Powered By Blogger

Sunday, July 22, 2012

'என் வழி... தனி வழி !'


நண்பர்களே,

ஒரு ஞாயிறு மதிய வணக்கம் ! தலைப்பைப் படித்து  விட்டு.."ஆஹா..அம்பது பதிவு போடுவதற்குள் ஆசாமி பஞ்ச் டயலாக் அடிக்க ஆரம்பிச்சிட்டானே" என்று அவசரமாய் முடிவேதும் எடுத்திட வேண்டாமே - ப்ளீஸ் ! நிச்சயம் தலைப்பிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையவே கிடையாது...so தைரியமாய்ப் படித்திடலாம் !

வலையுலகின் எழுத்துலகத்திற்கு நானொரு சமீபத்திய வரவே ! So - சற்றேர ஏழு மாதங்களில் 50 பதிவுகள் என்பது சராசரியா;அதிகமா என்பது பற்றியெல்லாம் கருத்துச் சொல்லிட எனக்குத் தெரியவில்லை ! அதுவும் நமது முன்னோடி காமிக்ஸ் பதிவாளர்களான Muthufan ; விஷ்வா ; ரபிக் ராஜா ; கனவுகளின் காதலர் ; போன்றோர்களின் அசாத்திய முயற்சிகளுக்கு முன்னே எனது அனுபவம் நிச்சயம் சுண்டைக்காயே என்பது நான் அறிவேன் ! அதிகமோ ; கம்மியோ - இயன்றவரை சுவாரஸ்யமாய் எழுதிட வேண்டுமென்ற வேட்கை மட்டுமே என்னுள்!இந்த ஏழு மாத அவகாசத்தில் என் பதிவுகளை / பகிர்வுகளை ரசித்த நண்பர்களுக்கும் ; சகித்த தோழர்களுக்கும் ; நிறை / குறைகளைச் சுட்டிக் காட்டிய காமிக்ஸ் காதலர்களுக்கும் எனது நன்றிகள் என்றுமுண்டு ! 

இங்கே எழுதத் துவங்கிய நாள் முதல் நான் கற்றதும், பெற்றதும் ஏராளம் ! 

காலமாய் ஒரு நேரடித் தொடர்புக்கு உபாயமின்றி "ஹாட்லைன்" எனும் ஒற்றைப்பக்க ஒரு வழிக் கருத்துப் பரிமாற்றம் (!!!) மட்டுமே நிலவிட்ட போதிலும் ; அதனையும் மீறி எங்கள்பால் நீங்கள் காட்டி வரும் அனுசரணைக்கு நிஜமாக அருகதையாகிட நான் இன்னும் செய்திட வேண்டிய பணிகள் எக்கச்சக்கம் பாக்கியுள்ளன என்பது நான் உணர்ந்திட்ட பிரதான சங்கதி  ! காமிக்ஸ் என்பது நம்மில் பலருக்கும் ஒரு நேசமென்பதையும் தாண்டி, சுவாசம் என்பதை இந்தத் தளத்தில் நான் பார்த்திடும் உங்களின் தளரா உத்வேகம் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் உணரச் செய்கிறது ! 'தத்தா புத்தா' வென்று தடுமாறி நடை போட்ட ஒரு குழந்தையினையே நீங்கள் இத்தனை காலமாய், இத்தனை வாஞ்சையாய் சிலாகித்திருக்கும் போது - அழகாய், துள்ளிக் குதிக்கக் கூடியதொரு உற்சாகக் குவியலை நீங்கள் என்னமாய் ரசிக்க வல்லவர்களென்ற realisation - என்றையும் விட விறுவிறுப்பாய் ; விவேகமாய் செயலாற்றிட இதை விடச் சிறப்பான தருணம் கிட்டிடாதென்பதைப்  புலனாக்குகிறது ! ! 

கடந்த 2 வார இறுதிகளில் தொலைபேசியில் நிறைய நண்பர்களோடு பேசிட வாய்ப்புக் கிடைத்த போது - காமிக்ஸ் மீதான உங்களின் ஆர்வப் பிரவாகம் எத்தனை ஆற்றல் வாய்ந்தது என்பதைப் புரிந்திட முடிந்தது ! பேசிய அனைவரது குரல்களிலும் தோய்ந்திருந்த உற்சாகத்தில்  , நமது இந்த இரண்டாம் வருகைக்கான வரவேற்பினை மட்டுமின்றி ; இப்போது உருவாகி இருக்கும் ஆழ்ந்த  எதிர்பார்ப்புகளையும் உணர்ந்திட முடிந்தது ! நமது காமிக்ஸ்களின் பொற்காலமாய் நாம் கருதிடும் எண்பதுகளின் மையப் பகுதியில் நான் உணர்ந்திட்டது அச்சு அசலாக இதே போன்றதொரு உற்சாக அருவியினையே ! So 20 + ஆண்டுகள் கழிந்த பின்னே வரலாறு  திரும்பிடும் கணத்தை நாம் எல்லோரும் தற்சமயம் உருவாக்கி வருகிறோமோ என்னவோ !! "அங்கிள்" என்று வாண்டுகள் கூப்பிடும் இப்பருவம் கடந்து, "பெருசு" என்ற நாமகரணத்தை பெருமையாய் சுமந்திடும் காலமொன்று வந்து, பழசை எல்லாம் அசை போட்டிட மீண்டுமொரு சந்தர்ப்பம் வாய்த்திடும் போது - இந்த நொடியின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் ஒரு நாள் வந்திடுமோ ? !

இம்மாத  நியூ லுக் ஸ்பெஷல் கிடைக்கப்பெற்ற நண்பர்களின் உற்சாகம் ; packing -ல் சற்றே கூடுதலாய் நாங்கள் செலுத்திய கவனம் ஈட்டித் தந்துள்ள சந்தோஷ வெளிப்பாடுகள் ; முத்து Never Before ஸ்பெஷலுக்கு கிட்டியுள்ள பரபரப்பான ; திக்குமுக்காடச் செய்யும் வரவேற்பு ; 'இந்தக் கதைக்குப் பதிலாக அந்தக் கதையினைப் போட்டிருக்கலாமே' என்ற ரீதியிலான எண்ணச் சிதறல்கள் ; 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பூட்ட கேஸ் தானா ?' என்ற வினவல்கள் ; ஒன்றுக்கு மூன்றாய் ஹாட்லைன் வந்திட்டதற்கு உங்களின் அபரிமித உற்சாகம் என்று கடந்த சில நாட்கள் நமது சிங்கத்தின் இந்த 28 ம் பிறந்தநாளை ஒரு memorable birthday ஆக அமைத்துத் தந்துள்ளன ! Thanks for everything folks !

New Look Special அட்டைப்படத்தின் ஒரிஜினல் 

அப்புறம் சமீபத்தில் நடந்து முடிந்திட்ட நமது "மறுபதிப்புத் தேர்தல்" தந்துள்ள முடிவுகளின் நம்பகத்தன்மை எத்தகையது என்று அறியாது முழித்துக் கொண்டிருக்கின்றேன் ! தத்தம் ஆதர்ஷ நாயகர்களின் கதைகளுக்கு இரு அணிகளும் 'குத்தோ குத்தென்று' வோட்டுப் பெட்டிகளை நிரப்பி விட்டது ஒரு open secret தானே ! So -தேர்தலில் முந்திய வேட்பாளரையும்  சரி ; தோல்வியைத் தழுவிட்ட வேட்பாளரையும்  சரி, சற்றே ஓரம் கட்டி விட்டு, (வழக்கம் போல்) புதிதாய் ஒரு ரூட் போட்டிட நினைத்துள்ளேன் !

'என் வழி தனி வழி' என்று மறுபதிப்புகள் இனி சொல்லிடப் போகும் விதத்தில் ஜனவரி 2013  முதல் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் bannerல் பிரத்யேகமாய் மறுபதிப்புகள் வெளிவந்திடும் ! லயன் & முத்து காமிக்ஸ் புது இதழ்கள் வழக்கம் போல் வண்ணத்தில் வந்துகொண்டிருக்கும் சமயம், அவற்றைத் துளியும் சம்பந்தப்படுத்திடாமல், இந்த "Operation மறுபதிப்பு" இரு மாதங்களுக்கொரு முறை CCல் அரங்கேறிடும் ! So 'பழைய கதைகளை மறுபதிப்பாய் அவசியம் வாங்கத் தான் வேண்டுமாவென?' நினைத்திடக் கூடிய நமது சந்தா நண்பர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருந்திடாது ! புது வெளியீடுகளும், மறுபதிப்புகளும் எதிரும் புதிருமாய் ஒரே சாலையில் பயணிக்க அவசியமின்றி நான்கு வழித் தடமொன்று தயார் செய்திட முடியுமெனும் போது, வேகத்தை கூட்டிடவோ ; மட்டுப்படுத்திடவோ சுலபமாய் இயன்றிடும் !

கோடும் போட்டாச்சு ; ரோடும் போட்டாச்சு என்ற பின்னே அதில் பயணிக்கப் போகும் கனவான்கள் யாரென்றும் பார்த்திடுவது தானே முறை ? தமிழில் காமிக்ஸ் என்ற உடனே இன்றைக்கும் ; சற்றேர நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரும்பான்மையினர் கேட்கும் கேள்வி.."இரும்புக்கை மாயாவி கதைகளா ?லாரன்ஸ் டேவிட் கதைகளா? " என்பது தான் ! சமீபத்தில் கூட நமது நியூ லுக் ஸ்பெஷல் வாசகர் கடிதப் பகுதியினில் "மும்மூர்த்திகளின் கதைகளை புறக்கணித்த குற்றம் மன்னிக்க இயலாதது" என்று நெற்றிக்கண் திறந்திருந்த ஒரு அன்பரின் கடிதம் இதனை நினைவூட்டும் ரகமாய் வந்திருந்தது தானே ! அவரின் அக்னிக் கடிதத்திற்கு நான் அங்கே பதில் அளிக்காததன் காரணம், அவர் சிலாகிக்கும் மும்மூர்த்திகள் நமக்கும் மிக மிகப் பிரியமானவர்களே என்பதனாலேயே ! அவர்களை புறம்தள்ளுவது என்றுமே எனது நோக்கமாய் இருந்தது கிடையாது ; ஆனால் முன்னே இருக்கும் வசந்தங்களை ரசித்திட அவகாசமோ ; பொறுமையோ இன்றி, கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதில் தேவைக்கு அதிகமாய் நேரம் செலவிடுவது  விவேகமல்ல என்பதே எனது நிலைப்பாடு !  'வரலாற்றை மறந்தவன் வாழ்ந்ததில்லை' ; ஏற்றி விட்ட ஏணியை எத்திய எத்தன" என்ற பெருமைகளை  எனது சிந்தனைகள்  ஈட்டிக் கொடுத்தாலும் நமது கவனம் இருந்திட வேண்டியது எங்கே என்பதில் எனக்கு எவ்விதத் தடுமாற்றமும் இருந்ததில்லை ! இருப்பினும் மறுபதிப்புகள் கோரிடும் நண்பர்களது விருப்பத்தை முழுவதுமாய் உதாசீனப்படுத்திடுவது நிச்சயம் முறையல்ல என்பது மட்டுமல்லாது, முந்தைய இதழ்களைத் தேடி அலைந்து திரிந்து சிரமங்கள் பல மேற்கொண்டிடும் நம் நண்பர்களின் அனுபவங்களை கடந்த மூன்று வாரங்களாய் தொலைபேசியில் கேட்டிட வாய்ப்புக் கிடைத்த போது, இந்த மறுபதிப்புப் parallel track ஏற்பாடு இனியும் தாமதமாகிடக் கூடாதெனத் தோன்றியது !


மறுபதிப்புப் பிள்ளையார் சுழி போடவிருப்பது நமது ஆதர்ஷ நாயகர்களான இரும்புக்கை மாயாவி ; லாரன்ஸ் டேவிட் & ஜானி நீரோ கூட்டணியே ! So  "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக....திரைக்கு வந்த நாற்பதே ஆண்டுகளில்" இந்த மும்மூர்த்திகள் ஒருசேர ஒரே இதழில் உங்களை சந்தித்திடப் போகிறார்கள் ! "CLASSIC THREE ஸ்பெஷல்" என்ற முதல் வெளியீட்டில் :

  • நயாகராவில் மாயாவி 
  • சிறைப்பறவைகள் 
  • பெய்ரூட்டில் ஜானி நீரோ !

ஆகிய 3 சூப்பர் டூப்பர் முத்து காமிக்ஸ் கதைகள் - 368 பக்க இதழில் ரூபாய் 50 விலையில் வந்திடும் ! Black & White தான் ; நமது நார்மலான சைசில் ! (பாக்கெட் சைஸ் அல்ல !!)






இவை வெளிவந்த காலங்களில் கிட்டிய வரவேற்பு நிச்சயம் நம் துவக்க கால வாசகர்களின் மனதில் அகலா இடம் பிடித்திருக்குமென நான் அறிவேன் ! இன்றைய புதுத் தலைமுறைக்கும் சரி ; பழசை அசைபோட்டிட ; அரவணைத்திட விரும்பும் அன்பர்களுக்கும் சரி, இது நிச்சயமொரு அழகான துவக்கமாய் அமைந்திடுமென நினைக்கிறேன் !  உங்களின் எண்ணங்கள் எப்போதும் போல் எனக்கு அவசியத் தேவைகளே...so please do write folks !!

தொடரும் இதழ் "CLASSIC DETECTIVE ஸ்பெஷல்" என்ற தலைப்பில் :


  • ஏஜென்ட் காரிகன்
  • ரிப் கிர்பி
  • சார்லி 
  • விங் கமாண்டர் ஜார்ஜ் 


ஆகியோரது (மறுபதிப்பு) சாகசங்களைத் தாங்கி வந்திடும் ! இவர்களது கதைகளில் மறக்க இயலா கல்வெட்டுகளாய் அமைந்த 4 டாப் கதைகள் தேர்வு செய்யப்படும் ! அந்த நான்கை suggest செய்திட தாராளமாய் உங்களின் தேர்வுகளை தெரிவித்திடலாம் !!


மறுபதிப்புப் பட்டியலில் முத்து காமிக்ஸ் மட்டுமல்லாது நமது துவக்க காலத்து மினி லயன் கதைகளும் வந்திடும் ! அப்புறம் தற்சமய தேர்தலில் பங்கேற்றிட்ட "டிராகன் நகரம்" ;  " நரகத்தின் எல்லையில் "கதைகளும் இந்தப் பிரத்யேகக் களத்தில் வெளிவந்திடும் - இரு மாத இடைவெளிகளில் !





So மறுபதிப்புகள் குறித்த ஆதங்கத்திற்கு இனி பெரியதொரு அவசியம் நேராது என்ற நம்பிக்கையோடும் ; உங்களின் ஞாயிற்றுக்கிழமைக்கு நம் புதிய அறிவிப்பு கொஞ்சமேனும் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்குமென்ற எதிர்பார்ப்போடும் நான் இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! Before I sign off, சின்னதாய் ஒரு சேதி மட்டும் ! செப்டம்பர் 8 & 9 தேதிகளில் பெங்களூரில் COMIC CON 2012  என்றதொரு காமிக்ஸ் திருவிழாவினை நடத்திட டெல்லியில் தலைமையகம் கொண்டிட்டதொரு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது ! ஏற்கனவே டெல்லியிலும். மும்பையிலும் இது போல் ப்ரேத்யேக shows நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள் ! இம்முறை பெங்களூரில் நடநதேறிடவிருக்கும் இந்தத் திருவிழாவில் நாமும் பங்கேற்கிறோம் ! நமது லயன் - முத்து காமிக்ஸின் ஸ்டால் அங்கே இருந்திடும் ! 




உங்களை அங்கு வரவேற்பது எனது கடமையும் ; பெருமையும் ! Hope to see you there guys ! 


Wednesday, July 11, 2012

பதிவாய் ஒரு பதில் !


நண்பர்களே,

ஞாயிறு இரவு எப்போது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே தெரியாது...உங்களின் உற்சாகப் பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் என்று நிஜமானதொரு ரகளையான பொழுதாய் அன்றைய தினம் கழிந்தது. திங்களும், செவ்வாயும் பிரயாணங்கள் ; இன்டர்நெட் மல்யுத்தம் என்று சென்றிட்டதால் இப்போது வரை இங்கே தலைகாட்டிட முடியவில்லை  ! இப்போதும் கூட இரு வரிகள் டைப் செய்ய இருபது நிமிடங்களுக்கு மேலாய் மொக்கை போட்ட கதை தான் !  

நண்பர் ராஜ்குமார் ஆதங்கத்தோடு NEVER BEFORE ஸ்பெஷல் ன் விலை குறித்து  பதிவிட்டதும், தொடர்ந்து for and against பலவிதக் கருத்துப் பரிமாற்றம் நடந்தேறிடுவதையும் இப்போது தான் பார்த்திட்டேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனிப்பட்ட பதிலளிக்க நான் தயார் என்ற போதிலும் "இம்சை அரசன் இன்டர்நெட் " அதனை இன்றிரவு அனுமதிக்காது என்றே தோன்றுகிறது ! 

நமது காமிக்ஸ் பயணத்தின் வயது 28 என்பதை இம்மாத நியூ லுக் ஸ்பெஷல் நினைவூட்டிடும். (இந்த இதழ் ஜூலை 18 முதல் அனுப்பிடப் படுமென்பதை இந்த சைக்கிள் gapல் சொல்லிவிட்டால் ஒரு வேலை முடிந்த மாதிரி ஆச்சு !) 

இந்தப் பயணத்தில், நாம் விலைகளில் செய்திட்ட பரிசோதனைகள், குட்டிக் கலாட்டாக்களை சத்தியமாய் இந்தியாவில் வேறு எந்தவொரு பதிப்பகமும் செய்திருக்குமென்று எனக்குப் படவில்லை. ஒரு ரூபாய்க்கு மினி லயன் ; இரண்டு ரூபாய்க்கு ஜூனியர் லயன் - (அதுவும் முழு வண்ணத்தில் லக்கி லூக் கதையோடு ) ; டிக்ஷனரி சைசில் 5௦௦+  பக்கங்களோடு லயன் தீபாவளி மலர் ரூபாய் 10 விலையில் ;  விசித்திரமானதொரு ஒடுக்க  சைசில் திகில் இதழ்கள் மூன்று ரூபாய் விலைகளில் ; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல 852 பக்கங்களில் இரத்தப் படலம் தொகுப்பு ரூபாய் 2௦௦ விலையில் என்று குரங்கு கிளைக்குக் கிளை தாவியது போல் நாம் விலைகளில் துளியும் நிரந்தரமின்றித் தாவி வந்தது எல்லோருக்கும் பரிச்சயமே. சொற்ப விலையினில் இதழ்களை வெளியிட்டு நாட்டுக்குச் சேவை செய்ததாக மார்தட்டிடுவது எனது நோக்கமல்ல ; நான் சொல்ல வருவது என்னவெனில் விலைகளைப் பொறுத்த வரை, we have come a full circle !

2012 வரை எனது ஒரே நோக்கம், குறிக்கோள் , எல்லாமே  நமது காமிக்ஸ்கள் பரவலாய் வாசகர்களைச் சென்றடைந்திட வேண்டும் ; விலை இதற்கொரு தடையாக இருந்திடக் கூடாதென்பதே ! அடிக்கடி சைஸ் மாற்றும் யுக்திகள் எல்லாமே  விலையேற்றத்தைத் தவிர்த்திட, அல்லது தள்ளிப்போட்டிட நான் செய்த குட்டிக்கரணங்கள் தான். தரத்தை உயர்த்த வழியின்றி, சர்வதேசப் பதிப்பகங்களின் காமிக்ஸ்கள் ஒரு பக்கம்  ஜொலிக்கும் போது, நியூஸ் பிரிண்டில் பரிதாபமாய் நாம் காட்சியளித்தாலும் உடும்புப் பிடியாய் அந்த format ஐ விட்டு அகலாமல் பிடிவாதம் பிடித்தவன் நானே. ஆனால் ஒரு நிலையில் இனி இதழ்கள் வெளியிடுவதேன்பதே சாத்தியமல்ல என்று மனதளவில் மூட்டை கட்டியது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி. விற்பனையில் தேக்கம் ; வசூலில் பரிதாபம், தமிழகத்திற்குள் ஊருக்குக் குறைந்தபட்சம் இரு முகவர்களிடமாவது பணத்தை முழுவதுமாய் இழந்த ஆற்றாமை ...கையில் தேங்கி நின்ற முந்தைய இதழ்களின் சுமை என்று திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்தது இருளே ! 

முழுவதுமாய் நம்பிக்கை  இழந்ததொரு பிற்பகலில் பாரிஸ் நகரில் நம் பதிப்பகத்தினரை சந்திக்க வேண்டியதொரு அவசியமான சூழலில் ; அவர்களை எதிர்கொள்ளவே அஞ்சிக்கொண்டு (ராயல்டி கட்டணங்கள் எக்கச்சக்கமாய் பாக்கி இருந்தது அப்போது !!)அவர்களது அலுவலகத்தின் அருகாமையில் இருக்கும் ஒரு மழலையர் பள்ளியின் பார்க்கில் அமர்ந்து எவ்வளவு நேரம் மருகி இருப்பேன் என்பது எனக்கும், என்னை வினோதமாய்ப் பார்த்து அகன்றிட்ட அந்தக் குட்டீஸ்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.  பணம்  சம்பாதிக்கும் முயற்சியில் தோற்றிடும் போது கூட எனக்கு இத்தனை வலி இருந்தது கிடையாது ; அடுத்த முறை விட்டதைப் பிடித்துக் கொண்டிடலாமென்ற நம்பிக்கையும், தைரியமும் என்னுள் உண்டு. ஆனால் இதுவோ வேறு விதமான வலி ....நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயத்தை முழுவதும் உதறிட வேண்டிய நாள் நெருங்கிட்டதோ என்ற தடுமாற்றம் ! சந்தோஷ  வேளைகளில் மூளை தெளிவாய் செயல்பட்டிடுவதும், கிலியில் இருந்திடும் போது அதுவும் உறைந்து போய்விடுவதை உணர்ந்தேன். 

ஒரு மாதிரியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு பதிப்பகத்தினரின் அலுவலகத்திற்குள் நுழைந்தேன் ; பஞ்சப் பாட்டுப் படித்து, பாக்கிகளை செலுத்திட அவகாசம் கேட்டிட்டேன். மிகவும் தன்மையான நபர்கள் என்பதாலும் பல வருடப் பரிச்சயமானவன் என்பதாலும் முகம் சுளிக்காமல் அவகாசம் கொடுத்தனர் ; கூடவே கொஞ்சம் சமீபத்திய பிற மொழிப் பிரசுரங்களின் மாதிரிகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி  தந்தனர். பாரிஸின் மெட்ரோ ரயிலில் அவற்றைப் புரட்டப் புரட்ட என் ஆற்றாமை அதிகமானது! இந்தோனேசிய மொழியில் லக்கி லூக் கதைகள் ; சிக் பில் என்று அற்புதத் தரத்தில் முழு வண்ணத்தில், hard cover ல் அவர்களது பதிப்புகள் அற்புதமாய் இருந்தன. 'எதைத் தினால் பித்தம் தெளியுமோ ? ' என்ற நிலையில் இருந்த எனக்கு, 'குறைந்த விலை ; நிறைய வாசகர்களைச் சென்றடைவது " என்ற concept ல் சொதப்பியாகி விட்டது ; இனி தரமாய் ; அழகாய் செய்ய முயற்சிப்போமே..முகவர்களுக்குக் கடன் என்பதே வேண்டாம்; முடிந்தளவு  நேரடி விற்பனையில் முயற்சிப்போமே என்று தோன்றியது. 

இது என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சென்னை புத்தகத் திருவிழாவின் தேதிகள் நெருங்கி இருந்தன ; விஷ்வாவும் , நண்பர்களும் பல நாட்களாய்  நம்மை அங்கே stall எடுத்து விற்பனை முயற்சிகளைச் செய்திடக் கோரிய வண்ணமே இருந்தனர். 'சரி...முயற்சித்துத் தான் பார்ப்போமே'  என்று சென்னைக்கு புறப்பட்டது ; வாசகர்களை நேரடியாகச் சென்றடைய ஒரு வலைப்பதிவு சுலபமான வழி என்று எனது மகன் எனக்கு உபதேசிக்க, "சரி..அதையும் ஏன் விட்டு வைப்பானேன்' என்று நான் டிசெம்பர் இறுதியில் எழுதத் துவங்கியது  .... எனது 'பாரிஸ் போதிமரம்' தந்த தெளிவின்  பலனாய் "லயன் Comeback ஸ்பெஷல் உருவாக்கியது - என்று ஒரே சமயத்தில் பல புதுக் கதவுகள் திறக்கப்பட்டன ! தொடர்ந்த நிகழ்வுகளுக்கு நாம் எல்லோருமே இங்கு சாட்சிகளே !

இந்த sentiment segment இப்போது உங்களின் அனுதாபங்களையோ ; ஆறுதல்களையோ சேகரித்துத் தந்திடும் பொருட்டு அல்லவே அல்ல ...விலைகளில் நாம் இன்று கண்டிருப்பது ஒரு விதமான பரிணாம வளர்ச்சி ; நம் மேல் திணிக்கப்பட்ட வளர்ச்சி என்பதை சுட்டிக் காட்டிடவே ! இன்றைக்கு திரும்பவும் பத்து ரூபாய்க்குச் சென்றிடுவது தற்கொலை முயற்சி ; அதே போல் இந்த ரூபாய் 25 விலை என்பது 'இங்குமில்லை ; எங்குமில்லை' என்றதொரு திரிசங்கு சொர்க்க நிலை . அந்த விலையில் வண்ணத்தில் வெளியிடுவதென்றால் நிச்சயமாக எந்த ஒரு பிரபல ஹீரோவின் முழுக் கதையினையும் இன்று நாம் செய்து வரும் தரத்திலோ ; வண்ணத்திலோ ; சைசிலோ செய்திட இயலாது. குறைந்த பட்சம் ரூபாய் நாற்பது என்று விலை வைத்திட அவசியப்படும் - ஒரு முழு நீளக் கதையினை மட்டும் கொண்ட இதழாக வெளியிட்டிட. மாதந்தோறும் நாற்பது ரூபாய்க்கு ஒரு இதழ் ரெகுலராக வந்தால் போதுமென நீங்கள் அபிப்ராயப்பட்டால் அது சாத்தியமே ; சுலபமுமே..! ஆனால் 'பொசுக்'கென்று படித்து முடித்து விட்டது போல் தோன்றிடும் ஒரு வெறுமையை தவிர்த்திடுவது சிரமம் என்பது எனது கருத்து. ஆகையால் தற்சமயம் நாம் செய்து கொண்டிருக்கும் நூறு ரூபாய் எனும் format ஐ மாற்றிடுவதாய் எண்ணமில்லை. அது இப்போது போலவே தொடர்ந்திடும். 

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு முகவர் நம் இதழ்களை விற்பனை செய்யும் பொருட்டு நண்பரொருவர் மூலம் என்னிடம் பேசிய போது 'எவ்வளவு கமிஷன் தந்திடப்படும் ?' என்று கேட்டார்...'இருபது சதவீதம்' என்று சொன்னேன் ! 'இது குறைவாச்சே..இன்னும் கூடுதலாக கொடுக்க முடியாதா ?' என்று கேட்ட போது நான் அவருக்கு நமது நேரடி விற்பனை முறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி விட்டு, நமது தற்சமய இதழ்களின் costing-ல் விற்பனையாளர்கள் கமிஷன் என்று எதுவும் செலவினமாக கணக்குப்  போட்டிடுவது  கிடையாது ; அந்தக் கிரயத்திற்க்கும் சேர்த்து பக்கங்களை ; தரத்தை மேன்படுத்திவிடுகிறோம் என்று புரியச் செய்தேன். இதை நான் இங்கே சொல்லிடக் காரணம் - நம் இதழ்களில்  ஒவ்வொரு முறையும் - நீங்கள் கொடுக்கும் காசுக்கு முழு நியாயம் செய்திட எங்களால் இயன்றதை செய்திடுவோமென்பதை வலியுறுத்தவே. நூறு ரூபாய் இதழாக இருப்பினும் ; நானூறு ரூபாய் இதழாக இருப்பினும் உங்கள் பணத்திற்கு நிச்சயம் ஈடானதொரு புக் உங்களுக்குக் கிடைத்திடுவதே எங்கள்  priority ல் தலையாயது.





நானூறு ரூபாய்க்கு ஒரு இதழ் என்பது நாற்பது ஆண்டுகானதொரு கொண்டாட்டமாகவே தவிர, உங்கள் பாக்கெட்களில் பொத்தல் போடும் முயற்சியாக அல்லவே ?!! மளிகைக் கடையினில் பாக்கி இருக்கும் போதும் கூட பண்டிகை வந்திட்டால் வீட்டில் மைசூர்பாகு செய்திடுவது இயல்பு தானே ??பொங்கலுக்கு  ஊருக்குச் செல்லும் ஆசையில் ஆம்னி பஸ்ஸில் இரு மடங்குக்கு பணம் கொடுத்தாவது டிக்கெட் எடுக்கத் தானே செய்கிறோம் ?? போத்திஸ்களிலும்  ; ஜாய் ஆலுகாஸ்களிலும்  வரிசையில் நின்றிடுபவர்கள் அனைவருமே ஏ.சி அறையின் சொகுசில் அமர்ந்து ஏராளமாய் சம்பாதித்து ஆன்லைனில் பணம் அனுப்பிடும் பாக்கியவான்கள் அல்லவே ! 'சிரமங்கள் நித்தம் ; சிறப்பு நாட்கள் எப்போதாவதென்று' மனதைத் தேற்றிக் கொண்டே பணத்தை சந்தோஷமாய்  எண்ணுபவர்களும்  நாம் தானே !

அதுவும் நமக்கு முழுதாக ஆறு மாதங்கள் அவகாசமும் உள்ளன ...இந்த இதழுக்கான பணத்தினை அனுப்பிட ! அவசியமெனில்  இரு பிரிவுகளாகப் பிரித்து அனுப்பிட்டாலும்  நாங்கள் பெற்றிடத் தயாரே !  வாழ்க்கையின் சிரமங்களை ; பணப் பிராண்டல்களின் வலிகளை மெய்யாக உணர்ந்து வளர்ந்திட்டவன் நான் ; பணத்தின் அருமையும், அதனை சேகரிக்க அவசியப்படும் உழைப்பையும் அறியாதவன் நானல்ல... ! இனி ஒரு சந்தர்ப்பம் இது போல் எழுந்திட பத்து வருடங்கள் ஆகிடும் ; அத்தி பூத்தாற் போல் வந்திடும் ஒரு சிறப்பு நாளுக்கு இத்தனை கிலேசம் அவசியம் தானா ?

அப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில்  சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம்  சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை !  

  பதிலாய்த் துவங்கியதொரு சங்கதி, பதிவாய் மாறிப் போனது - நீளம் கருதி ! 4096 எழுத்துக்களுக்கு மேல் டைப் செய்தால் அதனை ஒரு reply ஆக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது இணையதளம் ! 



நாளை சிந்திப்போம் folks !  


  

Sunday, July 08, 2012

மெய்யாலும் முதல்முறையாக....!!!


நண்பர்களே,

'திடு திடு'ப்பென மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டொரு பயணம் சென்ற வார இறுதியினில் அவசியப்பட்டதால் ஒரு வாரமாக இங்கே absent without leave ! Sorry guys ! அதற்கு ஈடு செய்யும் விதத்தில், இன்றைய பதிவு அமைந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !

அடுத்து வரவிருக்கும் நமது லயன் New Look Special இதழின் ஹாட்லைனில் நான் எழுதியதை அப்படியே இங்கே Jpeg format ல் பதிவு செய்துள்ளேன் ! சுடச் சுட இப்போது தான் டைப்செட்டிங் முடித்து எனக்கு வந்த first copy இது என்பதால், ஆங்காங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உள்ளன ! அடியேனின் கம்ப்யூட்டர் ஞானம் அனுமதித்த அளவிற்கு பிழைகளைத் திருத்தியுள்ளேன் - நாளை பகலில் professional ஆக correct செய்யப்பட்ட final copy  என் கைக்கு வந்த பின்னே அதனை இங்கே மாற்றி விடுவேன் - தற்சமயம் பிழைகள் பொருத்தருள்க ! 

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் - ஜூலை 15 -ல் ஒரு அதிரடி சேதி காத்துள்ளது என்று நான் லேசாக போட்ட பிட் மறந்திருக்காதென   நினைக்கிறன் !  Here goes :   


நியூ லுக் ஸ்பெஷலில் ..ஜாலி ஜம்பர் லக்கி லூக்கைப் பார்த்துக் கேட்டிடும் கேள்வி ஒன்றினை இன்று முழுவதுமாய் நானே என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் : "இவரென்ன பாசா..இல்லை லூசா..?"  என்று ! கால் கட்டை விரலை கடவாயில் திணிப்பதைத் தவிர்ப்பதற்காகவேணும் கால்கள் தரையில் திடமாய் பதிந்திருக்க வேண்டுமென நான் எத்தனை முயற்சித்தாலும், உங்களின் உற்சாகமும், உத்வேகமும் என்னை ஏதாச்சும் செய்யத் தூண்டுகின்றன என்பதே நிஜம் ! உங்களின் அண்மையும், ஆண்டவனின் அருளும் என்றும் தொடர்ந்திடுமென்ற நம்பிக்கையோடு இந்த Never  Before முயற்சிக்குப் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் !! Fingers Crossed guys ! 

இந்த வார ஊர்சுற்றலினிடையே நமது பதிப்பகத்தினரை   சந்திக்கவும் சமயம் வாய்த்தது ! ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய கோடை காலமென்பதால் நிறைய நிறுவனங்கள் விடுமுறை விடுவது வழக்கம். என் அதிர்ஷ்டம் -  நான் சந்திக்க வேண்டிய நிர்வாகி அன்று பணியில் இருந்திட்டதால் relaxed ஆகப் பேசிட முடிந்தது ! புது வரவாக நாம் சந்திக்கவிருக்கும் Gil Jourdan அவரது suggestion தான் ! "நிச்சயம் உங்கள் வாசகர்கள் விரும்புவார்கள்" என்று அவர் சொல்லிய பின்னர் தான் நானும் இத்தொடரை திரும்பவும் புரட்டிட்டேன் ! நிஜம்மாகவே அருமையாக உள்ளது அப்போது தான் புலப்பட்டது ! இதோ - அந்தப் புதியவரின் முதல் glimpse :


கால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்கும் கம்பீரத்தில் மட்டுமல்லாது, கதையின் வேகத்திலும், வீரியத்திலும் புதியவர் ஜோர்டான் - லார்கோ வின்சை எட்டிப் புடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போமா ?!! 

Never Before ஸ்பெஷலில் வரவிருக்கும் முதல் சாகசம் !
முன்பதிவுக் கூப்பன் !
நியூ லுக் ஸ்பெஷலில் இந்த அதிரடி NEVER BEFORE இதழின் 10 கதைகளின் டிரைலர்களும் வண்ணத்தில் உள்ளன ! 

Polevault எனும் பெரும் உயரங்களைத் தாண்டிடும் போட்டியினில் செர்ஜி புப்கா எனும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்ததொரு உலகச் சாம்பியன் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் ! ஒவ்வொரு போட்டியிலும் தான் தாண்ட எத்தனிக்கும் உயரத்தை உயர்த்திக் கொண்டே செல்வார் ! முயற்சிகளைக் கடுமையாக்க...வெற்றிகளை வெறியோடு வேட்டையாடிட சதா சவால்கள் தேவை என்பது அவரது சித்தாந்தம் !அதே போல் நமக்கும் ஒவ்வொரு முறையும் இலக்கை உயர்த்திக் கொண்டே சென்றிடும் பெருமை உங்களைச் சார்ந்தது ! You are raising the bar each time folks - and we will give it our best shot ! 

எப்போதையும் விட இப்போது இந்தப் புதிய முயற்சி பற்றி உங்கள் அனைவரின் என்னைங்களும்,கருத்துக்களும்  அவசியம் தேவை - ப்ளீஸ் !! Please do write !! பரீட்சார்த்தமாய் இன்னுமொரு விஷயத்தினையும் நடைமுறைப்படுத்திட இந்தத் தருணத்தைப் பயன்படுத்திட நினைக்கிறேன் ! நம் புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசிட எண்ணும் நண்பர்கள், ஒவ்வொரு சனி & ஞாயிறுகளின் போது என்னைத் தொடர்பு கொண்டிட 8220832646 என்ற  mobile நம்பரை பயன்படுத்திடலாம் ! நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பரில் என்னோடு உங்கள் எண்ணங்களை ; சிந்தனைகளைப் பகிர்ந்திடலாம் ! See you around folks!Have a great weekend !