ஏப்ரல் இதழ்களை இப்போது ஆன்லைனிலும் வாங்கிடலாம் ! இங்கே க்ளிக் பண்ணுங்களேன் - ப்ளீஸ் :http://lioncomics.in/monthly-packs/351-april-2017-pack.html |
"பைண்டிங்கிலேர்ந்து புக் ஏத்திட்டு வர ஆட்டோ போயாச்சாப்பா மைதீன் ??
"டெக்ஸ் வில்லர் புக் இப்போ தான் மடிச்சிகிட்டே இருக்காங்க அண்ணாச்சி !"
"இப்போ வரைக்கும் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம் ?? இன்னிக்கு தான் புக் வேணும்னு தெரியும்லே ??"
"அது வந்து நாம நேத்திக்கு ராத்திரிலே தானே பிரிண்டிங்கே முடிச்சு கொடுத்தோம் ! நீங்க கரெக்ஷன் பாத்து கொடுத்ததே நேத்திக்கு சாயந்திரம் தானே ?!"
"ஆங்...ஆமால்லே ? செரி..செரி...எத்தனை மணிக்கு ரெடியாகுமாம் ?"
"12 மணிக்கு வாங்கிடலாம் அண்ணாச்சி ! "
""இந்த மாசத்து இலவச இணைப்பு ரெடியா இருக்குலே ?"
"ம்ம்...வந்து...அது ஒரு மணி நேரத்திலே ரெடியாகிடும் ; ஆனா சின்ன சிக்கல் !"
" ஸ்ஸ்ஸ்...என்ன சிக்கல் ? "
"அது இந்த மாசக் கூரியர் டப்பாக்குள்ளே நுழைய மாட்டேங்குது !!"
"நாசமாப் போச்சு !! அதை எப்படி கவனிக்காமே விட்டீங்க ?"
"அந்த இலவச இணைப்பு என்னான்னு நேத்திக்கு தானே சொன்னீங்க அண்ணாச்சி ; டப்பா போன வாரமே செய்ய குடுத்திட்டோம் !"
"என்னத்தையாச்சும் சொல்லிக்கிட்டே இரு !! இப்போ புதுசா என்ன பண்றது ???"
"'அதையே' ஒண்ணுக்கு ரெண்டா மடிச்சு உள்ளே நுழைச்சுடலாம் !"
"ஐயையோ...சுருக்கு விழுந்திட்டா அசிங்கமா இருக்கும் ! பெரிய சைசுக்கு டப்பா உடனே ஏதாச்சும் கேட்டு பாக்க முடியுமா ?"
"இல்லே அண்ணாச்சி...குறைஞ்சது 3 நாளாச்சும் டயம் கேப்பாங்க !!"
"செரி...டிசைனிங் கோகிலாவை வரச் சொல்லு...!! "இது" தான் புது இணைப்பு ! ஒரே மணி நேரத்திலே ரெடி பண்றோம் ; பின்னாடியே பிராசஸிங் - பிரின்டிங் பண்றோம் ; மதியம் புக் வர்றதுக்குள்ளே "இது" ரெடியாகிடணும் !!"
ரைட்டு...சைத்தான் சைக்கிள்லே வருது-என்ற பீலிங்கோடு நம்மவர்கள் என்னைப் பார்த்துத் தலையாட்ட - தொடர்ந்த 3 மணி நேரங்கள் ஜெமினி சர்க்ஸுக்குப் போட்டியாக ஒரு களேபரத்தை அரங்கேற்றினோம் !!
"ஸ்டெல்லா ... வண்டி போயிடுச்சா - புக்கைத் தூக்க ?"
"வந்துக்கிட்டு இருக்கு சார் !"
"நாளைக்கு பேங்க் லீவு...சம்பளத்துக்கு பணம் டிரா பண்ணுனீங்களா ?"
"இனிமேல் தான் சார் !"
"பிரின்டிங் ரெடி பண்ணியாச்சா மைதீன் ?"
"இதோ ஷீட் உங்க டேபிள்லே இருக்கு !"
"மஞ்சள் இன்னும் கூட்டலாம்பா !! ஏன் அழுது வடியுது ??"
"ஆங் ..இப்போ தேவலை ! செரி..கொஞ்சம் லேசா காய விட்டுட்டு 'கட்' பண்ணுங்க !"
"வாசுகி...ஸ்டெல்லா...எல்லாருமே சீக்கிரமே சாப்ட்டிடுங்க...புக் வந்துட்டா அப்புறம் லேட் ஆகிடும் !"
சில பல மௌன மண்டையாட்டல்கள் !!
"ப்பாத்து.பாத்து...ஜெரெமியா புக்கைத் தனியா இருக்குங்க ! மறுப்பதிப்பை அந்த பக்கமா !!"
நமது வாடிக்கையான ஆட்டோ லோடு டீம் ஓசையின்றி சொன்னதைச் செய்கிறது !
"DTDC லே சொல்லிடீங்களா ? புக் வருதுன்னு ?!"
"சொல்லியாச்சு சார் !"
ST ஹெட் ஆபீஸ் கொண்டு வர சொன்னாங்களா ? பிராஞ்சுக்கா ? "
"ஹெட் ஆபீஸ் தான் சார் !"
"பார்சலுக்கு ரேட் கேட்டாச்சா ?"
"இனிமேல் தான் சார் !"
அலுவலக முன் அறையே கொஞ்ச நேரத்துக்கு சாரா சரக்கும் டேப் ஓட்டும் சத்தத்தோடு நிசப்தமாய்ப் பயணிக்கிறது !!
"கடைசியா வந்த சந்தா லிஸ்டை நாளைக்கு என்கிட்டே காட்டுங்க ; ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறையத் தெரியுது !"
"செரி சார் !"
"SUPER 6 சந்தா-லே ஏதும் மிஸ் ஆகிடாம பாத்துக்கோங்க !"
"பாத்தாச்சு சார் !"
"சென்னை ஆதிமூலகிருஷ்ணன் சாருக்கு "தாய விளையாட்டு" போன மாச பார்சல்லே வைக்காம விட்டுட்டீங்களாம் ! இந்தவாட்டி அதைச் சேர்த்து வைச்சிடுங்க !"
"வைச்சாச்சு சார் !!"
"ஒரு 100 புக் சேர்ந்தாச்சுன்னா ஆட்டோவுக்கு சொல்லி கூரியர்லே கொண்டு போய் சேருங்க ! இங்கேயே பொழுதைக் கடத்திட்டு இருக்காதீங்க !! "
"ஆட்டோ வந்திட்டு இருக்கு அண்ணாச்சி ! இப்போ போய்டும் !"
எப்போது மதியம் கடந்து போனது ? ; எப்போது லேசான தூறல் போட்டது ? எப்போது மாலை புலர்ந்தது ? எப்போது இருள் கவிழ்ந்தது ? எதுவும் நம்மவர்களுக்கு இன்றைய பொழுதினில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் !!
வணக்கம் நண்பர்களே, WELCOME TO YET ANOTHER EPISODE OF DESPATCH DAY MADNESS !!
ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் நான் சூளுரைக்கத் தவறுவதில்லை ! "நாளைக்கே அடுத்த மாச புக்குகளை 'மட மட' ன்னு ரெடி பண்றோம் - 15 -ம் தேதிக்குள்ளாற முடிக்கிறோம் !! ஹாயாக காலாட்டிட்டே அடுத்த மாச டெஸ்பாட்ச் பாக்குறோம் !!" - என்று லூசுப் பயல் போல என்னிடம் நானே ஒப்பித்துக் கொள்வேன் ! ஆனால் ஏதேதோ காரணங்கள் இடையில் தலைதூக்கும் ; பணிகளில் ஏதேனும் ஒரு ஸ்பீட் பிரேக்கர் நிகழும் ; இறுதி வாரத்தில் 'தாண்டுறா ராமா ! அட்றா ராமா ' என்று குட்டிக் கரணங்கள் மட்டுமே போடுவோம் !! அதிலும் இன்றைய கரணம் - ஷப்பா !! பாவம் நம்மவர்கள் !!
காலையில் அரைத்தூக்கத்தில் கண்ணைத் திறக்கும் போதே - "ஆஹா...இன்னிக்கு டெஸ்பாட்ச் தினமாச்சே !!" என்ற அலாரம் தலைக்குள் ஒலித்தது ! திரும்பிப் படுத்து இன்னொரு ரவுண்ட் சொப்பன லோகம் போகும் ஆசையை உதைத்துத் தள்ளி விட்டு ஆபீசுக்கு கிளம்பிய நேரமே மண்டைக்குள் ஒரு பட்சி சொன்னது - இன்றைய பொழுது மறை கழன்ற தினமாக இருக்குமென்று !! நாளைய தினம் உங்கள் கைகளில் புக் இல்லாது போனால் பூமி மாற்றிச் சுற்றப் போவதில்லை தான் ; விராட் கோலியும் - ஆஸ்திரேலிய ஊடகங்களும் 'பாய்-பாய்' ஆகித் தோள்களில் கை போட்டுக் கொள்ளப் போவதுமில்லை தான் !! ஆனால் மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் ஒரு சன்ன திருப்தியும் ; இவ்வார இறுதியை சுவாரஸ்யமாக்கும் வாய்ப்பைத் தவற விட வேண்டாமே என்ற ஆதங்கமுமே என் மண்டைக்குள் ஒரு நட்டுவாக்காலியை நர்த்தனம் ஆடச் செய்துள்ளதென்று நினைக்கிறேன் !! And ஏதோ சஞ்சீவி மலையைத் தோளில் சுமந்துவந்து சாகசம் செய்து விட்ட ஆஞ்சநேயராக எனக்கு நானே பில்டப் தந்து கொள்ளும் முயற்சியல்ல மேற்கண்ட வர்ணனை !! காமிக்ஸ் எனும் பித்தின் காரணமாய் நான் அடிக்கும் பல்டிகளுக்கொரு முகாந்திரமுள்ளது ! ஆனால் - "பென்னியா ?" அது பெஞ்சமினுக்குப் பெரிப்பா பையனா ? "என்று கேட்கும் நம்மவர்களும் இந்தக் குட்டிக் காரணங்களில் எத்தனை ஐக்கியமாகிடுகிறார்கள் ; மௌனமான அவர்களது சுழற்சி இல்லையேல் இந்தப் பயணமே லேது ! என்பதை மீண்டுமொருமுறை சிலாகிக்கவே இந்தப் பதிவு ! Trust me guys - மாதயிறுதியில் என்னிடம் பணியாற்றுபவர்களை ஆண்டவன் தான் ரட்சித்தாக வேண்டும் !! முகம் சுளிக்காது எனது ஒவ்வொரு குரங்குக கூத்துக்கும் ஈடு கொடுக்கும் இந்த டீம் எனது அசாத்திய பலம் !! இதனில் ஒற்றைச் சிறு கண்ணி இல்லாது போனால் கூட நான் எங்கேனும் குப்புறக் கிடப்பேன் என்பது உறுதி !!
Anyways - கூரியர் படலம் 100 % வெற்றி என்பதால் - நாளைய தினம் இதழ்கள் உங்களிடமிருக்கும் !! Happy Reading Folks !!
And தர தரவென்று காலை முதல் ஆபீசில் தரையைச் சுத்தம் செய்து வரும் நாக்காரைச் சன்னம் சன்னமாய்ச் சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படும் முன்பாக - இதோ MMS இதழின் அட்டைப்பட முதல் பார்வை !! ஓவியர் ஹெர்மன் தனது ராப்பர் டிசைனே அட்சர சுத்தமாய்ப் பயன்பாட்டில் இருந்திட வேண்டுமென்று சொல்லியிருந்ததால் - முன் & பின் அவரது டிசைனே - லேசான வர்ண மெருகூட்டலோடு மட்டும் ! வழக்கம் போல hardcover ! வழக்கம் போல ஜிகினா வேலைகள் !! எல்லாம் வழக்கம் போலிருப்பினும், இந்தக் கதைக் களம் ரொம்பவே மாறுபட்டது ! "கவ்பாய் தொடரோ ?" என்ற எண்ணத்தில் அணுகினால் - nopes என்ற பதிலை உணர்வீர்கள் சீக்கிரமே ! "எதிர்காலத்து sci -fi ரகக் கதையோ ?" என்ற எதிர்பார்ப்போடு பக்கங்களைப் புரட்டினால் - கழுதை மேல் சவாரி செய்யும், சவரம் காணா நாயகர்கள் - 'பிம்பிலிக்கா - பிலாக்கி ' சொல்வார்கள் !! " "செரி..ஏதோ ஒரு மெகா plot நோக்கிச் செல்லும் கதையோ ? " என்ற பில்டப்போடு புறப்பட்டால் - அந்தக் கதையோட்டம் உங்களை பார்த்து டாட்டா காட்டும் ஜாலியாக !!
Guys : ஒற்றை வரி advice ! எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி இது !!
Bye all !! See you around !!
P.S : ஏப்ரல் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி !!
P.S : ஏப்ரல் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி !!