நண்பர்களே,
வணக்கம். கிருஸ்துமஸும் கடந்து போயாச்சு…! புத்தாண்டு எட்டித் தொடும் அண்மையில் மினுமினுக்கிறது! And இதோ the year in review பதிவு தனது இறுதிப் பாகத்தை நோக்கிப் பயணமாகிறது :
ஜுலையில் ஆண்டுமலர் & Co. அழகாய் நிறைவுற – மாமூலாய் நாம் எதிர்பார்ப்பதோ ஈரோட்டுப் புத்தக விழாவினையும், நமது வாசக சந்திப்பு மேளாவையுமே! ஒவ்வொரு ஆண்டின் ஜனவரியை சென்னை நமக்கு நினைவில் இருத்திட உதவிடுமெனில், ஆகஸ்டையும், அந்த அதகள சந்தோஷங்களையும் குத்தகைக்கு எடுத்து நிற்பது ஈரோடே! ஆனால் இம்முறையோ அதற்குத் துளியும் வாய்ப்பின்றிப் போக, ‘பழைய நெனப்புடா பேராண்டி!‘ என்றபடிக்கு முந்தைய ஈரோட்டு விழாக்களின் போட்டோக்களைப் போட்டு ஒரு பதிவுப் பெருமூச்சிட மட்டுமே சாத்தியப்பட்டது இம்முறை! விழாவோ - இல்லியோ; நமது மாதாந்திர காமிக்ஸ் கேரவனின் சக்கரங்கள் சுழன்றாக வேண்டுமல்லவா?
So ஆகஸ்ட் மாதத்தனில் பயணம் தொடர்ந்த போது அதிரடி காட்டிய முதல் ஆசாமி நமது மறதிக்கார XIII தான்! இரத்தப்படல இரண்டாம் சுற்று - மேப்ளவர்; ஜுன்ப்ளவர் என்று வரலாற்றுப் பின்னல்களோடு ‘சல சல‘வெனத் துவங்கியிருப்பதாய் ஆல்பங்கள் # 20 முதல் 25 வரை எனக்குப்பட்டது! (May be உங்களில் பலருக்கும் / சிலருக்கும்?) உள்ளதைச் சொல்வதானால் ரொம்பவே சோர்வாகத் தானிருந்தது இந்த மெது ஓட்டத்தின் காரணமாய் ! So 2132 மீட்டர் இதழை வேலைக்கு எடுத்த போது கணிசமான தயக்கம் உள்ளிருந்தது! ஆனால் பதுங்கியதெல்லாம் சூறாவளியாய்ப் பாய்ந்திடத் தான் என்பதைக் கதாசிரியர் அதிரடியாய்க் காட்டிய போது ‘ஜில்‘லென்றிருந்தது! நிறையவே மெனக்கெட அவசியப்பட்ட இதழே இது; ஆனாலும் செமத்தியான நிறைவைத் தந்த இதழ்! சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஜெட் வேக அத்தியாயத்தை வேறொரு லெவலுக்கு இட்டுச் செல்ல – எனது ரேட்டிங் 9.5/10.
மாதத்தின் அடுத்த surprise இத்தாலிய முகமூடியாரின் உபயத்தில்! பெரிய சைஸ் ஓ.கே… அழகான அட்டைப்படம் டபுள் ஓ.கே… ஆனால் கதையின் அழுத்தம் மிதமே என்ற முத்திரையோடு ஆண்டில் இரண்டாம் முறையாக டயபாலிக் களமிறங்கிய போது எனது எதிர்பார்ப்பு மீட்டர்கள் ரொம்பவே தணிந்தே இருந்தன! ஆனால் pleasant surprise – கதையின் சித்திர பாணி மாத்திரமின்றி, ஓட்டமும் சுவாரஸ்யமாயிருக்க – ஒரு சன்னமான ஹிட்டடித்தது “துரோகம் ஒரு தொடர்கதை” எனது மார்க்: 8/10.
ஆகஸ்டின் ஒரு அலசல் களமாக உருப்பெற்ற கிராபிக் நாவலான “பனியில் ஒரு குருதிப்புனல்” நடப்பாண்டின் ஒரு memorable moment – என்னளவிற்காவது! ரொம்பவே புதிதானதொரு கதைக்களம்; சித்திர பாணி; கலரிங் பாணி என்று லயிக்கச் செய்தது ஒரு பக்கமெனில், ஏகப்பட்ட open ends கொண்ட அந்த க்ளைமேக்ஸ் ரொம்பவே கவனத்தைக் கோரியது. Of course – என்ன இழவு கதையோ? புண்ணாக்கோ? என்று நிறைய நண்பர்களின் சலிப்புகளை இது ஈட்டக்கூடுமென்பது புரிந்தது தான்; ஆனால் எனது குரங்கு பல்டிகளுக்கென பிரத்யேகமாய் வாய்த்திருக்கும் அந்த கிராபிக் நாவல் சந்தாவினில் இதை நுழைக்கும் அவாவை அடக்கிட முடியவில்லை! எக்கச்சக்கமாய் கூகுள் தேடல்களோடே இந்த ஆல்பத்துக்குப் பேனா பிடித்ததும் சரி; தொடர்ந்த நாட்களில் நாமெல்லாம் அலசியதும் சரி, 2020ன் ஞாபகத்தில் நின்ற நொடிகள்! 8/10 என் டயரியில்!
ஆகஸ்டின் இதழ் # 4 ஆக அமைந்தது நவீனயுக ஜேம்ஸ் பாண்ட் 007-ன் “நில்…கவனி…கொல்”! இன்றைய உலகிற்கு; இன்றைய டெக்னாலஜிக்கு ரொம்பவே ஒத்துப் போகும் விதமாய் ஜப்பானின் பின்புலத்தில் தடதடத்த .இந்த ஆல்பம் நான் மார்க் போட்டுத் தானா தேறப் போகிறது? Was a smash hit!
செபடம்பரிலும் 4 .இதழ்கள் தலைகாட்டின – அண்ணாத்தே ஆர்ச்சியின் முழுவண்ண; விலையில்லா இதழின் உபயத்தில்! MAXI சைஸில், கலரில் ஒரு லோடு புய்ப்பங்களை நமது சட்டித்தலையன் சூட்டி விட்டிருந்தாலும் – அந்த வண்ண visual treat; நமது பால்யத்து நினைவுகள் – என பல சமாச்சாரங்கள் கரம் கோர்த்து ஜிலோவென்று தூக்கி விட்டன இந்த இதழை! ஜாம்பவான்களுக்கு ரேட்டிங்க்ஸ் பண்ண முனைவது மதியீனமே என்பதால் சட்டித்த ‘தல‘க்கு ஒரு பெரிய ‘ஓ‘ மட்டும் போட்டு வைக்கிறேன்!
செப்டம்பரின் class act – கௌபாய் ‘தல‘ டெக்ஸின் “பந்தம் தேடிய பயணம்” தான்! இந்தக் கதையைத் தேர்வு செய்யும் சமயமே, இது பட்டையைக் கிளப்பிடும் என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருந்திடவில்லை! இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் ‘தல‘ & வெள்ளிமுடியார் second fiddle வாசிக்க நேரிடும் என்பதையோ – அந்தப் பெண்களே ஒளிவட்டத்தை முழுமையாய் தமதாக்கிக் கொள்வர் என்பதையோ நான் எதிர்பார்த்தே இருக்கவில்லை தான்! நடப்பாண்டில் இன்னொரு டெக்ஸ் ரகளை & one for the ages too! ஸ்பஷ்டமாய் 9/10.
செப்டம்பரில் MAXI சைஸின் லக்கி லூக் – ”பிசாசுப் பண்ணை” சிறுகதைகளின் தொகுப்பாய்த் தலைகாட்டியிருந்தது! தயாரிப்புத் தரம்; அந்தப் பெரிய சைஸ் என்று எல்லாமே அம்சமாக அமைந்திருந்தாலும் கதைகளில் வலு ரொம்பவே சுமாராக இருந்ததைக் கவனிக்காது இருக்க முடியவில்லை! அந்நாட்களில் இவற்றை வெகு சுமாரான தயாரிப்புத் தரங்களிலுமே நாம் ரசித்திருப்பதை நினைத்துப் பார்க்கும் போது பேந்தப் பேந்த முழித்தபடியே 5/10 தான் போடத் தோன்றுகிறது!
ஜம்போவின் சார்பில் களமிறங்கிய “தனித்திரு. தணிந்திரு” மறுபடியுமொரு அழுத்தமான வாசிப்புக்கு வழிசெய்திருந்தது! நிஜத்தைச் சொல்வதானால் அந்த முதியவர் ஆண்டர்சனின் பார்வையில் கதையோடு ஒன்றிட நமக்கு சாத்தியப்பட்டாலொழிய ‘ஙே‘ என்று முழிக்க மட்டுமே செய்திருக்கலாம்! பெருசாய் கதை என்று இங்கே எதுவும் கிடையாதெனும் போது அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளே; நிறவெறியின் பரிமாணங்களே ஆல்பம் முழுக்க வியாபித்திருப்பதை உள்வாங்கிட இயன்றிருந்தால் மட்டுமே இது ரசித்திருக்கும்! And உங்களின் பாராட்டுக்கள் அந்த சேதியைக் கச்சிதமாய்ச் சொல்லின! 8/10.
அக்டோபரும் புலர்ந்த போது நமது ஆன்லைன் புத்தகவிழா மாதத்தை ஆச்சர்யமூட்டும் அழகோடு துவக்கித் தந்தது! நான்கே நாட்கள்; நம் ஆபீஸ் மாடியில்; நம்மவர்களோடு எனும் போது – பெருசாய் எந்த எதிர்பார்ப்புகளும் இருந்திருக்கவில்லை! ஆனால் அந்த நாலு நாட்களையுமே ஒரு மினி திருவிழாவாய் மாற்றித் தந்து ஒரு மித நகரத்துப் புத்தகவிழாவின் விற்பனை எண்ணிக்கையை கண்ணில் காட்டின பெருமை உங்களையே சேரும்!
அக்டோபரின் ரிப்போர்டர் ஜானி டபுள் ஆல்பம் – again பணியாற்றும் போதும் சரி, உங்கள் அலசல்களின் போதும் சரி, செம சுவாரஸ்யங்களை உருவாக்கியதொரு இதழாக அமைந்தது! ஜானி 2.0 எனக்கு பிரமாதமாகவும், க்ளாசிக் ஜானி சுமாராகவும் தென்பட – உங்கள் தீர்ப்புகளோ உல்டாவாக இருந்தது. எது எப்படியோ மொக்கை போடாத இதழ் என்ற திருப்தியோடு 7.5/10 போடுகிறேன்!
கிராபிக் நாவல் தடத்தின் களம் கண்ட XIII spin off இந்தாண்டின் தெளிவான இதழ்களுள் இடம்பிடித்தது இன்னொரு சந்தோஷ நிகழ்வு! கடைசியாக வெளியான ஸ்பின்-ஆப்கள் எவையுமே பெருசாய் சோபித்திருக்கா நிலையில் “சதியின் மதி” தெளிந்த நீரோடையென பயணித்ததில் எனக்கு நிரம்ப நிம்மதி! வழிநெடுக ஏகமாய் கூகுள் ஆராய்ச்சிகள் அவசியப்பட்டாலும், அந்த மெனக்கெடல்களின் பலனாய் இதழ் குழப்பமின்றி அமைந்தது மட்டுமன்றி நானுமே ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றறிந்த திருப்தியும் கிட்டியது! In fact நடப்பாண்டின் பல தருணங்களில் நான் கற்றுக் கொள்ள நேரிட்ட சமாச்சாரங்கள் முன்னெப்போதையும் விட ஜாஸ்தி! நெப்போலிய ரஷ்ய தோல்விகள் பற்றியோ; ஒரேகானின் மரணப் பாதைகள் பற்றியோ; அமெரிக்கத் தேர்தல் அரசியல்கள் பற்றியோ; செச்சன்ய-ரஷ்ய பகைகள் பற்றியோ இந்த வயசில் நான் படிக்க முகாந்திரங்கள் எங்கிருந்து எழப் போகின்றன? So ஜாலியான பணிகளோடே, சிலபல புதுப் பாடங்களும் கற்கச் சாத்தியங்களைத் தந்த “சதியின் மதிக்கு” 8/10.
அக்டோபரின் இன்னொரு ஆசானாய் அமைந்த இதழ் – ஜம்போவின் “மா…துஜே…சலாம்!” முற்றிலும் மாறுபட்ட ரஷ்ய-செச்சன்ய யுத்த பூமி… ஒரு கார்ட்டூன் ஸ்டைலிலான பாட்டிம்மா… ப்ளஸ் ஒரு புள்ளைத்தாச்சி – என்ற கதை மாந்தர்களோடு 96 பக்கங்களுக்கு நம்மைக் கட்டுண்டு வைத்திருந்த அந்த வாசிப்பு அனுபவம் நம்மளவிற்குப் புதியது தானே! வித்தியாசமான சித்திர பாணிகள்… நிறைய வரலாற்றுத் தகவல்கள்… அதே சமயம் அலுப்பூட்டாத கதை நகற்றல் என்று பயணித்த இந்த ஆல்பத்துக்கு எனது தரப்பில் 9/10. Oh yes – இது ரொம்போ ஓவர் என்று எண்ணிடும் நண்பர்களும் நிறையவே இருப்பர் என்பதில் ஐயங்களில்லை; ஆனால் இங்கே டவர் சித்தே வீக்கா இருப்பதால் அடுத்த டாபிக்குக்குத் தாவுறேன்… ஓவர்… ஓவர்…. ஓவர்!
அக்டோபரின் புத்தக விழா ஸ்பெஷலாய் வெளியான “தலைவாங்கிக் குரங்கு” அந்த MAXI சைஸுக்கென வாங்கிய தர்ம அடிகளின் மகிமையால் ‘பளிச்‘சென்று நினைவில் நிற்கும் இதழ்! இதனை இத்தாலியில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பியிருப்பது வேறு கதை; உள்ளூரிலோ ‘நான் எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா?‘ என்ற கேள்விகளே பிரதானப்பட்டு நிற்பதால் இனிமேற்கொண்டு ஈக்களை அதே பாணிகளில் அடிப்பதென்ற தீர்மானத்துக்குத் திடமாய் வந்து விட்டேன்! Old habits die hard என்பது நம்மட்டிற்காவது வேதவாக்கே என்பதால் மாற்றமின்மைகளே மாறாததாய் இருந்திடும! And மறுபதிப்பே எனும் போது மார்க் போட மெனக்கெடுவானேன்?
ஸ்பெஷல் # 2 ஆக வந்த ”நேற்றைய நகரம்” சில ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் மொத்துவீர்களோ என்ற பீதியில் பீரோவுக்குள் பதுங்கிப் போனதொரு இதழே! ஆனால் எவ்வித பில்டப்களும் இன்றி, சத்தமின்றி சாகஸ வீரர் களம் கண்ட வேளையில் – ‘அட தேவலாமே‘ என்பதே ரியாக்ஷனாகியது எனக்கு ஆச்சர்யமே! கதையின் பலவீனம், சித்திரங்களின் வீரியத்தால் பூசி மெழுகப்பட்டாலும், நான் மார்க் போடுவதாக இருப்பின் 6/10 என்பேன்!
நவம்பரின் தீபாவளி மலர்… டெக்ஸின் அதகளம்… குண்டு புக்கின் ரம்யம்… முற்றிலும் மாறுபட்ட 2 மெகா நீள சாகஸங்கள் என்று தெறிக்க விட்ட இந்த ஹார்ட்கவர் ஆல்பமே நடப்பாண்டின் topseller! இன்னமும் 60+ பிரதிகளே கைவசமுள்ளன என்பதால் தைப் பொங்கலைத் தாண்டாது என்று தோன்றுகிறது! இந்தப் புள்ளிவிபரத்துக்குப் பின்னேயும் மார்க் போட நான் முனைந்தால் என்னை மிஞசிய பேமானி யாருமிருக்க முடியாது தான்! குத்துமதிப்பாய் 175 போட்டுக் கொள்வோமே – 10-க்கு !!
“வானமும் வசப்படும்”… உடுப்புத் தியாகத்தில் சீரிய புரட்சியில் இறங்கிய அம்மாயியின் கதை! அதாவது கதை மாதிரி! அந்த அட்டைப்படத்துக்கோசரம் ஏதாச்சும் பார்த்து மார்க் போடலாம்; அந்த apocalyptic லோகத்தின் பின்புலத்துக்கும் இன்னும் கொஞ்சம்! அதற்கு மேல் உங்களுக்குத் தெரியாத சட்டங்களில்லை… நியாயங்களில்லை யுவர் ஆனர்! எந்தப் பிரிவில் எத்தனை போடலாமென்று நினைக்கிறீர்களோ – அதை மகிழ்வோடு போடுங்க!
“கால வேட்டையர்” ஏக காலமாய் பதுங்கிக் கிடந்து போன மாதம் வெளிச்சத்தைப் பார்த்த இதழ்! ஒரு hi-tech விட்டலாச்சார்யா கதையாய்ப் பார்த்திடாத பட்சத்தில் – கதைநெடுக இழையோடும் விறுவிறுப்பும், அந்த சித்திர நேர்த்தியும் not bad என்று சொல்ல வைக்கக் கூடும்! Not entirely convincing என்பதால் 6.5/10 போடுவோமே ?
தொடர்ந்து கூர்மண்டை ஜாம்பவானின் “சர்ப்பத்தின் சவால்”! அலசல்களுக்கு அப்பாற்பட்ட ஆதிக்க நாயகரின் ஆல்பமிது என்பதால் - அலசிடவோ; மார்க் போடவோ முனைந்திட மாட்டேன்! மாறாக – விண்வெளிப் பிசாசு… சைத்தான் விஞ்ஞானி போன்ற மிதக்கதைகளை விடவும் சர்ப்பங்களுடனான இந்த மோதலில் சுவாரஸ்யம் அதிகம் என்பதையும்; இதே ஆல்பம் ‘80களின் இறுதிகளில் வெளிவந்திருப்பின் விற்பனை அதகளத்தில் கூரை பறந்திருக்கும் என்பதையும் சொல்லிட முனைவேன்! A classic from the classic hero!
டிசம்பரின் இதழ்களை நீங்களே இப்போது தான் அலசி வருகிறீர்கள் எனும் போது அதன் பொருட்டு நீட்டி முழக்காது சிம்பிளாக மார்க் போட முனைகிறேன்:
”ஒரு கசையின் கதை”:
ம்ம்ம்… அது வந்து.. என்ன சொல்ல வர்றேன்னா… அந்தக் கசை இருக்கில்லே… ஆங்… பசை இல்லீங்கோ... கசை… கசை…! அதை வச்சிக்கினு ஆளாளுக்கு ரவுசு விட ‘தல‘ புகுந்து தண்டால் எடுக்கிறார்! நம்மவரின் உசரத்துக்கு இந்தப் புராதன, மித நீளக் கதைகள் இப்போது வேடிக்கையாய்த் தென்படுவது எனக்கு மட்டும் தானா – தெரியவில்லை! 6/10.
“நரகத்தின் நம்பர் 13”:
எனக்கு இந்த concept ரொம்பவே பிடித்தமானது! And கதைகளும் சிம்பிளானது; தெளிவாய் ஓட்டமெடுப்பவை என்பதால் 7/10 போட நினைக்கிறேன்!
“பயமே ஜெயம்”:
கதை மட்டும் இன்னும் சாரத்தோடு இருப்பின் இந்த கேரட் மீசைக்காரர் தொட்டிருக்கக் கூடிய உசரமே தனி என்பேன்! 7/10 என் பார்வையில்!
“தகிக்கும் பூமி”:
நாயகரை இன்னமுமே முழுமையாய் எடை போட்ட பாடில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது! அறிவுஜீவியாகக் காட்டுவதா? ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டுவதா? இரண்டின் கலவையுமாகக் காட்டுவதா? என்ற கேள்விக்கேக் கதாசிரியர் இதுவரையிலுமான நமது 2 ஆல்பங்களிலுமே பதில் ஏதும் சொன்னதாய் எனக்குத் தெரியவில்லை! என்மட்டிற்கு மாமூலான அந்த முரட்டு கௌபாய் stereotype–ஐ சிதறச் செய்யும் Lone ரேஞ்சர் கதாப்பாத்திரம் வரவேற்புக்கு உரியதே… ஆனால் தீர்ப்பு உங்கள் கைகளில் எனும் போது இந்த ஆல்பத்துக்கு 7/10 போட்ட கையோடு நடப்பாண்டின் review-களைக் கையைத் தட்டிடுகிறேன்!
Before I sign out – ஒரு தகவல் + சில கேள்விகள்:
1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?
2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?
3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?
4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?
- Brilliant - OK - Not Bad - அடங்கப்பா…!
5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?
6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?
கேள்விகள் இந்த அரை டஜனே என்பதால் இனி தகவல் பக்கமாய்த் தாவுகிறேன்!
ஜனவரியில் சென்னைப் புத்தக விழா இல்லையென்று ஆன பிற்பாடு பிப்ரவரியில் நடந்திடுமா? என்றறியக் காத்திருப்போம்! அதன் மத்தியில் நமது ஆன்லைன் புத்தகவிழா – 2 பொங்கல் விடுமுறைகிளினிடையே நடந்திடும் – நமது அலுவலக மாடியினில்!
போன தபாவின் பாணியே பெரும்பாலும் தொடர்ந்திடும்; சிற்சிறு அவசியமான மாற்றங்களுடன்! And 3 ஸ்பெஷல் இதழ்கள் உண்டு இந்தப் புத்தகவிழா வேளையினில் என்பது கொசுறுச் சேதி!
தேதி : ஜனவரி 14 to ஜனவரி 17 முடிய தினமும் காலை 10.30 to மாலை 6.30 வரை !
2021-ன் பிற்பகுதியினில் நிலவரங்கள் சகஜம் கண்டிருக்கும்; ரெகுலரான புத்தகவிழாக்களும் துவக்கம் கண்டிருக்கும் என்ற நம்பிக்கை ஓரளவிற்குத் துளிர்விட்டிருப்பதால் – ஆன்லைன் புத்தகவிழா # 3 2022-க்கு முன்பாய் இராதென்று நம்பலாம். அரைத்த மாவையே ஓவராய் அரைத்து உங்களுக்கு அயர்ச்சியூட்டிடக் கூடாதில்லையா?
ஜனவரி இதழ்களின் எடிட்டிங்கும், ARS MAGNA-வின் மொழிபெயர்ப்பும் சட்டையைப் பிடித்து இழுத்து வருவதால் நான் புறப்படுகிறேன் all! மீண்டும் சந்திப்போம்! Have a cool weekend! Bye for now!