நண்பர்களே,
வணக்கம்! புலியும் வந்தாச்சு.. and most importantly - காத்திருக்கும் தந்தையர் தினத்துக்கு ஒரு நாள் முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்கவும் செய்தாச்சு! இனி உங்களுக்காச்சு..Manu Larcenet-ன் ஜாலங்களுக்காச்சு! என்று ஆராமாய் கட்டையை ஒரு நாளுக்காச்சும் கிடத்தத் தயாராகி வருகிறோம்! So இந்தப் பதிவு ரொம்பப் பெருசாகவெல்லாம் இராது! Rather- இந்த மைல்கல் இதழோடு உங்களது selfies; இயன்றால் உங்களது பசங்களுடனான selfies என்று ஜாலியாக வாரயிறுதியினை செலவிடலாமே?
நிஜத்தைச் சொல்வதானால் இந்தப் "பயணம்'' செல்ல நான் விழைந்தது போன வருடம் ஜுன் 15-க்கே...! பிப்ரவரி 2024 வாக்கில் இந்தப் படைப்பு என் கண்ணில் பட, அப்போவே துண்டைப் போட்டு, அப்போவே டிக்கெட்டும் வாங்கி, அப்போவே பயணம் பண்ணும் ஆசை அலையடித்தது! கதையின் subject - ஒரு தந்தை + மகனின் விடியலுக்கான தேடல் என்ற போதே இதனை Father's Day ஸ்பெஷலாகத் திட்டமிட்டாலென்ன? என்ற நினைப்பும் சேர்ந்தே முளைத்திருந்தது! ஆனால், ஐரோப்பியப் புத்தகவிழா circuit மார்ச்சில் துவங்கி ஜுன் வரைக்கும் வரிசைகட்டி அரங்கேறிடுவது வழக்கம் என்பதால் உரிமைகளுக்கான முடிவெடுப்போர் செம பிஸி! ஒருவழியாக அவர்கள் ஆபீஸ் திரும்பிய பிற்பாடு நமக்கு இசைவைச் சொல்லியிருந்த போதே Father's Day 2024 கடந்து சென்றிருந்தது! சரி, ரைட்டு உரிமைகளை வாங்கி விட்டாலும், இதழை வேறெந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடலாகாது என்று அன்னிக்கே தீர்மானித்துக் கொண்டேன்! அதன் நீட்சியே மே 2025-ன் ஆன்லைன் மேளாத் தருணம் & இந்த ஒற்றை இதழை மட்டும் ஜுன் 15-க்கு வெளியிடும் திட்டம்! And here we are....!
இதன் தயாரிப்பிற்குள் இறங்கும் முன்பாகவே "சாம்பலின் சங்கீதம்'' முன்பதிவினையும் அறிவித்திருந்தோம் & அதன் ரிலீஸ் தேதியாக ஆகஸ்ட் 2-ஐ மனதில் fix செய்திருந்தோம்! So "ரெண்டு கனமான கிராபிக் நாவல்கள் மிகக் குறுகிய இடைவெளியிலா? ஆஹா... சமாளிக்க வழி தேடணுமே?" என்ற டர்ர்ர் உட்புகுந்திருந்தது! ஆனால், சாம்பலின் சங்கீதம் நெட்டி வாங்கும் பணியென்பதால் தானாகவே பின்சென்று விட, பயணம் பண்ண ரூட் க்ளியர் ஆனது!
இங்கே பயன்படுத்த வேண்டிய பேப்பரின் தேர்வு தான் நிரம்பவே படுத்தி எடுத்துவிட்டது! பக்கத்துக்குப் பக்கம் எக்கச்சக்க கறுப்பு solids ; டார்க்கான சித்திரங்கள் எனும் போது, வழக்கமான கனத்திலான காகிதத்தில் அச்சிட்டால் பின்புறம் தெரிவதைத் தவிர்க்க இயலாது! So வாயெல்லாம் பேசிவிட்டு, இங்கே செலவைக் குறைக்கும் முனைப்பில் எதையாச்சும் கோணங்கித்தனமாய் செய்து வைத்தால் மொத்தமாய் Bata பிய்ஞ்சு போகும் என்பது புரிந்தது! So ஈரோட்டு மில்லில் ஆரம்பித்து, நெல்லை மில்; புகளூர் மில் என்று அத்தனையிலும் சாம்பிள்ஸ் வாங்கினோம்! க்ளாஸிக் இதழ்களுக்குப் பயன்படுத்திடும் அந்த மஞ்சள் நிறப் பேப்பரையும் வாங்கிப் பார்த்தோம்! அத்தனை பேப்பர்களிலும் பிரிண்ட் போட்டும் பார்த்தால் - ஊஹும், எதுவும் தேறக் காணோம்! இந்தப் பக்கத்து அடர் கறுப்பு, மறு சைடில் ஸ்பஷ்டமாய் அத்தனை ரகங்களிலும் தெரியவே செய்தது! இது என்னடா தமிழகத்துக்கு வந்த சோதனை? என்றபடியே வெளி மாநிலங்களது பேப்பர் மில்களின் சாம்பிள்களையும் சேகரிக்க ஆரம்பித்தோம்!
எண்ட ஸ்டேட் கேரளம்; நா ராஷ்ட்ரம் ஆந்திரா; நன்ன ராஜ்யா கர்னாடகா என்று தேசீய ஒருமைப்பாட்டுச் சின்னமாய் திரிந்த போது தான் - " நிம்ம தேடுற சரக்கு இவிடே உண்டு அன்னைய்யா'' என்றொரு பிரசித்தி பெற்ற மில் அபயக் கரம் நீட்டியது! செம தரமான பேப்பர்; தும்பைப்பூ வெள்ளை என்றில்லாது... மெல்லிய சிகப்புச் சாயலோடு ஒரு வெள்ளை; தொட்டாலே செம டெம்பர் என்று கண்ணில்பட்ட முதல் நொடியிலேயே வசீகரித்தது அந்தப் பேப்பர் ரகம்! நாம் மாமூலாய் பயன்படுத்தும் பேப்பரின் திக்னெஸில் கிட்டத்தட்ட 70% அதிக கனம் கொண்டது என்பதால் வதைத்து வந்த see through இங்கே கிஞ்சித்தும் இருக்கவில்லை! So "கண்டேன் சீதையை''என்று freeze ஆகிய நொடியில் நமது பேங்க் கையிருப்போ, நம்ம விஸ்காம் வாத்தியார் பிரஷாந்தின் புஷ்டியையே ஒத்திருந்தது! மண்டையைச் சொறிந்து நின்ற நொடியில் தான் கனவுலகம் க்ரூப்பின் சார்பில் ஐந்து பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிட புக்ஸ் கொள்முதல் செய்த நண்பர்களின் பணமும்; நமது கையிருப்பில் உள்ள அம்புட்டு புக்ஸிலும் இரண்டு செட் வீதம் அயல்நாட்டுக்கொரு வாசக நண்பர் ஆர்டர் செய்திருந்த பணமும் மிகச் சரியாக வந்து சேர்ந்தன! மறு நாளோ, இன்னொரு வெளிமாநில நண்பர் லக்கி லூக்கின் CINEBOOK கையிருப்பிலிருந்து full set (71 புக்ஸ்)க்கான பணத்தையும் அனுப்பிய நொடியில் என் மண்டை நோவுகள் காற்றில் கரைந்தே போயின!
பரபரபவென பேப்பரை வாங்கிப் போட்டோம்! அட்டைப்படத்தின் நகாசு வேலைகள் ஒருபக்கம் மின்னல் வேகத்தில் அரங்கேறின! பக்கங்களை மறுக்கா மறுக்கா சரிபார்த்த கையோடு மின்னலாய் அச்சுக்குச் சென்றோம்! இம்முறை பிராசஸிங்கிலும் துளி கூட சமரசங்களின்றி the best-க்குச் சென்றோம்! கறுப்பு மசி முதற்கொண்டு இந்தவாட்டி ஜப்பான் வரவு! இவ்விதம் பிரிண்ட் செய்து வந்த முதல் தாள் தான், நான் போன வாரம் பேங்க் வாசலில் நின்றபடியே வாய் பிளக்க ரசித்த சமாச்சாரம்!
And பைண்டிங்கிலும் நமது வாடிக்கையான நண்பரின் பங்களிப்பு மிரட்டலானது! இது ஸ்கூல் நோட்புக் சீஸனின் உச்ச வேளை என்பதால், ஊர் முழுக்க பல இலட்சங்களில் நோட்டுகள் பைண்டிங்கை எதிர்நோக்கிக் குவிந்து கிடக்கின்றன! அவற்றின் மத்தியில் தம்மாத்துண்டு எண்ணிக்கையுடன் நாம் இத்தனை முக்கியமான பணியோடு நின்ற போதும் அவர் முகம் சுளிக்கவில்லை! நமது பணிகளின் தன்மையினையும், நம் சிறுவட்டத்துக்கு இவை எத்தனை மதிப்பு வாய்ந்தவை என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதால் கச்சிதமாய் வியாழன் இரவுக்கு முடித்துத் தந்துவிட்டார்! And வெள்ளியன்று நம்மாட்கள் மின்னல் வேகத்தில் பேக்கிங்கையும் பூர்த்தி செய்தி- இதோ Father's Dayக்கு உங்கள் கைகளில் நம்மாலானதொரு சிறு novelty!
இனி சித்திரங்களினுள்ளும், பயணத்தின் பின்னணியினுள்ளும் நீங்கள் புகுந்திடவுள்ள அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே எங்களது பணியாக இருக்கப் போகிறது! And if initial reactions are anything to go by - இதுவொரு தெறி இதழ் என்பது உறுதி!
இந்த ஆல்பத்துக்கு இந்த சைஸ், மெனக்கெடல் எல்லாம் நல்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு! 2017-ல் இதே Manu Larcenet-ன் "நிஜங்களின் நிசப்தம் " கிராபிக் நாவலையும் வெளியிட்டிருந்தோம் தான் - but truth to tell, அதன் அருமை எனக்கன்று பூரணமாய் புரிந்திருக்கவில்லை! So சுமாரான காகிதம், சுமாரான சைஸ், தயாரிப்பு என்றே வண்டி ஓட்டியிருந்தேன்! அந்த இதழ் செம ஹிட் தான், but உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது - ஒரு பிரமிக்கச் செய்யும் ஜாம்பவானின் படைப்புக்கு உரிய நியாயம் செய்யத் தவறி விட்டோமே என்று! அதை நிவர்த்திக்கவே இன்று இந்த பிரம்மாண்டம்!
More then anything else, எதையேனும் புதுசாய் முயற்சித்து உங்களை அகம் மகிழச் செய்வது தான் என்னை எப்போதுமே இயக்கிடும் பேட்டரி! So அந்த அத்தியாயத்தின் லேட்டஸ்ட் படலமான இந்தப் "பயணம்'' - நமது பயணத்தின் ஒரு ஸ்பெஷல் அங்கமாகிட்டால் ஆந்தையன் ஹேப்பி அண்ணாச்சி!
Now it's back to the drawing board- அடுத்த குட்டிக்கரணம் எந்த மாதிரி அடிக்கலாமென்ற மகா சிந்தனையுடன்!
சர்வ நிச்சயமாய் இதனை மேலிருந்து அப்பா ரசிக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கையுடன் நடையைக் கட்டுகிறேன்!
Happy Father's Day all.... Enjoy the weekend! Bye for now! See you around!
P. S : ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு & already விற்பனைகள் on fire 🔥🔥.. இதுவொரு லிமிடெட் edition என்பதால் முன்பதிவு தவிர்த்து அதிகப் பிரதிகள் கையில் நஹி!
https://lion-muthucomics.com/special-release/1342-payanam.html