Powered By Blogger

Saturday, July 29, 2023

பெருந்துறையில் பெரும்துரைகள்...!!

 நண்பர்களே,

வணக்கம். கோவை விழா துவங்கியது நேற்றைக்குப் போலுள்ளது ; அதற்குள்ளாக அவர் பழைய மாப்பிள்ளையாகிடும் பொழுதும் புலர்ந்து, கூப்பிடு தொலைவில் புதியவராய் ஈரோடு மினுமினுத்துக் கொண்டிருக்கிறார் ! But பழைய மாப்பிள்ளைக்கு இன்னமும் ஞாயிறின் விற்பனை காத்திருக்க, தெறிக்க விடும் புதிய ரெக்கார்டை அவர் தொடப் போவது நிச்சயம் ! இந்த வியாழன் ஒரு நாளைத் தவிர்த்த பாக்கி அனைத்து நாட்களிலும் கோவைக்காரவுக அடித்திருப்பதெல்லாமே சிக்ஸர்ஸ் ! நாளைக்கும் போட்டுச் சாத்தி விட்டீர்களெனில், "யே...சூப்பரப்பு...சூப்பரப்பு.." என்றபடிக்கே கேரவனை ஈரோட்டுக்கு திசைதிருப்பிடுவோம் ! புனித மனிடோ - மனசு வைப்பீராக !

And நாளை சிக்ஸர் மேளா வேண்டிக் காத்திருப்பது நம்மள் கி காமிக்ஸ் கிரிக்கெட் லீகிலுமே தான் என்பதில் no secrets !! Ashes தொடர் ; மேற்கிந்தியத் தீவில் நடைபெற்று வரும் இந்திய ஒரு நாள் போட்டிகள் ; ஸ்ரீலங்கா vs பாகிஸ்தான் தொடர்களையெல்லாம் நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்க அவசரம் அவசரமாய் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்திருப்பதை BBC-ன் புண்ணியத்தில் கேள்விப்பட்டிருப்போம் ! பெருந்துறையில், நாளை பெரும் துரைகள், மட்டை பிடிக்கவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியினை  உலகமே ரசிக்க ஆவலாய்க் காத்திருக்க, நானும் அதற்கு விதிவிலக்கல்ல ! இக்கட மட்டும் வழக்கம் போல பணிகள் கடைசி நிமிடம் வரையிலும் நாக்குத் தொங்கச் செய்யாதிருப்பின், நேரில் கண்டு களிக்கும் ஜனத்திரளினில் நானும் ஐக்கியமாகியிருப்பேன் ! So நாளை நேரலை இல்லாவிடினும், சைடு அலை ; ஒரு ஒர அலை - என்று ஏதாச்சுமொரு அலையில் இங்கே updates செய்ய முனைந்தால் சூப்பராக இருக்கும் !! கெலிக்கப் போவது டெக்சா ? ஸாகோரா ? லக்கியா ? டைகரா ? மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருப்போம் - அங்கே மூச்சிரைக்க நம் மூத்த குடிமக்கள் பஸ்கி எடுக்கப் போவதை எதிர்நோக்கி !! May the best team win gentlemen ! God be with you !! நீங்கள் முன்னெடுத்திருப்பது ஒரு அசாத்திய நட்பின் கொண்டாட்டத்தினை ! நாளை அந்தப் போட்டியில் கோப்பைக்கு உரிமை கோரவிருப்பது ஒரேயொரு அணியாக மட்டுமே இருக்கப் போகிறது தான் ; ஆனால் நட்பெனும் சமாச்சாரத்தில் அனைவருமே winners all the way !! 

டைகரை போட்டோமோ ; டெக்ஸை கண்ணில காட்டினோமோ ; லக்கியை வெளியிட்டோமோ - அவையெல்லாமே பெரும் சாதனைகள் என்றிட மாட்டோம் ; but இதோ, இந்த நட்புக்கு சின்னதாயொரு பாலம் அமைக்க சாத்தியமானதே, அதுவே எங்களின் ஆயுட்கால சாதனை என்பேன் !!   

ஈரோட்டில் நாளை கிரிக்கெட் திருவிழா என்றால், வெள்ளியன்று துவங்குகிறது புத்தகத் திருவிழா & சனியன்று களை கட்டவிருப்பது நமது முத்துவின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்ட திருவிழா ! புத்தக விழாவினில் இம்முறை கோவை மக்களின் வாசிப்பு ரசனைகளுக்கேற்பவே புக்ஸை பிரதானப்படுத்திட எண்ணியுள்ளோம் ! கோவையில் மாயாவிக்கு மவுசு அத்தனை ஜாஸ்தியாய் இருக்கக் காணோம் ; மாறாக டெக்ஸ் & லக்கி லூக் தூள் கிளப்பியுள்ளனர் !  சிறார்களுக்கான "பீன்ஸ்கொடியில் ஜாக்" ; "சிண்ட்ரெல்லா" போன்ற கதை சொல்லும் காமிக்ஸ் இதழ்களும் அழகாய் விற்பனை கண்டுள்ளன ! Black & white இதழ்களில் விலை குறைவான புக்ஸ் எல்லாமே decent விற்பனை ! And surprise...surprise...மேகி கேரிசன் நல்ல விற்பனை கண்டுள்ளார் ! So ஈரோட்டிலும் இதே template தொடரும் என்றே எண்ணியுள்ளோம் ; பார்க்கலாமே !!

நமது ஈரோட்டு ஸ்பெஷல் வரிசையில் BIG 3 ரெடியாகி ஜம்மென்று காத்திருக்க, நான்காவது இதழான மர்ம மனிதன் மார்ட்டினோடு மல்யுத்தம் துவங்கியது ஒற்றை தினத்துக்கு முன்னே தான் ! இந்த முழுவண்ண லேட்டஸ்ட் மார்ட்டின் தொடரினை உறுதி செய்து விட்டிருந்த போதிலும், பணம் அனுப்ப ஜவ்விழுத்திருந்தோம் என்பதால் கதைகள் கைக்கு வந்திருக்கவில்லை ! அவசரம் அவசரமாய் பணத்தைப் புரட்டி அனுப்பிய பின்னே கோப்புகள் நம் கைக்கு வந்ததே இந்தச் செவ்வாய்  மதியம் தான் ; ஜூனியர் எடிட்டரின் உபயத்தில் இரண்டே நாட்களில்  இத்தாலியிலிருக்கும் மொழிபெயர்ப்பாளரிடம் இதனை எழுதி வாங்கிட வியாழன் ஆகியிருந்தது ! ஆஹா....64 பக்க கதை  ; கருணையானந்தம் அங்கிளிடம் தள்ளி விட்டு ஞாயிறுக்குள் எழுதி வாங்கிவிட்டாலும், இரண்டே தினங்களுக்குள் DTP ; பிரின்டிங் என சகலத்தையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அவரோ, "மார்ட்டினா ? ஒரு வாரம் ஆகுமேப்பா ?" என்று சொல்ல, confusion என்று மண்டையை சொரிய ஆரம்பித்தேன் ! வேறு வழியின்றி பேனாவையும், பேடையும் தூக்கிக் கொண்டு வெள்ளி காலையில் எழுத அமர்ந்தால், கதையின் ஓட்டம் சும்மா காந்தமாய் இழுப்பதை உணர முடிந்தது ! 

Oh yes ...மாமூலான மார்ட்டின் template தான் ; ஒரு வரலாற்றுப் புள்ளியோடு நிறைய கற்பனையைக் கலந்து கட்டி எப்போதும் போல வெளுத்துக் கட்டியுள்ளனர் தான் ! ஆனால் இம்முறையோ கணிசமான வித்தியாசங்களுடன் !! For starters - முழு வண்ணம் ! And இது லேட்டஸ்ட் மார்ட்டின் ! செம ஸ்டைலாய் வலம் வருவது நம்ம மர்ம மனிதன் மாத்திரமல்ல, டயானாவும், 'உர்ர்..கிர்ர்...ஜாவாவும் தான் ! Drone பயன்படுத்துகிறார் மார்ட்டின் ; GPS கொண்டு தேடல்களை நடத்துகிறார் ; ஸ்டைலாய் சண்டை போடுகிறார் ; 64 பக்கங்களே எனும் போது சும்மா 'ஜிவ்'வென்று பறக்கிறது கதை ! வழக்கம் போலவே ஆங்காங்கே விஞ்ஞானம் ; இரசாயனம் ; ரசவாதம் என்று கதாசிரியர் டாப் கியரைப் போட்டு விட, அவசரம் அவசரமாய் கூகுளுக்குள் மண்டையை நுழைக்கவும் வேண்டிப் போனது ! முட்டி மோதிட வேண்டி இருந்தாலும் கதை செம சுவாரஸ்யமாக இருக்க, பிசாசாய் ஓட்டமெடுத்த பேனா, இரவு 8 மணிவாக்கில் "சுபம்" போட்ட போது எனக்கே கொஞ்சம் மிரட்சியாகத் தானிருந்தது ! பிட்டத்துக்குக் கீழே தார்குச்சி வைத்தால் வண்டியின் வேகமே வேற மாதிரி போலும் ! என்று நினைத்துக் கொண்டே கத்தையாக பக்கங்களை DTP க்குத் தந்தேன் ! And இதோ - இந்தப் பதிவை டைப் செய்திட அமர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னே DTP முடிந்து ; எடிட்டிங்கும் முடிந்து - திங்களின் பிரிண்டிங்குக்கு all set !! நிறைய 'ஆட்றா ராமா...தான்றா ராமா' பண்ணியிருக்கிறோம் தான் ; but நமது குட்டிக்கரண அளவுகோல்களுக்குமே இது லைட்டாக டூ மச் என்பேன் ! Anyways - இந்த மினி மார்ட்டின் வெளியான பின்னே ஆங்காங்கே கணிசமான கேச இழப்புகள் guaranteed !! 

And இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களின் லிஸ்டில் கடைசி இதழின் preview !! ட்ரெண்ட் !! 8 ஆண்டுகளுக்கு முன்பாய் ஆரவாரங்களின்றி அமைதியாய் நம் மத்தியில் அறிமுகம் ஆன மனுஷன் ! கனடாவின் காவல்துறை ; பறந்து விரிந்து பனிவனங்களில் பணி ; ஒருவிதத் தனிமை விரும்பி ; மென்சோகம் இழையோடும் கதாப்பாத்திரம் ! என்றைக்குமே ஆக்ஷனில் அதிரடிகள் காட்டியதுமில்லை ; வசனங்களிலும் அனல் பறக்க அனுமதித்தவரில்லை ! பற்றாக்குறைக்கு சகலத்தையும் சோலோவாய் செய்து முடிக்கும் ஜித்தர் ! டெக்ஸுக்கு ஒரு கார்சன் ; டைகருக்கு ஒரு ஜிம்மி ; பிரின்சுக்கு ஒரு பார்னே ; ரிப் கிர்பிக்கு ஒரு டெஸ்மாண்ட் என்று துணைக்கதாநாயகர்கள் தோள் கொடுப்பதோடு, கொஞ்சமாய் கதைகளுக்கு இலகுத்தன்மை வழங்கவும் காரணமாக இருப்போர் ! But இங்கே ஒரேயொரு நாய்க்குட்டி தான் டிரெண்ட்டோடு ரவுண்ட் அடித்து வந்தது and அதையுமே கதாசிரியர் கொஞ்ச நாட்களில் பேக் அப் பண்ணிவிட்டார் ! So வெற்றியோ-தோல்வியோ ; ஹிட்டோ-சொதப்பலோ - அதன் பூரணமும் டிரெண்டின் கணக்கிலேயே ! And  சூப்பர்-டூப்பர் ஹிட் என்றெல்லாம் இவர் ஒரு நாளும் நம் மத்தியினில் தெறிக்க விட்டதில்லையென்றாலும், மினிமம் கியாரண்டி நாயகராகவே இருந்து வந்திருக்கிறார் ! மொத்தம் எட்டே கதைகள் கொண்ட தொடர் ; ஆண்டுக்கு ஒன்றென இதோ - finish line-ல் நின்று கொண்டிருக்கிறோம் !! ஒரு மென்மையான தொடரை அழகாய் நகர்த்திச் சென்று அதன் இயல்பான முடிவு வரை இட்டுச் செல்ல சாத்தியப்பட்டிருப்பதில் செம ஹேப்பி ! அதே சமயம், இனி இந்த சிகப்புச் சட்டைக்காரரை நாம் பார்க்கவே போவதில்லை எனும் போது சற்றே அடைக்கும் தொண்டையோடு டாட்டா சொல்லிடும் தருணம் இது ! "பனிவனப் பிரியாவிடை" - எப்போதும் போலான டிரெண்ட் ஆல்பம் ! எப்போதும் போலவே ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்களும் ரவுசு பண்ணியுள்ளனர் ! Adieu Trent !! உங்களை அறிந்திட இயன்றது எங்களின் சந்தோஷம் !!


இதுவரை வெளியாகியுள்ள 7 டிரெண்ட் ஆல்பங்களில் நீங்கள் படித்திருப்பது எத்தனை folks ? உங்களின் பார்வையில் இந்த நாயகருக்கு / இந்தத் தொடருக்கு என்ன மார்க் ?

ஒரு தொடர் முற்றுப் பெற்றிருக்க, "முற்றும்" என்றெண்ணியிருந்த இன்னொரு தொடரில் ஒரேயொரு ஆல்பம் கூடுதலாய் தலை காட்டவுள்ளது ! கதாசிரியர் ஷான் வான் ஹாம்மின் கைவண்ணத்தில் "வேய்ன் ஷெல்டனின்" ஆல்பம் # 14 தயாராகி வருகிறதாம் !! 2024 ரிலீஸ் ! What say guys - மீசைக்காரரை மறுக்கா தரிசிக்கலாமா ?

And XIII spin-off தொடரினில் 3 பாக ஸ்பெஷல் spin-off காணவிருக்கும் "ஜோன்ஸ்" கூட ரெடியாகி வருகிறார் !

Before I sign out - நமது ஈரோட்டு சந்திப்பு பற்றி !! 

காலை 9-30 க்கே ஆஜராக ஆரம்பித்தால், லூட்டிகளுக்குப் பொழுதுகள் சரியாக இருக்கும் என்பேன் ! So சனி காலை ; OASIS ஹோட்டலின் மகேஸ்வரி ஹாலில் ; ஒன்பதரைக்கு சந்திப்போமா all ?  உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க செம ஆர்வமாய் வெயிட்டிங் ! Please do drop in !!!

Bye all....see you soon ! Have a Cricketing Sunday !!


Saturday, July 22, 2023

கோவை & ஈரோடு = டபுள் டமாக்கா !!

 நண்பர்களே,

வணக்கம். அக்னி நட்சத்திர பிரேக்குக்குப் பின்பாய் புத்தக விழா சீசன் afresh துவங்கியாச்சூ !! கோவையில் தற்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் விழாவினைத் தொடர்ந்து ஈரோடு காத்துள்ளது ! And பெரும் தேவன் மனிடோவின் புண்ணியத்தில் கோவையில் நமக்கு ஸ்டால் நம்பர் 1 என்றால். ஈரோட்டில் ஸ்டால் நம்பர் 2 !! So விழாவுக்கு வருகை தருவோர் அனைவரின் பார்வைகளிலும் நமது புக்ஸ் ஜெகஜோதியாய் காட்சி தராது போகாதென்பது உறுதி ! பார்வைகள் விற்பனைகளாய் உருமாறுவது நமது சமர்த்தே என்பதால், குலுக்கலில் கிட்டியுள்ள இந்த அதிர்ஷ்டத்தினை சரியாகப் பயன்படுத்திடுவது நமது கைகளில் தானுள்ளது ! And ஆங்காங்கே ஸ்டாலில் உதவிட கடல்யாழ் போல நண்பர்கள் கிட்டிடும் பட்சத்தில், கலக்கிப்புடலாம் போலும் !  Thanks ரம்யா !! துவக்க தினம் பெரிதாய் விற்பனை இல்லையென்றாலும், இன்றைய (சனி) விற்பனை சும்மா தெறி ரகம் !! இம்முறை இங்கிலீஷ் காமிக்ஸ் பிரதிகளையுமே கோவைக்குக் கொண்டு சென்றுள்ளோம் எனும் போது - ஆஸ்டெரிக்ஸ்சும், லக்கி லூக்கும் கொங்கு மண்டலத்தில் புது இல்லங்களைச் சென்று சேர்ந்துள்ளனர் ! தொடரும் நாட்களில் ஒரு விற்பனை pattern புலப்பட்டதெனில், சென்னையின் ரசனைகளும், கோவையின் ரசனைகளும் எங்கு ஒத்துச் செல்கின்றன ? எங்கே வேறுபடுகின்றன ? என்பதை புரிந்து கொள்ள இயலும் ! Awaiting eagerly !!

கோவையில் விழா நடந்து கொண்டிருக்கவே, நமது கவனங்கள் ஈரோட்டின் பக்கமாயும் நிலைகொண்டுள்ளன ! And அங்கே விழா துவங்கிடவும், நமது வாசக சந்திப்பு அரங்கேறிடவும் 2 வாரங்களுக்கும் குறைவாகவே நாட்கள் இருப்பதால், ஆபீசில் ஒரு இனம் சொல்ல முடியா buzz !! BIG 3 - "கார்சனின் கடந்த காலம்" + சுஸ்கி-விஸ்கி ஸ்பெஷல் 2 & "THE BIG BOYS ஸ்பெஷல்" பைண்டிங் முடிந்து செவ்வாயன்று நம்மிடம் தேடி வந்து விடும் ! And "கா.க.கா." இதழினில் தங்களது குடும்ப போட்டோஸ் போட்டுக் கொள்ளப் பிரியப்பட்டுள்ள வாசகர்களின் புக்ஸ் சும்மா எகிறி அடிக்கிறது ! High resolution போட்டோக்களை அனுப்பியுள்ளோரின் இல்லங்களில் புக் கைக்குக் கிடைக்கும் வேளையில் செம உற்சாகம் காத்திருக்கும் என்பேன் ! Maxi சைசில் ; முதல் பக்கத்தில் தத்தம் குடும்ப உறுப்பினர்களுடனான pictures - 🔥🔥🔥தான் ! Will be a book to treasure for sure !

ஸ்பெஷல் புக்ஸ் ஒரு பக்கமிருக்க, ஈரோட்டில் காத்துள்ள 2 ஸ்பெஷல் நிகழ்வுகளின் பக்கமாகவும் நமது கவனங்கள் ஈர்க்கப்படாது போவது tough என்பேன் !! Because காத்திருக்கும் அடுத்த ஞாயிறில் (30 ஜூலை) விளையாட்டு உலகையே ஊத்தப்பம் போல புரட்டிப் போடவிருக்கும் ஒரு பெரும் க்ரிக்கெட் போட்டி காத்துள்ளது !! Ashes தொடரா ? வெஸ்ட் இண்டீஸ் தொடரா ? தம்பி...அப்பாலிக்கா ஓரமா போய் ஆடிக்கோங்க !!" என்று சொல்லும் விதமாய் COMICS CRICKET PREMIER LEAGUE வருகுதூ !! இதோ பாருங்களேன் :


4 டீம்ஸ் ; 44 பென் ஸ்டோக்ஸ் - ஈரோட்டையே அதிரச் செய்ய முஷ்டி மடக்கி ரெடியாகி வருகின்றனர் ! யூனிபார்ம் என்ன ; லோகோ என்ன ; விளம்பரங்கள் என்ன ; பயிற்சிகள் என்ன ; ஏற்பாடுகள் என்ன - என்று IPL-க்கு செம tough தரும் விதத்தில், நம்ம "இளம்" சிங்கங்களும், புலிகளும் இந்தப் போட்டியை ரணகளமாக்கிடவுள்ளனர் !  கராம்பா..... may the best team win !! 

அடுத்த ஞாயிறில் போட்டியெடுக்கப் போகும் போட்டி எனில், அதனைத் தொடர்ந்திடப் போகும் சனியன்று ஈரோட்டில் "காமிக்ஸோடு ஒரு காலப்பயணம்" வெயிட்டிங் !! முத்துவின் பொன்விழா ஆண்டினை போன ஆண்டே கொண்டாடியிருக்க வேண்டியது ; ஆனால் ஓமைக்ரானின் ஒண்ணு விட்ட சித்தப்பூ புதுசாய் களம்காணக்கூடும் என்ற கொரோனா பீதி இருந்ததால், 2022-ல் அந்தச் சந்திப்பு சாத்தியமாகாது போனது ! "லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வரலாம்" என்று தஞ்சாவூர் கல்வெட்டுக்கு நிகரான போதனை நமக்கெல்லாம் கிட்டியுள்ளது தானே ? அந்தப் பொன்மொழியினை இந்த belated பொன்விழா ஆண்டின் கொண்டாட்டத்துக்கொரு முகாந்திரமாய் ஆக்கி விட்டால் போச்சு !! 

So ஆகஸ்ட் 5 (சனி) காலையில் ஈரோட்டில் THE OASIS எனும் ஹோட்டலின் "மகேஸ்வரி அரங்கில்" காலை 10 to மதியம் 2 வரை நாம் சந்திக்கலாமா guys ? 

முத்துவின் துவக்க நாட்களின் பிரதிநிதிகளாய் இன்றும் நம்மோடு சுறுசுறுப்பாய்ப் பயணித்து வரும் சீனியர் எடிட்டரோடும், பிரதம மொழிபெயர்ப்பாளர் கருணையானந்தம் அவர்களோடும் இந்த அரை நூற்றாண்டுப் பயணத்தினை அசை போடலாம் ! And வழக்கம் போலவே நிறைய அரட்டை ; நிறைய ரவுண்டு பன் ; நிறைய போட்டிகள் ; சூப்பரான மதிய லஞ்ச் - என்று நான்கு ஆண்டுகளுக்கு பின்பான இந்த மீட்டிங்கை ஜாலியாக்கிடலாமா folks ? Oh yes, ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்கள் ரிலீஸ் & அவற்றை அங்கு பெற்றுக்கொள்ள opt செய்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்டேஜில் வைத்து வழங்கிடல் என்பனவும் agenda-வில் இருந்திடும் ! நாம் வழக்கமாய் சந்தித்து வரும் Le Jardin ஹோட்டலானது மராமத்துக்கென மூடப்பட்டிருப்பதால் நண்பர் (ஈரோடு) ஸ்டாலினின் முயற்சிகளில் சூப்பரான இந்த ஹாலில் இடம் பிடித்திருக்கிறோம் ! ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து ரொம்பவே அருகாமையிலான இடம் ! இதோ உள்ள map உங்களுக்கு உதவிடலாம் guys !  


And ஏதேனும் ஒத்தாசைகள் தேவைப்படும் பட்சத்தினில் ஸ்டாலின் சாரின் ஆபீஸ் வாட்சப் நம்பரில் உருவாக்கப்பட்டிருக்கும் குழுவினில் இணைந்து கொள்ளலாம் guys : 424222  2298 !! (Click on the Link to join the group  : https://chat.whatsapp.com/CZjreFjqibZLapQ3rJLIMDஈரோடு விழா வரையிலும் அடியேனும் அங்கொரு அங்கத்தினனாக இருப்பேன் ! Just in case நண்பர்களில் சிலர் சனி காலையில் வெளியூர்களிலிருந்து ஈரோட்டுக்கு இதற்கென வருவதாக இருந்து ; காலையில் குளித்து freshen up செய்திட மட்டும் இடம் தேடிடும் பட்சத்தில், அந்த வாட்சப் க்ரூப்பில் தகவல் போட்டால் உதவிட ஏற்பாடுகள் செய்வோம் ! But கொஞ்சம் முன்கூட்டியே ப்ளீஸ் !! கடைசி நிமிடத்தில் சொல்லினால் எதுவும் ஆகாது !

அப்பாலிக்கா இந்தாண்டின் சந்திப்பில் ஒரு "பெசல் ஐட்டமும்" உண்டு - காமிக்ஸ் பட்டிமன்றம் - என்ற ரூபத்தில் !! 

💖(தமிழ்) காமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம் 1970's & '80's ஆ ? 
அல்லது 
💙நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களா ?

என்பதே தலைப்பு ! 

பழமையோடு பயணிப்பதை விரும்புவோர் ஓர் அணியிலும், இன்றைய பொழுதுகளை ; ரசனைகளை சிலாகிப்போர் இன்னொரு அணியிலும் பேசிடலாம் ! (ரெண்டுமே லேதுடா நைனா !! என்பது உங்க பதிலா ? சாரிங்கோ - அது சிலபஸிலேயே இல்லாத பதில் !!

நமது கருணையானந்தம் அங்கிள் தான் நமக்கு சாலமன் பாப்பையாவாகச் செயல்படவிருக்கிறார் ! So - இக்கடையோ, அக்கடையோ - எக்கடையேனும் பேசிட எண்ணும் நண்பர்கள் இங்கேயோ ; மின்னஞ்சலிலோ கரம் தூக்கிக் காட்டலாம் guys ! ரெடியாகும் நண்பர்களின் நம்பருக்கேற்ப பேசும் நேரத்தினை நிர்ணயிக்கலாம் ! தயாருங்களா ?

அப்புறம் நம்மிடமுள்ள முந்தைய பெயிண்டிங்குகளின் பெரும் பகுதியினை ஈரோட்டுக்குக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளோம் ! இம்முறை கிட்டியிருப்பது சற்றே பெரிய ஹால் என்பதால் அவற்றை அங்கே "சித்திரம் பேசுதடி" என்ற display ஆக்கிடவுள்ளோம் ! கிட்டத்தட்ட 175+ சித்திரங்கள் இருக்க, அவற்றின் மத்தியினில் ஆந்தை விழியனுடன் ஒரு walking tour-ம் இருந்திடவுள்ளது ! அந்த இதழ்கள் பற்றி brief ஆகப் பேசிடலாம் ; நினைவு கூர்ந்திடலாம் ! 

அப்புறம் COMICS CRICKET PREMIER LEAGUE-ல் பங்கேற்ற / வென்ற அத்தனை வீரர்களுக்கும் மேடையில் பாராட்டுக்கள் இருந்திடும் !! (So ஞாயிறு மேட்ச் ஆடிய கையோடு கணிசமாய் அயோடெக்ஸ் வாங்கி தேய்ச்சுண்டு, மறுக்கா ஈரோட்டில் ஆஜராகிட ரெடியாகிடுங்கோ வீரர்ஸ் !!)

மதியம் நல்லதொரு veg buffet லன்ச் காத்திருப்பதால், விழாவின் முழுமைக்கும் இருந்து, "விலாவை" சிறப்பித்து விட்டு, விருந்துண்டு செல்ல வேண்டுமாய் முத்து 50 சார்பில் அனைவரையும் வரவேற்கிறோம் !! We'd be privileged to see you all folks !! Please do drop in !! Phew....சொல்ல அவசியப்படும் முக்கிய தகவல்களை சொல்லியாச்சென்று நினைக்கிறேன் ! 

Moving on, ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் 3 !! அவற்றுள் show stealer ஆக இருக்கப் போவது - தொங்குமீசை மெபிஸ்டோ தான் !! கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணத்தில் வெகு சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த 3 பாக ஆல்பத்தில் அதகளம் செய்வது இந்த மாந்த்ரீக வில்லனே !! அவனது மகன் யமாவும் உண்டு தான் ; but மொத்த அதிரடிகளையும் குத்தகைக்கு எடுத்திருப்பதென்னவோ பெருசு மெபிஸ்டோ தான் ! And நமது இரவு கழுகார் தனது full டீமோடு களமிறங்க சரவெடி அதிரடிகள் தான் ! இம்முறை கதை அரங்கேறும் களம் முற்றிலும் புதுசு என்பதொரு novelty ! இதோ - இந்த ஆல்பத்தின் அட்டைப்பட preview :


இதற்கொரு Variant கவர் போடுவதாய் ஒரிஜினலாக யோசித்திருந்தோம் ; ஆனால் தற்போதைய வேலைப்பளுக்களின் மத்தியில் அந்த அகுடியாவை drop செய்து விட்டோம் ! So டெக்ஸ் வரிசையில் ரொம்பவே மாறுபட்ட ராப்பராக இது அமையட்டுமென்று இந்த ஒரிஜினல் டிசைனைத் தேர்வு செய்தோம் !

இம்மாதத்து இன்னொரு racy த்ரில்லர் - நம்ம V காமிக்சின் "சென்று வா...கொன்று வா..!" ஜம்பிங் ஸாகோரை காலி பண்ண ஒரு அழகான ராட்சசி களமிறங்க அனல் பறக்கிறது !! இதோ கவர் : 


இதழ் # 3 - நம்ம கனடா காவலர் டிரெண்டின் இறுதி சாகசம் ! அதன் கோப்புகள் இந்த நொடியில் என் கையில் இல்லை என்பதால் அதனை தொடரும் பதிவில் கண்ணில் காட்டுகிறேன் !

And before I sign out - இதோ கோவையிலிருந்து சில clicks !! Bye all...see you around ! Have a super sunday !










Sunday, July 16, 2023

ஒரு மாலை இளவெயில் நேரம்....!

 நண்பர்களே,

வணக்கம். வேளை கேட்ட வேளைகளில் வேதாளமாய் தூக்கம் லாத்துது ; உறங்க வேண்டிய நேரங்களிலோ கொட்டாங் கொட்டாங்கென  முழித்துக் கிடக்கத் தான் முடியுது ! பல்லை தேய்ச்சோமான்னும் ஞாபகமிருக்க மாட்டேங்குது ; இப்போ எந்த வேளைக்கான மாத்திரையை விழுங்கி வைக்கணும்னும் புரிய மாட்டேங்குது ! பசிக்கிறதோ, இல்லியோ - சிக்கென்ற யூனிபார்ம் போட்ட அம்மணிகள் சோத்தைக் கண்ணில் காட்டின போதெல்லாமே விழுங்கி வைத்ததன் பலனோ - என்னவோ, ஊடு திரும்பின பிற்பாடும் கண்ட கண்ட நேரத்துக்கு வயிறு கரையுது ! அடங்கப்பா....நம்ம தட்டை மூக்கார் அதகளம் பண்ணின ஊராச்சே ; வேலைக்கோசரம் நாமளும் அந்த அட்லாண்டாவுக்கு ஒரு எட்டு போனாக்கா ஏதாச்சும் பின்னிடலாமோ என்று போனால், அட்லாண்டாவில் அடை தான் சுட முடியுது நம்மாலே ! Phewwww !! ஒரு மெகா அச்சு இயந்திரத்தினைப் பார்வையிட அமெரிக்கப் பயணமானது போன வாரத்தில் அவசியமாகிப் போக, ஞாயிறன்று மூட்டை,முடிச்சுகளோடு புறப்பட்டுப் போனவன் இந்த சனி வரைக்கும் அக்கட தேசத்தில் கொட்டிங் the குப்பை ! "ஆங்....அங்கே போயும் காமிக்ஸ் வேலைகளைப் பாப்பேனே ;  அப்டியே கரெக்ஷன் போடறதை சுடச் சுட வாட்சப்பில் படம் புடிச்சு, புடிச்சு அனுப்புவேனாம் - நீங்க இக்கட முடிச்சு முடிச்சு வைப்பீங்களாம் !" என்று பலமான பீலா சகிதம் "மீண்டு(ம்) வந்த மாயன்" 3 அத்தியாய பிரிண்டவுட்களை பைக்குள் திணித்து ஒரு முக்கால் கிலோ வெயிட் ஏற்றிய கையோடு பயணம் புறப்பட்ட கூத்தும் அரங்கேறியிருந்தது ! அங்கேயோ ஆணி கூட பெருசாய்ப் பிடுங்க முடிந்திருக்கலை  ; தக்கி முக்கி முதல் அத்தியாயத்தில் ஒரு 45 பக்கங்களை மட்டுமே ஒப்பேற்ற முடிந்திருந்தது ! 

So ஊர் ஊராய், தெருத் தெருவாய் பணி செய்த ஞாபகங்கள் சார்ந்த எனது flashback பேழைக்குள் இவை லேட்டஸ்ட் நுழைவாகிப் போனது மாத்திரமே மிச்சம் ! "இந்த புக்கை எட்டாப்பு படிக்கிறச்சே, எட்டு பஜ்ஜிகளை உள்ளே தள்ளிக்கினே வாசிச்சிருக்கேன்" என்ற ரீதியில் பால்யத்து நினைவுகள் நமக்கிருக்கும் அல்லவா ? அதே ரீதியில், இந்த 'அங்கிள் to தாத்தா ஆன நாட்களிலும்' சற்றே மாறுபட்ட நினைவலைகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை ! "ஆங்...இது கானாடுகாத்தானில குளத்தங்கரையிலே குந்தி எழுதின லக்கி லூக் கதையாச்சே ?! ; ஐ....இது சிகாகோ ஏர்போர்ட்டில் மொக்கை போட்ட பதிவாச்சே ? ; ஆத்தீ....மூ.சந்தில விட்டு மொத்தியெடுத்த "என் பெயர் டைகர்" பதிவிற்கான பின்னூட்டங்களுக்கு பதில் போட்டபடிக்கே பயணம் பண்ணின ஷார்லெட் ஊராச்சே ? ஹைய்யோ...கண்ணில தண்ணி வராத குறையா "மின்னும் மரணம்" புக்குக்கு கரெக்ஷன் பாத்தது இதோ, இந்த தாம்பரம் பிளாட்பாரத்தில் தானே ?" என்று ஊருக்கு, வீதிக்கொரு நினைவு இருப்பதுண்டு ! அதன் லேட்டஸ்ட் அத்தியாயம் தான் இந்த அட்லாண்டா ஆர்வக்கோளாறு ! மிச்சம் சொச்சம் முடியெல்லாம் கொட்டிப் போன ஒரு not so distant future-ல், வீட்டில் குந்தியபடியே வேர்க்கடலையை கொறித்தபடிக்கே Netflix-ல் அழிச்சாட்டியம் பண்ணக்கூடிய ஓய்வினில் இந்த ஞாபகங்களை ஆசை போடுவேனோ - என்னமோ ?!

ரைட்டு....சனி அதிகாலையில் சென்னை திரும்பியவன், சூட்டோடு சூடாக மதுரை விமானத்தைப் பிடித்திருக்க வேண்டியவன் ! ஆனால், "விலா" ஒன்று சார்ந்த அழைப்பிதழ் 2 வாரங்களுக்கு முன்பாகவே மின்னஞ்சலில் வந்திருக்க, "ஆத்தீ....நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு அனுப்பியிருக்காக ; போகாம இருக்கப்படாது !!" என்று தீர்மானித்திருந்தேன் ! Becos வந்திருந்த அழைப்பிதழ் - பிரெஞ்சு தூதரகத்திலிருந்து ! ஒவ்வொரு ஜூலை 14-ம், பிரான்சுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பான நாள் - becos பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட பஸ்ட்டில் சிறைச்சாலை முற்றுகை நிகழ்ந்தது அந்த தினத்தினில் தான் ! மன்னராட்சி முறைக்கு சங்கு ஊதி, மக்களாட்சி மலர்ந்திட முதல் வித்து விதைக்கப்பட்டது 1789-ல் இந்த நாளில் தான் என்பதால், பிரான்சுக்கு தேசிய நாளாய் ; ரொம்பவே ஸ்பெஷலான தினமாய் கருதப்படுகிறது ! And இந்தாண்டினில் பாரிசில் அரங்கேறிடும் கோலாகலங்களில் நமது பாரத பிரதமர் அவர்கள் தான் பிரதம விருந்தாளி என்பதை செய்திகள் நமக்குச் சொல்லியிருக்கும் தானே ?! பிரெஞ்சு-இந்திய நல்லுறவினைக் கொண்டாடும் விதமாய் இந்த Bastille Day-ஐ ஜூலை 14 தேதியன்று பாண்டிச்சேரியில் அரசு விழாவாக அவர்களின் தூதரக அலுவலகத்தில் கொண்டாடியுள்ளனர் ! அதன் நீட்சியாய், ஜூலை 15-ம் தேதி மாலையில் சென்னையிலொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், தூதரகத்தின் பிரத்தியேக விருந்தினர்களுடன் ஒரு கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருக்க, நம்மையும் அதற்கு invite செய்திருந்தனர் ! தூதரகத்திலிருந்தும், பாண்டிச்சேரி செக்ரடெரியட்டிலிருந்தும் அழைப்புகள் வந்திருக்க, சர்வ நிச்சயமாய் attendance போட்டே தீருவதென்று தீர்மானித்திருந்தேன் ! So சென்னையிலேயே தங்கி விட்டு, நுங்கம்பாக்கம் Taj Coramandel ஹோட்டலில் மாலை ஆறரைவாக்கில் நடைபெறவிருந்த விழாவுக்கு செல்வதென திட்டம் ! (நேற்றைக்கு பதிவுக்கு அல்வா கிண்ட நேர்ந்ததும் இதன் பொருட்டே !!)  

செம posh ஆன ஹோட்டலின் செம posh ஆன ball ரூமில் அரங்கேறவிருந்த பார்ட்டி and நகரின் உச்ச பிரமுகர்கள் அனைவருமே வருகை தந்திடக்கூடிய விழாவுமே இது என்பது ஸ்பஷ்டமாய் புரிந்தது ! So வழக்கமான ஏதாச்சுமொரு ஜிங்குச்சா சொக்காயை மாட்டிக் கொண்டு  அங்கே ஆஜராகினால், கதைக்கு ஆகாதென்பதை யூகிக்க முடிந்தது ! என்னிடமோ பைக்குள் இருந்தவை ஜீன்சும், பொம்மை போட்ட சட்டையும் தான் ! அவசரம் அவசரமாய் ஓடினேன் ஊரின் மையத்திலிருந்த ஷாப்பிங் மாலின் மெகா ஸ்டோருக்கு ! கோவை சரளா சொல்வது போல "நல்லா...காஸ்டலியா....ஒரு ரண்டாயிரத்துக்குள்ளாற கோட் ஒண்ணை தேடித் புடிக்கணுமே " என்று எனக்குள் மைண்ட்வாய்ஸ் ! அடடே...போன ரெண்டாவது நிமிஷமே ரூ.2499-க்கு ஒரு செம ஸ்டைலான கோட் கண்ணில்பட்டது ! "ஏ..சூப்பரப்பு !" என்றபடிக்கே அதை போட்டுப் பார்க்க முனையும் முன்பாக, அருகாமையில் தொங்கிக்கொண்டிருந்த இன்னொரு கோட்டிலும் விலையைப் பார்த்தேன் - ரூ.7499 என்றிருந்தது ! ஷாக்காகிப் போய் "இது ரண்டுக்கும் மத்தியிலே ஏண்டாப்பா இம்புட்டு விலை வித்தியாசம் ?" என்று அருகிலிருந்த சேல்ஸ் தம்பியிடம் கேட்டேன் ! ஒத்தை ரூவாய்க்கு ஒரு முழு தேங்காய் வாங்க கடைக்கு வந்த கவுண்டமணியைப் பார்ப்பது போலான லுக் ஒன்றை எனக்குப் பரிசளித்து விட்டு, "ரூ.2499-ங்கிறது கோட்டுக்குள்ளாற மாட்டியிருக்கிற சட்டையின் விலை சார் ! கோட்டுக்கான விலை ரூ.7499 தான் !" என்றான் ! ஏற்கனவே ஜக ஜோதியாய் மினுமினுத்துக் கொண்டிருந்த கடையினில் நான் வாங்கிய பல்பும் சேர்ந்து எரிந்திட, கண்ணெல்லாம் கூசாத குறை தான் and விலையைப் பார்த்து கண்ணெல்லாம் வேர்க்காத குறை தான் ! 

"ச்சீ...ச்சீ...இந்த கலரே நல்லா இல்லேப்பா ; fitting கூட அம்புட்டு தெளிவில்லை" என்றபடிக்கே குதிங்கால் பிடரியிலடிக்க ஜகா வாங்கினேன் ! தேடினேன்...தேடினேன்....மாலின் மூலை முடுக்கெல்லாம் தேடினேன்.....ஊஹூம் ...பருப்பு வேக வழியில்லை !  அமேசானை தட்டிப் பார்த்தால், ரெண்டாயிரத்து ஐநூறுக்கெல்லாம் வண்டி வண்டியாய் கோட்கள் கண்ணில்பட, இவனுங்களோ அதையே வைத்துக் கொண்டு, விலையில் பிம்பிளிக்கி பிலாக்கி காட்டிக் கொண்டிருப்பது செம  கடுப்பாய் இருந்தது !! 40% தள்ளுபடி போன பிற்பாடு நாலாயிரத்துக்கு வந்ததொரு கோட்டை வேறு வழியின்றி கண்ணில தண்ணியோடு வாங்கி விட்டு, வேக வேகமாய் ரூமுக்குத் திரும்பி ரெடியாகிவிட்டு, Taj கோரமண்டல் நோக்கி புறப்படலானேன் ! சென்னையோ மருந்துக்கும் ஈரமில்லா காற்றோடு அனலடிக்க, கோட்டை அப்போதே மாட்டிக் கொண்டால், சட்டியில் வைத்த இட்லியாகிப் போவேனென்பது புரிந்தது ! So அதை மடித்து கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே நுழைந்த பிற்பாடு மாட்டிக் கொண்டே பார்வையைச் சுழல விட்டால் - phewwwww .....சென்னையின் செழிப்பின் முகம் கண்முன்னே "காவாலா" குத்தாட்டம் போடுவதை காண முடிந்தது ! 

வாசலில் வந்து நின்றதெல்லாமே பென்ஸ் ; Audi ; Range Rover ரகக் கார்கள் தான் ; இறங்கியோர் அனைவருமே வைரங்களின்றியுமே டாலடிக்கும் ஜனம் தான் ; and அத்தனை பேரும் dressed to kill தான் ! நகரின் உச்ச பிரமுகர்கள் ; ஊடக ஜாம்பவான்கள் ; இசைக்கலைஞர்கள் ; socialites என்று வரிசை கட்டி பார்ட்டிக்கு வந்திருப்பதை பார்க்க முடிந்தது ! "ரைட்டு...தயங்கி நிக்கப்படாது...உள்ளே போடா கண்ணா" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட கையோடு "டார்லிங்..டார்லிங்" படத்தில் ஊட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாக்கியராஜ் போடும் நடை மாதிரியொன்றை போட்டபடிக்கே ஹாலுக்குள் நுழையும் இடத்திலிருந்த வரவேற்பறையில் போய் நமக்கான அழைப்பிதழினை காட்டினேன் ! மலர்ந்த முகத்தோடு வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தனர் தூதரக அதிகாரிகள் ! Ufff ....கோட் சூட்டின்றி அங்கே நடமாடியோர் ட்ரேயில் ஒயின் கிளாஸ்களை சுமந்தபடியே பரிமாறிக் கொண்டிருந்த சப்லையர் தம்பிகள் மாத்திரமே என்பது புரிந்தது ! நல்ல காலத்துக்கு 'பட்ஜெட் பரமசிவம்' அவதாரை இந்த ஒற்றை நாளைக்காவது தொலைத்தேனே என்ற சந்தோஷத்தில் நடுவாக்கிலிருந்த சேரில் அமர்ந்தேன் ! எனெக்கெதிரே இருந்ததொரு குட்டிப்பாப்பாவுக்கு ஆரஞ்சு ஜூஸ் ஊற்றித் தர வந்த தம்பியை ஒரே மடக்காய் மடக்கி, "நேக்கும் ஒண்ணு கொண்டு வாரியா அம்பி ?" என்றேன் ! கையிலிருந்த white wine ; red wine கோப்பைகளைச் சுட்டிக் காட்டி, இது வாணாமா ? மெய்யாலுமே வாணாமா ? என்பது போலொரு பார்வை பார்த்தான் ! "ஜுஸே மதி !" என்றபடிக்கே வந்திருந்த பிரமுகர்களில் எத்தனை பேரை அடையாளம் காண முடிகிறதென்று கணக்கிட முனைந்தேன் ! 

முகம் பரிச்சயமாக இருக்க, பெயர்கள் மண்டைக்கு வராமல் போக, ஜுசை இஷ்டைலாக குடிக்க ஆரம்பித்தேன் ! அப்போது என்னைப் போலவே பாக்கியராஜ் நடை போட்டு வந்த இன்னொரு பார்ட்டியும் கண்ணில்பட, எனக்கு முகமெல்லாம் பிரகாசமாகிப் போனது ! அவருக்கும் என்னைப் பார்த்து குஷி ! அவருமொரு பதிப்பக நண்பரே ; டில்லியில் சந்தித்திருந்தேன் !! நம்மளையும் பார்த்து ஒருத்தர் முகமெல்லாம் மலர்ந்திட்டார் என்ற போது அவரை நினைத்துப் பரிதாபமும், உள்ளுக்குள் செம குஷியுமாகிப் போனது ! பேச்சுத் துணைக்கு ஆளில்லையே என்ற பரஸ்பர ஆதங்கங்கள் தீர்ந்து போக, ஒரே மேஜையில் அமர்ந்து கொண்டு - ஜோ பைடெனும், ரிஷி சுநாயக்கும் பேச்சு வார்த்தை நடத்துவது போல் கெத்து காட்ட ஆரம்பித்தோம் ! சற்றைக்கெல்லாம் அந்த ball room உள்நாட்டு, வெளிநாட்டு முகங்களோடு நிரம்பி வழிந்தது ! அத்தனை பேர் முகங்களிலும் உற்சாகம் ! அதுவே எங்களையும் தொற்றிக் கொள்ள, பரஸ்பர சொந்தக் கதை ; நொந்த கதை என்று ஏதேதோ பேசிப் பொழுதைக் கடத்திக் கொண்டோம் !

சற்றைக்கெல்லாம் விழா துவக்கம் கண்டிட, பிரெஞ்சு Consul General அவர்கள் பேச ஆரம்பித்தார் ! இந்தியாவுடனான கலாச்சார உறவுகள் பற்றி, தொழில் முன்னேற்றங்கள் பற்றி ; நம் நாட்டுப் பிள்ளைகள் அங்கே கல்வி கற்கச் செல்வதில் முன்னேற்றம் பற்றி, அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றி ; அதனில் பங்கேற்க இங்கிருந்து தேர்வாகியுள்ள தன்னார்வ இளைஞர் / யுவதிகள் பற்றி - என்று பிரமாதமாய் உரையாற்றினார் ! அதன் பின்பாய் 2 இசைக் கலைஞர்களுக்கு 'செவாலியே' விருது வழங்கிடும் விழாவும், அவர்களின் ஏற்புரைகள் + இசை நிகழ்ச்சிகள் என தொடர்ந்தது ! ஒலிம்பிக்சில் தன்னார்வலர்களாய் செயல்படவிருக்கும் குழுவிலிருந்ததொரு வட சென்னைப் பையன், துளியும் நடுக்கமின்றி மேடையேறி மைக் பிடித்து பேசியது என்னளவில் அந்த மாலையின் highlight ! விழா தொடர்ந்து கொண்டே செல்ல, எனக்கோ இரவு ரயிலைப் பிடித்திடும் நேரமாகிப் போனதே என்ற நெருடல் ! So அருகிலிருந்த நண்பரிடம் விடைபெற்று விட்டு, தூதரக அதிகாரியிடமும் சொல்லி விட்டு ஒன்பது மணிவாக்கில் கம்பி நீட்டினேன் ! வாயிலுக்கு வந்த நொடியே கோட்டை மறுக்கா கக்கத்தில் செருகிக் கொண்டே ரூமுக்குப் புறப்பட்ட போது சென்னையே ஜொலிப்பது போல் ஒரு பிரமை ! எக்மோரில் ஆட்டோக்காரரிடம் செம லோக்கலாய் ஒரு கரைவேட்டிக்காரர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது கூட அனிருத்தின் இசையாட்டமே தென்பட்டது ! கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் போன் நோண்டல் என ரயிலில் கழிந்த இரவுக்குப் பிற்பாடு வீடு வந்து சேர்ந்தால் - ஈரோட்டின் 3 மெகா இதழ்களும் அச்சாகி அழகாய் காத்திருந்தன ! சுஸ்கி-விஸ்கி புக்கே முடிந்து வந்து விட்டது ; THE BIG BOYS ஸ்பெஷல் பிரின்டிங் முடிந்து பைண்டிங்கில் ! And "கார்சனின் கடந்த காலம்" - oh boy...oh boy...oh boy !! 

இந்த மெகா இதழ் சூப்பராக வருமென்ற எதிர்பார்ப்பு இருந்தது தான் ; but நிஜத்தில் முழுசையும் புரட்டிப் பார்க்கும் போது ஏழு கழுதை வயசான எனக்கே மிரட்சி தான் மேலோங்கியது ! Simply வேற லெவல் folks !! ஹார்ட்கவரில் இதுவொரு மைல்கல் இதழாய் காலத்துக்கும் நிற்கப் போவது சர்வ நிச்சயம் !! And உங்களது போட்டோக்களை அனுப்பிட நாளை ஒற்றை நாள் மாத்திரமே உள்ளது மக்கா ; அதன் பின்பான போட்டோக்களை பைண்டிங்கில் இணைத்திட வழி இராது ! So absolutely the last chance !! போணி பண்ணிட சொல்லும் வார்த்தைகளே அல்ல இவை guys - இது மறக்க இயலாவொரு collector's edition என்பதை தைரியமாய் நம்பிடலாம் ! குறைவான பிரிண்ட்ரன் மட்டுமே ; so ரொம்ப காலத்துக்கு இது கையிருப்பில் கிடக்காதென்றுமே நம்பிடலாம் !

இதோ - கையில் சிக்கிய சில previews ; images !! Enjoy !!





And before I sign out : கோவை புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 1 !!! அந்த ஏரியா நண்பர்கள் - குடும்பத்தோடு வருகை தாருங்களேன் ப்ளீஸ் ! 

மீண்டும் சந்திப்போம் ; have a great week ahead ! See you around !

Friday, July 07, 2023

புரஃபஷனலாய் ஒரு டெஸ்பாட்ச் !

 நண்பர்களே,

வணக்கம். இன்று மாலை உங்களின் கூரியர் டப்பிக்கள் புறப்பட்டாச்சு & இம்முறை ஒரு சர்ப்ரைஸ் மாற்றத்துடனும் ! இத்தனை ஆண்டுகளாய் ST & DTDC கூரியர்களில் புக்ஸை அனுப்பி விட்டு, பட்டுவாடாவில் தாமதங்களென அவர்களோடு கணிசமான WWF போட்டுப் பார்த்து விட்டோம் ! அதிலும் சமீப மாதங்களில் கூரியர் சார்ந்த புகார்கள் கணிசம் எனும் போது, நமது front office பெண்கள் பட்ட அவஸ்தைகளும் கணிசமோ, கணிசம் ! To cut a long story short - புரஃபஷனல் கூரியரில் ஒரு மாதிரியாய் பேசி, அவர்களது வழக்கமான கட்டணங்களில் அல்லாது - சற்றே ஸ்பெஷல் கட்டணத்தினில், இனி நமது பார்சல்களை தமிழகத்தினுள் கையாண்டிட அவர்களின் இசைவைப் பெற்றுள்ளோம்  ! இதர சேவைகளைக் காட்டிலும் இவர்களிடம் வேகம் ஒரு மிடறு கூடுதல் என்பதோடு, இங்கே புக்கிங் ரசீதுகள் முழுமையாய் கணினிமயம் என்பதால், நம்மாட்களுக்கு உங்களின் டிராக்கிங் நம்பர்களை பார்த்துச் சொல்லும் வேலைகள் எளிதாகிடும் ! So உதகை ; குன்னூர் ; கொடைக்கானல் போன்ற மலை மேல் குந்தியிருக்கும் நகர்களை தவிர்த்த அனைத்து தமிழக நகரங்களிலும், இனி புரஃபஷனல் கூரியர் தான் நமது பார்சல்களைக் கொணர்வர் ! So நாளை முதலாய் DTDC & ST கூரியர்களின் கதவுகளைத் தட்டிட வேண்டியிராது folks ! வெளி மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் மாற்றங்கள் இராது - DTDC & பதிவுத் தபால்கள் - as usual !  Of course - "எக்ஸ்டரா நம்பர் நா கேட்டேனா ? புரஃபஷனல் கூரியர் நா கேட்டேனா ?" என்று நாளையே சொக்காயைப் புடித்து உலுக்கும் படலங்களும் அரங்கேறுமென்பதில் எனக்கு ஐயங்கள் இல்லை தான் ! But எங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, நாளைக்கே அனைவருக்கும் டெலிவரி ஆகிவிட்டால் (புக்ஸ் தானுங்க!!!) - கொஞ்சமாய் மண்டை தப்பிக்கும் ! ஜெய் புரஃபஷனல் !! 

And yes, லக்கி ஆண்டுமலர் + கைதியாய் கார்சன் + And "நதி போல ஓடிக்கொண்டிரு" (வன்மேற்கின் அத்தியாயம் # 2- ரெகுலர் சந்தா தடத்தினில் இடம்பிடித்திடுகின்றன ! இதோ - நீங்கள் இன்னமும் பார்த்திரா இம்மாத TEX அட்டைப்படம் + preview :


"நதி போல ஓடிக்கொண்டிரு" இதழையுமே இன்னமும் நீங்கள் preview-ல் பார்த்திருக்க மாட்டீர்கள் எனும் போது - here you go ! வழக்கம் போலவே ஒரிஜினல் அட்டைப்படம் & அடர் வண்ணங்களில் உட்பக்கங்கள் & அந்த வன்மேற்கின் வாழ்வியலில் உள்ள இன்னல்கள் பற்றிய சித்தரிப்பு - என "ந.போ.ஓ.கொ" அழகாய் பயணிக்கிறது !


இம்மாதத்தின் இதழ் # 4 : நம்ம V காமிக்ஸ் and அக்கட ஒரு slot இரவல் வாங்கியுள்ளோம் - வன்மேற்கின் அடுத்த அத்தியாயத்தை உட்புகுத்த !! So "பள்ளத்தாக்குப் படலம்" வாயிலாக, வன்மேற்கின் கதை தனது மூன்றாம் அத்தியாயத்தினில் தொடர்கிறது ! And அடுத்த ஆல்பத்தோடு (Part 4) முதல் சுற்றுக் கதை நிறைவுறுகிறது என்பது கொசுறுச் சேதி ! 

ஞாபகமாய் V காமிக்சின் மூன்றாம் quarter சந்தாத்தொகையான ரூ.300-ஐ அனுப்பி விட்டிருக்கும் நண்பர்களுக்கு, பார்சல்களில் 4 புக்ஸ் இடம்பிடித்திருக்கும் ! So பார்சலினுள் மூன்று புக்ஸ் மாத்திரமே தென்படும் பட்சத்தில், நம்மாட்களின் பொடதியினில் சாத்த ஆவேசம் கொள்ளும் முன்பாய், சந்தா நிலவரம் பற்றி ஒரு quick think ப்ளீஸ் ?! இன்று காலையில் V சந்தாத் தொகைகளை அனுப்பியோருக்குமே books on the way ; அதன் பின்பாய் அனுப்பியிருக்கும் பட்சத்தில் - sorry folks ; a bit late ! இதோ V காமிக்சின் வெள்ளோட்டம் : 



புக்ஸ்களுக்கான ஆன்லைன் லிஸ்டிங்கும் அடுத்த 1 மணி நேரத்திற்குள் ஆகிடும் ; so ஆன்லைனில் வாங்கிடும் நண்பர்களுக்கு - happy shopping !


ரைட்டு...நான் நடையை கட்டும் முன்பாய் இதோ - இன்னொரு கேள்வி for you !! கார்சனின் கடந்த காலம் - அட்டைப்பட கலர் தேர்வினில் உங்களின் choices பற்றி அந்த இரகசிய வோட்டெடுப்பில் பார்க்க முடிந்தது ! And a decision is almost done there ! அதன் மத்தியினில் இள வயது ஜெமினி கணேசனை, ஆங்...சாரி கார்சனையும், லீனாவையும் அட்டையில் போடாட்டி தெய்வ குற்றமாகிப் போகுமோ ? என்று யோசிக்க வைத்திருந்தனர் நண்பர்களில் ஒரு அணியினர் ! So ஆனது ஆச்சு ; இன்னொரு பெயிண்டிங்கை போட்டுப்புடலாமென்று முயற்சித்தோம் ! இதோ - அதன் முதல் version :

ஆட்டுதாடியும், மீசையும் வெள்ளிமுடியாருக்கே கெத்தாக இருப்பதாக எனக்குப் படுகிறது ; "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்கும் இந்த "கருமுடியார்" உங்கள் பார்வைகளில் எவ்விதமோ ? A quick reply இங்கேயே ப்ளீஸ் ?

Bye all....see you around ! Have a fun weekend !!

Saturday, July 01, 2023

ஜூன் போனால்..ஜூலை காற்றே...!

 நண்பர்களே,

வணக்கம். பூனையாரின் வாய்க்குள் போன ரவுண்டு பன்னைப் போல  ஆண்டின் முதல் பாதி லொஜக்கென்று கடந்து போயிருக்க, இதோ - இரண்டாம் பாதியின் வாயிலில் 'பச்சக்'கென்று மிகச் சரியாக நிற்கின்றோம் ! ஓட்டமெடுக்கும் நாட்களானவை, அடுத்தடுத்த மைல்கல் வேளைகளை முன்னிறுத்தக் காத்திருக்க, பணியாற்றிட எங்களுக்கும், வாசித்திட உங்களுக்கும் பொழுதுகள் பிஸியாய் இருக்கப் போவது உறுதி ! And ஜூலை எனும் போதே - வாடகை சைக்கிள்...சேரன் தாடி...ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே பாட்டு...என்று, மனசு 1984 நோக்கி ரிவர்ஸ் கியர் போடும் பாணியில் இம்முறையும் மாற்றங்களில்லை ! 

1984-ல் நாம் லயனுக்கு பிள்ளையார் சுழி போட எத்தனித்த வேளையில், ராகுல் காந்திக்கும் அரை நிஜார் போட்டுத் திரியும் வயது தான் ; நமது 'தல' டெக்ஸுக்கோ வயது 36 தான் ; விராத் கோலி பிறந்திருக்கவே இல்லை ; மாட்டு வண்டிகள் சாலைகளில் பயணித்துக் கொண்டிருக்கவும் செய்தன தான் ; தலைவருக்கு தலை நிறைய கேசம் இருக்கவும் செய்தது தான் and 128 பக்க ஸ்பைடர் புக்கில் இருபதாயிரம் பிரதிகளை அச்சிட்டு  ரெண்டே ரூபாய்க்கு விற்கவும் முடிந்தது தான் ! அன்றைக்கு கம்பியூட்டர்கள் லேது ; செல்போன் நஹி ; GPS கிடையாது ; பாதைகளை நினைவில் இருத்திக் கொள்ளத் தெரிந்திருக்காவிட்டால் எக்மோரிலிருந்து சென்ட்ரலுக்குப் போக, மீனம்பாக்கம் வழியாகவும் ஒரு ரூட் இருப்பதை  ஆட்டோக்களிலேயே ஆராய வழி பிறந்திருக்கும் ! இன்றைய நவீனங்களிலும், வசதிகளிலும் கால் பங்கு கூட அன்றைக்குக் கிடையாதென்றாலுமே, given a choice - கால இயந்திரத்தில் ஏறி மறுக்கா பால்யங்களுக்கே சென்றிடும் ஆவல் அலையடிப்பது எனக்கு மாத்திரமே என்றிராது தானே guys ? 

1984 முதலாய் ஒவ்வொரு ஜூலை பிறக்கும் போதும் "ஆண்டு மலர்" என்ற நினைப்பே மனசுக்குள் ஒரு LED பல்பை எரியச் செய்திடத் தவறியதே இல்லை ! அதுவும் ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி என்று ஏகப்பட்ட க்ளாஸிக் ஜாம்பவான்களோடு குதூகலமாய்ப் பயணம் செய்து வந்த அந்த ஆரம்பத்து ஆண்டுகளை ஆசை போட்டால் - ஆத்தாடியோவ் ; சான்ஸே கிடையாது ! நாற்கால் பாய்ச்சலில் ஓடிவிட்ட ஆண்டுகளோடு நமது பழக்க வழக்கங்களில் ; ரசனைகளில் மலையளவு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும், இந்த "காமிக்ஸ் ரசனை" என்ற சமாச்சாரத்தினில், நாம் பழமையுடனான பந்தங்களை இன்னமும் உடும்புப்பிடியாய் தொடர்வது தான் ஆச்சர்யங்களில் பிரதானமானது என்பேன் ! And பழசோடு புதுசையும் அரவணைக்கும் உங்களின் அந்தப் பாங்கு தான் இந்தப் பயணத்தினை இன்றளவிற்கும் ஜாலியாய் நகர்த்திச் செல்கிறதென்று சொல்லலாம் ! இன்னமும் மாயாவிக்கு மவுசு குறையவில்லை ; ஜாலியாய் கலாய்த்தபடிக்கே ஸ்பைடரோடு ரவுண்டடிக்கிறோம் ; சிறுபிள்ளைகளாகி சுஸ்கி & விஸ்கியை ரசிக்கிறோம் ; yet லார்கோவுக்கும் நம் மத்தியில் இடமுள்ளது ; XIII க்கும் வாஞ்சையான வாசஸ்தலம் இருக்கிறது ; கிராபிக் நாவல்களுக்கும் திண்ணையினில் இடமிருக்கிறது ! So இதுவரையிலான இந்த 39 ஆண்டுப் பயணத்தின் standout புள்ளியாக எனக்குத் தென்படுவது - உங்களின் இந்தப் பன்முகத்தன்மையே ! So "அம்பியும் நீயே.........ரெமோவும் நீயே...!! சம்மரானது சுருங்கி வந்தால்  சாத்தியெடுக்கும் ஸாகோரும் நீயே !!" என்று களத்தூர் கண்ணம்மா மாடுலேஷனில் பாடிக் கொண்டே, கரம் கூப்பி நிற்கின்றேன் இந்த 39வது ஆண்டுமலரின் தருணத்தில் ! 

லக்கி லூக் !! பின்னூட்ட நம்பரைப் போட்டு பதிவுகளில் நம்ம texkit தனது இருப்பைப் பதிவு செய்வதைப் போல, கொஞ்ச காலமாகவே "ஆண்டுமலர்" என்றால் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நமது ஒல்லி கௌபாயார் தான் இந்த ஜூலையிலும் லூட்டியடிக்கக் காத்திருக்கிறார் ! And "லயன்'s லக்கி ஆண்டுமலர்" - எப்போதும் போலவே டபுள் ஆல்பமாய் ஆஜர் ! லக்கி லூக் தொடரினில் தற்போதைய எண்ணிக்கை எண்பதைத் தாண்டியாச்சு ! ஆனால் அதன் பொற்காலம் - பிதாமகர் மோரிஸ், ஜாம்பவான் கோசினியுடன் கரம் கோர்த்த 47 ஆல்பங்கள் வெளியான நாட்களைத் தான் சொல்லுவேன் ! பின்னாட்களில் புதுப் புது கதாசிரியர்களோடு மோரிஸ் அவர்கள் 2002 வரைக்கும் கூட்டணி போட்டிருந்தார் ; அங்கும் கணிசமான smash hits உண்டு தான் !  அவரது மறைவுக்குப் பின்பாய் முற்றிலும் புது டீம் தான் வண்டியினை ஓட்டி வருகிறது ! நாம் லக்கியின் தொடரில் ஒட்டுமொத்தமாய் கிட்டத்தட்ட 45+ கதைகளை வெளியிட்டிருப்போம் என்று நினைக்கிறேன் and அவற்றுள் சூப்பர் ஹிட் அடித்த கதைகள் பெரும்பாலும் மோரிஸ்-கோசினி கூட்டணியின் கைவண்ணங்களே ! And அதிர்ஷ்டவசமாக காத்துள்ள ஆண்டுமலரின் 2 காமெடி மேளாக்களுமே this அசாத்தியர்களின் இணைந்த படைப்புகளே !  

அதிலும் இம்முறை முதல் ஆல்பமான "டால்டன்களோடு தக..திமி..தா" செம ரவுசு !! டால்டன்களும் சரி, ரின்டின் கேனும் சரி, இம்முறை அடிக்கவிருக்கும் சிக்ஸர்கள் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கச் செய்யும் ரகம் ! லக்கியும், ஜாலியும் மெக்சிகோவுக்குள் தேடுதல் வேட்டையில் புகுந்திட, துணைக்கு ரி.டி.கே.யும் கோர்த்துக் கொள்ள - ஒரு செமத்தியான சூறாவளி சிரிப்பு மேளா வெயிட்டிங் ! கார்ட்டூன்களுக்குப் பேனா பிடித்தே ரொம்ப காலம் ஆகியிருக்க, இந்த ஆல்பம் நாம் எதை miss செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது - yet again !! கார்டூன்களையும் ஆக்ஷன் நாயகர்களுக்கு இணையாய் நம் மத்தியினில் உசத்திடலாமே folks ? நம்மைச் சுற்றி அரங்கேறி வரும் அரசியல் காமெடியானது, கார்ட்டூன் வறட்சியினைப் போக்கிட பெருமளவு பயன்படுகிறதென்றாலும், ஒரிஜினலான சிரிப்புப் பார்ட்டிக்களையும் ஆதரிப்போமே - ப்ளீஸ் ?

ஜாகஜம் # 2 : ரொம்ப காலமாய் விளம்பரத்தோடே நின்று வந்திருந்த "கானம் பாடும் கம்பிகள்" ! Yes - அந்த டிரேட்மார்க் "கெட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி" கதைக்களமே ! ஆனால் வன்மேற்கின் வரலாற்றினூடே லக்கி லூக்கோடு பயணிப்பதென்பது, திருச்செந்தூர் பதநீரை மட்டை கட்டிக் குடிக்கும் சுகத்துக்கு விடுதலில்லாததாச்சே ?! தந்திச் சேவையினை அமெரிக்க தேசத்தினில் நிறுவும் பணியில் அவரோடு நாமும் பயணிக்கவுள்ளோம் ! And இதோ - அட்டைப்படத்தின் preview & உட்பக்க preview : 


Moving on, இம்மாதத்தினில் இரவுக்கழுகார் மீண்டும் தனது black & white டபுள் ஆல்ப வாடிக்கைக்குத் திரும்புகிறார் ! "கைதியாய் கார்சன்" பட்டாசாய்ப் பரபரக்கவிருக்கும் ஆக்ஷன் மேளா ! கலரில் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் சித்திரங்களும், கலரிங்கும் அமைந்திருந்தாலுமே, இந்த b & w சாகசங்களில் தான் மெய்யான அனல் பறப்பது புரிகிறது ! ஒரிஜினல் அட்டைப்படம் இதற்கு ; அந்தக் கோப்புகளை கேட்டு வாங்க மறந்து வைத்து விட்டேன் என்பதால் preview செய்திட வழியில்லாது போகிறது ! ஆனால் அந்தக் குறையை நிவர்த்திக்க, இதோ - கா.க.கா.அட்டைப்பட preview(s) !!

4 விதமான பின்னணி வர்ணங்களோடு உள்ள டிசைன்களில் எது உங்களுக்கு best ஆகத் தெரிகிறதோ guys ? அப்புறம் கனவுக்கன்னி லீனாவின் அகில உலக ரசிகர் மன்றத்தின் சார்பில் பின்னட்டையில் அவரது வதனத்தையும் இணைக்கச் சொல்லிச் சொல்லியாச்சு ! அடுத்த சில தினங்களில் அதுவும் ஆகி விடும் !

OPTION : RED

OPTION : NIGHT BLUE

OPTION : SKY BLUE

OPTION : BROWN

OPTION : WHITE

ஒவ்வொரு டிசைனின் கீழேயும் அந்தந்த வர்ணத்தினைக் குறிப்பிட்டு Option மார்க் செய்துள்ளேன் folks ; உங்கள் தேர்வு எதுவோ அதனை சுட்டிக்காட்ட வர்ணத்தின் பெயரை சொன்னால் போதும் ! And இங்கே நீங்கள் தரும் விடைகளை எண்ணி, sort செய்வதற்குப் பதிலாய் அந்த ஓட்டு போடும் தளத்தினையே பயன்படுத்திடல் சுலபம் என்று நினைத்தேன் ! So இதோ இவ்வாரத்து poll : https://strawpoll.com/e7ZJGLxBWy3

"கார்சனின் கடந்த காலம்" இதழினில் அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் போட்டோக்களை இணைத்திட எண்ணிடும் பட்சத்தில் ஜூலை 15 தேதிக்குள் அனுப்பிடல் அவசியம் !! மறவாதீர்கள் ப்ளீஸ் ! 

அப்புறம் இந்த இதழில் 1 MAXI சைஸ் பக்கம் காலி உள்ளது ! கா.க.க. இதழ் சார்ந்த உங்களின் நினைவுகளை அசைபோடுவதாயின் - இந்தப் பக்கத்தினை அதற்கென ஒதுக்கிடலாம் ! அதற்கான இறுதித் தேதி ஜூலை 6th !! 

And இங்கொரு கொசுறுத் தகவலுமே !! நண்பர்கள் proof reading செய்திடும் முயற்சியானது, துரதிர்ஷ்டவசமாக அத்தனை சோபிக்கவில்லை ! ஒவ்வொரு கதையினையும் அடுத்தடுத்து இருவர் செக் பண்ணியுமே, எண்ணிலடங்கா பிழைகள் !!  சில தருணங்களில் திருத்தமென்ற வேகத்தினில் சரியாக உள்ளவற்றையும், தவறாக  மார்க் செய்திடும் சங்கடங்களும் அரங்கேறியுள்ளன ! So மறுபதிப்புகள் தானே....நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வாய்க் கொஞ்சம் அல்வா கிண்டிக்கலாமென்று எண்ணியிருந்த எங்களுக்கு double whammy !! ஒட்டுமொத்தமாய் அத்தனையையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயம் எனக்கும், திருத்தங்களை திருத்தம் பண்ணும் அவசியம் DTP பிரிவினருக்கும் !! Sorry guys ; an experiment without much success !!

Before I sign out - இதோ ; இன்னொரு கேள்வி ! இம்முறை இது சம்மர் ஸ்பெஷல் முடிந்த கையோடு என்பதால் ரொம்பவே முக்கியமானதாகிறது !! 2022 முதலாய் நம்மோடு வலம் வந்து கொண்டிருக்கும் புதியவர்கள் நால்வர் ! 

C.I.A ஏஜெண்ட் ஆல்பா 

பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

லோன்ஸ்டார் டேங்கோ 

&

டிடெக்டிவ் ரூபின் 

இந்த நால்வரில் டேங்கோ safe zone-ல் உள்ளார் ; கதை பாணிகளில் ; சித்திர பாணிகளில் சாதித்துக் காட்டியிருப்பதால் ! I agree - சம்மர் ஸ்பெஷல் இதழில் வந்த டேங்கோ கதை # 3 அத்தனை ஆழமில்லை தான் ; but இதற்கு முன்பான இரண்டுமே செம என்பதால் டேங்கோவுக்கு இப்போதைக்கு டேஞ்சர் இல்லை ! பாக்கி மூவரில் அடுத்தாண்டின்  ரெகுலர் தடத்தில் நீங்கள் யாரைப் பார்க்க விரும்புவீர்கள் ? யாரை ஓரம்கட்டச் சொல்வீர்களோ ? இன்னார் இருக்கட்டும் என்றால் அதற்கான காரணம் & இன்னார் வேண்டாமே என்றால் அதற்குமான காரணம் - briefly ப்ளீஸ் ? 

ஜூலை இதழ்களுள் லக்கி லூக் ஆல்பம் பிரிண்ட் ஆகி 5 நாட்கள் ஆகிவிட்டன & பாக்கி இதழ்கள் சகலமும் திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கின்றன ! நிதானமாய் பைண்டிங் செய்து வரும் வாரயிறுதிக்குள் அனுப்பிட எண்ணியுள்ளோம் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் ?

Bye all...see you around ! Have a cool Sunday !

P.S : ஈரோடு விழாவுக்கு வர திட்டமிட்டுள்ளார் யாரெல்லாம் ? என்றறிய போன வாரம் நடத்தியிருந்த poll-ல் (https://strawpoll.com/GeZAOwWAEnVஇப்போது வரைக்குமான பதில்கள் இதோ :

*Oh yes ...அவசியம் வாரேன் : 88 

*வர எண்ணியிருக்கிறேன் ; நெருக்கவட்டில் உறுதி பண்ணுகிறேன் : 42 

*இல்லீங்கோ..வரல்லீங்கோ : 11 

So இந்த எண்ணிக்கைகளை ஒரு உத்தேச கணக்காக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அரங்கினைத் தேடிப் பிடிக்க முயன்றிடுவோம் ! Thanks guys !