Powered By Blogger

Thursday, August 30, 2012

ஒரு புதிய வருகை !!




நண்பர்களே,

வணக்கம் ! செப்டம்பர் 8  & 9 தேதிகளில் பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON 2012 -ல் நமது அடுத்த இதழான 'Wild West ஸ்பெஷல்' விற்பனைக்குக் கிட்டிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பணிகளை நிரம்பவே துரிதப்படுத்தி வருகிறேன் ! அது மட்டுமல்லாது நமது Never Before ஸ்பெஷல் பணிகள் இமாலய உயரத்திற்கு என்   முன்னே நிற்பதால், அதிலும் எக்கச்சக்கமாய் கவனம் செலுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ! So இங்கே அவ்வப்போது எட்டிப்பார்ப்பதைத் தவிர அதிகமாய் நேரம் செலவிட இயலவில்லை !Apologies folks ! நாளை இரவு உங்களின் சமீபத்திய பதிவுகளுக்கு இயன்றளவு பதில் இடுவேன் உறுதியாய் ! 

இதோ நமது WW ஸ்பெஷலின் அட்டைப்பட டிசைன் ! 


இரு அட்டைகளுக்குமே ஒரிஜினலாக பிரெஞ்சு ஓவியர்கள் தயாரித்த அதே படங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னணி வர்ணச் சேர்க்கைகளை மட்டும் நாமாக அமைத்துள்ளோம் ! ஒரிஜினலின் வண்ணங்கள் ரொம்பவே plain ஆக இருந்ததால் அவற்றை அப்படியே பயன்படுத்திட மனம் ஒப்பவில்லை ! கண்ணை அதிகம் உறுத்தாத மெல்லிய வண்ணங்களை இம்முறை நமது டிசைனர் பிரயோகித்துள்ளது சிறப்பாக உள்ளதென்று எனக்குத் தோன்றியது ! நிச்சயம் இதில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடுமென்று நான் அறிவேன் ; வழக்கம் போல் உங்கள் எண்ணங்களை பதிவிடலாமே !

"எமனின் திசை மேற்கு" கதையின் உள்பக்கங்கள் வண்ணத்தில் அற்புதமாய்  மிளிர்கின்றதென்றே சொல்ல வேண்டும் ! மிகவும் வித்தியாசமான வண்ணச் சேர்க்கை ; மாறுபட்ட கதைக் களமென்று விரைவில் உங்களை சந்திக்கவிருக்கும் இக்கதைக்கு உங்களது மதிப்பீட்டினை அறிந்திடும் ஆவல் இப்போதே எனக்குள் !

டைகரின் சாகசம் சிறிதும் சோடை போகா 'பரபர ' பட்டாசு ! புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் (காலின்   வில்சன்) வண்ணத்தில்  கலக்கும் இந்த சாகசம் டைகர் மன்றத்தினருக்கு சரியான விருந்து படைத்திடும் ! இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன ! You will love them for sure !



பெங்களுருவில் கோரமங்களாவில் (http://www.comicconindia.com/Express/index.php?page=venue) நடந்திடவிருக்கும் இந்த COMIC CON 2012 நமக்கு ஒரு புதிய களமே.!என்ன எதிர்பார்த்திடுவதென்ற ஐடியா  பெரிதாக ஏதுமில்லை என்பதே நிஜம் ! இந்திய காமிக்ஸ் உலகப் பதிப்பகப் பெருந்தலைகளோடு தோள் உரசிடும் ஒரு அனுபவமாக ; சம காலக் காமிக்ஸ் முன்னேற்றங்களை ரசித்திடும் ஒரு வாய்ப்பாக எங்களுக்கு இது அமைந்திடுமென்று நம்புகிறேன் ! இரு தினங்களும் அங்கே ஒரு காமிக்ஸ் ரசிகனாய் ரவுண்ட் அடித்திடும் எண்ணத்தில் உள்ளேன் ! உங்களை அங்கு சந்திக்க இயன்றால் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியே ! Please do drop in folks !! 

பெங்களுருவில் மட்டுமல்லாது மதுரையில் இன்று முதல் துவங்கியுள்ள புத்தகத் திருவிழாவிலும் நமது இதழ்கள் ஸ்டால் எண்  125  & 126 -ல் கிடைத்திடும் ! முதல் நாளே decent விற்பனை என்ற சேதி சந்தோஷமளித்தது ! புன்னகைக்க இன்னுமொரு காரணமாய் அமைந்தது இன்று காலையில் நமது அலுவலகத்தில் என்னை சந்தித்திட்ட வாசகர்களின் உற்சாக வெளிப்பாடுகள் ! இருவருமே 37 ..38 வயதிலிருந்த நண்பர்கள் ; தனித்தனியே வந்திருந்த போதிலும் இருவரும் வெளிப்படுத்திய உணர்வுகள் ரொம்பவே ஒற்றுமையானவை. ! அவர்களது காமிக்ஸ் ஆர்வம் understandable தான் ; எனினும் இருவருமே தத்தம் வீடுகளில் குட்டிப் புதல்வர்கள் நமது நியூ லுக் ஸ்பெஷல் இதழினை ரொம்ப ரசித்ததைப் பற்றிச் சொன்ன போது நிஜமான சந்தோஷம் ! ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!

P.S: வார இறுதிகளில் என்னோடு பேசிட எண்ணும் நண்பர்கள் இனி தொடர்பு கொள்ள வேண்டிய நிரந்தர எண் இதுவே : 98428  64584 !  முந்தைய எண் இனி செயல்படாது ! 

Saturday, August 25, 2012

காமிக்ஸ் வேட்டைகளும் ..சில கசப்புகளும்..!


நண்பர்களே,

வணக்கம் ! 12 மணி நேர மின்வெட்டு தந்திடும் கும்மாங்குத்தும், அதன் கிறுகிறுப்பும் தடையாகிட 3 நாட்களுக்குப் பின் இன்று தான் இங்கே தலை காட்ட முடிந்தது ; இடைப்பட்ட சமயத்தில் சற்றே வருத்தமளிக்கும் சில பதிவுகள் இங்கே அரங்கேறி வருவதைக் கவனித்தேன்! பிரச்னைகள் ; வேறுபாடுகள் எதுவாக இருப்பினும் அவற்றை ஒரு பொதுத் தளத்தில் உரக்க ஒலிக்கச் செய்வது  நிச்சயம் நியாயமல்ல என்று என் மனதிற்குப் பட்டது !! ஆரோக்கியமான விவாதங்கள் ; யாரையும் நோகச்செய்யா கருத்துப் பரிமாற்றங்கள் என நமது தளம் செயல்பட்டால், அதுவே நமது முதிர்ச்சிக்குப் பறைசாற்றாக அமைந்திடும் அன்றோ !

முந்தைய இதழ்களின் சேகரிப்பில் நம்மிடையே ஒருவிதக் கசப்புணர்ச்சி மேலோங்கி நிற்பது எதற்காகவென்று எனக்குப் புரியவில்லை ! காமிக்ஸ் சேகரிப்பின் மீதுள்ள அதீத ஆர்வத்தில் நிறைய premium கொடுத்து முந்தைய இதழ்களை நம் நண்பர்கள் எவரேனும்  வாங்கிடும் பட்சத்தில் அதற்கு எனது ஆதரவு நிச்சயம் கிடையாது ; ஆனால் இந்த விஷயத்தை  Simple ஆகப் பார்த்தால் சந்தைக்கு வந்த பின்னே ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்திடுவது அதன் supply & demand மாத்திரம் தானே ? அது மாம்பழமாக இருந்தாலும் சரி ;முத்து காமிக்ஸின் ஆரம்ப கால இதழாக இருந்தாலும் சரி! காமிக்ஸ்களுக்கு மாத்திரம் சந்தைப் பொருளாதாரம் apply ஆகிடக் கூடாதென்பது எவ்விதம் ஒரு சரியான எதிர்பார்ப்பாய் இருந்திடல் முடியும் ? 

நிதானமாக சிந்திப்போமே....!அந்த முந்தைய இதழ் பழைய புத்தக வியாபாரியை நாடி வந்தது தான்  எப்படி ?

யாரோ ஒரு வாசகர் படித்து விட்டு, போதுமென நினைத்து அதனைக் கழித்திருக்க வேண்டும் ; அல்லது  வீட்டில் இடத்தைக் காலி பண்ணும் பொருட்டு தூக்கிப் போட்டிருக்க வேண்டும். பிரயோஜனமில்லா சங்கதி என ஒருவர் தூக்கிப் போட்ட விஷயம் இன்னொருவருக்கு அரியதொரு பொருளாகிடும் போது, மாறிப் போவது அதன் பயன்பாடு மட்டுமல்ல, அதன் சந்தை மதிப்பும் கூடத் தானே ! நம் இதழ்கள் கிடைத்திட அரிது என்று பீற்றிக் கொள்வதோ  ; அதன் வெளிமார்கெட் விலை அதிகமாகிடுவதால் ஏதோ சாதனை செய்து விட்டோமென காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தொனியிலோ இதனை நான் நிச்சயமாகச் சொல்லிடவில்லை ! 

காமிக்ஸ்கள் சேகரிப்பதென்பது இங்கு வேண்டுமானால் ஒரு சமீபத்திய நிகழ்வாக இருந்திடலாம் ; ஆனால் உலகின் முன்னணி மார்கெட்களில் இது ரொம்பவே சகஜம். அமெரிக்காவின் புத்தகக் கடைகளில் ஒரு டாலர் பெறுமானமான இதழ்களை பத்து டாலருக்கு நானே வாங்கிய நாட்கள் ஏராளம்.  VINTAGE காமிக்ஸ் என்று ஒரு தனிப் பிரிவே, கிடைத்தற்கரிய இதழ்களை செம கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் ஒளிவும் கிடையாது ; மறைவும் கிடையாது ! நித்தமும் E-Bay சர்வதேச வலைத்தளத்தில் பழைய காமிக்ஸ் இதழ்களின் ஏலமே நடந்திடத் தானே செய்கின்றது ?!! அவ்வளவு தொலைவுக்குப் போவானேன் ? சென்ற வாரம் ஹாலந்து நாட்டவர் ஒருவர் மன்றாடும் தொனியில் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் - சுஸ்கி & விஸ்கியின் "பயங்கரப் பயணம்" இதழ் வேண்டுமென்று ! "என்ன விலைக்கு வேண்டுமானாலும் வாங்கிடத் தயார்" என்ற அவரது வேண்டுகோளுக்குப் பின்னே  காமிக்ஸ் சேகரிப்பின் வெறித்தனமான முகம் அப்பட்டமாய்த் தெரிந்தது ! அதே போல் "டேஞ்சர் டயபாலிக் " இதழ்களைக் கோரி இத்தாலியிலிருந்து எப்படியும் ஆண்டுக்கு 4 கோரிக்கைகள் வந்திடும் ! படிக்கக்கூட முடியாததொரு அந்நிய  பாஷையில் ; மகா சுமார் quality -ல் வெளியானதொரு இதழைக் கூட விட்டு வைக்காமல், என்ன விலை கொடுத்தேனும் வாங்கிட முற்படும் அந்த காமிக்ஸ் collectorகளை என்னவென்று வர்ணிப்பது? சில சமயங்களில் passion க்கு லாஜிக் கிடையாது !

காமிக்ஸ்கள் என்று மட்டுமல்லாது நாவல்கள் ; தபால் தலைகள் ; நாணயங்கள் ; பழைய கார்கள் ; மோட்டார்பைக்குகள் என்று எத்தனையோ விதமான சேகரிப்பு hobbies இங்கும் ; எங்கும் உண்டு தானே ?! இதில் காமிக்ஸ் சேகரிக்கும் ஆர்வத்தை மட்டும் குறை கண்டிடுவது சரியல்லவே ?  அப்படியே முந்தைய இதழ்களை கூடுதல் விலை கொடுத்து யாரேனும் வாங்கி விடுகிறார்கள் எனும் பட்சத்தில் கூட, அவர்கள் எத்தனை பிரதிகளை வாங்கிடப் போகிறார்கள் ? ஒரு title -ல் ஒன்றோ ; இரண்டோ ?  

எந்த ஒரு விஷயமும் சுலபமாய்க் கிட்டி வரும் வரை அதன் மேல் நமது நாட்டம் முழுவதுமாய்த் திரும்புவதில்லை ! இரத்தப் படலம் இருநூறு ரூபாய் இதழ் நம்மிடம் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாய் ஸ்டாக் இருந்த போது வந்திடாத விசாரிப்புகள் அது தீர்ந்து போன பின்னே அபரிமிதமாய் !!  அதே போலவே தான் இந்த இந்த காமிக்ஸ் சேகரிப்பும் என்று என் மனதுக்குப் படுகின்றது ! ! ரோட்டோரம் குவிந்து கிடக்கும் போது சாவகாசமாய் வாங்கிக்கலாமே என்று தோன்றும் சங்கதி ; இப்போது கிடைக்க சிரமமாகிடும் போது அரிதாக நம் கண்ணுக்குத் தோன்றிடலாம் !

அலசி..தேடியலைந்து காமிக்ஸ்களை சேகரித்து ; அடுத்தவருக்குக் கிடைக்க விடாது செய்து, மொத்தத்தையும் மீண்டும் யாருக்கேனும் கொழுத்த லாபத்திற்கு விற்பனை செய்திட்டால் அது முழுக்க முழுக்க வியாபாரமாகிடும் ; நமது வருத்தத்திற்கும் ஒரு முகாந்திரமிருக்கும் ! ஆனால் சேகரிப்பின் வசீகரத்தில் மட்டுமே செயல்படும் நண்பர்களின் ஆர்வக்கோளாறை தவிர நாம் விமர்சிக்க வேறென்ன இருந்திட முடியும் ?  

அபரிமித விலை கொடுத்து நமது இதழ்களை வாங்குவதன் அபிமானி அல்லவே நான் ; அது போன்ற உயர் விலைகள் கொடுத்து யாரது பணமும் விரயமாகிடக் கூடாதென்றே ஒரே ஆர்வத்தில் தான் வரும் ஆண்டு முதல் மறுபதிப்புகளை உயர்தரத்தில் தொடர்ச்சியாக செய்திடத் திட்டமிட்டிருக்கிறேன். மெய்யாகச் சொல்வதானால் எனக்கு மறுபதிப்புகளில் துளியும் ஆர்வமோ ; உத்வேகமோ கிடையாது. ! என்றோ ; எப்போதோ ஆக்கிய சோறை மைக்ரோ-வேவில் வைத்து திரும்பவும் சூடு பண்ணிக் கொடுத்திட ஒரு சமையல்காரன் தேவை அல்லவே என்பது தான் எனது எண்ணம் !   ஆனால் இந்தப் பழைய புத்தகச் சேகரிப்பு தந்திடும் சில கசப்புகளை, வளர்ந்திடும் துவேஷங்களை களைந்திடும் பொருட்டு மட்டுமே நான் மறுபதிப்புக்குப் பிள்ளையார் சுழி போட சம்மதித்தேன் !

இந்தப் பதிவை , பரவசமாய் காமிக்ஸ் சேகரிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு வக்காலத்தாகவோ ;சேகரிப்பில் துவண்டு போயிருக்கும் நண்பர்களுக்கு ஒரு சாடலாகவோ பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் !உபதேசம் செய்யும் ஞானமும் எனக்கில்லை ; அறிவுரை கேட்டிடும் அவசியமும் உங்களுக்குக் கிடையாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி !  எனது அவா ஒன்று மட்டுமே...! எத்தனையோ பிரச்னைகள்  நிறைந்த தினசரி வாழ்க்கையின் மத்தியினில், சின்னதாய் ஒரு இளைப்பாறுதலுக்கு  நாம் ஒதுங்கிடும்   இந்த காமிக்ஸ் எனும் நிழல் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விஷயமாக ஆகிடல் வேண்டும் !   சின்னச் சின்னதாய் ஏதேனும் மனத்தாங்கல்கள் இருப்பினும் கூட அவற்றைப் பெருந்தன்மையோடு மீறி வரும் பக்குவம் நம்மிடம்  உள்ளதென்று நான் நிஜமாக நம்புகிறேன் ! Please do prove me right folks ! 

Sunday, August 19, 2012

வண்ணத்தில் ஒரு பயணம் !


நண்பர்களே,

வணக்கம். "கறுப்பை" சிலாகித்து முந்தைய பதிவென்றால், வண்ணத்தில் மிளிர்ந்ததொரு முன்னோடி இதழை ரசித்திட முயற்சிக்கும் காலப் பயணம் இம்முறை ! 

சமீபத்தில் எனது பீரோவை ஒதுக்கிக் கொண்டிருந்த போது 1968 -ல் நமது அபிமான Fleetway நிறுவனம் வெளியிட்டிருந்ததொரு இரும்புக்கை மாயாவியின் சாகசம் என் கண்ணில் தட்டுப்பட்டது !   முத்து காமிக்ஸில் ஏறத்தாள 35 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி மலராய் வெளிவந்த முழுநீள..முழு வண்ண சாகசமான "கொள்ளைக்காரப் பிசாசு" இதழின் ஆங்கில ஒரிஜினல் அது  ! பின்னாட்களில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மறுபதிப்பும் கண்ட இதழ் தான் என்ற போதிலும்,The Phantom Pirate  என்ற அந்த ஆங்கில ஒரிஜினலைப் பார்த்திட்ட போது என்னுள் ஏராளமான பழைய நினைவுகள் பிரவாகமாய் ஓடுவதை உணர்ந்திட முடிந்தது ! எனது நினைவுத் திறனை நான் முழுவதுமாய் நம்பிடத் தயாரில்லை ; எனினும் 1977 -ல் முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் இது என்று எனக்கொரு ஞாபகம் ; correct me if I'm wrong ப்ளீஸ் ? 



அற்புதமான கதை ; மாயாவியின் மாறுதலான கதைக் களம் ; அந்தக் காலத்து வண்ண அசத்தல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த இதழின் ஆக்கத்தில் அடியேனின் சொற்பமான பங்கும் அந்தக் காலத்திலேயே இருந்திட்ட காரணத்தினால் இது எனக்கு நிரம்பவே பிரியமானதொரு இதழ் ! 

1975 -ன் தகிக்கும் மே மாதத்தில் family முழுவதையும் அழைத்துக் கொண்டு டில்லி & மும்பைக்குப் பயணமாகினார் என் தந்தை ! முத்து காமிக்ஸ் என்பது பிரமாதமான விற்பனையை கொண்டிருந்த போதிலும், என் தந்தைக்கு அது பிரதான தொழில் அல்ல ! காலெண்டர்கள் ; நோட் புக் ராப்பர்கள் அச்சிட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலில் அதகளம் செய்து கொண்டிருந்த சமயம் அது. So டில்லியில் இருந்த பிரதான காலெண்டர் முகவர் வீட்டுத் திருமணத்தில் பங்கெடுத்து விட்டு, பின்னர் மும்பைக்கும் சென்று அங்குள்ள காலெண்டர் ஓவியர்களை சந்தித்திடுவதே என் தந்தையின் பயண நோக்கம். முழுப் பரீட்சை விடுமுறை என்பதால் எங்களையும் அழைத்துக் கொண்டு சென்றார். ரொம்பவே பொடியனாக நான் இருந்த போதிலும், நமது காமிக்ஸ் கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் இருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிச் சொல்லி எனக்கு அவற்றின் மேல் தீவிரக் காதல் கொண்டு வந்திருந்தார் என் தந்தை. மும்பையில் பகலில் அவரது வேலைகளைப் பார்த்திட கிளம்பிப் போய் விட்டாலும், மாலைகளில் என்னை அழைத்துக் கொண்டு மும்பையின் பழைய புத்தகக் கடைகளுக்கு shunting அடிப்பது ஒரு routine ஆகி இருந்தது. அது போன்றதொரு மாலை நேர புத்தகத் தேடலின் பொது மாஹிம் பகுதியில் இருந்ததொரு லெண்டிங் லைப்ரரியில் என் கண்ணில் தட்டுப்பட்ட அந்தப் பழுப்பு நிறப் புத்தகமே இன்றைக்கும்   எனது பீரோவில் துயிலும்  The Phantom Pirate ! 

இன்டர்நெட் என்பதோ ; தகவல் தொடர்புகளில் துரிதம் என்பதோ பரிச்சயமே இல்லாத நாட்கள் அவை என்பதால், ஒரு கதைத் தொடரில் உள்ள மொத்த இதழ்கள் எத்தனை ; அவற்றின் நிறை-குறைகள் என்ன ; போன்ற பின்னணி ஆராய்ச்சிகள் செய்வது அப்போதெல்லாம் சாத்தியமே அல்ல  ! Fleetway நிறுவனத்தின் இந்திய முகவருக்கோ இதில் துளியும் ஆர்வமெல்லாம் கிடையாது ; "மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ் டேவிட் - இவை எல்லாமே அவருக்கு பில்லில் டைப் அடிக்கத் தேவையான பெயர்கள் மாத்திரமே. So நாமாகத் தேடித் பிடித்து கதைகளின் பெயரைச் சொல்லி இலண்டனிலிருந்து கதைகளை வரவழைக்கும் முயற்சிகளை அவ்வப்போது செய்திட வேண்டி இருக்கும். அன்று மாஹிம் லெண்டிங் லைப்ரரியில் அடியேன் தேடித் பிடித்த இதழை refer செய்து கதைக்கு ஆர்டர் செய்ததார்கள் நமது அலுவலகத்தில் ; எனக்கோ ஏதோ இமாலய சாதனை செய்து விட்டது போன்றதொரு பெருமிதம் ! 

சில மாதங்கள் இடைவெளியில் கதையின் ஒரிஜினல்கள் வந்து சேர்ந்தது ; இக்கதையினை வண்ணத்தில் வெளியிட எனது தந்தை தீர்மானித்தது எல்லாமே எனக்கு 'பளிச்' என்று நினைவு உள்ளது. அப்போதெல்லாம் கலரில் காமிக்ஸ் என்பது ஒரு rarity என்பதால், அதன் பணிகளை நான் தொடர்ச்சியாய் பராக்குப் பார்த்து வந்தேன் ! வர்ணம் பூசிட 32 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பிற்கு ஒரு ஓவியர் என்று - மொத்தம் 4 தனித்தனி ஓவியர்களிடம் பொறுப்பு தரப்பட்டது !  சிவகாசிக்கருகே இருந்திட்டதொரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணி புரிந்ததொரு ஓவியர் நமக்கும் பகுதி நேரப் பணியாளரே ! முதல் 32 பக்கங்களை அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது ! பக்கம் 33 - 64 நம்மிடம் இருந்ததொரு staff ஆர்டிஸ்ட் (பெயர் நினைவில் இல்லை) வசம் ! மூன்றாவது தொகுப்பு எங்களது ஸ்டார் ஆர்டிஸ்ட் ஆன தெய்வசிகாமணி வசம் தரப்பட்டது ! சமீபம் வரை நமக்குப் பணி செய்து வந்த இவர் லைன் டிராயிங் பணிகளில் அசகாய சூரர் ! துல்லியம் ; அசாத்திய நுட்பம் என்று நிரம்பவே திறமைசாலியான இவர் எக்கச்சக்கமாய் கூச்ச சுபாவம் கொண்டவர் ! யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசுவதே அரிது ! அப்போதைய முத்து காமிக்ஸ் அலுவலகம் நகரின் மையத்தில் இருந்ததொரு பெரிய கட்டிடத்தில் இருக்கும் ! நான் வாரத்தில் பாதி நாட்கள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இங்கே நின்று விட்டு ; கொஞ்ச நேரம் ஒவ்வொருத்தரின் பணிகளையும் பராக்குப் பார்த்து விட்டே திரும்புவது வழக்கம். மாடிக்குச் செல்லும் படிகளின் நடுவில் ஒரு தாழ்வாரம் போன்ற பகுதியில் தரையில் அமர்ந்து தான் சிகாமணி வேலை செய்து கொண்டிருப்பார் ! 



அவரோடு பேசுவது, அவரது வேலைகளை ரசிப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு ! 4 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணமும் ஒரே இதழில் இருந்திடப் போவதால் யாருடைய பணி சிறப்பாக ஸ்கோர் செய்யப் போகிறதென்று அவர்களுக்குள் ஒரு மௌனமான போட்டி நிலவியது எனக்குத் தெரியும் ! எனக்கோ எனது favorite ஆன சிகாமணி தூள் கிளப்ப வேண்டுமென்பதே ஆசை ! 

கடைசி 32 பக்கங்கள் நம்மிடம் பணிபுரிந்த இன்னொரு புதிரான ஓவியர் வசம் இருந்தது ! புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த அந்த நபரைப் பார்க்கும் போதே வறுமையின் தாண்டவம் அப்பட்டமாய் தெரிந்தது ! சோலையப்பன் என்ற அவர் ஓவியத்தில் துளியும் பயிற்சி இல்லாத, ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லிட வேணும் ! அழகாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே சிதறும் சிந்தனைகள் மனுஷனை எங்கேயாவது இட்டுச் சென்று விடும் ; திடீரென ஒரு 3 மாதங்கள் காணாமல் போய் விடுவார் ! பின்னர் திரும்பவும் வந்து எனது தந்தையிடம் மன்றாடி பணியில் சேர்ந்திடுவார் ! பின்னாட்களில் நமது லயன் காமிக்ஸ் இதழுக்கும் மனுஷன் பணி புரிந்திட்ட நாட்களும் உண்டு ; அதே போல் கண்ணாமூச்சி ஆட்டம்  ஆடிய சமயங்களும் நிறையவே உண்டு !  





நான்கு பேரும் கலரிங் பணிகளை நிறைவு செய்த பின் இந்த இதழுக்கான அட்டைப்படம் நமது சீனியர் ஓவியரின் கைவண்ணத்தில் தூள் கிளப்பியது ! காளியப்பா ஆர்டிஸ்ட் என்ற அந்த முதியவரே பின்னாட்களில் நமது 'கத்தி முனையில் மாடஸ்டி' ; 'மாடஸ்டி in இஸ்தான்புல்' ; 'இரும்பு மனிதன் அர்ச்சி' போன்ற லயன் இதழ்களுக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்திட்டவர் ! 1984 -ல் முதன்முறையாக அவர் தீட்டிக் கொடுத்த சித்திரத்துக்கு அவர் வாங்கிட்ட கூலி ரூபாய் 60 மட்டுமே என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன ??!! இன்றைக்கும் "கொள்ளைக்காரப் பிசாசு" இதழுக்காக அவர் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் நம்மிடம் பத்திரமாக உள்ளது ! இதோ அதன் ஸ்கேன் ! 


முழுவண்ணத்தில் அட்டகாசமாய் வந்திட்ட இந்த இதழுக்கு "தீபாவளி வண்ண மலர்" என்ற பெயரும், ரூபாய் 1 -50 என்ற விலையும் வழங்கப்பட்டது ! விற்பனையில் தூள் கிளப்பிய இதழ்களின் பட்டியலில் பிரதானமான இடம் பிடித்த இதழ் என்பது நம் எல்லோருக்குமே இன்று தெரியும் ! வண்ணங்கள் என்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு மிகவும் இலகுவாகி விட்ட சமயத்தில் , 35 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சுலகில் இதனை சாதித்தது எத்தனை பெரிய சங்கதி என்ற வியப்பும், மலைப்பும் என்னுள் என்றுமே தங்கிடும் ! இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே ? பின்னாட்களில் தேடித் பிடித்து இந்த இதழை வாங்கிட ; ரசித்திட முடிந்த நண்பர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் சுவையாக இருக்கும் !  

See you soon folks ! Enjoy the Sunday ! ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே ! 


Friday, August 17, 2012

கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு !


நண்பர்களே,

வணக்கம். நெடியதொரு இடைவெளிக்குப் பின் மீண்டுமொரு பதிவிடுகிறேன் ! டபுள் த்ரில் ஸ்பெஷல் ஆகஸ்ட் 15 க்கு முன்னதாகவே உங்களைச் சென்றடைந்திட வேண்டுமென்ற வேகத்தில் நாங்களும் இயன்றளவு குட்டிக்கரணம் போட்டுப் பார்த்த போதிலும்,கடந்த ஒரு வாரமாய் சிவகாசியில் கண்ணாமூச்சி ஆடிடும் மின்சாரம் எங்களுக்கு "பெப்பெ" காட்டி விட்டது ! Anyways,  'டீ....துளியூண்டு பால்விட்டு ' என்ற கதையாக ஒரு மினி தாமதமாச்சும் நிகழ்ந்தால் தானே "இது நம்ம லயன் தான்" என்று  முத்திரையினைப் பதித்தது போல் இருக்கும் ! 

செப்டம்பர் 7 & 8 தேதிகளில் பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON  2012 ன் போது நமது அடுத்த இதழான WILD WEST ஸ்பெஷல் விற்பனைக்குக் கிடைத்திட வேண்டுமென்பதால் அதன் தயாரிப்புப் பணிகள் ஒரு பக்கமும் ; நமது மெகா இதழான MUTHU COMICS NEVER BEFORE ஸ்பெஷல் இதழுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் இன்னொரு புறமும் நடந்தேறுவதால், இம்மாதம் வந்திருக்க வேண்டிய ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" (பத்து ரூபாய் இதழ்) அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! அது மாத்திரமே காரணம் என்றும் சொல்லிட மாட்டேன் ! ஜானியின் ஒரு சாகசத்தை முழு வண்ணத்தில் ; உயர்தர ஆர்ட் பேப்பரில் DOUBLE THRILL ஸ்பெஷலில் ரசித்து விட்டு, மறு பக்கம் சின்ன சைசில் ; கருப்பு வெள்ளையில் அதே ஜானியை மீண்டும் தரிசிப்பது நிச்சயம் ஒரு அபரிமித வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டிடுமென்ற பயமும் கூட ! 

வண்ணத்தின் வலிமையை ; அழகினை ரசிக்கும் அதே சமயம், black & white கதைகளின் மாறுபட்டதொரு அழகையும் நாம் மறந்திடாதிருத்தல் அவசியமென்பதாலேயே, நமது ஸ்பெஷல் இதழ்களின் பின்பக்கங்களில் தொடர்ந்து b&w சாகசங்களை வெளியிட்டு  வருகிறோம் ! அடுத்த ஆண்டில் சாகசம் செய்யத் தயாராகி வரும் டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; C.I.D. ராபின் ஆகியோர் black & white நாயகர்கள் என்பதால் இவர்களுக்காகவாது  நாம் "கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு " என்று கானம் பாடிடுவது அவசியம் ஆகும் !('டெக்ஸ் கலரில் கிடையாதா ?'என்ற கேள்வி நிச்சயம் எழுந்திடுமென்று அறிவேன் ; டெக்ஸ் இதழ்களின் மறுவரவு துவங்கிடும் சமயத்தில் அதனை அலசிடுவோம் !)



2013 க்கான காலண்டரில் டெக்ஸ் வில்லர்  ; மார்ட்டின் ; சிக் பில் ; லக்கி லூக்; கேப்டன் டைகர் ; லார்கோ வின்ச் ஆகியோருடன், புதிதாய் அறிமுகமாகவிருக்கும் டிடெக்டிவ் கில் ஜோர்டான் ; அப்புறம் மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் என்று ஒரு பரபரப்பான பட்டாளமே தயாராகி வருகின்றது ! 1987 -ல் நமக்கு நேர்ந்திட்ட "எதை வெளியிடுவது ? ; எதை ஒத்தி வைப்பது ?" என்ற அந்த சந்தோஷமானதொரு குழப்பம் கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் தலை தூக்கிடும் போல் தெரிகின்றது ! டெக்ஸ் கதைகளை நீளம் கருதாமல் ஒரே இதழாக வெளியிடுவது ஒரு option என்பதால் குட்டியானதொரு தலையணை சைசில் டெக்ஸின் இதழ்களைக் கண்டிடப் போகிறீர்கள் !

சாகச வீரர் ரோஜர்


கறுப்பு ; வெள்ளை நாயகர்களுக்கு நூறு ரூபாய் விலைகள் அவசியமாகிடாது என்பதால் - ரூபாய் 50 ; 30 விலைகளில அவர்களை உலா வரச் செய்திடல் - பாக்கெட்டில் பொத்தல் போடாதென்ற வகையில் விலையில் ஒரு சமரசமாகவும் ; அதே சமயம் நம் தேவைக்குப் பொருத்தமானதாகவும் அமைந்திடுமென்று தோன்றியது ! So கதையின் நீளத்தைப் பொருத்து டெக்ஸின் தடிமனான இதழ்களை ரூபாய் 50 (or) 60  விலைகளிலும் ; மர்ம மனிதன் மார்ட்டின் ; ராபின் போன்றோரின் standard format சாகசங்களை ரூபாய் 30 விலையிலும் தரமான பேப்பரில் அச்சிட்டு இடையிடையே அழகாய் வெளியிடுவது சரியாக இருக்குமென்று நினைத்தேன் ! What say folks ?

உங்களின் எண்ணங்களையும்;டபுள் த்ரில் ஸ்பெஷலுக்கான விமர்சனங்களையும் இங்கே நீங்கள் பதிவிடும் சமயத்திற்குள் - சுமார் 35 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிடும் கால இயந்திரத்தினுள் நுழைந்திட முயற்சிக்கிறேன் - எனது அடுத்த பதிவின் மூலம் ! நாளைய பொழுதிற்குள் அதுவும் இங்கே அரங்கேறிடும் ! See you again ! 

Thursday, August 02, 2012

சிங்கத்தோடு சிறுபயணம் !


நண்பர்களே,

"வேலை பெண்டு கழற்றிவிட்டது ; ஆகையால் ஒரு வாரமாய் இங்கே வந்திட இயலவில்லை " என்று மாமூலான டயலாக் விடப் போவதில்லை நான் ! மாறாக....மெய்யாலுமே பெண்டு கழன்று விட்டதைக் காரணமாய் சொல்லிடப் போகிறேன் !  முதுகு வலி எனும் வில்லனோடு அவ்வப்போது நடத்திடும் மல்யுத்தம் இம்முறை ஒலிம்பிக்ஸ் சீசன் என்பதாலோ என்னமோ, சற்றே நீண்டு கொண்டே செல்ல, இங்கே ஆஜராக முடியாது போனது. Sorry guys !

இடைப்பட்ட நாட்களில் நமது DOUBLE THRILL ஸ்பெஷல் இதழின் பணிகள் ஜரூராய் நடந்தேறி வருகின்றதை சந்தோஷமாய் பார்வையிடுவது ; வரவிருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நேரடி விற்பனை ஸ்டால் கிடைத்திடாத போதிலும், நண்பர் ஸ்டாலினின் உதவியோடு இரு பெரிய பதிப்பகங்களின் ஸ்டால்களில் நமது இதழ்களை விற்பனைக்கு அனுப்பிடுவது தொடர்பான பணிகளை முடுக்கி விடுவதென பொழுதைக் கழித்தேன் ! இன்னொரு பக்கம் செப்டெம்பரில் பெங்களுருவில் நடைபெறவிருக்கும் COMIC CON -ல் நமது "WILD WEST ஸ்பெஷல்" இதழினை விற்பனைக்குக் கொணர்ந்திட வேண்டுமென்ற வேகத்தில் பணிகளும் நடந்தேறி வருகின்றன! 

ஆகஸ்ட் 15 -ல் வரவிருக்கும் DOUBLE THRILL ஸ்பெஷலின் நிறையப்  பக்கங்கள் நம் வாசகர்களின் கடிதக் கணைகளால் இம்முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது கொசுறுச் சேதி ! சூடான ; குளிர்வான எண்ணப் பரிமாற்றங்கள் !Watchout ! அப்புறம் நமது இந்த வலைப்பதிவிலிருந்து சுவாரஸ்யமான discussions இனி தொடரும் இதழ்களில் இடம் பெற்றிடும்! இன்டர்நெட்டின் ஆளுகைக்கு அப்பாற்பட்டு நின்றிடும் நம் இதர நண்பர்களுக்கு இங்கே நடந்தேறிடும் எண்ணச் சிதறல்கள் தெரிந்திட வேண்டுமென விரும்புவதால் - இதற்கென இனி 4 பக்கங்களை ஒதுக்கிட உள்ளேன் ! இங்கே அடிக்கடி வருகை தரும் உங்களுக்கு அது ஒரு "மறு ஒளிபரப்பாகத்" தோன்றினாலும், புதிதாய்ப் படிக்கும் நண்பர்களுக்கு இது சுவைப்படுமென்றே நினைத்தேன் !  What say folks ? இந்தப் புதுப் பகுதிக்கு என்ன பெயர் சூட்டலாமென்று உங்களின் suggestions ப்ளீஸ் ? 

இதோ - உங்களின் நினைவலைகளை 1985 ன் இறுதிக்கு இட்டுச் சென்றிட latest instalment of "சிங்கத்தின் சிறுவயதில்" ! Happy Reading ! 


Before I sign off....நவம்பரில் வரவிருக்கும் நம் "தங்கக் கல்லறை" வண்ண மறுபதிப்பின் சின்னதாய் ஒரு (low resolution) ட்ரைலர் ! Hope you like it !!