நண்பர்களே,
உஷார் : ஒரு LIC கட்டிடம் காத்துள்ளது !!
வணக்கம். பெருசாய் யோசனைகளோ, திட்டமிடல்களோ ஒருபோதும் இருந்ததில்லை ; சனிக்கிழமை மாலையானால் பேப்பரும், பேனாவையுமோ – லாப்டாப்பையோ எடுத்துக் கொண்டு சப்பணமிடும் போது தான் என்ன எழுதுவதென்ற யோசனையே துவங்கிடும் ! And ‘இந்த வாரம் இதைப் பற்றித் தான் மொக்கை போடப் போகிறோம்‘ என்பதைத் தீர்மானித்த பின்னே, மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தாக்கி ‘லொஜக்‘ என Publish பட்டனை அமுக்கி விடுவேன் ! ஆனால் – முதன் முறையாக... இல்லே, இல்லே... கடந்த நாலைந்து ஆண்டுகளில் முதன் முறையாக இந்தப் பதிவை செவ்வாய் காலையே எழுதத் தொடங்கினேன் – தொடர்ந்த 4 நாட்களாய் இதனை மனதில் அசைபோட்டபடிக்கே இருந்த பிற்பாடு இன்றைக்கு இதனைப் பகிர்ந்திடல் ஓ.கே. தான் என்று தோன்றிய பின்னே பதிந்துள்ளேன் ! ”பில்டப்பெல்லாம் பலமாய் உள்ளதே – புதுசாய் இன்னொரு நாலாயிரத்துக்கு என்ன குண்டைப் போடப் போகிறானோ?” என்ற பயம் மெதுவாய் துளிர் விடுகிறதா? No worries folks – இது நமது தற்போதைய நிலவரம் + காத்திருக்கும் அடுத்த சில மாதங்கள் சார்ந்ததொரு மனம் திறப்பு மாத்திரமே ! So உங்கள் பர்ஸ்களுக்குப் பாதகமில்லை – இப்போதைக்காவது!
இதோ இந்தப் பதிவை எழுதத் தொடங்கும் முந்தைய மாலையில் தான் மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது & maybe எங்கள் மாவட்டம் உள்பட மேலும் சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் இது தொடரும் என்ற வதந்திகளும் சரளமாய்ச் சுற்றி வருகின்றன ! இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் வேளைக்கு அவை வெறும் வதந்திகள் தானா ? என்ற தெளிவு பிறந்திருக்கலாம் தான்!எது எப்படியோ, கொரோனா எனும் சுனாமி தனது தடத்தில் தமிழகத்தைக் காலுக்குள் போட்டு மிதித்து வரும் கொடுமை அத்தனை சீக்கிரத்துக்கு முடிவுக்கு வராது என்பது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது ! And மதயானையின் காலடியில் சிக்கிய தோங்காய் போல ஆங்காங்கே பிழைப்புகளும் தெறித்துப் போய் வரும் சூழலில் நாம் எங்கே நிற்கிறோம் ? என்ற கேள்வியை என்னை நானே விடாப்பிடியாய்க் கேட்டு வருகிறேன் – கடந்த 90+ நாட்களாய் ! பொதுவாய் அவரவருக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் – சற்றே ரிலாக்ஸ் செய்திட நீங்கள் இங்கு எட்டிப் பார்ப்பதில் no secrets ! ஏதேனும் காரணங்களால் நான் டல்லடித்துப் போய்க் கிடந்தாலுமே, அதனை எனது எழுத்துக்களில் பெரிதாய்ப் பிரதிபலிக்காது பார்த்துக் கொள்ள விழைவதுண்டு ! So ஒருவிதமான ‘all is well’ என்ற சோப்புக் குமிழிக்குள்ளேயே இங்கே நாம் ஒட்டுமொத்தமாய் பயணிக்கும் போது, என் மனசுமே அதனை நிஜமென நம்பி, தேறிக் கொள்ளும் கூத்துக்களும் அரங்கேறியுள்ளன என்பதால் the power of positivity மீது எனக்கொரு அசைக்க இயலா நம்பிக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !
வரலாறு கண்டிரா இன்றைய பேரழிவின் முன்னே நமது சோப்புக் குமிழிகளின் வலு தான் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க வல்லது ? என்ற சீரிய ஆராய்ச்சியை மல்லாக்கப் படுத்து ; குப்புறப் படுத்து என நம்ம பஞ்சுமுட்டாய்த் தாடி லியனார்டோ தாத்தாவின் பாணியில் சமீபமாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன் ! மண்டைக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் குறுக்கும், நெடுக்குமாய் சுழன்றடித்துக் கொண்டிருக்க, எங்கிருந்து ஆரம்பிக்க என்று தடுமாறுகிறது ! So ‘“கேள்வியும் - நானே; பதிலும் – நானே” பாணிக்கு சித்தே மாறிக் கொள்கிறேனே?!
1. இந்த நொடியில் நாம் எங்கிருக்கிறோம்? நிலவரம் தான் என்ன ?
- புளுகாமல் இதற்குப் பதில் சொல்வதாயின் – ஆர்ச்சியின் ‘கோட்டையைக் கடன் வாங்காமலே ; நம்ம சட்டித் தலையனின் கோணங்கித்தனங்கள் இல்லாமலேயுமே காலத்தில் ஏறக்குறைய 8 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம் என்பேன் ! 2012-ல் நமது “கம்பேக் ஸ்பெஷல்” வெளியான நாட்களில் வெளியே ‘ஹி...ஹி....ஹி‘ என்று பல்லைக் காட்டிக் கொண்டு உலா வந்தாலுமே ‘தெய்வமே... இந்தத் துவக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா ?‘ என்ற கேள்வி உள்ளே ஊற்றடித்துக் கொண்டிருந்தது ! தொடர்ந்திட்ட நாட்களில், வாரங்களில், மாதங்களில், நமது பயணம் டாப் கியரைத் தொட்ட கதையெல்லாம் நமக்குத் தெரியும் ! ஆனால் அந்த 100 மாதங்களின் உழைப்பு – கொரோனாவின் (இது வரையிலான) 100 நாள் தாண்டவத்தின் புண்ணியத்தில் சரிந்திடும் சீட்டுக்கட்டுக் கோபுரம் போல போயிண்டே... its gone ! என்றாகிப் போன உணர்வு இன்றைக்கு !
Of course – அசாத்தியமானதொரு அரணாய் நமது சந்தா நண்பர்கள் இந்த நொடியில் நம்மைக் காத்து வருகிறார்கள் ! அவர்களது சந்தாக்களின் பாதுகாப்பானது மட்டும் நம்மை இன்று அரவணைக்காதிருப்பின் – ”கோவணத்தோடு அலாஸ்காவில் சுற்றித் திரிவது எப்படி?” என்ற புக் போட மட்டுமே நமக்குச் சாத்தியமாகியிருக்கும் ! எட்டுத் திக்குகளிலும் நீங்கள் பரவிக் கிடக்கிறீர்கள் என்பது தெரியும் folks ; அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையிலும் உங்கள் சந்தாக் கால்தடங்கள் பதிந்திருப்பது கடந்த 8+ ஆண்டுகளின் பரிச்சயமே ! ஒரேயொருவாட்டி நீங்கள் ஒட்டுமொத்தமாய் கிழக்கை நோக்கி நிற்கும் பட்சத்தில் – விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ள வசதியாக இருந்திடும் ! சத்தியமாய் இதுவொரு over the top ரியாக்ஷன் அல்ல ! மே துவக்கம் முதலாய் அலுவலகமும், நமது வெளியீட்டுப் படலமும், மறுதுவக்கம் கண்ட நாளிலிருந்து ஒவ்வொரு பத்து ரூபாய் நோட்டுகளிலுமே புது அர்த்தம் காண்பது போலுள்ளது ! பாதிக்கு மேலான நமது ஏஜெண்ட்கள் ‘தொடர்ந்து எல்லைக்கு அப்பால்‘ தொடர்ச்சியாய் இருந்து வர – அவர்களிடமிருந்து ஆர்டர்களும் நஹி ; வசூல்களும் zilch ! மீதமிருக்கும் முகவர்கள் கண்ணியமாய் நமக்குத் தோள் தந்து வருவதால் பேப்பர் கொள்முதல்கள்; பைண்டிங் கூலிகள் ; etc. என்ற செலவுகளை ஒன்றுக்குப் பாதியாகவாவது சரிக்கட்ட முடிகிறது ! இங்கே அவர்களுக்கும் ஒரு உளமார்ந்த கைகூப்பல் அவசியமாகிடுகிறது என்பேன் ! இந்தச் சிரம நாட்களிலுமே இயன்றமட்டிற்குப் பம்பரமாய்ச் சுழன்று வரும் அவர்கள் நம்மளவிற்கு வரங்களே ! ஆனால் “அலுவலக நிர்வாகச் செலவினங்கள்” என்றதொரு தலைப்பில் – மாதாமாதம் தலைதூக்கிடும் சம்பளம் ; ஓவர்டைம் ; மின்கட்டணம் ; கூரியர் செலவுகள் இத்யாதி...இத்யாதியென்ற செலவுகளைச் சமாளிக்க – சத்தியமாய் நாக்குத் தொங்கிப் போய் விடுகிறது - கடந்த 2 மாதங்களாய் ! And அதற்கான காரணம் - மாயமாகிப் போயுள்ள ஆன்லைன் சேல்ஸ் தான் !
I've probably said this before - but worth a repeat again !! நமது வண்டி ஓடுவது நாலு கால்களின் தாக்கான்களோடு guys!
- கால் # 1 : உங்களின் சந்தாக்கள் !
- கால் # 2 : நமது முகவர்கள் வாயிலான விற்பனைகள் !
- கால் # 3 : நமது புத்தக விழா விற்பனைகள் !
- கால் # 4 : ஆன்லைன் sales !
இவற்றுள் கால் # 1 ஷங்கர் சிமெண்டின் உறுதியோடும், செட்டிநாடு சிமெண்டின் ஸ்திரத்தன்மையோடும் இருப்பதால் no worries - at least for now ! இரண்டாம் காலில் ஒரு பாதியினை கொரோனா அரித்திருப்பதால் அங்கே பழைய நியூஸ்பேப்பர்களைச் சுருட்டி வைத்து முட்டுக் கொடுத்திருக்கிறோம் ! புத்தக விழாக் காலான # 3 ஒட்டுமொத்தமாய் பணாலாகிப் போய்க் கிடப்பதில் இரகசியங்கள் ஏது ? நெய்வேலி – கோவை – ஈரோடு – மதுரை & திண்டுக்கல் என்ற circuit ஜுலை முதலாய்த் துவக்கம் கண்டு அக்டோபர் வரையிலும் ஓடி, குறைந்தபட்சமாய் ஒரு கௌரவமான தொகையினைக் கண்ணில் காட்டிடுவது வழக்கம் ! And இந்தத் தொகையே உங்களின் சந்தா வசூல்களை எதிர்பார்த்திடாது – மறு வருடத்துக் கதைகள் கொள்முதல்களுக்கு – துவக்கம் தர உதவி வந்த சங்கதிகள் ! போன வருடம் இந்நேரத்துக்கெல்லாம் போனெல்லியின் கதைப் பட்டியல் இறுதியாகி, ஆகஸ்ட்வாக்கில் அட்வான்ஸ் தொகைளை ஓரளவுக்கு அனுப்பி, டிஜிட்டல் கோப்புகளின் ஒரு பாதியைத் தருவித்திருந்தோம்! ஆனால் இந்த தபா கால் # 3 is gone எனும் போது, கதைத் தேடல்களுக்குள் புகுந்திடவே மனம் சண்டித்தனம் செய்து வருகிறது! And equally distressing – ஆன்லைன் விற்பனைகள் எனும் கால் # 4 கூட கிட்டத்தட்ட காணாது போய் விட்டதென்பதே!
மார்ச் இறுதி முதலாகவே நமது ஆன்லைன் ஆர்டர் தளங்கள் கஞ்சன் வீட்டுப் பந்தி போல காற்றாடவே செய்கின்றன ! தினப்படி நடந்து வந்த இந்த விற்பனைகளே நமது பணியாட்களின் சம்பளங்களுக்கு ; கூரியர் செலவுகளுக்கு ; ஆர்ட்டிஸ்ட் சம்பளங்களுக்கு ; மொழிபெயர்ப்புச் சன்மானங்களுக்கு ; நிர்வாகச் செலவுகளுக்குச் சமாளிக்கும் திறன் தந்து வந்தவை ! ஆனால் “லாக் டவுண் ; கூரியர்கள் ரத்து“ என்ற சூழலில் சுணக்கம் கண்ட ஆன்லைன் விற்பனைகள், இன்று ஒரேயடியாய்ப் படுத்த படுக்கையாகி விட்டிருப்பது விழி பிதுங்கச் செய்யும் சிக்கலாய் உருவெடுத்துள்ளது ! இதன் பொருட்டு யாரையும் நோவதில் பலனில்லை என்பது புத்திக்குத் தெரிகிறது ! இன்றைய சூழலில் ‘பொம்மை புக்குகள்‘ முக்கியத்துவப் படிகளில் உசரமானதொரு இடத்தைத் தக்க வைத்திடும் ஆற்றல் வாய்ந்தவையல்ல என்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானே ! So கொஞ்சமே கொஞ்சமாய் சகஜ நிலைகள் திரும்பும் வரையிலாவது இந்தக் கால் # 4 தள்ளாட்டத்தோடே தொடர்ந்திடும் என்பது யதார்த்தம் !
ஆக ஒரேயொரு கால் மட்டும் திருமலை நாயக்கர் மஹாலின் தூணாட்டம் கம்பீரமாய் நின்றிட; இன்னொரு அரைவாசிக் காலைக் கொண்டு சரிக்கட்டியபடியே, ஒண்ணரைக் கால்களோடு ‘டிங்கடி... டிங்கடி‘ என்று நொண்டியடித்து வருகிறோம் ! வார்னிஷ் பூசா நிஜ நிலவரமிது !
2. சரி... எப்படிச் சமாளித்து வருகிறாயோ அம்பி ?
வருஷா வருஷம் கதைக் கொள்முதல்கள் நவம்பர் to பிப்ரவரி என்ற phase-ல் முற்றுப்புள்ளி கண்டிட வேண்டியவைகள் ! இந்நேரத்துக்குள் ரெகுலர் சந்தாக்கள் மாத்திரமன்றி, ஜம்போவின் சந்தாக்களுக்குமான கதைகளை இறுதி செய்திருப்பேன் ! So realistically speaking – ஆண்டின் பாக்கி 8 மாதங்களுக்குக் கதைகளுக்கோசரம் பணம் புரட்டும் அவசியங்கள் இருக்கக் கூடாது ! அதாவது – குரங்கு வேலைகளில் நாட்டமில்லாவொரு நார்மலான ஆசாமி எடிட்டராக இருக்கும் பட்சத்தில்! ஆனால் இங்கே தான் “நார்மல்” என்றால் வீசம்படி என்னவெனக் கேட்கும் ஆந்தை விழியன் அல்லவா எடிட்டர் குல்லாயை மாட்டிக் கிடக்கின்றான் ? கண்ணில் தென்படும் புதுப் படைப்புகளே; சமீபமாய்ச் சாதித்து வரும் புதுப் பதிப்பகங்களை பார்த்த நொடியே தலைக்குள் ஒரு வேதாளம் கொட்டகை போட்டு அமர்ந்து விடுவதால் – எப்போது வெளியிடலாம்?‘ என்ற புரிதல் இல்லாமலே கூட கதைகளை வாங்கி அடுக்கிடும் “கதையோமேனியா” தலைவிரித்தாடுவது சமீப ஆண்டுகளின் வாடிக்கை! இந்த நொடியில் என் கைவசமுள்ள பல ஜானர் one-shot-களை ; மினி தொடர்களைக் கொண்டு ஜம்போ சீஸன் 6 வரைக்கும் வண்டியினை ‘ஜிலோ‘வென்று ஓட்ட முடியும் தான் ! அட, இந்த லாக்டவுணின் ஏப்ரலில் கூட ஒரு அட்டகாச கௌபாய் ஒன்-ஷாட்டிற்குக் கான்டிராக்ட் போட்டு வாங்கி வைத்திருக்கும் ஒரே பக்கி இந்த சிவகாசி பேமானியாகத் தானிருக்க முடியும் ! So நள்ளிரவில் வயிறு பிறாண்டும் போது பிரிட்ஜைத் திறந்து உருட்டும் பாணியில் – ஆண்டின் நடுவாக்குகளிலும் தொடரும் எனது ஷாப்பிங் குடாக்குத்தனங்களுக்குப் பயன்படுமே என்ற நோக்கில் ஜம்போவின் சந்தாத் தொகைகளை மட்டும் வைப்பு நிதியாக்கிப் பத்திரப்படுத்தி வைப்பேன் ! அந்த டெப்பசிட் தொகையே தற்போது மானம் காத்து வருகிறது ! ஆனால் நம் நேரமோ என்னவோ – ஜம்போவின் சீஸன் 3-க்கு 330+ சந்தாக்களே தேறியுள்ளன ! ரெகுலர் சந்தாதாரர்கள் அனைவருமே ஜம்போவின் ஜோதியில் ஐக்கியமாகியிருக்கும் பட்சங்களில் இன்னும் கொஞ்சம் இலகுவாகியிருக்கும் நம் பாடு ! ஆனால் இந்தமட்டிற்குத் தேறியதே இப்போதைய சூழலில் பெரிய சமாச்சாரமாய்த் தென்படுவதால் no complaints!
3. ஆக இரத்தப் படலம் மறுபதிப்பு தரைதட்டிப் போன கல்லாவைத் தேற்றுவதற்கோசரம் தானாக்கும் ?
For sure not ! இந்த ப்ராஜெக்டின் எதிர்காலம் செப்டம்பர் 15-க்கு முன்பாய்த் தெளிவாகாது எனும் போது இதன் பொருட்டு நண்பர்கள் இன்று அனுப்பி வரும் தொகைகளை ஒவ்வொரு லட்சமாய்ச் சேர்ந்த நொடியில் fixed deposit ஆகப் போட்டு வைப்பதில் முதல் நாளிலிருந்தே தெளிவாக உள்ளேன் ! ‘இன்னிக்கு பத்தாயிரம் தேறுச்சா – கூரியருக்கு குடுத்திடு ; இருபதாயிரம் வசூலா – சம்பளத்தைப் போட்டுப்புடு !‘ என்று இந்தச் சிரம நாட்களைச் சுலபமாக்கிக் கொள்ளும் சபலமெல்லாம் நிச்சயமாய் என்னை ஆட்டிப் பார்க்கவில்லை – simply becos வைரஸின் தாண்டவம் மேற்கொண்டும் மோசமாகி இந்த 'இ.ப' முயற்சியைக் கைவிடும் மாதிரியானதொரு சூழல் ஒருக்கால் எழும் பட்சத்தில் – அவரவரது பணங்களை அந்த நொடியே வாபஸ் செய்திட வேண்டியது நம் தலையாய கடமையல்லவா ? அரும்பாடுபட்டு வளர்த்திருக்கும் நம்பிக்கையை நாசம் செய்வது முறையாகாது என்பதால், இன்றைக்குத் தின்று ஏப்பம் விட்டுவிட்டு, அன்றைக்கு திருட்டு முழி முழிக்க சத்தியமாய்த் திராணியில்லை ! So முழுசாய் 300 என்ற இலக்கு எட்டப்படும் வரையிலும் இந்தப் பணங்களில் தம்புடி கூட நம் இன்றைய செலவுகளின் பொருட்டு ‘கோவிந்தா‘ போடப்படாது என்று தைரியமாக நம்பலாம்‘ ! So இந்த நொடியின் இக்கட்டுகளுக்கு "இ.ப' ஒரு மருந்தென்ற டுபுக்கு நினைப்பெல்லாம் நஹி & இந்த நொடியில் இது வரைக்குமான முன்பதிவுத் தொகைகள் ஒற்றை ரூபாய் கூடக் குறையாது pretty much safe in the Bank ! And in any case, இது வரையிலான முன்பதிவு வேகங்கள் உசைன் போல்ட்டுக்கு சவால் விடுபவைகளாய் இல்லை எனும் போது, எனக்குள் சபலங்கள் துளிர்க்கவும் வாய்ப்புகள் close to zero !
4. சரி... குறுகிய எதிர்காலத்துக்குத் திட்டங்கள் என்ன ?
இதோ- ஜுலை முதலான ரெகுலர் இதழ்கள் + ஜம்போ சீஸன் 3-ன் மீத இதழ்களைக் கணக்கிட்டால் இன்னமும் காத்திருப்பவை 32 இதழ்கள் ! மே மாதத்திலும் சரி, ஜுனிலும் சரி, சந்தாப் பிரதிகள் தவிர்த்து ஏஜெண்டுகளிடமும், மிகக் குறைச்சலான ஆன்லைன் வாசகர்களிடமும் விற்றிடச் சாத்தியமாகியுள்ளது - வெளியே சொல்லிக்கொள்ள இயலா ஒரு சிறு எண்ணிக்கையே ! So இந்த 2 மாதங்களில் மட்டுமே கிட்டங்கிக் கையிருப்பு ‘டமக்‘ கென்று எகிறியுள்ளதால் ஜுலை முதலாகவே நாம் அச்சிடப் போகும் பிரதிகளின் எண்ணிக்கையையும் அதே ‘டமக்‘ ரேஞ்சில் குறைப்பதாக உள்ளோம் ! குறைக்கப்படும் இந்த பிரிண்ட் ரன்னில் – புதுசாய் ஒரு costing போட்டுப் பார்த்தால் ட்ரௌசர் கழன்று போகும் என்பது புரிகிறது தான் ; ஆனால் அசாதாரணமானதொரு சூழலில் பற்களை இறுகக் கடித்துக் கொள்வதைத் தவிர்த்து வேறு வழிகளில்லை என்பதால் - To Beelzebub with numbers ; we plan to just ride this phase through ! பிரிண்ட்-ரன்னைக் குறைப்பது மட்டுமன்றி, ரெகுலர் தடத்து இதழ்களை இந்த டிசம்பருக்குள் பூர்த்தி செய்ய விழையாது – சந்தா நண்பர்களின் சம்மதங்களோடு, இவற்றை மார்ச் 2021 வரையிலும் நீட்டிக்கவும் எண்ணியுள்ளேன் ! அள்ளி அடித்து மாதந்தோறும் 4 புக் ; 5 புக் என மந்தம் விரவிய மார்க்கெட்டில் வெளியிட்டு, எஞ்சியிருக்கும் நமது முகவர்களையும் சிரமத்துக்குள்ளாக்கிய புண்ணியம் வேண்டாமே என்று தோன்றுவதால் இந்த எண்ணம் ! So ரெகுலர் சந்தா மார்ச் 2021-ல் நிறைவு கண்டிடும் ! Sorry guys – இந்த downscaling தவிர்க்க இயலாக் கட்டாயமாகி நிற்கின்றது ; மூலையில் சிக்கிய பெருச்சாளி நான் இப்போதைக்கு !
But இந்த யுக்திகளால் சிக்கல்கள் மட்டுப்பட்டு விட்டன என்றாகாது, becos இந்தத் தீர்மானத்திற்கு இன்னொரு சிரமப் பரிமாணமும் இல்லாதில்லை ! ப்ரிண்ட் ரன்னைக் குறைத்துக் கொள்ளலாம் தான் ; வெளியீடுகளை மேற்கொண்டு 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் தான் ; நம்மளவிற்கு ஈரத் துணிகளை போஜனச் செரிமானப் பகுதிகளைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும் செய்யலாம் தான் ; ஆனால் டிசம்பரில் முற்றுப் பெற வேண்டிய இதழ்களை மேற்கொண்டு 3 மாதங்களுக்கு நீட்டிக்கும் போது – 3 கூடுதல் கூரியர் பில்களும் 'திடும் திடுமென்று' போட்டுத் தாக்கும் தானே !? ஏற்கனவே போன மாதம் முதலாய்க் கட்டணங்களைக் கூரியர் நிறுவனங்கள் ஏற்றியுள்ள சூழலில், an additional 3 months கூரியர் கட்டணம் + ரிஜிஸ்டர் பார்சல் + ஏர்மெயில் கட்டணம் + அட்டைப் பெட்டிகள் எனில் – தோராயமாய் ரூ.85,000 பழுத்து விடும் ! தொடரும் மாதங்களில், நிலவரங்கள் சகஜத்தை நோக்கித் திரும்பிடும் பட்சங்களில், இந்தக் கூடுதல் தொகையினை யாசகம் கோராது சமாளித்து விட முடியும் தான் ! ஆனால் ஒரு துரதிர்ஷ்டச் சூழலில் நோயின் தாக்கங்கள் மட்டுப் பெறாது போயின் – tough ! So “மேற்கொண்டு நூறு ரூபாய் அனுப்புங்களேன்; நூற்றைம்பது அனுப்புங்களேன் ப்ளீஸ்” என்று உங்களை நச்சரிப்பதற்குப் பதிலாய் கலர் இதழில் ஒன்றான ரிங்கோ + b&w இதழான "தோட்டா தேசம்" மட்டும் இம்முறை கழற்றி விடலாமா ? என்பதே எனது கோரிக்கை ! பெருசாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிரா இந்த இரு இதழ்களையும் பின்னர் பார்த்துக்கொள்ள நீ்ங்கள் இசைவு சொல்லும் பட்சத்தில், இந்தக் கூடுதல் கூரியர் பளுவினைச் சமாளித்து விட முடியும் ! What say folks ? (Today's question # 1) இதனில் சம்மதமோ, சங்கடமோ - தயங்காது இங்கேயே பதிவிடக் கோருகிறேன் ! இங்கொரு விதமாகவும், அப்பாலிக்கா FB-ல் அல்லது க்ரூப்களில் வேறொரு விதமாகவோ எழுதுவதால் பலன் இராதே ?
5. புதுச் சந்தா பற்றிய thoughts ?
ஒற்றை வரியில் சொல்வதாயின் – அட்டவணையே ரெடி !
For sure – தற்போதைய ஆடம்பரங்களோ, ஜிகினா வேலைகளோ அடுத்த சந்தாவினில் இருந்திடாது ! And விற்பனையில் தள்ளாட்டம் காணா தாட்டியவான்கள் மட்டுமே 2021-ல் வலம் வருவர் ! விளிம்பில் நின்று வரும் நாயக / நாயகியரோ ; சென்டிமென்டின் காரணமாய்த் துண்டு போட்டு வரும் ஹீரோ / ஹீரோயின்களோ ; கிட்டங்கி காதலர்களோ - காத்திருக்கும் 2021-ன் ஒன்பது மாதச் சந்தாவினில் இடம் காண மாட்டர் ! God willing, அடுத்தாண்டிற்குள் நோயின் தீவிரம் கட்டுக்குள் வந்திருந்தாலுமே, நிறைய ஜீவனங்கள் back to normal திரும்பிடுவது அத்தனை சுலபமல்ல என்பதில் ஏது சந்தேகம் ? So தரைதட்டிக் கிடக்கக் கூடிய பிழைப்புகள் திரும்பவும் உரம் பெறும் வரைக்கும், உங்கள் சிரமங்களுக்கு நமது சந்தாக்கள் ஒரு கூடுதல் காரணமாகிடாது !
அதே சமயம் - புத்தக விழாக்கள் ; கடைகளில் விற்பனைகள் போன்ற சமாச்சாரங்கள் ஓரளவுக்கேனும் சகஜத்துக்குத் திரும்பிட வேண்டியிருக்கும், நமது விலைகள் அபத்தமாகிப் போகாதிருக்க !! "சந்தா 550 & பாக்கி விற்பனை மார்க்கங்கள் எல்லாம் சேர்த்தே இன்னுமொரு சன்ன எண்ணிக்கையே மொத்த விற்பனையும்" என்பதான சூழல் அடுத்த ஆண்டிலும் spill over ஆகின, கையெழுத்துப் பத்திரிகை ரேஞ்சுக்குத் தள்ளப்பட்டிருப்போம் & அத்தகையதொரு சூழலில் வேறு வழியே இன்றி நடைமுறைக்கு வந்தாக வேண்டிய விலைகளை நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது ! Would be a nightmare for sure !!
கடந்த 8 ஆண்டுகளாய் கதைகளைத் திட்டமிட்டு ; விலைகளைத் திட்டமிட்டு, பக்காவாய் ஒரு சந்தாத் தொகையை அறிவிப்பதெல்லாமே – குறைந்தபட்சமாய் 500 to 550 சந்தாக்களாவது தேறிடும் என்ற திட நம்பிக்கையில் ! In fact நமது ஒட்டுமொத்தக் கட்டிடமும் நிற்பதே இந்த நம்பிக்கை எனும் column-களின் மீதே!
ஆனால் -
Post Pandemic (!!!) 2021-ல் “550” என்ற நம்பர் சாத்தியமாகாது போயின் – அது நமது அஸ்திவாரங்களையே அசைத்துப் பார்த்து விடும் என்பது தான் bottom line ! So முன்னெப்போதையும் விட, காத்திருக்கும் 2021-ல் உங்கள் சந்தாக்களின் மதிப்பு, எகிறிடும் தங்கத்துக்கு இணையானதாக இருந்திடவுள்ளது ! And இது நாள் வரைக்கும் ஓராண்டின் முழுமைக்கும் நீங்கள் வாசிக்கவிருப்பது எதை ? என்ன விலைக்கு ? என்பதை focus லைட் போட்டு வெளிச்சமிட்டுக் காட்டி ; அப்புறமாய்ச் சந்தா சேகரித்து வந்துள்ளோம் ! ஆனால் இம்முறையோ சந்தாச் சேகரிப்பின் வெற்றியைப் பொறுத்தே இதழ்களின் விலைகள் அமைந்திட இயலும் என்பது மாதிரியானதொரு குடாக்குத்தனமான, கையைப் பிசையும் சூழல் ! So here is what I have in mind :
- "550 to 600 சந்தாக்கள்" எப்படியும் தேறிடும் என்ற நம்பிக்கையில் ரூ.3000 to 3300 சுமாருக்கு ஒரு தொகையினை அறிவித்திடலாம் ! இது ஏப்ரல் 2021 to டிசம்பர் 2021-க்கான திட்டமிடலாக இருந்திடும் !
- வழக்கம் போல ”கிச்சடிச் சந்தா” ; ”பச்சடிச் சந்தா” என்றெல்லாம் இந்த ஒருமுறை குழப்பிக்கொள்ளாது – ஒரு All-in சந்தா & ஒரு அதிகாரியிலாச் சந்தா என்று மட்டுமே திட்டமிட ஆசை ! Maybe just once - கார்ட்டூன்கள் அனைவரது இல்லங்களுக்குள்ளுமே நுழைந்திட அனுமதித்துத் தான் பார்க்கலாமா folks ? (Today's Question # 2) ..அல்லது கார்ட்டூன்கள் இல்லாத சந்தாவுமே திட்டமிடல் அவசியம் என்பீர்களா ?
- And வழக்கம் போல அக்டோபர் இறுதியில் அட்டவணையினை வெளிட்டு – மார்ச் 2021 வரையிலும் கால அவகாசம் தந்திட இயலும் – 3 தவணைகளில் சந்தாக்களைச் செலுத்திட! Of course – இதழ்களின் விலைகள் மட்டும் சந்தா சேகரிப்பு நிறைவுறும் வரையிலும் குறிப்பிடப்பட்டிராது !
- So if all goes well – அறிவித்தபடியே இதழ்கள், தாக்குப் பிடிக்கக்கூடிய விலைகளில் வெளியாகும் ! ஆனால்........ஆனால்.......துரதிர்ஷ்டங்கள் ஒரு தொடர்கதையாகிப் போய், சுணக்கங்கள் சந்தாக்களிலும் தொற்றிக் கொள்ளும் பட்சத்தில் – தேறிடும் சந்தா எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டே இதழ்களின் விலைகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டி வரும் !
- Simply put – '9 மாதங்களுக்கு ஒரு 30 புக்' அறிவிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; ஆனால் 5 மாத அவகாசத்தினில் சந்தாக்கள் 300 தான் தேறுது ; 350 தான் தேறுது' எனில் – அறிவிக்கப்பட்ட சந்தாத் தொகையில் மாற்றமிராது ; ஆனால் இதழ்களின் individual விலைகளை மேற்கொண்டும் அதிகம் செய்து ; 26 புக்கோ ; 27 புக்கோ மட்டுமே வெளியிடுவது போலிருக்கும் !
- So சிரம நாட்களில் சன்னமாகிப் போகும் லட்டுக்களின் பருமனைப் போல ; சுருங்கிப் போகும் தோசைகளின் விசாலங்களைப் போல – இம்முறை நமது சந்தா நம்பரைப் பொறுத்தே அட்டவணையின் அளவும் அமைந்திடும் ! So இலட்சியம் 600 !! அவகாசம் 5 மாதங்கள் ! சாதித்து விட்டோமெனில் – மாமூலான விலைவாசி உயர்வுகளை ஈடு செய்திடும் அத்தியாவசிய விலையேற்றங்களைத் தாண்டிப் பெரிதாய் யார் கைகளையும் கடிக்காது தான் ! So நம்பிக்கை கொள்வோம் – இத்தனை காலம் நம்மைக் கரை சேர்த்து வந்துள்ள ஆண்டவனும், நீங்களும் இந்தப் புதுப் பயணத்திலும் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு!
- A NOTE HERE PLEASE : நான் முறையாய்த் தொகையினை அறிவிக்கும் வரையிலும், பணம் அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ! இந்த இரத்தப் படலம் Project சார்ந்த திட்டமிடலும் செப்டம்பரில் இப்படியோ-அப்படியோ தீர்மானமான பின்பாய் – சற்றே தெளிந்த நிலையில் சகலத்தையும் தீர்மானித்துக் கொள்வோமே ? எதுவுமே ஸ்திரமாய்த் தென்படா இந்த நொடியில் எவ்வித knee jerk ரியாக்ஷன்களையும் செய்திட வேண்டாமென்று நினைக்கிறேன் ! So நாட்களின் நகர்வுக்கேற்ப நமது தீர்மானங்களும் அமைந்திடட்டுமே ?
6. சரி, ”இரத்தப் படலம்” பின்னொரு சந்தர்ப்பத்துக்கென தள்ளிச் செல்லும் கட்டாயம் உருவானால் அதனை எவ்விதம் கையாள உத்தேசம் ?
இங்கொரு விளக்கம் அத்தியாவசியமென்று நினைக்கிறேன் ! இத்தனை காலம் விடாப்பிடியாய் மறுத்து வந்தவன் இந்த நொடியில் அடித்திருக்கும் U-டர்ன் குறித்து சில நண்பர்களுக்கு வருத்தமிருக்கலாம் தான் ; வியப்புமிருக்கலாம் தான் ! In fact அது நிறைய அலசல்களுக்கும், விவாதங்களுக்கும் உட்பட்டதொரு தலைப்பாக இருந்திருப்பின், நிச்சயமாய் ஆச்சர்யமில்லை எனக்கு ! Truth to tell - அரைத்த மாவையே அரைக்காட்டி ஜென்ம சாபல்யம் காண முடியாதென்று ஒற்றைக் காலில் நின்று வந்த "இ.ப" ஆர்வலர்களின் stand குறித்து எனக்கு உள்ளுக்குள் துளியும் மகிழ்விருக்கவில்லை ! இவ்வளவு பணமும், உழைப்பும் புதுக் கதைகள் பக்கமாய்த் திரும்பிட சாத்தியமானால் ஏகப்பட்ட மாயாஜாலங்கள் நிகழ்த்திட முடியுமே ; அதைப் புரிந்து கொள்ளாமல் அதே புளிச்ச மாவில் ; அதே புளிச்ச ஊத்தப்பங்களை ஊற்றுவதில் என்ன சுவாரஸ்யம் தான் இருக்க முடியும் ? என்று தான் ஒவ்வொரு முறையுமே எனக்குள் எண்ணங்கள் ஓடும் ! Was no different this time as well ! இந்தப் பொறுப்பினில் 36 ஆண்டுகளைச் செலவிட்ட பின்னே, மாமூலாய் மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடும் வேஷங்களைக் கட்டுவதில் இக்ளியூண்டு த்ரில் கூட எழுவதில்லை இப்போதெல்லாம் ! Of course ரெகுலர் இதழ்களில் உள்ள கமர்ஷியல் கதைகளையும் இதே காரணம் சொல்லி நான் உதறிடும் பட்சத்தில் பிழைப்பு நாறிடும் தான் ! நான் சொல்ல வருவது ஸ்பெஷல் இதழ்கள் பற்றி ! புதுசாய் ; சவாலாய்ச் செய்திட கிட்டும் சந்தர்ப்பங்கள் மட்டுமே உள்ளுக்குள் ஒரு adrenaline rush கொணர்வதை உணர்கிறேன் ! இது தான் எனது நிலைப்பாடாக இருந்தது 10 நாட்களுக்கு முன்பாய் - "இ.ப' ...மறுக்கா போடுப்பா !!" என்ற கச்சேரி துவங்கிய தருணத்திலும் ! எப்போதும் போலவே எனது அசுவாரஸ்யத்தைப் பதிவிட்டு அடுத்த பணிகளுக்குள் புகுந்திட முயன்ற போது தான் சில விஷயங்கள் முகத்தில் அறைந்தார் போல புரிந்தன : நாளொன்றுக்கு சுமார் 30 மின்னஞ்சல்கள் வந்து கிடக்கும் நமது Inbox-ல் இன்றைக்கு நூலான்படைக்கு இடையே மூன்றோ-நாலோ இருந்தாலே பெரும் பாடாய் இருப்பது மனதை அரிப்பது போலொரு உணர்வு ! ஓயாது அலறும் நமது அலுவலக போன்கள் இப்போதெல்லாம் மௌன விரதத்தைக் கடைப்பிடித்து வரத் துவங்கியிருக்க, நம்மவர்களும் அமைதியாய் கம்பியூட்டர் ஸ்க்ரீன்களை வெறித்தபடிக்கே அமர்ந்திருக்க, இந்தியா தோல்வியைத் தழுவக்காத்துள்ள மேட்ச் நடக்கும் ஸ்டேடியம் போல ஆபீஸ் முழுக்க நிசப்தம் ! லாக் டௌன் முடிந்த முதல் மாதத்தில் (மே) கூட இத்தனை மோசமில்லை ; ஆனால் ஜூனின் இந்த 3 வாரங்கள், சாத்தான்குளத்து விசாரணை அதிகாரிகளின் பாணியிலேயே இருந்து வந்துள்ளன ! நான் கேபினுக்குளிருந்து மணியடித்தால் கூட எழுந்து வந்து என்னவெனக் கேட்க நாலைந்து நிமிடங்கள் ஆகிடுமெனும் அளவுக்கு பிசியாக இருந்த நம்மவர்கள் , வேலையின்றி மாலை நாலுக்கும், ஐந்துக்கும் வீடு திரும்புவது ரொம்பவே வயிற்றைக் கலக்கியது ! And சமீப நாட்களாய் ஒவ்வொரு சம்பள தினத்தன்றும் மெலிந்த கவர்களைக் கையில் வாங்கப் பணியாட்கள் தடுமாறுவதைப் பார்த்திடும் போது ஒருவித ஆற்றமாட்டாமை உள்ளுக்குள் வியாபித்து நிற்பதைத் தவிர்க்க இயலவில்லை ! வெகு சமீபத்தில் ஒரு ஆளில்லா நிசப்த மாலையில், ஆபீசில் நான் மட்டுமே இருந்ததொரு தருணத்தில், யதார்த்தத்தை ஒரு பேப்பரில் எழுதி பார்க்க முனைந்தேன் ! அந்த நேரத்தில் நான் பதிவு செய்த விஷயங்கள் இவையே :
- For sure இம்முறை புதுச் சந்தாக்களை ஜனவரியில் துவக்கிட வாய்ப்பேயில்லை !!
- சென்னையில் 2021 ஜனவரிப் புத்தக விழா பற்றிய ஆரூடங்கள் தற்சமயத்துக்கு Nostradamus-க்கே சாத்தியப்படாது !
- நமது அச்சகத்தில் பெரும்பாலும் அச்சாவது பள்ளி புக்ஸ் ; கைடு ; நோட்புக் ; வினாத் தாள்கள் போன்றவைகளே ! கொரோனாவின் புண்ணியத்தில் பள்ளிகளோ, கல்லூரிகளோ என்றைக்குத் திறக்குமென்பதெல்லாம் யாரது யூகத்திலும் சாத்தியமில்லை என்பதால் அந்த ஆர்டர் ஒட்டு மொத்தமாய்க் காலி ! So காமிக்ஸ் சார்ந்த பணியாட்கள் மட்டுமன்றி, அச்சகப் பிரிவின் பணியாட்களுமே - கொஞ்ச காலத்துக்காவது இந்த சுணக்கங்களின் தாக்கங்களை, மெலிந்த கவர்களோடு உணர்வது தவிர்க்க இயலாத சங்கதி !
- இவை எல்லாவற்றிற்கும் சிகரமாய் - அந்த 5 வயதுச் சிறுமியின் புற்று நோய் இன்னல் ! வழக்கமாய் இது போன்ற தருணங்களில் இயன்றதொரு தொகைக்கு சத்தமின்றி ஒரு செக் எழுதி அனுப்பி விடுவேன் ! ஆனால் அந்த நொடியில் அதன் பொருட்டும் ஒரு நூறு சிந்தனைகள் அவசியமாகிய சூழல் !
ஒரே சமயத்தில் – ஒரே நேர்கோட்டில், இந்த நான்குமே சந்தித்திட, இவற்றிற்கு நிவாரணம் கிட்டுமாயின் "இ.ப' விஷயத்தினில் U-டர்ன் மட்டுமல்ல ; இங்கிலீஷில் உள்ள சகல எழுத்துக்களுக்குமே தலா ஒரு டர்ன் அடித்தாலும் தப்பேயில்லை என்றே தோன்றியது ! காற்று வாங்கும் அலுவலகத்தில் ; ஈயோட்டும் அச்சகத்தினில் ; பல்லிளிக்கும் வங்கியிருப்பினில் ; அல்லல்படும் சிறுமிக்கு உதவுவதில் - பவர் ஸ்டார் பெயரை ஜெபித்தால் மாற்றங்கள் உண்டாகுமென்று யாரேனும் சொல்லியிருந்தால்கூட அந்த நொடியில் சம்மதம் சொல்லியிருப்பேன் ! So ‘வேண்டாமே இ.ப.!‘ என்று பிடிவாதம் காட்டியவன் குட்டிக்கரணம் – முட்டிக்கரணம் என சகலத்துக்கும் சிறுகச் சிறுகத் தயாராகி விட்டேன் ! ஆனால் அறிவித்து விட்ட போதிலும் உள்ளுக்குள் ஒருவிதக் குற்ற உணர்வு தோன்றாதில்லை தான் ; and அவை தலைதூக்கும் பொழுதுகளில் எல்லாமே எனது பின்னூட்டங்களில் ஒருவித அவநம்பிக்கை தொனிப்பதை எனக்கே தவிர்க்க இயலவில்லை தான் ! ரெமோவும், அம்பியும் மாதிரி - என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! ஆனால் சிறுகச் சிறுக பார்வைக்கோணங்கள் மாறிடும் போது, பயணங்களுக்குமே ஒரு புதுப் பரிமாணம் தென்படுவதாய்த் தோன்றியது ! So Project "இ.ப" துவக்கம் கண்டிட, எனது மறுப்புகள் மெதுவாய் விலகியது இந்தப் பின்னணியில் தான் !
நண்பர்களின் ஆதங்கங்களுக்கும், ஆர்வங்களுக்கும், இணையாய் ஆர்டர்களும் கிட்டிடும் பட்சத்தில் – great ! ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருந்து, இந்த முயற்சியை ஒத்திப் போட அவசியமாயின் நிச்சயமாய் வருத்தமும் கொள்ள மாட்டேன் ! பெருசாய் வேலையில்லாதவொரு தருணத்தினில் at least I gave it my best shot என்ற திருப்தியோடு, நண்பர்களின் பணங்களை வாபஸ் பண்ணிய கையோடு – ‘த்ரிஷா இல்லாங்காட்டி நயன்தாரா‘ என்று 2021 சந்தா அறிவிப்பினில் பிஸியாகிடுவேன் ! So இ.ப. 2020 ஒரு சந்தர்ப்பத்தின் / சந்தர்ப்பவாதத்தின் பிள்ளையே !! Not for a minute am I going to refute it !! உள்ளுக்குள் இதன் பொருட்டு நெருடல்கள் எனக்கிருந்தாலும், அவற்றை விழுங்கிக் கொள்ள அவசியமாக்குகின்றன இன்றைய சிரமச் சூழல்கள் ! எடிட்டராய் எனது அவா வேறாக இருந்தாலும், ஒரு பப்ளிஷராய் எனது தீர்மானம் இன்னொன்றாய் அமைந்திடுவதை இந்த நொடியினில் தவிர்க்க இயலவில்லை ! Moreso because, பெரும் பத்திரிகைக் குழுமங்களில் நூற்றுக்கணக்கான பணியாட்களைக் கழற்றி விடும் நிகழ்வுகளைப் பார்க்கிறேன் தான் ; ஆனால் அத்தகையதொரு துரதிர்ஷ்டம் நமது சிறு குருவிக்கூட்டுக்கு நிகழாதிருக்க ஏதேனுமொரு முயற்சி உதவிடின் - எனது வைராக்கியங்களைக் கடாசிடத் தயக்கம் பறந்து விடுகிறது ! தொலைவிலிருந்தபடியே 'அந்தர் பல்டி' என்ற ரேஞ்சில் கணை வீசும் நண்பர்களுக்கு passion + business என்ற இரண்டுக்கும் மத்தியிலொரு மெல்லிய கோட்டினில் பயணிக்க முனைந்திடுபவனின்,பாடுகள் புரிபடாது போவதில் no surprises ! ஆனால் இந்த ஒற்றைத் தருணத்தில், அந்தக் கணைகளின் பொருட்டு எனது தூக்கங்கள் கெட்டிடப் போவதில்லை - simply becos அதற்கோசரம் ஏற்கனவே வேறு காரணிகள் கணிசமாகவே உள்ளனவே ! So good luck with the barbs guys !!
7. “சரிப்பா… இதுக்குப் பதிலா புது புக்குகளை ; ஸ்பெஷல்களை அறிவிச்சு, அதுக்கு முன்பதிவு பண்ணினா அந்தப் பணத்தில் பணியாட்கள் வூட்டிலே அடுப்புகள் எரியாதா ? அந்தப் பாப்பாவின் வைத்தியச் செலவுக்கும் அந்தப் பணம் பிரயோசனப்படாதா ?”
வெரி சிம்பிள் சாரே ! புது இதழ்களின் Special அறிவிப்பெனில் முன்பதிவில் ஒரு 450 பிரதிகள் + ஏஜெண்ட்கள் & ஆன்லைன் மூலமாக ஒரு மரியாதைப்பட்ட நம்பர் & ஈரோடு + சென்னைப் புத்தக விழாக்களின் புண்ணியத்தில் இன்னொரு ஓ.கே.வான நம்பர் என்று கரைத்து விடலாம் ! So நான் costing போடும் போதே “பிரிண்ட்ரன் : பூசணிக்காய்" என்றில்லாவிடினும், ஒரு தண்ணீர்ப்பழமாகவாவது திட்டமிட்டு ஆரம்பிக்க இயல்வதுண்டு ! ஆனால் இன்றைக்கோ முன்பதிவில் 450 தேறுமா ? என்ற கேள்வி ஒரு பக்கமிருக்க, மீதத்தைப் பற்றிக் கேட்கவே வேணாம் – சுத்தமாய் washout தான் ! ஏற்கனவே நடப்புச் சந்தாவின் விலை கூடுதலான இதழ்களையே பின்னே..பின்னே என நகற்றி வரும் சூழலில், புதுசாய் ஒரு ஸ்பெஷல் என்று இந்நேரம் அறிவித்தால் - என்னைப் பார்த்து எனக்கே சிரிக்கத் தோன்றிடும் ! Moreover புது ஆல்பங்களுக்குமே இன்றைய யதார்த்த சூழலில் “பிரிண்ட் ரன் 400-450 தான்” என்ற பிள்ளையார் சுழியோடு ஆரம்பிக்கும் பட்சங்களில், விலைகள் குடலை வாய்க்குள் கொணரும் உயரங்களைத் தொட்டு நிற்கும் ! And ஏற்கனவே “ஒற்றை நொடி.. ஒன்பது தோட்டா” ; ARS MAGNA ; “கென்யா” போன்ற முரட்டுக் கைகள் சகலத்துக்கும் நார்மலான நமது விலைகளைத் தெரிவித்து, அவற்றிற்கான கான்டிராக்டுகளும் போடப்பட்டு, ராயல்டிகளும் அனுப்பியாச்சு ! இந்தச் சூழலில் நான் பாட்டுக்கு – ‘கோட்டை அழிங்க… அழிங்க… மறுக்கா பொர்டா சாப்பிடப் போறேன், முதல்லேர்ந்து !!‘ என்று ஆரம்பித்து, ஆயிரம், ரெண்டாயிரம் என்றெல்லாம் விலைகளைச் சொன்னால் நம் படைப்பாளிகள் பேந்தப் பேந்த முழிக்க ஆரம்பித்து விடுவார்கள் ! புதுசாய் ஒரு பேச்சு வார்த்தை ; புதுசாய் சில ஒப்பந்தங்கள் ; புதுசாய் சில ராயல்டி தொகைகள் - என எல்லாமே புதிதாகிட வேண்டிப் போகும் ! And in any case - சிக்கின, சிக்கின புக்கையெல்லாம் "முன்பதிவுக்கு மட்டும்" என்ற ரேஞ்சுக்குக் கொண்டு செல்லும் பட்சத்தில், வரும் காலங்களில் நானே கதை எழுதிட, ஜூனியர் எடிட்டர் படம் போட்டிட - அதை நாங்களே படித்தும் கொள்வது என்ற பொழுது புலர்ந்திருக்கும் ! So ஓ.நொ,ஓ.தோ ; கென்யா ; Ars Magna இதழ்கள் எல்லாமே ஒரு சகஜ சமயத்தின் நார்மலான விலைகளுடனான, நார்மலான விற்பனைகளுக்கே ! Maybe 2021 ஈரோட்டின் வேளையில், உலகம் நார்மலுக்குத் திரும்பியிருக்கும் பட்சத்தில், அந்தப் பட்டாசுகளை அங்கே போட்டுத் தெறிக்க விடுவோம் என்று நினைத்தேன்! ஆக இன்றைக்குப் பெரியதொரு பிரின்டரன்னுக்கு இயல்பாகவே அவசியமில்லா "இ.ப."மறுபதிப்பு மட்டுமே சாத்தியமாகிறது !
So இது தான் இன்றைய நிலவரம் ; எனது நிலைப்பாடு ; இத்யாதி..இத்யாதி எல்லாமே !
‘இதெல்லாம் யாருப்பா கேட்டா ?‘ என்ற கேள்வி சிலருக்கும்; ‘மண்டையன் சென்டிமெண்டைப் பிழி பிழின்னு பிழியறான்டோய் !‘ என்ற பகடி சிலருக்கும் இந்தப் பதிவுப் பிரவாகத்தைப் படித்த நொடியினில் தோன்றலாம் தான் !
Again இது ஏன் என்பதற்கான பதில் ரொம்பவே சிம்பிள் ! சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்தாலுமே, நையாண்டி செய்திடவே விழையும் அன்பர்களின் தரப்பைத் திருப்திப்படுத்த முனைவதென்பது காளை மாட்டின் காம்பைத் தேடுவதற்குச் சமானம் என்ற புரிதல்கள் என்றைக்கோ புலர்ந்து விட்டதென்பதால் இந்தப் பிரசங்கம் பகடிகளுக்குச் சமாதானமாயல்ல !
And நம் சிரமங்களில் தோள் தர நிபந்தனைகளின்றித் தயாராகயிருக்கும் நண்பர் அணிக்கு இத்தனை விளக்கங்கள் அவசியமே லேது தான் என்பதுமே புரிகிறது ! So அவர்கட்குமே இது அத்தியாவசியமாகிடாது போகலாம் தான் !
On the other hand, இந்தப் பத்தி பத்தியான பொழிப்புரைகளெல்லாமே பிரதானமாய் எனக்கு நானே தலையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ; 90 + நாட்களாய் குக்கருக்குள் திரண்டு நின்ற பிரஷரை லைட்டாக வெளியேற்றும் நோக்கில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! "ஏன்யா....நான் சரியா தானே பேசிட்டிருக்கேன் ?" என்று ஊர்ஜிதம் தேடும் பஞ்சாயத்து சங்கிலி முருகனைப் போல a reality check of sorts என்று எடுத்துக் கொள்ளுங்களேன் !
அதே போல நிபந்தனைகளின்றி அன்பையும், பணத்தையும் நீங்கள் என்னிடம் ஒப்படைத்திருந்தாலும், அவற்றிற்கு நான் செய்திட உத்தேசித்துள்ள நியாயங்களை பகிர்ந்திடுவது தானே பொருத்தம் ?! So தலைக்குள் அடைசலாய் நின்ற சகலத்தையும் பதிவாக்கிப் பகிர்ந்த திருப்தியோடு, சற்றே ஜாலியான சில updates தந்த கையோடு நடையைக் கட்டுகிறேன் folks ! எது எப்படியோ - ஆண்டவனின் கருணை தொடரும் மட்டிலும் எந்தவொரு குட்டிக்கரணம் அடித்தேனும் நம் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் ! வேகம் மட்டுப்பட்டிருக்கலாம் - சாலையின் கரடுமுரட்டுத்தன்மையின் பொருட்டு ; ஆனால் வண்டி ஒரு போதும் நின்றிடாது ! Maybe இந்தக் கொடுங்கோல வைரஸின் வெறியாட்டம் இன்னும் உக்கிரமடைந்து, ஜீவனங்களும் மேலும் மேலும் பெரும் தடுமாற்றம் கண்டு போயின் - மூவாயிரம் எனும் சந்தாக்கள் கூட ஆண்டின் இறுதியினில் ஒரு மன்னரின் பணயத்தொகையாய்த் தென்படவும் செய்யலாம் தான் ! அப்படியொரு நாளும் புலர்ந்திடும் துரதிர்ஷ்டம் ஒரு வேலை நிகழ்ந்தால் - மறுக்கா நியூஸ்பிரிண்ட் ; சன்ன விலைகள் ; அடக்கி வாசித்தல் என்ற திட்டமிடல்களையும் ஆராயாது விட மாட்டோம் - தலை தண்ணீருக்கு வெளியே இருந்திட வேண்டுமெனும் முயற்சிதனில் ! That will of course be a last option !! But we will stay extremely flexible !!
1.விற்பனையில் இந்தச் சிரம நாட்களிலும் ரகளை பண்ணிக் கொண்டிருப்பவர் யாரென்று யூகிப்பவர்களுக்கு நயமான சேமியாப் பாயசம் நம் பரிசாய் ! Oh yes – அதிகாரி தான் மே மாதத்திலும் சரி, ஜுனிலும் சரி, இதர இதழ்களின் விற்பனையை விட சுமார் 25% உசந்து நிற்கிறார் ! வர வர பாயசங்கள் விற்பனைகளைத் தூக்கி விடும் magic potions ஆகி விட்டனவோ என்னவோ ?! அல்லது பாயாச மாஸ்டருக்கு வயசாகிடுத்தோ ?
2. முழுக்கவே பெண்களாய் கதைநெடுகிலும் ரவுசு செய்யும் one-shot ஆல்பமொன்றின் rights வாங்கியுள்ளோம்!
3. நெடுநாள் விளம்பரமாய் மட்டுமே தொடர்ந்திடும் ஒரு ஜாம்பவானின் படைப்பும் கூட வெளிச்சத்தைப் பார்த்திடும் வேளை புலர்ந்திடக்கூடும் !
4. அதே போல இன்னொரு தாய்க்குலம் நமது அணிவகுப்பில் இடம் பிடிக்க ரெடி – ரொம்பச் சீக்கிரமே !
5. And பிடரியோடு அறையும் சித்திரத் தரத்தில் இன்னொரு கௌபாய் one-shot தற்சமயம் நமது கையிருப்பில் !
Bye all! See you around! Stay Safe!
P.S.: ”வோட்டுப் போடச் சொன்னதுலாம் வெட்டி வேலையா கோப்பால்ல்ல்ல் ??” என்ற கண்சிவத்தல் வேணாமே ப்ளீஸ் – நடப்பாண்டின் சந்தாக்களை மார்ச் வரைக்கும் நீட்டிக்கும் எண்ணத்தின் பொருட்டு ! மறுபடியுமொரு ஊரடங்கு என்ற மாதிரியான இறுக்கம் + எங்களது மாவட்டத்தில் இவ்வாரத்தினில் எகிறி வரும் வைரஸ் தாக்கங்கள் என் தீர்மானத்தை influence செய்துள்ளன ! Sorry guys !!