நண்பர்களே,
வணக்கம்! சனிக்கிழமைகள் புலர்வது வழக்கம்..! பேனா, பேப்பர் சகிதம் மோவாயில் கை வைத்தபடியே மேஜையில் நான் அமர்வதுமே வாடிக்கை! அப்புறமாய், எதைப் பற்றி எழுதுவதென்ற மகா சிந்தனைக்குள் ஆழ்ந்திடுவது நடைமுறை! ஆனால், ரொம்பச் சில தருணங்களில் மேற்படி வரிசைக்கிரமத்தில் அல்லாது, நிகழ்வுகள் தாமாய் அரங்கேறுவதும் உண்டு! ஏதேனும் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லியே தீரணும் என்ற நமைச்சல் உள்ளுக்குள் படுத்தியெடுக்கும் ! அல்லது ஏதேனும் ஒரு புதுக் கதை / தொடர் பற்றிய அலசலை உங்களுடன் அந்த நொடியிலேயே நடத்திட்டாலென்னவென்று குறுகுறுக்கும் ! Or ஏதேனுதொரு பணியில் ஈடுபட்ட சமயம் கிட்டிய உணர்வுகளை சூட்டோடு சூடாய் உங்களிடம் பகிர்ந்திடும் வேகம் தலைகாட்டும்! அது போலான வேளைகளில் சனி பிறக்கும் வரை காத்திருப்பதில்லை; சுக்கா ரோஸ்டைச் கண்ட கார்சனைப் போல நேராய் பதிவுக்குள் பாயத் தோன்றும் ! அத்தகைய தருணமே இது ; and வியாழன் இரவில் எழுதிய பதிவிது ! இம்முறையோ ஒன்றல்ல- இரண்டல்ல: மூன்று வெவ்வேறு கதைக்களங்களில் ஒரே சமயம் பயணித்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்களிடம் மொக்கை போடும் அவாவே இந்தப் பதிவின் பின்னணி!
மாமூலான தேய்ந்து போன cliche தான்; இருந்தாலும் நமது சூழலை விவரிக்க அது தான் சாலப் பொருந்துகிறது! பலமே பலவீனம்; பலவீனமே பலம் என்பது தான் அந்த மொக்கை phrase! நமது அணிவகுப்பில் எண்ணற்ற நாயக/ நாயகியர் கரம்கோர்த்து நிற்பதை காலமாய் நாமறிவோம்! Without a doubt, நமது பெரும் பலமும் அதுவே என்பதிலும் இரகசியங்களில்லை தான்! ஆனால், யாரை எங்கே நுழைப்பது? யாரைக் கழற்றி விடுவது? யாருக்கு ஒற்றை ஸ்லாட்? யாருக்கு கூடுதல் சீட்? என்ற குழப்பங்களில் தலையைப் பிய்த்துக் கொள்வதே அது சார்ந்த பலவீனமுமே! And ரகரகமான கதைகளைக் கையாள்வதன் ஒரு மெகா சாதகம்- பணியாற்றும் வேளைகளில் ஒரு குதிரையிலிருந்து முற்றிலும் புது ரகமான வேறொன்றில் தாவச் சாத்தியமாவதே!
மேஜையில் மாயாவியும், இருப்பார்; கிராபிக் நாவலும் கிடக்கும்; கார்ட்டூனும் கிடக்கும்; ரிப் கிர்பியும் கிடப்பார்! So ஏதேனும் ஒன்றில் வண்டி தள்ளாடிடும் பட்சத்தில்- "பச்சக்'' என இன்னொரு குதிரை மீதி குதித்திட முடியும்! களங்கள் ஒட்டுமொத்தமாய் மாறியிருக்கும் போது அயர்வெல்லாம் காணாதே போய்விடுவதுண்டு! அது போலானதொரு தருணமே இந்த வாரத்திலும்!
- ரிப்போர்டர் ஜானி எனும் நூடுல்ஸ் நாயகர்!
- "பயணம்'' எனும் இருண்ட கிராபிக் நாவல்!
- மாண்ட்ரேக் எனும் ஜாலிலோ ஜகஜ்ஜாலர்!
இந்த மூவரின் லாயங்களும் திறந்திருக்க, "இந்தக் குருத-அந்தக் குருத'' என்ற சவாரியானது எனது இந்த வாரத்தையே பிரகாசமாக்கியுள்ளது!
எல்லாம் ஆரம்பித்தது "ஜெர்மனியில் ஜானி'' ஆல்பத்தோடு! நிஜத்தைச் சொல்வதானால்- இந்த மாதம் வண்டி நிரம்பவே தள்ளாட்டங்களோடே பணி செய்து வந்தது! ஆன்லைன் மேளாவின் ஐந்து இதழ்களை நடுவாக்கில் ரெடி செய்தது ஒரு முரட்டுப் பணியென்றால், ஜுன் மாதத்தின் டெக்ஸ் yet another biggie! சமீப மாதங்களில் நமது ரயிலில் தொற்றிக் கொண்டிருந்ததொரு சகோதரியின் கைவண்ணத்தில் "சட்டத்தோடு சடுகுடு'' மொழியாக்கம் செய்யப்பட்டு, முழுவதும் டைப்செட்டிங்கும் பண்ணி முடிக்கப்பட்டது! ஆனால், எடிட்டிங் செய்ய அமர்ந்த போது, நமது பிரிட்டிஷ் மறுபதிப்புகளைக் கண்டு முழிக்கும் செனா.அனாவைப் போலவே என் முகமும் போனது! ரொம்பவே தட்டையான மொழியாக்கம் - அதுவும் ஒரு தெறி மாஸ் கதைக்கு என்ற போது, சுத்தமாய் ஒவ்வவில்லை! இயன்றமட்டுக்கு டிங்கரிங் செய்ததில் நாக்கெல்லாம் தொங்கிப் போக - இதற்குப் பதிலாக rewrite செய்து விடுவதே சாலச் சிறந்ததென்று பட்டது! Phew...240 பக்க ஆல்பம்- கழன்றே போச்சு பெண்டு !
So இந்த மெனக்கெடல் முடியவே தேதி 24 ஆகிப் போச்சு! அப்போது மலர்ந்த முகத்தோடு, இடியாப்பம் பிழியும் கருவியோடு நம்ம ரிப்போர்டர் ஜானிகாரு காத்திருப்பது கண்ணில்பட்டது! "தேவுடா.. நேனு டங்குவார் today சிரிகிபோயிண்டி'' என்ற பீதி அடிவயிற்றைக் கவ்வியது! நல்ல நாளைக்கே நூடுல்ஸையும், இடியாப்பத்தையும், கி.நா எபெக்ட்களோடு பரிமாறி பேனா பிடிப்போரை ஓட ஓட விரட்டும் மனுஷர் இவர் ; நானோ நாலு மூ.ச.மீட்டிங்குகளை back to back முடித்து வந்தவனைப் போல டாரான பட்டாப்பட்டியோடு நின்று கொண்டிருக்கிறேன்! இந்த நிலையில் மறுக்கா ஒரு கத்தை காகிதங்களோடு அமர்ந்து, ஜானியோடும், கமிஷனர் போர்டனோடும் உலா போனால் - மிச்சம் மீதியிருந்த பட்டாப்பட்டிக்கும் ஆபத்தாகிப் போகும்; அப்புறமாய் தலீவரின் வேப்பிலை ஜாக்கியைத் தான் இரவல் வாங்க வேண்டியிருக்குமென்றுபட்டது! தலீவரும் அதை எந்தக் கொடியில் தொங்கப் போட்டிருப்பாரோ - தெரியாதென்பதால் இந்த வம்பே வோணாம்; மருவாதியாக பேப்பரின்றி, பேனாவின்றி voice recorder-ல் மொழிபெயர்ப்பைப் போட்டுத் தந்து விடலாமென்று தீர்மானித்தேன்!
கொஞ்ச காலம் முன்னே இதையெல்லாம் செய்திருந்தேன் தான்; ஆனால், ஏனோ தெரியலை, பேனாக்கள் தரும் அந்த flow குரல் பதிவுகளின் போது கிடைப்பதாக எனக்குத் தென்படவில்லை என்பதால் அந்தப் பாணியைத் தொடர்ந்திருக்கவில்லை! அதிலும் ரெண்டு, மூன்று வரிகள் வரும் இடங்களிலெல்லாம் தடுமாற்றம் ஜாஸ்தியாவது புரியும்! ஆனால், இப்போதோ பேனா பிடிக்க விரல்களுக்குத் தெம்பே இல்லாத நிலையில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஜானியோடு ஜெர்மனியில் ரவுண்டடிக்கும் வாய்ப்பானது சால பாகுண்டி! என்று தோன்றியது!
என் யோகத்திற்கு இந்தாண்டின் ஜானி சாகஸமானது comparatively சற்றே ஆக்ஷன் கூடுதலாகவும், வசனங்கள் குறைவாகவும் உள்ளதொரு சாகஸமாய் அமைந்து போயிருந்தது! ஆரம்பமே ஒரு ஆக்ஷன் அதிரடியென்று துவங்க "ஹை... ஜாலி....!'' என்று குஷியானேன்! நமக்குத் தான் ஒரு காபி டபராவை புரட்டி, மைக் ஜாடையில் மூக்குக்கு முன்னே நீட்டினாலும், எதையாச்சும் ஆத்தோ-ஆத்தென்று ஆத்திடும் மேனியா உண்டாச்சே - மொழியாக்கத்தைப் பர பரவென பதிவு பண்ண ஆரம்பித்தேன்! ஆரம்பிக்கும் போது நல்லாவே அமைந்து வந்த டயலாக்குகள் நீளம் கூடக் கூட- வக்கீல் வண்டு முருகனின் வாதங்களைப் போல கச்சா முச்சாவாவதை உணர முடிந்தது! 'இது என்னடா மருதக்காரனுக்கு வந்த சோதனை?' என்றபடிக்கே ஒரு ப்ரேக் விட்ட பின்னே தொடர்ந்தேன்! சிறுகச் சிறுக எஞ்சின் சூடேற இம்முறை flow தேவலாமென்று தோன்றியது! கதை நெடுக ஜானி ஒரு மஞ்சள் நிற ஸ்போர்ட்ஸ் காரில் சீறிச் செல்வார்! அதே பாணியில் நம்ம குரல் பதிவும் ஓட்டமெடுக்க அண்ணாச்சி செம ஹேப்பி! காலைப் பொழுது கூட ஓடியிராது - நெருக்கி 40 பக்கங்களை முடித்திருந்தேன்! சாப்பாட்டு மேஜைக்கு மதியம் போன போது மூணே நாட்களில் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்தவனைப் போலான கெத்து எனக்குள் குடியேறியிருந்தது! ஒரு மேதாவிக்கேற்ற பெசல் ஐட்டமாய் ஏதாச்சும் தட்டுப்படுகிறதா? என்று பார்த்தால் - புளியோதரையும், தொட்டுக்க பசை போலான ஏதோவொரு வஸ்துவும் மாத்திரமே பல்லிளித்தன! அதுவே ஒரு குறியீடென நான் சுதாரித்திருக்க வேணும் தான்- ஆனால், நாம தான் ஒரே சிட்டிங்கில் நாற்பதைக் கடந்த சூப்பர்மேன் அவதாரில் இருந்தோமே?! புளியோதரையை விழுங்கிவிட்டு, விட்ட இடத்திலிருந்து குரல் பதிவைத் தொடரப் போயாச்சு!
எஞ்சியிருந்த நாலைந்து பக்கங்களைக் கையிலேந்தும் போது தான் புரிந்தது- மேஜை மீதான புளிசாதம், காத்திருந்த ஏழரைகளுக்கு ஒரு முன்னோடி ; ஒரு குறியீடு என்பது! எனது ஆர்வக்கோளாறில் ஜானி கதைகளில் ஒரு அடிப்படை விதியினை மறந்தே போயிருந்தேன் என்பது உறைத்தது !! சின்ன வயசில் கமர்கட் வாங்கித் தின்றது முதலாய், பெரியவனாகி வில்லத்தனங்கள் செய்வதற்கான காரணம் வரையிலான சகல தகவல்களையும் வில்லன்ஸ் + போலீஸ்கார்ஸ் போட்டுத் தாக்குவதை 'ஏக் தம்மில் க்ளைமேக்ஸ் பக்கங்களுக்குள் திணித்திருப்பார்களே என்ற உண்மையினையே மறந்திருந்தேன் !! And என் கையில் எஞ்சி நின்றவையோ க்ளைமேக்ஸ் pages மட்டுமே! உள்ளுக்குள் புகுந்தால் - பக்கம் 9-ல் எவனொவொரு மஞ்ச மாக்கான் பேசிய வசனத்துக்கு சம்பந்தம் வருகிறது ; பக்கம் 16-ல் எழுதிய வரிகளுக்குத் தொடர்பு இங்கே இருப்பது புரிகிறது ; அதுவரை "தேமே' என்று வந்து போய்க்கிட்டிருந்த அழகான பாப்பாவுக்கு முக்கிய பங்கு இருப்பது புரிகிறது! 'ஆத்தீ..' என்றபடிக்கே சகலத்தையும் உள்ளடக்கி க்ளைமாக்ஸ் பக்கங்களுக்கு மொழியாக்கத்தைப் பதிவு பண்ண முயற்சித்தால்.... "ஆங்... இப்போ நான் என்ற சொல்றது...?'' என்று நாக்கு பிறழ்கிறது! வந்து விழும் வரிகளோ தூர்தர்ஷன் தமிழாக்கத் தரத்தில் தவண்டு செல்கின்றன! கதையோ முழு வீச்சில் அந்த இறுதிப் பக்கங்களில் முடிச்சவிழ்ந்து செல்கிறது !
அதைப் படிக்கப் படிக்கத் தான் நான் "புளியோதரைக்கு முன்'' செய்த குரல் பதிவுகளில் விட்டிருந்த ஒரு நூறு ஓட்டைகள் புலனாகின! பேப்பரில் எழுதியிருந்தால் "பச்சக்'' என பின்னே புரட்டி, அடித்துவிட்டு அங்கேயே சிகப்பில் மாற்றி எழுதியிருக்கலாம்! ஆனால், நம்மளுக்கோ இந்தவாட்டி நவீன வழிமுறையாச்சே?! பிழையிருந்த பக்கங்களின் ரெக்கார்டிங்குக்குப் போய் அவற்றை delete பண்ணிவிட்டு, புதுசாய் பதிவு செய்ய முயற்சிக்கத் தொடங்கினால், ஆரம்பத்தில் செட் ஆகியிருந்த வரிகளோ இம்முறை இடக்கு பண்ண ஆரம்பிக்கின்றன ! முன்னே போனால், உதைக்குது.. பின்னே போனால் குத்துது என்று பேய்முழி முழிக்காத குறை தான்!
And பேசுறாங்க... பேசுறாங்க... கதையின் வில்லன் ; போல்ஸ்கார் ; ஜானி- என அத்தினி பேரும் இறுதியில் பேசித் தள்ளுகிறார்கள்! இதுக்கு மேலேயும் நவீனமாய் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என நான் முயற்சித்தால் சில்லுமூக்கு சிதறுகாயாகிடும் என்பது புரிந்தது! அப்புறமென்ன- "எட்றா பேனாவை; எழுதுறா க்ளைமேக்ஸை" தான்! ஆங்காங்கே தொங்கல்களில் விட்டிருந்த முடிச்சுக்களையெல்லாம் கதாசிரியர் வழக்கம் போல க்ளைமேக்ஸில் லாவகமாய் அவிழ்க்கும் அழகை ரசித்தபடிக்கே எழுதிக் கொண்டே போனேன்! சகலத்தையும் முடித்த பிற்பாடு மைதீனிடம் ஒப்படைக்க, மறுநாளே நம்மாட்கள் DTP முடித்து திருப்பித் தந்துவிட்டார்கள்! கதையினை முழுசாய் வாசித்த போது, "புளிசாதத்துக்கு முன்'' & "புளிசாதத்துக்குப் பின்'' என்ற பாகுபாடு ஸ்பஷ்டமாய் தெரிவது போல்பட்டது! "கிழிஞ்சது போ'' என மறுக்கா பட்டி- டிங்கரிங் பார்த்த பின்பே அச்சுக்குப் போக அனுமதித்தேன்! And வியாழனன்று அச்சும் ஆச்சு! So நவீனத்தை அரவணைக்கும் ஆர்வத்தில் சிலபல முன்பற்களைப் பெயர்த்துக் கொண்ட அனுபவத்தோடே அடுத்த குதிரையினை நோக்கித் தாவினேன்! அதுவோ ஒரு கி.நா!
பொதுவாய் காமிக்ஸ் ரசிப்போரில் இரண்டு ரகங்களுண்டு!
# 1: கதையே பிரதானம்; சித்திரங்கள் சைடுக்கு! என்ற ரீதியில் பரபரவென படித்துச் செல்வோர்!
# 2: ஒவ்வொரு ப்ரேமிலும் ஓவியர் எதையேனும் சொல்ல முனைந்துள்ளாரா? என்ற கேள்வியோடே நிதானமாய் ரசித்து நகர்ந்திடுவோர்!
இதனில் நாம் எந்த ரகமாக இருந்தாலும் சரி- இந்த ஒற்றை ஆல்பத்துக்காவது ஒட்டுமொத்தமாய் ரகம் # 2-ல் ஐக்கியமாகிடல் அவசியமென்பேன்! Becos ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் சித்திரங்களில் புதைந்து கிடக்கும் தகவல்களை எழுத்தாக்க முயற்சித்தால் ஒரு முழுநீள நாவல் தேவையாகிடலாம்! உயிரைக் கொடுத்து இழைத்து, இழைத்துப் பணி செய்துள்ளார் மனுஷன்! அந்தச் சித்திரங்களை highlight செய்திடவே இம்முறை அந்த மெகா சைஸில் பயணிக்கவிருக்கிறோம்!
கதை நெடுக ஒரு மென்சோகம் இழையோடுவதை மறுக்க இயலாது! எல்லாமே நிர்மூலமாகிப் போனதொரு எதிர்கால உலகில் தங்களுக்கென விடியலைத் தேடிடும் தந்தை - தனயனின் பயணமே இந்தப் "பயணம்!'' And அடைகாக்கும் கோழியாய், உலகமே எதிர்நின்றாலும் தன் பிள்ளையைப் பாதுகாக்க விழையும் அந்தத் தந்தை கேரக்டரே இந்தப் படைப்பின் அச்சாணி! இந்தப் பயணத்தின் முடிவில் வாழ்க்கையின் முழு முதல் நாயகர்களான அத்தனை அப்பாக்களிடமும் ஒரு சன்னமான அதிர்வலைகள் நேராது போயின் ஆச்சர்யம் கொள்வேன்! This is for all the Fathers amongst us!
கதையைப் பொறுத்தவரை "நிஜங்களின் நிசப்தம்'' ரேஞ்சுக்கான அடர்த்தி இங்கே கிடையாது! அங்கே களம் பெரிது; கதை மாந்தர்களும் அதிகம் என்றதால் சம்பவக் கோர்வைகளும் கூடுதலாக இருந்திட சாத்தியப்பட்டது! But அடர்த்தியிலிருக்கும் குறைபாட்டை சித்திர நேர்த்தியில் ஈடுசெய்துள்ளார் Manu Larcenet! So ஒரு பெரும் கலைஞனின் படைப்போடு பயணிக்க வாய்ப்புக் கிட்டியுள்ள இந்த வாரமானது in many ways ஸ்பெஷல் to me! Please don't miss this album folks!
அயல்கிரகத்திலிருந்து புறப்படும் ரெண்டு மீனவர்கள் பிரபஞ்சப் பயணத்தின் போது ஒரு தப்பான லெஃப்ட் எடுக்க (!!😁😁😁) - பூமிக்கு தப்பிதமாய் வந்து சேர்கிறார்கள் - தங்களது மீன்பிடிக்கும் படலத்துக்கென! "பிரபஞ்சப் பஞ்சாங்கம்" ... "சூரிய மண்டலப் பயணம்' என்றெல்லாம் ரவுண்டு கட்டியடிக்கும் கதையில் மாண்ட்ரேக்கையும், நார்தாவையும் தூண்டில் போட்டுப் பிடித்து விடுகின்றனர் அந்த மீனவ சதுர மண்டையன்கள்! தொடர்ந்திடும் ரகளைகள் காதில் மீட்டர் கணக்கில் பூச்சுற்றினாலும், செமத்தியான ஜாலி ரகம்! கருணையானந்தம் அங்கிளின் மொழியாக்கம் இது போலான நேர்கோட்டு க்ளாஸிக் கதைகளில் அழகாய் செட் ஆகிடும் எனும் போது இங்கே எனக்குப் பெரிதாக வேலையும் இருக்கவில்லை! So ஒரு புளிசாதப் படலத்தையும், பயணப் படலத்தையும் முடிப்பதற்கு மத்தியிலான இடைப்பட்ட நேரங்களை மாண்ட்ரேக்கோடு செலவிட முடிந்ததில் செம relief!
And before I sign out- சில தகவல்களும்!
- இன்று (சனி) டெஸ்பாட்ச் done !! வாரயிறுதிக்கு முன்பாகவே இதழ்களை உங்கள் வசம் ஒப்படைக்க விழைந்தோம் தான் - ஆனால், வாரம் முழுக்க "நச நச''வென பெய்து வரும் மழையில், அச்சு + பைண்டிங்கில் சின்னதாய் தாமதம்! So நாளையோ, திங்களன்றோ கூரியர்ஸ் கதவைத் தட்டிடும் !
- ரொம்ப காலத்துக்குப் பின்பாய் இரண்டே இதழ்கள் மட்டுமே உங்களது (ரெகுலர்) சந்தா கூரியரில் இடம்பிடிக்கப் போகின்றன!!
- இம்மாதம் The King's ஸ்பெஷல் - 1 வந்திருக்க வேண்டியது ; ஆனால், ஆன்லைன் மேளாவிற்கும் கணிசமாய் ஆர்டர் செய்திருந்த ஏஜெண்ட்கள் சற்றே மூச்சு விட்டுக் கொள்ள அவகாசமிருந்தால் தேவலாமே என்று மனசுக்குப்பட்டது!
- தவிர இன்னமும் ஜுன் 15-க்கென "பயணமும்'' காத்திருப்பதால் The King's ஸ்பெஷல் - 1 இதழினை ஆகஸ்டுக்கென தள்ளி வைத்துள்ளோம்! ஜூலையில் "The பிளைசி ஸ்பெஷல்" coming : 2 புத்தம் புதிய சாகசங்களோடு !!
- "சாம்பலின் சங்கீதம்'' மொழியாக்கம் நண்பர் கார்த்திகை பாண்டியனின் கைவண்ணத்தில் ஓடிக் கொண்டுள்ளது! அசுரத்தனமான படைப்பிது என்பதால் அவரது பணி முடிந்திட இன்னும் கொஞ்ச அவகாசமெடுக்கும்! மொத்தமும் கைக்கு வந்த பிற்பாடே அதன் ரிலீஸ் மதுரையிலா ? திருச்சியிலா ? சேலத்திலா? என்று தீர்மானித்திட வேண்டி வரும்! நமது பணிகள் முழுமையடைந்த பிற்பாடு படைப்பாளிகளின் approval-ம் அவசியமாகிடும் என்பதால் அதற்கான கால அளவினையும் சேர்த்தே திட்டமிட்டாகணும்!
- கூப்பிடு தொலைவில் காத்திருக்கும் கோவை புத்தகவிழாவுக்கென 2 ஸ்பெஷல் இதழ்களுண்டு! அவற்றுள் ஒன்று இதோ:
- ரிப்போர்ட்டர் ஜானி நம்மோடு 39 ஆண்டுகளாய் பயணித்து வரும் நாயகர் ! இன்னமுமே அவரிடம் நமக்கொரு சுவாரஸ்யம் தொடர்கிறது தானா ? Maybe ஜானி 2.0 பக்கமாய் கொஞ்ச காலத்துக்கு நகர்ந்திட வேணவே வேணாம் தானா ? Given a choice - நான் அங்கே கொஞ்ச காலமாவது உலா வரவே விழைவேன் !! Your thoughts please ?
- ஆன்லைன் மேளாவின் முதல் ரவுண்டிலான 5 புக்ஸ்களை நீங்கள் வாங்கினீர்களா? யெஸ் எனில், அவற்றில் எத்தனையைப் படித்திருப்பீர்கள்?
- "பயணம்'' ஆர்டர் பண்ணியுள்ளீர்களா?
- ஆர்டர் போட்டிருந்தாலும் புக் வெளியான பின்னே படிப்பீர்களா? அல்லது கலெக்ஷனுக்காக மட்டுமேவா?
Bye for now folks... see you around! Have a great weekend!
And புது புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு ; லிங்க் இதோ : https://lion-muthucomics.com/monthly-packs/1341-june-pack-2025.html