நண்பர்களே,
வணக்கம். ஏப்ரலும் நெருங்கியிருக்க, நண்பர் பழனிவேலின் நினைவலைகள் மனதில் நிழலாடுகின்றன ! அவரது ஆதர்ஷ XIII-ன் பிதாமகர் வில்லியம் வான்ஸ் போன இடத்துக்கே பழனியும் புறப்பட்டுப் போய் ஓராண்டாகிறது ! அதன் பின்பான 365 நாட்கள் ஏதேதோ மும்முரங்களில், நகர்ந்து விட்டுள்ளன தான் ! இங்கே சின்னதாயொரு முரண் உணர்வு எனக்கு ! ஓராண்டுக்கு முன்பாய் வைத்தியம் பார்க்கும் பொருட்டு சென்னைக்கு வந்து இறங்கிய கையோடு, மனுஷன் போன் அடித்து எனக்கு தைரியம் சொன்னதெல்லாம்( !!!) ஏதோவொரு யுகத்து நிகழ்வாய்த் தோன்றுகிறது ! ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னே, ஒரு பத்து மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஈரோடு வரைக்கும் பைக்கிலேயே பயணம் செய்து, முகம் நிறைந்த புன்னகையோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த நாளோ, நேற்றைக்குப் போல் படுகிறது ! Wonder why ???
அதன் பின்பாய் சந்தித்த போதெல்லாம் ; கடுதாசி போடும் போதெல்லாம் ; இங்கே பின்னூட்டமிடும் போதெல்லாம் - பன்னிரெண்டுக்கும், பதினான்குக்கும் நடுப்பட்ட அந்த நம்பரையே ஜெபம் போல மனுஷன் உச்சரித்துக் கொண்டே இருந்ததை நாமறிவோம் ! And நிறைய தருணங்களில், காதில் தக்காளிச் சட்னி கசியும் அளவுக்கு அவரது XIII காதல் ரீங்காரம் தொடர்ந்ததில் எனக்கு நிறையவே அயர்வு ஏற்பட்டிருந்ததை மறுக்க மாட்டேன் ! "XIII-ஐ தாண்டியுமொரு லோகம் உள்ளது பழனி...ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க !" என்றும் அவருக்கு கடுதாசி எழுதியதும் உண்டு தான் ! ஆனால் போன மே மாதத்தில் டாக்டர் ராஜா சாருடன், கரூருக்கு அருகிலுள்ள அவர்தம் வீட்டுக்குப் போய்ப் பார்த்த போது தான், XIII என்பது ஒரு கதை ; காமிக்ஸ் ; புனைவு என்ற நிலையெல்லாம் தாண்டி, பழனிக்கொரு உணர்வாகவே மாறியிருப்பதைப் புரிந்திட முடிந்தது ! அவர் வீட்டில், திரும்பிய பக்கமெல்லாம் XIII - ஏதோவொரு ரூபத்தில் ! கண்மூடித்தனமான அந்த நேசத்தினை பார்த்த போது - அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரிந்திருக்கவில்லை எனக்கு - simply becos புரியாத ஐரோப்பிய மொழியில் வெளியாகியிருந்த XIII ஆல்பங்களைக் கூட தனது சேகரிப்பில் அடுக்கி வைத்திருந்தார் ! அவற்றின் பின்னே தென்பட்ட பழனியின் காமிக்ஸ் காதலும் புரிந்தது ; அதனுள் முடங்கி கிடந்த பணத்துக்கு நிச்சயம் வேறு நல்ல உபயோகங்கள் இருந்திருக்க முடியும் என்பதுமே புரிந்தது தான் ! Anyways, அவர் உசிரோடு இருந்த வேளையில் நமது ரேடாரில் இருந்திருக்கா அந்த XIII Spin-off கதைகள், அவரது பெயரைச் சொல்லும் விதமாய் ஒவ்வொரு எப்ரலிலும் வெளிவர உள்ளது தான் விதியின் விளையாட்டு போலும் ! ஏக நேரத்தில் சந்தோஷமும், சங்கடமும் சூழ்கிறது பழனி - இந்த இதழின் திட்டமிடலில் !!
இதோ - "எந்தையின் கதை" preview படலம் ! XIII தொடரின் மாந்தர்களை எனக்கு ஞாபகம் இருப்பதைக் காட்டிலும் உங்கள் ஒவ்வொருவருக்குமே சிறப்பாய் நினைவிருக்குமென்பது உறுதி ! So "ஜானதன் ப்ளை இன்னார்...இன்னார்...அவர் குலமிது, கோத்திரமிது' என்ற அறிமுகங்களெல்லாம் அனாவசியம் தானே ?!
XIII தொடரின் வெவ்வேறு 13 கதை மாந்தர்களைத் தேர்வு செய்து, வெவ்வேறு படைப்பாளிகளிடம் அவர்களை ஒப்படைத்து, ஆளுக்கொரு பின்னணிக் கதையை உருவாக்கச் செய்திருந்தனர் - இந்த spin-off வரிசைக்கு ! பிதாமகர் வான் ஹாம்மின் மேற்பார்வையில் இம்முயற்சி நடந்திருப்பினுமே, ஒவ்வொரு கதாசிரியருக்குமான தனிப்பட்ட பார்வைகள் நாம் பழகியிருந்த XIII template-க்கு சற்றே அந்நியப்பட்டு நிற்கப் பார்த்திருக்கிறோம் ! And இந்த spin-off வரிசையானது மெயின் தொடருக்கு இணையாய்ப் பேசப்படாது போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது ! ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட இந்த "XIII மர்மம்" தொடரினில், சிலவற்றுக்குக் கிட்டியிருக்கும் treatment - ஒரு சபாஷ் போட வைக்காதும் இல்லை தான் ! காத்திருக்கும் "எந்தையின் கதை" அந்தச் சிறுபான்மையில் ஒன்று ! ஒரு நெடும் தொடருக்குள் பின்னிக் கிடக்கும் ஒரு complex கதாப்பாத்திரத்துக்கு நெருடல்களில்லா ட்ரீட்மெண்ட் தருவது சுலபக் காரியமே அல்ல தான் - moreso ஒரிஜினலுக்குக் கதை எழுதியது ஒரு ஜாம்பவான் எனும் போது ! ஆனால் இம்முறை புதுக்கதாசிரியர் லுக் ப்ரன்ஷ்விக் நிச்சயம் சோடை போயிருக்கவில்லை ! ரொம்பவே இயல்பானதொரு கதை....நம்ப சிரமங்கள் தந்திடா ஒரு மர்ம முடிச்சு ; ஜானதன் ப்ளைக்கு அழகானதொரு பின்னணி என்று தந்து, மெயின் கதையுடனான இணைப்பினை லாவகமாய் கையாண்டுள்ளார் ! So பழனியின் பெயரைச் சொல்லி ஒரு அழகான வாசிப்பு அனுபவம் நமக்கு வெயிட்டிங் ! இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :
துவக்க நாட்களது XIII மொழிபெயர்ப்புகளின் போது நேர்ந்த பிழைகள் சமீப பொழுதுகளில் தொடர்ந்திடலாகாதென்பதில் ரொம்பவே கவனமாய் இருந்து வருகிறேன் ! So "எந்தையின் கதை" இயன்றமட்டுக்கு ஒரிஜினலை ஒட்டிப் பயணித்திடும் வரிகளுடன் இருக்கவுள்ளது ! அட்டைப்படமோ - ஒரிஜினல் சித்திரத்துடன் ; வண்ணப் பின்னணியில் மாத்திரமே மாற்றங்களுடன் !
இது XIII மர்மம் தொடரினில் நாம் வெளியிடும் ஆறாவது ஆல்பம் ! இன்னமும் 7 எஞ்சியுள்ளன - up and down அனுபவங்களைத் தரும் ஆற்றலோடு ! ப்ளஸ் தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான ஜோன்ஸுக்கென ஒரு 3 பாக spin-off வேறு புதிதாகத் தயாராகி வருகிறது ! And மெயின் தொடரினில் ஏற்கனவே 1 புது ஆல்பம் காத்துள்ளது + அடுத்தாண்டு வரவுள்ள இன்னொரு ஆல்பத்தோடு இரண்டாம் சுற்றை நிறைவு செய்திட உள்ளார்களாம் ! So அடுத்த ஒரு டஜன் ஆண்டுகளுக்காவது பழனிக்கான tributes தொடர்ந்திட வழிவகையுள்ளது ! மெயின் தொடரும் அதற்கு மத்தியில் "மூன்றாம் cycle" என புறப்படும் பட்சத்தில், of course there will be more !
Moving on, "உயிரைத் தேடி" பணிகளின் இறுதி stretch ஓடி வருகின்றன ! நாளை மறுநாள் black & white பதிப்பானது அச்சுக்குச் செல்கிறது ! And அடுத்த வாரயிறுதியனில் வண்ணப் பதிப்பும் பிரிண்ட் நோக்கிப் பயணிக்கத் தயாராகிட வேண்டும் - fingers crossed ! நமது ஆன்லைன் புத்தக விழாவின் மெயின் பார்ட்டிக்களே இவர்கள் தான் எனும் போது - இவர்களை உருப்படியாய் தயார் செய்து விட்டாலே ஒரு பெரும் சுமை தோள்களிலிருந்து இறங்கியிருக்கும் ! அதன் பின்பாய் பாக்கி இதழ்களை போட்டுத் தாக்க வேண்டியது தான் ! And இங்கே சின்னதாயொரு தகவலுமே :
புத்தக விழா கேரவனானது மறுபடியும் புறப்பட தயாராகியுள்ளது - இம்முறை விழுப்புரம் & திருவண்ணாமலை நகர்களை நோக்கி !!
**மார்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை விழுப்புரத்திலும்
**மார்ச் 27 to ஏப்ரல் 6 வரை திருவண்ணாமலையிலும்
விழாக்கள் துவங்கிடவுள்ளன ! So நம்மாட்கள் இங்கும், அங்கும் பிசியாக இருப்பர் எனும் போது ஆன்லைன் புத்தக விழா ஏப்ரல் 1 & 2 தேதிகளுக்கு சாத்தியமாகிடாது ! Will have to be ஏப்ரல் 15 & 16 ! மறுக்கா fingers crossed !!
இரு இலக்குகளுமே (நமக்கு) புத்தக விழா firsts என்பதால், என்ன மாதிரியான வரவேற்பு கிட்டுமென்று கணிக்க தெரியவில்லை ! In fact விழுப்புரத்துக்கே இது முதல் புத்தக விழாவாம் ! எப்படியாயினும் மக்களின் பார்வைகளில் பட்டிடக் கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகளை, வரவு-செலவுகளுக்கு அப்பாற்பட்ட அழகான விஷயமாகவே நாம் பார்த்திடுகிறோம் ! வெறுமனே மகசூல்களை மட்டுமே கவனிக்கும் பட்சத்தில், சிறு நகரங்களின் ஒரு சில விழாக்கள் வறண்டு தென்படலாம் தான் ; ஆனால் ஒரு நெடும் பயணத்திற்கு சகல திக்குகளிலிருந்து கிட்டும் சகாயங்களும் அவசியம் என்பதால் இந்த அனுபவங்களையும் உற்சாகமாய் அரவணைத்து வருகிறோம் !
And தொடர் சங்கிலியாய் புத்தக விழாக்கள் அரங்கேறி வரும் சூழலில், கொஞ்சமாய் கைவசமுள்ள இதழ்களின் பலத்தினை அதிகம் பண்ண வேண்டியுள்ளது ! Of course சொற்ப விலைகளிலான மினி காமிக்ஸ் அதற்கு உதவிடும் தான் ; ஆனால் லக்கி லூக் ; மாயாவி & 'தல' டெக்ஸ் தான் சகல விழாக்களின் பிரதம showpieces எனும் போது, அவர்களின் கையிருப்புகளில் இன்னும் கொஞ்சம் எண்ணிக்கைகளைக் கூட்டிட வேண்டியுள்ளது ! புது லக்கி லூக் & புது டெக்ஸ் ஆல்பங்கள் ஒருபக்கம் வெளிவந்து கொண்டுள்ளன என்றாலும், கையிருப்பின் எண்ணிக்கையினை 'டக்'கென்று உசத்த மறுபதிப்புகளே அருமருந்து ! So மேற்படி 3 தொடர்களிலும் சரி, இன்னும் ஓரிரு prime நாயகர்களின் தொடர்களிலும் சரி, நீங்கள் பார்த்திட விரும்பும் மறுபதிப்புகள் பற்றிய பரிந்துரைஸ் ப்ளீஸ் ? அதற்காக "ஜான் மாஸ்டர்..இரட்டை வேட்டையர்.....என்ற ரேஞ்சுக்குப் போக வேணாமே ப்ளீஸ் ? கோப்புகளை படைப்பாளிகள் ரெடி செய்திடும் வரையிலும் அவற்றிற்குள் தலைநுழைக்க சாத்தியங்கள் கிடையாது ! நான் கோரிடுவது, இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ் ?! இவை சகலமும் டிஜிட்டல் கோப்புகளாய் இருப்பதால், மறுபதிப்புச் செய்வது சுலபம் ! So suggestions please ?
Bye all...V காமிக்சின் TEX vs ZAGOR இதழினை பராக்குப் பார்க்கப் புறப்படுகிறேன் ! இள ரத்தங்களுடன், டீம் V அழகாய் துளிர் விட்டு வருவது ரொம்பவே மனநிறைவைத் தருகிறது ! மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருமே under 35 !! அவர்களின் லேட்டஸ்ட் பணியை பார்க்கவும், அவசியப்பட்டால் ரோசனைகள் நல்கவும் நடையை கட்டுகிறேன் ! V காமிக்ஸ் அடுத்த 3 மாதங்களின் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இன்றைக்கே அனுப்பிடலாமே - ப்ளீஸ் ?
Rs .300 for Lion & Muthu subscribers !
Rs .400 for newcomers !
See you around ! Enjoy the Sunday !