நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு அட்டவணையும் ரெடியாகிடும் போது, நீங்கள் அதனைப் பார்த்திடுவது ஒரு பாணியிலென்றால், அதையே நான் பார்த்திடுவது முற்றிலும் வேறொரு கோணத்திலிருக்கும் ! "இதிலே ரெம்போ சுலபமான பணியா எது இருக்கப் போகுது ? எது உறுதியான ஹிட்டடிக்கப் போகும் புக் ? எது கணிசமான சர்ச்சையினை உண்டாக்கப் போகும் புக் ? எது நம்ம குறுக்கை கழற்றப் போகும் புக் ?" என்ற ரீதியினில் ஆராய முனைவேன் ! நாளாசரியாய், கி.ந. தடமானது சுருங்கிப் போன பிற்பாடு, சர்ச்சைக் களங்களும் குறைந்து விட்டன ; so இப்போதெல்லாம் அவற்றை எண்ணி பெருசாய் மொக்கை போடும் அவசியங்களும் இருப்பதில்லை ! Therefore இப்போதெல்லாம் புருவங்களை சுருங்கச் செய்வது - "நடப்பாண்டில் எந்த ஆல்பத்தில் வேலை நொங்கை எடுக்கக் காத்துள்ளதோ ?" என்ற கேள்வி மாத்திரமே !
ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடும் போதெல்லாம், "சொந்த காசிலே சூனியம் வைச்சுக்காம, சுலபமா பிளான் பண்ணனும்" என்ற மகாசிந்தனை எழும் தான் ; ஆனால் அட்டவணைக்குள் பணியாற்றப் புகுந்திடும் போது, "அத்தாச்சிக்கு இடமில்லைன்னு சொல்லப்படாது ; இங்கே நொழைச்சிடுவோம் ! அப்புச்சிக்கு ரெகுலர்ல சீட் இல்லே ; அவரையும் இந்த பொந்திலே புகுத்திடுவோம் !" என்ற கதையாய் சிக்கலான பார்ட்டிக்களையும் எங்கெங்கேயாச்சும் இணைத்து விடுவது வழக்கம் ! And கேட்லாக் பிரிண்ட் ஆகும் போதே தெரியும் - இன்ன இன்ன இதழ்கள் வெளியாகிடவுள்ள மாதங்களிலெல்லாம் seven and a half வெயிட்டிங் என்று !
இந்த 7 + 1/2 சிரமங்களிலேயே இரண்டு விதங்கள் உண்டு !
ஒன்று - எக்கச்சக்கப் பக்கங்கள் கொண்ட ஸ்பெஷல் இதழ்கள் - இதோ காத்துள்ள 'தல' டெக்சின் THE SUPREMO ஸ்பெஷல் போல ! வண்டி வண்டியாய் முடித்துத் தள்ளினாலும், அங்கே மேற்கொண்டும் மேற்கொண்டும் வேலைகள் துளிர்விட்டுக் கொண்டே இருப்பதுண்டு ! ஆனால் இங்கொரு flip side-ம் உண்டு தான் - நேர்கோட்டுக் கதைகளே எனும் போது பிட்டத்துக்கு பசை போட்டு பணியாற்ற ஆரம்பித்தால், கரை சேர்ந்து விடலாம் தான் !
சிரமத்தின் விதம் # 2 தான் நாக்காரை மெய்யாலும் தொங்கப் பண்ணும் ரகம் ! இங்கே கதைகளே செம அடர்த்தியாய் இருப்பதுண்டு ! முதல் வாசிப்பில் முழுசையும் புரிஞ்ச பிழைப்பே இருக்காது ; 'காதல்' பரத்தையும், 'சேது' விக்ரமையும் ஒன்றாய் புடிச்ச மாதிரி காட்சி தருவோம் ! And கூகுளாண்டவர் ஆசிகளின்றி உள்ளுக்குள் பயணம் பண்ணினால், பூசணிக்காய் சைஸ்களுக்கு செமத்தியாய் பல்புகள் சல்லிசாய் வாங்கிடலாம் ! And இவற்றுக்குள் பேனாவோடு பயணிப்பதென்பது, வெறுங்காலோடு கோடைகாலத்துக் காவிரிப் படுகையில் நடப்பதற்கு சமானம் ! மார்ட்டினின் "கனவுகளின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" ; அர்ஸ் மேக்னா ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் - போன்ற பணிகளை இந்த லிஸ்ட்டில் சொல்லலாம் !
சில தருணங்களில்.........ரொம்பவே சில தருணங்களில்.......... சிரமம் # 1 & சிரமம் # 2 கூட்டணி போட்டுக் கொள்வதுண்டு - "ஏகப்பட்ட அடர்த்தியான கதைகள் ஒரே ஆல்பத்தில்" என்ற குண்டு புக்காய் ! அங்கே சர்வ நிச்சயமாய் சட்னி என்பது முன்கூட்டியே உணர முடியும் ! இதற்கொரு prime உதாரணம், சென்றாண்டின் The FIFTY & FOREVER ஸ்பெஷல் ! CIA ஏஜெண்ட் ஆல்பா - 3 பாக த்ரில்லரில் ; புது வரவு சிஸ்கோ - 2 பாக த்ரில்லரில் ; டேங்கோ - நெடும் சோலோ த்ரில்லரில் ; "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - 5 பாக ஆக்ஷனில் etc etc என்ற திட்டமிடல் - ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் மேட்சை டிரா பண்ண நம்மாட்கள் படப்போகும் கஷ்டத்தை விடவும் கூடுதலானதொன்று ! ஆனால் கொரோனா லாக்டௌன் # 2-ன் புண்ணியத்தில் அந்த ராட்சஸப் பணிகளை ஒப்பேற்ற முடிந்தது !
"சரி, இதெல்லாம் இப்போ எதுக்குடாப்பா ?" என்கிறீர்களா ? இருக்கே...காரணம் இருக்கே....சிரமம்ஸ் # 1 & 2 ஒன்றிணைந்ததொரு இதழாய் நடப்புச் சந்தாவில் "சம்மர் ஸ்பெஷல்" உள்ளதே !! காத்திருக்கும் அந்த blockbuster சார்ந்த எனது புலம்பல்களே இந்தப் பதிவு !
சம்மர் ஸ்பெஷல் ! இந்தப் பெயரைக் கேட்டாலே அப்படியே ஜெல்லி ஐஸ்க்ரீம் தொண்டைக்குள் நழுவும் இதம் தான் நினைவுக்கு வருவதுண்டு ! மினி-லயன் வெளிவந்து கொண்டிருந்த நாட்களின், கோடை விடுமுறைகளில், கைக்குச் சிக்கிய ஜாலியான கதைகளுடன், ஜாலியான சைஸ்களில் தயாரித்திடும் அந்த "சம்மர் ஸ்பெஷல்" இதழ்கள் அத்தனை ரம்யமானவை ! அந்த நினைப்பினில் நடப்பாண்டில் ஒரு "சம்மர் ஸ்பெஷல்'23" இதழைப் போட்டுத்தாக்கிடலாம் என்ற எண்ணம் தோன்றியது ! And ஒரு கதம்ப குண்டு இதழுக்கு போன வருஷத்தைப் போலவே பிரத்தியேக அனுமதி வாங்கி வைத்திருக்க, ஆல்பா ; டேங்கோ ; ரூபின் & சிக் பில் என்ற கூட்டணியினைக் கொண்டு, சம்மரை ஸ்பெஷலாக்கிடலாம் என்று திட்டம் !
அட்டவணையும் ரெடி ; கதைகளும் ரெடி ; ஆனால் இது எப்படியும் பெண்டைக் கழற்றாது விடாதென்ற உணர்வுமே உள்ளுக்குள் ரெடியாக இருந்தது ! பொதுவாய் இது போல் சிக்கலான வேலைகள் எந்தெந்த இதழ்களில் இருக்குமோ, அவற்றையெல்லாம் நான் வருஷத்தின் கடைசிக்குத் தள்ளி விடுவது வாடிக்கை ! ரிப்போர்ட்டர் ஜானி ; மார்ட்டின் ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் போன்றோர் கடைசி க்வாட்டர்களில் பெரும்பாலும் தலைகாட்டுவதன் பின்னணிக் காரணமே இது தான் ! ஆனால் இதுவோ பெயரிலேயே "சம்மர்" என்று கொண்டிருக்கும் இதழ் ; சோம்பல்பட்டு இதனையுமே நான் டிஸம்பர்க்குக் கொண்டு போக நினைத்தேனென்றால், 50-50 என்ற சந்தேகத்தில் இருப்போர் கூட - "ஈ ஆள் confirm ஆயிட்டு பிராந்தன் தன்னே !!" என்று தீர்மானித்து விடுவர் என்று தோன்றியது ! So கோடை காலத்தின் முடிவுக்குள் கொணர வேண்டிய நிர்ப்பந்தம் !
கதைகள் நான்கு ! நான்கில் ஒன்று சிக் பில் கார்ட்டூன் ; நேர்கோட்டுக் கதை & ரொம்ப காலமாய் கருணையானந்தம் அங்கிள் எழுதி வரும் கதையும் கூட ! So ஒன்றை அவரிடம் ரொம்ப முன்னமே தள்ளிவிட்டிருந்தேன் ! One down ...three to go & இந்த மூன்றையும் நானே கையாள்வதென்று மூலை சேர்த்து வைத்திருந்த நிலையில் நமது டீமில் சமீபமாய் இணைந்திருந்ததொரு சகோதரி ALPHA-க்கு சரிப்படுவாரோ ? என்ற கேள்வி எனக்குள் இருந்த சோம்பேறித்தடியனுக்கு எழுந்தது ! அவர் ஒரு எழுத்தாளரும் கூட ; நாவலொன்றை தமிழில் எழுதி அது பப்லிஷ் ஆகவும் செய்திருந்தது ! பற்றாக்குறைக்கு இந்த ALPHA ஆல்பம் Cinebook இங்கிலீஷிலும் வெளியிட்டிருந்ததொன்று எனும் போது, தமிழாக்கத்துக்கு ரொம்பவே உதவிடும் என்று நினைத்தேன் ! So அவருக்கு ஒரு 4 பக்கங்களை அனுப்பி வைத்து மொழிபெயர்க்கச் செய்து பார்த்தேன் ; மோசமில்லை என்பது போலிருந்தது ! ரைட்டு...சிக் பில் & ஆல்பா - என ரெண்டையும் தள்ளி விட்டுவிட்டால், ரெண்டு மாத்திரமே நமக்கு ! என்றபடிக்கு காலாட்டியபடியே டின்டின் மொழிபெயர்ப்புக்குள் பிசியாகி இருந்தேன் ! ஆனால் நாட்களின் ஓட்டம் மின்னலாய் இருக்க, "மழை காலம் ஆரம்பிக்கும் முன்னே சம்மர் ஸ்பெஷலை கண்ணிலே காட்டிடணும்டா ராசா !" என்று பட்டது !
டேங்கோ ! தனிவேங்கை கதைகள் எப்போதுமே ஒரு மாறுபட்ட flavor கொண்டிருப்பது வாடிக்கை ! And இதுவோ சமுத்திரத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு தனிவேங்கை எனும் போது, ரொம்பவே ஈர்த்தது ! பற்றாக்குறைக்கு இந்தத் தொடரின் சாகசங்கள் நிகழ்வதெல்லாமே நாம் (காமிக்ஸ்களில்) அதிகம் பார்த்திராத தேசங்கள் ; தீவுகள் என்ற போது, ஒரு எக்ஸ்டரா கிக் இருந்தது போல்பட்டது எனக்கு ! போன வருஷம் வெளியான அந்த முதல் ஆல்பம் செம ஹிட்டாகிட, அப்போதிலிருந்தே நான் இவருக்கு fan ! So தொடரின் ஆல்பம் # 3 - "பனாமா படலம்" பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! டேங்கோவின் மொழிபெயர்ப்பில் ஒரு வித்தியாச பாணியுண்டு ! கதையில் மாந்தர்கள் குறைவு என்பதால், கதாசிரியரும் ஒரு பங்கேற்று அவரது monologues வழியாக கதையை நகர்த்துவது இங்கே வாடிக்கை ! And இதில் சிக்கல் என்னவென்றால் ரொம்ப லேசாய் நாலைந்து வாக்கியங்களை ஒற்றை பிரேமுக்குள் அடக்கி விடுகிறார் ! And பிரெஞ்சில் எப்படியோ, தெரியலை - இங்கிலீஷில் நறுக்கென்று சொல்லி விடுகிறார்கள் ! ஆனால் அதையே நாமும் பின்பற்றினால் மணிரத்னம் பாணியாகத் தென்படும் ; so நீட்டி முழக்கி சொல்வதற்குள் நாக்கு தொங்கிவிடுகிறது ! ஒரு மொழிபெயர்ப்பாளனாய் இங்குள்ள பிரதான சவாலே - நாலைந்து வாக்கியங்களை ஒரே இடத்தில் இணைக்கும் போது, ஒவ்வொரு வரிக்குமிடையே ஒரு நூலிழையாச்சும் தொடர்பு இருப்பது போல, சீரான ஒரே டெம்போவில் சம்பாஷணையினை நகர்த்திட வேண்டும் என்பதே ! இம்முறை கதைக்களம் பனாமா ! And ரொம்ப ஆழமான கதை முடிச்சு என்றெல்லாம் கதாசிரியர் மெனெக்கெடவில்லை ; சிம்பிளானதொரு knot சகிதம் ஆக்ஷன் + சித்திர மேளாவாய் உருவாக்கியுள்ளார் ! டேங்கோ & மரியோ ஜோடி இந்தத் தொடரின் ரீல் நாயகர்களென்றால், நிஜ நாயகர்கள் கதாசிரியரும், ஓவியரும் தான் என்பேன் - இருவரும் அத்தனை ஒன்றிப் போய் கலக்கியுள்ளனர்!
ஒரு மாதிரி தக்கி முக்கி TANGO மொழிபெயர்ப்பினை முடித்து விட்டு ரூபின் பக்கமாய்த் திரும்பினால் - uffffff ....காத்திருந்தன ஒரு லாரி லோடில் பணிகள் ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் - இந்தக் கேரட் கேச அழகியின் கதையின் பாணி ரொம்பவே complex என்று ! Mythic என்ற புனைப்பெயரில் கதையெழுதியுள்ள இந்தக் கதாசிரியருக்கு நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் அந்த இடியாப்ப பாணியென்றால் ரொம்பவே இஷ்டம் போலும் ; ரூபின் கதைகளுக்குள்ளும் ஒரு வித்தியாச பயணப் பாதையினை வகுத்திருக்கிறார் ! And ரிப்போர்ட்டர் ஜானியுடனான ஒற்றுமை அத்தோடு முற்றுப் பெறவில்லை ; கடைசி ரெண்டு பக்கங்களுக்குள் அத்தனை மர்மங்களுக்குமான விடைகளையும், ஜானியின் ஸ்டைலில் போட்டு சரமாரியாய் இங்கேயும் தாக்கித் தள்ளுகிறார் ! "ரைட்டு...இந்த இடத்தில இப்புடி ஒரு ட்விஸ்ட் வரணுமே....? இந்தாள் ஏதாச்சும் லொள்ளு பண்ணனுமே ?" என்ற ரீதியில் கதையுடனான பயணத்தில் நமக்குத் தோன்றினால், நிகழ்வது நேர்மாறாக இருந்திடுகிறது ! அதிலும் இங்கே கைரேகைகளைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டம், ரூபினை மட்டுமல்ல, நம்மையும் சிண்டை பிய்த்துக் கொள்ளச் செய்யும் ! And சோடா கதைகளை போலவே சித்திரங்களில் மெலிதான சில பல clues விதைக்கப்பட்டுள்ளன கதை நெடுகிலும் ! பர பரவென்று ஓட்டமெடுத்த எனக்கு, கிளைமாக்சில் ஏதோ உதைக்கிறதே ? என்ற உணர்வு தலைதூக்கியது ! கையிலிருந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் கதைக்கு நிகரான complex சமாச்சாரம் எனும் போது மறுக்கா, மறுக்கா படிச்சும் புரியலை ! அப்புறம் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பம் முதலாய் 'பொம்ம' பார்த்துக் கொண்டே வந்தால் தான் புரிந்தது - சித்திரங்களில் இருந்த சில clue-க்களை நான் கோட்டை விட்டிருந்த சமாச்சாரம் ! மண்டையெல்லாம் காயச் செய்தாலும், இது போலான கதைகளில் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதுண்டு ; 'நங்கு நங்கென்று' சுவற்றில் முட்டிக்கும் உணர்வு தோன்றினாலும், அதைத் தூக்கிக் கடாச மனசே வராது ! Same here !! தப்பான புரிதலோடு எழுதிப் போயிருந்த சுமார் 15 பக்கங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு மறுக்கா பயணித்தேன் ! அயர்வாக இருந்தது தான் ; பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம், வண்டி வண்டியாய் இருந்த வரிகளை தமிழுக்குக் கொணர்வதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது தான் - ஆனாலும் சுவாரஸ்யம் மட்டும் குன்றிடவில்லை ! In fact இந்தக் கதை முழுக்க ருபினுமே என்னைப் போலவே மண்டையை பிய்த்துக் கொண்டே தான் பயணித்திருக்கிறார் ; "டிடெக்டிவ்" என்பதற்காக எட்டு ஊருக்கு ஊடு கட்டியெல்லாம் அடிக்கவில்லை ! ஒரு மாதிரியாய் கதையின் முடிச்சை புரிந்து கொண்டதால், கதையின் பளு ரொம்ப அழுத்தாதது போல் தோன்றிட, கதைக்கு "சுபம்" போட்ட சமயம் எதையோ உருப்படியாய் செய்து முடிச்ச பீலிங்கு !!
ரைட்டு...இனி ஆல்பா & அதுக்கப்புறம் சிக் பில் என்று எடிட்டிங் மட்டும் பண்ணிட்டாக்கா "சம்மர் ஸ்பெஷலுக்கு" மங்களம் பாடிடலாம் என்றபடிக்கே தெம்பாக ஆல்பாவுக்குள் புகுந்தேன் ! அடடே..அடடே... "இரத்தப் படலம்" இரண்டாம் சுற்றின் ஓவியரான Jigounov கைவண்ணத்தில், ஒவ்வொரு ஆளும், ஒவ்வொரு அம்மணியும், ஒவ்வொரு காரும், ஒவ்வொரு ஊரும் அழகோ அழகாய் காட்சி தந்தன(ர்) ! And செம விறுவிறுப்பாய் கதை ஆரம்பம் காண, வேக வேகமாய் பக்கங்களைப் புரட்டினேன் ! ஆனால் ஒரு ஏழோ எட்டோ பக்கங்களிலேயே தெரிந்து விட்டது, இது நான் எதிர்பார்த்திருந்த உரிச்ச வாழைப்பழம் அல்ல என்பது ! கதைக்கு கணிசமாகவே layers இருப்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்த போது, கதாசிரியர் யார் ? என்று ஒருவாட்டி புரட்டிப் பார்த்தேன் ! Surprise ...surprise ...அதே MYTHIC சார் தான் இங்கேயும் பேனா பிடித்திருக்கிறார் ! In fact ஆல்பா தொடரினை துவக்கிய ஒரிஜினல் கதாசிரியர் மரித்துப் போனதைத் தொடர்ந்து ஆல்பம் # 3 முதலாகவே இங்கே இவர் தான் கதைகளை எழுதி வருகிறார் என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது ! "ஆத்தீ..இவர் இடியாப்பத்தை, நூடுல்ஸோடு கலந்து, புது பாணியில் சமைக்கும் ஜாம்பவானாச்சே !!" என்ற உதறல் லேசாய் உள்ளுக்குள் எடுக்க ஆரம்பித்த வேளையிலேயே மொழிபெயர்ப்பிலும் உதறல் தென்பட ஆரம்பித்தது ! To cut a long story short - ரொம்பவே complex ஆன இந்தக் கதைக்குள் நம்மளவிற்கொரு புதியவரை இறக்கி விட்டது என் பிழையே என்பது புரிந்தது ! ஊஹூம்...இது பட்டி டிங்கரிங் பார்த்து செப்பனிடக்கூடிய சமாச்சாரமே அல்ல என்பது ரொம்பவே சீக்கிரமாய் புரிஞ்சு போன நொடியில் டயர் ரெண்டுமே பஞ்சரான வண்டி போல உணர்ந்தேன் ! 46 பக்கங்கள் with a complicated storyline - முழுசாய்க் காத்திருப்பது புரிந்தது !
மெய்யாலுமே வியர்த்து விட்டது கொஞ்ச நேரத்துக்கு ! இந்தக் கதையையே இப்போதைக்கு ஓரம்கட்டி விட்டு வேறு எதையாச்சும் உள்ளே புகுத்தலாமா ? என்றெல்லாம் யோசிக்கும் அளவிற்குப் போயிருந்தேன் ; ஆனால் பின்னட்டையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தினை ஆல்பா ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இங்கே என் சுந்தர வதனத்தை ஸ்டிக்கராக்கி ஓட்டினால் கூட முழுசையும் மறைக்க முடியாதென்று தோன்றியது ! தம் கட்டிக்கொண்டு ஆரம்பித்தேன் - ஹங்கேரியிலிருந்து துவங்கிய அந்தக் கதையினை and உள்ளே போகப் போகத் தான் புரிந்தது, சமகாலக் கதைகளின் உருவாக்கத்தில் எத்தனை அரசியல்..எத்தனை வரலாறு கலந்துள்ளதென்று ! இங்கே இன்னொரு நோவு இருந்தது - ஓவியரின் சித்திர பாணி காரணமாய் ! ஹீரோவையும், ஈரோயினியையும் தவிர்த்த பாக்கிப் பேரையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஓவியர் வரைந்திருக்க, "இந்த ஆள் M .N .நம்பியாரா ? A.V.M ராஜனா ? இந்தக்கா சொர்ணக்காவா ? சொர்ணமால்யாவா ?" என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுந்தன ! CIA தலைவரும், ஒரு முன்னாள் ஏஜெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் தர, ரெண்டு பேருக்கும் மத்தியிலான 6 வித்தியாசங்களைத் தேடிக் கண்டுபுடி ! என்ற போட்டியெல்லாம் வைக்காத குறை தான் ! கதையின் ஓட்டத்தோடு செப்டம்பர் 1 ..2 ..3 என்று தேதிகளை வரிசைக்கு கொடுத்துக் கொண்டே வந்திருந்தனர் ! சும்மா ஏதோவொரு அலங்கார detail இது என்றபடிக்கே உதாசீனப்படுத்தி விட்டுப் போனால், க்ளைமாக்சில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு இருப்பது புரிந்தது !! And கூகுளுக்குள் புகுந்து இம்மியூண்டு விஷயத்துக்குக் கூட சோம்பல்படாது தேடினால் தான் கதாசிரியரின் முழு வீச்சைப் புரிந்து கொள்ள முடிந்தது !
இணை தடங்களாய் மெயின் கதை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, அதே வாஷிங்டனின் இன்னொரு பக்கத்தில், இன்னதென்று புரியா கொலைகள் அரங்கேறி வருகின்றன ! பற்றாக்குறைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு மெகா நிகழ்வு & அதிலிருந்து 9 ஆண்டுகளுக்கு அப்புறமான இன்னொரு நிகழ்வு ! இவை சகலத்தையும் க்ளைமாக்சில் ஒன்றிணைத்து தெறிக்க விட்டிருக்கிறார் Mythic !! And புத்தம் புது புல்லெட்டில் அவர் பறந்து போயிருக்கும் அதே பாதையில், 'கரையாண்டி சைக்கிள் கடையில்' எடுத்த சைக்கிளை மிதித்தபடிக்கே நான் பின்தொடர்ந்த காமெடி தொடர்ந்த நாட்களில் அரங்கேறியது ! And yes - இங்கேயும் ஒவ்வொரு படத்தினையும் உன்னிப்பாய்க் கவனிக்காது, வாசித்தபடிக்கே நகர்ந்திடும் தப்பை மட்டும் செய்து விடாதீர்கள் folks ; அப்புறம் உங்களிடம் வண்டை வண்டையாய் திட்டு வாங்கி மாளாது எனக்கு ! இதோ, அச்சுக்குச் செல்லவிருந்த இந்தக் கதையின் ஓரிடத்தில் ஒரு பிழை இருப்பது இன்று காலை குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று உறைத்தது !! துண்டை கட்டிக்கொண்டே மைதீனுக்கு போன் பண்ணி அந்தப் பக்கத்தினை அனுப்பப் சொல்லி திருத்தம் போட்டேன் ! Phewwwwww !! இங்கேயுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் அடிக்கும் twist சத்தியமாய் அந்நாட்களில் ரவிச்சந்திரனும், ஜெமினி கணேசனும் ஆடியிருக்காத twist !! அது வரைக்கும் கதை இது தான் என்றபடிக்கே பயணிப்போரின் முகங்களில் ஒரு வாளி தண்ணீரை சலோர் என்று தெளித்திருக்கிறார் !! நம்பினால் நம்புங்கள் guys - கடைசி 2 பக்கங்களை மூணு வாட்டி எழுத வேண்டியதாகியது ! எத்தனை விளக்கம் சொல்ல முனைந்தாலும் அப்புறமுமே ஏதேனுமொரு loose end தொங்கிக்கொண்டிருப்பதாய் படும் ; அடித்து விட்டு மறுக்கா முயற்சிப்பேன் ! எது எப்படியோ - ஒரு crackerjack த்ரில்லர் காத்துள்ளது guys & கொஞ்சம் பொறுமையாய் க்ளைமாக்ஸை நீங்கள் அணுகிட வேண்டியிருக்கும் தான் ! ஆனால் அந்தப் பொறுமைக்குப் பலனின்றிப் போகாது !! Trust me on that !!
ஷப்பா...போட வேண்டிய மொக்கையெல்லாம் போட்டாச்சு ; இனி சிக் பில் மட்டும் தான் ! "முடிஞ்சமட்டுக்கு எழுத்துப் பிழைகளை மட்டும் பாத்திட்டு தந்துடறேன் மைதீன் !" என்று வியாழன் இரவு சொல்லிவிட்டு, "கிட் ஆர்டின் ஜாக்கிரதை" கதைக்குள் புகுந்தேன் ! சமீபத்து நமது தேர்வுகள் எல்லாமே டாக்புல் அல்லது ஆர்டினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாகவே இருந்து வந்துள்ளன & இங்கே நம்ம ஆர்டின் சார் தான் பிரதான பாத்திரம் ! ஜாலியாய் உள்ளே நுழைந்தால் "ஹி..ஹி..ஹி.." என்றொரு இளிக்கும் ஓசை மட்டும் கேட்டது போலிருந்தது ! "யார்டா இந்நேரத்துக்கு ? ஊரே அடங்கிடுச்சி...?" என்றபடிக்கே பக்கத்தை இன்னும் லைட்டாய்ப் புரட்டிய போது தான் புரிந்தது - அந்த இளிப்புச் சத்தம் வேறெதுவுமல்ல - விதி என்னைப் பார்த்துக் கெக்கலித்த ஓசை தான் என்பது !! கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாய் க்ளாஸிக் கதைகளைத் தவிர்த்து வேறெதற்கும் பேனாவே பிடித்திருக்காத அங்கிள் இங்கே சிக் பில்லுக்கு இலக்கண நடையில் மொழிபெயர்ப்பை பிளந்து கட்டியிருந்தார் !! விக்கித்துப் போனேன் - ரெண்டே பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள் !
'பேச்சு வழக்கு நடை தான் கார்ட்டூன்களுக்கு சுகப்படும்' என்பதைத் தீர்மானித்து - கடந்த 11 ஆண்டுகளாய் அத்தினி கார்ட்டூன்களுக்கும் ஒரே சீராய் அந்த பாணியையே தந்தும் வந்திருக்கிறோம் ! நடுநடுவே ஏதேனும் கார்ட்டூன் மறுபதிப்புகள் வரும் போது தான், அந்நாட்களில் நாம் உபயோகம் செய்திருந்த உரைநடை பாணிகள் எட்டிப்பார்த்து பல்லெல்லாம் ஆடச் செய்வதுண்டு (லக்கி லூக்குக்கு கல்யாணம் இதழில் போல!!) And அங்கிள் நமது தற்போதைய template-ஐ சுத்தமாய் மறந்திருந்தது மட்டுமல்லாது - மருந்துக்கும் கூட நகைச்சுவை பக்கமாய் போயிருக்கவில்லை ! இதில் கொடுமை என்னவென்றால், ஒரிஜினலின் டயலாக்களிலும் ஹியூமரை வலை வீசித்தான் தேட வேண்டியிருந்தது !! "எக்ஸ்டரா நம்பரே போடாதடா அம்பி ; ஒரிஜினலில் உள்ளதையே போடு - போதும்" என்று கொடி பிடிக்கும் நமது நண்பர்களிடம் இந்த ஆல்பத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்து ஒருவாட்டி வாசித்துப் பார்க்கச் சொல்லும் ஆசை அலையடித்தது ! அவர்கள் அந்த வாசிப்பினில் ஈடுபட்டிடும் வேளையினில், கிட்டக்கவே ஒரு ஆளை சம்பளம் தந்து அமர்த்தி, நாள் முழுக்க கிச்சு கிச்சு மூட்டச் சொல்லி முயற்சித்தாலும் - ஊஹூம் !! பலன் இராது - because மற்ற மொழிகளில் அவர்கள் பழகியுள்ள கார்ட்டூன் ரசனைகள் நம்மிடமிருந்து மாறுபட்டவை ! நமக்கு இங்கே லட்சுமி வெடிச்சிரிப்புகள் இல்லாங்காட்டியும், ஊசிவெடிச் சிரிப்புகளாவது இன்றியமையா சமாச்சாரங்கள் ! அதற்குமே வாய்ப்புகள் குறைவெனில், உப்பு குறைவான சமையலாகவே பார்த்திடுகிறோம் !
Anyways இங்கே டவுசர் சுத்தமாய் கழன்று தொங்குவது புரிந்தது ; ஆண்டுக்கு ஒரேயொரு சிக் பில் கதை ; அந்த ஒற்றை கதையும் இலக்கண நடையும், சீரியஸ் பாவனையுமாய் நகன்றால் "நம்மளை கொண்டே போட்டுப்புடுவாங்க" என்று தலைக்குள் பட்சி சொன்னது ! மொத்தம் 30 பக்கங்கள் ; முழுசையும் கார்ட்டூனுக்கான பாணியில் & இயன்ற இடங்களில் கொஞ்சமாச்சும் ஹியூமர் இழையோட மாற்றி எழுதிட எனக்கிருந்த அவகாசம் : முக்கால் நாள் ! இதோ, இந்தப் பதிவினை டைப்பும் சனி மாலைக்கு 3 மணி நேரங்கள் முன்னே தான் மொத்தத்தையும் முடித்து மறு DTP செய்து அச்சுக்கு ரெடி செய்து வருகிறோம் !
'நாக்கு தொங்கிப் போச்சு...பெண்டு நிமிர்ந்து போச்சு' என்றெல்லாம் அடிக்கொரு தபா சொல்லுவோம் தான் ; ஆனால் அதன் மெய்ப்பொருளை இந்த வாரத்தில் தான் உணர்ந்துள்ளேன் ! இந்த 39 ஆண்டுப் பயணத்தில் குட்டிக்கரணங்கள் நமக்குப் புதுசே அல்ல தான் ; ஆனால் இம்முறை அடித்திருப்பதோ ரொம்ப ரொம்ப மாறுபட்டவை ! ஒற்றை நாளிலும், ஒன்றரை நாளிலும் முழுசாய் எழுத அவசியப்பட்டுள்ள இந்தக் கதைகளை, நார்மலாய் எழுதினால் லேசாக ஒரு வாரமோ, பத்து நாட்களோ பிடிக்கும் ! ஆனால் அப்படியொரு குஷன் இல்லாத நெருக்கடியில் பணியாற்றியது நிஜமாகவே நமது பல்டி அளவுகோல்களுக்கே ரெம்போ சாஸ்தி என்பேன் !!
ஆனால் இந்தப் பணிகளை ஒட்டு மொத்தமாய் நிறைவு செய்து, இந்த 4 கதைகளையும் ஒருசேர மேஜையில் போட்டுப் புரட்டிடும் போது மனசுக்குள் ஒரு விவரிக்க இயலா நிறைவு ! Oh yes - இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பை-பாஸ் ரைடர் பஸ்ஸில் கூட போக மாட்டேன் தான் ; சிவனே என்று நேர்கோட்டில் பயணம் பண்ணும் டவுன் பஸ்ஸே போதும் என்பேன் தான் ! ஆனால், இந்த இதழ் உங்களை எட்டிடும் போது, நீங்கள் கதைகளையும், அவற்றின் பின்னுள்ள உழைப்புகளையும் ரசித்திடும் பட்சத்தில் "ஜெய் மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைஸ் !!" என்று கோஷம் போடுவேனோ - என்னமோ ?! Whatever the hassles, this has been an immensely satisfying work !
And இந்த மாதிரியான தருணங்களில் தான் "மறுபதிப்புகள்" இருக்கும் திசை நோக்கி பெருசாய் நமஸ்காரம் சொல்லத் தோன்றுகிறது ! இடையிடையே அவை மட்டும் மூச்சு விட்டுக் கொள்ளவும், சக்கரங்கள் சுழன்றிடவும் உதவிடவில்லை எனில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி for sure !! மறுபதிப்பு எனும் போது - பர பரவென ஈரோட்டு ஸ்பெஷல்ஸ் இதற்கென ரெடி செய்திருக்கும் இன்னொரு டீமின் சகாயத்துடன் தடதடத்து வருகிறது ! And boy oh boy ...சும்மா சொல்லக்கூடாது - MAXI சைசில் "கார்சனின் கடந்த காலம்" பக்கங்களைப் பார்க்கக் கண்கள் கோடி வேணும் போலும் ! Simply stunning !! இதோ - டிரெய்லர் !!
இதழ்கள் தயாராகி வரும் மின்னல் வேகத்துக்கே முன்பதிவுகளும் டாப் கியரில் ஓடிக்கொண்டுள்ளன ! சொற்ப நண்பர்கள் கா.க.க. வேணாம் என்று இதர இதழ்களுக்கு புக்கிங் செய்துள்ளனர் தான் ; ஆனால் trust me folks - புக்கை கையில் ஏந்திப் பார்க்கும் வேளை வரும் போது இந்த இதழுக்கு No சொல்லிடுவோர் யாரும் இருப்பரென்று எனக்குத் தோன்றவில்லை ! அட்டைப்படமுமே முதல்முறையாக solo கார்சன் சகிதம் மாசாய் உருவாகி வருகிறது ! குறைவான பிரிண்ட்ரன் மாத்திரமே என்றாலும், இதற்கென செய்திடவுள்ள நகாசு வேலைகள் நிச்சயமாய் 'தல' ஆண்டு # 75-க்கு நியாயம் செய்யாது போகாது ! And முன்பதிவு செய்துள்ள நண்பர்கள் இதனைக் கையில் ஏந்தும் நொடியினை நிச்சயமாய் சீக்கிரத்துக்குள் மறந்திட மாட்டார்கள் என்ற மட்டுக்கு நிச்சயம் !
இங்கொரு விண்ணப்பம் folks :
- சுஸ்கி & விஸ்கி மறுபதிப்பு (பேரிக்காய் போராட்டம்) ரெடி !
- மாயாவி கதை ரெடி !
- இரும்புக்கை நார்மன் கதை ரெடி !
- ஸ்பைடர் சீக்கிரமே ரெடியாகிடும் !
- கா.க.கா. பாகம் 1 சீக்கிரமே ரெடியாகிடும் !
இவற்றினுள் எழுத்துப் பிழைகளை நீக்கித் தரும் proof reading பணிக்கு நண்பர்கள் தயாராக இருப்பின், மின்னஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம் - ப்ளீஸ் ? ஒன்றுக்கு இருமுறை பார்த்திட வேண்டி வரும் என்பதால் நண்பர்கள் can work in teams ! And நிச்சயமாய் இது ஓசியில் ஒப்பி அடிக்கும் முயற்சியாக இராது - நிச்சயமாய் உரிய சன்மானங்கள் இருந்திடும் ! So ஆற்றலுள்ளோர் & ஆர்வமுள்ளோர் - மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாமே ப்ளீஸ் ? எனக்கு இதன் பொருட்டு கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அவகாசம் கிட்டினால், ஜூலை இதழ்களை fasttrack செய்திட பெரிதும் உதவும் ! So any help will be most welcome !!
Bye folks...see you around ! Have a fun Sunday !!