Powered By Blogger

Wednesday, April 30, 2014

வெப்ப நாட்களும்....நிதான சிந்தனைகளும் !


நண்பர்களே,

வணக்கம். அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் நாட்கள் சில பாக்கியுள்ள போதிலும், கடந்த சில தினங்களாய் இங்கே நமது வலைப்பதிவில் வெப்பத்தின் அளவுகள் கூடி வருவதை நாம் அறிவோம் ! அதைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் தலையை நுழைப்பதற்கு முன்பாக நமது மாமூலான வேலைகளோடு பிள்ளையார் சுழியைப் போடுவோமா ?

மே துவங்கவிருப்பது நாளைய தினமே எனினும் நமக்கோ 'காமிக்ஸ் மே' ஒரு வாரத்திற்கு முன்பாகவே புலர்ந்து விட்டது! 3 கதைகளையும் படித்து, விமர்சித்து முடித்த கையோடு - what next ? என்ற கொட்டாவியோடு அமர்ந்திருக்கிறோம். LMS ன் பணிகள் ஒரு பக்கம் ஓசையின்றி நடந்து வரும் போதிலும் - இடைப்பட்ட ஜூன் & ஜூலை மாதங்களுக்கான ரெகுலர் இதழ்களை 'சட சட' வென்று பூர்த்தி செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென்ற எண்ணம் எனக்குள் குடி கொண்டு விட்டதால் ஜூன் & ஜூலை issues ஜரூராய்த் தயாராகி வருகின்றன ! 2014-ல் முதல் தடவையாக வுட்சிடியின் கோமாளிகளும், கோடீஸ்வரக் கோமானும் தலை காட்டப் போவது ஜூன் மாதத்தில் ! இதோ சிக் பில் & கோவின் முழுநீளக் காமெடி கலாட்டாவின் அட்டைப்படம் + உட்பக்க teaser !  

ஒரிஜினல் அட்டைப்படமே அழகாய் அமைந்திருந்தபடியால் அதனை நோண்டும் அவசியம் ஏதும் நேரவில்லை ; கதையின் பெயர், இத்யாதிகளை மாத்திரம் இங்கும் அங்குமாய் பொருத்தி விட்டு மேகி நூடுல்ஸ் பாணியில் விரைவாகத் தயார் செய்து விட முடிந்தது. பின்னட்டையில் கதைச்சுருக்கம் மட்டுமே சேர்ந்திடும் அச்சாகும் முன்பாக ! வழக்கம் போல ஷெரிப் & ஆர்ட்டின் அடிக்கும் கூத்துக்களே கதையின் highlight என்ற போதிலும், பின்பாதியில் சிக் பில் & குள்ளன் பொறுப்பாய்  இணைந்து கொள்கிறார்கள் ! 1953 முதலாய் சிக் பில் கதைகள் பிரெஞ்சில் வெளியாகி வரும் போதிலும், இதர மொழிகளில் அத்தனை பெரிதாய் சோபிக்கவில்லை என்பது தான் புதிரான விஷயம் ! வேற்று மொழிகளில் வெளியிட டிமாண்ட் அதிகம் இல்லாது போனதால் இத்தொடரின் அனைத்துக் கதைகளையும் டிஜிட்டல் கோப்புகளாக்கும் முயற்சியில் படைப்பாளிகள் வேகம் காட்டவில்லை ! தொடரின் புதுக் கதைகள் நீங்கலாக வண்ணத்தில் எஞ்சி இருப்பது 1960-களில் வெளியான இத்தொடரின் ஆரம்பத்து ஆல்பம்கள் மாத்திரமே ! அத்தனை பழைய கதைகளில் கையாளப்பட்டிருக்கும் சித்திர பாணியில் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகளில் நிறையவே வேறுபாடுகள் இருக்குமென்பதால் அவற்றால் நமக்குப் பெரியதொரு புண்ணியம் கிடையாது ! Cinebook போன்ற சாவதேச ஜாம்பவான்கள் யாரேனும் சிக் பில்லை வெளியிட முன்வந்தால் அவர்களின் பொருட்டாவது தயாராகக் கூடிய டிஜிட்டல் பைல்கள் நமக்கும் பயன்படும் ! நம்புவோம் - அப்படியொரு நாள் புலருமென்று !


"சென்னைப் புத்தக சங்கமம்" மிதமான விற்பனையைத் தந்த வகையில் பெரியதொரு ஏமாற்றம் ஏதுமில்லாது தலை தப்பிக்க உதவியது ! ஜூலை மாதம் நெய்வேலியில் நடக்கவிருக்கும் புத்தக விழா நமது அடுத்த இலக்கு ! அந்தப் பகுதிகள் நமக்கு முற்றிலுமாய் புதுசு என்பதால் அங்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் நமது இதழ்களை அங்குள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு வாசல் திறக்கும் ! விண்ணப்பித்துள்ளோம் - நம்பிக்கையோடு ! ஸ்டால் கிட்டும் பட்சத்தில் 'சூப்பர் 6'-ன் முதலாவது BOOK FAIR SPECIAL அங்கே அரங்கேறிடும் ! "மேஜிக் விண்ட்" முதல் வண்ண இதழும், டெக்சின் "காவல் கழுகு" 114 பக்க B &W  சாகசமும் நெய்வேலிக்கென target செய்துள்ளோம் ! குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மாத்திரமே நெய்வேலியில் அனுமதிக்கப்படும் என்பதால் புதியவர்களுக்கு entry கிடைப்பது சுலபமல்ல என்றும் சக புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாய் அறிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் அதன் அமைப்பாளர்கள் நம் மீது பரிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்துள்ளோம் ! மேஜிக் விண்ட் கதைகளின் வண்ண டிஜிட்டல் பைல்கள் ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக நம்மை வந்து சேர்ந்தன ! ரொம்பவே வித்தியாசமான கதைக்கு, ரொம்பவே மாறுபட்ட வர்ணக் கலவை தரப்பட்டுள்ளது ! டெக்ஸ் ; டயபாலிக் சைஸ்களில் ஆர்ட் பேப்பரில் முழுவண்ணத்தில் வரக் காத்திருக்கும் இந்தத் தொடர் மட்டுமல்லாது, இந்த format -ம் கூட நம்மை ரசிக்கச் செய்யுமென்று நினைக்கிறேன் ! Fingers crossed !

அப்புறம் கடந்த பதிவின் பின்னூட்டக் கோர்வைகளில் கலந்துள்ள தேவையற்ற உஷ்ணத்தைப் பற்றி ! இந்த வலைப்பூ தனது இரண்டரை ஆண்டுகாலப் பயணத்தில் பார்த்திடும் முதல் சலனமோ, இறுதிச் சலனமோ இதுவல்ல எனும் போது இதற்கெனப் பெரிதாய் தூக்கத்தைத் தொலைக்காது நம் பாதையில் எப்போதும் போலத் தொடர்வது தானே லாஜிக் ? அபிப்ராயங்களில் ; அவற்றை வெளிப்படுத்தும் தொனிகளில் வேறுபாடு இருப்பினும், நிஜமான அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பிரியமின்றி, புனைப்பெயர்களோடு திடுமென இங்கு உலவுவோரும் கூட நம்மோடு வேறு பல சந்தர்ப்பங்களில் நேசத்தைப் பரிமாறிய நண்பர்களே என்பதையும் நினைவில் கொள்வோமே ?  ஏளனத்துக்கு ஏளனம் ; வெப்பத்துக்கு வெப்பம் என்றுமே பதிலாகாது என்பதை  அறியாதவர்களா நாம் ? So அந்த கணத்தின் தூண்டுதலில் காரமாய் பதில் சொல்லி தேவையற்ற சர்ச்சைகளை வளர்க்க வேண்டாமே ? சங்கடத்தை உருவாக்கும் விதமாய் பின்னூட்டங்கள் இனி இங்கு இடப்படும் பட்சத்தில் தேர்தலில் தற்போது தரப்பட்டுள்ள "வாக்களிக்கப் பிரியமில்லை"  என்ற ரீதியிலான உபாயத்தை நாமும் கையாள்வோம் ! "இந்தக் கருத்தோடு நான் உடன்படவில்லை!" என்று நாசூக்காய் பதிவு  செய்து விட்டு நகன்று செல்வோமே ? "பணிந்தவன்   பயந்தவனில்லை" என்பது ஆட்டோ பின்பக்கத்து வாசகமாய் மட்டுமே இருத்தல் அவசியமாகாது அல்லவா ? அதே போல யாரையேனும் நேரடியாகவோ, ஜாடையாகவோ காயப்படுத்தும் விதமாய் பதிவு ஏதேனும் இருப்பின், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதை நான் களைந்து விடுவேன் ! 'இங்கு ஜால்ரா அடிக்கும் விதமான சிந்தனைகளுக்கு மாத்திரமே இடமுண்டு !" என்ற ரீதியிலான விமர்சனத்தை அது கொண்டுவரினும் பரவாயில்லை ! ஏனெனில் அதனைப் பதிவு செய்வோர்க்கே தெரியும், அத்தகையக் குற்றச்சாட்டில் காலணாவிற்கு சரக்குக் கிடையாதென்று ! 

இது காமிக்ஸ் எனும் சுவையை நட்போடு பகிர்ந்து கொள்ளும் பொதுத் தளம் ! இங்கு எவ்விதமான கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; எத்தனை கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; என்ன ரீதியிலான கோரிக்கைகள் ; விவாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயம் செய்யும் உரிமையோ, பிரதிநித்துவமோ நிச்சயமாய் எவருக்கும் கிடையாது ! இங்கு ஜாலியாய், சந்தோஷமாய் பதிவிடுவோரெல்லாம் ஆற்றலில், விவேகத்தில் குறைச்சலானவர்கள் என்ற அபத்த சிந்தனைகளுக்கோ ; பள்ளி வகுப்பறைரீதியிலான அமைதி காக்கப்பட வேண்டுமென்ற code of conduct எதுவுமோ நிச்சயம் அமலில் இல்லை ! எப்போதும் போலவே மனதில் தோன்றுவதை சந்தோஷமாய் பகிர்ந்திட இந்தத் தளம் தனது கதவுகளை 24/7 திறந்தே வைத்திருக்கும் ! 

அதே சமயம் நண்பர்களுக்கு சின்னதாய் சில வேண்டுகோள்களும் கூட :

  1. பதிவுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாய் சிதறல்களாய்   வெளியிட்டிடாமல் கோர்வையாக எழுதினால் படிக்கவோ / தாண்டிச் செல்லவோ ஏதுவாக  இருக்கும் - அவரவர் விருப்பத்தைப் பொருத்து ! 
  2. பல சந்தர்ப்பங்களில் நான் உங்களது பின்னூட்டங்களுக்குப் பதில் போட முனைவது நடுச்சாமத்திலோ, அதிகாலையிலோ தான் ! அயர்ச்சியின் காரணமாகவோ, திடீர் மின்வெட்டின் காரணமாகவோ ; தொங்கிக் கொண்டிருக்கும் கதைகளின் எழுத்துப் பணிகளின் பொருட்டோ- நண்பர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முடியாது போகலாம் ! "அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிட்டுகிறது ; எனக்கில்லையா ?" என்ற ரீதியில் சில சமயங்களில் உளைச்சல்களை இது ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்பது எனக்குப் புரியாமல் இல்லை ! நிச்சயமாய் நண்பர்களுக்குள் பாகுபாடு பார்க்கும் அவசியம் எனக்குக் கிடையவே கிடையாது ! அதே போல உங்கள் கேள்விகள் / அபிப்ராயங்கள் பகிரப்படுவது ன் ஒருவனை நோக்கி மாத்திரமே என்பதால் அதனை நீங்கள் மறக்காதிருப்பது சுலபம் ! ஆனால் என் நிலையோ வேறு - பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை நூறைத் தாண்டிடும் நிலையிலேயே - யார் என்ன சொன்னார்கள் ? ; யாருக்கு நான் என்ன பதில் சொன்னேன் ?என்பது என் தலைக்குள் சாம்பாராகிப் போயிருக்கும் ! So அதன் பொருட்டு அவ்வப்போது நேரக்கூடிய சிற்சிறு மனவருத்தங்களுக்காக எனது apologies !
  3. "அவ்வப்போது தட்டி வைக்கப்படாவிடால் ஆசாமிக்கு மண்டைக்கனம் ஏறி விடும் ! " என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் நண்பர்களின் ஒரு சிறுபான்மைக்கு உள்ளதை அவ்வப்போது வரும் சில மின்னஞ்சல்களும், மாற்றுப் பெயரிலான பின்னூட்டங்களும் சொல்வதை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை ! இதன் பொருட்டே கூட விமர்சனங்களில் காரம் எனும் வத்தல் (தேவைக்கு அதிகமாகவே) தூக்கலாய் ஆங்காங்கே இருப்பதையும் உணரவும் செய்கிறேன் ! வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் பிரதானமாகத் தெரிவது இயல்பே ! நான் தற்போது நிலைகொண்டுள்ள பருவத்தில் - எழுத்தும், அது கொண்டு வரும் திருப்தியுமே என்னை இயக்கும் பெட்ரோல் ! அவ்வப்போது நண்பர்களின் கனிவான வார்த்தைகளைப் படிக்கும் போது எழும் சின்னதொரு சந்தோஷத்தைத் தாண்டி இறுமாப்பிற்குப் படிக்கட்டுகளாய் அவை ஒரு நாளும் இருந்ததில்லை ; இருக்கவும் போவதில்லை! I know I am as good or as bad as my last hit or my last flop ! ஏப்ரலில் ஷெல்டனும், லக்கியும் கச்சிதமாய் அமையப் பெற்றதால் 'ஹிட்' அடிக்க முடிந்தது ! ஆனால் 25 நாட்களே கடந்த நிலையில் - கதைகளில் ; தர எதிர்பார்ப்புகளில் கொஞ்சமேனும் குறைகள் எட்டிப் பார்க்கும் போதே பிசிறடிக்கும் எண்ணச் சிதறல்கள் நிலவரத்தைப் பறை சாற்றுகின்றன ! So உயர மிதக்கிறேன் பேர்வழி என்று பறந்து விட்டு, மோடேர் என்று பூமியைப் பதம் பார்ப்பதை விட கால்கள் தரையில் திடமாய் ஊன்றி நிற்பது சாலச் சிறந்தது என்பது எனது வாழ்க்கைப் பாடம் ! 
  4. Last but not the least, ஒவ்வொரு முறையும் ஈகோ எனும் முகமில்லா மாயாவி நம்மிடையே உலவும் வேளை வரும் போது தான் முட்டல்களும்  , மோதல்களும் தலைதூக்குகின்றன ! ஏதேதோ சிற்சிறு மனத்தாங்கல்களால் மனதளவில் விலகி நிற்கும் நண்பர்கள் அனைவரும் நேசமெனும் கரத்தை முன்நீட்டினால் "இனி எல்லாம் சுபமே  !" என்று end card போட்டு விடலாம் அல்லவா ? நானும் இங்கே மாங்கு மாங்கென்று 'அட்வைஸ் அய்யாசாமியாய்' அவதாரம் எடுப்பதற்குப் பதிலாய் - அண்ணன் "மேஜிக் விண்ட்" அவர்களோடுடனான பணிகளைக் கவனிக்கச் செல்வேன் அல்லவா ? Take care folks ! See you around !
P.S: கடந்த பதிவில் ஆங்காங்கே காயம் செய்யும் விதமாய் பரிமாறப்பட்டுள்ள பின்னூட்டங்களை ஒட்டு மொத்தமாய் களைந்திட நினைத்தேன் ; ஆனால் முன்பு ஒருமுறை செய்த அந்த "மொத்த இருட்டடிப்பு" வேண்டாமே என்று தோன்றியது ! மன உளைச்சல்களுக்கு நானும் ஒரு விதத்தில் காரணம் ஆகி விட்டதற்கு மீண்டும்  apologies !!

Saturday, April 26, 2014

கேட்டது கிடைத்தது...!!


நண்பர்களே,

வணக்கம் ! இதை..இதைத் தான் காணக் காத்துக் கொண்டிருந்தேன் ! ஒவ்வொரு மாதத்து இதழ்களும் வெளியாகும் முன்பாக அதன் எதிர்பார்ப்பில் இங்கு நிறையப் பின்னூட்டங்கள் குவிவதும், உற்சாக அரட்டைகள் அரங்கேறுவதும் சந்தோஷம் தரும் நிகழ்வுகள் ! ஆனால் இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, கொஞ்சமாய் in-depth  விமர்சனங்கள் ; சன்னமாய் மேலோட்டமான விமர்சனங்கள் என்பதைத் தாண்டி பெரியதொரு feedback இருப்பதைக் காணவே இயலாது போயிருந்தது ! உங்கள் நாடிகளை ; ரசனைகளை எனக்கு அறியத் தரும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் கொஞ்ச காலமாகவே இல்லாததில் எனக்கொரு மௌன வருத்தம் ! ஆனால் இம்முறையோ மே மாதத்து இதழ்கள் மூன்றையும் அழகாய் அலசிடும் ஒரு பாங்கை நண்பர்கள் அனைவரும் பொறுப்பேற்று நயம்படச் செய்து வருவதைக் கண்ட போது மனதுக்கு இதமாய் இருந்தது ! ஓராண்டின் ஓட்டத்தின் போதே தொடரும் ஆண்டின் இதழ்களைப் பற்றிய அசைபோடுதல் என் மனதில் ஓடும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளது உங்கள் அனைவரது ஒத்துழைப்பினால் தான் என்பதில் எவ்வித இரகசியமும் கிடையாது ! அப்படியிருக்கையில் - உங்களது விருப்பு-வெறுப்புகளை ஸ்பஷ்டமாய் தெரிவிக்க கொஞ்சமே கொஞ்சமேனும் அவகாசம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் - அதன் பலன்கள் நம் அனைவருக்கும் இன்னும் தரமான கதைகளாகக் கிடைக்கும் விதத்தில் பிரதிபலிக்கும் !

அதற்கொரு உவமை காண அதிக தொலைவு நாம் செல்லத் தேவையிராது - மே மாதத்து "முகமற்ற கண்கள்" நம் அருகாமையில் இருக்கும் போது ! கால் நூற்றாண்டுக்கு முன்பாக இது வெளியான சமயம் நமது ரசனைகளும், வயதுகளும் வேறொரு பரிமாணத்தில் இருந்ததால் - அன்றொரு smashhit ஆவது சுலப சாத்தியமானது ! ஆனால் இன்றைய 'லார்கோ' யுகத்தில் என்ன தான் வான்சின் சித்திரங்கள் மாயம் செய்தாலும், வண்ணம் அழகாய் மிளிர்ந்தாலும், முதுகெலும்பான கதையின் புராதனம் ப்ருனோவை ரசிப்பதை சிரமமாக்குவதை நான் எடிட் செய்யும் போதே உணர்ந்தேன் ! இங்கே இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் தொனிகளும், எனது அனுமானமும் ஒன்றிச் செல்வதால் - ஓரளவுக்கேனும் we are in sync என்ற ஆறுதல் எனக்கு. நல்ல காலமாய் இந்தாண்டின் திட்டமிடலில் இதற்கு மேலாக ப்ருனோவிற்கு (மறுபதிப்பு) வாய்ப்புகள் வழங்கவில்லையே என்ற மகிழ்ச்சியும் கூட ! 2015-ன் மறுபதிப்புப் பட்டியலைப் பற்றிய திட்டமிடலுக்கு நிறையவே யோசனை தேவை என்பது மட்டும் இப்போதைக்கு நான் இதனில் உள்வாங்கி இருக்கும் பாடம். கேப்டன் பிரின்ஸ் கதைகள் + லக்கி லூக் கதைகளைத் தாண்டி (வண்ண) மறுபதிப்புகளுக்கு ஒத்து வரக் கூடிய கதைகள் வேறு என்னவாக இருக்குமென்ற உங்களின் suggestions ப்ளீஸ் ? (ஸ்பைடர் ; ஆர்ச்சி என்ற மாமூல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட )..

மறுபதிப்புகள் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே - எனக்கு சமீபமாய்த் தோன்றியதொரு சிந்தனையை உரக்க வெளிப்படுத்த இதை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன் ! ஜூலையில் மறுபதிப்பு வரிசையில் லக்கி லூக்கின் "பூம் -பூம் படலம்" வரக் காத்துள்ளது. இக்கதை லயனில் ஒரிஜினலாய் வெளியான நாட்களில் நாம் ஒவ்வொரு தொடருக்கும் பயன்படுத்திய மொழிநடைகளில் ஒரு consistency இருந்து வந்ததில்லை. சில கதைகளில் லக்கி பேச்சு வழக்கில் உரையாடுவதும், சில கதைகளில் தூய தமிழில் "செப்புவதும்" உண்டு ! "பூம்-பூம் படலம்" டைப்செட் ஆகி எனது மேஜைக்கு சென்ற வாரம் வந்த போது - சுத்தமாய் மறந்து போய் இருந்த இக்கதையை மேலோட்டமாய்ப் படிக்கத் துவங்கினேன். கதையினில் லக்கி தூய தமிழில் மாத்திரமே பேசும் பாணியானது தற்போது நாம் அவருக்கென நிர்ணயம் செய்து வைத்துள்ள பேச்சு வழக்கிற்கு நெருடலாய் இருப்பது போல் எனக்குப்பட்டது. தவிரவும், பேச்சு வழக்கில் கிட்டும்  அந்த சுலப humour அதில் குறைவாய் இருப்பதாய்த் தோன்றியது ! LMS மற்றும் சூப்பர் 6-ன் கதைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிரா ஒரு சற்றே ஓய்வான சமயமாக இருப்பின், இக்கதையை நிச்சயமாய் நாம் மறுமொழிபெயர்ப்பு செய்ய முனைந்திருப்பேன் ; ஆனால் தற்போதோ விழி பிதுங்கி நிற்கும் சூழலில் அது சாத்தியமில்லை எனும் போது எனக்கொரு சிந்தனை தோன்றியது ! KAUN BANEGA COMPLETE TRANSLATOR ? போட்டி ஒன்றை அறிவித்து இந்த இதழை முழுமையாய் - தற்போதைய லக்கி பாணிக்கு ஒத்து வரும் விதத்தில் வாசக நண்பர்கள் மொழிபெயர்க்க ஒரு வாய்ப்பளித்தால் என்ன என்பதே அந்த மகா சிந்தனை !! What do you think of it folks ? உங்கள் அனைவரிடமும் இந்த இதழின் ஒரிஜினல் (தமிழ்) பதிப்பு இருக்குமெனும் போது, புதியதொரு வார்ப்பில் மொழிநடையினை அமைக்கும் பணியானது சுவாரஸ்யம் தருமா உங்களுக்கு ?  சின்னச் சின்ன கதைகளாக இல்லாது - ஒரு முழு நீளக் கதையினில் பணியாற்றும் அனுபவமும் எப்படி இருக்குமென்பதை சந்தடி சாக்கில் உங்களுக்கு அறிமுகம் செய்தது போலாகாதா ? What say ?


மே மாத வண்ண இதழ் # 2 - தோர்களிலும் எனது அனுமானங்கள் உங்களின் அபிப்ராயங்களோடு ஒத்துச் செல்லும் விதமாகவே உள்ளன ! Cinebook வெளியிடுவதைப் போல நடு நடுவே உள்ள ஹிட் கதைகளை மட்டுமாய்த்  தேர்வு செய்து நாமும் வெளியிடுவதில் படைப்பாளிகளுக்கு அத்தனை ஏற்பில்லை. பிந்தைய கதைகளில் கவனத்தைச் செலுத்திடும் பட்சத்தில் - ஒரு கட்டத்துக்குப் பின்னே துவக்க நாட்களது கதைகளை நாம் ஓரம் கட்டி விடுவோம் என்ற (நியாயமான) முன்ஜாக்கிரதை அவர்களுக்கு. So ஒரிஜினலான வரிசையில் பயணிப்பது தவிர்க்க இயலா சூழல். ஆனால் ஆங்கிலத்தில் இது வரைப் படிக்க வாய்ப்புக் கிட்டா கதைகளையும் தமிழ் மூலமாவது படிக்க சாத்தியமாகிறதே என்று positive ஆக எடுத்துக் கொள்வோமே ! கதைகளைப் பொறுத்த வரை - இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை அதன் களம் முழுமையாய் நம் முன்னே விரிவதற்கும், தோர்கல் முழுமையாய் நம்மை ஆக்கிரமிப்பதற்கும். ஆங்கிலத்திலோ, இதர மொழிகளிலோ இதனைப் படித்திருகா நண்பர்கள் சற்றே பொறுமை காத்தால் - ஒரு அழகான தொடரை தைரியமாய் தொடரும் சூழல் உருவாகும். இக்கதையின் வர்ணக் கலவைகள் சற்றே outlandish ஆக இருப்பது கண்ணுக்கு உறுத்தலாய் இருப்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் ; கொஞ்சமே கொஞ்ச தூரம் இத்தொடரில் கடந்து விட்டால் காத்திருப்பது ஒரு விருந்து என்பது நிச்சயம் ! 

இறுதியாய் மே மாதத்து முதல்வர் டெக்ஸ் பற்றி : கதையின் அதிரடிக் களம் நம்மை நிச்சயமாய் டிராகன் நகரத்து நாட்களுக்குக் கொண்டு செல்லும் என்பதை உணர அதிகம் சிரமம் நேரவில்லை ! அதிலும் அந்த ஒற்றைக்கு ஒற்றை duel நமக்குள் இருக்கும் அந்த hero worship ஐ தூக்கலாய் வெளிக் கொணரும் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. இந்த சாகசத்தில் கார்சனுக்கும் முக்கிய பங்கு இருப்பதால் அவரது மாமூலான wisecracks சங்கதிகளை அள்ளி விட எனக்குமொரு வாய்ப்பு கிட்டியது. சித்திரங்களில் உள்ள அந்த வேற்றுமை ஒரு தவிர்க்க இயலா விஷயம் எனும் போது அதனோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் ! அதிலும், இந்த சாகசத்தின் ஓவியர் இத்தலைமுறை டெக்ஸ் கதைகளுக்கு தீவிரமாய்ப் பணியாற்றும் ஓவியர் எனும் போது -  we are bound to see more of him ! காகிதத்தின் தரம் பற்றிய உங்களின் வருத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் சில காலமாகவே நான் வைத்து வரும் பிலாக்கனமும் மாறும் வழியைக் காணோம் எனும் போது கறுப்பு-வெள்ளை இதழ்களோடு ஒவ்வொரு முறையும் இதே மல்யுத்தமே ! நாம் இதழின் விலையை ஜாண் ஏற்றினால். பேப்பர் மில்களோ தரமான வெள்ளைத் தாளின் விலைகளை முழம் ஏற்றி விடுகின்றன ! தற்போது நாம் பயன்படுத்தியுள்ள காகிதம் (Malar Maplitho) டன் ஒன்றின் விலை ரூ.54,000 ! TNPL போன்ற முன்னணி மில்களின் விலைகளோ ரூ.70,000 ! டன் ஒன்றிற்கு ரூ.16,000 கூடுதல் எனும் போது தான் டிரௌசர் இடுப்பில் நிற்கவே மாட்டேன்கிறது ! இதற்கொரு மாற்றுத் தீர்வை என் தந்தையும், என் தனையனுமாய் சேர்ந்து தேடி வருகின்றனர் ! LMS-ல் நிச்சயமாய் இந்த ரகக் காகிதம் இராது என்பது மட்டும் உறுதி. மற்றபடிக்கு, புதிய முயற்சி வெற்றி காணும் பட்சத்தில் அடுத்த black & white இதழிலேயே நீங்கள் ஒரு சந்தோஷ மாற்றத்தைக் காண்பீர்கள் !  

அடுத்த மாதம் லார்கோ வின்ச் + சிக் பில் கதைகள் என்பதால் எனது பணி சிரமம் ; ஆனால் பாடு சுலபம். சீக்கிரமே இவர்களும் உங்களைத் தேடி வரத் தயார் என்பதால் இந்தாண்டின் மையப் பகுதியை நாற்கால்ப்பாய்ச்சலில் எட்டிப் பிடித்து விடுவோம். ஆனால் நிஜமான பரிசோதனைகள் காத்திருப்பது இரண்டாம் பாதியினில் தான் என்பதால் - இப்போதிலிருந்தே ஒரு உத்வேகம் கலந்த nervousness எங்களுள் !! அவ்வப்போது சாய்ந்து கொள்ள உங்களின் ஆக்கபூர்வமான சிந்தைகள் கிட்டிடும் பட்சத்தில் தூள் கிளப்பிடும் உறுதி எங்களுக்குள்ளது !

தற்போது நடந்து வரும் சென்னை புத்தக சங்கமம் கோடையின் வெயிலுக்கும், IPL எனும் அசுரனுக்கும் இரண்டாம் பட்சமாய் இருந்து வந்தாலும் இவ்வாரம் மானத்தைக் காப்பாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஜனவரியின் விற்பனை இலக்குகளுக்கும் இதற்கும் துளி சம்பந்தமும் இல்லையெனினும், காற்றாடிய ஆரம்ப நாட்களைப் போல் அல்லாது இவ்வாரம் சுறுசுறுப்பாகவே விற்பனைகளைக் கண்டுள்ளது ! நாளையே இறுதி தினம் என்பதால் இது வரைக்கும் செல்ல நேரம் கிட்டி இருக்கா சென்னை நண்பர்கள் நாளை தலையைக் காட்டிடலாமே ? மீண்டும் சிந்திப்போம் ...Stay cool until then !

Wednesday, April 23, 2014

இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி !

நண்பர்களே,

வணக்கம். 150-வது பதிவென்பதால் மாமூலான சங்கதிகளோடு சலாம் போட்டு முடித்து விடாமல் - கொஞ்சம் பொறுமையாய் எழுதுவோமே என்று பேனாவையும், பேப்பரையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தால்  தொடர்ந்த பதிவின் கருவானது  ஒன்பது மணி மெகா சீரியலைப் போல் நீள்வதைத் தவிர்க்க இயலவில்லை ! எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் ! Here goes : 








மே மாத இதழ்கள் இன்றைய கூரியரில் / பதிவுத் தபாலில் புறப்பட்டு விட்டன ! எலெக்ஷனுக்கு மறு நாள் காலை உங்கள் வீட்டுக் கதவுகளை அவை தட்டியாக வேண்டும் ! 



Monday, April 14, 2014

நில்..கவனி..கைகுலுக்கு !

நண்பர்களே,

தமிழ் புத்தாண்டின் முதல் நாள் வணக்கங்கள் ! டி.வி.யில் TRP ratings குறையும் போதெல்லாம் ஏதேனும் அதிரடியாய் ஒரு புரோக்ராமைப் போட்டு பார்வைகளை எகிறச் செய்வது வழக்கம். ஆனால் அவ்விதத் திட்டமிடல்கள் ஏதும் இல்லாத நமக்கு கடந்த சில நாட்களது எதிர்பாரா நிகழ்வுகளும், பதிவுகளும் ஒரு   'பூஸ்ட்' கொடுத்திருப்பதை மறுக்க முடியாது ! ஒரே நாளில் 2350 பார்வைகள் ; 200+ பின்னூட்டங்கள் ; கலைக்கப்பட்ட சில மௌனங்கள் ; நண்பர்களின் மீள்வருகைகள்   ;  பற்றாக்குறைக்கு  4 நாட்களில் மூன்று பதிவுகள் என்று நாம் தம்கட்டி உந்திச் செல்லுவதை உணர முடிகின்றது !! பாதை எவ்விதம் இருப்பினும் , 'இனி எல்லாம் சுகமே..' என்று end card போடும் ஒரு சூழல் பூரணமாய் உருவாகிட்டால் நம் பொறுமைக்குப் பலன் கிட்டி இருக்கும்!! Fingers crossed ! 

Anyways - ஒரு புதுத் துவக்கத்தைத் தேடும் தருணத்தில் நம் இரவுக் கழுகாரை வரவேற்பது நிச்சயமாய் ஒரு whiff of fresh air ஆக இருக்குமென்பது உறுதி ! இதோ நம் டாப் ஸ்டாரின் "நில் ..கவனி...சுடு..!" முழு நீள black & white அதிரடியின் அட்டைப்பட first look! இத்தாலிய ஒரிஜினல் எப்போதும் போல் தட்டையான வர்ணங்களில் இருப்பதால் - நம் ஓவியரைக் கொண்டு அதே டிசைனை சற்றே உயிரோட்டமாய் வரைய முனைந்துள்ளோம் ! டெக்சும், வெள்ளிமுடியாரும் நமக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருப்பினும் அவர்களது ஸ்டைல் வெகு மிடுக்காய்த் தோன்றியதால் அதனை மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை ! அது மாத்திரமின்றி எதிரே நிற்பது அரை டஜன் எமதூதர்கள் எனும் போது ரேஞ்சர்கள் நம்மை நோக்கிப் 'போஸ் கொடுக்கிறேன் பேர்வழி !' என்று திரும்பினால் முதுகில் "விரித்த குடையளவுப் பொத்தல்" (!!!) நேர வாய்ப்புள்ளதால் we just let them be ! இந்த டிசைனை போனெல்லி நிறுவனம் ரொம்பவே ரசித்து விட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் ! அவர்களுக்கு நமது பாணி அட்டைப்படங்கள் எப்போதுமே பிடிக்கும் என்பதால் அவர்களது துரித ஒப்புதலும், பாராட்டும் தரும் நிறைவை விட - நமது நண்பர்களின் கண்ணோட்டத்தில் கிட்டும் மதிப்பெண்களே கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன ! So - நம் ராப்பரின் முதல் பார்வைக்கு உங்களின் முதல் அபிப்ராயங்கள் என்னவென்று சொல்லலாமே !

கதையைப் பொறுத்த வரை - இதுவொரு 220 பக்க சரவெடிப் பட்டாசு என்பதைத் தாண்டி வேறெந்த சிலாகிப்பும் தேவை இராது ! தெளிவானதொரு plot ; நண்பர் குழுவின் நால்வரும் மொத்தமாய் பங்கேற்கும் ஆக்ஷன் ; மிரட்டலான வில்லன்கள் - இந்த ஐட்டங்கள் போதாதா - மணக்க மனக்கவொரு கௌபாய் மசாலா தயாரிக்க ? பொனெல்லியின் சமீபத்திய வெளியீடான இந்த சாகசத்தின் உட்பக்கங்களில் இருந்து இதோ ஒரு ட்ரைலர் ! இந்தாண்டின் முதல் b&w வெளியீடு கூட இதுவே என்ற விதத்திலும் இதுவொரு குட்டியான மாற்றத்தை நமக்குத் தரும் என்றே நினைக்கிறேன் ! இதன் முன்னட்டையில் "கோடை மலர்" என்ற குட்டியான வாசகம் இருப்பின் அது நண்பர்களுக்கு சின்னதாய் மகிழ்ச்சியைத் தருமாயின் - ஸ்டிக்கர் தயாரிக்கும் ஆசாமியின் கதவை நாளை தட்டத் தொடங்குவோம் ! 

இம்மாதத்து இதர 2 வண்ண இதழ்களும் தற்போது அச்சாகி வருகின்றன ! So "முகமற்ற கண்கள்" + தோர்கலின் "பனிக்கடலில் ஒரு பாழும் தீவு" இவ்வார இறுதிக்குள் உறுதியாய்த் தயாராகி விடும். டெக்சும் அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் முழுமையடைந்து விடுமென்பதால் தேர்தல் தினத்திற்கு ஒரு நாள் பிளஸ் அல்லது மைனசில் இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கும். சந்தாப் பிரதிகள் அனுப்பப்படும் அதே வேளையில் நமது சென்னை ஸ்டாலுக்கும் இதழ்கள் அனுப்பப்படும் என்பதால் - புத்தக சங்கமத்திற்குச் செல்லும் நண்பர்கள் புது இதழ்களையும் அங்கே வாங்கிக் கொள்ள இயலும் ! 

கவனம் புத்தகவிழாவின் மீது திரும்பும் வேளையிலேயே அங்கு நமக்குத் தேவைப்படப் போகும் banner  பற்றிய ஞாபகம் வருகிறது ! டிசைன் செய்து தர ஆர்வமும், நேரமும் உள்ள நண்பர்கள் சற்றே கை தூக்கினால் என் பாடு சற்றே லேசாகிக் போகும் ! வரக்காத்திருக்கும் நமது LMS பற்றியதொரு banner + வழக்கமான நம் நிறுவனப் பெயர்கள் தாங்கிய banner என்று இரண்டு ஆக்கங்கள் நமக்குத் தேவைப்படும் ! இதற்கென நேரம் ஒதுக்க இயன்ற நண்பர்கள் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ?

அப்புறம் - இது போன்ற புத்தக விழாக்களுக்கு குட்டீஸ் சகிதம் வரும் பெற்றோர்கள் - தம் மழலைகளுக்கு வாங்கித் தரும் வகையில் ஏதேனும் நம்மிடம் புத்தகங்கள் உள்ளனவா ? என்று கோருவது உண்டு ! So - அது போன்றதொரு சந்தர்ப்பத்தில் பயனாகிட நமது "மியாவி"க்களை ஒட்டு மொத்த collection ஆக ஒரு 36 பக்க இதழாய் ஆர்ட் பேப்பரில் தயாரித்துள்ளோம் ! மௌனமும், பூனைகளின் மியாவ்..வியாவ் பாஷைகளும் மாத்திரமே கொண்ட இந்த குட்டி இதழின் விலை ரூ.25 (விழா டிஸ்கவுன்ட் 10%) ! இதோ அதன் சாதுவான அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு !  
நேற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் லார்கோவின் இரண்டாம் பாகத்து மொழிபெயர்ப்புப் பணிக்குள் மீண்டும் ஐக்கியமாக நான் புறப்படும் முன்பாக - 'ஏதோ, நம்மால் முடிந்தது !' ரகத்தில் உங்கள் பார்வைக்கு இன்னுமொரு பிரெஞ்சு ஸ்பைடர் ராப்பர் ! இது எந்தக் கதையாக இருக்குமென்ற சிந்தனையோடே நித்திரைக்குச் செல்லுங்களேன் ? See you around soon folks ! Bye for now !


Sunday, April 13, 2014

இதுவும் கடந்து போகும் !

நண்பர்களே,

வணக்கம். ''...என்னாது - சிவாஜி செத்துப் போய்ட்டாரா ?" என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது - எனது இன்றைய நிலையை பரிசீலனை செய்தால் !! சிவகாசியில் பங்குனிப் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை ; குடும்ப விசேஷம் பொருட்டு வெளியூர் பயணம் ; LMS பணிகள் ; லார்கோ மொழிபெயர்ப்பு என்று எங்கெங்கோ உலாவித் திரிந்ததால் கடந்த வாரத்தின் பெரும்பகுதிக்கு நான் இங்கு தலை காட்டவே நேரமில்லாது போனது  !  கடந்த பதிவின் கடைசி 100 பின்னூட்டங்களில் இங்கு ஏதேதோ நடந்திருப்பதை நான் துளியும் அறிந்திருக்காமல் - எப்போதும் போல் புதிய பதிவை தயார் செய்து விட்டு 'தேமே' என்று வார இறுதியினை எதிர்நோக்கிக் கிடந்தேன். ! நண்பர் சுஸ்கி-விஸ்கி என் பதிவில் தொனித்த உற்சாகமின்மையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டம் இட்டிருந்த போது கூட எனக்குப் பொறி தட்டவில்லை ; ஆனால் இன்று பகலில் நண்பரொருவரின் மின்னஞ்சலைப் பார்த்த பின்பு தான் அவசரம் அவசரமாய் எக்கச்சக்க "Load More " க்குப் பின்னே கடந்த பதிவின் களேபரங்களைக் கவனித்தேன் ! சிக்கலுக்குள் நுழையும் முன்பாக இங்கு அனைவருக்கும் நானொரு பொதுவான மன்னிப்புக் கோரலை சமர்ப்பிப்பது தான் முறையாகும் ! எப்போதுமே பதிவுகளின் இறுதிப் பின்னூட்டங்கள் ஜாலியான கலாய்த்தல் தோரணங்களாய் இருப்பதால் அவற்றினை நான் சாவகாசமாய், நேரம் வாய்க்கும் போது மட்டுமே பார்வை இடுவது வழக்கம். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் அடுத்த பதிவு + எதிர்நிற்கும் பணிகளுக்குள் நான் புகுந்து விட்டதே இடைப்பட்ட அவகாசத்திற்குள் இங்கு நடந்த அசம்பாவிதங்களுக்கு மைய காரணம் என்ற உறுத்தல் என்னுள் மேலோங்கி நிற்கிறது ! So இங்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது unconditional apologies ! 

பெருமூச்சு விடுவதைத் தாண்டி என்ன எழுதுவது என்ற சிந்தனை எனக்குள் முழுமையாய் வியாபித்து நிற்கின்றது ! சமூகவலைத்தளக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நான் ரொம்ப ரொம்பத் தாமதமான வருகையாளன் என்ற வகையிலும், இந்தப் புதுயுக வாழ்க்கை முறைகளோடு முழுமையாய் ஒன்றிட இயலாத டைனோசாராக என்னை நானே பார்த்துக் கொள்வதாலும் இந்த blog எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் நான் விழித்த நாட்கள் அநேகம் ! 'படக்' என நீட்டப்படும் பூமாலைக்கு ஜாலியாய் தலையை நீட்டத் தயாராகும் கணமே, 'பொடேரென' பின்மண்டையில் விழும் சாத்தை சமாளிக்கத் தெரியாமல் தடுமாறிய தருணங்கள் நிறையவே உண்டு ! ஆனால் அது அத்தனையையும் தாண்டி இங்கு என்னால் குப்பை கொட்ட முடிவதற்கு ஒரே காரணமாய் நான் கருதுவது நாம் அனைவரும் பேசும் ஒற்றை பாஷையான - காமிக்ஸ் நேசம் மட்டுமே ! அபிப்ராயங்களை வெளிப்படுத்தும் விதங்கள் வெவ்வேறாய் இருப்பினும், அவற்றின் ஆழத்தில் இருப்பது காமிக்ஸைக் காதலிக்கும் ஒரு மனதே என்பதை சிறுகச் சிறுக உணர இயன்ற போது எனக்கு எதுவுமே பாரமாய்த் தெரியவில்லை ! என்னை இங்கோ, வேறெங்கோ காரசாரமாய் விமர்சிக்கும் நண்பர்கள் கூட அவசியமென்று கருதும் தருணங்களில் அனுப்பிடும் தனிப்பட்ட முறையிலான மின்னஞ்சல்கள் இங்கு யாரும் யாருக்கும் பகைவர்கள் அல்ல என்பதை எனக்கு அழுத்தமாகவே அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன ! 

அதற்காக விமர்சனங்களை புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டது ; 'இந்தக் கன்னத்தில் சாத்தினால், மறு பக்கத்தைக் காட்டும் விவேகம் பிறந்து விட்டது' என்றெல்லாம் நான் ரீல் விடப் போவதில்லை ! அவ்விதம் எவர் சொன்னாலும் அண்டப் புழுகர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினர் ஆகி விட்டாரென்பது நிச்சயம் ! நான் செய்திடக் கற்று வருவதெல்லாம் விமர்சனங்களுக்கு ஆளாகிட எழும் வாய்ப்புகளை மட்டுப்படுத்த இயன்றதைச் செய்வதை மாத்திரமே ! 'மொழிபெயர்ப்பில் நெருடல்' என்ற குரல் ஒலிக்கத் தொடங்கிய நாள் முதலாய் அதனில் இருமடங்குக் கூடுதல் கவனம் ; அச்சுத் தரத்தில் பிரச்னை என்ற ஆதங்கங்கள் உரக்கக் கேட்டதைத் தொடர்ந்து அச்சுப் பிரிவை  upgrade செய்ய பிரயத்தனங்கள் ; கதைத் தேர்வுகளில் ups & and downs என்ற புகார் கேட்ட போது அதனை நிவர்த்திக்க நிறைய சிந்தனைகள் என்று என் சக்திக்கு உட்பட்டவைகளைச் செய்ய முற்பட்டு வருகிறேன் ! அதற்காக குறைகள் பூரணமாய்க் களையப்பட்டு விட்டன என்ற கற்பனையில் நானில்லை ! மொழிபெயர்ப்பில் இன்னமும் நேர்த்தி கூடிட இடமுண்டு என்பது உணர்கிறேன் ; அச்சுப் பிரிவில் நொடிப் பொழுது கவனக் குறைவு நேர்ந்திடும் பட்சத்தில் கூட 'பழைய குருடி..கதைத் திறடி' தொடரலாம் என்பதை நான் அறியாதில்லை ; எத்தனை கவனமாய் கதைகளைத் தேர்வு செய்தாலும்,  ஒரு 'காவியில் ஒரு ஆவி ' ரகப் பொத்தல்கள் தொடரத் தான் செய்கின்றன என்பது என் கவனத்தைத் தாண்டுவதில்லை !  ஆனால் சதா காலமும் முயற்சித்து வருகிறேன் என்ற திருப்தி எனக்குள்  நிறையவும் , விமர்சிக்கும் நண்பர்களுக்குக் கொஞ்சமாகவேனும் பரவிட வாய்ப்புக் கிட்டும் போது "all will be well" என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் ! 

இங்கு நம் தளத்தைப் பொறுத்த வரை - ஆற்றலில், அறிவில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்லர் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் இருப்பதால் எவ்வித போதனைகளுக்கும் அவசியம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை ! நமக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையோ  ; 'இப்படித் தான் இங்கு பங்கேற்க வேண்டுமென்ற' ரீதியிலான guidelines களோ போட்டுக் கொள்ளவுமில்லை ; நண்பர்களின் கருத்துகளுக்குக் கடிவாளம் போடவும்  நான் விழைந்ததில்லை ! ஆனால் சில தருணங்களில் இங்கு வைக்கப்படும் விமர்சனங்களுக்கு  ; மாற்றுக் கருத்துக்களுக்கு - நண்பர்கள் சிலர் react செய்யும் விதம் சற்றே கூடுதல் வேகத்தில் அமைந்து விடுவதே துரதிர்ஷ்டம் ! 'இது என்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி...இதற்கு நானே பதில் சொல்லிக் கொள்கிறேன்..நீங்கள் ஓரம் கட்டுங்கள் ப்ளீஸ் ! ' என்ற ரீதியில் என்னால் என்றைக்குமே பேச முடியாது ; பேசவும் போவதில்லை! So எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பான தத்தம் எண்ணங்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் போது  சில மன வருத்தங்கள் எழுவது தவிர்க்க இயலாது போகிறது ! இதன் பொருட்டு - 'இங்கே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை !' ; ' சாதகமான பதிவு செய்யும் நபர்களைத் தாண்டி வேறு யாரையும் எடிட்டர் ஊக்குவிப்பதில்லை' என்ற ரீதியிலான  மனத்தாங்கல்களோடு வெளியேறிய நண்பர்கள் நிறையவே உண்டு! 'தேவையற்ற மன உளைச்சல்கள் நமக்கு ஏன் ?' என்ற சிந்தனையில் நிறைய நண்பர்கள் எதிலும் தலை நுழைத்துக் கொள்ளாமல் மௌனப் பார்வையாளர்களாய் இருந்துவிட்டுப் போவோமே என்று நாட்களை நகற்றுவதும் நடக்கிறது! இதற்கென்ன தீர்வு ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்டேன்... ! 

என் சிற்றறிவுக்கு எட்டிய விடை இது ! எனது பதில்களை எதிர்நோக்கி எழுப்பப்படும் பதிவுகள நீங்கலாக - கதைகள் ; ரசனைகள் ; வாசிப்பு அனுபவங்கள் போன்ற அத்தனை விஷயங்களிலும் எல்லா நண்பர்களும் வழக்கம் போலவே இணைந்து கொள்ளலாம்! நமது ரசனை நண்பரது ரசனையிலிருந்து மாறுபடும் சமயங்களில் ஈகோ பார்க்காது அவரது பார்வையிலிருந்தும் பார்த்திடப் பழகுவோமே ? அவர் தரப்பின் கண்ணோட்டத்தை சற்றேனும் புரிந்து கொள்ள நாம் முயற்சிக்கும் போதே சிக்கல்களின் வாய்ப்புகள் காணாது போய் விடுமல்லவா ? அதே போல் விமர்சிக்கும் நண்பர்கள் - காரத்தின் இடத்தில் சற்றே நையாண்டி எனும் முலாம் பூசினால் உங்கள் கருத்துக்கள் சுலபமாய் சென்றடையும் வாய்ப்புகள் அதிகம் ஆகிடாதா ? காரம் கொணரும் அந்த 'சுறுக்' reactions சற்றே மட்டுப்பட்டாலே விவாதங்களுக்குள் ஆரோக்கியம் புகுந்து விடாதா ? நாம் இங்கு கூடுவது ஒரு பொது ரசனையின் மீதிருக்கும் ஈர்ப்பினாலே தான் எனும் போது - 'இங்கு யார் உசத்தி ?'... 'யார்  குறைச்சல் ?' என்ற பேச்சுக்கே இடம் கிடையாதே ! 

இது தவிர, மௌனப் பார்வையாளர்களாய் மாத்திரமே உலவிடும் நண்பர்களும் குறைந்த பட்சம் அந்தந்த மாதத்து இதழ்களின் அபிப்ராயங்களோடு இங்கே ஒரு சில பதிவுகள் இட நேரம் ஒதுக்கினால் -எனக்கு மிகவும் அவசியமான feedback கிடைக்கும் அல்லவா ? 'உங்கள் நாடியை நானறிவேனே' என்ற இறுமாப்பில் நானாகச் செய்யும் கதைத் தேர்வுகளில் சொதப்பும் வாய்ப்புகள் சொற்பமாகி - நம் ரசனைகளின் நிஜ சூழல்களை எனக்கு உங்களின் பரவலான கருத்துக்கள் தெரியச் செய்யாதா ? So please do contribute ! 

அதே போல பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எகிறச் செய்யும் விதமாய் ஆங்காங்கே நிறைய எண்ணங்கள் பகிரப்படும் போது  "Load More " பிரச்னை சீக்கிரமே தலைவிரித்தாடும் வாய்ப்புகள் கூடிப் போகின்றன ; அதன் பலனாய்  நிறையப் பார்வையாளர்கள் அலுத்துப் போகும் வாய்ப்புகள் அதிகம் ! So - ஒருவரிக் கருத்துகளைப் 10 இடங்களில் பகிர்வதற்குப் பதிலாக ஒரே இடத்தில் பத்தையும் பதிவிட்டால் சிரமம் கிடையாதே ! 

எல்லாம் சரி - கடந்த பதிவின் களேபரங்கள் பற்றி வாயே திறக்கவில்லையே ? என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது ! நான் இங்கு எழுதத் துவங்கிய நாள் முதலாய் " கருத்து கந்தசாமியாய்" இருப்பது தவிறில்லை - ஆனால் "அட்வைஸ் அய்யாச்சாமியாய்" இருத்தல் ஆகவே ஆகாது என்பதில் தீர்க்கமாய் உள்ளேன் ! எனினும் இந்த ஒரு முறை எனது நிலைப்பாடை நான் மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் ! 

ஒரு தீர்க்கமான மனஸ்தாபம் உருவாக ஒரு நொடிப்பொழுதெல்லாம் பற்றவே பற்றாது என்பதே எனது அனுபவப் பாடம். சிறிது சிறிதாய் என்றென்றோ முளை விடும் சலனங்கள் சம்பந்தமில்லா ஒரு புது நாளில் பெரியதொரு முகாந்திரமும் இன்றியே  ஒட்டகத்தின் முதுகை முறிக்கும் வைக்கோலாய் மாறிட வாய்ப்புகள் உண்டு ! இங்கு நிகழ்ந்திருப்பதும் அதுவே என்பது என்பது எனது அபிப்ராயம் ! Something was rubbing the wrong way for awhile now - and இன்று அது 'பட்' டென்று சிதறி விட்டுள்ளது ! இதன் நதிமூலம் எது ? ; ரிஷிமூலம் எது ?  என்ற ஆராய்ச்சிக்குள் போவதெல்லாம் போகாத ஊருக்கான வழி (வலி ?) தேடல் என்பதால் அந்த ஆர்வக்கோளாறுக்குள்   நான் புகுந்திடப் போவதில்லை ! உறுத்தலாய் நான் நினைப்பது இரண்டு விஷயங்களை : 

1.கலாய்ப்புகள்...வேடிக்கைப் பதிவுகள் எங்கோ ஒரு கட்டத்தில் சின்னதாய் சலனங்களை ஏற்படுத்தத் துவங்கிய தருணமே சுதாரித்துக் கொண்டு - 'போதுமே..! எல்லைகள் தாண்ட வேண்டாமே நண்பர்களே !' என லேசாகக் கோடிட்டுக் காட்டி இருக்கும் பட்சத்தில் அவர்களும் பிரேக்கை போட்டிருப்பார்கள் ; உள்ளுக்குள்ளே குடி கொண்ட சலனங்கள் குமைந்து இன்று வெடித்துக் கிளம்பும் அவசியத்தைத் தவிர்த்திருக்கலாம் தானே ? 

2.கலாய்ப்புகள் ; விளையாட்டுப் பதிவுகள் எவ்வித சலனங்களையோ, சங்கடங்களையோ உண்டாக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டவைகள் அல்ல என்பது தெரிந்திருந்தாலும், அதன் மறு முனையில் இருப்பவர் காயம் பட்டு வருவதை உணராது போனதும் துரதிர்ஷ்டமானதல்லவா ? 

In hindsight, everybody is a genius என்று சொல்வார்கள் ; நாமும் அதற்கென்ன விதிவிலக்குகளா ?  பின் நாளில் நிதானமாய் யோசிக்கும் போது தானே நம் முன்னே இருந்த மாற்று உபாயங்கள் ; சேதாரம் விளைவிக்கா உபாயங்கள் ஒன்றொன்றாய்ப் புலனாகும் ? இங்கு பதிவாகும் பார்வைகளின் எண்ணிக்கைகளை விட நான் விலைமதிப்பற்றதாய்க் கருதுவது இங்கு நிலவும் நட்புணர்வையும்  , தடையற்ற அந்த உற்சாகத்தையும் மாத்திரமே ! அதைத் தொலைத்து விட்டு, இதுவொரு அரசு தாலுகா ஆபீஸ் போல அமைதியாய், சாந்தமாய், 'பெரிய மனுஷத்' தோரணையோடு இயங்குவது நிச்சயமாய் நாம் விரும்பும் ஒரு விஷயமாய் இருக்க இயலாது ! 

எது எவ்விதம் இருப்பினும், நண்பர் துளியும் தயங்காது மன்னிப்புக் கோரியுள்ளது இந்தத் தளத்திற்குப் பெருமை செய்யும் விஷயம். இங்கு காமிக்ஸ் எனும் காதலுக்கு முன்னே ஈகோக்கள் பெரிதல்ல என்பதை நிலைநாட்ட இது போன்றதொரு சங்கட சம்பவம் அவசியமாகி விட்டுள்ளதே என்பதில் தான் எனக்கு வருத்தமே ! அதிலும், ஒரு மைல்கல் ஆண்டில் இந்தக் கசப்பினை நாம் சந்திக்க நேர்ந்ததில் சின்னதாய் ஒரு வலியும் கூட ! ஆனால் 'இதுவும் கடந்து போகும்!' என்பது தானே வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம் ? Take care folks ! 

Friday, April 11, 2014

The Three 'B's...!

நண்பர்களே, 

வணக்கம். MAGNUM ஸ்பெஷல் எனும் புது வரவின் மீதான திரையினை விலக்கியாகி விட்டது ; நிறையப் பாராட்டுக்கள் ; உற்சாகக் குரல்கள் ; அபிப்ராயங்கள் ; 'இப்படி இருந்திருக்கலாமோ ...அப்படி இருந்திருக்கலாமோ  ? என்ற ரீதியிலான எண்ணச் சிதறல்கள் ; ஆர்வமான எதிர்பார்ப்புகள் என்று ஏகமாய் ரவுண்ட் கட்டியும் அடித்தாகி விட்டது ! இப்போது அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் வேளை புலர்ந்து விட்டதால் - அதன் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புவது அவசியம் அல்லவா ? இதோ இம்மாதம் வரக் காத்திருக்கும் 3 இதழ்களுள் - முதல் வெளியீட்டின் அட்டைப்படம் + teaser ! 1987-ல் நமது திகிலில் ஒரிஜினலாய் வெளிவந்த இந்த ப்ருனோ சாகசத்தை உங்களில் எத்தனை பேர் இன்னமும் நினைவில் வைத்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் என் தலைக்குள் இருந்த நினைவுகள் ரொம்பவே மங்கிப் போயிருந்தன - அன்றைய நாட்களில் நாம் பயன்படுத்திய பழுப்பு நியூஸ்ப்ரிண்டைப் போலவே ! So இதனை மீண்டுமொருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது கதை மாத்திரமன்றி - அந்நாட்களது மலரும் நினைவுகளையும் ஒரு சேர சுவாசித்த உணர்வு ! அன்றைய நாட்களில் நமது பெல்ஜியக் கதைவரிசைகளின் ஜாம்பவான்களாய் நாம் பாவித்தது மூன்று 'B' களை!! தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த திகில் காமிக்ஸ் நிலைகொள்ளச் செய்ய சாத்தியமானதற்கும் , மாமூலான பிரிட்டிஷ் கதைகளைத் தாண்டிய ரசனைக்கு நம்மை இட்டுச் சென்றதற்கும் பிரதான காரணங்களாய் இந்த மூவர் கூட்டணியைச் சொல்லலாம் ! யார் அந்த "B " ஆசாமிகள் என்று இந்நேரம் நீங்களே புரிந்திருப்பீர்கள் - anyways  இதோ அவர்களது பெயர்கள் :

BERNARD PRINCE (நமக்கு கேப்டன் பிரின்ஸ்)
BOB MORANE (நமக்கு சாகச வீரர் ரோஜர்)
BRUNO BRAZIL  

ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட பாணியிலானது என்பதோடு - கிரெக் ; வான்ஸ் ; ஹெர்மன் என்று காமிக்ஸ் உலகின் அசுரர்களின் கைவண்ணங்கள் அதில் முழுக்க முழுக்க இருந்ததால் அவை ஆழமாய்  ஒரு முத்திரை பதித்ததில் வியப்பில்லை! இதோ அந்நாட்களில் நாம் பயன்படுத்திய "முகமற்ற கண்களின்" அட்டைப்படமும், இப்போதைய ஆக்கமும் ! அப்போதைய திகில் பாக்கெட் சைஸ் அவதாரத்தில் இருந்ததால் கதையின் உட்பக்கங்களை படுக்கை வசமாய் அமைத்திருந்ததாய் ஞாபகம் ! இந்தக் கதைக்கான அட்டைப்படத்தினையும் நமது ஓவியர் மாலையப்பனைக் கொண்டு அதே பாணியில் horizontal-ஆக வரையச் செய்திருந்தேன் ! இரண்டே ரூபாய் விலையில் வந்த இதழிது என்பதைப் பார்க்கும் போது - இன்று  மலைப்பாய் உள்ளது !! 


இன்றைய நமது அட்டைப்படமோ - ஒரிஜினலின் அட்சர சுத்தமான வார்ப்பே ! டிசைனில் துளி மாற்றமும் செய்திடாது வான்சின் ஒரிஜினலையே பயன்படுத்தியுள்ளோம் முன்னட்டைக்கு ! பின்பக்க டிசைனுமே படைப்பாளிகளின் ஆக்கமே - சமீபமாய் வெளியாகியுள்ள ப்ருனோ கதைகளின் தொகுப்பிலிருந்து நாம் கேட்டு வாங்கியது ! So இம்முறை நமது டிசைன் பிரிவிற்கு சின்னதொரு ஒய்வு ! அட்டைப்படத்தைத் தொடர்வது இதழின் உட்பக்கத்திலிருந்து ஒரு வண்ண ட்ரைலர் ! ஏதோ ஒரு யுகத்தில் மங்கலான black & white-ல் ரசித்த அதே கதையை இப்போது அழகாய் - பெரிய சைசில் ரசிக்கவிருப்பது நிச்சயம் ஒரு அழகிய அனுபவமாய் இருக்கப் போவது உறுதி ! கதையைப் பொறுத்த வரை அதன் புராதனம் ஆங்காங்கே அப்பட்டமாவது தவிர்க்க இயலா சங்கதி என்பதை நாம் அறிவோம் தானே ?!   



Moving on...வரும் ஏப்ரல் 18 முதல் 27 வரை சென்னையில் நடைபெறவிருக்கும் "சென்னைப் புத்தகக் சங்கமத்தில்" நாமும் பங்கேற்கிறோம் ! அங்கு நமது ஸ்டாலின் எண் : 118.  ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தக விழா சனி & ஞாயிறுகளில் காலை 11 மணி முதலும் ; வார நாட்களில் மதியம் 2 மணி முதலுமாய் செயல்படும் ! உங்களின் வருகைகளை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் ! புத்தக விழாவின் இரண்டாம் நாளின் மாலைப் பொழுதில் (ஏப்ரல் 19) அடியேன் அங்கு ஆஜராகி இருப்பேன் - உங்களை சந்திக்கும் பொருட்டு ! Please do drop in folks - with your young ones as well !


சமீபமாய் எதையோ வலையில் உருட்டிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட சமாச்சாரம் இது ! நமது வலைமன்னர் என்றோ ஒரு சமயத்தில் பிரெஞ்சு மொழியிலும் கோலோச்சியுள்ளார் என்பதைப் பறைசாற்றும் அட்டைப்படம் இது ! SPIDERMAN என்ற பெயரோடு அங்கேயும் அதகளம் செய்திருக்கார் நம் ஆசாமி ! பாருங்களேன்...!! இது சும்மா என் கண்ணில் பட்டதொரு விஷயம் மட்டுமே தவிர - 'பட்சிகளின் ' ஹேஷ்ய ஜோஸ்யங்களுக்குப்'  பணி கொடுக்கும் விஷயமாகாது என்பதையும் சொல்லிக் கொள்ள முந்திடுகிறேன்!! 


ஆன்லைன் விற்பனையில் இன்னுமொரு புதுக் கதவு நம் பொருட்டுத் திறந்துள்ளது என்பதை அறிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ! AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும்  நாள் நெருங்கி விட்டது ! எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் ! துவக்க ஆர்டர்கள் ஒரு மகத்தான எண்ணம் அல்ல எனினும், சிறிது சிறிதாய் நமது சிறகுகளை விரிக்கக் கிட்டும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் கவனமாய் உள்ளோம் ! உலகின் ஒரு ஆன்லைன் விற்பனை ஜாம்பவானின் தோள்களில் நாம் ஏறிக் கொள்ள முடிந்திருப்பது முழுக்க முழுக்க உதவி ஆசிரியர் பிரகாஷின் தளரா முயற்சிகளாலே !! இதே போலவே FLIPKART தளத்தோடும் கைகோர்க்க முயன்று வருகிறோம் ; நம்பிக்கையோடும் காத்துள்ளோம் ! 

இந்தப் பதிவினை நிறைவு செய்யும் முன்பாக சின்னதாய் இரு நினைவூட்டல்கள் : முதலாவது - "லயனும், நானும் !" என்ற தலைப்பில் நமது 30 ஆண்டு கால காமிக்ஸ் பயணம் உங்களுக்குத் தந்துள்ள அனுபவங்களைப் பற்றி எழுதிடும் விஷயம் தொடர்பாக ! LMS இதழில் இதற்கென பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் - உங்கள் எழுத்துக்களை ஆர்வமாய் எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கி விட்டோம் ! இரண்டாவது விஷயம் - நமது சூப்பர் 6 சந்தாவின் நினைவூட்டலே ! முதல் சுற்றிலேயே சந்தாக்களை அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ; அனுப்பக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் நமது thanks in anticipation !விறுவிறுப்பாய் கிட்டி வரும் சந்தாக்கள் அதே துரித கதியில் தொடர்ந்தால் எங்கள் சுவாசங்கள் சற்றே இலகுவாகும் folks ! So please do chip in !! மீண்டும் சந்திப்போம் - bye till then !

Friday, April 04, 2014

லயனும்..நாமும்....!

நண்பர்களே,

வணக்கம். மாதங்களாய் என் சிந்தையில் மாத்திரமே உலவி வந்த லயன்  MAGNUM ஸ்பெஷல் இப்போது நம் அனைவருக்குமொரு வண்ணக் கனவாய் உருமாறி விட்டதில் எனக்கு நிஜமான சந்தோஷம் ! ஒரு முப்பது ஆண்டுப் பயணத்தை இத்தனை விமரிசையாகக் கொண்டாட சாத்தியமாகும் என்று 15 மாதங்களுக்கு முன்பு வரை நான் சத்தியமாய் நம்பி இருக்கமாட்டேன் !! மிஞ்சி மிஞ்சிப் போய் இருந்தால் ரூ.100 விலையில் ஒரு இதழோடு மங்களம் பாடி இருப்போம் ! ஆனால் NBS துவக்கி வைத்ததொரு adventure ; அதற்குக் கிட்டிய ரகளையான வரவேற்பும் ; உங்களின் nonstop உத்வேகங்களும் இந்த தைரியத்தை எனக்கு நல்கியுள்ளன ! அது மட்டுமல்லாது 'இது தான் யதார்த்தம் ; இது தான் ஒரு சமநிலை..இது தான் நமது இதழ்களுக்கான ஒரு ரெகுலர் அட்டவணை..' என்று தேங்கி நிற்க விரும்பாது - சதா காலமும் புதிதாய்..பெரிதாய் ஏதேனும் தேவை ! என்ற தேடல் உங்களுள் இருப்பது தான் எங்களை இது போன்ற சர்க்கஸ் வேலைகள் செய்யத் தூண்டும் க்ரியாஊக்கி ! So ஒரு கனவின் வரைபடம் இப்போது தயார் ; அதனை நனவாக்கும் பணிகள் துவங்கியும் விட்டன ! LMS -ன் கதைத் தேர்வுகளைப் பற்றி ; இதழின் விலை ; பக்கங்கள் பற்றி நிறையவே எழுதி விட்டதால் திரும்பவும் அதனை ஒரு பதிவின் subject ஆக்கிட நான் விரும்பவில்லை ! மாறாக - LMS -க்குள் இடம் பிடிக்கத் தவறிய வேட்பாளர்களைப் பற்றியும், கடந்த பதிவில் நீங்கள் ஆரவாரமாய் எழுப்பியுள்ள சில சிந்தனைகளுக்குப் பதில் சொல்லும் விதமாகவும் சில நாட்களது இடைவெளிக்குப் பின்பே இதனை எழுதுவதாக இருந்தேன் ; ஆனால் கடந்த பதிவு ஏகப்பட்ட "Load More " அவஸ்தைகளை உண்டு பண்ணுவதால் இப்பதிவு முந்திக் கொள்கிறது !  

LMS -ன் திட்டமிடல்களைப் பூர்த்தி செய்யும் தருணத்தின் போது - உங்களின் reactions எவ்விதம் இருக்கும் என்பதை முடிந்த வரை கணிக்க முயற்சித்தேன் ! புத்தகத்தின் அளவு நிச்சயமாய் ஒரு விஷயமாக பேசப்படும் என்பது உணர எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை ! So நான் முதலில் முயற்சித்தது - இதே கதைகளின் அணிவகுப்பை பெரிய சைசில் - 450+ பக்கங்களுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும் என்று கண்டறியவே ! அத்தனை கதைகளின் முதல் 2 பக்கங்களையும் எடுத்து சைஸ் மாற்றி - -fresh layout ல் டைப்செட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்துப் பார்த்தோம் ! எடுத்தவுடனேயே நெருடிய விஷயம் - சித்திரங்களின் அளவுகள் ரொம்பவே குறைந்து போவதும் ; வசனங்களை உள்ளடக்குவது ஒரு இமாலயப் பிரயத்தனமாக இருக்கும் என்பதுமே !! டெக்ஸ் கதைகளில் ஒரிஜினலின் ஒரு பக்கத்தில் இருப்பவை 5 அல்லது 6 சித்திரங்கள் ! அளவு மாற்றத்திற்கு - பெரிய சைசுக்குள் 10 அல்லது 12 படங்களை நுழைத்தாக வேண்டுமெனும் போது - சித்திரங்களை விட வசனங்களே அதிகமாய் இருப்பதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது ! டைலன் டாக் கதைகளில் டயலாக் அத்தனை நீளமில்லை என்ற போது அந்த ஒரு கதைக்கு மட்டும் பெரிதாய் சிரமம் தெரியவில்லையே தவிர - பாக்கி (இத்தாலியக்) கதைகள் ஏழுமே கோனார் நோட்சுக்கு மத்தியில் படங்களை நுழைத்து விட்ட impression தான் தந்தன ! So பெரிய சைஸ் நிச்சயமாய் வேலைக்கு ஆகாது என்பது உறுதியான பின்னே அடுத்த கட்டமாய் நான் செய்தது - தற்சமயம் நாம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள டெக்ஸ் சைசில் - இதே 568 ஆர்ட் பேப்பர் பக்கங்கள் + 332 வெள்ளைத் தாள் பக்கங்கள் சகிதம் ஒரு dummy புக் தயாரித்ததே ! வெள்ளைத்தாளால் போடப்பட்ட அந்த மாதிரியை ஒரு வாரம் முழுவதும் என் மேஜையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்  - தலைக்குள் எவ்வித சிந்தனையும் இல்லாமல் ! ஒரு NBS  புக்கை எடுத்து கிட்டே வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு திடீரென்று இரண்டையும் எடை போட்டும் பார்த்தேன் ! என் கையில் இருந்த dummy புக்கின் தோற்றம் ; எடை ; கனம் என்று சகலமும் massive ஆகத் தெரிவது எனக்கே ஊர்ஜிதமான பின்பு தான் 'ஒ.கே...இது தான் சைஸ் !' என்ற பச்சைக் கொடியாட்டினேன் ! 

'இத்தாலியக் கதைகள் ஒ.கே....! பெல்ஜியக் கதைகள் மூன்றும் அளவு குறைந்து வரப் போகும் அவசியம் உள்ளதே...அவை சிறிதாகும் போது  எப்படித் தோற்றம் தரும் ?' என்ற கேள்வி அடுத்து எழுந்தது எனக்குள் ! மார்ஷல் டைகர் ; லக்கி லூக் & ரின் டின் கேன் கதைகளை மட்டுமல்லாது - வுட் சிடியின் கோமாளிகளையும் சேர்த்தே ஒவ்வொரு பக்கம் டைப்செட் செய்து அளவை சின்னதாக்கிப் பிரிண்ட் போட்டுப் பார்த்தோம் !  பக்கத்திற்கு மூன்றே வரிசைகள் ; கொச கொசவென ஏகமாய் சித்திரங்கள் கிடையாது என்ற பாணியில் மார்ஷல் டைகர் கதைகளுக்கு ஓவியர் வான்சின் சித்திரங்கள் அமைந்திருந்தன ; so அவற்றை சற்றே அளவு   சிறிதாக்கினாலும் பெரியதொரு சிரமம் தோன்றவில்லை படித்திட ! ரின் டின் கேன் கதைக்கும் அதிகமாய் மெனக்கெட அவசியம் இராதென்பதை ப்ரிண்டைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது !  மூன்றாவதாய் சிக் பில் கதையின் பக்கங்களை பூர்த்தி செய்து கையில் எடுத்த போது தான் பிரச்னையே ! கார்ட்டூன் கதை தான் எனினும், வசனங்கள் ஏகமாய் இருப்பதால் அளவைச் சிறிதாக்கும் போது எழுத்துக்கள் கண்ணைப் பதம் பார்க்கும் பிரச்னை பளிச் எனத் தலைதூக்கியது ! So வுட்சிடியின் கோமாளிகளை LMS -ல் இணைத்தால் அளவு குறைப்புக்கு இவர்கள் ஒத்துழைக்க  மாட்டார்கள் என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! 'வேறு வழியில்லை - அவர்களுக்கு இம்முறை இடம் நம் இதயத்தில் மாத்திரமே !'என்ற என் தீர்மானத்துக்கு பின்னணி இதுவே ! ஆர்ட்டின் & ஷெரிப்பின் காதலர்களே.. (அந்தப் பட்டியலில் நானும் உண்டு..!) முயற்சித்தும் முடியாது போனதால் தான் நம் ஆசாமிகள் இம்முறை வேட்பாளர்கள் பட்டியலுக்குள் தலைநுழைக்க முடியாது போனது !  லக்கி லூக்கின் "பேய் நகரம்" கதையில் டயலாக் அதிகம் என்ற  இது போன்ற சிக்கல் இல்லாததால் - பெரிய font பயன்படுத்தி டைப்செட் செய்வது சுலபமாய் இருந்தது ! So அளவை சிறிதாக்கும் போதும் கூட எழுத்துக்களின் உரு ஓவராய் சின்னதாகவில்லை என்பதால்  அதற்குமொரு 'டிக்' அடித்தேன் ! 
மார்ஷல்...!

அடுத்ததாய் நான் எதிர்பார்த்தது - விடுபட்டுப் போன ஆரம்ப நாட்களது சில ஆதர்ஷ நாயகர்களை miss செய்திடும் நண்பர்களின் வருத்தக் குரல்களை..! ஸ்பைடரில் துவங்கி...ரிப் கிர்பி..காரிகன்...மாடஸ்டி என நிறைய vintage நாயக / நாயகியரை நண்பர்களுள் சிலர் பட்டியலுக்குள் நுழைக்கக் கோருவார்கள் என்பதை புரிந்திட முடிந்தது ! ஸ்பைடரின் எஞ்சி இருக்கும் நீ --ள--மா--ன கதையினை நல்ல நாளுக்கே வெளியிட்டிட எனக்கு தைரியம் வந்திருக்காது ; இன்றைய சூழலில், நம் ரசனைகளின் மாறுதல்களுக்குப் பின்னே இந்த விட்டலாச்சார்யா சாகசத்தை நினைத்துப் பார்ப்பதே சாத்தியமற்றது என்பதால் அதனை துயில் பயிலச் சொல்லுவதில் தயக்கமிருக்கவில்லை !  ! ரிப் கிர்பி & காரிகன் கதைகளும் சமீப நாட்களில் நம்மிடையே ஸெல்ப் எடுக்கத் தவறுவதால் - அவர்களின் இடத்தில ராபினை நுழைக்க நிரம்ப சிரமம் இருக்கவில்லை ! ஆனால் மாடஸ்டியைப் பொறுத்த வரை அந்த daily strips பாணி நமது சைசுக்கு set ஆகும் என்பதால் அவரை இணைக்கும் சபலம் நிறையவே இருந்தது ! But நம் கைவசம் இருக்கும் பிரசுரிக்கப்படா மாடஸ்டி கதையின் சித்திரங்கள் - ஓவியர் நெவில் காலின்ஸின் 'கீச்சல் பாணி' என்பது தான் நெருடலாய் இருந்தது ! மிகவும் சுமாரான அந்த சித்திர பாணியை LMS -க்குள் திருஷ்டிப் பரிகாரமாய் நுழைத்திட மனம் ஒப்பவில்லை ! தவிர மகளிர் பிரதிநிதியாக புது வரவு ஜூலியா - கிட்டத்தட்ட 200 கதைகள் கொண்டதொரு வரிசையோடு தயாராய் நிற்பதால் - I chose to opt for the newcomer ! 

இவற்றைத் தவிர பாக்கி விஷயங்களில் உங்களது reactions எனது யூகங்களை அனுசரித்தே இருந்தன ! ஆனால் நான் கணிக்கத் தவறிய ஒரே விஷயம் - இந்த 1000 பக்கம் - 10 கதைகள் concept -ஐத் தான் !! ஆரம்பித்த போது 750 பக்கங்கள் என்ற வரையறைக்குள் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன் ; ஆனால் சிறுகச் சிறுக அது 800..850...என்று improve ஆகி இறுதியாய் 900 பக்கங்களில் செட்டில் ஆகியுள்ளோம் ! இதற்கும் மேல் பக்கங்களை அதிகப்படுத்துவதாயின் பட்ஜெட்டும் சரி ; விலையும் சரி அதிகமாவதோடு - பணிகளின் அழுத்தமும் சட்டென்று கூடி விடும். இப்போது போட்டுள்ள ஒரு உத்தேச அட்டவணையின்படியே - எங்களது மொழிபெயர்ப்பு வேலைகள் (இத்தாலியன் --- இங்கிலீஷ் - தமிழ் ; பிரெஞ்சு - இங்கிலீஷ் - தமிழ்) பூர்த்தியாகவே மே இறுதியாகிடும் ! மொழிபெயர்ப்புகள் தயார் ஆக-ஆக டைப்செட்டிங் பணிகளும் வால் பிடித்துக் கொண்டே ரெடி ஆகிடுவது   சாத்தியமாகும் பட்சத்தில் - ஜூன் 15-க்குள் அச்சுக்குச் செல்ல நாங்கள் தயாராகிட வேண்டுமென்பது இப்போதைய மனக்கணக்கு ! அச்சுக்கு 15 நாட்கள் ; பைண்டிங்கிற்கு இன்னுமொரு 15 நாட்கள் என வைத்துப் பார்த்தால் ஜூலை 15-ல் நாங்கள் தயாராகி இருக்க வேண்டும் - சகலமும் சிக்கலின்றிச் செல்லும் பட்சத்தில். எதிர்பாரா தாமதங்களுக்கென ஒதுக்கியுள்ள பத்துப் பன்னிரண்டு நாட்கள் மாத்திரமே தற்போது நமக்கிருக்கும் cushion ! இப்போது அந்த இடைவெளிக்குள் 100 பக்க இணைப்பை நுழைத்திட நினைத்தால் - நிச்சயமாய் பெண்டு கழன்று விடும் ; அட்டவணையிலும் சொதப்பி விடும் !! எனக்கு இந்த 1000 பக்க concept மிகுந்த சுவாரஸ்யம் தந்தாலும், அதை நடைமுறைப்படுத்திடுவது நிரம்பக் கஷ்டமானதொரு பணியாகும் ! தவிர, முன்பதிவுகளுக்கு நண்பர்கள் விறுவிறுப்பாய் பணம் அனுப்பத் துவங்கி விட்ட நிலையில் - விலையில் மாற்றம் எனும் போது வீண் குழப்பங்கள் நேரிடும் !! இப்போதைக்கு அமலில் உள்ள இந்த 900 பக்க வரையறை நிலைக்கட்டுமே ! ஆனால் - ஒரு சன்னமான வாய்ப்பின் ஜன்னலை நான் திறந்து வைக்கத் தவறப் போவதில்லை ! சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise ! எப்படி இருப்பினும், 900 பக்கங்கள் என்று வந்தான பின்னே - 1000 என்ற மேஜிக் நம்பரை எட்டிப் பிடிப்பது just a matter of time ! நம்பிக்கை கொள்வோமே !!

சின்னதாய் சில updates கூட :

1.ஏப்ரல் 18-27 தேதிகளில் சென்னை ராயப்பேட்டா YMCA மைதானத்தில் புத்தக விழா ஒன்று நேஷனல் புக் ட்ரஸ்டின் ஆதரவோடு நடைபெறவுள்ளது ! இங்கு நமது ஸ்டால் இடம்பெறும் வாய்ப்புகள் பிரகாசமாய் உண்டு ! 

2.தொடரும் மே மாதத்து வெளியீடுகள் - LMS -ன் பணிகளின் பொருட்டு வெகு முன்பாகவே தயார் ஆகி விடும் ! ஏப்ரல் கடைசி வாரத்தினிலேயே டெக்ஸ் ; தோர்கல் & ப்ருனோ கூட்டணி உங்கள் கைகளில் இருப்பார்கள் !  !

3."லயனும், நானும் " பகுதிக்கு இனி உங்கள் பங்களிப்புகளை அனுப்பத் துவங்கலாம் ! லயன் உங்களை மகிழச் செய்த நாட்கள் ; இம்சை செய்த தருணங்கள் ; பூரிக்கச் செய்த வேளைகள்...பொறுமை இழக்கச் செய்த சந்தர்ப்பங்கள்..என எதைப் பற்றியும் தயங்காமல் எழுதி அனுப்பலாம் ! இது தவிர, வாசகர்களின் பங்களிப்பாக இன்னும் வேறென்ன இருந்திடலாம் LMS இதழில் என்பது பற்றியும் உங்கள் suggestions ப்ளீஸ் ? 

4."The லயன் MAGNUM ஸ்பெஷல்" என்ற பெயரை கம்பீரமான எழுத்துகளால் டிசைன் செய்து தர நண்பர்கள் தயாராக இருப்பின், அதனையே தொடர்ச்சியாய் விளம்பரங்களில் மட்டுமல்லாது - LMS -ன் அட்டைப்படத்திலும் பயன்படுத்திட நாங்கள் ரெடி ! Game for it folks ?

5.நமது தற்போதைய WORLDMART ஆன்லைன் விற்பனை தளத்தில் சூப்பர் சிக்சின் சந்தாக்கும் ஒரு option துவங்கிடத் தயாராய் உள்ளோம் ; ஆனால் அங்கு அமலில் உள்ள சர்வீஸ் கட்டணம் 6% அதிகம் என்பதால் - அந்த லிஸ்டிங்கில் மட்டும், அந்த வித்தியாசம் பிரதிபலிக்கும் ! 

6.அதே போல ஜனவரியில் சந்தா கட்டத் தவறிய நண்பர்கள் ஏப்ரல் முதலாய் சந்தா செலுத்த விரும்பும் பட்சத்தில் அதற்கும் கூட வாய்ப்பு ஏற்படுத்துவதில் நமக்குச் சிரமம் இல்லை ! What say folks ?

மீண்டும் சிந்திப்போம்...Take care guys !!

P.S : கடந்த பதிவில் பின்னூட்டம் # 300-க்குப் பின்பாகவே எதனையும் கவனித்துப் படிக்க இயலவில்லை ! அங்கு எனக்கு ஏதேனும் கேள்விகளை நண்பர்கள் எழுப்பி இருக்கும் பட்சத்தில் - அவற்றை இங்கு repeat செய்யுங்களேன் - ப்ளீஸ் ?!

Tuesday, April 01, 2014

முன்னோட்டங்களின் முன்னோடி...!

நண்பர்களே,

வணக்கம் ! கிறுக்கலாய் அல்லாது - இந்தப் பதிவின் தலைப்பு மெய்யாகவே context-க்குப் பொருத்தமாய்த் தோன்றியதால் இரவல் வாங்குவதில் தவிறில்லை என்று தோன்றியது ! (நன்றிகள் கி.கி !)  பதிவிடப் போவதே நாளைய பொழுது தான் எனும் போது  - இன்றைய இந்தத் துவக்கம் சின்னதொரு விஷயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே ! 

ஏப்ரல் இதழ்களை எதிர்பார்த்ததற்கு ஒரு தினம் முன்பாகவே பூர்த்தி செய்திட இயன்றதால் - இன்றைய மதியமே கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும், வான் அஞ்சல்களிலும் மொத்தமாய் அனுப்பி விட்டோம் என்பதே இப்போதைக்குப் பகிர்ந்திட உள்ள சேதி! நாளைய பொழுதினில் உங்கள் கைகளில் புது இதழ்கள் இருந்திடும் வேளையில்  - இந்தப் பதிவை விரிவாக்குகிறேன் ! இப்போதைக்கு - கூரியர் அலுவலகத்தைப்  படை எடுப்போர் சங்கத்தின் அதிரடிகள் ஆரம்பிக்கலாம் ! ஆன்லைனில் நமது இதழ்களை வாங்க எண்ணும் நண்பர்களின் வசதிக்காக - நமது புதிய விற்பனைத் தளமான www.lioncomics.worldmart.in-ல் லிஸ்டிங்கும் துவங்கி விட்டது

இன்னுமொரு சேதியும் கூட - இன்று முதல் (ஏப்ரல் 1) Professional கூரியரின் கட்டணங்கள் எக்கச்சக்கமாய்க் கூடி விட்டுள்ளன !! சென்ற மாதம் வரை தமிழகத்தினுள் ரூ.32 என இருந்த கட்டணம் இனி ரூ.40 & பெங்களூருக்கு ரூ.40 ஆக இருந்த கட்டணம் இனி மேல்  ரூ.70 !! தலை சுற்றச் செய்யும் இந்த உயர்வை நம் சந்தாதாரர்களின் தலையில் சுமத்துவது நியாயமாகாது ; எனினும் ஆன்லைனிலும், நம்மிடமே நேரடியாகவும் அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் இந்தக் கட்டண உயர்வினை ஏற்றுக் கொண்டாக வேண்டிய இக்கட்டு !! Sorry guys !


April 2'2014 : சரி...இதற்கு மேலும் ஜவ்வாய் இழுப்பது இதழ்கள் கிடைக்கப் பெறா நண்பர்களின் பொறுமைக்குச் சோதனைகளை வைக்கும் என்பதால் - பெவிகால் பெரியசாமியை நாடு கடத்திடுவோம் ! Here goes :


ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு முயற்சிக்குள் கால் பாதிக்கும் போது - "வாய்க்குள் கட்டை விரல்...!" என்ற பில்டப் கொடுப்பது எனக்கும், உங்களுக்கும் பழகிப் போனதொரு விஷயமே ! ஆனால் - இரத்தப் படலம் முழுத் தொகுப்பின் விதிவிலக்கோடு - பாக்கி அத்தனை நேரங்களிலும் 'எப்படியும் கரை சேர்ந்திடலாம் !' என்ற ஒரு வித அசட்டுத் துணிவும், நம்பிக்கையும் என்னுள் உறைவது உண்டு ! NBS -ன் பணிகள் துவங்கிய சமயம் கூட பணிகளின் பரிமாணம் மலைப்பாய்த் தோன்றியது நிஜமே ஆயினும், அதனைத் தொடர்ந்த மாதங்களில் கழுத்துப் பிடியாய் திட்டமிடல்கள் ஏதும் இருக்கவில்லை எனும் போது - 'தக்கி-முக்கி இந்தப் பணியைப் பூர்த்தி செய்து விட்டால் தப்பிச்சோம் சாமி!' என்ற ஆறுதல் காத்து நின்றது ! ஆனால் இம்முறையோ சூப்பர் 6 ... அதன் முதல் படியான லயனின் ராட்சஸ ஆண்டுமலர் ...அதற்கு அருகாமையிலேயே 'மின்னும் மரணம்' முழுத் தொகுப்பு என்ற 2014-ன் schedule- முன்எப்போதும் நம் முன்னே கொணர்ந்திருக்கா பரிமாணத்தில் ஒரு அசாத்தியச் சவாலை உருவாக்கியுள்ளது ! So - முதல்முறையாக எனக்குள்ளே ஓடும் ஒரு மெல்லிய நடுக்கத்தை ; தாண்ட வேண்டிய உயரத்தின் பொருட்டு ஏற்படும் அந்த மலைப்பை -கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து வருகின்றேன் கடந்த 3 வாரங்களாகவே ! 'வீராதி வீரனாக்கும் ; இதெல்லாம் பஞ்சு மிட்டாய் சமாச்சாரம் !' என்ற கற்பனையில் நிச்சயமாய் நான் இல்லை ; இந்தாண்டின் இறுதிப் பொழுது புலர்வதற்குள் எனக்கும் சரி, எங்களது சின்ன டீமுக்கும் சரி - நிறைய நரை முடிகளும், தூக்கமில்லா இரவுகளும் ஆத்ம நண்பர்களாய் இருக்கப் போவதை நன்றாகவே உணர முடிகிறது ! சரி - இந்த 'பீலா படலம்' போதும் - let's get on with it..என்ற உங்கள் உரத்த சிந்தனை எனக்குக்  கேட்பதால் - துவங்குகிறேன் லயனின் ஆண்டுமலரின் அறிவிப்போடு !

The லயன் MAGNUM ஸ்பெஷல் !!!

NBS வெளியான சற்றைக்கெல்லாம் லயனின் 30-வது ஆண்டுமலரைப் பற்றிய பேச்சு துவங்கிய சமயமே என் தலைக்குள்ளே முதலில் உதயமான பெயர் இது ! ஆனால் "Magnum " என்ற adjective அத்தனை சரளமான பயன்பாட்டில் இருந்திடும் ஒரு சொல் அல்ல என்பதால் - கொஞ்சம் எளிமையானதொரு பெயரை சிந்திக்க முயன்றேன் ; நண்பர்கள் உங்களின் முயற்சிகளையும் கோரி இருந்தேன் ! நீங்கள் அட்டகாசமாய் அனுப்பி இருந்த எக்கச்சக்கப் பெயர்களுள் நிறைய 'பளிச்' ரகத்தில் இருந்த போதிலும், LION MILESTONE SPECIAL என்று P .கார்த்திகேயன் suggest செய்திருந்த பெயரும் , "சிங்கத்தின் கர்ஜனை" என்ற ஆக்கமும் (நண்பர் பிரேம் கைவண்ணம்) என்னைக் கவர்ந்திருந்தன ! இது தவிர RIPROARING ஸ்பெஷல் (இது யாரது படைப்பு ப்ளீஸ் ??) என்ற பெயரும் பிடித்திருந்தது ! ஆனால் அத்தனையையும் தலைக்குள் போட்டு ஒரு வாரம் உருட்டிய பின்னே - எனது ஆரம்பத்துத் தேர்வான "MAGNUM ஸ்பெஷல்' தேவலை என்றே தோன்றியது ! இதன் பெயர் காரணத்தைப் பற்றி ஹாட்லைனில் விரிவாகவே எழுதியுள்ளேன் என்பதால் - மீண்டும் அதனை இங்கே ஒப்பிக்காது - short n ' sweet ஆகச் சொல்லி விடுகிறேன் ! லதீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்துள்ள Magnum என்ற சொல்லிற்கு "கிரேட் ; ஒப்பற்ற ' என்ற ரீதியில் அர்த்தம் கொள்ளலாம் ! தவிர 'Magnum Opus' எனும் சொற்றொடருக்கு - 'படைப்புகளில் தலைசிறந்ததான' என்ற ரீதியில் பொருள்படும் ! So - இதுவரை நாம் முயற்சித்ததுள் உச்சமாய் இருக்க வேண்டுமென நான் எண்ணியுள்ள இந்த இதழுக்கு  "MAGNUM ஸ்பெஷல் " என்ற பெயர் பொருந்துமெனத் தோன்றியது ! பெயருக்கு முன்பாக 'The' என்ற இணைப்பு சேரும் போது கம்பீரமும் சற்றே கூடுவது போல் எனக்குப் பட்டதால்  - லயனின் 30-வது ஆண்டுமலருக்கு 'The லயன் MAGNUM ஸ்பெஷல்' என்ற பெயர் தீர்மானமானது ! பெயர் சூட்டும் முயற்சியினில் ஏராளமாய் நேரமும், சிந்தனையும் செலவிட்ட நண்பர்களுக்கு நமது நன்றிகள் ! அதிலும் அந்த டாப் 3 பெயர்களை suggest செய்திருந்தவர்களுக்கு ஒரு extra big thanks !!

பெயர் என் தலைக்குள்ளே ஓடிக் கொண்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே கதைத் தேர்வுகள் பற்றிய சிந்தனை தீவிரமாகி இருந்தது ! நவம்பர் 2013-ல் வந்த டெக்ஸ் வில்லரின் தீபாவளி மலருக்குக் கிட்டிய வரவேற்பும், தொடர்ந்த ஜனவரி சென்னைப் புத்தக விழாவினில் அந்த இதழுக்கு இருந்த அமோக வரவேற்பும் என் சிந்தனைகளை ஆக்கிரமித்தன ! மொத்தம் 775 பக்கங்களில் - 2 x  மெகா டெக்ஸ் சாகசங்கள் ; என்பது சுலபமான பார்முலாவாய்த் தோன்றியது எனக்கு ! வேலையும் கடினமாகாது ; விற்பனைக்கும் உத்திரவாதம் ! எனும் போது சபலம் தலைக்குள் 'ஜிங்கு ஜிங்கென்று ஆடியது உண்மையே !   இது தொடர்பாய்  உங்களின் சிந்தனைகளை வெள்ளோட்டம் பார்க்கும் விதமாய் இங்கு வாலை மாத்திரம் விட்டு நான் ஆழம் பார்த்தது நினைவிருக்கலாம் ! கொஞ்சப்பேர் ஒரே கதை concept -க்கு 'ஜே' போட்டாலும், பரவலாய் - 'கூட்டணி இதழுக்கே வோட்டு' என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டதால் - எனது இலக்கை நிர்ணயிப்பது சுலபமாகிப் போனது ! 'ஒ.கே. - ஒரு பல்கதைக் கலவை தான் இம்முறையும் !' என்று தீர்மானம் ஆன பின்னே - தோராயமாய் ஒரு costing போட்டுப் பார்த்தேன் - எத்தனை பக்கங்கள் ; எந்த அளவில் சாத்தியம் என்றறிய ! ஆனால் இந்த ஒரு இதழுக்கு மட்டும் பெரியதொரு கணக்கு வழக்கெல்லாம் பார்த்திடாமல் - மனதுக்கு நிறைவாய் செய்வோமே என்ற உந்துதல் எனக்குள் வேகமெடுக்க, கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டு - கதைகளின் தேர்வுக்குள் ஐக்கியமானேன் ! So - இந்த இதழ் நிறைய விதங்களில் ஒரு one-off என்பதை இங்கே நான் அடிக்கோடிட்டிட விரும்புகிறேன் ! 'இத்தனை பக்கங்களுக்கு இத்தனை ரூபாய் ; இதுக்கு இன்னும் ஜாஸ்தியாக இருந்திருக்கலாம் ; அல்லது இதே பார்முலாவின்படிப் பார்த்தால் தொடரும் இதழ்களிலும் இத்தனை பக்கங்கள் இருந்தாக வேண்டுமே !' என்ற  ரீதியிலான எந்தவொரு திட்டமிடல்களும் பொருந்திடாது ! This is just an one-off !

துளித் தயக்கமும் இல்லாமல் முதலில் தேர்வானவர் டெக்ஸ் வில்லரே ! அதிலும் இது போன்றதொரு லயன் மேளாவில் அதன் டாப் நாயகருக்கு முதல் மரியாதை என்பதில் எனக்குள் தயக்கம் இருந்திடவில்லை ! 228 பக்கங்களில் ஒரு முழு நீல ; முழு வண்ண ஆக்க்ஷன் சூறாவளியாய் டெக்சின் "சட்டம் அறியா சமவெளி ' இருந்திடப் போகிறது ! அட்டகாசமான சித்திரங்கள் ; அனல் பறக்கும் கதைக்களம் என சமீப சாத்வீக டெக்சிலிருந்து வித்தியாசம் காட்டி நிற்பார் நம் நாயகர் !

டெக்ஸ் ஒருபக்கமெனில் சமீபமாய் வீறு கொண்டு எழுந்துள்ள டைகரின் அபிமானிகளின் பொருட்டு டைகரும் மறு பக்கம் நின்றால் அட்டகாசமாய் இருக்குமே என்ற என் அடுத்த சிந்தனைக்கு தற்போதைய 'இளம் டைகர்' கதைகளின் நினைவு அத்தனை ஊக்கத்தைத் தரவில்லை ! தவிரவும் ஒரு சங்கிலித் தொடராய் பயணிக்கும் கதைகளை நடுவில் பிரித்துப் போடும் தவறை இனி ஒரு முறை தொடர வேண்டாமே என வேறு மார்க்கமாய் யோசித்தேன் ! அப்போது தான் ஓவியர் வில்லியம் வாசின் மாயாஜால ஓவியங்களுடனான "மார்ஷல் டைகர்' தொடர் நினைவுக்கு வந்தது ! இரண்டே கதைகள் வான்சின் ஓவியங்களோடு ; பின்னர் நெடியதொரு இடைவெளிக்கு பின்பாய் மேற்கொண்டொரு கதை (வேறொரு ஓவியருடன்) என மொத்தமே 3 சாகசங்கள் மாத்திரமே கொண்ட தொடர் இது ! அதன் முதல் கதையினை நமது LMS -ல் முழு வண்ணத்தில் படித்திடப் போகிறீர்கள் ! "மார்ஷல் டைகர்" ஒரு சித்திர விருந்து மட்டுமல்லாது - டைகர் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக க்ளுகோஸ் ஏற்றும் விதத்திலான கதை !

கௌபாய் கோட்டா ஓவர் என்ற நினைப்பு எழுந்த போது - நமது காமெடி கௌபாய் 'உள்ளேன் அய்யா !' சொல்வதை உணர முடிந்தது ! டேச்க்சுக்கு அடுத்தபடியாக லயனின் லாயத்தில் அதிக popular ஆனவர் நம் லக்கியார் தான் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாதென்பதால் - "பேய் நகரம்' கதை # 3 ஆகத் தேர்வானது ! மீண்டும் முழு வண்ணம் என்பதோடு - மீண்டும் அதிரடி ஜேன் தலை காட்டவிருக்கும் முழு நீளச் சிரிப்பு மேளா இது ! ஜாலி ஜம்பரின் லூட்டிகளும் இக்கதையின் ஒரு highlight ! So - இவரும் ஒரு கௌபாய் தான் எனினும், இவரது பாணி நகைச்சுவை என்பதால்  லக்கி பட்டியலுக்குள் சுலபமாய்ப் புகுந்து விட்டார் ! சரி, அடுத்து என்னவென்று லேசான சிந்தனைக்குள் அமிழ்ந்த போது தான் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து போன் வந்தது ! கடைசியாய் அனுப்பி இருந்த கதையின் மீதான பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்து எழுத வேண்டிய கதை எதுவோ ? என்றும் கேட்டார் ! நான் பதில் சொல்வதற்கு முன்பாக - 'எனக்கு சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகாத குறை தான் ; கடைசியாய் அனுப்பிய கதை சூப்பர் காமெடி' என்று சொன்னார் ! கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பரிச்சயத்தினில் இது போலொரு பாராட்டு அவரிடமிருந்து வந்ததே கிடையாது எனும் போது 'படக்' என எழுந்து உட்கார்ந்தேன் ! அவரைச் சிரிக்கச் செய்த பிரகஸ்பதி யாரோ என்று பார்த்தால் - அது நமது ரின் டின் கேன் தான் !! லக்கி கதைகளில் அடிக்கடி தலைகாட்டும் இந்த மந்தபுத்தி   நாலு காலாரை மு கணமே டிக் செய்தேன் - LMS -ன் இருப்புக் கோட்டாவினைப் பூர்த்தி செய்திட ! "அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே !" முழு வண்ணத்தில் வரக் காத்திருக்கும் 44 பக்கச் சிரிப்புத் தோரணம் !

'ரைட்...2 வெஸ்டெர்ன் ; 2 காமெடி ..ஆச்சு - what next ?' என்ற போது காலம் காலமாய் நாம் ஆராதித்து வரும் டிடெக்டிவ் ரகக் கதைகள் தான் நினைவுக்கு வந்தன ! சமீப மாதங்களில் நம் அணிவகுப்பில் ஒரு ரசிக்கத்தக்க டிடெக்டிவ் இல்லை என்ற குறை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது ! ஜில் ஜோர்டன் ; ஜெரோம் ஆகியோர் விளிம்பில்  நிற்கும் நாயகர்கள் எனும் போது - இது போன்றதொரு முக்கிய தருணத்தின் மைல்கல் இதழுக்குச் சரி வர மாட்டார்களென்று புரிந்தது ! இன்னும் கொஞ்சம் யோசிக்கும் போது கண்ணாடி + பைப் சகிதம் வந்து செல்லும் ரிப் கிர்பி ; FBI காரிகன் ஆகியோரின் பக்கமாய் நினைவலைகள் பயணித்தன ! ஆனால் VRS கொடுத்த நாயகர்களை தட்டி எழுப்புவதை விட - வாகான வாய்ப்பின்றிப் பின்னணியில் நிற்கும் CID ராபினைக் கூப்பிடுவது சாலச் சிறந்தது என்று தீர்மானித்தேன் ! ஏற்கனவே அவருக்கு வாய்ப்பு தருவதாய் நான் இங்கு promise செய்திருந்ததும் நினைவில் நின்றதால் - டிக் ஆன கதை # 5 - ராபினின் சாகசமே ! இதனையும் வண்ணத்தில் வெளியிடும் வேட்கையில் உருட்டிய போது - போனெல்லி நிறுவனம் ராபினின் கதை # 100-ஐ வண்ணத்தில் வெளியிட்டிருந்தது தெரிய வந்தது ! பிறகென்ன - முதல் முறையாய் ராபின் வண்ணத்தில் வரத் தயாராகி விட்டார் - "நிழல்களின் நினைவுகள்" வழியாக ! 95 பக்க டிடெக்டிவ் த்ரில்லர் இது !

இது வரை நம் இதழ்களின் உச்சபட்ச எண்ணிக்கையிலான கதைகள் டிடெக்டிவ் வகைகளே என்பதால் அந்த ரசனைக்கு இன்னும் கொஞ்சம் இடம் ஒதுக்கும் வேட்கை எனக்குள் இருந்தது ! ஆனால் பழைய முகங்களில் எதுவும் பெரிதாய் சோபித்தது போல் தெரியவில்லை என்பதாலும், ஒரு புதுமுக அறிமுகம் கொண்டு வரும் novelty சுவாரஸ்யம் தர வல்லதென்பதாலும் - கொஞ்ச காலமாகவே என் ராடாரில் இருந்து வந்த "ஜூலியா" வை அறிமுகம் செய்வதெனத் தீர்மானித்தேன் ! ஜூலியாவும் ஒரு இத்தாலியப் படைப்பே ; 126 பக்கங்களில் black & white -ல் சாகசம் செய்யும் ஒரு பெண்மணி ! மாடஸ்டி போல் அதிரடிகள் இவரது பாணியல்ல என்றாலும் இவரொரு பரபரப்பான நாயகியே ! மகளிரின் ஒற்றைப் பிரதிநிதியாகவும் செயல்படவிருக்கும் ஜூலியா - "விண்வெளியில் விபரீதம் ' எனும் b & w த்ரில்லர் மூலம் அறிமுகம் காண்கிறார் ! Let's give the lady a warm welcome folks !

'அரை டஜன் ஆச்சு...இனி என்ன செய்யலாம் ?' என்று யோசித்த போது - மர்மம் + ஹாரர் கதைகளின் இலாக்கா காலியாய் உள்ளதை உணர முடிந்தது ! 'மர்மம்' எனும் போது மர்ம மனிதன் மார்டினை மறத்தல் சாத்தியமாகுமா ? நிறைய நண்பர்களின் கோரிக்கைப் பட்டியலில் இருந்து வந்த இந்த -ஐ துளி சிந்தனையுமின்றித் தேர்வு செய்தேன் ! அதே வேகத்தில் 'கட்டத்தில் ஒரு வட்டம்' கதையினையும் டிக் அடித்தேன் ! கருப்பு-வெள்ளையில் ஒரு ஆக்க்ஷன் கதகழி காத்துள்ளது மார்டினின் மறுவருகையின் வாயிலாக ! 'மர்மம் ஆச்சு ; ஹாரருக்கு நான் இருக்கிறேன் !' என திகில் டிடெக்டிவ் டைலன் குரல் எழுப்ப - "நள்ளிரவு நங்கையும்' நம்மிடம் தயாராக இருக்க - வண்ணத்தில் இந்த horror thriller இணைந்து கொண்டது நம் பட்டியலுக்குள் !

புதிதாய் இன்னும் ஏதாவது ஒரு சுவையினை சேர்த்தாக வேண்டுமே என்று எனக்குள் குடைய - இருக்கவே இருக்கிறது கிராபிக் நாவல் வரிசை என்று தலைக்குள் உதித்தது ! ஆனால் இந்த சந்தோஷத் தருணத்தில் கர்சீப் தேடச் செய்யும் கனமான கதைக்களம் வேண்டாமே என்ற சிந்தனையில் - ஒரு ஆக்க்ஷன் நாவலைத் தேர்வு செய்தேன் ! கறுப்பு-வெள்ளையில் வந்த கதை தான் என்ற போதிலும், "இறந்தகாலம் இறப்பதில்லை" ஒரு அழகான கதை ! நம் LMS -ன் கதை # 9 இதுவே !

மிட்டாய்க் கடையில் ஆர்டர் பண்ணும் பாலகனைப் போல இஷ்டத்துக்குக் கதைகளை தேர்வு செய்தான பின்னே - பக்கங்களை total போட்டுப் பார்த்த போது 880+ பக்கங்களைத் தொட்டு விட்டிருந்தது பட்டியல் ! இன்னமும் நமது வழக்கமான filler pages-ஐ இணைக்கும் போது பக்க எண்ணிக்கை சுலபமாய் 900 பக்கங்களை எட்டிப் பிடித்து விடும் என்பது புரிந்தது ! தேர்வான 9 கதைகளில் ஆறு இத்தாலியப் படைப்புகள் என்பதால் அவற்றின் அளவுகள் அனைத்துமே நமது தற்போதைய டெக்ஸ் ; டயபாலிக் அளவுகள் தான் என்பதையும் உணர்ந்தேன் ! முன்பைப் போல் அனைத்துமே black & white பாணியில் வெளியாகக் காத்திருக்கும் பட்சத்தில் - நமது ஆர்டிஸ்ட்களைக் கொண்டு, வெட்டி, ஒட்டி இல்லாத பல்டிகளை எல்லாம் அடித்து பெரிய சைசுக்கு இதனை 450 பக்கங்களாய் மாற்ற முனைந்திருப்போம் ! ஆனால் இப்போதோ முழுதும் வண்ணம் ; முழுதும் கணினி எனும் போது இத்தனை பெரிய சைஸ் மாற்றம் தேவையற்ற இடியாப்பச் சிக்கல் என்பதை புரிந்து கொண்டேன் ! So LMS 900 பக்கங்களோடு - நமது டெக்சின் சைசில் ஒரு தலையணை கனத்திற்கு 9 பிரத்யேகக் கதைகளோடு வரக் காத்துள்ளது !

ஆக இது தான் கட்டிடத்திற்குப் போடப்பட்டுள்ள blueprint  ! ஏற்கனவே  இதன் மீதான பணிகளை முழு வீச்சில் துவங்கி விட்டோம் ! கல்லும், மணலும், ஜல்லியுமாய் திரும்பிய பக்கமெல்லாம் கிடக்கும் இந்த சங்கதிகளை ஒருங்கிணைத்து காலத்துக்கும் நிலைத்து நிற்கவல்லதொரு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் பணி காத்து நிற்கின்றது ! அதன் ஒவ்வொரு நிலையிலும் உங்களின் ஆதரவும், உற்சாகமும் மாத்திரமே நம்மை வழி நடத்திச் செல்லவிருக்கிறது ! ஆண்டவன் அருளும், உங்கள் அண்மையும் எப்போதையும் விட இப்போது எங்களுக்கு அத்தியாவசியம் folks !! Wish us luck please !! And....மறவாது சூப்பர் 6-ன் சந்தாத் தொகையினை துரிதமாய் அனுப்பி உதவிடுங்களேன் ப்ளீஸ் ! Catch you soon guys...! இனிமேல் start music !!