நண்பர்களே,
வணக்கம் ! "என்ன வாழ்க்கைடா சாமி இது ? சரியான நாய்ப் பிழைப்பு !" என்று யாரேனும் உங்களிடம் அடுத்தவாட்டி அலுத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் மீது பச்சாதாபம் காட்டுவது அவசியமாகாது என்றே நினைக்கிறேன் ! ஏனெனில் - நாய்கள் பல இல்லங்களின் செல்லப் பிள்ளைகளாய் உள்ளன ; பல வேளைகளில் எஜமானர்களின் உயில் சாசனங்களில் உயர்வான இடத்தைப் பெறுகின்றன ; இன்னும் சில நேரங்களிலோ அவை பிரத்யேகமான காமிக்ஸ் தொடர்களின் ஹீரோக்களாகக் கூடவும் பரிணமிக்கத் தான் செய்கின்றன ! So - நாய்ப்பிழைப்பு எல்லா நேரங்களிலும் நாராசமான பிழைப்பாய் இருத்தல் அவசியமில்லை ! இதை இப்போது சொல்ல முகாந்திரமென்னவொ ? என்ற மண்டைச் சொறிதலுக்கு இடம் தந்திடாமல் விஷயத்துக்கு நேராகவே வருகிறேன் ! நமது காமிக்ஸ் அணிவகுப்பின் அடுத்த புதுவரவு ஒரு நாலுகாலார் என்பதே விஷயம் !
சரியாகச் சொல்வதாயின் இவரொரு (!!) புது வரவல்ல....நமக்கு ஏற்கனவே பழக்கமானவரே ! ஆனால் ஒரு exclusive கதைவரிசைக்கு lead character ஆகப் புரமோஷன் கண்டிடும் ஒரு வாய்ப்போடு நம்மை சந்திக்கக் காத்துள்ள நபர் - மிஸ்டர்.ரின் டின் கேன் ! லக்கி லூக் கதைகளில் அவ்வப்போது தலை காட்டும் இந்த அசகாய அரைவேக்காட்டு நாய்க்கென 1987 முதலாகவே பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகில் ஒரு தொடர் உள்ளது ! RANTANPLAN என்ற பெயரோடு அங்கு வலம் வரும் இந்த "டுபுக்கு" நாய்க்கு தனிக்கதை அந்தஸ்த்து வழங்கியது காமிக்ஸ் உலக ஜாம்பவான்களான எழுத்தாளர் கோசினியும், ஓவியர் மோரிசுமே ! லக்கி லூக்கின் கதை வரிசையில் 1962-ல் வெளியான ஆல்பத்தில் முதன்முறையாக டால்டன் சகோதரர்களைக் கண்காணிக்கும் "காவல் திலகமாய்" அறிமுகமான ரின் டின் கேன் - தொடரும் நாட்களில் ; தொடர்ந்த கதைகளில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டது !
லக்கி கதைகளில் ஜாலி ஜம்பர் ; பொடியன் பில்லி ; டால்டன் சகோதரர்கள் ; மா டால்டன் ; போன்றோர் எத்தகைய permanent slot பிடித்துள்ளனரோ - அதே மாதிரியான நிரந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது ரின் டின் கேன் ! டால்டன்களுக்குக் காவல் நிற்கச் சொன்னால் அதனைத் தலைகீழாய்ப் புரிந்து கொண்டு அவர்களை எஜமானர்களாய் எண்ணிப் பாசமழை பொழியும் குடாக்குத்தனத்திலாகட்டும் ; தனது கோணங்கித்தனங்களால் ஜாலி ஜம்பரை எரிச்சல் மூட்டுவதிலாகட்டும் ; ஆவ்ரெல்லைப் போல தன முன்னே வைக்கப்படும் சோப்புக் கட்டியைக் கூட கபளீகரம் செய்யும் ஆற்றலில் ஆகட்டும் - ரின் டின் கேனுக்கு நிகர் ஏதும் கிடையாது ! 1987 முதல் 2003 வரை பயணித்த ரி,டி.கே தொடரில் மொத்தம் 20 ஆல்பம்கள் உள்ளன ! அவற்றை மெது மெதுவாய் நாம் முயற்சிக்கவுள்ளோம் - 2014-ன் மையப் பகுதியிலிருந்து ! லக்கி லூக் கதைகளைத் தாண்டி - குட்டீஸ்களுக்கென பிரமாதமாய் நம்மிடம் சரக்கெதும் இல்லையென்ற குறையை ரி,டி.கே கொஞ்சமேனும் சரி செய்யுமென்ற நம்பிக்கையோடு இத்தொடரினுள் தலை நுழைக்கிறோம் !
கார்ட்டூன் கதைகளென்ற தலைப்பினில் சஞ்சாரம் செய்திடும் வேளையில் சின்னதாய் ஒரு பிளாஷ்பாக் படலமும் என்னுள் ஓடியது ! இது நாள் வரை நமது காமிக்ஸ் இதழ்களுள் தொடர்ச்சியாய்த் தலைகாட்டிய நாயகர்கள் யாரெல்லாம் என்று யோசித்துப் பார்த்தேன் ! முத்து காமிக்ஸின் பெரும் பகுதிக்கு விச்சு & கிச்சு ; கபிஷ் ; அதிமேதாவி அப்பு போன்ற filler page நாயகர்களைத் தாண்டி வேறு எவரும் என் நினைவுக்கு வந்திடவில்லை ! "கார்ட்டூன் கதைகள் ஒரு முழு நீள காமிக்ஸ் இதழுக்கான படைப்புகளல்ல !" என்பது அந்நாட்களில் முத்து காமிக்ஸ் தனக்குத் தானே போட்டுக் கொண்டதொரு கட்டுப்பாடு ! So - அந்த 1 பக்க ; 4 பக்க, page ரொப்பும் ஆசாமிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் எஞ்சி நிற்பவர்கள் யாரென்று யோசித்த போது - ஆச்சர்யமூட்டும் விதத்தில் விட்டத்தை மட்டுமே என்னால் வெறித்துப் பார்க்க முடிந்தது ! சரி - முத்துவில் சீரியஸ் ரக கதைகள் மாத்திரமே என்ற சமாதானத்தோடு லயனின் பக்கமாய்ப் பார்வையைத் திருப்பினேன் !
லயன் காமிக்சிலும் ஆங்காங்கே தலைகாட்டிய ஜோக்கர் ; இரத்த வெறியன் ஹாகர் ; சிரிப்பின் நிறம் சிகப்பு ; பரட்டைத்தலை ராஜா ; மிஸ்டர் மியாவ் போன்றோரை bit players ஆக மட்டுமே கருதினால் - எஞ்சி நிற்கும் முழு நீளக் கதை நாயகர்களின் அணிவகுப்பு - சொல்லிக் கொள்ளும் சைசுக்குத் தேறவில்லை என்பதே நிஜம் ! 1984-ல் துவங்கிய லயனில் - முதன்முறையாக ஒரு கார்ட்டூன் கதைக்கு வாய்ப்புக் கிட்டியது 1989-ல் தான் ! அது எந்தக் கதை என்ற சிந்தனையில் நீங்கள் இருக்கும் போதே - கார்ட்டூனுக்கென பிரத்யேகமாய் சாலையமைக்க முனைந்த ஜூனியர் லயன் & மினி லயனைப் பார்ப்போமா ?
அந்தரத்தில் ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே 1987-ல் "சூப்பர் சர்க்கஸ் " இதழின் வாயிலாக நமக்கு அறிமுகமான லக்கி லூக் தான் நமது சிரிப்புலகப் பயணத்தின் முன்னோடி ! அது வரை ஒரு முழு நீளத் (தமிழ்) காமிக்ஸ் இதழில் ஒரு சர்வதேச முழுநீளக் கார்ட்டூன் வெளியானதில்லை என்பதை என்னால் இன்றளவும் நம்பிட இயலவில்லை ! (1980-களில்முத்து காமிக்ஸில் வெளியான "நாடோடி ரெமி" பெயரளவிற்கொரு கார்ட்டூன் இதாலே தவிர, கதையில் humour மிகக் குறைச்சலே என்பது நாமறிந்தது தானே ?!) லக்கி லூக்கின் தரமும், கார்ட்டூன் பாணியின் இதமும் ஒருசேர நம்மை மயக்கியத்தில் வியப்பில்லை தான் ! தொடர்ந்த ஜூனியர் லயன் இதழ் # 2-ல் அறிமுகமான அலிபாபா - இன்னுமொரு smash hit ! மொத்தம் மூன்றே கதைகளோடு இத்தொடர் படைப்பாளிகளால் மங்களம் பாடப்பட்டதென்பது தான் வேதனையே ! ஆனால் நல்ல காலத்திற்கு ஜோ.லயனின் இதழ் # 3-ல் தலைகாட்டிய சிக் பில் கோஷ்டிக்கும் படைப்பாளிகள் அதே போன்ற சொற்ப ஆயுள் நிர்ணயம் செய்திடாது - அவர்களது சிரிப்புத் தோரணத்தை 60+ கதைகளுக்கு நீட்டித்தனர் ! இன்று வரை நம்மிடையே தூள் கிளப்பி வரும் இந்த நவீன கவுண்டமணி-செந்தில் ஜோடிக்கு காமடி பட்டியலில் ஒரு பிரதான இடமுண்டு !
சிக் பில் & கோவிற்கு ஆயுசு கெட்டியாக இருந்த போதிலும், அவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஜூனியர் லயனுக்கு அந்தப் பாக்கியம் இருந்திடவில்லை ! நான்கே இதழ்களோடு மினி லயனின் ஜோதிக்குள் ஐக்கியம் ஆகிப் போனது ! மினி-லயனில் அலிபாபா ; சிக் பில் ; ஆகியோரது சாகசங்கள் தொடர்ந்தன ! அவர்களுக்கு அடுத்தபடியாய்ப் பெயர் சொல்லிக் கொள்ளுமொரு இடம் பிடித்தது வால்ட் டிஸ்னியின் அங்கிள் ஸ்க்ரூஜ் & டொனால்ட் டக் கோஷ்டியே ! "ஒரு நாணயப் போராட்டம்" ; "நடுக்கடலில் எலிகள்" இங்குள்ள இன்றைய தலைமுறைக்கு நினைவிருப்பது சிரமமே ; ஆனால் 1988 & 89-களில் நமது அபிமானிகளுக்கு அவை மறக்க இயலா classics ! தொடர்ந்து அறிமுகம் கண்டதும் கூட இன்னொரு smash hit கதைவரிசையே ! முதன்முறையாக ஹாலந்து மாட்டிலிருந்து - டச் மொழியிலிருந்து தமிழுக்குள் அடி வைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்களான "சுஸ்கி & விஸ்கி " தான் அவர்கள் ! இன்றளவும் ஐரோப்பிய சேகரிப்பாளர்களின் தேடலுக்கும், உள்ளூர் காமிக்ஸ் ஆர்வலர்களின் நேசத்திற்கும் உரிய இவர்களது 3 இதழ்களுமே வெளியான சமயத்திலேயே செம ஹிட்ஸ் ! ஆனால் ரொம்பவே குழந்தைத்தனமான இதன் கதைக்களங்களை அன்றைய நாட்களின் போதே எக்கச்சக்கமாய் எடிட் செய்ய வேண்டிய நெருக்கடியையும் சந்தித்தேன் என்பதும் நிஜமே ! இப்போது கூட - "சுஸ்கி & விஸ்கி" வருமா சார் ?" என்று கண்கள் மிளிர புத்தகவிழாக்களின் போது சில நண்பர்கள் வினவுவதும், நான் இதே பதிலைச் சொல்லுவதும் வாடிக்கையே !
அலிபாபா கதைகள் மூன்றோடு முற்றுப்புள்ளி பெற்றவை எனும் போது - அவர் விட்ட இடத்தைப் பிடிப்பார் சிந்துபாத் என்ற நப்பாசையோடு இந்த ஜெர்மானியப் படைப்பை களமிறக்கினோம் ! ஆனால் துளியும் பரபரப்பை ஏற்படுத்தத் தவறிய இந்தத் தலைப்பாகை வீரரை அவர்தம் தாயகத்துக்கே வழியனுப்பி விட்டோம் ! மினி லயனில் ஏராளமான ஒரு பக்க ; இரு பக்க கார்டூன்கள் மட்டுமல்லாது - one shot இதழ்களும் வந்திருந்தன ! காமெடி கர்னல் ; தூங்கிப் போன டைம் பாம் புகழ் (!!) ஏஜண்ட் 00 போன்றோரை நான் தொடர் நாயகர் பட்டியலில் சேர்க்கவில்லை ! 40 இதழ்களோடு மினிலயன் மண்ணைக் கவ்வியான பின்னே லயனுக்கு transfer வாங்கிக் கொண்டவர்கள் லக்கி லூக்கும் ; சிக் பில்லும் மாத்திரமே ! ஆனால் லயனில் முதன்முறையாக ஒரு கார்ட்டூன் சாகசத்தில் வெளியான பெருமை அவர்களைச் சாராது ! 1989-ல் "வாரிசு வேட்டை" இதழில் தலை காட்டிய "ஹெர்லக் ஷோம்ஸ்" தான் இப்பட்டத்தைத் தட்டிச் செல்லும் பிரகஸ்பதி ! பின்னாட்களில் - அதுவும் லயனின் 100-வது இதழுக்குப் பின்னதாகவே கார்ட்டூன் நாயகர்கள் சிக் பில் & லக்கி லூக் களமிறங்கியதாய் ஞாபகம் ! அதன் பின்னர் வாய்ப்புப் பிடித்த குள்ளக் கத்திரிக்காய் "மதியில்லா மந்திரி" இன்றளவும் active ஆகா இருப்பது ஒரு ஆறுதல் ! 2013-ல் நமக்குப் பரிச்சயம் தேடித் தந்த ஸ்டீல்பாடியாரையும் ; ப்ளூகோட் பட்டாளத்தையும் பட்டியலில் சேர்க்கும் போது - this is how it reads :
- லக்கி லூக்
- அலிபாபா
- அங்கிள் ஸ்க்ரூஜ்
- சுஸ்கி & விஸ்கி
- சிந்துபாத்
- ஹெர்லக் ஷோம்ஸ்
- மதியில்லா மந்திரி
- ஸ்டீல்பாடியார்
- ப்ளூகோட் பட்டாளம்
ஆக ஒரு 41 ஆண்டு கால முத்து காமிக்ஸ் பயணம் + almost 30 ஆண்டு கால லயன் காமிக்ஸ் பயணம் + 44 இதழ்களுக்கான ஜூ.லயன்+ மினிலயன் சஞ்சாரமும் ஒட்டு மொத்தமாய் நமக்கு நல்கியுள்ளது ஒன்பதே கார்ட்டூன் கதைவரிசைகள் மட்டுமே என்பது தான் hard facts ! இதனை சிறிது சிறிதாய் செப்பனிடும் பணியைத் துவக்குவது எத்தனை அவசியமென்பது எனக்கு நெத்தியடியாய்ப் புலனாகிறது ! நம் ரசனைகலுக்கெற்ற கார்ட்டூன் கதைகளுக்கு பஞ்சமா ? அல்லது ஆக்க்ஷன் ...கௌபாய்....டிடெக்டிவ் போன்ற genre களில் நாம் காட்டும் அதீத ஆர்வம் இப்பக்கமாய் நாம் திரும்பிட அவகாசம் தரவில்லையா ? சிந்திக்கும் குல்லாய்க்கு வேலை / வேளை வந்து விட்டதென்ற புரிதல் புலர்கிறது !
சென்ற சனிக்கிழமை முதலாய்த் துவங்கிய திருச்சி புத்தகக் காட்சியைப் பற்றிச் சொல்வதாயின் - ஒரு மாநகருக்கு இது மிகச் சிறியதொரு முயற்சியே ! அதுவும் 27 ஆண்டுகளாய் நடந்திடும் இந்தப் புத்தக விழாவின் அளவு ; பங்கேற்போரின் எண்ணிக்கை ஜாஸ்தி இருக்குமென்றே எதிர்பார்த்தோம் ! ஆனால் சின்னதாய் ஒரு அரங்கம் ; இரண்டே வரிசைகளில் சிக்கனமாய் 60+ ஸ்டால்கள் ; அவற்றில் ஒரு 10 ஸ்டால்களாவது வெற்றிடங்கள் ! ஞாயிறன்று காலை நான் சென்ற போது அங்கு நிலவிய அமைதி ஊக்கம் தரும் விதத்தில் இல்லை என்பதே நிஜம் ! ஈரோட்டிலும், சென்னையிலும் நாம் பார்த்துப் பழகி இருந்த ஜனத் திரளோ, விற்பனை விறுவிறுப்போ மருந்துக்குமில்லை ! நமது ஸ்டாலில் நண்பர்கள் திருச்சி விஜயஷங்கர் ; கருமண்டபம் செந்தில் ; மற்றும் கிறுக்கல் கிறுக்கனார் மாத்திரமே ஆஜர் ! குளித்தலையிலிருந்து நண்பரொருவரும் கலந்து கொள்ள - சாவகாசமாய் அரட்டைக் கச்சேரி ஓடியது ! அவ்வப்போது வருகை தந்தவர்கள் ஒன்றும் இரண்டுமாய் நமது இதழ்களை வாங்கிடுவதும் ; 'அட..இன்னமும் இதெல்லாம் வெளியாகிறதா ? ' என்ற ஆச்சர்யக் கேள்விகள் எழுப்புவதும் சகஜமாய் இருந்தது ! இங்கிலீஷில் காமிக்ஸ் ஏதும் இல்லையா ? என்ற கேள்விகளும், மாயாவி இருக்காரா ? என்ற வினவல்களும் வழக்கம் போலவே அவ்வப்போது ! மதிய உணவை அங்கிருந்த FOOD FAIR (!!) -ல் நண்பர்களோடு முடித்துக் கொண்டு நான் நடையைக் கட்டிய போது - 'ஆஹா...தெரியாத்தனமாய் ஸ்டால் போட்டு விட்டோமே !" என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது ! ஆனால் அன்றிரவு நான் சிவகாசிக்குத் திரும்பிய சற்றைக்கெல்லாம் இராதாகிருஷ்ணன் போன் செய்த போது 10,000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதென்று சொல்லக் கேட்ட போது எனக்கு 'அடடே..தேவலையே!' என்று நினைக்கத் தோன்றியது ! இவ்வாரத்தின் ஒரு நாள் நீங்கலாய் இதர நாட்கள் அனைத்திலும் சராசரியாய் ரூ.3000-ரூ.4000-க்கு விற்பனை எனும் போது - நிச்சயமாய் இதுவொரு பிரயோஜனமான முதலீடே என்பது உறுதியானது ! இன்னும் இரு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் - நம்பிக்கையோடு காத்துள்ளோம் !
நமக்குக் கடல் கடந்தும் நண்பர்கள் ; ரசிகர்கள் உள்ளனர் என்பது நிஜமே ; ஆனால் சென்ற மாதம் நாம் வெளியிட்ட அதே கதையினை, அதே தலைப்போடும், அதே மொழிபெயர்ப்பொடும் அட்சர சுத்தமாய் வெளியிடும் அளவிலான "ரசிகர்கள்" ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகை ஒன்றிலும் உள்ளதைப் பார்க்கும் போது திகைப்பாய் உள்ளது ! பாருங்களேன் - "
யுத்தம் உண்டு..எதிரி இல்லை...!" - version 2 ! Phew !