நண்பர்களே,
வணக்கம். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளையாய் பனிப் போர்வை ; ஆளாளுக்கு ரெண்டு ஸ்வெட்டர் ; மூன்று ஜாக்கெட் என்று மாட்டிக் கொண்டு திரியும் ஐரோப்பிய நகர வீதிகள் ; 'மைனஸ் 8' ; 'மைனஸ் 9' என்று ஏதோ புது ஹாலிவுட் படப் பெயர்கள் பாணியில் வானிலை அறிக்கைகள் !ஆஹா, நம் மண்ணின் அருமை எப்போதையும் விட இது போன்ற தருணங்களில் தான் நன்றாகவே மண்டைக்கு உறைக்கின்றது ! குளிருக்கும், என் பயணங்களுக்கும் இடைப்பட்டதொரு நாள் மாலையில் பாரிஸ் நகரில் வசிக்கும் நம் நண்பர் ராட்ஜாவை சந்திக்க இயன்றது சந்தோஷமானதொரு தருணம் ! நம்மையும் நண்பரையும் பிரிப்பது 5000 மைல்கள் என்ற போதிலும் காமிக்ஸ் காதலிலோ ,இங்கே நம் வலைப்பதிவினில் அரங்கேறி வரும் சந்தோஷ அரட்டைக் கச்சேரியினில் லயித்திடுவதிலோ நமக்கு சிறிதும் சளைத்தவரல்லவே என்பது அவரோடு செலவிட்ட ஒரு மணி நேரம் எனக்கு நன்றாகவே உணர்த்திட்டது ! Thanks for the dinner Radja ! பயண புராணங்களை விட ; பனியின் பரிமாணங்களை விட ; சென்றிட்ட பணியில் கிட்டிய சங்கதிகளே உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டிடும் என்பதை அறிவேன் ; so let's get on to business !
பதிப்பாளர்களைச் சந்தித்திட நான் பயணமாவது இது முதன் முறையல்ல என்ற போதிலும், இம்முறை கிட்டிய அனுபவம் முன்னெப்போதும் கிட்டியிரா ரகம் ! நம் பயணத்தில் NBS ஒரு massive மைல்கல் என்பதை நாமறிவோம் ; ஆனால் அது எங்களுக்குத் தந்துள்ள இறகுகளின் வலிமையினையோ ; சுதந்திரத்தின் ஆற்றலையோ வார்த்தைகளில் கொணர்வது சுலபமல்ல ! இது நாள் வரை நான் சந்திக்கும் ஒவ்வொரு பதிப்பகத்திலும்- "துப்பறியும் பாணியிலான கதைகளில் புது வரவெது ? ".. "கௌபாய் தொடர்களில் புது முயற்சிகள் ஏதும் உண்டா ?"... "ரொம்ப கைப்பிள்ளைத்தனமாய் இல்லாத கார்டூன் தொடர்கள் இருந்தால் சொல்லுங்களேன் ?" என்ற பாணியில் தான் தொணத் தொணப்பேன் ! ஆனால் நம் ரசனைகளின் பரிணாம வளர்ச்சி தந்துள்ள உத்வேகம் ; NBS -ன் வெற்றி தந்துள்ள வேட்கை - ஐரோப்பியப் படைப்புகளின் முழுப் பரிமாணத்தையும் அகன்ற விழிகளோடு (?!!) பரிசீலிக்கும் தைரியத்தைத் தந்துள்ளது - முதன்முறையாக !
பிரான்கோ - பெல்ஜியப் படைப்பாளிகளையும் சரி ; அவர்கள் வழங்கிடும் படைப்புகளை நேசமாய் ரசிக்கும் வாசகர்களையும் சரி - ஒற்றை வார்த்தையில் வர்ணிப்பதென்றால் - "அசுரர்கள்" என்று சொல்லிடலாம் ! நம் மாமூலான தேடலை மாத்திரமே மையப்படுத்திக் கொண்டிராமல் ; அந்த பட்டை பூட்டிய குதிரைப் பார்வைக்கு சின்னதாய் ஒரு விடுப்புக் கொடுத்து விட்டு நம் பார்வையை அகலச் செலுத்தும் போது தான் - அந்த காமிக்ஸ் அசுரர்கள் உருவாக்கியுள்ள புதையல்களின் முழுத் தாக்கம் லேசாகப் புலனாகிறது ! எத்தனை எத்தனை கதைக் களங்கள் ; எத்தனை எத்தனை ஸ்டைல்கள் ; கற்பனைகளின் எல்லைகள் இத்தனை அசாத்தியமானவைகளா என்று வாய் பிளக்கச் செய்யும் ஒரு display !
வண்ணம் எனும் முக்கிய அம்சம் நம்மிடம் அப்போதெல்லாம் கிடையாதென்பதால் முதல் பார்வையிலேயே "இது சரிப்படாது " என்று நான் ஓரம் கட்டிய கதைகளை - புதிய பார்வையோடு இன்று தரிசிக்கும் போது சுரீர் என்று நிஜங்கள் சுடுகின்றன ! "நம் மாமூலான ரசனைக்கு அப்பாற்பட்டது " என்று முன்பு ஒதுக்கிய தொடர்களை - இப்போது நம் புதிய ரசனைகள் அரவணைத்துக் கொள்ளுமோ ? என்ற கேள்வியினை எனக்குள்ளே எழுப்பிடும் போது கிட்டிடும் பதில்கள் வித்தியாசமானவை ! "அழகான நாயகர்களோ ; லட்சணமான மாந்தர்களோ இந்தப் பாணியிலான ஓவியங்களில் இல்லையே " என்று காரணம் சொல்லி மறந்திட்ட பல தொடர்கள் அங்கே சில லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிடுவதைப் பார்க்கும் போது ; நமது எல்லைகளும் விரிந்திருப்பது நினைவுக்கு வருகின்றது !
எத்தனை வித விதமான உலகங்களைப் படைக்க முயற்சிகள் செய்துள்ளனர் என்பதைப் பார்க்கும் போதே மூச்சிரைக்கின்றது ! உலக யுத்தத்தின் ரத்தம் தோய்ந்த பின்னணிகள் ; 1920 ல் அமெரிக்காவில் நிலவிய மாபியா குற்றக் கும்பல்களின் பின்னணிகள் ; எங்கோ பிழைப்புத் தேடிச் செல்லும் மாந்தர்களின் இழப்புகளைப் பட்டியிலிடும் கதைகள் ; வரலாற்றையே ; மத நம்பிக்கைகளையே புரட்டிப் போட எத்தனிக்கும் அசாத்தியக் கற்பனைகள் ; முதுமையை ; உறவுகளுக்குள் அது கொணரும் மாற்றங்களை சித்தரிக்கும் கதைகள் ; Concept series என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நம்பரில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கதைகள் ; ஆனால் இறுதியினில் அத்தனை கதைகளுக்குமொரு ஒற்றுமையான மையப் புள்ளி இருந்திடுவது ;இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம் அவர்களது கற்பனைகளில் பூத்த புதையல்களின் பட்டியலை !
அதற்காக அவர்களது அத்தனை படைப்புகளும் அட்டகாசம் என்றும் சொல்லிட மாட்டேன் ; அபத்தமாய்த் தோன்றியதொரு பூதம் - ராட்சச மிருகங்கள் - பாணியில் ஒரு கதைத் தொடரைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தேன் ! 'இது எங்களது bestsellers பட்டியலில் உள்ள தொடராக்கும்; இது வரை மொத்தம் 30 லட்சம் ஆல்பங்கள் இந்தத் தொடரில் விற்பனை ஆகியுள்ளது' என்று அவர்கள் சொல்லிய போது - 'ஹி..ஹி' ..தான் பதிலாக்கிட இயன்றது எனக்கு ! இது போன்ற கண்மூடித்தனமான காமிக்ஸ் நேசம் எதற்கு பயனாகிறதோ இல்லையோ ; அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது! ஒரு தொடரின் கருவே - "WHAT IF ..?" என்பதே !
- நிலவில் முதலில் கால் பதித்தது அமெரிக்கர்களாக இல்லாது ரஷ்யர்களாய் இருந்திருந்தால் - வரலாற்றின் போக்கு எப்படி மாறி இருக்கும் ?
- அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி கொலை செய்யப்படாது போய் இருந்தால்..?
இது போன்ற "what if ?" கேள்வியோடு ஒரு 7/8 ஆல்பங்கள் அத்தொடரில் ! இந்தப் பரீட்சார்த்தமான தொடர்களின் வெற்றிகள் ஒரு நாளும் உத்திரவாதமானதல்ல ! "வம்பெதற்கு ?" என்று ரிஸ்கில்லாமல் லக்கி லூக்களையும், லார்கொ வின்ச்களையும் போட்டு கல்லா கட்டி விட்டுப் போக ஒரு சுலப மார்க்கமும் உண்டெனும் போது , இது போன்ற விஷப் பரீட்சைகளை மேற்கொள்ளும் அவர்களது guts அசாத்தியமானது என்று தான் சொல்லிடத் தோன்றுகிறது ! வாய் பிளந்து அவர்களது காமிக்ஸ் அணிவகுப்பை பார்த்திட்ட போது எனக்குள் பல வித சிந்தனைகள்...! 'ரசனைகளில் நாம் ஒரு படி முதிர்ச்சியடைந்து விட்டோமென மார் தட்டும் வேளையில் - அவர்கள் நமக்கு கண்ணுக்கே எட்டாத தொலைவிற்குப் போய் நிற்கிறார்களே என்ற ஆற்றமாட்டாமையா ? இவற்றை நாமும் ரசிக்க முயற்சிக்கும் நாள் அத்தனை தொலைவினில் இல்லை என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், நாம் ஒரு அடி பாய்வதற்குள் அவர்கள் 16 அடி பாய்ந்திருப்பார்களோ என்ற பதட்டமா ? அல்லது ...புதுப் பாணியிலான கதைகளை ரசிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையினில் நமது வழக்கமான அதிரடிக் கதைகளை உதறிடாது - இரண்டுக்கும் ஒரு நடுப் பாதையினை உருவாக்குவது சாத்தியப்படுமா என்ற குழப்பமா ? இவற்றில் எது என்னுள் ஓடிடும் சிந்தனைகளின் நிஜமான பிரதிபலிப்பு ? - விடை தெரியாது தலையைச் சொறிகிறேன் ! நாம் இது நாள் வரை தரிசித்து வந்திருப்பது காமிக்ஸ் எனும் பனிக்கட்டியின் ஒரு நுனிப் பகுதியினை மாத்திரமே ; இன்னமும் காத்திருப்பது ஒரு இமாலய மலையளவு என்ற உணர்வு உள்ளே இறங்கிடும் போது - விவரிக்க இயலா சிலிர்ப்பு !
அதே சமயம் கடவுளின் வரம் பெற்றதொரு தேசம் ஒரு தலைமுறையாய் உருவாக்கியதை - ஒரே நாளில் நான் தமிழுக்குக் கொணரப் போகிறேன் பேர்வழி என்று மார் தட்டினால் அது காமடி ஆகி விடும் என்பதையும் புரியாதில்லை ! வாங்கி வந்திருக்கும் புது தொடர்களை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துப் பரிசீலனை செய்து பார்க்கும் பணியினை துவக்குவதை முதல் காரியமாக வைத்துக் கொண்டு, சிறுகச் சிறுக நம் களத்தை விரிவாக்க முயற்சிகள் தொடங்கிடுவோம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன் ! ஒ.கே. ஆகிடும் புதிய தொடர்களை பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துகிறேன் !
அதற்கு முன்பு ரொம்பவே அவசியப்படும் சில நிர்வாக முன்னேற்றங்களை நடைமுறைபடுத்துவது priority # 1 ! உதாரணமாய் புதிய டெக்ஸ் இதழினை சந்தாவிற்கு அனுப்பிடுவதில் அலுவலகத்தில் தனி ஆளாக 10 நாட்களாய் செயல்பட்டு வரும் ஸ்டெல்லாவிற்கு நேர்ந்த சிரமங்களைச் சொல்லிடுவேன். ராதாக்ருஷ்ணன் சென்னை புத்தகத் திருவிழாவில் உள்ளபடியால், புதிய சந்தாதாரர்களையும் ; 2012-ன் மீத பண வரவு உள்ள சந்தாதாரர்களையும் ஒருங்கிணைத்து புதிய பட்டியல் தயார் செய்வதில் சிரமப்பட்டதால் தாமதம் நேர்ந்துள்ளது. செவ்வாய் இரவு நான் சற்றே login செய்த போது தான் சந்தா பிரதிகள் இன்னமும் அனுப்பப்படாது இருப்பது தெரிய வந்தது ! பதறிப் போய் ஸ்டெல்லாவிடம் பேசி, பயந்த சுபாவம் கொண்ட அந்த சின்னப் பெண்ணிற்கு தைரியமூட்டி , வேலை வாங்கிட அவசியமாகிப் போனது. இது போன்ற சிக்கல்களைக் களைய ; வரும் நாட்களில் சந்தாக் கணக்குகளை கணினி மூலம் நிர்வகிக்க ப்ரோக்ராம் ஒன்று உருவாக்கச் சொல்லிட எண்ணியுள்ளேன் ! I .T . -ல் செயல்பட்டு வரும் நண்பர்கள் இது தொடர்பாய் ஏதேனும் technical inputs தருவதாக இருப்பின் நமக்கு மின்னஞ்சல் அனுப்பிடலாம் !
அப்புறம் அந்த "Kaun Banega Translator" சங்கதிக்கு நிறையவே ஜீவனுள்ளது ! வரும் திங்கட்கிழமை நான் சிவகாசி திரும்பிய பின்னே கூரியரில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய பக்கங்கள் அனுப்பப்படும் ! முகவரியும் சேர்த்து அனுப்பியுள்ள நண்பர்களுக்கு மாத்திரமே இது வந்து சேரும். கடல் கடந்து வசிக்கும் நண்பர்களுக்கு மாத்திரமே pdf file !
இறுதியாய் - இந்தாண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவினைப் பற்றி...! ஒற்றை வரியில் சொல்வதென்றால்...' அற்புதமான விற்பனை !! ...சென்றாண்டின் விற்பனைத் தொகையினை விட இம்முறை 2 மடங்கு கூடுதல் ! இத்தனைக்கும் இம்முறை நம்மிடம் கையில் இருந்த back issues எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே ; விழா நடந்திட்ட நாட்களும் குறைச்சலே ! நம் பயணத்திற்கு உற்சாகம் மாத்திரமே பெட்ரோல் ஆகிடாது ; புன்னகைக்கும் தேசப் பிதாவின் படத்தினை சுமந்து வரும் கரென்சியும் அத்தியாவசியம் என்பதால் - தேங்கிக் கிடந்த பிரதிகள் பணமாகிட்டது எங்களுக்கு பெரும் உதவியாகி விட்டது ! Thanks a ton everybody !!
வசூலான பணத்தை ராயல்டி வகைக்காக வங்கி மூலம் சுடச் சுட அனுப்பி வைத்து 2013 -ன் முதல் 5 மாதக் கதைகளை கையோடு வாங்கி வந்து விட்டேன். என்னோடு பயணம் செய்தவர்கள் லார்கோவும் ; ஷெல்டனும் ; டைகரும்; மதியில்லா மந்திரியாரும் ; சிக் பில்லும் ! மார்ச் மாதம் வரவிருக்கும் லார்கோவின் 2 பாக த்ரில்லருக்கு ஒரு பெயர் சூட்டுப் போட்டியினை வைக்கும் நேரமும் வந்து விட்டது. விளம்பரத்தில் "action ஸ்பெஷல்" என்று பெயரிட்டிருந்தேன் ; ஆனால் அதை விட 'பளிச்' ரகத்தில் பெயர் கிட்டினால் மாற்றிடுவோமே ! So, start music !
"சிகப்பாய் ஒரு சொப்பனம் " - டெக்ஸ் இதழுக்கான உங்களது reviews + வாசகர் கடிதம் பகுதியினில் டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதியிருந்தது பற்றிய உங்களின் எண்ணவோட்டங்களையும் இங்கேயே பதிவிடலாமே - கடந்த பதிவு 370+ பின்னூட்டங்களோடு ரொம்பவே நீண்டு விட்டது ! சின்னதாய் ஒரு தகவலும் கூட - டெக்சின் அட்டைபடம் இத்தாலிய ஒரிஜினலை inspiration ஆக வைத்துக் கொண்டு நம் ஓவியர் உருவாக்கியது ! இத்தாலிய அட்டைப்படங்கள் வெறும் லைன் டிராயிங்கில் வண்ண சேர்க்கை செய்திடும் முறையில் உருவாக்கப்படுபவை ; இதனில் முகங்களில் , உடல்களில் ஒரே flat ஆன கலரிங் மாத்திரமே சாத்தியப்படும். நாம் பெயிண்டிங் போடும் போது - லைட் & டார்க் effects கொணர்ந்திட இயலும். இது முழுக்க முழுக்க நம் ஓவியரின் கைவண்ணமே !
P.S : "கிராபிக் நாவல் ; புதுப் பாணி விஷப் பரீட்சை கதைகள் என்று இறங்கி விட்டால், நம் வழக்கமான நாயகர்கள் அம்பேல் தானா ?" என்ற சந்தேகமே வேண்டாம் ! மாற்றம் ; முன்னேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி வெற்றி பெற்ற தொடர்களை மூட்டை கட்டி விடும் எண்ணமெல்லாம் நிச்சயம் இல்லை. புதுப் பாணிகளில் மிகச் சிறப்பாய் உள்ளவற்றை மட்டும் முயற்சிக்க முனைவோம் ; சிறுகச் சிறுக !