சாரங்களுள்  தலைநுழைக்க நான் விழைவதே கிடையாது ! ஆனால் என்னமோ தெரியலை - 2011-ன் அந்த தினத்தில் 'சரிங்கோ' என்றபடிக்கே ஜுனியரின் ஆசையை நிறைவேற்றத் துணிந்தேன் !! தொடர்ந்தது தான் நமக்குப் பரிச்சயமான அனுபவங்களாயிற்றே !! 

Last but not the least - கோலத்தின் புள்ளி # 5 : நமது மறுவருகையையும், இந்தப் பதிவுகளையும் வாஞ்சையோடு, ஆரவாரத்தோடு அரவணைத்துக் கொண்டாடிடக் காத்திருந்த நீங்களே guys !! உங்களது காமிக்ஸ் நேசம் மீது என்றைக்குமே எங்களுக்கொரு சந்தேகம் இருந்ததில்லை !! ஆனால் அந்த அபிமானம் காமிக்ஸின் நாயகர்களைத் தாண்டியும், அதன் பின்னணியில் பம்மி நின்ற எங்களையும் இத்தனை ஆதர்ஷதோடு சேர்த்தணைக்குமென்று கனவிலும் எதிர்பார்த்திடத் துணிந்ததில்லை !! So இந்த மறுவருகை எனும் கேக்கின் மீதான  icing நீங்கள் காட்டி வரும் எல்லைகளில்லா வாஞ்சையே !! இன்றைய காமிக்ஸ் பயணத்தின் ஜீவநாடியே, இந்தப் பதிவுப் பக்கமும், அதனில் பங்கேற்கும் நீங்கள் ஒவ்வொருவருமே, என்பதில்  எது இரகசியம் ? 

கண்ணை மூடிக் கொண்டால் லோகம் இருண்டே போய் விடும் ‘ என்று எண்ணித் திரியும் பூனையைப் போல (செயலாளர் நஹி!!) அந்நாட்களில் ஒதுங்கிக் கிடந்தவன் நான் ! நமது இதழ்களில் தாமதத்தைத் தாண்டி, குறைகள் எனக்குத் தெரியவே ஓராயிரம் உண்டென்பதால் – எங்கே  உங்களிடம் நெருங்கிப் பழகிடும் பட்சத்தில் அவற்றை நீங்கள் சுட்டிக் காட்டத் தொடங்கி விடுவீர்களோ, என்ற பீதியிலேயே தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வேன் - தீக்கோழியைப் போல ! ஆனால் to your eternal credit – எங்களிடம் நீங்கள் காட்டியது அக்மார்க் அன்பு மாத்திரமே என்பதை சிறுகச் சிறுக எனக்கு உணர்த்தியது இந்தப் பதிவுப் பக்கமும், ஒவ்வொரு புத்தக விழாவின் சந்திப்புமே !! ஒவ்வொரு பாராட்டையும் DTS சிஸ்டத்தின் பிரம்மாண்டத்தோடு நீங்கள் இங்கே பதிவிடும் போதும் ; ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்தையும் நீங்கள் சிலாகிக்கும் போதும் - அதன் அதிர்வலைகள் யாருக்கு என்ன மாதிரியான சேதியைச் சொல்கிறதோ இல்லையோ - என்னைப் பொறுத்தமட்டிலும் - இந்த ஆதர்ஷத்துக்கும், அன்புக்கும் அருகதையுடையவனாய்த் தொடர்ந்திட எத்தனை மெனக்கெட்டாலுமே தப்பில்லை என்ற எண்ணத்தை மாத்திரமே !! 

இந்தப் பயணத்தின் ஹை-டெக் அவதாரும், இந்தப்  பதிவுப் பக்கமுமே  ஒன்றோடொன்று இணைந்தவையே எனும் போது - துவக்க நாட்களது இதழ்களின் உற்சாகங்களும், இங்கு அதன் நீட்சியாய் ஒலித்த ஆரவாரங்களும் ஒரு ஆயுட்கால நினைவுகள் - at least என்னளவிற்காவது ! பாராட்டுக்களில் திளைத்தது ; உங்களின் ஆச்சர்ய`தாண்டவங்களின் அழகில் மெய்மறந்தது ; விழுந்த சாத்துக்களின் வீரியத்தில் பேய்முழி முழித்தது ; எனது சந்தோஷங்களை / சங்கடங்களை பகிர்ந்து கொண்டது என இங்கே அலி பாபாவின் குகைக்கு ஈடான புதையல்களைத் தேடிப் பிடித்திடச் சாத்தியமாகியுள்ளது !ஆரம்ப நாட்களில் மாதம் ஒரேயொரு (வண்ண) இதழே என்ற நிலையிலும் – முப்பது நாட்களுக்குமே உற்சாகங்களைத் தக்க வைத்தபடிக்கு வண்டியை ஓட்டிய வித்தைகளின் இரகசியத்தை மலைப்போடு பார்க்கிறேன்! Oh yes – இடையிடையே ஈஸ்ட்மென் கலரோடு; ப்ரூஸ் லீயும், ஜாக்கி சானுமே மூக்கில் விரல் வைக்கும் ரேஞ்சுக்கு இங்கே அரங்கேறியுள்ள சண்டைக் காட்சிகளின் பங்களிப்பையும் மறந்திட இயலாது! சேதமான சட்டைகளும், ஈகோக்களும் ஒரு பக்கமெனில் – கைகளில் பாப்கார்னோடு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த நண்பர்கள் இன்னொருபுறம்! 

துவக்க நாட்களில்,இங்கே என்னிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ;  பகிரப்படும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும், பதில் சொல்லா விட்டால் மண்டையே வெடித்து விடும் போலத் தோன்றுவதுண்டு! அதே போல பிசாசுமே உறங்கப் போய்விட்டிருக்கும் பின்னிரவுகளிலுமே எனது ‘டைப்பும் படலங்கள்‘ தொடர்ந்துள்ளன! கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்புவரைக்கும் ஒவ்வொரு பதிவையுமே நானே லொட்டு லொட்டென்று தான் டைப்பித்து வந்தேன்; சமீபமாய்த் தான் அந்தச் சிரமத்திலிருந்து விடுதலை கிட்டியுள்ளது! நாட்களும், பதிவுகளும், கடந்து செல்லச் செல்ல மெது மெதுவாய் சில பல புரிதல்கள் தலைக்குள் குடியேறத் துவங்கின! At no point in time – நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சாத்தியமாகிடாது என்பதைப் புரிந்த போதே – தலைக்குள் ஒரு இலகுத்தன்மை விரவியது! வலைத்தள உதைபடலில் இன்றைக்கு நான்… நாளைக்கு இன்னொருத்தர்… மூன்றாவது நாளுக்கு புத்தம் புதிதாய் ஒருத்தர் என்று சக்கரங்கள் சுழன்று கொண்டே போவது புதுயுகத்தின் அங்கமே என்பது சித்தே லேட்டாய்ப் புரிபட்டது! So வாங்கும் சாத்துக்கள் வலிக்கிறதோ - இல்லையோ; வலிக்காத மாதிரியே மூஞ்சை வைத்துக் கொள்ளும் வித்தையானது நாளாசரியாய்ப் பழகிப் போய் விட்டது !

And in many, many ways – பதிவுகளுடனான பயணத்தில் தான் எனது வாழக்கையின் ஏகப்பட்ட சந்தோஷத் தருணங்களும் கலந்துள்ளன! ‘என் பெயர் லார்கோ‘ வெளியான நாட்களின் ஆரவாரங்கள்; வான் ஹாமின் அந்த கௌ-பாய் கிராபிக் நாவல் வெளியான (முதல்) COMIC CON சார்ந்த பதிவுகள்; டெக்ஸ் வில்லரின் மறுவருகை உருவாக்கிய உத்வேகம்; LMS ; மின்னும் மரணம்; சமீபத்தைய XIII-ன் இரத்தப் படலம்; ஒவ்வொரு சென்னை விசிட் / ஈரோடு உவகை என இங்கே நான் பகிர்ந்திடக் கிட்டியுள்ள சந்தோஷ topic-கள் தான் எத்தனை எத்தனை ! அந்த 2014-ன் சுட்டி லக்கியின் அறிமுகத்தின் போது சன்னமாய் நான் பயன்படுத்தியிருந்த “நாக்கார்… மூக்கார்” வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே உல்டா செய்து இங்கே நீங்கள் பதிவிட்டு ஜமாய்த்திருந்த அட்டகாசங்களெல்லாம் “சிங்கத்தின் கிழவயதில்” பகுதிக்கான லட்டு மாதிரியான மேட்டர்களல்லவா ? LMS-ன் முஸ்தீபுகளோடு துவங்கிய “வாரமொரு பதிவு” என்ற routine இத்தனை காலமாகியும் தொடர்ந்து வருகிறதென்பதில் முதல் ஆச்சர்யக் குறி என்னதே – simply becos இதற்கு அவசியமாகிடும் உழைப்பை ஆரம்ப காலத்து ஹனிமூன் phase-க்குப் பின்பாகவும், தொடர்ச்சியாய்த் தந்திட சாத்தியமாகிடுமென்று சத்தியமாய் நாம் நம்பிடவில்லை ! பலவிதங்களில் take it easy என்று இருந்தவனை அக்மார்க் ராக்கோழியாக்கிய பெருமை இந்தப் பதிவுகளின் முதுகெலும்பாகிய உங்களையே சாரும்!

இதெல்லாம் கூட பரஸ்பர முதுகுத் தடவல்களாகத் தெரிந்தாலுமே – நம்மைத் தடதடவென புதுத் தேடல்களுள் ஆழ்த்திடுவதில் இந்தப் பதிவுகளின் பங்கை என்னால் சிலாகிக்காது இருக்க இயலாது ! பிடிக்காதவர்கள் தலையைப் பிய்ப்பது ஒரு பக்கமெனில், பிடித்தவர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவதை நிதரிசனமாய்ப் பார்த்திட இயல்வது இங்கு தானே ?

- ஒரு சிப்பாயின் சுவடுகள்

- தேவ இரகசியம் தேடலுக்கல்ல

- நிஜங்களின் நிசப்தம்

- களவும் கற்று மற

- மெல்லத் திறந்தது கதவு

- ஜேஸன் ப்ரைஸ்

போன்ற ‘கோக்கு மாக்கான‘ கதைகளை இங்கே நீங்கள் எனக்கென நிர்மாணித்துத் தந்து வரும் பாதுகாப்பு வலையின்றி முயற்சித்திருக்கத் தான் முடியுமா? 

அப்புறம் இங்கே பிரவாகமெடுக்கும் நகைச்சுவைகளும், அகழ்வாராய்ச்சிகளும் ஒவ்வொரு ஞாயிறையும் நமக்கு தெறிக்கும் நாட்களாகி வருவதில் எது இரகசியம் ? அமெரிக்காவோ ; ஆப்ரிக்காவோ - அமிஞ்சிக்கரையோ - நாமிருக்கும் இடம் எதுவாயிருப்பினும் - ஒரு வாகான தலைப்பும், வகையான செட்டும் அமைந்துவிட்டால் இங்கே நர்த்தனமாடும் சந்தோஷங்களை உணராதோர் தான் யார் ? "சார்...நான் ரெகுலராக blog வாசகன் ; ஆனால் கலந்துக்கிறது இல்லே ; மௌனப் பார்வையாளன் மட்டுமே " என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ளோர் ஏகப்பட்டோர் !  அவர்கள் ஒவ்வொருவருக்குமே இங்கே அரங்கேறும் நண்பர்களின் சங்கமிப்பில், ஒரு அலாதி சந்தோஷம் கிட்டி வருவதும் அவர்களிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்ட சேதியுமே !! 

என்றைக்கேனும் ஓய்வாக வீட்டில் அமர்ந்தபடிக்கே ‘பழைய நினைப்புடா பேராண்டி‘ என்று இந்தப் பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை அசைபோடும் வாய்ப்பு கிட்டின் – இந்தப் பதிவுகளின் ஒவ்வொன்றையும் நின்று, நிதானமாய் வாசிப்பேன் என்பது நிச்சயம் ! சிறுகச் சிறுக நமது சிறகுகள் விரிந்த கதையை இந்தப் பதிவுகள், ஒரு வாராந்திர டைரியைப் போலச் செயல்பட்டு, நினைவுகள் மங்கிடக் கூடிய அந்நாட்களிலும் highlight பண்ணிட உதவிடுமென்பது உறுதி ! Maybe இன்றைக்கு என்னை உராங்குட்டான் போல முறைக்கச் செய்த சம்பவங்களுமே, அன்றைக்கு செமையாய் சிரிக்கச் செய்திடவும் கூடும் தான் ! So இந்தப் பதிவுகள் ஜாலியான டைரிக்குறிப்புகளாய் என்னளவிற்காவது நீடிக்கப் போவது உறுதி!

Of course – அவ்வப்போது “தேசத்தை விட்டே புறப்பட வேண்டியது தான்!” என்ற ரீதியில் சில பல வாரங்களது பதிவுகளுக்கு லீவு கொடுத்த தருணங்கள்; மிஞ்சியிருக்கும் கேசத்தையும் பிறாண்டிப் பார்த்த நாட்கள் ; இந்த routine-க்குக் கல்தா கொடுத்து விடலாமென்ற உத்வேகத்தில் ஒரு விடைபெறும் பதிவை எழுதிய (இரகசியத்) தருணங்கள் என்ற கூத்துக்களுமே இல்லாதில்லை தான்! ஆனால் முன்தினத்து ரவுசுகள் எல்லாமே உலகை உலுக்கிடும் நிகழ்வுகளல்ல என்ற புரிதலும், நிதானமும், தூங்கி எழுந்த மறுநாளைக்கே புலர்வதைப் பார்த்தான பின்னே, மறுக்கா இங்கே தஞ்சமடைவதும் இந்த அனுபவங்களின் இன்னொரு அத்தியாயமே ! Someday down the line – சம்பந்தப்பட்ட எல்லோருமே இந்த நாட்களை எண்ணி சிரித்துக் கொள்வோமென்பது உறுதி !

எல்லாவற்றையுமே விட இந்தப் பதிவுகளின் ஒரு அழகான பாசிட்டிவ்வாக நான் பார்த்திடுவது – சில பல வாழ்நாள் நட்புகளுக்கு இது அஸ்திவாரமாய் அமைந்துள்ளதையே ! மும்மூர்த்திகள் வரலாம்; போகலாம் ; மின்னும் மரணங்கள் ஜொலிக்கலாம்; தகிக்கலாம்; இரத்தப் படலப் புலன் விசாரணைகள் நினைவில் தங்கிடலாம்; காலத்தோடு காலாவதியும் ஆகலாம் ! ஆனால் இங்கே துளிர்விட்டுள்ள சில நட்புக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் போது – எனது இந்த வாராந்திர ramblings-களுக்கும் ஒரு பலனுள்ளதே என்று மனம் குளிர்கிறது !
இந்தத் தருணத்தில் இதன் longevity க்கு ஏதேதோ விதங்களில் உதவியுள்ள / உதவி வரும் அத்தனை நண்பர்களும் எனது மெகா சல்யூட் உரித்தாகுக !! ஒவ்வொரு பதிவிற்கும் +1 போட்ட நண்பராக இருந்தாலும் சரி ; சங்க இலக்கியம் முதல், சம காலப் பீட்டர்கள் வரை அத்தனையையும் கொணர்ந்து இந்தப் பக்கங்களுக்கு மெருகூட்டும் நண்பர்களாக இருந்தாலும் சரி - உங்கள் அனைவரின் சுவடுகளுமிங்கே ஒன்றிணைந்து ஒரு அட்டகாச ஹைக்கூ கவிதையாய் உருப்பெற்றிருப்பதை இந்த "500 " உணர்த்துகின்றது !! More than anything else - உங்களின்   ஒவ்வொரு பின்னூட்டத்திலும் உங்களது மலர்ந்த முகங்களை பார்த்திட சாத்தியமாவது எனது பணிகளை இலகுவாக்கிடும் மாயாஜாலத்தை அறிந்து வைத்துள்ள அதிசயங்கள் !! Take a bow folks !! You have been just awesome !!

500” என்ற நம்பரைத் தொட்ட பிற்பாடு – சித்தே 'ரமணா' பாணியில் புள்ளி விபரங்களை அடுக்காது போனால் தமிழ் சினிமாவில் ஊறிப் போன நம் நெஞ்சங்கள் தகிக்காதிருக்குமா ? So here you go!

இதுவரையிலான டாப் பார்வைகளை ஈட்டியுள்ள பதிவுகளின் பட்டியல் இதோ:

1. 02-08-2014 தல… தளபதி… திருவிழா - 7678 views

2. 02-01-2013 ஒரு பணி இரவின் உரத்த சிந்தனை - 7158 views

3. 16-11-2013 இது வேங்கையின் வேளை - 6387 views

4. 06-12-2012 எட்டும் தூரத்தில் NBS  - 6249 views

5. 07-06-2013 காசு… பணம்… துட்டு… Money !  - 6143 views

6. 10-11-2014 ஒரு கௌபாய் வானவில்  - 6043 views

இதில் last mentioned பதிவுக்கு 524 பின்னூட்டங்களிட்டு, அந்தப் பட்டியலில் டாப் இடத்தைத் தந்திருக்கிறீர்கள்!


தொடர்ந்திடும்  ஒரு நெடும் பயணத்தின் டைரிக் குறிப்பாய்த் திகழ்ந்திடும் இந்தப் பதிவுகளில் ஒரு memorable தருணத்தைத் தொட்டுப் பிடித்திருக்கும் வேளைதனில் அதைக் கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயமோ ? ஏற்கனவே 3 மில்லியன் ஹிட்ஸ் என்ற moment-ஐ சிலாகிக்க 2019-ன் அட்டவணையில், அதற்கென ஒரு ஸ்பெஷல் இதழ் திட்டமிட்டுள்ளோம் ! அதனை இப்போதே போட்டு உடைக்க வேண்டாமே என்று தோன்றுவதால் – அக்கட பெவிகால் பெரியசாமியாய் அவதாரம் எடுத்துக் கொள்கிறேன்! ஆனால் ஜாலியான இந்த நொடியில் ஓட்டைவாய் உலகநாதனையும் சித்தே முன்வரிசைக்கு இட்டாந்திடலாமா?

என்ன தேர்வு செய்திடலாம் இந்த 500-ன் தருணத்துக்கு என்று யோசித்த போது சில பல options என் முன்னே அணிவகுத்தன ! இந்த மைல்கல்லைத் தொட்டுப் பிடித்திட உதவியது நீங்கள் தான் எனும் போது அந்த ஸ்பெஷல் இதழ் எதுவாக இருந்திடலாமென்ற தேர்வையுமே உங்களிடமே ஒப்படைக்கலாமென்று தோன்றியது !“ஆங்… சாய்ஸில் எதையுமே விட்டுத் தள்ளாம – அத்தனையையும் போட்டுப்புடலாமே!” என்றே நீங்கள் அபிப்பிராயப்படுவீர்கள் என்று பட்சி சொன்னாலும் தேர்வு செய்திடும் சுதந்திரத்தை உங்களிடமே ஒப்படைக்க எண்ணுகிறேன் - இந்த ஒற்றைத் தருணத்திலாவது !! 

 - Fun with 500!! என்பதே இந்த ஸ்பெஷல் இதழின் பெயராக இருந்திடும் !

- சந்தாவினில் இடம்பெறாது ; முன்பதிவுகளுக்கு மாத்திரமேயான limited edition !!

- “500” என்பதால் இதழின் விலையும் ரூ.500 !! Plus courier costs...!

இதற்கென உங்களுக்கு நான் தரக்கூடிய Options 3 !!

முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !! 

"இத்தாலி பக்கமாய்ப் பறந்து - பறந்து அலுத்துப் போயிட்டூ அண்ணாத்தே !! " - என்பதே உங்களது எண்ணங்களாயிருப்பின் - பிளேனை நேராக பிராங்கோ -பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு - அங்கே அவர்களிடம் ஆசீர்வாதங்களையும், அனுமதிகளையும் வாங்கிக் கொண்டு, லைட்டாக பெட்ரோல் நிரப்பிக் கொண்ட கையோடு - அமெரிக்க களத்தை  நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? What say ?

அட..."அமெரிக்காலாம் பார்த்துப் பழகிய கதைக்களம் தானே அண்ணாச்சி ? என்கிறீர்களா ?  கவலையே வாணாம் - மறுக்கா பிளைட்டை அதே பிரான்க்கோ-பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு, மறுக்கா ஆசீர்வாதங்கள் + அனுமதி + பெட்ரோல் என்று நிரப்பிக் கொண்டு,  நாம் ஜாஸ்தி பார்த்திரா  ஆப்ரிக்கா மீதாகப் பறந்து பார்க்கலாமா ? மறுக்கா 5 பாகங்கள் கொண்ட கலர் த்ரில்லர்களை அங்கேயும் பார்க்கலாமோ ? "என்னா ஒய்.. அவ்ளோ பெரிய இருண்ட கண்டத்தில் எங்கேன்னு பறக்கிறதாம் ?" என்று கேட்கிறீர்களா ? "ஆங்....ஒன் மினிட் ப்ளீஸ் !! ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ? 

இந்த டீசர்களோடே இப்போதைக்குப் புறப்படுகிறேன் folks - இந்தத் தேர்வுகளில் உங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைப் பார்த்திடும் ஆர்வத்தோடு !! Before I sign off, I owe you this too !! இந்தப் பதிவுகளின் பயணத்தில் தெரிந்தோ-தெரியாமலோ சில பல பாதங்களில் நான் இடறியிருப்பின் - my apologies !! இங்கே வருகை தருவோருக்கு மகிழ்ச்சி மாத்திரமே தொடர்கதையாகிட வேண்டுமென்ற பிரார்த்தனையோடு கிளம்புகிறேன் !! Have a lovely weekend guys !! See you around !! Ciao for now !! 

Monday, September 17, 2018

தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்..!

நண்பர்களே,

வணக்கம். "முன்னூறு வரும் முன்னே ; உபபதிவு வரும் பின்னே.." என்பது தான் எழுதப்படா விதிமுறையாச்சே ? மீறிட இயலுமா ?

And இம்முறை கொஞ்ச காலமாகவே உங்களிடம் கேட்க நினைத்திருந்ததொரு கேள்வியே உ.ப.வின் subject !! அதாகப்பட்டது, நமது ஆதர்ஷ பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டிலும் சரி ; டெக்சின் இத்தாலிய மார்க்கெட்டிலும் சரி - அங்குள்ள காமிக்ஸ் வாசகர்களுக்கொரு unique பெருமையுண்டு ! பெரும்பான்மையான ஆல்பங்கள் / கதைகள் தொடர்களாகவே நீண்டு செல்லும் ரகங்களாய் இருப்பினும் ; அவை ஒரு மாத இடைவெளியிலோ ; ஓராண்டு கால இடைவெளியிலோ வெளிவந்தாலுமே, துளி கூடப் பொருட்படுத்தாது ரசித்து வருகின்றனர் ! உதாரணத்திற்கு புது லார்கோ சாகசத்தின் முதல் பாகம் வெளியானது ஆக்டொபர் 2017-ல் ! அதன் கிளைமாக்ஸ் பாகமோ இன்னமும் வெளியான பாடைக் காணோம் ! Probably இந்த நவம்பரில் வரக்கூடும் ! டெக்சின் கதைகளிலும் ஒரு மாதம்  அல்லது இரண்டோ / மூன்றோ மாதங்களின் காத்திருப்புக்குப் பின்பாகவே பெரும்பாலான கதைகள் முழுமை காணும் !! So இடைப்படும்  நாட்களை பொறுமையோடு கொண்டு செல்லும் திறனை அவர்கள் வளர்த்துக் கொண்டு விட்டுள்ளனர் என்பது கண்கூடு !!

நாமுமே ஜேசன் ப்ரைஸின் ஆல்பத்தினில் இந்த wait & read யுக்தியினை ஓரளவுக்கு வெற்றியோடு கையாண்டோம் என்பது சமீப வரலாறு ! So ஐரோப்பியர்களின் அசாத்தியப் பொறுமை லெவெல்களை எட்டிப் பிடித்திராவிடினும் நாமும் பொறுமைசாலிகளே என்று காட்டியுள்ளோம் ! இந்த பாணியை எப்போதாவது மறுக்கா கையில் எடுப்பது பற்றி உங்களது அபிப்பிராயங்கள் என்னவோ ? என்பதே எனது இந்தப் பதிவிலான கேள்வி ! 

கொஞ்ச காலம் முன்பாய் புதியதொரு கார்ட்டூன் ஆல்பம் 3 பாகங்களுக்கு ஓடும் விதத்திலிருந்ததைப் பார்க்க நேரிட்டது ! அதனை புரட்டிக் கொண்டிருந்த வேளையில் - இந்த "தொடர் மாதங்கள் - தொடரும் ஆல்பங்கள்" concept நமக்கும் சாத்தியமாகின் எவ்விதமிருக்கும் என்ற யோசனை தலைக்குள் ஓடியது ! என்றைக்கேனும் ஒரு ஓய்வான நாளில் அதை பற்றி உங்களது அபிப்பிராயங்களைக் கோரினால் தேவலாம் என்றபடிக்கே அப்போதைக்கு அடுத்த வேலைக்குள் புகுந்திருந்தேன் ! இன்றைக்கு அது நினைவுக்குத் திரும்ப - இதோ கேள்வி உங்கள் முன்னே !!

"தொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்" !! இது நமக்கு சுகப்படுமா folks ?  உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ? Bye all !! See you again !! 

And please try sharing this image too !!

Saturday, September 15, 2018

ஒரு ரோலர்கோஸ்டர் பதிவு !!

உஷார் !! இதுவொரு ரோலர்கோஸ்டர் சவாரி போலானதொரு பதிவு !! ஜிவ்வென்று உசக்கே இட்டும் செல்லும் ; சொய்ங்கென்று பாதாளத்துக்கும் கூட்டிப் போகும் !! So பெல்ட்களை இறுக்கிக் கொள்ளுங்கள் guys ; அல்லது "நேக்கு ராட்டினமென்று பேப்பரில் எழுதிப் பாத்தாலே தலை சுத்துமே !!" என்ற அணியினராய் (என்னைப் போல) இருப்பின், நேராக பதிவின் tailend-க்குப் பயணமாகிடுங்களேன் please  !! 

நண்பர்களே,

வணக்கம். `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ! தென்னை மரத்தில் தேளுக்கு என்ன ஜோலி ? அதற்கு மீறி மாங்கு மாங்கென்று அது மரமே ஏறினாலும் – அங்கே கொட்டி வைத்து அது  சாதிக்கக் கூடியது என்ன ? அட - அப்படியே கொட்டி வைத்தாலும் – அது 'தேமே' என்று வேறொரு திக்கிலிருக்கும்  பனை மரத்தை எப்படிப் பாதிக்கும் ? என்றெல்லாம் ஒரு நாளும் நான் யோசித்துப் பார்த்ததுமில்லை ! ஆனால் இப்போது அமெரிக்க டாலரெனும் தென்னையில் தடாலடித் தடுமாற்றம் என்ற தேள் பொடேரென்று போட்டிட – எங்கோவொரு தூரத்திலிருக்கும் தம்மாத்துண்டு பனைமரமான நமக்கு நெரி கட்டோ கட்டென்று கட்டுவதைப் பார்க்கும் போது – பழமொழி சொன்ன பெரிய மனுஷனை நினைத்துப் பொத்தாம் பொதுவாய் ஒரு கும்பிடு போட்டு வைக்கத் தோன்றுகிறது! ஆத்தாடியோவ் – என்னவொரு தீர்க்கதரிசனம்!

ஆஹா… பில்டப்பை ஆரம்பிச்சிட்டான் மாப்ளே…! முட்டைக்கண்ணன் விலை ஏற்றத்துக்கு அடி போடப் போறான்டோய்!” என்று இதைப் படித்த மாத்திரத்திலேயே சிலபல வாட்சப் க்ரூப்களில் ஸ்மைலிக்களோடு குறுந்தகவல்கள் பறக்கத் துவங்கியிருக்குமென்பது தெரியாதில்லை ! ஆனால் ஒரு சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி எவ்விதம் உணருமோ – அதை அட்சர சுத்தமாய் நானும் அனுபவித்து வருவதால் கொஞ்சம் மனம்திறக்க அவசியமாகியுள்ளது! And வாரா வாரம் எனது பதிவுகளைப் படித்து வரும் சீனியர் எடிட்டருக்கும், நமது கருணையானந்தம் அவர்களுக்கும் நான் எழுதவுள்ள சமாச்சாரங்களில் அத்தனை உடன்பாடிராது என்பது எனக்குத் தெரியும் ! "விற்பனை சார்ந்த நெகடிவ் விஷயங்களைப் பகிர்வானேன் ? மாதம் மும்மாரி மழை பொழியோ பொழிகிறதென்று சொல்லிக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டே போக வேண்டியது தானே ?” என்பதே அவர்களது பார்வைக் கோணங்கள் ! அதுவும் சரி தான் ; இருக்கும் சின்னதொரு வட்டத்தினுள் நமது சிரமங்களைப் பகிரங்கமாக்கி அவர்களையும் கலங்கச் செய்வானேன் ? என்ற எண்ணம் எனக்குமே மேலிடத் தான் செய்யும் ! அதனாலேயே நாம் போடும் மொக்கைகளின் பெரும்பான்மையை விழுங்கிடுவதுண்டு ! ஆனால் ஏதேதோ காரணங்களால், முருங்கைமரத்தில் ஏறும் டாலரின் உபயத்தில் நமக்கு டிரவுசர் கழறத் தொடங்கி வருவது ஆபத்தான லெவல்களைத் தொட்டு வர – தொடர் மௌனம் சுகப்படமாட்டேன்கிறது எனக்கு !

புத்தாண்டின் அட்டவணைத் தருணம் ; பழைய ராயல்டிப் பாக்கிகள் பைசல் செய்யப்பட வேண்டிய வேளையுமே கூட ! So தட்டுத் தடுமாறி பணத்தைச் சேகரம் செய்து, அவர்களது பில்களையெல்லாம் எடுத்து வைத்த சமயம் தான் தொடங்கியது அமெரிக்க டாலரின் வெகு சமீப தறிகெட்ட பேயாட்டம் !  ‘சனிப் பிணம் தனியாயப் போகாது‘ என்பது போல, டாலர் ஏறும் போது, துணைக்கு மற்ற கரென்சிகளையுமே இழுத்துக் கொண்டு செல்வது தானே வாடிக்கை ? So ரூ.75/- சுமாருக்கு இருந்த யூரோ – கண்மூடிக் கண் திறப்பதற்குள் ரூ.84/-ஐத் தொட்டு நிற்கிறது ! பத்தே நாட்களின் இடைவெளியில் நமது ராயல்டி பாக்கித் தொகைகளின் பரிமாணம் பகீரென்று எகிறிப் போய் விட்டுள்ளது ! பற்றாக்குறைக்கு, “தீபாவளி விருந்துக்கு வந்த மாப்பிள்ளை எப்போடா கிளம்புவான்”? என்று காத்திருக்கும் மாமனார்களைப் போல – இறக்குமதி செய்து ஆர்ட் பேப்பர்களை விற்பனை செய்திடும் பேப்பர் ஸ்டோர்வாலாக்களும் இந்த நொடிக்காகவே காத்திருந்தவர்கள் போல ‘பொடேரென‘ டன்னுக்கு ரூ.4,500 விலையேற்றி விட்டுள்ளனர் - ஒற்றை மாதத்தின் போக்கில் !

ஒளிவு மறைவுகளில்லை guys – நமது பிரிண்ட்ரன் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிக் கொண்டு தானுள்ளது! சென்றாண்டு வரைக்குமே ஒவ்வொரு இதழிழுமே 2500 பிரதிகள் வரை அச்சிட்டு வந்தோம் – புக்கின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெயென்ற அவாவோடு ! (நிலையான செலவினங்கள் கொஞ்சம் கூடுதலைப் பகிரப்படும் போது விலை குறைவாய் நிர்ணயம் செய்தல் சாத்தியமல்லவா ?)ஆனால் தட்டுத் தடுமாறி 1500 பிரதிகளை விற்பதற்குள்ளாகவே சந்நியாசம் போக காவியும், கமண்டலமும்  எங்கே மலிவாய்க் கிடைக்குமென்று தேடும் நிலை எழுந்து வந்தது ! பாக்கி 1000 பிரதிகளைத் தொடரும் புத்தக விழாக்களில்; ஆன்லைன் ஸ்டோரில் விற்றுக் கொள்ளலாமென்ற எனது நம்பிக்கைகளின் பின்னே இருந்தது அசட்டுத் தைரியம் தானன்றி – திடமாய் ஏதுமில்லை என்பதை சமீபத்தைய ‘ஸ்டாக் சரிபார்க்கும் படலம்‘ பறைசாற்றியது ! நம்பினால் நம்புங்கள் guys –

- வேய்ன் ஷெல்டன்

-லார்கோ 

- கமான்சே

- சிக் பில்

-தோர்கல்

- மாடஸ்டி

ஆகியோரின் ஒவ்வொரு ஆல்பத்திலுமே குறைந்த பட்சம் 700+ பிரதிகள் கையிருப்பிலுள்ளன! ஒரு புக்கை அச்சிட்டு, உங்கள் கைகளில் ஒப்படைத்து, அதன் அலசல்களில் ஆழ்ந்த பிற்பாடு ‘தொபுக்‘கென காத்திருக்கும் அடுத்த பணிக்குள் பாய்வதே வாடிக்கை என்பதால் – இது போன்ற backend சிக்கல்களுக்கு நேரம் ஒதுக்க எனக்குத் தீரவில்லை! தவிர, யதார்த்தத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடுவதிலுள்ள அச்சமுமே பெரியதொரு காரணமென்பேன்! “சாமீ… இவ்வளவு தேங்குகிறதா?” என்ற நிஜத்தை எதிர்நோக்கிடத் தயக்கமென்பதால் – ‘ஆங்…அடுத்த புக் ரெடியா ? அப்டிக்கா கவனத்த செலுத்து... கிளம்பு… கிளம்பு…‘ என்று சுனா பானாவைப் போல அடுத்த டாபிக்குக்குள் புகுந்திடுவதையே வழக்கமாக்கி வந்துள்ளேன்! ஆனால் – பல நாள்ப் பொதியை என்றேனும் ஒரு நாள் சலவை செய்தே தீர வேண்டுமல்லவா ? இந்தாண்டின் துவக்கம் முதலாகவே 2500 என்ற அந்த ப்ரிண்ட்ரன்னைக் கணிசமாகவே… ஆகக் கணிசமாகவே கம்மி செய்து விட்டோம். அத்தோடு நமது ஏஜெண்டுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் லேசாய்க் கைகொடுக்க – நடப்பாண்டில் ஸ்டாக்கின் பழு அத்தனை பாடாவதியாக இல்லை தான் ! 😃

மாறாக – நமது costing தர்ம அடி வாங்கி வருகிறது ! ராயல்டி தொகைகள் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தின் அடிப்படையிலானவைகளே எனும் போது, நாம் வெறும் 50 பிரதிகளை அச்சிட்டாலும் சரி, 2500 பிரதிகளை அச்சிட்டாலும் சரி – செலுத்த அவசியமாகிடப் போவது ஒரே மாதிரியான தொகையினையே ! அதே போல எகிறி வரும் நிர்வாகச் செலவுகளும் நமது சர்குலேஷனுக்குத் துளியும் சம்பந்தமிலா சமாச்சாரங்களே ! மாதம் 4 புக் டெஸ்பாட்சோ; ஒற்றை புக் டெஸ்பாட்சோ – சம்பளங்கள் அதுவே தான் ; வசூல் தொகைகள் பத்தாயிரமோ – ஐம்பதாயிரமோ நமது பிரதிநிதிகளின் பயணச் செலவுகளும் மாறிடப் போவதில்லை ! மொழிபெயர்ப்புகளுக்கும் ; தட்டச்சுகளுக்கும் ; டிசைனிங்குக்கும் ; பிராசஸிங்குக்கும் – நாம் தரவிருக்கும் ஊதியங்களுமே விற்பனை எண்ணிக்கைகளுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாதவை ! So கையில் மிஞ்சும் ஸ்டாக்கைக் குறைக்கும் பொருட்டு நாம் செய்துள்ள ப்ரிண்ட்ரன் கத்திரிப்பின் புண்ணியத்தில் – இந்த நிலையான செலவினங்களை balance செய்திட வழி தெரியாது கிறுகிறுத்துப் போயிருக்கும் வேளையில் தான் இந்த டாலர் – யூரோ சம்மட்டி அடிகள் ! So இதுவே இந்த நொடியின்  நிலவரம் ! 

இவற்றைக் கொஞ்சமேனும் சமன் செய்திட வழிகளென்னவென்று யோசிக்க அமர்ந்தால் – ‘அடேய் பேப்பயலே… விற்பனையைக் கூட்டினால் எல்லாமே சரியாகிடுமே?!‘ என்று மண்டை கூக்குரலிடுகிறது ! ஆக பிரதான – பிரதம இலக்கு சரிந்து கிடக்கும் அந்தப் ப்ரிண்ட்-ரன்னை முன்னளவிற்கு இல்லாது போனாலும் – தற்போதைய பாதாளங்களிலிருந்து கொஞ்சமாகவேணும் தூக்கி விட வேண்டியதே ! சென்னை போன்ற பெருநகரங்களில் கூட நமது மொத்த விற்பனை நம்பர் பரிதாபமானது என்பதால் – நம்மாட்களை ஊர் ஊராய்… தெருத் தெருவாய் சுற்ற ஏற்பாடு செய்துள்ளோம் ! So சிறுகச் சிறுகவாவது அதற்கொரு பலன் கிட்டுமென்ற நம்பிக்கை கொள்வோம் !

சமன் செய்யும் வழி # 2 – விலைகளை ஏற்றுவது ! இந்த டாலர் – யூரோ சலம்பல் இல்லாதிருந்தாலுமே 2019-க்கு விலைகளை ஏற்றுவதொரு கட்டாயமாக இருந்த நிலையில் – இந்த double whammy-ன் புண்ணியத்தில் விலைகளை எங்கே கொண்டு சென்று நிறுத்தி வைப்பதென்று கிஞ்சித்தும் புரியவில்லை! ஏற்கனவே இது பென்ஸ் கார் ரேஞ்சுக்கானதொரு பொழுதுபோக்காய் உருமாறி வரும் வேளையில் – மேற்கொண்டும் விலைகளை உசத்துவது தவிர்க்க இயலா நிர்ப்பந்தமேயானாலும் – எனக்கு அதன் பொருட்டு ஏகமாய் வயிற்றுக் கலக்கல் ! 

விலையேற்றம் நிச்சயம்....!  அது குறைந்தபட்சமாக மாத்திரமே இருந்திட வேண்டுமென்பது லட்சியம்..... ! 
இந்த இரண்டுக்கும் மத்தியில் என் சொட்டைத் தலை உருளோ உருளென்று உருளப் போவதிலுமில்லை சம்சயம்..! 

ஷப்பாாாா! ட்ரெண்டின் தாக்கமோ ?? ரணகளத்திலுமே கவிதை பொழியுது !!! 

விலைகளை மட்டுமே ஏற்றிடாது – செலவினங்களைக் குறைக்கவும் சில சாத்தியங்களைப் பரிசீலிக்கத் தோன்றியது ! இவையெல்லாமே என்னுள் சடுகுடு ஆடிவரும் சிந்தனைகளின் துளிகளே தவிர்த்து – தீர்மானங்களல்ல ! So ‘போச்சு....தலையிலே கல்லை போட வழி பாத்துப்புட்டே...!! நான் தேசத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து இனி வேறு வழியேயில்லை‘ என்ற பொங்கல்களைத் தற்போதைக்கு அடுப்பில் ஏற்றிடத் தேவை நஹி என்பேன் ! பொறுமையோடு படித்து ; எனது நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்க முயன்றால் மகிழ்வேன் !! 

ரோசனை # 1:

இயன்ற கலர் ஆல்பங்களில்… I repeat… இயன்ற கலர் ஆல்பங்களில் மட்டும் தற்போதைய பெரிய சைஸினைக் குறைத்து டெக்ஸ் சைசுக்கு மாற்றம் செய்ய முனைவது ! அதாவது ஏகப்பட்ட frame-கள்; நிறைய வசனங்கள் என்றிருக்கும் கதைகளை ; ஆல்பங்களை நோண்டிடாது – ட்ரெண்ட் போன்ற சற்றே விசாலமான சித்திர frame-கள் நிறைந்த கதைகளை மட்டும் டெக்ஸ் வில்லர் கதைகளின் சைஸுக்குக் கொணரலாமா ? Oh yes – சித்திரங்களே ஜீவநாடி ; புத்தக அளவினை சிறிதாக்கும் போது ஒரு மாற்று குறைவாய்த் தெரிந்திடக் கூடும் என்பதெல்லாம் புரிகிறது ! ஆனால் தாடி பற்றி எரியும் போது - நளினமாய் ; நாசூக்காய்த் தீயணைக்க நினைப்பது சிரமமே என்பது தான் நிலவரம் ! So சற்றே சிந்தனையை இதன் பக்கமாய் செலவிட நேரம் எடுத்துக் கொள்வோமா ? Thoughts on this please ?

ரோசனை # 2:

மேற்படி சிந்தனையே தான் ; இம்முறை டெக்ஸ் வில்லரின் b&w சாகஸங்களின் ஒரு பகுதியையாவது (சிங்கிள் ஆல்பங்கள் போல ஏதேனும் சிலவற்றுக்கு ) ‘நிலவொளியில் நரபலி‘ சைசுக்குக் கொண்டு சென்றாலென்ன என்ற தலைப்போடு ! Again – இதுவொரு விலை management-க்கான option தானே தவிர, உங்கள் மீது நான் திணிக்கத் தயாராகி விட்ட தீர்மானமல்ல ! இதன் சாதகங்கள் பற்றி நான் பிரஸ்தாபிக்கத் தேவை லேது ; maybe உங்கள் பார்வைகளில் அதன் பாதகத்தைப் பற்றி நீங்கள் புட்டுப் புட்டு வைக்கலாம் - பொறுமையோடு  !

ரோசனை # 3:

கலர் !! எங்கேயேனும் கலருக்குக் கல்தா தந்து விட்டு black & white-ல் வண்டியோட்ட சாத்தியமாகின் கணிசமாய் செலவுகள் குறைந்திடக் கூடுமென்பது புரிகிறது ! ஆனால் கதைகளைப் புரட்டும் போது – எனக்குத் தெரிந்தமட்டிலும் வேய்ன் ஷெல்டனைத் தவிர்த்து பாக்கிக் கதைகள் சகலத்துக்குமே வண்ணமே உயிர் என்பது பிடரியில் சாத்துகிறது ! அதிலும் கார்டூன்களை கலரின்றிப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமென்பதால் இந்த ரோசனையை தூக்கிப் பரணில் தான் வைக்கத் தோன்றுகிறது ! Maybe ஷெல்டனை மட்டுமாவது b&w-ல் பார்க்க முனைவோமா ? என்று யோசித்தால் – “அட… இது தான் மனுஷனின் கடைசி சாகஸம் தற்போதைக்கு! அதில் குறை சொல்ல ஒன்றை வைப்பானேன்?” என்று தோன்றுகிறது ! ஹ்ம்ம்ம்ம்!

ரோசனை # 4:

காகிதத் தரம்…! அடுத்து கைவைக்கக் கூடியது டெக்ஸ் வில்லர் & b&w கதைகளுக்கான வெள்ளைத் தாளின் தரத்தில் மட்டுமே ! ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ! ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட ! Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் ! I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது !!  Phew !!

ரோசனை # 5:

இது சற்றே practical ஆனதொரு சிந்தனை ! கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது ! So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது ; ஆனால் இதழ்களின் எண்ணிக்கையில் உதை விழாது போகாது ! இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் உங்களின் பூரண புரிதல் இருந்தால் மட்டுமே வண்டி ஓடிடும் ! "போச்சு..எனக்குப் புடிச்ச ஹீரோவுக்கு ஸ்லாட் இல்லே ; ஹீரோயினுக்கு ஸ்லாட் இல்லே !! எடிட்டர் எனக்கெதிராய்ச் சதி செய்ய ISI கூட ; Mossad கூட கூட்டுச் சேர்த்துப்புட்டாண்டோய்ய் !!" என்று குரலெழுப்பும் பட்சத்தில்  வண்டி இம்மி கூட நகர்ந்திராது! So இந்த ரோசனையின் செயலாக்கம் பூரணமாய் உங்கள் ஏகோபித்த சம்மதங்களிருக்கும் பட்சத்தில் மாத்திரமே !

ரோசனை # அரை டஜன்:

அட… ஓவராய்த் தலையைப் பிய்த்து ஆகப் போவது என்ன? எதில் விலையேற்றமில்லை இன்றைக்கு - இத்தனை தடுமாற்றத்தை நீ தலைக்குள் ஏற்றி வைத்துத் திரிவதற்கு?” என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு நியாயமான ஏற்றங்களை / மாற்றங்களைச் செயல்படுத்திடுவது ! வியாபாரியெனும் குல்லாவை மட்டுமே போட்டிடும் பட்சத்தில் இதுவே the way out என்பேன் ! ஆனால் “காமிக்ஸ்” என்பதெல்லாம் ஒரு சொகுசே தவிர்த்து – “அத்தியாவசியம்” அல்ல என்ற நிலையில்,இத்தகைய தடாலடிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வருது ! தம்மாத்துண்டாகவேணும் முட்டையிடும் வாத்தை, குண்டாச்சட்டிக்குள் கொதிக்கப் போட்ட கதையாகிடக் கூடாதே என்ற மிரட்சியும் கைகோர்க்கிறது ! எண்ட குருவாயூரப்பா!!

 ரோசனை # 7:

"பொறுத்தது பொறுத்தாச்சு…! இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோ ! பல்லைக் கடிச்சுக்குவியோ…பக்கத்து சீட்டிலிருப்பவரோட மூக்கைக் கடிச்சுக்குவியோ – அது தெரியாது! ஆனால் 2019-ன் பன்னிரெண்டு மாதங்களுக்கு, ஒரு லேசான விலையேற்றத்தோடு மட்டும்  எப்படியேனும் தாக்குப் பிடித்துக் கொண்டு, விற்பனையை உசத்துவதில் ஜெயம் கண்டு விட்டால் – எல்லா அல்லல்களுமே கதிரவனைக் கண்ட பனித்துளியாகக் கரைந்திடுமே !!" என்றும் தலைக்குள் ஒரு கதறல் கேட்கிறது ! ஆனால் டாலர் – யூரோ – ரூபாய் மதிப்பு சார்ந்ததொரு forecast-ஐப் படித்துப் பார்த்த போது கண்முழி பிதுங்காத குறை தான் ! அடுத்தாண்டு இதே சமயம் யூரோ 93 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் ; 1 அமெரிக்க டாலர் 81 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் கண்ணில் தென்படும் சகல ரிப்போர்ட்களும் கதைக்கின்றன ! 😭

இனி ‘சிவனே‘ என்று ஈரோட்காரைக் கதையெழுதச் சொல்லி ; கோவைக் கவிஞரை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லி ; கணேஷ்குமாரை படம் போடச் சொல்லிடணும் போலும் ! செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா ? கவிஞரே அதற்கான விமர்சனங்களையும் ராக்கெட் ஸ்பீடில் எழுதி விடுவாரெனும் போது அங்கும் வேலை சுலபமாகிப் போகும் !!  சந்தா R என்று ஒன்றை அறிவித்து விடலாம் !! Any takers ?

ரோசனைகள் ஒருபுறமிருக்க – ‘கெக்கேபிக்கே‘ என்ற சிரிப்பும் இன்னொரு பக்கம் எனக்கு ! இங்கே உள்ள கதைகளை / தொடர்களை தொடர்வதிலேயே மனுஷனுக்கு டப்பா டான்ஸ் ஆடிவரும்  நிலையில் – இரு நாட்களுக்கு முன்பாய் ஒரு மின்னஞ்சல் ! “நீங்கள் போன வருடம் போட்டிருந்த மெயிலைப் பரிசீலனை செய்தோம் ! நீங்கள் கோரியுள்ள “அந்தக் கதைக்கான” உரிமைகளைத் தரச் சம்மதம் ! ராயல்டி மட்டும் நீங்கள் முன்மொழிந்ததை விட 'இத்தனை' சதவிகிதம் ஜாஸ்தி ! ஓ.கே.யென்றால் கான்டிராக்ட் போட்டுடலாம் !” என்றிருந்தது ! போன ஏப்ரலில் நான் கோரியிருந்ததொரு கிராபிக் நாவலுக்கான உரிமைகள் குறித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்களது சம்மதம் கிட்டியுள்ளது ! நமக்குத் தான் பொழுது போகாவிட்டால் கட்டை விரலை மட்டுமில்லாது, காலணியையுமே வாய்க்குள் திணித்துக் கொள்வதெல்லாம் கைவந்த கலையாச்சே – விட்டு வைப்போமா ? “சரிங்க சார்…we agree ! கான்டிராக்ட் அனுப்புங்க… ப்ளீஸ்!” என்று மின்னஞ்சலில் பதிலைத் தட்டி விட்டு கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்ட போது சிப்புச் சிப்பா வந்தது ! “இடுக்கண் வருங்கால் நகுக” என்று பள்ளியில் படித்து விட்டு, கட்டுரைப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் அதை பந்தாவாய் அள்ளிவிட்ட பிற்பாடு, வாழ்க்கையிலும் அதைச் செயல்படுத்தாது போனால் எப்பூடி? So நகுகிட்டே இருக்கேன் ! And அந்த கி.நா. 2019-க்கு உண்டு என்பதும் கொசுறு சேதி !! 

But honestly – என்னுள் ஏதோவொரு நம்பிக்கையுமே இந்தத் தருணத்தில் ததும்புகிறது guys! நிச்சயமாய் இந்த இக்கட்டுகளையும் உங்கள் ஒத்தாசைகளோடு தாண்டிடுவோம் ; இந்த இண்டிலிருந்து முழுசாய் வெளிவரவும் ஆண்டவன் வழிகாட்டாது விட மாட்டாரென்று  gut feeling எனக்கு ! அதற்குக் காரணமில்லாதில்லை !! 

இப்போதெல்லாம் மாதத்தின் துவக்கமாகிவிட்டால், நமது சொற்பமான ஏஜெண்ட்கள் "புக் அனுப்பிடறீங்களா ? ஜம்போ உண்டா இந்த மாசம் ? டெக்ஸ் இருக்காரா ? கார்ட்டூன் என்ன புக் ?" என்ற ரீதியிலான கேள்விகளோடு நமக்கு சந்தோஷமூட்டி வருகிறார்கள் ! கடனுக்கோ - ரொக்கத்துக்கோ - மாதத் துவக்கத்தில் தவறாது ஆர்டர் தந்து விடுகிறார்கள் பழக்கப்பட்டுவிட்டுள்ள முகவர்கள் !! அதிலும் ஏதேனும் இதழ்கள் இங்கோ FB ; வாட்சப் க்ரூப்களிலோ ஆர்வமாய் அலசப்படும் பட்சத்தில் - அதன் தாக்கம் விற்பனையாளர்கள் வரை எட்டி வருவது கண்கூடாய்த் தெரிகிறது ! கைகளில் தேங்காது அந்த இதழ்களும் விற்பனையாகிடும் போது விற்பனையாளர்களும் மனம் குளிர்வதைக் காண முடிகிறது ! So உங்களின் மௌனங்களின் கலைவானது - உங்களின் அலசல்களானது நமக்கு எத்தனை வீரியமானதொரு ஒத்தாசையினைச் செய்ய வல்லது என்பதை, தாண்டிப் போகும் ஒவ்வொரு தினமும் வலியுறுத்தத் தவறுவதில்லை !! ஒரு பாசிட்டிவ் அதிர்வினை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கிடும் போது இங்கு மாத்திரமன்றி, வேறெங்கெல்லாமோ அவை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன guys !! "இது வெறும் ஜால்ரா !! முகஸ்துதிப் படலம்" என்று இன்னமும் கருத்து கொண்டிருப்போரிடம் - good luck to you folks !! என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது ! And இந்த நொடியில் ஒரு சிறு பெருமூச்சுமே !! மௌனங்களைக் களைந்து குரல்களை இன்னமும் அதிகமாக்கிட மௌனப் பார்வையாளர்களுமே மனது வைப்பின் ; எண்ணிக்கையில் நாமெல்லாம் இன்னும் மிகுந்து, ஆர்ப்பரிப்பின் - அதன் சந்தோஷ விளைவுகளை நினைத்துத் தான் பாருங்களேன் !! Phew !!

ஒவ்வொன்றிலும் 500 பிரதிகள்  கூடுதலாய் விற்பனை செய்திட 8 கோடி ஜனமுள்ள இந்த மாநிலத்தில் வழியில்லாதா போய்விடப் போகிறது ? அந்த வழி மட்டும் நமக்குப் புலப்பட்டு விட்டால் நமது தானைத் தலைவர் ஸ்டைலில் ‘அட்ரா சக்கை… அட்ரா சக்கை… அட்ரா சக்கை!” என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட மாட்டோமா ? இதோ, இப்போதே கூட, தலைக்குள்ளிருந்த பாரத்தை ஒளிவு மறைவின்றி உங்களிடம் இறக்கி வைத்த பிற்பாடு மனசுக்குள் ஒரு இலகுத்தன்மை விரவி நிற்கிறது! 

இத்தனை பிலாக்கனமெல்லாம் நான் கேட்டேனா ?‘ என்று சிலரும்; ‘சத்தமில்லாமல் விலைகளைக் கூட்டிப்பிட்டு, சன்னமாய் ஒரு அறிவிப்பைப் போட்டுக்கிட்டு நடையைக் கட்ட வேண்டியது தானே ? அதைவிட்டுப்புட்டு இம்புட்டு விளக்கம்லாம் தேவையா ?!‘ என்று பலரும் நினைத்திடலாம் என்பது புரியாதில்லை ! அதே போல ‘நீ கிளிப்பிள்ளையாட்டம்  ஒப்பிச்சிட்டதுக்காக நாங்க உன்னை மத்தளம் கொட்டாம விட்டுடுவோமாக்கும் ? விளக்கம் சொன்னாலும் விளக்குமாறு உனக்குத்தாண்டியோவ் !‘ என்ற மைண்ட் வாய்ஸ்களும் coming in loud & clear ! ஆனால் இது எனக்கே எனக்கானதொரு ‘பாரமிறக்கும் படலம்‘ என்று எடுத்துக் கொள்ளுங்களேன் guys ?! ரைட்டோ-தப்போ, மனதில் பட்டதைப் பகிர்ந்துவிட்ட ஒரு இக்ளியூண்டு திருப்தியோடு – அந்த 2019 அட்டவணையை ஆயிரத்துப் பதினெட்டாவது தபா திருத்தியமைக்கப் புறப்படுகிறேன் ! And rest assured - அந்த அட்டவணையில் இம்மி கூட சுவை குன்றியிராது !! That's a promise !!

Getting back to normal - இதோ இம்மாத ஆக்ஷன் சந்தாவின் ஆல்பம் - ரிப்போர்ட்டர் ஜானியின் ஒரு அக்மார்க் நூடுல்ஸ் சாகசத்தோடு !! இப்போதெல்லாம் ஜானியின் கதைகளை எடிட் செய்யும் போது ரொம்ப சிண்டைப் பிய்த்துக் கொள்வது கிடையாது நான் ! பிய்த்துக் கொள்ள அங்கே ஜாஸ்தியில்லை என்பது ஒருபுறமிருக்க - அந்தக் கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் சகலத்தையும் முடிச்சவிழ்க்கும் பாணி மாறிடவே போவதில்லை எனும் போது - வழி நெடுக _ "ஆங்..இவன் யாரு ? அவன் ஏன் குறு குறுன்னு பாக்குறான் ?...இந்தப் புள்ளை ஏன் இங்கே வந்து வில்லங்கத்தை வாங்குது ? போலீஸ்காரங்களே கதைக்குள்ளாற நுழைய மாட்டாங்களா ?" போன்ற லாஜிக்கான கேள்விகளை எழுப்பிக் கொள்வதில்லை ! பொட்டென்று பொணம் ஒவ்வொன்றாய் விழத் துவங்கிடும் போது அவற்றுக்கொரு நம்பரைக் கொடுத்து குறிப்பு மட்டும் எடுத்துக் கொள்வேன் - கிளைமாக்சில் ஒத்துப் பார்த்திடும் பொருட்டு ! So  அவ்விதம் வெகு சுலபமாய் தாண்டிட முடிந்த ஆல்பம் இம்மாதம் உங்களை சந்திக்கவுள்ளது !! As always - மிரட்டும் சித்திரங்கள் + கலக்கும் கலரிங் !! அச்சும் இம்முறை அழகாய் அமைந்திருக்க - பக்கத்துக்குப் பக்கம் வர்ணஜாலம் மெய்ம்மறக்கச் செய்கிறது !! ஒரிஜினல் அட்டைப்படமே - நமது மெருகூட்டலோடும், ஓவியர் சிகாமணியின் எழுத்துருவோடும் !! 


இம்மாதப் பணிகளில் எஞ்சியிருப்பது கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் மட்டுமே என்பதால் - இந்த ஞாயிறு எனக்கு அவரே துணை !! அவரையும் சடுதியில் கிளப்பி விட்டால் - 'தல' பிறந்தநாளைக் கொண்டாட தடை நஹி !! Bye guys! Have an awesome weekend ! Will see you around!

P.S : கீழேயுள்ள நமது விளம்பரத்தை - உங்களது நட்பு வட்டங்களுக்கு மத்தியில் வாட்சப்பில் பகிர்ந்திட இயலுகிறதாவென்று பார்த்திடுங்களேன் - ப்ளீஸ் ? (ஐடியா உபயம் : சீனியர் எடிட்டர்)