Powered By Blogger

Thursday, August 29, 2013

இது கேள்வி நேரம் !

நண்பர்களே,

வணக்கம். காலை எழுந்தவுடன் சிரிப்பு ; பின்பு ஆபீஸுக்குச் சென்றதும் சிரிப்போ சிரிப்பு ; மாலை முழுவதுமே சிரிப்பு ; தூங்கும் வரைச் சிரிப்பு ! கடந்த நாலைந்து நாட்களாய் எங்களது முழு நேர agenda இது தான் ! உரக்க ; கூரையில் ஏறி நின்று சிரிக்காத குறை தான் ! 'ஆஹா...வெயில் திரும்பவும் ஒரு ரவுண்ட் அடிக்கத் துவங்கியது நிஜம் தான்...சிவகாசியில் கொஞ்சம் ஓவரோ ?' என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தால் அது நியாயமே ! ஆனால் எங்களது தற்சமயச் சிரிப்பு - பெரும் புலவரின் வழிகாட்டலின் பொருட்டே ! 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று அவர் சொல்லி விட்டுச் சென்றான பின்னே, அதைப் பின்பற்றுவதைத் தாண்டி நமக்கெலாம் என்ன வேலை ? 

கடந்த 3 வாரங்களாகவே தறி கட்டுப் பாயும் நமது இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரம் பிறந்த நாள் முதலாய் தினமொரு புதுப் பாதாளத்தைத் தேடித் பயணம் செல்வதை நீங்களும் கவனித்திருப்பீர்கள் ! இன்றைய யூரோ மதிப்பு : ரூ.92-50 !! சென்ற மாதமோ - ரூ.72 ! உழைப்பைத் தாண்டி சகலமுமே அயல்நாட்டுச் சங்கதிகளைக் கொண்ட நமது இதழ்களுக்கு ரூபாய் வாங்கிடும் இந்த தர்ம அடி இரத்தக் கண்ணீரை வரவழைக்காத குறை தான் ! கதைகளுக்கான ராயல்டி ; அச்சுக் காகிதம் ; அச்சு இங்க் ; அச்சுப் பிளேட்கள் என முக்காலே மூன்று வீசம் - டாலர்களிலும், யூரோக்களிலும் பணம் அனுப்ப அவசியமாகிடும் செலவினங்கள்  நமக்கு ! வரலாறு காணா இந்த 'தொபுகடீர்' நம் கட்டுப்பாட்டில் இல்லா சங்கதி என்பதால், ஜாலியாக "நகுவதைத்' தாண்டி வேறென்ன செய்வதென்று இப்போதைக்குத் தெரியவில்லை ! இம்மாதத்திற்கும், அக்டோபருக்கும் அச்சுக் காகிதம் கையிருப்பு உள்ளதால் இப்போதைக்குத் தலை தப்பி விட்டது ! ஆனால் நவம்பரில் பேப்பர் வாங்கிடவிருக்கும் சமயம் நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே தான் முயற்சித்தாக வேண்டும் என்பது தெளிவு ! ஆர்ட் பேப்பரின் விலை தான் விண்ணைத் தொடுகின்றதென்று இல்லாது, 'சமத்துவம், சகலத்திலும்' என்ற பாணியில் - uncoated பேப்பரின்   விலைகளும் கண்ணுக்கு எட்டாத் தூரத்தை நோக்கிப் பயணம் செய்துள்ளன !  
ஆகஸ்ட் 15 விடுமுறையின் போது 2014-க்கான அட்டவணையை கிட்டத்தட்ட பூர்த்தி செய்திருந்தேன் ! இனி back to the drawing board once again ! குட்டிக்கரணங்கள் அடித்தேனும் இந்தாண்டை எப்படியாவது நிர்ணயித்த விலைகளிலேயே கொண்டு சென்றிடுவோம் ; ஆனால் 2014-ல் நமது விலைகள் உயர்வதைத் தடுக்க வழியே புலப்படவில்லை!அதிலும் மாதந்தோறும் படைப்பாளிகளுக்கான ராயல்டி அனுப்பும் நாட்களை நினைத்தால் இப்போதே குளிர் ஜூரம் வருவது போலுள்ளது ! Phew !  சரி...நமது 'சிரிக்கும் படலம்' ஓவர்..ஓவர்  ; இனி நமது updates பற்றி ! 

'செப்டெம்பர் இதழ்கள் எப்போது ?' என்று கடந்த பதிவினில் ஆங்காங்கே நண்பர்கள் பலரும் கோரியிருந்த போதிலும் என்னால் சரியான பதில் தர இயலாது போனதன் காரணத்தை வரும் செவ்வாயன்று வரவிருக்கும் புதிய பதிவைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! செப்டம்பர் 3-ஆம் தேதி இங்கிருந்து 2 இதழ்களுமே  அனுப்பிடப்படும் ! So - அது வரை பொறுமை ப்ளீஸ் ! 

அப்புறம் நவம்பரில் வரவிருக்கும் டெக்ஸ் தீபாவளி மலரில் ஒரு surprise காத்துள்ளது என்று நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம்....! அது என்னவாக இருக்குமென்ற கேள்விகளும், யூகங்களும் - பின்னூட்டங்களாகவும்  சரி ; கடிதங்களாகவும் சரி, நிறையவே வந்து விட்டதால் - தேவையின்றி ஒரு suspense buildup வேண்டாமே என்று தோன்றியது ! தவிரவும் இந்த surprise -ல் உங்களின் பங்களிப்புகளும் இருக்கும் பட்சத்தில் இன்னமும் நிறைவாக இருக்குமே என்ற சிந்தனை மண்டைக்குள் சவாரி செய்வதால் -  here goes ! நமது டாப் கௌபாய் டெக்ஸ் வில்லர் நமக்கெல்லாம் எத்தனை பிரத்யேகமானவர் என்பதை 1985 முதல் அவரது சாகசங்களைப் படித்து வரும்  நாம் அனைவருமே அறிவோம் ! நமது இந்த 'டெக்ஸ் காதலை' நன்கு அறிந்து வைத்திருக்கும் இன்னொரு அணியும் உண்டு ; அது தான் இத்தாலியில் டெக்ஸ் கதைகளை உருவாக்கிடும் பொனெலி குழுமம் ! லட்சங்களில் இத்தாலிய மொழியிலும், கணிசமானதொரு  எண்ணிக்கையில் ஸ்பானிஷ் பேசும் தென்னமெரிக்காவிலும் சக்கை போடு போடும் டெக்ஸ் - நமது தமிழ் பதிப்புகளில் ஒரு பெரும் எண்ணிக்கையினை முன்னிறுத்தியதில்லை தான் ! ஆனாலும் circulation ; நம்மால் திரட்ட இயலும் ராயல்டி என்ற நம்பர்களைப் பிரதானமாய்ப் பார்த்திடாது, அவர்களது தேசத்து செல்லப் பிள்ளை நமக்கும் எத்தனை வாஞ்சையானவர் என்பதைப் புரிந்து கொண்டு  நமது முயற்சிகள் மீது எப்போதுமே நேசம் காட்டத் தவறியதில்லை !

சமீபமாய் அவர்களிடம் interact செய்து கொண்டிருந்த போது, டெக்சின் பின்னணி பற்றி ; அதன் தற்போதைய creative team பற்றிய கேள்விகளை முன்வைத்தால் என்னவென்று எனக்குள் தோன்றியது ! அதையே இன்னும் கொஞ்சம் develop செய்து, டெக்சின் கர்த்தாகளோடு ஒரு interview ஆகச் செய்ய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்ற எண்ணமும் உதித்தது ! 'மிகவும் பிஸியான வேலைப் பளுவினிடையே டெக்சின் கதாசிரியர் எவரேனும் நம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமாகுமா ? ' என்று நான் கேட்ட போது - 'oh yes ! குழுமத்தின் தலைவரான திரு.டேவிட் பொனெலியெ உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக / ஆர்வமாக உள்ளார் ! என பத்தாவது நிமிடத்தில் பதில் மின்னஞ்சல் வந்து சேர்ந்தது - இன்ப அதிர்ச்சியாய்  ! மறைந்த செர்ஜியோ பொனெலியின் புதல்வரும், இன்றைய அவர்களது கட்டமைப்பின் சகலமுமாய் திகழ்பவர் திரு டேவிட் ! அத்தனை பெரிய நிறுவனத்தை ஆள்பவரின் பணிச்சுமை எத்தகையது என்பதை நானறிவேன் ; இருப்பினும், நமது டெக்ஸ் நேசத்தை மதித்து, அவரே பதில் தர முன்வந்தது நமக்குக் கிட்டியதொரு பெருமை guys !! Pat yourself on the backs !! அவரைப் பேட்டி கண்டு, அதனை டெக்ஸ் தீபாவளி மலரில் உங்களுக்கொரு குட்டி surprise ஆக வெளியிடுவதை விட, அந்தக் கேள்விகளை frame செய்யும் பணிகளையே உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னமும் அழகாக இருக்குமே என்று தோன்றியது ! So - உங்கள் அபிமான டெக்ஸ் பற்றி நீங்கள் கேட்க எண்ணிடும் கேள்விகளை இங்கு பதிவிடலாம் ; அல்லது நமக்கு மின்னஞ்சல்களாகவோ ; கடிதங்களாகவோ அனுப்பிடலாம் ! 'உங்கள் சர்குலேஷன் என்ன ?' பாணியிலான வினவல்களைத் தவிர்த்து விட்டு, 'டெக்ஸ் நேற்று-இன்று-நாளை ' பற்றிய வினாக்களை தொடுத்திடலாம் ! So, get cracking !!
காலம் சென்ற திரு. செர்ஜியோ பொனெலி (1932-2011)
அக்டோபரில் இரத்தப் படலம் + பிளஸ் 6 வரிசையின் (புது) கார்டூன் அறிமுகம் ! நவம்பர் & டிசெம்பரில் தலா 3 இதழ்கள் ! (ஒரு லயன் / முத்து இதழ் ; ஒரு மறுபதிப்பு மற்றும் +6 வரிசைகளின் இவ்வாண்டுக்கான இறுதி 2 இதழ்கள் ) So இந்தாண்டின் இறுதிப் பகுதிகள் (எங்களுக்கு) செம tight ஆகப் பயணிக்கவிருப்பது இப்போதே அப்பட்டம் !   பணிச்சுமை கூடக் கூட, நான் இங்கு நமது வலைப்பதிவில் செலவிட சாத்தியமாகும் நேரம் குறைந்திடுவதை என்னால் உணர முடிகிறது ! அச்சமயங்களில் நண்பர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிடக் கூடிய சுவாரஸ்யம் தரும் பகுதிகளை இங்கே கொணர்ந்தால் என்னவென்று தோன்றியது ! ஏற்கனவே இந்த சங்கதி மீது மெலிதானதொரு விவாதத்தை நாம் துவக்கியது நினைவுள்ளது ; அதன் மீதொரு முடிவு எடுத்திடும் வேளை நெருங்குவதாய் மனதுக்குப் படுவதால் - இதன் சாதக-பாதகங்களைக் கொஞ்சம் அலசுவோமா ? What say folks ?

2014-க்கான அட்டவணை தயாரிப்பின் போது எனக்குள் எழுந்த கேள்விகள் சில !  அவற்றை ஒரு உரத்த சிந்தனையின் வெளிப்பாடாய்க் கூட எடுத்துக் கொள்ளலாம் ! கொஞ்சமாய் உங்களின் inputs கிட்டிடும் பட்சத்தில் எனது திட்டமிடல் தெளிவான வடிவம் பெற்றிடுவது சுலபமாகிடும் என்பதால் -  here I go again :
  • 2012 & (இது வரை )2013-ல் வெளியான கதைகளுள் - '2014-ல் வேண்டவே வேண்டாமே சாமி!' ரகத்தில் ஏதேனும் உள்ளனவா  ? (எதைத் தேர்வு செய்வதென்ற கேள்வியை விட, எதைத் தவிர்த்தல் அத்தியாவசியம் என்ற புரிதல் முக்கியமாய் தோன்றுகிறது எனக்கு ! )
  • கார்டூன்களுக்கு இப்போதிருக்கும் வாய்ப்புகள் ? >>>>> போதும் / கூட்டலாம் / குறைத்திடலாம் ?
  • 'சரி வர பயன்படுத்திடவில்லை ; இவருக்குக்  கூடுதலாய் வாய்ப்பு தந்து பார்க்கலாம் !' - என்ற ரகத்தில் நமது ஹீரோக்கள் யாரேனும் ஆழ்நித்திரையில் உள்ளனரா ? நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? (அதற்காக 'கபாலர் கழகம்' ரேஞ்சிலான புராதனங்களைத் தேடித் பிடித்திட வேண்டாமே ? ) இந்தக் கேள்வியை நான் முன்னிறுத்துவதன் காரணம் COMANCHE ! ஒற்றைக் கதையோடு கிடப்பிற்குச் சென்றவரை மீட்ட போது தான் ஒரு அழகான தொடரை மறந்த முட்டாள்தனம் எனக்கு உரைத்தது ! அந்தத் தவறு தொடர இடம் தர வேண்டாமே எனத் தோன்றியது ! 
  • Filler pages பற்றிய உங்களின் சிந்தனைகள் என்ன ? வண்ணத்தில் 6-8 பக்கச் சிறுகதைகள் எனும் போது லக்கி லூக் ; மதியில்லா மந்திரி ; ஸ்டீல் பாடியார் நீங்கலாக - பெரிதாய் நமக்கு options கிடையாது என்பதை நினைவில் கொண்டு - இவைகள் நம் இதழ்களுக்குச் சேர்க்கும் value பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?
  • கார்ட்டூன் ; கௌபாய் ; டிடெக்டிவ் ; adventure  ; கொஞ்சமாய் கிராபிக் நாவல் என்ற களங்களில் தற்போது சவாரி செய்து வருகிறோம் ! புதிதாய் நீங்கள் பார்த்திட விரும்பும் ஒரு கதை ரகம் எனில் - அது என்னவாக இருக்கும் ?  Please make just 1 choice ! 
மேற்கண்ட வினாக்கள் முழுக்க, முழுக்க புது இதழ்களின் திட்டமிடலின் பொருட்டே என்பதால் - மறுபதிப்பு தொடர்பான பதில்கள் இவற்றிற்கு வேண்டாமே ? தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுபதிப்புகள் பற்றிப் பேசிடுவோம் !

கிராபிக் நாவல்களின் களங்கள் சோகமோ ; வித்தியாசமான கதை பாணிகளோ (கிரீன் மேனர் ) மாத்திரமே என்ற நமது stereotype -ஐ சிதறச் செய்யும் விதத்திலிருந்த இருகதைகளை சமீபத்தில் படிக்க வாய்ப்புக் கிட்டியது ! இரண்டுமே பிரெஞ்சு ஆக்கங்கள் ; இரண்டுமே மூன்று பாகங்களானவை ! கதை சொல்லிய விதம் ; கதையின் புதுமை (நமக்கு) ; ஓவிய அசாத்தியம் என படித்த மாத்திரத்தில் திகைக்கச் செய்தன இரு நாவல்களும் ! இவற்றை எப்படியேனும் தமிழுக்குக் கொணர வேண்டுமே என்ற மண்டைக்குடைச்சல் அபரிமிதமாய் என்னுள் ! இது போன்ற கிராபிக் நாவல்களை நம் வாசிப்பு எல்லைகளுக்குள்ளே நுழைத்திடும் பட்சத்தில், நமது ஆக்க்ஷன் கதை ரசிகர்களும் நிச்சயம் குறை சொல்லிட மாட்டார்கள் என்பது உறுதி ! அவற்றில் ஒன்றை எப்படியேனும் 2014-ல் களமிறக்கிடுவோம் ; பிரயத்தனம் இரண்டையுமே கொணர்வதில் இருக்குமென்பதை நான் சொல்லிடவும்  வேண்டுமா -என்ன ? 
தூக்கத்தை நாடிப் புறப்படும் முன்னே சின்னதாய் இன்னுமொரு சந்தோஷ சேதியும் கூட : இன்று முதல் சென்னையின் 4 LANDMARK ஸ்டோர்களிலும் (ஸ்பென்சர் plaza ; அம்பா ஸ்கைவாக் mall ; சிடி சென்டர் ; நும்கம்பக்கம் ) நமது காமிக்ஸ்கள் சகலமும் (மீண்டும்) கிடைத்திட ஏற்பாடாகியுள்ளது ! :-)

See you around folks ! Take care ! 

Thursday, August 22, 2013

கடலோடு காதல் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் பதிவுகள், பின்னூட்டங்கள், விமர்சனக் கடிதங்கள், நேர்முக சந்திப்புகள் என ஏராளமான feedback கிட்டுவதாலோ என்னமோ - 20 நாட்களுக்கு முன்பே வெளியானதொரு இதழ் கூட ஏதோ ஒரு யுகத்தில் பிரசுரமானது போல் எனக்குத் தோன்றுகிறது ! கிரீன் மேனர்களும் ; ஈரோட்டுத் திருவிழாக்களும் ; சுட்டி லக்கியாரும் பசுமையான நினைவுகளாய் மாத்திரமே எஞ்சி இருக்க, பர பரவென அடுத்த மாதத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது ! செப்டெம்பரில் நமக்குக் காத்திருப்பது   2 x  ரூ.100 இதழ்கள் ! இந்தப்  பதிவின் தலைப்பைப் பார்த்த போதே மறுபதிப்புப் படலத்தோடு வண்ணத்தில் அசத்தவிருக்கும் "கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் " பற்றிய preview  இது என்பதை யூகிக்க பெரும் மதியூகம் அவசியமிருந்திருக்காது ! இந்தப் பரட்டைக் கும்பலோடு 1985-ல் துவங்கிய நமது பரிச்சயம் பற்றி "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியில் ஏற்கனவே நிறையவே எழுதி விட்டதால், அதையே திரும்பவும் தொடர்ந்து உங்களை தூங்கச் செய்வது எனது நோக்கமல்ல ! ஆனால் - கேப்டன் பிரின்ஸ் நம் ராடாருக்குள் entry ஆகிடுவதற்கு முன்பாகவே இன்னுமொரு மாலுமியையும்   நாம் பரிசீலனை செய்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லியது இல்லை என்றே நினைக்கிறேன் !

லயனின் துவக்க நாட்களில் பிரிட்டிஷ் காமிக்ஸ் ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டிருந்த வேளையில் - பிரான்கோ - பெல்ஜியப் படைப்புகளின் மீது நமது கவனம் படிவதன் முன்பாகவே இத்தாலியக் கதைகளுடனான   காதல் தொடங்கி இருந்தது ! டெக்ஸ் வில்லர் & டயபாலிக் தான் எனது அன்றைய பிரதான ; பிரத்யேக இலக்குகள் ! அது தொடர்பாய் ஒரு இத்தாலிய ஏஜண்ட்டைப் பிடித்து அவரோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த சமயம், அவர்களது தேசத்து இதர பிரபல காமிக்ஸ் கதைகளின் மாதிரிகளையும் ஒரு பெரிய air parcel -ல் அனுப்பி வைத்திருந்தார் ! இந்த ஈ-மெயில் ; ஜி -மெயில் என்பதெல்லாம் ஏதோ மெயில் train -களின் பெயர்களாய் மாத்திரமே இருந்திடக் கூடிய அந்தப் புராதன நாட்களில் - தபால்காரரின் வருகை தினமும் ஒரு குட்டி தீபாவளிக்கு சமானம் ! (கூரியர் சர்வீஸ் கூட இல்லா நாட்கள் அவை !! நம்ப முடிகிறதா ?) அவர் கொண்டு வரும் கடிதங்களுள் வயிற்றுக்குப்  படியளக்கும் காசோலைகளும் ; மனதுக்குத் தீனி போடும் உங்கள் பாராட்டுக் கடிதங்களும் மட்டும் தான் என்றில்லாது, கதைகளின் ஒரிஜினல்கள்  ; புதிய நிறுவனங்களோடு கதைக் கொள்முதல் தொடர்பான கருத்துப் பரிவர்த்தனை தாங்கிய கடிதங்கள் பிளஸ் எப்போதாவது பார்சல்களில் கேட்லாக் ; sample books எனவும்  வந்திடுவதுண்டு !ஏதேனும் அரசு விடுமுறை என்று தபாலாபீஸ் பூட்டைப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டால் எனக்கு அன்றைய பொழுதே மூட் அவுட் ஆகி விடும் ! 

ஒரு சுவாரஸ்யமான காலையில் போஸ்ட்மன் கொண்டு வந்திருந்த மொக்கையான பார்சலில் இருந்த சில பல இத்தாலிய காமிக்ஸ் மாதிரிகளுக்குள் மூழ்கிய எனக்கு, கடவாயில் எச்சில் ஒழுகாத குறை தான் ! "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ? என்ற கேள்வியைக் கொஞ்சமாய் மாற்றியமைத்து "எத்தனை கோடி காமிக்ஸ் உருவாக்கினாய் இறைவா?' என்றே கேட்க வேண்டும் போல் தோன்றியது ! மொழி துளியும் புரியவில்லை என்ற போதிலும் அந்தப் படங்களைப் பார்த்து சிலாகிப்பதே பரம சந்தோஷம் தந்தது ! அந்தக் கத்தையில் ஒரு ஒடிசலான கறுப்புக் கோட் அணிந்த கப்பல் காப்டனின் கதைத் தொடரும் இருந்தது ! "கார்டோ மால்டிஸ்" என்ற பெயர் கொண்ட அந்த இதழை ஏனோ கீழே வைக்க எனக்கு மனதே வரவில்லை ! மாமூலான துப்பறியும் கதைகள் + நமது மாயாவி / ஸ்பைடர் / ஆர்ச்சி கூட்டணியைத் தாண்டிச் சிந்திப்பதே மாபாதகம் என்று பயணித்த அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !சித்திரங்கள் வேறு கீச்சல் பாணியில் இருந்து தொலைத்ததால் எனக்கு அந்தத் தொடரை முன்மொழிய தைரியம் திரட்ட இயலவில்லை ! கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் என  ஒரு புதுமையான பாணியாக நமக்கு அன்று  தென்பட்ட அத்தொடர் இத்தாலியில் மாத்திரமன்றி, ஐரோப்பாவிலும் 'ஹிட்' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது ! பெருமூச்சோடு அந்தப் படலத்தை பீரோவுக்குள் திணித்து விட்டு, டெக்ஸ் வில்லர் + டயபாலிக் வேட்டையை மாத்திரமே தொடரக் கோரி கடிதம் எழுதினேன். 

சில மாதங்கள் கழித்து frankfurt -ல் கேப்டன் பிரின்ஸ் தொடரை நாம் முதன் முறையாகப் பார்த்த போது - அந்த டப்பாத் தலை + சப்பை மூக்கு சித்திர பாணியைப் பார்த்தவுடன் 'என்ன கொடுமை சாமி - மாலுமிகளின் கதை என்றாலே சப்பையான artwork தானா ?' என்ற கேள்வி என்னுள் எழுந்தது ! எனினும் 'கார்டோ மால்டிஸ் ' தொடருடன் ஒப்பிடும் போது பிரின்சின் சித்திரங்கள் ரொம்பவே தேவலாம் என்று பட்டதால் - பிரின்ஸ் ஒ.கே.வானார் ! தொடர்ந்த நாட்களில் நமது திகில் இதழ்களின் ஒரு டாப் நாயகர் என்ற பெயரை ஈட்டியதுடன், அற்புதமான கதைகளை நமக்கு வழங்கிய சூப்பர் தொடர் என்ற பெருமையையும் பிரின்ஸ் பற்றிக் கொண்டதை தான் நாம் அறிவோமே !

இதோ - அன்றைய ஒரிஜினல் அட்டைப்படங்களும், இரு கதைகளின் சில உட்பக்கங்களின் மாதிரிகளும் உங்கள் நினைவுகளைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல :


உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் !சாணித்தாளில், black & white -ல் படித்தே போதே அற்புதமாய்த் தென்பட்ட கதைகளை இன்று வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு போனஸ் என்று சொல்லலாம் ! 

இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? ; இதனை முதலில் படித்த சமயங்களில்  நிஜார் பட்டன்களை தாமாகவே போட்டுக் கொள்ளும் வயதை எட்டி இருந்தோர் எத்தனை சதவீதத்தினர் ? - போன்ற உலகை உலுக்கும் கேள்விகளை இங்கு நான் எழுப்பியே தீர வேண்டுமே ! நினைவுகளில் பின்னோக்கிப் பயணம் செய்ய ; வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை மீட்டெடுக்க இது போன்றமையும் சொற்ப சந்தர்ப்பங்களை 'லபக்' கெனப் பற்றிக் கொள்வோமே ? Roll out the time machine folks ! 

Wednesday, August 14, 2013

காதலினால் அதகளம் செய்வீர் !
சுட்டியை சுவைக்கத் துடிக்கும் நம் குட்டி வாசகி !! 

Thursday, August 08, 2013

தொடரும் ஒரு திருவிழா...!

நண்பர்களே,

குலுங்கும் சிரிப்பில் வயிற்றைப் பிடித்துக் கொண்டே வணக்கம் வைக்க முயற்சித்துப் பாருங்களேன் - ஏதோ ஒரு புது வகை 'யூத் டான்சின் ' ஸ்டெப் போட்டது போலிருக்கும் ! கடந்த பதிவில் நீங்கள் அத்தனை பெரும் அடித்துள்ள அதகள லூட்டியின் பலனாய், தனியே அமர்ந்து நான் சிரிப்பில் உருள்வதைப் பார்க்கும் நம்மவர்கள், 'நேற்று வரை ஆந்தை விழியார் ஒழுங்காகத் தானே இருந்தார் ? இன்று மொச்சைக் கொட்டைப் பல்லாருக்கு வேலை கொடுத்து  'கெக்கே-பிக்கே' சிரிப்பாருக்கு முன்னுரிமை கொடுத்தது ஏனோ ?' என்ற குழப்பத்தில் உள்ளனர் ! சிரிக்கும் சாத்தான்களும் ; அறுக்கும் கத்தியார்களும் ; கிறுக்கும் பூனையார்களும் ; குடைமூக்கர்களும் ; கொள்ளி விழியான்களும், இன்ன பிற சூராதி சூரர்களும் உலவும் ஒரு தளத்தில் நான் பயணிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாதே ?! 100+ பதிவுகளை சந்தித்துள்ள நம் தளத்தில் ஒரு out & out சிரிப்பொலி சேனல் அரங்கேறும் முதல் முறை இதுவென்று சொல்லலாம் - awesome show ! Take a bow guys !!! (நிஜமான தமிழாக்கத்தில் பொருள் எடுத்துக் கொண்டு கிரீன் மேனர் பாணியில் வில்லோடு வேட்டையில் இறங்கிட வேண்டாமே - ப்ளீஸ் !!)
ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவினில் சென்னைக்கு இணையான விற்பனையை எதிர்பார்த்தல் சாத்தியமல்லவே என்பது ஏற்கனவே தெரியும் தான் என்ற போதிலும், இது வரையிலான sales + interest சந்தோஷம் தருகின்றன ! புதிதாய் நம் இதழ்களைப் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களும்  ; பால்யத்தோடு காமிக்ஸ்களுக்கு விடை கொடுத்து விட்டு, இப்போது அந்தக் காதலை மீட்டிட எண்ணும் நண்பர்களும் ; பள்ளிகளில் இருந்து வருகை தரும் குட்டீஸ்களும்  -ஒரு சேரக் காட்டி வரும் உற்சாகம் ஒரு பெரும் ஆத்மபலத்தைத் தருகின்றன !எல்லாவற்றிற்கும் மேலாய் ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாம் ஜெயிக்க வேண்டுமென்ற உள்ளன்போடு எங்கெங்கு இருப்பினும் தமது ஆத்மார்த்தமான அன்பையும், ஆதரவையும் பதிவு செய்து வரும் அத்தனை உள்ளங்களும் சரி - இந்த இருவாரத் திருவிழாவை தம் வீட்டு விசேஷமாய்ப் பாவித்து அசாத்தியங்களை நடத்திக் காட்டும் நமது ஈரோடு நண்பர்கள் படையும் சரி - நம்மைத் தீர்க்க இயலாக் கடனாளியாய் ஆக்கி வருவது நிஜம் ! எத்தனை முறை கால் விரலை கடவாயில் செருகினாலும்  இந்த அன்புக் கடனை அடைக்க இயலாதென்பது உறுதி !!! இது போன்ற நாட்களில் தான் மலையைக் கூட முதுகில் சுமந்திட முடியுமென்ற தைரியங்கள் பிறக்கின்றன ! ('அயோடெக்ஸ் இருக்கா ? 'என்று வீட்டுக்குள் பின்னே தேடி அலைவது தனிக் கதை !) 

ஜாலியான updates வரிசையில் முதலில் சொல்ல விரும்புவது : NBS இன்றோடு சுத்தமாய்க் காலி என்ற சேதியே ! ரூ.400 விலையென்பது  இன்றைய  நிஜ மதிப்பில் ஒரு ராட்சசத் தொகை ஆகாது என்ற போதிலும், காமிக்ஸ் களத்திற்கு அது ஒரு giant leap என்பதில் ஐயம் ஏதும் கிடையாது ! உங்களின் உற்சாகமான முன்பதிவுகள் + சென்னை புத்தகத் திருவிழாவின் 'விறு விறு' விற்பனை இணைந்து இதை சாதித்துக் காட்டியுள்ளது ! So - NBS (கொஞ்ச காலத்துக்காவது) இனி நம் நினைவுகளில் மாத்திரமே உலவிடப் போகும் ஒரு சங்கதி ! 'சரி - NBS காலி ; what next ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தான் !! பொறுமை ப்ளீஸ் !! 

Update # 2 : இம்மாத இதழ்களில் வந்த filler pages பற்றியது ! ஸ்டீல்பாடியார் கதைகளில் 60%-40% என்ற விகிதமே success percentage என்பதை எதிர்பார்த்தே இத்தொடரின் முதல் கதையை வாங்கினோம் ! ஆல்பம் # 1 - சிறுகதைகளின் தொகுப்பு ! தொடரும் பாக்கி 3 ஆல்பம்கள் முழு நீளக் கதைகள் ; so அவற்றை முழுவதுமாய்ப் பரிசீலனை செய்தால் தவிர அவை உங்களைப் பதம் பார்க்கப் போவதில்லை ! அவற்றில் நிஜமான தரம் இருப்பின், ஸ்டீல் பாடியார் மறு பிரவேசம் செய்வார் ! இப்போதைக்கு அவர் ஸ்காட்லாந்து கிளம்பியாச்சு ஒய்வு நாடி !

Update # 3 : ஆச்சர்யமூட்டும் விதத்தில் GARFIELD & HEATHCLIFF நிறையப் பேரைக் கவரவில்லை !! சர்வதேச செய்தித்தாள் கார்டூன் வரிசைகளில் சண்டியர்களான இவ்விரு பூனையார்களுக்கும் கொடுக்க அவசியாகும் ராயல்டி தொகையும் மிக ஜாஸ்தி ! உலகுக்கே பிடித்துள்ள இவர்களை நம்மில் பலருக்குப் பிடிக்காது போனதன் காரணம் கண்டறிய மண்டையாரை, விரலார் 'பர பரவென்று'  சொறிகிறார் ! So - கொஞ்ச காலத்திற்கு filler pages பொறுப்புகளைப் பகிர்ந்திடப் போவது மந்திரியாரும், லக்கி லூக்கின் சிறுகதை கலெக்ஷனுமே !

Update # 4 : "Kaun Banega Graphic Designer " இன்னமும் தொடரவிருக்கிறது - உங்களின் எழுத்துத் திறமைக்கும் சின்னதொரு சவாலோடு ! வெகுஜன பத்திரிகைகளில் நமது இதழ்களின் மறுவருகை குறித்து விளம்பரம் செய்திட இருப்பது பற்றி கொஞ்ச வாரங்களுக்கு முன்னே பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அது நடைமுறைக்கு வரும் நாள் நெருங்கி விட்டதென்பதால், நமது விளம்பரங்களை டிசைன் செய்திட ஆர்வமுள்ள நண்பர்கள் தம் creative திறமைகளைக் கட்டவிழ்த்து விடலாம் ! விளம்பர வாசகமும் உங்களது கற்பனயில் உதிக்க வேண்டுமென்பதால் - இது டிசைன் செய்வதற்கு மட்டுமல்லாது copy writing திறமைக்கும் ஒரு வெளிப்பாடாய் இருக்கும் ! Game for it folks ? (குமுதம் ரிப்போர்டர் ; ஜூனியர் விகடனின் அரைப்பக்க அளவு ; black & white )

Update # 5 : தொடரும் மாதத்துப் பணிகள் ஒரு பக்கம் நடந்தேறி வருகின்றன ! சமீபமாய் இரத்தப் படலம் பாகம் 21-ன் சித்திரங்களும், வண்ணச் சேர்க்கைகளும் வந்திருந்தன ! ஓவியர் வில்லியம் வான்சிற்கு சவால் விடும் தரத்தில் சித்திரங்கள் மிளிர்வதை ரசிக்க முடிந்தது ! பாருங்களேன் ஒரு பக்கத்தை !  
அதே பக்கத்தின் வண்ணக் கலவை தனியாக !! கலரிங் ஆர்டிஸ்டின் ஆசாத்திய உழைப்பைப் பாருங்களேன் !! 
Update # 6 : வலைத்தளம் ; இன்டர்நெட் - இவற்றிற்கு இன்னமும் பரிச்சயமில்லா நண்பர்கள் தொடர்ச்சியாய் ; நம்பிக்கையோடு கடிதங்கள் எழுதி வருகின்றனர் - மாதந்தோறும் ! அவர்களது சமீப ஆதங்கம் - வலைத்தள விசுவாசிகளின் குரல்களுக்கே முக்கியத்துவம் தருவது நடைமுறையாகி வருகிறது  ; எங்களின் அபிப்ராயங்களுக்கு மதிப்பிலாது போகின்றது' என்பதே ! வலைபதிவினில் நண்பர்களது குறைகளுக்கு முடிந்தளவு நேரடியாய் நானே பதில் தருவது சாத்தியமாகிறது ! ஆனால் நெடிய கடிதங்களுக்கு நிதானமாய், பதில் போடுவது எல்லா நேரங்களிலும் முடியாது போகின்றது ! அன்னியமாகப் பார்க்கப்படுவதாய் நண்பர்களில் ஒரு சாரார் வருந்துவது சங்கடம் தரும் சங்கதி ! இதனை எவ்விதம் நிவர்த்தி செய்வதென்று குழம்பியுள்ளேன் ! நமது இதழ்களில் இணையத்திற்கு அப்பாற்பட்ட நண்பர்களும்  பங்கேற்கும் விதத்தில் புதிதாய் ஏதேனும் பகுதிகளை இணைப்பது பற்றி ஏதாவது suggestions guys ?

Update # 7 : லக்கி லூக்கின் "புரட்சித் தீ" இதழின் மறுபதிப்புக் கோரி இது வரை வந்துள்ள கடிதங்கள் ஒரு கத்தை தேறும் !  சிக் பில் (மறுபதிப்பு)  ஸ்பெஷலில் 1 சிக் பில் reprint+ "புரட்சித் தீ " வெளியிட்டால் ஒ.கே.வாக இருக்குமென்று தோன்றுகிறதா? உங்களில் எத்தனை பேரிடம்  "புரட்சித் தீ" ஒரிஜினல் இதழ் உள்ளது என்று தெரிந்திட ஆவலும் கூட  !


Update # 8 : "KAUN BANEGA TRANSLATOR -  சீசன் 3" வெகு விரைவில் ! இம்முறை பங்கேற்கும் அத்தனை நண்பர்களும் சுமாராகவோ ; சூப்பராகவோ தங்கள் திறமைகளைக் காட்டி - மொழிபெயர்ப்பினை எழுதி அனுப்பி போட்டியினில் முழுமையாகக் கலந்திடல் அவசியம் !  No போங்கு ஆட்டம் please ! சென்ற போட்டிகளின் போல் 6 பக்கம் ; 7 பக்கம் என்று இல்லாமல் - இம்முறை 16 பக்கங்கள் கொண்ட சிறுகதை(கள்) தரப்படும் ; 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும் ! ! பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சலை தட்டி விடுங்களேன் !

ஞாயிறு காலை ஈரோடில் நமது ஸ்டாலில் உங்களை சந்திக்கும் ஆவலோடு ஆந்தை விழியார் ஆஜராகி இருப்பார் என்ற சேதியோடு கூடாரத்தை நாடி இப்போதைக்கு நடை பயில்கிறேன் ! Take care guys ! 

Friday, August 02, 2013

உரக்கப் பேசும் மௌனம் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் ஒரு வாரத்தின் பயணத்தை எனக்கு உணர்த்துவதே நம் பதிவுப் பக்கங்களே !'அடுத்த பதிவுக்கு நேரமாச்சு ' என்ற மணி மண்டைக்குள் ஒலிக்கும் போது தான்  அதற்குள்ளாக  7 நாட்கள் ஓடி விட்டன என்ற உணர்தல் உதயமாகும் ! இம்முறை - ஈரோடு புத்தகத் திருவிழாவும் நமது அட்டவணையில் பிரதானமாய் இருப்பதால், தாமதமின்றிப் புதுப் பதிவை தயார் செய்திடுவது முக்கியமென்று பட்டது ! 

இம்முறை எழுதவிருப்பது ஒரு ஜாலியான கதையின் அறிமுகத்தைப் பற்றி என்பதால் பணி ரொம்பவே இலகுவாகி விட்டது !  
இது நாள் வரை "கெத்தாக" உலவி வந்த மனுஷனை இப்போது "பப்பி ஷேம் " ஆகப் பார்க்கப் போவதும் ; அலட்டல் ஏதும் இல்லா, சிம்பிள் கதைக் களத்தில் ரசிப்பதும் ஒரு வித்தியாச அனுபவத்தைத் தரக் காத்துள்ளது ! வீட்டில் உள்ள பொடி டிக்கெட்களுக்கு கதை சொல்லி நாட்கள் பல ஓடி இருக்கும் பட்சத்தில், இம்முறை "மேற்கே  ஒரு  சுட்டி  புயல்" உங்களைத் தப்ப விடாது ; இதைப் படித்த கையோடு "ஒரே ஒரு ஊர்லே " என்று நீங்கள் ஆரம்பிக்கும் அவசியம் நேர்ந்திடலாம்  ! புது இதழ்கள் இரண்டுமே இன்றைய கூரியரில் கிளம்பியாச்சு ; என்பதால் நாளைய தினம் உங்கள் இல்லம் தேடி வந்திட வேண்டும் ! Happy reading in advance folks ! 

நாளைய காலை நமது ஈரோடு புத்தகத் திருவிழாவும் துவங்குகிறது ! "சுட்டி லக்கியின் " பெயரில் உள்ள அந்த "லக்" நமது விற்பனையிலும் பிரதிபலிக்கும் என்ற பிரார்த்தனைகள் எங்களுள்  ! அப்புறம் ஈரோடில் நமது ஸ்டாலில் விளம்பரப்படுத்த நண்பர்களிடம் கோரியிருந்த banner + விளம்பர டிசைன்களைத் தயாரிக்கும் KAUN BANEGA GRAPHIC DESIGNER ' போட்டிக்கு நம் நண்பர்கள் அட்டகாசம் செய்து வந்துள்ளனர் ; இதோ பாருங்களேன் படைப்புகளின் சிலவற்றை ! 
கார்த்திக் சோமலிங்காவின் உருவாக்கம் இது ! 


இவை இரண்டும் நண்பர் (ஸ்ரீரங்கம்) சிவகுமாரின் படைப்புகள்  !  

நண்பர் சதீஷ் (கோவை) செய்த முயற்சி இது !
Karthik Somalinga again....!

மேலே  உள்ள  5  டிசைன்களும் : நண்பர் L .வெங்கடேஸ்வரன் , Avadi !!!

இவை இரண்டுமே courtesy : நண்பர் "பொடியன்" பிரதீப், ஸ்ரீ லங்கா !!
ஒவ்வொருவரும் காட்டியுள்ள ஆர்வம் ; திறமை ; மாறுபட்ட சிந்தனைகள் நிஜமான பிரமிப்பைத் தருகின்றன ! அனைத்துமே தூள் கிளப்பியுள்ளன எனும் போது இதில் யாருடைய ஆக்கத்தை முதலாவதாய்த் தேர்வு செய்வது ? ; யாருடையதை இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு அனுப்புவது ? மிச்சம் மீதியுள்ள கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் ! இன்னும் சில குட்டியான சந்தோஷ updates :

நமது "குற்றத் திருவிழா" இத்தாலியில் டயபாலிக் ரசிகர் அமைப்பினில் அதீத வரவேற்புப் பெற்றுள்ளதாம் - மேற்கொண்டு 30 பிரதிகளுக்குப் பணம் அனுப்பியுள்ளனர் !! மொழி புரியாவிடினும் தம் ஆதர்ஷ நாயகனை ரசிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் மலைக்கச் செய்கிறது !

TEX பதிப்பகத்தினர் நமது சமீபத்திய 2 இதழ்களையும் பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ! TEX தீபாவளி மலரில் ஒரு சந்தோஷ ஆச்சர்யம் இடம்பெறுமென்று ஏற்கனவே எழுதி இருந்தேன் அல்லவா ? அதுவும் தற்போது உறுதியாகி விட்டது ! அது என்னவாக இருக்குமென்ற உங்கள் யூகங்கள் நவம்பர் வரை தொடரட்டுமே ?!  

சித்திரங்களும், creativity -ம் மௌனமாய் நிற்பினும், உரக்கப் பேசும் இந்தப் பதிவில் வார்த்தைகளின் பங்களிப்புக்கு அதிக அவசியமில்லை என்பதால்  ஈரோடு திருவிழாவிற்கு நல்வரவு guys ; உங்களை சந்திக்கக் காத்திருப்போம் என்ற சேதியோடு இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! Take care all !ஈரோடில் நமது ஸ்டால் - தயாராகி வருகிறது ! (போட்டோக்கள் உபயம் : நண்பர் ஸ்டாலின், ஈரோடு )

Arun Vrk : "எடிட்டர் அவர்களுக்கு வணக்கம்,

 இன்று நமது இரு பிரதிகளும் வந்தடைந்தது.... நான் இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒரு சந்தோசமான ஆச்சர்யம் எங்கள் வீட்டு  சுட்டிக்கு நமது சுட்டி லக்கி மிகவும் பிடித்து விட்டது.... தமிழ் இன்னமும் படிக்க தெரியவில்லை, ஆனால் shame , shame puppy shame என்று சொல்லிக்கொண்டே , படங்கள் மட்டும் பார்த்து சிரித்துகொண்டிருந்தாள்....

இதுவரை அவளது படங்களை இணையத்தில் போட்டது இல்லை, ஆனால் இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இரண்டு புகைப்படங்களை இந்த மினஞ்சலில் இணைத்து அனுப்பியுள்ளேன்....

நமது ஈரோடு பயணம் முழு வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.....!"லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக திருப்பூர் ப்ளூபெர்ரி !