Powered By Blogger

Wednesday, May 28, 2014

இது கூர்மண்டையர் வாரம் !!

நண்பர்களே,

வணக்கம். ஜெட் விமானம் ஏறி கண்டங்களைக் கடக்கும் கோமான்களும், குதிரைகளில் ஏறி அரிசோனா மாகாணத்தைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் கோமாளிகளும் ஒரே வாரத்தில் நம் நினைவுப் பெட்டகத்தினுள் புதைந்து போக - what next ? என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம் ! "காலம் தான் எத்தனை வேகமாய்க் குதி போட்டுச் செல்கிறது !!' என்ற தேய்ந்து போன டயலாக்கை எடுத்து விடாமல் -  ஜூலையில் நமக்குக் காத்திருக்கும் காமிக்ஸ் விருந்துகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்வோமே என்று நினைத்தேன் ! (ஜூன் மாதமே இன்னும் புலராத நிலையில் - ஜூலையைப் பற்றிய preview என்பது எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது - ஆனால் கால்களில் நாமே சக்கரங்களைக் கட்டிக் கொண்டான பின்னே மெதுநடை போடுவது சுலபம் அல்ல தானே ?!) ஜூலையில் நமக்குக் காத்துள்ள இதழ்கள் நான்கு ! அதன் முக்கால் பங்கை "குதிரை பையன்கள்" ஆக்ரமித்துக் கொள்கின்றனர் - வெவ்வேறு பாணிகளில் ! நமக்கு நன்றாகவே பரிச்சயமான ஆக்ஷன் பாணியைக் கையில் எடுத்துக் கொள்பவர் டெக்ஸ் வில்லர் - "காவல் கழுகு" வாயிலாக ! புது அறிமுகமான மேஜிக் விண்ட் தலைகாட்டும் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" கதையும் ஆக்ஷன் தான் எனினும், இது சற்றே மாறுபட்ட ரகம் ! கொஞ்சம் அமானுஷ்யம் ; கொஞ்சம் மாந்த்ரீகம் ; கொஞ்சம் செவ்விந்திய நம்பிக்கைகள் என்ற கலவையில் வரும் ஒரு வித்தியாசப் படைப்பு இது ! மூன்றாம் கௌபாய் - நமது ஒல்லியார் லக்கி - "பூம்-பூம் படலம்" மறுபதிப்பு மூலமாக !  ஜூலையின் இதழ் # 4 தான் இந்தக் கூட்டணியின் highlight ஆக இருக்கப் போகிறதென ஒரு பட்சி என் காதில் சொல்வதை உணர முடிகின்றது ! So நமது preview படலங்களை சன்ஷைன் கிராபிக் நாவலின் இதழ் # 3 - விரியனின் விரோதியிலிருந்து தொடங்குவது தான் சுவாரஸ்யமாய் இருக்குமென்று தோன்றுவதால் here goes :

நிஜத்தைச் சொல்வதானால் - இந்த XIII தொடரின் spin-off கதைகளின் மீது எனக்கொரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை ! இரத்தப் படலம் தொடரையே ஜவ்வு மிட்டாயாய் இழுக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்கு பாகம் 14 முதற்கொண்டே தோன்றிய நிலையில் - அதன் உப கதாப்பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையா ? - ஆளை விடுங்க சாமி ! என்பது தான் எனது initial reaction ! ஆனால் இரத்தப் படலம் தொடர் மறுபடியும் துவங்கியான பின்னே, புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியில் கதைக்களம் தம் கட்டிப் புறப்பட்டிருக்கும் சூழலில் -  கடந்தாண்டு நம் படைப்பாளிகளின் பாரிஸ் அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த போது தான் "XIII மர்மம்" தொடரின் - "பில்லி ஸ்டாக்டன் " என்ற ஆல்பம் தயாராகி அதன் முதல் பிரதிகளை அவர்கள் பார்வையிடுவதைக் காண முடிந்தது ! ஏதேனும் பேச வேண்டுமே என்ற ரீதியில் "இந்த spin -off கதைகளுக்கான வரவேற்பு எவ்விதம் உள்ளது ?" என்று கேட்டு வைத்தேன் ! லேசான புன்முறுவலோடு - "XIII -கென உள்ள ரசிகர் படை இதனை பெரியதொரு வெற்றி கொள்ளச் செய்துள்ளது !" என்று சொன்னார்கள். அதிலும், சமீபமாய் (2012-ல் ) வெளியாகி இருந்த ஸ்டீவ் ரோலாண்ட் (காலனின் கைக்கூலி) ஆல்பம் பெரிய 'ஹிட்' என்று கேள்விப்பட்ட போது என் மண்டைக்குள்ளே சக்கரங்கள் சுழலத் தொடங்கின் ! இத்தொடரின் பிரதான ஆசாமிகளான ஸ்டீவ் ரோலாண்ட் + மங்கூஸ் தலை காட்டும் அல்பம்களின் மாதிரிகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் ! ஊருக்குத் திரும்பியதும், இரண்டையுமே மொழிபெயர்க்கச் செய்து மேலோட்டமாய்ப் படிக்கத் தொடங்கிய போது தான் இவற்றின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink in ஆகத் தொடங்கியது !  ஊருக்குத் திரும்பிய ஜோரில் "காலனின் கைக்கூலி" இதழ் முதலில் வெளி வருவதாய் விளம்பரமும் செய்திருந்தோம் ; but  கதைகள் இரண்டையும் படிக்க முடிந்த போது தான் மங்கூசின் படலத்திலிருந்து துவக்கம் காண்பது தான் சரியாக இருக்குமென்பது புரிந்தது ! So விரியனின் விரோதி நம் திட்டமிடல்களுக்குள் அடியெடுத்து வைத்தது இவ்விதமாய்த் தான் ! இதோ இதழின் அட்டைப்படம் - ஒரிஜினலின் சிற்சிறு முன்னேற்றங்களோடு !



நடந்து முடிந்த சம்பவங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் தான் கதை பாணியே என்பதால் முக்காலே மூன்று வீசம் flashback mode-ல் தான் உள்ளது ! மங்கூசின் பால்ய நாட்கள் ; அவனொரு கொலைகாரனாய் உருப்பெற்ற விதம் ; உலக யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து 1950 -களில் உலகெங்கும் நிலவிய ஒரு வித இறுக்கம் ; அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி தீட்டப்பட்ட பின்னணி ; அதில் மங்கூசின் பங்கு என்று வெகு கோர்வையாய்க் கதையின் framework அமைக்கப்பட்டுள்ளது ! இவை அனைத்துமே மங்கூசின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளதால் சுவாரஸ்யம் இன்னமும் தூக்கலாய் இருப்பதை சீக்கிரமே நீங்களும் உணரப் போகிறீர்கள் ! சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! இரவின் நிசப்தத்தில் நியூயார்க் ரயில் நிலையத்தில் அரங்கேறும் கொலை ; பனி படர்ந்த பெர்லினின் வீதிகளில் மிளிரும் ஒரு மௌன பதைபதைப்பு என்று சிலாகிக்க ஏக விஷயங்களை ஓவியர் படைத்துள்ளார் ! வில்லியம் வான்சின் நுணுக்கங்களை நாம் எதிர்பார்க்காமல் திறந்த மனதோடு இதனுள் நுழைந்தால் நிச்சயம் எவ்வித நெருடல்களும் தோன்ற வாய்ப்பிராது ! பாருங்களேன் ஒற்றை பக்கத்தின் சின்னதொரு teaser !

இந்த இதழைத் தொடர்ந்து ஸ்டீவ் ரோலாண்டின் பார்வையிலான "காலனின் கைக்கூலி" வெளியாகும் போது - இரத்தப் படலத்தின் பின்னணி பற்றிப் புதியதொரு பரிமாணம் நமக்குக் கிடைக்கப் போவது உறுதி ! So இடியப்பம் தொடர்கிறது - புதியதொரு மணம் கமள !! Watch out guys !!

கடந்த (மினி) பதிவினில் நமக்கு காமிக்ஸ் மீதான மோகம் சற்றே குன்றி விட்டதோ ? என்பதானதொரு சிறு கேள்வியினை நான் எழுப்பி இருந்ததற்கு இங்கும், மின்னஞ்சல்களிலும் விளக்கமாய் நிறைய பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். ஆனால் எனது இந்த வினவல் - இங்கு நம் தளத்தில் சமீபமாய்க் குன்றி வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மாத்திரமே மனதில் கொண்டு பின்னப்பட்ட ஒரு திடீர் கேள்வியல்ல ! மாமூலான பதிவுகளில் ; தொடரும் அதன் அரட்டைகளில் பங்கேற்கும் நண்பர்களது எண்ணிக்கை குறைந்து இருப்பின் அது எனக்குப் பெரியதொரு சங்கதியாகக் தெரிந்திருக்காது ; ஆனால் சமீப மாதங்களாகவே இதழ்கள் வெளியான பின்பு அதன் பொருட்டு அரங்கேறும் விமர்சனங்கள் ; விவாதங்கள் சிறிது சிறிதாய் ஈனஸ்வரத்தினுள் பயணிப்பதாய் தோன்றி வந்தது தான் சிக்கலே !அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது  மாறி வரும் நாட்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை ! '90-களின் நடுவாக்கில் நமது லயன் & முத்துவில்  வெளியான கதைகளின் பெரும்பான்மையை இன்று புரட்டிப் பார்த்தால் அவற்றுள் நிறைய 'செம சுமார்' ரகக் கதைகள் இருப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. ஆனால் தட்டுத் தடுமாறி நாம் இதழ்களை வெளியிட்டு வந்த அன்றைய நாட்களில் - அந்த "சுமார்" சரக்கு கூட செம ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டவைகளாய் இருந்து வந்ததும், இன்றும் அவற்றைச் சேகரிக்க நண்பர்கள் முனைவதையும் நினைவு கூர்ந்த போது தான் "வாத்து பிரியாணி" சிந்தனை எனக்குள் முளைக்கத் தொடங்கியது ! ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூக்களும் 'நச்' என்று இனிக்க ; இன்று சற்றே விசாலமான ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் ஒரு தருணம் கிட்டியுள்ள போது நமக்கொரு மெல்லிய திகட்டல் நேர்ந்திருக்குமோ என்ற ரீதியிலான சிறு சந்தேகம் தான் எனது கேள்வியின் பின்னணி ! காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' என்று அவரவர் பாணியில் பதிவிட்டிருப்பது தொடரும் நம் பயணத்துக்கு ஒரு உற்சாக பூஸ்ட் ! 

Moving on, நமது லயனின் 30-வது ஆண்டுமலர் வேளையில் வழக்கம் போலவே பின்னே திரும்பிப் பார்க்கும் "டாப் இதழ்கள் " விளையாட்டில்லாமல் போகலாமா ? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. சாவகாசமாய் நமது 230 இதழ்களின் பெயர் பட்டியலையும் எடுத்து வாசித்த போது அவற்றிலிருந்து எனது TOP 6 இதழ்களைத் தேர்வு செய்ய முனைந்தேன் ! நிறைய குழப்பமிருக்கும் ; எதைத் தேர்வு செய்வது ? என்ற திணறல் தலையிடும் என்று எதிர்பார்த்து அமர்ந்த எனக்கு ஒரு சந்தோஷ ஆச்சர்யம் - வெகு சுலபமாய் எனது favorite 6 இதழ்களைத் தேர்வு செய்ய முடிந்தது ! 'இது தான் முதல் இடம் ; இரண்டாம் இடம் !'  என்றெல்லாம் வரிசைக்கிரமமாய் அவற்றை arrange செய்ய முனையாமல் அந்த 6 பெயர்களை வெறுமனே ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டேன் ! LMS வெளிவருவதற்கு முன்பாக இடைப்பட்ட நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு இதழைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன் ! ஏற்கனவே அவ்வப்போது எனது choices பற்றி நான் எழுதியுள்ள போதிலும், ரசனை சார்ந்த விஷயங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுவது இயல்பே என்ற சால்ஜாப்பு என் கைவசம் இருப்பதால் - இவை எனது current choices என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ?! LMS இதழில் கூட இந்த TOP 6 இதழ்களுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவிருக்கிறேன் என்பதால் - உங்களது தேர்வுகள் ; உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? உங்களது all time favorite Top 6 இதழ்களைப் பட்டியலிடலாமே ? எனது பட்டியலின் முதல் இடத்தில் (தரவரிசையில் அல்ல!!) இருக்கும் இதழ் - இதோ இங்கே இளித்து நிற்கும் ஒரு ஆசாமியின் சாகசமே ! அது பற்றி - அடுத்த பதிவில் ! துவக்கம் மங்கூஸ் எனும் கூர்மண்டையனோடு என்றால் - ஸ்பைடர் எனும் இன்னுமொரு கூர்மண்டையனோடு இந்தப் பதிவுக்கு இப்போதைக்கொரு நிறைவைத் தருகிறேன் ! Catch you later folks ! Bye for now !

September 1984 release !
P.S: வாசக நண்பர் மகேஷ் கண்ணன் தன் இல்லத்துக் குட்டீஸ்களை படம் பிடித்து அனுப்பியுள்ளார் ! ஓரத்தில் இருக்கும் மஞ்சள் சட்டை மாவீரர் புரட்டும் பக்கத்தைப் பாருங்களேன் - கிரீன் மேனர் !! :-)


Thursday, May 22, 2014

கோமான்களும்.... கோமாளிகளும் !


நண்பர்களே,

வணக்கம். கோமான்களும், கோமாளிகளும் கைகோர்த்து வெளிவரும் வேளை இது ! நேற்றைய கூரியரில் லார்கோவின் "வேட்டை நகரம் வெனிஸ்" + சிக் பில் & கோ.வின் "ஒரு பைங்கிளிப் படலம்" அனுப்பி விட்டோம் ! So பெரும்பான்மையான நண்பர்களுக்கு இரு இதழ்களுமே இன்று கிட்டிடும் என்ற எதிர்பார்க்கிறேன் ! லார்கோவின் கதை வரிசையில் இம்மாத சாகசம் சற்றே மாறுபட்டது என்பதோடு adults only  சமாச்சாரங்களும் சற்றே தூக்கலானதொன்று ! நிறைய இடங்களில் லார்கோவின் தோழியருக்கு ஆடை உபயமும், ஒரு சில இடங்களில் கோடீஸ்வரர் லார்கோவுக்குமே கூட நம் புண்ணியத்தில் உடை தானமும் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கத் தான் போகிறீர்கள். (ஆடை உபயங்களை இன்னமும் கொஞ்சம் நளினமாய் நமது டிசைனர் செய்திருக்கலாம் என்பது ஒரு தனிக் கதை !!) கதையின் ஓட்டத்துக்கு ; அதன் மாந்தர்களுக்கு கதாசிரியர் நிர்ணயித்திருந்த flow தனை இயன்ற மட்டிலும் பாழ் செய்திடாமல் இருக்க முயற்சித்துள்ளேன் ! எனது சென்சார் அளவுகோல்களின் மீதான உங்கள் பார்வைகள் வெவ்வேறு விதங்களில் இருக்கப் போகின்றன என்பது உறுதி ; ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கொஞ்சமேனும் முகம் சுளிக்காதிருக்கச் செய்யும் பொறுப்பு மட்டுமன்றி - படைப்பாளிகளின் இச்சைகளை மதிக்கும் பொறுப்பும் எனக்குள்ளதென்பதை மட்டும் சின்னதாய் அடிக்கோடிடுகிறேன் ! Please do bear that in mind !

அதே போல இம்மாத சிக் பில் கதையினையும் கொஞ்சமே கொஞ்சமாய் சென்சார் செய்யும் அவசியமும் எழுந்தது தான் கொடுமை ! கதையைப் படிக்கும் போது உங்களுக்கே அந்த இடங்கள் எதுவாக இருந்திருக்குமென்ற சங்கதி புலப்படுவது உறுதி ! 

எப்போதும் கொஞ்சம் நீளமான பதிவை நான் எழுதுவதும், அதன் பின்னே உங்கள் பின்னூட்டங்கள் பதிவாவதும் வழக்கம் அல்லவா ? முதன்முறையாக ஒரு தம்மாத்துண்டு intro உடன் நான் இடத்தைக் காலி பண்ணுகிறேன் ; தொடரும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலாய் இந்தப் பதிவை அவ்வப்போது develop செய்கிறேன் ! Happy Reading folks...bye for now !

Sunday, May 18, 2014

மேய்ச்சலில் ஒரு சிந்தனைக் குதிரை !

நண்பர்களே,

வணக்கம். 2014-ன் முதல் பாதியை 'பர பர'வென்று தாண்டி வந்து விட்டோம் ! சென்னைப் புத்தக விழாவும், அது சமயம் வெளியான ஜனவரியின் 4 இதழ்களும் நேற்றைய நிகழ்வுகளைப் போல நினைவுகளில் நிழலாடினாலும்  என் கையிலிருக்கும் ஜூன் மாதத்து லார்கோ + சிக் பில் இதழ்களோ - 'கனா கண்டது போதும், அப்பனே..! Wake up ! ' என்று தட்டி எழுப்புகின்றன ! ஆண்டின் இரண்டாம் பாதியை எவ்வளவு முடியுமோ - அவ்வளவு இடியாப்பமாக்கிக் கொள்வதை நாமே ஒரு சமீப வழக்கமாய் ஆக்கி வைத்திருப்பதால் - நம் முன்னே விரியவிருக்கும் அடுத்த 180 நாட்களும் பிசியோ பிசியாக இருக்கப் போகின்றன !  'லொங்கு-லொங்கென்று' குதிரைகளில் தொங்கித் திரியும் முருட்டு உருவங்கள் ஒரு பக்கமாகவும், பள பள ஜெட் விமானங்களில் உலாற்றும் கோமான்கள் இன்னொரு பக்கமாகவும், ஆவிகளையும், அமனுஷ்யங்களையும் விரட்டிச் செல்லும் விசித்திரஙன்கள் பிறிதோர் பக்கமாகவும் என் தலையைக் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளனர் என்பது போலொரு பிரமை ! டி.வி.யில் Magnum ஐஸ்க்ரீம் விளம்பரம் ஓடினால் கூட என் மண்டைக்குள் பதிவாவதோ LMS -ல் இன்னமும் பணி செய்ய வேண்டிய கதைகள் பற்றிய சிந்தனைகள் தான் ! Anyways இந்தப் பரபரப்போடு வாழப் பழகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவமே என்பதால் எங்கள் கடப்பாரை நீச்சல் தொடர்கிறது ! 

LMS எனும் மலை ; மில்லியன் ஹிட்ஸ் ; அந்த ஸ்பெஷல் - இந்த ஸ்பெஷல் என அட்டவணை நிரம்பி வழியும் போதும் கூட எனது சிந்தனை அவற்றையும் தாண்டிய பொழுதுகளின் மீது படிவது அவசியமாகிறது ! கண் மூடித் திறக்கும் முன்பாக இன்னொரு 3 மாதங்கள் ஓடி இருக்கும் எனும் போது - 2015-ன் அட்டவணையை இறுதி செய்யும் வேளை புலர்ந்திருக்கும் ! So - இப்போதே சிறுகக் சிறுக 2015-ன் பக்கமாகவும் சிந்தனைக் குதிரைகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளேன் ! இந்தாண்டின் பாக்கியுள்ள வெளியீடுகளுக்கான திட்டமிடல்கள் ; கதைக் கொள்முதல்கள் ; அட்டைப்பட டிசைன் பணிகள் ; பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஏற்கனவே தொடக்கம் கண்டு விட்டபடியால் அவற்றின் மீது பணி செய்து ஒவ்வொன்றாய் பூர்த்தி செய்யும் வேலைகளே பாக்கி ! So சிந்தனைக் குதிரைகளானது தற்சமயம் சோம்பல் முறித்துக் கொண்டிருப்பதால் - அடுத்த அட்டவணையை கோர்த்திடும் வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றேன் ! 

2014-ன் பாணியான சிங்கிள் இதழ்கள் ; ரூ.60 விலைகள் - என்ற பார்முலா தான் தொடரும் நாட்களிலும்  நமக்குக் கைகொடுக்கவிருக்கிறது என்பதை கடந்த 5 மாத விற்பனைகள் நமக்குச் சொளின்றன ! அதே போல, இரு கதைகள் இணைந்து ரூ.120 விலையில் வெளியாகும் இதழ்கள் விற்பனை முனைகளில் தடுமாறுகின்றன என்பது குண்டு புக் ரசிகக் கண்மணிகளுக்கு நான் சொல்லியாக வேண்டியதொரு சேதியும் கூட ! இரு பாகங்கள் கொண்ட கதைகளை மட்டுமே நாம் இவ்விதம் combo-வாக வெளியிடுகிறோம் எனும் போது இந்தச் சிக்கலுக்கு உடனடித் தீர்வை எனக்கு ஏதும் புலப்படவில்லை ! Maybe ரூ.120 என்ற விலை தான் நெருடலா ? ஒரு வேளை filler pages  ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ? Or maybe சினிபுக் செய்வது போல் இரு பாகக் கதைகளையும் கூட பார்ட் 1 ; பார்ட் 2 என்று தனித் தனி இதழ்களாய் தலா ரூ.60 விலைகளில் வெளியிடுவது தீர்வாகுமா ? என்னோடு சேர்ந்து நீங்களும் கொஞ்சமாய்த் தலையைப் பிய்த்துக் கொள்ளலாமே ? 

நிறைய திறமையான ஆட்டக்காரர்கள் அணியில் இருப்பதும் கூட சில சமயங்களில் சற்றே சிரமமான தீர்மானங்களுக்கு அவசியம் ஏற்படுத்தும் என்பதை 2015-ன் மேலோட்டமான சிந்தனைகள் தெரியப்படுத்துகின்றன ! நம் காமிக்ஸ் கூட்டணியிலிருக்கும் எக்கச்சக்க நாயகர்களுள் - 'கட்டாயம் தேர்வு செய்தே ஆக வேண்டும்' என்ற ரகத்திலான current ஆசாமிகள் யாராக இருப்பார்களென்று எழுதிப் பார்த்தேன் ! இதோ என் முன்னே விழுந்த பெயர்கள்:
  • டெக்ஸ் வில்லர்
  • கமாஞ்சே
  • வேய்ன் ஷெல்டன்
  • லார்கோ வின்ச்
  • லக்கி லூக்
  • சிக் பில்
  • கேப்டன் டைகர்
  • XIII 

இந்தப் பட்டியலில் உள்ளோர் 'கட்டாயம் களம் இறங்கியே தீர வேண்டிய players தான் !' என்பதில் நமது அபிப்ராயங்கள் ஒத்துப் போகுமென்று நான் கருதுதல் சரி தானா ? அவ்விதமிருக்கும் பட்சத்தில் இந்த 'A ' லிஸ்ட் டீமை நமது 2015-ன் அட்டவணையில் முதலில் நுழைத்து விடலாம் அல்லவா ? (நண்பர் XIII -ன் தேர்வு பற்றி லேசாய் mixed reactions இருக்கக் கூடும் தான் ; ஆனால் புதிய திசையில் பயணமாகும் இத்தொடரின் 2 புதிய கதைகள் 2015-க்குள் தயாராகி இருக்கும் என்பதால் அவற்றை முயற்சிப்பது தவறில்லை என்று நினைத்தேன் !)


அடுத்ததாய் நான் போட்ட பட்டியல் - 'நல்ல ஆட்டக்காரர்கள் தான் ; ஆனால் தொடர்ச்சியாய் consistency காட்டாதது மாத்திரமே மைனஸ் ' என்ற ஆசாமிகளின் பெயர்களோடு : 
  • ப்ளூ கோட் பட்டாளம்
  • ரிபோர்ட்டர் ஜானி 
  • மர்ம மனிதன் மார்டின் 
  • CID ராபின்
ப்ளூகோட் பட்டாளத்தின் கதைகள் எல்லா நேரங்களிலும் விலா நோகச் செய்யும் காமெடிக் களங்களாய் இருக்கப் போவதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் ! கிட ஆர்ட்டின் + ஷெரிப் ஜோடியைப் போலவே ஸ்கூபி & ரூபி duo அமைந்திருக்கும் போதிலும், இவர்களது கதைகளில் out & out காமெடி மாத்திரமே குறிக்கோளாய் இருந்திடப் போவதில்லை ! யுத்தப் பின்னணி ; சிற்சிறு வரலாற்றுக் குறிப்புகள் ; அதன் மத்தியினில் நம் ஜோடி என்பது தான் இத்தொடரின் template எனும் போது ஒவ்வொரு முறையும் ஒரு சிரிப்புத் தோரணத்தை எதிர்பார்த்திடாமல் இருக்கும் பட்சத்தில் இந்தத் தொடர் தேறி விடும் ! ரிபோர்ட்டர் ஜானியாரைப் பொறுத்த வரை அவரொரு 'player on eternal trial' என்று சொல்லலாம் ! நல்ல கதைகள் பல தந்திருந்தாலும், இடையிடையே தலைகாட்டும் குழப்பமான plots இவரை ஒரு அக்மார்க் வெற்றி நாயகராக அடையாளம் காணச் செய்வதை சிரமாக்குகிறது ! மர்ம மனிதன் மார்டினின் நிலையோ முற்றிலும் வேறு ! 'என் கதைகளின் சகலமும் இடியாப்பங்களே !' என்று தைரியமாய் பறைசாற்றிடும் இவரது ஆழமான கதைகளுக்கு உள்ள வரலாற்றுப் பின்னணிகளை கண்டு வியப்போரும் உண்டு ; மிரள்வோரும் உண்டு ! LMS மூலம் மீண்டும் வருகை தரும் இந்த நாயகரை 2015-ல் நாம் எவ்விதம் கையாள வேண்டுமென்று விரும்புகிறீர்கள் folks ? இன்னுமொரு low profile நாயகர் நமது C.I.D ராபின் என்று சொல்லலாம் ! பல சுவாரஸ்யமான கதைகளை அவர் வழங்கி இருப்பினும், பெரியதொரு ரசிக மன்றத்தை உருவாக்கிடல் இது வரை  இவருக்கு சாத்தியமாக இருந்ததில்லை ! 2015 இவரது அதிர்ஷ்ட ஆண்டாய் அமைந்திடுமா ? பார்ப்போமே !  

எனது அடுத்த பட்டியல் - புது வரவுகள் ; காத்திருக்கும் அறிமுகங்களின் பெயர்களைக் கொண்டது :
  • டிடெக்டிவ் ஜூலியா
  • ரின் டின் கேன்
  • மேஜிக் விண்ட்
  • டிடெக்டிவ் டைலன்
இவர்கள் ஒவ்வொருவரது தொடர்களிலும் எக்கச்சக்கமான கதைகள் உள்ளன என்பதால் குறைந்த பட்சம் ஒரு 20 ஆண்டுகளாவது அவரவர் மார்கெட்களில் வலம் வந்த அனுபவம் நிச்சயமிருக்கும் ! (ஜூலியா மாத்திரம் 1998-ன் குழந்தை ; பாக்கி அனைவரும் 1980-களின் படைப்புகள் !) ஒரு தொடரில் வலு குறைச்சலாய் இருக்கும் பட்சத்தில் இத்தனை காலம்  குப்பை கொட்டுவதென்பது நிச்சயமாய் இயலாக் காரியம் ! So 2014-ல் அறிமுகம் காணும் இவர்களது துவக்கக் கதைகளின் ரிசல்ட் எவ்விதம் இருப்பினும் - அடுத்தாண்டின் திட்டமிடல்களில் இவர்களுக்கு வாய்ப்புகள் தருவதே நியாயமாக இருக்குமென்பது என் எண்ணம் ! Hopefully I'm right !

கடைசியாய் நான் போட்ட பட்டியல் - 'சற்றே தடுமாற்றம் கண்டுள்ளோர் ' சங்கத்தினரின் பெயர்களைக் கொண்டது ! 'ஐயோ சாமி - வேண்டாமே !' என்ற ரீதியிலிருந்து, சற்றே நாசூக்காய் விமர்சிக்கும் நண்பர்களிடமிருந்து 'ஹாவ்' என்ற கொட்டாவிகளை வரச் செய்துள்ள சமீபத்துக் கதைகளுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் :
  • டிடெக்டிவ் ஜெரோம்
  • சாகச வீரர் ரோஜர்
  • ப்ருனோ பிரேசில் 
  • ஜில் ஜோர்டான்
  • டயபாலிக்
"ஆஹா...இவர்களுக்கென்ன குறைச்சல் ?" என்று நமது die hard ரசிகர்கள் பொங்கி எழுந்தாலும், இந்தக் கூட்டணியின் சமீபக் கதைகள் வெவ்வேறு காரணங்களுக்காக thumbs down பெற்றுள்ளது மறுக்க இயலா உண்மை ! இவை ஒன்றுக்கொன்று நெருக்கமான இடைவெளியில் வெளியானதும் கூட ஒரு விதத்தில் அவற்றின் வெற்றியின்மைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் தான் ! தொடரும் ஆண்டில் நாயகர்கள் தேர்வில் செலுத்தும் கவனத்தை - கதைகளை space out செய்வதிலும் காட்டியாக வேண்டுமென்பது புரிகிறது ! இந்த ஐவர் பட்டியலை கொஞ்ச காலம் ஓரம் கட்டுவது உசிதமா ? அல்லது இவர்களது தொடர்களில் இன்னும் கவனமாய்க் கதைகளைத் தேர்வு செய்து இன்னுமொரு வாய்ப்புத் தந்து பார்க்கலாமா ? What's your take on this guys ?


சமீப வரவான "தோர்கல்" இந்தப் பட்டியல்களில் எவற்றிலுமே இடம் பிடிக்கவில்லையென்ற போதிலும், 2015-ல் மட்டுமன்றி ; தொடரும் சமயங்களிலும் நம் திட்டமிடல்களில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பார் ! பின்னே செல்லச் செல்ல இத்தொடரின் வேகமும், பிரம்மாண்டமும் பன்மடங்கு கூடுவதால் இதற்கொரு சுதந்திரம் தருவது அவசியமாகிறது ! சந்தாவில் "திணிக்கப்படும்" இதழாய் இராமல் - 'பிரியப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் !' என்ற status இத்தொடருக்கு இருக்குமென்பது மாத்திரமே வித்தியாசம் ! 

பழகிப் போன நாயகர்களின் பரிச்சயமான பாணிக் கதைகளோடு உலா செல்வது சுலப வேலை தான் எனினும், கொஞ்சமேனும் வித்தியாசம் காட்ட வேண்டுமென்ற உத்வேகம் என்னிடம் மங்கிடவில்லை ! (தாரமங்கலத்தில் ஒருவர் தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதாய் flash news !!) "மாறுதல்" என்றாலே அது வரலாறாகவோ  ; அலுகாச்சியாகவோ தான் இருக்க வேண்டுமென்ற template-ஐ முதலில் மாற்றியாக வேண்டுமென்ற சிந்தனையின் பிரதிபலிப்பை இந்தாண்டின் "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் " + "தீபாவளி மலர்" தெளிவாய்த் தெரிவிக்கும் ! அனல் பறக்கும் அதகளங்களும் கிராபிக் நாவல்களுக்குச் சாத்தியமே என்பதை தொடரும் மாதங்களில் நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள் ! 2015-ல் கூட இதே போல் சின்னதாய் ஒரு சாளரத்தை திறந்து வைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு - ஏதேனும் வித்தியாச பாணிகளை பரிசோதிக்க முயற்சிப்பேன் ! 

இவை அனைத்துமே எனது தற்போதைய சிந்தனைகளின் உரத்த பிரதிபலிப்புகள் மட்டுமே என்பதால் இவை தான் 2015-ன் உறுதியான blueprint என்று சொல்ல மாட்டேன் ! தொடரும் மாதங்களில் ஒவ்வொரு கதைகளும் perform செய்யும் விதங்கள் எனது தீர்மானங்களை ஏதோ ஒரு விதமாய் மாற்றிடவும் செய்யலாம் !  உங்களின் reactions ; அபிப்ராயங்கள் -எனது கணிப்புகளின் நம்பகத்தன்மையினை செப்பனிட உதவும் என்பதால் இதனை இப்போதே இங்கு பதிவிடுவது தேவலை என்று நினைத்தேன் ! அதே போல - இது முழுக்க முழுக்க புது இதழ்கள் தொடர்பானதொரு சிந்தனைச் சங்கிலியே ; மறுபதிப்பு நாயகர்களை இந்த உரையாடலுக்குள் கொணர வேண்டாமே ப்ளீஸ் ?! வெவ்வேறு பட்டியலுக்குள் நான் பிராக்கெட் போட்டு வைத்திருக்கும் நாயகர்களை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள் என்பதை அறிந்திடவே இம்முயற்சி ! So - கொஞ்சம் அவகாசம் ஒதுக்கி நண்பர்கள் அனைவருமே இதனில் பங்கேற்றால் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது ! தவிர, தற்போது இங்கு தென்படும் மெல்லியதொரு இறுக்கத்தை இலகுவாக்கிட  இந்த கலந்துரையாடல் கொஞ்சமேனும் உதவினால் கூட மகிழ்ச்சியே ! 

சின்னச் சின்ன updates :
  1. லார்கோ + சிக் பில் இதழ்களை வரும் புதன்கிழமை (21 May) இங்கிருந்து அனுப்பிடுவோம் ! இப்போதே அவை தயார் தான் என்ற போதிலும், பொறுமையாய் சந்தாப் பிரதிகள் அனைத்தையும் ஒரு முறை புரட்டிச் சரி பார்த்து அனுப்பிட ஒன்றிரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று தோன்றியது ! So வியாழன் காலைகள் உங்கள் நகரத்து ST கூரியர் கதவுகளைத் தட்டலாம் !
  2. LMS வெளியீட்டுத் தேதி பற்றி நண்பர்கள் கடந்த பதிவின் இறுதியில் வினா எழுப்பி இருந்தனர் ! ஈரோடு புத்தக விழாவின் விண்ணப்பமே இன்னமும் கிட்டவில்லை எனும் போது - அமைப்பாளர்களின் LMS வெளியீட்டுத் தேதி பற்றி நண்பர்கள் கடந்த பதிவின் இறுதியில் வினா எழுப்பி இருந்தனர் ! ஈரோடு புத்தக விழாவின் விண்ணப்பமே இன்னமும் கிட்டவில்லை எனும் போது - ஆண்டவன் கருணையும், -அமைப்பாளர்களின் confirmation-ம்  தான் இப்போதைக்குப் பிரதானம் ! Anyways நமக்கு இம்முறையும் ஸ்டால் கிட்டும் என்ற நம்பிக்கையோடு பார்ப்பதாயின் LMS வெளியீடு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு என்று கொள்ளலாம் ! வெள்ளிக்கிழமை மாலை கூரியரில் பிரதிகளை அனுப்பி விட்டு, சனிக்கிழமை விழாவில் விற்பனையைத் துவக்கினால் எல்லா நண்பர்களுக்கும் ஒரே வேளையில் இதழ் கிட்டிய திருப்தி இருக்குமே ! So ஆகஸ்ட் 2 என்ற தேதியினை வட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் guys ! இப்போதைக்கு நான் "விரியனின் விரோதியோடு " மல்லுக் கட்டக் கிளம்புகிறேன் ! Have a great Sunday ! 

Friday, May 09, 2014

ஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் !

நண்பர்களே,

வணக்கம். உள்ளூர் கோவில் திருவிழாவின் பெயரைச் சொல்லி கடந்த சனிக்கிழமை முதலாய் தொடர்ச்சியாய் 4 விடுமுறை நாட்கள் ; மே மாதத்துத் தகிக்கும் கத்திரி வெயிலுக்கு இடையினில் அதிசயத்திலும் அதிசயமாய் மப்பும், மந்தாரமுமான கிளைமேட் - இத்தனை போதாதா குடும்பத்தோடு 'அக்கடாவென' சின்னதொரு விடுமுறை எடுக்க ? செல்போன் ; கம்ப்யூடர் இல்லா ஓர் கற்கால உலகினில் பொழுதைக் கழித்து விட்டு - நேற்று ஆபீசுக்குத் திரும்பியான பின்னே - back to the routine ! 

நேற்றே புதிய பதிவைத் தயார் செய்ய எனக்கு ஆசை தான் - ஆனால் லார்கோவின் அட்டைப்பட பட்டி-டிங்கரிங் வேலைகள் நேரத்தை விழுங்கி விட்டதால் - ஒரு வழியாக இன்று ஆஜராக முடிந்துள்ளது ! இதோ - 2014-ன் முதல் லார்கோ வின்ச் சாகசத்தின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினல் அட்டையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு background & வர்ணக் கலவைகளில் மாற்றம் செய்துள்ளோம் ! அட்டையின் அழகு மங்கை சற்றே அடக்க ஒடுக்கமாகவும் காட்சி தருவதை உங்களின் கழுகுக் கண்கள் நிச்சயமாய் தவற விட்டிருக்காது !




அட்டையினில் மாத்திரமின்றி, கதையிலும் ஆங்காங்கே 'காற்றோட்டமாய்' உலவிடும் லார்கோவின் தோழிகளை கொஞ்சமாய் நமது "கண்ணிய அளவுகோல்களுக்குள்" கொணர்ந்திட நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது ! கதையின் ஓட்டத்திற்கோ ; கதாப்பாத்திரங்களின் இயல்புகளுக்கோ சேதாரமின்றி கையில் கத்திரி பிடிப்பது நிச்சயமாய் சுலபமாய் இருக்கவில்லை ! இதழ் வெளியான பின்பு - 'ஆஹா...இத்தனை கட்டுப்பட்டித்தனம் அவசியம் தானா ?' என்ற கேள்விகளும் - 'இன்னமும் கூட அழுத்தமாய் கத்திரியைக் கையாண்டிருக்கலாமே !' என்ற அபிப்ராயங்களும் இருக்குமென்பது நிச்சயம் ! கோடீஸ்வரக் கோமானின் கதைகளைக் கையாளும் போதெல்லாம் த்ரில் இருப்பது கதையைப் படிக்கும் தருணங்களில் மட்டுமன்றி , அதன் தயாரிப்பிலும் தான் என்பதை எப்போதோ புரிந்து கொண்டு விட்டதால் - எனது பணியின் தன்மை இன்னமும் சுவாரஸ்யமாகிறது! இதோ - உட்பக்கத்தின் ஒரு ட்ரைலரும் உங்கள் பார்வைக்கு ! ஆங்கிலத்திலும், (ஒரிஜினல் பிரெஞ்சிலும் கூட) ரத்தினச் சுருக்கமாய் கைகொடுக்கும் வசனங்கள் - மொழிபெயர்ப்பின் போது நம்மை நாக்குத் தொங்கச் செய்வதும் கூட லார்கோவின் routine ஆகிப் போய் விட்டது !  கதையின் முழுமைக்கும் ஒரு வித மெல்லிய மிடுக்கும், கதாப்பாத்திரங்களிடம் ஒரு வித திமிரும் விரவி இருக்குமாறு கதாசிரியர் வான் ஹாம்மே செய்துள்ள முயற்சிகளுக்கு கொஞ்சமேனும் நியாயம் செய்ய வேண்டுமெனில் - 'ஆஹா,தமிழாக்கம் நிறைய இடம் அடைக்கிறதே !' என்ற தலைநோவை பெரிதாகக் கருதாமல் - பேனாவை சுதந்திரமாய் நடை போட அனுமதிக்க வேண்டியாகிறது ! அந்த "சுதந்திரம்" நமது டைப்செட்டிங் பெண்மணிக்கு சிம்மசொப்பனமாய் அமைவதை தான் தவிர்க்க இயலவில்லை ! இப்போதைக்கு இத்தனை பில்டப் போதுமென்பதால் - let's move on ! 
ஜூன் இதழ்களின் அச்சுப் பணிகள் தொடரும் வாரத்தில் துவங்கிடும் என்பதால் - ரொம்பவே முன்னதாய் நமது காமிக்ஸ் காலெண்டரில் ஜூனுக்கான தேதியைக் கிழித்து விட இயலும் ! நிதானமாய் செயல்படவும் அவகாசம் இருப்பதால் அச்சில் கூடுதலாய்க் கவனம் செலுத்த முயற்சிப்போம் ! Fingers crossed ! இதோ சிக் பில் இதழின் அட்டைப்படமும் கூட - பின்னே கதைச் சுருக்கத்தோடு ! 

LMS -ன் பணிகள் இன்னொரு பக்கமாய் தனித் தண்டவாளத்தில் பயணம் செய்து வருகின்றன ! NBS -க்கு நேர்ந்தது போல அட்டைப்படங்களில் இம்முறை நமக்கு ஜாஸ்திக் குழப்பங்கள் நேரவில்லை என்றே சொல்லுவேன் முதல் முயற்சியிலேயே - முன் + பின் அட்டைகள் பிரமாதமாய் வந்திருப்பதாய்த் தோன்றியது ! வர்ணக் கலவையில் டிஜிட்டல் வேலைப்பாடுகளை மட்டும் நேர்த்தியாய்ச் செய்திட முடிந்தால் - LMS-ன் அட்டைப்படம் அமர்க்களமாய் இருக்கப் போவது உறுதி ! அப்புறம் - it's official now ! பெல்ஜிய சாக்லேட்டும், இத்தாலிய ஐஸ்க்ரீமும் தனியாய்த் தனியாய்ப் பரிமாறப்படும் ! So அளவில் எவ்வித compromise இன்றி மார்ஷல் டைகர் + லக்கி லூக் + ரின் டின் கேன் முழு வண்ணத்தில் வழக்கமான பெரிய சைசிலேயே வந்திடுவர் ! அளவு கூடுவதும், கூடுதலாய் ஒரு இதழின் அட்டைப்படம் + பைண்டிங் செலவுகளும் தலைதூக்குவதும் பட்ஜெட்டில் உதைக்காது இல்லை ! ஆனால் ஏற்கனவே நான் சொன்னது போல - இத்தகைய பிரத்யேக தருணத்தில் நம்பர்கள் நம் மனக்கண்ணில் பெரியதொரு இடத்தை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்பதால் the show will go on as planned ! 

இடைப்பட்ட ஜூலையில் கொஞ்சமே கொஞ்சமாய் லேசான diet இருக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் - எங்களது சுமை சற்றே குறைவாக இருக்குமென்ற ஆசை எழாது இல்லை தான் ! But நெய்வேலி புத்தகக் கண்காட்சியினர் மனது வைக்கும் பட்சத்தில் 'சூப்பர் 6-'ன் முதல் இதழான THE BOOK FAIR SPECIAL அந்த மாதத்துப் பட்டியலுக்குள் அடங்கிட வாய்ப்புகள் பிரகாசம் ! So - ஜூலையின்அட்டவணை பின்வருமாறு இருந்திடும் : 

  • விரியனின் விரோதி - ரூ.60 - சன்ஷைன் கிராபிக் நாவல் 
  • பூம்-பூம் படலம் - ரூ.60 - சன்ஷைன் லைப்ரரி 
  • "ஆத்மாக்கள் அடங்குவதில்லை !" (மேஜிக் விண்ட்) - (வண்ணத்தில் )
  • காவல் கழுகு (டெக்ஸ் வில்லர் ) - black & white (SUPER 6)

திரும்பிய பக்கமெல்லாம் மலையாய் காமிக்ஸ் குவியும் இந்தத் திடீர் அனுபவம் ஒரு திகட்டலை உருவாக்கிடக் கூடாதே என்ற சின்ன ஆதங்கமும் எனக்குள் உண்டு தான் ! 'வைச்சால் குடுமி - அடிச்சால் மொட்டை !' என்று பயணிக்கும் நமது வண்டிக்கு 2015-ல் cruise control என்றதொரு mode -ஐ அறிமுகம் செய்ய வேண்டுமா ? கொஞ்சமாய் வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்வது தேவலையா ?or are we doing alright ? இது பற்றிய  உங்கள் எண்ணங்களைத் தயங்காது சொல்லுங்களேன் ! ஆர்வமாய்க் காத்திருப்பேன் உங்கள் உள்ளங்களை அறிந்திட ! மலையாய்க் குவிந்து கிடக்கும் பணிகள் அழைக்கின்றன என்பதால் it's bye for now folks ! See you around soon !  


P.S : இப்போது வரை சூப்பர் 6-ன் சந்தாக்களைக் கட்டியிரா நண்பர்களுக்கு சின்னதொரு reminder !!