Powered By Blogger

Sunday, August 30, 2015

மாத்தி யோசி .. !

நண்பர்களே,

வணக்கம். நமது comeback ஸ்பெஷலுக்கு அப்புறமாய் என்ன சாதித்திருக்கிறேனோ – இல்லையோ; நிறையவே விநோதமான பார்வைகளையும், ‘தம்பிக்கு ஏதோ ஆர்வக் கோளாறு போலும்!‘ என்ற ரீதியிலான நக்கல் புன்னகைகளையும் ஆங்காங்கே ஈட்டியிருக்கிறேன்! பின்னே பேப்பரும் கையுமாய் தாம்பரம் பிளாட்பாரத்திலும்; பெங்களுரு ஷதாப்தியிலும்; வெயிட்டிங் ரூம்களிலும்; ராஜஸ்தானின் விமான நிலையங்களிலும் எழுதோ – எழுதென்று எழுதித் தள்ளுவதைப் பக்கத்திலிருப்போர் ஒரு தினுசாய் பார்ப்பதில் வியப்பேது? இது போதாதென்று தொலைதூர விமான பயணங்களில்; ஸ்பெயினில் இரயில் பயணங்களில்; அட... பாரிஸின் சரவண பவனில் கூட உட்கார்ந்து ‘மூளையை கசக்குகிறேன் பேர்வழி‘ என்று நிறைய வெள்ளைத் தாள்களைக் கசக்கி குப்பைக்கு வழியனுப்பிய பெருமையுமுண்டு! இதில் வேடிக்கை என்னவென்றால் நமது சமீப மிக successful இதழ்களின் ஆரம்பப் புள்ளிகளும்; திட்டமிடல்களும் நிகழ்ந்துள்ளது எங்கோவொரு உலக வரைபடத்தின் மூலையில் தான்! NBS தொடங்கியது ஒரு போரடிக்கும் 12 மணி நேர பயணத்தின் மத்தியில்; LMS பற்றிய ஆரம்பத்துச் சிந்தனைகள் சகலமும் உதயம் கண்டது ஷீரடி செல்லும் இரயிலின் மேல் பெர்த்தில்; 2013ன் டாப் ஹிட்களுள் ஒன்றான நமது இரவுக் கழுகாரின் “தீபாவளி மலர்“ finalize ஆனது ஏதோவொரு ஐரோப்பியக் காலை ரயில் பிரயாணத்தில்! ‘Thinking out of the box’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்; ‘மாற்றி யோசி!‘ என்ற கோட்பாட்டின் பிரதிபலிப்பாய்! ஆனால் அதை நான் கொஞ்சமே கொஞ்சமாய் தப்பாய்ப் புரிந்து கொண்டு விட்டேன் என்றே நினைக்கிறேன்! மாற்றி யோசிப்பதற்குப் பதிலாக – யோசிக்கும் இடத்தை மாற்றி வருவது தான் நமது பாணியாக இருந்து வருகிறது – சமீபமாய்! So – அந்த “விஞ்ஞானபூர்வப் பாணியை“ ஏன் மாற்றுவானேன்? என்று என் தலை கேள்வி கேட்ட போது – உருப்படியான மாற்று பதில் எனக்கு சாத்தியமாகவில்லை! And – இதோ: புதியதொரு மகா சிந்தனை – இம்முறை அமெரிக்காவில் ஒரு ‘மிச்சம்பிடிக்கும் படலத்தின்‘ பலனான நெடிய பஸ் பயணத்தின் போது! என்னருகே அமர்ந்திருக்கும் ஒரு குட்டிப் பையன் என் உருண்டை விழிகளை அதிகம் பராக்கு பார்க்கிறானா – அல்லது கொச்சா-முச்சாவென்று எனது நோட்டில் நான் எழுதும் (!!) அழகை வேடிக்கை பார்க்கிறானா என்று தெரியவில்லை; ஆனால் இந்தப் பதிவும், எப்போதோ தொடரவிருக்கும் இந்தப் பதிவின் highlightsகளும் ஹிட்டடித்தால் அந்த வெண்ணெய் நிறப் பொடியனை நிச்சயமாய் வாஞ்சையோடு நினைவு கூர்ந்து கொள்வேன்!

எக்கச்சமாய் இங்கே நம் பதிவுகளிலும், ஹாட்லைனிலும் எழுதுவது ஒரு பக்கமெனில், புத்தக விழாச் சந்திப்புகளின் போது நண்பர்களிடம் நான் அள்ளி விடும் வாக்குறுதிகள் ஒரு வண்டி தேறும்! So அவ்வப்போது ஆலமரத்தடிப் பஞ்சாயத்துப் பண்ணும் சங்கிலி முருகன் தான் நினைவுக்கு வருவார் – ‘நான் சரியாத் தானே பேசிட்டிருக்கேன்?‘ என்ற கேள்வியோடு! நமது “மின்னும் மரண நாயகர்“ பற்றிய எனது கருத்துப் பகிர்வுகள் எனது பதிவுகளில் ஒரு கணிசமான இடத்தை ஆக்கிரமித்திருக்குமென்பது உறுதி! அதன் ஒரு நீட்டிப்பாகவே இந்தப் பதிவையும்; தொடரும் திட்டமிடல்களையும் பார்த்திடலாமே?! கேப்டன் டைகரின் டாப் கதைகளின் சகலத்தையும் நாம் ஏற்கனவே போட்டுத் தீர்த்து விட்ட நிலையில் இப்போது எஞ்சி நிற்பது இளம் டைகரின் தொடரில் ஒரு 11 கதைகளும்; முற்றிலும் புதிதான ‘மிஸ்டர் ப்ளுபெர்ரி‘ தொடரில் 5+1 கதைகளும் மட்டுமே! ஆண்டுக்கு 2 கதைகள் என்ற விகிதத்தில் நாம் சமீபமாய் டைகரைக் கையாண்டு வருவதால் – நீண்டு செல்லும் plot கொண்ட இக்கதைகள் நமது சுவாரஸ்யத்தைத் தக்கச் செய்வது சிரமமாகவுள்ளது அப்பட்டமாய்ப் புரிகிறது! 16 மாதங்கள் காத்திருந்து ஒற்றை ஒற்றை ஆல்பங்களாய்ப் படித்துச் செல்லும் பொறுமை பிரான்கோ-பெல்ஜிய ரசிகர்களுக்கு இருக்கலாம்; ஆனால் அந்த பாணி நமக்கு நிச்சயம் set ஆகாதென்பது அனுபவம் சொல்லும் நிஜம்! So – தொடரும் ஆண்டுகளின் அட்டவணைகளில் டைகருக்கான இட ஒதுக்கீட்டைக் கணிசமாய் அதிகரித்தாக வேண்டும்; அல்லது அவற்றை 3/4 பாகங்களின் தொகுப்பாக்கி, தனித் தடத்தில் சீரானதொரு இடைவெளியில் வெளியிட்டு tempo சேதாரமின்றி கதையை முடித்தாக வேண்டும் என்பதே நம் முன்னேயுள்ள options! லார்கோவுக்கு 2 slot; லக்கி லூக்குக்கு 1 slot என்ற ரீதியில் கஞ்சப் பிசுனாரியாக அட்டவணையை நான் தயாரித்து வரும் நிலையில் “இளம் டைகர் – 4 இதழ்கள்; 8 பாகங்கள்” என்று அறிவித்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பது புரிகின்ற போது – தனித்தடம் என்ற option தான் எஞ்சி நிற்கிறது! So முற்றிலும் புதிய ‘மிஸ்டர் ப்ளுபெர்ரி‘ தொடரினை ‘ஏக் தம்மில்‘ 5 பாகங்கள் இணைந்ததொரு தொகுப்பாய் – முன்பதிவுக்கான இதழாகத் தயாரித்திடுவது பற்றியும் ஏற்கனவே லேசாகப் பேசத் தொடங்கியிருந்தோம் – சென்றாண்டில்! அப்புறம் CCC-ன் கார்ட்டூன் கதைத் தொகுப்பு களத்திற்குள் நுழைந்த பிற்பாடு – ‘மி.ப்ளு‘ பின்னிருக்கை நாடிச் செல்ல வேண்டிப் போனதெனினும் அந்த நினைவு எனக்குள் பத்திரமாகவே தொடர்ந்து வருகிறது! இருப்பினும் அதன் மீது சிந்தனையை ஓட விட அவகாசம் கிடைத்திருந்திருக்கவிலலை! இப்போதும் கூட இந்த நினைவு தலைதூக்கியிராது – நான் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்கள் எங்கோ; எப்போதோ படித்த நினைவுகளைக் கிளறியிராது போயிருந்தால்! நமது டைகர் கதைகளின் ஒரு பெரும்பகுதியும், இரவுக் கழுகாரின் சாகஸங்களின் ஒரு கணிசமான பகுதியும் அரங்கேறுவது அந்த ‘வடக்கத்திய – தெற்கத்திய‘ அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் பின்னணிகளில் தானே? அவை மையம் கொண்டிருந்த ‘தெற்கத்திய‘ தீவிரவாத மாநிலங்களான வட கேரலினா; தென் கேரலினா; அட்லாண்டா நகர் வழியாக எனது பஸ் நெளிந்து செல்லச் செல்ல – என்றோ ஒரு தூரத்து வரலாற்றில் அந்த மண்ணில் நடந்திருக்கக் கூடிய போராட்டங்களை நமது கதைக் களங்கள் வாயிலாக நினைவூட்டிக் கொள்ள முடிந்தது! அந்த நொடியில் தான் ”என் பெயர் டைகர்” பற்றிய (மறந்து போன) அறிவிப்பும் மீள்வருகை புரிந்தது என் தலைக்குள்! அவ்வளவு போதாதா – மீண்டுமொரு கரகாட்டத்தைத் தொடங்கிட? செல்போனில் கேல்குலேட்டரைக் கொஞ்ச நேரம் லொட்டு – லொட்டென்று தட்டத் தொடங்கினேன் தயாரிப்புச் செலவுகளை நிர்ணயம் பண்ணிட! இங்கே ஒரு short “commercial break” அவசியம்; ஏனெனில் நான் சொல்லவிருக்கும் விஷயமும் “commercial” சமாச்சாரத்தைச் சார்ந்ததே!




உங்களில் எத்தனை பேர் கடந்த இரு வாரங்களில் நமது பங்குச் சந்தைகளிலும்; அயல்நாட்டுச் செலாவணிகளிலும் நடந்து வரும் ரணகளத்தைப் பின்தொடர்ந்து வந்துள்ளீர்களோ - தெரியாது; ஆனால் சீனப் பொருளாதாரத்திற்குப் பிடித்துள்ள ஜலதோஷமானது இங்கேயும் பல நடுக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர், மற்றும் ஐரோப்பிய யூரோவுக்கு எதிரான நமது இந்திய ரூபாயின் மதிப்பு செம உதை வாங்கியுள்ளது கடந்த 10 நாட்களில்; லேசாக; ரொம்பவே லேசாக வானிலை மூடாக்கு போடும் நிலையில் இருந்தாலே – ‘போச்சு... போச்சு... சுனாமி வருது... பேப்பர் விலையை ஏத்துங்க... ஏத்துங்க!” என்று கூப்பாடு போடுவதே பேப்பர் சந்தையின் வாடிக்கை! இப்போது வகையாக ஒரு காரணம் கிட்டியுள்ள நிலையில் ஜிம்மி ஏற்றும் ”சரக்கை” விட வேகமாய் imported art paper விலைகளை கூட்டத் தொடங்கி விட்டார்கள்! இன்னொரு பக்கம் நமது ராயல்டி கட்டணங்களும் ‘‘ஹைஜம்ப்‘ செய்யுமொரு நிலை எழுந்துள்ளது! ஏறும் டாலரோ – யூரோவோ கொஞ்ச காலத்திற்குப் பின்பாய் நிதானத்திற்குத் திரும்பும் எனும் போது – ராயல்டி கட்டணங்களை கொஞ்சம் லேட்டாகக் கூட்டி விடுவதன் மூலம் பெரிய பாதிப்பின்றிப் பார்த்துக் கொள்ளலாம் தான்! ஆனால் ஒரு முறை பேப்பர் விலைகளில் ஏற்றத்தை அமலுக்குக் கொண்டு வந்து விட்டார்களேயானால் – அது தலைவரின் பஞ்ச் டயலாக் மாதிரித் தான் – தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதானிருக்குமே தவிர – ஓய்ந்து போகாது! So – பேப்பர் விலைகளில் இப்போது நேர்ந்து வரும் மாற்றங்கள் 2016-ன் அட்டவணையை சிக்கலாக்கிடக் கூடாதே என்பதற்காக புதுசாய் ஒரு மார்க்கத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கிறோம்; அதில் வெற்றி கிட்டினால் தலை தப்பிக்கும்!




Back from the break: புது பேப்பர் நிலைகளையும்; புதுத் தயாரிப்புச் செலவுகளையும் ஒரு மாதிரியாக கணக்குப் போட்டுப் பார்த்த போது ஆந்தை விழிகள் இன்னும் அகன்ற விழிகளாவதை உணர முடிந்தது! முதல் 4 பாகங்கள் தலா 46 பக்கங்கள் வீதத்திலும், இறுதிப் பாகம் மாத்திரம் 68 பக்கங்கள் கொண்டதாக இருப்பதால் இந்தத் தொகுப்பின் பக்க எண்ணிக்கை 256 ஆக இருந்திடும்! இது அத்தனை பருமனான பக்க நம்பரல்ல எனும் போது – இதற்கென hard cover அமைக்காது நார்மலாக பைண்டிங்கில் வேலையை முடித்திட முடியும்; தவிர இதற்கொரு வித்தியாசமான ராப்பர் பாணி திட்டமிட்டிருப்பதால் – hard cover இல்லாதது பெரியதொரு குறையாகத் தெரிந்திடாது: ஆனால் சமீப காலங்களில் ‘ஸ்பெஷல்‘ இதழ்களென்றால் அந்த hard cover பாணி அத்தியாவசியம் என்று நாம் பழகிப் போய் விட்டதால் – அது இம்முறையும் தொடரும்! அது மட்டுமல்ல இந்த இதழோடு ஒரு டைகர் போஸ்டர் திரும்பவும் வழங்கிடுவோம் – சின்னதொரு மாற்றத்தோடு! இதன் art work ஐ செய்திடப் போவது நமது வாசக ஓவியர்களுள் ஒருவர்! அது பற்றி தொடரும் நாட்களில் விபரம் சொல்கிறேனே!!

So – கரடு முரடான நமது சிப்பாயின் இந்தப் புதுத் தொடர் one-shot ல் நிறைவு பெற்றிடும்! 1995ல் துவங்கி 2005வரைப் பிடித்துள்ளது இதனை உருவாக்கிட! அதற்கப்புறம் இன்னொரு 10 ஆண்டு இடைவெளிக்கும் பின்பாக நாம் வெளியிடவிருக்கிறோம்! கௌ-பாய் உலகிற்கு கால இடைவெளிகள் ஒரு பொருட்டேயல்ல என்பதால் நம் தலை தப்புகின்றது! ”என் பெயர் டைகர்ரூ.500/- என்ற விலையில் வெளிவந்திடும்! முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்குக் கூரியர் கட்டணம் சேர்த்தே ரூ.450/- தான்! வழக்கம் போலவே முன்பதிவு எண்ணிக்கை 500ஐத் தொட்டவுடன் இதழின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். இப்போதைக்கு இதனை 2016 சென்னைப் புத்தக விழாவின் சமயத்திற்குத் திட்டமிட்டால் தப்பில்லை என்று நினைத்தேன்; but – அது முன்பதிவின் வேகத்தைப் பொறுத்தே தீர்மானமாகிடும்! இம்மாத இதழினில் இதற்கான அறிவிப்பை நுழைத்திட வாய்ப்புள்ளதா என்று பார்த்திடுவோம் – தாமதங்களின்றி முன்பதிவுகளைத் தொடங்கிடும் பொருட்டு! So – 2016ஐ நமது உடைந்த மூக்கார் துவக்கி வைத்திடுவாரா என்பதைப் பார்த்திடலாம்!



Before I sign off – நமது LMS இதழ் பற்றி பிரேசிலில் வெளியாகும் டெக்ஸ் ரசிகர்களின் வலைப்பதிவில் விலாவாரியாக வெளிவந்திருப்பதை நண்பர் பொடியன் சுட்டிக் காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்! நமது சென்றாண்டு ஈரோட்டுத் திருவிழாவின் போட்டோக்களையெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தனர்! பார்த்த போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது! (Link: www.texwillerblog.com/wordpress/?p=54161)


நமது பதிவுகளில் கவனம் செலுத்தும் ரசிகர்கள் இத்தாலியிலும் நிறையவே உள்ளதும் இவ்வாரம் புரிந்திட முடிந்தது! டைலன் டாக்கின் புதியதொரு இதழ் பற்றிய அறிவிப்பை நமது பதிவில் பார்த்த மறுகணம் நாற்கால் பாய்ச்சலில் ஆர்டர் செய்யத் தொங்கி விட்டார்கள்! இது வரை 110 பிரதிகள் புக் ஆகியுள்ளது இத்தாலிக்கு!!

இதை விடவும் ஆச்சரிய சேதி – இங்கே அமெரிக்காவிலும் தங்களது மலையளவு பணிகளுக்கு மத்தியில் நமது வலைப்பதிவுகளைப் பார்த்திட நேரம் ஒதுக்கியுள்ளனர் இரு காமிக்ஸ் உலக ஜாம்பவான்கள்! நான் சொல்வதற்கு முன்பாகவே நமது புதுவரவுகள் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருந்ததை அறிய வந்த போது ஜிலீரென்றிருந்தது! எங்கோ ஒரு சிறு மூலையில் நாம் பெரிய விளம்பரங்களின்றிச் செய்து வரும் பணிகள் சர்வதேச அரங்கில் குட்டியாகவேனும் ஒரு ஆர்வப் பொறியைக் கிளப்பி வருவது பெருமிதம் தரும் விஷயம் தானே? காலர்களை உசத்தி விட்டுக் கொள்ளும் வேளையிது guys! உங்கள் உத்வேகங்களின்றி இதில் எதுவும் சாத்தியமாகியிராது!

மீண்டும் சந்திப்போம் guys! have fun!

P.S.: மதுரையில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் நாம் பங்கேற்றுள்ளோம்.அதற்காக பயன்படுத்திய banner இதோ :

நமது ஸ்டால் என் : 238....அருகாமையில் வசிக்கும் நண்பர்கள் நேரம் கிட்டும் போது ஓர் விசிட் செய்திடலாமே ?

* நான் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருப்பதால் இந்தப் பதிவை ஊருக்கு Whatsapp செய்து டைப் செய்யச் சொல்லி ஜுனியரைப் பணித்திருந்தேன்! ஆங்காங்கே பிழைகள் ஏதேனும் தெரிந்தால் – apologies in advance!

* செப்டம்பர் இதழ்களில் பௌன்சர் நீங்கலாக பாக்கி எல்லாமே ரெடி! பௌன்சரை மட்டும் நான் ஊர் திரும்பிய பின்னர் ஒரு இறுதி எடிட்டிங் செய்திட வேண்டுமென்பதால் – ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகிடும்! Apologies again!!

Saturday, August 22, 2015

பதிவொன்று....படங்கள் மூன்று !

நண்பர்களே,

வணக்கம். எக்கச்சக்கமாய் யோசித்து, நிறைய இன்டெர்நெட் ஆராய்ச்சிகளைச் செய்து  ஏதோவொரு சிந்தனைக் கோர்வையில் அமைக்கும் இதழ்கள் மொக்கைப் பீஸ்களாய் அமைந்து போய் அந்த மாதம் முகம் நிறைய அசடை அப்பிடுவது உண்டு ! அதே நேரம் எந்தவொரு கம்பு சுத்தும் அற்புதத்தையும் நாம் நிகழ்த்தாமலே வித்தியாசமான ; அழகான கதைகள் கரம் கோர்த்துக் கொண்டு ஒரே மாதத்து slot-ல் தற்செயலாய் இடம்பிடித்து எங்கள் முகங்களை fair & lovely மாடல்களாக உருமாற்றம் செய்திடுவதும் உண்டுதான்! இம்மாதம் அது போன்றதொரு fair & lovely தருணத்திற்கு வாய்ப்பு அமைந்துள்ளது இரு முற்றிலும் தொடர்பிலா கதை பாணிகளின் மார்க்கமாக!

போன மாதமே ஆஜராகியிருக்க வேண்டிய பௌன்சரின் ரணகள கௌபாய் கதை பாணி செப்டெம்பரில் ஒரு மேஜர் attraction என்றால்   ரொம்பவே வித்தியாசமானதொரு கதைக்களத்தோடு டைலன் டாக்கும் entry ஆகிடுகிறார் இம்மாதத்தில் ! “வாராதோ ஓர் விடியலே?இந்தாண்டின் முதலும், இறுதியுமான டைலன் டாக் சாகஸம் ! சென்றாண்டு LMS-ல் அமர்க்களமாக அறிமுகமான இந்த திகில் டிடெக்டிவ்வின் தொடர்ந்த மற்ற கதைகள் அதே வரவேற்பைப் பெற்றிடவில்லை என்பதில் இரகசியமில்லை! 1986-ல் உருவாக்கப்பட்ட இந்த இத்தாலிய நாயகர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் ‘டெக்ஸ்‘ விற்பனையையே மிஞ்சிப் பார்த்ததொரு அதிசயப் பிறவி! ஒவ்வொரு கதையும் ஒரு புது திசையில் ஒரு புது பாணியில் இருப்பதால் இவரது ‘எது மாதிரியுமிலா‘ அந்த pattern இத்தாலிய வாசகர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டது போலும்! ஆனால் நம்மைப் பொறுத்தவரை இவர் மீதான தீர்ப்பு இன்னமும் வாசிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்! ‘வேண்டவே வேண்டாம்!‘ என்ற ரீதியில் இல்லாது போனாலும் ஹை... டைலன் கதையா?என்ற துள்ளலும் நம்மிடையே நிலவவில்லை தானே?   ஆனால்-இம்முறை அந்தி மண்டலங்களுக்குள்ளோ ; சுடுகாட்டுக்குள்ளோ தலையை நுழைத்திடது ஒரு நெகிழ்ச்சியான முகத்தை நமக்குக் காட்டவிருக்கிறார் டைலன்! ஒற்றை வரியில் சொல்வதாயின் இதில் டைலனுக்கு வேலை என்று இருப்பதெல்லாம் புது கேர்ள்-பிரண்டின் பின்னே மும்முரமாய் சுற்றித் திரிவது மாத்திரமே! And- சமீப காலத்து வரமோ சாபமோ தெரியவில்லை; இதனிலும் பச்சக்... ‘பச்சக் சமாச்சாரங்கள் உள்ளன! காமெடி நாயகனும் உம்மா விநிநோகம் செய்கிறார் சீரியஸ் நாயகனும் அதே வேலையைத் தொடர்கிறார் இப்போதெல்லாம்! In fact – 2012-க்குப் பின்பான நமது இதழ்களில் இது வரை எத்தனை இதழ் பரிசோதனைகள் நடந்தேறியுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கவொரு போட்டியே வைக்கலாம் போலும்! இப்போதைக்கு இந்தக் கூத்துக்குள் தலைநுழைக்காத... சாரி... சாரி... இதழ் நுழைக்காத புண்ணியவான்கள் நமது மும்மூர்த்திகளும், திருவாளர் எட்டுக்காலாருமாகத் தானிருக்க வேண்டும்
Back on track – டைலனின் இந்தக் கதையில் நடுநாயகமாய் ஆட்சி புரிவது ஜானி என்றொரு சிறு பையன்! அவனது வாழ்க்கையினில் டைலன் நுழைவதும், தொடரும் சம்பவங்களும் நிச்சயமாய் உங்களை ஒரு வித்தியாசமான வாசிப்புக் களத்திற்குக் கொண்டு செல்லப் போவது உறுதி! சமீபத்தில் நாங்கள் பணியாற்றிய இதழ்களுள் ரொம்பவே ஈடுபாட்டோடு உழைத்தது இந்த டை.டா. சாகஸத்திற்காகத் தானிருக்கும்! ஓசையின்றி வந்தாலும் பேசப்படும் ஒரு இதழாக இது அமையின் நிச்சயம் நிறைவாக இருக்கும்! இம்முறையும் நாம் பயன்படுத்தி இருப்பது ஒரிஜினல் டிசைன்களே  - முன்னட்டையிலும், பின்னட்டையிலும் ! ஓடி வரும் அந்த நாய்களின் முகங்களில் தெரியும் அந்தப் பரபரப்பு கூட ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்வதைப் பாருங்களேன் ! இத்தாலிய மொழியில் மட்டுமன்றி, பிரெஞ்சில் ; ஆங்கிலத்தில், என்று சாதித்திருக்கும் இந்த சாகசம் தமிழிலும் அதே வெற்றியைப் பார்த்திடுமென்று fingers crossed !
பௌன்சரைப் பற்றி ஏகமாய்ப் பேசியும், எழுதியும் விட்டோம் என்பதால் இந்த முதல் சுற்றின் இறுதி ஆல்பங்களைப் பற்றி புதுசாய் சொல்ல என்னவிருக்க முடியும்? என்ன தான் நிதானமான கதைகளையும் ; ‘நியாயமே வெல்லும்‘ பாணியிலான நார்மல் கதைகளையும் நாம் ரசிப்பது இயல்பென்றாலும் இது போன்ற சற்றே கோக்குமாக்கான கதைகளை ஆர்வமாய் ரசிக்கும் ஒரு ரகசிய அவதார் நம்முள் பதுங்கிக் கிடப்பது பௌன்சரின் புண்ணியத்தில் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது! கிட்டத்தட்ட ஏகோபித்த ஆதரவு என்பதால் பௌன்சரின் இரண்டாம் சுற்றிலுள்ள 2 கதைகளையும் வாங்கிட முயற்சிகளைத் தொடங்கிடுவோம்! அவை வெற்றியில் முடிந்திடும் பட்சத்தில் 2016-ன் பிற்பகுதியில் பௌன்சர் ராஜ்யம் தொடர்ந்திடும்
Moving on, இந்தாண்டின் இறுதி 3 மாதங்களில் பெரியதொரு நட்சத்திரப் பட்டாளமே தலைகாட்டக் காத்திருப்பது புலனாகிறது
சுட்டி லக்கி
சாகஸ வீரர் ரோஜர்
ரிப்போர்ட்டர் ஜானி
வேய்ன் ஷெல்டன்
தோர்கல்
டெக்ஸ் வில்லர்
கமான்சே
மாடஸ்டி
இவர்களின் கதைகள் மீதான பணிகள் 60% நிறைவாகியுள்ள நிலையில் – காத்திருக்கும் இந்த variety மீல்ஸின் சுவையை எண்ணி லயிக்காதிருக்க முடியவில்லை! ஆரம்பம் முதலே இது போல ஒரு கலக்கலான; கலர்புல்லான நாயகர் பட்டாளத்தைப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன நிலையில் – “குறைவான நாயகர்கள் – நிறையக் கதைகள் – சீக்கிரமாய் தொடர்களை முடித்தல்“ என்ற பார்முலாக்களின் மீது மனம் ஒட்ட மறுக்கின்றது! இந்தப் “பழமை பாணிகளை“ தோளில் சுமந்து திரியாது – இன்றைய தலைமுறையின் பிரதிநிதியாக உள்ள நமது ஜுனியர் எடிட்டருக்கு இதனில் முழு ஒப்புதல் என்று சொல்ல மாட்டேன்! ஒரு தொடரை எடுத்தால் ‘டக் டக்‘கென்று போட்டு முடிக்காமல் – வருஷங்களாய் கொண்டு செல்வதன் லாஜிக் (?!!) அவருக்குப் புரிவதில்லை! Maybe கடிவாளம் கைமாறும் காலம் புலரும் போது – பாணிகளிலும் மாற்றங்களிருக்குமென்று எதிர்பார்த்திடலாம் போலும் !

லார்கோ; ஷெல்டன்; டெக்ஸ்; லக்கி லூக்; சிக் பில் போன்ற நாயகர்களின் தொடர்களில் கதைகள் அனைத்துமே stand alone ரகமென்பதால் அவற்றை ஆண்டுக்கணக்காய் நீடிக்கும் போது கூட பெரியதொரு சிரமம் தோன்றுவதில்லை ! ஆனால் ஒரே கதையின் முடிச்சை ஒரு தொடரின் முழுமைக்கும் கொண்டு செல்லும் பாணி அமலில் உள்ள கமான்சே ; (இளம்) டைகர் போன்ற series-களில் மாத்திரமே ஜு.எ. ரசிக்கும் அந்த  ‘எடுத்தோம்-முடித்தோம்‘ பாணி ஓ.கே.வாக இருக்குமோ? என்ற எண்ணம் எனக்குள் !

இம்மாதத்து இதழ் # 3 கமான்சேவின் “சாத்வீகமாய் ஒரு சிங்கம்!“ கமான்சே தொடரின் கதைகள் எல்லாமே ஒரே கோர்வையின் தொடர்ச்சி என்றில்லா விட்டாலும் கூட, 666 பண்ணையின் பின்னணி; அங்கு தோள் சேர்ந்து நிற்கும் பணியாளர்களின் ஒற்றுமை; அவர்கள் ஒன்று சேர்ந்த flash back இத்யாதிகள் தொடர் நெடுக மெல்லியதெர்ரு கிளைச்சாலையில் பயணம் பண்ணுவதைப் புரிந்திட முடிகிறது! இவற்றை ஆண்டுக்கு 2 மட்டுமே என்ற ரீதியில் கொண்டு செல்லும் போது – எனக்கே நெருடத் தான் செய்கிறது! ஆனால் அதற்கென ஓராண்டின் அட்டவணையில் ‘6 கமான்சே‘ என்று நான் போட்டுத் தாக்கினால் உங்களது முகங்கள் போகும் போக்கினை நிச்சயமாய் ரசித்திட இயலாது என்றே நினைக்கிறேன்! என்றோ ஒரு தூரத்து நாளில் – இந்தத் தொடர் ஒரு முழுமையான hit ஆகக் கொண்டாடப்படும் பட்சத்தில் 4 ஆல்பங்கள் இணைந்ததொரு தொகுப்பாய் – 4 volume-களில் மறுபதி்ப்பு செய்திடப் பார்க்கலாம்! "சா.ஒ.சி".-க்குக் கூட ஒரிஜினல் ராப்பர் டிசைனே - சற்றே வர்ண மாற்றங்களோடு ! இறுதியில் தயாரான சித்திரம் ரொம்பவே கம்பீரமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது ! பாருங்களேன் !


இங்கே எனக்கு எழும் கேள்வி இது தான்:

ஆண்டுக்கு 2 அல்லது 3 என்று வெளியிடும் நமக்கே லேசான சிக்கலெனில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் ஒரே ஒரு புது ஆல்பம் என்ற ரீதியில் 25 அல்லது 30 வருடங்களைத் துளியும் ஜெர்க்கின்றி படைப்பாளிகள் கடந்து செல்வது தான் எப்படி? பிரெஞ்சு ரசிகர்களால் அத்தனை பொறுமை காக்க முடிவது எவ்விதமோ?

Before I sign off, இதோ இம்மாதத்தின் இதழ் # 4-ன் ராப்பர் ! சைத்தான் துறைமுகம் வண்ணத்தில் நிஜமாகவே தூள் கிளப்புகிறது என்று தான் சொல்ல வேண்டும் ; அச்சு முடிந்த நிலையில் பக்கங்கள் ஒவ்வொன்றும் டாலடிக்கின்றன ! நண்பரின் ராப்பர் டிசைன் பற்றி தகவல் ஏதும் இல்லாது போன காரணத்தால் ஒரிஜினல்களை நாமே தயார் செய்து கொள்ளும் நெருக்கடி ! மீண்டும் ஒரிஜினல் டிசைன்கள் நமது டிசைனரின் மெருகூட்டல்களோடு ! 

அச்சு ; தயாரிப்புப் பணிகள் தொடரும் நாட்களில் முழுவீச்சில் நடைபெற்று - புது இதழ்கள் நான்கும் செப்டெம்பர் 2-ம் தேதி உங்களைத் தேடித் புறப்படும் ! அந்த வேலைகளில் என்னை மும்முரமாக்கிக் கொள்ள நான் இப்போது கிளம்புகிறேன் ....மீண்டும் சந்திப்போம் ! See you around for now folks ! Bye for now !

P.S : குட்டி updates :
  • மதுரையில் ஆகஸ்ட் 28 முதல் நடைபெறவிருக்கும் புத்தக விழாவில் நமக்கு ஸ்டால் கிட்டியுள்ளது ! நமது ஸ்டால் நம்பர் : 238 ! 
  •  நிறைய, நிறைய புதிய சூப்பர் தொடர்கள் நமக்கு எட்டும் தூரத்தில் நெருங்கிக் காத்துள்ளன ! 2016-ல் அவற்றைக் களமிறக்குவதா ? அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்துப் போவதா என்ற dilemma இப்போது  !!  'இப்போதைக்கு வேண்டாமே !' - என நாசூக்காய் ஒரு சில "big name" தொடர்களைக் கூட நாமே தவிர்க்கும் சூழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !! 

Sunday, August 16, 2015

இன்னொரு ஞாயிறு..இன்னுமொரு பதிவு !

வணக்கம் நண்பர்களே,
  • The லயன் 250 டிக் அடித்தாயிற்று ! 
  • முத்து காமிக்ஸ் # 350  ம்ம்ம்... அதற்கு நேராகவும் ஒரு டிக்! 
  • அப்புறம் ஈரோடு புத்தக விழா 2015  ஓ... யெஸ்..அங்கேயும் ஒரு டபுள் டிக்! 

சமீப நாட்களில் நம் கவனங்களைப் பிரதானமாய் ஆக்கிரமித்து வந்த மெகா தருணங்கள் எல்லாமே ஆண்டவன் கருணையோடு அழகாய் கடந்து சென்றான பின்னே என் கண் முன்னே தெரிவது இந்தாண்டின home stretch மட்டுமே ! தொடரவிருக்கும் செப்டம்பரில் பௌன்சரைக் கரைசேர்த்தாகி விட்டால் அதன் பின்னே காத்திருப்பன எல்லாமே தயாரிப்பில் அவ்வளவாய் மண்டை நோவுகளைக் கோரிடா ரெகுலர் இதழ்களே என்று சொல்லலாம்! அதற்காக அவையெல்லாம் அதிக சிரத்தைகள் பெறும் அருகதையற்ற கதைகள் என்ற ரீதியில் நான் சொல்லவில்லை! மந்தை மந்தையாய் பக்கங்களையும், ராப்பர்களையும், தடித்தடியான பைண்டிங்குகளையும் பார்த்தான பின்னர் 46 பக்க கதைகளும், சென்டர் பின் பைண்டிங்குகளும் ‘குழந்தைப் புள்ள விளையாட்டாய்‘ கண்ணுக்குப் படுகிறது என்றே சொல்ல வந்தேன்! Yes – of course நம் இரவுக்கழுகாரின் தீபாவளி மலர் 560 பக்கங்களோடு மிரட்டலாகக் காத்துள்ளது தான் ஆனால் அவற்றின் மீதான பணிகள் நிறைவடைந்து, எனது எடிட்டிங்கின் பொருட்டு மாத்திரமே காத்துள்ளன! தவிர இதுவொரு b&w இதழ் தான் எனும் போது ஒன்றரை நாளில் எவ்விதத் திகட்டலுமின்றி அச்சுப் பணிகளை நிறைவு செய்து பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கிட முடியும்! So- ‘தல‘ என்றைக்குமே தலைவலி தரப் போவதில்லையென்ற தைரியத்துடன் உலா செல்கிறேன்!

தலை நோவு தராத் தலைமகன் ஒரு பக்கமெனில் பக்கத்துக்குப் பக்கம் தலையைப் பிய்க்கச் செய்யும் சவால்களை முன்நிறுத்தும் பௌன்சர் என் மேஜையின் மறுமுனையில் தாட்டியமாய் காத்திருக்கிறார்! ஏற்கனவே நான் பதிவிட்டிருந்த விஷயம் தான் எனினும் இந்த preview பதிவிலும் அதனை சற்றே அழுத்தமாய் எழுதிடுகிறேனே...? இந்தத் தொடரிலேயே ரொம்பவே violent ஆன பாகம் ‘கறுப்பு விதவை‘ தான்! இதழின் பின்னட்டையில் ‘suggested for mature audience’ என்ற லேபில் போடலாமா ? என்ற எண்ணம் என் தலைக்குள் ஓடிய போதிலும் படைப்பாளிகளின் கண்ணோட்டத்தில் அதற்கொரு அவசியம் இருப்பது போலத் தோன்றவில்லை ! இதோ இதழின் அட்டைப்பட first look!

ஒரிஜினல் டிசைன் + லேசான வண்ண மாற்றங்கள் என்ற சமீப பாணி இம்முறையும் தொடர்கிறது! நமது ஓவியரிடமும் மூப்பின் தாக்கம் சிறுகச் சிறுகத் தெரியத் தொடங்குவதால் கண்களுக்குக் கடும் சிரமத்தைத் தரும் ஓவியப் பணிகளிலிருந்து சிறிது சிறிதாய் ஓய்வு தரத் தொடங்கியுள்ளோம்! தொடரும் நாட்களில் ரொம்பவே அத்தியாவசியமான இதழ்களைத் தாண்டி பாக்கி எல்லா முயற்சிகளிலும் ஒரிஜினல் டிசைன் பிரயோகமே இருந்திடும்! இங்கே சின்னதாய் ஒரு interlude ! சமீபமாய் EBF-ல் வாசக ஓவியர் சாரதியைச் சந்திக்க முடிந்தது ! அவரது கைவண்ணங்கள் அடங்கியதொரு portfolio-வை நண்பர் காட்டிய போது மாறுபட்ட பாணிகளில் பல சித்திரங்கள் வித்தியாசமான வர்ணக் கலவைகளில் டாலடிப்பதைப் பார்க்க முடிந்தது! 2016-ல் ஏதேனும் ஒரு இதழின் ராப்பருக்கு நண்பரின் கைவண்ணத்தை பயன்படுத்தினால் அழகாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது! So- அவரது இதர பணிகளுக்கு மத்தியில் நமக்கென சமயம் ஒதுக்க முடியும் போது அவரது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்!

Back again to பௌன்சர் இத்தனை வன்முறை ; இத்தனை  ரணகளம் அரங்கேறினாலும் கூட ஒரு இனம்புரியா ஈர்ப்பு இவர் திசையில் நமக்கு எழுந்திடுவதன் காரணமென்னவாக இருக்கும் என்று ‘ரோசனை‘ செய்து பார்த்தேன்! சில பல காரணங்கள் கைதூக்கி நிற்பதைப் புரிய முடிந்தது! அதே ‘ரோசனையை‘ நீங்களும் செய்து உங்களுக்குத் தோன்றும் பதில்களை இங்கே பகிர்ந்திடலாமே ? And அத்தியாயம் 7 உடன் பௌன்சரின் முதற்சுற்று நிறைவு பெறுகிறது! தொடர்ந்திடும் ஆல்பம் 8 & 9-ன் உரிமைகளை மாத்திரம் ஏதோ காரணத்தின் பொருட்டு வேறொரு பதிப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர் படைப்பாளிகள்! So அவற்றையும் படிக்க ஆர்வமிருக்கும் பட்சத்தில் 2016-ல் அதற்கான முயற்சிகளைத் தொடங்கியாக வேண்டடும்.“ஐயோ-சாமி!.... போதும் இந்த ஒற்றைக்கரத்தானின் சகவாசம்! என்று அபிப்பிராயப்படுவீர்களா ?  அல்லது "Oh yes – தொடரட்டும் பௌன்சர் திருவிழா!“ என்ற தீர்மானம் வெல்லுமா? உங்களின் சிந்தனைகள் please?

சமீப மாதங்களது படைப்பாளிகளுடனான சந்திப்பின் போது இன்னுமொரு வன்மேற்கு சார்ந்த குரூர ஆக்கத்தைப் பார்த்திட இயன்றது! இதிலும் ஒரு செம rough நாயகன்; முகத்தில் அறையும் வன்முறை என்று templates இருந்தன! பாருங்களேன் அந்தப் புது ஆல்பத்தை! 

கதையைப் பற்றிய முதல்கட்ட விசாரணையை சமீபமாய் ஜுனியர் எடிட்டர் நியமித்துள்ள பெல்ஜிய காமிக்ஸ் ஆர்வலரிடம் கேட்டுள்ளோம்! தவிர, தொடரின் துவக்க ஆல்பம் மட்டுமே இது எனும் போது we need to watch how the series unfolds! So சுவாரஸ்யம் தொடர்ந்திடும் பட்சத்தில் பௌன்சருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கவொரு புது வரவு தயார்! Early days yet – but பார்ப்போமே?!

CCC-ன் விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இரு விஷயங்கள் குறித்து எங்கள் முகங்களில் மத்தாப்பூக்கள்! நீலப் பொடியர்களை ரசிப்பது ஒரு கடின காரியமல்ல என்பது துவக்கத்திலேயே  தோன்றியதால் அந்த ‘அவுக்‘களும்; 'பொடி' பாஷைகளும் முத்திரை பதித்துள்ளதில் மகிழ்ச்சியே தவிர வியப்பில்லை. ஆனால் விஞ்ஞானி தாத்தாவ்ஸ் என்ன மாதிரியான வரவேற்பை உங்கள் மத்தியில் ஈட்டப் போகிறாரோ ? என்ற சலனம் எனக்குள்ளே கொஞ்சமாய் இருந்தது! ஸ்வீட்... சாதம்... சாம்பார்.... கூட்டு.... பொரியல்... மோர்... பாயசம் என்று சாப்பிட்டுப் பழகியவர்களை சாண்ட்விச் மட்டும்  சாப்பிடச் சொல்லி அழைக்கிறோம் ; பசியாறினால் பிழைத்தேன் இல்லையேல் சில காலங்களுக்கு முதுகு வீங்கிய முத்தண்ணாவாய் சுற்றி வர வேண்டியிருக்குமே என்ற பயமில்லாதில்லை! ஆனால் சாண்ட்விச் கூட ஒரு வகையில் சுவையே என்று சொன்ன கையோடு அதனை உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது நிஜமாகவே a feather on your cap folks!

சந்தோஷம் # 2 கேரட் மீசைக்காரரின் வெற்றியின் பொருட்டு! இந்தக் கதையை எவ்விதம் position செய்வது என்பது பற்றி நிறையவே யோசித்திருந்தோம்! கார்ட்டூன் பாணிச் சித்தரங்கள் என்றாலே அவை வெடிச் சிரிப்புகளின் பிறப்பிடங்கள் என்ற உணர்வு தோன்றுவது இயல்பே! நாமும் ‘கார்டூன் கலாட்டா;சிரிப்பு மேளா‘ என்று taglines போட்டு ஒரு வித எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு அப்புறமாய் அசடு வழிவது வாடிக்கை. இம்முறை அந்தத் தவறைத் தொடர்ந்திடாது உள்ளதை உள்ளபடிக்கே விவரிப்போமே என்று தீர்மானம் செய்தேன்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு நிகரான த்ரில்லர் plot கொண்ட கதையிது என்பதால் ராப்பரிலும், விளம்பரங்களிலும் ‘ஜாலியான த்ரில்லர்‘ என்று மட்டும் எழுதுவது என்றும் தீர்மானித்தேன்! So- வம்படியாய் ஒரு சிரிப்பைக் கொணரும் பொருட்டு மொக்கையாய் எதையேனும் நுழைக்கும் அவசியமும் எனக்கு எழுந்திடவில்லை; கதையின் ஓட்டத்தோடு ஒன்றிப் போகும் வேளைகளில் ஆங்காங்கே தலைகாட்டும் அந்த situation comedy-க்குப் புன்சிரிப்பை தருவது உங்களுக்கும் சிரமமாக இருந்திடவில்லை என்று நினைக்கிறேன்! ஏழு கழுதை வயதானால் கூட சில அடிப்படைகளைக் கற்றறிவதற்கு அனபவமெனும் ஆசான் அவசியமே என்பதை க்ளிப்டனின் வெற்றி மீண்டுமொரு முறை சுட்டிக் காட்டியுள்ளது.


அடுத்த மாத அட்டவணையில் ஒரு முழுவண்ண மறுபதிப்பும் இடம்பிடிக்கிறது கேப்டன் பிரின்ஸின் “சைத்தான் துறைமுகம்“ வாயிலாக! ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பாய் பாக்கெட் சைஸில் (?) வெளியான இந்தக் கதையினை முழுவண்ணத்தில் ரசிப்பது நிச்சயமொரு ரம்மிய அனுபவமாயிருக்குமென்று நினைக்கிறேன்! இங்கே சின்னதாய் ஒரு விஷயம் என் நினைவுக்கு வருகிறது! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாசகர்கள் அட்டைப்பட டிசைன் அமைக்கும் போட்டியை நாம் அறிவித்திருந்த சமயம் கேப்டன் பிரின்ஸின் சைத்தான் துறைமுக ஆல்பத்துச் சித்திரங்களிலிருந்து ஒரு டிசைனை உருவாக்கியிருந்தார் நண்பரொருவர்! அந்தப் போட்டி “பயங்கரப் புயல்“ இதழுக்கானது என்பதால் அந்த டிசைனை அச்சமயம் பரிசீலனை செய்திடவில்லை. But சைத்தான் துறைமுகம் வெளிவரும் வேளையில் ஞாபகமாக நண்பரது டிசைனை குறைந்தபட்சம் பின்னட்டையிலாவது உபயோகிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தேன்! நண்பரது பெயர் ஜெயராமன் என்பதாக ஒரு ஞாபகமும் கூட! நம் பதிவுகளைப் படிப்பதில் மட்டுமே ஈடுபாடு காட்டும் மௌனப் பார்வையாளராக அவர் இங்கிருக்கும் பட்சத்தில் கைதூக்கிடுங்களேன் ப்ளீஸ்?  600 dpi resolution –ல் அந்த டிசைனை ஒரு DVDல் போட்டு நமக்கு அனுப்பிடுங்களேன்?

And before I wind off – சங்கடம் உருவாக்குமொரு விஷயம் பற்றியும் இங்கே எழுதிடத் தேவைப்படுகிறது! காமிக்ஸ் மீதான நண்பர்களின் தீவிர மோகம் சில பல சந்தர்ப்பங்களில் துரிதமாய்  பணம் பண்ணிடும் மார்க்கங்களாய் சில கண்களுக்கு தெரிந்து வருவது அவ்வப்போது நமக்கு வந்திடும் சேதிகள்! சேகரிப்புகளை கூடுதல் விலைகளுக்கு விற்பதைப் பற்றிப் பெரிதாய் ஆட்சேபிக்க எங்களுக்கொரு முகாந்திரம் கிடையாது! விற்பவரும் வாங்குபவரும் மனமுவந்து நடத்தும் ஒரு பேரத்தினில் 'இத்தனை விலையா ?' என்ற நான் மலைப்பை  மட்டுமே தெரிவிக்கலாமே தவிர அதனைத் தவறென்று சொல்ல முடியாது!

ஆனால் -

நமது முந்தைய டெக்ஸ் கதைகளை; சுஸ்கி-விஸ்கி கதைகளை; Paul Foran கதைகளை நெட்டிலிருந்தோ ஒரிஜினல் வண்ணப் புத்தகங்களிலிருந்தோ பதிவிறக்கம் செய்து அதன் மீது நமது தமிழ் வசனங்களை overlap செய்து கலர் பிரிண்டரில் நகலெடுத்து ஸ்பைரல் போட்டு விற்க முனையும் லேட்டஸ்ட் யுக்திக்கு நிச்சயம் நாம் மௌனப் பார்வையாளர்களாகத் தொடர்ந்திட முடியாது! இது தொடர்பாய் இது வரை, 3 தனித்தனி புகார்கள் வந்துள்ளன! இதைக் காமிக்ஸ் மீதான காதலாகவோ; காமிக்ஸ் ஆர்வத்தின் வெளிப்பாடாகவோ நான் பார்த்திடவில்லை அக்மார்க் grey மார்க்கெட் வணிகமாக மட்டுமே பார்த்திடுகிறேன்! ஊர் ஊராய் மாதிரிகளோடு பயணம் மேற்கொண்டு 'ஒற்றை இதழென்றால் ரூ.8000... மொத்தமாய் வாங்கினால் டிஸ்கவுண்ட் உண்டு !' என்று சொல்லுமளவிற்கு இந்த 'வியாபாரம்' தழைத்துள்ளதெனில் -'30 நாட்களில் குபேரனாவது எப்படி ?' என்ற கேள்வி மட்டுமே முன்நிற்பதாகப்படுகிறது !

சில வசதியான காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் பர்ஸ்களைக் குறி வைத்துப் புறப்பட்டிருக்கும் இந்த வணிகத்துக்கு நாமாக விளம்பரம் தர வேண்டாமே என்ற நோக்கிலும், அது வரை கிடைத்த தகவல்கள் ஹேஷ்யமானவைகளாக இருந்ததாலும் தான் இது நாள் வரை இதைப் பற்றி நான் வெளிப்படையாக எதுவும் பதிவிடவில்லை. ஆனால் அமைதி காக்கும் தருணங்கள் தாண்டி விட்டன என்பதை நேற்றைய புகார் புரியச் செய்கிறது! Please guys – சேகரிப்பின் பெயரைச் சொல்லி பணத்தை விரயம் செய்திடாதீர்கள்! அடுத்த முறை உங்களை இது போல் யாரேனும் அணுகினால் பெயர் & போன் நமபரை நமக்குத் தெரியப்படுத்துங்கள்!  

And – இவையெல்லாம் கலரில் வரவே - வராது; எங்களிடம் மட்டுமே வாங்க முடியும்“ என்று sales promo தரும் அந்த ஆசாமிகளுக்கு சீக்கிரமே ஒரு ஆச்சர்யமும் காத்துள்ளது! பேரிக்காய் போராட்டங்களும், ராஜா... ராணி....ஜாக்கிகளும், பயங்கரப் பயணங்களும்...டிராகன் நகரங்களும்   அழகாய், ஒழுங்காய்  சந்தைக்குக் கொண்டு வர வழி தெரியாமலா போய்விடும் நமக்கு? பொறுமையாய் காத்திருங்கள் guys – எல்லாமே எட்டும் தூரத்தில் ! எந்தவொரு அதியற்புதக் கதையும் இத்தனை ஆயிரங்களுக்கு ஈடாகவே ஆகாது! 

Lest I forget - இரு சந்தோஷச் சேதிகள் ! 

ஜூ.எ.வின் தொடர் நச்சரிப்புகளுக்குச் செவி சாய்த்து டி.வி. விளம்பரங்களுக்குத் தயாராகியுள்ளோம் ! நண்பரொருவரின் ஸ்டூடியோவில் ஒரு 10 வினாடிக்கான விளம்பரமும், 20 நொடிகளுக்கான விளம்பரமும் சிம்பிளாகத் தயார் செய்யப்பட்டுள்ளது ! வரும் வாரத்தில் நண்பர் விஷ்வாவின் உதவியோடு 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...நம்மவர்கள் சின்னத்திரைக்குள் அடி வைக்கின்றனர் ! 

And # 2 : கோவையில் தற்போது நடந்து வரும் புத்தக விழாவின் ஸ்டால் # 41 & 42-ல் THREE ELEPHANT ஸ்டோர் நடத்திடும் நண்பரின் ஸ்டாலில் நமது இதழ்கள் அழகாய் விற்பனையாகி வருகின்றன ! அவகாசம் கிட்டின் ஒரு நடை போய்ப் பார்க்கலாமே ? Bye for now guys ! Have a great weekend ! 


Thursday, August 13, 2015

இரு நாட்கள்...ஓராயிரம் நினைவுகள் !

நண்பர்களே,

வணக்கம். ஏழென்ன மாதம் பதினேழு இதழ்கள் கூடத் தயாரித்து விடலாம் போலும் ; box-set – டிபன் கேரியர் செட்கள் எல்லாம் ரெடி செய்து விடலாம் போலும் ; ஆனால் ஒரு புத்தக விழாவிற்குச் சென்று நண்பர்களுடன் பொழுதைக் கழித்தான பின்னர் அந்த சந்தோஷங்களையும், மன நிறைவுகளையும் வார்த்தைகளில் வடிப்பது என்பது அதையெல்லாம் மீறியதொரு ராட்சஸப் பிரயத்தனம் என்பதைப் பல தடவைகள் உணர்ந்துள்ள போதிலும் இந்தாண்டின் ஈரோட்டுத் திருவிழா ஒரு புது உயரத்தைக் கண்ணுக்குக் காட்டியுள்ளது! திங்களே இரவே இந்தப் பதிவைப் போட்டிருக்க வேண்டியது ; ஆனால் உடம்பு ஒட்டுமொத்தமாய் ஒத்துழைக்க மறுத்து விட்டபடியால் செவ்வாய் & புதன் ஏகமாய் விடுமுறை தினங்களாய் மாறிப் போய் விட்டன எனக்கு ! So - "சுடச்சுடப் பதிவுக்கு" வழி இல்லாது போயினும், சென்ற வார இறுதியின் மனநிறைவுகளைப் பதிவிடாது போக இயலாதே என்பதால் - better late than never பதிவிது !! 

வெள்ளிக்கிழமை நம் ஆபீஸே யுத்தகளம் போலக் காட்சி தர உங்கள் CCC பிரதிகளைக் கூரியர்களுக்கு அனுப்பிய கையோடு நானும், ஜுனியர் எடிட்டரும் அரக்கப் பரக்க ஈரோட்டுக்கு ரயிலைப் பிடித்தோம். வழக்கம் போலவே புத்தக விழா நடைபெறும் திடலின் வாசலில் உள்ள ஹோட்டலில் ரூம் போட்டிருக்க, எங்கள் ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது ஈரோடு விழா அரங்கு நிசப்தமாய் காட்சி தந்தது. சனிக்கிழமை காலையில் சாவகாசமாய் 11 மணிக்கு மேலாக அரங்கிற்கு நாங்கள் நடைபோட, மனம் என்னையறியாது சென்றாண்டின் ஆகஸ்ட் முதல் வார சனிக்கிழமையை நோக்கிப் பயணமானது! LMS-ன் ரிலீசை முன்னிட்டு நண்பர்கள் பரபரப்பே உருவாய்க் காத்திருந்ததும், ஸ்டாலுக்குள் கொஞ்ச நேரத்திலேயே நம் நண்பர்கள் திரள் விஸ்வரூபமெடுத்ததும் சுற்றுமுற்றுமிருந்த ஸ்டால்களின் கடுகடுத்த பார்வைகளுக்கு மத்தியில் சந்தோஷங்களைப் பரிமாறிக் கொண்டதும் மனதில் நிழலாடியது! ஆனால் இம்முறையோ அரங்கின் வாயிலில் வேறு விதமானதொரு கூட்டம் !! தி்க்குமுக்காடச் செய்யுமளவிற்கு மாணவ / மாணவியரின் திரள் நின்று கொண்டிருந்தது சாரை சாரையான லைன்களில்! ‘ஆஹா... இந்தப் பிள்ளைகள் அத்தனை பேரும் காமிக்ஸ் எனும் சுவையுணர்ந்திருப்பின் என்னவொரு அட்டகாச எதிர்காலமிருக்கும் காமிக்ஸ் துறைக்கு!‘ என்ற பகற்கனவோடு அரங்குக்குள் புகுந்தோம்! ஆனால் பிள்ளைகளோ  நம் ஸ்டாலை மட்டுமின்றி பெரும்பாலான ஸ்டால்களை சம்பிரதாயப் பார்வையோடு தாண்டிச் செல்ல, வறுத்தெடுக்கும் வெயிலும், கூட்ட நெரிசலும் ஒன்று சேர்ந்து அரங்கத்தை நண்பகல் வரை தீபாவளி நேரத்து T-நகர் ரங்கநாதன் தெரு ஜாடைக்கு உருமாற்றியிருந்தன ! 
நம் நண்பர்களில் சிலர் ஏற்கனவே அங்கே காத்திருக்க இன்னும் சிலர் on the way என்ற தகவலும் கிட்டியது. CCC பிரதிகள் தாங்கிய பண்டல்களும் அந்நேரத்திற்கு ஸ்டாலுக்கு வந்து சேர்ந்திருக்க ஸ்மர்ஃப்கள் பற்றியும், லியனார்டோ பற்றியும் அரட்டை மையம் கொண்டிருந்தது! 
சற்றைக்கெல்லாம் பெரியதொரு அட்டைப்பெட்டி நிறைய மக்கன் பேடா (பெயர் சரி தானா??) சகிதம், பெங்களுர் நண்பர் அகமது பாஷா ஆஜராக, சந்தோஷப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன! ஃபோட்டோக்கள்; அரட்டைகள் எனப் பொழுது நகர்ந்த போதிலும் மூச்சுத் திணறச் செய்யும் கூட்ட நெரிசலில் அதிக உற்சாகத்திற்கு வாய்ப்பிருக்கவில்லை என்பதால் அருகாமையிலிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம் வயிற்றுக்குப் பெட்ரோல் போடும் பொருட்டு! 


அங்கே கூட்டமில்லை என்பதால் அரட்டைக் கச்சேரிகளும், ஃபோட்டோ படலங்களும் தொடர்ந்தன! மாலைப்பொழுது மேற்கொண்டும் நண்பர்கள் ஜோதியில் ஐக்கியமாகிடும் வேளையாக அமைந்து விட, நமது ஸ்டாலின் முன்னே கூட்டமாய் நின்று மறுபடியும் அமைப்பாளர்களின் கண்டனங்களைச் சம்பாதிக்க வேண்டாமென்ற அவாவில் சென்றாண்டைப் போலவே அரங்கத்தின் பின்பக்கமிருக்கும் கார்-பார்க் பகுதியில் திரண்ட சற்றைக்கெல்லாம் கேள்விகள் பறக்கத் தொடங்கின! எப்போதும் போலவே ‘இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு எப்போது?‘ என்ற வினாவே அதிகத் தடவைகள்; அதிக நண்பர்களிடமிருந்து எழுந்தன ! இங்கே நானொரு விஷயத்தைக் குறிப்பிடல் அவசியமென்று நினைக்கிறேன்!

துவக்கம் முதலாகவே இரத்தப்படலத்தின் பாகங்களைக் கையாளும் வேளைகளிலெல்லாம் ஒருவிதக் குழப்பமும், கலக்கமும் என்னுள் குடிகொண்டிப்பது வாடிக்கை ! 30 ஆண்டுகளுக்கு முந்தைய அந்நாட்களில் இரத்தப் படலத்தின் ஆங்கிலப் பதிப்புகளும் கிடையாது ; நெட்டைத் தேடி உருட்டினால் சிக்கிடக் கூடிய ஆங்கில ஸ்கான்லேஷன்களும் கிடையாதெனும் போது பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பாகிடும் நமது ஸ்கிரிப்டுகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நான் பணியாற்றிடத் தேவைப்படும் ! தவிர துவக்க ஆண்டுகளில் நமக்குக் கிட்டத்தட்ட 4 5 வெவ்வேறு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் உதவி வந்ததால் பாகம் 3-ஐ மொழிபெயர்த்தவரே பாகம் 4-ஐயும் செய்திடுவாரென்ற உத்திரவாதம் இருந்ததில்லை ! So - குழப்பமான கதைக்களம்; வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள்; பிரெஞ்சில் மாத்திரமே உள்ள ஒரிஜினல்கள்; அவற்றை நமக்குப் புரியும் விதமாய் google செய்து பார்க்கும் வசதிகளின்மை என்பதே இரத்தப் படலத்தை சுற்றி நின்ற அந்நாட்களது அரண்கள்! இவற்றுக்கு மத்தியில் புகுந்து,  வேலை செய்வது ஒரு மண்டை நோவான சமாச்சாரம் என்பதால் என்னையும் அறியாது ஒருவித அலெர்ஜி நண்பர் XIII மீது எழுந்திருந்ததே நிஜம்! உச்சக்கட்டமாய் இரத்தப் படலத்தின் 1-18 தொகுப்பின் மீது கவனம் செலுத்தும் சமயம் வந்த போது -  எட்டிக்காயை ஜுஸாக்கிக் குடித்து பார்க்கும் உத்வேகத்தோடு தான் அந்தப் பணியினை நான் அணுகினேன்! கி்ட்டத்தட்ட 3 மாதங்கள், பரீட்சைக்கு நோட்ஸ் எடுக்கும் பிள்ளையைப் போல தட்டுத் தடுமாறி அந்தப் பணியினை நிறைவு செய்த போது- ஒரு massive பெருமூச்சு எழுந்தது மட்டுமின்றி '12-க்கும், 14-க்கும் இடைப்பட்ட நம்பரை இரயில் பெர்த்தில் கூட இனி கொஞ்ச காலத்திற்குப் பார்க்க அவசியம் நேரக் கூடாதேடா சாமி!‘ என்ற வேண்டுதல் என் உதடுகளில் இருந்தது ! சரி- இதழ் வெளியானதா; விற்பனையானதா; போட்ட முதலீடு திரும்பக் கிடைத்ததா- என்று பார்த்தால் – முன்பதிவுகளைத் தாண்டிய பாக்கிப் பிரதிகள் என்னைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கிடந்தன கிட்டத்தட்ட 18 மாதங்களாய்! So நண்பர் XIII எனது அபிமான, ஆதர்ஷ, ஆத்மார்த்த நாயகர் பட்டியலில் உயரமானதொரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளவில்லை என்பதில் ரகசியமில்லை ! 

ஆனால் உங்களுக்கோ – எனது இந்தக் குட்டிக்கர்ணங்களில் எதுவும் அவசியப்பட்டிருக்கவில்லை என்பதால் – கதையின் சுவாரஸ்யத்துக்குள் மூழ்கிடுவது சுலபக் காரியமாகியிருந்திருக்கும் – துவக்கம் முதலாக! கதையின் ஸ்டைல்; சஸ்பென்ஸ்; வான் ஹாமேவின் அதிரடிகள்; வான்சின் ஓவிய ஜாலங்கள் என்று positives களை மட்டுமே உங்களது பார்வைக் கோணங்கள் உள்வாங்கியிருந்திருக்கும்! So பந்திக்கு வந்தது பாயாசமாகவே இருப்பினும் – அதைக் கிளறும் ஆயாசத்தோடு நானும்; சுவைத்த பரவசத்தில் நீங்களும் இருப்பது கண்கூடு! Maybe எனக்குள் உள்ள அந்த "XIII அலெர்ஜி"யானது இரத்தப்படலத்தின் முழுவண்ணத் தொகுப்புக்குத் தடை போட்டு வருகிறதா ?- அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானதொரு கதையையே மறுபடியும் சாயம் பூசி, புதுசாய் பரிமாறுவதில் சுகமென்ன / சுவையென்ன இருந்திடக் கூடுமென்ற நியாயமான பயமுணர்ச்சி தடை போடுகிறதா ? என்ற சின்னக் குழப்பம் என்னுள்! Customized imprints என்றதொரு அஸ்திரத்தை “மின்னும் மரணம்“ எனும் அசாத்திய சாகஸத்திற்கு பயன்படுத்தினோமெனில், தொடரும் ஒவ்வொரு மறுபதிப்புக் கோரிக்கைக்கும் அதனையே கையிலெடுக்க நினைப்பது விவேகமா? அந்த நேரத்தையும், முதலீட்டையும், உழைப்பையும் புதிய கதைகளின் பக்கம் திருப்புவோமே என நான் ஒவ்வொரு முறையும் விளக்கினாலும் கூட இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி விழும் அறிகுறிகளே காணோம்! இதை நான் இங்கே எழுதக் காரணமே – ஒருக்கால் என் மன அளவுகோல்கள் செய்திடும் தர ஒப்பீட்டை விட நிஜத்தில் இரத்தப் படலம் பன்மடங்கு உசத்தியோ? என்ற சந்தேகத்தை நண்பர்களின் கேள்விகள் கிளப்பி விடுகின்றன ! For once அந்த nostalgia சமாச்சாரங்களைக் கட்டிலுக்குக் கீழே கிடத்தி விட்டு மெய்யாகவே இரத்தப் படலம் - இரத்தம் சிந்த மீண்டுமொருமுறை உழைத்திட அருகதையான சமாச்சாரம் தானா என்று உரக்க சிந்தித்துப் பாருங்களேன்? (Andகோவையில் வசிக்கும் இரும்புக்கரத்தார்கள் இந்தப் போட்டிக்கு சேர்த்தி இல்லை !!)

மாலை, இரவாக – கார்-பார்க் பக்கமாய்ச் செல்லும் ஈரோட்டு மக்கள் அனைவருமே விநோதப் பார்வைகளை நம் பக்கம் வீசிச் செல்வது பற்றி நண்பர்கள் துளியும் கவலை கொண்ட மாதிரித் தோன்றவில்லை! எனக்கு ஏற்கனவே தொண்டையில் ‘கிச் கிச்‘ உயிரை வாங்கத் தொடங்க நான் விடைபெற்றுக் கிளம்பினேன்! ரூமுக்குச் சென்று படுத்த போது – மறு நாள் காலையில் காத்திருந்த நண்பர்கள் சந்திப்பை சமாளிப்பது எவ்விதமென்ற சிந்தனைகளில் லயிக்காது – ‘தெய்வமே... M.R. ராதா குரலிலாவது பேசிட காலையில முடிந்தாகணுமே!‘ என்ற ஆதங்கமே தலைதூக்கியிருந்தது ! மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு, ஹோட்டல் சமையல்காரரை வெந்நீர் கேட்டே கொலையாய் கொன்று விட்டு ஒருமாதிரியாகத் தூங்கச் சென்ற போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது! காலை சிற்றுண்டி, நண்பர் ஸ்டாலினின் இல்லத்தில் என்பது கடந்த சில ஆண்டுகளின் பழக்கம் என்பதால் சீக்கிரமே அதற்குக் கிளம்பிட வேண்டுமே என்ற நினைவூட்டலை மண்டை செய்திட - சரி; நாளைய பிழைப்பை காலையில் பார்ப்போமென்று கண்ணயர்ந்தேன்!


வழக்கம் போல காலையில் விழிப்புத் தட்டியது; ஆனால் நான் பயந்தபடியே எங்கள் ஊர் போர்வெல் குழாய்களில் வரும் காற்று மாத்திரமே என் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது! சும்மாவே ‘ததிகிநதும்‘ போடும் அழகான தொண்டை “ஹிஸ்... ஹிஸ்..“ என்று பாம்பைப் போல குரல் கொடுக்க, அரண்டு போனேன் மெய்யாகவே! நண்பர் ஸ்டாலினுக்கு ஃபோன் செய்து -"சார் நான் நேரடியாக 11-30 மணிக்கு மீட்டிங் ஹாலுக்கே வந்து விடுகிறேனே...?" என்று கிசுகிசுக்க – அவரோ – ‘நண்பர்களில் நிறையப் பேரையும் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன்; நீங்கள் பேசவே வேண்டாம் – டிபன் சாப்பிட்டு விட்டு மட்டும் போகலாமே?‘ என்று அன்புக் கோரிக்கை வைக்க மறுப்புச் சொல்ல மனம் ஒப்பவில்லை! So திரும்பவும் ஒரு லோட்டா வெந்நீரை உள்ளே தள்ளி விட்டுப் புறப்பட்டேன் நண்பர்களோடு ! பெவிகால் பெரியசாமி அவதாரமெல்லாம் ஆன்லைனுக்கு சுலபமாக இருக்கலாம் தான்; ஆனால் நிஜத்தில் வாய்க்கொரு திண்டுக்கல் பூட்டுப் போடுவது நடக்கிற காரியமா – என்ன? ஸ்டாலின்ஜி வீட்டில் குழுமியிருந்த நண்பர்களோடு ‘கானக் குயிலாய்‘ நான் அளவளாவி விட்டு ரூமுக்குத் திரும்பிய போது மீட்டிங்கில் நிச்சயமாய் சைகை பாஷையைத் தான் கையிலெடுத்தாகணும் போலும் என்ற நிலையிலிருந்தேன்! 

பெருந்துறையில் கல்லூரி படித்து வரும் என் தங்கையின் மகனும் சனி மாலை முதலே புத்தக விழாவில் நம்மோடு இணைந்திருக்க காலை 11.30-க்கு மீட்டிங் ஹாலுக்கு அவனுமே ஆஜரானான்! நாங்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்தது அந்த சிறு அரங்கம்! 60 பேர் அமரக் கூடிய அந்த ஹாலில் ஏற்கனவே நண்பர்கள் கூடத் தொடங்கியிருக்க புதுவையிலிருந்து, சேலத்திலிருந்து, பெங்களுரிலிருந்து, மதுரையிலிருந்து, கரூரிலிருந்து, ஈரோட்டின் அருகாமை நகர்களிலிருந்து என்றெல்லாம் புதுசும், பழசுமாய் நண்பர்கள் அறிமுகமாகினர்! Formal ஆனதொரு மீட்டிங் நமக்கு ஒத்துவராத விஷயமென்பதால் ஜாலியாகவே ஆரம்பித்தேன் ‘தொண்டை சதி செய்து விடக் கூடாதே கடவுளே!‘ என்ற பீதியோடே!





ஏற்கனவே அறிவித்திருந்தபடி  இது தொடரவிருக்கும் ஆண்டிற்கான முன்னோட்டம் நடப்பாண்டின் performance review என்பதால் எனது முதல் கேள்வியே  தற்போதைய நமது இதழ்களின் வெளியீட்டு எண்ணிக்கை சம்பந்தமானதாக இருந்தது! “ஆண்டுக்கு 48 இதழ்கள் என்பது ஓ.கே. தானா? அந்த 48-ல் மறுபதிப்புகள் 12 slot-களை ஆக்கிரமிப்பது விற்பனையின் பொருட்டு அவசியம் எனும் போது – எஞ்சி நிற்கும் 36 இதழ்களுமே புதியவைகளாக இருந்திடும் ! இந்த எண்ணிக்கை சரி தானா ? – ஜாஸ்தியா?“ என்று கேட்டு வைக்க உற்சாகக் குரல்கள் பதில்களாய் பறக்கத் தொடங்கின! “நிச்சயம் ஓ.கே. தான்...!! நிறைய வெளியீடுகள் இருந்தால் மட்டுமே வாசகர்களுக்கு ஒரு நிறைவான choice கிடைக்கும்! ஆண்டுதோறும் ஏராளமாய் சினிமாக்கள் வெளியாகும் போது தான் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் option கிட்டுகிறது! வெளியாகும் படங்களே, குறைவாகி விட்டால் சுகப்படாது“ என்று பெரும்பான்மை கருத்துத் தெரிவிக்க  அதற்கு சற்றே மாறுபட்ட எண்ணங்களை புதுவையின் முதலைப் பட்டாளத்தினர் முன்வைத்தனர். மாதம் 7 இதழ்கள் வெளியாகும் இம்மாதம் போன்ற தருணங்களில்  ‘சுவாரஸ்யமான கதைகள் எவை? சற்றே “கடிகள்“ எவை?‘ என்ற ரீதியில் சிந்தனைகள் வாங்குபவர் மத்தியில் எழுவது சகஜமே என்று அவர்கள் சொன்ன போது அதிலுள்ள லாஜிக்கும் முன்நின்றது! நண்பர்களின் ஒரு சிறு அணியோ  ‘48ஐ விட ஜாஸ்தியாகவே எதிர்பார்க்கிறோம்‘ என்று போட்டுத் தாக்க  கலகலப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை! நமது நிதி நிலைமைகள்ஸ்டாக் வைக்க அவசியப்படும் கிட்டங்கிகள்; backissues பராமரிப்புகள் போன்ற விஷயங்களை கணக்கில் கொள்ளும் போது நமது maximum எண்ணிக்கை 48-ஐத் தாண்டுவது சாத்தியமல்ல என்பதை விளக்கினேன். தவிர இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்காவது நமது வெளியீட்டு எண்ணிக்கை புஷ்டியானதொரு நம்பரை எட்டிப் பிடிக்க அவசியமிருப்பதால் தட்டுத் தடுமாறியாவது தற்போதைய tempo-வைத் தொடர்ந்திடும் அவசியத்தைச் சுட்டிக் காட்டினேன்!

அதன் பின்னே நான் கேட்டு வைத்த கேள்வி கிராபிக் நாவல்கள் பற்றியும்  அது தொடர்பாய் நண்பர்களின் தற்போதைய mindset பற்றியும்! ஆச்சரியமூட்டும் விதமாய்  ஏகோபித்த ‘No‘ என்றோ ; ‘ஐயோ... ஆளை விடுங்கள்‘ என்ற ரீதியிலோ நண்பர்களின் பதில்கள் அமைந்திடவில்லை! ஒரேயடியாக யுத்தம் தொடர்பான கதைகளாகவும்; வரலாறு சம்பந்தமான கதைக்களமாகவும் இல்லாது  மாறுபட்ட பாணிகளிலுள்ள ஆக்கங்களைப் படித்திட பெரும்பான்மை நண்பர்கள் ஆர்வம் தெரிவித்தது சந்தோஷ ஆச்சர்யமாக அமைந்தது! நம் போராட்டக்குழுத் தலைவர் கூட  சுலபமாய் புரியும் விதத்திலுள்ள கதைகள் எதுவாகினும் ஓ.கே.‘ என்று கருத்துச் சொன்னார் ! ‘அட... கிராபிக் நாவல்கள் என்ற genre-க்கு நம்மவர்கள் பகைவர்களல்ல; maybe தேர்வான கதைகள் சரியானவைகளாக அமைந்திடவில்லை போலும்!‘ என்ற புரிதல் மனதுக்கு இதமாக இருந்தது! So- back to the drawing board with more searches என்று நினைத்துக் கொண்டேன்!

அடுத்ததாக சில பல விஷயங்கள் நோக்கிப் பேச்சு திரும்பும் வேளையில், பொறுமையின்றி நம் இரவுக் கழுகாரைப் பற்றிய அறிவிப்புகளுக்காக நண்பர்கள் பரபரக்கத் துவங்கினர்! ஊரிலிருந்து ஒரு 7 அடி உயர பேனரை நான் கொண்டு வந்து, மீட்டிங் ஹாலில் தோரணம் கட்டியிருக்க  அதன் பொருட்டு நண்பர்களின் நாடித்துடிப்புகள் துரிதமாகியிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது! “தனிச் சந்தா உண்டா  டெக்ஸிற்கென?“ ; “என்ன குண்டு புக்?“ ; “எத்தனை குண்டு புக்?“ என்று கேள்விகள் ‘தல‘யின் தோட்டாக்களை விட வேகமாய் இடமும், வலமுமாய் காற்றைக் கிழித்திட  பெவிகால் பெரியசாமிக்கு தற்காலிகக் கல்தா கொடுத்தல் அவசியமாகிப் போனது! ரொம்பவே முன்பாக அறிவிப்புகளைச் செய்து விட்டால், அவை அமலாகும் தருணம் புலர்வதற்குள் ஆறிப் போன பழங்கஞ்சு effect எழுந்திடக் கூடுமே என்ற அச்சம் எனக்குள்ளே எப்போதுமே உண்டென்பதால்  அவசியமாகிடும் வரை மௌனத்தையே தாய்மொழியாக்கிட விழைந்து வருகிறேன்! ஆனால் ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பு இருந்தே தீருமென்ற எதிர்பார்ப்புகளுடன் குழுமியிருந்த நண்பர்களை disappoint செய்திட மனம் ஒப்பவில்லை! So- ஜுனியர் எடிட்டரின் முதல் project பற்றிய அறிவிப்பை ஈரோட்டு ஸ்பெஷலாக்கினேன்! இரவுக் கழுகாரை black & white-ல் குண்டு புக்களில் பார்த்து விட்டோம்; வண்ணங்களில் பார்த்து விட்டோம்; மூன்று கதைத் தொகுப்பிலும் பார்த்து விட்டோம் எனும் போது  அவரை இன்னனும் நாம் ரசித்திடாத ஒரே அவதார்  MAXI TEX அவதாராக மாத்திரமே இருந்திட முடியும்! அதாவது  பக்க அளவில் 330-ஐத் தொட்டிடும் மெகா Tex சாகஸம் ஒன்றினை நமது வழக்கமான போனெல்லி சைஸில் அல்லாது  பிரான்கோ  பெல்ஜியக் கதைகளை நாம் வெளியிடும் அந்த பெரிய சைஸில்  ‘பளிச்‘ சித்திரங்களோடும், வண்ணத்திலும் ரசிப்பது நிச்சயம் ஒரு பரவச அனுபவமாய் இருக்குமென்று எங்களுக்குத் தோன்றியது ! So- அதுவே நம் அபிமான ரேஞ்சரின் ‘விஸ்வரூபமாய்‘ வரக் காத்துள்ளது  2016ன் சென்னை புத்தக விழாவின் தருணத்தில்! விலை  கதை விபரம்  எல்லாமே அக்டோபர் இறுதியினில் நமது அட்டவணை 2016ல் பார்த்திடப் போகிறீர்கள்! And this will be a part of the regular subscription. 

இது தவிர, ‘டெக்ஸை மாதந்தோறும் வெளியிட்டுத், துவைத்துக் காயப் போட வேண்டாமே!‘ என்ற சிந்தனையி்லும் ஒரு பெரும்பான்மை ஒப்புதல் நண்பர்களிடையே நிலவியது! ‘மாதம் ஒரு டெக்ஸ்‘ என்பது நிச்சயம் overdose ஆகிப் போய்விடுமென்று தீவிர ‘தல‘ அபிமானிகள் கூட கருத்துச் சொல்ல  ஆசைகளை ஓரம்கட்டி விட்டு, யதார்த்தங்களுக்கு நம்மவர்கள் முன்னுரிமை தருவதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! ‘டெக்ஸ்‘ பற்றிய discussion ஓடிக் கொண்டிருக்கும் போதே 'மறுபதிப்புப் பட்டியலில் டெக்ஸ் உண்டா?' என்ற கேள்வியும் சூடு பிடித்தது ! “நிச்சயம் 1 ; லட்சியம் 2“ என்ற mindset என்னிடம் ஏற்கனவே என்னிடம் இருந்ததால்  அதற்கு ஒப்புதல் சொன்னது மட்டுமின்றி  மறுபதிப்பாகும் கதையினைத்  தேர்வு செய்திடும் சுதந்திரத்தை நண்பர்களிடமே ஒப்படைத்தேன். ஒரு மளிகைக்கடை லிஸ்ட் நீளத்திற்கான பட்டியலை ஆளாளுக்கு ஒப்பிக்க, இது வேலைக்கு ஆகாதென்று நானே மூன்று இதழ்களின் பெயரை பலகையில் எழுதிப் போட்டு  அதன் மீதான வாக்கெடுப்பை எடுத்தோம்! “பழி வாங்கும் புயல்“ முதலிடத்தைத் தட்டிச் செல்ல  “டிராகன் நகரம்“ slot # 2 ஐப் பிடித்தது ! So 2016-ல் “பழி வாங்கும் புயல்“ வண்ண மறுபதிப்பாய் வெளிவருவது உறுதி என்று நான் அறிவித்த போதே  ‘ஒன்று போதாது; அட்லீஸ்ட் 2 வேண்டும்!‘ என்ற கோஷங்கள் முழங்கின! எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொண்டே செல்லும்பட்சத்தில் சந்தாத் தொகைகள் உயரே... உயரே செல்லும் ஆபத்துள்ளது என்பதால் ஆர்வங்களை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் கோரிக்கையை முன்வைத்து விட்டு அடுத்த டாபிக் பக்கம் வண்டியை நகற்றினேன்! And இந்த டாபிக்கின் மீது கவனம் இருக்கும் இத்தருணமே - 2016-ன் சந்தாக் கட்டணம் நிச்சயமாய் நடப்பாண்டின் பட்ஜெட்டை விடக் கூடுதலாய் இராதென்பதையும் சொல்லி வைத்துக் கொள்கிறேன்! 

தொடர்ந்து கேப்டன் டைகர் பற்றியும், அவரது எதிர்காலம் (நம்மிடையே தான்!!) பற்றியும் கேள்வி எழுப்பினேன்! நீண்டு செல்லும் plot கொண்ட Young Blueberry கதைகளை “டைகர்“ என்ற பெயருக்காவது தொடரலாமா  அல்லது கொஞ்ச காலம் ‘பிரேக்‘ கொடுத்துப் பார்ப்போமா? என்ற என் வினவலுக்கு சிந்தித்துப் பதில் சொல்லத் தொடங்கினர்! இறுதியில் “என் பெயர் டைகர்“ ஐந்து பாகத் தொடரினை ஒற்றை இதழாக்கி  முன்பதிவுக்கேற்றதொரு விலை நிர்ணயம் செய்து தயாரிக்கலாமே! என்பது பெரும்பான்மையினரின் அபிப்பிராயமாக இருந்தது! துண்டும், துக்கடாவுமாய் கதைகளைப் பிரித்து வெளியிட்டு அவற்றின் flow-க்கு வில்லங்கம் ஏற்படுத்துவதை விட  இது போன்ற "one-shot; buy if you wish" மார்க்கம் தேவலை என்று எனக்கும் பட்டது! ஆனால் அன்று குழுமியிருந்த 55 நண்பர்களைத் தாண்டிய உங்களது குரல்களுக்கும் முக்கியத்துவம் தரும் கடமை நமக்குள்ளது என்பதால்  இது பற்றிய உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன் guys! இறுதியான தீர்மானம் அனைவரது அபிப்பிராயங்களையும் அறிந்த பின்பே எடுக்கப்படும் !

தொடர்ந்த உரையாடல்களின் போது ரிப்போர்டர் ஜானிக்கு ஆதரவாய் சில நண்பர்கள் கருத்துச் சொல்ல  என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்ததொரு எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்! இந்த அக்டோபரோடு பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகுடன் நமது தொடர்புக்கு அகவை 30 ஆகிறது! அதன் ஒரு சின்ன celebration ஆக அன்று முதல் இன்று வரை going strong நாயகர்களின் digest ஒன்றினை வெளியிடலாமே என்பது தான் எனது அந்த அவா! உற்சாகமாய் அதற்கு ஆதரவு கிட்டிய போதிலும்  மீண்டுமொரு வாக்கெடுப்பில் கேப்டன் பிரின்ஸ் தொடரில் எஞ்சி நிற்கும் சிறுகதைகளின் தொகுப்பானதொரு புது ஆல்பம் - ரிப்போர்டர் ஜானியை விடக் கூடுதலாய் வாக்குகள் பெற்றது! So- 2016-ன் ஒரு வாகான தருணத்தில் கேப்டன் பிரின்ஸின் புதுக்கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு அழகாக வெளிவந்திடும்!


இறுதியாய் “பௌன்சர்“ பற்றிய கேள்வியை எழுப்பி வைத்தேன்  அதன் தாக்கம் நண்பர்கள் மத்தியினில் எவ்விதமுள்ளதென்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு! சென்னிமலை நண்பர் ஒருவர் நீங்கலாகப் பெரும்பான்மை வாசகர்கள் பௌன்சரின் அந்த ரணகள அதிரடி பாணிக்கு ரசிகர்களே என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது! “For mature audience“ என்ற லேபில் மட்டும் இதற்குப் போட முடிந்தால் இன்னும் நலம் என நண்பர் ப்ளுபெர்ரி தெரிவித்தார்! (அது நடைமுறை சாத்தியமல்ல என்பது வேறு விஷயம்!!) இடையே ஒரு மிகச் சிறிய டீ பிரேக் நீங்கலாய் முழுவீசசில் நகன்ற சந்திப்பானது முழுசாய் 3 மணி நேரங்களை விழுங்கியிருந்தது அப்போது தான் புலனானது! இதற்கும் மேலாய் நம் கச்சேரிகளைத் தொடர்ந்தால் வயிறுகள் போடும் பசிக் கூச்சல்கள் பெரிதாகிடக் கூடுமென்பதால் சின்னதொரு summary உடன் அந்த சந்திப்பை நிறைவு செய்தோம்!

தொடர்ந்த க்ரூப் போட்டோ படலம்; நண்பர்களுக்கு விடைகொடுத்தல் இத்யாதிகளோடு அவசரமாய் கிளம்ப வேண்டிய அவசியமில்லா நண்பர்களோடு மதிய உணவும் அருந்த சமயமிருந்தது! சகலத்தையும் முடித்து விட்டு ரூமுக்கு நான் கிளம்பிய போது என் தொண்டையில் யாரோ உப்புத் தாளைத் தடவியிருந்த உணர்விருந்த போதிலும்  மனது முழுவதும் திருப்தியும், மகிழ்வும் நிறைந்து கிடந்தன! ‘தோளில் கைபோடுங்கள் சார்  போட்டோ போசுக்கு‘ என்ற உரிமையோடு கேட்ட நண்பரின் குரலும்; ‘நான் எடிட்டர் கூட அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்... நீ அவரோடு பேசுறியா?‘ என்று ஒலித்த பெருமிதக் குரலும்; சென்னிமலை முருகன் ஆலயத்திலிருந்து மாலையும்; பட்டுத் துண்டும், சாமி படமும் கொணர்ந்து தந்த அந்த அன்பரின் நேசமும்; ஈரோட்டில் நானிருந்த ஒன்றரை நாளுக்கு ஒவ்வொரு நண்பரும் இந்த சிவகாசி சாமான்யனிடம் காட்டிய அன்பும், பரிவும் நிச்சயமாய் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறந்திடாது! எத்தனை எத்தனை அந்தர் பல்டிக்கள் நாங்கள் அடித்தாலும் நீங்கள் காட்டிடும் நேசத்துக்கு நிச்சயம் நியாயம் செய்திட இயலாது என்பது அப்பட்டம் ! இந்த அன்புக்கு என்றைக்கும் நாங்கள் தகுதியானவர்களாகத் தொடர்ந்தாலே போதும்  இந்தப் பிறவிக்கொரு அர்த்தம் கிடைத்திருக்கும் ! Thanks guys – thanks for everything & more! மீண்டும் சந்திப்போம் - ஞாயிறின் பதிவோடு ! Bye until then !