நண்பர்களே,
வணக்கம். காட்சி # 1 : நடுக்கூடத்தில் ஊஞ்சல்! புஷ்டியானதொரு செந்தில் சம்மணமிட்டு அந்த ஊஞ்சல் மேல்! அவர் முன்னாலோ ஒரு முக்கால் கிளாஸ் டீ! செந்திலாரின் முகத்திலோ தீவிர சிந்தனை ரேகைகள்! டீயை ஒரு நொடி உற்றுப் பார்க்க...மறு நொடி மோட்டு வளையை நோக்கிப் பார்வைகளை ஓட விட... தொடர்கிறது காட்சி ! காட்சி # 2 : நள்ளிரவைத் தாண்டிய ராப்பொழுது! சுமாரான புஷ்டியில் ஒரு ஆந்தைவிழியன் மாடிக்குப் போகும் ஏணிப்படிகளில்! ஆ.வி.யின் முன்னேயோ ஒரு கத்தைக் காகிதங்கள்! ”2018” என்று போட்டு என்னமோ கீச்சலாய் எழுதியிருக்கும் தாள்களை, கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் கோணங்களிலெல்லாம் டிசைன் டிசைனாய் முறைத்துப் பார்க்க... அப்புறமாய் விட்டத்தை விட்டேந்தியாய் ரசிக்க... ”ஊஹும்...!” என்று மண்டையை ஆட்டிவிட்டு, பரபரவென்று அந்தக் காகிதத்தின் மேலே எதையோ அடித்துத் திருத்தி எழுத, ஆந்தைகளே அடங்கும் நேரம் வரைக்கும் தொடர்கிறது காட்சி!
முந்தையது ‘ஜென்டில்மேன்‘ திரைப்படத்திலிருந்து நமது ஆதர்ஷ கவுண்டரும், செந்திலும் பின்னியெடுத்த காமெடிக் காட்சியின் இரவல் எனில் – பிந்தையது கடந்த சில பின்னிரவுகளில் எங்கள் வீட்டில் அரங்கேறி வரும் காட்சி! As usual – it’s “that” time of the year guys! 2018-ன் அட்டவணைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் தான் வீட்டின் மூலை முடுக்குகளிலும், ரயில் நிலைய பெஞ்சுகளிலும், சிக்கும் பேப்பர்களையெல்லாம் எதையாவது எழுதி பார்ப்பதில் செலவிட்டு, அப்புறம் பந்து பந்தாய்ப் அவற்றைக் கசக்கித் தூக்கியெறிந்து புதுசு புதுசாய் "கூட்டணிக் கோட்பாடுகளை" முயற்சித்து வருகிறேன்! தலீவருக்குப் போட்டியாக பேப்பரைச் செலவிடும் இந்தப் பொழுதுகளின் முடிவில் கையிலொரு திட்டமிடல், இறுதியாக, அழகாய் தயாராக நின்ற போது நமது லியனார்டோ தாத்தாவின் முகத்தில் தெரியும் ஒளிவட்டம் மிளிர்வது போலொரு பீலிங் உள்ளுக்குள்! Of course – இது ரொம்பவே சீக்கிரம் அந்த அட்டவணையை உங்களோடு பகிர்ந்து கொள்ளவதற்கு ; ஆனால் நிச்சயமாய் 2018-ன் timetable ஒவ்வொரு ரசனை அணிக்கும் முகத்திலொரு புன்னகையை மலரச் செய்யுமென்ற நம்பிக்கை நிரம்பி வழிகிறது எனக்குள்! கொஞ்சமே கொஞ்சமான இறுதி டிங்கரிங்குகள் மட்டும் செய்திடுவதற்கு உங்களது அபிப்பிராயங்களை இரவல் வாங்கிடுவது நலமென்று நினைத்தேன்! So அதுவே இந்த ஞாயிறின் படலம்!
* நடப்பாண்டின் சந்தா A-வின் ஹைலைட்களே சிலபல புதுவரவுகள் தானென்பதில் நிச்சயம் சந்தேகம் லேது! ட்யுராங்கோ; Lady S என்ற இரு புத்தம்புது இறக்குமதிகள் + ‘ஜேசன் ப்ரைஸ்‘ எனும் சற்றே புது வரவு (இவரது துவக்க சாகஸம் 2016-ல் அல்லவா?) இணைந்திட்ட போது சந்தா A-வின் மெருகு ஒரு படி தூக்கலாய் எனக்குத் தோன்றியது! Of course – பழைய பரீட்சைப் பேப்பர்களை வாங்கி பைண்டிங் செய்து, அதன் மீது ‘லயன் காமிக்ஸ்‘ என்று போட்டு வைத்தாலே அதை எனக்கு ரசிக்கத் தோன்றும் தான்; எந்தக் காக்காய் தன் குஞ்சை ‘கறுப்பா‘ என்று முத்திரை குத்தியிருக்கிறது? ஆகையால் என் பார்வையைத் தாண்டியதொரு கருத்துப் பகிரலும் இங்கு பிரயோஜனப்படுமென்று நினைத்தேன்! My question is: ஏற்கனவே ஒரு மினி கல்யாண வீட்டுப் பந்தி அளவிற்கு நாயகர்களும், நாயகியரும் நம் அணிவகுப்பில் முண்டிக் கொண்டு நிற்கும் போது – மேற்கொண்டு புது நாயக / நாயகியருக்கு சொற்ப காலத்திற்காவது no entry போடல் அவசியம் என்பீர்களா? அல்லது புதுசுகளே சுவாரஸ்யங்களை எகிறச் செய்திடும் காரணிகள் என்று கைதூக்குவீர்களா? நிதானமாய் சிந்தித்து உங்கள் பதில்கள் ப்ளீஸ்?
* ‘ஜேசன் ப்ரைஸ்‘ - வந்தார் ; வென்றார்! காதில் கொஞ்சமல்ல, ஒரு லோடு மலர்களை பட்டுவாடா செய்து விட்டுப் போயிருந்தாலுமே, இவர் எழுப்பிய தாக்கத்தின் அதிர்வலைகள் சமீப நாட்களுள் ஒரு செம ஸ்பெஷல் ரகமென்பேன்! அவரது கதைத் தொடரில், அந்த 3 ஆல்பங்களைத் தாண்டி புதுசாய் சரக்கு ஏதும் கிடையாதென்பதால் – அவரது தொகுதியில் ஆட்டோமேடிக்காக இடைத்தேர்தல் நடத்தும் அத்தியாவசியம் எழுகிறது! ஏற்கனவே கரை வேட்டி கட்டி நம்மோடு கைகோர்த்து உலவி வரும் நாயகர் யாரையேனும் இந்தக் காலி slot-க்குப் பரிந்துரைப்பீர்களா? அல்லது கட்டாயமாய் இன்னொரு புது வரவுக்கேவா ? புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? அல்லது அந்த fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா? A straight swap (or) anything that’s good ?
* சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ? Please : ”வேதாளர்”; ”ரிப் கிர்பி”; ”காரிகன்” போன்ற பதில்கள் தற்போதைக்கு பாடத்திட்டத்திலேயே கிடையாது! அதனால் பார்வைகளை / சிந்தனைகளை கொஞ்சம் விசாலமாய் வீசியொரு சுவாரஸ்யமான பதில் தந்திடுங்களேன் – ப்ளீஸ்?
* சந்தா B: காத்திருப்பது Tex-ன் 70-வது ஆண்டு என்பதால் இதற்கென கௌபாய் ஆர்வலர்களிடம் நிறைய யோசனைகள் இருக்கலாம் தான்! காத்திருக்கும் ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது இது பற்றிப் பேசிடலாம் என்பதால் இப்போதைக்கு அந்தக் கேள்வியை மனதுக்குள் மாத்திரம் அசைபோடச் சொல்லி கோரிக்கையை முன்வைக்கிறேன் guys! ‘ஆயிரம் ரூபாய்க்கு ஒரே புக்; ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்‘ என்ற ரீதியிலான டெரர் பரிந்துரைகளின்றி – யதார்த்தத்தை ஒட்டிய திட்டமிடல்கள் பக்கமாய் சிந்தனைக் குதிரைகளை அனுப்புவோமே?
* சந்தா C – எனது favorite சந்தா ரகம் இதுவே என்பதில் சந்தேகமில்லை! ஆனால் இன்னமுமே இதுவொரு சகல தரப்பின் thumbsup பெற்ற universal ரசனையாக உருப்பெற்றிருக்கவில்லை தான்! So 2018-ல் சந்தா C வழமை போலத் தொடரும் ; ஆனால் கட்டாயச் சந்தாவாக இருந்திடாது! பிடித்தாலும், பிடிக்காது போனாலும் – கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது ! அதே பிழையை இம்முறையும் செய்திட வேண்டாமென்று தீர்மானித்துள்ளேன்! ‘படித்தால் மகிழ்வோம்; பிடித்துப் படித்தால் ரொம்பவே மகிழ்வோம்; ஆனால் திணிக்க மாட்டோம்‘ என்பதே இனி நம் சிந்தனையாக இருந்திடும்! இந்தக் கார்ட்டூன் சந்தாவில் எனக்கான கேள்விகள் சில on the fence பார்ட்டிகள் சார்ந்தது!
* முதல் கேள்வி : நீலப் பொடியர்கள் ஸ்மர்ஃப்ஸ் சார்ந்தது! “அற்புதமானதொரு படைப்பு; எனக்குமே அப்படியொரு அழகான உலகிற்குள் போய் வந்த உணர்வு ஒவ்வொரு ஸ்மர்ஃப் கதையிலும் கிடைக்கிறது!” என்று சொல்லியுள்ள நண்பர்கள் கணிசம். அதே மூச்சில் – “ஏனோ சொல்லத் தெரியவில்லை; ஆனால் என்னால் இந்தத் தொடரோடு ஒன்றிட முடியவில்லையே?” என்ற மண்டைச் சொரிதல் சகித சம்பாஷணைகளுக்கும் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்! கார்ட்டூன் சந்தாவின் ஒவ்வொரு பக்கமுமே உங்களுக்குப் பிசிறில்லா மகிழ்வைத் தந்திட வேண்டுமென விரும்புபவன் நான்; So அந்தச் சந்தாவில் இப்போதொரு முக்கிய அங்கமாய் இருந்து வரும் இந்தப் பொடியர் பட்டாளத்தைத் தொடரும் நாட்களில் நாம் எவ்விதம் கையாள்வது என்பதிலொரு ஊர்ஜிதம் இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்! பொடியர்கள் – இதே போல தொடரலாமா? அல்லது சற்றே slot-களைக் குறைவு பண்ணிட அவசியமாகுமா?
* உப கேள்வி # 2 : மேலேயுள்ள வரிகளை அட்சர சுத்தமாய் நகல் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீலப்பொடியர்கள் “ஸ்மர்ஃப்” என்ற இடத்தில் “ரின்டின்கேன்” என்று மட்டும் மாற்றிக் கொள்ளுங்களேன்? இந்த 4 கால் ஞானசூன்யம் பலருக்கு வெல்லம் கலந்த செல்லம்; சிலருக்கு ‘ஙே‘ ரகம் என்பது இந்தாண்டினில் நமக்கு வந்துள்ள விமர்சனங்களும், மின்னஞ்சல்களும் சொல்லும் சேதி ! ஒரு இலக்கில்லாது slapstick காமெடி போல் இந்தத் தொடருள்ளது என்பதே இது தொடர்பாய் வந்துள்ள புகார்களின் சாராம்சம் ! "நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ;அடுத்த தலைமுறைக்கு" என நான் நிறைய பில்டப் தரலாம் தான் ; ஆனால் நாளின் இறுதியில், காசு போட்டுப் புத்தகம் வாங்கும் நபருக்கு அந்தப் படைப்பு ஒரு நிறைவைத் தந்தாகவும் வேண்டும் தானே ? So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்?
* சந்தா D பற்றிப் புதிதாய் என்ன கேட்கப் போகிறேன் - இந்த பால்யத்து நினைவுச் சின்னங்கள் சற்றே சுவாரஸ்யமாகத் தொடர்ந்திட ஏதாவது உபாயங்கள் மனதில் உள்ளனவா என்பதைத் தாண்டி ? சில காலமாகவே என் மனதில் இருப்பது - மும்மூர்த்திகள் கதைகளுக்கு fresh ஆகவொரு மொழியாக்கத்தை வழங்குவதே - என்பதில் ரகசியமில்லை தான் ! நண்பர்கள் அணி பொறுப்பேற்றுக் கொள்வதாயிருப்பின் I am game for it ! ஆனால் “முதல் தமிழ் மாநாடு நடந்த வருஷத்தில், நான் வாசித்த மும்மூர்த்திகளின் கதையினில் முனையளவு மாற்றம் இருந்தாலுமே முகச்சுளிப்பே மிஞ்சும்” என்றொரு நிலை அதற்கு பலனாகிடக் கூடாதென்பதே எனது அவா! அந்நாட்களது கதைகளுள் ஆரம்பத்து batch-ன் தமிழாக்கம் – அப்புசாமித் தாத்தாவைச் சீடை சாப்பிடச் சொன்னது போன்ற சங்கடத்தை இன்றைக்கு ஏற்படுத்துவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! “Nostalgia” என்றதொரு கூலிங் கிளாஸ் மட்டும் இல்லாமல் இன்றைய ரசனை அளவுகோல்களில், அன்றைய வரிகளை ஆழத்தியெடுத்தால் – விளைவுகள் செம ரகளையாக இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை! எனது கவலையெல்லாம் அந்தக் கண்ணாடி இல்லாது முதல் தடவையாக இந்தக் கதைகளை வாசிக்கும் ஒரு இன்றைய யுகத்து வாசகர் – ”இதென்னடா சாமி பாணி?” என்று மிரண்டு விடக் கூடாதென்பதே! ”சிறைப்பறவைகள்”; ”தங்கவிரல் மர்மம்” போன்ற 1975 / 76 + ஆண்டுகளில் வெளிவந்த கதைகளுள் நமது கருணையானந்தம் அவர்களின் பணிகளும் ஒரு அங்கம் வகிப்பதால் அவற்றை நோண்டிப் பார்க்க அவசியமிராது! அவற்றிற்கு முன்பான ஆண்டுகளில் வெளிவந்த சுமாரான எழுத்து நடைகளை செப்பனிட முனைவோமா ? What say guys? புதிதாய் ஒரு நடையை 2018-க்கு நடைமுறையாக்கிப் பார்க்கலாமா? ‘Yes’ எனில் அந்தப் பொறுப்பை ஏற்க யாரெல்லாம் தயார் என்றும் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ்?
சந்தா E முளைத்தே மூன்று இலைகள் இன்னமும் விட்டிருக்கவில்லை என்பதாலும்; “சூப்பர் 6” பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து முடித்தும் விட்டோம் என்பதாலும் – அந்த 2 பிரிவுகள் பற்றிய வினாக்கள் ஏதுமிருக்கப் போவதில்லை! - at least for now ! ஆகையால் current affairs பக்கமாய் பார்வைகளைத் திருப்பிடலாம்! ஆகஸ்டின் இதழ்களுள் கலரில் ரகளை பண்ணக் காத்திருக்கும் இறுதி இதழ் பற்றிய அறிமுகம் இனி !
டைலன் டாக்கின் ”இது கொலையுதிர் காலம்” தான் உங்களை சந்தா B-ன் சார்பாய் இம்மாதம் சந்திக்கவிருக்கும் இதழ்! And இதோ – அதன் அட்டைப்பட முதல் பார்வை!
ஒரிஜினலே செம டெரராய் அமைந்திடும் போது அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியமே எழாது போய்விடுகிறது! So முன் + பின் அட்டைகளுமே ஒரிஜினல்களின் உபயமே! And உட்பக்கங்களும் நமது இந்தக் கறுப்பு + சிகப்பு உடுப்புக்காரரின் சாகஸத்தில் ஜகஜ்ஜோதியாக டாலடிக்கின்றன! வழக்கமாய் டைலன் கதைகளில் பத்தி பத்தியாய் பேசும் sequences நிறைய இருந்திடும்; ஆனால் இம்முறையோ ஆரம்ப பக்கத்தில் தொட்டுப் பார்க்கும் டாப் கியர் கடைசிப் பக்கம் வரையிலும் இம்மி கீழறங்குவதாகயில்லை! தலைதெறிக்கும் (மெய்யாலுமே தலைகள் தெறிக்கின்றன சாமி – கதையினில்!!) வேகத்திலான இந்த சாகஸத்தின் பின்னணியில் ஒரு சின்ன குளறுபடியின் கதையும் உள்ளது! சென்றாண்டு நாம் வெளியிட்ட டைலன் டாக் சாகஸத்தின் பெயர் KILLERS என்று பொருள்படும். இப்போது வெளியாகவுள்ள “இது கொலையுதிர் காலம்” – ”KILLER” என்று பொருள் தரக்கூடிய தலைப்பைக் கொண்டது. 2015 -ன் இறுதியினில் நான் ஆர்டர் செய்ய நினைத்திருந்தது “KILLERS” என்ற (சென்றாண்டின்) சாகஸத்தையே! ஆனால் அனுப்பிய மின்னஞ்சலில் ஒரு ‘S’-ஐ விழுங்கி விட்டேன் போலும் – ‘KILLER’ என்ற இப்போதைய கதையின் டிஜிட்டல் .ஃபைல்களைத் தூக்கி அனுப்பி விட்டார்கள்! எங்களிடம் மொழிபெயர்க்கப்பட்டிருந்த கதை வேறு; வந்திருக்கும் ஃபைல்கள் வேறாக உள்ளதே என்று மண்டையைச் சொரிந்து கொண்டே ஆராய்ச்சி செய்த போது தான் விபரம் புரிந்தது. So கில்லர்ஸ் & கில்லர் அடுத்தடுத்த “டை.டா.” சாகஸங்களாகிப் போன கதையிது தான்! And அதற்குள்ளாகவே இத்தாலியிலிருந்து “டை.டா” ரசிகர்களிடமிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கி விட்டன இம்மாத வெளியீட்டுக்கு!
புது இதழ்கள் மூன்றும் திங்கள் இரவு தயாராகி விடும்; செவ்வாய் காலையில் (August 1) உங்களைத் தேடிப் புறப்படும்! ”டைலன் டாக்” இதழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கடைசி நிமிட ரிப்பேர் பணித் தாமதமே இந்த ஒற்றை நாள் தாமதத்துக்குப் பொறுப்பு! புதியதொரு மொழிபெயர்ப்பாளர் இதனில் பணி செய்திருந்தார் & வழக்கம் போல துவக்கத்தில் நெருடல்கள் தோன்றிடவில்லை என்பதால் இதனில் ரொம்ப பேன் பார்க்கத் தேவைப்படாது என்ற நம்பிக்கையில் “இரத்தக் கோட்டை” பணிகளுக்குள் ஆழ்ந்திருந்தேன்! ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக “இது கொலையுதிர் காலம்” பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது – குண்டும், குழியுமான சாலையில் சவாரி போனது போல் தோன்றியது. இங்கே திருத்தம்; அங்கே ரிப்பேர் என்று ஆரம்பிக்க – ‘முழுசாய் மாற்றி எழுதிப் போவது இதை விட சுலபம்‘ என்று ஒரு கட்டத்தில் மனதுக்குப் பட, வெள்ளியிரவு தான் அது சார்ந்த பணி நிறைவுற்றன! ‘விடாதே... போட்டுத் தாக்கு‘ என்று நேற்று பிராசஸிங் & அச்சு வேலைகளை செய்யத் தொடங்கினோம். இந்தப் பதிவை நான் டைப் செய்யும் சனி நள்ளிரவுக்கு ஆபீசில் டைலன் டாக் அச்சுப் பணிகள் பரபரப்பாய் ஓடியவண்ணம் உள்ளன ! So செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு!
No சிம்ரன் ; only புஷ்டிகா !! - என்ற கோஷத்தோடு இந்தக் கவர்களை உசிலைமணியாய் பரிணாம வளர்ச்சி கொண்டு பார்த்திட விரும்பும் பட்சத்தில், வாரயிறுதி வரைக் காத்திருந்து “இரத்தக் கோட்டை” இதழையும் இந்தக் கூரியருக்குள் நுழைத்திடல் வேண்டும் ! அவ்விதம் திட்டமிடுவதாயின், வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) பார்சல்கள் புறப்பட்டாக வேண்டும் ! எவ்விதம் செய்யலாமென்று தீர்மானிப்பது உங்கள் choice folks!
அப்புறம் பணிகள் முடிந்த கையோடு - "சலோ ஈரோடு" என்ற ஏற்பாடுகளுக்குள் தலைநுழைக்கக் காத்திருக்கிறேன் ! As usual - அதே பரபரப்பு உங்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை எண்ணி ! அதே வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதோ விதங்களில் நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆதங்கமும் !! அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமாவது கால் சராய்க்கு மேலாக ஜட்டியையும். ; மேஜை விரிப்பை முதுகிலும் கட்டிக்க கொள்ள முடிந்தால் தேவலாம் என்று பட்டது !! மீண்டும் சந்திப்போம்! அது வரை have an awesome Sunday!
P.S : கோவை புத்தக விழாவின் கடைசி நாளின்று !!நமது ஸ்டால் நம்பர் 202 க்கு மறவாது ஒரு விசிட் அடித்திடலாமே ?