Powered By Blogger

Tuesday, December 24, 2013

ஒரு நல்லுள்ளமும் ....ஒரு நூலகமும்...!

நண்பர்களே,

வணக்கம். சமீபமானதொரு குட்டி நிகழ்வை உங்களோடு பகிர்ந்திட எண்ணி இருந்தேன் ; எனது பயண மும்முரத்தில் மறந்தே போச்சு ! நமது நெடு நாளைய சென்னை வாசக நண்பரொருவர் நமக்கொரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் ; 'தன்னிடம் சுமார் 500 முந்தைய இதழ்கள் (முத்து காமிக்ஸ் ; லயன் ; திகில் ; மினி-லயன் எனக் கலந்து) உள்ளதாகவும், அதனை தற்போது விற்பனை செய்திட நினைப்பதாகவும் ;  அவற்றை விற்பனை செய்திட உதவிட இயலுமா ?' என்றும் அதனில் வினவி இருந்தார் ! முந்தைய இதழ்களுக்கு ஆங்காங்கே கோரப்படுவதாய்ச் சொல்லப்படும் அசகாய விலைகளை இந்த நண்பரும் மனதில் வைத்திருப்பாரோ என்ற ஒரு விதக் குழப்பத்தோடு பதில் அனுப்பி இருந்தேன் - "Sure ...இதற்கென நீங்கள் எதிர்பார்க்கும் விலை என்னவோ ? " என்ற கேள்வியோடு ! 

துரிதமாய் வந்த பதில் - "இவற்றை எவரேனும் காமிக்ஸ் பிரியர்களின் சந்தோஷத்துக்கு பயனாகும் விதத்தில் தான் நான் பார்க்கிறேன் ; உங்களுக்கு நியாயமாய்த் தோன்றும் ஒரு விலை கொடுத்தாலே போதும் !" என்று பதில் அனுப்பி இருந்தார் - தன வசமிருந்த இதழ்களின் பட்டியலோடு ! பொருள் நம் தயாரிப்பாய் இருப்பினும், இன்று சந்தையில் demand இருப்பதன் பொருட்டு - இதனை ஒரு வியாபாரமாக்கும் போக்கு எனக்கு என்றுமே பிடித்தமில்லா சங்கதி என்பதால் நானும் பெரிதாய் ஒரு premium விலையினை சமர்ப்பிக்கவில்லை ! எனக்கு ஒ.கே.வெனப்பட்டதொரு நம்பரை நான் முன்வைக்க - துளி தயக்கமும் இன்றி அதனை ஏற்றுக் கொண்டு நண்பர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்த நாட்களில் நம் பணியாளர் அவரிடமிருந்து இதழ்களைப் பெற்று சிவகாசிக்கு அனுப்பிட - அற்புத நிலையில் இருக்கும் ஒரு காமிக்ஸ் பெட்டகம் என் கைக்கு வந்து சேர்ந்தது ! 

இவற்றை ஏதேனும் ஒரு நூலகத்திற்கு ஒப்படைப்பது தான் எனது ஆரம்ப சிந்தனையாய் இருந்து வந்தது ; நண்பரிடமும் கூட அதனையே தான் சொல்லி இருந்தேன் ! ஆனால் சமீப நாட்களில் எனுக்குள் எழுந்த சின்னதொரு மாற்றுக் கருத்து - அவ்விதழ்களை நம் அலுவலக மாடியில் உள்ள சிறு காலி இடத்தினில் நம்  வாசகர்களின் பொருட்டே ஒரு பிரத்யேக LIBRARY ஆக உருமாற்றம் செய்யச் செய்தால் என்னவென்று நினைக்கச் செய்தது ! நம் அலுவலகம் வரும் நண்பர்கள் இங்கு அமர்ந்து அவற்றைப் படித்து விட்டுச் செல்லலாம் தானே ? நிச்சயம் அவை இரவலோ ; பண்டமாற்று ; Xerox எடுக்கும் வசதிகளுக்கோ உட்பட்டவைகளாய் இருந்திடாது ! நம் பணி நேரங்களுக்குள் ; விடுமுறை அல்லாத நாட்களில் வந்திடும் நண்பர்களுக்கு இந்த LIBRARY உதவிட, ஏற்பாடுகள் செய்யவிருக்கிறேன். சென்னை புத்தகத் திருவிழாவிற்குப் பின்னே நமது LION-MUTHU LIBRARY உங்களுக்காகத் தன கதவுகளைத் திறந்தே வைத்திருக்கும் ! இதோ - நண்பர் அனுப்பித் தந்த இதழ்களின் பட்டியல் !! 

ஒரு நெடுங்கால முயற்சிக்கு நல்துவக்கம் தந்து உதவி இருக்கும் நம் வாசக நண்பருக்கு இங்கு நமது இதயபூர்வமான நன்றிகள் சொல்லியே ஆக வேண்டும் ! இப்பக்கங்களை அவர் வாசிப்பாரோ - இல்லையோ தெரியாது ; ஆனால் அவரது புண்ணியத்தில் நிறைய கிடைத்தற்கரிய காமிக்ஸ்களை நண்பர்கள் காலம் காலமாய் படிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது ! எனது இந்தத் திட்டம் பற்றி இன்னமும் நம் அலுவலகப் பணியாளர்களுக்கே தெரியாது - so நாளையே போன் அடித்து இது தொடர்பாய் கேள்விகள் முன்வைக்க வேண்டாமே ப்ளீஸ் ! சென்னை புத்தக விழாவின் முழுமைக்குப் பின்னரே இந்த ஏற்பாடு செயலாகும் ! Merry Christmas !!

Monday, December 23, 2013

"பி.தி.பா.ப." = பின் திரும்பிப் பார்க்கும் படலம் !

நண்பர்களே,

வணக்கம். நான் எத்தனை பெரிய ஞானி என்பதை அமெரிக்காவின் ஒரு குளிர் நடுக்கும் காலையில் தான் சுலபமாய் உணர்ந்திட முடிந்தது ! கொலம்பஸ் நகரிலிருந்து சிகாகோவிற்கான ப்ளைட்டை பிடிக்கக் காத்திருந்த அந்தப் பனிக் காலையில், அங்கே இங்கே என்று சுற்றித் திரிந்த எனது சிந்தனைகள் - நம்மை கடந்து செல்லக் காத்திருக்கும் 2013ன் மீதும் அது நமக்குக் கொணர்ந்துள்ள விதவிதமான அனுபவங்களையும் மெள்ள அசைபோடத் துவங்கியது ! NBSல் துவங்கி , திருவாளர் டயபாலிக்காரோடு நிறைவு கண்டுள்ள இந்தாண்டின் எக்கச்சக்கமான இதழ்கள் என் மனதில் ஒரு slide show ஆக ஓடத் தொடங்கிய சற்றைக்கெல்லாம் - "ஆஹா...அதை அப்படிச் செய்திருக்கலாமே ? ...இதை இப்படிச் செயலாக்கி இருக்கலாமே ?" என்ற hindsight ஞானம் பிரவாகமெடுக்கத்  தொடங்கியது ! இதே மோனநிலை தொடர்ந்தால் - ஞானிகளின் பட்டியல் ஒன்றால் கூடிடும் அபாயம் எழப் போகிறதே என்ற எச்சரிக்கையுணர்வு தலைதூக்கியதால்  - விமானத்தோடு எனது சிந்தனைகளும் தரையிறங்கின!ஊருக்குத் திரும்பும் சமயத்திலும் இந்தப் "பின்திரும்பிப் பார்க்கும் படலத்தை" ; 2013-ன் அனுபவங்களை நிதானமாய் அசைபோட்டுக் கொண்டு வந்த போதே- தொடரும் பதிவுகளுக்கு இதுவே வித்தெனத் தீர்மானித்தேன் ! ஆனால் எல்லாவற்றிற்கும் முன்பாய் ஒரு thanksgiving காத்துள்ளதையும் என் மண்டை சுட்டிக்காட்டியது ! 

"சிங்கத்தின் முதுவயதில்" என்றெல்லாம் என்றோ ஒரு நாள் எனது கச்சேரியை நீட்டிடும் வாய்ப்பினை ஆண்டவன் நல்கிடும் பட்சத்தில் - இந்த 2013-ஐ ஒரு அசாத்திய லேண்ட்மார்க் ஆண்டாய் நான் வட்டமிட்டு வைத்திருக்கப் போவது உறுதி ! பொதுவாய் கால் கட்டைவிரலை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாய்க்குள் திணிக்கும் நான் - கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் ஒற்றைக் காலிலேயே நடமாடியதோடு மட்டுமல்லாமல் - எங்களது சின்ன டீமையும் என்னோடு பாலே நடனம் பயிலச் செய்ததை 2013-ன் மறக்க இயலா highlight ஆகக் கருதிடுகிறேன் ! 
 • 12 மாதங்களில் - 24 இதழ்கள் !
 • அவற்றுள் 3 சிறப்பு வெளியீடுகள் (NBS ; ALL NEW : தீபாவளி )
 • மொத்தம் 45 கதைகள் !
 • ஏராளமான சிறுகதைச் சேகரிப்புகள் !
 • 3500+ பக்கங்கள் !
 • 48 அட்டை டிசைன்கள் (முன் + பின்)
இரண்டு பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் + அடியேன் ; ஒரேயொரு டைப்செட்டிங் பணியாளர் ; ஒரு பகுதி நேர கிராபிக் டிசைனர் ; இவர்களை ஒருங்கிணைக்க மைதீன் என்ற எங்களது 5 Man army -யின் துணையோடு (சாரி -3 men +2 women army) - நமக்குள்ள limitations களின் மத்தியினில் இந்தாண்டு உற்பத்தி செய்திடச் சாத்தியமாகியுள்ள இந்தக் "காமிக்ஸ் கத்தையை"- மிஞ்சவோ ; மீண்டுமொருமுறை முயற்சிக்கவோ ஒரு பொழுது புலருமா என்றெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை; ஆனால் பின்புலத்திலிருந்து இந்த ஐவரும் எனக்குத் தந்துள்ள உழைப்பின் நிஜப் பரிமாணத்தை firsthand உணர்ந்த ஒரே ஆசாமி என்ற விதத்தில் அவர்களுக்குத் தலைவணங்குவது எனது தலையாய கடமை !

French மொழிபெயர்ப்பினில் இன்னும் நளினம் கூடுதலாக இருக்கலாம் ; ஓரிரண்டு இடங்களில் புலமையில் குறைபாடு தென்பட்டிடவும் வாய்ப்புகள் இருக்கலாம் தான் ; ஆனால் ஒரு இல்லத்தரசியின் பகுதி நேரப் பங்களிப்பு என்பதோடு மட்டுமல்லாது - காமிக்ஸ் எனும் சுவைக்குப் பரிச்சயமற்றவர் என்ற ரீதியிலும் அவரது முயற்சிகளைக் கண்டு வியக்காதிருக்க இயலவில்லை ! ஓரிரண்டு பக்கங்களை ஒரு பொழுது போக்காய் ; காமிக்ஸின் மீதுள்ள காதலாய் நாம் எத்தனித்திட இயலும் தான் ;  அதனை ஜமாய்த்திடவும் வாய்ப்புகள் உண்டு தான் ! ஆனால் day in ; day out - பக்கம் பக்கமாய் அயல்  மொழியிலிருக்கும் ஒரு படக்கதையை அற்ரசனை அறவே இல்லாத போதிலும் ஒரு வேள்வியாய்ச் செய்திடுவது நிச்சயமாய் சுலபச் செயலல்ல - trust me on that folks ! வேற்று மொழிகளை ஆங்கிலத்திற்கோ ; தமிழிற்கோ மாற்றம் செய்து தரும் முறையான ஏஜென்சீஸ் - 'வார்த்தைக்கு இத்தனை ரூபாய்' எனக் கட்டணம் வசூலிக்கும் தேசம் இது எனும் போது நமது கதைகள் ஒவ்வொன்றையும் அவ்விதம் மொழியாக்கம் செய்திட முனையும்  பட்சத்தில் - நாம் ரிசர்வ் வங்கியில் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கோமான்களாய் இருந்திடல் அவசியமாகி இருந்திருக்கும் ! 

இந்த 5 man army -ல் காமிக்ஸ் மீதான ஈடுபாடு கொண்ட ஒரே chainlink எங்களது திரு கருணைஆனந்தம் அவர்கள் என்பதால் - எப்போதும் போலவே அவரது தமிழாக்கங்கள் நமக்கொரு வரப்பிரசாதம் ! டைப்செட்டிங் பணிகளைப் பொறுத்த வரை 'இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம்' ; 'இங்கே கவனம் போதாது' என்ற வகையிலான நண்பர்களது விமர்சனங்களில் வலு இல்லாதில்லை தான் ; ஆனால் முறையான கல்வி / பயிற்சி ஏதுமிலா ஒரு இளம் பெண் - வீட்டில் இருந்தபடியே நமது அவசரங்களைப் புரிந்து இரவோ / பகலோ தந்திடும் உழைப்பு என்றும் ன் மரியாதைக்குரியதே ! ' தேர்ந்த பணியாளர்களைக் கொண்டு இன்னமும் சிறப்பாய்ச் செய்திடலாமே ?" என்ற கேள்வியும் தொடரும் என்பதை உணரவே செய்கிறேன் ;  ஆனால் நிதர்சனம் என்னவென்பது இப்பக்கமிருக்கும் நான் மட்டுமே அறிந்த விஷயம் என்பதால் அது பற்றி சற்றே விரிவாய் சொல்லிட விழைகிறேன் !முறையாகப் பயிற்சியும் ; அனுபவமும் கொண்ட DTP operator கள் இன்று சிவகாசியில் குதிரைக் கொம்புக்குச் சமானம் ! வாரம் ஒரு பெருநகரிலிருந்து சிவகாசி வந்திறங்கி - ஊர் முழுவதும் 'DTP பணியாளர்கள் தேவை" என்று போஸ்டர் அடித்து ஒட்டி ; கேபிள் டி-வியில் விளம்பரம் செய்து இங்குள்ள திறமைசாலிகளைப் "பிள்ளை பிடித்துச்" செல்ல வரும் நிறுவனங்கள் ஏராளம் ! நாமும் இந்தகுதிரைப் பேரங்களில் ஈடுபடலாம் தான் - சிக்கனம் என்றதொரு கம்பி மேல் நடந்திடும் அவசியம் இல்லாத பட்சத்தில் ! நம்மிடமும் ஒரு பெரும் தயாரிப்பு பட்ஜெட் இருந்திடும் சமயம்  எல்லாமே சாத்தியமே ; ஆனால் அதற்கான நாள் புலரும் வரை நிதானம் அவசியம் தானே ? அவ்விதமே ஒரு "சொகுசான" நாள் உதயமாகிடும் போதும் கூட - நம்மோடு ; நம்மைச் சார்ந்து வளரும் ஒரு பணியாளரை "பட்"டென்று கழற்றி விட்டு திறமையில் அடுத்த நிலையில் இருப்பவரை நாடி ஓடுவது நிச்சயம் நமது பாணியாக இராது ! Loyalty என்பது ஒரு வழிப் பாதையல்ல என்பது எனது நம்பிக்கை ! ஒரு proffessional நிர்வாகிக்கு இது உகந்த அணுகுமுறையாய்த் தெரியாது இருக்கலாம் தான் ; ஆனால் எணிப்படிகளின் சகல நிலைகளையும் பார்த்து வந்த எனக்கு அது தவறாய்த் தெரியமாட்டேன்கிறது !  

டைப்செட்டிங் மட்டுமல்லாது, நமது அட்டைப்பட டிசைனிங் முயற்சிகளுக்குமே மேற்சொன்ன விளக்கங்கள் பொருந்துமென்பதொடு - நாம் சந்திக்கும் மிகப் பிரதானமான சவாலே இவர்களில் எவரும் காமிக்ஸ் காதலர்களல்ல என்பதே ! ஒரு வேலையினை - ரசனையோடு செய்வதற்கும் ; ஜீவனத்திற்கொரு வழியாய்ச் செய்வதற்கும் மலையளவு வேறுபாடு உண்டென்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா - என்ன ? அதனையும் மீறி இவர்கள் நமக்கு நல்கியுள்ள உழைப்பின் அளவு இத்தனை எனும் போது - அவர்களது குறைபாடுகள் என் கண்களுக்குப் பெரிதாய் மேலோங்கித் தெரிவதில்லை !5 Man army-ன் கடைசி ஆசாமியான மைதீனைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன் ; பத்தாம் வகுப்பு மாணவனாய் நம்மிடம் பணி செய்ய வந்தவன் ; இன்று எனது நிழலுக்குச் சமானமானவன் ! காமிக்ஸ் எதனையும் படிக்காமலேயே - ஒரு காமிக்ஸ் காதலனின் மனதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட பண்பாளன் !

இந்த ஐவரைத் தாண்டி நம்மிடம் பணியாற்றும் அச்சக ஊழியர்களும் , பைண்டிங் நபர்களும் நம் பொருட்டு நிறையவே வியர்வை சிந்துபவர்கள் ! அச்சில் குறைபாடுகள் நிறையவே தலைதூக்கி ; அவை இப்போது படிப்படியாய்க் களையப்பட்டு வருவதும் நான் மூடி மறைக்க விரும்பிடும் விஷயமல்ல ! இங்கு பின்னூட்டங்களில் அவற்றிற்கான பதில்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே செல்லும் பட்சத்தில் - "சப்பைக்கட்டு சமாச்சாரம்" என்ற முத்திரை பெற வல்லது என்பதால் பெரும்பாலும் அது விஷயத்தில்  நான் அமைதி காப்பது வழக்கம். ஆனால் நம் பணியாளர்களின் தரப்பு சங்கடங்களை ஒரு முறையேனும் நான் பதிவு செய்திடாவிடில் அது நான் அவர்களுக்குச் செய்திடும் அவமரியாதை ஆகும் ! அச்சின் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவசியங்கள் உங்களில் அநேகருக்கு இருந்திடாது ! பெரிய சர்குலேஷன் கொண்ட பத்திரிகைகளுக்கும் ; நமக்கும் அச்சு முறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு !  பெரும்பாலான பெரிய பத்திரிகைகள் அச்சாவது Web Offset என்ற இயந்திரங்களில் - பேப்பர் ரீல்களில் இருந்து ! இவ்வகை இயந்திரங்களின் வேகம் சுலபமாய் மணி ஒன்றிற்கு 45,000 தாள்கள் வரை அச்சிடுவது ! So எண்ணிக்கையில் கூடுதலான தினசரிகள் ; வாராந்தரப் பத்திரிகைகள் சகலமும் அச்சாவது பல கோடிகள் பெறுமானமான இவ்வகை மிஷின்களில் ! இவற்றை இயக்குவது ; வண்ணங்களைக் கட்டுப்படுத்துவது சகலமும் கணினிகளே ! இயந்திரம் துவங்கி ஆரம்பத்துப் 10-15 நிமிட உற்பத்திகளைத் தூக்கிக் கடாசி விட்டால் - தொடரும் imprints சகலமும் ஒன்று போல அமைந்து விடும் ! ஒரே சமயத்தில் முன் + பின் பக்கங்களும் அச்சாகி - இயந்திரத்திலேயே மடிக்கப்படவும் செய்து - பைண்டிங்கிற்குத் தயாராகி வெளியே வரும் ! 
ஆனால் - சர்குலேஷனில் "குழந்தைப் பிள்ளைகள்" ஆன நமக்கு இந்த அசுர வேக அச்சு இயந்திரங்கள் அவசியமும் கிடையாது ; சாத்தியமும் கிடையாது! குறைவான பிரதிகளே அச்சிடப் போகிறோம் என்பதாலும் - நாம் பயன்படுத்துவது இரு பக்கங்களும் வளவளப்பான ஆர்ட் பேப்பர் என்பதாலும் நாம் பயன்படுத்துவது Sheetfed Offset இயந்திரங்களை ! இவ்வகையிலும் கம்ப்யூட்டர் controls கொண்ட மிஷின்கள் உண்டு தான் ; ஆனால் அவற்றின் விலைகள் 1 கோடியைத் தாண்டி விடும். அத்தனை பெரிய முதலீடு நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் நம்மிடம் புழக்கத்தில் இருப்பது நார்மலான ஆப்செட் இயந்திரங்களே  ! ஒரு நேரத்திற்கு 4 வண்ணங்களை முன்பக்கத்தில் அச்சிட்டுத் தரும் இந்த இயந்தரத்தினில் water + ink solvent + alcohol என்று மூன்று சங்கதிகளும் ஒரு ஸ்திர நிலையை எட்ட முடியும் போதே சீரான அச்சு கிட்டிடும். இயந்திரத்தை இயக்கத் துவங்கிய உடனேயே இது சாத்தியமாவதில்லை ; குறைந்த பட்சம் ஒரு 20-30 நிமிடங்கள் + ஒரு கணிசமான அளவு காகிதங்கள் பிரிண்ட் ஆகிய பின்னே ஒரு வித நிதானம் கிட்டிடும். இந்த நிலையில் பணியாளர்களின் திறமைகளும் ; அனுபவமும் மிக முக்கியம். துவக்கத்தில் வேஸ்ட் ஆன தாள்களின் சகலத்தையும் தூக்கிக் கடாசி விட்டு - சீராய் அச்சாகும் தாள்களை மாத்திரமே பைண்டிங் செய்ய அனுப்ப வேண்டுமென்பது எனது உத்தரவு. ஆனால் சில வேளைகளில் இயந்திரக் கோளாறுகளாலோ ; பணியாளர்களின் கவனக் குறைவுகளாலோ - அந்த ஆரம்ப wastage -க்குப் பின்னரும் கூட அச்சில் கொஞ்சமாய் பிசிறுகள் எழுவதுண்டு தான் ! நாம் உபயோகிக்கும் காகிதங்கள் மிக விலையுயர்ந்தவை என்பதால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த கூடுதல் wastage என் கவனத்திற்கு வரும் பட்சத்தில்- 'திட்டு வாங்க நேரிடுமே'  என்ற பயத்தில் ஓசையின்றி அந்த சுமாரான காகிதங்களையும் பைண்டிங் செல்லும் சரக்கோடு சத்தமில்லாமல் திணித்து விடுவது தான் இடையிடையே நீங்கள் பார்த்திடும் குறைபாடுகள். 'எதிர்பாராது வேஸ்ட் கூடுதலாய் ஆனாலும் பரவாயில்லை ; வாங்குபவர்கள் முகம் சுளிக்கலாகாது ' என்பதை சிறுகச் சிறுகச் சொல்லிப் புரிய வைத்து வருவதோடு - இதனைக் கண்காணிக்க ஒரு சூபர்வைசரையும் நியமித்துள்ளோம். 200,000 தாள்கள் அச்சிட 300-400 wastage sheets போதும் ; அதே சமயம் 2000 தாள்கள் அச்சிடவும் அதே 300-400 தாள்கள் அவசியம் என்பது தான் ஆப்செட்டின் சிக்கலே ! 
அச்சுப் பணிகள் நிறைவுற்று - பைண்டிங் செல்லுமிடத்தில் நமது தாள்களை மடிப்பது இயந்திரங்களல்ல ! கையால் மடிக்கும் போது ஒரு சில மழை வேளைகளில் உலராத மசிகள் சற்றே இழுவிடவும் வாய்ப்புண்டு. இதனை அறவே தவிர்த்திடவும்  பொருட்டு அச்சு இயந்திரத்திலேயே இப்போது ஒரு dryer வாங்கி இணைத்துள்ளோம் - அச்சாகிச் சென்றிடும் காகிதங்கள் சுத்தமாய் உலர்ந்திருப்பதை உறுதி செய்திட ! கடைசியாய் அச்சான "வேங்கையின் சீற்றம்" இதழினில் தெரிந்த முன்னேற்றம் - தொடரும் நாட்களில் அச்சுப் பிரச்னைகள் தொடராது என்ற நம்பிக்கையைத் தருகிறது ! விமர்சனம் செய்திடும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதன் பொருட்டோ - எங்கள் மீதொரு பச்சாதாபப் பார்வைக்கு வழி வகுப்பதோ எனது இவ்விளக்கங்களின் நோக்கமல்ல ! முழுக்க முழுக்க human skills மட்டுமே பிரதானமாய் கோலோச்சும் அச்சுப் பணிகளின் பணியாளர்களின் தரப்பு நிஜங்களையும், அவர்களின் முன்புள்ள இடர்கள் / சவால்கள் பற்றியும் சற்றே விரிவாய் உங்களுக்குப் புரியச் செய்வதே எனது விருப்பம். ஒரு கோடிக்கு ஒரு கம்ப்யூட்டர் இயந்திரத்தை வாங்கி நானும் அவர்களது கையில் ஒப்படைத்தால் - அமெரிக்கத் தரத்தில் நிச்சயம் imprints தரவும் செய்வார்கள் ! அது சாத்தியமாகும் வரை - இயந்திரங்களையும் சரி ; பணியாளர்களையும் சரி - தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் பொறுப்பு எனக்குள்ளது !

 அப்புறமாய் - நமது முன் அலுவலகப் பணியாட்கள் ! இரண்டாண்டு அனுபவம் கொண்ட ஸ்டெல்லாவும் ; ஓராண்டை எட்டிடாத திருமதி தேவியும் தான் இன்று நமது காமிக்ஸின் குரல்கள். நமது மூத்த பணியாளர் ராதாக்ருஷ்ணன் இன்னமும் செயல்பாட்டில் உள்ள போதிலும், பெரும்பான்மையான பணிகளைப் பெண்களே பிரித்தெடுத்துக் கொண்டுள்ளனர் ! தினமும் சராசரியாய் ஆளுக்கு 60-70 போன்கால்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு ; எண்ணற்ற மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது ; E -Bay விற்பனைகள் என சதா சர்வ காலமும் பிஸியாக இருந்திடும் இவர்கள் இன்னமும் சின்னச்சின்ன தவறுகள் ; குளறுபடிகளுக்கு விதிவிலக்குகள் ஆகவில்லை தான் ! ஆனால் - தங்கள் சக்திக்குட்பட்ட சகலத்தையும் நேர்மையோடு செய்கிறார்கள் என்பதை நித்தமும் பார்க்கும் போது எனக்கு அவர்களது சிற்சிறு தவறுகளைப் பெரிதாக்கிப் பார்க்கத் தோன்றவில்லை ! இந்த ஓராண்டில் உங்களின் பிரதிகளை அனுப்பிடுவதிலோ ; பாக்கிங் செய்வதிலோ ; உங்களுக்கு சரியான பதில்கள் வழங்குவதிலோ அவர்கள் சில-பல வருத்தங்களை / சிரமங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவற்றிற்கு எனது sincere apologies களை சமர்ப்பிப்பதோடு - தொடரும் நாட்களில் இயன்ற எல்லா விதங்களிலும் குறைகளைக் களைந்திட முனைந்திடுவார்கள் என்ற உறுதியும் தருகிறேன் !

Last, but not the least - நமது இதழ்களின் இதர 2 எடிட்டர்கள் ! இதழ்களின் ஆக்கங்களில் எனது தம்பி பிரகாஷ் நேரடியாய் பங்களிப்பதில்லை என்ற போதிலும், விற்பனைக்கு ; அலுவலக நிர்வாகத்திற்கு ; அச்சக மேர்பார்வைக்கென செய்திடும் invisible உதவிகள் விலைமதிப்பற்றவை ! எல்லாவற்றிற்கும் மேலாய் - இந்த காமிக்ஸ் முயற்சிகளின் பிரதிபலனாய் அவ்வப்போது கிட்டிடும் சின்ன ஒளிவட்டங்கள் என் மீது மாத்திரமே விழுவதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ; நான் ஊர்-உலகமெல்லாம் சுற்றி வரும் வேளைகளிலும் அலுவலகத்தில் எனது நங்கூரமாய் இருந்திடும் அவனது presence - invaluable ! நீண்டு செல்லும் இப்பகுதிக்கு "மங்களம்" போடும் முன்பாய் நமது ஜூனியர் எடிடர் பற்றியும் சின்னதாய் ஒரு mention : காக்காய்கள் டி-நகர் நகைக் கடைகளுக்குச் செல்கின்றனவோ - இல்லையோ - நிச்சயம் அவற்றிற்கு தத்தம் குஞ்சுகள் பொன்குஞ்சுகள் தானே ! அந்த வகையில் எனது புதல்வன் விக்ரம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான் என்ற போதிலும் ; நம் முயற்சிகளுக்கு அவன் மார்க்கமாய் எனக்குக் கிட்டிடும் ஒரு புதுப்பார்வை விலைமதிப்பற்றது ! கல்வியை முடித்து விட்டு அவன் என் இருக்கையை இலக்காக்குவானா ? - அல்லது அவனது தேடல்கள் வேறு துறைகளில் இருக்குமா ? என்ற கேள்விக்கான விடை என் வசமில்லை : ஆனால் எனக்கு அவன் வலு சேர்க்கும் இந்த நாட்களை என்றுமே நாம் நேசிப்பேன் ! 

எங்கள் தரப்பு "thanksgiving " பட்டியலை ஒருவாறாக வாசித்தாகி விட்ட போதிலும் - எஞ்சி நிற்கும் ஒரே ராட்சச "தேங்க்ஸ்" நண்பர்களான உங்களுக்கே ! வெறும் பார்வையாளர்களாய் அமர்ந்திருந்து விட்டு எழுந்து சென்றிருக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் - ஆத்மார்த்த ஈடுபாடோடு ஒன்றிப் போய் ; நிறை / குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டி - இதனை ஒரு மறக்க இயலா ஆண்டாய் செய்து கொடுத்து உங்கள் அனைவருக்கும் a thanks from the bottom of my heart ! ஆங்காங்கே மாற்றுக் கருத்துக்கள் ; அபிப்ராய பேதங்கள் எழுந்திருக்கும் நாட்களும் இந்த 2013-ல் உண்டென்ற போதிலும் - end of the day வெற்றி கண்டது நம் காமிக்ஸ் நேசம் தானே எனும் போது - நிறைவாய் உள்ளது ! Thanks ever so much guys ! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!  
மீண்டும் சந்திப்போம் - 2013-ன் Highs & Lows பற்றிய தொடரும் (நாட்களின்) பதிவுகளோடு ...! 

Tuesday, December 10, 2013

வண்ணத்தில் ஒரு விருந்து..!

நண்பர்களே,

வணக்கம்.  நம் நினைவுச் சுவடுகளின் பெரும் சேகரிப்பிற்குள் இந்த 'நாலு இதழ் டிசெம்பர் ' புதைந்து போகிடும் வேளையும் வேக வேகமாய்ப் புலர்ந்து வர, - புதியனவைகளை நோக்கி நம் பார்வை பாய்ந்திடும் சமயமும் வெகு அருகாமையினில் நிற்கின்றது ! 2014-ன் துவக்கத்திற்கு வெகு அத்யாவசியமான இரு வெவ்வேறு முயற்சிகளுக்கு நண்பர்களது creative திறன்களை நாம் எதிர்நோக்கி இருப்பது தெரிந்த விஷயம் தானே ?   சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ + KBGD - 2 (பயங்கரப் புயல் அட்டைப்பட டிசைனிங் போட்டி) இரண்டின் finalization தொடரும் சில நாட்களுக்குள் நடந்தாகிட வேண்டும் ! இதோ நண்பர்களது புதிய ஆக்கங்கள் !

LOGOS : 
L.Venkateswaran, Ayyampalayam & Chennai

S.Barani, BangaloreSome rough designs from Karthik Somalinga, Bangalore
Vinoj Kumar's creations..!
இவை தவிர, சென்ற பதிவினில் நாம் பிரசுரம் செய்திருந்த லோகோக்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாய்க் கணக்கில் கொண்டால் - நமக்குப் பொருத்தமென நீங்கள் தேர்வு செய்வது எந்த லோகோவாக இருக்கும் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க ! 

KBGD-2 :
போட்டியினில் பங்கேற்ற நண்பர்களது எண்ணிக்கை சொற்பமே என்பதாலும், அனைவருமே துரிதமாய் தங்கள் ஆக்கங்களை அனுப்பி விட்டதாலும், எனது வேலை ரொம்பவே சுலபமாய்ப் போய் விட்டது ! இதோ நண்பர்களின் படைப்புகளின் அணிவகுப்பு :  
Designed by : Podiyan (S.Pradeep) Colombo
Designing by : L.Karnan, Salem.
Designed by : ஆதி தாமிரா, சென்னை


                                                                                            Designed by : Kanagarajan, Pollachi.                                                                                     
                                                                                   Designed by : Karthik Somalinga, Bangalore.

                                                                                    Designed by : arunachalam, Komarapalayam.

                                                                               L.Venkateswaran, Ayyampalayam & Chennai - Design # 1

                                                                                L.Venkateswaran, Ayyampalayam & Chennai - Design # 2

                                                                                   Designed by : ஆதி தாமிரா, சென்னை again

கண்ணைப் பறிக்கும் இந்த வண்ண அட்டைப்பட அணிவகுப்பினில் உங்கள் தேர்வு எதுவோ ? எனது தேர்வினை நான் ஏற்கனவே செய்தாகி விட்ட போதிலும், உங்களது ரசனையோடு எத்தனை தூரம் நான் ஒத்துப் போகிறேன் என்று அறிந்திட ஆவல்...so எனது அட்டைப்படத் தேர்வினை இன்றிரவு அறிவிக்கிறேன் ! அது வரை - உங்களின் அபிப்ராயங்களைப் பதிவிடலாமே ?!

லோகோவைப் பொறுத்த வரையிலும் உங்கள் vote எந்த டிசைனுக்கு ?  

Part 2 of this Post !! 

அண்ணன் மகளின் திருமணம் நாளைய தினம் !  இன்றே ஆபீசுக்கு மட்டம் போட்டுவிட்டபடியால் -  இங்கு தலை காட்டத் தாமதம் ஆகிப் போய் விட்டது ! Anyways அவ்வப்போது இங்குள்ள நிலவரத்தை கவனித்துக் கொண்டே தான் இருந்தேன் ! லோகோக்களைப் பொறுத்தவரை பார்த்த மறு கணம்  - YESS ! என்று சொல்லச் செய்யும் விதத்தில் எந்தவொரு டிசைனும் பொருந்தாமல் இருந்து வந்தது சின்ன நெருடலாய் எனக்குள் இருந்தது ! எனினும் இன்று காலை கார்த்திக் அனுப்பிய மின்னஞ்சலில் நண்பர் வினோஜ் குமாரின் படைப்புகளைப் பார்த்த போதே 'அடடே' என்று சொல்லத் தோன்றியது ! அதிலும் குறிப்பாய் லோகோ # 3 பிரமாதமாய் பட்டது எனக்கு ! எழுத்துகளின் ஸ்டைல் இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டால் இதுவே நம் லோகோவாகிடும் for sure ! Great skills Vinoj ! Welcome to the club !!

KBGD - 2 போட்டியின் அட்டைப்படத்தைப் பொறுத்த வரை - இம்முறை நிறையவித ஆக்கங்கள் இருந்த போதிலும், அவற்றில் ஒரு professional touch குறைவு என்பதே நிதர்சனம் ! கணினியின் திரையில் பரிணமிப்பதும் ; அச்சில் மிளிர்வதும் இரு வெவ்வேறு சங்கதிகள் என்பது 'பளிச்' என highlight ஆகித் தெரிகிறது ! YELLOW + CYAN (ப்ளூ) + MAJENTA (சிகப்பு) + BLACK என்ற நால்வண்ணக் கூட்டணியே அச்சின் முதுகெலும்பு எனும் போது - அதில் ஏதேனும் ஒரு வர்ணத்தின் பங்களிப்பு குறைந்து போனாலும் அச்சில் ஒரு விதக் குறைபாடு தலைதூக்கித் தெரியும். இம்முறை பெரும்பாலான படைப்புகளில் BLACK Texture ரொம்பவே குறைவாய் நண்பர்கள் பயன்படுத்தியுள்ளது தான் சிக்கலே ! BLACK சரியாய் பயன்படுத்தப்பட்டுள்ள டிசைன்களில் வேறு ஏதேனும் சிற்சிறு குறைகள் குடி இருப்பதால் அவை தேர்வாகுவதில் பிரச்னை ! So - இங்குள்ள படைப்புகளுள் எனது தேர்வு நண்பர் பிரதீப்பின் டிசைனே ! இதனிலும் இன்னும் கொஞ்சம் கறுப்பை அதிகப்படுத்தி மெருகூட்ட வேண்டிய அவசியம் உள்ளது தான் என்ற போதிலும், அந்த overall effect ரொம்பவே அழகாய் தோற்றம் தருவதே இதன் தேர்வின் பின்னணி !வாழ்த்துக்கள் பிரதீப் ! ஆண்டின் முதல் மறுபதிப்பில் உங்கள் டிசைன் வெளியாகவுள்ளது ! 

இங்கு நண்பர் ஆதி தாமிராவின் டிசைன் பற்றி நான் சொல்லியே தீர வேண்டும் ! அந்தப் பரபரப்பான புயல் பின்னணி ; பறக்கும் கிளியின் விஸ்தீரணம்  ; இருண்டு வண்ணங்கள் தெரிவிக்கும் mood என்று அனைத்துமே பிரமாதம் ! ஆனால் நண்பரிடம் உயர் resolution களில் பணியாற்ற சாப்ட்வேர் இல்லாத காரணத்தால் வெறும் 636 kb சைசிலான டிசைனை அனுப்பி உள்ளார் ! அந்த resolution ஆப்செட் அச்சிற்குத் துளியும் சரி வராதே என்பதால் அவரது படைப்பினை கருத்தில் கொள்ள இயலவில்லை ! So close!! 

As always, போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் + வாழ்த்துக்கள் ! ஒரு காமிக்ஸ் காதல் உங்களை எத்தனை பெண்டு நிமிர்த்துகிறது என்பதையும் ; அதனை நீங்கள் இத்தனை மலர்ந்த முகங்களோடு செய்து வருவதையும் எண்ணி வியக்காது இருக்க முடியவில்லை ! You are all stars in your own rights ! Keep shining & keep rocking ! 

Thursday, December 05, 2013

இனி எல்லாம் சுகமே...!

நண்பர்களே,

வணக்கம். கடந்த 3 மாதங்களாய் என்னைச் சுற்றி DTS சவுண்ட் effect -ல்  நடிகர் தனுஷின் earthy குரலில் ஒரே பாடல் திரும்பத் திரும்ப ஒலிப்பது போலவே ஒரு பிரமை.. !

'ஓட ஓட தூரம் குறையலை..! 
பாட பாட பாட பாட்டும் முடியலை..! 
போக போக ஒண்ணும் புரியலை !
ஆக மொத்தம் ஒண்ணும் வெளங்கலை !"

ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் வரைத் தள்ளிச் சென்ற மறுபதிப்புகள் ; +6 இதழ்கள் ; புது வெளியீடுகள் என  சகலமும் ஒட்டு மொத்தமாய் முறைக்க - ஒன்றன் பின் ஒன்றாய் அவற்றிற்குக் கதவுகளைத் திறந்தாகும் பணியில் திருவாளர் நாக்கார், நண்பர் தரையாரைக் குசலம் விசாரிக்காத குறை தான் ! முடிக்க, முடிக்க முளைத்துக் கொண்டே வரும் வேலைகளைச் செய்திடுவது ஒரு பக்கமெனில் - திருவாளர் சலவை நோட்டாரை மொத்த மொத்தமாய்ப் புரட்டுவதென்பது மறு பக்கத்து பூதாகரமான சவாலாய் நின்றது ! ராயல்டி பணங்களைக் கடைசி நொடியில் செலுத்தினாலும் முகம் சுளிக்காத படைப்பாளிகளும் ; நம் வார்த்தைக்கு மதிப்புத் தந்து - சின்ன அவகாசத்திற்குக் கடனில் பேப்பர் சப்ளை செய்த நிறுவனங்களும் கை கொடுக்க, கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டுமென்ற நமது வைராக்கியம் சொதப்பிடாது தப்பியது !'All's well, that ends well' என்பதற்கேற்ப - 2013-ன் இந்த ஓட்டப் பந்தயத்தின் முடிவினில் மூச்சிரைக்க எல்லைக்கோட்டில் நிற்க நேரிட்டாலும், ஒட்டு மொத்தமாய் 4 இதழ்களை இன்று  நம் பணியாளர்கள் despatch செய்திடுவதைப் பார்வையிட முடிந்த போது மனதுக்குள் ஒரு சின்ன ரம்யம் நிலவியது ! ஒரு கௌபாய் கதை ; ஒரு கார்ட்டூன் கலாட்டா ; ஒரு டிடெக்டிவ் தொகுப்பு ; ஒரு ஆக்ஷன் ஹீரோ சாகசமென டிசம்பர் நமக்குத் தயார் செய்துள்ள இந்த அட்டகாச combo நாளைக் காலை உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டும் - கூரியர் நண்பர்களின் கடாட்சத்தோடு ! இதோ - இந்தாண்டின் இறுதி மறுபதிப்புத் தொகுப்பின் அட்டைப்படம் :


ஏராளமான குளறுபடிகளைச் சந்தித்த சிக் பில் கதை வரிசைகள் பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன் என்பதால் - மீண்டும் முதலில் இருந்து blade போடுவதைத் தவிர்த்திடப் போகிறேன் ! So முதன் முறையாக நம் Top Comedy Cowboys இணைந்து ஒரே இதழில் அட்டகாசம் செய்கிறார்கள் - புரட்சித் தீ + விற்பனைக்கு ஒரு ஷெரீப் மார்க்கமாய் ! (For obvious reasons - இது தவிர்க்க இயலாக்கூட்டணி என்பதால் இதன் பொருட்டு மீண்டுமொருமுறை கேள்விகள் வேண்டாமே - ப்ளீஸ் ?! )அட்டைப்படங்கள் இரண்டுமே (முன் + பின்) ஒரிஜினல் டிசைன்கள் - துளியும் மாற்றங்களின்றி ! லக்கி லூக் கதைகளை நாம் வெளியிட்டு வந்த நாட்களில் சிக்சர் அடித்த கதைகளுள் ஒரு முக்கிய இடம் "புரட்சித் தீ"க்கு உண்டு ; இத்தனை காலம் பின்னே அழகாய், பெரிய சைசில் அந்தக் கதையினை திரும்பப் படிக்க நேரிட்ட போது என்னுள் ஏராளமான flashbacks ! கூடவே சின்னதாய் 2 நெருடல்களும் தான்..!தற்போது இது போன்ற கதைகள் கிடைப்பதில்லையே என்பது நெருடல் # 1 என்றால் ; இதே கதையினை தற்போது மொழியாக்கம் செய்திட நேரம் கிட்டிடும் பட்சத்தில் இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாமே என்பது நெருடல் # 2 !  ஆனால் நம்மில் பெரும்பான்மைக்கு - படித்துப், பழகிப் போன அதே பழைய ஸ்கிரிப்ட் தான் ரசிக்கின்றதெனும் போது என் முன்னே உள்ள choices மிகக் குறைவாகிப் போகின்றன ! Anyways , அற்புதமானதொரு கதை - so let's make the most of it ! 
இம்மாத 2 நூறு ரூபாய் இதழ்களுமே மறுபதிப்புகள் தான் என்ற போதிலும், அவற்றினுள் நமக்கு அதீத ஆவலைத் தூண்டிடும் 2 கூடுதல் சங்கதிகள் புதைந்துள்ளன ! சில மாதங்களுக்கு முன்பாய் நடந்த நமது KBT -3 போட்டியில் - இரு லக்கி லூக் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வாய்ப்பு நண்பர்களுக்குத் தரப்பட்டிருந்தது அல்லவா ? ஒரு வழியாய் அப்போட்டியின் முடிவுகள் அரங்கேறும் நேரம் இப்போது  நெருங்கி விட்டது !  அதற்கு முன்பாக போட்டிக் களத்தினில் காத்திருந்த 2 கதைகளின் தன்மையைப் பற்றி இங்கு நான் சொல்லியாக வேண்டும் ...! இரண்டுமே மாமூலான லக்கி லூக் சிறுகதைகள் தான் என்ற போதிலும், இரண்டிலுமே வரும் பிரதான பாத்திரங்கள் வழக்கமான கௌபாய் ரகத்தினர் கிடையாது ! முதல் கதையில் லக்கியோடு குப்பை கொட்டுவது ஒரு இடுங்கிய கண் கொண்ட சீன ஆசாமி ; கதை # 2-ல் வருவதோ ஒரு அராபிய நாட்டவன். So இரு கதைகளிலுமே வசன நடை தென் துருவம்-வட துருவம் போல் துளியும் தொடர்பில்லா வகைகள் ! இவற்றை கையாள்வதென்பது ஒரு பெரும்  சவாலான விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! அதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது - போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே தூள் கிளப்பியுள்ளார்கள் ! Hats off guys - you have all given it an awesome shot ! அதே சமயம் போட்டி என்று வரும் போது சின்னச் சின்ன விஷயங்களையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பார்க்கும் கட்டாயம் நேர்வதால் - நிறைய சிந்தனைக்குப் பின்னே ; நிறைய வாசிப்புக்குப் பின்னே - ஒன்றுக்கு   இரண்டாய் வெற்றியாளர்களைத் தேர்வு செய்துள்ளேன் ! Yes, we have 2 winners this time ! 

சீன ஷெரீப் கதையினை அமர்க்களமாய் எழுதி வெற்றியைத் தட்டிச் செல்வது வேறு யாருமல்ல - நமது நாலு கால் + ஒரு புசு புசு வால் கொண்ட மட்டன் பிரியாணிப் பிரியரான ஈரோடு விஜய் தான் ! இந்தப் பூனை பால் குடிக்கும் பூனை மட்டுமல்ல - பாயசம் செய்யத் தெரிந்த பூனையும் கூட என்பதை ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ள "ஒரு சீன  ஷெரீப்பின் கதை" வெளிச்சம் போட்டுக் காட்டக் காத்துள்ளது ! இதோ அதன் முதல் பக்கம்...!! 
Great Show Vijay !! சின்னதாய் ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இக்கதையின் proof reading -ல் தலை காட்டுவது ஒரு சிறு நெருடல் !! Sorry in advance !

இரண்டாம் கதையின் மொழியாக்கத்தில் கலக்கி இருப்பது நமக்குப் புதியவர் அல்லவே....! பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவின்  கைவண்ணத்தில் "மேற்கே ஒரு ஒட்டகம்" - "புரட்சித் தீ" இதழினில் அட்டகாசமாக வரவிருக்கிறது ! கதையினைப் படிக்கும் போது இதன் பொருட்டு கார்த்திக் எத்தனை சிரத்தை எடுத்துள்ளார் என்பது தெளிவாய்ப் புரியும் ! பாருங்களேன் - அதன் முதல் பக்கத்தை : 
Congrats again Karthik ! வெற்றி பெற்ற நம் நண்பர்கள் இருவருக்கும் நம் வாழ்த்துக்களோடு - ஒரு "நாடோடி ரெமி" இதழ் + "யார் அந்த மாயாவி ?" இதழும் பரிசாக அனுப்பிடப்படும் ! போட்டிகள் ..வாசகர்கள்  பங்களிப்புகள்  என்ற தலைப்பு ஓடிக் கொண்டிருக்கும் போதே - நமது சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ டிசைன்களையும் கொஞ்சம் பார்த்திடுவோமே என்று நினைக்கத் தோன்றியது ! இதோ பாருங்களேன், நம் நண்பர்களின் கைவண்ணங்களை :  
Arunachalam's work...

Srirangam Siva's design
Super Vijay's creation-1
Karthik Somalinga's effort..
Ramesh Kumar, Kanchipuram !!
Srirangam Siva again...
Karthik Somalinga with another creation ! 
Super Vijay-2
நண்பர்களின் ஆர்வம் + ஆற்றல் எனை 'ஆ'வென வாய் பிளக்கச் செய்கிறது ! பள்ளியில் டிராயிங்கில் நூற்றுக்கு நாற்பது மார்க் எடுக்கத் தத்து பித்தென தடுமாறும் என் போன்றோருக்கு இந்த ஆற்றல் பிரவாகம் நிஜமாய் ஒரு அதிசயமாகவே தெரிகிறது ! இப்போது இங்குள்ள படைப்புகளில் இருந்து அழகான ஒன்றினைத் தேர்வு செய்திடும் பொறுப்பையும் உங்களிடமே விட்டு விடப் போகிறேன் ! ஜனவரியில் அரங்கேற்றம் காணவிருக்கும் நமது கிராபிக் நாவல் வரிசைக்கு இதில் எந்த லோகோ தேர்வு செய்வோம் guys ?

திறமைகளின் வெள்ளப்பெருக்கு இன்னும் ஓய்ந்த பாடில்லை...! KBGD -2 போட்டிக்கு நேற்றிரவு தான் நான் டிசைன்களையே அனுப்பி இருந்தேன் ; அதற்கு முன்பாகவே நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன் செய்து அனுப்பியுள்ள அட்டையைப் பாருங்களேன்..!

"சைத்தான் துறைமுகம்" கதையினை நாம் மறுபதிப்பு செய்திடும் போது இந்த அட்டைப்படத்தை பயன்படுத்திடலாம் என்று எண்ணத் தோன்றுகிறது ! Real cool work !! திரும்பிய திக்கெங்கும் தென்படும் நண்பர்களின் திறமைகளும், காமிக்ஸ் மீதான அளப்பரிய நேசமும் என்னை நிஜமாய் பிரமிக்கச் செய்கிறது ! இத்தனை காதலுக்கு மத்தியினில் வசிக்கும் இந்த சுகம் எங்களது அந்த மூச்சிரைக்கும் ஓட்டத்தை ஒரு மார்கழி மாதத்து இளம் காலை சுக நடை அனுபவமாய் மாற்றிடுவதில் வியப்பேது ? This is bliss...! Take care folks ! Catch you soon ! 
P.S: நண்பர்களே, விளம்பர இடைவேளை போலானதொரு (மறு) அறிவிப்பு : உங்களின் 2013-க்கான சந்தாக்கள் தற்போதைய இப்புத்தகங்களோடு நிறைவாகிறது ! மறவாமல் இன்றே 2014-க்கான சந்தாக்களை செலுத்திடலாமே - ப்ளீஸ் ? 

Thursday, November 28, 2013

கார்த்திகையும்...கண்ணாமூச்சியும் !

நண்பர்களே,

வணக்கம். கார்த்திகை மாதங்கள் எப்போதுமே ரம்யமானவை ; வாசல்தோறும் அகல்விளக்குகள் ; அந்தப் பொரிகடலை உருண்டைகள் ; மப்பும் மந்தாரமுமான வானிலை என்று ரசிக்க நிறைய விஷயங்களைத் தன்னில் கொண்டது ! இம்முறையும் பொரிகடலை உருண்டைகளும், அகல்விளக்குகளும் இருந்தன தான் ; ஆனால் அந்த அகல்விளக்குகள்  வாசலுக்கு மட்டுமல்ல - வீட்டுக்கும் சேர்த்தே ஒளி தர ஓவர்டைம் உத்தியோகம் பார்க்க வேண்டிப் போய் விட்டது தான் பரிதாபமே ! சுருக்கமாய்ச் சொன்னால் - நித்தமும் 10 மணி நேர மின்வெட்டு ; அதிலும் பணி செய்திடக் கூடிய பகல் வேளைகளில் 6 மணி நேரங்கள் சுத்தமாய் மின்சாரம் கிடையாது ! மாலைகளில் ஆறு முதல் நள்ளிரவு வரை ஒரு மணிக்கொரு தடவை கண்ணாமூச்சி ஆட்டம் - மின்சாரத்தோடு ! எங்கே அடித்தாலும் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் சிவகாசிக்கு உண்டு என்ற ஒரு வித இறுமாப்பு எங்கள் நகரத்துக்கு உண்டென்பதில் ரகசியம் கிடையாது தான் ; ஆனால் பிராண வாயுவை நெரிக்கும் போது எங்களுக்கும் மரண பயம் நேருமென்பதை கோடையின் 16 மணி நேர மின்வெட்டு உச்சங்கள் அப்பட்டமாக்கின என்றால் - தற்சமய இருள் போர்வைகள் அதனை மீண்டுமொருமுறை பூதாகரமாக்கி வருகின்றன ! நம்மிடம் ஜெனரேடர் வசதி உண்டென்ற போதிலும், இதர பணிகள் சகலமும் வெளியிலுள்ள வெவ்வேறு துறைகளில் இருந்து பூர்த்தி ஆகிட வேண்டும் எனும் போது அங்கெல்லாம் சொல்லி மாளா சுணக்கங்கள் ! தட்டுத் தடுமாறி டிசம்பரை கரை சேர்க்கும் முன்பாக எங்கள் டீமின் அனைவருக்கும் திடுமென்று தலை நரைத்திடும் போலொரு  பிரமை ! (அடடே --கேசத்தின் வெண்மைக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாமோ ?

ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் + டைகரின் "வேங்கையின் சீற்றம்" + சிக் பில் ஸ்பெஷல் அச்சுப் பணிகள் முடிந்து வாரம் ஒன்றுக்கு மேலாகி விட்டது   ; பைண்டிங்கில் பணி முடிக்க தாமதம் ஆகி வரும் போதிலும் இவ்வார இறுதியினில் மூன்றுமே நம்மிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! இதழ் # 4 - கூர்மண்டையர் டயபாலிக் தோன்றும்  "OPERATION சூறாவளி " வரும் செவ்வாய்க்குள் எப்படியேனும் தயார் ஆகி விடும். So டிசம்பர் 4 தேதிக்கு அனைத்து இதழ்களையும் despatch செய்திடுவோம். அருள் கூர்ந்து அது வரை பொறுமை காத்திடக் கோருகிறேன் ப்ளீஸ் ?! கோடையின் உச்ச பட்ச மின்வெட்டு வேளைகளில் கூட, பகலில் 6 மணி நேர மின்சாரம் இருந்து வந்தது ; ஆனால் இம்முறையோ அந்தக் கருணைக்கும் வழி இல்லை என்பதால் - காலை முதல் மாலை வரை ஆபீசில் ஈயோட்டும் வேலை மட்டுமே சாத்தியமாகிறது ! Anyways, 2013-ன் இறுதி black & white இதழின் preview இதோ : 

முன்னட்டை நம் ஓவியரின் கைவண்ணம் - டிஜிட்டல் சேர்க்கைகள் ஏதுமின்றி ! பின்னட்டையோ - சில மாதங்கள் முன்பாக நமது வாசக நண்பர் சண்முகசுந்தரம் தயார் செய்து அனுப்பி இருந்ததொரு டிசைன் ! அந்த metalic வண்ணம் அச்சிடச் சிரமம் தரக் கூடியதென்பதால் இதனை பயன்படுத்திடாது இருந்தோம் ; but this is too good a design to hibernate என்று தோன்றியதால் பின்னட்டையிலாவது போடுவோமே என நினைத்தேன் ! நண்பருக்கு நமது நன்றிகள் ! வழக்கம் போல் டயபாலிக் பரபரப்பானதொரு action மேளாவோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளார் ! 'நொடிக்கொரு முகமூடி' - என்ற அந்த டயபாலிக் முத்திரை இக்கதையில் அ-ழு-த்-த-மா-க பதிந்திருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் ! சித்திரத் தரம் as always awesome ! பாருங்களேன் ஓவியரின் மாயாஜாலங்களை !! Creativity பற்றிய தலைப்பில் நாமிருக்கும் போதே நம்மிடையே உறையும் திறமைகளுக்கு லேட்டஸ்ட் மாதிரி ஒன்றினை உங்களுக்குக் காட்டியே தீர வேண்டும் நான் ! "புதிய தலைமுறை" இதழினில் முழுப்பக்க வண்ண விளம்பரம் செய்திட திட்டம் இருப்பதாக நான் கடந்த பதிவில் எழுதி இருந்தேன் அல்லவா - இதோ அதற்கென நண்பர் ரமேஷ் குமார் தயார் செய்து அனுப்பி இருக்கும் அட்டகாசம் !

சென்னை புத்தக விழாவினில் நமக்கொரு ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் அங்கு display செய்திடக் கூடிய banner களில் இந்த டிசைனும் ஒன்றாக இருந்திடும் ! Wonderful job sir ! Thanks a ton ! அதே மூச்சோடு - நண்பர்களின் creativity -க்கு இன்னமும் ஒரு சவாலை முன்வைக்கப் போகிறேன் ! "சன்ஷைன் கிராபிக் நாவல்" இதழ்களுக்கென   ஒரு பிரத்யேக logo டிசைன் பண்ணி அனுப்பிடுங்களேன் ? அழகாய் அமைந்திடும் logo ஜனவரி முதலாய் துவங்கிடவிருக்கும் இந்த கிராபிக் நாவல் இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரிக்க உதவிடுமே ? 

கிராபிக் நாவல்கள் பற்றிய mention எழும் போது அதனில் தலை காட்டிடக் காத்துள்ள இன்னுமொரு ஆசாமியை அறிமுகம் செய்திடும் கடமை எனக்குள்ளது ! இவர் நமக்கு ரொம்ப காலமாகவே தெரிந்தவர் தான் ...ஆனால் இவருக்கென ஒரு தனி இதழ் ஒதுக்கிடப்படும் என்று நிச்சயமாய் நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம் - ஏனெனில் ஆசாமியின் தொழில் அத்தகையது ! Yes , "இரத்தப் படலம்" கதைத் தொடரில் ஜனாதிபதி ஷெரிடனை சுட்டு வீழ்த்தும் ஒரிஜினல் கொலையாளியான ஸ்டீவ் ரோலாண்ட்டின் கதை "காலனின் கைக்கூலி " என்ற பெயருடன் ஒரு single shot album ஆக முழு வண்ணத்தில் வரவிருக்கிறது ! சதித் திட்டத்தில் இவனது பங்கு பற்றிய சித்தரிப்பு மிக சுவாரஸ்யமாய்ச் சொல்லப்பட்டுள்ளதை இந்த ஆல்பம் நமக்குக் காட்டவுள்ளது. ! Don't miss it ! 

2013-ன் சகல இதழ்களும் ஒரு வழியாய் நிறைவு காண்பதால் - எங்களின் focus ஏற்கனவே 2014-க்குத் தாவியாகி விட்டது ! ஜனவரியில் வெளிவரக் காத்துள்ள இதழ்களின் பட்டியல் இதோ  :
 • லயன் காமிக்ஸ் : "யுத்தம் உண்டு...எதிரி இல்லை"  (கமான்சே) - ரூ.60
 • முத்து காமிக்ஸ்: "சாக மறந்த சுறா" (ப்ரூனோ பிரேசில் ) - ரூ.60
 • சன்ஷைன் லைப்ரரி : "பயங்கரப் புயல் "(கேப்டன் பிரின்ஸ்) - ரூ.60
 • சன்ஷைன் கிராபிக் நாவல் : "பிரபஞ்சத்தின் புதல்வன் " - ரூ.60
இவற்றிற்கான பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேல் நிறைவாகி விட்டன ! தொடரும் நாட்களும் இதே இருளில் தான் தொடர்ந்திடக் காத்திருக்கும் பட்சத்தில் - மாதாமாதம் 'டிரௌசரைக் காணோம் நண்பர்களே !' என கானம் பாட நிச்சயம் எனக்கு உத்தேசம் இல்லை ! உங்களின் சந்தாக்களை ஆவலாய் நாங்கள் எதிர்பார்க்கும் வேளை இதுவே என்பதால் - இம்மாத பட்ஜெட்டில் நம்மையும் கணக்கில் இணைத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ?

Before I sign off - இதோ இன்னுமொரு போட்டி - KBGD 2 (Kaun Banega Graphic Designer 2) ! ஜனவரியின் "பயங்கரப் புயல்" மறுபதிப்புக்கு அட்டைப்படம் டிசைன் செய்திட ஆர்வம் கொண்ட நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! டிசம்பர் 10 தேதிக்குள்ளாக உங்களின் ஆக்கங்கள் நம்மைச் சேர்ந்திட வேண்டும் ! இம்முறை வெற்றி பெறும் போட்டியாளரின் போட்டோ அந்த இதழினில் பிரசுரமாகும் ; ரூ.1000 கிப்ட் செக் எனும் கொசுறோடு ! Give it a shot guys ? KBT -3 (மொழிபெயர்ப்புப் போட்டி )-ன் முடிவுகளை டிசம்பர் இதழ்களை despatch செய்திடும் காலையில் இங்கு அறிவிக்கிறேன் ; நிச்சயம் அதனில் சுவாரஸ்யங்கள் காத்துள்ளன என்பது மட்டும் உறுதி ! Bye for now....see you soon folks !

Saturday, November 16, 2013

இது வேங்கையின் வேளை !

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் இறுதி மாதங்கள் எப்போதுமே எங்களுக்குக் கொஞ்சம் பிசியான சமயங்களாக இருப்பது வழக்கமே ; இம்முறையோ   டிசம்பரில் 1+3 = 4 வெளியீடுகள் என்ற அட்டவணையும் தற்செயலாய் அமைந்து விட்டதால் நெட்டி கழன்று   விட்டது ! ஒவ்வொரு மாதமும் இதழ்களின் தயாரிப்புப் பணிகளை கடைசி நிமிடம் வரை ஜவ்வாய் இழுத்துச் சென்று விட்டு - அச்சுப் பணிகள் நடந்தேறும் சமயங்களில் நான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எங்காவது புறப்பட்டுச் செல்வதே வாடிக்கையாகிப் போய் வர -  -printing ல்  நேர்ந்திடும் குளறுபடிகளுக்கு ஒரு வகையில் நானும் பொறுப்பாகி வந்து கொண்டிருந்தேன். இம்முறை அதே தவறைத் தொடர்ந்திடாது, மூச்சு விட அவகாசத்தோடு பணிகளை முடித்து ; அச்சு வேலைகளையும் கொஞ்சமேனும் உடனிருந்து கவனிக்க முடிந்தால் நலம் என்ற வெறியில் செயல்பட்டதால் இவ்வாரம் முழுவதும் எங்கள் டீமுக்கு சிவராத்திரிகளே ! கடந்த 15+ நாட்களாய் நாளொன்றுக்கு 6-7 மணி நேர மின்தடையும் அமலில் உள்ளதால் அதன் பொருட்டு நேரிட்ட விரயச் செலவுகளும், தலைவலிகளும் தம் பங்கிற்கு எங்கள் உறக்கங்களுக்கு உலை வைத்தன ! பொதுவாய் இங்கு நம் வலைப்பதிவினில் நான் எட்டிப் பார்ப்பது இரவு வேளைகளில் ! ஆனால் இந்த ஒரு வாரமாய் வீடு திரும்பும் வேளை கொட்டாவிகளின் ஆர்ப்பரிப்பைச் சமாளிக்கவே இயலாத ஆவிகளின் நடமாட்ட வேளை என்பதால் தாக்குப் பிடிக்க முடியவில்லை ! So ஐந்தாறு நாட்களாய் இங்கு ஆஜராக முடியாது போனதற்கு சாரி guys ...but  சில சமயங்களில் பணிகள் 'கட கட'வென   ஓடிடும் போது நாமும் அந்த flow-ல் இணைந்து கொள்ளாவிட்டால் சிக்கலாகி விடுகிறது !   இங்கு தலை காட்ட இயலாது போன இவ்வொரு வாரத்தினில் - 2013-ன் இறுதி மறுபதிப்பான சிக் பில் இதழையும் ; டைகரின் "வேங்கையின் சீற்றத்தையும் " முடித்து விட்ட திருப்தி கிட்டியுள்ளது ஒரு சின்ன ஆறுதல் ! அவற்றின் அச்சுப் பணிகளும் அடுத்த 3 நாட்களுக்குள் முடிந்திடும் நிலையை எட்டி விட்டதால் கொஞ்சமாய் தலை பாரம் குறைந்துள்ளது போன்ற feeling இன்றைக்கு ! தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டு ; தியாகங்கள் பல செய்த தீரனாக இந்தப் பத்தியை நான் எழுதிடவில்லை ! ஆண்டின் அட்டவணையினில் -  பெரும்பான்மையான இதழ்களை இறுதி 3 மாதங்களுக்கு ஒதுக்கிய எனது  கோணங்கித்தனமான திட்டமிடல் மாத்திரமே இந்த 'விழி பிதுங்கும் படலத்தின் ' சூத்ரதாரி என்பது தெளிவாய்ப் புரிகிறது ! ஷெரிப் டாக்புல் அடிக்கடி ஆர்டினின் டிக்கியில் விடும் பாணியிலான 'படீர் ' உதையை எனக்கு நானே விட்டுக் கொள்ளவொரு மார்க்கம் இருக்கும் பட்சத்தில், எப்போதோ அதை செயலாக்கி இருப்பேன் ! பணிகளின் பளு ஒருபக்கமெனில் - ஒட்டு மொத்தமாய் 3 அல்லது 4 இதழ்களுக்கு ஒரே மாதத்தில் பேப்பர் வாங்கும் போதும் ; ராயல்டி பணம் அனுப்பிடும் போதும் நேரும் தலைசுற்றல் - தலைமுறைக்கும் நினைவிருக்கும் ரகம் ! ஆனால் ஏதேதோ குட்டிக் கரணங்களும், அந்தர் பல்டிகளும் அடித்தாவது  2013-ன் அறிவித்த எண்ணிக்கையிலான இதழ்களை, உரிய சமயத்தில் பூர்த்தி செய்திடுவோம் என்ற நிம்மதி - சிரமங்களை சிரத்திலிருந்து சிறகடிக்கச் செய்கின்றது ! (அடடே...கவிதை ?!) 

இதோ டிசெம்பரின் ஒரு வெளியீட்டின் அட்டைப் படம் + முன்னோட்டம் : 
Original Cover

டைகரின் அட்டைப்படம் தன் முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் தான் வெளியுலகைப் பார்த்திடும் வாய்ப்புப் பெறுகிறது ! Yes - இந்தாண்டின் முதல் வெளியீடான NBS -ன் அட்டையில் டைகரைப் போடுவது என்று தீர்மானித்த பின்னே - நமது ஓவியரைக் கொண்டு மொத்தம் 3 டிசைன்கள் வடிவமைத்தோம். அவற்றுள் ஒன்றே இப்போது "வேங்கையின் சீற்றத்தின் " அட்டையாக வந்துள்ள டிசைன் ! டைகரின் "எடுப்பான" நாசி துவாரம் closeup -ல் கொஞ்சம் டெரராக இருப்பது போல் பட்டதால் NBS -க்கு இதைப்  பயன்படுத்திடவில்லை ! (NBS -க்கு பயன்படுத்திய டிசைனுக்கு இதுவே தேவலாம் என்ற கருத்துக்கள் நிச்சயம் வரும் என்பதும் எதிர்பார்த்திடாதில்லை!)  பின்னட்டையைப் பொறுத்த வரை - சமீப மாதங்களது பாணியைப் பின்பற்ற இயலாது போனதில் எனக்கும் வருத்தமே ! நமது டிசைனர் பொன்னன் ஆண்டின் இறுதி என்பதால் ரொம்பவே பிஸி ஆகி விட்டதால் - பின்னட்டைக்காக இன்னொரு காத்திருப்புக்கு 'தம்' இல்லை நம்மிடம் ! So நேரம் இன்னமும் விரயம் ஆகிட வேண்டாமே என்ற வேகத்தில் back cover -ல் Heathcliff -க்கு வாய்ப்பளித்துள்ளோம் ! அடுத்த இதழ் முதல் - we will be back to the recent patterns !NBS உடனான ஒட்டுதல் இந்த இதழின் அட்டைக்கு மாத்திரமில்லாது, கதைக்கும்  உண்டு தானே ?! NBS-ல் துவங்கிய 'இருளில் ஒரு இரும்புக் குதிரை"  கதையின் concluding part இது ! So  ஜனவரியின் தொங்கல் - மாதம் # 12-ல் ஒரு முடிவுக்கு வருகிறது ! டைகரின் வழக்கமான பரபரப்பு ; மாறுபட்ட ஓவிய பாணிகள் ; வண்ணச் சேர்க்கைகள் என இதுவொரு ரசிக்கச் செய்யும் இதழாய் அமையுமென்பது உறுதி ! இந்த இதழோடு 2013-ன் பிளஸ் 6 முயற்சி நிறைவுறுகிறது ! வெவ்வேறு சைஸ்கள் ; விலைகள் ; கதைகள் என செயலாற்ற இந்த வரிசை எனக்கு சுதந்திரம் தந்த வகையில் மகிழ்ச்சியே ! பார்க்கலாமே - 2014-ன் பொழுதுகள் மீண்டும் இது போலொரு கதவைத் திறக்கும் சக்தியை நமக்குத் தருகிறதா என்று :-)

2014-ன் அட்டவணைத் தேர்வில் - "கா.க.கா " வண்ணத்தில் என்ற கோரிக்கையைத் தாண்டி நிறைய மாற்றுக் கருத்துக்கள் எழுந்தது இரு விஷயங்களின் பொருட்டு :

1.சிக் பில்லின் "நிழல் 1..நிஜம் 2 " மறுபதிப்புக் கதையின் தேர்வு நிறைய புருவங்களை உயர்ந்திடச் செய்துள்ளது ! இதன் பின்னணியில் உள்ள லாஜிக் ரொம்ப ரொம்ப சிம்பிள் ! தற்போது சிக் பில் வரிசையில் வண்ண டிஜிட்டல் files தயாராக இருப்பது மொத்தம் 14 கதைகளுக்கு மாத்திரமே ! இவற்றுள் நாம் சென்றாண்டு வெளியிட்ட "கமபளத்தில் கலாட்டா" + "ஒரு கழுதையின் கதை" + இப்போது வெளியிடவிருக்கும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "சேரும். So  எஞ்சி இருப்பது 11 ; அவற்றுள் 4 கதைகள் 1958-ல் வெளியான புராதனங்கள் என்பதால் அவற்றை நான் இப்போதைக்குத் தொடப் போவதில்லை ! பாக்கியுள்ள 7 கதைகளில் 6 நாம் இது வரை வெளியிடாத புதுசுகள் எனும் போது மறுபதிப்புப் பட்டியலுக்கென எஞ்சி இருப்பது ஒன்றே ஒன்று தான் ! அது தான்  - "நிழல் 1..நிஜம் 2" ! மேற்கொண்டு கதைகளை வண்ணக் கோப்புகளாய் மாற்றிடும் பணிகளை 2016 வரை அவர்கள் செயல்படுத்திடப் போவதில்லை என்றும் அறிய நேர்ந்தது ! ஆகையால் சிக் பில் மறுபதிப்புக்கு வேறு தேர்வுகள் ஏதும் இல்லை என்ற ஒரே காரணமே - நி.1..நி.2 தேர்வின் பின்னணி !

2.மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் 2014-ன் அட்டவணையே சொதப்பல் என நண்பர்கள் சிலர் அபிப்ராயப்பட்டிருந்ததையும் கவனித்தேன் ! சில நேரங்களில் ஒவ்வொரு கதையின் பின்னேயும் ஒரு சொல்லப்படா கதை இருப்பது உண்டு ! நான் நிறைய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டாலும், சிற்சில சந்தர்ப்பங்களில் என் பக்கத்துச் சிரமங்களை முழுமையாய் வெளிப்படுத்துவது கிடையாது தான் ! ஏற்கனவே சின்னதான வாசகர் வட்டம் நாம் எனும் போது - 'நொய்-நொய்' என 'இதில் கஷ்டம் ; அதில் பிரச்னை' என நானும் பஞ்சப்பாட்டை வாசிப்பது வாடிக்கையாகிப் போய் விட்டால் உங்களுக்கும் ஒரு அயர்ச்சி தோன்றிடும் தானே ? ஒற்றை வரியில் சொல்வதானால் - black & white இதழ்களை ரூ.60 விலைகளில் வெளியிடும் பட்சத்தில் கூட கையைக் கடிக்கும் சூழ்நிலை இன்று ! சமீப TEX தீபாவளி ஸ்பெஷல் இதழின் costing போட்டுப் பார்த்தால் சிகப்பு மசியில் தான் ரிசல்ட் வருகின்றது ! 2 மாதங்களுக்கு ஒரு முறை 15% வரை விலை கூடும் இந்த ரகத் தாள்களை நம்பி ஓராண்டுக்கு முன்பாக நாம் விலை நிர்ணயம் செய்வது தற்கொலைக்கு சமமாய் உள்ளது ! So 'அத்தியாவசியம்" என்ற கதைகளைத் தாண்டி black & white தொடர்களைக் கொஞ்ச காலத்துக்கேனும் விலக்கி வைத்திருப்போம் என்ற தீர்மானத்தின் பலனே - மர்ம மனிதன் மார்டின் + ராபினின் புறக்கணிப்பின் பின்னணி ! 2014-ல் சந்தாக்கள் ; விற்பனைகள் சற்றே நிலை கொண்டு விட்டால் - 2015 முதல் black & white நாயகர்களை மறு பிரவேசம் செய்யச் செய்திடலாமே என்பது தான் எனது சிந்தனையின் சாராம்சம். 'அப்படியானால் டெக்ஸ் ; மர்ம மனிதன் மார்டின் ; ராபின் - என முழுப் பட்டாளத்தையும் வண்ணத்துக்கே கொண்டு செல்வது தானே ?' என்ற கேள்வி எழுப்பும் சிரமத்தை விட்டு வைக்காது - அதற்கான பதிலையும் சொல்லிடுகிறேன் ! இத்தாலியப் படைப்புகளின் சகலமும் அளவில், கதைநீளத்தில் - பிரெஞ்சு பாணிகளில் இருந்து ரொம்பவே மாறுபட்டவை ! நமது தற்போதைய சைஸ்கள் ; விலைகள் ; தயாரிப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரெஞ்சு பாணிக்கு ஒத்துப் போவதால் அதனிலிருந்து மாறுபடும் போது விலைகளில் ஆரம்பித்து, நெடுக நிறைய சிக்கல்கள் எழுகின்றன ! ஆகையால் தான் இத்தாலிக்கு கருப்பு-வெள்ளை என்ற ஒதுக்கீடு! 

சில updates : 
 1. 2014-ன் சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 10-22 தேதிகளில் நடக்கவிருக்கிறது ! சென்றாண்டு அமைந்திருந்த அதே நந்தனம் மைதானத்தினில் ! நமக்கொரு ஸ்டால் தந்திட அமைப்பாளர்களின் சம்மதம் கிட்டுமென்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! Fingers & toes crossed !!
 2. இம்மாத இதழ்களின் E-Bay விற்பனையில் சிறிதும் வாய்ப்பே தராது டெக்ஸ் முன்னணி வகிக்கிறார் ! 'சி.சு'.52 பிரதிகள் ; டெக்ஸ் : 90 பிரதிகள் ! 
 3. டிசம்பரில் டயபாலிக் இதழ் # 2 வரவிருக்கும் விஷயம் லேசாகத் தெரியத் துவங்கியதுமே - இத்தாலியில் இருந்து விசாரிப்புகள் குவியத் துவங்கி விட்டன ! டயபாலிக் சேகரித்து வைத்துள்ள ரசிகர் பட்டாளம் பிரமிக்கச் செய்கிறது ! 
 4. தொடரும் மாதத்தில் 'புதிய தலைமுறை' இதழில் முழுப் பக்க வண்ண விளம்பரம் செய்வதாக உள்ளோம் ! நண்பர்கள் அதற்கான டிசைன் செய்து அனுப்பினால் - as always would be most welcome !!
 5. Breaking நியூஸ் : வாழைப்பூ வடைப் போராட்டக் குழுவின் தலைவர் கிராபிக் நாவலுக்கும் சேர்த்தே நேற்றைக்கு சந்தா செலுத்தி விட்டார் என்பதால் - போராட்டம் வாபஸ் ஆகிறதாம் ! வாழைப்பூக்கள் தப்பித்தன !! 
 6. 2014-ன் அட்டவணை finalize செய்யப்பட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்பது நமது லயனின் 30-வது ஆண்டுமலரின் திட்டமிடல்களே ! கதைகளை பற்றிய விவாதங்களுக்குள் இறங்கிடும் முன்னே அந்த மெகா இதழுக்கொரு பெயர் சூட்டும் படலம் அவசியமாகிடும் அல்லவா ? என் மனதில் ஒரு பெயர் fix ஆகியுள்ளது - ஆனால் அதையும் விட அட்டகாசமாய் உங்களின் suggestions இருப்பின் நிச்சயம் பரிசீலனை செய்வோம் ! Get those thinking caps on people !! Bye for now !