நண்பர்களே,
வணக்கம். உடல் நலம் தேற நீங்கள் அன்பாய்த் தெரிவித்த வாழ்த்துக்கள் பலித்ததோ ; தொண்டையின் விஸ்தீரணத்தை விட மொக்கையாத் தோற்றம் தந்த மாத்திரைகள் வேலை செய்தனவோ தெரியாது - ஆனால் இரண்டுமே இணைந்து என்னை சென்ற வாரம் எழுந்து நடமாடச் செய்தன என்பதே நிஜம் ! Thanks a ton guys ! As always, you are awesome !
ஈரோட்டுப் புத்தகவிழாவினில் பங்கேற்கும் பதிப்பகங்களின் ஸ்டால் ஒதுக்கீடு - சென்ற வாரம் சென்னையில் ஒரு திருமண மஹாலில் குலுக்கல் முறையில் நடந்தேறியது ! இது நாள் வரை இது போன்ற நிகழ்வுகளுக்கு டிமிக்கி கொடுத்து வந்த நான் - ஒரு curiosity -ல் அன்றைய மதியம் அங்கு ஆஜரானேன் ! வழக்கமாய் இந்தப் புத்தக விழா circuit -ல் பங்கேற்கும் பதிப்பக / விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் புதுசாய் 'திரு திரு' விழியோடு அமர்ந்திருந்தவன் நான் மாத்திரமே என்று சொல்லலாம் ! ஒருவாறாக நமது முறை வந்த போது, டபராவிற்குள் கை விட்டு ஒரு நம்பரை நான் தேர்வு செய்து தர - 'ஸ்டால் # 78 - பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி' என்று வாசித்தார்கள். 'சிவகாசி' என்ற உடனேயே அங்கே புருவங்கள் சில உயர்ந்ததை உணர முடிந்தது ! பதிப்பகங்களின் மையம் சென்னையாகவும் ; தலைநகரைத் தாண்டிய புத்தகத் தயாரிப்பு மையங்கள் வெகு குறைச்சலே என்பதையும் புரிந்திட முடிந்தது ! அதிலும் சிவகாசியிலிருந்தொரு பதிப்பகம் எனும் போது அது ஏதேனும் 'சஸ்தாவான' ; தரமில்லா சரக்காய் இருக்குமென்ற ஒரு கணிப்பு இந்தத் துறையில் நிலவுவதை அன்று நெருடலோடு உணர இயன்றது ! ஈரோட்டில் இவ்விழாவை நடத்திடும் 'மக்கள் சிந்தனைப் பேரவை" கூட துவக்கத்தில் நமது விண்ணப்பத்தை அத்தனை சுவாரஸ்யமாய் வரவேற்கவில்லை என்பதற்கு காரணம் இந்த சிந்தனையே என்பதை நமது நண்பர் ஸ்டாலின் சொன்ன போது தான் NBS & சமீபத்திய வண்ண இதழ்களை அவர்கள் பார்வைக்கு அனுப்பிடத் தீர்மானித்தேன் ! நமக்காக நம் கடிதம் பேசியதோ - இல்லையோ ; நமது வண்ணங்களும், சித்திரங்களும் நிச்சயம் பேசி இருக்க வேண்டும் ! 'சிவகாசியிலிருந்தும் தரம் சாத்தியமே' என்ற புரிதலோடு அமைப்பாளர்கள் நமக்கு ஸ்டால் ஒதுக்க சம்மதித்துள்ளனர் !'தொடரும் பிரதான புத்தக விழாக்களில் இனி தவறாது பங்கேற்பது ; நம் ஆக்கங்களை இத்துறையினில் பழம் தின்று கோட்டை போட்ட ஜாம்பவான்களுக்கும் அறியச் செய்வது' priority பட்டியலில் முதன்மை கொள்பவை என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்!
'மனதில் மிருகம் வேண்டும்' பணிகள் நிறைவேறி ; பைண்டிங்கில் உள்ளதால் அதைப் பற்றி no issues ! திருவாளர் சுட்டி / குட்டி லக்கியின் பணிகள் இப்போது தான் ஜரூராய் நடந்து வருவதால் - ஈரோட்டு விழாவின் தருவாயினில் தான் தயாராகும். So - ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரு புது இதழ்களும் உங்களை வந்து சேரும் - ஈரோட்டில் இருந்தாலும் , சந்தாவில் இருந்தாலும் ! சமீபம் வரை நமக்கு ஸ்டால் கிட்டுவதே சஸ்பென்சாக இருந்து வந்ததால் துவக்க நாளுக்கு என்னால் திட்டமிட இயலவில்லை ! So ஆகஸ்ட் 11 (ஞாயிறு ) அங்கு attendance போடலாமென எண்ணியுள்ளேன் ! 'வாலிப- வயோதிக அன்பர்களே - டாக்டர் விஜயம் இன்ன இன்ன தேதியினில் ' பாணியிலான விளம்பரம் இப்போது நினைவுக்கு வருவது ஏனோ தெரியவில்லை :-) Anyways - எப்போதும் போல் நண்பர்களை சந்திக்க ஆவலாய் இருப்பேன் ! Please do drop in folks !
கட்டிலைக் கட்டிக் கண்டு 4 நாட்களை நகற்ற முயன்ற பொழுதுகளில் ஏராளமாய் காமிக்ஸ் trailer களை எனது tablet pc -ல் பரிசீலிக்க இயன்றது ! இந்தாண்டு கோட்டா கிட்டத்தட்ட full என்ற போதிலும் +6 வரிசையில் இன்னும் இரு ரூ.50 இதழ்கள் காத்துள்ளன தானே ?! அவற்றில் ஒரு slot-க்கு ஒரு (புதிய) கார்ட்டூன் நாயகர் தயார் என்பதால், எஞ்சியுள்ள இதழில் எதாச்சும் offbeat ஆகச் செய்தால் நன்றாக இருக்குமே என்ற நமைச்சல் நிறையவே எனக்குள் ! சென்ற பதிவில் நண்பர் ஆதி தாமிரா குறிப்பிட்டு இருந்தது போல - 'ஒரு டெக்ஸ் வில்லரை அசைக்க நமது 'பிரளயத்தின் பிள்ளைகளுக்கோ ' ; இன்ன பிற கிராபிக் நாவல்களுக்கோ நிச்சயம் ஆற்றல் போறாது ' என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ; ஆனால் ஒரு சுகமான ; சலனமற்ற ; ரிஸ்கும் இல்லா வட்டத்துக்குள்ளே தொடரும் நமது பயணத்தை இன்னும் சற்று சுறுசுறுப்பாக்க அவ்வப்போது ஒரு பெக் 'நல்-நேர நஞ்சு' கிட்டினால் தப்பில்லை என்று தோன்றியது !
வழக்கமாய் ஒரு புதுத் தொடரைத் தேடித் புறப்படும் போது என்னவெல்லாம் நான் எதிர்பார்ப்பேனோ - அவை சகலத்தையும் சட்டை செய்யாமல் - விழிகளையும், சிந்தைகளையும் அகலத் திறந்து வைக்கும் போது - கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் படைப்புகளின் வீச்சு மிரளச் செய்கிறது ! அனைத்தும் 'சூப்பர் ஹிட்' என்றோ ; காவியங்கள் என்றோ சொல்லிட இயலாது தான் ; ஆனால் அந்த முயற்சிகளின் சுதந்திரம் ; வழக்கமாய் நாம் பார்த்துப் பழகிப் போன டமால்-டுமீல்களைத் தாண்டிய உலகின் பரிமாணம் ; ஆக்சனுக்கு பின்சீட் கொடுத்து விட்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்கச் செய்யும் படைப்புகள் என்று ஒவ்வொன்றும் ஒரு வகை ! அனைத்துமே வெவ்வேறு மொழிகளில் இருப்பதால் - கதைகளைப் படிப்பது சாத்தியமாகவில்லை எனினும், தேடிப் பிடித்து அவற்றின் விமர்சனங்கள் ; படைப்பாளிகள் தரும் பின்னணி ; சித்திரப் பாங்கு என்று நிறைய observe செய்ய முயன்றேன் !தொடரும் நாட்களில் shortlist செய்து வைத்துள்ள சில தொடர்களை இயன்றளவு விரிவாய் பரிசீலிக்க முயற்சி செய்வேன் ; அவற்றில் தேறுபவை 2014-ல் களமிறக்கப்படும் - நிச்சயமாய் !
புது முயற்சிகளின் தரம் ; அவற்றின் வெற்றி-தோல்வி சாத்தியங்கள் ;' காமிக்ஸ் என்றால் நான் எதிர்பார்ப்பது பரிச்சயமான பாணி மாத்திரமே' ரீதியிலான நண்பர்களின் conservative அணுகுமுறை ; இவை அனைத்தையும் தாண்டி பெரியதொரு அரணாய் இது போன்ற 'விஷப் பரீட்சை வேளைகளில் ' நிற்பது - 'ஆண்டுக்கு 12 இதழ்கள் + கொசுறாய் ஒரு சில' என்ற கட்டுப்பாடு மாத்திரமே ! புதிதாய் கண்ணில் படும் ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 4-6 பாகங்கள் கொண்டவை எனும் போது - அவற்றை ஆறப் போடாமல் சட சட வென வெளியிடுவதே அவற்றின் சுவை சிதையாதிருக்க உதவும். ஆனால் லார்கோ ; ஷெல்டன் ; டெக்ஸ் ; டைகர் ; லக்கி ; சிக் பில் ஒரு மொத்தமாய் கைகளில் ஒரு தடியோடு slow motion -ல் ஓடி வருவது என் மனக்கண்ணில் அவ்வப்போது தோன்றி மறையும் போது, மண்டையைச் சொறிய மாத்திரமே முடிகின்றது ! அதற்காக 'டமால்' என புதியதொரு இதழைத் துவக்கும் வாய்ப்புகளும் குறைச்சல் எனும் போது - 'பழைய பார்முலா + புது இணைப்புகள் ' என்று ஒரு balancing act அவசியமாகிறது!
அத்தி பூத்தார் போல எப்போதாவது ஓரிரண்டு பாகங்கள் ; அல்லது ஒரே இதழோடு நிறைவாகும் ஆக்கமென்று வருவதும் உண்டு என்பதால், நான் அந்தத் தேடலில் ஆழ்ந்திட முயன்றேன் ! அதன் பலனாய்ச் சிக்கியதொரு one shot episode தான் நமது +6 முயற்சியின் இவ்வாண்டுக்கான இறுதி இதழாக அமையப் போகிறது ! இதுவும் கூட ஒரு இரண்டாம் உலக யுத்தப் பின்னணிக் கதையே - ஆனால் சோகமாய் பயணிக்காமல் ; ஆக்க்ஷன் ; யதார்த்தம் ; நட்பு என்று அழகாய் நடை போடும் ஒரு முயற்சி ! குறிப்பாக நாம் இது வரை யுத்த விமானங்களை முன்னிலைப்படுத்தி அதிகமாய்க் கதைகளை வெளியிட்டதில்லை ; அசாத்திய சித்திரத் தரத்தோடு வரவிருக்கும் இந்தக் கதை அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ! இந்தப் பக்கத்தைப் பாருங்களேன் நிதானமாய் :
வார்த்தைகளுக்கு விடை கொடுத்து விட்ட போதிலும், ஓராயிரம் ஓசைகளையும், ஒரு ஆக்ரோஷத்தையும் அட்டகாசமாய் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இந்த ஓவியருக்கு விமானங்கள் மீது காதலாம் ! (ஷெல்டன் ஓவியர் ஒரு truck பிரியர்!!) 1930-களில் போருக்கு முந்தைய போலந்தில் வசிக்கும் 3 நண்பர்களோடு துவங்கும் இந்தக் கதை, சிறுவர்களுக்கே உரித்தான அந்த 'விமானக் காதல்' ; போரின் அண்மை கொண்டு வரும் சோதனைகள் ; நட்பின் வலிமை என்று வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கிறது ! முழு வண்ணத்தில் வரவிருக்கும் இக்கதைக்கு ஓவியர் தீட்டிய சில boards இதோ உங்கள் பார்வைக்கு!
ஓவியர் இவரே ! |
'ஐரோப்பாவில் அழகான வரவேற்பு பெற்ற இதழ் ' என்ற அடையாளம் இருப்பினும், முதல் பார்வையிலேயே இந்தக் கதையினில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளதை உணர்ந்திட முடிந்தது ! எனது gut feel தவறாகவும் இருக்க வாய்ப்புகள் நிரம்பவே உண்டு தான் ; ஆனால் தடுமாறி விழாது நடக்கப் பயின்ற குழந்தை தான் எது ? முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று தோன்றியது - what say guys ?
கிராபிக் நாவல்களின் சுவைக்கு நாம் பரிச்சயம் கொண்டு விட்டால், காத்திருக்கும் களங்கள் ஏராளம் ! பாருங்களேன் நம் பரிசீலனையிலிருக்கும் சில படைப்புகளின் சித்திர விந்தைகளை !!
இதுவொரு சிறார் மாயாஜால பாணிக் கதை ; இதனை இப்போதைக்குப் பிரசுரிக்க நம்மிடம் களமில்லை தான் - ஆனால் அந்த பேசும் சித்திரங்கள் மெய் மறக்கச் செய்கின்றன ! |
'சித்திரமும் பேசும் ' என்பதற்கு இதை விடவும் வேறு உதாரணங்கள் அவசியமா- என்ன ? பூமியில் உலவும் இது போன்ற அசாத்திய ஆற்றலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் ரசிக்கும் நாள் நிச்சயம் புலரும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் இப்போதைக்கு ! See you around soon ! Take care !
P.S: மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !
P.S: மொழிபெயர்ப்புப் போட்டியினைத் தொடர்ந்து "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?' என்ற டிசைன் திறமைகளை வெளிக்கொணரும் போட்டியைப் பற்றி ஹேஷ்யமாய் நாம் இங்கு பேசி இருக்கிறோம் ; ஆனால் முதன்முறையாக அதனை நடைமுறைப்படுத்திட எனக்கொரு சிந்தனை தோன்றியது ! வரவிருக்கும் நமது ஈரோடு புத்தக விழாவினில் நமது ஸ்டால் அலங்காரத்தின் பொருட்டு banner & printouts தயாரிக்கும் பணி நம் முன்னே காத்து நிற்கிறது ! ஆர்வமுள்ள நண்பர்கள் தம் கற்பனைகளுக்கு அழகாய் வடிவம் கொடுத்து - தம் கம்ப்யூட்டர் கிராபிக் திறமைகளையும் வெளிப்படுத்திட இது ஒரு வாய்ப்பாகுமே ? நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ? உங்கள் ஆக்கங்களை உயர் resolution -ல் நமக்கு மின்னஞ்சலாய் அனுப்பிடலாமே ? இன்றிலிருந்து ஆகஸ்ட் 1 வரைக்குள்ளாக அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ; டாப் தேர்வுகள் ஈரோட்டில் பளிச்சிடுவதொடு ; நமது தளத்திலும் ; தொடரும் இதழ்களிலும் வெளியாகும் !