Powered By Blogger

Thursday, November 28, 2013

கார்த்திகையும்...கண்ணாமூச்சியும் !

நண்பர்களே,

வணக்கம். கார்த்திகை மாதங்கள் எப்போதுமே ரம்யமானவை ; வாசல்தோறும் அகல்விளக்குகள் ; அந்தப் பொரிகடலை உருண்டைகள் ; மப்பும் மந்தாரமுமான வானிலை என்று ரசிக்க நிறைய விஷயங்களைத் தன்னில் கொண்டது ! இம்முறையும் பொரிகடலை உருண்டைகளும், அகல்விளக்குகளும் இருந்தன தான் ; ஆனால் அந்த அகல்விளக்குகள்  வாசலுக்கு மட்டுமல்ல - வீட்டுக்கும் சேர்த்தே ஒளி தர ஓவர்டைம் உத்தியோகம் பார்க்க வேண்டிப் போய் விட்டது தான் பரிதாபமே ! சுருக்கமாய்ச் சொன்னால் - நித்தமும் 10 மணி நேர மின்வெட்டு ; அதிலும் பணி செய்திடக் கூடிய பகல் வேளைகளில் 6 மணி நேரங்கள் சுத்தமாய் மின்சாரம் கிடையாது ! மாலைகளில் ஆறு முதல் நள்ளிரவு வரை ஒரு மணிக்கொரு தடவை கண்ணாமூச்சி ஆட்டம் - மின்சாரத்தோடு ! எங்கே அடித்தாலும் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் சிவகாசிக்கு உண்டு என்ற ஒரு வித இறுமாப்பு எங்கள் நகரத்துக்கு உண்டென்பதில் ரகசியம் கிடையாது தான் ; ஆனால் பிராண வாயுவை நெரிக்கும் போது எங்களுக்கும் மரண பயம் நேருமென்பதை கோடையின் 16 மணி நேர மின்வெட்டு உச்சங்கள் அப்பட்டமாக்கின என்றால் - தற்சமய இருள் போர்வைகள் அதனை மீண்டுமொருமுறை பூதாகரமாக்கி வருகின்றன ! நம்மிடம் ஜெனரேடர் வசதி உண்டென்ற போதிலும், இதர பணிகள் சகலமும் வெளியிலுள்ள வெவ்வேறு துறைகளில் இருந்து பூர்த்தி ஆகிட வேண்டும் எனும் போது அங்கெல்லாம் சொல்லி மாளா சுணக்கங்கள் ! தட்டுத் தடுமாறி டிசம்பரை கரை சேர்க்கும் முன்பாக எங்கள் டீமின் அனைவருக்கும் திடுமென்று தலை நரைத்திடும் போலொரு  பிரமை ! (அடடே --கேசத்தின் வெண்மைக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாமோ ?

ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் + டைகரின் "வேங்கையின் சீற்றம்" + சிக் பில் ஸ்பெஷல் அச்சுப் பணிகள் முடிந்து வாரம் ஒன்றுக்கு மேலாகி விட்டது   ; பைண்டிங்கில் பணி முடிக்க தாமதம் ஆகி வரும் போதிலும் இவ்வார இறுதியினில் மூன்றுமே நம்மிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! இதழ் # 4 - கூர்மண்டையர் டயபாலிக் தோன்றும்  "OPERATION சூறாவளி " வரும் செவ்வாய்க்குள் எப்படியேனும் தயார் ஆகி விடும். So டிசம்பர் 4 தேதிக்கு அனைத்து இதழ்களையும் despatch செய்திடுவோம். அருள் கூர்ந்து அது வரை பொறுமை காத்திடக் கோருகிறேன் ப்ளீஸ் ?! கோடையின் உச்ச பட்ச மின்வெட்டு வேளைகளில் கூட, பகலில் 6 மணி நேர மின்சாரம் இருந்து வந்தது ; ஆனால் இம்முறையோ அந்தக் கருணைக்கும் வழி இல்லை என்பதால் - காலை முதல் மாலை வரை ஆபீசில் ஈயோட்டும் வேலை மட்டுமே சாத்தியமாகிறது ! Anyways, 2013-ன் இறுதி black & white இதழின் preview இதோ : 

முன்னட்டை நம் ஓவியரின் கைவண்ணம் - டிஜிட்டல் சேர்க்கைகள் ஏதுமின்றி ! பின்னட்டையோ - சில மாதங்கள் முன்பாக நமது வாசக நண்பர் சண்முகசுந்தரம் தயார் செய்து அனுப்பி இருந்ததொரு டிசைன் ! அந்த metalic வண்ணம் அச்சிடச் சிரமம் தரக் கூடியதென்பதால் இதனை பயன்படுத்திடாது இருந்தோம் ; but this is too good a design to hibernate என்று தோன்றியதால் பின்னட்டையிலாவது போடுவோமே என நினைத்தேன் ! நண்பருக்கு நமது நன்றிகள் ! வழக்கம் போல் டயபாலிக் பரபரப்பானதொரு action மேளாவோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளார் ! 'நொடிக்கொரு முகமூடி' - என்ற அந்த டயபாலிக் முத்திரை இக்கதையில் அ-ழு-த்-த-மா-க பதிந்திருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் ! சித்திரத் தரம் as always awesome ! பாருங்களேன் ஓவியரின் மாயாஜாலங்களை !! 



Creativity பற்றிய தலைப்பில் நாமிருக்கும் போதே நம்மிடையே உறையும் திறமைகளுக்கு லேட்டஸ்ட் மாதிரி ஒன்றினை உங்களுக்குக் காட்டியே தீர வேண்டும் நான் ! "புதிய தலைமுறை" இதழினில் முழுப்பக்க வண்ண விளம்பரம் செய்திட திட்டம் இருப்பதாக நான் கடந்த பதிவில் எழுதி இருந்தேன் அல்லவா - இதோ அதற்கென நண்பர் ரமேஷ் குமார் தயார் செய்து அனுப்பி இருக்கும் அட்டகாசம் !

சென்னை புத்தக விழாவினில் நமக்கொரு ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் அங்கு display செய்திடக் கூடிய banner களில் இந்த டிசைனும் ஒன்றாக இருந்திடும் ! Wonderful job sir ! Thanks a ton ! அதே மூச்சோடு - நண்பர்களின் creativity -க்கு இன்னமும் ஒரு சவாலை முன்வைக்கப் போகிறேன் ! "சன்ஷைன் கிராபிக் நாவல்" இதழ்களுக்கென   ஒரு பிரத்யேக logo டிசைன் பண்ணி அனுப்பிடுங்களேன் ? அழகாய் அமைந்திடும் logo ஜனவரி முதலாய் துவங்கிடவிருக்கும் இந்த கிராபிக் நாவல் இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரிக்க உதவிடுமே ? 

கிராபிக் நாவல்கள் பற்றிய mention எழும் போது அதனில் தலை காட்டிடக் காத்துள்ள இன்னுமொரு ஆசாமியை அறிமுகம் செய்திடும் கடமை எனக்குள்ளது ! இவர் நமக்கு ரொம்ப காலமாகவே தெரிந்தவர் தான் ...ஆனால் இவருக்கென ஒரு தனி இதழ் ஒதுக்கிடப்படும் என்று நிச்சயமாய் நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம் - ஏனெனில் ஆசாமியின் தொழில் அத்தகையது ! Yes , "இரத்தப் படலம்" கதைத் தொடரில் ஜனாதிபதி ஷெரிடனை சுட்டு வீழ்த்தும் ஒரிஜினல் கொலையாளியான ஸ்டீவ் ரோலாண்ட்டின் கதை "காலனின் கைக்கூலி " என்ற பெயருடன் ஒரு single shot album ஆக முழு வண்ணத்தில் வரவிருக்கிறது ! சதித் திட்டத்தில் இவனது பங்கு பற்றிய சித்தரிப்பு மிக சுவாரஸ்யமாய்ச் சொல்லப்பட்டுள்ளதை இந்த ஆல்பம் நமக்குக் காட்டவுள்ளது. ! Don't miss it ! 

2013-ன் சகல இதழ்களும் ஒரு வழியாய் நிறைவு காண்பதால் - எங்களின் focus ஏற்கனவே 2014-க்குத் தாவியாகி விட்டது ! ஜனவரியில் வெளிவரக் காத்துள்ள இதழ்களின் பட்டியல் இதோ  :
  • லயன் காமிக்ஸ் : "யுத்தம் உண்டு...எதிரி இல்லை"  (கமான்சே) - ரூ.60
  • முத்து காமிக்ஸ்: "சாக மறந்த சுறா" (ப்ரூனோ பிரேசில் ) - ரூ.60
  • சன்ஷைன் லைப்ரரி : "பயங்கரப் புயல் "(கேப்டன் பிரின்ஸ்) - ரூ.60
  • சன்ஷைன் கிராபிக் நாவல் : "பிரபஞ்சத்தின் புதல்வன் " - ரூ.60
இவற்றிற்கான பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேல் நிறைவாகி விட்டன ! தொடரும் நாட்களும் இதே இருளில் தான் தொடர்ந்திடக் காத்திருக்கும் பட்சத்தில் - மாதாமாதம் 'டிரௌசரைக் காணோம் நண்பர்களே !' என கானம் பாட நிச்சயம் எனக்கு உத்தேசம் இல்லை ! உங்களின் சந்தாக்களை ஆவலாய் நாங்கள் எதிர்பார்க்கும் வேளை இதுவே என்பதால் - இம்மாத பட்ஜெட்டில் நம்மையும் கணக்கில் இணைத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ?

Before I sign off - இதோ இன்னுமொரு போட்டி - KBGD 2 (Kaun Banega Graphic Designer 2) ! ஜனவரியின் "பயங்கரப் புயல்" மறுபதிப்புக்கு அட்டைப்படம் டிசைன் செய்திட ஆர்வம் கொண்ட நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! டிசம்பர் 10 தேதிக்குள்ளாக உங்களின் ஆக்கங்கள் நம்மைச் சேர்ந்திட வேண்டும் ! இம்முறை வெற்றி பெறும் போட்டியாளரின் போட்டோ அந்த இதழினில் பிரசுரமாகும் ; ரூ.1000 கிப்ட் செக் எனும் கொசுறோடு ! Give it a shot guys ? KBT -3 (மொழிபெயர்ப்புப் போட்டி )-ன் முடிவுகளை டிசம்பர் இதழ்களை despatch செய்திடும் காலையில் இங்கு அறிவிக்கிறேன் ; நிச்சயம் அதனில் சுவாரஸ்யங்கள் காத்துள்ளன என்பது மட்டும் உறுதி ! Bye for now....see you soon folks !

Saturday, November 16, 2013

இது வேங்கையின் வேளை !

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் இறுதி மாதங்கள் எப்போதுமே எங்களுக்குக் கொஞ்சம் பிசியான சமயங்களாக இருப்பது வழக்கமே ; இம்முறையோ   டிசம்பரில் 1+3 = 4 வெளியீடுகள் என்ற அட்டவணையும் தற்செயலாய் அமைந்து விட்டதால் நெட்டி கழன்று   விட்டது ! ஒவ்வொரு மாதமும் இதழ்களின் தயாரிப்புப் பணிகளை கடைசி நிமிடம் வரை ஜவ்வாய் இழுத்துச் சென்று விட்டு - அச்சுப் பணிகள் நடந்தேறும் சமயங்களில் நான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எங்காவது புறப்பட்டுச் செல்வதே வாடிக்கையாகிப் போய் வர -  -printing ல்  நேர்ந்திடும் குளறுபடிகளுக்கு ஒரு வகையில் நானும் பொறுப்பாகி வந்து கொண்டிருந்தேன். இம்முறை அதே தவறைத் தொடர்ந்திடாது, மூச்சு விட அவகாசத்தோடு பணிகளை முடித்து ; அச்சு வேலைகளையும் கொஞ்சமேனும் உடனிருந்து கவனிக்க முடிந்தால் நலம் என்ற வெறியில் செயல்பட்டதால் இவ்வாரம் முழுவதும் எங்கள் டீமுக்கு சிவராத்திரிகளே ! கடந்த 15+ நாட்களாய் நாளொன்றுக்கு 6-7 மணி நேர மின்தடையும் அமலில் உள்ளதால் அதன் பொருட்டு நேரிட்ட விரயச் செலவுகளும், தலைவலிகளும் தம் பங்கிற்கு எங்கள் உறக்கங்களுக்கு உலை வைத்தன ! பொதுவாய் இங்கு நம் வலைப்பதிவினில் நான் எட்டிப் பார்ப்பது இரவு வேளைகளில் ! ஆனால் இந்த ஒரு வாரமாய் வீடு திரும்பும் வேளை கொட்டாவிகளின் ஆர்ப்பரிப்பைச் சமாளிக்கவே இயலாத ஆவிகளின் நடமாட்ட வேளை என்பதால் தாக்குப் பிடிக்க முடியவில்லை ! So ஐந்தாறு நாட்களாய் இங்கு ஆஜராக முடியாது போனதற்கு சாரி guys ...but  சில சமயங்களில் பணிகள் 'கட கட'வென   ஓடிடும் போது நாமும் அந்த flow-ல் இணைந்து கொள்ளாவிட்டால் சிக்கலாகி விடுகிறது !   இங்கு தலை காட்ட இயலாது போன இவ்வொரு வாரத்தினில் - 2013-ன் இறுதி மறுபதிப்பான சிக் பில் இதழையும் ; டைகரின் "வேங்கையின் சீற்றத்தையும் " முடித்து விட்ட திருப்தி கிட்டியுள்ளது ஒரு சின்ன ஆறுதல் ! அவற்றின் அச்சுப் பணிகளும் அடுத்த 3 நாட்களுக்குள் முடிந்திடும் நிலையை எட்டி விட்டதால் கொஞ்சமாய் தலை பாரம் குறைந்துள்ளது போன்ற feeling இன்றைக்கு ! தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டு ; தியாகங்கள் பல செய்த தீரனாக இந்தப் பத்தியை நான் எழுதிடவில்லை ! ஆண்டின் அட்டவணையினில் -  பெரும்பான்மையான இதழ்களை இறுதி 3 மாதங்களுக்கு ஒதுக்கிய எனது  கோணங்கித்தனமான திட்டமிடல் மாத்திரமே இந்த 'விழி பிதுங்கும் படலத்தின் ' சூத்ரதாரி என்பது தெளிவாய்ப் புரிகிறது ! ஷெரிப் டாக்புல் அடிக்கடி ஆர்டினின் டிக்கியில் விடும் பாணியிலான 'படீர் ' உதையை எனக்கு நானே விட்டுக் கொள்ளவொரு மார்க்கம் இருக்கும் பட்சத்தில், எப்போதோ அதை செயலாக்கி இருப்பேன் ! பணிகளின் பளு ஒருபக்கமெனில் - ஒட்டு மொத்தமாய் 3 அல்லது 4 இதழ்களுக்கு ஒரே மாதத்தில் பேப்பர் வாங்கும் போதும் ; ராயல்டி பணம் அனுப்பிடும் போதும் நேரும் தலைசுற்றல் - தலைமுறைக்கும் நினைவிருக்கும் ரகம் ! ஆனால் ஏதேதோ குட்டிக் கரணங்களும், அந்தர் பல்டிகளும் அடித்தாவது  2013-ன் அறிவித்த எண்ணிக்கையிலான இதழ்களை, உரிய சமயத்தில் பூர்த்தி செய்திடுவோம் என்ற நிம்மதி - சிரமங்களை சிரத்திலிருந்து சிறகடிக்கச் செய்கின்றது ! (அடடே...கவிதை ?!) 

இதோ டிசெம்பரின் ஒரு வெளியீட்டின் அட்டைப் படம் + முன்னோட்டம் : 
Original Cover

டைகரின் அட்டைப்படம் தன் முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் தான் வெளியுலகைப் பார்த்திடும் வாய்ப்புப் பெறுகிறது ! Yes - இந்தாண்டின் முதல் வெளியீடான NBS -ன் அட்டையில் டைகரைப் போடுவது என்று தீர்மானித்த பின்னே - நமது ஓவியரைக் கொண்டு மொத்தம் 3 டிசைன்கள் வடிவமைத்தோம். அவற்றுள் ஒன்றே இப்போது "வேங்கையின் சீற்றத்தின் " அட்டையாக வந்துள்ள டிசைன் ! டைகரின் "எடுப்பான" நாசி துவாரம் closeup -ல் கொஞ்சம் டெரராக இருப்பது போல் பட்டதால் NBS -க்கு இதைப்  பயன்படுத்திடவில்லை ! (NBS -க்கு பயன்படுத்திய டிசைனுக்கு இதுவே தேவலாம் என்ற கருத்துக்கள் நிச்சயம் வரும் என்பதும் எதிர்பார்த்திடாதில்லை!)  பின்னட்டையைப் பொறுத்த வரை - சமீப மாதங்களது பாணியைப் பின்பற்ற இயலாது போனதில் எனக்கும் வருத்தமே ! நமது டிசைனர் பொன்னன் ஆண்டின் இறுதி என்பதால் ரொம்பவே பிஸி ஆகி விட்டதால் - பின்னட்டைக்காக இன்னொரு காத்திருப்புக்கு 'தம்' இல்லை நம்மிடம் ! So நேரம் இன்னமும் விரயம் ஆகிட வேண்டாமே என்ற வேகத்தில் back cover -ல் Heathcliff -க்கு வாய்ப்பளித்துள்ளோம் ! அடுத்த இதழ் முதல் - we will be back to the recent patterns !NBS உடனான ஒட்டுதல் இந்த இதழின் அட்டைக்கு மாத்திரமில்லாது, கதைக்கும்  உண்டு தானே ?! NBS-ல் துவங்கிய 'இருளில் ஒரு இரும்புக் குதிரை"  கதையின் concluding part இது ! So  ஜனவரியின் தொங்கல் - மாதம் # 12-ல் ஒரு முடிவுக்கு வருகிறது ! டைகரின் வழக்கமான பரபரப்பு ; மாறுபட்ட ஓவிய பாணிகள் ; வண்ணச் சேர்க்கைகள் என இதுவொரு ரசிக்கச் செய்யும் இதழாய் அமையுமென்பது உறுதி ! இந்த இதழோடு 2013-ன் பிளஸ் 6 முயற்சி நிறைவுறுகிறது ! வெவ்வேறு சைஸ்கள் ; விலைகள் ; கதைகள் என செயலாற்ற இந்த வரிசை எனக்கு சுதந்திரம் தந்த வகையில் மகிழ்ச்சியே ! பார்க்கலாமே - 2014-ன் பொழுதுகள் மீண்டும் இது போலொரு கதவைத் திறக்கும் சக்தியை நமக்குத் தருகிறதா என்று :-)

2014-ன் அட்டவணைத் தேர்வில் - "கா.க.கா " வண்ணத்தில் என்ற கோரிக்கையைத் தாண்டி நிறைய மாற்றுக் கருத்துக்கள் எழுந்தது இரு விஷயங்களின் பொருட்டு :

1.சிக் பில்லின் "நிழல் 1..நிஜம் 2 " மறுபதிப்புக் கதையின் தேர்வு நிறைய புருவங்களை உயர்ந்திடச் செய்துள்ளது ! இதன் பின்னணியில் உள்ள லாஜிக் ரொம்ப ரொம்ப சிம்பிள் ! தற்போது சிக் பில் வரிசையில் வண்ண டிஜிட்டல் files தயாராக இருப்பது மொத்தம் 14 கதைகளுக்கு மாத்திரமே ! இவற்றுள் நாம் சென்றாண்டு வெளியிட்ட "கமபளத்தில் கலாட்டா" + "ஒரு கழுதையின் கதை" + இப்போது வெளியிடவிருக்கும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "சேரும். So  எஞ்சி இருப்பது 11 ; அவற்றுள் 4 கதைகள் 1958-ல் வெளியான புராதனங்கள் என்பதால் அவற்றை நான் இப்போதைக்குத் தொடப் போவதில்லை ! பாக்கியுள்ள 7 கதைகளில் 6 நாம் இது வரை வெளியிடாத புதுசுகள் எனும் போது மறுபதிப்புப் பட்டியலுக்கென எஞ்சி இருப்பது ஒன்றே ஒன்று தான் ! அது தான்  - "நிழல் 1..நிஜம் 2" ! மேற்கொண்டு கதைகளை வண்ணக் கோப்புகளாய் மாற்றிடும் பணிகளை 2016 வரை அவர்கள் செயல்படுத்திடப் போவதில்லை என்றும் அறிய நேர்ந்தது ! ஆகையால் சிக் பில் மறுபதிப்புக்கு வேறு தேர்வுகள் ஏதும் இல்லை என்ற ஒரே காரணமே - நி.1..நி.2 தேர்வின் பின்னணி !

2.மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் 2014-ன் அட்டவணையே சொதப்பல் என நண்பர்கள் சிலர் அபிப்ராயப்பட்டிருந்ததையும் கவனித்தேன் ! சில நேரங்களில் ஒவ்வொரு கதையின் பின்னேயும் ஒரு சொல்லப்படா கதை இருப்பது உண்டு ! நான் நிறைய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டாலும், சிற்சில சந்தர்ப்பங்களில் என் பக்கத்துச் சிரமங்களை முழுமையாய் வெளிப்படுத்துவது கிடையாது தான் ! ஏற்கனவே சின்னதான வாசகர் வட்டம் நாம் எனும் போது - 'நொய்-நொய்' என 'இதில் கஷ்டம் ; அதில் பிரச்னை' என நானும் பஞ்சப்பாட்டை வாசிப்பது வாடிக்கையாகிப் போய் விட்டால் உங்களுக்கும் ஒரு அயர்ச்சி தோன்றிடும் தானே ? ஒற்றை வரியில் சொல்வதானால் - black & white இதழ்களை ரூ.60 விலைகளில் வெளியிடும் பட்சத்தில் கூட கையைக் கடிக்கும் சூழ்நிலை இன்று ! சமீப TEX தீபாவளி ஸ்பெஷல் இதழின் costing போட்டுப் பார்த்தால் சிகப்பு மசியில் தான் ரிசல்ட் வருகின்றது ! 2 மாதங்களுக்கு ஒரு முறை 15% வரை விலை கூடும் இந்த ரகத் தாள்களை நம்பி ஓராண்டுக்கு முன்பாக நாம் விலை நிர்ணயம் செய்வது தற்கொலைக்கு சமமாய் உள்ளது ! So 'அத்தியாவசியம்" என்ற கதைகளைத் தாண்டி black & white தொடர்களைக் கொஞ்ச காலத்துக்கேனும் விலக்கி வைத்திருப்போம் என்ற தீர்மானத்தின் பலனே - மர்ம மனிதன் மார்டின் + ராபினின் புறக்கணிப்பின் பின்னணி ! 2014-ல் சந்தாக்கள் ; விற்பனைகள் சற்றே நிலை கொண்டு விட்டால் - 2015 முதல் black & white நாயகர்களை மறு பிரவேசம் செய்யச் செய்திடலாமே என்பது தான் எனது சிந்தனையின் சாராம்சம். 'அப்படியானால் டெக்ஸ் ; மர்ம மனிதன் மார்டின் ; ராபின் - என முழுப் பட்டாளத்தையும் வண்ணத்துக்கே கொண்டு செல்வது தானே ?' என்ற கேள்வி எழுப்பும் சிரமத்தை விட்டு வைக்காது - அதற்கான பதிலையும் சொல்லிடுகிறேன் ! இத்தாலியப் படைப்புகளின் சகலமும் அளவில், கதைநீளத்தில் - பிரெஞ்சு பாணிகளில் இருந்து ரொம்பவே மாறுபட்டவை ! நமது தற்போதைய சைஸ்கள் ; விலைகள் ; தயாரிப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரெஞ்சு பாணிக்கு ஒத்துப் போவதால் அதனிலிருந்து மாறுபடும் போது விலைகளில் ஆரம்பித்து, நெடுக நிறைய சிக்கல்கள் எழுகின்றன ! ஆகையால் தான் இத்தாலிக்கு கருப்பு-வெள்ளை என்ற ஒதுக்கீடு! 

சில updates : 
  1. 2014-ன் சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 10-22 தேதிகளில் நடக்கவிருக்கிறது ! சென்றாண்டு அமைந்திருந்த அதே நந்தனம் மைதானத்தினில் ! நமக்கொரு ஸ்டால் தந்திட அமைப்பாளர்களின் சம்மதம் கிட்டுமென்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! Fingers & toes crossed !!
  2. இம்மாத இதழ்களின் E-Bay விற்பனையில் சிறிதும் வாய்ப்பே தராது டெக்ஸ் முன்னணி வகிக்கிறார் ! 'சி.சு'.52 பிரதிகள் ; டெக்ஸ் : 90 பிரதிகள் ! 
  3. டிசம்பரில் டயபாலிக் இதழ் # 2 வரவிருக்கும் விஷயம் லேசாகத் தெரியத் துவங்கியதுமே - இத்தாலியில் இருந்து விசாரிப்புகள் குவியத் துவங்கி விட்டன ! டயபாலிக் சேகரித்து வைத்துள்ள ரசிகர் பட்டாளம் பிரமிக்கச் செய்கிறது ! 
  4. தொடரும் மாதத்தில் 'புதிய தலைமுறை' இதழில் முழுப் பக்க வண்ண விளம்பரம் செய்வதாக உள்ளோம் ! நண்பர்கள் அதற்கான டிசைன் செய்து அனுப்பினால் - as always would be most welcome !!
  5. Breaking நியூஸ் : வாழைப்பூ வடைப் போராட்டக் குழுவின் தலைவர் கிராபிக் நாவலுக்கும் சேர்த்தே நேற்றைக்கு சந்தா செலுத்தி விட்டார் என்பதால் - போராட்டம் வாபஸ் ஆகிறதாம் ! வாழைப்பூக்கள் தப்பித்தன !! 
  6. 2014-ன் அட்டவணை finalize செய்யப்பட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்பது நமது லயனின் 30-வது ஆண்டுமலரின் திட்டமிடல்களே ! கதைகளை பற்றிய விவாதங்களுக்குள் இறங்கிடும் முன்னே அந்த மெகா இதழுக்கொரு பெயர் சூட்டும் படலம் அவசியமாகிடும் அல்லவா ? என் மனதில் ஒரு பெயர் fix ஆகியுள்ளது - ஆனால் அதையும் விட அட்டகாசமாய் உங்களின் suggestions இருப்பின் நிச்சயம் பரிசீலனை செய்வோம் ! Get those thinking caps on people !! Bye for now ! 

Sunday, November 10, 2013

பிரபஞ்சத்தின் புதல்வன் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் எனக்கு நானே "ஓட்டைவாய் உலகநாதன்" என்று பெயர் வைத்துக் கொள்கிறேன்...! எந்தவொரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லையா - அல்லது நண்பர்களின் கற்பனைக் குதிரைகளுக்குக் கடிவாளம் போடும் பொருட்டாவது விஷயங்களைப் போட்டு உடைக்கும் நிர்பந்தம் நேர்கிறதா - நிச்சயமாய்த் தெரியவில்லை ! எதுவாக இருப்பினும், '2014-ன் கிராபிக் நாவல்கள் தனி வரிசை' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இங்கு வாழைப்பூ வடைப் போராட்டக் குழுவின் டெர்ரர் கற்பனைகள் ஒரு பக்கமாயும் ; நம் அலுவலகப் பணியாளர்களுக்கு போன் செய்து அவர்களுக்காவது இது பற்றி மேற்கொண்டு விபரங்கள் தெரிந்துள்ளதா எனச் சோதித்து அறிய  முற்படும் நண்பர்களின் curiosity மறு பக்கமென அதகளம் தான் ! So இனியும் அந்த கிராபிக் நாவல் வரிசைகளின் கதைகள் பற்றியதொரு சிறு கோடாவது போட்டால் தேவலை என்ற சூழலில் தான் இந்தப் பதிவு ! 2014-ன் கிராபிக் நாவல் வரிசை ஏன் ? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே அதன் பிரதான ஆட்டக்காரரை அறிமுகம் செய்திடுகிறேனே ? 


"பிரபஞ்சத்தின் புதல்வன் - தோர்கல்" பிரெஞ்சு மொழியில் 1977-ல் துவங்கியதொரு கதைத் தொடரின் நாயகர். ஒவ்வொரு ஆல்பமும் சராசரியாய் 300,000 பிரதிகள் விற்பனை காணும் ஒரு topseller ஹீரோ ! (இது வரையில்) 34 ஆல்பம்கள் ; ஆங்கிலம் மற்றும் சகல ஐரோப்பியப் பிரதான மொழிகளிலும் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய சாதனைக்குச் சொந்தக்காரர் ! பிரபல த்ரில்லர் கதைகளின் படைப்பாளியான வான் ஹாம்மேயின் பன்முகத் திறமைகளுக்கு ஒரு அசாத்திய உதாரணம் அவரது இந்த ஆக்கம் என்று சொல்லலாம். அது சரி - 'அழுகாச்சிக் காவியங்களை மாத்திரமே இது வரை கிராபிக் நாவல்களென வழங்கி வந்து விட்டு - இது போன்றதொரு தொடரினை  "கிராபிக் நாவல்" எனும் குடையின் கீழே அடைப்பது எவ்விதம் ? என உங்களுக்கு தோன்றிடும் நியாயமான கேள்விக்கு பதில் தோர்கலின் கதை பாணியில் உள்ளது ! பல நூற்றாண்டுகளுக்கு முன்பாய் உலகின் வட துருவத்தைக் கட்டியாண்ட ஆக்ரோஷ வீரர்களான வைகிங்களின் கதையாகவும் இதைப் பார்த்திடலாம்  ; கடலும் மலைகளும் சார்ந்ததொரு மாயாஜால லோகத்தின் பிரதிபலிப்பாகவும் சொல்லிடலாம் ; science fiction ரகக் கதைகளாகவும் இனம் கண்டிடலாம் ; ஒரு விதத் திகில் த்ரில்லராகவும் அடையாளம் சொல்லலாம் ; 'ஒரு ஊரில் ஒரு பயங்கர மாயக் குள்ளன் இருந்தானாம்' என்று உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஒரு மழை நாளிரவில் சொல்லிடக் கூடிய அதீதக் கற்பனையாகவும் classify செய்திடலாம். சுருக்கமாய்ச் சொன்னால் இது எல்லைகளற்ற கற்பனைகளின் வெளிப்பாடு - மூச்சிரைக்கச் செய்யும் சித்திர அற்புதங்களோடு ! ரோசின்ஸ்கி எனும் போலந்து நாட்டைச் சார்ந்த ஓவியரின் அசாத்தியத் திறன்களை இக்கதைத் தொடர் வெளிச்சம் போட்டுக் காட்டும். இங்கு டுமீல்-டுமீல் துப்பாக்கிகளை எதிர்பார்த்திட இயலாது - வீரியமான வில் -அம்புகளும் ; கம்பீரமான போர்வாள்களுமே இருந்திடும் ! காற்றைக் கிழித்துச் செல்லும் ஜெட் விமானங்களும்  ; நக்கல் பேசும் தோஸ்துகளும் இருக்க வேண்டிய இடத்தில் - வைக்கிங் படகுகளும் ; கட்டபொம்மன் மீசைகள் கொண்ட ஆஜானுபாகு உருவங்களும் இடம் பிடித்திருப்பதைக் காண இயலும். ஆங்கிலத்தில் ; பிரெஞ்சில் இதனை ஏற்கனவே ரசித்திருக்கும் நண்பர்களுக்கு இந்த பில்டப் தேவை இல்லை எனினும் - முதன்முறையாய் தோர்கலைச் சந்திக்கக் காத்துள்ள இதர சகாக்களுக்கு இந்த அறிமுகம் உதவினால் மகிழ்ச்சியே ! "பிரபஞ்சத்தின் புதல்வன்" என்ற முதல் இதழ் கிராபிக் நாவல் வரிசையின் முதல் issue - ரூ.60 விலையில் முழு வண்ணத்தில் வரவுள்ளது ! 

கிராபிக் நாவல் வரிசையில் 2014-ல் மொத்தம் 6 இதழ்கள் ரூ.60 விலையினில் இருந்திடும். அவற்றுள் 2 கதைகள் தோர்கல் ஆக்கிரமிப்பார். ஒரு slot - " வானம் எங்கள் வீதி !" என்ற பெயரோடு அந்த விமானங்கள் சார்ந்த உலக யுத்தப் பின்னணியிலான யுத்தக் கதைக்கு ! இதர 3 இடங்களையும் ரொப்பிட திகில் த்ரில்லர் ரகக் கதைகள் சிலவற்றிற்கு முயற்சித்து வருகிறேன். அவற்றையாவது இப்போதைக்கு திரைமறைவில் வைத்திருப்போமே ? 

So 2014-ன் இந்தப் புது முயற்சி உங்களின் தொண்டைகளை சோகத்தில் அடைக்கச் செய்யும் முயற்சியல்ல ; இந்தப் புது பாணிகளை ரசிக்கலாம் என்ற நம்பிக்கையுள்ள நண்பர்கள் சந்தா தொகைகளை செலுத்தும் போது  இதன் பொருட்டு - ரூ.400 சேர்த்து அனுப்பிடலாம் ! சந்தா என்ற topic -ல் இருந்திடும் போதே இதனை ஒரு நினைவூட்டலாகவும் குறிப்பிட விரும்புகிறேன். 2014-ன் கதைகளுக்கு முன்பணம் அனுப்பிட ; அதன் பூர்வாங்கத் தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்திட நிச்சயம் 'வைட்டமின் 'ப ' நிறையவே தேவை என்பது நீங்கள் அறியாதது அல்ல ! சந்தாப் புதுப்பித்தல்கள் துவங்கி விட்டுள்ளன ; ஆனால் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பதே நிஜம். 'ஜனவரியில் தானே ? - அப்போது பார்த்துக் கொள்ளலாம் !' என்று கருதிடாமல் இப்போதே பணம் அனுப்பிட முனைந்தால் -  நிச்சயம் எங்கள் தோள்களின் பாரம் சற்றே குறைந்திடும் ! ப்ளீஸ் guys ? அதே போல நீங்கள் உங்கள் நகர நூலகங்களுக்கோ / பள்ளி ; கல்லூரி நூலகங்களுக்கோ நமது சந்தாக்களை அன்பளிப்பாய் வழங்கிட விரும்பிடும் பட்சத்தில் 15% சலுகை + 2 அல்லது 3 தவணைகளில் பணம் செலுத்தும் சுதந்திரமும் உண்டு ! Do give that a thought too ?

'எல்லாம் சரி - கிராபிக் நாவல்கள் எனும் விஷப் பரீட்சைக்கு ஏன் இத்தனை ஆர்வம் ?' என்ற ஒரு சாராரின் கேள்வி பாக்கி நிற்கின்றது ! 'சிவனே' என்று கார்ட்டூன் கதைகளையோ - துளியும் சிக்கல் இல்லா டெக்ஸ் கதைகளையோ தனியானதொரு இதழாய் போட்டுப் போய் கொண்டே இருக்கலாமே ? என்ற கேள்விக்கு எனது பதில் ரொம்பவே simple : ஐந்தில் ரசிக்கும் அந்த Tom& Jerry -ஐ பதினைந்தில் அதே ஆர்வத்தோடு நாம் ஆராதிப்பதில்லை ! இருபத்தைந்தில் முக்கியமாய்த் தெரிந்திடும் சங்கதிகள் நாற்பதை நெருங்கும் நாட்களில் நகைப்பாய்த் தெரிந்தால் வியப்பில்லை ! காலமும், சூழ்நிலைகளும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும், நம் ரசனைகளையும் செதுக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் சந்தேகமே இல்லை ! நவீன உலகின் புது சினிமாக்களை சந்தோஷமாய் ரசிக்கிறோம் ; உடுப்பி ஹோட்டல்களும் ; வுட்லண்ட்ஸ் ஹோட்டல்களும் நின்ற இடங்களில் இன்று KFC : McDONALDS என்றெல்லாம் வாய்க்குள் நுழையா பெயர் கொண்ட கடைகளில் வாயைத் திறந்து நிற்கின்றோம் ;  இள ரத்தம் பாய்ந்திடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு விசிலடிக்கிறோம் ; புது சிந்தனைகளைச் சொல்லிடும் இளைய தலைமுறையை வியப்போடு பார்க்கிறோம் - ஆனால் (தமிழில்) 'காமிக்ஸ் ரசனை' என்று வரும் போது மட்டும் நிறைய வேளைகளில் நம்மைச் சுற்றி நாமே ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டு அதன் கதகதப்பே போதுமென்ற திருப்தியில் தொடர்வது புரியாத புதிர்களில் ஒன்று ! அது தவறென்றோ ; அந்த ரசனைகள் மட்டமென்றொ சத்தியமாய் நான் ஒரு நாளும் சொல்லப் போவதில்லை ; இன்னமும் சாப்பாட்டு வேளைகளில் நான் தேடுவது லக்கி லூக்குகளையும் ; டொனால்ட் டக்குகளையும் தான் !  ஆனால் சிறிது சிறிதாகவேனும் நம் ஜன்னல்களை இதர விடியல்களின் திசைகளிலும் திறந்து வைப்பதில் தவறில்லை என்பது எனது எண்ணம் ! இந்த சோகக் காவியங்களை படித்து நான் சாதிக்கப் போவது என்ன ? காமிக்ஸ் படிப்பதே ஒரு பொழுது போக்கிற்கு எனும் போது இதில் 'நொய்-நொய்' என்ற பிடுங்கல்கள் தேவை தானா ? என்று எண்ணத் தோன்றுவது சகஜமே ! பல்சுவைப் பந்தியிலும் ஒரு ஊறுகாய் ஓரமாய்த் தேவைப்படும் போது - நம் வாசிப்புகளின் விஸ்தீரணத்தை சன்னமாய் அகலப்படுத்திடும் ஒரு முயற்சியை விரோதமாய்ப் பார்க்கத் தேவை இல்லையே ? கனமான கதைகளை ஜீரணம் செய்ய சிரமம் நேர்கிறது என்ற அபிப்ராயங்களை மதிக்கிறேன் ; "வானமே எங்கள் வீதி" நிச்சயம் அது போல் சிரமங்களைத் தராது ! தொடரவிருக்கும் திகில் த்ரில்லர்களும் ரசிக்கும் விதமே இருந்திடும் ! ஆனால் இது போல் சின்னதாய் இன்று துவங்கிடும் ஒரு முயற்சி - நம் காமிக்ஸ் ரசனைகளை வெவ்வேறு genre களுக்குள்ளேயும் காலப்போக்கில் இட்டுச் செல்ல ஒரு பிரத்யேகப் பாதையாய் அமைந்தால் அது நமக்கெல்லாம் பெருமை ஆகாதா ? 'இன்னமுமா காமிக்ஸ் படிக்கிறே ? என்ற பரிகாசங்கள் மாயமாகி  'காமிக்ஸ்லாம் படிக்கிறியா ? எனக் கண்கள் விரியக் கேள்விகள் எழும் நாளொன்று புலர இந்தப் பாதை சிறிதேனும் உதவிட்டால் அது நம் அனைவரது வெற்றியும் ஆகிடாதா ? Good night folks ! See you around soon ! 

Friday, November 08, 2013

பார்வையின் மறு பக்கம் !

நண்பர்களே,

வணக்கம். மழை பெய்து ஓய்ந்ததொரு feeling கடந்த ஒரு வாரமாய் ! தீபாவளி எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சமில்லா பண்டிகை தான் என்றாலும், எங்கள் நகரில் அந்நேரம் ஒரு extra buzz இருப்பது வாடிக்கை ! பட்டாசு மொத்த விற்பனை களை கட்டுவது ஒரு பக்கமெனில் - தீபாவளி கொணரும் 2 மாதத்து போனஸ் பட்டுவாடா - ஊர் முழுவதிலும் சிகப்பு & பச்சை நோட்டுகளில் புன்னகைக்கும் காந்தித் தாத்தாவைப் பரவலாய்ப் புளங்கச் செய்ய, அனைத்து மக்களிடமும் ஒரு துள்ளல் இருப்பது வழக்கம். (அந்த 2 மாத போனஸ் பணத்தைப் புரட்ட விழி பிதுங்கி நிற்கும் தொழிலதிபர்களின் பிலாக்கனம் தனிக் கதை !!)  

இந்தப் பரபரப்பிற்கு மத்தியில் "தீபாவளிக்கு 3" என்ற மார் தட்டலோடு செய்த வாய் ஜாலங்கள் - செயலாகிடும் வேளை வந்த போது பேய் முழி முழிக்கச் செய்தது ! புரட்டப் புரட்ட வந்து கொண்டே இருந்த இரவுக் கழுகார் குழப்பமின்றி ஒரு பக்கம் பெண்டை நிமிர்த்த ; வியட்நாமில் தெருத் தெருவாய் சுற்றிடும் வாலோன் "சிப்பாயின் சுவடுகள்" புண்ணியத்தில் மறு பக்கம் மென்னியைத் திருகிக் கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு 2014-ன் அட்டவணையில் இறுதிச் சுற்று நகாசு வேலைகள் ரொம்பவே 'பஸ்கி' எடுக்கச் செய்து விட்டது ! அதற்கு மத்தியில் அமெரிக்கப் பயணம் ; ப்ராசசிங்கில் ; அச்சுப் பணிகளில் தாமதம் ; அட்டைப்பட டிசைன்களை பூர்த்தி செய்வதில் சுணக்கம் என B.P -ஐ எகிறச் செய்ய அவ்வப்போது சங்கதிகள் அரங்கேறி வந்தாலும் - தட்டுத் தடுமாறி 2 இதழ்களையாவது தீபாவளிக்குக் கரை சேர்த்திட முடிந்தது ஆண்டவன் செயலே ! So - ஒரு வழியாய் இதழ்களை despatch செய்து விட்டு, பணியாளர்களை போனசோடு வழியனுப்பி விட்டு, 3 நாள் விடுமுறையில் புறப்பட்ட போது சன்னமாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது ! 

ஆனால் டி-விக்குள் மூழ்குவதையும், அதிரசம், முறுக்குகளைப் பதம் பார்ப்பதையும் அரை நாளுக்கு மேலாய் செய்திடப் பொறுமை இருந்திடவில்லை என்பதே நிஜம் ! பரபரப்பாய் வேலை செய்து பழகி விட்டு, 'அக்கடா' வென விட்டத்தை வெறித்துப் பார்ப்பது கொஞ்ச நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்திடச் சாத்தியமில்லா செயல் என்பது புரிந்தது ! So உங்களின் பின்னூட்டங்களை மொபைலில் பார்த்திடுவது ; அந்த அபிப்ராயங்களை ; சிந்தனைகளின் பின்னணிகளை அசை போடுவது என்பதற்கு இடையே - தீபாவளியின் 2 இதழ்களையும் கொஞ்சம் சாவகாசமாய்ப் புரட்ட எத்தனித்தேன் ! ஒரு இதழின் பணிகள் நிறைவுற்ற பின்னே அந்த புக்கை சும்மா மேலோட்டமாய்ப் புரட்டுவதைத் தாண்டி எப்போதுமே அதனுள் புகுந்திட முயற்சிப்பது எனது வழக்கமல்ல ; ஆனால் டி-வி யில் ஓடிய மொக்கைகளைத் தவிர்த்து பொழுது போக வேறு மார்க்கம் தென்படவில்லை என்பதால் இம்மாத இதழ்களைப் புரட்டினேன் ! ஒரு வாசகனாய் ; காமிக்ஸ் ரசிகனாய் எனக்கு மனதில் தோன்றிய சிந்தனைகளை - இங்கு நண்பர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் ! இதே வலைப்பூவில் நானும் ஒரு வாசகனாய் இந்த இதழ்களைப் பற்றி விமர்சனம் செய்திருப்பின் - என்ன எழுதி இருப்பேன் ? என என்னை நானே கேட்டுக் கொண்டதன் விளைவு தான் இந்தப் புதிய பதிவு ! (ஒரு பதிவுக்காக என்னவெல்லாம் டக்காடி வேலை பண்றான் ? என உங்களின் mind voice ஒலிக்கும் பட்சத்தில் தவறு அதன் மீதல்ல தான் !!

எல்லோரையும் போலவே நான் முதலில் கையில் எடுத்தது டெக்ஸ் வில்லரையே...!  அட்டைப்படத்தில் ரொம்ப நாள் கழித்து solo -வாக டெக்ஸ் இடம் பிடிக்க - நம் ஓவியரின் புண்ணியத்தில் ஒரு நெருங்கிய நண்பனை அழகாய்த் தரிசித்த உவகை கிட்டியது. புக்கின் கனமும் பழைய நினைவுகளைக் கிளறி விடும் விதத்திலிருக்க - பக்கங்களைப் புரட்டுவதில் சிக்கல் தோன்றிடவில்லை ! (இப்போது ) பழகிப் போன ஹாட்லைன் அன்றைய அந்த அவசர ஈர்ப்பைத் தரவில்லை என்பதால், புதிதாய் அறிவிப்புகள் ஏதும் உள்ளனவா ? என்ற ஒரு மேலோட்டமாய் glanceக்குப் பின்னர் பக்கத்தைப் புரட்டினேன். "டெக்ஸ் சாம்ராஜ்யத்தின் அதிபதியோடு 4 பக்கப் பேட்டி" என்பது நம் இதழ்களின் பாணிக்கு முற்றிலும் புதிதானது என்பதால் படிக்க ஆர்வம் தோன்றியதில் வியப்பில்லை. டேவிட்டின் பேட்டியில் புதிதாய் விஷயங்கள் அதிகம் இல்லை என்றாலும், டெக்ஸ் பற்றிப் பேசக் கேட்டதில் சந்தோஷமே ! அதிலும் டெக்ஸ் ரசிகர்களின் எண்ணிக்கைகளில் நாம் ஒரு சிறுபான்மையாக இருந்தால் கூட  நமது ஆர்வமும், நேசமும் கவனிக்கப்படாது போகவில்லை என்பது மனதுக்கு நிறைவாக இருந்தது ! அடுத்து வந்த பக்கங்களில் டெக்சின் படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகம் ; முதல் கதையின் ஒரிஜினல் அட்டைப்படம் - பின்னர் "மரண தேசம் மெக்ஸிகோ" கதை என விரிந்தன. கதையில் எனக்கு முதலில் 'பளிச்' எனத் தோன்றியது ஓவியப் பாணியே ! நிறைய ஓவியர்கள் பணியாற்றும் தொடர் இது என்று நமக்குத் தெரிந்திருந்தாலும், :நிலவொளியில் ஒரு நரபலி" பாணியில் டெக்சைப் பார்க்க நேரிடும் போது கவலையாக இருப்பது நிஜமே ! ஆனால் இம்முறை புதிய பாணி என்றாலும் டெக்ஸ் அழகாய் ; இளமையாய்த் தோற்றம் தருவதில் ஒரு சந்தோஷம் ! டெக்ஸ் எப்போதுமே இடியாப்பங்களுக்குள் கால் வைப்பதில்லை என்பதால் - பெரிய குழப்பங்கள் இன்றி அவரது கதைகளில் ஒன்றிடுவது சுலபமே ! இரவுக் கழுகார் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் கூட நம்மை வசீகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்பது எனது அபிப்ராயம். ஆனால் அந்த பலமே - சில வேளைகளில் பலவீனமாகவும் உருவாகிடக் கூடும் என்பதை "மரண தேசம் மெக்சிகோ " கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குப் புகட்டியது ! தெளிந்த நீரோடையாய் கதை செல்வது ஒ.கே. தான் என்றாலும் இது போல் துளியும் சஸ்பென்ஸ் இல்லாது, கதை பயணிக்கும் போது நம்மையும் அறியாது ஒரு சின்ன ஆயாசம் உள்ளுக்குள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கார்சன் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சந்தானம் செய்யும் வேலையினைக் கச்சிதமாய்ச் செய்து வருவது புரிகிறது ; அவருக்கெனப் பிரத்யேகமாய் எழுதப்பட்டுள்ள வசனங்களும் அதை நன்றாகவே பிரதிபலிக்கின்றன !வீரத்தில் வெள்ளி முடியாரும் யாருக்கும் சளைத்தவரல்ல எனும் போது, அவருக்கு இன்னும் வீரியமானதொரு role தந்திட படைப்பாளிகள் தயங்குவது ஏனோ ? I miss Carson the dasher !! மெக்சிகோவினுள் புகுந்த பின்னே அதகளம் காத்துள்ளது என நினைக்கத் தோன்றினாலும், கதையின் simplicity அதற்குப் பெரியதொரு வாய்ப்பளிக்கவில்லை ! சரளமான வசனநடை படிக்க இயல்பாய் இருந்தாலும் , கதையில் ஒரு punch இல்லாது போகும் பட்சத்தில் பெரிதாய் ஒரு தாக்கத்தைத் தரவில்லை என்பதே நிஜம். ரொம்ப காலம் முன்னே வந்த "துயில் எழுந்த பிசாசு" கதையின் அளவுக்கு இந்த சாகசம் 'பப்படம்' அல்ல என்றாலும் - எனது டெக்ஸ் வில்லர் அளவுகோல்களுக்கு இது 'just  pass' தான் என்பேன் ! ஆனால் எது எப்படியோ - consistent ஆன சித்திரப் பாணியைப் பாராட்டாது இருக்க முடியாது ; 224 பக்கங்களுக்கும் ஒரு வசீகரத்தை தொடர்ந்திட்ட ஓவியர் தான் இக்கதையின் நிஜ ஹீரோ !  தீவிர டெக்ஸ் ரசிகர்களுக்கு எனது கருத்தில் உடன்பாடில்லாது போகலாம் ; ஆனால் "தலைவாங்கிக் குரங்கு " ; டிராகன் நகரம் ; சைத்தான் சாம்ராஜ்யம் ; மரண முள் ; "மரணத்தின் நிறம் பச்சை " போன்ற கதைகளில் நாம் பார்த்த டெக்ஸ் இங்கு நிச்சயமாய் absent தானே ? 
ஒரு சின்ன பிரேக் எடுத்து விட்டு, கதை # 2-ஐப் புரட்டத் துவங்கினேன். இந்தக் கதையின் ஓவியர் வேறொருவர் ; இதனில் டெக்ஸ் சற்றே வித்தியாசமாய்த் தான் காட்சி தருவார் என்பதை ஏற்கனவே விளம்பரங்களின் மூலம் தெரிந்து வைத்திருந்ததால் பெரிதாய் ஒரு திகட்டல் தோன்றவில்லை. கதை கொஞ்சம் வித்தியாசமான பாணியில் புறப்பட்டதால் சுவாரஸ்யமாய்ப்  படிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கார்சன் retired hurt என வீடு திரும்பும் போது கொஞ்சம் நெருடலாய் இருந்தது. கார்சன் ; டைகர் ஜாக் ; டெக்சின் மகன் கிட என யாரும் இல்லாத டெக்ஸ் solo சாகசம் என்பதை symbolic ஆகச் சொல்லிடத் தான் அட்டைப்படத்தில் இரவுக் கழுகாரை தனியாளாய் நிறுத்தி உள்ளனரோ ?  இதுவும் கூட பெரியதொரு twists இல்லாத சீரான action கதை  மட்டுமே என்பதை யூகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.  "கடமை கண்ணாயிரமாய்" நமது ரேஞ்சர் காடு, மலை, சதுப்பு என அந்த ஸ்கௌட் ஆசாமியை விடாது விரட்டும் போது அவரது singleminded dedication பாராட்டுகளைப் பெறுவதோடு ஒன்றிரண்டு கொட்டாவிகளையும் சேர்த்தே நம்மிடம் சம்பாதிக்கின்றது ! எவர்க்லேட்ஸ் சதுப்புக் காட்சிகள் ; செமினோல் இந்தியர்களின் வித்தியாசமான கெட்டப் என புதுமைகள் இல்லாது போயின் இதுவும் கூட ரொம்பவே flat ஆனதொரு சாகசமாய் அமைந்து போயிருக்கும். ஒற்றை ஆசாமியாய் கதை முழுவதிலும் டெக்ஸ் பயணித்தாலும், அவரது அதிர்வேட்டு பார்முலா இந்தக் கதையைக் கரை சேர்த்து விட்டது என்பது என் அபிப்ராயம் ! அவசரத் தேவை : முறுக்கேற்றும் ஒரு இடி-மின்னல் ரக டெக்ஸ் சாகசம் !! 

'சிங்கத்தின் சிறுவயதில்" தற்போது ' லயனின் golden age-ல் பயணம் செய்து கொண்டிருப்பதால் படிக்க ரம்யமாக இருந்தது. 1987-ல் வெளிவந்த அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தத்தம் பாணிகளில் blockbuster ஹிட்டாக அமைந்ததை நினைவுபடுத்திப் பார்ப்பது ஒரு சுகானுபவம் ! அவை இப்போது வண்ணத்தில் மறுபதிப்புகளாய் வருவது சந்தோஷமே ! 

நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கக் கடைக்குச் சென்றால் நாலு ரோல் cap மட்டும் தான் கிடைக்கும் எனும் வேளையில், ஒரு 10,000 வாலாவை கொழுத்திப் போட்டுள்ள வகையில் டெக்ஸ் செய்துள்ளது சாதனையே ; ஆனால் இன்னும் வீரியமான கதைகளோடு இந்த வெடிச் சத்தம் கேட்டிருப்பின் அதன் சுகமே அலாதியாக இருந்திருக்காதா ? TEX கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை சார் ! 

அடுத்து என் கைகளில் புரண்டது "ஒரு சிப்பாயின் சுவடுகளில்" ! கொக்கு வேட்டைக்காரன் போல் அட்டைப்படத்தில் ஒருவன் போஸ் கொடுத்து நிற்க, பின்னணியில் 1970's முத்து காமிக்ஸ் அட்டைப்படங்களை நினைவூட்டும் விதமான டிசைன் இருந்தது ! "அட்டகாசம்" என்ற பாராட்டுக்கோ ; 'சொதப்பல்' என்ற கண்டனத்திற்கோ இடம் தரா ஒரு மத்திமமான அட்டைப்படம் என சொல்லுவேன். "வியட்நாம் யுத்தப் பின்னணியில் ஒரு கிராபிக் நாவல்" என்ற பீடிகையோடு துவங்கிய இதழை எவ்வித எதிர்பார்ப்புமின்றி புரட்டத் துவங்கினேன். "நீ -ள-மா-ன " காமிக்ஸ்டைம் பகுதி வரவேற்றது முதலில் !  2014-ன் அட்டவணை ; புதுச் சந்தா பற்றிய அறிவிப்புகள் ; கதைத் தேர்வுகளின் பின்னணிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் பற்றிய பகுதி இது என்பதால் அந்த நீளத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது ! '2014-ன் அட்டவணை பற்றிய அபிப்ராயங்களை கடைசியில் வைத்துக் கொள்வோம் ; கதையைப் படிப்போம்' எனப் புரட்டத் த்வங்கினேன். முதல் பக்கத்திலேயே நிறைய முதியவர்கள் ; பத்தி பத்தியாய் சோக நெடியடிக்கும் தத்துவப் பின்னணி வசனம்  என்பதை சந்தித்த போது - 'அப்டிக்கா ஜூட் விட்டால் என்ன ?' என்ற கேள்வி எனக்குள் எழாமல் இல்லை. ஆனால் அந்த கரடு முரடான சித்திரங்கள் + மாறுபட்ட வண்ணக் கலவை இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருப்போமே என்று சமாதானம் சொல்லியதால் தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். வித்தியாசமான கதைக் களம் ; டெக்ஸ் வில்லரில் காணோமே எனத் தேடிய அழுத்தம் இங்கு அபரிமிதமாகவே விரவிக் கிடப்பதை கொஞ்ச நேரத்திற்கெல்லாம் உணர்ந்திட முடிந்தது ! வழக்கமான கதை நகற்றல் பாணியில் இருந்து மாறுபட்டு இது ஒரு தினுசாய் வளைந்து நெளிந்து செல்வதையும் புரிந்திட முடிந்தது. பிரான்சின் குக்கிராமங்கள் ; அந்த இயற்கைச் சூழல்கள் ; எந்த அதிரடிக்கும் தயாரில்லா ஒரு நரை மண்டை நாயகன்  ; ஆங்காங்கே வரலாற்றோடு பின்னிப் பாயும்  கதை பாணி என முதல் 20 பக்கங்கள் சொல்லிய சேதி - THIS IS DIFFERENT என்பதே ! விறுவிறுப்புக்கும் அதிரடிகளுக்கும் நிறையவே பழகிப் போய் விட்ட நமக்கு இது போன்ற நத்தை வேகக் கதைகளோடு ஒன்றிடுவது சுலபமல்ல தான் என்றாலும் - ஒரு இனம் புரியா ஈர்ப்பைக் கொண்டுள்ள கதை இது என்ற சிந்தனை தலைக்குள் குடி கொண்டு விடுவதால் அதனை தூக்கிப் போட சாத்தியமாகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய்க் கதையோடு ஒன்றிப் படிக்கத் துவங்கிய போது முதல் பாதி முடிந்திருந்தது ! பிரான்சில் துவங்கிய களம் வியட்நாமின் அன்ன வயல்களுக்குச் செல்வதை லேசான மிரட்சியோடு தான் பார்த்தேன். "வியட்நாம் வீடு " படத்தின் தலைப்பைத் தாண்டி அந்த நாட்டோடு நமது பரிச்சயம் பூஜ்யம் என்பதால் அந்த மஞ்சள் தோல் மனிதர்களின் உலகிற்குள் கொஞ்சம் உஷாராகவே நுழைந்தேன். வான்சின் துல்லியமோ ; ஜிராடின் நுணுக்கமோ ; பிலிப் பிரான்க்கின் நவீனமோ இல்லாவிட்டாலும், இந்த ஓவியரின் ஒரு முரட்டு stroke ஓவியப் பாணியில் ஒரு மந்திரம் இருப்பதை பக்கங்கள் நகர நகர புரிந்திட முடிந்தது. அவ்வப்போது கதையில் வரலாற்றுக் குறிப்புகள் இணையும் போது பல்லெல்லாம் லேசாய் ஆடுவதைத் தவிர்த்திட முடியவில்லை என்றாலும், மொத்தமாய் பல்செட் கட்ட அவசியம் தராமல் மொழிபெயர்ப்பில் சமாளித்துள்ள விதம் புரிகிறது ! இறுதியில் அந்த சிப்பாயின் கதி என்ன ; அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது ஏன் என்ற பகுதிகள் இன்னும் கொஞ்சம் புரியும் விதமாய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. 'புதிதாய் ஒரு தலைப்புச் செய்தி கிட்டி விட்டால் - ஒரு மணி நேரத்திற்கு முந்தைய சமயம் கூட வரலாறே !" என்பதை உணர்த்தும் விதத்தில் கிளைமாக்ஸ் அமைந்திருப்பது படு யதார்த்தம். கதையை முழுவதுமாய்ப் படித்து முடித்த போது தோன்றிய முதல் கேள்வி : "நாம் இதற்குத் தயாராகி விட்டோமோ ? என்பதே ....! 

ஒரு லார்கோவை ; ஒரு லக்கி லூக்கை ; ஒரு டயபாலிக்கை ரசிக்கும் நம் பாணிகளுக்கு - இத்தனை கனமான ; அந்நியமான கதைக்களம் ஒ.கே. தானா ? தேவை தானா ? ஒரு ப்ளூ கோட் பட்டாளத்தை அறிமுகம் செய்த கையோடு இத்தனை கனமானதொரு ஆக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமென எடிட்டர் கருதுவதை நம் ரசனைகளின் மேல் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையாய் எடுத்துக் கொள்வதா - அல்லது குருவி தலையில் வைக்கப்பட்ட பனங்காயாய் பார்த்திடுவதா ? தலைக்குள் இந்த சிந்தனை ஓடிய அதே வேளையில் "ஒ.சி.சு." ஏற்படுத்திய தாக்கம் என்னுள் ரீங்காரமிட்டதும் நிஜமே. கதையை மனதுக்குள் மெள்ள  அசை போட்ட போது, புரியாமல் நின்ற சில சங்கதிகள் கூட பொருள்படத் துவங்கியது போல் தோன்றியது. இந்தக் கதையின் ஆக்கத்தில் அவசியமாகி இருக்கக் கூடிய ஆராய்ச்சிகள் ; வரலாற்றுப் புரட்டல்கள் ; பிரான்சின் அரசு இயந்திரத்தை பழிக்கும் ஒரு கதையினை பிரான்சிலேயே வெளியிடும் பொருட்டுத் தயாரிக்க நினைத்த படைப்பாளிகளின் அந்த தைரியம் என நிறைய விஷயங்களும் மனதில் நிழலாடின ! இது ஒரு வெற்றியா ? தோல்வியா ? என்பதையெல்லாம் காலம் தான் நிர்ணயம் செய்யும் என்றாலும் பிரான்சுக்கு வெளியே - உலகிலேயே முதல் முறையாக நாம் தான் இந்தக் கதையினை படிக்கிறோம் எனும் போது - நம் ரசனைகளில்  நிச்சயம் ஒரு quantum leap நிகழ்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ! ரிசல்ட் : "விஷப் பரீட்சை தான்....ஆனால் எப்போதாவது ஒரு முறை என்ற ரீதியில் இதுவும் அவசியமே !" என்று சொல்லத் தோன்றுகிறது ! 

எஞ்சி நிற்பது 2014-ன் அட்டவணையே ! மிகுந்த எதிர்பார்ப்புகள் ; அவரவருக்கு ஒரு ஆதர்ஷ நாயகர் ; ஆளுக்கொரு wish list ; மறுபதிப்பினில் ஆளுக்கொரு அபிப்ராயம் என்ற சூழலில் அனைவரையும் ஒருங்கே குஷி கொள்ளச் செய்வது சிரமமே என்ற புரிதலோடு அட்டவணையைப் புரட்டினேன். இரண்டு கதைகள் இணைந்து ரூ.100 விலைக்கு வந்து கொண்டிருந்த பாணிக்கு கூடிய மட்டில் டாடா காட்டி விட்டு, singles இதழ்களாய் வெளியிடத் திட்டமிட்டிருப்பது பார்த்த உடன் கவனத்தை ஈர்த்த விஷயம். விற்பனைக்கு ஏதுவாக இருப்பின் நமக்கும் ஒ.கே. + கூடுதலாய் ஒரு அட்டைப்படம் என்பதால் no problems here ! அதே போல கௌபாய் கதைகளின் ஆக்கிரமிப்பை தளர்த்தும் விதமாய் ஆக்ஷன் ; டிடக்டிவ் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது obvious ! ப்ருனோ பிரேசில் ; சாகச வீரர் ரோஜர் ; ரிப்போர்டர் ஜானி ஆகியோரின் புது சாகசங்கள், வண்ணத்தில் வரவிருப்பதால் கௌபாய் கதைகளுக்கு backseat தரப்பட்டதில் பெரிதாய் வருத்தமில்லை. ஆனால் டெக்ஸ் வில்லர் (புதிய) கதைகளுக்கு ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே என்பதை சரி செய்ய - லயன் 30 -வது ஆண்டுமலரில் இடம் தரப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு. மற்றபடிக்கு இப்போதைய சூப்பர் ஸ்டார் லார்கோ ; காமெடி புது வரவுகளான ப்ளூகோட் பட்டாளம் ; கேப்டன் டைகர் ; ஷெல்டன் ; லக்கி லூக் ; சிக் பில் ஆகியோரது தேர்வுகளில் பெரிதாய் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான். மர்ம மனிதன் மார்ட்டின் தலை காட்டக் காணோம் ; அதற்குப் பதிலாய் "டைலன் டாக்" அறிமுகமாவது - ஒரு freshness தேவை என்ற ரீதியில் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஜில் ஜோர்டன் ஒரு குட்டியான surprise ! மறுபதிப்புகளைப் பொறுத்த வரை "பூம்-பூம் படலம்" முதல் முறை வெளியானது 2 வண்ணத்தில் + ஒரு நீளமான வாசகர் spotlight படைப்போடு என்பதால் அந்த சமயம் நிறைய பேரால் சரி வர ரசித்திடப்படவில்லை. இப்போது பெரிய சைசில், வண்ணத்தில் வருவது பளிச் ரகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல் பிரின்ஸ்  ; ப்ருனோ பிரேசில் கதைகள் மறுபதிப்புப் பட்டியலில் இருப்பதில் மகிழ்ச்சியே ! சந்தாத் தொகையினைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் மறுபதிப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதும் நிதர்சனம். No comments on that...! Sunshine Graphic Novels ???? :-)

இறுதியாய் நண்பர்கள் அனைவரும் எழுப்பியுள்ள அதே கேள்வியும் கூட : "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் ?? பதில் கிடைக்குமா ? 
இவை எடிட்டரின் வரிகள் :ஆளுக்கொரு அபிப்ராயமென்பது வாழ்க்கையின் ஒரு இன்றியமையா அங்கமாய் இல்லாது போயின் அதன் சுவாரஸ்யம் பெரிதும் குன்றி விடும் என்பது நிச்சயம் ! So மிகச் சின்னதொரு வாசக வட்டத்தைக் கொண்ட நமது காமிக்ஸ் காதலினுள்ளும்  அந்த அபிப்ராய பேதங்கள் எழுவது சகஜம் தானே ? பெரிதாய் பீடிகைகள் போடாமல் - சமீபத்திய சர்ச்சைக்கு இடம் தந்துள்ள இந்த "கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில் "விஷயத்துக்கு நேரே வருவது தேவலை எனப் படுவதால் here goes  :

ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயத்தை நண்பர்களது கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியம் என்று படுகிறது ! இணையத்திலும், ஆங்காங்கே டெக்ஸ் ரசிகர்களின் FB பக்கங்களிலும் இந்தக் கதையின் வண்ணப் பக்கங்களைப் பார்த்து அவ்வப்போது ஏக்கப் பெருமூச்சுக்கள் பரிமாறப்படுவது நான் அறிந்திருக்கா விஷயமல்ல. உங்களின் ஆதங்கங்களை இன்னமும் கூடுதலாக்கிட வேண்டாமே என்ற சிந்தையில் தான் 'டெக்ஸ் - வண்ணத்தில்' என்ற விஷயத்தில் உங்களில் பலரும் அறிந்திருக்க இயலா ஒரு தகவலை நான் உரக்கச் சொல்லிடப் பிரியப்படவில்லை ! சமீபத்தில் இத்தாலியில் போனெல்லி நிறுவனத்தாரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது தான் இவ்விஷயம் எனக்கே தெரிய வந்தது. டெக்ஸ் கதைகளின் சகலமும் black & white -ல் உருவாக்கப்பட்டவை தான் என்ற போதிலும் - சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலிய பிரதான செய்தித்தாள் ஒன்றோடு அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி - அந்நாளேட்டின் சந்தாதாரர்களுக்கு வாரம் ஒரு வண்ண டெக்ஸ் இதழ் வழங்கப்பட்டது !! இதன் பொருட்டு b & w -ல் இருந்த கதைகளையும் வண்ணமாக்கி விட்டனர் ! So இன்றைய தேதிக்கு சுமார் 500 டெக்ஸ் இதழ்கள் வண்ணத்தில் தயாரே ! ஆகையால் - "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் வெளிவந்த சொற்பப் பொக்கிஷங்களில் ஒன்று" ; "இதனை இன்று வண்ணத்தில் வெளியிட இயலாது போயின் அது பெரியதொரு பிழையாகிடும்" என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் சரியன்று  - கிட்டத்தட்ட டெக்சின் முழுமையும் வண்ணமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் - this is just another story amongst that long colorful list !

'சரி - சகலமும் வண்ணத்தில் கிடைக்கும் போது - அவற்றை வண்ணத்திலேயே வெளியிடுவதில் என்ன சிக்கல் ?' என்ற கேள்விக்கு இப்போது வருகிறேன் ! ஒரு கதையின் ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்தேறும் போது பிரதானமாய் கவனிக்கப்படுவது இதழின் விலையும் ; விற்பனை எண்ணிக்கையுமே ! டெக்ஸ் கதைகளுக்கு நமது தற்போதைய விலை ரூ.50 ; (இனி ரூ.60) எனும் போது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ராயல்டி ஆனது இவ்விலையின் அடிப்படையிலேயே ! டெக்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார் கதாப்பாத்திரம் என்பதால் - இதர தொடர்களை விட costly ஆனவர் ! இந்நிலையில் ஒரு 224 பக்க டெக்ஸ் சாகசத்தை நாம் திடுதிடுப்பென வண்ணத்தில் - ஆர்ட் பேப்பரில் வெளியிடவிருக்கும் பட்சத்தில் - cover price ரூ.175 என்றாகி விடும் ! கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை எகிறும் போது அதன் ராயல்டியும் அதே போல் கூரையைத் தொட்டு விடும் !! 'சரி - அது கூடப் பரவாயில்லை  - ஒரே ஒரு மாதத்து ஆசைக்குத் தானே இதெல்லாம் - ஒரு முறை அந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் போச்சு !' என நாம் தீர்மானிக்கலாம் தான் ! ஆனால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக - 'ரூ.175-க்குப் போட்டாலும் உங்கள் மார்கெட்டில் டெக்ஸ் கதைகள் விற்பனையாகிடும் பட்சத்தில் - ரூ.60 விலையில் இதர மாதங்கள் டெக்ஸ் கதைகளை ஏன் வெளியிடுகிறீர்கள் ? சகலத்தையும் இதே போல் வண்ணமயமாக்கி - இதே ராயல்டிகளை தொடர்ந்து செலுத்துங்கள் !' என்று சொல்வது தான் அவர்களது உடனடிப் பதிலாக இருந்திடும் ! இதில் இன்னுமொரு beauty என்னவெனில் - டெக்ஸ் கதைகளை நாம் எந்த மாதத்தில் வெளியிட்டாலும் சரி, அதற்கான ராயல்டிகளை ஆண்டின் துவக்கத்திலேயே 50% - அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாக்கி 50% என்ற விகிதத்தில் பைசல் செய்தாக வேண்டும் . எகிறி இருக்கும் இன்றைய யூரோ மதிப்பில் - உண்டான normal ராயல்டிகளை அனுப்புவதே விழி பிதுங்கும்  சிரமம் என்றான நிலையில் 3 மடங்கான ராயல்டிக்கு நாமே ரூட் போட்டுக் கொடுத்து விட்டு அந்தப் பாரத்தைச் சுமக்க யாருக்குச் சாத்தியப்படும் ?? இரவுக் கழுகாருக்கு சர்வ வல்லமை இருக்கலாம் தான் ; ஆனால் சாமான்யனான இந்த ஆந்தை விழியானுக்கு அதில் நூற்றில் ஒரு பங்கு பலமிருப்பதே பெரும் விஷயம் என்பதை கணக்கில் கொள்ளல் அவசியமாகாதா ? தவிரவும், வெளியிடும் அனைத்து டெக்ஸ் கதைகளும் ரூ.175 விலை எனும் பட்சத்தில் - சந்தாத் தொகை எங்கே எகிறி நிற்கும் ?

'சரி - இதெல்லாம் உன் பிரச்னை - எப்படியோ உருண்டு பிறண்டு தீர்வு கண்டு கொள் ; வண்ணத்தில் தான் "கார்சனின் கடந்த காலம் " வேண்டுமென்று ' நீங்கள் சொல்வதற்கு நான் தலை ஆட்டுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம் ; அதன் பின்னருமே ஒரு முக்கியமான இடர் இடையில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? நம்மிடம் தற்போது உள்ள அச்சு இயந்திரமானது கையாளக் கூடிய சைஸ் 78 செ.மீ. வரையில் தான் ! டெக்ஸ் கதைகளுக்கு நாம் தற்போது பயன்படுத்தும் காகிதத்தின் அளவோ 91 செ.மீ. ! நமது அச்சுப் பிரிவில் இவற்றை அச்சிட வேண்டுமெனில் காகிதத்தை இரண்டாய் வெட்டி - குட்டித் தாளாக்கி - அதனில் தான் அச்சிட்டாக வேண்டும். அவ்விதம் செய்யும் போது - அச்சிடும் அவகாசம் ; செலவுகள் ; ப்ராசசிங்கில் இரட்டிப்புச் செலவு ; பைண்டிங்கில் இரட்டிப்புச் செலவு என வழி நெடுக விரய மழை தான் ! ஐநூறு ரூபாய் மிச்சம் பிடிக்க அரை மணி நேரம் ரூம் போட்டு யோசிக்க அவசியப்படும் இவ்வேளையில் - அவசியமில்லா இத்தனை விரயமெனில் அது சகலமும் விடியப் போவது இதழின் விலையில் தானன்றோ ? நீங்களே கூடுதலாய் அந்த விலையைத் தரத் தயாராக இருக்கும் பட்சத்தில் கூட - என் கண் முன்னே நிகழக் கூடிய தண்டச் செலவுகளை நியாயப்படுத்த நிச்சயம் என் மனம் ஒவ்வாது ! இத்தனை சிக்கல்கள் பின்னணியில் இருப்பதால் தான் டெக்ஸ் - வண்ணத்தில் வேண்டுமென்ற பேச்சு எழும் போதெல்லாம் நான் நாசூக்காய் நழுவிட முயல்வது ! சில மௌனங்களின் பின்னணியில் இருப்பது பதிலின்மையோ ; ஒத்துழைக்கப் பிரியப்படாததொரு மனமோ அல்ல ...!

சரி - இதற்கு தீர்வு தான் என்ன ? அதையும் நானே சொல்லி விடுகிறேன்..! டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமெனில் - முதல் இடர் அந்த விலை ! அது கொஞ்சமேனும் கட்டுக்குள் இருந்திட வேண்டுமெனில் - 'நிலவொளியில் நரபலி' சைசில் (சின்னதாய் ) கொணரத் திட்டமிட வேண்டும். 'இந்த சைசா ? இது ரொம்ப குட்டியாச்சே ? என்ற ஆதங்கத்துக்கு மருந்து நிச்சயம் இருக்காது என்ற புரிதல் இங்கு பிரதானமாய் அவசியமாகும். அவ்விதம் சின்ன சைசுக்கு நாம் தயாராகி விடும் பட்சத்தில் விலை ரூ.120 என இருந்திடும் ! So மூன்று மடங்கு உசத்தி விலை எனும் இடத்தினில் இரட்டிப்பு மாத்திரமே  என்றாகும். அதன் பின்னே ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்தும் சமயம் - நெடுஞ்சாண்கிடையாக அவர்களிடம் சரணாகி - இயன்றளவுக்கு பேரம் பேசிட முயற்சிக்க வேண்டும். இது ஒன்றே வண்ணத்தில் டெக்ஸ் என்பதற்கான தீர்வு ! இதை "கார்சனின் கடந்த காலம்" இதழுக்கு மாத்திரம் செயல்படுத்தும் யுக்தியாகச்  சொல்லிடாமல் - ஒட்டு மொத்த டெக்ஸ் தொடருக்கும் ஒரு வண்ணத் தீர்வாக எடுத்துக் கொள்ளலாம்  ! ஆனால் தற்சமய டெக்ஸ் சைசில் உள்ள லாவகம் ; கம்பீரம் அந்த சின்ன சைசில் காணாமல் போய்  விடும் என்பதும் ; காலப்போக்கில் - அந்த b & w பாணியினை நாம் miss செய்திடும் வாய்ப்புகளும் அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ! தவிரவும், விலைகளை 50 / 60 ரேஞ்சில் வைத்திருந்து கூடுதலாய் வாசகர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளை நாமே முழங்காலில் சுட்டுக் கொள்ளும் சங்கதியாகவும் இது அமைந்திடும். Last but not the least, படைப்பாளிகளே இன்னமும் டெக்ஸ் கதைகளை சுவைப்பது கருப்பு - வெள்ளையினில் மாத்திரமே என்பதை மறந்திட வேண்டாமே ? இது தான் கடந்த 2 மாதங்களாய் எனக்கும் - ஜூனியர் எடிடருக்குமிடையே நடந்து வரும் லடாயும் கூட ! 'வண்ணத்திலேயே டெக்ஸ் போடுவோம்' என அவன் சொல்லி வரும் போதிலும், நான் தொடர்ந்து மறுத்து வருவது இத்தனை காரணங்களுக்காகவுமே !

சரி - குட்டியானாலும் பரவாயில்லை - டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமென்று இங்கு ஒரு தரப்பின் குரல் ஒலிக்கும் பட்சத்தில் கூட அதனை உடனே நடைமுறைப்படுத்துவது அத்தனை சுலபமல்ல ! அடுத்தாண்டின் அட்டவணை + சந்தாத் தொகைகள் என அத்தனையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் இது போன்ற அந்தர்பல்டி முயற்சிகள் - இங்கு நடக்கும் விவாதங்களுக்கு அப்பால் நிற்கும் இதர வாசகர்களிடம் நம் திட்டமிடல்களை நகைப்புக்குரியதாக்கும் அன்றோ ? சிறிது சிறிதாய் ஒரு நம்பகத்தன்மையை வளர்த்திட நாம் முனையும் வேளையினில் - தேர்ந்தெடுத்த பாதையினில் சந்தேகங்களின்றி நடந்திடுவது அவசியமாகாதா ? தீர்மானங்களை மாற்றிடுவதில் எனக்கு ஈகோ என்றைக்குமே ஒரு தடையாக இருந்திட்டதில்லை - அதே சமயம் விஷயத்தின் பரிமாணங்களை கொஞ்சம் நிதானமாய் நோக்கிடும் பக்குவமும் கை கோர்த்தால் தவறில்லை தானே ? உங்களை சந்தோஷப்படுத்தும் விதமாய் instant அறிவிப்பு செய்திட இயலாது போனதில் எனக்கும் வருத்தமே - ஆனால் கட்டை விரலை வாய்க்குள் வைப்பதற்கும் - தொண்டைக் குழிக்குள் நுழைத்திட முனைவதற்கும் வேறுபாடுகள் உண்டு தானே ? எனது பக்கத்து பிரச்னைகளை துளியும் ஒளிவின்றி ; இம்மியும் மிகைப்படுத்தாது சொல்லி விட்டேன் - reactions எவ்விதம் இருக்குமென்ற பெரியதொரு யோசனைகளை செய்திடாமல் ! உங்களின் எரிச்சல்களோ ; அனுசரணைகளோ - இங்கு பிரதிபலிக்கப்படும் போது நிச்சயம்  நான் புரிந்து கொள்வேன் !

இப்போதைக்கு ஆறுதலாய் ஒரே ஒரு சேதி மட்டும் : லயன் 30-வது ஆண்டுமலரில் ஒரு டெக்ஸ் சாகசம் வண்ணத்தில் வந்திடும் - that's a promise folks ! Take care ! See you again soon !