நண்பர்களே,
வணக்கம். ரொம்ப காலமாச்சு - நாட்களின் ஓட்டத்தினை நமது பதிவு தினங்களோடு முடிச்சுப் போடத் துவங்கி ! "சார்...பதிவுக்கிழமை !" என்று நண்பர் குமார் ஞாபகப்படுத்தும் போது புதுசாயொரு வாரயிறுதி புலர்ந்திருப்பது உறைக்கத் துவங்கும் ! And இதோ : கென்யாவின் பில்டப்போடு பயணமான பொழுது, அதற்குள் ஒரு வாரத்துக்கு முன்பான 'இஸ்திரி'யாகிப் போயிருக்க - நெக்ஸ்டு..நெக்ஸ்டு..என்று தேடி நிற்கிறேன் ! இந்த நொடியிலோ நமது பயணம், back to the Wild West ! வீட்டோடு மாப்பிளையாய் ஐக்கியமாகிடும் பார்ட்டீக்களுக்கு, மாமியார் வீடுகளின் அடுக்களைகளும், பாத்திரம் தேய்க்கும் இடங்களும் எத்தனை பரிச்சயமோ - அத்தனை பரிச்சயமல்லவா நமக்கிந்த டெக்சாசும், அரிஸோனாக்களும் ?!
அந்தப் பொட்டல்காடுகளில் இம்மாதத்தின் முதல் பயணமானது - நமது ஆதர்ஷ தல & கோ. சகிதம் ! "ஒரு காதல் யுத்தம்" - ஒரிஜினலாய் போனெல்லியின் கதைவரிசையினில் # 575 ! ஒரு மினி லேண்ட்மார்க் இதழை, ஒரு மினி அதிரடியோடு ; முழுவண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் - ஓவியர் சிவிடெலியின் கைவண்ணத்தினில் ! And அதனை மிளிரும் அதே வண்ணங்களோடு ; ஒரிஜினல் அட்டைப்படத்தினோடே உங்களிடம் ஒப்படைக்க ரெடியாகி வருகிறோம் ! இந்த ஆல்பத்தின் highlights இரண்டு : கிட் வில்லரின் மம்மியுடன் 'தல' கழித்த நாட்களைச் சுற்றிச் சுழன்றிடும் கதைக்களம் - ஹைலைட் # 1 . இரண்டாவது ஹைலைட் - எப்போதும் போல ஓவியரின் மிரட்டலான ஜாலங்கள் !! சும்மாவே black & white-ல் அதிரச் செய்யும் மனுஷனுக்கு ஒரு முழுவண்ண வாய்ப்பை ஒப்படைத்தால் வூடு கட்டி அடிக்க மாட்டாரா - என்ன ? 110 பக்கங்களிலும் சும்மா மாய்ஞ்சு..மாய்ஞ்சு பணியாற்றியுள்ளார் ! அதிலும் லிலித்தை சிவிட்டெலியின் தூரிகையினில் பார்க்கும் போது பெரியவர் போனெல்லி மீது லைட்டாய் வருத்தமே மேலோங்குகிறது - அம்மணியை அப்போதே க்ளோஸ் செய்து விட்டாரே என்று ! எது எப்படியோ - சிங்கிள் ஆல்பம் எனும்போது கதைக்களமும் பெரிதாய் எவ்வித முடிச்சுகளுமின்றி சீராய், நேராய் பயணிக்கின்றது ! So பிரீசியோ breezy read காத்துள்ளது இம்முறை ! அதுவும் போன மாதத்து "விடாது வஞ்சம்" ஸ்ட்ராங் ப்ளாக் காபியாக இருப்பதாய் எண்ணிய நண்பர்களுக்கு, இம்மாதத்து "காதல் யுத்தம்" திருச்செந்தூரின் ஒரிஜினல் பதநீராய் தென்படக்கூடும் !
மாதத்தின் இறுதி இதழும், ஜம்போ சீசன் 4-ன் இறுதி இதழுமான "மேற்கே .....இது மெய்யடா..! கூட செம breezy read தான் ; ஆனால் முற்றிலும் வேறொரு விதத்தினில் ! ஸ்டெர்ன் தொடர் எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே பிடித்தமானது ; தோளில் கரம்போட்டு, எதிர்ப்படும் முதல் மூ.ச.பக்கமாய் அடியேனை இட்டுப் போய் தடபுடலாய் "முதல்மருவாதிகள்" செய்திட வாய்ப்புகள் அநேகம் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தாலுமே ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் தான் இவரை நம் மத்தியினில் நடமாடச் செய்தேன் ! And எதிர்பார்த்த அளவிற்கு மூ.ச.வில் Spa ட்ரீட்மெண்ட் நிகழவில்லை என்ற தைரியத்தில் இரண்டாம் ஆல்பத்தையும் சீக்கிரமே களமிறக்கி விட்டபோது - surprise ..surprise ...நல்ல வரவேற்பு ! "THE REAL WEST" என்ற பெயருடன் Maffre சகோதரர்கள் உருவாக்கியுள்ள மூன்றாம் ஆல்பமுமே இதோ - உங்களோடு பழகிப் பார்க்க கச்சை கட்டி வருகிறது !
இதன் ஆங்கில வார்ப்பினை படைப்பாளிகள் நமக்கு ரொம்ப முன்னமே அனுப்பியிருந்த போதிலும், மேலோட்டமாய்ப் புரட்டியதைத் தாண்டி வேறெதுவும் செய்திருக்கவில்லை ! போன ஞாயிறுக்கு இங்கிருந்து கிளம்பிய பின்னே பக்கங்களைப் புரட்டிய போது முதலில் கவனத்தைக் கோரியது அந்த 'டமால்..டுமீல்...பிளாம்..க்ராக்...' படலங்கள் தான் ! இது நாகரீக வெட்டியானின் கதை தானே..? இதனில் எதுக்கு டெக்ஸ் வில்லர் சாகசத்துக்கு இணையாய்த் தோட்டாப் பரிமாற்றம் ? என்ற கேள்வியோடே பணியாற்றத் துவங்கினேன் !
பொதுவாய் இந்த மாதிரி Onomatopoeia (!!!!) நிறைந்த ஜாகஜங்களெனில், பேனா பிடிக்கும் போது உற்சாகம் பிய்த்துக் கொள்ளும் ; சர்ர்..சர்ரென்று பக்கங்களைக் கடந்திட முடியும் என்பதால் ! ஆனால் ஸ்டெர்னின் கதாசிரியர் வெறுமனே பக்கங்களைக் கடத்த இந்த மாதிரியான வாணவேடிக்கைகளை நிகழ்த்துபவரல்ல என்பதால் அடக்கி வாசித்தபடிக்கே ஸ்டெர்ன் + லென்னியுடன் அந்த மோரிசன் சிறுநகரில் வலம் வந்தேன் ! கதைக்கென ; அந்தக் களத்துக்கென, கதாசிரியர் தேர்வு செய்திருக்கும் ஆட்களும் சரி, வரிகளும் சரி - 'நாசூக்கென்றால் வீசம்படி எவ்வளவு ?" என்று கேட்கக்கூடிய ரகமே ! So மொழிபெயர்ப்பினில் தன்மையான பதங்களையோ ; கரடு முரடற்ற வார்தைகளையோ தேடிட நான் மெனெக்கெடவே இல்லை ! ஒரேயொரு A ஜோக்கைத் தவிர்த்து பாக்கி இடங்களின் முழுமையிலும் Frederic Maffre அடித்திருக்கும் ஈக்களை அட்சர சுத்தமாய் அடிக்க நானுமே முயன்றிருக்கிறேன் ! 18+ வாசகர்களுக்கான பரிந்துரையானது கதையின் ஓட்டத்துக்கோ ; சித்திரங்களுக்கோ அவசியமே ஆகிடாது - it's just for the script !!
![]() |
கதாசிரியர் Frederic Maffre |
இதோ - அட்டைப்படத்தின் முதல் பார்வை - ஒரிஜினலில் மாற்றங்களின்றி ! பின்னட்டையுமே ஒரிஜினல் தான் !
72 பக்கங்களுக்கு நீண்டிடும் ஸ்டெர்னுடனான எனது பயணம் இரண்டரை நாட்களில் நிறைவுற்றதற்கு கதாசிரியருக்கே நான் நன்றி சொல்லணும் - இம்மியும் தொய்வின்றி ஒரு ரொம்பவே யதார்த்தமான கதையினை நம் கண்முன்னே விரியச் செய்ததற்கு ! எங்குமே பாசாங்கு இல்லாத சராசரி மனிதர்கள் - அவர்களது அபிலாஷைகள் ; ஆதங்கங்கள் ; கனவுகள் ; வலிகள் என்று அத்தனையையும் நம்மிடம் ஒழிவின்றிக் காட்டும் போது அவர்களோடு நாமும் ஒன்றிப் போவதில் வியப்பில்லை என்பேன் ! நானுமே அந்த மோரிசன் சிறுநகரில் முயல் கறி சாப்பிட்டுக் கொண்டு மூன்று நாட்களுக்கு குப்பை கொட்டிய அந்த பீலிங்கு தான் இந்த சீசன் 4 ஜம்போவின் இறுதி இதழின் takeaway - என்னளவிற்காவது ! Of course - வெகுஜன அபிமானத்தினை ஈட்டவல்ல இதழா இது ? என்ற ஆரூடமெல்லாம் சொல்ல எனக்குத் தெரியவில்லை ! ஆனால் மாமூலான "யாஹீ....வோ...பிளாம்..பிளாம்'-களைத் தாண்டி அந்த வன்மேற்கின் வலி நிறைந்த பக்கங்களை இதமான சித்திர பாணியினில் தரிசிக்க நீங்கள் ரெடியெனில் - ஸ்டெர்ன் உங்களை disappoint செய்திட மாட்டார் ! Fingers crossed !
கென்யா அச்சாகி பைண்டிங்கில்..!
டெக்ஸ் அச்சாகி பைண்டிங்கில்..!
ஸ்டெர்ன் செவ்வாயன்று அச்சுக்கு !
So ஜூன் பிறக்கும் பொழுதினில் 3 முழுவண்ண இதழ்களுமே உங்களிடம் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் !
Work காத்திருப்பது - எலியப்பாவில் மாத்திரமே !
And எலியப்பா இத்தோடு நிறைவு காண்கிறார் என்பதால் அவரையும், அவரது காதலியையும் ரொம்பவே மிஸ் செய்வேன் வரும் நாட்களில் ! படைப்பாளிகள் இந்த யானை சாரை மறுக்கா தொடர்ந்தால் சூப்பராக இருக்கும் ! Anyways மாதாந்திர இணைப்புகளில் 'எலிக்கு அடுத்து யாரு ?' என்ற கேள்வி இந்த நொடியினில் என்முன்னே ! வருஷம் துவங்கிய போதே தெரியும் தான் - ஆறு மாதங்கள் கழித்து எலியப்பாவுக்கு டாட்டா காட்ட நேரிடும் என்பது ! ஆனால் அன்றைக்கு தலைக்கு மேல் குவிந்து கிடந்த பணிகளுக்கு மத்தியில் இது பெரியதொரு மேட்டராய்த் தோன்றவில்லை ! But கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஆறு மாதங்கள் நகன்றிருக்க, எலியின் காமிக்ஸ் வாரிசைத் தேட வேண்டுமென்ற நிலை இப்போது ! So அந்தத் தேடலுக்கும், 2023-ன் அட்டவணைக்கும் நேரம் தந்திட நான் நடையைக் கட்டுகிறேன் ! Before I sign out - questions for you please :
1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!" என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?
2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?
3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? (கவிஞர்கள் மாத்திரம் இக்கேள்வியைத் தாண்டிச் செல்லக் கோருகிறேன் !!)
Bye all...have a great weekend ! See you around !