Powered By Blogger

Tuesday, November 29, 2016

நவம்பரில் டிசம்பர் ..!

நண்பர்களே,

வணக்கம். டிசம்பர் இதழ்கள் இன்றைய மதியமே கூரியரில் புறப்பட்டு விட்டன !

நவம்பரிலேயே   டிசம்பருக்கான இதழ்களை அழகு பார்க்கும் வாய்ப்பு சாத்தியமாகியது - அதனால் ஒரு நாள் முன்பாகவே "பொட்டிகள்" புறப்பட்டு விட்டன ! காலையில் கூரியர் கதவுகளை தட்டிப் பாருங்களேன் ?

மீண்டும் சந்திப்போம்.
இப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் !

அப்புறம், இந்தாண்டில் நாங்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் என்னவென்று தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்போம் ! கூரியர் "பொட்டிகளுக்குள்" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? 

And last - but not the least !! 


Sunday, November 27, 2016

ஒரு சோம்பல் முறிப்பு !

நண்பர்களே,
            
வணக்கம். ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது சாய்ந்த பின்பாகப் பேப்பரையும், பேனாவையும் தூக்கிக் கொண்டு, இந்த வாரத்துப் பதிவுக்கு என்ன எழுதலாமென்ற ‘ரோசனைக்குள்‘ லயிப்பது வழக்கம். ஆனால் இந்தப் பதிவை நான் எழுதியதோ- வியாழன் இரவினில் ! டிசம்பரின் தயாரிப்பில் வண்ண இதழ்கள் சகலமும் இம்முறை சடுதயாய்த் தயாராகிட, b&w இதழான “நீதிக்கு நிறமேது?” மாத்திரம் பின்தங்கி விட்டது ! “அட.... கறுப்பு வெள்ளை இதழ் தானே ? நொடியில் தயார் பண்ணிக்கலாம் !” என்ற மெத்தனம் லேசாய் மனதில் குடியிருந்ததும் இதற்கொரு காரணம் ! ஆனால் பக்க நீளமும் சற்றே அதிகம் ; கதையினில் வசனங்களும் கூடுதல் என்ற போது நான் எதிர்பார்த்ததை விடவும் இந்த இதழின் பணிகள் அதிக நேரம் பிடித்துவிட்டது ! ஒரு வழியாய் வியாழன் இரவில் என் பேனாவின் பணிகள் நிறைவுற - "ஹை !! நடப்பாண்டின் பணிகள் சகலமும் முடிந்தது டோய் !!" என்ற ஞானோதயம் பிறந்தது !  ‘அக்கடா‘வென அந்த நொடியின் ஏகாந்தத்தை அனுபவித்த போதே - இவ்வாரத்துப் பதிவையும் எழுதிடத் தோன்றியது ! ஒரு 12 மாதப் பயணத்தின் இறுதி இதழின் பணிகளுக்கு ‘சுப மங்களம்‘ போடும் அந்தத் தருணம் கொஞ்சமே கொஞ்சமாய் ரசித்திட வேண்டிய பொழுதாகப்பட்டது எனக்கு ! ஒவ்வொரு டிசம்பரிலும் இப்போதெல்லாம் இது போன்றதொரு வேளை உதிப்பதுண்டு தான் ; நிமிர்ந்து பார்ப்பதற்குள் ஜனவரியும், இன்னுமொரு நெடும் பயணமும் காத்திருப்பதும் புரிகிறது தான் ! ஆனாலும் முழுப்பரீட்சை லீவுகள் அறிவிக்கப்படும் அந்த நாளினில் ஒரு மாணவன் அனுபவிக்கும் குதூகலத்தில் ஒரு குட்டி சதவிகிதம் எனக்குள் இந்த நிமிடத்தில் அலையடிக்கிறது!

2015-ம் கூட நமக்கொரு படுபிசியான ஆண்டே ! அப்போதும் 45+ இதழ்களைப் போட்டுத் தாக்கியிருந்தோம் தான் ! So சென்றாண்டின் இதே சமயத்திலும் கூட இந்த சந்தோஷச் சோம்பல் முறிப்பு அரங்கேறியிருக்கும் தான் ! ஆனால் 2016 - எண்ணிக்கையின் விகிதத்தில் மட்டுமன்றி, இன்னும் சில பல காரணங்களினால் ரொம்பவே unique ஆனதொரு ஆண்டென்று சொல்லத் தோன்றுகிறது ! கதைகளை genre வாரியாகப் பிரிக்கும் முயற்சிகளுக்கொரு பிள்ளையார் சுழி போட்டது நடப்பாண்டில் தான் எனும் போது அது காரணம் # 1 என்பேன் ! இது வரையிலும் ‘திகில்‘; ‘மினி லயன்‘; ‘ஜுனியர் லயன்‘ என்று முற்றிலும் வெவ்வேறு பத்திரிகைகளாக நாம் பிரசுரித்து வந்த (சொற்ப) நாட்களில் இந்தக் கதைகளுக்குள்ளான பாகுபாடு அமலில் இருந்தது ! ஆனால் அவை சடுதியில் சயனம் செய்ய நேர்ந்த பின்பாக இந்தாண்டு வரைக்கும் ஒரே இலையில் கூட்டு ; பொரியல் ; பாயாசம் ; பாயா; என்று சகலத்தையும் பரிமாறி வந்திருந்தோம் ! சந்தாக்களுள் தனித்தனித் தடங்கள் அவசியமானதொரு சமாச்சாரமாகிப் போனது - ‘தனி ராஜ்யம்‘ என்ற டெக்ஸ் வில்லர் கொடி பறக்கத் தொடங்கிய வேளை முதலாகவே என்பேன் ! 12 மாதங்களும் ; 12 விதவிதமான டெக்ஸ் கதைகளும் வெளியான பின்பாக ‘சர்வமும் நானே‘ என்று சொல்லிட நம்மவருக்கு சாத்தியமாகிறதென்றால் அதுவொரு சாதனையே என்று தான் சொல்வேன் ! ஆனால் அது பற்றிய அலசல்களுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன என்பதால் தற்சமயத்துக்கு steering clear of it!

ஆக்ஷன் கதைகளுக்கொரு சந்தா ; போனெல்லியின் b&w படைப்புகளுக்கொரு சந்தா ; கார்ட்டூன்களுக்கொரு சந்தா ; மறுபதிப்புகளுக்கென்று என்ற தெள்ளத் தெளிவான 4 தனித்தனிப் பாதைகளை 2016-க்கென வகுத்துக் கொண்டு பணியாற்றியதால் இந்த ஆண்டின் நிறைவில் எனக்குள் சந்தோஷம் ஒரு மிடறு ஜாஸ்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அடுத்த சில நாட்களில் டிசம்பரின் ‘பொட்டி‘ உங்களைத் தேடிப் புறப்பட்டான பின்னே ; கதைகளை வாசித்திட / விமர்சித்திட ஓரிரு வார அவகாசம் தந்தான பின்னே - 2016 பற்றிய 'திரும்பிப் பார்த்தலைத்' துவக்கிடலாம் ! ஆனால் இந்த நொடியில் நான் திரும்பிப் பார்க்க விழைவதோ - கடந்துள்ள 365 நாட்களது எனது பணிசார்ந்த நினைவலைகளை ! 

சட்டத்திற்கொரு சவக்குழி”யோடு ஜனவரியைத் தொடங்கியது நேற்றைக்குப் போல ஒரு கணத்திலும், ஒரு மகாமகத்துக்கு முன்பான நிகழ்வு போல மறுகணத்திலும் தோன்றுகிறது ! 2016-ன் பக்க எண்ணிக்கையினில் ‘தல‘ தாண்டவம் மாத்திரமே சுமார் 2300 பக்கங்கள் என்பதை இப்போது ஆற அமர தலைக்குள் ஓட அனுமதிக்கும் போது திகைப்பாய் உள்ளது ! பேசிய அதே பன்ச் வரிகளை திரும்பவும் ஏதேனும் ஒரு இதழுக்கு எழுதித் தொலைத்து விடக் கூடாதே என்ற பயத்தில் - இரவுக் கழுகாருக்காக புதுசு புதுசாய் டயலாக்குகளை உருவாக்க நான் செலவிட்ட இரவுகள் தான் மனதில் இப்போது நிழலாடுகின்றன ! அவை சிறப்பாய் அமைந்ததாக நீங்கள் நினைத்தாலும் சரி ; மொக்கையாகத் தோன்றியதாகக் கருதினாலும் சரி - அந்த வரிகளை எழுத செலவாகிய பொழுதுகளே நான் இங்கு நினைவுகூர்ந்திடும் சமாச்சாரம் !   நாட்கள் நகர நகர, நமது நாயகரின் மவுசும் கூடக் கூட, வரிகளின் வீரியமும் அதற்கேற்ப அமைந்திட வேண்டுமென்ற ஒற்றை சிந்தனை மட்டுமே இந்தாண்டு முழுவதற்கும் எனக்குள்ளே உறைந்து வந்தது ! “திகில் நகரில் டெக்ஸ்” & “விதி போட்ட விடுகதை” சற்றே off the beaten Tex track என்ற அங்கீகாரம் கிட்டிய போது பிரகாசமான எங்கள் வதனங்கள் - மெகா சைசிலான “தலையில்லாப் போராளி” யின் சமயம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போலாகியது ! அந்த இதழின் சித்திர பிரம்மாண்டம் நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் 2016-ன் மறக்க இயலாத் தருணங்களில் ஒரு முக்கிய இடம்பிடிக்குமென்று நினைக்கிறேன் ! ஈரோட்டில் இத்தாலி ; சர்வமும் நானே - என்று இன்னமும் வர்ண ஜாலங்களை நமது மஞ்சள் சட்டைக்காரர் தலைக்குள் விட்டுச் சென்றுள்ளதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! 

‘தல புராணத்து‘க்குள் புகுந்தால் வாய் சுளுக்கும் வரை ஓய மாட்டேனென்பதால் – லேசாகப் பார்வையை மற்ற சாமான்ய நாயகர்கள் பக்கமாய்த் திருப்பும் போது - இந்தாண்டின் பணிகளுக்குள் எனக்கொரு உச்ச திருப்தியைத் தந்த மர்மமனிதன் மார்டின் தான் அழுத்தமாய் நினைவில் நிற்கிறார் ! “இனியெல்லாம் மரணமே” இதழினைக் கையாண்டதும், அதற்கெனப் பேனா பிடித்த (சிரம) நாட்களும் மறக்க இயலா ஞாபகங்களாய்த் தொடர்ந்திடும் என்னுள் ! களம் எப்போதுமே சுலபமானதாக இராது என்பது தெரிந்திருந்தாலும் - ஒவ்வொருமுறை மார்ட்டினோடு கைகுலுக்கும் போதும் ஒரு சன்னமான குஷி எனக்குள் பொங்கிடுவதுண்டு ! மரத்தைச் சுத்தி வந்து டூயட் பாடுவதுமே நமது நாட்களின் ஒரு அத்தியாவசியப் பகுதி தான் என்றாலும், எப்போதாவது கிடைக்கும் இது போன்ற சறுக்குமரம் ஏறும் சவாலான வாய்ப்புகள் தரும் திருப்தி ரொம்பவே பிரத்யேகமானது ! அந்த விஷயத்தில் “இனி எல்லாம் மரணமே” 2016-ன் standout என்பேன்- எனது பணிசார்ந்த அளவுகோல்களில் ! அது உங்களாலும் சிலாகிக்கப்பட்டதொரு இதழாக அமைந்தது bonus !!

ரசித்துப் பணி செய்த இன்னுமொரு ஆல்பம் - நமது பென்சில் இடையழகி ஜுலியாவின் “நின்று போன நிமிடங்கள்” கூடத்தான்! ஆரவாரமிலா ; அதிரடியிலா யதார்த்த நாயகி என்பதால் இவருக்கான மொழிநடை எனது வழக்கமான ‘கடமுட‘ பாணியில் இல்லாது சுலபமாய் அமைந்திட வேண்டுமென நிறையவே மெனக்கெட்டேன் ! End result - காயா? பழமா? என்பதை நானறியேன் ; ஆனால் சுவாரஸ்யம் தந்த project-களுள் “நி.போ.நி.” மும் ஒன்று !

சவால்கள் எல்லா வேளைகளிலும் சீரியஸ் ரகங்களில் இருக்கத்தான் வேண்டுமென்பதில்லை ; ‘கெக்கே-பிக்கே‘ பார்ட்டிகளின் படலங்களிலும் கூட நிறையவே பஸ்கி எடுக்க வேண்டி வரலாமென்பதை மாதந்தோறும் நினைவூட்டிய புண்ணியம் சந்தா C-ஐச் சாரும் ! துவக்கமே “சூ மந்திரி காலி” யின் மிரட்டலிலிருந்து என்றபோது ஜனவரியில் தொடங்கிய மண்டைப் பிறாண்டல் வெகு சொற்பமான மாதங்கள் நீங்கலாகப் பிடிவாதமாய்த் தொடர்ந்தது ! மதியில்லா மந்திரி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பானது ஒரு நிகரில்லா உச்சம் என்பது என் அபிப்பிராயம் ! வார்த்தைகளில் புகுந்து அவர்கள் ஆடும் சித்து விளையாட்டினை தமிழுக்கும் அப்படியே கொண்டு வருவது கிட்டத்தட்ட நடவாக் காரியம் ! ஆனாலும் இயன்றமட்டிலும் முயற்சிக்காவிடின் இந்தக் குள்ளவாத்தாரின் குறுங்கதைகள் சோபிக்காது என்பதால் சென்றாண்டின் இதே வேளையில் சூ... மந்திரி காலியோடு மல்யுத்தம் போட்டுக் கொண்டிருந்தது நினைவில் நிற்கிறது ! And இந்தாண்டின் டிசம்பரில்  - 2017  பிப்ரவரிக்காக அதே மந்திரியாரோடு இப்போதும் WWF நடத்திக் கொண்டிருப்பதொரு சந்தோஷ coincidence என்பேன் ! 

சிரமங்களின் பொருட்டு மட்டுமல்ல, சுலபங்களின் பொருட்டும் சில நாட்கள் நினைவில் தங்கின ! அதில் குறிப்பிட்டுச் சொல்வதாயின் ரின்டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக்கைதி”யைச் சொல்லலாம். ஜாலியான அந்த ஞானசூன்யத்துக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது எப்போதுமே குஷியானதொரு பணி ! And லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான்” இதழிலும் ரி.டி.கே. சுற்றி வந்து எனது பணி மேஜையை சில வாரங்களுக்காவது செம ஜாலியாக்கியது நினைவில் நிற்கும் moments ! ஸ்மர்ப்ஃப்களும், சுட்டிப் புயல் பென்னியும் கூட இதே பாணியில் சந்தோஷ மீட்டர்களை உச்சப்படுத்தியவர்கள்- தத்தம் கதைக்களங்களில் வியாபித்துக் கிடந்த அந்த cho sweet factor களின் பொருட்டு ! அதிலும் “ஒரே ஒரு ஊரிலே” ஒரு செம அனுபவம் - எனக்காவது!!

ஆக்ஷன் & adventure கதைகள் சார்ந்த சந்தா A-வில் மாமூலான அடிதடிகளுக்கு மத்தியில் வேறுபட்டு நின்றவர்கள் கேரட் தலை கமான்சேவும், புதிர் நாயகர் ஜேஸன் ப்ரைஸும் தான் என்பேன் ! கமான்சேவின் கதைக்களம் அத்தனை வீரியமானவையல்ல என்றாலும் - ஒரிஜினல்களின் ஸ்கிரிப்ட்டில் ஏகமாய் அழுத்தம் தந்திருப்பார் கதாசிரியர் க்ரெக் ! அதனை ஓரளவுக்குத் தமிழாக்கத்தின் போது பத்திரப்படுத்த முயற்சித்து நான் இழந்த கேசம் எக்கச்சக்கம் என்பேன் ! “அட... இந்தக் கதைக்கு அப்படியென்ன மெனக்கெடல் தேவை ?” என்று மேலோட்டமாய்த் தோன்றலாம் தான் ; but trust me guys - கதைநடைக்கான ஒரிஜினல் வரிகள் அபரிமித ஆழம் கொண்டவை ! 

ஆண்டின் இறுதிகளில் எட்டிப் பார்த்த ஜேஸன் ப்ரைஸ் இன்னுமொரு நினைவில் நிற்கும் performer ! டிசம்பரில் காத்துள்ள பாகம் 2-ன் பொருட்டு ஏகமாய் உழைத்தது வெகு சமீபமாய்த் தான் என்பதால் மட்டுமன்றி - அந்த அசாத்திய மர்ம முடிச்சுகளின் காரணமாகவும் நினைவில் தங்கியுள்ளது ! அடுத்த சில நாட்களில் இந்த ஆல்பத்தைப் படித்து விட்டு நீங்கள் ‘மெர்செல்‘ ஆகப் போவது சர்வ நிச்சயம் !

ஆனால் இந்தாண்டின் நாக்குத் தள்ளச் செய்த நினைவுகளின் உச்சத்தை நல்கியவர் நமது உடைந்த மூக்கார் தான் ! “என் பெயர் டைகர்” ஆல்பத்தின் முதற்கட்ட மொழிபெயர்ப்பு கருணையானந்தம் அவர்களது உபயம் ! SO ‘மட மட‘ வென்று 2 மாத அவகாசத்தினுள் மொழிபெயர்ப்பும் ; தொடர்ந்த சில வாரங்களில் நம்மிடத்தில் டைப்செட்டிங்கும் பூர்த்தியாகி பிப்ரவரியின் மத்தியிலேயே என் மேஜைக்கு ஒரு லோடு பிரிண்ட்-அவுட்கள் வந்து சேர்ந்து விட்டன ! ஆனால் வறண்ட அந்தக் கதைக்களத்தை ஒட்டுமொத்தமாய் ஒரே ஆல்பமாய் உருவாக்குவதற்குள் ஒரு டஜன் ATM வாசல்களில் ‘தேவுடா‘ காத்து நின்ற மாதிரியான அயர்ச்சியை உணர்ந்தேன் என்றால் அது மிகையில்லை ! நிஜ வரலாறை- கற்பனையோடு  கைகோர்க்கச் செய்து ஒரு டாக்குமென்ட்ரி மாதிரியும் ; ஒரு கௌபாய் ஆல்பம் மாதிரியும் தோற்றமளிக்க திரு.ஜிரௌ முயற்சித்திருப்பதை சிலபல வாரங்களுக்கு நான் பேய்முழியோடு தான் அணுகினேன் ! வ்யாட் ஏர்ப் ; கோசைஸ் ; ஓ.கே.கோர்ரல் துப்பாக்கி சம்பவம் என வன்மேற்கின் பல “பெரிய பெயர்கள்” பக்கத்துக்குப் பக்கம் வலம் வருவதால் - கதாசிரியர் வழக்கம் போல கற்பனையில் உதிக்கும் அதிரடிகளை அரங்கேற்ற இயலாச் சூழ்நிலைக் கைதியாக இருப்பது தெளிவாகவே புரிந்தாலும் – இதனை நமது வாசகர்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ ? என்ற பயத்தில் ஜிங்ஜர் பீர் குடித்த மந்தி போலத் தான் திரிந்தேன் ! ரொம்பவே காய்ந்து தெரிந்த கதைக்களத்தினில் மொழியாக்கத்திலாவது லேசாகக் காரமூட்ட முயற்சித்து அடுத்த ஒன்றரை மாதங்களைச் செலவிட்டிருப்பேன் - தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான பக்கங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ! “மின்னும் மரண” உச்சத்துக்குப் பின்பாக - “என் பெயர் டைகர்” எவ்விதம் சோபிக்குமோ என்ற பீதி தான் 2016-ன் ‘லக லக லக‘ moment எனக்கு ! ஆனால் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை ஒட்டுமொத்தமாய், ஒரே ஆல்பமாய் வாசிக்க முடிந்த போது அதனை நீங்கள் அழகாய் ரசித்தது இந்தாண்டின் சந்தோஷ ஆச்சர்யத்தின் சிகரம் என்பேன் ! ‘ஐயே... மொக்கை!‘ என்று ஒற்றை வரியில் இதைத்  தூக்கிப் போட்டு விட்டு நகர்ந்திருப்பின் நிச்சயமாய் அதனில் நான் பிழைகண்டிருக்க முடியாது தான் ! ஆனால் மாறி வரும் நமது ரசனைகளுக்கும், முதிர்ச்சியின் தாக்கங்களுக்கும் இந்த இதழின் வெற்றியே பிரமாதமானதொரு சான்று என்பேன் ! Ufffff !!! #அந்த நிம்மதிப் பெருமூச்சு moment 2016 !

முதிர்ச்சியின் தலைப்பிலிருக்கும் போதே இந்தாண்டின் விற்பனையில் கணிசமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ள திருவாளர். ஸ்பைடரும் எட்டிப் பார்க்கிறார்- ஒரு டிரேட் மார்க் இளிப்போடு ! “என் பெயர் டைகர்“ கதையை ரசித்த அதே மூச்சில் கடத்தல் குமிழிகளையும், டாக்டர் டக்கரையும் சிலாகித்துள்ளீர்கள் எனும் போது உங்களுக்குள்ள ரசனைகளின் முகங்கள் தான் எத்தனை ? என்று மண்டையை லைட்டாகச் சொரிந்து நிற்கிறேன் ! ஆனால் பந்தியில் பாயாசமும் சுவையே, பாயாவும் சுவையே ; பாஸந்தியும் சுவையே என்பதால் - absolutely no complaints at all ! 

கேக்கின் மேலே ஐசிங்... அதன் மேலொரு செர்ரிப் பழம் என்பது போல - இந்தாண்டில் நமக்கு பிரெஞ்சு அரசிடமிருந்து கிட்டியுள்ள அங்கீகாரம் தான் ஒட்டுமொத்த வருஷத்தையே வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றிடுகிறது ! வெகு சமீபமாய் மான்யத் தொகையின் ஒரு முதல் கட்டம் நம்மை வந்து சேர்ந்துள்ளது ! தொகை ஐந்திலக்கத்திலானது என்றாலும் - அதன் பின்னுள்ள அன்பும், ஆதரவுக் கரமும் அசாத்திய ஆற்றல் வாய்ந்தவை என்ற புரிதல் சுட்டிப் புயல் பென்னியைப் போல ஜிங்-ஜிங்கென்று LIC கட்டிடங்களைத் தாண்டித் தாவிடும் சக்தியை எங்களுக்கு  நல்கியது போல உணர்கிறோம் ! அந்த சந்தோஷ உச்ச moment 2016 !! 

அது மாத்திரமன்றி - திடீர் மறுபதிப்புகளாய் ‘முத்து மினி காமிக்ஸ்‘ தலைகாட்டியதும் ; அதைச் சார்ந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பில் செய்திட்ட ஐந்திலக்க நன்கொடையும் மனநிறைவை முழுமையாக்கிய காரணிகள் ! (கருப்பு மார்க்கெட் / க்ரே மார்க்கெட் என்ற காரசாரங்கள் ஓடிக் கொண்டிருந்த வேளைதனில் - "அந்தப் பணத்தை செலுத்தியாச்சா ? " என்று ஆவேசக் குரல் கொடுத்து வந்த "உயிர்ப்பிக்கும் நண்பர்களுக்க்கும் சேர்த்தே இந்தச் சேதி  : "கவலையே வேண்டாம்  ; உரிய வேளையில், தொகை உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது !)
  • சாதித்தோமா? சொதப்பினோமா?
  • கதைத் தேர்வில் வெற்றி கண்டோமா ? மண்ணைக் கவ்வினோமா?
  • மொக்கைகள் கோட்டா கட்டுக்குள் இருந்ததா - 2016-ல் ? அல்லது ஜாஸ்தி தானா ? 
என்ற தர்க்கங்களுக்கெல்லாம் அவரவரிடம் விதவிதமான அபிப்பிராயங்கள் இருந்திடலாம் தான் ! ஆனால் இயன்றதைச் செய்தோம் ; சில பல புன்னகைகளை விதைத்தோம் ; எங்கள் முகங்களிலும் அந்தப் புன்னகை ஆண்டிறுதியில் நிலைத்திருக்கிறது என்ற சன்னமான ஆத்மதிருப்தியே போதும் இந்தாண்டை சந்தோஷமாய் நினைவுகூர்ந்திட ! இதன் ஒவ்வொரு நொடியிலும் எங்களோடு பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த மனநிறைவில் பங்குண்டு என்பதால் ஒரு MEGA Thanks all !! இதே மகிழ்வு ஒவ்வொரு டிசம்பரிலும் நமதாகிடும் வரம் கிட்டின் - all will be well ! மீண்டும் சந்திப்போம் all !

P.S : பின்குறிப்பாய் இதனை நான் எழுதுவது - மறந்து போய் விட்டு அப்புறமாய் நினைவு கூர்ந்தல்ல ! பத்தோடு பதினொன்றாய் பதிவின் உள்ளே புதைந்து போய் விடக் கூடாதே  என்ற ஆசையில் have reserved the best for the last !

ஆகஸ்டில், ஈரோட்டுப் புத்தக விழாவின் போது அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அந்த அதகள சந்தோஷப் பரிமாற்றமும் இந்த வருடத்தை ஒரு ‘மந்திரப் பொழுதாக‘ உருமாற்றியதென்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது ! நிறையமுறை நாம் சந்தித்துள்ளோம் தான் ; ஆனால் நிறையப் பேரை இத்தனை நிறைய நேரம் சந்திக்க முடிந்தது ஒரு அசாத்திய அனுபவம் ! அதை சாத்தியமாக்கிய சேந்தம்பட்டி நண்பர்கள் குழுவுக்கும், உள்நாடு ; வெளிநாடு ; உள்மாநிலம் ; வெளிமாநிலம் என தூரங்களைப் பார்த்திடாது பயணித்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் எங்களது கரம் கூப்பிய நன்றிகள் ! End of the day - ஒரு வாசிப்பு அனுபவம் என்பதோ ; ஒரு பிரமாதமான காமிக்ஸ்  வெளியீடு என்பதோ ; சேகரிப்பு என்பதோ ஏதேனுமொரு விலை கொடுத்து வாங்கிடக் கூடியதொரு சமாச்சாரமே ! ஆனால் விலைகளுக்கு அப்பால் நிற்கும் இது போன்ற நட்புகளும், நேசங்களும் - சாகாவரம் பெற்றவையல்லவா ? Take a bow people !!! You have  created an almost perfect year !!

இதோ - டிசம்பரில் எஞ்சி நிற்கும் இதழின் அட்டைப்படப் preview !  நடுவினில் உள்ள நம்மவர் மாத்திரமே - நமது ஓவியரின் தூரிகை தயாரிப்பு ; பாக்கி எல்லாமே நமது டிசைனரின் கைவண்ணம் !! அழகாய் அமைந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! உங்களுக்கு ? Bye all !! See you around !! Saturday, November 19, 2016

வந்தார்...வென்றார்....!

நண்பர்களே,
            
வணக்கம். ஜாம்பவான்களின் படலம் இந்த ஞாயிறும் தொடர்கிறது - முற்றிலுமொரு ஜாலியான ஆசாமியோடு ! “வந்தார்... கண்டார்.... வென்றார்...!” என்பதே இவருக்கான அறிமுக வரிகளாக இருக்க முடியும் ! சொல்லப் போனால் நமது பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்து நிற்கும் இரும்புக்கை மாயாவியும், கேப்டன் டைகரும் கூட இதே போலான impact-ஐத் தான் நம்மிடம் கொண்டிருந்தனர் ! So ஒரு ஜாம்பவானின் முதல் முத்திரையே ஒரு ஆயுட்கால முத்திரையாக அமைகிறதை ஜாம்பவான்களுக்கிடையிலான ஒற்றுமையாய்ப்  பார்த்திட முடிகிறது !

Without much ado சொல்லி விடுகிறேனே - இவ்வார அலசலுக்கு ஆளாகிடுபவர் நமது இணையிலாக் குற்றச் சக்கரவர்த்தியே என்பதை  ! நியூயார்க்கைக் கொள்ளயைடித்த நிறையப் போக்கிரிகளைப் பார்த்திருப்போம் ; ஆனால் நியூயார்க்கையே கொள்ளைப் பொருளாக்கிய பக்கியை நாம் முதல் முதலாய் பார்த்தது ஆகஸ்ட் 1984-ல் ! Oh yes - லயனுக்கும், லயனின் சமவயது வாசகர்களுக்கும் ஒரு நிகரில்லா ‘சூப்பர்-டூப்பர் ஹீரோவாய்க் காட்சி தந்த திருவாளர் ஸ்பைடர் தான் இவ்வாரத்தின் அலசலுக்குள்ளாகிடும் ஜாம்பவான் # 3  !! “சிங்கத்தின் சிறு வயதில்” பகுதிகளில் நமது கூர்மண்டையரைப் பற்றி நிறையவே எழுதி விட்டேன் ; இவரது வரலாறு ; பூகோளம் எல்லாமே நமக்கு அத்துப்படி தான் ! ஆனாலும் இந்த anti-hero மீதான நேச நாட்களைப் பற்றி மீண்டுமொரு முறை பேசுவதில் தவறிராது என்றே நினைத்தேன் !

“எத்தனுக்கு எத்தன்” கதையை நான் முத்து காமிக்ஸிலிருந்து லவட்டி விட்டு வெளியிடத் தயாரானது 1984 ஜுனின் இறுதியில் !! ‘இதையா போடப் போறே ?‘ என்று புருவத்தை உயர்த்தியது என் தந்தை மட்டுமன்றி ; முத்து காமிக்ஸின் (அன்றைய) மேனேஜரும் கூட ! ஆனால் எனக்கோ இந்தச் சிலந்தி மனிதரின் கதையில் ஏதோவொரு வசீகரம் இருப்பது போலவே தோன்றியது ! “எத்தனுக்கு எத்தன்” வெளியிடத் தீர்மானித்த சற்றைக்கெல்லாமே தொடரின் இன்ன பிற கதைகளைக் கோரி டெல்லியிலிருந்த ஏஜெண்டுக்கு ஆர்டர் அனுப்பிய போதும் கிட்டத்தட்ட அதே பாணியிலான response; “இந்தக் கதைகள் நிச்சயமாக வேண்டும் தானா ? இந்தியாவிலேயே இது வரை இவற்றை யாரும் வெளியிட விருப்பம் காட்டியதில்லை - are you sure?” என்ற கேள்வியோடு கடிதமொன்று வந்தது ! “துளியும் சந்தேகமில்லை- ஆர்டர் போடுங்கள் !” என்று நான் உறுதி செய்த பிற்பாடு கிளம்பி வந்தவை தான் “டாக்டர் டக்கர்” & “பாதாளப் போராட்டம்!” கதைகள் !

“ஸ்பைடர்” என்ற நாயகரின் அந்த நாட்களது அசாத்திய வெற்றிக்குக் காரணமென்னவென்று ஒரு நாளும் யோசிக்க நான் மெனக்கெட்டதில்லை தான் ! சாவகாசமாய் இப்போது அந்தப் பக்கமாய் சிந்தனையை ஓட விடும் போது சில பல சமாச்சாரங்கள் தட்டுப்படுகின்றன ! 

பிரதானமாய் எனக்குத் தோன்றுவது அந்த நெகடிவ் பாத்திரப்படைப்பு ! அது வரையில் முத்து காமிக்ஸ் & maybe இன்ன பிற காமிக்ஸ் இதழ்களிலும் நாம் பார்த்திருந்ததெல்லாமே நேர்கோட்டுக் கதைக்களங்களில், goody-goody கதாநாயகர்களையே ! ஒரு மாயாவியோ - லாரன்ஸோ – ரிப் கிர்பியோ – காரிகனோ – வேதாளரோ – மாண்ட்ரேக்கோ என்றைக்கும் நீதிக்கு மறுபக்கம் நின்றதாய் சரித்திரமே கிடையாது ! So வழக்கம் போல் நல்லவரான நாயகர்- தீமையின் பல அவதாரங்களை நசுக்குவதைப் பார்த்து லேசாகப் போரடித்துக் கிடந்த நமக்கு – இந்த சத்யராஜ் பாணியிலான நக்கல் கலந்ததொரு வில்லனைப் பார்த்த சமயம் ஏதோவொரு லயிப்பு எழுந்திருக்க வேண்டும் ! வில்லனாக இருந்தாலும் - end of the day போலீஸார் செய்திருக்க வேண்டிய பணிகளை நம்மாள் செய்து முடிக்கும் அந்தப் பாங்கில் தென்பட்ட வித்தியாசம் தான் ஸ்பைடரை உயரத்துக்கு இட்டுச் சென்ற நிஜமான ஹெலிகார் என்பேன்!

அது மட்டுமன்றி – மாயாவி கதைகளிலோ, அந்நாட்களின் இதர நாயகர்களின் கதைகளிலோ, தொடர்வாய் இணை பயணம் செய்திடும் கைத்தடிக் கதாப்பாத்திரங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்ததில்லை ! ரிப் கிர்பிக்கு சொட்டைத்தலை பட்லர் டெஸ்மாண்டும் ; சிஸ்கோ கிட்டுக்கு வளமான தொப்பையன் பாஞ்சோவும் சகாக்களாக வலம் வரக் கண்டிருக்கிறோம் தான் - ஆனால் பெல்ஹாமும், ஆர்டினியும் போலக் கதை நெடுக டிராவல் செய்து - அவ்வப்போது நம்மைப் புன்னகைக்கச் செய்திட அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் சொற்பமே ! So ஒரு அடாவடி நாயகன் + குழி பறிக்க நினைக்கும் அல்லக்கைகள் என்ற கூட்டணியோடு நாமும் அந்நாட்களில் lock ஆகி விட்டோம் !

அடுத்ததாய் மனதுக்குத் தோன்றுவது அந்த gadgets !  ‘80-களின் மத்திகள் இன்றைய டெக்னாலஜி யுகமல்ல என்ற போதிலும் - நிச்சயமாய் லாந்தர்விளக்குப் புராதன நாட்களுமல்ல தான் ! So ஸ்பைடர் தூக்கித் திரியும் வலைத்துப்பாக்கி ; வாயுத் துப்பாக்கி ; ஸ்பைடரையே தூக்கித் திரியும் ஹெலிகார் என்ற சமாச்சாரங்கள் நமது பால்யக் கற்பனைகளுக்கொரு சுவாரஸ்யத்தைத் தந்திருப்பது நிச்சயம் ! பற்றாக்குறைக்கு வில்லன்கள் கொணரும் உட்டாலக்கடி ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் ! ஆக, ஒரு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் அவசியங்களின்றி - இஷ்டப்பட்ட புல்வெளிகளில் சவாரி செய்யலாம் ; சிக்கிய மலர்ச்சரங்களை காதெல்லாம் சூட்டிக் கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை நாம் லயித்து ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - ஸ்பைடருடனான டீலிங்கில் !

அப்புறமாய் அந்த வில்லன்கள் ! என்ன தான் வேதாளரின் வில்லன்கள் வெறியன்களாக இருப்பினும் ; மாயாவியின் எதிரிகள் எமகாதகர்களாக இருப்பினும் - ஸ்பைடர் எதிர்கொண்ட வில்லன்களின் ரகமே தனியல்லவா ?! ஆழ்கடல் ராக்கெட்டுகளைச் செய்து நியூயார்க்கைப் பிய்த்து இழுத்துப் போகச் செய்யும் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ வில்லனிலிருந்து ; சோளக்கொல்லை பொம்மை வில்லன் ; சதுரங்கப் பார்ட்டி ; சைத்தான் புரஃபஸர்  என்று தினுசு தினுசாய், ரக ரகமாய் அதிரடி காட்டிய அத்தனை வில்லங்கப் பார்ட்டிகளும் ஹாலிவுட் ரக வில்லப்பயலுகள் என்பதில் சந்தேகம் கிடையாது ! பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்காக்  சொன்னது போல - மூர்க்கமான வில்லன் அமைந்தால், அந்தக் கதை (அல்லது படம்) ஹிட்டாகும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது நம் கூர்மண்டையரின் விஷயத்திலும் நிஜமாகியுள்ளது !

Last but not the least – அந்தப் பாக்கெட் சைஸ் ! வாழ்க்கையில் வெற்றி கண்ட சில விஷயங்கள் ரொம்பப் பெரிய திட்டமிடலைப் பின்புலமாக எல்லா வேளைகளிலும் கொண்டிருப்பதில்லை ! சில தருணங்களில் யதேச்சையாக நிகழும் சம்பவங்கள் - வெற்றிப் படிக்கட்டுகளாய் அமைந்து போவதும் உண்டு ! அந்த பாக்கெட் சைஸ் தீர்மானமும் அத்தகையதே என்பேன் ! மாடஸ்டி பிளைஸி கதையமைப்பு தினசரி செய்தித்தாள்களின் strips எனும் போது – அதற்கான இதழ் அமைப்பும் ; ஸ்பைடரின் – பக்கத்துக்கு இரண்டே (பெரிய) படங்கள் தான் என்ற ஏற்பாட்டிற்கும் சுத்தமாய் sync ஆகவில்லை ! என்னென்னமோ உருட்டிப் பார்த்தும் – மார்கெட்டில் கிட்டி வந்த நார்மலான காகித சைஸ்களுக்குள் நமது குற்றச் சக்கரவர்த்தியை அமர்த்த வழி புலப்படவில்லை ! அப்புறம் தான் சென்னையிலிருந்த பேப்பர் மொத்த விற்பனையாளரைப் பிடித்து, நமக்கு ஒத்து வரக் கூடிய ஸ்பெஷல் சைஸைச் சொல்லி ஏற்பாடு செய்து தர முடியுமா ? என்று கேட்டு வைத்தேன். அந்நாட்களில் நமது சர்குலேஷன் 20,000-க்கு அருகாமையில் என்பதால் - 128 பக்கங்கள் கொண்டதொரு (பாக்கெட் சைஸ்) இதழுக்குத் தேவையான காகிதம் ஒரு கணிசமான அளவாகவே இருந்தது. அவர்களும் யோசித்து விட்டு- ‘இத்தனை டன் ஒரே நேரத்தில் வாங்கினால் சப்ளை செய்கிறோம் !‘ என்று சொன்ன போது- அது கிட்டத்தட்ட 2½ இதழுக்கான பேப்பரை ஒட்டுமொத்தமாய் வாங்க வேண்டியதொரு அளவாக இருந்தது ! எனக்கோ வேறு வழியே கிடையாதென்பதால் சரி என்று தலையாட்டி விட்டேன் ! அதற்கான பணத்தைப்  புரட்ட நான் பட்ட பாடு - ஸ்பைடரிடம் சாத்து வாங்கும் ஆர்டினியின் பாட்டை விடப் பாடாவதியானது ! ஆனால் எப்படியோ ஒப்பேற்றினேன் & பாக்கெட் சைஸும் நிஜமானது ! And we know the rest of the story.......! பள்ளிக்கூடப் பைகளுக்குள் திணித்துக் கொள்ளலாம் ; டியூஷனில் புத்தகத்துக்கு மத்தியில் வைத்துப் படிக்கலாம் ; பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்ளலாம் என்ற சௌகரியங்களோ - என்னவோ ஆரம்பமே அமர்க்களமாகிப் போனது ! So ஸ்பைடர் + அந்தப் பாக்கெட் சைஸ் என்பது தற்செயலாய் அமைந்து போனதொரு கூட்டணி  என்பேன் !

ஒரு கூர்மண்டையனை, ஒரு சகாப்தமாக்கிட நம் முன்னே இருந்த முகாந்திரங்கள் ஏராளம் & அவற்றை நாம் அனைவரும் சரியாகச் செய்து வைக்க - லயனின் முதல் பருவத்தின் அசைக்க இயலா சக்தியாய் உருமாறினான் ஸ்பைடர் ! அட்டைப்படத்தில் ‘ஸ்பைடர்‘ மண்டையும் , அந்த இளிப்பும் இருந்தாலே போதும் - அந்த இதழ் சுத்தமாய் விற்றுத் தீர்ந்து விடும் என்பதில் என்னை விடவும் நமது அந்நாட்களது விற்பனையாளர்கள் ரொம்பவே தெளிவாக நம்பிக்கை கொண்டிருந்தனர் ! So Fleetway-ன் ஆண்டுமலர்களுள் இடம்பிடித்துக் கிடந்த ஸ்பைடரின் சிறுகதைத் தொகுப்புகளையும் விட்டு வைக்காது வாங்கி, சிக்கிய சந்திலெல்லாம் சிந்து பைரவி பாடச் செய்த போது ஸ்பைடரின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது ! 

பின்நாட்களில் ஸ்பைடரின் நீள நீளமான வாராந்திரப் பக்கங்களை ஒன்றிணைத்து முழுநீள இதழ்களாக்க முனைந்த நாட்களின் போது, டெக்ஸ் வில்லர், கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி, ப்ரூனோ பிரேசில் போன்ற ஐரோப்பிய இறக்குமதிகள் - காதிலே புய்ப்பமிலா யதார்த்தங்களோடு நம்மைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். So ஓவரோ ஓவராய் காதுகளில் தோரணங்கள் தொங்கவிட முற்பட்ட அந்த ஸ்பைடர் நெடுங்கதைகள், லேசாய் ஒரு அயர்ச்சியை கொண்டு வந்த காலகட்டத்தில் – நைஸாக நம்மவருக்கு VRS தந்திட முற்பட்டேன் ! 

நமது மறுவருகையின் போது “சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில்” மனுஷனை ஆஜராக்கிய போது, இங்கும், அங்குமாய் சில பல ‘ஹி...ஹி...ஹிக்கள்‘ கண்ணில் பட்டபோதிலும், வெளியான மூன்றே மாதங்களில் சிட்டாய்ப் பறந்து இதழ் காலியாகிப் போனதற்கொரு முக்கிய காரணி நமது ஹெலிகார் ஜாம்பவானே ! இன்னமும் நாம் வெளியிடாதிருக்கும் The Sinister Seven என்ற கதைக்கோசரம் அவ்வப்போது கேட்டு வரும் குரல்கள் - இந்த சகாப்தத்திற்கு என்றைக்கும் அழிவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் சான்றுகளாகவே பார்த்திடுகிறேன் ! And இப்போதைய மறுபதிப்புகளிலும் "மிஸ்டர் சிரசாசன SMS" தூள் கிளப்பி வருவதை ஆச்சர்யத்தோடு நானும், சற்றே பொறாமையோடு  நமது சமகால நாயகர்களும் பார்த்து வருகிறோம் ! சில பயணங்கள் முடிவதில்லை தான் போலும் ! Hail the Colossus of our early days – The one & only Spider! 

வழக்கம் போல நிகழ்காலத்திற்குத் திரும்புவோமா- காத்திருக்கும் டிசம்பர் இதழ்களுள் ஒரு பார்வைச் செலுத்தலோடு ? இதோ - நமது SUPER 6 இதழ் # 1-ன் அட்டைப்பட preview ! Hardcover-ல்; வழக்கம் போல நகாசு வேலைகளுடன், கலக்கலாய், கலர்புல்லாய் தயாராகி வருகிறது - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணம் ! தொடரும் மூன்று டிசைன்களுமே நாம் முயற்சித்துப் பார்த்தவைகள் ! The real thing எது ? என்பதை இம்மாதம் டப்பாவை உடைக்கும் போது பார்த்துக் கொள்ளுங்களேன்; அது வரை யூகங்கள் நடை போடட்டுமே ?!

ஏற்கனவே நாம் ரசித்தான அதே கதைகள் தான் என்ற போதிலும் - இந்தத் தொகுப்பினில் ஏதேனுமொரு வித்தியாசம் காட்ட வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் ஏகமாய் இருந்தது ! “கதைகளின் கதைகள்” என்ற ரீதியில் லக்கிலூக்கின் ஆல்பங்களின் பெரும்பான்மைக்குப் படைப்பாளர்கள் ஒரு முன்னோட்டத்தை உருவாக்கி வெயிடுவதை கவனித்திருந்தேன் ! So அவற்றை கேட்டு வாங்கி - ஒவ்வொரு கதையின் முடிவிலும் இணைத்து - இந்த லக்கி கிளாசிக்கை கூடுதல் சுவாரஸ்யமாக்கிட முனைந்துள்ளேன் ! இதோ- அவற்றிற்கான சின்னதொரு டிரெயிலர் ! 

So இம்முறை நீங்கள் ரசித்திடவுள்ளது வழக்கமான இரு லக்கி லூக் கதைகளை மட்டுமன்றி - அவற்றின் பின்புலமாக அந்நாட்களில் அமைந்திருந்த சிலபல சமாச்சாரங்களையுமே  ! இந்த இதழ்(கள்) முன்பணம் செலுத்தித் தருவித்துக் கொள்ளும் (சொற்பமான) முகவர்கள் நீங்கலாக வேறு எவருக்கும் அனுப்பிட நாம் திட்டமிடவில்லை என்பதால் SUPER 6 முன்பதிவு ஜோதியில் ஐக்கியமாகிட சூப்பரான தருணமென்பேன் !

அதே போல- 2017ன் சந்தா ரயிலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டீர்களா folks ? நம்மிடம் GOLD வாங்க PAN கார்ட் விபரம் தரத் தேவையில்லை ; வருமான வரி இலாக்காவிற்குப் பதில் சொல்லும் பீதியும் இல்லை எனும் போது - இதில் முதலீடு செய்தாலென்ன ? ஞாயிறும் கூட கடை (ஆன்லைன் ஸ்டோர்) திறந்திருக்கும் !! So தங்கம் வாங்க எங்கிட்டே வாங்க !! http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html

Before I sign off - 2  விஷயங்கள்

முதலாவது ஒரு கோரிக்கை : அடுத்த மறுபதிப்பான "இயந்திரத்தலை மனிதர்கள்" மீது  பணிகள் நடந்து வருகின்றன! எங்களிடமுள்ள ஒரிஜினலில் - நடு நடுவே கொஞ்சம்  பக்கங்கள் குறைகின்றன ! So நமது ஆரம்ப நாட்களது "இ.த.ம." பிரதிகள் யாரிடமேனும் இருப்பின் - மின்னஞ்சலில் தகவல் கொடுங்களேன் - ப்ளீஸ் ? ஆங்கில இதழ் இருப்பினும் great !

இரண்டாவது சமாச்சாரம் - இரு வாரங்களுக்கு முன்பான caption போட்டிக்கான முடிவு ! நாசூக்காய்ப் போட்டியினை வென்ற பூனையாருக்கு வாழ்த்துக்கள் !!

Erode VIJAY :
B : கோச்சு வண்டியைக் கொள்ளையடிச்சுட்டுப்போன கயவர் கும்பலை பின்தொடர்ந்துபோய் மடக்காம, இப்படி சாவகாசமா மீன் வறுத்துத் திண்ணுக்கிட்டிருக்கீங்களே தல?

A : அட அவனுங்க கொள்ளையடிச்சதெல்லாம் ஆயிரம் ரூவா நோட்டுகளாம்ப்பா! 

A : மறுகரையில் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் கேட்கிறதே டைகர்?

B : ஏற்கனவே விசாரிச்சுட்டேன் தல! எவனோ.. ரயிலின் மேற்கூரையை ஓட்டைபோட்டு பணத்தை ஆட்டையை போட்டவனாம்! 

மீண்டும் சந்திப்போம்! அது வரை have a lovely weekend all ! Bye for now!

Sunday, November 13, 2016

கிட்டத்தட்டவொரு ஜாம்பவானும்...ஒரு நிஜ ஜாம்பவானும்..!

நண்பர்களே,
            
வணக்கம். ஊர்ஜனமெல்லாம் வங்கி வாசல்களிலும், ATM மிஷின்களின் முன்னேயும் தவம் கிடக்கும் பொழுதினில் நான் வழக்கம் போல 'உசிலம்பட்டி முதல் உகாண்டா வரை' உலகம் சுற்றும் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்வது ஒரு சிலருக்குக் கடுப்போ கடுப்பாகத் தோன்றிடலாம் தான் ! அவர்கள் மட்டும் இந்த வாரப் பதிவுக்கு விடுமுறை நல்கிட்டால் தவறில்லை என்பேன் !

காலத்தை வென்ற (நமது காமிக்ஸ்) ஜாம்பவான்கள்‘ பட்டியலினை போன வாரம் நமது இரும்புக்கரத்தார் துவக்கி வைத்திருந்ததில் நிச்சயமாய் யாருக்கும் அபிப்ராய பேதங்கள் இருந்திருக்காது ! So அந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கப் போகும் ஆசாமி யாரென்று பார்ப்போமா ? (இது கால வரிசையிலானதொரு பட்டியலே தவிர, தரவரிசைப் பட்டியலல்ல என்ற புரிதலோடு படித்தால் – ‘அவருக்கு இவர் சோடையாக்கும்? இவரை விட அவர் பெரிய அப்பாடக்கராக்கும்?‘ என்ற கேள்விகள் எழாது !) So here goes : 

மாயாவிக்கு 4 மாதங்கள் ஜுனியர்களாய் நமது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகமான சாகஸ ஜோடியான C.I.D. லாரன்ஸ் & டேவிட் துவக்கம் முதலாகவே போட்டதென்னவோ டாப் கியர் தான் ! “ப்ளைட் 731” வெளியான காலங்களில் – அனல்தெறிக்கும் ஹிட்டாக இருந்திருக்குமென்பதை யூகிப்பதில் சிரமமில்லை ! கண்டம் விட்டு கண்டம் பறந்து ; கண்டம் to கண்டம் தாண்டித் தாண்டிச் செல்வதை அந்நாட்களில் நாம் திறந்த வாய் மூடாது ரசித்திருப்பது உறுதி ! இந்தக் கதையானது அப்போதொரு மலையாளப் பதிப்பாகவும் வெளிவந்தது என்பது கொசுறுச் சேதி ! அதனை 45 ஆண்டுகள் கழித்தும் சிலாகியோ- சிலாகி என்று சிலாகித்திட திருவனந்தபுரத்தில் சில மூத்த வாசகர்கள் உள்ளனர் ! சொல்லப் போனால் அவர்களது காமிக்ஸ் உலகமானது துவங்குவது flight 731-ல் & முற்றுப் பெறுவது "மஞ்சள்பூ மர்மத்தில்" !! இவையிரண்டையும் உச்சி மோர்ந்து அவர்கள் நெட்டில் ஆங்காங்கே ஆண்டாண்டு காலமாய்ப் பதிவிட்டு வருகின்றனர் !! இவற்றை மட்டுமாவது மலையாளத்தில் மறுபதிப்பு செய்யுங்களேன் என்றும் எண்ணற்றமுறை கோரிக்கை வைத்துள்ளனர் என்றால் இவர்களது "லா.டே." அபிமானம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் !!  So மாயாவியின் சம கால சாகஸ வீரர்கள் ; ஏராளமான ‘ஹிட்‘ நாயகர்கள் என்ற பெருமை இந்த ஜோடிக்கு உண்டெனினும் – ‘ஜாம்பவான்கள்" என்ற அடைமொழிக்கு தகுதியானவர்களா ? என்பதொரு கேள்விக்குறியே - at least என்னைப் பொறுத்தவரையிலுமாவது ! 

நமது ‘டிசைனர் டிரவுஸர்‘ புகழ் ஜானி நீரோவும் இதே படகில் சவாரி செய்யும் ஒரு  சமவயது ஹீரோ ! ‘கொலைகாரக் கலைஞன் ‘ மூலமாய் அறிமுகம் கண்டு – தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் பல memorable கதைகளை வழங்கிய ஜானி நிச்சயமாய் popularity chart-களில் உயரமானதொரு இடத்துக்குச் சொந்தக்காரரே ! ஆனால் அவரை ‘ஜாம்பவான்‘ என்பதெல்லாம் சற்றே ஓவராகத்தானிருக்கும் ! Wouldn't you agree ?

ரசனைசார்ந்த தேர்வுகளில் இது போன்ற ‘எடுத்தோம்-கவிழ்த்தோம் ‘ தீர்ப்புகள் எனது சொந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே இருக்க முடியும் என்றாலும் – தற்போது இரண்டாண்டுகளாய் அரங்கேறிடும் மறுபதிப்புப் படலத்தின் விற்பனை அளவுகோல்களையும் இங்கே நான் நுழைத்துப் பார்க்கவே செய்கிறேன் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ - தலா 10 பிரதிகள் விற்கும் நேரத்திற்குள் மின்சாரப் பகாசுரர் மாயாவி 50 பிரதிகளை விற்றுத் தந்து விடுகிறார் நமக்கு ! So இந்தத் தீர்ப்புகள் என்னது மாத்திரமல்ல – வாசகர்கள் cum வாடிக்கையாளர்களான உங்களதுமே என்று எடுத்துக் கொள்ளலாம் !

முத்து காமிக்ஸில் Fleetway இதழ்கள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுத்திருந்த நிலையில் - துவக்கத்தின் அதே tempo-வைத் தொடர்ந்திட அந்நாட்களில் சீரியஸான (வெளித்) தடங்கல்கள் ஏதுமிருந்திருக்கக் கூடாது தான் ! பொன்னி காமிக்ஸ் ; வாசு காமிக்ஸ் ; ரத்னபாலா  போன்ற இதழ்கள் வந்து கொண்டிருந்த போதிலும், அவை எதுவுமே ஒரு மெகாப் பதிப்பகக் குழுமத்தின் படைப்புகளல்ல என்பதால் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படுத்தியிருக்க இயன்றிருக்காது ! ஆனாலும் அந்த ஆரம்பத்து அதிரடியிலிருந்து சற்றே மித வேகத்திற்கு முத்து காமிக்சின்  கியர் மாறியதற்கு maybe என் தந்தையின் சகோதரர்கள் மத்தியிலான முதல் பிரிவினை ஒரு காரணமாக இருந்திருக்கலாமென்பது எனது யூகம் ! என் தந்தைக்கு மொத்தம் 3 மூத்த சகோதரர்கள் & 1 இளவல் ! முதலிரண்டு சகோதரர்கள் 1974 / 75 வாக்கில் பிரித்துக் கொண்டு விலகி விட்டனர் ! So ஒருக்கால் அதன் விளைவாய், சின்னதொரு தொய்வு நிகழ்ந்ததோ – என்னவோ ?! எது எப்படியிருப்பினும், Fleetway-ன் அந்த ஆரம்ப நாட்களது மாயாவி & Co. பட்டாளத்தைத் தாண்டி, புதிதாயொரு நாயகர் அணியை உருவாக்க யாரும் சிரத்தை எடுத்ததாய் எனக்குத் தோன்றவில்லை ! 13 மாயாவி; 13 லா & டே; 13 ஜா. நீ. கதைகளுக்குப் பின்பாய் எவற்றைக் களமிறக்குவது ? என்று மண்டையை உருட்ட சீனியருக்கு அந்நாட்களில் அவகாசம் இல்லாது போயிருக்கலாம் ! So ஒரு வெற்றிடம் உருவாகி வந்த தருணத்தில் அதனை நிரப்பப் புகுந்ததவை தான் அமெரிக்கத் துருப்புக்கள் ! 

King Features Syndicate என்ற அமெரிக்கக் குழுமத்திற்கு உலகமெங்கும் காமிக்ஸ் கதைகளை விநியோகம் செய்வதே தொழில் ! அவர்களது மும்பை ஏஜெண்ட்கள் வாயிலாக ரிப் கிர்பி ; காரிகன் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; வேதாளன் ; மாண்ட்ரேக் ; டாக்டர் கில்டேர் என்று ஒரு கும்பலாய் ஹீரோக்களை அள்ளிக் கொண்டு முத்து காமிக்ஸிற்குள் அணிவகுக்கச் செய்தார் சீனியர் !  இங்கே இந்தியாவினுள்ளேயே ஏஜெண்ட்கள் இருந்தபடியாலும், இந்த நாயகர்கள் சகலரின் கதைகளும் நேர்கோட்டு clean பாணியிலானவை என்பதாலும் - பெரியதொரு மெனக்கெடல்களின்றி இவர்களது கதைகளை வாங்கிடல் ஓ.கே.வானது. (அந்நாட்களது கடிதப் போக்குவரத்து files சகலமும் இன்னமும் என்வசம் உள்ளன என்பதால், அந்நாளைய நடப்புகளை அருகிலிருந்து பார்த்த புரிதல் சாத்தியமாகிறது !

‘மொதுமொது‘வென புது நாயகர்கள் ஆஜராகிட Fleetway ன் தாக்கம் லேசாய் குறைந்து- KFS-ன் கை ஓங்கியது நமது இதழ்களுள் ! இவை சகலமுமே அந்நாட்களது அமெரிக்க தினசரிகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஸ்ட்ரிப்களின் தொகுப்புகள் என்பதால் Fleetway-ஐப் போலொரு நிரந்தரக் கதைநீளம் ; கதைபாணிகள் கொண்டிருக்கவில்லை ! இவை வெளியாகத் தொடங்கிய வேளைகளில் நான் ஆங்கில ஒரிஜினல்களைப் படிக்குமளவிற்குத் தேறிவிட்டிருந்தேன் என்பதால் - எந்தவொரு கதையும் என் பார்வைக்குத் தப்பாது ! நீளநீளமான வழு வழு ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு வரும் அந்த ஒரிஜினல்களை முத்து காமிக்ஸின் ஆபீஸில் உட்கார்ந்தே படித்துத் தள்ளுவேன் ! அவற்றுள் ரொம்பவே ஸ்பெஷலாய் நான் ரசித்தது ஒரு முகமூடி மனிதரை ! Yes- வேதாள மாயாத்மா தான் அந்நாளைய எனது ஆல்-இன்-ஆல் அழகு நாயகர் !

The Illustrated Weekly of India என்றதொரு (மும்பை) வாரயிதழில் அரைப் பக்கத் தொடராய் வேதாளர் கதைகள் வருவதுண்டு ! அவற்றைக் கத்தரித்து சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கெனில் - இந்திரஜால் காமிக்ஸின் முழுநீளக் கதைகளை செம ஆர்வமாய்ப் படிப்பதும் இன்னொரு பக்கம் ! அந்த அரை நிஜார் வயதில் எனக்கிருந்த மானசீக சூப்பர் ஹீரோக்கள் இருவரே ! முதலாமவர் நமது முதல்வரும் கூட ! Yes- நமது புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் தான் தலையாய சூப்பர் ஸ்டார் எனக்கு ! அதிலும் அந்நாட்களில் நீரும்..நெருப்பும்" என்றதொரு படம் வெளியாகியிருந்தது ! தலைவர் அதனில் டபுள் ஆக்ட்; சிகப்பு உடுப்பு M.G.R. நல்லவர் & கறுப்பு outfit-காரர் கெட்டவர் ! ஆக சிகப்பு நிறம் தான் "நல்லது சார்ந்த நிறம்" என்ற எண்ணம் அந்நாட்களில் மனதில் பதிந்து கிடந்தது ! சூப்பர் ஹீரோ # 2 நமது வேதாளர் ! 1972-ன் அயல்நாட்டுப் பயணத்தின் போது வேதாளர் பாணியிலான ஒரு டிராயரை என் தந்தை வாங்கித் தந்திருக்க, அதை சதாகாலமும் மாட்டித் திரிவேன் ! So வேதாளர் கதைகளை வெளியிடும் வேளை முத்து காமிக்ஸிற்குப் பின்னாட்களில்  பிறந்த போது - அந்தப் புதுப் புதுக் கதைகளைப் பிரமாதமாய் ரசித்தேன் ! எட்டாம் வகுப்பு விடுமுறையின் போது என் தந்தை என்னை மும்பைக்கு கூட்டிச் சென்றிருந்த சமயம், KFS கதைகளைத் தருவித்து தந்த ஏஜெண்ட்களின் அலுவலகத்திற்கும் இட்டுச் சென்றிருந்தார் ! பரபரப்பான மும்பையின் வியாபாரப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரர் காலத்துக் கட்டிடத்தில் இருந்த அந்த ஆபீஸினில் கத்தை கத்தையாய் கதைகள் ஸ்டாக்கில் கிடந்தது இன்னமும் நினைவுள்ளது. அத்தனையையும் வாங்க முடியாது என்பது புரிந்தாலும், ‘ஆ... லட்டு! ஆ... பூந்தி... ஐயோ... மைசூர்பாகு !' என்று எனக்கு ஜொள் பிரவாகமெடுக்காத குறைதான் ! அந்த விடுமுறைகளின் பிந்தைய சமயத்தில் ‘டிங்-டாங்‘ என்ற புதிய சிறுவர் மாதமிருமுறைக்கான பணிகளை விளையாட்டாய்த் தொடங்கிய போது, அதனுள் மும்பையில்  நான் தேர்வு செய்திருந்த வேதாளர் கதையொன்றின்  முதல் 4 பக்கங்களையும் இணைத்திருந்தேன் ! சரியாக நினைவில்லை ; ஆனால் நான் மொழிபெயர்த்த முதல் காமிக்ஸ் பக்கங்கள் அந்த நான்கு பக்கங்களாகத் தானிருக்க வேண்டும் !

முத்து காமிக்ஸில் வேதாளர் ஒரு பிரத்யேக முத்திரை பதித்திருந்தார் என்பதில் ஐயமில்லை ! ‘முகமூடி வேதாளன்‘; ஜும்போ; ‘சிறையில் தொங்கிய சர்வாதிகாரி‘; ‘கீழ்த்திசை சூன்யம்‘ போன்ற  இதழ்கள் மட்டும் எனக்கு நினைவில் தங்கியுள்ளன ! ஆனால்- மொத்தத்தில் ஒன்றரை டஜன் கதைகள் வெளிவந்திருக்கும் என்பது எனது எண்ணம் ! Maybe more... maybe less ! இன்னும் கூடுதலாய் சாகஸங்களில் அவர் இடம்பிடித்திருக்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஒரு “ஜாம்பவான்” பதாகையை நமது காமிக்ஸ் அளவிலாவது அவருக்கு வழங்கி இருக்கலாம் தான் ; ஆனால் விதி வேறு விதமாய் அமைந்து போனது - ‘மாலைமதி காமிக்ஸின்‘ ரூபத்தில்! ‘குமுதம்‘ என்ற மகா சக்தி காமிக்ஸ் துறைக்குள் கால்பதிக்கத் தீர்மானித்த கணமே அவர்களது வாங்கும் திறன்களுக்கு ஈடுகொடுக்க முத்து காமிக்ஸிற்குச் சாத்தியமாகிடவில்லை ! ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் என ஏகமாய் King Features படைப்புகளை அவர்கள் ஒரே நாளில் லவட்டி விட ஆட்டம் கண்டு போனோம் ! ஏற்கனவே தாமதம் ; விற்பனை மந்தம் என்று சிரமங்கள் நிலைகொண்டிருந்த வேளையில் கதைகள் கைமாறியதும் ஒரு பெரிய setback ஆக அமைந்து போனது. அப்புறமாய் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்‘ என்ற முயற்சி ; அதன் அகால காலாவதி என்று நாட்கள் தொடர்ந்த போது வேதாளர் ஒரு மறக்கப்பட்ட நாயகராகிப் போனார் ! So ஒரு ஆற்றலான நாயகரை அவருக்குரிய வாய்ப்புகளோடு ஆராதித்திருந்தால் இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் அவரதாகியிருக்கும் - சந்தேகமின்றி !

பின்நாட்களில் முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைக்கு வந்தான பின்பு - நிறைய fleetway மறுவருகைகள் ; சிறுகச் சிறுக பிரான்கோ-பெல்ஜிய அறிமுகங்கள் ; King features நாயகர்களின் வீடு திரும்பல்கள் என்று அரங்கேறிய போதும் வேதாளரை மட்டும் நம் அட்டவணைக்குள் ஐக்கியமாக்கிட எனக்குச் சாத்தியப்படவேயில்லை ! இம்முறையோ ‘ராணி காமிக்ஸ்‘ ரூபத்தில் ஒரு அசைக்க இயலா சக்தி முட்டுக்கட்டையாக நின்றது ! “மாயாவி” என்ற பெயரில் அவர்கள் சகட்டுமேனிக்கு PHANTOM கதைகளை வெளியிட்டது நமக்குத் தெரியும் ! ஆனால் ‘போட்டிக் கம்பெனியின் பொன் கூட எனக்குப் பித்தளையே!‘ என்று வேதாளரோடு ‘காய்‘ விட்டுவிட்டேன் ! So ஒரு ஜாம்பவானுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்தியவரை அந்தப் பதவியில் அமர்த்த இயலாது போன கதையே இந்த வாரத்தின் கதை ! 

ஆனால் சிறிதும் எதிர்பாராத் திசையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் நாயகராகிடுவதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாதது போல் தோற்றம் தந்தே - அதகளம் செய்த நாயகர் நமக்குக் கிட்டியது தான் விதியின் விளையாட்டென்பேன்!

உடைந்த மூக்கார்... ட்ஸி-நா-பா; ப்ளுபெர்ரி... டைகர்.... என்றெல்லாம் நான் hints தந்திடவும் வேண்டுமா என்ன - அவரை நாம் அடையாளம் தெரிந்து கொள்ள ?!! 1995-ல் “தங்கக் கல்லறை”யில் நமக்குப் பரிச்சயமான இந்த அழுக்குக் கௌ-பாய் - கதைகளின் வலிமையில் ; வீரியத்தில், அசாத்திய உச்சங்களை நமக்குக் காட்டியவர் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது ! நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு Magnum Opus ஆக ‘மின்னும் மரணம்‘ இன்றும், என்றும் தொடர்ந்திடும் தானே ? இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், "தங்கக் கல்லறை" & "மின்னும் மரணம்" மறுபதிப்புகளிலும் பட்டையைக் கிளப்புவது கேப்டன் டைகரின் சாஸ்வதத்திற்கொரு சான்று என்பேன் ! அந்த இளவயதுக் கதைகள் பெரியதொரு இலக்கின்றி இங்கும் அங்குமாய் சுற்றித் திரிந்தது மட்டுமே இவரது தொடருக்கொரு திருஷ்டிப் பரிகாரம் ! ஆனால் அவரது ஒரிஜினல் சிருஷ்டிகர்த்தாக்கள் இருந்த வரையிலும் உருவாகிய LT.BLUEBERRY கதைகளுக்கு நிகராய் வேறொரு கௌ-பாய் தொடரைச் சுட்டிக் காட்டுவது அசாத்தியம் என்பேன் ! இவரது சாகஸங்களை நாம் வெளியிட்ட அந்நாட்களில் தாமதப் போய் அகோரத் தாண்டவமாடியது தான் ; நியூஸ் பிரிண்டில் சுமாரான அச்சில் ஒப்பேற்றியிருந்தோம் தான் ; ஒரு பாகத்திற்கும் அடுத்த பாகத்திற்குமிடையே மாதக்கணக்கில் / ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்டிருந்தோம் தான் ! ஆனால் இதற்கெல்லாம் மீறியும் டைகரின் சாகஸங்கள் பதித்த முத்திரை - அவருக்கு “ஜாம்பவான்” தகுதியை ஈட்டித் தரும் பிரதம  காரணி ! Maybe அந்நாட்களில் இவரது ஆல்பங்கள் சகலத்தையும் வண்ணத்தில், பெரிய சைஸில், ஆர்ட் பேப்பரில், தொடர்ச்சியாய் இப்போது போல வெளியிட்டிருப்பின் மனுஷன் இன்றைக்கு துபாயின் புர்ஜ் கலீபா கட்டிட உயரத்தில் வீற்றிருக்கவும் கூடும் நம் மனங்களில் ! Salute the inimitable Lt.Blueberry a.k.a கேப்டன் டைகர் ! கௌபாய்  காமிக்ஸ் ரசனைகளை (நம்மளவிற்காவது) ஒரு புது உயரத்துக்கு இட்டுச் சென்ற இவரது பங்களிப்பு நம் பசுமையான நினைவுகளின் பிரதானமொரு அங்கமல்லவா ? எத்தனை கமான்சேக்கள் வந்தாலும் ; ட்யூராங்கோக்கள் தலைகாட்டினாலும் – அந்த சவரம் செய்யப்படா சப்பை மூக்கு சாகஸக்காரரை நமது நெஞ்சங்களிலிருந்து கிளப்பி விட முடியாதல்லவா ? 

So ஜாம்பவான் # 2 & ஜாம்பவான் forever – கேப்டன் டைகர் !

O.k.....பழங்கதைகளுக்கு சலாம் போட்டுவிட்டு - நடப்புக்குள் புகுந்திடுவோமா ? இதோ இம்மாதக் கலர் கோட்டாவின் இன்னுமொரு பிரதிநிதி - நமது நீலப் பொடியர்களின் ரூபத்தில் ! எப்போதும் போலவே - இந்த SMURF ஆல்பத்திற்குமே அவர்களது ஒரிஜினல் டிசைனேயே பிரயோகித்துள்ளோம் - இம்மி கூட மாற்றமின்றி ! (மாற்ற விட மாட்டேன்கிறார்கள் என்பது வேறு கதை !!)  வழக்கமாய் சிரிப்பு வெடிகளை மட்டுமே வீசிட முயற்சிக்கும் நமது குட்டிப் பார்ட்டிகள் இம்முறை நெஞ்சைத் தொடுமொரு அழகான கதையோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளனர் ! நான் ரொம்பவே ரசித்த SMURF ஆல்பமிது - உங்களிடமும் அதே மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தின, ஆண்டின் இறுதி மாதத்தை ரம்யமாக நிறைவு செய்த திருப்தி எனதாகிடும் ! பார்க்கலாமே !!
டிசம்பர் "பெட்டியில்" - சூப்பர் 6-ன் முதல் இதழும் உண்டென்பதால் இம்மாதம் :
  • 1  ஜேசன் ப்ரைஸ் 
  • 1  TEX 
  • 1 SMURF 
  • 1 லக்கி லூக் கிளாசிக்ஸ்

என்ற combo  இருந்திடும் ! தீபாவளி இதழை சீக்கிரமே தயார் செய்த காரணத்தால் - டிசம்பரின்ஆல்பம்களும் சூட்டோடு சூடாகவே தயாராகி வருகின்றன  ! SUPER 6 அச்சுப் பணிகள் நிறைவுற்று விட்டன ; ஜேசன் ப்ரைஸ் பாதி முடிந்து விட்டது & அதன் மீதி + SMURF இரண்டுமே புதன்கிழமைக்குள் முடிந்துவிடும். So நமது இரவுக்கு கழுகாரின் black & white இதழ் மாத்திரமே பாக்கியிருக்கும் !! இம்முறையும் புது மாதம் ( டிசம்பர்) பிறக்கும் முன்பே இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கப் போவது உறுதி.

And finally - இதோ : 2  ஞாயிறுகளுக்கு முன்பான caption போட்டியின் முடிவுகள் !! நண்பர் வெட்டுக்கிளியாரின் இந்த 2 முயற்சிகளுமே சிறப்பாக இருந்ததாய் எனக்குத் தோன்றியது ! So வாழ்த்துக்கள் வெ.வீ. சார் !!

அப்புறம் போன வாரத்து "மீன் கழுவும் TEX" கேப்ஷன் போட்டிக்கான முடிவினை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமே ! Bye for now !! See you around !! 


VETTUKILI VEERAIYAN :

C இந்த தரம் தலே பயங்கரமான ஆசாமியை சந்திச்சுட்டார் போல ..!
B மாந்த்ரீகருக்கு இரவுக் கழுகின் வணக்கங்கள் !!
A வோ !
B குடிமக்கள் அனைவரும் நலம்தானே ?
A வோ !
B சென்ற முறை சந்தித்ததை விட உடல் நலம் கூடியிருப்பது கண்டு மகிழ்ச்சி !
A வோ !
B அபாச்சேக்கள் தொந்தரவு ஏதுமில்லைதானே ?
A வோ !
B சொல்ல மறந்து விட்டேன் ! உங்களுக்காக சுத்தமான பாட்டில் ஒன்று கொண்டு வந்திருக்கின்றேன் ! கொடுக்கவா ?
A ஓ ..!

VETTUKILI VEERAIYAN:

B சாமி என் பையனுக்கு கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு நீங்க நல்ல பரிகாரம் சொல்வீங்கன்னு கார்சன் சொன்னான் வந்தேன் ..!!
A பரிகாரம்தானே..? வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள் ! நல்ல வெள்ளாட்டுக்கிடா வாங்கி குல தெய்வத்துக்கு பலி குடுத்துட்டு முக்கியமா கறியை வறுத்து நண்பர்களுக்கு விருந்து வைங்க !! மறந்துடாதீங்க... நண்பர்களுக்கு விருந்து ..!!
C. ஹி ஹி ..!! நேத்து அவசர அவசரமா கார்சன் இங்கே வந்துட்டு போனது இதுக்குத்தானா ..?

Sunday, November 06, 2016

நாங்களும் ஜாம்பவான்கள் தான்...!

நண்பர்களே,

வணக்கம். மாயாவி கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் "அந்தத் தருணத்தை" அட்டகாசமாய் விவரித்திருப்பார்கள் ; தமிழில் அதற்குரிய முக்கியத்துவமோ, மொழிபெயர்ப்பில் அதற்கென தனி கவனமோ தரப்பட்டது போல் எனக்கு அதிகம் நினைவில்லை ! அரூபமாயிருக்கும் மாயாவிக்கு உடலினுள் மின்சாரம் ஸ்டாக் தீரும் வேளையில், அவருக்கு சுயரூபம் திரும்பும் தருணத்தில் - உடலெங்கும் பரவும் ஒருவித அதிர்வுகள் பற்றி ஆங்கிலப் பதிப்புகளில் கதாசிரியர் செய்திடும் விரிவான விவரிப்பே நான் குறிப்பிடும் "அந்த moment" ! இப்போதெல்லாம் சனிக்கிழமை மாலையாகி விட்டாலே எனக்குள்ளும் கிட்டத்தட்ட அதே போன்ற அதிர்வுகள் அலையடிக்கத் துவங்கிடுகின்றன ! சனியிரவிலோ , ஞாயிறு காலையிலோ  வெளிச்சம் காண வேண்டிய புதுப் பதிவினில் என்ன எழுதுவது ? என்பது பற்றிய மெலிதான 'ரோசனைகள்' தலைக்குள் குறுக்கும் நெடுக்கும் வலம் வரத் தொடங்கிடும் ! இவ்வாரச் சனியும்  அதற்கொரு விதிவிலக்கல்ல ! ஆனால் எப்போதும் போலவே கணினி முன்னே அமரும் போது ஏதேனும் ஞானம் பிறக்கும் என்ற நம்பிக்கை இது வரையிலுமாவது என்னைக் கரை சேர்த்துள்ளது ! இம்முறையும் அது மெய்ப்படும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன் ! 

நவம்பர் மாதத்து 4 இதழ் கூட்டணியினில் டாப் எது ? என்ற கேள்விக்கு  ஒற்றை பதிலே ஒட்டு மொத்தப் பதிலாய் இருந்திடும்  என்பது நமது மங்குணி smurf-க்கு கூடத் தெரிந்திருக்கும் ! "சர்வமும் நானே"  என்று மார்தட்டுவது பெரிதல்ல - ஆனால் அந்த hype-க்கு முற்றிலும் தகுதியானவரே என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டுவது சுலபக் காரியமே அல்ல தான் !! அந்த ஆற்றல் ; அந்த வீரியம் ; அந்த வசீகரம்  இதுவரையிலான  நமது 44+ ஆண்டு காலப் பயணத்தில் எத்தனை நாயகர்களுக்குச் சாத்தியமாகியுள்ளது என்பதை "வாரமொருவர்" என்ற ரீதியில் ஜாலியாய் தொட்டுச்செல்ல  முற்படுவதே இவ்வாரத்துப் பொழுதுபோக்கு ! 

And அந்தப் பட்டியலில் முதலாமவர் யாரென்பது குறித்து சந்தேகம் கூடத் தேவையா - என்ன ? Oh yes -  நமது "மின்சார பார்ட்டி " தான் அந்த முதல்வர் ! ஆனால்  - "மாயாவி கராத்தே வெட்டு வெட்டினார்" " மாயாவி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார்" என்ற மாமூலான  புராணங்களை இங்கே நான் பாடப் போவதில்லை ! அவரது 'ஹிட்' கதைகள் பற்றிய பட்டியல்களை போடப் போவதில்லை ! புள்ளி விபரங்களோடு "ரமணா" ஸ்டைலில் அடுக்கப் போவதில்லை !  மாறாக அவரோடு என் பரிச்சயம் ; சில behind the scenes நிகழ்வுகள் பற்றி ஜாலியாய் ! 
ஒரு அரூப அசகாயர் !! காலத்தை வென்று நிற்கும் நமது மாயாவி பெருந்தகையை இப்படியும் கூப்பிடலாம் ! 1971-ல் சீனியர் எடிட்டர் இலண்டனுக்கு மட்டுமன்றி, ஒரு வண்டி ஐரோப்பிய & ஆப்பிரிக்க நாடுகளுக்கு புளியோதரை, தயிர்சாதம்  கட்டாத குறையாக சுமார் ஒன்றேகால் மாதம் டூர் அடித்து வந்தது எனக்கு சன்னமான நினைவுகளாய் உள்ளன !  அங்கிருந்து ஏதேதோ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வந்தது  ; அந்நாட்களில் அசாத்திய நவீனமான டேப் ரிகார்டர் வாங்கி வந்தது என்பதெல்லாம் எப்படியோ நினைவில் தங்கி விட்டன ! நிலாவில் மனிதன் கால் பதித்திருந்த சமீபம் அது என்பதால், பேட்டரி போட்டால் அட்டகாசமாய் ஓடும்   நிலா சென்ற ராக்கெட் பொம்மையும்  அவற்றுள் அடக்கம் ! அந்த ஜாலியான கொள்முதல் பட்டியலில் இந்த காமிக்ஸ் பயணத்தின் துவக்கப் புள்ளியான "இரும்புக்கை மாயாவி" யுமே சேர்த்தி என்பது அந்தத் தருணத்தில் எனக்குத் தெரியாது போயினும், வெகு சீக்கிரமே அந்த வசீகரத்தினுள் சிக்கிக் கொண்டேன் ! நானாக வாசிக்கத் தொடங்கிய முத்து காமிக்ஸ் எதுவென்ற ஞாபகமெல்லாம் இல்லை ; ஆனால் ஆரம்ப இதழ்களின் வரிசையானது "மூளைத் திருடர்கள்' வரை அந்நாட்களிலேயே எனக்கு அத்துப்படி ! 

"53,புது ரோட்டுத் தெரு" என்ற முகவரியில் இருந்த பூர்விகமானதொரு பிரம்மாண்ட வீட்டில் தான் அந்நாட்களது முத்து காமிக்ஸ் செயல்பட்டு வரும் ! பள்ளி சென்று வீடு திரும்பும் பாதை அதுதான் என்பதால் வாரத்தில் பாதி நாட்களில் எங்கள் ரிக்ஷா அங்கே டேரா போட்டுவிடுவது வழக்கம். உள்ளே நுழைந்தால் அந்தப் பரபரப்பு நம்மையே தொற்றிக் கொண்டு விடும் !  ஒரு பக்கம் கையால் அச்சுக்கோர்க்கும் பிரிவில் குனிந்த தலை நிமிராது பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்  ; மூன்றோ, நான்கோ ஓவியர்கள் இன்னொரு பக்கமாய் அமர்ந்து வரைந்து கொண்டிருப்பார்கள் ! நடு அறையில் முத்து காமிக்ஸின் மேனேஜராய்ப் பணியாற்றி வந்த பாலசுப்ரமணியம் அமர்ந்திருப்பார் ; அவருக்கு மறுபக்கம் டெஸ்பாட்ச் பிரிவினர் ! மாடியில் ஒரு புத்தகச் சுரங்கமே குவிந்து கிடக்கும் - காமிக்ஸ் மாத்திரமன்றி பொதுவான இதழ்களுமாய்ச் சேர்ந்து !! இஷ்டப்பட்டதை வீட்டுக்குத் தூக்கிப் போவேன் ; எனது சேகரிப்பில் இணைத்திடுவேன் - யாரும் எதுவும் சொல்லிட மாட்டார்கள். அந்நாட்களில் ஊருக்குள் ஆங்கில மீடியம் பள்ளிகளே கிடையாதாம் ; என்னைச் சேர்த்தது தான் one & only ஆங்கிலப் பள்ளி என்பதால் அடியேனுக்கு ஆபீசில் கொஞ்சம் மவுசு அதிகம் ! "இங்கிலீபீஸிலேயே பேசுவான்பா !!" என்று சிலாகிப்பார்கள் ! என் தந்தையோ, அவரது சகோதரர்களோ அந்த ஆபீஸ் பக்கம் தலைவைத்துப்படுப்பது அரிது என்பதால் நான் ஜாலியாய் அங்கே அமர்ந்து பொழுதைக் கழிப்பேன் ! அப்போது நீளமான பாக்கெட்களில் இலண்டனிலிருந்து ஏர் மெயிலில் வந்து சேரும் கதைக் கவர்கள் தான் எனது பிரதான இலக்காக இருந்திடும் ! கவரினுள் ஒவ்வொரு புதுக் கதையிலும் குறைந்த பட்சம் 6 செட் ஒரிஜினல்கள் இருக்கும் ! ரொம்ப நாள் வரைக்கும் ஒரே கதையை அரை டஜன் செட்கள் அனுப்புவதன் பின்னணிக் காரணம் எனக்குப் புரிந்ததில்லை ! ஆனால் FLEETWAY உடனான கடிதப் போக்குவரத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வயதை எட்டிய பொழுதுதான் அந்த "தேவ இரகசியம்" அம்பலமானது ! தமிழ் மொழிக்கு மாத்திரமன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி & (மலேசிய ) மலாய் மொழிகளுக்குமென மொத்தம் 6 மொழிகளுக்கு காண்டிராக்ட் போட்டிருந்ததால் - மொத்தம் 6 செட் பிரோமைட் பிரிண்ட் வந்து கொண்டிருந்தன ! காமிக்ஸ் பதிப்பு என்பதே என்னவென்று தெரியாததொரு யுகத்தில், இத்தனை தொலைநோக்குப் பார்வை அசாத்தியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருந்திட முடியாது ! ஆனால்  இதனை "சக்திகளுக்கு மீறிய ஆசை " என்று பார்ப்பதா ? அல்லது நடைமுறை காணாது போனதொரு கனவின் பரிமாணமாய்க் காண்பதா ? என்பது இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை ! அதே போல, புரியாத புதிர் இன்னொன்றும் கூட உண்டு ! துளி கூடத் தயாரிப்பிலோ, மொழியாக்கத்திலோ, திட்டமிடல்களிலோ, கதைக் கொள்முதல்களிலோ தொடர்பிலா ஒரு மனுஷனை ஒளிவட்டத்தின் முழுமையையும் பெற்றுக் கொள்ள அந்நாட்களில் அனுமதித்தது ஏனென்பதும் அந்தப் புதிர்ப் பட்டியலில் சேர்த்தி  ! 

Back on track, மாயாவி தான் நமது டாப் நாயகர் என்பதை அந்நாட்களில்  விற்பனை நம்பர்கள் வாயிலாக மாத்திரமே தெரிந்து கொண்டிருக்க சாத்தியமாகியிருக்கும் ! வாசகர் கடிதங்களுக்கு இடமே  கிடையாது ; புத்தக விழாக்களிலோ, வேறு சந்தர்ப்பங்களிலோ வாசகர்களை சந்தித்ததில்லை என்பதால் - மாயாவியின் வெற்றி ஒரு மௌனமான வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும் ! ஆனால் அன்றைக்கு ஓசையின்றி ஒரு தலைமுறையின் இதயங்களில் இடம்பிடித்த மாயாவி - கிட்டத்தட்ட 40+ ஆண்டுகள் கழித்தும் ஜீவித்து வருவது அசாத்திய சாதனை !

மாயாவியின் வெற்றிக்கு காரணம் என்னவென்று அலசிப் பார்ப்போமே என்று சோம்பலானதொரு நாளில் முயற்சித்திருக்கிறேன் ! எனக்கு முதலில் மனதில் பட்ட காரணத்தை நான் உரக்கச் சொன்னால்  நீங்கள் 'கெக்கே பிக்கே' வென்று சிரிக்கப் போவது நிச்சயம் !  ஆனால் சிரித்து, உருண்டு, புரண்டு முடித்தான் பின்னே கொஞ்சம் யோசியுங்களேன் ? மாயாவி வெளியான 1970-களில் இருந்திருக்கக் கூடிய ஒரே மேஜர் பொழுது போக்கு சினிமாவாகத் தானிருக்க முடியும் ! அந்நாட்களது திரையுலகை ஜாம்பவான்களாய் ஆட்சி செய்து வந்தவர்கள் அனைவருமே அழகான முகங்கள் கொண்டவர்களே !! அன்றைக்கெல்லாம் ஒரு non conventional looker வெற்றி காண்பது குதிரைக் கொம்பு ! மாயாவி அந்த "நாயக இலக்கணத்திற்கு" அட்சர சுத்தமாய்ப் பொருந்துபவர் அல்லவா ? படிய வாரிய தலை ; லேசாய் சிவாஜி சாரையும், (ஹிந்தி) திலீப் குமார் சாரையும் நினைவூட்டும் முகம் ; சதா நேரமும் கோட் சூட் என்ற டிப்டாப் தோற்றம் - பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளச் செய்ததற்கு இதுவொரு காரணமோ ? என்று நினைப்பேன் ! Of course - மின்சாரம் பாய்ந்தால் அரூபமாகிடும் அந்த fantasy அனைவரையும் வசீகரித்துள்ளது என்பதில் இரகசியமில்லை ; ஆனால் அது ஒன்று மட்டுமே அரை நூற்றாண்டினை நெருங்கும் இந்த  வெற்றிக்குக் காரணமாகிட முடியாதே ?!

எனக்குத் தோன்றிய அடுத்த காரணம் - கதைகளுள் (குறிப்பாய் அந்த முதல் 13) இருந்த அட்டகாச variety !! முதல் இதழில் கலைப் பொக்கிஷங்களை லவட்ட இரும்புப் படையை அனுப்பும் வில்லன் ; இரண்டாம் சாகசத்தில் விஞ்ஞானிகளை ஐஸ் கட்டியாக்கிடும் கொடியவன் ; மூன்றில் பூமியை நாசம் செய்யும் கதிர்வீச்சுக்களை ஏவும் மூர்க்கன் ; நான்கில் பாம்புகளோடு குடித்தனம் செய்யும் கண்ணாடிக்காரன், இத்யாதி..இத்யாதி என அந்தப் 13 கதைகளுமே தனித்துவமான கதைக்கருக்கள் கொண்டவை ! இன்றைக்கு சில பல "ஹி..ஹி..க்கள்" உருவாகிட இவை காரணம் தந்தாலும் - ஒரிஜினலாக இவை வெளியான காலகட்டத்தில் பிரமிப்பே மேலோங்கியிருக்கும் என்பதில் ஐயமேது ? So கதைகளின் வீரியும் + வசீகரம் ஒரு பிரதான காரணம் ! அப்புறமாய் நான் சொல்வது அந்த artwork ! ஸ்பைடர் கதைகளில் ஆளாளுக்கு படம் போட்டிருக்கிறார்கள் ; நமது 'ஜாக்கி ஜட்டி' ஜானி நீரோவுக்கும் தினுசு தினுசான ஓவியங்கள் உண்டு ! (கொலைகாரக் கலைஞன் ; மூளைத் திருடர்கள் போன்ற சுமார் ரகங்களும் ; கடத்தல் முதலைகள் ; ஜானி in ஜப்பான் போன்ற சூப்பர் ரகங்களும் !) ஆனால் மாயாவிக்கு ஓவியர் மாசிமோ பேலார்டினெல்லி ; ஜீசஸ் பிளாஸ்கோ போன்றோரின் சீரான, வித்தியாசங்கள் இல்லா,  அழகான பாணிகளே என்பதால் கண்ணுக்கொரு விருந்து உத்திரவாதம் ஒவ்வொரு முறையும் ! 

இன்னொரு striking காரணமென்று நான் நினைப்பது ஒவ்வொரு கதையிலும் உள்ள ஏதேனுமொரு மறக்க இயலா sequence ! முதல் இதழான "இரும்புக்கை மாயாவி" இதழின் highlight - கட்டிப்போடப்பட்டிருக்கும் மாயாவியை நோக்கி அடி மேல் அடி வைக்கும் அந்த வாள் சுமக்கும் பொம்மை தானல்லவா ? கடைசி நொடியில் மாயாவிகாரு அந்த பொம்மையை இயக்கும் கடிகாரத்தைச் சுட்டுப் பொசுக்கும் தருணத்தை இன்றும் என்னைப் போலவே ஓராயிரம் வாசகர்கள் நினைவு கூர்வது உறுதி ! இயந்திரத்தலை மனிதர்களின் கிளைமாக்ஸ் மறக்கக் கூடியதா - என்ன ? அயல் கிரகத்திலிருந்து கிளம்பியிருக்கும் படையை வீழ்த்திட மாயாவி மாமா கார் பேட்டரியிலிருந்து மின்சாரம் திருடி ஏவுகணைகளை இயக்கும் கேபிளை விசையாகப் பிடிக்கும் நொடியில் இங்கே ஒரு நூறு வீட்டுத் திரைச்சீலைகளையாவது நாம் பற்றி லயித்திருந்திருப்போம் என்பது நிச்சயம் ! இப்படியே ஒவ்வொரு கதையிலும் ஒரு ஸ்பெஷலான knot இருப்பது அந்தக் காலகட்டத்தில் வாசக அபிமானங்களை ஈட்டியதில் வியப்பேது ? "பாம்புத் தீவில்" தண்ணீருக்குள் மின்சார ஈல் மீனை வில்லன் அனுப்பும் தருணமோ ; 'கொள்ளைக்கார பிசாசில்" ஒட்டு மொத்தமாய்ப் பிசாசுகள் நடை போட்டு வருவதையோ ; "நடுநிசிக் கள்வனில்" மங்கிய பார்வையோடு சீற்றம் கொண்ட காளையை எதிர்கொள்ளும் காட்சிகளோ காலாவதியாகிடா நினைவுகள் தானே ?!! 

மருந்துக்கும் விரசம் கிடையாது ( அது சரி - இரும்பு claw காரர் கதையில் எங்கேனும் பெண்கள் தலை காட்டியுள்ளார்களா ? நடுநிசிக் கள்வனில் பார்த்துள்ளது நினைவுள்ளது ! ) Clean story lines ; எப்போதுமே "நீதியே வெல்லும்" என்ற கதையோட்டம் ; ஒரே சீரான பக்க அமைப்புகள் ; கதை நீளம் - இவையும் கூட இந்த மின்சார முழுங்கரின் வெற்றிக்குக் காரணங்கள் அல்லவா ? இன்றைக்குப் புராதன நெடி இங்கு தட்டுப்பட்டாலும் கூட - ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - "ஆஆ...மாயாவியா ???" என்று ஆனந்தக் கூத்தாடும் மூத்த வாசகர்களைப் பார்க்கும் போது "புராதனமானது...புண்ணாக்காவது !" என்று தான் நினைக்கத் தோன்றும் !   20 மாதங்களுக்குள் மூன்று முறை மறுபதிப்பு  (நயாகராவில் மாயாவி) செய்திடச் செய்திருக்கும் ஆற்றல் இங்கு வேறு யாருக்குண்டு ? So "சர்வமும் நானே ; சாதனை நாயகனும் நானே !!" என்று முழங்கிட முழுத் தகுதி கொண்டவர் நம் பயணத்தின் முதல் புள்ளிக்குச் சொந்தக்காரர் ! 

அடுத்த வாரம் - ஜாம்பவான் # 2 பற்றி பார்ப்போமே ?! 

பழமையினுள் பவனி செய்தது போதுமென்பதால் - இதோ காத்திருக்கும் டிசம்பரின் இதழ் # 1-ன் அட்டைப்பட முதல் பார்வை !   
சென்ற மாதத்து ஜேசனின் பாகம் 1-ஐப் போலவே இம்முறையும் ஒரிஜினல் அட்டையே - துளி கூட மாற்றங்களின்றி ! இங்கே ஸ்க்ரீனில் தெரிவதைவிடவும் நேரில் கூடுதல் அழுத்தமாய் ; கம்பீரமாய் இந்த ராப்பர் தோன்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்தவரையிலும் - இப்போதைக்கு இவ்வளவு மட்டுமே நான் சொல்லிடுவேன் : இந்தாண்டின் வாசிப்பு அனுபவங்களில் மட்டுமல்லாது - சமீபத்தைய அனுபவங்களுள்ளும் இந்த மினி தொடரானாது ஒரு உச்ச இடத்தைப் பிடித்தால் நான் வியப்படைய மாட்டேன் ! பணியாற்றும் நேரம் வரையிலும் பாகம் 2-ஐப் படிப்பதில்லை என்று வைராக்கியமாக இருந்தேன் ; இப்போது அதே தீர்மானம் பாகம் 3-ன் பொருட்டும் தொடர்கிறது ! So கிளைமாக்ஸ் பாகத்தில் கதாசிரியர் அசாத்தியமான விளக்கங்களை நமக்காக வைத்திருக்க வேண்டும் ; அல்லது அபத்தமான வியாக்கியானங்களோடு மங்களம் பாடியிருக்க வேண்டும் ! எது எப்படியோ - பாகம் 2-ன் வேகம் - அதிர  செய்யும் அதகள அசுர வேகம் ! And முடிச்சுகளுக்கு     மேல் முடிச்சுகளாய் போட்டுக் கொண்டே செல்கிறார்கள் கதாசிரியரும், ஜேசன் ப்ரைஸும் ! முதல் பாகத்தை விடவும் இங்கே வசனங்கள் சற்றே ஜாஸ்தி, என்பதால் கதையின் டெம்போ துளியும் சேதம் கண்டிடாது பயணிக்க, இயன்ற குட்டிக் கரணங்கள் சகலத்தையும் போட்டுள்ளேன் ! சமீபமாய் பேனா பிடித்த அனுபவங்களுள் ஜேசன் ஒரு படுவித்தியாசமான அனுபவத்தை எனக்கு  நல்கியுள்ள புண்ணியவான் ! இந்த வாரத்தில் அச்சு செல்லவிருக்கும் "மறைக்கப்பட்ட நிஜங்கள்" உட்பக்க பிரிவியூ இதோ ! அந்தக் கடைசி 3 frame களைப் பாருங்களேன் !!!  Phew !!!
கடந்த வரத்து caption போட்டிக்கு ஏகப்பட்ட entries வந்துள்ளதால் - நிதானமாய்ப் பகல் பொழுதில் பரிசீலனை செய்து விட்டு (!!!) முடிவை அறிவிக்கிறேன் ! அதற்கு மத்தியில் - சந்தா D பரிசாக யாருக்கேனும் வழங்கிடும் வாய்ப்பு இதோ : 
இன்னுமொரு ஜாலி update !! "தினமலர் தீபாவளிமலர்" இதழில் நமக்கு கிட்டியிருந்த விளம்பரம் காரணமா ? அல்லது எப்போதும் போலவே நமது இரவுக்கு கழுகாரின் ஸ்பெஷல் இதழ் வெளியாகும் நேரத்துப் பரபரப்பா ? அல்லது இரண்டும் சேர்ந்த கலவையே காரணமா ? என்றெல்லாம் தெரியவில்லை - ஆனால் கடந்த 2 வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் அனல் பறக்கிறது !! வாங்குவோரில் நிறைய பேர் புதுவரவுகள் என்பது புரிகிறது - அவர்களது ஆர்டர்களின் கனத்தைப் பார்க்கும் பொழுது !! So நிச்சயமாய் "தினமலர் " effect இங்கே கணிசம் என்றே தோன்றுகிறது !! அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !!

Before I sign off : வழக்கம் போல் சந்தா நினைவூட்டல் folks ! எட்டும் தூரத்தில் 2017 நிற்கும் தருணத்தில் - உங்கள் சந்தாத் தொகைகளை அனுப்பிட முஸ்தீபுகள் செய்திடத் தொடங்கலாமே ? இதுவரையிலும் எந்த ஆண்டும் இல்லா விறுவிறுப்பு இம்முறை சந்தாக்களில் தென்படுகிறது ! அது மட்டுமன்றி - 3% SILVER & 2% PLATINUM என்பதைத் தாண்டி பாக்கி 95% முழுக்க முழுக்க GOLD சந்தாக்களே ! 

"So தங்கம் வாங்க தாமதமின்றி வாங்க !! " Bye now !! See you around !!

Online-ல்  சந்தா செலுத்திட எண்ணும் பட்சத்தில் http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html