Powered By Blogger

Friday, December 29, 2017

936 !!

நண்பர்களே,

ஜிலீரென்ற வட இந்தியாவிலிருந்து வணக்கம். ஆளாளுக்கு கோட்டும், ஸ்வெட்டரும், மப்ளரும் மாட்டிக் கொண்டு நவீன பூச்சாண்டிகள் போல் உலாற்றித் திரியும் ஒரு பனிக்காலத்து அதிகாலையை ஹோட்டல் அறையின் கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசிப்பது சுகம்மாகத் தானிருக்கிறது ! "அட.. 25 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு வாங்கின கோட்டு-சூட்டை  அந்து உருண்டைகளிலிருந்து காப்பாற்றி கையோடு  கொண்டு வந்திருக்கலாமோ ? இது தோணாமப் போச்சே....!!" என்று மண்டையில் ரோசனை ஓடும் நேரமே ஊரிலிருந்து போன் - நமது ஆல்-இன்-ஆல் மைதீனிடமிருந்து !! "கிராபிக் நாவல் முழுசும் நைட்டே பேக்கிங் செஞ்சாச்சு ! ; மற்ற புக்குகள் காலையில் ரெடியாகிடும் !" என்று ! Oh yes....டிசம்பரின் கடைசிப் பணிநாளுக்கே, ஜனவரியின் இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! இன்று 2018 -ன் சந்தாதாரர்கள் அனைவருக்குமே புத்தாண்டின் இதழ்கள் புறப்பட்டு விட்டன !

"டிசம்பரில் ஜனவரி" என்றோ ; "17-ல் '18" என்றோ ; "மார்கழியில் தை" என்றோ இந்தப் பதிவுக்குத் தலைப்பு வைக்கலாம் தான் ! ஆனால் மெய்யாகவே பொருத்தமானதலைப்பெனில் - "ஒரு குட்டி அணியின் விஸ்வரூபம்" என்பதாகவே இருக்கும் ! நிறைய மெகா projects களில் நம்மவர்கள் பணியாற்றியுள்ளனர் தான் ; மின்னும் மரணங்களும் ; LMS-களும் ; க்யூபா படலங்களும் ; இரத்தக் கோட்டைகளும்  just  like that தாண்டிச் சென்ற அனுபவங்களாகியுள்ளன தான் ! ஆனால் இம்முறையோ ஒட்டு மொத்தமாயொரு புத்தம் புது அனுபவம் எங்கள் சகலருக்குமே !  On track இருக்கும் போது நித்தமும் தலைக்குள் ஒரு ரேடார் ஓடிக் கொண்டேயிருக்கும் : "பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா ?" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே !! 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம்  -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் !) ; "கருணையானந்தம் அவர்களுக்கு என்ன வேலை அனுப்பி இருக்கிறோம் ?" ; "மாலையப்பன் என்ன பெயிண்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார் ?" ; உள்ளே DTP-ல்  என்ன வேலைகள் ஓடிக் கொண்டுள்ளன ? "அட்டைப்படம் டிசைன்கள் என்ன பாக்கி உள்ளன ?" என்ற ரீதியில் ! யாரும் சும்மா இருந்து விடக் கூடாதே என்பதில் ரொம்பவே கவனமாய் இருந்திடுவேன் ! ஆனால் - திருமணப் பணிகள் வேகமெடுத்த நாள் முதலாய் - "ஏதாச்சும் பண்ணிக்கோங்கப்பா  ; நானே இங்கே தெரு தெருவாச் சுத்திட்டு இருக்கேன் !" என்றபடிக்கு இந்த ரேடார் குப்புறக் கவிழ்ந்து விட்டது ! மீண்டும் தண்டவாளம் ஏற வேண்டிய நேரத்தில் நிச்சயமாய் ஒரு தள்ளாட்டம் காத்துள்ளது என்பது மண்டைக்கு எட்டியிருந்தாலும், "அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்" என்ற அசட்டுத் தைரியம் இல்லாதில்லை ! ஒரு மாதிரியாய் back to routine என்ற பொழுதும் புலர்ந்த போது தான் - "தொடர்ச்சி" ; "கோர்வை" இத்யாதிகளின் மகிமை என்னவெனப் புரிந்தது !

அட்டைப்படங்கள் ஒட்டு மொத்தமாய் தயாராகிட வேண்டியிருந்தன என்றான போது அதற்குள் தான் முதல் தொபுக்கடீர் ! பிரின்டிங் சென்றிட குறைந்த பட்சம் 4 + 4 ராப்பர் டிசைன்கள் தேவை என்பதால் நடப்பு மாதத்து இதழ்கள் மட்டுமன்றி, அடுத்த மாதத்து டிசைன்களையுமே ஏக் தம்மில் தயார் செய்ய வேண்டியிருந்தது ! 'பச்சையாக்கு ; சிவப்பாக்கு ; கறுப்பாக்கு !" என்று நல்ல நாளுக்கே அட்டைப்படங்களில்  ஓராயிரம் குரங்குக் கூத்தடிப்பவன் நான் ; இப்போதோ புத்தாண்டின் முதலிரு மாதத்து இதழ்களின் ராப்பர்களெனும் பொழுது - கூடுதலாய் பயம் தொற்றிக் கொண்டது ! டெக்சின் ராப்பர்கள் ஒரிஜினல்களே என்பதால் அவற்றுள் ஜாஸ்தி மெனக்கெடல் அவசியமாகிடவில்லை ! அதே போல மறுபதிப்புக்குமே மாலயப்பனின் ஸ்பைடர் பெயிண்டிங் + பிப்ரவரியின் மறுபதிப்பான "மர்மக் கத்தி"-க்கு ஒரிஜினல் டிசைன் என்றானதால் அங்கேயும் smooth sailing ! பாக்கி ராப்பர்கள் அனைத்துக்கும் போட்ட லடாய் ஏகப்பட்ட work hours காலை விழுங்கி விட்டது !

கதைகளுக்குள் புகுந்தால் தோர்கல் வேறொரு கியரில் பயணிக்கும் 4 பாக ஆல்பம் இம்முறை  எனும் பொழுது அதன் தயாரிப்பு + எடிட்டிங்கில் தாவு தீர்ந்து விட்டது ! Sheer intensity -க்கு சமீப இதழ்களுள் இதுவொரு செம அடையாளம் என்பேன் ! So அதனைக் கரை சேர்த்த கையோடு TEX சாகசத்தினுள் புகுந்தால் - "ஆரம்பத்திலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!" பஞ்சாயத்து !! தருவிக்கப்படா அந்தத் துவக்க 41 பக்கங்களை வாங்கி, இத்தாலியில் கிருஸ்துமஸ் விடுமுறையில் இருந்த நமது மொழிபெயர்ப்பாளரை ஜுனியர் எடிட்டர் வாயிலாக அணுகி - "அம்மணி.....நீங்கள் மனசு வைக்காட்டி நாங்க அம்பேல்..புலீஸ் ஹெல்ப்பு !!" என்று கதற - ஒற்றை இரவில் 41 பக்க மொழிபெயர்ப்பைத் தாக்கி எடுத்தார் அவர் ! அவற்றை அடித்துப் புடித்து தமிழாக்கி - டைப்செட்டிங் செய்ய நினைத்தால் நம்மவர்கள் மொத்தமாய் கிராபிக் நாவலின் பணிகளுக்குள் புதைந்து கிடப்பது உதைத்தது ! 312 பக்கங்கள் எனும் பொழுது, தலையில் துண்டைக் காயப் போட்டுத் திரியும் ஷேக்குகளின் தேசங்களில், தோண்டத்  தோண்ட கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் எண்ணையைப் போல கி.நா.வின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன ! நமது ஆத்திர - அவசர வெளிப் பணியாட்களும் ஆண்டின் இறுதி என்பதால் ஏதேதோ காலெண்டர் வேலைகளில் பிசியாக இருக்க - கையைப் பிசைந்து கொண்டிருப்பதைத் தாண்டி எதுவும் செய்திட இயலவில்லை எனக்கு ! அதற்காக கி-நா.வை அவசரம் அவசரமாய் ஒப்பேற்றவும் மனசு ஒப்பவில்லை ; தவணை தவணையை மாற்றி எழுதிய ஸ்க்ரிப்டை ஒட்டு மொத்தமாய் வாசிக்கும் போது நிச்சயம் நிறைய பட்டி-டிங்கரிங் அவசியமாகிடும் என்ற எனது யூகம் பொய்க்கவில்லை ; 2 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போது ஒரு வண்டி திருத்தங்கள் தேவைப்படுவது புரிந்தது ! விடாதே-பிடி- என சென்ற ஞாயிறும் முழு நாள் வேலை செய்து ஒரு மாதிரியாய் செவ்வாய்க்கிழமை  கி.நா-வை அச்சுக்குத் தயாராக்கினோம் ! அச்சுக் கூடத்திலோ  ஆண்டின் இறுதியெனும் rush ; ஆனால் நானோ, "எல்லாத்தையும் ஓரங்கட்டிப்புட்டு இதை முதலில் அடிச்சுக்க கொடுங்கப்பா !" என்று நான் கூப்பாடு போட - மாமூலாய் பணிகள் தரும் வெளிப் பார்ட்டிகள் கடுப்ஸ் ஆப் இந்தியா ! நானோ 'அலெர்ட் ஆறுமுகம்' போல முறைப்பாய் முகத்தை  வைத்துக் கொண்டே உள்ளே போவதும், வெளியே வருவதுமாயிருக்க, யாரும் ஏதும் வாயைத் திறக்கவேயில்லை ! 'தப்பிச்சேன்டா சாமி !" என்றபடிக்கு டெக்சின் DTP பணிகள் அரங்கேறுவதை பராக்குப் பார்த்துக் கொண்டே - சுடச் சுட எடிட்டிங் வேலைகளையும் செய்ய முனைந்தேன் ! கிருஸ்துமஸ் தினத்துக்கு கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாது DTP இவாஞ்செலின் பணியாற்ற - ஒரு மாதிரியாய் புதனிரவு டெக்ஸ் அச்சுக்கு ரெடி !! மறுபடியும் அதே முறைப்போடு அச்சுக்கூடத்துக்குள் நான் ஆஜராக - 'இவனோடு ஒரே ரோதனையாய் போச்சே !!' என்ற மாதிரியான பார்வைகள் துளைப்பதை உணர முடிந்தது ! ஆனால் எனக்கு வேலை ஆகணும் ஷாமியோவ்....என்ற முனைப்பில் எதையும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை நான் ! இதற்கு மத்தியில் ப்ளூகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பு ; தயாரிப்பு ; அச்சு - என சகலமும் ஜிலோவென்று துளி டென்ஷனுமின்றி அரங்கேறியிருந்தது தான் highlight !!

So வியாழன் காலையில் பைண்டிங்கில் படை பரிவாரங்களோடு போய் காவடியெடுத்தால் - குளிர் நேரத்தின் பொருட்டு கருப்பு மசி உணராது கழுத்தை அறுப்பது புரிந்தது !! பேப்பர்களை மடிக்க folding machine -ல் ஏற்றினால் - சாணியாய் மை ரோலர்களில் ஏறிக் கொண்டு படுத்தி எடுத்தது ! என்ன கொடுமை இரவுக் கழுகு சார் - என்றபடிக்கே நமது பைண்டரை "இம்முறை மட்டும் ஆட்களைக் கொண்டே கையால் மடித்து விடுங்களேன்" என்று உசிரை வாங்க - அவர் அதற்கும் சளைக்காது சம்மதித்தார் ! (இன்று) வெள்ளி காலையில் சீக்கிரமே பணிகளைத் துவக்கி, நண்பகலுக்குள் சந்தாப் பிரதிகளுக்கான தேவைக்கு புத்தகங்களை வழங்கி அசத்தி விட்டார் ! இந்தக் கூத்துக்கு மத்தியில் நானோ புதன் இரவே - "சலோ சப்பாத்தி தப்ப !!" என்று வடநாடு புறப்பட்டிருக்க, மைதீன் மட்டும்இங்கே ஒற்றை ஆளாய் சூறாவளியாய் சுற்றி வந்து கொண்டே இருந்தான் ! நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு "மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர்  !" என்று குடைந்து கொண்டேயிருக்க, இன்று பகலில் ஒட்டு மொத்த ஆபீசுக்குமே என் போனைப் பார்க்கும் போதெல்லாம் பேதி எடுத்திருப்பது உறுதி ! அத்தனை பேருமாக  பேக்கிங்கில் பர பரத்து பணியாற்றியதால் பலனாக 4 மணிக்கெல்லாம் மொத்தமாய் டெஸ்பாட்ச் done & dusted !! புதன் மாலை வரைக்கும் டெக்ஸ் வில்லர் அச்சுக் கோர்ப்பில் துவண்டு நிற்க, எனக்குள் கலக்கமே - நிச்சயமாய் வெள்ளி அட்டவணை சொதப்பப் போகிறதென்று ! அதே போல பைண்டிங்கில் ஒரே நேரத்தில் அத்தனையையும் ஒப்படைத்துவிட்டு அவர் தலை மீது குடியிருப்பதும் நமக்குத் புதிதல்ல தான் என்றாலும், இது ஆண்டின் இறுதி rush தருணம் என்ற வகையில் என்ன எதிர்பார்ப்பது என்றும் தெரியவில்லை ! ஆனால் all 's well that ends well !

192 + 264 + 48 + 112 + 320 = 936 என்பதே  இம்மாதத்து இதழ்களின் ஒட்டு மொத்த பக்க எண்ணிக்கை ! இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் !! இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்ட திருப்தியும், அதனில் கிட்டக் கூடிய பாராட்டுக்களையும் - 'நாந்தேன்...நாந்தேன்' என்றபடிக்கு வாங்கி கொள்ள நான் நிற்கலாம் ; ஆனால் முகாமிலா அந்தப் பின்னணி டீம்  ஓசையின்றி அடுத்த மாதப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் !

"உயரங்கள் தாண்டப்படுவதற்கே" என்பதில் எனக்கு ஐயமில்லை ; ஆனால் சில தருணங்களில் நான் அபத்தமாய் நிர்ணயம் செய்திடும் அசாத்திய உயரங்களையும் கூட நம்மவர்கள் சலனங்களின்றித் தாண்டிடப் பழகி விட்டுள்ளதே பிரமிப்பைக் கொணர்கிறது !! பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் !  இந்த "பொம்மை புக்குகளை" அவர்கள் படிப்பதில்லை ; ஆனால் இவற்றின் பின்னே நமக்கெல்லாம் உள்ள தீராக் காதலின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்துள்ளனர் ! நான் ராவில் முழித்திருந்து செய்யும் பணிகளை கரைசேர்க்க இவர்கள் பகலில் முனைப்புக் காட்டிடாவிட்டால் - 'பிம்பிலிகா பிலாக்கி' கூட முடிந்திடாது !!  ஆண்டின் இறுதியினை நிறைவு செய்திட இதை விடவும் அழகானதொரு மார்க்கம் இருந்திடாது !!

Take a bow my team !! 
சந்தா செலுத்தியிருக்கா நண்பர்களே - time now to rush ப்ளீஸ் !!!

And காத்திருக்கும் ஞாயிறை இனி எண்ணங்களாலும், அலசல்களாலும் அலங்கரிக்கும் பொறுப்பு உங்களது folks ! ஒன்றுக்கு ஐந்தாக இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - time for us to take the backseat ! Bye all !

Saturday, December 23, 2017

நிசப்தத்தைப் பற்றி உரக்க...!

நண்பர்களே,

வணக்கம். வண்டி வண்டியாய் கதைகளுக்குள் புகுந்து என்னென்னவோ கூத்துக்கள் அடித்துள்ளோம்! சில சிரிக்கச் செய்திருக்கின்றன ; சில சிந்திக்கச் செய்துள்ளன ; சில சிலாகிக்கச் செய்துள்ளன ; சிலவோ கொட்டாவி விடச் செய்துள்ளன ! “"தங்கக் கல்லறை"” போன்ற த்ரில்லர்கள் லக்னரோடு நம்மைக் கட்டிப் பிணைத்து ‘ஆளரவமற்ற அந்தப் பாலைபூமியில் உலாற்றச் செய்துள்ளன ; "ஆதலினால் அதகளம் செய்வீர்"” போன்ற ஆக்ஷன் அதிரடிகள், பர்மாவின் காட்டு வழியே நம்மையும் நடைபயிலச் செய்திருக்கின்றன ! “பிரளையத்தின் பிள்ளைகளும்”; “சிப்பாயின் சுவடுகளும்” மனத்தைக் கனக்கச் செய்துள்ளன ; “கார்சனின் கடந்த காலம்” வன்மேற்கிலும் மென்மையை சிலாகிக்கச் செய்துள்ளது! ஆனால் – பணியாற்றிய பின்பாய் மனம் முழுவதும் சன்னமாய் ஒரு வெறுமையை வியாபிக்கச் செய்த கதைகள் வெகு சொற்பம் ! கதை நெடுகிலும் விரவிக் கிடக்கும் அடர்பனியும், மொட்டை மரங்களும் போல உள்ளமெல்லாம் ஒரு சூன்யம் சூழச் செய்த கதைகள் சொற்பத்திலும் சொற்பம் ! கடந்த வாரமானது எனக்கு அந்த மாறுபட்ட அனுபவத்தைக் கண்ணில் காட்டியது "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவலின் வாயிலாக !

சந்தா E -யின் இறுதி இதழ் ; லயன் கிராபிக் நாவலின் debut ஆண்டின் அந்திம இதழ் என்பது மட்டுமன்றி இதுவரையிலான கி.நா.களுக்கெல்லாம் climax என்ற வகையில் இந்த இதழுக்கு நான் ரொம்பவே முக்கியத்துவம் தந்திருந்தேன் ! And in more ways than one – இது நமக்குமே ஒரு முரட்டு முயற்சி என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்திருக்கவில்லை ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே – ஒரு விருது பெற்ற பிரெஞ்சு நாவலானது மெர்செலாக்கும் கிராபிக் நாவலாக உருமாற்றம் கண்டுள்ளது என்ற சேதி நமக்குக் கிட்டியிருந்தது. அதன் மாதிரிகளைப் பார்த்த கணத்திலேயே கடியெறும்புப் புற்றின் மீது அமர்ந்தவனைப் போல இருப்புக் கொள்ளாது தவித்தேன் - "தேவுடா இதனை எப்படியாச்சும் நாம் வெளியிட முயற்சிக்கணுமே?!" என்று! சந்தா E என்பதெல்லாம் அந்நேரம் கனவாகக் கூட இருந்திருக்கவில்லை எனும் போது, – மொட்டையும், கட்டையுமாக இந்த ஆல்பத்தை எங்கே நுழைப்பது என்பது புரிபடவில்லை எனக்கு ! தவிர, 312 பக்க நீளத்துடன் இதுவொரு மெகா இதழ் எனும் போது – அதனில் பணியாற்ற வாகான திட்டமிடல் இல்லாங்காட்டி சிக்கலாகிப் போய் விடுமே ! என்ற பயமே எனக்குள் !  So அடக்கி வாசிப்போமே ! என்ற ரீதியில் அமைதி காக்க வேண்டிப் போனது ! இடைப்பட்ட தருணத்தில் பாரிஸில் இருந்ததொரு வேளையில் – என் கையில் ஒரு நுழைவுச் சீட்டைத் திணித்தார்கள் நமது பதிப்பக நிர்வாகத்தினர் ! என்னவென்று பார்த்தால் – “"நிஜங்களின் நிசப்தம்"” கிராபிக் நாவலின் சித்திரங்களை ஒரு கண்காட்சியாக அமைத்து, ஓவியரும் அங்கே தலைகாட்டவிருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிந்தது ! பாஷை புரியுதோ இல்லியோ – பராக்குப் பார்க்கவாவது செய்யலாமே என்ற சபலம் அலைமோதியது. ஆனால் நான் வேறெங்கோ பயணம் செய்யும் திட்டமிடல் முன்கூட்டியே உறுதியாகி இருந்ததால் – அந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிட இயலாது போனது ! 2017-ல் சந்தா E எனும் கிராபிக் நாவல் தனித்தடம் உறுதியான முதல் நொடி எனக்குள் பறந்த முதல் பொரி –இந்த ஆல்பம் சார்ந்ததே! And here we are - – சன்னமான (எனது) கனவு நனவாகும் தருணத்தில் !

கிராபிக் நாவல்களையும் சரி, கார்ட்டூன்களையும் சரி மடியிலேயே குரங்குக்குட்டிகளைப் போல பத்திரமாய் கட்டித் திரிந்தவனுக்கு இந்த ஆல்பத்தின் மொழியாக்கத்தையும் நானே செய்தி்ட வேண்டும் என்ற ஆசை எக்கச்சக்கம் ! ஆனால் கனகச்சிதமாய் இந்தப் பணியைக் கையில் எடுத்த நேரம் – திருமணம் சார்ந்த வேலைகள் சூடுபிடிக்கும் தருணம் என்பதால் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் தள்ளி விட வேண்டிய நிர்ப்பந்தம் ! ‘ஏகமாய் எதிர்ப்பார்ப்போடு இருந்த இதழைக் கடைசியில் எழுத முடியாது போச்சே!‘ என்ற நெருடல் எனக்குள்ளிருந்தது. ஆனால் கல்யாண வேலை மும்முரத்தில் அதை மறந்தே போயிருந்தேன் ! இந்தப் புதுயுக பாணிக்கதைகளையும் சரி ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றித் தொடும் ரகக் கதைகளையும் சரி எழுதிட நமது கருணையானந்தம் அவர்கள் அத்தனை பிரியப்படுவதில்லை ! “"இந்த கிராபிக் நாவல் சமாச்சாரம் அத்தனை ரசிக்க மாட்டேன்கிறது! திருப்பி அனுப்பி விடட்டுமா?”" என்று மைதீனிடம் கேட்டிருக்க, நான் சென்னையில் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டு நின்ற போது தகவல் வந்தது எனக்கு ! ‘முடிந்தமட்டிற்கு எழுதச் சொல்லுப்பா... அப்புறமாய் பார்த்துக் கொள்ளலாம்‘ என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன் ! அதன்படியே பணிகளும் நடந்தேறிட என் மேஜையில் ஒரு கத்தைப் பக்கங்கள் மிரட்டலாய் அமர்ந்திருந்தன !

சாவகாசமாய் போன ஞாயிறு இதனுள் புகுந்த போது வயிற்றை செமையாகவே கலக்கியது… டெக்ஸ் போன்ற 'பரபர' பாணிக் கதையாக இருந்தாலே,300+ பக்கங்கள் எனும் பொழுது திருத்தங்களைப் போட்டு, சரி செய்ய ஏகப்பட்ட அவகாசம் பிடிக்குமெனும் போது – இதுவொரு dark கிராபிக் நாவல் களம் ! And இதனில் பணிகள் நிச்சயமாய் ஒரு மெகா லோடு இருக்குமென்பது உறுதியாய்ப்பட்டது மனசுக்கு ! ‘சிவனே‘ என்று இந்த கிராபிக் நாவலை மட்டும் ஜனவரி 10-ன் புத்தக விழா ரிலீஸ் என்று சொல்லித் தள்ளி வைப்போமா? என்ற சபலம் அலையடித்தது. ஆனால் ஏற்கனவே தாமதமானதை மேற்கொண்டும் ஜவ்வாய் இழுக்க மனசு கேட்கவில்லை! சரி… மெதுமெதுவாய் ஆரம்பிப்போம்; ஒவ்வொரு 30 பக்கத்துக்கும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வது ; ஓரிரு நாட்களுக்குள் முடிப்பது என்று பந்தாவாய்த் தீர்மானித்தேன்!Alas - எண்ணங்களெல்லாமே ஈடேறி விட்டால் தான் நாமெல்லாம் குடியிருப்பது வெள்ளை மாளிகையாக இருக்குமே ?! 

எப்போதுமே இது போன்ற offbeat கதைகளுக்குள் நுழைந்திட நிரம்பபே ஸ்டார்ட்டிங் டிரபிள் இருப்பதுண்டு! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! தயங்கித், தடுமாறி, திக்கித் திணறி, முதல் 10 பக்கங்களைக் கடப்பதற்குள் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் பிடரியில் அறைந்தது போல இரு விஷயங்கள் புலப்படத் தொடங்கின!

விஷயம் # 1 : இதுவொரு எழுத்தாளனின் / மொழிபெயர்ப்பாளனின் சொர்க்க பூமி என்பது !

விஷயம் # 2 : இது பத்தோடு பதினொன்று ரகமல்ல - this seems to be far bigger than my dreams என்பது !

இங்கே ஒரு மெகா சல்யூட் வைத்திட வேண்டியது ஒரிஜினலின் கதாசிரியர் + ஸ்கிரிப்ட் writer-க்கு மாத்திரமின்றி, அதனை அசாத்திய தரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருந்த நமது translator-க்குமே! ஒட்டுமொத்த 312 பக்கங்களுக்குமான அவரது ஆங்கில ஸ்கிரிப்ட்டை அப்படியே பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தாலே 2 கிலோ பேரீச்சம்பழம் தேறியிருக்கும் ! அத்தனை கனம் ; அத்தனை நீளம் ! And ஒற்றை அடித்தம், திருத்தம் கூட இல்லாது மணிமணியான கையெழுத்தில், அதகள ஆங்கிலத்தில் ஒட்டுமொத்தமாய் 2 பாகங்களையும் அவர் எழுதித் தந்திருந்த அழகுக்கு பாண்டிய நாட்டில் பாதியை அவர் பெயருக்குப் பட்டா போட்டுத் தந்திருப்பேன் - அது மட்டும் என் சொத்தாக இருந்திடும் பட்சத்தில் ! But பாண்டிய நாடெல்லாம் சாத்தியமில்லை ; வேண்டுமானால் பாண்டியன் ஹோட்டலில் நாளைக்குப் பணம் தருவதாய்ச் சொல்லி விட்டு நாலு பரோட்டா மட்டும் வாங்கித் தரலாம் என்பதே நமது நிதி நிலைமை என்பதால் மனசுக்குள் ஒரு மெகா வணக்கம் போட்டு வைத்தேன் - – நமது மொழிபெயர்ப்பாளர் வசிக்கும் கொங்கு தேசத்தை நோக்கி ! அசாத்தியத் திறன் ; அபரிமித எழுத்தார்வம் !!! And Truly stunning !

தமிழாக்கத்தினுள் புகுந்த சற்றைக்கெல்லாம் என் வாயெல்லாம் மொச்சைக் கொட்டைப் பல்லாகத் தொடங்கியது - simply becos இதற்கென பயன்படுத்தப்பட்டிருந்த நடையில் ஏகமாய் மாற்றங்கள் அவசியமாகிடும் என்பது எனக்கு அப்பட்டமாய்  தெரியத் தொடங்கியது ! நிறையவே மாற்றங்கள் செய்யத் தேவைப்படும் என்பதை உணர்ந்த நொடியே எனக்குள் ஒரு பல்பு எரியத் தொடங்கியது - "ஆஹா…. கை நழுவிய வாய்ப்பு மறுக்கா நம்மளையே தேடி வந்தாச்சு !!"” என்று. எப்போதுமே முதல் படிவ correction & எடிட்டிங் தான் நமது பணிகளுள்ளேயே மொக்கையோ மொக்கையானது ! மொழிபெயர்ப்பில் கோர்வை ; பிழைகள் தேடல் ; எழுத்து பாணியினில் மாற்றங்கள் ; டமால்-டுமீல்கள்; சித்திர அமைப்புகளைச் சரிபார்த்தல் என்று ஒரே நேரத்தில் அரை டஜன் விஷயங்களைச் செய்திட வேண்டி வரும்! கொஞ்ச நேரத்தில் எனக்கே அந்தக் காகிதங்களிலுள்ள சிகப்புமசிக் களரி கிறுகிறுக்கச் செய்து விடவும் செய்யும் ! இம்முறையும் அதே பாடு தான் and 10 பக்கங்களைக் கடந்த போதே தீர்மானித்தேன் - – திருத்தங்களை யோசிப்பதை விடவும்,கிட்டத்தட்ட மொத்தமாய் மாற்றி எழுதி விடுவது சுலபமானதென்று !

கதையைப் பற்றிப் பேச வேண்டிய வேளை இனி ! எங்கே - எந்த மண்ணில் இது நடைபெறுகிறது ? என்றெல்லாம் கதாசிரியர் சொல்லிடப் பிரியப்படவில்லை ! வில்லன்களது அடையாளத்தை அறிவிப்பதிலும் அவர் நாட்டம் காட்டிடவில்லை ! In fact அவர்களுக்கு முகங்களே கிடையாது ! கதை நகரும் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்புகள் லேது ! இவை சகலத்தையும் வாசகர்களாகிய நாமே யூகித்தும், கிரகித்தும் கொள்ள வேண்டுமென்பது சுவாரஸ்யத்தைக் கிளறி விடும் முதல் யுக்தி ! And கதை நெடுக உலவிடும் ஆசாமிகள் அத்தனை பேருமே கிட்டத்தட்ட சம வயதுக்காரர்கள் ; ஒரே மாதிரியான தாடிகளும், மீசைகளும் சுமந்து திரியும் கரடுமுரடன்கள்; குளிருக்குத் தலை முதல் கால் வரை போர்த்தி அலையும் பார்ட்டிகள். So துல்லியமாய் கவனிக்காது போனால் - – "இது மாப்பிள்ளை மொக்கைச்சாமியா ? மாமா மாயாண்டியா ?" என்ற சந்தேகம் எழுந்து விடும் ! கதையின் ஒவ்வொரு பிரேமிலும் சிற்சிறு கொக்கிகளை கதாசிரியர் தெறிக்க வைத்திருப்பதை அகன்ற வாயோடும், விழிகளோடும் ரசித்தேன்! And கதையைப் பற்றி – என்ன சொல்வது? என்று சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு! வரம் வாங்கி வரா ஒரு ஜனத்தின் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஒரு வாய்ப்பு இந்தப் பக்கங்களுள் விரவிக் கிடக்கிறது என்று மட்டும் சொல்வேன் !

And சித்திரங்களைப் பற்றிப் பேச நான் ரொம்பவெல்லாம் மெனக்கெடப் போவதில்லை! Simply becos – இந்த ஆல்பத்தைப் புரட்டி விட்டு கீழே வைக்கும் வேளையில் எவரது விழிகளிலும் ஒரு அசாத்திய மின்னல் எழாது போகாது என்பதை ரின்டின் கேன் கூட யூகித்திருக்கும்! இது வரை வான்ஸின் தூரிகையை சிலாகித்துள்ளோம்; ஹெர்மெனைக் கண்டு மெர்செலாகி இருக்கிறோம்; அய்மண்ட்; பிரான்சே போ; மோரிஸ் என்று ஜாம்பவான்கள் பலரின் ஓவியங்களை வாய்திறந்து ரசித்திருக்கிறோம்! ஆனால் இது முற்றிலும் வேறொரு லெவல்! இதழைப் புரட்டிய / படித்த பின்பாய் எனது பில்டப்கள் முகாந்திரமிலாது இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் guys! அசாத்திய உழைப்பு ஓவியரது !! 

இறுதியாய் அந்த எழுத்துநடை பற்றியும், ஒரிஜினல் ஸ்கிரிப்ட் பற்றியும் ! இந்தக் கதைக்கு சித்திரங்கள் ஒரு ஜீவநாடியெனில் – ஸ்கிரிப்ட் அதற்குச் சிறிதும் சளைத்ததல்ல ! நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்துத் தெறிக்க விடும் பாணியில் ஒரிஜினலின் வரிகள் கதை நெடுக சாத்தி எடுக்கின்றன ! கதைக்கும், வரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் பல இடங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டே யோசிக்கும் அவசியம் முதல்வாசிப்பினில் எழக் கூடும் தான் ; ஆனால் இறுதியில் சகலத்துக்குமொரு அர்த்தம் பொதிந்திருப்பதைப் புரிந்திடுவோம் ! அவகாசம் இருந்திருப்பின், இதனையொரு proffessional எழுத்தாளர் யாரிடமாவது ஒப்படைத்திருக்கலாமோ ? என்ற எண்ணமும் எனக்குள் தலைதூக்கத் தான் செய்தது ! கடந்த வாரத்தின் ஒவ்வொரு ராவிலும் இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து முழுவதுமாய் மாற்றி எழுத பிரயாசைகள் எடுத்த தருணங்களில், வாட்ச்மேனின் குறட்டைச் சத்தம் தான் துணைக்கு இருந்தது ! வழக்கமாய் நமது DTP பெண்கள் வேலைகளை முடித்து விட்டுக் காத்திருக்க, நான் கிழட்டு ATM மிஷினைப் போல தட்டுத் தடுமாறி, மெதுமெதுவாக எடிட்டிங் முடித்த பக்கங்களை அவர்களிடம் கொடுப்பதுண்டு ! "அச்சுக்கு காத்திருக்கிறார்கள் !" என்று மைதீன் இன்னொரு பக்கம் குச்சியை வைத்துக் குத்திக் கொண்டேயிருந்தால்தான் நான் வேலைகளைக் கையிலெடுப்பது வழக்கம். ஆனால் முதன்முறையாக என் வேகத்துக்கு அவர்களால் ஈடு தர இயலா நிலை ! Wholesale மாற்றங்கள் என்றாலுமே அதனைச் செய்வதில் அயர்ச்சி தலைதூக்கவில்லை ! அதற்காக சாகித்ய விருது தரத்தில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கப் போகிறதென்றெல்லாம் நான் அள்ளிவிட மாட்டேன் ! நமக்கு சாத்தியமானதை முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான திருப்தி ! அவ்வளவே !

வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடனான கதைகளை மட்டுமே எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு சத்தியமாய் இங்கே லயிக்க அதிகமாய் சமாச்சாரங்கள் இருக்கப் போவதில்லை !  "ஊமைப்படம் பார்த்த மாதிரி இருக்கு !"”; “"ஙே…?”; “பேசியே கொல்றியே?" ”; “"என்ன தான் சொல்ல வர்றார் கதாசிரியர் ?"” என்று பலமாதிரியான பேஸ்தடித்த குரலிலான கேள்விகள் இந்த இதழுக்குப் பின்விளைவுகளாக இருக்கக் கூடும் என்பதும் எனக்குப் புரியாதில்லை ! அந்த வகையில் நிச்சயமாய் இதுவொரு மெகா ‘ரி்ஸ்க்‘ என்பதும் புரிகிறது – moreso ஆண்டின் துவக்கத்தில் எனும் போது ! ஆனால் அதே வேளையில், நமது 33+ ஆண்டுப் பயணத்தின் ஒரு "நிஜமான மாறுபட்ட முயற்சி"என்ற சிலாகிப்புமே இதற்கு சாத்தியம் என்ற நம்பிக்கையும் இக்ளியூண்டு இருக்கிறது ! So விளைவுகள் எவ்விதமிருப்பினும், இந்த ஒற்றை முறை மட்டும் "பலனை எதிர்பாராதே!"” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்!

So "நிஜங்களின் நிசப்தம்" நிசப்தமாய் ‘க்ளிக்‘ ஆனால் சந்தோஷம் ; உரக்க ‘டக்‘ அவுட் ஆனாலுமே சத்தியமாய் வருத்தமில்லை! இந்த முறை மட்டும் நமது பார்முலா இது தான் ! இனி உங்களுக்காச்சு ; நி.நி-காச்சு !! ஓவர் பில்டப்பெல்லாம் உடம்புக்கு ஆகாது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ; so இந்தப் பதிவே அவசியம் தானா ? என்ற கேள்வியும் எனக்குள் ஒலிக்காது இருக்கவில்லை தான் ! பணி முடித்த வியாழன் இரவினில் எனது எண்ணங்களை எழுத்தாக்கினேன் ! வாராந்திர பதிவுக்குத் தயாராகிடும் சனிக்கிழமையின் இரவுமே  இந்தக் கதை சார்ந்த உணர்வுகள் தலைக்குள்  உயிரோட்டத்துடன் தொடர்ந்திடும் பட்சத்தில் - இதனை பதிவாக்கிடலாமென்று நினைத்தேன் ! And here we are ! 

அப்புறம் இதோ - நமது ஜனவரியின் சீருடை சிரிப்பு நாயகர்களின் அட்டைப்பட first look ! வழக்கம் போல ஒரிஜினல் டிசைன் - பின்னணி வர்ண மாற்றங்களோடு ! கதையைப் பொறுத்தவரை அதே ஸ்கூபி -ரூபி slapstick காமெடி ; இம்முறையே கொட்டும் மழைக்கு மதியிலானதொரு சேற்றுக் காட்டில் ! யுத்தம் என்பது களத்திலிருப்போர்க்கு எத்தனை கடினமானதென்பதை அந்த நகைச்சுவைக்கு மத்தியிலும் உணர்ந்திடச் செய்வதே கதாசிரியரின் நோக்கம் என்பதில் no doubts ! கிராபிக் நாவலின் பணிகளுக்குப் பின்பாய் ஒரே ஓட்டமாய் ஓடிய பணியிது ! 

And இதோ - நமது வலைமன்னனின் மறுபதிப்புக்கான அட்டைப்படம் ! இந்த இதழ் இதுவரையிலும் மறுபதிப்புக் காணாவொரு கதை என்பது போல் எனக்கொரு நினைப்பு ; correct me if I am wrong guys ! 1987  தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் பிரெஷாக ஒரு லோடு புயப்பங்களோடு வெளிவந்த இந்தக் கதையை அப்போதே படித்தவர்கள் எத்தனை பேர் இருப்போம் ? என்றறிய ஆவல் !
And சந்தாக்களின் வேகம் சூடு பிடித்துள்ளது கடந்த வாரத்தினில் !! இன்னமும் பர பர வேகம் தொடர்ந்திட்டால் - நம் பயணம் வழக்கம் போல் தொடர்ந்திட உதவியாக இருக்கும் ! 

இன்னமும் சந்தாக்களை புதுப்பித்திருக்கா நண்பர்களே - இன்றே செயலில் இறங்கிடலாமே ப்ளீஸ் ?
&
இன்னமும் சந்தா அனுபவங்களை உணர்ந்திரா நண்பர்களே : இந்தாண்டு முயற்சித்துத் தான் பாருங்களேன் ?!  
Before I sign off - இதோ சில updates !

1. நமது வெட்டியான் தம்பியின் இரண்டாவது ஆல்பம் ஐரோப்பாவில் வெளியாகி வெளுத்துக் கட்டுகிற சேதி கிட்டியுள்ளது ! இம்முறையும் இருபாக சாகஸம் & முடிவு சுபமாய்த் தெரிகிறது ! கதைகளின் ஃபைல்கள் வந்து மொழிபெயர்ப்பு ஓடிக் கொண்டுள்ளது ! முதல் புரட்டலுக்கு அதே அதகள பிரம்மாண்டம் கதை நெடுகத் தென்படுகிறது! கதையும் அதே வீரியத்துடன் இருப்பின் awesome ! F & F சந்தாவே : முதல் குடித்தனக்காரர் தயார்!!

2. இன்னொரு offbeat கௌ-பாயுமே தயாராகி வருகிறார்! இவரோ the man we love to hate ! ஒற்றைக்கை பௌன்சரின் இன்னொரு ஆல்பம் சீக்கிரமே ரிலீஸ் ஆகவுள்ளது! பெருமூச்சோடு காத்திருக்கிறோம்‘
3.இரத்தப் படல முன்பதிவுகளுமே இன்னும் இக்கிளியூண்டு வேகம் கூடின - we would be there !!

மீண்டும் சந்திப்போம் guys! இன்னமும் ஒரு வண்டிப் பணிகள் காத்துக் கிடப்பதால் - இந்த ஞாயிறும் எங்களுக்கு முழுநேரப் பணி நாளே ! 

WISHING ALL A WONDERFUL CHRISTMAS !!!! HAVE A BALL ALL !! BYE FOR NOW !! 

பி.கு : Caption போட்டியின் முடிவுகள் பற்றி :   

கேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு ? என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் ! 

இப்படிச் செய்யலாமா ? ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு ? What say ?

பி.பி.கு : நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது ! நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா ? ஒலிம்பிக்ஸ் போகும் அணிகளுள் அளவில் முரட்டுத்தனமானதல்லவா நம்மது ?

So - கீழ்கண்ட கேப்ஷனே பரிசு பெறுகிறது - எனது பார்வையில் :

rajasimman soma20 December 2017 at 11:24:00 GMT+5:30
"எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்?"

"நீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே!"

வாழ்த்துக்கள் நண்பரே ! உங்களின் முகவரியினை மின்னஞ்சல் செய்திடுங்கள் நமக்கு !


And ரகளை செய்திருந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats !! Great tries !!

Saturday, December 16, 2017

புத்தாண்டை நோக்கி....!

நண்பர்களே,

வணக்கம். செக்கு மாட்டைப் போல அனுதினமும் செய்து வந்த வேலைகள் தான்; ஆனால் ஒரு குட்டியான பிரேக்குக்குப் பிற்பாடு அதையே மறுபடியும் செய்யத் தொடங்கும் போது வண்டி என்னமாய் தடுமாறுகிறது என்பதைக் கடந்த வாரம் எனக்குக் காட்டி வருகிறது! திருமண ஜரூரில் முதல் 20 பக்கங்களுக்கு அப்பால் எழுத சாத்தியப்படவில்லை – “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவலுக்கு ! So என்னால் லேட்டாகக் கூடாதே என்ற நினைப்பில் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைந்திருந்தேன் ! அவரும் எழுதியனுப்ப, டைப்செட்டிங் பணிகள் செய்து என் முன்னே மொத்தமாய் 300+ பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன ! அதன் எடிட்டிங்கிற்குள் நுழைந்தால் மெலிதான நெருடல் ஆங்காங்கு வசன பாணிகளில் ! கதை நடக்கும் காலகட்டத்துக்கும், அதனில் உலவிடும் மாந்தர்களுக்கும் இன்னும் லேசான கரடுமுரட்டுத்தனம் வசனங்களில் தென்பட்டால் தேவலாமென்று பட்டது ! So அதைச் செய்திட ‘லடாய்‘ ஓடிக் கொண்டுள்ளது ஒரு பக்கம் ! 

இன்னொருபுறமோ – மாமூலாய் நான் எழுதும் ப்ளுகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பபு காத்திருக்க – காதில் செவிட்டு மிஷின் ஜாடைக்கு இயர் ஃபோன்களைச் செருகிக் கொண்டு, நட்ட நடு ராத்திரிகளில் கட்டபொம்மன் பாணியில் வசனங்களைப் பேசித் திரிகிறேன் ! 

மூன்றாவது தரப்பிலோ போட்டுத் தாக்குகிறார் தோர்கல் ! And இம்முறை ஒரே ஆல்பத்தில் 4 பாகங்கள் அடங்கியதொரு மெகா சாகஸம் என்பதால் சீனியர் எடிட்டர் வசம் அந்தக் கத்தையை ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை ! நமது கருணையானந்தம் அவர்களின் classical நடை – இந்த classical பாணிக் கதைக்கு அட்சர சுத்தமாய்ப் பொருந்தும் என்பதால் திருமண வேலைகளின் பளு என்னை அழுத்தத் துவங்கும் சமயமே இதையும் அவரிடம் ஒப்படைத்திருந்தேன் ! இம்முறை எடிட்டிங்கில் பெரிதாய் நோவுகளில்லை எனக்கு – ஆனால் இந்த மெகா சாகஸத்தின் sheer intensity அசாத்தியமானதொன்று என்பதை உணர முடிந்தது ! இது மாயாஜாலக் கதையா ? எதிர்காலக் கதையா ? ஒரு ஆற்றலாளனின் கதையா ? அல்லது மனித பலங்களும், பலவீனங்களும் தொடர்பானதொரு சித்தரிப்பா ? பதில் காண்பதற்குள் திக்குமுக்காடிப் போவீர்களென்பது உறுதி ! ஒன்று மட்டும் நிச்சயம் – வான் ஹாம்மே எனும் கற்பனையின் உச்ச விருட்சத்தின் நிழலில் குளிர் காய நாம்  நிச்சயமாய் ஏதோ வரம் பெற்று வந்திருக்க வேண்டும் ! தோர்கலும், குழுவோடும் நாமும் மேற்கொள்ளவிருக்கும் இந்த அசாத்தியப் பயணத்தின் நிறைவில் நம்முள் பிரவாகமெடுக்கவிருக்கும் உணர்வுகளைப பட்டியலிட இப்போதே ஒரு பெரிய A4 பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ளல் நலமென்பேன் ! கற்கனைகளின் எல்லைகளை இதற்கு மேலும் நயமாய், நளினமாய், சுவாரஸ்யமாய் நீட்டிட வேறு யாருக்கும் சாத்தியமாகுமா – தெரியவில்லை !!
தோர்கலோடு பொழுதுகளைக் கழித்த கையோடு – நமது ‘தல‘ பக்கம் தலை வைத்துப் படுக்கலாமென்று புறப்பட்டால் நம்மவர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள் – ‘கதை ஆரம்பம் சரியாக இருக்கக் காணோமே சார் !‘ என்றபடிக்கு! இது என்னடா புதுக் கூத்து ? என்றபடிக்கே போனெல்லியிலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளுக்குள் புகுந்த பார்த்தால் – வயிற்றைக் கலக்கும் உணர்வோடு – நம்மவர்களின் கூற்று சரியே என்று புரிந்தது. சரியாக 110 + 110 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் ; 224 பக்க இதழாக வெளியிட கச்சிதமாக இருக்குமென்ற நினைப்பில் தான் இதனைத் தேர்வு செய்திருந்தேன் ! ஆனால் போனெல்லி படைப்புகளின் நதிமூலங்களும், ரிஷிமூலங்களும் அவர்களது கிராபிக் நாவல்களை விடவும் மர்மமானவை என்பதை மீண்டுமொரு முறை அனுபவத்தில் உணர்ந்திட முடிந்தது ! அந்த 110 + 110 பக்கங்களுக்கு முன்பாக இன்னொரு 41 பக்கங்களும் உண்டென்பதை போனெல்லியிடம் அவதி அவதியாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டேன் இரண்டே நாட்களுக்கு முன்பாய் ! “அட… ஆமாம் ! நாங்களுமே கவனிக்கலை!” என்றபடிக்கு விடுதல் பக்கங்களை நேற்று அவர்கள் அனுப்பித் தர – ‘ஙே‘ என்ற முழியோடு அதனை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற நமது மொழிபெயர்ப்பாளர்களைக் குடலை உருவத் தயாராகி நிற்கிறேன் ! கிருஸ்துமஸ் நெருங்கும் சமயம் முக்கால்வாசிப் பேர் விடுமுறையில் இருக்க - தெய்வமோ ; கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளோ தான் நம்மைக் காப்பாற்றியாக வேண்டும் !

சரி, கொஞ்சம் 'டமாசான பார்ட்டியின்' புக்குக்குள் புகுந்திடலாமென்று ஸ்பைடர்காருவின் “விசித்திர சவால்” கதைக்குள் நுழைந்தால் – தலீவரின் சராமாரியான கடுதாசிகளைப் படித்தது போல் தாரை தாரையாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது தான் மிச்சம் ! இந்தக் கதையை ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்தில் இருந்த சமயமே ஜீரணிக்க எனக்கு டப்பா டப்பாவாய் ஜெலுசில் அவசியப்பட்டது நினைவில் உள்ளது ! பூக்கூடைகள்; பூமாலைகள்; பூச்சரங்கள் என்ற ரேஞ்சை தொட்டுக் கூடப் பார்க்காது – நேராக பூந்தோட்டத்தையே காதுகளில் மாத்திரமின்றி மூக்குகளில், வாயில், என திறந்து கிடக்கும் அத்தனை இலக்குகளிலும் கோர்த்து விட கதாசிரியர் அரும்பாடு பட்டிருப்பதைப் பார்த்திட முடிந்தது ! “ஐயா…. என்னை விட்டுடுங்கோ!” என்று கெஞ்சுவது கூர்மண்டையரின் எதிரிகள் மட்டுமல்ல என்பதில் ஏது ரகசியம் ? But இந்த டகாட்டிப் படலத்தையுமே சுவாரஸ்யமாக்கிட சின்னதாயொரு யுக்தியைத் திட்டமிட்டுள்ளேன் ! ஜனவரியில் பார்க்கலாமே – யுக்திக்குப் பரிசு முதுகில் மத்தளமா ? விரலுக்கு மோதிரமா ? என்று!

So கதை விட்டு கதை,பாய்ந்து கூத்தடித்து வரும் இந்த அனுபவத்தின் மத்தியில் கிராபிக் நாவலைத் தயார் செய்திட இன்னுமொரு நாலைந்து நாட்கள் ஓடிவிடுமென்று படுகிறது. So 25-ம் தேதி வாக்கில் இதனை மட்டும் ஒரு தனிக் கூரியரில் போடுவதற்குப் பதிலாய் ஜனவரி முதல் தேதிக்கு சகலத்தையும் pack பண்ணி விட்டால் எனக்கும் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள லேசாய் அவகாசம் கிடைக்குமென்று படுகிறது ! What say folks ? இந்தக் கூத்துக்கள் சகலத்துக்கும் மத்தியில் இந்தோனேஷியப் பயணம் என்றும் அவசியமாகிட, நித்தமும் ‘பாண்டியராஜன் முழியை‘ இரவல் வாங்கித் திரிகிறேன் ! 

And இடைப்பட்ட நாட்களில் ஒரு சந்தோஷ சேதியும் கிட்டியது – சென்னைப் புத்தக விழா 2018-ன் அறிவிப்பென்ற ரூபத்தில் ! எப்போதுமே ஜனவரியின் முதல் வெள்ளியன்று துவங்கும் புத்தக விழா இம்முறை இரண்டாம் புதனன்று துவக்கம் காண்கிறது ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் டபுள் ஸ்டால் எடுக்கும் ஆசை பிடரியிலேறி உலுக்க; கட்டணங்களோ தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொணர – ‘என்னமோ போடா மாதவா‘ moments aplenty ! ஒரு மாதிரியாய் பணத்தைப் புரட்டியனுப்பிய கையோடு நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறோம் !
இம்முறை விழா ஆரம்பிப்பது ஜனவரி 10-ம் தேதி (புதன்) என்பதால் மாமூலான நமது முதல் வார இறுதியின் (வாசக) சந்திப்பில் சிரமமிருக்கக் கூடும் – simply becos அந்த சனி & ஞாயிறு பொங்கல் விடுமுறைகளோடு ஐக்கியம் ஆகிடுபவை ! So முதல் வாரயிறுதியினை அவரவர் குடும்பங்களுக்கு ஒதுக்கிட அவசியப்படும் தானே ? விழா ஆரம்பிக்கும் 10-ம் தேதிக்கே சந்திப்பைத் திட்டமிடுவதில் “வார நாட்கள்” என்ற சிரமமும் இருக்கக் கூடும் ; ஊர் திரும்பும் சமயம் பொங்கல் rush-ல் சிக்கி டிக்கெட்டுகள் கிடைக்காது திண்டாடும் சிரமங்களும் இருக்கலாம் ! What say guys ? இரண்டாவது வார இறுதியே தேவலாமா ? துவக்க நாட்களா ?

எதிர்காலத்து ஆலோசனையிலிருந்து ஒரே ஜம்பாய் கடந்த காலத்து அலசலுக்குள் இனி புகுந்திட வேண்டியது தான் ! போன வாரமே 2017-ன் highlights பற்றிய அலசலின் போது – 2017-ன் lowpoints பற்றியும் பேசிடலாமென்று promise பண்ணியிருந்தேன் ! சந்தேகமின்றி 2017-ன் மிதமான கணங்கள் – நமது ‘தல‘ கதைகள் சார்ந்த தருணங்களே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது ! ஒவ்வொரு வருஷமுமே டெக்ஸ் கதைகளெனும் களஞ்சியத்தினுள் புகுந்து வெளியேறுவதென்பது ஒரு மூச்சிரைக்கச் செய்யும் பணியே ! நிறைய இன்டர்நெட் உருட்டல்கள் ; இத்தாலிய ரசிகர்களின் வாய்களைப் பிடுங்குவது ; கிட்டிய மாதிரிகளைப் பரிசீலிப்பது – என்று இயன்ற அத்தனை மார்க்கங்களையும் நாம் பயன்படுத்திடத் தயங்குவதில்லை ! ஆனால் சில தருணங்களில், பெருசாய், ரொம்பப் பெருசாய் மஸ்கோத்து அல்வா வாய் நிறையக் கிடைப்பதும் உண்டு தான் – 2017-ன் பல வேளைகளைப் போல! ‘Golden Tex’ என்று சொல்லப்படும் 1-200 வரையிலான கதைகளுள் நாம் அள்ளியுள்ள முத்துக்கள் ஏராளம் என்பதால் – அங்கிருந்து வலைவீசத் தொடங்குவோமே என்ற உந்துதல் இம்முறை கொஞ்சம் ஜாஸ்தி ! அதிலும் ஜுன் 2016-ல் மிலானிலிருந்த காமிக்ஸ் மியூசியத்தில் ஒரு ஞாயிறு மதியத்தைச் செலவிட்ட போது – அங்கே கண்ணில் பட்ட டெக்ஸ் இதழ்களின் பெரும்பான்மை ஆரம்ப நாட்களது சாகஸங்களே ! So “அராஜகம் அன்லிமிடெட்” & ”கடல் குதிரையின் முத்திரை” தேர்வானதெல்லாம் அந்த மதிய ஆராய்ச்சியின் பலனாய் ! அதிலும் ‘GILAS’ என்ற பெயருடனான ‘அராஜகம் அன்லிமிடெட்‘ கதைக்கு – இன்டர்நெட்டில் கண்ணில் பட்ட பில்டப்பெல்லாம் தெறிக்கும் ரகத்தில் இருக்க – பிளாஸ்திரி போட்ட சல்மான்கான் பாணியில் நம்மவரும் காட்சி தர, ‘அடிச்சேன்டா லக்கி ப்ரைஸ்‘ என்று மனம் கூவியது. ஆனால் ஆறு மாதம் கழித்து, கதையும் கிடைக்கப் பெற்று, english மொழிபெயர்ப்பும் தயாராகி நின்ற போது – “ச்சை… எனக்கு பில்டப்பே பொடிக்காது” என்று தான் சொல்லத் தோன்றியது. எவனோ சாகஸமாயொரு வில்லன் எதிர்ப்படுவான்; ‘தல‘ டிராகன் நகர பாணியில் பந்தாடுமென்று காத்திருந்தால் – திருவிழாவில் பஞ்சுமிட்டாய் திருடித் தின்னும் ரகத்திலானதொரு குண்டுப் பையன் வந்து கிச்சு கிச்சு மூட்டிச் சென்றதை ரசிக்கவே முடியலை ! அதே போல “வெறியனின் தடத்தில்” கதைக்குமே “வித்தியாசம்” என்ற முத்திரை சாத்தியமானதே தவிர – “விறுவிறுப்பு” அல்ல ! மாறுபட்ட களங்களைத் தேடுவோமே என மனம் அலைபாயும் போது இது போன்ற 'பிம்பிலிக்கா பிலாக்கிகளும்' எதிர்ப்படும் போது திகைக்க மட்டுமே முடிகிறது!

But சகலத்திற்கும் சிகரம் – தீபாவளி மலரின் disappointment என்பது தான் சோகமே ! மெகா சைஸ் ; வண்ணத்தில் – கிராபிக் நாவல் பாணியில் என்று ஏதேதோ நானாய் உரு ஏற்றி விட்டு பணிகளுக்குள் புகுந்தால் – ஒரு புதுமுக டைரக்டரின் குறும்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கியது ! “ஒரு தலைவன்…. ஒரு சகாப்தம்” – ஏதோ ஒரு மார்க்கமாய் டெக்ஸ் - கார்சன் - போனெல்லியின் முடிச்சுக்கான கற்பனையாக அமைந்திருந்தாலும் – கதை # 2 பாடாய் படுத்தி விட்டது அப்பட்டம் ! சித்திர பாணியும் செம average எனும் போது – “நான் சரியாத் தான் படிச்சிட்டிருக்கேனா? என்று நாமெல்லாமே சிண்டைப் பிய்த்தது நினைத்து ரொம்பவே சங்கடமாயுள்ளது! “மாற்றங்கள்” பெயரளவிற்கே என்றிராது – ரசனைக்குரிய மாற்றங்களாய் இருந்தால் மாத்திரமே அந்த பக்கமாய் கால்பதிப்பது என்று சூடு கண்ட பூனையாகத் தீர்மானித்துள்ளேன் ! தொடரும் நாட்களில் ‘பன்முக டெக்ஸைக் கண்ணில் காட்டுகிறேன் பேர்வழி‘ என்று ரிஸ்க் எடுப்பதை விடவும் – தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் களங்களையே, அவை சற்றே வாடிக்கையானதாய்த் தெரிந்தாலுமே தெரிவு செய்வதென்ற ஞானம் பிறந்துள்ளது ! அதற்காக இந்த ‘யானைப் பால்‘ குடித்தவுடனே  நம் தேர்வுகள் சகலமும் இதிகாச ரகங்களுக்கு மாறிடுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை ; மாறாக – ‘தாங்கலியே‘ என்றிராது என்ற மட்டிற்கும் நிச்சயம் ! 
And இதோ – ஆண்டின் முதல் ‘தல‘ தாண்டவத்தின் அட்டைப்பட முதல் பார்வை ! ஒரிஜினல் ஆர்ட் ஒர்க்; லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு மட்டுமே ! 2018-ன் முதல் quarter-க்கு TEX ராப்பர்கள் சகலமுமே ஒரிஜினல்களாகவே இருந்திடவுள்ளன என்பது கொசுறு சேதி ! அதன் சாதக-பாதகங்களைப் பார்த்த கையோடு – தொடரும் மாதங்களுக்கான திட்டமிடல்கள் அமைந்திடும் ! முதல் பார்வைகள் சொல்லும் சேதிகள் என்னவோ guys ?
2017-ன் பாதாளத்தைப் பார்வையிட்ட பிற்பாடு – காத்திருப்பது இன்னொரு உச்சம் நோக்கிய அலசல் ! And அது “சூப்பர் 6” என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா ? தொடரும் வாரத்தில் இந்த smash hit ஆறு இதழ்கள் பற்றிய review !

அப்புறம் நமது இரத்தப் படல முன்பதிவு நிலவரம் : இதுவரையிலும் தொட்டுள்ள எண்ணிக்கை : 313 ! ஆரம்ப நாட்களது முன்பதிவுத் துரிதம் எப்போதுமே பின்நாட்களில் தொடர்வதில்லை என்ற போதிலும் – நமது லட்சியத்தை எட்டிப் பிடிக்க தூரம் அதிகமில்லை இப்போது ! இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதம் வேண்டாமே - ப்ளீஸ் ? 

சந்தாக்களைப் பொறுத்த வரையிலும் இரட்டைச் சதமே அடித்துள்ளோம் இதுவரைக்கும் ! So தொடரும் நாட்களில் இங்குமே சற்றே வேகம் எடுப்பின் – நமது பணிகளுக்குத் தொய்விலா ஊக்கம் கிடைத்தது போலிருக்கும் ! இதுவரையிலான highlight ஒன்றைக் குறிப்பிட்டே தீர வேண்டும் ! A+B+C+D என எல்லா ரகச் சந்தாக்களின் சதவிகிதம் 96% இம்முறை !!! “கார்ட்டூன் வேணாமே” என்போர் 2% ; ‘டெக்ஸ்க்கு நோ' & 'மறுபதிப்பு டவுண்‘ என்போர் தலா 1% மட்டுமே !!! ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்த stat இது ! எஞ்சியிருக்கும் நண்பர்களும் விறுவிறுப்பாய் சந்தாக்களை செலுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? 

மீண்டும் சந்திப்போம் guys ! Have a lovely weekend !

P.S : ஒரு ஜாலியான கேப்ஷன் போட்டி ! வெற்றி பெறுவோருக்கு ஒரு A + B + C + D சந்தா நம் அன்பளிப்பு ! அதனை அவரே பயன்படுத்திக் கொள்ளலாம் ; அல்லது யாருக்கேனும் அன்பளிப்பாகவும் transfer செய்திடலாம் ! So தயாரா ? 

Saturday, December 09, 2017

ஒரு பின்பார்க்கும் படலம் !

நண்பர்களே,

வணக்கம். சவ்வு மிட்டாய் கலரிலான அந்த கோட் ரெடி; காதில் தொங்கட்டான்களும் ; நெற்றியில் பொட்டும் கூட ரெடி! 'நாய் ஷேகர்' ஒரு வாகான பொசிஷனில் 'டர்ன்' பண்ணி நின்றால் போதும் - பின்னோக்கிய பயணத்தைத் தொடங்கிடலாம்! Oh yes - இது ஆண்டின் "அந்த நேரம்" ! (கிட்டத்தட்ட) ஒரு வருஷத்தின் மொத்த இதழ்களையும் முடித்த ஆயாசத்தோடு சோம்பல் முறித்தபடிக்கே சகலத்தையும் மனதில் அசை போடும் தருணமிது ! And உங்கள் வருகையும், பங்களிப்பும் எப்போதையும் விட இப்போதே ரொம்பவும் அவசியமென்பேன் - simply to tell  us இந்தாண்டின் பயணத்தில் நீங்கள் ரசித்தவை எவையோ ? முகம் சுளிக்கச் செய்த குண்டும் குழிகளும் எவையோ ? என்று ! நம் முதுகில் வருடித் தருவதற்கோ ; மத்தளம் வாசிப்பதற்கோ இந்த நொடியில் நேரம் எடுத்துக் கொள்வதை விடவும் கடந்துள்ள நடப்பாண்டின் கதைத் தேர்வுகள் பற்றியும்; இந்த ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களின் ஆழ்மனதின் குரல்தனை உரக்க ஒலிக்கச் செய்வதற்குப் பிரயாசை எடுத்தீர்களெனில் - காத்திருக்கும் திட்டமிடல்களுக்கு ஏக உதவியை இருக்குமல்லவா? So 'மௌனமே எங்கள் ஆதர்ஷ மொழி!' என்று கோட்டுக்கு 'அந்தாண்டை' நிற்கும் நண்பர்களுமே இந்த முக்கிய தருணத்திற்காவது தத்தம் மௌனவிரதங்களைக் கலைக்க முனைந்தால் செமையாக இருக்கும் !
          
ரயில் பயணத்தின் ஜன்னலோர சீட்களில் அமர்ந்தபடிக்கே, பனைமரங்களும், மின்விளக்குகளும் தூரத்தில் ஈர்க்குச்சிகள் போலத்தெரிவதையும், கிட்டே நெருங்க, நெருங்க அவற்றின் நிஜ உசரங்கள் புலப்படுவதையும், தாண்டிச் செல்லச் செல்ல, மறுபடியுமே குண்டூசிகளைப் போல உருமாறித் தெரிவதை ரசிக்காதோர் யாருமிருக்க முடியாது தானே ? கதைத் தேர்வுகள் சார்ந்த பணிகளுமே - "ரயிலின் ஜன்னல் சீட்" அனுபவத்தைப் போன்றதே என்பேன் ! புரட்டோ புரட்டென்று கதைகளைப் புரட்டி ஒவ்வொன்றையும் முடிந்த மட்டிற்குக் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பிக்கும் போது அவை தூரத்து ஈர்க்குச்சிகளைப் போலத் தோன்றுவது வாடிக்கை ! அவற்றோடு ஒன்றத் துவங்கி, அவற்றில் பணியாற்றத் தொடங்கும் போது - அண்மை தரும் வசதியில் அவை ஒவ்வொன்றுமே   விஸ்வரூபமெடுத்திருப்பது போலத் தோன்றும் ! And அவை இதழ்களாக உருமாறி, உங்களை எட்டிப் பிடித்து, அலசல்கள், ஆராய்வுகளுக்கு உள்ளாகி, சிறுகச் சிறுக நினைவுகளாய் மாத்திரமே தொடரக்கூடிய சமயங்களில் once again குண்டூசிகள் போலவே தெரிய ஆரம்பிக்கும்! நான் செல்லும் ரயிலின் வேகமும், முட்டைக்கண்களை இமைக்காது நான் பார்த்திடும் லாவகமும், எனக்கு அமைந்திடும் பார்வைக்கோணங்களுமே காட்சிகளுக்கு மெருகு சேர்ப்பவை ! அதே சமயம், ரயிலுக்குள் இல்லாது-பனைகளருகே நின்று நிதானப் பார்வை பார்த்திடும் உங்களுக்குத் துல்லியமாய்த் தெரிந்திடக்கூடும்-'நெட்டை எது? குட்டை எது?' என்று! So இந்த அலசலை - இணைந்து செய்வதை ஒரு வருடாந்திர exercise ஆக ஏற்படுத்திக் கொள்ளும் ஆசை எனக்குள் !

எங்கே ஆரம்பிக்க? எதை மையப்படுத்திட ? எதை சுருக்கமாய்த் தொட்டுச் செல்ல ? என்று சுத்தமாய்த் தெரியவில்லை ! கல்யாண வீட்டு வாசலில் நின்று கொண்டு மையமாய் விருந்தினர்களை நமஸ்கரிக்கும் போது தலை ஒரு மார்க்கமாய் blank ஆகிடுவதுண்டு ! அதைப் போலவே இந்த நொடியும்!

2017-ன் highlights-களிலிருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்குமென்று தோன்றுவதால் கோலத்தின் முதல் புள்ளியாக அவையே இருந்து விட்டுப் போகட்டுமே ? தனிப்பட்ட முறையில், கதைத்தேர்வில் ; தயாரிப்பில் ; விற்பனையில் கிட்டிய அனுபவங்கள் சார்ந்த எனது பார்வைகளாக மாத்திரமே தொடரும் வரிகளைப் பார்த்திடுங்களேன் - please ?!

'A job well begun is half done' என்ற சமாச்சாரம் நம்மைப் பொறுத்தவரையிலும் நூற்றுக்கு நூறு சரி தான் என்பேன்! வருஷத்தை சென்னைப் புத்தகவிழா துவக்கித் தருகிறதெனில் 2017-ன் நமது opening salvo-க்களை முழக்கியது (நமக்கொரு) புதுமுகமே! ட்யுராங்கோ என்ற பெயர் 2017 வரையிலும் நம்மில் பெரும்பான்மைக்குப் பரிச்சயமற்றதொன்று தான் ; ஆனால் ஜனவரியில் சத்தமின்றி யுத்தம் செய்த இந்த மனுஷன், கெளபாய் ரசிகர்களின் ஒரு ஆதர்ஷ நாயகனாகிப் போனது - ஆண்டுக்கொரு அழகான துவக்கம் தந்த விஷயம் என்பேன் ! ட்யுராங்கோ கதைகளில் நிச்சயமாய் டைகரின் ஆழமோ; வில்லரின் பன்ச்சோ கிடையாதென்றாலுமே -அந்த ஹாலிவுட் திரைப்பட பாணியிலான கதை நகர்த்தலுக்குக் கைதட்டினோம் நாமெல்லாமே ! இந்த மனுஷன் நம் மத்தியில் அறிமுகமானது நடப்பாண்டில் தான் என்றாலுமே-நான் இவர்  பின்னே சாமரம் வீசி நின்று வந்தது 2014 முதலே ! 'சோலேல்' என்ற நிறுவனத்தின் படைப்பான இதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் குட்டிக்கர்ணம் பல அடித்தும் பெரிதாய் முன்னேற்றம் இருக்கவேயில்லை! என் கையில் இந்தத் தொடரின் பின்பாதியின் ஆல்பங்கள் சேர்ந்ததொரு தொகுப்பு இருந்தது ; and அதனில் artwork; கதை பாணி; கலரிங் என்று சகலமும் நாமிப்போது பார்த்துப் பழகியிருக்கும் பாணிகளை விடவும் பற்பல படிகள் தூக்கலாய் இருந்தன! So நாலு மாதத்திற்கொரு தபா அதனைப் புரட்டுவது ; அந்தப் பக்கங்களின் ஜாலங்களைக் கண்டு ஜொள்ளிடுவது ; சோலேலுக்கு பஞ்சப்பாட்டுப் பாடி ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவது ; அவர்களிடமிருந்து அனுசரணையான பதிலில்லாது போவது ; 'ஐயையே... இந்த ஹீரோ முழியே சரி இல்லியே...ஊஹூம்...சும்மா டூஷூம்.. டிஷூம் ன்னு சுட்டுக்கிட்டுத் திரியுறானே !! ?' என்ற வேதாந்தம் பேசுவதெல்லாமே சலிக்காததொரு மாமூலாகிப் போயிருந்தது எனக்கு ! ஆனால் நமது அதிர்ஷ்டம் - இந்த நிறுவனமும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமிருந்த டெல்கோ நிறுவனமும் கரம் கோர்த்துக் கொண்டார்கள் - ஒரு சுபயோக சுபதினத்தில் ! ஒரு திருநாளில் திடுமென அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - ஒற்றை சாளரத்தின் கீழ் இனி இரு நிறுவனங்களோடும் தொடர்பு கொள்ளலாமென்று ! நமக்கு லேசாய் ஒரு கோடி காட்டிவிட்டால் தான் போதுமே -அவர்களது குடல்களின் நீள-அகலங்களைத் தெரிந்திட மாட்டோமா என்ன ? ஆனால் சிக்கல் அத்தனை சீக்கிரம் ஓய்ந்த பாடில்லை ! நிறுவனங்கள் இணைந்திருந்தாலும் ட்யுராங்கோவின் படைப்பாளிகள் சாமான்யத்துக்குள் பிடி கொடுக்கவேயில்லை எனும் போது - பூசாரியெல்லாம் அர்ச்சனைக்கு இசைவு தெரிவித்து விட்ட போதிலும் மூலவர்(கள்) கண் திறக்க மாட்டேன்கிறார்களே - என்ற ஆதங்கம் பிடுங்கித்  தின்றது ! நமது 45 ஆண்டு சர்வீஸை சொல்லிய கையோடு ; இன்ன பிற நாயகர்களின் பட்டியலை ; சமீப இதழ்களின் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் ! அப்புறம் ஒரு யோசனையாய்  "மின்னும் மரணத்தையும்" அனுப்பினேன் ! பின்னென்ன - மூலவர்களும்   மெதுமெதுவாக மேற்கிலிருந்து thumbs up காட்டினார்கள்  ! So பகுமானமாய் 2017-ன் அட்டவணையின் முதல் பக்கத்திலேயே ட்யுராங்கோ பற்றிய அறிவிப்பைப் போட்டு விட்டிருந்தாலும் - எல்லாம் ஓ.கே.வாகிடும் வரை எனக்கு பேதிப் படலம் தொடர்ந்து கொண்டேயிருந்தது ! And the rest as they say - is (our) history ! அமர்த்தலாய் மனுஷன் வந்தார்... அந்த அமர்க்களமான ஹார்ட்கவர் இதழோடு நம்மை வென்றார் என்று தான் சொல்ல வேண்டும்! சமீபத்தில் பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது இதனைப் பார்த்த பதிப்பகங்கள் எல்லாமே ”Nice !” என்று புன்னகை பூத்தது-இதன் ராப்பரை வடிவமைத்த பொன்னனுக்கும், நமது தயாரிப்பு டீமுக்குமான பாராட்டாய் பார்த்திட்டேன் ! So  2017-ன் பிரதான highlight -களுள் முக்கியமானது 'சத்தமின்றி யுத்தம் செய்”! 

ஆண்டின் ஆரம்பப்பகுதிகளிலேயே இடம் பிடித்த இன்னொரு முக்கியஸ்தரும் நம்மைப் பொறுத்தவரை ஒரு சமீப முகமே! ‘சேது’ விக்ரம் போலொரு blonde ஹேர்ஸ்டைல்; ‘பிதாமகன்’ விக்ரம் போலொரு துளைக்கும் பார்வை என்ற அடையாளங்களோடு 2016-ன் இறுதியில் ஆஜராகி நம்மையெல்லாம் கட்டுண்டு போகச் செய்த ஜேசன் ப்ரைஸின் இறுதி சாகஸம் வெளியானது நடப்பாண்டின் பிப்ரவரியில் தான் ! நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருந்த கதையின் க்ளைமேக்ஸ் பாகம் லைட்டாகப் பதம் தப்பிய ரவா தோசையைப் போல மாவாய் இருந்ததென்னவொ நிஜம்தான்... ஆனால் அந்த சாகஸத்திற்கு அத்தகையதொரு fantasy முடிவைத் தாண்டி வேறெதுவும் சாத்தியமாகியிராது என்பது தொடரை நிதானமாய் அசைபோட்ட போது புரிந்தது! ஏகமாய் hype ; ஏகமாய் சிலாகிப்புகள்; ஏகமாய் அலசல்கள் என கலக்கிய இந்தத் தொடர; 2017-ன் முக்கிய மைல்கல்களுள் ஒன்றென்பேன்! 'திரை விலகும் நேரம்” - ஒரு வித்தியாசமான சாலையில் பயணம் !
2017-ன் வெளிச்சத் தருணங்களில் இன்னொன்று நம்மின் பலரின் லேட்டஸ்ட் eye candy ஆன ‘லேடி S’-ன் அறிமுகம் ! சவரம் பாரா கரடுமுரடான கௌபாய் முகங்களுக்கு மத்தியில் ரம்யமானதொரு மதிமுகம் எட்டிப் பார்த்த கணமே பற்பல விக்கெட்டுகள் காலி என்பது கண்கூடாய்த் தெரிந்தது ! வான் ஹாம்மேவின் spy  த்ரில்லர் எனும் போதே இயல்பாய் எழும் எதிர்பார்ப்பு ஒரு cute ஹீரோயினுடன்; என்றான போது பன்மடங்கு கூடிப் போனதும் புரிந்தது! And  முத்து காமிக்ஸின் இதழ் # 400 என்ற மைல்கல் தருணத்தினில் ‘லேடி S’-ன் வருகை ஒரு runaway ஹிட்டாக அமைந்து போனதில் எங்களுக்கு செம குஷி ! அந்தக் காலத்துத் தியாகராஜ பாகவதர் படங்களின் பாடல்கள் எண்ணிக்கை போல கணிசமானதொரு நம்பராக இல்லாது - crisp ஆக (இதுவரைக்கும்) 13 ஆல்பங்களே கொண்ட தொடரிது என்பதால் நடைமுறைக்கும் இது சுகப்படுவது கூடுதல் சந்தோஷம் ! So ஒரு புது நாயகியின் வரவும், அதனைத் தொடர்ந்து   சாத்தியமாகிய சுவாரஸ்யமும், நடப்பாண்டின் மனதில் நிற்கும் பொழுதுகளில் ஒன்று என்பேன் ! சமீபமாய் வந்த இந்தத் தொடரின் ‘சுடும் பனி’யும் did well எனும் போது- "ஷானியா நற்பணிமன்றங்கள்" ஈரோட்டிலும், சேலத்திலும், இன்னபிற சான்றோர் உறையும் ஸ்தலங்களிலும் வேரூன்ற முகாந்திரங்கள் பலமாகிப் போகின்றன !!
அதே தருணம்; ஆனால் ரொம்பவெ பழக்கமானதொரு முகம் - இன்னொரு அழகான நினைவை விட்டுச் சென்றது 'லயன்-300” என்ற ரூபத்தில் ! குண்டு புக்குகளுக்கு என்றைக்கும் மவுசு குன்றிடாது என்பதை -டெக்ஸ் வில்லரின் 'க்யூபா படலம்” centrestage எடுத்துக் கொண்ட இந்த இதழ் இன்னொருமுறை ஸ்பெஷ்டமாய் நிரூபித்தது ! பக்கவாத்திய வித்வான்களும், வித்வானிகளும் (!!) வாசித்தது அத்தனை சுருதி சேரவில்லை என்றாலும் - solo-வாகக் கச்சேரியை அமர்களப்படுத்திடும் ஆற்றல் பாகவதர் டெக்ஸுக்கு உண்டென்பதால், இந்தக் கச்சேரி சோடை போகவில்லை ! கதையில் ஊடூ; பேசும் பாம்புகள் என்று ஆங்காங்கே புய்ப்பச் சரங்கள் இழையோடினாலும் ஒரு புதுக் களத்தில் நம்மவர் வீடு கட்டி அடிக்கும் அழகை ரசிக்காதோர் சொற்பமெ என்பது தெரிந்தது ! And ஆண்டுக்கொரு black&white  ஹார்ட்கவர் குண்டு புக்கென்பது எத்தனை ரம்யமான concept என்பதை இன்னொருமுறை பதிவு செய்த லயன்#300-இந்தாண்டின் topsellers-களுள் ஒன்றும் கூட!

A,B,C,D என்று கவர்ன்மென்ட் ஹைஸ்கூலின் செக்ஷன்கள் போல நமது சந்தாப் பிரிவுகள் நடைபோட்டு வருவவதில் ரகசியம் லேது ! ஆனால் அந்த வரிசையோடு மெதுமெதுவாய் இணைந்து கொண்டு - ஓசையின்றி ஆட்டத்தைத் தொடங்கிய சந்தா E தான் நடப்பாண்டின் ஒட்டுமொத்தக் "கவனக் கோரி" ! 

"கிராபிக் நாவல்கள்” என்ற பதத்தை வேப்பங்காயோடு இணைத்துப் பார்க்கும் ஒருவித mindset நம் வாசக வட்டத்தின் ஒரு கணிசமான பகுதியின் மத்தியில் விரவிக் கிடந்ததற்கு நாமுமே ஒரு காரணம் ! மத்திமமான கதைத்தேர்வுகள்  ; அழுகாச்சிகளுக்கு முன்னுரிமை ; அவற்றைக் கையாண்ட விதத்தில் கற்றுக்குட்டித்தனம் என என்னை நானே கடிந்து கொள்ள இங்கே நிறையவே முகாந்திரங்கள் இருந்தன ! இதன் பலனாய் ஏகப்பட்ட சூடு கண்ட பூனைகள் நம்மிடையே உருவாகியிருக்க-எனக்குள் இது தொடர்பாய் நிறையவே சங்கடமிருந்தது ! கிராபிக் நாவல்கள் சார்ந்த நமது இந்த அவப்பெயரை சரி செய்ய நிச்சயமாய் பிரயாசைகள் பல மேற்கொண்டே தீர வெண்டுமென்று எனக்குள் ஒரு மௌனமான வைராக்கியம் குடியேறியிருந்தது ! சாம்பாரையும், நூடுல்ஸையும் ஜாய்ண்ட் போடுவது சரிவராது என்பதால் கி.நா.க்களுக்கென தனியாகவே ஒரு சந்தாத்தடம் அத்தியாவசியம் என்று பட்டது ! வெள்ளைக்காரன் தான் 26 எழுத்துக்களைப் படைத்து வைத்திருக்கிறானே- அதனில் இன்னொன்றை இரவல் வாங்கினால் போச்சு என்று சந்தா E-வை களமிறக்கும் மகா சிந்தனை உதயமானது ! இம்முறை கதைத் தேர்வுகளிலோ; கதைகளைக் கையாளும் பாணிகளிலோ குளறுபடி நேரின் - என் பிழைப்பு சிரிப்பாய்ச் சிரித்துப் போய் விடும் என்பதை விட - நம் புண்ணியத்தில் 'கிராபிக் நாவல்” என்ற genre மீதே ஏளனம் பாய்ந்துவிடும் என்பதும் புரிந்தது ! ஆயிரம் முட்டுச் சந்துகளில் ஆயிரத்தொரு மொத்துக்கள் வாங்கினாலும் இந்த ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ கலங்க மாட்டான் என்றாலும் - நமது தவறான திட்டமிடல்களால் ஒரு கதைரகத்தையே நாம் புறம்தள்ளும் சூழலுக்கு 'இந்த என்கவுண்டர் ஏகாம்பரம்  காரணமாகிடக் கூடாதென்று பட்ட து! So நிரம்ப ரோசனைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்புறமாய் மெது மெதுவாய் கதைத்தேர்வுகளைச் செய்யும் போதே -ஏகப்பட்ட இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொண்டேன்!  
சந்தா E-வின் கதைத் தேர்வுகளுக்குப் பின்னே ஒரு கதையும் இல்லாதில்லை! ஒரிஜினலாய் நான் தேர்வு செய்திருந்த ஆல்பங்களின் பெரும்பான்மை வண்ணத்திலானவை ! ஆனால் அவற்றின் கதைத்தரங்கள் பற்றி எனக்குப் பரிபூரண நம்பிக்கை ஏற்படத் தவறிக் கொண்டேயிருந்தது ! பற்றாக்குறைக்கு சந்தாத் தொகையும் எகிறிக் கொண்டே போவது போலத் தோன்றியதால் மலைத்துக் கொண்டே நின்றேன் ! Black & White இதழ்களுக்குப் பெரும்பான்மை எனில்-கொஞ்சமாய் விலைகளில் சகாயம் சாத்தியமாகுமே என்ற எண்ணம் அப்போது தலைதூக்க - ‘கறுப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு..டொயுங்க்..டொயிங்...’ என்ற படிக்கே வட்டமடிக்கத் தொடங்கினாலும் உருப்படியாய் எதுவும் கண்ணில்பட்ட பாடைக் காணோம்! அதற்கு மீறி வித்தியாசமானதொரு ஆல்பம் ஆர்வத்தைத் தூண்டியதெனத் தருவித்து பக்கங்களைப் புரட்டினால், ஏகப்பட்ட பிகினி பெண்களின் புஷ்ஷிடியான பின்பக்கங்கள் பக்கத்துக்குப் பக்கம் தெறித்துக் கொண்டிருந்தன ! 'சும்மாவே சாமியாடுவோர சங்கம்” ஒன்றும் நம் மத்தியிலிருக்க - அவர்களுக்கு மஞ்சள் தண்ணியும், உடுக்கை ஓசையையும் நாமே இலவசமாய் சப்ளை செய்து வைத்தால் நாடு தாங்காதென்று தோன்றியது ! தலையை நோண்டிக் கொண்டே மறுபடியும் இன்டர்நெட் தேடல்களுக்குள் லயித்த போது ஒரு அழகான (இத்தாலியப்) படைப்பாளியின் பேட்டி ஒன்றை வாசிக்க முடிந்தது ! டைலன் டாக் தொடருக்குக் கதைகள் எழுதும் பெண்மணி என்பதையறிந்த போது ‘அட... டைலன் டாக் மாதிரியான இரத்தக்களரியான கதைக்களங்களைக் கூட female  authors கையாள்கிறார்களா?’ என்ற மலைப்பு மேலோங்கியது ! அந்தப் பேட்டியினில் சிலபல கிராபிக் நாவல்களையும் அவரே எழுதியிருப்பதாய்ச் சொல்லியிருந்ததைக் கவனித்த போது, எனக்குள் ஒரு குண்டு மஞ்சள் பல்பு பளீரென்று எரிந்தது போலிருந்தது! அதைத் தொடர்ந்து நடந்த தேடலில் சிக்கியது தான் 'ஒரு முடியா இரவு” ஆல்பத்தின் ஒரிஜினல் ! அதே வரிசையின் 'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” அடுத்து கண்ணில்பட - எனக்குள் பஞ்சு மிட்டாயைப் பார்த்த பொடிப்பையனின் உற்சாகம் ! 'உலகயுத்தம் & அதன் aftermath” என்ற களங்கள் எனக்கு என்றைக்குமே பிடித்தமானவை தானே? So-இந்த ஆல்பமும் ஒரு இறுக்கமான post war களமாய்க் காட்சி தந்ததால்- கடைவாயில் ஜலம் ஓடத் தொடங்கியது! ஆனால் 'வானமே எங்கள் வீதி” ; 'பிரளயத்தின் பிள்ளைகள்” ; 'விண்ணில் ஒரு வேங்கை” போன்ற war tales வாங்கிய மெகா சாத்துக்கள் இன்னமும் பசுமையாய் மனதில் நிழலாடிட தயக்கமும் படர்ந்து கொண்டது! ஆனால் சபலத்தின் சக்தி தான் அளப்பரியதாச்சே-ஒரு ஆந்தைக் கண்ணனால் அதைப் புறம் தள்ள முடியுமா என்ன ? என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதைக்கு நேராகவும்  ‘டிக்’ அடித்து வைத்தேன்! ‘கனவுகளின் கதையிது’ சீக்கிரமே கைகோர்த்துக் கொள்ள, ஆறே இதழ்களோடு திட்டமிடப்பட்ட சந்தா  E-யின் பாதிப் பசி ஆறியிருந்தது ! ‘நிஜங்களின் நிசப்தம்’ என்னுள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் ஓடி வரும் ஆதர்ஷம் என்பதால், அதுவும் பட்டியலினுள் புகுந்திட அதிக நேரமாகவில்லை ! என்ன ஒரே குளறுபடி-இரு பாகங்கள் கொண்ட இந்த சாகஸத்தின் முதல் பகுதியினை டிசம்பர் 2017-ல் வெளியிடுவதென்றும்; இறுதிப் பாகத்தை ஜனவரி 2018-ல் வெளியிடலாமென்றும் திட்டமிட்டிருந்தேன் ! So 'காலம் தவறிய காலன்” எனும் sci-fi  த்ரில்லரை ஸ்லாட்#4-ல் நுழைத்திருந்தேன்! ஆனால் அப்போதேவும், நிஜங்களின் நிசப்தத்தை 2017 & 2018 என பிரிப்பது நடைமுறையில் சுகப்படுமா ? என்ற சன்னமான சந்தேகம் எனக்குள் இருந்ததால்-2017ன் அட்டவணையில் ‘காலம் தவறிய காலன்’ இறுதி நேர கல்தாவுக்கு உட்பட்டதே என்று குறிப்பிட்டிருந்தேன்! And 2018-ன் கிராபிக் நாவல் சந்தாவானது அறிவிப்பு கண்டிடப் போவதே  ஏப்ரலில் தான் என்பதால் 'நி.நி”யைப் பிரிக்கும் திட்டமானது பணாலானது ! எஞ்சிக்கிடந்த ஒற்றை ஸ்லாட்டில் கலரில் ‘அண்டர்டேக்கரை’ களமிறக்கச் செய்வதென்று தீர்மானித்த கணத்தில்-சந்தா E வில் ஒரு வித இனம் சொல்ல முடியா புதிர் விரவிக் கிடப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது ! இத்தனை காலம் கடந்தான பின்பும், உங்களை ஏதேனுமொரு விதத்தில் திகைக்கச் செய்ய முற்படும் ஆசை என்னை விட்டு அகல்வதே கிடையாது! And சந்தா E-வின் X factor நிச்சயமாய் உங்களது கவனங்களை ஈர்த்திடுமென்ற நம்பிக்கை எப்படியோ துளிர்விட்டது ! So ஒரு சந்தாவின் behind the scenes சிந்தனையோட்டம் இதுவே!

யோசிப்பதெல்லாம் சரிதான்; திட்டமிடுவதும் சுலபம் தான்; ஆனால் குறும்படமே ஆனாலும் அதை எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்பும் போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் பரதம் அரங்கேறாது போகுமா? எனக்குள் ஓராயிரம் கேள்விகள் - லயன் கிராபிக் நாவலின் முதல் இதழின் தயாரிப்புக்குள் தலை நுழைத்த கணத்தில் ! எனது ஒரிஜினல் அட்டவணையின்படி ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ தான் தடம் E- வில் தடதடத்திருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் ! ஆனால் கடைசி நிமிடத்தில் பீதியாகிப் போய்விட்டது-'மறுபடியும் ஒரு யுத்தப் பின்னணிக் கதை தானா?” என்ற கேள்வியோடு நீங்கள் சுதி குறைந்து போய்விடுவீர்களோ என்று ! So சுத்தமாய் நாமிதுவரையிலும் பார்த்திராத களத்தைக் கொண்ட 'முடியா இரவை” முன்னே இழுத்து வந்தேன்! கதைத் தேர்வின் போது ‘ஆசம்... ஆசம்’ என்று நான் சிலாகித்த சித்திர பாணிகள் பணியாற்ற அமர்ந்த நொடியில்-'கந்தசாமி”யில் வரும் முரட்டுச் சேவல் வடிவேலைப் போல செம மொக்கையாய் தென்படத் தொடங்கியது ! ‘ஐயோ... தெய்வமே... ‘சிவனே’ என்று மண்டபத்தில் டெக்ஸ் வில்லப் புலவர்களும், கார்சக் கவிஞர்களும் எழுதித் தரும் பாட்டுக்களை வாங்கிய கையோடு  பிழைப்பைப் பார்த்துப் போயிருக்கலாமோ ?"  என்றெல்லாம் யோசனைகள் நாற்கால் பாய்ச்சல் காட்டத் தொடங்கின! கதையின் டெம்போவுமே மெது மெதுவாய்த் தான் ‘பிக் அப்’ ஆகும் ரகம் எனும் போது -கல்யாண வீட்டில் மைக்கை லபக்கிய கரைவேட்டிகள் போல ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போவதை ஆரம்பப் பக்கங்களில் கவலையுடன் பார்த்தேன்! ஆனால் நாலு நாள் குடித்தனம் நடத்தினால் பிரபஞ்ச அழகனோ, அழகியோ ; உலக பேமானியோ, பேமானனோ சராசரி முகங்களாக மட்டுமே தெரியத் தொடங்கும் என்ற நியதி சிறுகச் சிறுக நிஜமாகிட - அந்த semi cartoon  பாணிச் சித்திரங்களின் பின்னணியிலும் ஒரு ஜீவன்; ஒரு சோகம் இழையோடுவதை பார்த்திட முடிந்தது! And பேனா ஓட ஓட- கதையோடு ஒரு அந்நியோன்யம் வளர்ந்து செல்லச் செல்ல- மெது மெதுவாய் நிமிர்ந்து உட்காரத் தொடங்கினேன்!
இந்த இதழ் வெளியான தினம் உங்கள் ஒவ்வொருவரின் ரியாக்ஷன்களையும் அறிந்திட நான் தவித்த தவிப்பு எனக்கு மட்டுமே தெரியும் ! ‘ஙே… ஹீரோவே கிடையாதா?’ என்றோ; ‘‘ஓடிக் கொண்டே போகும் வண்டிக்கு சடன் பிரேக் போட்டது போல க்ளைமேக்ஸ் திடுதிடுப்பென அமைந்துள்ளதே?’ என்றோ முகச்சுளிப்புகள் சன்னமாய் எதிர்பட்டால் கூட- தொடரும் வாசகர்களின் கருத்துக்களை அவை influence செய்திடக் கூடுமோ என்ற பயம் கணிசம்! ஆனால் எகிறியடித்தது இதுவொரு சிக்ஸர் என்பதை நீங்கள் உறுதி செய்த போது- சீஸ் கேக் சாப்பிட்ட மியாவியைப் போல முகமெல்லாம் புன்னகை குடி கொண்டது! ‘கதைகளே இங்கே ஹீரோக்கள்’ என்பதே போனெல்லியின் இந்தக் கதைவரிசையின் பின்னணி சித்தாந்தம் !  எம்.ஜி.ஆர்களையும், சிவாஜிகளையும், ரஜினிகளையும், கமல்களையும் வில்லர்களையும், பிளைஸிகளையும், லக்கிகளையும் ஆராதித்தே வளர்ந்த நமக்கு இந்த நவீன பாலிஸி சுகப்படுமா என்ற நியாயமான பயங்களை ஒரே நொடியில் சுக்கு நூறாக்கினீர்கள் ! முதன்முறையாக மாத இதழ்களுள் டெக்ஸையும், இன்ன பிற வண்ண நாயகர்களையும் ‘அப்படி ஓரமாப் போயி விளையாடுங்கப்பா’என்று சொல்ல ஒரு கிராபிக் நாவலுக்கு சாத்தியமாகும் அதிசயத்தைப் பார்த்த நொடியில் லானாவைப் பார்த்த ஆர்டினைப் போல ‘ஆர்ஹியூ’ என்று கூவத் தோன்றியது எனக்கு! So நடப்பாண்டில் priceless தருணங்களில் ரொம்பவே நெஞ்சுக்கு நெருக்கமானதாய் நான் பார்த்திடுவது முடியா இரவின் ரிலீஸ் சார்ந்த உற்சாகங்களை !
‘வந்தார்… வென்றார்.. சென்றார்’ பாணியில் இன்னமும் ஒரு கௌபாய் நாயகர் முத்திரை பதித்தது 2017-ன் ஆச்சர்யங்களுள் முக்கியமானதும் கூட! ஒரு வெட்டியானையும் - ஒரு வெற்றியாளனாக மாற்றிட முடியுமென்று நிருபித்துக் காட்டிய காதாசிரியர் டோரிசனும், ஓவியர் ரால்ப் மேயரும் இங்கே எனக்கு கற்பனையுலக ராட்சஸர்களாகத் தெரிகிறார்கள் ! And என்னவொரு வரவேற்பு இந்தப் புதிரான நாயகனுக்கு !!!! ‘அண்டர்டேக்கர’ மாத்திரமே நமது வலைப்பதிவினில் உருவாக்கிய அலசல் ஒரு சுனாமிக்கு சமமான வீரியத்தோடிருந்தது என்றால் மிகையில்லை ! இந்தக் களம் நிரம்ப சுவாரஸ்யம் தாங்கியதொன்று என்பதில் எனக்கு துவக்கம் முதலே  ஐயம் இருந்திருக்கவில்லை தான்...ஆனால் இதன் தாக்கம் இத்தனை முரட்டுத்தனமாய் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை! ‘பிணத்தோடு ஒரு பயணம்’ இந்தாண்டின் blockbuster என்பதில் no doubts! A stunning entry !!!
தொடர்ந்த இரு கிராபிக் நாவல்களுமே வெவ்வேறு ரூபத்தில் உங்களை ‘wow’ என்று குதூகலிக்கச் செய்ததும் எனது நடப்பாண்டின் உச்சங்களுள் முக்கியமானவை என்பேன் ! ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" மற்றும் ‘கனவுகளின் கதையிது’ இரு வேறு துருவ முனைகள் எனலாம் - கதைக் களங்களைப்  பொறுத்தமட்டிலும் ! ஆனால் இரண்டுக்குமே  ஒற்றை ஒற்றுமை உண்டு - மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தினில் ! பொதுவாய் மொழிபெயர்ப்பு வேலைகளை ஏதேதோ பணிகளுக்கு மத்தியில் சிக்கிய சிக்கிய நேரங்களிளெல்லாம் செய்வது தவிர்க்க இயலா வாடிக்கை எனக்கு! ஆனால் ஏனோ தெரியவில்லை -   ‘முடியா இரவு’ ; ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ ‘கனவுகளின் கதையிது’ கிராபிக் நாவல்களை இரவுகளில் மட்டுமே எழுதப் பிடித்திருந்தது! ஒவ்வொன்றிலும் இழையோடிய மெலிதான சோகங்களும், ஆற்றமாட்டாமைகளும், இரவின் நிசப்தத்தில் ஒரு மடங்கு கூடுதலான வீச்சோடு தென்படுவது போலத் தோன்றியது! And இரு ஆல்பங்களுமே வெளியாகி உங்களின் ஏகோபித்த சிலாகிப்புகளை ஈட்டிய போது -‘‘கதையிருக்க பயமேன்?’’ என்று போனெல்லி ஆணித்தரமாய் நம்பியதன் பின்னணி லேசு லேசாய்ப் புரிந்தது போலிருக்கிறது ! இத்தனைக்கும் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஏகப்பட்ட ஜாம்பவான் ஹீரோ , ஹீரோயின்களை அணிவகுப்பில் கொண்டிருக்கும் பதிப்பகம் இது ! அவர்கள் இந்த "நாயக சிலாகிப்பிலிருந்து" சற்றே விலகி நின்றுமே சாதித்துக் காட்டத் தீர்மானித்திருந்தால் கைவசம் முறுக்கான சரக்கில்லாது போயிராது என்பதை உணர முடிந்தது! So (இதுவரையிலான) சந்தா E நமது நெடும் பயணத்தின் ஒரு நிஜமான மைல்கல் தருணம்-for sure!!
இன்னமுமே ஒரு அற்புதத் தடமாய் அமைந்த ‘சூப்பர் 6’ பற்றியும் ; 2017-ன் இன்னும் சில மறக்க இயலா moments பற்றியும், அடுத்த ஞாயிறுக்கு எழுதுகிறேன் guys! உச்சங்களைப் பற்றிப் பேசிய கையோடு ஆண்டின் மொக்கைகள் பற்றியும் ; low points பற்றியுமே அலசிடுவோம்-எப்போதும் போலவே ! 
அப்புறம் நானிதுவரையிலும் இங்கே விவரித்தவை எல்லாமே தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்பெஷலாகக் காட்சி தந்த சமாச்சாரங்கள்! So அந்த ஆல்பங்களோ,. கதைகளோ உங்களுக்கு அவ்வளவாய் ரசித்திராது போயிருப்பின்-அவற்றில் நீங்கள் கண்ட குறைகளைச் சுட்டிக்காட்டிடலாம்! அதே போல உங்களது பார்வைகளில் நான் விவரித்திரா சில / பல இதழ்கள் செமையானவைகளாகத் தோன்றியிருப்பின் - would love to hear about them too!
ஊர் கூடி இழுக்கும் தேரை உற்சாகமாய் ஒன்றிணைந்து அணுகிட்டால் அந்த அனுபவத்தின் தாக்கமே அபரிமிதமானது தானே ? இக்கணத்தில் நான் கோருவதும் - உங்கள் ஒவ்வொருவரின் மனத்திறவுகளையே! Let's celebrate the year of comics that has gone by...! 

And அதே கையோடு காத்திருக்கும் 2018-க்கு உங்களின் சந்தாக்களையும் அனுப்பிடலாமே ப்ளீஸ் ?! http://lioncomics.in/2018-subscription/442-2018-subscription-abcd-within-tn.html

மீண்டும் சந்திப்போம் !! Have an awesome weekend !

P.S : 2017 -ன் TOP 3 தருணங்கள் - உங்கள் பார்வைகளில் எதுவோ என்பதை பகிர்ந்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ? 

Sunday, December 03, 2017

அந்த 2 நாட்கள் !

வணக்கம் நண்பர்களே,
  • சில சந்தோஷங்கள் உற்சாகத்தில் கூவச் செய்யும்.... சிலவோ உள்ளுக்குள் நிறைந்தோடும் ஒரு உணர்வோடு மௌனத்தை நாடச் செய்யும் ! 
  • சில தருணங்கள், பக்கத்துவீட்டு பசுமாடு கன்று போட்ட விஷயத்தைக் கூட , கூரை மேலேறி நின்று கொண்டு ஊருக்கே சொல்லிடும்  நமைச்சலை ஏற்படுத்தும் ; சிலவோ சொல்ல நூறு விஷயங்கள் இருந்தாலுமே அமைதியையே தேர்ந்தெடுக்கும் ! 
  • சில சூழல்கள்  கரும்புச்சாறு மிஷினிலிருந்து பிரவாகமெடுக்கும் கரும்பு ஜுஸைப் போல தத்துவங்களை பொழியச்  செய்யும் ; வேறு சிலவோ, ஒரு மோன நிலைக்கு அழைத்துச் சென்று, வாழ்க்கையையே தத்துவார்த்தமாய்ப் பார்க்கச் செய்யும் ! 

இவை அத்தனையுமே ஒரே நேரத்தில், ஒரே ஆசாமியை  ஒரே தாக்காய்ப் போட்டுத் தாக்கினால் விளைவு என்னவாக இருக்கும் ? தொண்டை அடைத்து, கண்கள் வேர்த்து, நாக்கு 'தன்னன்னான்னா" என்று தாளம் போட்டு என்னென்னவோ கூத்துக்கள் அரங்கேறும் ! அவற்றையெல்லாம் சமனப்படுத்த  ஒரு சொம்புத் தண்ணீரை மடக்கு மடக்கென்று குடிப்பதைத் தாண்டி வேறு என்னதான் செய்ய முடியும் ? So அதை அட்சர சுத்தமாய்ச் செய்த கையோடு இங்கே ஆஜராகிறேன் !  

எங்கே ஆரம்பிப்பது ? எதை விவரிப்பது ? எதை விட்டுத் தள்ளுவது ? என்று துளியும் புரியா ஒரு 'பெப்பப்பே' மனோநிலையில் இருப்பதால் -  டைப்படிக்கும் விரல்களின் போக்கிலேயே இந்தப் பதிவினைகொண்டு செல்கிறேன் ! டிசம்பர் இதழ்களை பேக்கிங் செய்து கொண்டு நம்மவர்கள் ஆபீசில் பிசியாக இருந்த அதே கணத்தில் திருமணத்திற்கான பேக்கிங் பணிகள் வீட்டில் நடந்து கொண்டிருந்ததுவரைக்கும் ஸ்பஷ்டமாக நினைவில் உள்ளது ! இம்மாத free gift-ல் கையெழுத்தையும் சேர்த்தே பிரிண்ட் செய்து விடவா ? என்று நமது டிசைனர் கோகிலா கேட்டதும் நினைவுள்ளது ; "முடியவே முடியாது....கோட்டைச்சாமி கைப்பட கையெழுத்து போட்டே தீருவான் !" என்று சொன்னதும் நினைவுள்ளது ; ஒரு முரட்டு பண்டலை மைதீன் கொணர்ந்து வீட்டில் ஒப்படைத்ததும் நினைவுள்ளது ; அதைத் தொடர்ந்து - 'பூட்ட கேஸ் இது' என்பது போலான பார்வையோடு,வீட்டிலுள்ள முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; "இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..!!" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது ! அதன் பின்பாய் நடந்த அத்தனையுமே லைட்டான புகை மூட்டத்தில் ; பாலு மகேந்திராவின் காமெராவில், இளையராஜாவின் பின்னணி இசையோடு  ஏதோவொரு கனவு sequence போலவே மண்டைக்குள் நிழலாடுகிறது ! 

செவ்வாயிரவே ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி, பேக்கிங் முடிந்த நிலையில் - புதனின் காலையும்  புலர்ந்தது ! முதன்முறையாக டி.வி. பேட்டிக்குச் செல்லும் முன்பாய், தன்னிச்சையாய் ஒரு கதக்களி நடனம் நடத்திய முட்டிங்கால்கள்  திரும்பவும் அன்றைக்கொரு ரிகர்சல் நடத்திப் பார்க்கத் துடிப்பதை உணர முடிந்தது ! என்னதான் நமக்கு அந்த 'சூனா-பானா' அவதாரமெல்லாம்  அத்துப்படி என்றாலுமே, காத்திருந்தது ஒரு மெகா இதழின் ரிலீசோ ; வாசக சந்திப்போ கிடையாது - வாழ்க்கையின் ஒரு defining moment என்ற புரிதல் தந்த வயிற்றுக் கலக்கலானது  - ஒரே நேரத்தில் அரை டஜன் பன் பரோட்டாக்களை உள்ளே தள்ளினால் ஏற்படும் கட-முடாக்களை விட வீரியமாயிருந்தது ! போதாக்குறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் - வெறும் ஒற்றை ரூபாயை மட்டும்  தட்சணையாய் தட்டில் வைத்து விட்டு, ஜலதோஷத்துக்கு கஷாயம் போட கணிசமாக துளசி தரக் கேட்டு வைத்தால் கறுப்பாகிப் போகும் குருக்களின் வதனங்களை விடவும் இருண்டு காட்சி தந்தது வானம் ! எந்த நிமிஷமும் பொத்துக் கொண்டு மழை ஊற்றும் போலிருக்க, கூகுளை அடித்து "SIVAKASI WEATHER" என்று தேடினால் அங்கே திரை முழுக்க இடியும், மழையும், குடையுமான படங்கள் மட்டுமே என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டின ! "ச்சை...எனக்கு கூகுளே புடிக்காது" என்று மனசுக்குள் ஓடிய அந்த நொடியில் -   வருண பகவானின் திடீர் கரிசனம் ஊருக்கு நன்மையே என்று புரிந்தாலும் , அப்போதைக்கு சுயநல smurf அவதாரமே எனக்கு சாத்தியமானது ! 'சாமி..கடவுளே...ஏதோ கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்று  மனசுக்குள் நினைக்கத் தொடங்கும் போதே வானம் மடை திறந்திருந்தது ! தொடர்ந்த ஒரு முக்கால் மணி நேரம் மழை சாத்தியெடுக்க, சாலையையே இலக்கின்றிப் பராக்குப் பார்த்துக் கொண்டே நின்றேன் ! ஆனால் surprise !! அடித்த வேகத்துக்கே திடீரென வெளிச்சமும் வானில் விரவ, மழை கடையை  மூடிக் கொண்டது ! தட தடவெனக் கிளம்பி, திருமண மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினால் அங்கே சமையல் அணியினர் ஏற்கனவே ஆஜராகி, பலசரக்குகளும், காய்கறிகளும் ; பாலும், இன்ன பிற சமாச்சாரங்களும் வந்திறங்கும் வேகத்துக்கு ஈடாய் வேலையினில் ஆழ்ந்திடத் துவங்கிருந்தனர் ! ஒரு முட்டையை வேக வைப்பதற்குள் Youtube-ல் ஒரு நூறு ஆராய்ச்சிகள் செய்திடும் எனக்கு - இந்த சமையல் அணிகளின் ஜாலங்கள் என்றைக்குமே  குன்றா வியப்பினை வழங்கத் தவறியதில்லை ! தொடர்ந்த மணி நேரங்களில், பணிகள் துரிதமாய் அரங்கேறத் துவங்க, மாலையும் புலரும் வேளையில் சிறுகச் சிறுக உறவினர்கள் வரத் துவங்க - கைகூப்பும் படலம் துவங்கியது ! 

அதற்கு முன்பாக மண்டப வாசலில் இரு பணியாட்கள் ஒரு முரட்டு ப்ளெக்ஸ் பேன்னரைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! 'இது என்ன சமாச்சாரம் ? நாம் எதுவும் தயார் பண்ணவில்லையே ?' என்றபடிக்கு அங்கே போய்ப் பார்த்தால் தூக்கிவாரிப் போட்டது எனக்கு ! 'ஜொய்ங்' என கம்பளத்தில் பறக்கும் கிட் ஆர்டினும், ஸ்டைலாக நிற்கும் லார்கோவும், டைகரும் இடம் பிடித்திருக்க, அதன் மத்தியில் "இளவரசரே....etc etc " என்ற வாசகங்களோடு ஒரு தினுசான வரவேற்பு வாசகங்கள் !! இது சீனியர் எடிட்டரின் வேலையோ ? என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றிட - அங்கே நின்ற பணியாளர்களிடம் - "இதை யார் மாட்டச் சொன்னது ?" என்று கேட்டேன். அவர்களோ லேசான எரிச்சல் கலந்த தொனியில் "எங்க பாஸ் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்றார்கள் ! "சாமிகளா.. இங்கே பாஸ்.. வில்லன்.. நம்பியார்...பொன்னம்பலம்...ஷண்முகசுந்தரம் ...ஜெமினி கணேசன் ... நாகேஷ் ..சுருளிராஜன்  சிரிப்பு பீஸ்... குணச்சித்திர நடிகர் என்று சகல வேஷமும் போடுவது நான் தான் ! யார் இந்த ப்ளெக்ஸை மாட்டச் சொன்னது ?" என்று குரலை உயர்த்திட - "கமல் நற்பணிமன்றத் தலைவர் மாட்டிட்டு வரச் சொன்னார் !" என்று பதில் சொன்னார்கள் ! ஒரு கணம் தலையும் புரியவில்லை, தூரும் புரியவில்லை !  "பெயரில்லா / முகமில்லா அந்தத் தலைவரின் அன்புக்கு நன்றி ; ஆனால் இந்த பேனருக்கு இக்கட இடம் நஹி !" என்பதை அவர்களுக்குப் புரியச் செய்த கையோடு அதனை அகற்றி, தூக்கி ஓரமாய் கவிழ்த்துப் போடவும் செய்தேன் ! நாமாய், நமக்கே ஊதிக் கொள்ளும் பீப்-பீப்பிக்கள் என்றைக்குமே ரசனைகளுக்குரியவைகளல்ல என்பதில் எனக்கும், ஜுனியருக்கும் என்றைக்குமே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ; and ஒரு குடும்ப விழாவின் போது இதுபோன்ற சமாச்சாரங்கள் வேண்டவே வேண்டாமே என்பதிலும் உறுதியான எண்ணங்கள் எங்களுக்கு ! So அந்த பேனரை ஏற்பாடு செய்திருந்த நண்பர் யாராக இருப்பினும், அதன் பொருட்டான  உழைப்பும், பணமும் விரயமாகிப் போனது குறித்து வருந்தியிருக்கலாம் ; ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு இது களமல்ல என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறேன் ! 

உறவினர் ; நண்பர்கள், தொழில்முறைப் பழக்கங்கள் என்று திரள் சிறுகச் சிறுகக் கூடத் துவங்கிய மாலைப் பொழுதினில் - எனது போனில் வாட்சப் சேதியின் கிணுகிணுப்பு கேட்டது ! பார்த்தால் - நமது சேந்தம்பட்டி வித்வான்கள் குழுவின் கார் எட்டு மணிவாக்கில் உருண்டு வந்து சேர்ந்திடுமென்ற சேதி ! அதற்கு முன்பாகவே  சில நண்பர்களும் ஆஜராகியிருக்க,  சொப்பனசுந்தரியின் பிரசித்தி பெற்ற அந்த வாகனமும் ஒரு வழியாய் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது களை கட்டியது ! "வேதாளர் எப்போ சார் ?" என்ற ரீதியிலான கேள்விகள் அங்கே எழுப்பப்பட்டிருந்தாலும் நான் ஆச்சர்யம் கொண்டிருக்க மாட்டேன் தான் ; ஆனால் நண்பர்கள் குழு 'திருமண விழா' மூடில் இருந்ததால் சந்தோஷங்களின் பரிமாற்றங்களே அங்கே நிறைந்து காணப்பட்டது ! தலீவர், செயலாளர், பொருளாளர் - என்று சங்க பிரதிநிதிகள் அத்தனை பேருமே ஆஜராகியிருந்தது ஒரு ஆச்சர்ய ஹைலைட்டும் கூட ! நிச்சயதார்த்தம் ; ரிசப்ஷன் ; போட்டோ படலம் என்று தொடர்ந்திட, இயன்றமட்டிலும் நண்பர்களோடும் நேரம் செலவிட முயன்றேன்! பந்தியில் சைவம் சாப்பிட்ட நண்பரணி அப்புறமாய் சிவகாசி பரோட்டாவின் மகாத்மியத்தை பரிசோதனை செய்தார்களா ? என்பது தெரியவில்லை ; ஆனால்  இரவு திரும்பவும் மழை வெளுத்து வாங்கத் துவங்கிய போது அதற்கெல்லாம் நேரம் இருந்திராது என்றே நினைக்கிறேன் ! ஒரு மாதிரியாய் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததே பெரும்பாடாகிப் போக - டி-வியைப் போட்டால் "வருது புயல்" என்று பிரெஷாக ஒரு சட்டிப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள் ! தூக்கம் கண்களை கட்டிப் போட - விடியும் பொழுது நலமாய் விடியுமென்ற நம்பிக்கையோடு கனவுலகத்தினுள் புகுந்தேன் ! 

விடிய விடிய மழை கொட்டித் தள்ளும் ஓசை நிஜத்திலா ? கனவிலா ? என்பது கூட சரிவரத் தெரியா நிலையில் ஒரு தினுசாய்த் தூங்கி எழுந்த போது, வாளியில் தண்ணீரைப் பிடித்து வானத்திலிருந்து ஊற்றிக் கொண்டிருப்பது போல கொட்டிக் கொண்டிருந்தது மழை ! And surprise again !! சரியாய் எட்டுமணிவாக்கில் மழை கொஞ்சம் ஓரம்கட்ட - சூரியன் சன்னமாய் எட்டிப் பார்க்க, மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினேன் ! பள்ளிகள் சகலத்துக்கும் லீவு அறிவிக்கப்பட்டிருக்க, மாணவர்கள் செம குஷாலாய் வீடு திரும்பிக் கொண்டிருப்பதை வழிநெடுகப் பார்க்க முடிந்தது ! ஒரே இடம் ; ஒரே சூழல் ; ஒரே நிகழ்வு - ஆனால் அதன் தாக்கம் தான் ஆளுக்கு ஆள் எத்தனை மாறுபடுகிறது ?!! என்ற மகா சிந்தனையோடே சென்றவன் மறுபடியும் அந்த வணக்கம் வைத்து வரவேற்கும் படலத்தினுள் ஆழ்ந்து போனேன் ! பொதுவாய் எனக்கு இந்த மாதிரியான விஷயங்களில் சங்கோஜம் சற்றே அதிகம் ; ஓசையின்றிப் பின்னணியில் இருந்துவிட்டு, ஒதுங்கி கொள்வதையே நாடுவேன் ! ஆனால் தனக்கென்று வரும் போது நம்மையும் அறியாதே ஒரு பற்றுதல் உண்டாவதை அன்றைக்கு உணர்ந்திட முடிந்தது ! மெய்யாக அனைவரையும் வரவேற்று, பந்திக்கு இட்டுச் சென்று, அங்கே அவர்களை பசியாறச் செய்யும் படலத்தில் எத்தனை ரம்மியம் உள்ளதென்பதை முழுமையாய் உணர்ந்தேன் ! பரிச்சயம் குன்றிப் போயிருந்த உறவினர்களோடு சேரனின் வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டே டபுள்ஸ் போய், பழம் நினைவுகளை மீட்டெடுப்பதும் ; நண்பர்களோடு அரட்டை அடிப்பதுமே "குண்டு புக்குகள்" தயாரிக்கும் ஏகாந்தத்துக்குச் சளைத்தவையல்ல என்று அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது ! 

எத்தனையோ நாட்கள், எத்தனையோ மணவிழாக்களில் - கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்தபடிக்கே அருகாமையில் உள்ள டி-வி-க்களில், மேடையில் நடக்கும் திருமண சடங்குகளை கொட்டாவி விட்டபடிக்கே பராக்குப் பார்த்தவனுக்கு - முதன்முறையாக மேடையில் ஏறியமர்ந்து அந்தச் சடங்குகளின் ஒரு அங்கமாகிட நேர்ந்த போது 'திரு திரு'வென்று விழிக்கத் தான் முடிந்தது ! "ஆயிரம் பக்கத்துக்கு ஒரு அயல்தேச மொழியின் படைப்பை தமிழில் தயாரிக்கணுமா ? -செஞ்சுட்டா போச்சு !" என்று அசால்ட்டு காட்ட தெரிந்தவனுக்கு - ஐயர் சொல்லும் மந்திரங்களின் முதல் வரி கூட லத்தீன் பாஷை போலவும், பாரசீக மொழி போலவும் தெரிந்த கணத்தில் - ஞான் குதிரை ஒட்டி வந்துள்ள குண்டுச் சட்டியின்பரிமாணம் எத்தனை குட்டி என்பது புரிந்தது ! ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ?" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..!!" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ! ஐதீகங்கள் ; சம்பிரதாயங்கள் என்று ஏதேதோ தொடர - மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தவனை ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கச் சொல்லி ஒரு தாம்பாளத்தினுள் கால்பதித்து நிற்கச் செய்துவிட்டு, மணமகனை முன்னே அமரச் செய்து, என் பாதங்களைக் கழுவிடச் சொன்ன போது என் ஈரக்குலையே வாய்க்கு வந்தது போலுணர்ந்தேன் ! தொடர்ந்த நிமிடமானது அறுபது வினாடிகளாய்த் தோன்றாது, அறுபது யுகங்களாய்த் தோன்றியது !! திருமணமும் அரங்கேறிட , தொடர்ந்த க்ரூப் போட்டோ படலங்களில் நண்பர்களின் அணியையும் இணைப்பதில் நிறையவே பிரயத்தனம் அவசியமாகியது எனக்கு. மேடை ஏறத் தயங்கிய நண்பர்களை வம்படியாக மேலே அழைத்துச் சென்றான பின்பாய், மத்திய விருந்தினில் அவர்கள் சைவத்தோடு சண்டை போடும் அழகை மீண்டும் ரசித்தேன் ! ஜுனியர் குப்பண்ணாக்களிலும் , அஞ்சப்பர்களிலும், அயராது அதகளம் பண்ணிய அணியானது பட்டர்பீன்ஸோடும், சாம்பாரோடும் கைகுலுக்கியது கண்கொள்ளாக் காட்சியே ! 

ஒரு மாதிரியாய் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாய் மண்டபமும் காலியாகத் துவங்கியது ! ஒற்றை நாளுக்கு முன்பாய் இதே இடத்தில ஒரு எதிர்பார்ப்பும், பரபரப்பும் குடி கொண்டிருந்ததையும், அதே இடத்தினில் -  சகலமும் நன்றாய், நலமாய் அரங்கேறிய சந்தோஷம் தற்போது நிலவுவதையும் உணர முடிந்தது ! விடைபெற்றுச் சென்ற உறவினர்கள் முகங்களில் சந்தோஷமும், 'அட..அதற்குள் விழா முடிந்து விட்டதே !' என்ற சோகமும் சம பங்காகி நிற்பதை கவனிக்க முடிந்த போது - உள்ளுக்குள் ஒரு மெலிதான பெருமிதம் ஓடியது : விருந்தோம்பலும் பழகிக் கொள்ளமுடிந்ததொரு கலை தான் போலும் என்று !! நம்மையும், நம் அழைப்பையும் மதித்து, விருந்தினராய் ஆஜராகிடுவோரை இயன்றமட்டிலும் கவனித்திட வேண்டுமென்ற எங்களது அவா ஓரளவேணும் ஜெயித்திருந்ததென்பதை சில பல கனிவான வார்த்தைகள் உணர்த்தின ! இது வரையிலும் ஒரு பாரமாய், பெரும் சுமையாய்த் தோன்றிய பணிகள் சகலமும், அந்த கணத்தில் சுகமானவைகளாய்  உருமாற்றம் கண்டது போலுணர்ந்தேன் தலைக்குள் ! "எப்படா சாமி - எல்லாம் நல்லபடியா முடியும் ?" என்று 5 மாதங்களாய்ப் பாயைப் பிறாண்டியவனுக்கு - "அட ...ஒரு 150 நாள் கனவை சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஆண்டவன் தந்திருக்கிறார் !!" என்ற புரிதல் பிறந்தது !  

'வீட்டைக் கட்டிப் பாரு... கல்யாணத்தை செஞ்சு பாரு' என்று சொல்லி வைத்த புண்ணியவானின் எண்ணவோட்டம் என்னவென்று சத்தியமாய் எனக்குத் தெரியாது ! அவை சார்ந்த சிரமங்களையும், செலவுகளையும் எண்ணி அவர் அலுத்துக் கொண்டாரா என்றெல்லாம்  எனக்குத் தெரியவில்லை  ! ஆனால் திருமணம் எனும் வைபவம் நம் உயரத்தையும் ; நம் குள்ளத்தையும் ஒற்றைச் செயலில் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது என்பதே நான் படித்திருக்கும் பாடம் ! வாழ்வினில் நாம் ஈட்டியுள்ள சொந்தங்களும், பந்தங்களும் ஒரே நாளில் அணி திரளும் போது நம் உயரத்தை நாமே புரிந்து கொள்ள முடிகிறது ! அதே நொடியில் - ஒரு கூட்டு முயற்சியின்றி ; குடும்பத்தினரின் முழு உறுதுணையுமின்றி - இந்தத் தேர் எல்லையை விட்டே நகர்ந்திடாது என்பதைப் புரிந்து கொள்ளும் நொடியில் நாம் எத்தனை சின்னவர்கள் என்பதும் புலனாகிறது ! வாழ்க்கைக்கொரு புது அர்த்தம் ; உறவுகளின் பலனுக்கொரு புது விளக்கம் - இவற்றைப் புரிந்து கொள்ளவே "கல்யாணத்தைச் செஞ்சு பார்" என்று சொல்லியுள்ளார்கள் என்பேன் நான் ! தலைவணங்குகிறேன் அந்த முதுமொழிக்கு !! 

வாழ்க்கை மறுபடியும் வழக்கமான தடத்துக்குத் திரும்பத் துவங்கிவிட்டது எனக்கு !  "தோர்கல் ராப்பர் என்னாச்சு ? " ; "ஸ்பைடர் டைப்செட்டிங் ஆச்சா ?" என்றபடிக்கே சனிக்கிழமை நம்மவர்களை துளைக்க ஆரம்பித்து விட்டேன் ! "ஆங்...யெஸ்ஜி...மிஷின் available ஹை ஜி...ஓகே.ஜி... வாங்கிடலாம் ஜி" என்று இன்னொருபக்கம் போனில் மாட்லாடத் தொடங்கியும் விட்டேன் ! தொடரும் நாட்களில் தாண்டி வந்துள்ள திருமண ஏற்பாட்டு நாட்கள் சகலமும் சன்னம் சன்னமாய் மறந்து போயும் விடக்கூடும் தான்  ! ஆனால் ஒரு இயந்திரகதியான வாழ்க்கைக்கு உறவுகளின் மகத்துவத்தை உணர்த்திய இந்த 2 நாட்களின் வீரியம் மட்டும் என்றைக்கும் அகலாது !  சின்னவனாய் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன் - மெய்யாக ! 

தம் வீட்டு விசேஷமாய்க் கருதி நேரில் வந்திருந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் சரி ; உளமார்ந்த வாழ்த்துக்களை சொல்லியுள்ள தொலைவிலுள்ள நண்பர்களுக்கும் சரி - நெஞ்சார்ந்த நன்றிகள் !! உங்கள் அன்பே எங்களை வளரச்  செய்யும் அடைமழை ! மீண்டும் சந்திப்போம் guys ! தொடரும் வாரம் முதல் காமிக்ஸ் தடத்தில் தட தடப்போம் - as usual !! Bye now ! See you around !

December ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs/462-december-2017-pack.html