Powered By Blogger

Sunday, December 31, 2023

டிசம்பருக்குப் பிரியாவிடை !

 நண்பர்களே,

வணக்கம். வருஷத்தில் கடைசி தினம் ! நல்லா வடிவேலை போல ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி நின்று கொண்டு கடந்துள்ள ஆண்டினை சித்தே திரும்பிப் பார்க்க முனைவோமா ? ஆனால் flashback mode-க்குள் நுழைந்திடும் முன்பாய் இந்த டிசம்பர் பற்றி கொஞ்சம் பேசி விடுகிறேனே !

4 இதழ்களை டிசம்பரின் துவக்க வாரத்தில் அனுப்பியதெல்லாமே ஏதோவொரு காலத்தின் நினைவாட்டம் உள்ளது உள்ளுக்குள் - simply becos அவற்றைத் தொடர்ந்து இங்கு அரங்கேறி வந்துள்ள கூத்துக்கள் ஒரு கோடி ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் - விங்-கமாண்டர் ஜார்ஜின் ஸ்பெஷல் தொகுப்பின் பணி இடர்கள் பற்றி ! In hindsight - ஜார்ஜை டிசம்பருக்குள் நுழைக்க நினைத்ததே எக்கச்சக்கச் சுணக்கங்களுக்கு துவக்கப்புள்ளி என்பது புரிகிறது ! சென்னைப் புத்தக விழாவின் தேதிகள் அறிவிக்கப்பட்ட கையோடு நமது ஆட்கள் bookfair முஸ்தீபுகளில் இறங்கியவர்களாய் என்னிடம் நீட்டிய ஓலையில் குறிப்புகள் இவ்விதமிருந்தன :

 • மாயாவி புக்ஸ் - பூஜ்யம்
 • லாரன்ஸ்-டேவிட் புக்ஸ் - பூஜ்யமோ பூஜ்யம்
 • ஜானி நீரோ - லேது 
 • ஸ்பைடர் - ஒண்ணே ஒண்ணு 
 • லக்கி லூக் - மூணே மூணு 
 • கதை சொல்லும் காமிக்ஸ் புக்ஸ் - சொற்பம் 

சென்னைப் புத்தக விழாக்களுக்கு மாயாவி மாம்ஸும், லாரன்ஸ் சித்தப்ஸும், ஜானி நீரோ மச்சான்ஸ்சும் இல்லாது போய் கடை விரித்தால் என்ன மாதிரியான துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் விழும் என்பதை கண்கூடாய் நேரில் பார்த்தவன் என்ற முறையில் அவசரமாய் நிலவரங்களை சரி செய்திட வேண்டும் என்பது புரிந்தது ! ஜவ்வு மிட்டாயாய் ஜார்ஜ் இழுத்துக் கொண்டே போக, மழைகள் சார்ந்த இடர்களும் கோர்த்துக் கொள்ள, எனக்குள் பதட்டமும் தொற்றிக் கொண்டது ! இன்னொரு கொடுமை என்னவெனில் நடப்பாண்டில் சிவகாசிக்கு கிட்டியுள்ள காலெண்டர் & டயரி ஆர்டர்கள் வரலாறு கண்டிரா ஒரு புது உச்சம் !! அதை எண்ணி மகிழலாமென்றால் - ஊருக்குள் உள்ள சகல பைண்டிங் நிறுவனங்களும், தினசரி காலண்டர்களுக்கு படங்களை அட்டை மீது ஒட்டித் தரும் பணிகளுக்கும், மாதாந்திரக் காலண்டர்களுக்கு மேலே டின் அடித்துத் தரும் பணிகளுக்கும் ஆட்கள் போய்விட்டார்கள் என்று கையைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்கள் ! இன்னொரு பக்கமோ டயரிகளின் பணிகள் பிசியோ பிசி ! ஆண்டுதோறும் டிசம்பரில் அரங்கேறிடும் நிகழ்வுகளே - ஆனால் இந்தாண்டின் ஆர்டர்கள் ஒரு புது உச்சம் ! So நம்மளைப் போலானோரை - 'அப்டி ஓரமா நின்னு வெளாடிட்டு இருங்க தம்பி !' என்று ஓரம்கட்டி விட்டார்கள் ! 

நானோ ஒரு டஜன் மறுபதிப்புகளுக்கு லிஸ்ட் போட்டு வைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஜனவரியின் புது புக்ஸ் நான்கினையும் வேக வேகமாய் பணிமுடித்து அச்சுக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் இருந்தேன் ! கடைசி 10 தினங்களில் எனக்கும் சரி, நமது டீமுக்கும் சரி, எங்கிருந்து இத்தனை ஆற்றல் கிட்டியதோ, சத்தியமாய்த் தெரியாது, ஆனால் பிசாசுகளாட்டம் தினமும் ஒரு புக்கை முடித்து பிரிண்டிங்குக்கு அள்ளி இறைத்துக் கொண்டிருந்தோம் ! And மறுபதிப்பு தானே - அப்டியே இருக்கட்டும் என்று விடவும் மனமின்றி, ஒவ்வொன்றிலுமே இயன்ற திருத்தங்களை செய்திடத் தவறவில்லை ! அதிலும் குறிப்பாய் லக்கி லூக் மறுபதிப்பு லிஸ்டானது ஒன்றிலிருந்து இரண்டாகி, இரண்டிலிருந்து மூன்றாக முன்னேற்றம் கண்டிட, முன்னாட்களில் நமது கார்ட்டூன் மொழியாக்கங்கள் எத்தனை பெத்த மொக்கைகளாய் இருந்து வந்துள்ளன என்பது புலனாகியது ! செம க்ளாஸிக் கதைகளுக்கு மொழியாக்கத்தில் மெருகூட்டிடாது அப்டிக்கா தொடர்ந்திட  கிஞ்சித்தும் மனம் ஒப்பவில்லை & கிட்டத்தட்ட 3 ஆல்பங்களுக்குமே 50% க்கும் அதிகமாய் மாற்றி எழுத வேண்டிப் போனது ! 

To cut a hugely long story short - ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் + விலையில்லா கலர் டெக்ஸ் இதழ்களை டெஸ்பாட்ச் முடித்து விட்டு ;   டின்டின் புக்ஸ்களை அட்டகாசமாய் ரெடி பண்ணி வாங்கி விட்டு, லார்கோவை தெறிக்கும் கலரில் அசாத்தியமான அழகில் அச்சிட்டு விட்டு, வேதாளரையும் கலரில் போட்டுத் தாக்கிவிட்டு, இளம் டெக்ஸை அட்டகாசமானதொரு புதுக் காகித ரகத்தில் அச்சிட்டு விட்டு, மறுபதிப்புகளில் 8 இதழ்களை (இது வரையில்) பிரிண்ட் பண்ணி விட்டு, பிடித்திருந்த செம ஜல்ப்புக்கு மாத்திரைகளை விழுங்கி விட்டு நேற்றிரவு கட்டையைச் சாத்திய போது மிதப்பது போலிருந்தது ! மாத்திரைகளின் effect ஆ ? கடைசி 6 நாட்களில் நம்மாட்கள் தாண்டியுள்ள புது உசரங்களின் பெருமிதமா ? சொல்லத் தெரியலை - ஆனால் இதோ, ஞாயிறு காலையில் லேட்டாக கண்முழிக்கும் போதுமே மனசுக்குள் ஒரு இளையராஜா டியூன் ஓடிக்கொண்டிருந்தது !  

ரைட்டு....இனி நடப்பாண்டின் ரிப்போர்ட் கார்ட் பக்கமாய்ப் போகலாமா ? Truth to tell - தீவிர, அதி தீவிர வாசக நண்பர்களை தவிர்த்த பாக்கிப் பேர் நடப்பாண்டின் ஒரு பாதியை வாசித்திருந்தாலே பெருசு என்று தான் நினைக்கிறேன் ! 'பொம்மை பாக்க' மட்டுமே நேரம் இருந்திருக்கும் நண்பர்களுக்கு 2023-ன் பயணத்தினை நினைவூட்டும், விடுபட்ட இதழ்களை வாசிக்க ஊக்குவிக்கவும் இதோ - இந்த அட்டைப்படங்களின் தொகுப்பு உதவினால் செம !    

மேற்படி இதழ்களை நீங்கள் ஆராமாய் அசை போட்டுகொண்டு இருங்க guys  ; ரிப்போர்ட் கார்டை ரெடி பண்ணி விட்டு ஒரு மணி நேரத்துக்குள் தொடர்கிறேன் !  இதில் எத்தனை வாங்கினீர்கள் ? வாசித்தீர்கள் ? என்று பதிவிட்டால் will make for interesting reading !

Part 2 :

வழக்கம் போல, நாம் ஆரம்பிக்கப் போவது TOP OF THE YEAR 2023 - ஆண்டின் டாப் 3  இதழ்கள் தேர்விலிருந்து ! Please note - இவை முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட அபிப்பிராயங்களே அன்றி, எவ்வித தீர்ப்பும் அல்ல ! So உங்களது யூகங்களோடு நான் ஒத்துப் போயிருக்காவிடின், chill.....ப்ரீயா விடுங்க ! 

எனது பார்வையில் 2023-ன் இதழ் # 1 - இளம் டெக்ஸ் ஒரு 6 பாக அதிரடியில் பின்னிப் பெடலெடுத்த "THE சிக்ஸர் ஸ்பெஷல்" தான் ! நாமெல்லாம் எப்போதுமே 'தல' பின்னால் அணி திரளும் ரசிகக்கூட்டம் தான் என்றாலுமே, இந்த அட்டகாசமான கதைச் சுற்றில் ஒரு அட்டகாசமான தீபாவளி விருந்தின் திருப்தி கிட்டிடாது போயிருக்காது என்பது எனது நம்பிக்கை ! Yes - கலரில் இது சாத்தியமாகியிருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும் தான் ; ஆனால் கலரோ, கறுப்போ - அந்த அனல் பறக்கும் கதைக்களத்தை வீரியம் scores big !!

எனது பார்வையில் நடப்பாண்டின் இதழ் # 2 - ஏப்ரலில் வெளியான XIII spin -off - "எந்தையின் கதை" தான் ! பொதுவாகவே ஒரு ஜாம்பவான் கையாண்ட தொடருக்குள் அடுத்த தலைமுறையினர் தலைநுழைக்கும் போது - மாற்றங்கள் பளீரென்று தென்படாது போகாது ! கேப்டன் டைகர் தொடரில் கதாசிரியர் சார்லியேவுக்குப் பின்பான அத்தனை பேரும் தலைகீழாய் நின்று தண்ணி குடிச்சாலும் அவரது உச்சங்களை நெருங்கக் கூட முடியவில்லை ! கோசினி & மோரிஸுக்குப் பின்பாய் லக்கி லூக்கை அந்தப் பழைய அற்புதத்தில் ரசிக்க இயலவில்லை ! XIII தொடரிலேயே பிதாமகர் வான் ஹாமுக்குப் பின்பான படைப்பாளிகளின் எல்லைக்கோடுகள் எவையென்பதை பார்த்தும் விட்டோம் ! அப்படிப்பட்டதொரு சூழலில், XIII-ன் spin off தொடரினில் புதுசு புதுசாய் படைப்பாளிகள் களமிறங்கிய போது results were a mixed bag என்பதில் வியப்பிருக்கவில்லை ! "விரியனின் விரோதி" மங்கூசின் flashback போன்ற செம ஆல்பங்களும் உண்டு ; "பெட்டி பார்னோஸ்வ்க்கி" போன்ற சுமார்களும் உண்டு என்ற புரிதல் கிட்டிய பின்னே தான் இத்தொடரில் ரொம்பவே selective ஆக இருத்தல் அவசியம் என்று தீர்மானித்தேன் ! அதன் பின்பான "சதியின் மதி" (கால்வின் வாக்ஸ் flashback) அழகான ஆல்பமாய் அமைந்ததெனில், இந்தாண்டில் வந்திருக்கும் "எந்தையின் கதை" உறுதியான சிக்ஸர் என்பேன் ! ஒரு மிதமான வெற்றித் தொடருக்கே spin off எழுதுவதென்பதே நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் ! ஆனால் XIII போன்றதொரு செம சூப்பர் ஹிட் தொடருக்கு, அத்தனை குழப்பங்களுக்கு இடையேயும், துளியும் நெருடல்களின்றி ஒரு பின்கதையினைப் புனைவதென்பது இமாலயப் பணி ! அதைக் கச்சிதமாய்ச் செய்து ; சித்திரங்களிலும், கலரிங்கிலும் கலக்கியிருந்த டீமுக்கு hats off !! துளியும் சந்தேகங்களின்றி இந்தாண்டின் best # 2 ! 

மூன்றாமிடத்தினை பிடிக்க மூன்று இதழ்களுக்கு மத்தியில் போட்டி என்பேன் ! 

 • சம்மர் முடிந்து மழை தலைகாட்ட ஆரம்பித்த நேரத்தில் வெளியான "சம்மர் ஸ்பெஷல்" 
 • இரவுக் கழுகாரின் 75 வது பிறந்தநாள் மலரான The SUPREMO ஸ்பெஷல்"
 • தாத்தாஸ் - துள்ளுவதோ முதுமை !
பைண்டிங்கில் சொதப்பல்களின்றி வெளியாகியிருப்பின் "சம்மர் ஸ்பெஷல்" சந்தேகமின்றி வெற்றியைத் தட்டிச் சென்றிருக்கும் தான் ! அதே போல "அட்டைப்பட தல ரசிக்கலே" என்ற முகாரிகளும் இல்லாது போயின் Supremo ஸ்பெஷல் அந்த இடத்தினை ஈட்டியிருக்கும் தான் ! மாறாக, பெருசுகள் காஷுவலாய் வந்தார்கள் ; தங்களின் டிரேட்மார்க் லூட்டிகளைச் செய்தார்கள் ; and இதோ - ஆண்டின் மூன்றாவது best என்ற வெற்றியையும் ஜோப்பிகளுக்குள் போட்டுக்கிளம்பி விட்டார்கள் ! இந்தத் தொடர் முழுமை காணும் நேரத்துக்குள் நம் மத்தியில் தாத்தாக்களுக்கு செம ரசிகர் மன்றமொன்று உருவாகாது போயின் நிஜமாகவே வியப்படைவேன் ! தாத்தாஸ் ஒரு மாஸ் நாயகர்களாக அடியெடுத்து வைத்து விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது ! 

Right....டாப் எவை ? என்று பார்த்த கையோடு டப்ஸா எவை ? என்று பார்த்து விடலாமா ? 

இம்மி கூட சந்தேகமே இன்றி 2023-ல் மிகப் பெரிய பல்பு வாங்கியது மைக் ஹேம்மர் தான் ! "மரணம் சொன்ன இரவு" தெறிக்க விடுமென்று எண்ணியிருந்தேன் ; மாறாக உங்களைக் கதற விட்டது தான் பலனாகிப் போனது ! இங்கிலீஷில் படித்த போது இந்தக் கதையும் சரி, ஆர்ட்ஒர்க்கும் சரி, சூப்பராகவே தென்பட்டது எனக்கு ! ஆனால் போன ஜனவரியில் வெளியான சமயத்தில் நிகழ்ந்ததே வேறு !! Sorry folks !

பல்பு வாங்கிய பட்டியலில் இடம் # 2 - V காமிக்சில் வெளியான "சென்று வா..கொன்று வா.." என்பேன் ! Lady killer ...ஸாகோரை வேட்டையாடப் போகிறாள் ; அனல் பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தால் கங்கு கூடப் பறக்கவில்லை !! 

இடம் # 3 - இதோ இந்த டிசம்பரில் வெளியான 'தல' ஜாகஜமான "உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !" தான் என்பேன் ! ரொம்பவே மர்மமான துவக்கம் ; சோப்பரான பில்டப் என்று ஆரம்பித்து விட்டு ஒரு சோன்பப்டிக்காரரைப் போன்ற அப்பிராணியை வில்லன் என்று காட்டி, க்ளைமாக்சில் சுறா ; இரா என்றெல்லாம் ரவுசு அடித்து விட்டு "சுபம்" என்று போட்ட போது மெய்யாலுமே யோசிக்கத் தோன்றியது !! சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து, வில்லனை ஒரு தடாலடிப் பேர்வழியாய் காட்டியிருந்தால் இந்த ஆல்பம் ஒரு செம ஹிட் ஆகியிருக்குமே என்ற ஆதங்கம் அலையடித்தது ! Phew !! 

சரி..."உச்சம் எது ?" "பள்ளத்தில் எது ?" என்று பார்த்தான பின்னே, 2023-ன் கமர்ஷியல் ஹிட்ஸ் எவை என்று பார்க்கலாமா ? இதோ - பட்டியல் :

 • கார்சனின் கடந்த காலம் 
 • காலனின் கால்தடத்தில் (!!!!!!!!!!)
 • தி சிக்ஸர் ஸ்பெஷல் 
 • TEX - தி சுப்ரீமோ ஸ்பெஷல் 
 • The Big Boys ஸ்பெஷல்
 • குற்ற நகரம் கல்கத்தா 
மேற்படி 6 இதழ்களுமே விற்பனையில் புரட்டி எடுத்துள்ளன !! Commercial hits of 2023 என்றால் இந்த 6 தான் !

அதே போல விற்பனையில் ஏமாற்றம் தந்த இதழ்களை பட்டியல் போடுவதாயின் : 
 • சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் # 2 
 • உயிரைத் தேடி - black & white தொகுப்பு
 • நெவாடா 
இதில் சுஸ்கி & விஸ்கி தான் an area of concern ! முதல் ஆல்பத்தை தெறிக்க விடும் வகையில் வரவேற்றோம் ; ஆனால் அதற்கு கிஞ்சித்தும் சளைக்காத இரண்டாம் தொகுப்போ பாம்பு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது ஒண்ணுமே புரிலிங்கண்ணா ! வெறும் நோஸ்டால்ஜியா மோகம் தானுங்களா கோப்பால் ??? என்ற கேள்வியே இங்கு நிற்கின்றது ! இயன்றால் பதில்ஸ் ப்ளீஸ் folks ? 

So 2023-ன் ரிப்போர்ட் கார்ட் இதுவே - எனது பார்வையில் ! 

இனி உங்களின் அபிப்பிராயங்களை அறிந்திட ஆவல் ! உங்களது TOP 3 ; டப்ஸா 3 எவை என்று பதிவிடுங்களேன் guys ?

Bye all for now people....see you around ! இந்தாண்டுக்கு இன்று டாட்டா சொல்லி விட்டு, நிறைய நம்பிக்கையோடு புத்தாண்டினை வரவேற்றிடத் தயாராகுவோமா ? அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் all ! நாளை காலை கூரியர்கள் உங்கள் கதவைத் தட்டிடுவார்கள் என்பதை நினைவூட்டிய கையோடு கிளம்புகிறேன் ! 2024 - சந்தோஷத்தின் ஆண்டாய் நம் அனைவருக்கும் அமையட்டும் ! 

Day 1 of Year 40 too !!


நமது ஸ்டால் நம்பர்கள் : 364 & 365 !! Please do visit folks !!

Sunday, December 24, 2023

ஜாம்பவான்களின் ஜனவரி..!

நண்பர்களே,

வணக்கம். தொடும் தொலைவினில் புத்தாண்டும் ; சென்னைப் புத்தக விழாவும் காத்திருக்க, புது இதழ்கள் ; மறுபதிப்புகள் என்று ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது ! கொட்டித் தீர்த்த மழையில் நாம்  சேதங்களின்றித் தப்பியிருப்பினும், பைண்டிங்கிலும், கூரியர் டப்பி செய்து தரும் நிறுவனத்திலும், இயந்திரங்கள் மழை நீரில் குளித்திருக்க, செப்பனிடும் பணிகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு இப்போது தான் திரும்பி வருகின்றனர் ! So ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் வரும் வாரத்தில் புறப்பட்டு விடுவார்கள் ! மன்னிச்சூ ப்ளீஸ் ! And ஏதேதோ காரணங்களின் பொருட்டு 2023-ன் இரண்டாம் பாதி முதலாய்த் தொற்றியிருந்த தாமதப் பிசாசை, காத்திருக்கும் பிப்ரவரி முதலாய் துரத்தியடித்து விடலாம் என்பது உறுதி ! மாதத்தின் முதல் தேதியெனும் அந்த ஸ்லாட்டை இனி கோட்டை விட மாட்டோம் - that's a promise !

சென்னைப் புத்தக விழாவின் துவக்கம் ஜனவரி 5 என்றிருந்து, அப்புறமாய் ஜனவரி 4 ஆக மாறி, இறுதியில் ஜனவரி 3 க்கென தீர்மானமாகியிருக்க,ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருக்கிறோம் - ஆளுக்கொரு வண்டி வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு !! சும்மாவே ஒரு புது வருஷத்தின் முதல் மாத இதழ்களுக்கு நிரம்ப கவனம் தேவையாகிடும் & இம்முறையோ இரட்டிப்பு மெனக்கெடல் தேவையாகின்றது ! # One : ஒரு புது வாசிப்பு அனுபவத்திற்கான ப்ராமிஸுடன் 2024 க்கு துவக்கம் தந்திடவுள்ளோம் ! # Two : இந்த ஜனவரி ஜாம்பவான்களுக்கான ஜனவரி !! So முன்னெப்போதுமே இல்லாததொரு பட்டாம்பூச்சி நடனம் தொந்திக்குள் ! ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல - நான்கு (காமிக்ஸ் உலக) பெத்த தலைக்கட்டுகள் ஒரே நேரத்தில் களமிறங்கிடுகிறார்கள் எனும் போது, அவர்களுக்கான முதல் மரியாதைகளில் துளியும் குறைபாடு இருந்திடலாகாதே ! 

சந்தேகமின்றி ஜனவரியின் (நமது) highlight சாகசவீரன் டின்டின் தான் ! ஏற்கனவே இதைச் சொல்லியுள்ளேனா - தெரியவில்லை, ஆனால் உலகம் சுற்றும் இந்த ரகளையான நாயகரை தமிழுக்குக் கொணர கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளின் முயற்சிகள் அவசியப்பட்டிருந்தன ! And நடப்பாண்டின் ஜனவரி இறுதியில், ஆங்குலேமில் இதற்கான ஜெயம் கிட்டிய போது, ஒரு முழு பிளேட் சுக்கா ரோஸ்ட்டை கண்ட கார்சனாட்டம் வாயெல்லாம் பல்லாச்சு எனக்கு !  'ஊருக்குப் போறோம், புக்கை ரெடி பண்றோம், ரவுசு விடறோம் !'  என்பதே உள்ளுக்குள்ளான உற்சாக மைண்ட்வாய்ஸ் -அந்த நொடியில் !! ஆனால் எனக்குத் துளியும் தெரிந்திருக்கவில்லை  - மெய்யான உசரம் தாண்டும் வைபவமே இனிமேல்தான் காத்துள்ளதென்பது ! 'அட, எம்புட்டு பதிப்பகங்களோட ; எத்தினி நாயகர்களோட பணி செஞ்சிட்டோம்.....இவரோடயுமே அன்னம், தண்ணீ புழங்க லேசா பழகிக்கலாம் !' என்று நினைத்திருந்தவனுக்கு அடுத்தடுத்த படிகளில் தான் புரிந்தது - மற்றவர்கள் - மற்றவர்கள் தான் & டின்டின் - டின்டின் தான் என்பது ! 

மொத்தமே 24 ஆல்பங்களைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை அசாத்திய வெற்றியோடு தாண்டுவதெல்லாம் ஜாம்பவான்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சாத்தியமாகிடாதே ?! And ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழியிலும் டின்டின் வெளியாகிக் கொண்டிருந்தாலும், மொழிபெயர்ப்புத் தரத்தில் ; ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதைக்கும் பாணிகளில் ; தயாரிப்புத் தரத்தில் இம்மியூண்டு கூட வேறுபாடு இருந்திடலாகாது என்பதில் அத்தனை கவனமாய் உள்ளனர் ! தயாரிப்பின் ஒவ்வொரு அங்குலத்தினையும் நம்மோடு கரம்கோர்த்து அவர்கள் பார்வையிட்டு வந்தது மாத்திரமன்றி, தமிழாக்கத்தினையும் கவனமாய் பரிசீலித்து வந்தனர் ! இங்கே கேப்டன் ஹேடாக்கின் 'கடா முட' டயலாக்குகள் தவிர்த்த பாக்கியெல்லாம் பெருசாய் நெட்டி வாங்கும் ரகமல்ல தான் என்பதால் தம் கட்டி எழுதி முடித்து விட்டேன் ! ஆனால் கேப்டனின் வசை பாடும் வசனங்கள் பக்கமாய்ப் போன போது தான் வேடிக்கையே துவங்கியது ! 

இது குறித்து ஏற்கனவே இங்கொரு பதிவிட்டதும், நண்பர்களில் சிலர் தங்களுக்குத் தோன்றிய வரிகளை பரிந்துரை செய்திருந்ததும் நினைவிருக்கலாம் ! ஆனால் அந்த மாமூலான  "கிழிஞ்சது கிருஷ்ணகிரி" ; "கிழிஞ்சது லம்பாடி லுங்கி" போன்ற சமாச்சாரங்கள் கேப்டனுக்கு ஒத்துப் போகாதென்பதால் அவற்றை பயன்படுத்திட வழியிருக்கவில்லை ! மனுஷன் ஒரு மாலுமி ; ஒண்டிக்கட்டை ; கப்பல் பயணம் & விஸ்கி என்பதே அவரது வாழ்க்கை என்பதால், அவர் போடும் கூப்பாடுகளில் கடலும், கடல்சார் சமாச்சாரங்களுமாய் இருத்தல் பிரதான தேவை என்றாகியது ! So ஒரு 80 பக்க நோட்டையே போட்டு, சாமத்தில் தோணுவதையெல்லாம் கிறுக்கி வைக்க ஆரம்பித்தேன். இங்கு தான் நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் பங்களிப்பு நிரம்ப உதவியது ! அவருக்குத் தோணுவதையெல்லாம் எனக்கு அனுப்பிடுவார் & நன்றாக இருக்குதோ-இல்லியோ, சகலத்தையும் குறித்து வைத்துக் கொண்டேன். அதே போல எனக்குத் தோணும் வரிகளை அவரிடம் bounce செய்து பார்ப்பேன் ! "இன்ன இன்ன காரணங்களுக்காய் இவை நல்லாயில்லை !" என்று அவர் சொல்ல, "இது இதுலாம், இதுனாலே தேறலே !" என்று நான் சொல்ல, இந்தப் பரிவர்த்தனைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடி வந்தன ! 'அட புலவய்ங்களா....நீங்க எழுதுறது தேறுமா - இல்லையான்னு தீர்மானம் சொல்லப் போறதே நாங்க தான் ! அடங்குங்க !" என்று நடுவே படைப்பாளிகளின் பரிசீலனை டீம் சொல்ல, மாதங்கள் ஓட்டமாய் ஓட்டமெடுத்தன ! In essence கேப்டனின் கூப்பாடுகளில் அர்த்தம் ஏதும் லேது ; மனுஷன் கோபத்தில் கொப்பளிக்கும் போது வெளிப்படும் கச்சா முச்சா வார்த்தைகளே அவை ! சரி, இங்கிலீஷில் உள்ள template-ஐ பின்தொடரலாம் என்றால், அங்கே நின்றோரோ தஞ்சாவூர் பெரியகோவிலின் நந்தியினை விட பிரம்மாண்டமானோர் ! பிரெஞ்சிலிருந்த டின்டினை  ஆங்கிலப்பதிப்புக்கென மொழிமாற்றம் செய்திட 1958-ல் களமிறங்கிய Leslie Lonsdale Cooper & Michael Turner இந்தத் தொடருக்கே ஒரு புதுப் பரிமாணத்தை வழங்கினார்கள் என்றால் அது மிகையே ஆகாது ! So காலத்தை வென்ற அவர்களின் வரிகளுக்கு முன்னே நாம் எதை போட்டுப் பார்த்தாலும் மொக்கையாகவே தெரிந்தது ! நாட்களின் ஓட்டத்தோடு நிரம்ப நிரம்ப அடித்தல், திருத்தம், மறுதிருத்தம் என்ற கூத்துக்களுக்குப் பின்பாய் கொஞ்சம் ஸ்கிரிப்ட் finetune ஆகியிருந்தது போல் பட்டது ! 

படைப்பாளிகளும் அதனை approve செய்திட, நம் மத்தியில் ரெகுலராய் டின்டினை (சு)வாசிக்கும் நண்பர்களிடம் மேலோட்டமான அபிப்பிராயக் கோரல் ; "டின்டின் வீசம்படி எவ்வளவு ?" என்று கேட்டாலும் கார்ட்டூன்களை நேசிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உரையாடல் - என்று சுற்றி வந்தோம் ! இறுதி stretch-ல் கார்த்திக் மறுக்கா தனது பங்களிப்பினை செம active ஆக செய்திட, மூன்று நாட்களுக்கு பட்டி-டிங்கரிங் ரணகளமாய்த் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களாய் நான் ஒருவனே, ஒரே கோணத்தில் பார்த்து வந்த  ஸ்கிரிப்ட் - வாசகப் பார்வைகளில்  / விமர்சகப் பார்வைகளில் எவ்விதம் எடுபடுகிறது ? என்று தெரிந்து கொள்ளவே இத்தனை கூத்துக்களும் ! தவிர, கேப்டனுக்கு நாம் இன்று செட் செய்திடும் template தான் இனி தொடர் முழுக்கத் தொடர்ந்திடும் எனும் போது இயன்றமட்டுக்கு முயற்சித்து விட்டோம் என்ற திருப்தி கிட்டும் வரை கண்ணில்பட்ட தூணிலெல்லாம் மண்டையை முட்டிக்க எனக்குத் தயக்கமே இருக்கவில்லை !  And எனது 40 வருஷ சர்வீஸில் ஒற்றை கதைக்கு இம்புட்டு நேரம் செலவிட்டதே லேது ; so பற்பல வகைகளில் ஒரு first ஆகிடும் (தமிழ்) டின்டின் உங்களிடமும் thumbs up வாங்கினால் ஒரு பெரும் பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! FINGERS CROSSED !! Thanks a ton கார்த்திக் & inputs தந்த all நண்பர்ஸ் !! Of course உங்களிடம் யோசனைகள் கேட்டு விட்டு, லெப்ட்டுக்கா, ரைட்டுக்கா என்றெல்லாம் போய், புளிய மரத்தில் வண்டியை விடுவதையும் நான் செய்துள்ளேன் தான் ! நாம என்னிக்கி சொல்பேச்சு கேக்குற ஒழுங்குப் புள்ளையா இருந்திருக்கோம் ? 

பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் - என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! அவர்களின் பரிந்துரைப்படி செம திக்கான ; செம செம திக்கான பேப்பரில் இந்த இதழ் அச்சாகிடவுள்ளது ! அடுத்த சில நாட்களில் புக்கை ரெடி செய்து தந்து விடுவதாக ப்ராமிஸ் செய்துள்ளனர் ; so 'பதக்' பதக்' என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சோடு காத்துக் கிடக்கின்றோம் !! 

Moving on, ஜனவரியின் next ஜாம்பவான் நம்ம கோடீஸ்வரகாருவே தான் ! கதாசிரியர் வான் ஹாம் போட்டுத் தந்தவொரு வெற்றிகரமான பார்முலாவை அதன் ஓவியரும், புதுக் கதாசிரியரும் லார்கோவோடு தொடர்கிறார்கள் ! எப்போதுமே லார்கோ கதைகள் மேற்கே ஆரம்பிச்சி, தெற்கே குட்டிக்கரணமடித்து ; வடக்கே வடை சுட்டு ; கிழக்கே க்ளைமாக்ஸை கொணர்வது வாடிக்கை ! And முடிச்சுக்கு மேல் முடிச்சை போட்டு நம்மை பிரமிக்க வைப்பார் வான் ஹாம் ! அதே வீச்சை ; அதே வேகத்தை ; அதே லாவகத்தை புதியவருமே கொண்டிருத்தல் சுலபமே அல்ல தானே ; so வான் ஹாம் 'டச்' எங்கே ? என்ற தேடலின்றி கதையினூடே பயணித்தால் சும்மா தீயாய் பறக்கிறது "இரவின் எல்லையில்" !! And இதுவரைக்கும் லார்கோ கதைகளில் நாம் பார்த்திராத களமாய் - வான்வெளிக்கே நம்மை இட்டுச் செல்கின்றனர் ! சித்திரங்களும் சரி, அந்த டிஜிட்டல் கலரிங்கும் சரி - பட்டாசு தான் !  இதோ - ஒற்றை மாதம் கூட ஆகியிருக்கவில்லை பிரெஞ்சில் இதன் ஒரிஜினல் வெளியாகி ; அதற்குள்ளாக தமிழில் நமக்கு வாய்ப்பு கிட்டியிருப்பது செம லக் என்பேன் ! பொதுவாய் லார்கோ கதைகளுக்குப் பேனா பிடிப்பது குடலை வாய்க்குக் கொண்டு வரும் பணியாக இருப்பதுண்டு தான் ; but நாட்களின் ஓட்டத்தோடு நமது ரசனைகளிலும் கணிச மாற்றங்கள் நிகழ்ந்து, CIA ஏஜெண்ட் ஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ போன்ற சமகால நாயகர்களோடு நாம் தோள் உரச ஆரம்பித்து விட்டதாலோ - என்னவோ, இம்முறை எனக்குப் பெரிதாய் கஷ்டங்கள் தோணலை ! In fact - இதற்கு முன்பாய் எழுதிய "கலாஷ்னிகோவ் காதல்" (சிஸ்கோ) - கணிசமாக நாக்கைத் தொங்கச் செய்திருந்தது !! And இதோ - ஒரிஜினல் டிஸைனுடன் preview !!


Next ஜாம்பவானுமே கலரில் கலக்கக் காத்திருக்கிறார் ! And இவரோ ஒரு கிளாசிக் நாயகர் ! 1936-ல் உருவானவர் எனும் போது இவருமே கிட்டத்தட்ட தொண்ணூறு அகவைகளைத் தொடக் காத்துள்ளார் ! "மரணம் அறியா மாயாத்மா" டென்காலி கானகத்தில் உலவுவதை இம்முறை கலரில் நம்ம V காமிக்சில் ரசித்திடவுள்ளோம் ! If I'm not mistaken - ஒரிஜினலாய் இந்த இதழ் மலையாளத்தில் ; ஹிந்தியில் ; இங்கிலீஷில் பிற பப்ளீஷர்ஸ் வெளியிடுவது போல பெரிய சைஸிலேயே திட்டமிடப்பட்டிருந்தது ! In fact வேதாளனின் கலர் கதைகளுக்காக படைப்பாளிகளிடம் பேசும் முன்னே என்னிடம் அது  பற்றி discuss செய்து கொண்டிருந்த சமயம் கூட "ரீகல் காமிக்ஸ்" சைஸ் தான் என்று இருந்தது template !  ஆனால் "ஒரு பக்கத்துக்கு இம்புட்டு படம் இருந்தா படிக்க ரசிக்க மாட்டேங்குது ஓய் !" என்று நீங்கள் SUPREME 60s க்கு எழுப்பிய புகார் குரல்கள் எனது காதுகளில் மாத்திரமன்றி, புள்ளையாண்டரின் காதுகளிலும் ஒலித்திருக்குமோ என்னவோ - reset செய்து டெக்ஸ் வில்லர் சைசுக்கே தயார் செய்து வருகிறார் V காமிக்சின் எடி ! And எழுத்துக்களும் நல்லா பெருசா ரெடியாகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ! So கண்ணாடியை வீட்டுக்குள் தொலைத்து விட்டுத் தேடுவோர் சங்கத்தில் நீங்களும் அங்கத்தினராய் இருந்தால் கூட no worries என்று சொல்லலாம் போலும் ! இதோ - நாம் ரெகுலராய் பயன்படுத்தி வரும் துருக்கிய ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்துடன் "வீரனுக்கு மரணமில்லை !" preview : 


Oh yes - மறக்கும் முன்பாய்ச் சொல்லி விடுகிறேனே - எழுத்துருக்கள் உபயம் வழக்கம் போல நண்பர் ஜெகத் தான் ! அட்டவணையில் உள்ள அத்தனை தலைப்புகளுக்கும் தனது தெறி ஸ்டைலில் டிசைன் செய்து அனுப்பியுள்ளார் ! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜெகத் !! 

ஜாம்பவான் # 4 - "இளம் டெக்ஸ்" !! ஜனவரியின் ஒரே black & white இதழில் இந்த யூத் சாகசச் சங்கிலி தொடர்கிறது ! And நமக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயமுள்ள சாம் வில்லரும் கதையில் இடம்பிடிக்கிறார் ! விடலைப் பருவத்தில் பெண்களை டாவடிப்பது ; கடலை போடுவது என்ற சம்பிரதாயச் சமாச்சாரங்களை 'தல' யுமே செய்துள்ளார் என்பதை "கண்ணீருக்கு நேரமில்லை" நமக்குக் காட்டிடவுள்ளது ! 128 பக்கங்களே ; செம crisp சாகசம், with செம crisp சித்திரங்கள் ! So ஜனவரியில் no அழுகாச்சீஸ் ; no இழுவைஸ் ; no மொக்கைஸ் - ஆல் racy த்ரில்லர்ஸ் ! இன்னும் சொல்லப் போனால் வேதாளரின் ஆல்பத்தில் கூட கதைக் காலம் ரொம்பவே வித்தியாசமாய் இருக்கும் போலும் ; DTP பணிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது கொஞ்சப் பக்கங்களை மட்டும் பார்த்த போதே - புராதனம் கொஞ்சி விளையாடும் களமாகத் தெரியவில்லை ! 

ஒற்றை நாயகர் ஜாம்பவானாய் அமைந்தாலே தெருவெல்லாம் பந்தல் போட்டு பீப்பீ ஊதுபவனுக்கு, நால்வர் ஒரே சமயத்தில் அமைந்தால் ???? குட்டிக்கரணம் அடித்தே போய் வருகிறேன் ஆபீசுக்கு ! So சந்தா எக்ஸ்பிரஸ் 2024 ல் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ஜாம்பவான்களை இதோ பார்த்த கையோடு - G Pay ஒன்றினைத் தட்டி விடலாமே - ப்ளீஸ் ?  


சொல்லுங்களேன் guys - இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? 

Before I sign out - புத்தக விழா update ! வழக்கம் போல் ஸ்டாலுக்கு விண்ணப்பித்து விட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ! மாத இறுதியில் உறுதியாகி விட்டால், ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நமது கேரவன் சென்னையில் தான் நிலைகொண்டிருக்கும். முதல் வாரத்தின் இறுதியில் (6 & 7 - சனி & ஞாயிறு) தேதிகளின் மாலைகளில் நமது ஸ்டாலில் வந்து பராக்குப் பார்க்க உத்தேசித்துள்ளேன் ! நண்பர்கள் எட்டிப் பார்த்திட்டால் வழக்கம் போல அரட்டையைப் போடலாம் ! Please do drop in folks !! 

Bye all....see you around !! "இளம் தல" எடிட்டிங் வெயிட்டிங் !! And Merry Christmas all ! 

Sunday, December 17, 2023

பூ மிதி டோய் !!

நண்பர்களே,

வணக்கம். என்றேனும் ஒரு தொலைதூர நாளிலோ, அல்லது சுமாரான தூரத்து நாளிலோ, OTT சினிமாக்களையும் ; ரீல்ஸ்களையும் பார்த்து அலுத்துப் போய், விட்டத்தை வெறித்திடும் வேளையொன்று புலர்ந்ததெனில் -  பழசையெல்லாம் அசை போடும் ஆசை எனக்குத் துளிர்க்கக்கூடும் ! அப்படியொரு அவா தலைதூக்கிடும் பட்சத்தில் அந்த flashback படலத்தினில் சர்வ நிச்சயமாய் இந்த 2023 ஒரு உச்ச இடத்தைப் பிடித்திடும் என்பேன் ! Simply becos இதுவொரு அசாத்திய ஆண்டாக இருந்து வந்துள்ளது - எக்கச்சக்க விதங்களில் !!

ஏற்கனவே சொல்லியாச்சு - நடப்பாண்டின் ரெகார்ட் இதழ்களின் எண்ணிக்கை பற்றியும், பக்கங்கள் பற்றியும் ! So காத்துள்ள புத்தாண்டு முதல் 'நறுக்' என்ற பாணிகளுக்கு மாற்றம் காணவிருக்கிறோம் என்ற குஷி அடிமனசில் அலையடிக்க, இந்த டிசம்பரை லைட்டாகத் தாண்டி விடலாமென்ற நம்பிக்கையோடு திரிந்து கொண்டிருந்தேன் !! "டிசம்பரின் நடுவாக்கில் ஏஜெண்ட் சிஸ்கோவின் டபுள் ஆல்பம் + விங்-கமாண்டர் ஜார்ஜின் தலையணை உசர தொகுப்போடு 2023-க்கு சுபம் போடுறோம் ; ஹேப்பியா ஜனவரி 2024 க்கான முஸ்தீபுகளில் இறங்குகிறோம்" - என்பதே மைண்ட்வாய்ஸ் ! And வி.க.ஜா. தொகுப்புக்கு கருணையானந்தம் அங்கிள் பேனா பிடித்திருக்க, ஒன்றுக்கு, இரண்டாய் நம் நண்பர்கள் அதனில் பிழைதிருத்தங்களும் போட்டிருந்தனர் ! So அக்கட எனக்கு வேலை கிடையாது ; சிஸ்கோ மாத்திரமே எனது பொறுப்பு என்றெண்ணியிருந்தேன் ! பக்க வரிசைகளைப் போட்டுக் கொடுத்துவிட்டு அச்சுக்குத் தயார் செய்யப் பணித்து விட்டு, டின்டின் மல்லுக்கட்டுக்களின் இறுதி stretch-ல் புரண்டு கொண்டிருந்தேன் ! 

மைதீன் மண்டையை லேசாய் சொறிந்தபடிக்கே, "அங்க அங்க கொஞ்சம் டயலாக்ஸ் மட்டும் இங்கிலீஷிலேயே இருக்குணாச்சி ; எழுதி தரீங்களா ?" என்று கேட்டான் ! அநியாயத்துக்கு நல்ல மூடில் இருக்க, "புஹாஹாஹா...ஒண்ணு ரெண்டு தானே இருக்கும்...கொண்டு வாப்பா !" என்றேன், "பூ மிதிக்க" குஷியாய் சம்மதம் சொன்ன நம்ம கவுண்டரைப் போல !! சித்த நேரத்தில் ஒரு ரெண்டு டஜன் பக்கங்களை முன்னே கொண்டு வந்து அடுக்கினான் ! லைட்டாய் கிலியடிக்க, பக்கங்களைப் புரட்டினால், அந்த '60s காலகட்ட context-ல் வந்திருக்கக்கூடிய ஓரிரு வசனங்கள் புரியாமல் அங்கிள் ஆங்காங்கே skip செய்திருந்த வசனங்கள் அவை என்று புரிந்தது ! ரைட்டு..அவற்றை மட்டும் எழுதிக் கொடுத்து விட்டு சிஸ்கோவோடு அன்னம் தண்ணி புழங்கப் போகலாமென்று எண்ணியபடியே அந்தப் பக்கங்களைப் படித்தால் - தலையும் புரியலை ; வாலும் புரியலை ! இந்தப் பயபுள்ள வில்லனா ? அல்லக்கையா ? ஜார்ஜோட ஆளா ? கதையின் முன்பக்கங்களில் யார் யாருக்கு - என்ன ஸ்பெல்லிங்குடன் பெயர்கள் இடப்பட்டுள்ளன ? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தந்தக் கதையினை முழுசாய் வாசிப்பது அத்தியாவசியம் என்பது உறைத்தது ! முன்னூற்றி அறுபது பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் ஆங்கிலக் கதைகளை வாசித்திருந்தவன், தமிழில் மேலோட்டமாய் பார்வையினை ஓடவிட்டிருந்ததோடு சரி ! ஆனால் அந்த விடுபட்ட டயலாக்குகளை எழுதும் பொருட்டு, குறைந்த பட்சமாய்  நாலைந்து கதைகளையாவது படிக்க வேண்டியிருக்கும் என்பது புரிந்தது ! "இன்னிக்கி மழை ; இஸ்கூல் லீவு என்று காலையில் கேட்டு செம குஷியாகிவிட்டு, எட்டுமணிவாக்கில் - இல்லே...லீவு இல்லே...ஸ்கூலுக்கு கிளம்பு" என்று கேட்க நேரிடும் போது பசங்களுக்கு முகம் எப்படி அஷ்டகோணலாகுமோ, அது போல நம்ம வதனமும் லைட்டா கோணிட ஆரம்பித்தது ! 'தம்' கட்டி விட்டு, முதல் கதைக்குள் புகுந்தேன் - and அது தான் "நெப்போலியன் பொக்கிஷம்" !  எனக்கு இந்த இதழ் ஒரிஜினலாக முத்து காமிக்சில் வெளியான வேளை குத்துமதிப்பாக நினைவுள்ளது - because பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இயற்கை எய்திய நாளில் தான் இந்த புக்கும் தயாராகி இருந்தது - if memory serves me right ! 

ஹிட்டடிச்ச கதையாச்சே ?! 'பச்சக்'ன்னு முடிச்சிடலாமென்று நம்பி உள்ளுக்குள் இறங்கினால், லைட் லைட்டாக நெருடல்கள் - ஆங்காங்கே தென்பட்ட எழுத்துப் பிழைகள் கண்ணில்பட்ட போது !! இப்போதெல்லாம், வாரத்தின் பாதி நாட்களில் எனது காலைகள் புலர்வது, நமது நண்பரொருவரின் பிழைபார்க்கும் படலங்களோடே ! வாட்சப்பில் போட்டோ எடுத்து அனுப்பியிருப்பார் - 'இந்த புக்கில்.,.இந்தப் பக்கத்தில்...இந்தக் கட்டத்தில்...இந்த ஆளு பேசுறதில் இந்த "று" க்கு பதிலா இந்த "ரு" வந்திருக்கு " என்ற தகவலோடு ! நெப்போலியன் பொக்கிஷத்தினில் சரளமாய்த் தென்பட்ட எழுத்துப் பிழைகளைப் பார்க்கப் பார்க்க - அடுத்த ரெண்டு மாசங்களின் காலைகளுக்கான பிழை கோட்டா அங்கே இறைந்து கிடக்கும் பீலிங்கே மேலோங்கியது ! 'செத்தாண்டா சேகரு" என்ற வசனம் மட்டுமே தலைக்குள் ஒலித்தது - ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமோ ? என்ற சந்தேகம் புலர்ந்த நொடியில் ! ஒரு கதையில் இருந்த சீர் செய்யப்பட்டிரா  spelling mistakes  மீதக் கதைகளிலும் இருக்கக்கூடுமோ ? என்ற பீதியில் ஒவ்வொரு கதையினையும் அவசர அவசரமாய் எடுத்துப் பார்த்தால் - எனது பயங்கள் ஊர்ஜிதம் கண்டிருந்தன ! எல்லாக் கதைகளிலும் எழுத்துப் பிழைகள் ; ஒற்றுப் பிழைகள் சரளமாய் உலா வந்து கொண்டிருந்தன ! தொடர்ந்த ஒரு வாரம், நாக்கால் ஆபீசை சுத்தம் செய்யாத குறை தான் ; because அத்தனை கதைகளையும், அத்தனை பக்கங்களையும் நெட்டுரு போட வேண்டியிருந்தது ! To be frank - டிசம்பரின் நடுவாக்குக்கு இந்த இதழினை நான் அட்டவணைக்குள் புகுத்தி இருந்ததே - எனக்கு இதனில் அதிகப் பணிகள் இராதென்ற நம்பிக்கையில் தான் ! ஆனால் 'கெக்கேபிக்கே' என்று விதியார் சிரிக்கும் வேளைகளில் யார் தான் என்ன செய்ய முடியும் ? Phewwwwwwwwwwww !! முழுசாய் ஒரு வாரம் டின்டினுடன் ; அதனைத் தொடர்ந்த இன்னொரு வாரம் ஜார்ஜோடு !! இதோ - இந்த விங் கமாண்டரின் அட்டைப்பட preview guys :  


மொத்தம் 10 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு பற்றிச் சொல்வதானால் - கிளாசிக் ரசிகர்களுக்கொரு விருந்து !! முன்னாட்களில் வீட்டில் உப்புக்கண்டம் என்று போட்டு வைத்திருப்பார்கள் - 'தல' டெக்ஸ் கதைகளில் வரும் 'பெம்மிக்கன்' போல !  குழம்பு, கூட்டு எதுவும் செய்யத் தோதுப்படாத நாட்களில் உறியில் தொங்கும் உப்புக் கண்டத்திலிருந்து நாலு துண்டுகளைத் தூக்கிப் போட்டு வதக்கி, சாப்பாட்டோடு கடித்துக் கொள்வார்கள் ! அதே போல, கணிசக்கதைகள் உள்ள இந்தத் தொகுப்பிலிருந்து ரெண்டு ரெண்டு கதைகளையாய் சாவகாசமாய் எடுத்து ராவுக்கு வாசிக்க வைத்துக் கொண்டால் சூப்பராக இருக்கும் என்பேன் ! Of course கதைகள் அனைத்துமே late 60's & early '70s சார்ந்தவை எனும் போது அந்நாட்களின் புராதனம் தவிர்க்க இயலாது போகும் ! அதனை இடராகக் கருதிடாது முன்னேறினால் சுலப வாசிப்புக்கு பேஷாய் set ஆகிடும் ! இன்னமும் ஒரேயொரு ஆல்பம் மாத்திரமே காத்துள்ளது இந்த மெகா தொகுப்பு template-ல் ; அதன் பின்பாய் வரவுள்ள கதைகளில் இந்த பாணி தொடர்ந்திடாது ! So இருக்கும் போதே இதனை ரசித்துக் கொள்வோமே guys ?   

ஒரு மார்க்கமாய் "பூமிதித்துப் புண்ணாகிய" கவுண்டராட்டம் சிஸ்கோவுக்குள் தள்ளாடிப் போய் விழுந்தால் - இதமாய் ; சமகால ஆக்ஷன் த்ரில்லரில் இந்த பிரெஞ்சு ஏஜெண்ட் ஊடு கட்டியடிப்பதைக் காண முடிந்தது ! 55 ஆண்டுகளுக்கு முன்பான ஒருவண்டிக் கதைகளிலிருந்து, நேராக ஒரு 2020's த்ரில்லருக்குள் குதிக்கும் அனுபவம் - வார்த்தைகளுக்குள் அடைபடா ரகம் ! And இம்முறையோ சிஸ்கோ களமாடுவது நியூ யார்க்கில் !! அரசியல் சதுரங்கங்கள் ; மைக்கின் முன்னே ஏதேதோ பேசும் அரசின் அதிபர்களின் பின்னணிக் கணக்குகள் ; சர்வதேச அரங்கினில் ஒவ்வொரு வினைக்கும் ஆற்றப்படும் எதிர்வினை - என்று "கலாஷ்னிகோவ் காதல்" சொல்ல முனையும் கதைகள் ஓராயிரம் ! மின்னல் கீற்றுக்களாய் ஆக்ஷன் blocks சகிதம் தடதடக்கும் இந்த டபுள் ஆல்பத்தின் இறுதியில் சிஸ்கோவை தூக்கி ஜெயிலுக்குள் கடாசி விடுகிறார்கள் & அதன் அடுத்த சுற்று  அங்கிருந்தே துவக்கம் காண்கிறது ! So உங்களின் வோட்டெடுப்பில் இந்த மனுஷன் தேர்வாகியிருப்பதில் ரொம்பவே மகிழ்கிறேன் ; becos அடுத்த சுற்றை சூட்டோடு சூடாய் ஆரம்பித்து விட அது வழி ஏற்படுத்தித் தந்துள்ளதே !! ஜெட் வேகத்தில் பறக்கும் பக்கங்களுக்கு பேனா பிடிப்பது நோவே தெரிந்திடா ஜாலி அனுபவமாகிட, கொஞ்சமாய் அக்கடா என்று மூச்சை விட்டுக்கொண்டேன் ! Here is the preview :

வழக்கம் போல லேட்டஸ்ட் கதையோட்டம் ; மிரட்டும் சித்திரங்கள் & கலரிங் ! புக்ஸ் இரண்டும் அச்சாகி, பைண்டிங்கில் உள்ளன ! ஆண்டின் இறுதி என்பதால் தினசரி காலெண்டர் பணிகளிலும், டயரி பைண்டிங்கிலும் ஊர் முழுக்க பேய் rush ! தவிர, வி.க.ஜா. hardcover இதழும் கூட ! So கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் guys !

"சரி, மெய்யாலுமே 2023-ன் பணிகள் முடிஞ்சு ; இனி ஹேப்பி..இன்று முதல் ஹேப்பி...!" என்றபடிக்கே ஜனவரி சார்ந்த திட்டமிடல்களுக்குள் புகுந்தேன் ! அடுத்தாண்டின் புத்தக விழா cycles களுக்கு எந்தெந்த இதழ்கள் அவசியம், எதெதில் stock இல்லை - என்ற ரீதியில் கணக்கிட ஆரம்பித்தால், நம்ம லக்கியாரின் புக்ஸ் ரொம்பச் சொற்பமாய் இருப்பது தெரிந்தது ! சமீபத்தில் மறுபதிப்பிட்ட "வில்லனுக்கொரு வேலி" ; "சூ மந்திரகாளி: "வானவில்லைத் தேடி" போன்ற இதழ்களெல்லாமே கூட காலி என்று நம்மாட்கள் சொன்ன போது, "ஆஹா...உடனே இன்னும் கொஞ்சம் மறுபதிப்புகள் போடணுமே ?" என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது ! எனது favorites களுள் ஒன்றான "ஜேன் இருக்க பயமேன் ?" தான் முதலில் தலைக்குள் ஓடிய இதழ் ! முன்னொரு காலத்தில், "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்" என்றதொரு தொடர்கதை முயற்சியில் இந்தக் கதையினைத் தொடராய்ப் போட்டுவிட்டு, உங்களிடம் வாங்கின மரண சாத்துக்களெல்லாம் நம் வீர வரலாற்றில் ஒரு அங்கம் என்பது இந்த இதழுக்கு கூடுதலான பின்னணி ! ரைட்டு...பழைய புக்கை எடுத்து டைப்பிஸ்ட் பண்ணி, ரெடி பண்ணுங்க என்றபடிக்கே - இன்னொரு ஆல்பத்தையுமே பரிந்துரை செய்து விட்டு அடுத்த வேலைகளுக்குள் மூழ்கியிருந்தேன் ! நான்கே நாட்களில் இரண்டு ஆல்பங்களும் ரெடியாகி எனது மேஜையில் கிடந்தன ! இந்தவாட்டி தெரிஞ்ச புயப்பங்கள் ; இதிலே நெருப்புக்கு சான்ஸே இல்லே ; போறோம் - பூ மிதிச்சிட்டு வரோம்னு மியூசிக்கை ஸ்டார்ட் பண்ணிப்புட்டே உள்ளே புகுந்தேன் ! எனக்குத் துணை இருந்ததோ, இந்தப் படைப்பின் ஆங்கில இதழ் - நம்மிடம் ஸ்டாக்கில் இருந்த CINEBOOK இதழான Calamity Jane ரூபத்தில் ! அந்நாட்களில் நாம் லக்கி லூக்கை வெளியிட்டு வந்த போது ஆங்கிலப் பாதிப்புகளெல்லாம் நிறையக் கதைகளுக்கு கிடையாது ! So பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்த்து வாங்கி, இயன்றால் நானே எழுதியோ, இல்லாங்காட்டி கருணையானந்தம் அங்கிளிடம் தள்ளிவிட்டு எழுதி வாங்கியோ இருப்பேன் ! And இந்த ஆல்பம் பிந்தைய ரகம் ! நாலு வசனங்களை வாசிக்கும் போதே அங்கிளின் ஸ்டைல் புலப்பட்டது ! மெது மெதுவாய் பயணித்த போதே வயிற்றுக்குள் புளி கணிசமாய்க் கரைய ஆரம்பித்தது ! இன்றைய Cinebook ஆங்கில எடிஷனை வைத்துக் கொண்டே நமது தமிழ் வார்ப்பை வாசித்தால் நிரம்ப இடங்களில் தட்டையாய் இருப்பது போலிருந்தது ! And ரகளையான காமெடிக்கு கணிசமான வாய்ப்பு வழங்கும் இந்தக் களத்தில் நமது நேர்கோட்டு வசனங்கள் பின்தங்கி நிற்பது புரிந்தது ! வெறெந்தக் கதையாக இருந்தாலும் மெனெக்கெட்டிருப்பேனா - தெரியாது ; ஆனால் நமது flagship cartoon ஹீரோவின் ஒரு பிரதம ஆல்பத்தில் நெருடல்கள் இருப்பதை மனசு ஏற்றுக்கொள்ள மறுத்தது !! To cut a long story short - ரெண்டு நாட்கள் கண்கள் சிவக்கும் வரை விழித்திருந்து முழுசையும் மாற்றி எழுதியுள்ளேன் - இயன்ற இடங்களிலெல்லாம் காமெடி மீட்டரை எகிற விட்டபடிக்கே ! இந்தப் பதிவு டைப் செய்ய அமர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னே தான் முடிந்திருந்தது அந்தப் பணி !! And காத்திருக்கும் இன்னொரு லக்கி மறுபதிப்பில் நிலவரம் என்னவோ தெரியலை - sighhhhhhhhhhhhhh !!! Here you go - with the preview :ஒரு வழியாய் கிணறுகளின் பெரும்பான்மையை தாண்டியாச்சு ; இனி crisp ஜனவரிக்குள் பயணம் என்றபடிக்கே முத்து ஆண்டுமலர் 52-க்குள் புகுந்தேன் ! "மேற்கே போ மாவீரா !!" - வித்தியாசமான படைப்பு & மூக்கைச் சுற்றும் நோவுகள் பெருசாய் இல்லாத ஆல்பமும் ! கருணையானந்தம் அங்கிள் 'நச்'என்று எழுதி இருக்க, DTP முடிந்து மேஜையில் காத்திருந்தது ! "இந்தவாட்டி பூமிதியே தான் ; miss ஆகவே செய்யாது" என்ற நம்பிக்கை இருந்தது ! படிக்க ஆரம்பித்தேன் ; ஒரு எட்டுப் பத்துப் பக்கங்களில் லைட்டாக பிரேக் எடுத்தேன் ; மறுக்கா படிக்க ஆரம்பித்தேன் ; 15-ல் மறுக்கா பிரேக் எடுத்தேன் - இம்முறையோ முகத்தில்  "இது அது மாதிரியே இருக்கே ?" என்ற குழப்ப ரேகைகளுடன் ! விஷயம் இது தான் ; சமீப மாதங்களில் வந்திருந்த வன்மேற்கின் அத்தியாயங்கள் - 4 பாகங்களில் Wild West உருவான விதத்தினை கற்பனை கலந்து சொல்லியிருந்தார்கள் அல்லவா ? கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் தான் "மேற்கே போ மாவீரா" ஆல்பமும் உள்ளது ! இப்போது தான் அந்த முதற்சுற்று நிறைவுற்றிருக்கும் சமயத்தில் அதன் நீட்சி போலானதொரு ஆல்பத்தை மறு மாசமே களமிறக்கி விடுவது சுகப்படுமா ? என்ற கேள்வி குடைய ஆரம்பித்தது ! அதுவும் "நாங்க 2024 -ல் கொஞ்சம் கூட பயமே இல்லாம ஆரம்பம் முதலே அடிச்சு ஆட போறோம் - இங்கிலாந்தின் Bazball பாணியில் !" என்று தொண்டை நரம்பு விடைக்கப் பேசி விட்டு, முதல் ஓவரிலியே கட்டையைப் போட்டால் எப்படியிருக்கும் ?என்ற கேள்வி நிழலாடியது ! 

மறுகணமே பெல்ஜியம் இருந்த திசையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தேன் - "சாமி...தெய்வமே...லார்கோ வின்ச் சகிதம் புத்தாண்டை ஆரம்பிக்க ஆசை ! கோப்புகள் ப்ளீஸ் ??" என்ற கோரிக்கையோடு ! லேட்டஸ்ட் ஆல்பம் அங்கே வெளியானதே நவம்பர் இறுதியில் தான் & இங்கிலீஷிலுமே டிசம்பரில் தான் வெளிவந்துள்ளது ! கிட்டத்தட்ட அங்கே ரிலீஸ் ஆன சூட்டிலேயே நாமும் வெளியிட விழைகிறோம் என்பதை புரிந்து கொண்டு, 'டடாயங்' என்று கோப்புகளை அனுப்பி விட்டார்கள் ! So ஜனவரியின் திட்டமிடலுக்கு லார்கோவின் லேட்டஸ்ட் படைப்பு என்பது உறுதியான பின்னே தான் என் தலைநோவே தீர்ந்தது !!!! இதன் கோப்புகளை ஏற்கனவே பார்த்திருந்தேன் தான் - low resolution-ல் ; ஆனால் ஒரிஜினலில் பார்க்கும் போது மூச்சடைக்கிறது சித்திர அற்புதங்களிலும், கலரிங்கின் உச்சங்களிலும் !! Absolutely stunning !! முத்துவின் 52 வது ஆண்டுமலராய் கலக்கிட all set !! Which means.....which means.....லார்கோவின் இந்த 92 பக்கங்களை அடுத்த நாலு நாட்களுக்குள் எழுதி முடித்தாக வேண்டும் - ஜனவரி ரிலீஸூக்கென !!! பேனா பிடிப்போரை, நல்ல நாளைக்கே தண்ணீர் குடிக்கச் செய்யும் வீரியம் கொண்டவை லார்கோ கதைகள் ; and கோடீஸ்வரரை சாவகாசமாய் ஏப்ரலில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் "கோடை மலர் 24" என்று அறிவித்திருந்தேன் ! But விதியாரின் கெக்கேபிக்கே மறுக்கா காதில் கேட்பதால், இதோ தலைதெறிக்க ஓட்டமெடுக்கவிருக்கிறேன் - லார்கோவோடு இந்தோனேசியாவில் பயணத்தைத் தொடர்ந்திட ! சர்வ நிச்சயமாய் 4 நாட்களுக்குள் முடித்து விடுவேன் - because கதை அசுர வேகத்தில் பறக்கின்றது & நம்மையும் பொட்டலம் கட்டி கூடவே இழுத்துச் செல்கிறது !! 

அதிகாரபூர்வ ரிட்டயர்மெண்ட் வயசை தொட்டுப்பிடிக்க இன்னும் ஒண்ணே கால் ஆண்டுகளே இருக்கையில் தான் புனித மனிடோ நமக்கு டிசைன் டிசைனாய் டெஸ்ட் வைக்கிறார் ! இதோ - அதன் லேட்டஸ்ட் அத்தியாயத்துக்கு பதில் எழுதப் புறப்படுகிறேன் folks !! Wish me luck please !! ஜெய் பாகுபலி !!

And இதோ பாருங்களேன் ஜனவரியில் நமக்கெனக் காத்திருப்போரின் பட்டியலை : 
 • டின்டின் 
 • டெக்ஸ் வில்லர்
 • வேதாள மாயாத்மா (கலரில்)
 • லார்கோ வின்ச் 
வருஷத்தினைத் துவக்கித் தர இதை விடவும் அட்டகாசமாய் ஒரு ஜாம்பவான் அணி அமையுமா - என்ன ? இந்த ஒற்றைக் காரணம் போதாதா folks - சந்தா எக்ஸ்பிரஸ் 2024-ல் தொற்றிக் கொள்ள ? Do join us please -  this promises to be one heck of a ride !!!

Bye all....மீண்டும் சந்திப்போம்....have a lovely sunday ! எனது ஞாயிறு கோடீஸ்வர கோமகனோடு இருந்திடும் !!

P.S : Interesting updates :

1.இது இரத்தப் படல லேட்டஸ்ட் நியூஸ் : 

XIII spin-off தொடருக்குள் ஜாம்பவான் கதாசிரியர் வான் ஹாம் மீள்வருகை செய்திடவுள்ளார் ! இதோ - அதற்கான ஆல்பத்தின் அட்டைப்பட பரீட்சார்த்தங்கள் ! கலக்கிடுவோமா பழனி ?2.அண்டர்டேக்கரின் ஆல்பம் # 7 அங்கே செம ஹிட் ! இதோ - அந்த ஆல்பத்தின் போஸ்டர்கள் பாரிஸின் மெட்ரோ ஸ்டேஷன்களில் ! Saturday, December 09, 2023

ஜோட்டாவா ? ஓ.கே.வா ?

 நண்பர்களே,

வணக்கம். சென்னையின் புறநகர் வாசகர்களுக்கெல்லாம் புது இதழ்கள் இன்னமுமே பட்டுவாடா ஆகாது தொங்கலில் இருக்கும் சூழலில், அடுத்த செட் இதழ்களைப் பற்றிப் பேச மனசு ஒப்ப மறுக்கிறது ! So நடப்பைச் சுற்றியே இன்னும் கொஞ்சம் அலசுவோமே ? 

டிசம்பரின் துவக்க 4 இதழ்களில் ஆச்சர்யமூட்டும் விதமாய் top of the list இருப்பது அந்த ஹாரர் கி.நா. தான் !! வழக்கமாய் ஒவ்வொரு மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் எனக்குச் சொல்லும் கதைகளே தனி ரகம் ! ஹீரோக்கள் அல்லாத கதை எதையேனும் நாம் இங்கே மாங்கு மாங்கென்று உசிரைக் கொடுத்துத் தயாரித்து - "ஆஹா..ஓஹோ..." என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருப்போம் ! ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நண்பர்களோ - 'ஏய்..அப்டிக்கா போயி விளையாடு தம்புடு !' என்று அதனை ஓரம் கட்டி விட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் ! And ஏஜெண்ட்களிடம் அரங்கேறும் விற்பனைகளிலும் மிகத் துல்லியமாய் அதே pattern தான் ஊர்ஜிதம் கண்டிடும் ! So இம்மாதத்து நான்கை லிஸ்டிங் செய்த போதே - "எப்படியும் கி.நா. விற்பனையில் தேறப்போவதில்லை ; ஜானி + ராபின் + டெக்ஸ் என்ற கூட்டணி தான் விற்பனை பார்க்கும் !" என்று எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் surprise ...surprise ....இதுவரைக்குமாவது நமது selective வாசகர்கள் குச்சிமிட்டாய் தந்திருப்பது ஜானிக்கே !! பாக்கி 3 black & white இதழ்களும் டக் டக்கென்று டிக் ஆகியுள்ளன !  "காலனின் கால்தடத்தில்" இங்கும், இன்ன பிற தளங்களிலும் ஈட்டியுள்ள reviews தான் இந்த வேகத்துக்குப் பின்னணி என்பது புரிகிறது ! Of course - சில நெகட்டிவ் ரிவியூக்களுமே இருந்துள்ளன தான் ; but இந்த இரத்தக்களரியான gory style நமக்கு ரொம்பவே புதுசென்பதால், 'அது என்ன தான் என்று பார்த்துவிடுவோமே' என்ற curiosity தான் சக்கரங்களைச் சுழலச் செய்கின்றன என்றுபடுகிறது !   

இந்த வரிசைக் கதைகளுக்கு Flesh & Bones என்றே தான் பெயரிட்டுள்ளனர் & இதனில் வெளிவந்துள்ள கதைகள் அனைத்துமே திகைக்கச் செய்யும் ஸ்டைலில் ஆனவைகளே ! கொஞ்ச காலம் முன்னே ஒரு திகில் கி.நா.வெளியிட்டிருந்தோமே - "தனியே..தன்னந்தனியே.." என்ற தலைப்பில் ? அது கூட இந்தத் தொடரின் ஒரு அங்கமே ! என்ன- அதனில் அமானுஷ்யம் சற்றே தூக்கலாய் இருந்தது & இந்த குடல்-குந்தானி ரக gore இல்லாதிருந்தது ! "காலனின் கால்தடத்தில்" ஆல்பத்தில் அந்தக் குரூர சமாச்சாரங்கள் மட்டும் இல்லாதிருந்தால் maybe இன்னும் ஒரு ரவுண்ட் பாராட்டுக்களை கூடுதலாய் ஈட்டியிருக்கக்கூடுமோ - என்னமோ ?! But கொடுமை என்னவெனில், இந்த ஆல்பத்தின் வெற்றி சர்வ நிச்சயம் என்ற நம்பிக்கையில் திட்டமிடலைத் துவக்கிடும் சமயமே இதனை 2 பாக ஆல்பமாய் படைப்பாளிகள் திட்டமிட்டுள்ளனர் ! முதல் ஆல்பம் வெளியாகி செம ரவுசு விட்டதைத் தொடர்ந்து 2 பாக திட்டமிடலை - 3 பாக திட்டமிடலாய் நீட்டி விட்டுள்ளனர் ! So "காலனின் கால்தடத்தில்" இதழுக்கு இன்னமும் 128 + 120 = 248 பக்கங்களில் 2 பாக sequel உள்ளது ! அதே கதாசிரியர் ; அதே ரணகள பாணி ; அதே 'பப்பரக்கா' பாப்பாஸும் !   

முதல் ஆல்பம் நிற்கும் இடத்திலிருந்து புறப்படும் கதையானது அதே கதாசிரியர்-ஓவியர் கூட்டணியில், அதே ஸ்டைலில் ; அதே தீவில் தொடர்கிறது ! முதல் இதழின் ராப்பரில் குப்புற கிடக்கும் அம்மணி இங்கே மல்லாக்க கிடப்பது மாத்திரமே வித்தியாசம் ! பாக்கி எல்லா விதங்களிலும் ditto ditto ! 

பொதுவாய் கதைக்குத் தேவைப்படும் இடங்களில் விரசத்தை படைப்பாளிகள் நுழைக்கத் தயங்குவதில்லை ! பெளன்சர் போன்ற தொடர்களிலெல்லாம் பழுத்த கதாசிரியர் Jodorowski விட்டு தாளித்து எடுத்திடுவார் ! ஆனால் இந்த ஆல்பத்திலோ கதையின் ஓட்டத்துக்கு, இந்த பப்பி ஷேம் மங்கையரும், டவுசர் மட்டுமே போட்டுத் திரியும் லகுடபாண்டிகளும் எவ்விதத்திலும் உதவிடுவதில்லை ! "ஜாலியாய் வந்துள்ள இளசுகள்" என்ற பாத்திரப்படைப்புகளுக்கு வலு சேர்க்க மட்டுமே அவர்களின் ரவுசுகள் ! And அந்த ரணகள violence கூட அவசியமற்றதே !! க்ளோசப்பில் குடல்-குந்தானி மேட்டர்களைக் காட்ட இம்மியும் தேவை லேது ! இது சகலமுமே அந்த கதை சொல்லும் பாணியின் template மாத்திரமே ! மேற்கு ஐரோப்பாவில் இந்த அரை நிர்வாணங்களெல்லாம் அரையணாவுக்கு கவனத்தை கோரிடாத விஷயங்கள் என்பதால் இத்தகைய template-க்குள் துணிவோடு உலவுகிறார்கள் ! ஆனால் நம் கதை அவ்விதமல்ல எனும் போது அதே தடாலடி சாத்தியமாகிடுவதில்லை ! 

இங்கு தலைகாட்டும் விரசத்துக்கும் ; violence-க்கும்  நியாமான defence ஏதும் தந்திட இயலாது என்ற ஒற்றைக் காரணமே என்னைத் தயங்கச் செய்கிறது - காத்துள்ள 2 பாகங்களையும் வெளியிடுவதிலிருந்து ! ஆனால் விரச சமாச்சாரங்களை ஓரம்கட்டி விட்டு, கதையின் அந்த த்ரில் factor மீதும் ; மெலிதான வரலாற்றுப் பின்னணி மீதும் ; யுத்தத்தின் கோர பக்கவிளைவுகள் மீதும் focus செய்திடும் முதிர்வு நம்மிடம் இருப்பதைக் காணும் போது லைட்டாக மண்டையை சொறியத் தோன்றுகிறது ! 

தவிர, ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாய் வந்திருந்ததொரு மின்னஞ்சலும் எனக்கு இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது ! எந்தத் தொடரென்று துல்லியமாய் நினைவில்லை ; ஆனால் "அது நிரம்ப அடல்ட்ஸ் ஒன்லி பாணியிலானது என்பதால் skip செய்திருக்கிறேன்" என்று இங்கே நமது பிளாக்கில் எழுதியிருந்திருக்கிறேன் போலும் ! அதை பார்த்து விட்டு, "அது எப்படி நீ தீர்மானிக்கலாம் - எனது வாசிப்பின் எல்லை எது என்று ? விரசங்களையும் தாண்டி ஒரு படைப்பில் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கக்கூடும் ! நீயா திரை போட்டுக்குவது எந்த ஊர் நியாயம் ?" என்று உச்சஸ்தாயியில் பொங்கியிருந்தார் !  அந்தக் கேள்வி இங்குமே பொருந்திடுமோ-என்னவோ ? என்று பட்டது !

இதோ - பாகம் இரண்டின் பிரிவியூ !
Maybe கண்ணை உறுத்தும் அந்த அட்டைப்படத்தினை பயன்படுத்திடாது, வேறேதேனும் சைவமான ஸ்டில்லை ராப்பராக்கிடலாம் & உள்ளாற அவசியமற்ற விரசங்களை கணிசமான filter செய்திடவும் செய்யலாம் ! இந்த முதல் பாகத்திலேயே, திருத்தி எழுதும் போது ஏகப்பட்ட விரச சமாச்சாரங்களை வசனங்களில் தோணாமல் எடிட் செய்திருந்தேன் ; வீரியங்களை மட்டுப்படச் செய்திருந்தேன் ! ஆனால் அந்த "குடல் கால் கிலோ-குந்தானி அரை கிலோ" sequences எதுவும் செய்திட அனுமதிக்கா இடங்கள் ! 

மாமூலான கி.ந.க்கள் கண்டிடும் விதியினையே ஈட்டியிருக்கும் பட்சத்தில், அரவம் போடாமல் அடுத்த வேலைக்குள் புகுந்திருப்பேன் ! ஆனால் இந்த இதழ் ஒரு 'ஹிட்' ஆகிடும் பாதையில் பயணித்து வருவதால் அதற்குள் இதன் முன்னணி, பின்னணி, சைடுஅணி பற்றியெல்லாம் நண்பர்கள் அலசத் துவங்கியாச்சு ! அதிலும் ஒரு நண்பர் - இந்த ஆல்பத்துக்குப் பின்னே இன்னமும் 2 பாகங்கள் இருப்பது எனக்குத் தெரியாது போலும் என்ற பதைபதைப்புடன், வாட்சப்பில் ஒரு 17 மெசேஜ்கள் அனுப்பியுள்ளார் - படங்கள், கோரிக்கைகள் இத்யாதி..இத்யாதி என்று ! "நமக்கு இவையெல்லாமே ஒரு மகாமகத்துக்கு முன்பான பரிச்சயங்கள் நண்பரே ; ரிலாக்ஸ் !" என்று அவரை ஆசுவாசப்படுத்தி வேண்டிப் போனது ! இந்நேரத்துக்கு ஏற்கனவே வாட்சப்பில் இது சார்ந்த அலசலை அவரே துவக்கியிருந்தாலுமே நான் வியப்பு கொண்டிட மாட்டேன் - அத்தனை வேகமாய் இருந்தார் மீதப் பாகங்களும் கரை சேர்ந்திட வேண்டுமென்பது குறித்து !! 

In fact - இந்த Flesh & Bones வரிசையிலிருந்து இன்னொரு கதையுமே வாங்கியுள்ளோம் - "கதிரவன் கண்டிரா கணவாய்" என்று ! ஏற்கனவே அதன் விளம்பரமும் எப்போதோ வெளியிட்டோமென்ற ஞாபகம் உள்ளது ! So இந்த வரிசையின் சகல இதழ்களும் நமக்குத் தெரிந்தவைகளே நண்பரே !!இதோ - உங்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வோட்டெடுப்பு : https://strawpoll.com/X3nk4r8AQgE

சாத்துவதாக இருப்பின், கொஞ்சம் பாத்து ; சூதானமா அண்ணாச்சிஸ் ! Bye for now...! See you around ! 

Tuesday, December 05, 2023

சுறாக்களின் மாதம் !

 நண்பர்களே,

வணக்கம்.  நேற்றைய தினத்தில் சென்னையில் கொட்டித் தீர்த்த பேய் மழையினை திகிலோடு கவனித்தபடிக்கே, கூரியரில் இதர நகரங்களுக்கான புக்ஸ்களை மாத்திரமே டெஸ்பாட்ச் செய்திருந்தோம் ! கொஞ்சமே கொஞ்சமாய், மழை விட்ட பிற்பாடு சென்னைக்கான டப்பிக்களை அனுப்பிடச் சொல்லி நான் தான் சக்கையைப் போட்டிருந்தேன் ! அவையும் இன்று (செவ்வாய்) கிளம்பி விட்டன - ஒரு எக்ஸ்டரா பாலிதீன் கவரோடு ! பத்திரமாய் இருந்து கொண்டு, பத்திரமாய்ப் புக்ஸ்களை பெற்று கொள்ள புனித மனிடோ நண்பர்களுக்கு அருள் பாலிப்பாராக ! Stay safe folks !!

தற்செயல் தான் ; ஆனால் டிசம்பர் கூட்டணியின் 2 அட்டைப்படங்களில் இரு சுறாக்கள் இடம்பிடித்திருப்பது something of a surprise ! பொதுவாய் நமது கதைகளில் வன விலங்குகள் கணிசமாய் இடம்பிடித்துள்ளன - "மர்ம தேசம் கென்யா" பாணியில் ! அட, பாம்புகள் ; ராட்சச நண்டுகள் ; ஏன் - டைனோசார்களே டெக்ஸ் கதைகளில் கூட இடம்பிடித்துள்ளன தான் ! ஆனால், எனக்கு நினைவுக்கு வரும் வரையிலும் திமிங்கலம் ; சுறா என்றெல்லாம் கடல்வாழ் கொலையாளி மீன்களை அவ்வளவாய் நாம் பார்த்தது இல்லை ! (எங்கேயோ ஆக்டொபஸ் மீன்களை பார்த்த ஞாபகம் உண்டு!)  So ஒரே மாதத்தில் நமது 'தல'யோடு ஒருக்கா ; 'பம்' காட்டும் பாப்பாவோடு இன்னொருக்கா - என டபுள் ஆக்ட் கொடுத்துள்ள சுறாக்கள் இந்த டிசம்பருக்கு மெருகூட்டுகின்றன !  

ஏற்கனவே 4 இதழ்கள் பற்றியும் previews பார்த்து விட்டோம் என்பதால், புதுசாய் சொல்ல, கம்பி கட்டும் கதைகளேதும் மீதமில்லை ! So ஒரு வாசகனாய், இந்த நான்கில் நான் எதை - எந்த வரிசையில் தேர்வு செய்வேனென்ற வரலாற்றுத் தரவினை பதிவிட இந்த மினி பதிவில் விழைந்திடுவேன் guys !!  

பொதுவாய் இங்கி-பிங்கி-பாங்கி போடுவதே விஞ்ஞானபூர்வ நடைமுறை ; ஆனால் இம்மாதத்து 4 இதழ்களும், அதனதன் பாணியில் வித்தியாசப்பட்டு நிற்க, நிதானமாய் ரோசனை செய்வேன் ! Doubtless - தண்ணீருக்குள் உள்நீச்சலடிக்கும் 'தல' தான் வாசிப்பின் வரிசையில் முதலிடம் பிடித்து நிற்பார் ! மங்கு மங்கென்று பாலைவனங்களிலும், காடு-மேடு-மலைகளிலும் சவாரி செய்பவர் சுறாவுக்கு 'ஹல்லோ' சொல்ல என்ன முகாந்திரம் இருக்கக்கூடுமோ ? என்ற குறுகுறுப்பு எனது முதல் தேர்வினை வழிநடத்திடும் ! பற்றாக்குறைக்கு ஆரம்பமே சான் பிரான்சிஸ்கோ ; ஒரு ஆசாமியைக் கண்ணைக்கட்டி கடலுக்குள் அழைத்துப் போகும் sequence எனும்போது மாமூலிலிருந்து இந்த சாகசம் விலகிப் பயணிப்பது புரியும் ! So குஷியாய் டெக்ஸ் & தாத்தாவோடு பயணத்தினை ஆரம்பிப்பேன் !

அதே காரணமே - எனது தேர்வு # 2 ஐ கூட நிர்ணயிக்கும் ! பொதுவாகவே கிராபிக் நாவல் என்றாலே ஏதோவொரு புதுக்களம் என்பது உறுதி ! And "காலனின் கால்தடத்தில்" முன்னட்டையிலும் சரி, பின்னட்டையிலும் சரி - கோடிட்டுக் காட்டப்படுவது ஒரு ஹாரர் த்ரில்லர் காத்துள்ளதென்பதை ! இது பேய்-ஆவி-அமானுஷ்யம் என்ற ரேஞ்சிலான கதையாக இருக்குமா ? அல்லது வேறு ஏதேனும் ஹாரரா ? என்பதை தெரிந்து கொள்ள பரபரப்பாய் கி.நா.வுக்குள் புகுந்திருப்பேன் ! 

'டக்'கென்று அடுத்ததாய் நான் புரட்டியிருப்பது V காமிக்சின் "கொலைநோக்குப் பார்வை" யாகத் தானிருக்கும் - simply becos எப்போதும் போலவே இங்கு crisp வாசிப்பு உறுதியென்பதை ராபின் சொல்லியிருப்பார் ! அந்த ஸ்டைலிஷான லைன் டிராயிங்ஸ் black & white-ல் செமையாய் ஈர்ப்பது இன்னொரு காரணமாகியிருக்க, வேகமாய் ராபினோடு நியூ யார்க்கில் நூறு ரூபாய்ச் செலவினில் லேண்ட் ஆகியிருப்பேன் ! 

Which means - நமது புன்னகைமன்னர் ஜானி எனது வாசிப்பில் இறுதி இதழாக இருந்திருப்பார் ! And சில நேரங்களில் saving the best for the last என்றும் சொல்வார்களல்லவா - அது நிஜமாகி டிசம்பரின் நான்கில் "ஜானிக்கொரு தீக்கனவு" தான் டாப்பாகவும் இருந்திடக்கூடும் ! இம்மாதத்தின் ஒரே கலர் இதழும் என்பது இந்த இதழை ரசிக்க ஒரு கூடுதல் காரணியாகியிருக்கக்கூடும் ! 

ரைட்டு...நீங்கள் எந்த வரிசையில் வாசிக்கத் தீர்மானித்திருந்தாலும் சரி, வாசிப்பின் பலன்களை பகிர்ந்திட மறவாதீர்கள் ப்ளீஸ் ! And இதோ - ஆன்லைன் லிஸ்டிங் ரெடி : https://lion-muthucomics.com/latest-releases/1148-december-pack-2023.html

Happy Shopping & Happier Reading folks ! மீண்டும் சந்திப்போம் !

Saturday, December 02, 2023

மந்திர எண் முப்பத்தியாறு !

 நண்பர்களே,

வணக்கம். இதிகாச ரேஞ்சுக்கு எதையெதையோ பதிவிடும் நம்ம மாமூலுக்கு முன்பாய்,  சேலம் புத்தக விழாவினில் இருந்தே பிள்ளையார் சுழியைப் போட்டு விடுகின்றேனே guys !! 

போன செவ்வாயன்று மாலையில் விழா துவங்கிய போது ஏற்பாடுகள் முழுமை கண்டிருக்கவில்லை & அடுத்த 2 நாட்களும் வருண பகவானின் உபயத்தில் நமக்கு மிதமான சேல்ஸ் தான் ! ஆனால் போன வெள்ளி முதலாய் அடுத்த கியருக்கு மாறியுள்ள சேலத்து செவர்லே, ஒவ்வொரு நாளும் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது ! விற்பனைத் தொகைகள் வங்கிக்கணக்கினை குஷி கொள்ளச் செய்வது ஒரு பக்கமெனில், மாணாக்கர் ; யூத் - என்று அடுத்த தலைமுறையினர் நமது ஸ்டாலில் அலைமோதிடும் அட்டகாசம் சும்மா 'ஜிவ்'வென்று பறக்கச் செய்கிறது ! மாவட்ட நிர்வாகமும் சரி, பபாசியும் சரி, ரொம்பவே மெனெக்கெட்டிருப்பதைக் கண்கூடாய்ப் பார்த்திட இயல்கிறது - கல்விக்கூடங்களின் உற்சாகப் பங்களிப்பினில் ! இங்கொரு செம சந்தோஷ விஷயமும் உண்டு !! "மாயாவி ஸ்டாக் பூஜ்யம்" என்றதொரு நிலவரத்துடன் நாம் களம்காணும் முதல் புத்தகத் திருவிழா இதுவே & yet துளியும் தொய்வின்றி விற்பனைகள் மாஸ் காட்டி வருகின்றன ! இம்முறை நாயகர் அல்லாத one-shot ஆல்பங்கள் றெக்கை கட்டிப் பறந்து வந்துள்ளன ! கார்ட்டூன்களும் 'ஜிலோ' சேல்ஸ் ! பற்றாக்குறைக்கு - பல்லடத்து டிரெய்னிங்கோ என்னவோ - 'போன வருஷம் வாங்கிப் படிச்சோம்கா ; நல்லா இருந்துச்சு ; தோர்கல் புக்ஸ் குடுங்க !' என்று கேட்டு வாங்கிச் சென்ற மாணவியரும் சேர்த்தி ! லக்கி லூக் titles almost காலி ; ஒன்றோ-இரண்டோ ஆல்பங்கள் மாத்திரமே கையிருப்பில் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜாக்கி ஜானி ; ஸ்பைடரார் கூட ஒற்றை இதழ் ; இரண்டு இதழ்கள் என்ற நிலவரத்துக்கு நகர்ந்துவிட்டனர் ! அந்த சிறுத்தை மனிதனோ குட்டி புக்கில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறான் ! இப்பொதெல்லாமே  "இந்த title காலியாகப்  போகுது சார் ; கொஞ்சம் தான் ஸ்டாக் இருக்கு ; லிஸ்டிங் எடுத்து விட்ரவா ?" என்று நம்மாட்கள் கேட்பது தான் எனது favorite caller ட்யூன் !  Of course - இந்த ஸ்டாக் காலியாகும் படலம் ஒற்றை இரவினில் நிகழ்ந்திடவில்லை தான் & காலியாகும் வேகத்துக்கு சிறிதும் குறைச்சலின்றி புதுசுகளை உள்ளுக்குள் திணித்துக் கொண்டும் இருக்கிறோம் தான் ! But still - புத்தக விழாக்களின் வேளையினில் நமது கிட்டங்கி ரேக்குகள் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அதிசயத்தை சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! Hence பதிவின் துவக்கத்திலேயே இந்தக் குத்தாட்டம் ! 

And சேலம் விழாவினில் ஞாயிறு மாலையினில் நமது நண்பர்களைக் கணிசமாய் சந்திக்க இயன்றதுமே உற்சாக மீட்டர்கள் உசக்கே சென்றிடவொரு கூடுதல் காரணம் ! ஈரோட்டில் மரத்தடி மீட்டிங் இல்லையென்ற குறையை சேலத்தில் தீர்த்து விடலாம் என்று நண்பர்கள் கருதிட, சாரலைப் பராக்குப் பார்த்தபடிக்கே அந்த மாலையினை அழகாய்க் கழித்திட இயன்றது ! "மழைக்காலம்" என்ற ஒற்றை இக்கன்னா மட்டும் இடறிடாது போகும் பட்சத்தில், நமது ஈரோட்டு வாசக சந்திப்புக்கு tough தர சகல ஆற்றல்களும் கொண்டிருக்கும் போலும் இந்த சேலம் விழாவானது ! 

 Back to terra firma - டிசம்பரின் (முதல்) 4 புக்ஸும் ரெடி ! போன வாரமே 3 புக்ஸ்  ரெடியாகியிருக்க, 'காலனின் கால்தடத்தில்' கி.நா.வினை மட்டும் சட்டுப் புட்டென்று முடித்து விட்டால், டெஸ்பாட்ச் செய்த்திடலாம் என்று தான் எண்ணியிருந்தேன் ! ஆனால் 'கா.கா.த' கணிசமாய் மாற்றி எழுதிடுவதற்கும், எடிட்டிங்குக்கும் அவசியம் கொண்டிருக்க, நிதானமாகவே பயணிக்க வேண்டியதாகிப் போனது ! Finally எல்லாமே ரெடி - திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு ! இந்த கி.நா. ஒருவித ஹாரர் த்ரில்லர் என்பதையும் ; 18+ வாசிப்புக்கு ஏற்றதென்பதையும் மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folks ! 

பொதுவாய் டிசம்பரில், இதழ்களின் சகலத்தினையும் பூர்த்தி செய்தான பிற்பாடு - அப்டியே ஜன்னலோரமாய் ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி வடிவேல் செட்டில் ஆவது போல், நானும் செட்டில் ஆகிவிட்டு, நாம் பயணித்து வந்த 12 மாதங்களை flashback-ல் நினைவு கூர்வது வழக்கம் ! ஆனால் குறுக்குக்குள் பிடித்திருக்கும் இந்த நேரத்தில் விஷப்பரீட்சை வேண்டாமே என்பதாலும், புதுசாய் எதையாச்சும் செய்வோமே என்ற எண்ணத்திலும், முன்னே நமக்கென காத்துள்ள பாதையினை நோக்கிப் பார்வையினைப் படர விட நினைக்கிறேன் !! So here goes :  

2024-ன் அட்டவணை - செயலாளரின் விசாலத்தினில் இருந்திடுமென்ற  எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு, தலீவரின் ஒடுக்கத்தில் அது இருப்பதைப் பார்த்த நொடியில், கணிசமான விசனம் எழுந்தது pretty much obvious ! ரொம்ப முன்னே, இயக்குனர் ஷங்கரின் "பாய்ஸ்" திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் writer அமரர் சுஜாதா சார் தந்திருந்ததொரு பேட்டி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது ! "பாய்ஸ்' படத்தில் ஒரு சீனிருக்கும் - நடிகர் சித்தார்த் சென்னை மவுண்ட் ரோடில் பப்பி ஷேமாய் ஓடுவதைப் போல ! அது கணிசமான சர்ச்சைகளை அந்நாட்களில் எழுப்பியது ! அது பற்றி அந்தப் பேட்டியில் சுஜாதா சாரிடம் கேட்டிருந்த போது - "இந்த சீனுக்கு என்ன மாதிரியான ரியாக்ஷன்ஸ் எழும் ; எந்தெந்தப் பத்திரிகைகளில் எப்படி - எப்படி கழுவி ஊற்றுவார்கள் !" என்பதையெல்லாம் முன்கூட்டியே ஒரு காகிதத்தில் எழுதி, இயக்குனரிடம் பகிர்ந்திருந்ததாய் சொல்லியிருந்தார் ! நாம சுஜாதா சாரும் கிடையாது ; நாம அடிக்கும் ஒன்னரையணா லூட்டிகள் ஷங்கர் சாரின் தெருக்கோடியும் கிடையாது தான் - but 2024 அட்டவணைக்கு இங்கே ப்ளாக்கில் ; க்ரூப்களில், நம்மில் யார்-யார் எவ்விதம் react செய்திடுவர் ? என்பதை கிட்டத்தட்ட 90% துல்லியத்துடன் கணித்தே இருந்தேன் ! And இந்தச் சந்தா வெளித்தோற்றத்துக்கு நம்ம தாத்தாஸ் போல வற்றலாய்த் தென்பட்டாலும், பயணத்தின் போது அந்தப் பெருசுகளின் லூட்டிக்குச் சிறிதும் சளைத்திராதென்ற உறுதியினையும் கொண்டிருந்தேன் !  இதோ - இந்தச் சித்திரத்தை சற்றே பொறுமையாய்ப் பாருங்களேன் guys : 


23 ஈரோக்கள் + 2 ஈரோயினிஸ் = TOTAL 25 நாயகப் பெருமக்கள் ! காத்திருக்கும் 2024-ன் அட்டவணையினில் இடம்பிடித்துள்ளோரின் லிஸ்ட் இது ! And இந்தப் பட்டியலில் V காமிக்சின் ஜூலை 2024 to டிசம்பர் 2024 க்கான புக்ஸ் சேர்த்தியில்லை ! Maybe அங்கே ஜூனியர் மேற்கொண்டு அறிமுகங்களைத் திட்டமிட்டிருக்கும் பட்சத்தில் - "25" என்ற இந்த நம்பர் இன்னமுமே ஏறக்கூடும் !! And இத்தனைக்கும் பிறகு - கீழ்க்கண்ட ரெகுலர் பார்ட்டீஸ் MYOMS சந்தாவில் சீட் பிடிக்க சட்டையைக் கிழித்துக் கொண்டுள்ளனர் :

 • CIA ஏஜென்ட் ஆல்பா
 • ஏஜெண்ட் சிஸ்கோ 
 • ப்ளூகோட் பட்டாளம்
 • சோடா 
 • நெவாடா 
 • IR$
 • மேகி கேரிசன் 
 • மேக் & ஜாக் 

இது ஒரு பக்கமெனில் ஜூன் 2024 முதலாய் காத்துள்ள க்ளாஸிக் பார்ட்டீசின் லிஸ்ட்டில் :

 • மாண்ட்ரேக் 
 • காரிகன்
 • ரிப் கிர்பி
 • சார்லி
 • விங்-கமாண்டர் ஜார்ஜ் 

என்றும் காத்துள்ளனர் ! (வேதாளர் அங்கேயும் வருவார் தான் !

இது தான் களநிலவரம் எனும் போது - இந்திய கிரிக்கெட்டின் T20 டீமில் இடம்பிடிக்க நிகழ்ந்திடும் அடிதடிக்குக் கிஞ்சித்தும் குறைச்சலில்லை நம் அணிவகுப்பினில் இடம்பிடித்திடவும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரியும் ! 

ரெகுலர் தடத்தின் இந்த FAB 25-ல் பதினோரு பேர் நமக்கு நிரம்ப காலத்துப் பரிச்சயங்கள் & மீத 14 பேருமே சமீப ஆண்டுகளின் தேடல்களின் பலன்கள் ! So கிட்டத்தட்ட 60% புச்சு & 40% ரெகுலர்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அட்டவணையில் கொணர நினைத்த balance இதுவே - simply becos எத்தனை மலைகளையும், கடல்களையும், காடுகளையும் தாண்டிச் சென்று புதுசு புதுசாய் நாயகர்களைத் தேடியாந்தாலும் - "லக்கி லூக் மெரி இல்லியே ! டெக்ஸ் மெரி இல்லியே !" என்ற ஒப்பீடுகள் தவிர்க்க இயலா சமாச்சாரங்கள் ஆகிடுவதை நாம் காதில் தக்காளிச் சட்னி வரும் ரேஞ்சுக்குப் பார்த்தாச்சு ! So பழையவர்களுக்கும் ; புதியவர்களுக்கும் இடையே ஒரு நெருடலில்லா சமரசம் அவசியம் என்பது நமது  priorities-களுள் பிரதானமாய் இருந்தது !  இதன் பொருட்டு புதியவர்களில் ஒரு கணிசமான பகுதியினை MYOMS சந்தாவுக்கு பேக்கப் செய்திருப்பது போல தோன்றினாலும் - ஏதேதோ காரணங்களினால் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்திடும் firepower சகிதம் இருக்கத் தவறியுள்ளனர் என்பதே bottomline ! இதோ - அந்த 8 புக்ஸ்களுள் எந்த நான்கு, பிரேத்யேகச் சந்தாவுக்குள் இடம்பிடித்திடவுள்ளனர் என்பது சார்ந்த உங்களின் தீர்ப்பு : 


 1. துவக்கம் முதலே முன்னணி வகித்து வந்த CIA ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் தேர்வாகிறார் !
 2. மூன்றாம் இடத்திலேயே குந்தியிருந்த ப்ளூகோட்ஸ், கடைசி 2 வாரங்களில் rally செய்து இரண்டாமிடத்துக்கு முன்னேறித்  தேர்வாகியுள்ளனர்  ! ஜெய் கார்டூனாயா !
 3. மூன்றாமிடம் - க்ளாஸிக் மறுபதிப்புக்கு - CID ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் என்ற கூட்டணி இதழுக்கு (in pocket size)
 4. நான்காமிடம் - ஏஜெண்ட் சிஸ்கோ !! 

என்னைப் பொறுத்தவரைக்கும் SODA இந்தச் சுற்றிலும் பின்தங்கியிருப்பதில் வருத்தமே ; but உங்களின் ஓட்டுக்கள் உங்கள் ரசனைகளின் வெளிப்பாடுகள் எனும் போது மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறேன் ! But இந்த பாஸ்டர்-போலீஸ்கார் நிச்சயமாய் காற்றில் கரைந்திட மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் !  More on that & the M.Y.O.M.S later !

பழக்கப்பட்டவர்களுக்கும், புதியவர்களுக்கும் மத்தியில் ஒரு balance இருப்பதோடு 2024-ன் அட்டவணையினில் பிரதான கவனத்தினை நாங்கள் தர விழைந்தது - ஒற்றை முக்கிய அளவுகோலுக்கே ! தேர்வாகியுள்ள கதைகள் / நாயகர்கள் - உங்கள் ஆர்வங்களை மாதாமாதம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டோராய் இருந்திட வேண்டும் என்பதே அந்த இலட்சியம் "ஆங்...இந்த ஈரோவா ? இல்லீங்கண்ணா....இந்த மாசம் டெக்ஸும், லக்கியும் போதும் !" என்று சொல்லிடும் நிலவரங்கள் இனி தொடரப்படாதென்று நிரம்பவே மெனெக்கெட்டுள்ளோம் !
 • *ஒரு பிரேக் முடிந்து தெறிக்கும் உத்வேகத்தோடு திரும்பும் லார்கோக்கு No சொல்ல நிச்சயம் யாருக்கும் இயலாது !
 • *அமேசான் கானகங்களில் ஒரு ஜீவ மரண வேட்டை நிகழ்த்திய ஜாரோப்பை skip செய்ய நிச்சயமாய் மனசு வராது !
 • *உலகெங்கும் சாகசம் செய்திடும் டின்டினுக்கு நிச்சயம் சிகப்புக் கம்பளமே தந்திடத் தோன்றும் !
 • *XIII-ன் புது சாகசம் காந்தமாய் ஈர்க்காது போகாது !
 • *டெட்வுட் டிக் இருப்பது கி.நா.சந்தாவில் தான் என்றாலுமே, "கெட்ட பய சார் இந்தப் பால்பாண்டி" என்ற அவனது அறிவிப்பில் மிரளாது போவது சுலபமாகவே இராது ! 
 • *பார்வைக்குக் கிழ போல்டுகளாய் தென்பட்டாலும் தாத்தாஸ் இன்றொரு கில்லி தொடராய் form ஆகி விட்டிருப்பதை மறுக்கவே இயலாது !
 • *கலரில், crisp வாசிப்பில் வேதாளரைப் பார்க்கும் போது அவரிடம் மனசைப் பறிகொடுக்காது இருப்பது ரெம்போ கஷ்டமாய் இருக்கப் போகிறது தான் ! Moreso இரண்டாம் பாதியில் V காமிக்சில் களமிறங்கவுள்ள (கலர்) வேதாளர் கதைகள் அதிரி புதிரி விசில்களை ஈட்ட வல்லவை எனும் போது !!
 • *தொடரினில் இன்னமும் வெளிவந்திருக்கா ஒரே ஒரு ஆல்பத்துடன் நமது நண்பர்களான கேப்டன் பிரின்சும் ; ஜாலி பார்ட்டி பார்னேயும், ஜின்னும் வந்து 'ஹல்லோ' சொல்லும் மாதத்தினில் அவர்களை மறுதலிக்கத் தான் இயலுமா ?
 • *சுடுவது இடியாப்பங்களே என்றாலும், ஆண்டுக்கொரு தபா மலர்ந்த முகத்தோடு வீட்டுக் கதவைத் தட்டும் வாய்ப்பினையும் ரிப்போர்ட்டர் ஜானிக்குத் தந்திடாது போகவாவது இயலுமா ?
 • *டாக்டர்களின் கனவுக்கன்னியை கலாய்க்கும் சாக்கில் உள்ளாற ரசிக்கும் உள்நாட்டு / வெளிநாட்டு ஸ்லீப்பர் செல்களும் இளவரசியிடம் "வாங்க மாட்டேன் - போ !" என்று சொல்லிடுவார்களா - என்ன ? 
 • *'தனிமையே என் துணைவன்' என்று அவர் பாடித் திரிந்தாலும், நம் கும்பலில் அவரைக் கொண்டாடாது போகத்தான் இயலுமா ?
 • *மர்மங்களே எனது உயிர்மூச்சென்று மர்ம மனிதன் மார்ட்டின் நம்மை பல விசித்திர பிரதேசங்களுக்கு இழுத்துப் போனாலுமே அந்த மனுஷனின் கைகளைத் தட்டி விடவாச்சும் மனசு வருமா நமக்கு ?
 • *ஒரு டிப்பர் லாரியில் ஏற்றக்கூடிய அளவிலான படைப்பாளிகளை ஒற்றை ஆல்பத்துக்குள் அடக்கியபடியே வன்மேற்கின் ஊடே பயணிக்கவுள்ள "மேற்கே போ மாவீரா !" இதழை skip செய்யவாச்சும் மனசு வருமா ?
 • *ஒடிசலான நவீன வெட்டியானின் களத்தினில் மென்சோகமே பிரவாகமெடுத்தாலும் அவர் மீது காமிக்ஸ் காதல் கொள்ளாது போக முடியுமா ?

இவை போன்ற கேள்விகளை ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னே வைத்திட வேண்டுமென்று விழைந்தோம் - காத்துள்ள அட்டவணையினில் ! வாங்கிடவும் சரி, வாசித்திடத் தூண்டுவதிலும் சரி -  2024-ன் தேர்வுகள் சோடை போகலாது என்பதே பிரதான நோக்கம் ! இந்த நொடியினில் இன்னொருக்க இந்த FAB 25 பட்டியலைப் பார்த்தபடிக்கே - உங்கள் மனசுக்குள் கணக்குப் போடுங்களேன் guys, இவற்றுள் எத்தனையினை துயில் கிடத்தலாம் ? எத்தனையினை சுடச்சுடப் படிக்கலாமென்று ? முந்தைய நம்பர் மிகுந்திருப்பின் நிச்சயம் வியப்பு கொள்வோம் !  

Oh yes - நம்ம கூர்மண்டையரைக் கண்டு உங்களில் சிலர் மிரண்டிருக்கலாம் தான் - ஆனால் அவரை வேணாமெனில் மறுக்கும் உரிமையினையும் உங்கள் கைகளிலேயே தந்திருக்கிறோம் தானே ?! And surprise ...surprise ...இதுவரைக்கும் வந்துள்ள சந்தாக்களில் "ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு வேணாம் எனக்கு !" என்று சொல்லியுள்ளோரை ஒற்றைக் கையின் விரல்களுக்குள் அடக்கி விடலாம் ! 

"வேதாளரா - பழைய நெடியடிக்குமே ?" என்று சில புருவங்கள் உசந்திருக்கலாம் தான் - ஆனால் அந்த இதழ் வெளியான பின்னேயும் உங்கள் அபிப்பிராயங்கள் அவ்விதமே தொடர்கின்றனவா ? என்பதைப் பார்த்து விடலாமா ?

*மாடஸ்டி சீமாட்டியாஆஆ ?" என்ற அலறல்கள் கேட்கலாம் தான் - மார்ச் மாதம் அவர்  V காமிக்சில் debut செய்திடும் வரைக்கும் ! மிரட்டும் அந்த  action block-ன் முடிவினில் நீங்களும் 'இளவரசிப் பாசறையில்' சேர்ந்து கொள்ள லைனில் நிற்காது போக மாட்டீர்கள் !

மேற்படி மூவர் மாத்திரமே ஒரு முந்தைய யுகத்தின் படைப்புகள் ! பாக்கி 22 நாயகப் பெருமக்களுமே சமகாலத்துப் பிள்ளையர் எனும் போது, புதுயுக சித்திர பாணிகள் ; டிஜிட்டல் கலரிங் ; கதை சொல்லும் யுக்திகள் என்று ரசிக்கலாம் ! புறா காலில் தூது கட்டி அனுப்பும் புராதன தாத்தா ஈரோஸ் இந்த 22-ல் நிச்சயமாயிட்டும் நஹி !  And நமக்கிருப்பது அந்த ஆறாயிரம் ரூபாய்களுக்குள்ளான பட்ஜெட் ; அதனுள்ளேயே கால் சத நாயகர்களையும் சாகசம் செய்திட அனுமதித்தாக வேண்டும் என்பதே திட்டமிடலாக இருந்திட வேணும் எனும் போது - "சுப்ரீமோ ஸ்பெஷல்" பாணியில் மெகா விலை இதழ்களுக்கு இடம் தந்திட இயலாதே guys ?! இந்தப் புரிதலுடன் அட்டவணையினை இன்னொருக்கா நோக்குங்களேன் ப்ளீஸ் - பின்னணியில் உள்ள நமது  அபிலாஷைகள் புரிபடாது போகாது ! 

பிப்ரவரியில் அறிவித்திடவுள்ள MYOMS முன்பதிவுகளுக்குப் பின்பாய் மேற்கொண்டு 5 நாயகர்கள் 2024-ன் கோதாவுக்குள் இறங்கியிருப்பர் ! Which means - 2024-ல் நாம் சந்திக்கவிருப்பது 25 + 5 = 30 ஈரோக்களை !!  

And ஜூன் 2024 முதலாய் தொடர்ந்திடவுள்ள க்ளாஸிக் நாயகர்களின் மூணாம் சீசனில், இன்னொரு 5 பேரை அள்ளிப் போட்டுக் கொண்டால் 30 +5 = 35 என்றாகிடும் எண்ணிக்கை !

அப்புறம் V காமிக்சின் அடுத்த 6 மாதச் சந்தாவில் ஒரு புதியவரும் காத்துள்ளார் எனும் போது - 35 + 1 = 36 என்ற மொத்தக் கணக்காகிடும் - 2024-ன் அட்டவணைக்கு ! ஆக மாதங்கள் 12 ; நாயகர்களோ 36 !!!! 

சொல்லுங்களேன் பாஸ் - 2024-ன் நமது பயணத்தில் கரம் கோர்த்துக் கொள்ள இந்த 36 காரணங்கள் போதாதா ? என்று !!!  Bye all ; சந்தா எக்ஸ்பிரஸில் இடம் பிடிக்க விரைந்திடுவோமா ? Have a great weekend ! See you around !

P.S :  "Only டெக்ஸ் வில்லர் !" என்றதொரு கணிசமான ஏற்றுமதி ஆர்டரும் இன்று கிட்டியிருக்க, 'தல' கடல்தாண்டிய பயணத்துக்கு ரெடியாகி வருகிறார் ! குத்துவோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு - அண்டாக்களில் பாயாசங்கள் போடப்பட்டாலுமே !

SCENES FROM SALEM