நண்பர்களே,
வாணவேடிக்கைக்கு சிவகாசி தான் பிரசித்தம் என்று நினைத்தேன்...ஆனால் "மறுபதிப்பு" என்ற topic துவங்கியது முதல் உங்களின் வரவேற்பு நிஜமாகவே அதிரடி ரகம் தான்!...ஏராளமான பதிவுகள்...ஈ-மெயில்கள் ;ஐடியாக்கள் ;நேற்றைக்குப் பின்னிரவில் செய்த பதிவுக்கு அதற்குள் 700 + கண்ணோட்டங்கள் என்று அசரச் செய்யும் உற்சாகத் தோரணம் ! Phew !! நிஜமாகவே மண்டையைப் பிறாண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் ...உங்கள் ஆர்வத்துக்கு ஈடு கொடுக்க வழிகள் தேடி !
தற்சமயம் நேரடி விற்பனை என்பதால்...நமது விற்பனை எண்ணிக்கை இன்னும் சற்றே கூடிட வேண்டும். ஆங்காங்கே உள்ள பெரிய நகரங்களில் உள்ள தரமான புத்தகக் கடைகளுக்கு இதழ்கள் அனுப்பிடவும் முயற்சித்துக் கொண்டுள்ளோம் ! அது நடைமுறை ஆகிட்ட பின்னே இன்னும் சற்றே தைரியமாக செயல்பட்டிடலாம் !
அது தவிர எங்களது தயாரிப்பு ஏற்பாடுகள் இப்போது தான் சிறுகச் சிறுக இந்தப் புதிய பாணி...கம்ப்யூட்டர் மூலம் வண்ணச் சேர்க்கை ...வண்ண அச்சு ....என்பதற்குப் பரிச்சயமாகி வருகின்றன ..! "திடும்" என ஒரே நாளில் இதழ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது அவர்கள் தலையில் நியாயமற்ற சுமையை ஏற்றியது போலாகிடும் ! So எங்களது backroom strength சற்றே பலப்படுத்தி விட்டு நம் வேகத்தை அதிகரிப்பது சரியாக இருந்திடும் என நினைக்கிறேன் !
எல்லாவற்றிற்கும் மேலாக, காற்றில் கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிராமல்...சொல்வதை இம்முறை தப்பாமல் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் என்னுள் ! "வந்தோமா..வீராவேசமாய் ரெண்டு பஞ்ச் டயலாக் விட்டோமா '..அப்புறம் காணமல் போனோமா என்ற கதையே இனி வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கிறேன் !
ஒன்று மட்டும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் ! இவ்வருடத்தின் நடுப்பகுதி வரை சற்றே பொறுமை காட்டுங்கள் guys! உங்களை திக்குமுக்காடச் செய்யும் அறிவிப்புகள்..அதிர்வேட்டுக்கள் தயாராகி வருகின்றன ! நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் !
அப்புறம் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் அடுத்த மறுபதிப்பு என்னவென்று இப்போது இங்கே பார்த்தாலென்ன ?
"ஸ்பெஷல்" இதழ்களாக க்ளாசிக்ஸ் வெளியிடுவது பற்றிய உங்களின் சிந்தனைகள் நிஜமாகவே சூப்பரானதொரு concept தான்..!
So அடுத்த மறுபதிப்பு - எனது லிஸ்டிலும் சரி ..உங்கள் எவரின் லிஸ்டிலும் சரி. வந்திடாத 3 இதழ்களின் ஒரு combo !! நமது ஆரம்ப திகில் காமிக்ஸின் இதழ் 1 ; 2 & 3 - மூன்றையும் ஒன்றிணைத்து "திகில் க்ளாசிக்ஸ் " என்ற பெயரில் அதே ஒரிஜினல் (பெரிய) சைசில் வெளியிட நினைத்துள்ளேன் !
திகில் இதழ் # 1 முன் அட்டை |
1986 ஜனவரி..பிப்ரவரி & மார்ச்சில் இந்த இதழ்கள் பெரிய சைசில் Rs 3 விலையில் வெளியாகின ! ஒரு முழுநீளத் திகில் சித்திரக் கதை....சின்னச் சின்ன 4 -6 பக்கத் திகில் சிறுகதைகள்...அமானுஷ்ய சங்கதிகள்..கட்டுரைகள் என்று ஒரு வித்தியாசமான கலவையாக இந்த இதழ்கள் அமைந்திருந்தன !
பெரிய சைசுக்கும் சரி...மூன்று ரூபாய் விலைக்கும் சரி ...இந்தக் கதம்பம் போன்ற கதைக் கலவைக்கும் சரி..அப்போது ரொம்பவே சுமாரான வரவேற்பு ! So 'துண்டைக் காணோம்' 'துணியைக் காணோம்' என்ற கதையாக டபக்-கென்று இதழ் நம்பர் நான்கு முதல் நமக்குப் பரிச்சயமான முழுநீளக் கதை என்ற பார்முலாவுக்கே திரும்ப வேண்டியதாகிப் போச்சு ! இன்னமும் கூட அப்போதைக்கு வந்த சில வாசகர் கடிதங்கள் எனக்கு நினைவில் உள்ளது !! "பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் துண்டும் துக்கடாவுமாய் இதழ் உள்ளதாய் கூட ஒரு நண்பர் எழுதி இருந்தார் ! அந்தக் காலத்தில்..அந்த வயதில் ஒரு சறுக்கலை சமாளிக்கும் உறுதி அவ்வளவாய் கிடையாதென்பதால் ரொம்பவே தளர்ந்து போனேன் !
பின் அட்டை |
அதிலும், திகில் இதழ் 1 ல் வந்திட்ட ஜெட் வீரர் லோகனின் அசாத்தியத் த்ரில்லர் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை..! எனது ஆல்-டைம் favorite கதைகளில் அதுவும் ஒன்று ! Fleetway நிறுவனத்தின் வெளியீடான இந்தக் கதை "Seven Went to Sirius" என்ற தலைப்பில் 1962 ல் வந்திட்டது !
முதல் முறை நான் இந்தக் கதையைப் படிக்க வாய்ப்புக் கிட்டியது நான் 10th விடுமுறையின் போது என் தந்தையுடன் டெல்லி சென்றிட்ட போது ! போகும் ஊரில் எல்லாம் நிறையப் புத்தகக் கடைகளைப் பரிச்சயம் செய்திருக்கும் வழக்கம் என் தந்தைக்கு உண்டென்பதால் இஷ்டத்துக்கு புத்தகங்களை உருட்ட அனுமதிப்பார்கள் ! Connaught circus க்கும் ஜன்பத்-க்கும் இடையில் உள்ளதொரு பெரிய புத்தகக் கடையின் பரணில் இருந்து பழைய ஸ்டாக் காமிக்ஸ்களை நான் துளாவும் போது சிக்கியது இந்த இதழ் ! பல ஆண்டுகள் கழித்து அதே கதையை மொழிபெயர்க்கும் பொது ரொம்பவே ரசித்து எழுதியது நினைவில் உள்ளது ! இது தவிர இதழ் # 3 -ல் வந்திட்ட "பயங்கரப் பூனைகள்" கதையும் அட்டகாச விறுவிறுப்பு ! முதல் முறையாக இந்த இதழ்களைப் படிக்கப் போகும் நண்பர்கள் மெய்மறக்கப் போவது உறுதி !! மே இரண்டாம் வாரத்தில் இதழ் கிடைத்திடும் !
இந்த "திகில் க்ளாசிக்ஸ்"மறுபதிப்பு எனக்கும் சரி..உங்களுக்கும் சரி..நிச்சயம் நிறைவானதொரு இதழாக இருக்குமென்ற ஆசையில் இப்போதைக்கு கும்பகர்ணனின் லோகத்தைத் தேடிச் செல்கிறேன் !மீண்டும் ஒரு பதிவோடு சந்திக்கும் வரை ..adios people !