நண்பர்களே,
வணக்கம். பெரும் வாணவேடிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாததொரு compact சந்தா அட்டவணையினை வழங்கியிருக்கும் சன்னமான திருப்தி என்னுள் விரவி நிற்கின்றது! முன்நாட்களைப் போல வானத்தை எட்டிப் பிடிக்கவெல்லாம் நாம் முயற்சித்திடப் போவதில்லை என்பது எனக்கு இந்தத் திட்டமிடலின் ஆரம்பத்திலேயே புரிந்திருந்தது ! இந்த நொடியின் தேவைஸ் - முழுக்க முழுக்க உங்களின் வாசிப்புகளைக் கோரும் ஆற்றல் கொண்ட படைப்புகளை முன்நிறுத்துவது தான் என்பதால் “கம்பி மேலே நடக்குது ஷாமியோவ்!” என்று வித்தை காட்டும் விஜயேந்திர அவதாரினை எடுக்க முனைந்திடவே இல்லை! தவிர, டின்டின் போலான ஜாம்பவானுமே இன்றைக்கு நமது இருக்கைக்குக் கீழே நெருப்பைப் பற்ற வைத்திடும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை எனும் போது “புதுசாய் அதைத் தேடினோம் - இதைத் தேடினோம்" என்றெல்லாம் பல்டிகள் அடித்திடவும் பெரியளவில் பிரயாசை எடுத்திடவில்லை! மாறாக அந்த வித்தை காட்டும் படலங்களை - சந்தாக்களில் அல்லாத தடங்களில் / தருணங்களில் களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம்! So சந்தாத் தடத்தில் சீராய்ப் பயணிக்கும் “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் மாடுகளோடு மோதலின்றித் தடதடக்க ஒருபக்கம் தயாராகிட -
- Replica இதழ்கள் / க்ளாஸிக் மறுபதிப்புகள் வாகான தருணங்களில் சின்ன ப்ரிண்ட்-ரன்களில் வெளிவந்திடும்!
- And கிராபிக் நாவல்கள்; புதுப் பாணிகளிலான படைப்புகள்; குரங்குக் குட்டிக்கரணங்கள், ஆன்லைன் மேளாவின் போதும், புத்தக விழாக்களின் போதும் களம் கண்டிடும்! ஒரேயடியாய் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நார்மலான கமர்ஷியல் கதைக்களங்களாய் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தால், எனக்கே போரடித்துப் போய்விடும் ஆபத்துள்ளது! So “கோக்கோ-மாக்கோ கட்டைவிரலோ காதலியோ” தடமானதும் 2025-ல் மின்னலாய் பளீரிடும்!
அறிவிக்கப்பட்டுள்ள 2025 சந்தாவில் நான் கவனித்த வரைக்கும் தென்பட்ட விசனங்கள் இவையே:
1. V காமிக்ஸ் சேர்த்து மொத்த இதழ்களின் எண்ணிக்கை 32 மட்டுமே!
2. SODA-வைக் காணலை!
3. தங்கக் கல்லறை; இன்னபிற மறுபதிப்புகள் பற்றிய தகவல்கள் லேது!
இவை சகலத்திற்கும் போன பதிவிலேயே பதில் சொல்லியிருந்தேன் தான்! Yet - சுருக்கமாய் ஒரு மறு ஒலிபரப்பு!
“வாசிப்புக்கு நேரம் பற்றலை; புக்ஸ் தேங்குது” என்ற குரல்கள் ஒரு சிறிய நம்பரில் இருந்தாலும், கௌஷிக்கைப் போல குறுக்கும், மறுக்கும் உலாற்றுவதை மறுப்பதற்கில்லை! அந்த இடருக்கு மருந்திடவே எண்ணிக்கையில் சிக்கனம்!
மாறாக வரும் நாட்களில் “வாசிப்புக்கு புக் பற்றலை!” என்ற குரல்களும் ஒலிக்க மட்டும் ஆரம்பிக்கட்டுமே - பழைய பன்னீர்செல்வமாய் விஸ்வரூபமெடுத்து பின்னிப் பெடலெடுத்துப்புடலாம்! நிறைய சமைத்து, நிறைய மீதம் போக வேண்டாமே என்ற அக்கறையில் தான் உலை வைக்கும் பானையில் அரிசியை அளந்து போட நினைத்துள்ளோம்! “பற்றலையே... இன்னுமிருந்தால் தேவலாமே?” என்ற குரல்கள் ஒலிக்க நேர்ந்திட்டால் - rest assured ஜமாய்த்து விடலாம்!
And மறுபதிப்புகள், இனி என்றைக்குமே ரெகுலர் தடங்களில் இடம் பிடித்திடாது - “தங்கக் கல்லறை” போலான blockbuster ஆக இருந்தாலுமே! அவை எப்போதுமே தனியாகவே பயணித்திடும்!
By the way இன்னொரு கொசுறுச் சேதியுமே! “யார் அந்த மினி ஸ்பைடர்?” இதழினை அந்நாட்களில் வெளியிட்ட போது, ஓவரான புய்ப்பக் பக்கங்களை கத்திரி போட்டிருந்தோம்! “இதோ நான் ஆத்தப் போகும் கலைச்சேவையில் கத்திரியின்றி முழுசம் இருக்கும் மகாசனங்களே!” என்று மினி ஸ்பைடரைக் கொண்டு சேவை செய்திட ஒருத்தர் வீறுகொண்டதை நாமறிவோம்! அந்தத் தருணத்தில் நாம் குறுக்கிட்டு மினி-ஸ்பைடர் நார்மலான விலையில் நமது இதழாகவே வெளிவந்திடும் என்று ப்ராமிஸ் செய்திருந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள்! இதோ - இங்கிலாந்தில் ஸ்பைரின் தொகுப்புகள் பிச்சு உதறுவதைத் தொடர்ந்து தொகுப்பு # 4-ல் மினி-ஸ்பைடர் அட்டகாசமாய் remaster செய்யப்பட்ட சித்திரங்களோடு ரெடியாகி வருகிறது! So ‘ஜம்‘மென்று மினி ஸ்பைடரை முழுக் கதையோடும் 2025-ல் நம் மத்தியில் சந்தித்திடலாம்!
And சமீபமாய் முகநூலில் ஒரு பின்னூட்டத்தையும் கவனித்தேன் - இங்கே blog-ல் கம்பு சுத்தும் வேகத்தை மறுபதிப்புகளை கலமிறக்குவதில் நான் காட்டுவதில்லை என்று! நண்பர் புரிந்து கொள்ளத் தவறிய சமாச்சாரத்தை இங்கே சுட்டிக் காட்டும் அவசியம் எனக்குள்ளது! வடை சுடும் கல்லா பார்ட்டிகளுக்கு ஒரிஜினல்கள் உயர்தரத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியங்கள் லேது ; சிக்கியதை ஸ்கேன் செய்து ஈரோட்டு டிஜிட்டல் பிரஸ்ஸில் கொடுத்து பிரிண்ட் போட்டு வாங்கினாலே போதும்! ஆனால் நமக்கோ நிலவரம் அவ்விதமல்ல! இந்த க்ளாசிக் Fleetway கதைகளின் ஒரிஜினல்களை கொஞ்சம் கொஞ்சமாகவே இங்கிலாந்தில் சீர் செய்து டிஜிட்டல் கோப்புகள் ஆக்கி வருகின்றனர்! முத்து வாராமலரில் தொடராய் வந்த மாயாவியின் "ஒற்றைக்கண் மர்மம்" கதை கூட அவர்களது restoration பிராசசில் உள்ளது! So அவை முறைப்படி ரெடியாகும் வரைக்கும் காத்திருக்கத் தேவைப்படும் தான்! "பல் கூசுது" என்ற சொல்லும் மறு நொடியிலேயே ரூட் கேனால் செய்திடவோ, பல்லைப் பிடுங்கிடவோ முனைவதில்லையே நண்பரே?! அதற்கான முன்னேற்பாட்டு அவகாசத்துக்கு காத்திருப்பது இயல்பு தானே? தவிர நமது பிரதானப் பணியான புது இதழ்களின் வெளியீட்டுக்கு நடுவாக்கில் தானே இந்த reprint முயற்சிகளை உட்புகுத்த நாம் முனைந்திட இயலும்? மறு நாளே வடைச்சட்டியை பரணிலிருந்து எடுத்து, மாவை தப்பி, வடைகளை சுடல் சாத்தியம் தான் ஆகிடுமா?
Moving on இந்த நொடியில் ஒளிவட்டத்தை முழுமையாய் கபளீகரம் செய்திட சரமாரியான நமது 3 தீபாவளி மலர்கள் வெயிட்டிங்ங்ங்...! இந்தப் பதிவின் ஹைலைட்டே அவை தான்!! We start with Tex!!
தீபாவளி with டெக்ஸ் ‘24!!
ஆண்டுமலர் வேளைகளென்றால் லக்கி லூக்கின் ஆட்டகளமென்று நிர்ணயமாகியிருப்பதைப் போலவே இப்போதெல்லாம் தீபாவளித் தருணங்கள் ‘தல‘ டெக்ஸின் சாம்ராஜ்ஜியமாகியுள்ளன! வீட்டில் நீங்கள் போடும் பட்டாசுகளுக்குச் சிஞ்சித்தும் சளைக்காத அதிர்வேட்டுக்களை நம்மவர்கள் போட்டுத் தாக்கி வருவது ஒரு காரணமென்றால், டெக்ஸின் positivity பண்டிகைக்குப் பொருத்தமான addition ஆக அமைந்திடுவது முக்கிய காரணமென்பேன்! இதோ இந்த தீபாவளிக்குக் காத்திருப்பதோ ஒரு செம நெடும saga!
“பனிமண்டலப் போராளிகள்!” இதுவுமொரு நார்மலான 224 பக்க டபுள் ஆல்ப சாகஸமே என்ற நினைப்பில் 2022ன் இறுதியிலேயே இதனை வாங்கியிருந்தோம்! And 2023 அட்டவணையில் விளம்பரமும் செய்திருந்தோம்! But கதைகளெல்லாம் வந்து சேர்ந்த பிற்பாடு அலசுகையில் தான் இதன் முழுமையான நீளம் 440 பக்கங்கள் என்பது புரிந்தது! நம்மிடம் முதல் பாதி மாத்திரமே இருந்ததால் பாக்கி 2 அத்தியாயங்களையம் வரவழைத்த கையோடு 2024-ன் தீபாவளி மலராக்கத் தீர்மானித்தோம்! And here we are!!
எத்தனை தான் திட்டமிட மெனக்கெட்டாலுமே ஆண்டின் ஒரு பகுதியில் வேலைப்பளு சற்றே லாத்தலாக இருப்பதும், இன்னொரு பகுதியில் நாக்குத் தொங்கச் செய்யும் விதத்திலும் இருப்பதைத் தவிர்க்கவே முடிவதில்லை! இதுவரையிலுமான நமது கம்பேக் ஆண்டுகளின் சகலத்திலும் இதுவே கதையாக இருந்துள்ளது! நடப்பாண்டிலும் அதே pattern தொடர்ந்துள்ளது - ஆண்டின் கடைசி க்வாட்டரில்!
செப்டம்பரில் 4
அக்டோபரில் 4
அப்புறமாய் அட்டவணை
நவம்பரில் 3 மெகா தீபாவளி மலர்கள் -
என்று அமைந்திட்ட பணிகள் கடந்த சில மாதங்களாகவே என்னை பாம்பு டான்ஸ் ஆடச் செய்து கொண்டிருந்தன! And எல்லாற்றையும் விட மெகா மிரட்டலாய் மண்டைக்குள் வீற்றிருந்ததோ - நம்ம தீபாவளி with டெக்ஸ் தான்; Simply becos 440 பக்கங்கள் எனும் போது, அசாத்தியமாய் பெண்டைக் கழற்றிடும் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை!
- 440 பக்கங்கள்!
- சராசரியாக பக்கமொன்றுக்கு 5 படங்கள்!
- படமொன்றுக்கு சராசரியாய் இரண்டோ, மூன்றோ வசனங்கள்!
- ஆக இந்த ஒற்றை இதழுக்கு மட்டுமே சுமார் 5000 வசன boxes & பலூன்ஸ்!!
இதனை மொழிபெயர்த்து வரும் நமது டீமின் youngest அம்மணிக்கோ இது கிட்டத்தட்ட 4 1/2 மாதங்களைப் பிடித்த பணி! And நானோ அதனை 'ஏக் தம்'மில் எடிட் செய்திடவும், திருத்தி எழுதவும், மெருகூட்டவும் வேணும்! அதை நினைத்தே கடந்த 1.5 மாதங்களாய் உச்சா போகாத வான்கோழியைப் போலவே ‘திரு திரு‘வென விழித்தபடிக்கே சுற்றிக் கொண்டிருந்தேன்!
“ஆங்... ஒரே நேரத்திலே மொத்தமா வேலைக்கு எடுத்தாத் தானே நோவு? ஒரு நாளைக்கு 20 பக்கம் வீதம் பிரிச்சுப் பிரிச்சுப் பார்க்க ஆரம்பிச்சா 22 நாட்களிலே இம்மி கூட சிரமமின்றி முடிச்சுப்புடலாமே?” என்ற மகாசிந்தனை எங்கிருந்தோ உதிக்க -மைதீனிடம் சொல்லி இருபது-இருபது பக்கக் கத்தைகளாக கதையின் முழுசையும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னமே வாங்கி விட்டேன்! அவனும் தினத்துக்கு “இன்னிக்கு கோட்டா முடிஞ்சதா அண்ணாச்சி?” என்று கேட்க ஆரம்பிக்க, நானோ - “இன்னைக்கு அஷ்டமி, நாளைக்கு நவமி” இதோ இதோ அடுத்த வாரத்திலே ஆரம்பிச்சுப்புடலாம்” என்று சதாய்ச்சபடியே நாட்களைக் கடத்தியிருந்தேன் - இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியதில் ஆரம்பித்து 20 பக்கங்களைத் தாண்டியபாட்டைக் காணோம் என்ற போது அவனும் கேட்பதையே விட்டுப்புட்டான்! அக்டோபர் இதழ்களும் ரெடியாகி; அக்டோபரின் முதல் வாரமும் பிறந்து; ஓடி முடிந்த போது தான் மெய்யாலுமே உறைத்தது - தீபாவளிக்குக் குறைந்தபட்சமாய் ஒரு வாரத்துக்கு முன்னமே புக்ஸை டெஸ்பாட்ச் செய்தாலொழிய கதை கந்தலாகிப் போகும் என்பது! ஆக மிகச் சரியாக இரண்டே வாரங்கள் அவகாசம் தானிருப்பது புரிந்தது - எடிட்டிங்; பிராசஸிங் & பிரிண்டிங் பணிகளை முடிக்க! ஆராமாய் பிட்டத்தை அத்தனை நாட்களாய் தேய்த்துக் கொண்டிருந்த சேருக்கு யாரோ ஒரு அக்னிச்சட்டியைப் பற்ற வைத்தது போலிருந்தது! To cut a very long story short - இந்த 440 பக்க டெக்ஸ் சாகஸத்தினை நான்கோ, ஐந்தோ நாட்களில் பூர்த்தி செய்தேன் - வெறி பிடித்தவனைப் போல! Phewww... சொல்லி மாளாது அந்தப் பனிமண்டல பணிநாட்களின் உக்கிரத்தை!
ஆர்டிக் துருவப் பனிமண்டலம்!
இந்த பூமியும் சரி, அங்கே வசித்து வந்த இன்யூட் (எஸ்கிமோ) மக்களைப் பற்றியும் சரி, அவர்களது நம்பிக்கைகள் பற்றியும் - மர்ம மனிதன் மார்ட்டினின் “பனிஅசுரப் படலம்” வாயிலாக நாமறிவோம்! அது மட்டுமன்றி ”வடமேற்குப் பாதை” எனப்படும் கடல் பாதையினைத் தேடி ஐரோப்பியர்கள் அந்தப் பனி மண்டலத்தில் பட்ட அல்லல்களையுமே அந்தக் கதை நமக்குச் சொல்லியிருப்பது அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் ஆர்டிக் கடல் வழியாக சிதறலாகக் கிடக்கும் தீவுகள் மற்றும் நிலப்பரப்புகள் வழியாக வளைந்து செல்லும் ஒரு கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் ஆசியாவோடு வணிகம் பண்ணிட சுலபமாய் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையில் வெறியோடு தேடல் நடத்தியது வரலாறு.
அந்த வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு நமது ரேஞ்சர்களின் முழு டீமையுமே ஆர்டிக்குக்குக் கொண்டு சென்றுள்ளார் கதாசிரியர்! வழக்கமாய் ஒரு டெரரான வில்லன் இடம்பிடித்த மறுகணமே அந்த ஆல்பத்தில் அனல் பற்றிக் கொள்ள ஆரம்பிப்பது வழக்கம்! இங்கேயோ அந்த வனாந்திர பூமியே அசாத்தியமான வில்லனாய் உருவெடுத்து நிற்க, கதை நெடுக ஒரு திகில் விரவி நிற்பதை உணரலாம்! அண்ட் இது ரொம்பவே சமீபப் படைப்பு என்பதால் கலரில் இன்னமும் தயாராகவில்லை; இல்லையேல் வண்ணத்தில் தாண்டவமாடியிருக்கும் இந்த ஆல்பம்! மிரட்டலான பனி பூமியில் குதிரைகள் லேது; கோவேறு கழுதைகளும் நஹி.. So பயணங்கள் சகலமுமே நடராஜா டிரான்ஸ்போர்ட்டில் தான்!
- டெக்ஸ், கார்சன், டைகர், கிட் வில்லர் மற்றும் கனேடிய போலீஸ் அதிகாரியான ஜிம் ப்ராண்டனும் ஒரு அணியாய் தேடலில் இறங்கிட...
- அவர்கள் தேடிச் செல்லும் அணியோ இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தனித்தனியாகப் பயணிக்க,..
- அந்த அணிகளில் உள்ள பெண் வேட்டையர்களில் ஒருத்தி கடத்தப்பட்டு, வேறொரு பாதையில் பிரிந்து போக....
- இவை எதையுமே அறியாதவனாய் தன் காதலியை இந்த வனாந்திரத்தில் தேடிடும் கௌபாய் இன்னொரு தடத்தில் நடை போட...
- இவர்களில் யாரைப் புசிப்பது? என்ற பசியோடு அத்தனை பேரையும் பின்தொடர்ந்திடும் ஒரு வெறிபிடித்த கூட்டமும் பயணம் பண்ண...
- இவர்கள் அம்புட்டு பேரையும் பின்தொடரப் போவது நாம்!
மெகா டெக்ஸ் சாகஸங்கள் நமக்குப் புதுசே அல்ல தான்; ஐநூற்றுச் சொச்சப் பக்கங்கள் கொண்ட டைனமைட் ஸ்பெஷலெல்லாம் நமது இடைவாரில் உள்ளதே! ஆனால் இதுவோ முற்றிலும் மாறுபட்டதொரு த்ரில்லர் folks! கூப்பிடு தொலைவில் சிறு நகரங்களது ஷெரீப்கள் கிடையாது; அவசரத்துக்குத் தந்தியடித்து வரவழைக்க இராணுவக் கோட்டைகள் கிடையாது; சொகுசாய்ப் படுத்துறங்கி ஓய்வெடுக்க விடுதிகள் கிடையாது! சுழற்றியடிக்கும் பனிக்காற்றின் மத்தியில் உறைந்து கிடக்கும் ஏரியின் மேல்பரப்பில் தங்களது படகுகளைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டு விட்டு அத்தனை பேரும் உறங்க முற்படும் போது, வாசிக்கும் நமக்கே நடுக்காது போகாது! அது மட்டுமன்றி இன்யூட் பழங்குடியினரின் நம்பிக்கைகள்; நரமாமிசங்கள் உண்ணும் கொடூரங்கள்; காணாமல் போன ஆய்வுக்கப்பல்களிலிருந்து எழும் அமானுஷ்ய மணியோசைகள் என கதாசிரியர் மௌரோ போசெலி கதை நெடுக திகில் தாண்டவமாடியுள்ளார்! அது மட்டுமன்றி இந்த மண்ணில் ஹீரோயிஸம் காட்டும் நாயகராய் டெக்ஸை சித்தரிக்காமல் - சூழலுக்கேற்ப அனைவரது உதவிகளையும் ஏற்றுப் பெற்று காரியம் சாதிக்க விழையும் யதார்த்த புருஷனாகக் காட்டியுள்ளார். In fact பழங்குடி மைந்தனை டைகர் ஜாக்ருககு இங்கே நிரம்பவே முக்கியப் பொறுப்புகளும் தந்திருக்கிறார்! So ஒரு முன்னாள் பல்லடத்துக்காரர் எம்புட்டு முக்கினாலும் இந்தவாட்டி பாயாசம் போடும் வாய்ப்புகள் செம சொற்பமே என்பேன்!
ஒற்றை வரியில் சொல்வதானால் - இதை மாத்திரமே சொல்வேன் : Folks... என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது; ஆனால் சூட்டோடு சூடாய் இந்த தீபாவளி டமாக்காவை வாசிக்க நேரம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!! முடிந்தால் இரண்டே இரவுகளில் இரண்டு ஆல்பங்களையும் (சு)வாசித்திட முயற்சி பண்ணுங்கள் - ப்ளீஸ்! ஆறப் போட்டுப் படிப்பதும் சரி, தவணை தவளையாய் படிப்பதும் சரி, இந்தக் கதையின் வீரியத்தை ஒற்றை மிடறு மட்டுப்படுத்தி விடக்கூடும்! So “குண்டு புக் லேதுவா பாவா?” என்று “கம்பு சுத்துவோர் கழகம்” களமிறங்கி ஆடித்து ஆட அட்டகாசமானதொரு வாய்ப்பு இது!
And இதோ - 4 ஒரிஜினல் அட்டைப்படங்களும் - தெறிக்கும் வர்ண மெருகூட்டலுடன்! (அந்த economy slipcase ரொம்பவெல்லாம் திடமாய் இராது guys - பக்காவான பொட்டிகள்லாம் இன்று நெருக்கி நூறு ரூபாய் கிரயம் புடிக்குறது 🤕)
Moving on, பணியும், பரபரப்பும், பட்டாசான ஆக்ஷனும் தொடர்கின்றன முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷலிலும்! ஜம்போ காமிக்ஸில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஜாரோஃப் இன்னொரு ஒன்-ஷாட் அதிரடியோடு வெளிவந்திருக்கிறார் என்பதை அறிந்த நொடியே கதைக்கான உரிமைகளை வாங்கியிருந்தோம்! And பெரிய திட்டமிடல்களெல்லாம் இல்லாமலே - அகஸ்மாத்தாய் தீபாவளி ஸ்பெஷலாகவும் அறிவித்திருந்தோம்! ஆனால் கதையில் இப்படியொரு தெறியான fire இருந்திடக்கூடுமென்பதை சர்வநிச்சயமாய் நான் அறிந்திருக்கவில்லை! உலக யுத்தத்தில் சின்னாபின்னமாகிக் கிடக்கும் பனிக்காலத்து மாஸ்கோ தான் இங்கே கதைக்களம்! And பிறப்பால் ரஷ்யனான ஜாரோஃப் அந்த மண்ணுக்குத் திரும்பச் செல்லும் ஒரு நெருக்கடி எழுகிறது! மனுஷன் பிழைக்கப் போன அமேசான் காட்டிலேயே ராவான ரவுடியாய் ராட்சஸ ஆட்டம் போட்டான்; தனது தாய்மண்ணுக்குப் போகும் போது கேட்கவும் வேண்டுமா? தீபாவளிக்கு நீங்கள் வெடிக்கப் போவதெல்லாம் சும்மா ஜுஜுப்பி என்றாகும் விதமாய் இங்கே கதை நெடுக ஜாரோஃப் ரகளை பண்ணுகிறான்! And ஓவியரும் சரி, கலரிங் ஆர்டிஸ்டும் சரி, லேட்டஸ்ட் பாணிகளில் கலக்கியுள்ளார்கள்! பனி படர்ந்த இரவுகளில் நடக்கும் மோதல்களின் போது வெளிச்சச் சிதறல்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் sequences ஒரு புது உச்சம்! இதோ – ஒரிஜினல் அட்டைப்படம் & உட்பக்க previews!
Last but not the least – நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர்! அது என்ன மாயமோ – புரியவில்லை – ஆனால் V காமிக்ஸுக்கென அமைந்திடும் எல்லாமே துரித வாசிப்புகளுக்கு 100% உத்தரவாதம் தரும் சாகஸங்களாகவே இருந்திடுகின்றன! இம்முறையும் துளி கூடப் பிசகின்றி மிஸ்டர் நோவின் b&w சாகஸம் நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றது!
அதே அமேசான் கானகம்... இம்முறையோ இரு தனித்தனி அணிகள்! முதலாவது கேமராவால் சித்திர வேட்டையாட நினைத்திடுகிறது & இரண்டாவதோ தோட்டாக்களால் விலங்குகளை வேட்டையாட விழைகிறது! இதன் மத்தியிலோ கானகத்தின் கறுப்பு நிழலாய் ஒரு ராட்சஸ ஜாக்குவார்! இந்த சகலத்தின் மையப்புள்ளியாய் மிஸ்டர் நோ! கொஞ்சம் நல்ல காதல்; கொஞ்சம் கள்ளக் காதல்; எக்கச்சக்க ஆக்ஷன்; ஏராளமாய் பரபரப்பு; ஏகமாய் இயற்கையழகு என்று தடதடக்கும் இந்த 192 பக்க ஆல்பத்துக்குப் பேனா பிடித்திருந்த புது வரவு கொஞ்சம் தடுமாறியிருக்க, கடைசி நிமிஷத்தில் ஆந்தையன் ஆட்டத்தில் இறங்க நேரிட்டது! அமேசானில் ஒரு ஆயிரம்வாலா சரடிவெடி!
ரைட்டு... ஒரு பத்தாயிரம்வாலா சரவெடியாய் டெக்ஸும்; அணுகுண்டு டப்பியாய் ஜாரோஃப்பும்; ஆயிரம்வாலா சரமாக மிஸ்டர் நோவும் வரும் வியாழன்று இங்கிருந்து புறப்படத் தயாராகி விடுவார்கள்! மூன்றுமே பிரிண்டிங் முடிந்து, பைண்டிங்கில் உள்ளதால் despatch அக்டோபர் 24-க்கு இருந்திடும்! சொந்த ஊர்களுக்கோ, விடுமுறைப் பயணங்களிலோ நீங்கள் புறப்படுவதாகயிருந்தாலும், புக்ஸ் அதற்கு முன்பாகவே உங்களை எட்டிப்பிடித்து விடுமென்று நம்புகிறோம்! கூரியர்கார்கள் – கவுத்துப்புடாதீங்க – ப்ளீஸ்!
And இந்த 3 இதழ்களுமே ரெகுலர் சந்தாக்களின் அங்கங்களே! V காமிக்ஸிற்கு மட்டும் நீங்கள் ஜுலை to டிசம்பர் ’24 இரண்டாம் பாதிக்கான சந்தாவும் செலுத்தியிருக்கும் பட்சத்தில், மூன்று இதழ்களுமே உங்களைத் தேடி வந்திடும்!
இதோ – சந்தாக்களில் அல்லாதோருக்கென நமது combo offer!
Of course, 2025-க்கான கலர் அட்டவணையும் இம்மாத புக்ஸோடு பயணமாகிடும்! அது டெக்ஸ் தீபாவளி மலருடனான இணைப்பு என்பதால், ஏஜெண்டுகளிடம் வாங்குவோராக இருக்கும் பட்சத்தில் கேட்டு வாங்கிடுங்களேன் பளீஸ்?!
ரைட்டு... நம்ம வேலை முடிஞ்சூ என்பதால் டிசம்பரின் Magic Moments ஸ்பெஷல் பக்கமாய் சீட்டியடித்தபடிக்கே லூட்டியடிக்கக் கிளம்புகிறேன்! Bye all... have a lovely weekend! See you around!
And of course - 2025 சந்தாவுக்கான நினைவூட்டலுமே folks !!