நண்பர்களே,
வணக்கம். 'வள வளா' வள்ளியப்பனுக்கு டாட்டா சொல்லிவிட்டு 'சுறுக்' சுருளிராஜன் ஆகத் தீர்மானித்த நாள் முதலாய் வாரயிறுதிகள் சற்றே விசாலமாய்த் தெரியத் துவங்கியுள்ளன ! பதிவினை தயார் செய்திட தவறாது செலவாகி வந்த ஐந்தோ / ஆறு மணி நேரங்களை இப்போது அம்மாதத்து இதழ்களுக்கெனச் செலவிட முடிவதால் ஆபீசில் நம் DTP அணியும் ஹேப்பி ! And true to the new form - இதோ நேராய் இவ்வாரயிறுதிப் பதிவின் சமாச்சாரங்களுக்குள் புகுந்திடுகிறேன் !
சென்னைப் புத்தக விழா 2021 !!
ஒரு பேரிடருக்குப் பின்பான முதல் மேஜர் புத்தகத் திருவிழா ; அதுவும் பொங்கல் விடுப்போடு ஒத்துச் செல்லும் மாமூலான அந்த ஸ்லாட்டில் கிடையாது எனும் போது - என்ன எதிர்பார்ப்பதென்று சத்தியமாய்த் தெரிந்திருக்கவில்லை ! நமக்கு ஸ்டால் உறுதியான பின்னே, புக்ஸை பேக் செய்ய முனைந்த சமயத்தில், வழக்கமான அளவுகளில் எல்லா டைட்டில்களிலும் அனுப்புவதா ? அல்லது முன்ஜாக்கிரதையோடு அடக்கி வாசிப்பதா ? என்று எதுவுமே தெரிந்திருக்கவில்லை ! சரி, போன வருஷத்து விற்பனையினை ஒரு வழிகாட்டியாய்க் கொண்டு, அதனிலிருந்து ஒரு கால் பங்கைக் குறைத்து அனுப்புவோம் என்று தீர்மானித்தேன் ! 14 நாட்கள் அரங்கேறிய விழாவின் முடிவினில் நமக்கு மட்டுமென்றில்லை ; பங்கேற்ற அத்தனைப் பதிப்பகங்களின் முகங்களிலும் ஒரு மெல்லிய புன்னகை !! ஓராண்டாய் நாய் படாத பாடு பட்டு வந்த பதிப்புலகிற்கு சென்னை தெளித்துள்ள பன்னீர் காலத்துக்கும் நினைவினில் நின்றிருக்கும் ! இதைவிட மிரட்டலான விற்பனைகள் பார்த்த ஆண்டுகள் பல இருந்துள்ளன தான் ; எதிர்வரும் ஆண்டுகளில் புதிய உச்சங்கள் காத்திருக்கவும் செய்யலாம் தான் ; ஆனால் ஒரு சொகுசான நாளில் கிட்டும் புஹாரி பிரியாணியை விட, பசித்துக் கிடக்கும் வேளைக்கு வாய்க்கும் இட்லிக்கு மரியாதை ஜாஸ்தியன்றோ ? அந்த வகையில் இந்தாண்டின் புத்தக விழாவினை தெறிக்கச் செய்த சென்னையுள்ள திசைக்கு ஒரு பெருவணக்கம் ! மாநகரம்..மாநகரம் தான் ; அதன் கெத்து - கெத்து தான் !
விற்பனை சார்ந்த தகவல்களுக்குள் டைவ் அடிக்கும் முன்பாய் ஒரு விஷயத்தை highlight செய்திட நினைக்கிறேன் ! பொதுவாய் புத்தக விழாக்களின் விற்பனை pattern-களை பெருசாய் அலசும் வாய்ப்பெல்லாம் அமைந்திருப்பதில்லை எனக்கு ; 'எது நல்லா ஓடுச்சு ? எது மொக்கை போட்டுச்சு ? ' என்ற ரீதியில் மேலோட்டமான வினவல்களோடு, கல்லா கட்டிய தொகையினைக் கொண்டு, அடுத்த 6 மாதங்களை எவ்விதம் ஓட்டுவதென்ற திட்டமிடல்களுக்குள் புகுந்திருப்பேன் ! ஆனால் சமீபமாய் ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்திருக்கும் ஏதோவொரு புது software-ன் புண்ணியத்தில், நம்மாட்கள் ஊருக்குத் திரும்பிய பத்தாவது நிமிடத்தில் விற்பனைகளின் ஜாதகமே என் மேஜைக்கு ஒரு கற்றைக் காகிதங்களில் வந்து சேர்ந்திடுகிறது ! So அவற்றைக் கொண்டு நிதானமாய் அலசினால் விற்பனைகள் மட்டுமன்றி, இன்னொரு பொதுவான pattern-ம் புலனாகிறது ! "புத்தக விழாக்களின் விற்பனைகள் ஒருவித 'அந்த நொடியின் உந்துதல்' சார்ந்த சமாச்சாரங்கள் ; ஏதேனும் ஒரு தலைப்போ, ஒரு அட்டைப்படமோ, இன்ன பிற சமாச்சாரமோ வாடிக்கையாள வாசகரைக் கவர்ந்திட, அதனை வாங்கிடுகிறார் !" என்பதே எனது அனுமானமாய் இருந்தது ! ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் தகவல்கள் சொல்லும் சேதியே வேறு ரகம் ! புத்தக விழாக்களில் வாங்கிடும் வாசகர்களில் ஒரு கணிசப் பகுதியினர் - கிட்டத்தட்ட ரெகுலர் வாசகர்களே ! ஆண்டுக்கொரு தபா சென்னையில் வாங்க மட்டும் செய்கிறார்களா ; அல்லது இதர சமயங்களில் ஆன்லைனிலும் வாங்குவரா என்பது தெரியலை ; but அவர்களுக்கு புது வரவுகள் எவை ? ஸ்பெஷல் வரவுகள் எவை ? இங்கு அலசப்படும் ஹிட் இதழ்கள் எவை என்பதிலெல்லாமே நல்லா தெளிவு உள்ளது விற்பனையாகியுள்ள டைட்டில்களிலும், நம்பர்களிலும் பிரதிபலிக்கின்றது ! So - 'இவை சும்மா casual ஆன விற்பனைகள் தானே - இவற்றின் சேதிகளை பெரியதொரு pointer ஆக எடுத்துக் கொள்ள அவசியமில்லை !' என்ற நினைப்புகளுக்கு பெரியதொரு முழுக்குப் போடணும் போலும் ! These are trueblue stats & deserve all our attention on the way ahead !!
வழக்கம் போலவே நல்ல சேதி - கெட்ட சேதி என்று 2 பிரிவுகள் and as always - நல்லதிலிருந்தே ஆரம்பிக்கிறேனே !!
இப்போதெல்லாம் இதைச் சொல்லும் போது ஒரு கொட்டாவி தவிர்க்க இயலா தோழனாகிப் போகிறது ! "மாயாவி சார் இந்தப் புத்தக விழாவிலும் பின்னிப் பெடல் எடுத்து விட்டார் ; மாயாவி சாரே ரேக்கிலிருந்து பரந்த முதல் ஆசாமி ; மாயாவி சார் தான் இந்த தபாவும் புத்தக விழாவின் நாயகர் ! ஹாவ்வ்வ்வ் " என்று சொல்லிவிடுகிறேன் ! கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மாயாவி சார் மோகம் சற்றே மட்டுப்பட்டுத் தெரிந்ததென்னவோ வாஸ்தவம் தான் ; "ரைட்டு, இந்த evergreen நாயகருக்குமே வயசாகிடுத்து போலும் !" என்று நினைத்துக் கொண்டேன் ! In fact - இங்கிலாந்தில் அந்த STEEL CLAW தொகுப்பு வெளியாகிடவுள்ள தகவல் வந்த சமயம், "நியூயார்க்கில் மாயாவி" & இதர மறுபதிப்புக் கதைகளுக்கு உரிமைகளை வாங்குவோமா ? வேணாமா ? என்ற சலனம் கூட லைட்டாக எட்டிப் பார்த்தது ! ஆனால் எனக்குள் குடியிருக்கும் முந்திரிக்கொட்டை முத்தண்ணா - அந்த சலனத்தை மண்டையில் தட்டிப் படுக்கப் போட்டிருந்தது ! அதன் பலனாய் சாத்தியமான "நியூயார்க்கில் மாயாவி" தான் இந்தாண்டின் topseller - எண்ணிக்கையினில் !! பெரிய சைஸ் ; பளீர் அட்டைப்படம் ; சின்ன விலை ; ஆதர்ஷ மாயாவி - என்ற combo போட்டுத் தாக்கியுள்ளது விற்பனையில் ! And ஏனோ தெரியலை - "மர்ம தீவில் மாயாவி" ஆல்பமும் அதிரடி சேல்ஸ் !! வாசிக்கிறார்களோ - சேமிக்கிறார்களோ - மாயாவியை நேசிக்கிறார்கள் என்பது மட்டும் நூற்றுச் சொச்சமாவது தடவையாய் நிரூபணமாகியுள்ளது ! நேரம் மட்டும் இருந்திருப்பின் - "யார் அந்த மாயாவி" இதழையுமே களமிறக்கியிருப்போம் ! A chance wasted !!
இந்தாண்டின் surprise package நம்ம சட்டித்தலையன் ஆர்ச்சி தான் ! வண்ணத்திலான அந்த மாக்சி சைஸ் இதழும் சரி, பாக்கி b&w இதழ்களும் சரி, போட்டி போட்டு விற்றுள்ளன ! So மாயாவியாருக்குச் சொன்ன அதே பன்ச் லைனைத் தான் நமது சிகப்பனுக்கும் சொல்லணும் போல : வாசிப்போ, சேமிப்போ - நேசிப்புக்கு குறைவில்லை ! என்ன - நம்மில் பலருக்கு இரும்பு மண்டையன் குளிர் ஜுரத்தை வரவழைப்பதால் அடக்கி வாசிக்க வேண்டிப் போகிறது ! But undoubtedly இந்தாண்டின் வெற்றிக் கதைகளுள் ஒன்று !!
வெற்றி எனும் மங்களகரமான தலைப்பின் போது - மங்களகரமான மஞ்சளை மறக்க இயலுமா ? So ஒரு ஜோடிக் கொட்டாவிகளோடு இந்தத் தகவலையும் மறுஒலிபரப்புப் பட்டியலில் சேர்த்திடுகிறேனே :
டெக்ஸ் வில்லர் !! 'பேர கேட்டாலே சும்மா அதிருதுலே !!" என்ற டயலாக் நம்ம 'தல' ஒருத்தருக்கு நிரந்தரமாய்ப் பொருந்தும் போலும் !! 2020 -ன் பிற்பகுதியில் வெளியாகி, 2021 -ன் முற்பகுதியிலேயே காலியாகிப் போன இதழ்கள் 3 ! And அவை மூன்றுமே நமது இரவுக்கழுகாரின் இதழ்களே - எனும் போது எனக்கு ஏன் வியப்பே எழ மாட்டேன்கிறதோ ?? "எதிரிகள் ஓராயிரம்" ; "பந்தம் தேடிய பயணம்" & "தீபாவளி with டெக்ஸ்" என்ற லிஸ்டில் எஞ்சியிருந்த மிக சொற்ப புக்ஸும் சென்னையில் இரண்டே நாட்களில் காலி ! And இவை நீங்கலாய்க் கையிலிருந்த 28 டைட்டில்களில் கலந்து கட்டி சேல்ஸ் ! அவற்றுள் 2020 -ன் வெளியீடுகள் நல்லாவே தூக்கலாய் விற்றுள்ளன !! Icing on the cake என்பதனால் - அது சந்தேகமின்றி "மரண முள்" தான் ! வண்ண இதழ் ; க்ளாஸிக் சாகஸம் ; சமீப இதழ் - என்பனவெல்லாம் இதன் விற்பனையின் பின்னணிகளா ? என்று சொல்லத்தெரியவில்லை ; ஆனால் - செம சேல்ஸ் ! நடப்பாண்டைத் தாண்டிடாது இந்த இதழும் - என்பது உறுதி ! காசியப்பன் பாத்திரக் கடை அண்டாக்களில் கிண்டப்படும் கிஸ்மிஸ் போட்ட பாயசங்கள் இவருக்கு கிச்சுகிச்சு மட்டுமே ஊட்டுகின்றன ! மூத்திரச் சந்துகளில் நடத்த முனையப்படும் மண்டகப்படிகள் இவரிடம் மந்தகாசப் புன்னகையினையே ஈட்டுகிறது ! 'ஒரே மாதிரியான கதைகள் ; மிடிலேடா சாமீ ' என்ற புலம்பல் பந்துகளைப் பக்குவமாய் பவுண்டரிக்கு மேலே பறக்க விடுகிறார் ! சேவாக் ; சச்சின் ; ரிஷாப் பண்ட் - என காலங்களுக்கேற்ப அதிரடிக்காரர்கள் மாறிடலாம் அரங்கினில் ; ஆனால் இந்த திடகாத்திரரை மட்டும் இடம் மாற்ற யார் எண்ணினாலும் - "வாய்ப்பில்லியே ராஜா !!" என்பதே பதிலாகிறது ! Take a bow 'தல' !! You are an immoveable force !! உங்களை வாசிக்கிறார்களா ? சேமிக்கிறார்களா ? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல - simply becos நாங்கள் உங்களை சுவாசிக்கிறோம் !
லக்கி லூக் : இந்த மஞ்சள்சட்டையருமே "வெற்றி - ஒரு தொடர்கதை" என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டே போகும் ஜாம்பவான் ! சின்ன சைஸ் ; மாக்சி சைஸ் ; புது இதழ் ; மறுபதிப்பு - எதுவாக இருப்பினும், பரிச்சயமான அந்த ஒற்றைநாடி முகம் மட்டும் அட்டைப்படத்தினில் இருந்தால் - குதூகலமே புலனாகிறது !! No different this time too !! பயங்கரமாய் ஸ்பின் எடுக்கும் செபாக் மைதானத்தினில் பேட்டிங் செய்திடத் தடுமாறும் ஆட்டக்காரர்களைப் போல கார்ட்டூன் எனும் ஜானரின் இதர பிரதிநிதிகள் அத்தினி பேருமே தட்டுத் தடுமாறி வரும் வேளையினில், இந்த ஒல்லிப் பிச்சான் மட்டும் ரோஹித் ஷர்மாவைப் போல நொறுக்கித் தள்ளுகிறார் ! அதிலும் 'பரலோகத்திற்கொரு படகு" ; பிசாசுப் பண்ணை & 2020 லக்கி ஆண்டு மலர் smash hits !! கொஞ்ச நேரம் இவரது விற்பனை நம்பர்களையே இமைதட்டாது பார்த்துக் கொண்டே இருந்தேன் - தலைக்குள் ஏதேதோ சிந்தனைகள் சகிதம் ! ஹ்ம்ம்ம் !! More on this later...!
வெற்றிநடைக்கு ஒரு மெருகூட்டும் அடுத்தவர் நமது 007 !! சொற்ப விலையிலான black & white ஜேம்ஸ் பாண்ட் ஆல்பங்களும் சரி ; கலரின் ஜேம்ஸ் 2.0 ஆல்பங்களும் சரி, பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன ! ரொம்பவே பரிச்சயமான பெயர் & ரொம்பவே பிடித்தமான நபர் எனும் போது இவரது hits வியப்புக்கு வழி கோலவில்லை !
நல்ல சேதியின் அடுத்த அத்தியாயங்களில் இடம் பிடிப்போர் மூவருமே போரிஸ் ஜான்சனின் தேசத்துப் புள்ளீங்கோ ! இந்தாண்டினில் CID லாரன்ஸ்-டேவிட் வழக்கத்தை விடவும் வேகமாய் களமாடியுள்ளனர் & ஸ்டெல்லாவின் முதலாளியும் இம்முறை சளைக்காது ஈடு கொடுத்துள்ளார் ! நிறைய ரெகுலர் தடுத்து current நாயக ' நாயகியர் 'தேமே' என குச்சி ஐஸ் சப்பிக்கொண்டிருக்க, சீனியர் சிடிசென்ஸ் டாட்டா காட்டிக் கொண்டே முந்தியுள்ளனர் ! And நான் மட்டும் என்ன இளப்பமா ? - என ஸ்பைடர் சாரும் இந்த வருஷம் தில்லாய் கெத்து காட்டியுள்ளார் ! மாயாவி ரேஞ்சுக்கு இல்லாவிடினும், ஆர்ச்சியின் நடப்பாண்டுக்கு இல்லாவிடினும், கூர்மண்டையர் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தேவலாமே !
அடுத்த சந்தோஷ சேதி - என்று சொல்வதாயின், ஜம்போவின் இதழ்களின் பெரும்பான்மை ஆரவாரமாய் இல்லாவிடினும், அழகாய் ஸ்கோர் செய்திருப்பதைச் சொல்லணும் ! 'ஹீரோக்களின் பெயரைக் காணோமே ?' என்றெல்லாம் தயங்கிடாது, சரளமாய் இந்த oneshots-களை ஜனம் வாங்கியுள்ளனர் ! And குறிப்பிட்டுச் சொல்வதானால், இங்கே அலசப்பட்டு, சிலாகிக்கப்பட்ட இதழ்கள் எல்லாமே ஒரு லெவல் கூடுதல் விற்பனை கொண்டிருப்பது கண்கூடு ! 'நில்...கவனி...வேட்டையாடு..' ; 'பிரிவோம் சந்திப்போம்' ; மா..துஜே ஸலாம்' ; அர்ஸ் மேக்னா என உங்களிடம் தரச் சான்றிதழ் பெற்ற சரக்கெல்லாமே done well !! "இன்ன மெரி...இன்ன மெரி இளநிக்கடை இசக்கியப்பன் கடையிலே இளநி தேனா இனிக்குது ; சர்பத் கடை சடகோபன் கிட்டே டேஸ்ட் அள்ளுது" ; டீக்கடை தேனப்பன் கடையிலே இஞ்சி டீ ஏ-1ன்னு" நீங்க தர்ற பாராட்டுப் பாத்திரங்களின் மதிப்பு இங்கே பிரதிபலிப்பதாய் தோன்றுகிறது ! அதற்காக பல்லி விழுந்த பாலில் டீ போடும் தருணங்களில் குமட்டில் குத்த வேணாமென்றெல்லாம் சொல்லவில்லை ; இதோ இம்மாதத்து ராபினுக்கு விழும் கொட்டுக்கள் என் மண்டையில் விழுவதாகவே உணர்கிறேன் ! ஆனால் the power of positivity - ஓராண்டுக்கும் மேலாய் நிலைப்பது தான் இங்கே highlight என்றுபட்டது !
கார்ட்டூன்கள் பக்கமாய்ப் பார்வைகள் ஓடிடும் போது இம்முறை ஒரு sweet surprise காத்துள்ளது - நமது நீலப் பொடியர்கள் விற்பனையில் சோடை போகாததன் புண்ணியத்தில் ! வியப்பூட்டும் விதமாய் இம்முறை விற்பனை எண்ணிக்கையில் - லக்கி லூக்குக்கு அடுத்த இடம் Smurfs களுக்கே !! ஒருக்கால் பெற்றோர்கள் இவற்றை தம் குட்டீஸுக்கு வாங்கித் தந்துள்ளனரா ? அல்லது கார்ட்டூன் சேனல்களில் இந்த பொடியர்களைப் பார்த்த பரிச்சயத்தில் குட்டிஸ்களே தேர்வு செய்து கொண்டனரா ? - தெரியலை ; ஆனால் the net result has been good !
ஆச்சர்யமூட்டும் விதமாய் மூன்றாம் இடத்தில இருப்பது யார் தெரியுமோ - நமது ஹெர்லக் ஷோம்சார் தான் ! பொதுவாய் இவரது (சொற்ப) டைட்டில்கள் எங்கேனும் கண்ணுக்குத் தெரியா விதமாய் ஒதுங்கி விடுவது வாடிக்கை ! ஆனால் surprise ...surprise ...நமது லண்டன் காத்தாடி ராமமூர்த்திக்கு இம்முறை செழுமையான வரவேற்பு ! Stands third in the cartoons !
Reasonably ok - என்று சொல்லும் விதமாய் அமைந்துள்ளன - ப்ளூகோட் பட்டாளம் & சிக் பில்லின் விற்பனைகள் ! So குறைந்தபட்ச உத்திரவாதத்தில் தலை தப்பிக்கிறார்கள் இந்த இருவருமே !
தொடர்வது bad news & கார்டூனிலிருந்தே அதனை ஆரம்பிக்கிறேனே !
கேரட் மீசைக்காரர் Clifton தான் அந்த பிரஷ் மீசை நிறைய மண் வாங்கியிருக்கும் முதல்வர் ! மொத்தமாய் 4 டைட்டில்கள் உள்ளன கைவசம் & நான்கும் சேர்த்து உருவாக்கியிருக்கும் விற்பனைத் தொகையானதைக் கொண்டு ஒரு கிராமத்துச் சந்தையில் நாலு பூமெக்ஸ் அண்டடாயர் கூட கொள்முதல் செய்திட இயலாதென்பதே சோகம் ! ஏற்கனவே ரெகுலர் ஆன்லைன் விற்பனைகளிலும் இவரொரு செல்லப்பிள்ளை அல்ல எனும் போது - looks very much like the end of the road for க்ளிப்டன் !! நடப்பாண்டினில் இந்த பிரிட்டிஷ் உளவாளியைப் பார்ப்பதே நமக்கினி இறுதி முறையாய் இருக்கும் போலும் !!
'க்ளிப்தனை விட துளியூண்டு தேவலாம்' என்று சொல்வது சமீப வரவுகளான மேக் & ஜாக் ஜோடியே ! ஆனால் அவர் பாடியிருப்பது முகாரியெனில், இவர்கள் இசைப்பதோ கொஞ்சமும் விடுதலில்லா சோக கீதமே !! மூன்று டைட்டில்ஸ் இணைந்து கொணர்ந்திருக்கும் விற்பனைத் தொகையைக் கொண்டு சென்னையில் நமக்கு கம்பியூட்டர் பில் போடா உதவிய நண்பனின் ஒற்றை தினத்து சம்பளத்தைக் கூடப் போட்டிருக்க இயலாது !! ஆன்லைன் விற்பனைகளில் இவர்களது performance எவ்விதம் உள்ளதென்று பார்க்க உத்தேசித்துள்ளேன் & இந்த சிகாகோ ஜோடிக்கு இறுதியாய் ஒரு வாய்ப்பை 2022-ல் தர எண்ணியுள்ளேன் ! சண்ட மாருதங்களாய் செயல்பட்டார்களெனில் சூப்பர் ; இல்லையேல் சமீப தினங்களில் அரங்கேறி வரும் சீட் பங்கீட்டில் ஒரு முக்கிய கட்சிக்குக் கிட்டி வரும் அல்வாவே மேக் & ஜாக் ஜோடிக்கு நாமும் தர வேண்டிப் போகும் ! தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்பவே பிரியமானதொரு நகைச்சுவை ஜோடியும் மேடையேறி இப்படிச் சொதப்புவதை பார்க்கும் போது கண்கள் வேர்க்கின்றன !
ஏற்கனவே மதியில்லா மந்திரியாரும் கல்தா பட்டியலில் இருக்கும் நிலையில் ; ஹெர்லோக் ஷோம்ஸ் தொடரினில் புதுக் கதைகள் லேது எனும் போது - காத்திருக்கும் காலங்களில் - 'கார்ட்டூன் என்றொரு ஜானர் இருந்தது இங்கே' என்று கல்வெட்டில் பதித்து நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளணும் போலும் ! எத்தனை முயன்றும், கார்ட்டூன்களை அக்மார்க் குயந்தைக சமாச்சாரமாகவே கருதிடும் பாங்கு truly disappointing !!
இதே பாணியினில் ராயலான சொதப்பலுக்குச் சொந்தக்காரர்கள் ஆக்ஷன் ஜானரிலும் உள்ளனர் !! கமான்சே எப்போதும் போலவே சிங்காரச் சென்னைக்கு புது மாப்பிளையாய்ப் புறப்பட்டுப் போய், காலரில் வைத்த அந்த மஞ்சளின் மெருகு கூடக் கலையாது அலுங்காமல், குலுங்காமல் பத்திரமாய்த் திரும்பியுள்ளார் வீட்டுக்கு ! ஒரே saving grace ; "கமான்சே பேக்" என்று நாம் போட்டிருந்த பாக்கெட்டினில் மொத்தம் 4 full sets விற்றுள்ளன ! கிடைக்கும் முதல் அவகாசத்தினில் இந்தத் தொடரின் ஒன்பதோ - பத்து புக்ஸை உள்ளடக்கவல்ல slipcase ஒன்றினைத் தயாரித்து, அதற்கென விலையேதும் கூட்டிடாது, மொத்த பேக்காகவே என் கொள்ளுப் பேரன் காலம் வரையிலும் வைத்திருந்து விற்கணும் போலும் ! ஒரு ஜாம்பவானின், ஹிட் தொடர் நம் மத்தியில் இத்தனை சொதப்புவது ரொம்பவே சங்கடமூட்டுகிறது ! ஜெரெமியா கூட இந்தளவுக்கு சாத்து வாங்கலை எனும் போது - கமான்சே உருவாக்கும் record மறக்கப்பட வேண்டியவொன்று !
Slipcase # 2 - தயாரிக்க வேண்டியது 'W' குழுமத்தின் முதலாளிக்குமே என்று சொல்லிட வேண்டும் தான் ! லார்கோ சமீப ஆண்டுகளை விட, இம்முறை கொஞ்சமாய் தெரியுள்ளார் தான் ! ஆனால் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரை நம் கிட்டங்கியிலிருந்து வழியனுப்ப இன்னும் ஏக காலமாகும் போலும் !! Truly perplexing !
Slipcase # 3 - நரைமீசை ரோமியோ ஷெல்டனுக்கே ! இவரும் லார்கோவைப் போலவே இம்முறை an improved performance என்றாலும், Wayne Shelton-க்குப் புதுசாய் பல இல்லங்கள் தேடித் தருவது கிட்டங்கியின் கட்டாயம் !
சாத்துக்களில் ரணமாகி, மூஞ்செல்லாம் காயம் தாங்கி நிற்கும் இன்னும் 2 பிரெஞ்சு தொடர்கள் உள்ளன - ப்ருனோ பிரேசில் & கேப்டன் பிரின்ஸ் ரூபத்தில் ! "சாக மறந்த சுறா" நம் கிட்டங்கியை ஒருபோதும் மறவாது என்பது ஊரறிந்த விஷயம் தான் ; ஆனால் இந்த தபா பிரின்சும் வாங்கியுள்ள மொத்துக்கள் ஒரு வண்டி !! புராதனங்கள் சிறுகச் சிறுக ஓரம் கட்டப்படாவிடின், நீங்களே அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்து விடுவீர்கள் போலும் !! ஆனால் அந்த லாஜிக் ப்ரூனோ பிரேசிலுக்கும், பிரின்சுக்கும் பொருந்தினாலும், செம சமயுகத் தொடரான லார்கோவுக்குப் பொருந்த மறுக்கிறதே ? வடிவேலுக்குப் பஞ்சாயத்துப் பண்ணப் போன சங்கிலி முருகன் போல தான் மடக் மடக்கென்று சொம்புத் தண்ணீரை குடிக்க வேண்டியுள்ளது !
சிகப்பு லைட் ஏரியாவிடினும், தனது பெயருக்கு நேராய் ஆரஞ்சு லைட் கண்சிமிட்டும் இன்னொரு ஹீரோவும் இல்லாதில்லை & believe it or not - அவர் ரிப்போர்ட்டர் ஜானியே !! அவரது லேட்டஸ்ட் வெளியீடான "ஆதலினால் கொலை செய்வீர்" இதழைத் தவிர்த்த பாக்கி சகல டைட்டில்களிலும் விற்றுள்ளதைக் கொண்டு கவுண்டருக்கு வெற்றிலை பாக்கோ ; செந்திலுக்கு முறுக்கோ மட்டுமே வாங்கிட முடியும் !! "சொம்பு தண்ணீ பத்தலையே மைதீன்....அந்த டிரம்மையே ஆலமரத்தடிக்குக் கொண்டு வர முடியுமா ??"
ஒற்றை இலக்க விற்பனையோடு, கூட்டத்துக்குள் நசுக்கப்படும் இன்னொரு தொடர் ஜில் ஜோர்டன் ! Again பிராங்கோ பெல்ஜிய படைப்புலகின் பிரதம தொடர்களில் ஒன்று, நம் மத்தியில் திருவிழாவில் காணாது போன குழந்தையாட்டம் விழித்து நிற்பது sad !!
"மொக்கை" என்று வந்துவிட்டால் - பிரெஞ்சு மொழியென்ன ? இத்தாலிய மொழியென்ன ? எல்லாமே ஒன்று தான் என்றே எடுத்துக் கொள்ளணும் போலும் ! மேஜிக் விண்ட் தொடரின் 3 ஆல்பங்கள் சேர்ந்து வாங்கியுள்ள உதை - WWF மல்யுத்தங்களில், தார் பீப்பாய் போன்ற ஆசாமிகள் எதிராளியை மல்லாக்கப் போட்டுவிட்டு, கயிற்றில் ஏறி நின்று, திடும் திடுமென அவன் மீதே குதிப்பதற்கு சமமானது !
"உதவியாளன் க்ரோவ்சோ போடும் மொக்கை பெருசா ? அல்லது டைலன் டாக் தொடருக்கு நீங்கள் தரும் கும்மாங்குத்துக்கள் பெருசா ?" என்றொரு பட்டிமன்றம் நடத்தினால், திண்டுக்கல் லியோனி தெறித்து ஓடி விடுவார் ! சுத்தமான, நயமான, மஸ்கொத் அல்வா தான் அவருக்கு வாய் நிறைய தர இயன்றிருப்பது !! போகிற போக்கில், இத்தாலிய ஆக்கங்களில் 'தல' டெக்ஸ் & மர்ம மனிதன் மார்ட்டின் தவிர்த்து, பாக்கிப் பேருக்கெல்லாம் நெஞ்சங்களில் மட்டுமே ஜாகைகள் தந்தாக வேண்டும் போலும் !
ஆனால் சைக்கிள் கேப்பில் ஸ்கோர் செய்துள்ள இத்தாலியர் - நம்ம 'பாட்டீம்மா போட்டுத் தள்ளும் கழகத்து தலீவர்' !! அந்தப் பெரிய சைஸ் ; பளிச் அட்டைப்படங்கள் ; உட்பக்கச் சித்திர அமைப்புகள் என்ற கூட்டணி வேலை செய்ததா ? அல்லது வேறு காரணங்களா ? தெரியலை - டயபாலிக் has seen decent sales !
குறுக்கால புகுந்து சாகுபடி செய்துள்ள இன்னொரு நாயகர் - நமது சகஜ வீரர் தான் ! ரோஜரின் "நேற்றைய நகரம்" நடப்பாண்டின் புத்தக விழா விற்பனையில் நான்காம் இடத்தினில் !! "சந்தாவில் அல்லாத இதழ் " என்பதால் நிறைய பேரை அது அந்நேரம் சென்றடைந்திருக்கவில்லையோ - என்னமோ ; சென்னையில் rocking sales !!
ஓரளவுக்கு மானத்தைக் காத்துக் கொண்டுள்ளனர் டிரெண்ட் & தளபதி டைகர் ! நிச்சயமாய் மோசமில்லை என்பேன் - இரு தொடர்களிலுமான விற்பனை !
Same goes for XIII ! புது இதழ்களான "2132 மீட்டர்" & "சதியின் மதி" ஓ.கே என்ற விற்பனை !! அனலெல்லாம் பறக்கலை ; ஆனால் definitely decent !
ஆச்சர்யம் தொடர்கிறது - நமது 'தானைத் தலைவி' ரூபத்திலும் ! Oh yes , மீன் பிடிக்கிறாரோ, நண்டு பிடிக்கிறாரோ, மாடஸ்டி இம்முறை விற்பனையிலொரு குறைந்தபட்ச சாதனைக் கோட்டைத் தொட்டுப் பிடித்து இருப்பது உற்சாகமூட்டுகிறது !
ஆனால் ஒரு தலைவியின் வெற்றி, அடுத்த தயைவிக்கு கை கொடுக்கக் காணோம் !! நம்மூர் கட்சித் தலீவர்கள் போல ஏதாச்சும் ஒரு புயட்சி செய்யக் கிளம்பிய அமாயாவுக்கு ஆருமே பெருசாய் ஆதரவு தராது டீலில் விட்டுப்புட்டீங்களே மகாஜனங்களே ? அந்தப் பரந்த மனசு என்னமாய் சலனம் கொள்ளும் ? பட்டவர்த்தனமான பல்ப் ! அம்மணிக்கும்..நேக்கும் !!
Before I wind up - சங்கடத்தின் உச்சம் பற்றி !! நடப்பாண்டில் சென்னை விற்பனையில் தோர்கல் ரொம்பவே...ரொம்ப ரொம்பவே கோட்டை விட்டுள்ளார் !! ஜனவரி இதழான "அழகிய அகதி" நீங்கலாய் பாக்கி அனைத்துமே shocking numbers !! சத்தியமாய் இதை எவ்விதம் எடுத்துக் கொள்வதென்றோ ; இதன் பின்னணிச் சேதி என்னவென்றோ புரிந்து கொள்ளத் தெரியலை !! 'மைதீன்...டிரம் பத்தாதுடாப்பா ; தண்ணி ட்ரக்கருக்கு சொல்லிடேன் !!' Phew !!
ஆனால் இம்முறை பார்த்திட முடிந்த silver streak பற்றியும் சொல்லிடுகிறேனே ?! பழசோ, புதுசா ; கலரோ ; black & white ஆல்பமோ - கிட்டத்தட்ட அனைத்து கிராபிக் நாவல்களுமே இம்முறை செமையாய் ஸ்கோர் செய்துள்ளன ! மாறி வரும் ரசனைகளுக்கொரு வழிகாட்டியோ ? புரிந்திட முழி பிதுங்கி நிற்கிறேன் ! 'யப்பா சாமி...டிரக்கர் கான்சல் ; கம்மாய்க்குள்ளே குதிச்சு நானே குடிச்சுக்கிறேன் !!'
Bye guys..இந்தப் பதிவின் துவக்க வரியினைப் பொய்யாக்கி விட்டு, வள்ளியப்பனாகவே விடை பெறுகிறேன் ! So "சுருக்கா மேட்டரை சொல்லுப்பூ ?" என்று எண்ணிடும் நண்பர்கள், மார்டினின் "உண்மையின் உரைகல்" இதழோடு இம்முறை பொழுதைச் செலவிடலாம் ! இந்த விற்பனைகளின் தகவல்களை தலைக்குள் அசைபோட ; நம் அடுத்தாண்டின் திட்டமிடலில் இவற்றின் takeaway-களுள் அவசியமானவற்றை இணைக்க என்செய்வதென்ற மகா சிந்தனைகளோடு சவாரி செய்திட, தொடரும் வாரங்களும், மாதங்களும் எனக்கு அவசியமாகிடும் ! நிச்சயமாய் kneejerk ரியாக்ஷன்ஸ் இராது தான் ; அதே சமயம் அத்தியாவசியக் கசப்புகளை விழுங்கவும் தயங்க மாட்டோம் தான் !
Bye all ; see you around !! Have a fun weekend !
பின்னாடி குறிப்புங்கோ :
நம் சென்னை ஓவியர் பிரித்து மேய்ந்துள்ளார் - அடுத்த பதிவினில் நான் கண்ணில் காட்டவுள்ள கலர் அட்டைப்படத்தினில் !
கொரில்லா சாம்ராஜ்யத்துக்கு அட்டைப்படம் வருது !! "கழுகு வேட்டை" (சந்தாதாரர்கள்) விலையில்லா இதழ்களின் போட்டோக்கள் ப்ளீஸ் ? வரும் திங்கள் அதற்கான last date folks !! அதனை விசாலன் வரையிலும் நீட்டிக்கிறோம் (18th மார்ச்) !
அப்புறம் சந்தா எக்ஸ்பிரஸ் தடதடக்கத் துவங்கிவிட்டது - ஒருவழியாய் !! இன்னமும் 2021-ன் சந்தாவினில் இடம்பிடித்திரா நண்பர்களுக்கு இதனையே ஒரு நினைவூட்டலாக்கிட அனுமதியுங்களேன் ப்ளீஸ் ? "சும்மா வாரா வாரம் இங்கே நொய்யு..நொய்யு'ன்னு துட்டுக்கு அடிபோடறியே ?" என்று எனது அனற்றல்கள் உங்களுக்கு நெருடிடக்கூடும் என்பது புரிகிறது தான் ! ஆனால் இந்த யாசிப்பே நம் ஒட்டுமொத்த (காமிக்ஸ்) வாசிப்பின் பின்னணி எனும் போது, சந்தோஷமாகவே கையேந்திக் கரம் கூப்புகிறேன் ! Please do jump in asap folks !!