Powered By Blogger

Tuesday, October 23, 2012

மூர்த்திகளும்...கீர்த்திகளும்.....!


நண்பர்களே,

வணக்கம். தாண்டிச் சென்ற வாரம் நிறையப் பயணங்கள் ; நிறைய அலைச்சல்கள் ; கொஞ்சம் ஜலதோஷம் ; இ-மெயிலில் காமிக்ஸ் proof reading என்று ஒரு தினுசாய்ச் சென்றிட்டது ! இடைப்பட்ட நாட்களில் இங்கே நமது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழ் கிடைக்கப் பெற்ற பின்னர் (எதிர்பார்த்தபடியே ) எக்கச்சக்கமான விமர்சனங்கள் ; அலசல்கள் ; பதிவுகள் ; கருத்துகள் என்று மின்னிலாக்காவின்  மொக்கையைத் தாண்டியும் களம் சூடாகிக் கிடப்பதைக் காண முடிந்தது ! அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் தனித்தனியே பதில் சொல்லிடுவதற்குப் பதிலாய் - பதில்களையே மொத்தமாய் ஒரு பதிவாக்கிட்டால் என்னவென்று தோன்றியது ! பலன் ? பதிவு எண்:62! 

அள்ளி முடிந்த குடுமியும்  ; வெற்றிலை சொம்புமாய் தீர்ப்புச் சொல்லப் புறப்படும் நாட்டாமையாக என்னை நானே ஒரு கணம் visualise செய்து பார்த்தேன் ; "உள்ளதுக்கே வழியைக் காணோம்..இதில் அள்ளி முடிய ஆசை வேறா?" என்று என் கேச வளம் தந்திட்ட mind voice எச்சரிப்பு  லேசாகக் காதில் விழுந்ததால், 'இந்த நடுவர் வேலைகளெல்லாம் சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை !' என்று ஒரு மனதாய் ஏற்றுக் கொண்டேன் ! ஆகையால் இந்த "சூப்பர் ஹீரோஸ் கதைகளை ரசிக்க வயது தடையா..? தடையல்லவா ?" என்ற பட்டிமன்றத்தின் தீர்ப்புச் சொல்லிடும் நடுவராக அல்லாது....இந்த சங்கதியில் ஒரு வாசகனாய்...ஒரு எடிட்டராய்...ஒரு வியாபாரியாய்(!!)எனது எண்ணங்கள் என்னவென்று பகிர்ந்து கொள்வதே என் நோக்கம் ! 

நமது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலின் நதிமூலம் - ரிஷிமூலம் இந்நேரத்திற்கு நாம் அனைவரும் அறிந்ததொரு சங்கதியே ! நமது வண்ணமயமான இரண்டாவது வருகை COMEBACK ஸ்பெஷல் வாயிலாகத் துவங்கிய சமயமே திட்டமிடப்பட்ட ; அறிவிக்கப்பட்ட இதழ் இது ! சொல்லப்போனால் நமது COMEBACK ஸ்பெஷல் என்று நான் முதலில் மண்டைக்குள் வடிவமைத்து வைத்திருந்தது இந்த மும்மூர்த்திகளின் கூட்டணியையே !இடையே எழுந்த வேறு சிந்தனைகளின் பலனே வண்ணத்தில் லக்கி லூக் & பிரின்ஸ் கதைகளோடு நமது Comeback ஸ்பெஷல் glitzy ஆக அவதரிக்கக் காரணம் ! புதியதொரு பாணி துவக்கம் கண்டதால், இந்த மும்மூர்த்தி கூட்டணி தற்காலிகமாய் கொஞ்சம் பின்னே செல்ல நேரிட்டது !நமது புதுப் பாணி சாத்தியப்படுத்தித் தந்த முன்னேற்றங்கள் ; அது திறந்து விட்ட புதுக் கதவுகள் ; எப்போதையும் விட அசாத்திய உத்வேகமாய் உங்கள் ஒவ்வொருவரின் அக்கறையான பங்களிப்புகள் என்று ஏராளமான புதுச் சங்கதிகள்,தொடர்ந்த மாதங்களில் அரங்கேறியதும் நீங்கள் அறியாததல்ல ! பத்து மாதமென்பது ஒரு மகவை ஈன்று எடுத்திட மட்டுமல்ல ; பல mindsetகளையும் மாற்றிட ,வல்லதென்பதையும் உணர்ந்திடும் வேளையும் வந்தது!அட்டையில் ஆர்ச்சியும், ஸ்பைடரும் ; மாயாவியும் இருந்தால் போதும் ; அது அதிரடி வெற்றிக்கு உத்திரவாதமென்று சொல்லக் கூடிய நாட்கள் நமது நினைவுகளில் மாத்திரமே இனி நீடிக்க வல்லவை ; இன்றைய ரசனை இவர்களைத் தாண்டிப் பயணித்து விட்டதென்று எனக்குள் தோன்றியதால் தான் சூ.ஹீ.சூ.ஸ்பெ.வின் வெளியீட்டுத் தேதியில் சுணக்கம் காட்டினேன். ஆனால் தொடர்ந்திட்ட ஆதங்க அலை என் மண்டையிலிருந்த சந்தேகச் சிலந்தி வலைகளைக் களைந்து தந்ததால், நம் வலை மன்னன் முன்னட்டையில் சிலந்தி வலை கட்டிடும் நாளும் நிஜமானது!இதழ் வெளியான பின்னர் வந்திருக்கும் reactions களின் ரகம் இரண்டல்ல - மூன்று என்பேன் ! இங்கு பதிவுகளாக மாத்திரம் அல்லாது ; வெவ்வேறு காமிக்ஸ் blog களிலும் பரிமாறப்பட்டு வரும் எண்ணங்களின் தொகுப்பு என்னை இவ்விதம் சொல்லச் செய்கிறது என்று சொல்லலாம் ! 
 • "ஆஹா..அற்புதம் ! " என்று மிகப் பெரிய thumbs up !
 • "ஆஹா...இதுக்குத் தானா இத்தனை பில்டப் ?காதிலே பூ தாங்கலைடா சாமி" என்ற ரகக் கருத்துக்கள் !
 • "கதைகள் சுமார்..குறைகள் அதிகம்...ரசித்திட முடியவில்லை " என்ற ரீதியிலான reservations.


இதில் 'பதில் சொல்கிறேன் பேர்வழிஎன்று சுலபமாய் அல்வா கொடுக்க சிறந்த வழி- எந்தக் கருத்துக்கு maximum சதவீதத்தினர் நிஜமாக வோட்டளித்துள்ளனர் என்று பார்த்திடுவதே ! ஆனால் அது போங்கு ஆட்டமாகிப் போய்விடுமென்பதால் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை  !

நமது மும்மூர்த்திகளுக்குள் basic ஆக ஒரு வேற்றுமை உண்டு ! இரும்புக்கை மாயாவி ஒரு '100 சதவீத சூப்பர் ஹீரோ' என்று சொல்லிட இயலாது ! அவரது உலோகக் கரம் ; அதன் அதிசய ஆற்றல்கள் ; அவரது மாயத்தன்மை என்பவை 40 ஆண்டுகளுக்கு முந்தையதொரு தலைமுறையினாலே கூட ஏற்றுக் கொள்ள முடிந்தது எனும் போது, அந்தக் கதாப்பாத்திரத்தில் ; அவரது கதைகளில் 'fantasy ' என்ற ஒற்றை வார்த்தையைத் தாண்டியதொரு வலு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் ! தவிர அவரது ஆரம்ப கால 13 கதைகளுமே ஏதாவது ஒரு விதத்தில் action ; adventure ; துப்பறியும் த்ரில்லர் பாணியிலானவை ! பின்னே நகர நகர கதைகளில்ன் தரம் குறைந்ததில் சந்தேகமே கிடையாது - ஆனால் ஆரம்பத்தில் மாயாவி பதித்த அந்த முத்திரை அவரை என்றைக்குமே நமக்குப் பிடித்தமான ஒரு பால்ய நண்பனாகவே வைத்துள்ளது என்று சொல்லலாம் !

நமது "தல" ஸ்பைடரும் ; சட்டித் தலையன் ஆர்ச்சி சங்கதிகளும் முற்றிலும் வேறு ! இருவருமே super ஆற்றல்கள் நிறைந்த அடாவடி சூப்பர் ஹீரோக்கள் ! ஸ்பைடர் ஒரு உளவுப்படை எஜெண்டாகவோ ; ஆர்ச்சி ஒரு ஜேம்ஸ் பாண்டாகவோ எந்தக் காலத்திலும் இருந்திட்டதில்லை ! நியூயார்க் நகரையே கயிறு கட்டித் தேர்த்திருவிழா போல் இழுத்திட நினைக்கும் வில்லனை முறியடித்து அறிமுகமானவன் தானே..ஸ்பைடர் ?!கப்பல்களைத் தூக்கிக் கடாசிய கடோத்கஜன் தானே ஆர்ச்சி ? So - ஆரம்பம் முதலே துளியும் சந்தேகத்துக்கு இடமின்றி இவ்விருவருமே out and out fantasy heroes என்பது establish ஆனதொரு சங்கதி.இங்கேயும் மாயாவிக்கு நேர்ந்த அதே  பிரச்னை தான் ஸ்பைடருக்கும் கூட ! முதல் 13 கதைகளின் பெரும்பான்மை ஓரளவிற்கு சுவாரஸ்யமான கதைக்களங்கள் ; வில்லன்கள் என்று அமைந்தவை ! மாயாவியின் 13ம் சரி ; ஸ்பைடரின் துவக்கப் 13ம் சரி ; Fleetway நிறுவனத்தின் Stupendous Series -ன் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட நீளத்திற்குள் அடங்கிடும் கதைகள் ; விறுவிறுப்பான - அதே சமயம் மாறுபட்ட plot கள் இருந்திட வேண்டுமென்று முதலிலேயே பதிப்பகத்தினர் கதாசிரியர்களிடம் stress செய்திருக்க வேண்டும் ; கதைகளில் அதன் பலன் பிரதிபலிக்கின்றது ! பின்னர் வந்திட்ட மாயாவி ; ஸ்பைடர் ; (& ஆர்ச்சி) கதைகள் அனைத்துமே அவர்களது வார இதழ்களில் 2 பக்கத் தொடர்களாக நீண்டு சென்றவை ! குறிப்பிட்ட காலக்கெடு ஏதுமின்றிப் பயணித்த படைப்புகள் இவை என்பதால், இக்கதைகளின் பெரும்பான்மை - முதல் 13 -ன் முன் நிச்சயம் தோற்றிடும் ! "பழி வாங்கும் பொம்மை"சுவாரஸ்யப்படுத்திய  அளவிற்கு "அரக்கன் ஆர்டினி" மிளிரவில்லை என்பதற்குக் காரணம் இதுவே ! நாயகர்கள் ஒன்றாக இருந்திடும்போதிலும், முன்னது ஒரு திட்டமிடப்பட்ட திரைப்படம் போல ; பின்னது நீண்டு ஓடும் இரவு பத்து மணி டி.வி. தொடர் போல ! So - கதைகளின் பாணிகளில் ; தரங்களில் வேறுபாடுகள் இருந்திடுவது தவிர்க்க இயலா விஷயமே ! ஸ்பைடர் mania உச்சத்தில் இருந்திட்ட போதிலும் கூட, "விண்வெளிப் பிசாசு" கதையினை நான் தொடராக வெளியிட்டது இதுவல்லாது வேறு என்ன காரணத்திற்காக இருந்திட இயலும் ?? "அரக்கன் ஆர்டினி" கதையில் ஸ்பைடர் வாங்கும் செம மாத்துக்களின் எண்ணிக்கையை வேண்டுமெனில் நான் edit செய்திருக்க இயலுமே தவிர கதையின் போக்கையல்லவே ?!எஞ்சியுள்ள ஸ்பைடர் (புதுக்) கதைகளுள் இந்த ஒன்று தான் "ஏதோ தேவலை ரகம்" எனும் போது,எனது சிரமம் சிறிதேனும் புரிந்திடுமென்று நினைக்கிறேன் !ஆர்ச்சியின் கதைகளைப் பொருத்த வரை அவை ஆல்பம் வடிவில் என்றைக்குமே உருவானவையல்ல ! அனைத்துமே தொடர்கதைகளாய் வந்த பக்கங்களின் தொகுப்புகள் என்பதால், அன்றைக்கும், இன்றைக்கும் நெருடலான வேறுபாடுகள் தென்பட சாத்தியமில்லை ! அன்றைக்கு ஆர்ச்சியின் சேஷ்டைகளை ரசித்திருந்தால், இன்றும் பெரிதாய் முகம் சுளிக்கச் செய்திருக்க மாட்டான் சட்டித் தலையன் ! செந்தில்-கவுண்டமணி ஜோடியின் 'சட்டித் தலையா..பரோட்டா மண்டையா.' காமெடி உச்சத்தில் இருந்திட்ட '80களின் மத்தியில் அறிமுகமான ஆர்ச்சி கதைகளில் ஆங்காங்கே இந்தக் காமெடி bit களை இணைத்திடத் தீர்மானித்தவன் நானே ! ஆங்கில ஒரிஜினலில் இல்லாத நகைச்சுவை கதையின் ஓட்டத்திற்கு தமிழில் உதவிடும் என்பது இந்தப் பொடியனின் அந்தக் காலத்து சிந்தனை ! அதே பாணியை இன்றும் தொடர்வது புதிதாய்ப் படித்திடும் நண்பர்களுக்கு எரிச்சல் எற்படுத்திட வாய்ப்புண்டு என்ற போதிலும் faithful ஆர்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திடும் எண்ணத்திலேயே அந்தப் பாணியைத் தொடர்ந்துள்ளோம்.So - கதைகளின் களத்தில் ; வளத்தில் ஸ்பைடர் & ஆர்ச்சியில் நிச்சயம் ஒரு கேப்டன் டைகரின் மதிநுட்பத்தையோ ; லார்கோ வின்ச்சின் திருப்பங்களையோ தேடிடல் பலனற்றது. சட்டியில் இன்று போட முடிந்ததே கையிருப்பில் உள்ள சுமாரான சரக்கு மாத்திரமே எனும் போது - அகப்பையில் முன்பு பரிச்சயமான சுவையோடு பதார்த்தம் வந்திடல் எவ்விதம் சாத்தியமாகும் ? 'மொழிபெயர்ப்பு சுமார் ; பிழைகள் உண்டு ; எழுத்துக்கள் சிறிதும்,பெரிதுமான அளவுகளில் உள்ளன' என்ற குற்றச்சாட்டுக்கள் - fair enough ! மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய நிலைப்பாடு ஒவ்வொருத்தரின் மாறுபட்ட அளவுகோல்களுக்கேற்ப வேறுபடுபவை என்பதால், மற்ற இரு பிரச்னைகள் பற்றி இங்கே எழுதிட வேண்டும் !

இந்தக் கதைகளுக்கான பணிகள் துவங்கியது 2011 -ல் ! கம்ப்யூட்டர் மூலம் அச்சுக் கோர்ப்பது மாத்திரமுமின்றி, முன்பு நமது ஆர்டிஸ்ட்கள் செய்து வந்த பணிகளையும் கணினி மூலமே முடிப்பதென்பது தீர்மானமான பின் துவக்கப்பட்ட முதல் batch கதைகள் இவை ! நவீன டிசைன் யுக்திகள் ; கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தலை தூக்கிய தருணமும், ஆர்டிஸ்ட்கள் எனும் சில ஜீவன்கள் நிர்மூலமானதும் ஒருங்கே நிகழ்ந்தவை ! என்ன சம்பளம் கொடுத்தாலும் இன்று சிவகாசியில் ஓவியர் யாரும் சிக்கிட மாட்டார்கள் - for the simple reason that there are none at all !ஒரு காலத்தில் ஓவியர்களாய்ப் பணியாற்றிய ஜீவன்களில் பிழைக்கத் தெரிந்தவர்கள் சின்னதாய் கம்ப்யூட்டர் டிசைனர்களாகவும் ; பி.தெ.யா ஜீவன்கள் திருமணத் தரகர்களாக ; அச்சகங்களில் வாட்ச்மேன்களாக ஜீவனம் செய்கிறார்கள் ! So - நாங்கள் நவீனத்தை அரவணைத்தோம் என்று சொல்வதை விட ; அரவணைக்கத் தள்ளப்பட்டோம் என்பது தான் நிஜம் ! இன்று நமது அட்டைப்பட ஓவியர் கூட கோவில்களில் சுவர்களில் ; உத்திரங்களில் சித்திரம் போடும் நேரம் போகவே தான் நமக்குப் பணியாற்றுகிறார் ! So - எல்லாம் கம்ப்யூட்டர் மயம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை நாங்கள் தாமதமாகவே உணர்கிறோம். உங்களில் பலரும் பரிச்சயப்பட்டிருக்கும் ஒரு professional - MNC பணிச் சூழலில் சிவகாசி இயங்குவது கிடையாது !இன்றளவும் இங்கே அனுபவமே பிரதானமான ஆசானே தவிர, கல்லூரிகளோ ; அவை தரும் பட்டப்படிப்புகளுமல்ல ! சிவகாசி எனும் போது ஒரு hi -tech உலகம் என்ற சிந்தை வெளியே உலவினாலும் கூட, நிஜம் அதுவல்லவே ! 2 கோடி பெறுமானமுள்ள அச்சு இயந்திரத்தை நிர்வகிக்கும் தொழிலாளிகளில் பலர் பள்ளிப் படிப்பைப் பூர்த்தி செய்திருக்கா அனுபவ மாணாக்கர்கள்! நமக்கு அச்சுக் கோர்க்கும் கம்ப்யூட்டர் பணியாளர்களுமே சின்னதாய் ஒரு டிப்ளோமா படித்து விட்டு, வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வைத்து அனுபவத்தில் முன்னேறும் திறமைசாலிகளே தவிரே, இதில் முறையான படிப்பும், பரிச்சயமும் பெற்றவர்களல்ல !முறையான கல்வியும், பயிற்சியும் துணை கொண்டு இன்று கம்ப்யூட்டர்களில் உலகுக்கே பாதைகள் வகுத்துக் கொடுக்கும் உங்களில் பலருக்கும் சுலபமாய்த் தோன்றிடும் கம்ப்யூட்டர் சங்கதிகள், எங்களுக்கோ அனுபவத்தில்..trial & error மூலமே பரிச்சயமாகின்றன என்று சொல்வதில் எனக்கு நிச்சயம் கூச்சம் கிடையாது ! We are honest triers though...!

So - எங்களுக்குச் சாத்தியப்பட்ட ஒரு சின்ன வட்டத்துக்குள் முதல் முறையாகத் துவங்கிய பணிகள் இந்த சூ.ஹீ.சூ.ஸ்பெ. கதைகளுக்கான அச்சுக் கோர்ப்புகள் ! 2011 -ல் துவங்கிய போதிலும், காரணங்கள் பலவால், பரணில் போடப்பட்ட இக்கதைகள்  - மீண்டும் கடந்த மாதமே மீட்கப்பட்டவை ! முதன் முதலாய் ; இந்தப் பணிகளில் சிறிதும் பரிச்சயம் எற்பட்டிருக்கா சமயத்தில் செய்யப்பட்ட பணிகள் என்பதால் பிழைகள் நிறையவே இருந்தன !கொஞ்சம் கொஞ்சமாய் திருத்தங்களை செய்திட முயன்ற போதிலும், 14 மணி நேர மின்வெட்டு - எங்களது பணிகளுக்கு பிராணனை வாங்கும் சிக்கல்களை உருவாக்கியது ! அடுத்தடுத்து பணிகள் தேங்கி நிற்கும் பதட்டம் ஒரு பக்கம் பொறுமையை சோதிக்க, 'இந்த இதழை முடித்தால் போதுமடா..சாமி!' என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது ! பிழைகள் மிகுந்து இருப்பதற்குக் காரணங்கள் இவையே ! இதனையும் கூட நான் சப்பைக்கட்டாகச் சொல்லிடவில்லை ; நாட்கள் செல்லச் செல்ல -எங்களது சின்ன டீமின் பணிகளில் ஒரு மெருகு கூடி வருவதை நான் ஒவ்வொரு மாதமும் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன்! இந்த இதழ்களில் மிகுந்திட்ட பிழைகள் நேரமின்மையின் பொருட்டே தவிரே ; நமது பணியாளர்களின் திறமைக் குறைவுகளால் அல்லவே !Reaction # 3 நிச்சயம் justified என்பதில் சந்தேகமே இல்லாத நிலையில் பிரதானப் பிரச்னைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பிடுவோமே..!

'ரசனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா....?'... சின்ன வயதில் படித்து ரசிக்க முடிந்த இந்த சூப்பர் ஹீரோக்களை இன்று அதே வாஞ்சையோடு ரசித்திடுவதில் நெருடல்கள் தோன்றுவது ஏனென்ற கேள்வி நியாயமானதே ! ஒவ்வொருத்தரும் இதற்கு தத்தம் விளக்கங்களை வழங்க முற்பட்டிருக்கும் போது இந்த சங்கதியை நான் பார்த்திடுவது ரொம்பவே சுலபமான கோணத்தில் ! துவக்கம் முதல் நமக்கு ஒரு நல்ல காமிக்ஸ் இதழின் பிரதான எதிர்பார்ப்பு - சுவாரஸ்யமானதொரு கதைக் களம் தான். உலகின் எத்தனையோ காமிக்ஸ் மார்கெட்களில் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியர் ; கதாசிரியரின் படைப்பென்றாலே - அந்தத் தயாரிப்பின் தரத்தை பெரிதாய் அலசிடாமல் கண்ணை மூடிக் கொண்டு அந்த இதழில் சில லட்சங்களை வாங்கிக் குவிக்கும் வாசக வட்டங்கள் உண்டு ! ஒரு வியாபார நோக்கில் பார்க்கும் போது அது உற்சாகமூட்டும் சங்கதியாய் எனக்குத் தோன்றினாலும், ஒரு வாசகனாய் அதன் லாஜிக் புரிந்திட்டதே கிடையாது ! சின்னதாய் உதாரணம் சொல்லிட வேண்டுமெனில் JES LONG எனும் ஒரு துப்பறியும் நாயகரின் கதைகளை நாம் முன்பு வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவரது தொடரில் ஒரு சில நல்ல கதைகளும் ; நிறையவே "அய்யோடா சாமி" ரகக் கதைகளும் உண்டு. "நண்டுக் குகை மர்மம்" என்று தமிழில் நாம் விளம்பரமெல்லாம் செய்திட்டதொரு இதழ் உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளதோ தெரியாது - எனக்கு மனதில் நிற்க  ரொம்பவே காரணங்கள் தந்திட்ட கதை அது. நிறைய பணம் கொடுத்து உரிமைகளை வாங்கி...பிரெஞ்சு ஒரிஜினல்களில் இருந்து மொழிபெயர்ப்பெல்லாம் செய்து ; முன்னக்கூடியே அட்டைபடமெல்லாம் அச்சிட்டு வைத்து - தமிழுக்கு மொழிமாற்றம் செய்திட நான் முனைந்த போது எனக்கு நேர்ந்த கிறுகிறுப்பை விவரிக்க வார்த்தைகள் தேடிடல் அவசியமாகிடும். கிளைமாக்ஸில் பஞ்சு மிட்டாய் செய்யும் மிஷின் போல எதோ ஒன்றை வைத்துக் கொண்டு வில்லன் (!!!) ஒரு குகைக்குள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார் ! அப்படியே தூக்கி பரணில் மூட்டை கட்டிப் போட்டு ஆண்டுகள் பத்தைத் தாண்டியாச்சு ! ஆனால் - இந்த இதழும் கூட பெல்ஜிய மார்க்கெட்டில் சரளமாய் விற்பனை ஆகிட்ட கதை எனும் போது எனக்கு அந்த லாஜிக் புரிபடவே இல்லை  ! இன்னொரு உதாரணம் சொல்லிட வேண்டுமெனில் "CODENAME மின்னல்" என்ற புதியதொரு தொடரும் கூட நம்மை இதே பாடு தான் படுத்தி எடுத்தது !

So - நமக்கு என்றைக்குமே "பெரிய பெயர்கள்" ஒரு பொருட்டல்லவே...!கதைகள் சோபிக்கவில்லை எனில் அது பிரசித்தி பெற்ற நாயகனின் சாகசமாய் இருந்தால் கூட - "குப்பை - குப்பையே" தீர்ப்புக்குத் தான் ஆளாகிடுவார் ! BATMAN கதைகளை நாம் வெளியிட்டு வந்த காலகட்டங்களில் நான் DC காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து எத்தனை வண்டி Batman இதழ்களை வரவழைத்திருப்பேன் என்பது எனக்கும் ; air -parcel அனுப்பியே ஓய்ந்து போயிருக்க வேண்டிய அவர்களது despatch பிரிவுக்கும் மாத்திரமே தெரிந்த சங்கதியாக இருக்கும் ! BATMAN ஒரு சூப்பர் ஹீரோ என்ற போதிலும் இயன்ற வரை அவரை ஒரு 'காதிலே பூ' ரக நாயகராய்ச் சித்தரிக்கக் கூடாதென்பதில் ; அவரது அடிப்பொடி ராபின் எங்குமே தலைகாட்டி குழப்பிடக் கூடாதென்பதில் ; கதைகளின் பெரும்பான்மை ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய களத்தில் அரங்கேறும் விதத்தில் இருந்திட வேண்டுமென்பதில் எனது முழுக் கவனமும் இருந்திட்டது. 50 ஒரிஜினல் இதழ்களைப் புரட்டினால் நம் ரசனைக்கு ஏற்றவாறு ஒன்றே ஒன்று தேறும் என்பது தான் நிதர்சனம்! Catwoman ; அந்த Man ; இந்த Man என்று தினுசு தினுசாய் தலை காட்டும் வில்லன்களை சுத்தமாய் வடிகட்ட வேண்டுமென்பதில் ரொம்பவே தீவிரமாய் இருந்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய நம்"சூப்பர் ஹீரோ"ரசனைக்கே இந்த ஓவரான"தரக் கட்டுப்பாடுகள் " எனும் போது - இன்றைய தேதிக்கு இந்த mixed reactions எனக்கு ஆச்சர்யத்தைத் தந்திடவே இல்லை தான்.

இளம் வயதில், அயல்நாட்டு காமிக்ஸ் படைப்புகளின் பெரியதொரு பரிச்சயம் இல்லாத சமயத்தில் ; பரபரப்பான இந்த சூப்பர் ஹீரோ கதைகளை மனது ஏற்றுக் கொண்டது - சுலபமாய் ! ஆனால் இன்றோ - வயதிலும், ரசனைகளிலும் அடுத்த படிக்குச் சென்றிருக்கும் வேளையில் மனம் அதே லாவகத்தோடு, 'அலசி ஆராயத் தேவை இல்லை' என்ற அதே பாணியில் அடி பணிவது-எல்லோருக்கும் சுலபமாய் சாத்தியப்படக் கூடிய விஷயமல்லவே !. இங்கே நான் சொல்லிட நினைக்கும் சங்கதியை சுலபமாய் கொணர சின்னதாய் ஒரு விஷயத்தை highlight செய்தால் பொருத்தமாய் இருக்குமென்று நினைக்கிறேன் ! Fleetway நிறுவனம் அன்று வெளியிட்டு வந்த Top கதைத் தொடர்கள் அத்தனைக்கும் (யுத்தக் கதைகள் நீங்கலாக) எனது தந்தை உரிமைகள் வாங்கி வைத்திருந்தார்கள் - ஸ்பைடரின் கதைகளுக்கும் சேர்த்துத் தான் ! ஆனால் - மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; ஜானி நீரோ கதைகளை தைரியமாக வெளியிட இயன்ற போது அவருக்கு ஸ்பைடர் மாத்திரமே ஒரு நெருடலாய்த் தோன்றியதால் தான் பின்னாளில் "எத்தனுக்கு எத்தன்" ஆக நமது லயனில் வந்திட்ட ஸ்பைடர் கதையை பத்திரமாக 14 ஆண்டுகளாய்ப் பூட்டி வைத்திருந்தார் - நான் ஆட்டையைப் போடும் வரை !ஸ்பைடர் கதை வெளியாகி, அசாத்திய வெற்றி பெற்ற பின்னர், நான் நேரடியாக Fleetway நிறுவனத்திலிருந்து எஞ்சி நின்ற அத்தனை ஸ்பைடர் கதைகளையும்  சரமாரியாக வாங்கிய போது,என் தந்தைக்கு ஆச்சர்யம் தாளவில்லை தான் ! (நானோ ஒரு போட்டியாளனின் மனோபாவத்தோடு - நான் தருவித்து வரும் கதைகளின் முழு விபரங்களையும் என் தந்தையிடம் பகிர்ந்து கொண்ட நாட்கள் ரொம்ப சொற்பமே..என்பது ஒரு தனிக் கதை !)17 வயது எடிட்டருக்கு (!!) ரசித்திட இயன்ற அந்த 'காதிலே பூ' பாணிக் கதை - 40 + வயதான எடிட்டருக்கு தேறாத கேசாகத் தோன்றியது - இந்த ரசனைகளில் வயதுக்கு இருந்திடும் சம்பந்தத்தைத் தவிர வேறு எதனால் இருந்திட முடியும் ?

பத்தில் ஏழு பேர் "காமிக்ஸா ? இன்னுமா அதெல்லாம் படிக்கிறாய் ?" என்று கேட்கும் ரகம் என்றால் ; எஞ்சி இருக்கும் அந்த காமிக்ஸ் ரசிக மூவரில் - ஒருத்தர் fantasy ரசிகராகவும் ; மீத இருவர் அதை வினோதமாய்ப் பார்த்திடும் ரகமாகவும் இருந்தால் அது ரசனைகளின் வேறுபாடுகளை மாத்திரமே காட்டுகின்றது !காமிக்ஸ் என்பது பில்டர் காபி குடிப்பதற்கு ஒத்ததொரு ரசனை ! காலையில் எழுந்து ரெண்டு மைல் தள்ளி இருக்கும் கடைக்குப் போய் பில்டர் காபி குடிப்பவருக்கு மாத்திரமே அதன் பிரத்யேக சுவை தெரியும். நாம் அனைவருமே அது போன்ற ரசிகர்கள் ! இந்த fantasy கதைகளை இன்றும் தொடர்ந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றுள்ள நம் நண்பர்கள், அந்த பில்டர் காபியிலும் ஒரு ஸ்பெஷல் ரகத்தை ரசிக்கத் தெரிந்த ஆற்றல் கொண்டவர்கள் என்றே சொல்லிடுவேன்!

இந்த ரகக் கதைகளைத் தொடர்வதில் ஒரு எடிட்டராய் எனது  நிலைப்பாடு  என்னவென்று கேட்கும் நண்பர்களுக்கு :

'நிச்சயம் தொடர்வேன்...ஆரம்பகாலத்துத் தரத்தில் இனியும் ஸ்பைடர் ; மாயாவியின் புதிய கதைகள் கிடைத்தால் !

"நிச்சயம் தொடர மாட்டேன் ...இப்போதைய தரத்தை விடவும் சுமாரான   கதைகள் மாத்திரமே எஞ்சி இருக்கும் காரணத்தால் !"


ஒரு வியாபாரியாய் (!!) நான் என்ன செய்திடுவேன் என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்கிறது....! நம்ப சிரமம் தான் என்றாலும், இது வரை இந்த ஆண்டில் வெளி வந்த இதழ்களிலேயே - அசாத்திய விறுவிறுப்போடு E -Bay -யிலும் சரி ; நமது முகவர்களிடமும் சரி, விற்பனை கண்டுள்ள  இதழ் நம் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் தான் !! குறிப்பாக இந்த இதழின்  E -Bay விற்பனையின் வேகம் இது வரை நாங்கள் கண்டிராததொரு சங்கதி !! இப்போது சொல்லுங்களேன் - ஒரு வியாபாரியாக நான் என்ன செய்திட வேண்டுமென்று ?!!!


நிறைய புரிந்தது போலவும் ; படித்து முடித்த பின்னர் எதுவுமே புரியாதது போலவும் தோன்றினால் - நாளைய தின விடுமுறை தான் உள்ளதே திரும்பவும் வந்து ஒரு முறை அலசிப் பார்க்க !! அனைவருக்கும் எங்களது ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள் ! Take Care people !

Saturday, October 13, 2012

சிங்கிளாய் ஒரு சிங்கம் !


நண்பர்களே,

வணக்கம். "புலி வருது ..புலி வருது.." என்பது பழைய பாணியல்லவா..? So இன்று ஒரு மாறுதலுக்கு "லயன் வருது...லயன் வருது.." என்று சொல்லித் தான் பார்ப்போமே ? இந்தாண்டின் most expected (!!!) இதழான "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"  இன்று உங்களைத் தேடி கூரியரில் ; பதிவுத் தபாலில் புறப்பட்டிருப்பதால் - நம் புதுமொழி பொருத்தமான மொழியாகிடும் வேளை இது ! எங்களது அச்சுப் பணிகள் சென்ற வாரத்தின் இறுதியினிலே முடிவுற்ற போதிலும்,சிவகாசியில் நிலவி வரும் 17 மணி நேர மின்வெட்டின் புண்ணியத்தில் பைண்டிங் வேலைகள் முழுவதுமாய்த் தேங்கிப் போய் விட்டது ! நான் வேறு சும்மா இருக்காமல், இதழ்களை வெள்ளிக்கிழமை அனுப்பிடலாமென இங்கே காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள, எங்களது பைண்டிங் கான்ட்ராக்டர் தலையில் மொத்தமாய் நமது டீம் ஏறி அமராத குறை தான் !! பாவப்பட்ட மனுஷன் நிறையவே பிரயத்தனப்பட்டு இன்று சந்தாக்களின் 80 % தேவைக்கான இதழ்களைத் தயார் செய்து தந்து விட்டார் !பைண்டிங் மிஷினில் பெவிகால் போன்ற பசையை கட்டியாகப் போட்டு, அதில் உள்ள ஹீட்டரை ஆன் பண்ணி ஒரு 45 நிமிடங்களாவது வெப்பம் ஏறினால் தான் பசை சரியான பதத்தை அடையும். ஆனால் இங்கேயோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ! முக்கால் மணி நேரம் பசை சூடாகி, இதழ்களை மிஷின் ஓட்ட ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் திடுமென நின்று போவதோடு மட்டுமல்லாது அந்தப் பசை முழுவதும் வேஸ்ட்டாகி விடும் ! அந்த நஷ்டத்தை மட்டுமல்லாது, நம் ஆட்களின் நச்சரிப்பையும் சகித்துக் கொண்டு முடிந்தளவிற்கு உதவியுள்ள அவருக்கு நம் நன்றிகள் ! நாளை காலை மிச்சம் மீதமுள்ள சந்தாப் பிரதிகளும் அனுப்பிடப்படும்..! So நமது சூப்பர் நண்பர்களை நீங்கள் சந்திக்கும் சமயம் வெகு அருகாமையில் ! 

Monday, October 08, 2012

குட்டியாய் சில கேள்விகள் !


நண்பர்களே,

வணக்கம். நாளொரு மேனி..பொழுதொரு மின்வெட்டாய், நாட்கள் வண்ணமயமாய்க் கழிந்து வருகின்றன ! இருளின் நிறம் கறுப்பு தானே ; கறுப்பென்பது - மொத்தமாய் அத்தனை வண்ணங்களின் கலவை தானே ;  So அப்படிப் பார்க்கையில் இந்தக் காரிருளும் எங்களுக்கு வண்ணமயமே ! வழக்கமாய் இது போன்ற buildup கொடுத்திடும் போது, "ஆஹா....பஞ்ச் டயலாக் வரும் முன்னே ; இதழ் லேட் ஆகப் போகின்றதென்ற அறிவிப்பு வரும் பின்னே"! என்று நீங்கள் தலையைச் சொறிந்திடுவது இயல்பான reaction ஆக இருந்திடலாம் ! ஆனால் இது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் என்பதாலோ என்னவோ ; எங்களுக்கும் கொஞ்சம் சூப்பர் சக்தி வந்து விட்டது போலும்!! இவ்வாரம் வெள்ளிக்கிழமை பிரதிகள் (12 /அக்டோபர்) தயாராகி; கூரியரைத் தேடிப் புறப்படும் ; hopefully வார இறுதிக்கு உங்களின் பொழுதுகளை ஸ்வாரஸ்யமாக்கிட நம் பால்ய சகாக்கள் உங்களோடு இருப்பார்கள் ! Hope the welcome mat's out already !! தங்கத்தைத் தேடும் முயற்சி கூட (தி.நகரில் அல்ல!!) ஜரூராய் நிறைவை நோக்கிப் பயணமாகிக் கொண்டுள்ளது ! கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" நவம்பர் 2 தேதிக்கே தயாராகி விடும் !   

சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் உங்களை வந்தடையும் இவ்வார இறுதி வரை, இங்கே நம் வலைப்பதிவுப் பக்கத்தில் நித்தமும் "உள்ளேன் அய்யா" போட்டு வரும் உங்களின் பொழுதுகளை சிறிதேனும் interesting ஆக்கிட ; உங்களின் காமிக்ஸ் பொது அறிவை (!!), நினைவாற்றலை கிளறி விட சின்னதாய் ஒரு காமிக்ஸ் trivia quiz !   தீவிர லயன் சேகரிப்பாளர்களுக்கு இது நிச்சயம் சிறுபிள்ளை விளையாட்டாய் இருந்திடுமென்பது உறுதி !! So, here goes :

 1. லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது ?
 2. ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட "இரும்பு ஹீரோ" யார் ?
 3. ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3  பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் ?
 4. ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ?
 5. லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ ?
 6. கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ?
 7. லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ? 
 8. லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ?
 9. "கபாலர் கழகம்" இதழின் நாயகர் யார் ?
 10. லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?
திருவிளையாடல் தருமியைப் போல் அடியேனுக்குக் கேள்விகள் மாத்திரமே அத்துப்படி ! விடைகளை உங்களைப் போலவே நானும் தேடித் தான் பிடித்தாக வேண்டும் !  உங்கள் பதில்களை "லயன் Quiz " என்ற தலைப்பிட்டு, தபாலிலோ ; lioncomics@yahoo.com என்ற நமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடலாமே ! 10 /10 வாங்கிடும் நண்பர்களுக்கு நமது காமிக்ஸ் க்ளாசிக்சின் முதல் இதழ் gift ஆக அனுப்பிடப்படும் !  கூட்டணிகளோ ; பதில்களை பகிர்ந்து எழுதிடுவதோ வேண்டாமே ப்ளீஸ் ! Good luck !