நநண்பர்களே,
வணக்கம். ‘சொர்க்கமே என்றாலும் – அது நம்மூரைப் போல வருமா ?‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் ! என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் ! ஆனால் பீரோவுக்குள் பதுங்கிக் கிடந்த சிலபல ஸ்வெட்டர்களையும், குரங்குக் குல்லாக்களையும் ஏற்றிக் கொண்டான பின்னேயும் பற்கள் தந்தியடிக்கும் கொடுமையினை வட இந்தியா அறிமுகப்படுத்தித் தந்தது போன ஞாயிறு முதலாய் !
பள்ளித் தோழனின் பையனுக்கு ராஜஸ்தானில் திருமணம் ; so ஒரு கும்பலாய்க் கிளம்பினோம் அந்தப் பாலைப் பிரதேசத்துக்கு ! ‘உதய்பூரில் க்ளைமேட் என்னவோ?‘ என்று கூகுளில் தேடிட – அது ஒற்றை இலக்கத்தில் 6 டிகிரி; 7 டிகிரி என்று பதில் தந்த நொடியே புரிந்து போச்சு – மொச்சைக்கொட்டை மூக்கையும், முழியையும் தவிர்த்து பாக்கி சகலத்தையும் உல்லன்களின் பின்னே பதுக்கிட வேண்டி வருமென்று ! ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் ! மொத்தமாய் பஸ்சில் ஏறி – மொத்தமாய் ஒரு சொகுசு விடுதியில் இறங்கி – மொத்தமாய் நெய்யிலும், சர்க்கரையிலும் மூழ்கிக் கிடந்த சாப்பாட்டு ஐட்டங்களை, மொத்தமாய் தொந்திக்குள் தள்ளி விட்டு, மொத்தமாய் குறட்டை விட்ட 3 நாட்களுமே ‘சல்‘லென்று காலத்தில் பின்நோக்கி இட்டுச் சென்று ஸ்கூல் டூர்களை நினைவுபடுத்தின !
திரும்பிய திசையெல்லாம் செக்கச் செவேலென்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒரு வட இந்தியத் திருமணத்தின் vibrant கோலாகலத்தைக் கண்முன் நிறுத்திட தத்தம் பாணிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர் ! வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் ! நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது ! "யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் !!" என்று கத்த வேண்டும் போலிருந்தது ! ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா? அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா?” என்று ! ‘உப்ப்ப்ப்…. அடுத்த ஒரு மாதத்துக்கு சோறும், ரசமும் மட்டுமே போதும்டா சாமி!‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா? புளிக்குமா? காரமாகயிருக்குமா?‘ என்ற ரோசனைகளோடே நாங்கள் சுற்றி வந்தோம் ! உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது ! என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை ! ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி !‘ என்றபடிக்கே வேலைகளுக்குள் மூழ்கத் தொடங்கினேன் !
பிப்ரவரியின் இதழ்கள் ரவுண்ட்கட்டி ரெடியாகி, என் மேஜையில் உசரமாய் வீற்றிருக்க கல்யாணவீட்டு புஃபே சாப்பாட்டு ஞாபகத்தில் ‘ஜெரெமயாவில் 6 பக்கம்; ஜானி 2.0-ல் 5 பக்கம்‘ என்று இங்குமங்குமாய் தாவித் திரிந்தாலும் – மண்டை முழுக்கவே 'சிகரத்தின் சாம்ராட்‘ மீதான சிந்தனைகளே ! தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது? எங்கே முடிப்பது?‘ என்ற பேய்முழி ! இந்த ஆல்பத்தோடு மல்லுக்கட்ட முனைந்திருப்போரின் reactions கீழ்க்கண்ட மூன்றில் ஏதோவொன்றாய்த் தான் இருந்திருக்க வேண்டும் :
- ஙே…? ஙே….? ஙே….? இதைப் புரிஞ்சுக்க நமக்கு ஆகாதுப்பா!
- ஆங்? ஆங்? ஆங்? இது இப்டிக்கா – போயி அப்டிக்கா ரிட்டன் ஆகுதா? இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா? புரிஞ்ச மேரியுமிருக்கு ; பிரியாத மேரியுமிருக்கே வாத்யாரே !!
- போ! போ! போ! ‘தல‘ படத்தையோ, தலைவர் படத்தையோ பார்க்கவே மனுஷனுக்கு நேரமில்லை; இதிலே இந்த வான் ஹாம் மனுஷனோட கட்டி உருள எவனுக்கு தம் கீது? போலாம் ரைட்ஸ் !
நீங்கள் ‘ஙே‘ அணியாகவோ ; ‘போ… போ‘ அணியாகவோ இருக்கும் பட்சத்தில் – மேற்கொண்டு வாசிக்க மெனக்கெடாது, பதிவின் வால்ப்பகுதியிலுள்ள ஃபோட்டோக்களை பார்த்த கையோடு விடைபெறல் உத்தமம் என்பேன் !
மத்தியிலுள்ள ‘ஆங்… ஆங்‘ அணியினரே – உங்களுக்குமே ஒரு caution ! தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல ! வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் ! So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே ! என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் ! எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது ! So ஒரு பொது விவாதத்தின் பின்னே நம்மிடையே ஒரு புரிதல் ஏற்படின் - சூப்பரென்ற எண்ணத்திலேயே இப்போதைக்கு புலவன் தருமியாய் கேள்விகளை மட்டும் ஆங்காங்கே தெளித்து விடுகிறேன் - of course சிலபல குறியீடுகளோடே !!
தொடரும் வேளைகளில் அவரவரது பார்வைகளில் கதை பற்றி விவாதித்திடலாம் ! And hopefully there will be light at the end of the discussions ! இந்தக் கதைக்களமும் சரி ; அதன் பின்னணியிலுள்ள சிலபல (நிஜக்) குறிப்புகளும் சரி - கபாலத்தைக் குடையக்கூடியளவிற்கு ஆராய்ச்சியையும், தேடல்களையும் அவசியப்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள் ! So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் ! இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் !! So மேற்கொண்டு நீங்களாய் wikipedia பக்கமாய் ஒதுங்கிடும் பட்சத்தில் - இன்னும் ஆழமாய்ப் புகுந்திடலாம் இந்த ஆல்பத்தினுள் !
இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டே உள்ளே புகுகிறேன் - இதன் இறுதியில் சொக்காயோடும், வேஷ்டியோடும் முழுசாய் வெளியேறிட வேண்டுமே !! என்ற வேண்டுதலோடு !! உங்கள் பங்குக்கு நீங்கள் ஒரு பேப்பர் ; ஒரு பென்சில் & ரப்பர் & தோர்கல் புக் - என்று எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்யுங்களேன் ? Here goes :
The Begining :
- காலப் பயணம்
- நிகழ் பிரபஞ்சம்
- இணை பிரபஞ்சம்
இவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் ! இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது ! So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! Logic has to be at a premium in the fantasy world !
காலப் பயணமென்றால் என்ன ? : சதா நேரமும் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம் காலத்தில் ! ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது பயண திசை ! நாம் பயணிக்கும் வேகத்தைத் துரிதப்படுத்தினால் எதிர்காலத்தினுள் முன்னதாகவே எட்டிப் பிடிப்போம் ; future-க்குள் போயிருப்போம் என்பதும் ; வேகத்தை மட்டுப்படுத்தினால் ரிவர்ஸில் இறந்த காலத்துக்குள் போயிட சாத்தியமாகும் என்பதுமே இந்தக் கோட்பாட்டின் one-liner என்று வைத்துக் கொள்ளுங்களேன் !!
இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) அல்லது மாற்று நிஜம் (Alternate reality) என்பது முழுக்க முழுக்கவே கற்பனையின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் சங்கதி ! அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு ! ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ? ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே ? So ஒரே மாதிரியான நிகழ்வுகள், வெவ்வேறு விதங்களில் இணையுலகுகளில் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் என்று நம்புவது இங்கே சகஜம். ஆக "காலப் பயணம்" எனும் அசாத்தியத்தைக் கையில் எடுத்திடும் போது - இத்தகைய இணையுலகினுள்ளும், நிகழ் (நிஜ) உலகினுள்ளும் மாற்றி மாற்றி பயணிக்கும் விதமாய் சம்பவங்களை கதாசிரியர்கள் கையாள்வதுண்டு !
"Sideways in Time" என்றதொரு புராதன sci-fi நாவலில் சொல்லப்படும் கோட்பாடு இங்கே நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடும் ! பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் ! அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் ! அதே சமயம் நெட்டுவாக்கில் உள்ள தீர்க்க ரேகையினை ஓட்டிப் பயணிக்கும் போது, பிற கால மண்டலங்களை ; பிரபஞ்சங்களைத் தொட்டிட முடியும் என்கிறார் !
இந்த இணைப்பிரபஞ்சங்களின் முக்கிய அம்சம் - கால அளவுகள் சார்ந்தது ! So நாம் பழகியுள்ள அதே மாதிரியான "24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது ! நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் ! So கதை நெடுக 37 ஆண்டுகளை தோர்கல் & கோ. அசராது நிகழ்த்திடுவதன் சூட்சமம் இது தானோ ?
Point # 2 : கதைநெடுக ஏகப்பட்ட சிற்சிறுக் குறிப்புகள் – சித்திரங்களிலும், வசனங்களிலும், கதையின் ஓட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன! அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி ! இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட! உதாரணம் சொல்கிறேன் பாருங்களேன் !
பக்கம் 93 – ப்ரேம் 2 – மோதிரம் பளீர் பச்சை நிறத்தில்! & ப்ரேம் 7 – அதே மோதிரம் பச்சையில்!
பக்கம் 96 – ப்ரேம் 7 – பச்சை மோதிரம் வல்னாவிடம்!
இவற்றையெல்லாம் வண்ணத்தில் அல்லாது கறுப்பில் மாத்திரமே அச்சிட்டிருந்தால் - மொத்தத்துக்குக் கறேலென்று தோன்றியிருக்கும் ; துல்லியமாய்க் கவனிக்கத் திணறிப்போயிருப்போம் !
அதே போல சேக்ஸகார்ட் யாராகயிருப்பினும், அடையாளம் சொல்வது அந்தப் ‘பிங்க்‘ நிற அங்கி தான்! So இங்கே வண்ணத்துக்குமே கதை சொல்லும் பொறுப்பு தரப்பட்டுள்ளது!
தவிர, வசனங்களில் வான் ஹாம் நுழைத்திருக்கும் details அசாத்தியமானவை ! வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை ! ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று ! So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது ! கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன்! So ப்ளீஸ் – நிதானமான; கவனமான மறு வாசிப்பு?!
Point # 3: இந்தக் கதையின் மையம் அடங்கியிருப்பது பக்கம் 79-ன் frame # 3-ன் வரிகளில் ! அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் ! ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ! ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது ! கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது ! So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் ! அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் ! அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் ! கதை நெடுக – ஒவ்வொரு பயணத்தின் போதும் தோர்கலோ; டோர்ரிக்கோ; வல்னாவோ land ஆவது அங்கு தான் எனும் போது அந்தக் குடிலின் முக்கியத்துவம் அசாத்தியமானது!
- உடைந்து போன உத்திரம் <---> உடையா உத்திரம்
- தீக்கிரைச் சுவடுகள் <---> தீக்கிரை அடையாளமிலாத் தோற்றம்
- தோர்கல் ஏற்படுத்தும் கீறல் <---> கீறல் இல்லா சுவர்
மேற்படி 3 பாய்ண்ட்களுமே காட்டப்பட்டிருக்கும் விதங்களுக்கேற்ப கதை பயணிப்பது சமகாலப் பிரபஞ்சத்திலா ? மாற்றம் கண்ட பிரபஞ்சத்திலா? என்பதை நாம் புரிந்து கொள்வோமென்று வான் ஹாம் எதிர்பார்க்கிறார்! (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான்!!!)
Point # 4: கதையில் காட்டப்பட்டிருக்கும் பருவகாலங்களுமே இங்கே நிறைய முக்கியத்துவம் உண்டென்று தோன்றுகிறது ! பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம்! அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் ! நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் ! ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை ! பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா? "பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின் கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் ? உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks? பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே ? Brilliant reasoning from our good doctor ! இதற்கு வேறு மாதிரியான விளக்கம் சாத்தியப்படின் - கேட்க ஆவலாய்க் காத்திருப்பேன் !
Point # 5: Point to Point பஸ் போல – 37 ஆண்டுகள் முன்னே ; பின்னே; அப்புறமாய் 37 ஆண்டுகள் + ஆறு மாதங்கள் பின்னே ; 37 ஆண்டுகள் + சில மணி நேரங்கள் முன்னே என்று, கதை மாந்தர்களை கால இயந்திரத்தினில் செம சுற்று சுற்ற விட்டிருக்கிறார் வான் ஹாம் ! அந்தப் பயணங்களின் ஒவ்வொன்றையும் தான் பார்ப்போமே ?
- Journey # 1 – துவக்கப் புள்ளி – நிகழ்காலப் பிரபஞ்சம் :
- குதிரையோடு பனிமலையில் தோர்கல் நடைபோடுகிறார்.
- அதே வேளையில் பனியில் சறுக்கி தப்ப முயற்சிக்கிறது ஒரு உருவம்.
- ஒரு பிங்க் அங்கியணிந்த சேக்ஸபார்ட் எக்காளத்தை ஊதி பனிச்சரிவை உருவாக்க – அதனில் சிக்கி மடிகிறான் அவன் ! அவனது கையில் மோதிரம் நஹி ! பார்க்க பக்கம் 59 ; frame # 7.
- யாரிடமும் இந்த phase–ல் மாய மோதிரமில்லை என்ற யூகத்தில் இது நிகழ் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? அல்லது இங்குமே ஒரு முடிச்சு உள்ளதா ?
- ஆக இங்கே எழும் கே்விகள் கீழ்க்கண்டவாறு :
1. இந்த பிங்க் அங்கி சேக்ஸபார்ட் யாரோ?
2. பனியில் புதைந்து போன ஆசாமி யாரோ?
- தொடர்ந்து நடைபோடும் தோர்கல் ஒரு குடிலினில் இளம் டோரிக் பதுங்கிக் கிடப்பதைக் காண்கிறார்.
- 5 நாட்களுக்கு முன்பாய் கொடூரன் சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வந்ததாய்ச் சொல்கிறான் ! அவன் நிஜத்தில் சேக்ஸகார்ட்டைப் பார்த்தது கூடக் கிடையாது !
- குடிலின் வெகு அருகே ஒரு அசுர பனிச்சரிவு நேர்ந்திருக்க, அது பற்றித் துளியும் தெரிந்திரா விதத்தில் இளம் டோர்ரிக் அந்தக் குடிசையினுள் பதுங்கிக் கிடப்பதற்கும் ஏதேனும் குறியீடு உண்டா? அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் ? நிதானமாய் யோசியுங்களேன் guys !
இந்த phase–ல் கவனிக்க வேண்டியன :
- தீக்கிரையான தடங்களுடன் குடில் உள்ளது. (பார்க்க பக்கம் 56-ன் சித்திரங்கள்)
- உத்திரமும் பலப்படுத்தப்படாது உள்ளது !
Journey # 2 : ரிவர்ஸில் 37 ஆண்டுகள் – அதாவது இறந்த காலத்தினுள் :
-மாய மோதிரம் தோர்கலின் பாக்கெட்டில் உள்ளது. குதிரை மிரண்டு போய் உதைய – பின்நோக்கிய பயணம் ஸ்டார்ட் !
-அதே மலைப் பிராந்தியம் ; ஆனால் இம்முறையோ கோடை காலம் ; பச்சைப் போர்வையோடு !
- ஒரு கைக்குழந்தையாய் சொந்த மண்ணிலிருந்து தாத்தாவால் தூக்கி வரப்பட்டதாகவும் ; கடந்த 10 ஆண்டுகளாய் அந்தப் பிராந்தியத்தில் தாத்தா கட்டிய குடிலில் வசிப்பதாய் இளம் பெண் வல்னா சொல்கிறாள். அப்படியானால் அவளது வயது something around 11-12 என்று தானே இருந்திட வேண்டும் ? ஆனால் வல்நாவோ வாலைக்குமரியாய்க் காட்சி தருவது எவ்விதமோ ?
- கண்டவுடன் காதல் – கிட்டத்தட்ட அதே வயதான டோர்ரிக்குக்கு ! அவளோடே வாழ்ந்து விடும் ஆர்வம் அவனிடம் ததும்புகிறது !
- நடப்பது எதுவும் புரியாதவராய் தோர்கல் குடிலின் ஒரு மூலையில் அமர்ந்து தலையைப் பிய்க்கும் கணத்தில், இன்னொரு காலப் பயணம் துவங்கிடுகிறது! இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன்?! சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ ? Or am I just seeing pink elephants ? 👻👻
- இந்த phase–ல் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்கள் :
1. குடில் புதிதாய்க் காட்சி தருகிறது – தீச்சேத அடையாளங்களின்றி !
2. சுவர்கள் கீறல்களின்றிப் பத்திரமாக உள்ளன. தோர்கல் தான் ஒரு அடையாளத்தைப் போட்டு வைக்கிறார் !
- திடுமென தோர்கல் காலத்தில் மீண்டும் பயணமாகியிருக்க – டோர்ரிக்கோ பின்தங்கி விட்டிருக்கிறான் ! ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது ! எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே ? An altered past must trigger an altered future ! சரி தானா? அவ்விதம் மாற்றம் காணும் பிரபஞ்சமானது நிகழ்ப்பிரபஞ்சமாகாது ! அதுவும் ஓ.கே. தானா ?
Journey # 3: முன்னோக்கி 37 ஆண்டுகள் + கொஞ்ச நேரம் :
- மறுக்கா அதே குடிலினில் தோர்கல் மட்டும் பிரசன்னமாகிறார் ! ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. ! So இது மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சம் என்றாகிறது !
ஆக பக்கம் 61-ல் நடந்த சமாச்சாரங்கள் எதுவும் இந்த மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்தில் அரங்கேறியிருக்கவில்லையோ?
- பனிக்கட்டைகளோடு தோர்கல் தடுமாறிக் கிளம்பும் போது வீரர்கள் அவரை மடக்கி, இட்டுச் செல்கின்றனர் - சேக்சகார்டிடம்.
- இங்கே மீண்டுமொரு தபா பனிச்சரிவின் சிக்கிப் புதையுண்டு போனவனின் கையைக் காட்ட வான் ஹாம் தீர்மானித்ததன் பின்னணி என்னைவாகயிருக்கும்? பார்க்க பக்கம் 69 - frame 6.
- அதே போல தோர்கலைச் சிறைபிடித்துச் செல்லும் சிப்பாய்கள் – புதையுண்டு கிடப்பது “ஆறு தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற” அடிமையின் உடலாகத் தானிருக்குமென்று" குறிப்பிடுவதை பக்கம் 70-ல் frame # 4-ல் கவனியுங்களேன் ?! Is there a reason for this detail to be here?
- Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா ?
- மீண்டும் அதே குடிலுக்கு தோர்கல் இட்டுச் செல்லப்பட அங்கே நிற்பதோ பிங்க் அங்கியில் கிங்கரனைப் போலான சேக்ஸகார்ட் ! தானே டோரிக்கின் வயோதிக அவதார் என்றும் ; வல்னாவை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இழந்த சோகத்தில் வெறியனாகியவன் – சேக்ஸகார்ட்டாகவே மாறிவிட்டிருப்பதைச் சொல்கிறான்!
- ஆக மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சத்தில் ஒரிஜினல் சேக்ஸகார்டின் இடத்தில் இருப்பது வெறியன் (கிழ) டோர்ரிக் தான்!
- ஆனால் வல்னா மீது அவனுக்குத் தணியா காதல் தொடர்கிறது ! குதிரைத் திருடர்களின் கையில் செத்துப் போனவளைச் சாக விடாது ; அந்தப் போக்கிரிகள் தாக்கும் தருணத்துக்கு முன்பாய் அங்கே ஆஜராகி அவளைத் தன்னோடு அழைத்து வரும்படி மிரட்டுகிறான் !
- நிகழ் பிரபஞ்சத்தில், தோர்கலின் மனைவியும், பிள்ளையும் காத்திருப்பது சேக்ஸகார்டுக்குத் தெரிந்துள்ளதால் – அந்தக் கிங்கரனே டோர்ரிக்கின் கிழட்டு அவதார் என்பது ஊர்ஜிதமாகிறது! ஆக பக்கம் 73-ல் frame # 2-ன் வசனம் மெய்யாகிறது!
இந்த காலகட்டத்தில் கவனித்திட வேண்டியவை:
-யாருமே பார்த்திரா அந்த (ஒரிஜினல்) சேக்ஸகார்ட் இப்போது இல்லாமலே போய்விட்டான் !
- 37 ஆண்டுகளுக்கு முன்னே தோர்கல் அந்தக் குடிலின் சுவற்றில் போட்டு வைத்த கீறல் அப்படியே உள்ளது !
Journey # 4: இறந்த காலத்தினுள் 37 ½ ஆண்டுகள் பின்னே பயணம்!
- கிழ (டோர்ரிக்) சேக்ஸகார்டோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது மிரட்டலைக் கேட்டு தோர்கல் உணர்ச்சிவசப்படும் தருணத்தில், காலப்பயணம் trigger ஆகிறது ; வல்னாவைக் கொல்ல போக்கிரிகள் சூழ்ந்து நிற்கும் போது அங்கு கச்சிதமாய்ப் பிரசன்னமாகிறார் ! அதே குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாள் அது !
- அந்தத் திருட்டுக் கும்பலைத் தோர்கல் துரத்தியடிக்க வல்னா மடிந்திடவில்லை ; பத்திரமாக இருக்கிறாள் !
- தனது பயண நோக்கத்தை இளம் டோரிக் & வல்னா ஜோடியிடம் தோர்கல் விளக்குகிறார். பின்நாட்களில் சக்தி வாய்ந்த சேக்ஸகார்டாக டோர்ரிக் உருமாறவுள்ள விஷயத்தையும், வல்னாவைப் பத்திரமாய் எதிர்காலத்திற்குள் கடத்திக் கொண்டு செல்ல அவன் கட்டளையிட்டிருப்பதையும் விரிவாகச் சொல்கிறார்!
- பேராசை பீடிக்க, இளம் டோர்ரிக்குமே வல்னாவை 37 ஆண்டுகள் முன்நோக்கிக் கூட்டிச் சென்று சேக்ஸகார்ட் டோர்ரிக்கிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறான் ! ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது ! Of course - that will be an altered universe !
- மோதிரமோ இப்போது இருப்பது வல்னா வசம் ! தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது!
Journey # 5 : 37 ஆண்டுகள் முன்னே :
- தோர்கலோடு சேர்ந்து வல்னாவும் நிகழ்காலத்திற்குள் புகுந்து விட்டாள் !
- ஆக போக்கிரிகள் தாக்கவில்லை; குடிசையும் தீக்கிரையாகவில்லை; வல்னாவும் உயிரோடே உள்ளாள் !
- ஆனால் Journey # 4-ன் போது தோர்கல் விவரித்த விபரங்களை மனதில் இருத்திக் கொண்ட இளம் டோர்ரிக், வல்னாவின் சாவுக்குப் பழி தீர்க்கும் முகாந்திரம் இல்லாத போதிலுமே சேக்ஸகார்ட்டாகவே உருமாறிடுகிறான் ! தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் ! ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் !!! அதாவது டோர்ரிக் சேக்ஸகார்ட் 2.0 !!!
- தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் ! விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் ! அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே !
Journey # 6 : (37 ஆண்டுகள் பின்னே) :
- கிழ சேக்ஸகார்ட் டோர்ரிக் 2.0 & வல்னா குடிலில் பிரசன்னமாகும் போது இள வயது டோர்ரிக் அவர்களை மிரட்சியோடு எதிர்கொள்கிறான் !
- “37 ஆண்டுகளுக்குப் பின்னே – இப்படித் தான் ஆக வேண்டுமா உனக்கு?” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான்! ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது ! பாம்பு தனது சொந்த வாலையே விழுங்கப் பார்க்கிறது !!
- இதற்கு மத்தியில் Journey # 5-ல் கைதியாகக் கிடக்கும் தோர்கல் தப்பியோடுகிறார். குடிலின் வரம்பைத் தாண்டிப் போய் விடுபவரை சிப்பாய்கள் துரத்தி வந்து பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப் போகிறார்கள்! தோர்கல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பனியில் தப்பி நடந்து செல்கிறார்!
- Back to பயணம் # 6 – செய்வதறியாது திகைத்து நிற்கும் இள டோரிக் வல்னாவிடமிருந்து மாய மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு – பின்நோக்கிச் செல்லத் தீர்மானிக்கிறான்.
- சகலத்துக்கும் காரணமான தோர்கலை இறந்த காலத்திலேயே தீர்த்துக் கட்டி விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே முற்றுப்புள்ளி வைத்து விடலாமென்ற திட்டத்தோடு 37 ஆண்டுகளும் சில மணி நேரங்களும் முந்தை காலத்திற்குப் பயணிக்கிறான்!
Journey # 7 – 37 years & a bit into the past :
- எல்லாம் துவக்கம் கண்ட பனிமலையில் இளம் டோர்ரிக் மோதிரத்தோடு பிரசன்னமாகி்ட – தோர்கல் தன் குதிரையோடு அங்கே ஆஜராகிடுவதற்கு முன்பாய் அவரை வீழ்த்திடும் நோக்கோடு தயாராகிறான்.
- இப்போது குடிசை தீக்கிரையான வடுக்களோடே உள்ளது ; தோர்கல் போட்டு வைத்த கீறலும் இல்லை !
- மீண்டுமே ஒரு பிங்க் அங்கி உருவ சேக்ஸகார்ட் எக்காளத்தை ஊத – அது ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தி – தப்பியோட யத்தனிக்கும் டோர்ரிக்கைப் புதைத்து விடுகிறது! இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது ! பார்க்க பக்கம் 93; frame # 7.
- இம்முறை சேக்ஸகார்ட் அவதாரை எடுத்திருப்பதோ வல்னா ! 37 ஆண்டுகளை சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து – சரியான தருணத்தில் டோர்ரிக்கைப் பழிவாங்குகிறாள்!
Cut to Journey # 5 : கைகள் கட்டப்பட்ட நிலையில் கைதியாய் ஒரு நிகர் பிரபஞ்சத்தில் நடந்து போகும் தோர்கல் – ஒரு கூரான பாறையில் தனது கட்டுக்களை உரசி அறுத்து விடுகிறார். பார்க்க பக்கம் 94 – frame 1 & 3.
- யோசித்தபடிக்கே தோர்கல் நடைபோடும் போது – அந்தக் குடில் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார் !
- குதிரைத் திருடர்கள் வல்னாவை தீர்த்துக்கட்டியதொரு பிரபஞ்சத்தில் குடிசைக்கு தீயிட்டது அவன்களே. ஆனால் மாற்றம் கண்டிருக்கும் இந்த இணைப் பிரபஞ்சத்தில் குடிசை எரிகிறது தான் ; ஆனால் அதற்குத் தீயிடுவதோ சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்கள் ! ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன! ஆனால் அவற்றின் சூத்ரதாரிகளும், பலிகடாக்களும் காலவட்டத்துக்கு ஏற்ப மாறிடுகின்றனர் !
- சடலமாய்க் கிடக்கும் இளம் டோர்ரிக்கை சிப்பாய்கள் இழுத்துச் செல்கின்றனா ! கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை ! சேக்ஸகார்ட்டாகத் தலையெடுத்திருக்கும் (முதிர்) வல்னாவின் விரல்களையே அலங்கரிக்கிறது. பார்க்க பக்கம் 96 – frame 7 !!
- ஆக தோர்கலைக் காப்பாற்றும் பொருட்டு – மோதிரம் தன்னிடமிருந்த காலகட்டத்திலிருந்து 37 வருடங்கள் சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து டோரிக்கைப் பழிவாங்கும் பொருட்டு அந்த மலை முகட்டில் காத்திருந்து எக்காளத்தை முழங்கினாளென்று யூகித்திட வேண்டுமா ?
- வரலாற்றில் செய்விக்கப்படும் மாற்றங்கள் எதிர்கால சம்பவங்களினில் எதிரொலித்தே தீரும் ! அதே போல – எதிர்காலத்தினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்கள் இறந்த காலத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று சொல்ல முனைவது தானா கதாசிரியரின் நோக்கம்?
க்ளைமேக்ஸ்:
-இணையுலகில் குதிரையோ, வில்லோ, அம்போ இல்லாத தோர்கலுக்கு அவற்றையெல்லாம் வல்னாவே அனுப்பிடுகிறாள் ! எல்லாவற்றிற்கும் மூல காரணமான அந்தக் குடிலையும் எரிக்கச் செய்து விடுகிறாள்!
-இனி இணையுலகமும், நிஜ உலகமும் ஒன்றிடுமென்ற நம்பிக்கையோடு தோர்கலுக்கு மௌனமாய் விடை தருகிறாள் ! ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே ! கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் ! "ஒரோபோரோஸ்" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை ! "தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் " என்பது இதன் அர்த்தம் ! முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் ! வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு ! ஆரம்பமே முடிவே ; முடிவே ஆரம்பம் என்பது போல !!
By no means – இது சரியான புரிதல் என்றோ ; விடைகளைக் கண்டு விட்டேன் என்றோ நான் கோரிடப் போவதே கிடையாது ! ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ! ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் ! முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா ? அட...கிழியாத சட்டைகள் ஏது சிண்டைப் பிய்க்கும் வேளைகளில் ?
Parallel Universes சாத்தியமாகிடும் போது - parallel சிந்தனைகளுமே ; parallel கதைசொல்லலுமே சாத்தியமாகாதா ? இந்த வரியினை மறுக்கா வாசித்த கையோடு மீண்டுமொருமுறை இந்த சிகரத்தினில் ஏறிடத் தான் முனைந்து பாருங்களேன் folks ?
எது எப்படியோ – காலமென்பது கடவுளர்களின் கரங்களில் தங்கியிருப்பதே உத்தமம் என்பதை நானும் பலமாய் அங்கீகரித்து விட்டுக் கிளம்புகிறேன் - அடுத்த தலைப்பினுள் !!
CHENNAI BOOKFAIR PHOTOS & OTHER UPDATES LATER TONIGHT ! மிடிலே இப்போதைக்கு !!
Bye now all ! See you around !!