Powered By Blogger

Saturday, January 27, 2024

கதை சொல்லும் சென்னை !

 நண்பர்களே,

வணக்கம். "ரசனை" எனும் ஆறானது பொதுவாய் டிசைன் டிசைனான பாதைகளில் பயணிப்பதுண்டு ! 

*"ஒரு தோழனின் கதை" சூப்பரப்பு என்று நான் நினைத்திருக்கும் வேளையில், நீங்களோ நடுமண்டையோடு ஒரு டபுள் கொட்டை இறக்குவீர்கள் ! 

*"ஆத்தீ...இந்தக் கதைக்கு துடைப்பம் பிய்வது உறுதி !" என்ற பயத்தோடு வெளியிடும் "காலனின் கால்தடம்" கி.நா.வுக்கு சூப்பர்ஹிட் அந்தஸ்து தருவீர்கள் ! 

*சந்தாவில் இருக்கும் நண்பர்களுக்குப் பிடிப்பது கடைகளில் வாங்குவோருக்குப் பிடித்திருப்பதில்லை ! 

*And புத்தக விழாக்களில் போணியாவது சந்தா நண்பர்களின் ரசனைகளோடு ஒத்துச் செல்வதில்லை ! 

ஆனால்.....ஆனால்....ஒரு தெறி ஜனவரியில் ; ஒரு அனல் கூட்டணியில் துவங்கியுள்ள ஆண்டினில் - நம்ப இயலா ஒரு அதிசயமும் அரங்கேறியுள்ளது ! அது தான் மூன்று துருவங்களும் ஒற்றை நேர்கோட்டினில் இணைந்து நின்றிடும் அதிசயம் !! இன்னா மேட்டருங்குறீங்களா ? - தோ சொல்றேனே !

துருவம் # 1 : நாங்க !! மண்டைக்குள் ஓடும் முதல் சிந்தனைக்கு பூம் பூம் மாடாட்டம் 'ஜிங்கு ஜிங்கென்று' மண்டையை ஆட்டியபடியே, டைப் டைப்பாய் தொடர்களை / நாயகர்களை களமிறக்கும் பார்ட்டிகளான நாங்க !!

துருவம் # 2 : நீங்க !! நம் மீதான அன்பும், காமிக்ஸ் மீதான தீராக் காதலுமாய் இந்த பொம்ம புக் உலகினை தாங்கிப் பிடித்து நிற்கும் ஹெர்குலீஸ்கள் !! நல்லவற்றை நயமாக சிலாகிக்கும் கையோடு, டப்ஸாக்களுக்கு தெளிவாக டின் கட்டிவிடும் ஜூரிக்கள் !

துருவம் # 3 : Casual வாசகர்கள் ! சந்தர்ப்பங்கள் வாய்க்கும் சமயங்களில் ; புத்தக விழாக்களில் ; கடைகளில் ; ஏஜெண்ட்களிடம் - அந்த நொடியின் பொரி பறக்கும் திசையினில் உள்ள இதழ்களை on merits வாங்கிடுவோர் ! Of course காமிக்ஸ் நேசத்தில் யாருக்கும் சளைத்தோர் அல்ல தான் ; அதே சமயம் "சர்வம் பொம்ம புக்மயம்" என்று அவகாசம் தந்திடவும் வாய்ப்பில்லாதோர் ! 

இந்தப் பயணத்தின் பெரும்பான்மைக்கு - "இந்த மூணு நைனாக்களும் ஒட்டே நேர்கோட்டில இணைஞ்சு நின்னாக்கா இன்னாமா இருக்கும் ??!!" என்ற பெருமூச்சோடு தான் சுற்றி வந்திருக்கிறோம் ! ஆனால் நம்ம லயனின் 40-வது ஆண்டுக்கொரு gift ஆக இருக்கட்டுமென்று பெரும் தேவன் ஓடின் எண்ணினாரோ, என்னவோ - சென்னையின் அசாத்திய விற்பனையின் நடுவாக்கில் எனது அவா நிறைவேறிடும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !! 

Yes - நடப்பாண்டில் நாம் முன்னெடுத்திருக்கும் "ஸ்டார் நாயகர்களோடு, மாதா மாதம் crisp வாசிப்பு...!" என்ற அந்த template-க்கு சென்னைப் புத்தக விழாவின் casual வாசக வட்டமும் ஒரு மிகப்பெரிய thumbs up தந்துள்ளது !! இதோ - தொடர்கிறது சென்னையின் விற்பனை சார்ந்த அதகளங்களும், அலங்கோலங்களும் !! Here goes :

துளியும் ஐயமின்றி இந்தாண்டின் சென்னை ஹீரோ டின்டின் தான் ! ஏற்கனவே அவருக்கு இருக்கும் பிரபல்யம் ; star power பற்றி ஊருக்கே தெரியும் & பற்றாக்குறைக்கு இங்கும், FB ; வாட்சப் க்ரூப்களிலும் நீங்கள் செய்த சிலாகிப்புகள் "திபெத்தில் டின்டின்" இதழை ஒரு blockbuster ஹிட் ரேஞ்சுக்கு இட்டுச் சென்றுள்ளது ! And அதனில் நமக்கொரு பாடமுமே கிட்டியுள்ளது - காத்திருக்கும் பயணங்களில் வருஷத்தினைத் துவக்குவது இந்த மெகா ஸ்டாரோடு தான் இருந்திட வேண்டுமென்று !! So பொங்கலும், வடையும் போல ; பூரியும், கிழங்கும் போல ; பரோட்டாவும், பாயாவும்  போல, அடுத்த நாலைந்து வருஷங்களுக்காவது ஜனவரியும், டின்டின்னும் இணைந்தே காணப்படுவர் !!

Yes, டின்டின் ஊடு கட்டி அடித்துள்ளார் தான் ; காண்போரையெல்லாம் காதலில் விழச் செய்துள்ளார் தான் ! ஆனாலும் நம்பர்களில் அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டுப்புட்டு மொத இடத்தில நிற்பவர் யாரென்று தான் யூகியுங்களேன் folks ? யூகிப்போருக்கு நேபாளத்துக்கெல்லாம் டிக்கெட் தரப்போவதில்லை ; வேணும்னா மாயூரத்துக்கோ ; மாபலிபுரத்துக்கோ தரலாம் - becos அசைக்க இயலா முதலிடத்தில் இருப்பவர் 52 ஆண்டுகால ஜாம்பவானான இரும்புக்கை மாயாவி மாம்ஸ் தான் ! மொத்தம் 6 மறுபதிப்புகள் நம் கைவசமிருந்தன இந்தாண்டினில் - and ஒன்றே ஒன்று தான் நடப்பாண்டுக்கென சேர்த்தது ! அந்த இதழும் (இரும்புக்கை மாயாவிசென்னை எக்ஸ்பிரஸின் ஒரு அங்கமாக, maybe ஒரு வாரம் கழித்தே சென்னை ஸ்டாலுக்கு சென்றிருந்தது ! ஆனால் லேட்டா வந்தாலும், லேப்போ லேப்பென்று விற்பனையில் லேப்பி - "2024 சென்னையின் MOST SELLING புக்" என்ற வெற்றியினை தனதாக்கியுள்ளது ! And 6 மறுபதிப்புகளுமாய்ச் சேர்ந்து கண்டுள்ள விற்பனை - கிறுகிறுக்கச் செய்யும் ஒரு நம்பர் !! எண்ட தெய்வமே....எனக்குப் புரியில்லா !! அடுத்த வருஷத்துக்கு எந்த மாயாவியையெல்லாம் ரீபிரிண்ட் பண்ணுவதென்று இப்போதே யோசிக்க ஆரம்பிச்சுட்டோம் !!

அதே சமயம், மாயாவியின் செட் - CID லாரன்ஸ் - டேவிட் & ஜானி நீரோ-ஸ்டெல்லா ஒரு ரெண்டு, மூணு லெவெல்கள் கீழேயே இருக்கின்றனர் விற்பனையில் ! இத்தனைக்கும் "ஜானி in ஜப்பான்" ; "விண்ணில் மறைந்த விமானங்கள்" - ஒரிஜினல் அட்டைகளோடு, சமீப மறுபதிப்பு கண்டிரா இதழ்களாகவே இருந்துள்ளன ! Yet - மாயாவியில் 10 விற்றால், இவர்களது  ஆல்பங்களில் 5 தான் போணியாகியுள்ளன ! ஆனால் 'ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதை நிஜமாக்கும் விதத்தில், இன்ன பிற சமகால நாயகர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு பெருசாய் ஒரு ஏப்பமும் விட்டிருக்கிறார்கள் ! க்ளாஸிக் நாயகர்கள் தான் ; இன்றைய நவீன ரசனைகளுக்கு ஈடுதர சிரமப்படுவோர் தான் - ஆனாலும் "ஜாலிலோ-ஜிம்கானா" என்று பாட்டுப் பாடியபடியே, புதுப்புது வாசக இல்லங்களுக்கு குடிபோகும் ஆற்றல் இவர்கட்கு உள்ளது !  

ஆனால், நாக்குத் தள்ளப் பணியாற்றி, நாளெல்லாம் மேடை போட்டு ; மைக் பிடித்து, "இது புதுசுங்கோ ; செம டிப்பரன்டுங்கோ" என்று  சிலாகித்தாலும் - கம்பீரமாய் சென்னைக்குப் பயணமாகி, சட்டையின் மடிப்பு கூடக் கலையாமல் மறுக்கா கிட்டங்கிக்கே திரும்பிடும் புதுயுக நாயக / நாயகியர்  கணிசம் ! இதோ - கண்ணில் ரத்தம் வரச்செய்யும் நம்பர்களுடன் சென்னையின் "சூரப்புளிகளை" பட்டியலிடுகிறேன் :

 • *கமான்சே : கைவசம் 6 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 24 புக்ஸ் !
 • *லேடி S : கைவசம் 3 தலைப்புக்கள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 9 புக்ஸ் !
 • *காலவேட்டையர் - 1 புக் !
 • *பிஸ்டலுக்குப் பிரியாவிடை - 4 புக்ஸ் !
 • *சோடா : கைவசம் 3 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 10 புக்ஸ் !
 • *டிரெண்ட் : மொத்தம் 8 தலைப்புகள் - மொத்தத்துக்கு விற்றுள்ளது 31 புக்ஸ் !

இவை தவிர, நிறைய one shots "எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார் !" என்ற பாணியில் ஜில்லென்று ஜிப்பாக்களையும், அங்கவஸ்திரங்களையும் போட்டிக்கினு சென்னை போய், ரேக்குகளில் புது மாப்பிள்ளைகளாட்டம் போஸ் கொடுத்து விட்டு, ஊருக்குப் புறப்படும் வேளை வந்தவுடன் முதல் ஆளாய் லாரியில் துண்டைப்போட்டு கிட்டங்கி திரும்பியுள்ளதும் அரங்கேறியுள்ளது  ! 

நடப்பாண்டில் சென்னையின் சோகக் கதைகள் இவையென்றால், சாகசக் கதைகளின் பட்டியலும் கணிசம் !! As always 2 கௌபாய் ஜாம்பவான்கள் போட்டுத் தாக்கியுள்ளனர் and அவர்களே விற்பனைகளில் நமக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளோர் ! "அந்த லைனா இருக்கிற டெக்ஸ் புக்ஸ் அல்லாத்திலேயும் ஒண்ணொண்ணு தாங்க ! இங்கே அடுக்கியிருக்கிற லக்கி லூக்கில all ஒண்ணொண்ணு !" என்ற குரல்கள் சென்னையில் அடிக்கடி ஒலித்துள்ளதன் பலனாய் - நமது விற்பனை நம்பர்கள் ஆரோக்கியம் கண்டுள்ளன ! அதிலும் டெக்சின் SUPREMO ஸ்பெஷல் செம மாஸ் ! அதே போல லக்கியின் 3 லேட்டஸ்ட் மறுபதிப்புகளும் கிட்டத்தட்ட விழாவின் halfway mark-ன் போது தான் ஸ்டாலுக்குச் சென்றிருந்தன ! ஆனால் மூன்றுமே பட்டையைக் கிளம்பியுள்ளன & "தலைக்கு ஒரு விலை" நம்ப முடியாத நம்பர்களை கண்டுள்ளது !! Phew !!!

மூன்றாவதாகவுமே ஒரு கௌபாய் இம்முறை தெறிக்க விட்டுள்ளார் - and அவர் தான் நம்ம 'தளபதி' !! நவம்பரில் வந்த "தளபதி ஸ்பெஷல்" தாறுமாறு-தக்காளிச்சோறு விற்பனை கண்டுள்ளதன் புண்ணியத்தில் - கிட்டங்கியினை காலி செய்துவிட்டார் இளம் தட்டைமூக்கார் ! திருப்பூரில் நமது ஸ்டாலில் உள்ள சொற்ப புக்ஸ் தான் அதனில் எஞ்சிய பிரதிகள் !! Phew ...நவம்பரில் வெளியாகி, ஜனவரிக்குள் "SOLD OUT" என்ற போர்டை மாட்ட சாத்தியமாகிறதெனில், பாக்கியுள்ள இளம் டைகர் சாகசங்களை தொடரும் ஆண்டுகளில் போட்டுத் தாக்கிடும் 'தகிரியம்' நமதாகிறது ! யாரங்கே...? தளபதியை சயனத்திலிருந்து தட்டி எழுப்பு !! 

சென்னையின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரர் - நம்ம டெங்காலி கானகத்தின் காவலர் தான் ! "நடமாடும் மாயாத்மா வேதாளர்" இம்முறை SUPREME '60s ஹார்ட்கவர் இதழாகவும், V காமிக்சின் கலர் இதழாகவும் கையிருப்பில் இருந்தார் ! முதல் பத்தே நாட்களுக்குள் ஹார்ட் கவர் வேதாளர் ஸ்பெஷல் -2 முற்றிலுமாய்க் காலி & "வீரனுக்கு மரணமில்லை" செம மிரட்டலான விற்பனை கண்டுள்ளது ! Again ஒரு ஸ்டார் நாயகர் + நேர்கோட்டுக் கதைகள் என்பதே வெற்றியின் template !! For sure - அடுத்த சென்னைப் புத்தக விழாவின் போது கணிசமான வேதாளர் இதழ்களை நம் அணிவகுப்பினில் பார்த்திடலாம் !  

சரி, பெருசுகளாய் சாதிக்கிறார்களே ?! என்ற நெருடலைப் போக்கிட ஒரு ஸ்டைலிஷ் சமகால ஹீரோவின் வெற்றியைப் பற்றியும் சொல்லுகிறேனே ? லார்கோ இந்தாண்டினில் சுழற்றியடித்திருக்கிறார் விற்பனையில் ! "இரவின் எல்லையில்" அடித்திருப்பது ரோஹித் சர்மா சிக்ஸர் எனில், தொடரின் மீத இதழ்களுமே செம்மையாய் ஸ்கோர் செய்துள்ளன ! So லார்கோ மொதலாளியின் தொடரில் நாம் நடுவாக்கில் skip செய்துள்ளதொரு டபுள் ஆல்பத்தினை அடுத்தாண்டினில் களமிறக்கிட எண்ணியுள்ளோம் ! And அதற்குப் பேனா பிடிக்க உள்ளவர் இங்கே நம் மத்தியில் உள்ளதொரு low profile நண்பரே ! ஏற்கனவே 2022-ல் அதன் முதல் பாகத்துக்கு மொழிபெயர்ப்பினை ஆர்வத்தினில் செய்து அனுப்பியுள்ளார் & பாகம் இரண்டையும் விரைவில் முடித்து வாங்கி விட்டோமெனில் அடுத்த ஜனவரியிலும் இதே template (டின்டின் + லார்கோ + டெக்ஸ் + வேதாளர்) சாத்தியமாகிடும் ! பேனா பிடித்துள்ள / பிடிக்கவுள்ள நண்பரின் பெயரில் 2 பெயர்களிருக்கும் and எங்களுக்கு நிரம்பவே அண்மையில் உள்ளவர் ! கண்டுபுடியுங்களேன் பார்ப்போம் - நேபாள ட்ரிப் இல்லாங்காட்டியும் நேந்திரங்காய் சிப்சாச்சும் பரிசுண்டு ! 

சென்னையில் இம்முறை அடிச்சுப் புடிச்சு தங்களது உறுப்புகளுக்கு நியாயம் செயதோர் 4 பேர் ! முதலாமவர் - நம்ம ரிப்போர்ட்டர் சார் ! Yes ; இம்முறை ரிப்போர்ட்டர் ஜானியின் எல்லா சாகசங்களுமே decent விற்பனை கண்டுள்ளன ! நிஜத்தைச் சொல்வதானால், சோடாவா ? ஜானியா ? என்ற கேள்வி எழுந்த போது எனது வோட்டு முன்னவருக்கே இருந்தது ! ஆனால் விற்பனையில் பாஸ்டர்-போல்ஸ்கார் சொதப்பியிருப்பதும், ஜானி சாதித்திருப்பதும் என்னை திருட்டு முழி முழிக்கச் செய்துள்ளது !

சாதித்துள்ள பார்ட்டி # 2 : நம்ம இளவரசி மாடஸ்டி  ! சிக்கென்ற black & white இதழ்கள் ; அடக்கமான விலைகள் - என்பன காரணமா ? அல்லது ஸ்டாலுக்கு கணிசமான டாக்டர்கள் வருகை புரிந்தனரா ? என்று சொல்லத்தெரியவில்லை - but அம்மணி செம பார்மில் இருந்திருக்கிறார் இம்முறை ! 

வெற்றி நாயகன் # 3 - நம்ம ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி தான் ! ஹார்ட்கவர் தொகுப்பில் இருந்த "ரிப் கிர்பி ஸ்பெஷல்-2" அட்டகாசமாய் விற்றுள்ளது ! ரொம்பச் சீக்கிரமே இவருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தந்திட ஏற்பாடுகள் அரங்கேறினால் please don't be surprised ! மனுஷன் செம கில்லியாய் செயல்பட்டுள்ளார் & deserves a promotion !

சாதித்துள்ள ஹீரோ # 4 : ரின்டின் கேன் ! கையிருப்பில் மூன்று இதழ்கள் மட்டுமே இருந்தாலும் - செம sales ஒவ்வொன்றிலும் ! அதே போல "கதை சொல்லும் காமிக்ஸ்" தொடரின் 2 ஸ்டாக் இதழ்களும் குட்டீஸ்களுக்கு நிரம்பவே போணியாகியுள்ளது ! 

Surprise of Chennai - என்று குறிப்பிடுவதாயின் அது நமது கேரட் மீசை கிளிப்டன் தான் ! ஆறோ-ஏழோ இதழ்கள் கையிருப்பில் இருக்க, ஒவ்வொன்றிலுமே கணிசமான சேல்ஸ் ! அதிலும் "நில்..கவனி..சிரி" அதிரடி விற்பனை ! 

Maybe ...just maybe அடுத்தாண்டினில் வெறும் 6 இதழ்கள் கொண்டாவது ஒரு கார்ட்டூன் சந்தாவினை மறுக்கா கொணருவோமா ? என்ற மஹாசிந்தனை தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போதே இன்னும் கொஞ்சம் நம்பர்கள் கண்ணில்பட்டன ! And அவற்றைப் பார்க்கப் பார்க்க ஷெரிஃபீடம் பிட்டத்தில் உதை வாங்கக்காத்திருக்கும் கிட் ஆர்டினைப் போலவே முழிக்கத் தோன்றியது ! Becos என் கண்ணில்பட்ட நம்பர்கள் - ப்ளூ கோட் பட்டாளம் & மேக் & ஜாக் வரிசைகளின் விற்பனை சார்ந்தது ! ரொம்பவே ; ரொம்ப ரொம்பவே சுமார் !!! Phew !!!! ரெகுலர் தடத்திலிருந்து சில தொடர்களை MYOMS பிரத்தியேக முன்பதிவுச் சந்தாவுக்கு நகற்ற நான் தீர்மானித்தது எத்தனை உத்தமம் என்பது அந்த நொடியில் உரைத்தது ! 

அதிரடி ; சூப்பர்-டூப்பர் என்றெல்லாம் இல்லாது, அழகான, ஆர்ப்பாட்டமில்லாத விற்பனை கண்டுள்ள தொடர்களை சொல்வதாயின் :

 • சிக் பில்
 • XIII 
 • ஏஜெண்ட் ராபின்
 • ஸாகோர் 
 • டெட்வுட் டிக் 
 • ஸ்பைடர் 

ஆகியோரைக் குறிப்பிடலாம் ! 

And ரொம்பவே இக்கட்டில் நிற்குமொரு prime நாயகர் - நம்ம பிரபஞ்சத்தின் புதல்வர் தான் ! மிகச் சரியாக ஒரு டஜன் டைட்டில்கள் கையிலிருக்க, வண்டியை தள்ளி விட்டுத், தள்ளி விட்டுத் தான் ஸ்டார்ட் செய்து வர வேண்டியுள்ளது ! புரியாத புதிர்களுள் பிரதானமானதென்பேன் - தோர்கலின் இந்த அற்புதத் தொடரின் slow movement !!

To cut a very long story short : 

 • ஸ்டார் value உள்ள நாயக / நாயகியர் அன்றி, இனி வரும் காலங்களில் இரண்டாம்நிலை ஹீரோக்கள் ஜெயம் காண்பதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம் போலும் !
 • Entertainment value ; சிண்டைப் பிய்க்க அவசியங்கள் ஏற்படுத்தா கதைகள் - முன்செல்லும் பாதையினில் இவையே சக்கரங்களை உருளச் செய்திடும் !
 • பரீட்சார்த்தங்கள் ; one shots ; இவையெல்லாமே இனி பிரத்யேக முன்பதிவுத் தடத்தில் மட்டுமே ஓடக்கூடியவை ! ரெகுலர் சந்தாவில் இணைத்து தொண்டைக்குள் திணிக்கப் பார்த்தால் மூக்கில் தான் குத்து விழும் போலும் !
 • விற்பனை உத்திரவாதம் வேணுமா - பழசை அரவணைத்தே போகணும் தான் போலும் ! இதனில் யார் கடுகடுத்தாலும், யார் முகம் சுளித்தாலும் - நிதர்சனம் மாறிடாது ! 
 • So 2025 முதலாய் அடிக்கடி முன்பதிவுத் தடங்களில் தான் புதுவரவுகளையும், வித்தியாசமான ஜானர்களையும் பார்த்திட சாத்தியமாகும் போலும் ! இப்போதே அதற்கான திட்டமிடலை ஆரம்பிச்சாச்சு folks !! 

அப்புறம்....அப்புறம்....இப்போவே கட்டை விரலை தொண்டைக்குள்ளாற திணிக்கவுமே ஆரம்பிச்சாச்சு - புதுசாய் 2 தொடர்களுக்கு துண்டை விரித்த கையோடு ! நாம என்னிக்கு இண்டிகேட்டர்களுக்கேற்ப வண்டியோட்டி இருக்கோம் - இன்னிக்கு ஒழுங்குப பிள்ளை டிரைவராகிட ? ஒவ்வொரு தினமும் ஒரு பாடம் கற்றுத் தந்திடும் சூழலில், விற்பனைக்கும் - ரசனைக்கும்  மத்தியில் ஒரு "கம்பி டான்ஸ்" ஆடப் பழகிக்குவோமா guys ? 

Bye all ....see you around !  புது இதழ்கள் பற்றிய previews நாளை போடுகிறேன் ! Have a cool Sunday !


Saturday, January 20, 2024

போட்டுத் தாக்கு....போட்டுத் தாக்கு...!!

 அண்ணோவ்ஸ்,

சௌக்கியமா ? பனியடிக்கிற ராப்பொழுதிலே, ஒரு மங்கி குல்லாவ மாட்டிக்கினு தெருக்கோடிக்குப் போயி பால் பாக்கெட் வாங்கியாறவே மனுஷனுக்கு நாக்கு தள்ளும் ! ஆனா அந்த மகாஜனங்க குளிரும் பாக்காம, மழையும் பாக்காம, ஆரவாரமா நெதமும் போட்டுத் தாக்கிட்டிருக்கதைப் பாக்குறப்போ, புல்வெளியிலே குத்தி நிக்குற கமான்சே ஈட்டியாட்டம்  ரோமங்கள்லாம் இங்கன நட்டுக்கினு நிக்குது ! ரெகார்ட் ; சாதனை ; உசரம் ; அது இதுன்னு நெறய பேசலாம் - ஆனா அதை கண்ணில மெய்யாலுமே பாக்குற பீலிங்கே அலாதி  தான் ! அந்த சந்தோஷத்தை இந்த ஜனவரி நமக்குக் கண்ணிலே காட்டியிருக்குன்னா - ங்கொக்காமக்கா, அதிர்ஷ்ட தேவதை அம்மணி நெறயவே நம்மகூட லவ்ஸ்லே இருக்குதுன்னு அர்த்தம் ! அதிர்ஷ்ட அக்காவை பாராட்டற கையோட, படைச்சவருக்குமே ஒரு தாங்ஸ் சொல்லிக்கலாமுங்களா ? Thanks God Almighty !!

இன்னாடா மேட்டரு ? என்ற யோசனையா guys ? இங்கிலீஷில் போட்டுத் தாக்குவதுக்கு "பீட்டர்" ன்னு செல்லமாய்ப் பெயரெனில், இந்தக் கச்சா-முச்சா பாணிக்கு என்ன பெயர் வைக்கலாம் ? "டிக்" maybe ?? இப்போது புரிஞ்சிருக்குமே - முதல் பத்தியின் மொக்கை வரிகள் சகலமும் எங்கிருந்து உற்பத்தி ஆகியிருக்குமென்பது ? Yes, you got it right folks - 3 அத்தியாயங்கள் ; 180 பக்கங்கள் என நீண்டு செல்லும் டெட்வுட் டிக்கின் இறுதி ஆல்பத்தின் மொழிபெயர்ப்புக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாய் சுற்றித் திரிவதால், டிக்கைப் போலவே யோசிக்கவும், பேசவும் தான் தோன்றுகிறது ! இந்தக் கறுப்பினக் கௌபாய் நமக்குப் புதியவரே அல்ல தான் ; அவரது கலீஜ் டயலாக் பாணியுமே by now நமக்குப் பரிச்சயப்பட்டது தான் ! ஆனால் ஏஜெண்ட் சிஸ்கோவுக்கும், அதன் பின்பாய் (புது) லார்கோவுக்கும் நாசூக்காய்ப் பேனா பிடித்த கையோடு இந்த கூவம் பார்ட்டிக்கு மொழியாக்கம் செய்வதென்பது வெவ்வேறு துருவங்களில் பயணிக்கும் உணர்வினைத் தந்தது ! கதைக்களமோ டெக்சாசின் அத்துவானம் ; கதைக்காலமோ 1874 ; கதை மாந்தர்களோ கரடிலும், முரடிலும் ஊறிப் போன கடுவன்கள் & நாயகனோ இடியே விழுந்தாலும் அசராத அசாத்தியன் ! முதல் அத்தியாயத்துக்குள் புகுந்திடும் முன்னே மெய்யாலுமே கணிசமான starting trouble எழுந்ததை மறுக்க மாட்டேன் ; ஒரு சின்ன பிரேக்குக்குப் பின்னே எழுத ஆரம்பித்தாலுமே, தாய்ப்பசுவை தேடி ஓடுற கன்றைப் போல ரெகுலரான, சுத்தத் தமிழுக்கே பேனா இழுத்துக் கொண்டு சென்றது ! வம்படியாக யு-டர்ன் போட்டு, அந்த crude வன்மேற்குப் பேச்சுவழக்கு பாணிக்கு மாறிட நிறையவே சண்டித்தனம் செய்தது பேனா ! ஆனால் கதையும், ஆட்டமும் சூடு பிடித்தான பின்னே ஜெட் வேகம் தான் ! 

"தென்றல் வந்து என்னைக் கொல்லும்" நடப்பாண்டின் முதல் கி.நா. and இதன் கதையினை ஒரு ஐஸ்க்ரீம் குச்சியில் எழுதிமுடித்து விடலாம் தான் ! ஆனால் கதையினைச் சொல்லியுள்ள விதம், கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும், தத்தம் பிழைகளோடு காட்சி தரும் சராசரியானவர்களாய்க் காட்டியுள்ள பாணி ; வன்மேற்கில் உயிர் பிழைப்பதென்பது எத்தனை பெரிய பிரயத்தனம் என்பதை பிடரியில் அறையும் வரிகளோடு சொல்லியிருக்கும் ஸ்டைல் தான் இந்த western தொடரை சற்றே வேறுபடுத்திக் காட்டிடுகிறது ! And yes - வசனங்களில் நாசூக்கு ; நயம் என்றெல்லாம் சமரசம் செய்திடாமல் உள்ளதை உள்ளபடிக்கே போட்டுத் தாக்கியுள்ளேன் ! So நீங்கள் sensitive ஆனவராய் இருக்கும் பட்சத்தில், இந்த டெட்வுட் டிக் பயலிடமிருந்து நல்ல தூரத்தில் விலகி இருப்பதே நல்லதென்பேன் ! அப்புறம் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு ஏன் ? என்பதை மூன்றாம் அத்தியாயம் ரொம்பவே ரசனையை சொல்லிடவுள்ளது ! முழுக்க முழுக்க காட்டான்களாய் சுற்றி வரும் கதைக்களத்தில் ஒரேயொரு பளிங்குச் சிலை ஆஜராகிறது - மில்லீ என்ற பெயருடன் !! அவர் centerstage எடுக்கும் போது கதைக்கு ஏறும் கிக் எத்தனை மில்லி என்பதை நீங்க தான் சொல்லணும் guys ! Phew ...இல்லாத கேசத்தை எடிட்டிங்கில் பிய்த்துக் கொள்ளப் போகிறேன் என்பது மட்டும் உறுதி ! டிக் விடைதந்து விட்டு ஒரேடியாய்ப் புறப்படும் last சாகசம் இது என்பது கொசுறுத் தகவல் ! இதோ - இதழின் preview : 


   

ரைட்டு...பிப்ரவரியில் ரகளை செய்யக்காத்துள்ள டிக் ஒருபக்கமிருக்க, "ரெகார்ட்..உச்சம்..உசரம்" என்றெல்லாம் முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்தேனே - அது பற்றி brief ஆக !! 

சென்னைப் புத்தக விழா !! இருபது நாட்களுக்கு முன்வரைக்கும் நகரமே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சூழலில், வாசிப்புக்கு முக்கியத்துவம் தந்திட நேரமோ, முனைப்போ, பணமோ இந்தாண்டினில் சென்னை மக்களின் மத்தியில் இருக்குமா ? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது ! In fact விழா துவங்கிடுவதற்கு 1 நாள் முன்னே இந்தத்துறையில் பழம் தின்னு கொட்டை போட்டதொரு மூத்த பதிப்பகத்தாரிடம் பேசிக்கொண்டிருந்த போது - "செலவுகளை சுருக்கிக்கோங்க ; வந்ததை வரவுன்னு சந்தோஷமா ஏத்துக்கோங்க ! இவ்ளோ விக்கும் ...அவ்ளோ விக்கும்னு கணக்குலாம் இந்த வருஷம் போட்டுக்காதீங்க !" என்று சொல்லியிருந்தார் ! அது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது, விழா துவங்கிய முதல் நாளன்று & அந்த மாலையின் விற்பனையும் செம சிக்கனமாய் இருக்க, உள்ளுக்குள் தயாராகிக் கொண்டேன் - ஆங்...மீசையிலே ரொம்பலாம் மண் ஓட்டலை"ன்னு சொல்லிக்க ! எனக்குள் இருந்த பீதிக்குக் காரணமில்லாதில்லை !! 

டிசம்பரின் 30 நாட்களிலும், ஜனவரியின் முதல் 7 நாட்களிலுமாய்ச் சேர்த்து, அந்த 38 தினங்களில் நாம் தயாரித்திருந்த இதழ்களின் எண்ணிக்கை - கிறுகிறுக்கப் பண்ணும் 19 !!! 

*டிசம்பரின் ரெகுலர் தடம் - 4 இதழ்கள்

*டிசம்பர் இறுதியில் - 2 இதழ்கள் (SISCO & விங்-கமாண்டர் ஜார்ஜ்)

*ஜனவரி ரெகுலர் தடம் - 4 இதழ்கள்

*சென்னை எக்ஸ்பிரஸ் - 9 இதழ்கள் !!

ஆக total = 19 இதழ்கள் !! 

கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒரு புக் என்ற துரிதத்தில் இயங்கியுள்ளது எங்களின் தம்மாத்துண்டு டீம் - "சென்னைப் புத்தக விழா 24" என்ற இலக்கினைக் கொண்டு !! Of course அந்த 9 சென்னை எக்ஸ்பிரஸ் இதழ்களைத் தவிர்த்த மீதமெல்லாமே ரெகுலர் சந்தாக்குளுக்கென எப்படியும் தயாராகி இருக்க வேண்டியவைகளே ! ஆனால் சிக்கல் என்னவெனில், குறுகிய அவகாசத்துக்குள் கணிசமான புக்ஸ் எனும் போது முகவரிகளில் பலர் திணறிடுவர் ! அது மாத்திரமன்றி, ஒவ்வொரு ஜனவரியிலுமே சந்தாச் சேர்க்கை முழுமை கண்டிராது ! So முதல் மாதம்  அனுப்பிட நேரும் கூரியர்கள் மாமூலான நம்பரிலிருந்து குறைந்தே இருக்கும். ஜனவரியின் தேதிகள் ஓட ஓட, இதழ்களை வாசித்து விட்டு நீங்கள் அலசல்களைப் போடப் போடத் தான் சந்தாச் சேர்க்கை முழுமை காணும். So அந்த சந்தாவினில் விழும் துண்டை ஈடு செய்திட சென்னைப் புத்தக விழாவினில் விற்பனை நமக்கு நிரம்பவே அத்தியாவசியம் ! So இத்தனை கணக்குகள் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்க, புத்தக விழா துவங்கிய வாரத்தினில் வருண பகவானும் கொஞ்சம் போட்டுப் பார்க்கும் மூடில் இருக்க, முதல் வாரயிறுதிக்கு ஸ்டால் பக்கமாய்ப் போகும் சமயத்தில் வயித்தில் புளி, பருப்பு, பெருங்காயம், என்று தினுசு தினுசாய் கரைத்துக் கொண்டு தானிருந்தது ! 

ஆனால்....ஆனால்...வெயிலோ, புயலோ,மழையோ - எதுவும் எங்களை அசைச்சுக்காது !! எங்களது வாசிப்பு உத்வேகத்துக்கு இயற்கையின் சலனங்கள் கூட ஒரு தடையாகிடாதென்று - சென்னை மக்கள் பதிவு செய்த statement நமது விற்பனைகளுக்கு அசாத்திய உரமேற்றின ! சனிக்கிழமை நண்பர்களோடு பேசிக்கொண்டே இருந்தாலும், தொய்வின்றித் தொடர்ந்த விற்பனையில் ஒரு கண் இருக்கவே செய்தது ! நமக்குத் தான் அந்தக் கண்ணை நல்லாவே பெருசாய் பகவான் தந்திருக்காரே - அந்த ஒற்றைக் கண் பார்வையிலேயே விற்பனைகளின் அளவினை கணிச்சிட மாட்டோமா - என்ன ? To cut a long story short - அன்று தொடங்கிய சென்னை அதிரடிகள் இதோ இந்தப் 18-வது தினம் வரையிலும் இம்மி கூட வேகம் மட்டுப்படாது, பிரித்து மேய்ந்துள்ளன ! And நமது 12 வருட விற்பனை ரெக்கார்டை நடப்பாண்டினில் நேற்றே தாண்டியாச்சு ! So இந்த ஞாயிறுக்கு விழா நிறைவு காணும் சமயம், ஒரு மெய்மறக்கச் செய்யும் புது விற்பனை அத்தியாயத்தினை சென்னை நண்பர்கள் நமக்காக எழுதியிருப்பார்கள் !! And அதுவும் கிட்டத்தட்ட 1000 ஸ்டால்கள் கொண்டதொரு அசுர அளவிலான விழாவினில் !! Take a massive bow - you incredible people from Chennai !!  வாசிப்பின் மீதும், காமிக்ஸ் மீதும், நம் மீதும் நீங்கள் காட்டி வரும் இந்தப் பிரேமத்தினைக் கண்டு மலர் டீச்சரே புல்லரித்துப் போயிருப்பார் !! 

எது - எவ்வளவு விற்றுள்ளது ? எதெல்லாம் சென்னையைப் பராக்குப் பார்த்துவிட்டு கோஷாப்பொண்ணாட்டம் வீடு திரும்புகிறது ? என்பதெல்லாம் விழா முடிஞ்ச பிற்பாடு தெரிய வரும். போன வருஷம் போலவே ஒரு ஒட்டுமொத்த ரிப்போர்ட்டை ஜூனியர் எடிட்டர் கையில் தந்து விடும் போது இன்னும் கொஞ்சம் in depth அலசணும் ! இந்த நொடிக்கு புனித மனிடோவின் கருணைக்கு ஒரு நெடுஞ்சாண்கிடை நன்றியை சமர்ப்பணமாக்கி விட்டு நகர்கிறேன் ! 

சென்னையில் அதிரடி எனில், சிவகாசி அதிகம் பின்தங்கியிருக்கவில்லை - இந்த ஜனவரியில் !! டின்டின் துவக்கித் தந்துள்ள காட்டாற்று வெள்ளத்தினை லார்கோவும், வேதாளரும், இளம் டெக்ஸும் சீராய் வழிநடத்தினர் எனில், "சென்னை எக்ஸ்பிரஸ்" சும்மா அம்புட்டுப் பேரையும் அள்ளித் தூக்கி வெவ்வேறு கோச்களில் அமர்த்தி, 'வந்தே பாரத்' வேகத்தில் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது ! வியாழன் மாலை 7 மணி சுமாருக்கு கூரியர் ஆபிசிலிருந்து வந்திருந்த பையன் ஒரு கோணிச்சாக்கில், எண்ணிலடங்கா  டப்பிக்களை நிறைக்க பிரம்மப் பிரயத்தனம் பட்டுக்கொண்டிருப்பதை வீட்டிலிருந்தபடியே CC TV-ல் பார்த்த போது மெய்யாலுமே கொஞ்ச நேரத்துக்கு வேலை எதுவும் ஓடவில்லை !! இந்தச் சின்ன வட்டத்தின் விஸ்வரூபம் எத்தகையது ? என்பதை yet again ; அதுவும் ஆண்டின் துவக்கத்திலேயே பார்க்க முடிந்திருப்பது நாங்கள் வாங்கி வந்த வரமே !! மில்லியன் & more நன்றிகள் folks !!

And உள்ளூர்,வெளியூர் மட்டும் தானா - நாங்க அசலூரும் போவோம்லே ! என்ற டயலாக் ஒன்று தான் குறை !! டின்டின் 3 மெகா பார்சல்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு இலக்குகள் நோக்கிப் பயணமாகி வருகின்றன ! Phewwwww !!!

இதில் icing on the cake என்னவெனில் - இந்த அதிரடிகளையெல்லாம் செயல்படுத்தி வரும் எங்களது டீமின் strength இம்மியும் கூடவில்லை ; அதே பணியாட்களே இத்தனை அசகாயங்களையும் சாதித்து வருகிறார்கள் ! கால் கட்டைவிரலை கடைவாய்க்குள் திணிக்க நான் முனைவதெல்லாம் எனது டிசைன் ; எனது குசும்பு ! ஆனால் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் behind the scenes டீமுக்கு இந்த ஆகஸ்டில் ஈரோட்டில் ஒரு ஸ்பெஷல் பாராட்டைப் போட்டால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் ! What say folks ?

அப்புறம் before I sign out - இதோ இன்னும் இரு updates - இரண்டுமே விழாக்கள் சார்ந்தவை !! 

*நமது கேரவன் இங்கிருந்து நேராக திருப்பூருக்குப் பயணமாகிறது - அங்குள்ள நண்பர்களைச் சந்திக்க !


*அப்பாலிக்கா பிப்ரவரி 17 & 18 (சனி & ஞாயிறு) தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள முதல் COMIC CON விழாவிலும் நாமிருப்போம் ! அந்த டின்டின் கூப்பன் குலுக்கல் 18-ம் தேதி காலையில் நமது ஸ்டாலில் ! நேபாளுக்கு யாரை இட்டுச் செல்லக் காத்துள்ளதோ அதிர்ஷ்டம் - அன்றைக்குத் தெரிந்து விடும் ! வாய்ப்பு அமைந்திடும் பட்சத்தில் please do drop in folks ! அந்த 2 நாட்கள் பெருசாய் காமிக்ஸ் விற்பனைக்கு உதவிடுகிறதோ - இல்லியோ, அந்த Comic Con கலாச்சாரத்துக்கு நம்ம சிங்காரச் சென்னை எவ்விதம் groove பண்ணுகிறதென்று பார்க்க உதவிடும் என்பது நிச்சயம் !! Cosplay ; அது இதுவென்று நம்ம ஊர் ஜனம் கலக்கப் போவதைக் காண நீங்களும் வாங்களேன் ! இதைக் கொஞ்சம் பாருங்களேன் ஆல் : https://in.bookmyshow.com/events/chennai-comic-con-2024/ET00376976


Bye all ...have a lovely Sunday !! டின்டின் அடுத்த ஆல்பத்தினுள் புகுந்திட நான் புறப்படுகிறேன் ! See you around !! 

Saturday, January 13, 2024

சந்தோஷமே 40 !!

நண்பர்களே,

வணக்கம். சென்னையில் புத்தக விழா தடதடத்துக் கொண்டிருக்க, டின்டின் ஊரெல்லாம் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் ! ஏஜெண்ட்களிடம் வாங்கிடும் நண்பர்களும் ஜனவரியின் 4 இதழ்களையும் ஒருசேர வாஞ்சையாய் வாங்கிக் கொள்ள, கணிசமான ரிப்பீட் ஆர்டர்கள் ! ஆன்லைனிலோ வேறு மாதிரியான தெறி !! லார்கோ புது இதழோடு backissues-க்கும் சேர்த்து ஆர்டர்கள் ;  டின்டினில் ரெண்டு ரெண்டு பிரதிகள் ; ரெண்டு ரெண்டு வேதாளர் என்று குமுறி வருகின்றனர் ! அதன் பலனாய்  "திபெத்தில் டின்டின்" ஸ்டாக் நிலவரம், திபு திபுவெனக் குறைந்து வருகிறது ! ரொம்ப ரொம்ப காலமாகி விட்டது guys - மாயாவி ; டெக்ஸ் வில்லர் ; டைகர் & XIII ரேஞ்சுக்கான விற்பனையினை, வேறொரு நாயகர் ஈட்டிக் காட்டி ! ஜாம்பவான் - ஜாம்பவான் தான் என்பது yet again நிரூபணம் கண்டுள்ளது ! நமது லயனின் 40-வது ஆண்டினை kickstart செய்திட இதை விடவும் அட்டகாசமானதொரு ஆரம்ப மாதம் அமைந்திருக்க முடியாதென்பேன் ! In hindsight - லார்கோவையும் ஜனவரிக் கூட்டணிக்குள் நுழைத்தது நல்லதாகப் போயிற்று என்பது புரிகிறது ! Phew !!!

நாற்பதைத் தொட்டு நிற்பது நமது லயன் மாத்திரமல்ல, இன்னொரு ஆதர்ஷ நண்பருமே என்பதை நினைவூட்டும் வேளையிது folks ! அவர் யாரென்று பார்ப்பதற்கு முன்பாய் one question : இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? அந்த 40's க்ளப்புக்கு இந்தாண்டினில் ஒரு பெசல் ஐட்டம் திட்டமிட்டுளேன் - so சொல்லுங்களேன் ப்ளீஸ் ? 

40-ஐ எட்டிப்பிடித்திருக்கும் அந்த இன்னொரு ஆசாமியின் அடையாளமே ஒரு நம்பர் தான் ! Yes - நமது ஞாபக மறதிக்கார XIII தான் 2024-ல் நாற்பதாவது அகவைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமுகர் ! 1984-ல் பெல்ஜியத்தில் "கறுப்புக் கதிரவனின் தினம்" என்ற அந்த முதல் ஆல்பம் வெளியாகியிருந்தது - இளைஞர்களான ஷான் வான் ஹாம் + ஓவியர் வில்லியம் வான்ஸ் கூட்டணியில் ! இதோ - பாருங்களேன் 1983-ல் இந்த ஜாம்பவான்களை !! சமீப ஆண்டுகளில் பிதாமகர் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து சற்றே விலகி இருந்ததை நாமறிவோம் ! ஆனால் ஒரு மைல்கல் ஆண்டினில் அவர் தனது ஆத்ம நண்பனான XIII-ஐ விட்டு தூர விலகி நிற்கத் தான் முடியுமா ? So வரும் 19-ம் தேதிக்கு XIII மர்மம் தொடரினில் ஆல்பம் # 14 வெளியாகிடவுள்ளது - வான் ஹாமின் பங்களிப்புடன் !!  

"வான் ஹாம்" என்ற பெயரைக் கேட்டாலே சும்மா அதிருவதால் - இதனை நாம் தமிழில் வெளியிடுவது உறுதி ! Maybe 2025-ன் ஏதேனுமொரு தருணத்தில் ! அதே போல XIII மெயின் தொடரினில் ஆல்பம் # 29 நடப்பாண்டில் அக்டோபர் இறுதியில் பிரெஞ்சில் வெளியாகிறதாம் - which means இந்த 40-ம் ஆண்டில் இது இரண்டாவது ரிலீசாகிடும் பிரெஞ்சில் ! 

அத்தோட விட்டோமா பார் - என்று மூன்றாவதாகவும் ஒரு ரீலீஸைத் திட்டமிட்டுள்ளனர் அக்கட ! ஏற்கனவே XIII மர்மம் தொடரில் லெப்டினெண்ட் ஜோன்ஸுக்கு ஒரு spin-off இருக்க, தனியாக ஒரு முப்பாக தொடரினையும் ரெடி பண்ணி, அங்கேயும் ஜோன்ஸை மையப்படுத்தியுள்ளனர் ! அதன் முதல் ஆல்பம் ஏற்கனவே வெளியாகியிருக்க, ஆல்பம் # 2 - வரும் ஜுனில் வெளியாகிடவுள்ளது அங்கே ! ஆக இந்த மைல்கல் ஆண்டினில் XIII பிரெஞ்சு ரசிகர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று லட்டுக்கள் வெயிட்டிங் ! விண்ணிலிருக்கும் நண்பர் பழனி, இந்நேரத்துக்கு பிரெஞ்செல்லாம் படித்திருப்பார்  - so சூட்டோடு சூடாய் அவர் ரசிக்கப் போகும் கதைகளை நாமும் அடுத்தாண்டிலாவது ரசிக்க ஏற்பாடுகள் செய்திடலாமா folks ? 

Moving on, சென்னைப் புத்தக விழாவுக்கென தயாரான மறுபதிப்புகள் + 1 குட்டி புக் என்ற 9 இதழ் combo இப்போது ரெடி ! நாளை முதல் நமது சென்னை ஸ்டாலில் கிடைக்கும் ! ஏற்கனவே 6 இதழ்கள் அவ்விடம் சென்றிருக்க, பாக்கி மூன்றும் இன்று புறப்பட்டாச்சு ! So சென்னையில் மொத்தமாகவோ, தேவைப்படும் இதழ்களை மட்டுமோ வாங்கிக் கொள்ளலாம் ! And சென்னையில் அல்லாத நண்பர்களுக்கென இதோ இன்னொருமுறை விளம்பரம் : 

And இதோ - லக்கி லூக்கின் 3 மறுபதிப்புகளுக்குமான teasers :

ஜேன் இருக்க பயமேன் ? 

தலைக்கு ஒரு விலை !

மேற்கே ஒரு மாமன்னர் 

தவிர, இதோ சிறுத்தை மனிதனின் புக் # 2 preview ! சென்னையிலும் சிறுத்தை மனிதன் சீருக்கிறான் தான் ; ஆனால் சிறுநகர புத்தக விழாக்களிலோ அண்ணாத்தையின் ரேஞ்சே வேற ! And வெகு விரைவில் முதல் இதழினை மறுபதிப்பு செய்திட வேண்டியிருக்கும் ! 

இதுவரைக்குமான சென்னைப் புத்தக விழாவின் விற்பனையில் யார்-யார் என்ன மாதிரி இடம் பிடித்துள்ளனர் ? என்பதை மேலோட்டமாய்ப் பார்த்த போது top of the list இருப்பது டின்டின் தான் ! அவரைத் தொடர்ந்து கார்ட்டூன்கள் செமத்தியாக ஓட்டம் கண்டிருப்பதாய்த் தெரிகிறது இம்முறை ! அந்த 3 மறுபதிப்பு லக்கி லூக் இதழ்களும் சுடச் சுடப் பறந்து வருகின்றன ! இன்னும் ஒரேயொரு கார்ட்டூன் தொடருக்காவது லக்கி அளவிலான அபிமானத்தினை ஈட்டிட இயன்றால் அட்டகாசமாக இருக்கும் ! சிக் பில் அந்த இடத்தினை இத்தனை காலமாகியும் நிரப்பிடாதது ஏன் ? என்பது தான் எனக்கு வியப்பினைத் தந்திடும் விஷயம் ! சொல்லுங்களேன் guys - உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் என்று ?

And a last question : இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? 

முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் all ; இல்லம்தோறும் ஒளியும், மகிழ்வும், நலமும், வளமும் பொங்கலாய்ப் பொங்கட்டும் !! Bye all...see you around ! Have a super duper long weekend ! கெட்ட பயலான டெட்வுட் டிக்கோடு மல்லுக்கட்ட நான் கிளம்புகிறேன் ! 

பதிவினை மேலோட்டமாய்ப் படிப்போராய் நீங்க இருப்பின் - உங்கள் வசதிக்காக இதோ இந்தப் பதிவினில் நான் கோரியுள்ள கேள்விகள் 3 :

1.இந்தாண்டில் மிகச் சரியாக 40-ஐ தொட்டு நிற்கும் / தொடப் போகும் நண்பர்கள் எத்தினி பேரோ ? கொஞ்சம் கரம் தூக்குங்கள் ப்ளீஸ் ? 

2.உட்ஸிட்டி சிரிப்புப் போலீசார் (சிக் பில் & கோ) அந்த டாப் ஸ்லாட்டினை எட்டிடத் தடுமாறுவது ஏன் ?

3.இன்னும் ஒரே ஒரு கார்ட்டூன் தொடருக்கு மறு வாய்ப்புத் தருவதாக இருப்பின், உங்களின் தேர்வு யார் ? அல்லது எதுவாக இருக்குமோ ? 


Wednesday, January 10, 2024

சந்தோஷமாய் 95 !!

 நண்பர்களே,

வணக்கம். ஒரு கோடிச் சூறாவளிகள் சந்து பொந்தெல்லாம் சாத்தியெடுக்க - இது டின்டினின் பிறந்த நாள் # 95 !! 

1929 !!

*கையெறிகுண்டுகளையும் , விடுதலை முழக்கங்கள் கொண்ட நோட்டீஸ்களையும் விட்டெறிந்து வெள்ளையர்களால் அமரர் பகத் சிங் கைதான வருடம் !

*தனது சேவைகளைத் துவங்கிட அன்னை தெரசா கொல்கத்தாவுக்கு  வருகை தந்த ஆண்டு !

*அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் வீழ்ச்சி ஆரம்பம் கண்ட வருடம் !  

*ஒரு ஜாலியான நாலுகால் நண்பனோடு ஒரு பத்திரிகை நிருபர் ரயில் ஏறிய ஆண்டுமே இது ! And அந்த நிருபரின் பெயர் டின்டின்....அந்த நாய்க்குட்டியின் பெயர் ஸ்நோயி....and அவர்களைப் படைத்த அமர கதாசிரியரின் பெயர் Herge !!

Yes - மிகச் சரியாக 95 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில், The Twentieth Century என்று பொருள்படும் ஒரு பெல்ஜிய நாளேட்டுடன் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான இணைப்பொன்றில் தான் நமது ஹீரோ முதன்முதலில் உலகத்தினை சந்தித்தார் ! So இன்றைய தினமே டின்டினின் பிறந்தநாள் !! HERE'S WISHING YOU AND SNOWY A HAPPY 95th TINTIN !!!!! புதிதாய் நம் மத்தியில் ஆஜராகி, புயலாய் நம்மைக் கவர்ந்திருக்கும் இந்த ஜாம்பவானைப் பற்றி ஜாலியான சில தகவல்கள் & ஜாலியான சில கேள்விகள் !!


தொடரின் முதல் ஆல்பம் - "சோவியத் மண்ணில் டின்டின்". இந்த ஆல்பத்தின் முதல் 8 பக்கங்களுக்கு, படிய வாரிய தலையோடு டின்டின் காட்சி தருவார் ! எட்டாம் பக்கத்தின் கடைசி பிரேமில் டாப் இல்லாததொரு காரில் கிளம்பும் டின்டினின் முடி நட்டுக்கா தூக்கிக் கொள்கிறது ! அன்று முதல் அதுவே நம்மாளின் நிரந்தர ஹேர்ஸ்டைல் ஆகிப் போனது !! 

Copyright : Herge / Tintinimaginatio - 2024

இன்டர்நெட்டோ ; யூடியூபோ அறியாத பல தலைமுறைகளுக்கு டின்டினின் சாகசங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புவியியல் பாடம் மாதிரி ! சோவியத் ரஷ்யா ; ஆப்ரிக்க காங்கோ ; நேபாளம் ; இந்தியா ; திபெத் ; தென்னமெரிக்கா ; ஸ்காட்லாந்து ; மத்திய கிழக்கு ; எகிப்து ; அமெரிக்கா - என்று வாசகர்களைக் கரம்பற்றி கதாசிரியர் Herge செம டூர் அடித்திருக்கிறார் ஒவ்வொரு ஆல்பத்திலும் ! பற்றாக்குறைக்கு நிலவுக்குமே பயணம் உண்டு !! 

ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராக துவங்கிய டின்டின், பின்னாட்களில் ஒரு explorer ஆக உருமாற்றம் கண்டதற்கொரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு ! இரண்டாம் உலக யுத்தம் வேரூன்றிட, பெல்ஜியம் நாஜிக்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்க நேரிட்டது - 1940 முதலாய் ! புது ஆட்சியாளர்கள் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில், டின்டினை ரிப்போர்ட்டர் ரூபத்தில் உலவிட அனுமதித்து, ஆங்காங்கே உள்ள சமூக சூழல்களை பகடி செய்வதாய் ஏதேனும் எழுதி வைத்தால் தான் கைதாகிடலாம் என்பதை உணர்ந்த Herge - நாயகரை ஒரு களஆய்வாளராய் உருமாற்றம் காணச் செய்தார் !  

இங்கிலாந்தின் பின்னணியில் உருவான சாகசமான THE BLACK ISLAND ஒரு வித்தியாசமான ஆல்பம் ! இதனை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டி இருந்த போது - அங்கே டின்டினை வெளியிட்டுக் கொண்டிருந்த பதிப்பகத்துக்கு நிறைய மனத்தாங்கல் ! நிஜமான இங்கிலாந்தினை கதை பிரதிபலிக்கக் காணோமென்று சொல்லி, மொத்தம் 131 திருத்தங்களை முன்மொழிந்தனர் ! So ஒட்டு மொத்த ஆல்பமுமே முழுக்க மறுபடியும் (திருத்தி) வரையப்பட்டது !  

மொத்தம் 24 ஆல்பங்கள் கொண்ட இத்தொடரில் - 3 கதைகள் மாத்திரமே நெடும் சாகசங்கள் ; so 2 ஆல்பங்களில் நிறைவுற்றிடும். பாக்கி 18 சாகசங்களும் one shots ! நாம் அடுத்து வெளியிடவிருப்பவை 124 பக்க   நீளத்திலான டபுள் ஆல்பம்ஸ் !

ரைட்டு...இனி நம் மத்தியில் அறிமுக ஆல்பமாய் அதிரடி செய்திருக்கும் "திபெத்தில் டின்டின்" பற்றிப் பார்ப்போமா ?  வாசிப்பின் மும்முரத்தில் நம்மில் எத்தனை பேர் தொடரவிருக்கும் பாய்ண்ட்களைக் கவனித்தோமோ - தெரியலை ! But தொடரவுள்ள பத்தியினை வாசிக்கும் போது - 'அட...ஆமால்லே ?' என்ற கூக்குரல் உள்ளுக்குள் ஒலிக்காது போகாதென்பேன் !! 

இந்த சாகஸத்தில் வில்லன் என்று யாருமே கிடையாதென்பதை கவனித்தீர்களா folks ? யாருமே தீயவர்களல்ல இங்கே ; விதியின் விளையாட்டாய் நிகழும் விபத்தின் தொடர்ச்சியாய் மீட்புப் பணியில் டின்டின் இறங்கிட, எதிர்ப்படும் ஒவ்வொரு கதை மாந்தனுமே உதவிட தன்னால் ஆனதைச் செய்கிறான் ! And கடத்திப் போயிருக்கும் யெட்டி கூட ஈர மனசுள்ளதொரு விலங்காய் ; பாசத்துக்கு ஏங்கும் பிறவியாய் ; தனிமையை வெறுக்கும் விலங்காகவே சித்தரிக்கப்பட்டுள்ளது ! சேங் கிளம்பிப் போகும் அந்தக் கடைசி பிரேமில் தான் என்னவொரு மென்சோகம் பாருங்களேன் ?! 

Copyright : Herge / Tintinimaginatio - 2024


இங்கே வில்லன் ஜாடைக்கு தோற்றம் தரும் ஒரே உருப்படி - நம்ம ஸ்நோயியை சரக்கடிக்க ஊக்குவிக்கும் அந்த சைத்தான் மனசு மட்டும் தான் ! கொஞ்ச நேரத்துக்கு அது பேச்சைக் கேட்டு விட்டு போதையைப் போட்டுவிட்டு ரவுசு பண்றதும், அப்புறமாய் எலும்பைப் பார்த்துப்புட்டு டின்டின் தரும் சீட்டைத் தொலைப்பதும் இந்த சைத்தான் கி பச்சா கைங்கர்யங்கள் தானே !

சாகசம், நட்பு, வீரம், தேடல், பிடிவாதம் - என்று பயணிக்கும் கதையினூடே கொஞ்சமே கொஞ்சமாய் ஆன்மீகப் பரிமாணத்துக்கும் இடம் தரப்பட்டுள்ளது ஒரு முக்கிய சமாச்சாரம் ! அந்த 'வரம் வாங்கிய மின்னலார்' திடீரென "பறக்கும் பாட்டையா" ஆகும் கட்டத்தினைத் தான் குறிப்பிடுகிறேன் !! தொடரினில் ஆல்பம் # 20 ஆக "திபெத்தில் டின்டின் 1960-ல் வெளியானது ! அந்நாட்களுக்குள் Herge அவர்களுள் நிகழ்ந்த மாற்றங்களா ? அல்லது தனது உலகளாவிய வாசக வட்டத்தின் புரிதலின் பலனா ? இத்தகையதொரு sequence இடம்பிடிக்கச் செய்தது எதுவென்று   சொல்லத் தெரியவில்லை - but கதையின் ஒரு அற்புதமான கட்டமது என்று மட்டும் புரிகிறது ! கதையின் கலரிங் எழிலில் ஒரு விஷயத்தினை நாம் மறக்கலாகாது and அது தான் வெண்மைக்கு இந்த ஆல்பத்தில் வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் !! பனி ஆட்சி செய்யும் அந்த சிகரங்களுக்குள் கதை நகர்ந்த பிற்பாடு தான் என்னவொரு ரம்யம் ? 


ரைட்டு..இனி இதோ உங்களுக்கான 2 கேள்விகள் டின்டினியன்ஸ் :

Question # 1 :இந்த ஆல்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாந்தர்களுள் உங்களைக் கவர்ந்தோர் யார் ? And ஏன் ? 

*டின்டின்
*ஸ்நோயி 
*கேப்டன் ஹேடாக் 
*ஷெர்பா தார்க்கே
*சேங் 
*வரம் வாங்கிய மின்னலார் 
*பெரிய மிராசு....ஆங்...நாட்டாமை....இல்லே..இல்லே..ஜெனெரல்
*யெட்டி

காரணத்துடன் சொல்லுங்களேன் ப்ளீஸ் folks ? 

Question # 2 : கதைப்படி, டின்டினுக்கு என்ன வயதென்று சொல்வீர்கள் ? கேப்டன் ஹேடாக்குக்கு என்ன வயசென்பீர்கள் ? சும்மா ஜாலியாய் guesses ப்ளீஸ் ?

Bye all...டின்டின் பற்றி உங்களின் நட்பு வட்டங்களில் தகவல் பரிமாறிடுங்களேன் ப்ளீஸ் ? And இந்த மாக்ஸி ஆல்பத்துடனான உங்களின் selfies களையும் அனுப்பிடலாமே ? See you around !!

சென்னைப் புத்தக விழாவில் அதகளங்கள் தொடர்கின்றன !! சென்னையில் இருப்பின், please do drop in !! And ரொம்பச் சீக்கிரமே திருப்பூருக்கும் 'ஹல்லல்லலோ" சொல்லிடக் காத்திருக்கிறோம் ! 

Saturday, January 06, 2024

தி சென்னை எக்ஸ்பிரஸ் '24

 டின்டினியன்ஸ்,

வணக்கம். ஒற்றை வாரத்தில் இது மூன்றாவது தபா - நமது ஆபீஸ் அல்லோலம் + கல்லோலம் பார்த்திடுவதற்கு ! போன சனியன்று சிஸ்கோ & விங் கமாண்டர் ஜார்ஜ் புறப்பட்டதெல்லாம் நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கிளம்பிய காலமாட்டம் ஏதோ ஒரு யுகமாய்த் தென்பட, தொடர்ந்த புதனன்று டின்டின் + இளம் டெக்ஸ் + லார்கோ + கலர் வேதாளர் என்ற கூட்டணியும் கிளம்பியிருந்தது ! And அது பற்றாதென்று, நேற்று மாலை கிளம்பியுள்ளது - சென்னை எக்ஸ்பிரஸ் '24 !! 

சென்னைப் புத்தக விழா சார்ந்த பேக்கிங் பணிகள் டிசம்பரில் துவங்கிய போதே - "என்ன இல்லை ?...என்ன அத்தியாவசியத் தேவை ?" என்றொரு பட்டியல் போட்டிருந்தோம் ! மாயாவியின் கையிருப்பினை கூட்டுவது ; கொஞ்சமாகவேணும் லாரன்ஸ்-டேவிட் & ஜானி நீரோ மறுபதிப்புகளைத் தயார் செய்வது ; லயனின் 40 வது ஆண்டினில் கூர்மண்டையர் ஸ்பைடராருக்கும் இடம் தருவது - என்று தீர்மானித்தோம் ! அப்புறம் சென்னையின் செல்லப்பிள்ளையான லக்கி லூக்கை தேற்றுவது தான் கடினம், அவரது ஆல்பங்களின் கையிருப்புகளையாவது இயன்றமட்டுக்குக் கூட்டுவது என்றுமே தீர்மானித்தோம் ! அப்புறம் பள்ளிப்பசங்களிடம் செம ஹிட்டடித்துள்ள அந்தச் சிறுத்தை மனிதனின் அடுத்த ஆல்பத்தை ரெடி செய்வதென்றும் குறித்துக் கொண்டேன் ! 
'ஒரு மாசம் இருக்குல்லே...பாத்துக்கலாம் ; ரெடி பண்ணிக்கலாம்' என்று தகிரியமாய் லிஸ்டை டோட்டல் போட்டால் 9 இதழ்கள் தேறியது ! அந்த நொடியினில் எனக்குத் தெரியாது - விங் கமாண்டர் ஜார்ஜ் குனிய வைத்துக் குமுறுவாரென்பது ! So அதற்கென செலவாகிய பொழுதுகளை உபரியாகக் கருதி, தி சென்னை எக்ஸ்பிரஸ் '24  என்று இந்தத் திட்டமிடலுக்குப் பகுமானமாய் பெயரும் இட்டு விட்டேன் ! "அம்புட்டும் மறுபதிப்புகள் தானே ; இப்டிக்கா பிரிண்ட் பண்ணி, அப்டிக்கா சென்னைக்கு அனுப்புறோம் " என்ற எண்ணமும் உரம் சேர்த்தது எனக்கு ! ஆனால் பெயரளவிற்குத் தான் இவை மறுமதிப்புகளே தவிர, டிஜிட்டல் யுகம் துவங்கிய பிற்பாடு இந்த இதழ்களுள் எவற்றையுமே நாம் வெளியிட்டிருக்கவில்லை ! எல்லாமே நெகட்டிவ் எடுத்து பிரிண்ட் செய்திடும் அலாவுதீன் காலத்து டெக்நாலஜியின் பிள்ளைகள் என்பதால் - ஒன்று பாக்கியில்லாமல் அத்தனையையும் பிள்ளையார் சுழியிலிருந்து துவக்கிடும் அவசியம் எழுந்து நின்றது ! So 848 பக்கங்களை afresh தமிழில் DTP செய்வதிலிருந்து துவங்கிட வேண்டியிருந்தது !! And மறவாதீர்கள் ப்ளீஸ் - இந்தக் கூத்துக்கள் சகலமுமே டின்டின் & புதிய இதழ்களின் பணிகளுக்கு மத்தியிலேயே தான் டிராவல் செய்தும் வந்தன !! முன்னுரிமை - புதுசுகளுக்கு ; எக்காரணம் கொண்டும் DTP ; பிராசசிங் ; அட்டைப்படம்ஸ் ; அச்சு ; பைண்டிங் - என எந்தவொரு இடத்திலும் புதுசுகள் பின்னுக்குப் போயிடலாகாது என்பதை மட்டும் நம்மாட்களிடம் உரக்கச் சொல்லியிருந்தேன் !  

சத்தியமாய்த் தெரியலை - எங்கிருந்து இவ்வளவு பணிகளை நம்மாட்கள் முடித்தார்களென்று !! மொத்தம் 5 டிசைனர்கள் - உட்பக்கங்கள் ; அட்டைப்படங்கள் - என்று புகுந்து விளையாட கிட்டத்தட்ட வாரத்துக்கு மூன்று புக்ஸ் பிரிண்டிங்குக்கு துள்ளிக் குதித்துக் கிளம்பியிருந்தன !! இதற்கெல்லாம் மத்தியில் மொழிபெயர்ப்பின் மொக்கைகளைப் பூசி மெழுகிடும் பணிகள் எனக்கு !! லாரன்ஸ்-டேவிட் மத்தியில், சமீப காலத்து இதழ்களின் சகலத்திலும் "லாரன்ஸ் is the சீனியர் ; so டேவிட் அவரை மருவாதியோடு சரவணர்ர்ர்ர்ர்ர்" என்று விழிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறோம் ! அதே போலவே லக்கி லூக் - ஜாலி ஜம்ப்பர் மத்தியிலான உரையாடல்களில் மரியாதை குறைச்சல் இல்லாதவாறு எழுதியும் வருகிறேன் ! ஆனால் அந்நாட்களின் இந்த இதழ்களில் - டேவிட் ஜகஜமாய்  'என்னடா தம்பி' ரேஞ்சுக்கு லாரன்ஸை கூப்பிடுவதும், ஜாலி ஜம்ப்பர் - மொதலாளியை வா-போ பாணிகளில் விழிப்பதும் என்னைத் திரு திருவென விழிக்கச் செய்தன ! சரி, ரைட்டு,,,அவற்றைத் திருத்துவோம் என்றபடிக்கே உள்ளே புகுந்தால், சலூன்களில் ஒலிக்கும் பாடல்களில் "அழகான பொண்ணு தான் ; அதுக்கேத்த கண்ணு தான்" ரேஞ்சுக்கு முந்தைய மொழியாக்கங்கள் இருந்தன ! சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த கவிஞர் முத்துவிசயனாருக்கு இது அடுக்குமா ? அல்லது பொறுக்குமா ? So "ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ? நான் கரெக்ஷன் போட இன்றொரு நாள் போதுமா ?" என்று 'திருவிளையாடல்' பாலையா ரேஞ்சுக்கு களமிறங்க நேரிட, அடுத்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட பாதிக் கதைகளைத் திருத்தி எழுதும் படலம் அரங்கேறியது !! ரைட்டு, நமது டிரேட்மார்க் குட்டிக்கரணங்கள் ஆச்சு ; பிரிண்டிங்கும் ஆச்சு ; ஆனால் உச்ச ரஷில் உள்ள சிவகாசியில் இவற்றை பைண்டிங் செய்து வாங்கணுமே ?!!! அங்கு தான் புனித மனிடோ நமது பைண்டருக்கு இறகுகளை நல்கினார் - பறந்து, பறந்து பணியாற்றும் பொருட்டு !! So "அரக்கன் ஆர்டினி" & ஜானி in ஜப்பான்" & "சிறுத்தை மனிதன்" மாத்திரம் நான் ஊருக்குத் திரும்பிய பிற்பாடு கரெக்ஷன் பார்த்த கையோடு பிரிண்ட் & பைண்ட் ஆகிட வேண்டும் ; பாக்கி புக்ஸ் ஆறும் சென்னை bookfair வந்தாச்சு !

Of course, இவை சகலமும் மறுபதிப்புகளே & அனைத்துமே சென்னையின் புத்தக விழாவுக்கோசரம் ரெடியாகியுள்ளவைகளே ! So இப்போது தான் சந்தா செலுத்தி விட்டு பாக்கெட்டில் பொத்தலோடு இருக்கும் பட்சத்தில், no worries guys - உங்களுக்குத் தோதுப்படும் வேளைகளில் இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் ! ராவோடு ராவாய் காலியாகிப் போகுமென்ற பயம் தேவையில்லை ! தேவையான இதழ்களை மட்டும், தேவையான நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம் ! சென்னைப் புத்தக விழாவின் முழுமைக்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்வோருக்குமே அந்த 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் !! 

AND PLEASE NOTE - 9 இதழ்களும் ஒருசேர தேவையெனில் நான்கு நாட்களின் அவகாசம் அவசியமாகிடும் நம்மாட்களுக்கு ! ஏற்கனவே front desk-ல் ஸ்டெல்லா மாத்திரம் தானிருக்க, இந்த சென்னை எக்ஸ்பிரஸின் பளுவினையும் இந்த நொடியிலேயே ஏற்றி விட்டால் தடுமாறிப் போவாள் ! So ஆர்டர் செய்திடும் பட்சத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! 

ரைட்டு, இப்போதைக்கு இந்தப் பதிவுக்கு "சுபம்" போட்டு விட்டு, புத்தக விழாவில் தலையைக் காட்ட கிளம்ப முனைகிறேன் guys ! இயன்றால் இன்றிரவோ, நாளை பகலிலோ இங்கு மறுக்கா ஆஜராகிறேன் !! Bye all for now ! See you around ! Have a lovely weekend !!

Wednesday, January 03, 2024

டின்டின் தான் வாராரு....!

 நண்பர்களே,

வணக்கம்.நான்கே நாட்களின் இடைவெளியில் ஆபீஸ் மறுக்கா அல்லகோலம் கண்டு நின்றது இன்று பகலில் ! ஜனவரி '24-ன் இதழ்களின் டெஸ்பாட்ச் எப்போதென்று கேட்டிருந்த போது - "லட்சியம் புதன்" என்றிருந்தேன் ! பைண்டிங் நண்பரும் சரி, நம்மாட்களும் சரி, அந்த இலட்சியத்தை நிச்சயமாக்கிட உதவிட, புத்தாண்டின் முதல் மாதத்து ஜாம்பவான் இதழ்கள் இன்று மதியம் கிளம்பியாச்சூ ! And துளி சந்தேகமும் இன்றி, இம்மாதத்து show stealer சர்வ நிச்சயமாய் டின்டின் தான் என்பேன் ! கதைக்குள்ளோ, மொழிபெயர்ப்புக்குள்ளோ புகுந்திடும் முன்பாகவே, இதழின் அமைப்பும், அந்தத் தயாரிப்புத் தரமும் தந்திடவுள்ள impact - தாடைகளில் வேதாளர் பதித்திடும் கபால முத்திரை கும்மாங்குத்தைப் போலிருக்கும்  ! Becos - முடித்து வந்த இதழ்களைப் பார்த்த போது நானே மிரண்டு போய்விட்டேன் !! 

காலங்காலமாய் புத்தகத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துக் கிடப்போர் என்ற முறையில் - "ஆங்...நாங்க பாக்காததா ?" என்ற ஒரு தெனாவட்டு உள்ளுக்குள் இருப்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் டின்டினின் தயாரிப்புக்கென படைப்பாளிகள் போட்டிருந்த ஏகப்பட்ட  கண்டிஷன்கள் நிறையவே மலைக்கச் செய்திருந்தன ! அச்சை விடவும், பைண்டிங்கில் இங்கே 200% நிபுணத்துவம் தேவைப்படும் என்பது புரிந்தது ! And நமக்கு பணி செய்து தரும் பைண்டிங் நிறுவனங்கள், பாதி இயந்திரங்கள் ; பாதி மனித உழைப்பு என்றே செயல்பட்டுவருகின்றன ! ஆனால் டின்டினுக்கு தேவையாகிடும் finishing முழுக்க முழுக்க இயந்திரங்களிலேயே செய்தாலொழிய சாத்தியமாகாது என்பது புரிந்தது ! So முழுக்க முழுக்க புத்தக ஏற்றுமதி மட்டுமே செய்து வரும் ஒரு மெகா குழுமத்திடம் பணிகளை ஒப்படைப்பது என்று தீர்மானித்தோம் ! லட்சங்களில் பணியாற்றிடும் அந்த நிறுவனத்திடம் நமது சுண்டைக்காய் பிரிண்ட்ரன் பற்றிப் பேசவே கூச்சமாக இருந்தது தான் ! But ஒரு பரஸ்பர நண்பர் மூலமாய் பணியினை அவர்களிடம் ஒப்படைத்தோம் ! டிஜிட்டல் கோப்புகளையும், பேப்பரையும் மட்டும் அனுப்புங்கள் - முடித்த புக்ஸை டப்பிகளில் வாங்கிப் போக மட்டுமே நீங்கள் மெனெக்கெட வேண்டியிருக்கும் என்று அவர்கள் சொன்ன போது - 'அடடே...இந்த டீலிங்   கூட நல்லா தான் இருக்கும் போலிருக்கே ?' என்று மனது ஒற்றை நொடிக்கு மகிழ்ந்தது ! மறுநொடிக்கொ அவர்களது பில் தொகை என்னவாக இருக்குமென்ற எஸ்டிமேட் வந்த போது சப்தநாடிகளும் அடங்கிப் போயின ! "ஆங்....நம்ம மாமூலான பைண்டிங்கிலேயே கிட்டக்க நின்னு பாத்து-பாத்து செஞ்சு வாங்கிட்டா போதாதா ?" என்ற கேள்வியோடு உள்ளுக்குள் சபலப் பேய் தறி கெட்டு ஆட்டம் போட்டது ! ஆனால் உடன் வந்திருந்த ஜூனியர் எடிட்டர் - "இந்த ஒருவாட்டி விஷப்பரீட்சை வாணாம் ; கூடுதல் செலவு தான் ; but பார்த்துக் கொள்ளலாமே ?" என்று சொல்ல, நானும் ஒரு மாதிரியாய் ஒத்துக்கொண்டேன் ! தொடர்ந்த 15 நாட்களுக்கு அவர்களிடமிருந்து பேச்சும் லேது-மூச்சும் லேது ! போச்சுடா சாமீ என்றபடிக்கே போன் அடித்தேன் ; பதைபதைப்பை மறைக்க முயன்றபடிக்கே ! ஆனால் இங்கே அடிச்ச லப்பு-டப்பு போனிலேயே கேட்டதோ என்னவோ - "No டென்க்ஷன்ஜி ; சொன்னபடிக்கே டிசம்பர் 31 தேதிக்கு டெலிவரி பண்ணிடுவோம் !" என்றார் அவர்களது MD ! 

தொடர்ந்த நாட்களில் அவர்கள் பணியினைத் துவங்கிய போது கொஞ்சம் கொஞ்சமாய் பராக்குப் பார்க்க ஆரம்பித்தோம் ! And 'இந்தத்துறையில் பழம் தின்னு கொட்டை போட்டுப்புட்டோம்' என்ற மமதைகளை ஒரே நாளில் தீ வைக்கப் பண்ணிவிட்டார்கள் ! ஒவ்வொரு கட்டத்திலும் பணியினை அவர்கள் அணுகிய விதங்களில் ஒரு நூறு பாடம் படிக்க நமக்கு சரக்கிருந்தது ! பிராஸஸிங்கில் துவங்கி, அச்சு ; பைண்டிங் என்று அவர்கள் அடுத்தடுத்து பணிகளில் முழுக்கவே இயந்திரங்களோடு களமிறங்கத் துவங்க - 'ஆவென்று' வாய்பிளந்து நின்றோம் ! சொன்னபடிக்கே ஞாயிறு மாலையில் புக்ஸ் பேக் செய்யப்பட்டு ரெடியாக இருந்தன ! டப்பியை உடைத்து ஒரு புக்கைக் கையில் ஏந்திய போது மேலே, முதல் பத்தியில் நான் சொன்ன 'தாடையிலே வேதாளர் கும்மாங்கும்மு'  feeling பிரவாகமெடுத்தது ! Absolutely brilliant printing & making !! நாளைக்கு மட்டும் கூரியரில் புக்ஸ் உங்களை பத்திரமாக  எட்டிப்பிடித்து விட்டால் - இப்போது நான் விட்டம் வரை விரியும் வியப்போடு செய்திடும் சிலாகிப்பினை நீங்களும் செய்யாது போக மாட்டீர்கள் என்பேன் ! நமது 52 ஆண்டு காலப் பாரம்பரியத்தில் இதுவொரு Awesome உச்சம் என்றால் மிகையாகாது !

ரைட்டு...டின்டின் தயாரிப்புப் புராணம் போதுமெனில் - அதற்கடுத்த நிலை பக்கமாய்ப் போலாமா ? ஞாயிறு அதிகாலை, தூக்கம் பிடித்தும், பிடிக்காமலும் உருண்டு கொண்டிருந்த வேளையில் ஒரு மெகா சிந்தனை தோன்றியது ! அன்றைய ரோசனைகளின் பலனே இதோ - பாருங்களேன் guys :


1990-களில் தினமலர் வாரமலரில் வாசகர்களை ஜாலி டூராய் குற்றாலம் கூட்டிப் போவதும், வாசகர்கள் செம ஹாயாக கொண்டாடுவதும் வருடாந்திர நிகழ்வுகள் ! அதே போல நாமும் எப்போவாச்சும் முயற்சித்தாலென்ன ? என்று யோசிப்பேன் அவ்வப்போது ; அப்பாலிக்கா அடுத்த பணியின் மும்முரத்துக்குள் கவிழ்ந்தடித்துப் படுத்தும் விடுவேன் ! ஆனால் இம்முறை ஒரு சர்வதேச ஜாம்பவான் நம் மத்தியில் கால்பதிக்கும் குதூகலத் தருணத்தில் நண்பர்களில் ஒருவரை இந்த சாகசம் துவங்கிடும் நேபாளத்துக்கே அனுப்பினாலென்ன ? என்று குறுகுறுத்தது ! நமக்குத் தான் மண்டைக்குள் குடைய ஆரம்பித்துவிட்டால் இருப்பு கொள்ளாதே !! So - இதோ, டின்டின் திபெத் நோக்கிப் பயணிப்பதை ரசிக்கும் கையோடு நேபாளம் போக நீங்களும் ரெடியாகிடலாமா ? 

இந்த அறிவிப்பு சார்ந்த உங்களின் reactions என்னவாக இருக்குமென்று அறிந்திட செம ஆவல் ! Sometimes நான் ஜிங்கு ஜிங்கென்று குதித்தபடிக்கே எதையேனும் அறிவிக்கும் தருணங்களில் இங்கு கொட்டாவிகள் திமிறியும் உள்ளன & vice versa too ! ஆகையால் ஓவராய் துள்ளிக்குதிக்க இக்கட முகாந்திரம் உள்ளதா ? அல்லது கொட்டாவிகளே மிகுந்திடப் போகின்றனவா ? என்று சொல்லுங்க பாஸ் ! அப்புறம் அறிவிப்புக்குள் இன்னொரு  அறிவிப்பும் இருப்பதைக் கவனியுங்களேன் !

பாக்கி இதழ்கள் பற்றி நாளை காலை update செய்கிறேன் ! இப்போதைக்கு bye guys ....see you around !சென்னையில் விழா ஆரம்பிச்சாச்சு & முதல் நாள் மாலையே விற்பனையில் அதிரடிகளும் ஆரம்பம் !! PLEASE DO VISIT US FOLKS !!

Monday, January 01, 2024

சிம்மத்தின் சந்தோஷ ஆண்டு !

 நண்பர்களே,

வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், மகிழ்வும்  இல்லமெங்கும் பிரவாகமெடுக்கும் அற்புத வருஷமாய் இந்த 2024 அமைந்திட புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! புது நம்பிக்கைகளோடு, புது இலக்குகளோடு நமது ஒவ்வொரு தேடலும் வெற்றியில் முடியட்டும் !

And yes - புலர்ந்துள்ளது நமது லயனின் 40-வது பிறந்தநாள் ஆண்டுமே கூட ! இந்த ஜூலை புலர்ந்திட்டால், செங்கோலை கையில் பிடித்து நிற்கும் நமது சிங்கம் சாருக்கு கேக் மீது 40 மெழுகுவர்திகளைச் செருகிட வேண்டி வரும் ! இதோ - அதற்கு முன்னோட்டமாய் இப்போதே ரெடியாகி இருக்கார் பாருங்களேன் !  

கடந்து சென்றுள்ள இந்த நான்கு தசாப்தங்களுக்குள் நிறைய flashbacks பார்த்தாச்சு ; பேசியாச்சு ; எழுதியாச்சு - so "40 வருஷங்களுக்கு முன்னே கம்பு சுத்தினேன் பாரு"ன்னு மறுக்கா ஆரம்பிக்க எனக்கே தம் லேது ! ஆனாலும் "1984" என்ற வருஷம் மனதில் நிழலாடும் போது, ஏகமாய் mixed feelings மனசுக்குள் பிரவாகமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை !  தென்பட்ட அத்தினி சுவர்களிலும், 'ணங்கு..ணங்கு..ணங்கு' என்று முட்டிக் கொண்ட புளகாங்கித அனுபவத்தினை(!!!) அந்த ஆண்டின் முதல் பாதியும், வீங்கிக் கிடந்த கபாலத்துக்கு ஒத்தடம் கிடைத்த அனுபவத்தினைப் பின்பாதியும் தந்திருந்தன ! அன்றைக்கு யாரும் என்னிடம் வேலை மெனெக்கெட்டு - "ஏண்டாப்பா டேய்- இந்தத் துறையிலே 40 வருஷம் குப்பை கொட்டுற வரம் உனக்கு இப்போ கிடைச்சா நீ ஹேப்பியா இருப்பியா ?"ன்னு ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள் தான் ! ஆனால் அப்படியொரு வேளை யாரேனும் கேட்டிருந்தால், 'ஆத்தீ...கடிச்சு,கிடிச்சு வைச்சிருவாரோ இந்தாளு ? கொஞ்சம் விலகியே போயிடுவோம் !' என்று தான் நான் ஜகா வாங்கியிருப்பேன் !  480 மாதங்களுக்குப் பின்னேயும், சிங்கத்தின் தோளில் கரம் போட்டுப் பயணம் செய்யும் வரம் தொடர்ந்திடும் என்று ஒரு ரம்யமான சொப்பனத்தில் கூட அன்றைக்கு கற்பனை பண்ணத் தோன்றியிராது தான் ! But such is the beauty of life !!! Thank you Gods above !!!

பல்லாயிரங்கள், லட்சங்கள் என்றெல்லாம் இன்றைக்கு நமது விற்பனை நம்பர்கள் கிடையாது தான் ! So "40 வருஷங்களில் இதைத் தூக்கி நட்டி வைச்சுட்டேன் ; அதை நிமிர்த்திப்புட்டேன்"  என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்த முகாந்திரங்கள் லேது ! And yes - அகவைகள் 40 கண்ட பின்னேயும் amateurish ஆக பிழைகளும், பிசகுகளும் தொடர்ந்திடவே செய்கின்றன தான் ! So அனுபவத்தில் அசகாய சூரனாகிப்புட்டேனாக்கும் என்று மார் தட்டவும் வழி நஹி ! ஆனாலும் ஒரு அழகான நேசத்தினை வாழ்க்கையாய்க் கொண்டிடும் வாய்ப்பும், அதனை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கும் சாத்தியமும், அன்பே உருவானதொரு நண்பர் வட்டத்தை ஈட்டிடும் சூழலும் கிட்டியிருப்பது ஆண்டவனின் கொடையே எனும் போது,  குருத ஓட்டிடுவது குண்டுச்சட்டிக்குள் தான் என்றாலுமே மனம் துள்ளுகிறது !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாய் முத்துவின் 50-வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன தான் ; அது சந்தேகமின்றி இதை விடவும் பெரியதொரு மைல்கல் தான் ! And yes - அந்த 50 ஆண்டுகளில், துவக்கப் 15 ஆண்டுகளுக்குப் பின்பான பாக்கி 35 ஆண்டுகளும் வண்டி ஒட்டியது அடியேன் தான் ! Yet - விகிதாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், எனது பங்களிப்பு பகிர்ந்ததொன்றே என்பதை மறுப்பதற்கில்லை ! So லைட்டாக அங்கே அடக்கி வாசிக்கவே தோன்றியது எனக்கு. ஆனால் இங்கோ வண்டிக்கு மாடு தேடிய நாள் முதலாய், மாட்டுக்குத் தீவனம் வைத்து, தண்ணி காட்டி, சாணி அள்ளியது வரை சகலமும் ஆல் இன் ஆல் ஆந்தைராஜா தானெனும் போது - இங்கே நோ நெருடல்ஸ் at all ! Oh yes - இந்தப் பேட்டைகளில் எப்போவுமே புது ரௌடியும் ஞானே ; மூ.ச.க்களில் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கிப்புட்டு..."அடுத்த பஞ்சாயத்து எந்த ஊரிலேப்பா ?" என்று கெத்து காட்டும் சுனா-பனாவும் ஞானே எனும் போது, இந்த 40-வது பிறந்தநாள் ஆண்டினை ரகளையாய் முன்னெடுத்துச் செல்ல உள்ளுக்குள் துருதுருக்கிறது ! இந்தாண்டு முதலாய் இலகுரக சுவாரஸ்ய வாசிப்புகளுக்கே முன்னுரிமை என்ற டிராக்கில் ரெகுலர் அட்டவணை பயணிக்கவிருப்பதால், வந்தே பாரத் ரயில்களின் வேகங்களை எதிர்பார்க்கலாம் ! And சிக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாமே ஒரு புது வந்தே பாரத் அறிவிக்கப்படுவதை போல - சைக்கிள் கேப் கிடைத்தாலும் டிசைன் டிசைனாய் ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் !  

And இந்த நொடியில் உங்களிடம் இரு கேள்விகள் !! 

கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?

கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?

Bye all folks....have a wonderful...wonderful year ahead !! God be with us !!