Powered By Blogger

Friday, February 28, 2020

சேமியா ? ஜவ்வரிசி ?

நண்பர்களே,

வணக்கம். மார்ச்சில் மார்ச் புலர்வதில் ஸ்பெஷலாய் ஏதும் இல்லை தான் ; ஆனால் இந்த மார்ச்சின் இதழ்களில் நிறையவே ஸ்பெஷல் சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்கொரு எண்ணம் !! And yes - இன்று காலைப்பொழுதிலேயே உங்களது கூரியர்கள் சகலமும் நம் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டன ! And yes - இரவு கூரியர் அலுவலகத்திலிருந்தும் அவை கிளம்பி விட்டதை உறுதி செய்தும்  விட்டோம் ! So நாளைய பொழுது உங்கள் இல்லங்களின் கதவுகளை Damocles & டீம் தட்டுமென்று எதிர்பார்த்திடலாம் ! Of course - கூரியர்கள் சொதப்பும் ஊர்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிவரும் என்பதும் புரிகிறது ; and -  "வெள்ளிக்கிழமைகளில் டெஸ்பாட்ச் பண்ணாதேன்னு உனக்கு எத்தினிவாட்டி படிச்சுப் படிச்சுச் சொன்னாலும்  புத்தியே வர்றதில்லே ; ஏழு கழுதை வயசானாலும் - தேற மாட்டேங்கிறியே போ !!" என்று கண்சிவக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதும் புரிகிறது ! ஆனால் இருபத்தியெட்டே தேதிகள் கொண்ட மாதத்திலும் நம் அவசரங்களை பைண்டிங் பணியாளர்களின் சிரங்களில் குவிப்பது நடைமுறை சாத்தியம் அல்ல எனும் போது, இந்த friday despatch தவிர்க்க இயலாது போயிற்று !

இதுவொரு லீப் ஆண்டு என்பதையும், இந்த பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்பதையும் ரொம்ப லேட்டாகவே கவனிக்கிறேன் !! So "பிப்ரவரியில் மார்ச்" என்று காலரை லைட்டாகத் தூக்கி விட்டுக் கொள்வோம் ! 

Anyways, இம்மாதத்து 4 இதழ்களோடு கொசுறாய் ஒரு Color Tex இதழும் தொற்றிக் கொண்டிருக்கும் கூரியர் டப்பிகளுக்குள்ளே ! இந்த மார்ச்சில் மெகா இதழ்கள் நிறையவே இருந்தாலும், அவை சார்ந்த  உங்களின் ரியாக்ஷன்களை அறிந்து கொள்ளும் அவாவும் என்னுள் கணிசமாகவே இருந்தாலும் - இந்தக் குட்டி புக் கொணரக் காத்திருக்கும் அலசல்களை தான் நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்திருப்பேன் ! இதழ் கைக்கு கிடைத்த பின்னே ; அந்த 32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே - 'அதிகாரிப் பாயசம்' எவ்விதம் சுவைக்க உள்ளதென்று தெரிந்து கொள்வதில் மாமூலான ஜாலிகளைத் தாண்டியும் ஒரு காரணம் உள்ளது ! அதை தொடரும் நாட்களில் உங்கள் பாயசங்களைச் சுவைத்துக் கொண்டே சொல்லி வைக்கிறேனே ? So நாளைய தினம் எனக்கு சேமியாவா ?  அதிகாரிக்கு ஜவ்வரிசியா ? என்று அறிந்து கொள்ளும் ஆவலோடு  இப்போது நடையைக் கட்டுகிறேன் - ஒரு குளிர்நடுக்கும் கி.நா.வோடு மல்லுக்கட்ட !! Bye guys ; see you around !! 
P.S : www.lioncomics.in தளத்தில் ஆன்லைன் லிஸ்டிங் செய்தாச்சு ; இன்னொரு தளத்தில்  நாளைக் காலை !! http://lioncomics.in/monthly-packs/693-january-2019-pack-.html

Saturday, February 22, 2020

இரு விருந்துகள் - இரு விழிகளுக்கு..!

நண்பர்களே,

வணக்கம். 'பழசு வேணும் ; வேணாம் !' என்ற சர்ச்சை நான் மறுக்கா 16 வயசை எட்டிப் பிடிக்கும் வரையிலும் ஓடக்கூடியதே என்பதால், ஆவேசப்பட்டு சாலமன் பாப்பையாவாகி, தீர்ப்பென்று எதையாச்சும் சொல்லி வைத்து அப்பாலிக்கா ஆப்பில் அமர்ந்த ஐயாவாகிட இஷ்டமில்லை ! So   "லட்சியம் முழுசும் புதுசு ; நிச்சயம் 90% - 10% " என்று தேர்தல் அறிக்கை பாணியில் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் ! 2021 இன்னமும் ஏக தொலைவில் இருப்பதால், நடப்பாண்டின் போக்கில் யோசித்துக் கொள்ள அவகாசம் தான் கணிசமான உள்ளதே ! So இப்போதைக்கு Forward Ahoy !! என்று காத்திருக்கும் புது இதழ்கள் பக்கமாய்க் கவனங்களைத் திருப்புவோமா ?

மார்ச்சின் சந்தா A சார்பில் அதிரடி மேளா ஒன்று காத்துள்ளது - DAMOCLES டீமின் மறுவருகையோடு ! இந்தத் தொடரை மட்டும் இரண்டே டபுள் ஆல்பம் தொகுப்புகளோடு மங்களம் பாடிடும் விதமாய்ப் படைப்பாளிகள் திட்டமிடாது இருப்பின், LADY S சாதிக்கத் தவறிய அனைத்தையும் ஸ்டைலான இந்த DAMOCLES ஏஜெண்ட் சாதித்திருப்பர் - at least நம் மத்தியிலாவது ! சென்றாண்டின் ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களுள் ஒன்றாய் அறிமுகமாகி, "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" செய்த அதகளத்தையும் தாண்டி, கவனத்தை ஈர்த்த ஆக்ஷன் த்ரில்லர் இது ! And இம்முறை துளியும் குறையா பரபரப்பு + நிறையவே மெல்லிய உணர்வுகள் + கொஞ்சம் கிச்சாங்கோ-முச்சாங்கோ பகுதிகள் - என ஒரு முழுநீள entertainer ஆகக் காத்துள்ளது "பிழையிலா மழலை !" நமது காமிக்ஸ் உலகுக்கேனும் ரொம்பவே வித்தியாசமான கதைக்கரு (!!) இம்முறை ! And அதனை சித்திரங்கள் பிரமாதப்படுத்தியுள்ளன என்றால் - கலரிங் ஆர்ட்டிஸ்ட் ஒரு புது  உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ! புதுயுக டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால், அவரது கைவண்ணம் பக்கத்துப் பக்கம் வண்ணச் சிதறல்களில்  தெறிக்க விடுகின்றது ! இன்று அச்சு நிறைவுற்று, இதன் உட்பக்கங்களைப் பார்த்த போது மூச்சு வாங்காத குறை தான் ; simply breathtaking stuff !! So மார்ச்சில் ஒரு visual விருந்து வெயிட்டிங் என்பேன் !! இதோ ஒரிஜினல் டிசைன்களை அப்படியே முன் & பின் அட்டைகளுக்குத் தத்து எடுத்துக் கொண்டதன் preview :
ஒரு ஜனரஞ்சக ஆக்ஷன் கதையே எனினும், கதையினூடே பயணிக்கும் மெல்லிய இணைத்தடமொன்று சற்றே நெளியச் செய்தது என்பது நிஜம் ! போன வருஷம் இதனை Cinebook ஆல்பத்தில் ; இங்கிலீஷில், அவசரம் அவசரமாய் , மேலோட்டமாய் வாசித்த போது அவ்வளவாய் கவனித்திருக்கவில்லை ! ஆனால் பேனாவோடு பயணிக்கத் துவங்கிய சமயம் லைட்டாக ஜெர்க் அடித்தது தான் ! So Recommended for 18+ என்ற ஸ்டிக்கரோடே இந்த ஆல்பம் உங்கள் கைகளை எட்டிடும் ! சற்றே கவனம் ப்ளீஸ் !
Moving on, மார்ச்சின் visual விருந்து அத்தனை சீக்கிரம் முடிவதாய் இல்லை என்பதே சேதி !! ஜம்போ காமிக்ஸ் சீசன் 2 -ன் இறுதி இதழான "நில்..கவனி..வேட்டையாடு" - இம்மாத இதழ்களுள் "கண்கவர் போட்டியில்" செம tough தந்திடக் காத்திருக்கும் முரட்டுப் போட்டியாளர் ! கதையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் - இந்த இதழின் தலைப்பையே சொல்ல வேண்டி வரும் - simply becos இது முழுக்க முழுக்கவே ஒரு மனித வேட்டையின் ரணகளங்களை சொல்லிடும் ஆக்கமே ! சற்றேற 100 ஆண்டுகளுக்கு முன்பாய் கானகங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது மேட்டுக்குடிகளின் ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்திருக்கும் போலும் ! அந்தக் காலகட்டத்தில் நடைபெறும் ஒரு racy ஆக்ஷன் த்ரில்லரே இம்மாதத்து ஜம்போ !! லாஜிக் பார்த்தால் இங்கே அண்டர்வெர் கழன்று போகுமென்பது உறுதி - ஆனால் அந்த லா-ஜி-இக்கென்னா பார்க்கவெல்லாம் நேரமே இராது - முதல் பக்கத்திலிருந்து ஓட்டமெடுக்கத் துவங்கும் கதையினில் ! And இங்குமே ஒரு not so common விஷயத்தினைப் பார்த்திடவுள்ளோம் - பச்சைபசேலென்ற அமேசான் கானகப் பின்னணியில் !! Maybe கேப்டன் பிரின்ஸ் சாகசத்தில் கடைசியாய்ப் பார்த்திருப்போம் அமேசானின் அசாத்திய வனங்களை ! இங்கே கதையும், சித்திரங்களும், அந்த retro style வர்ணங்களும் போட்டி போட்டுக்கொண்டு அமேசானின் குறுக்கிலும், நெடுக்கிலும் வலம் வருவதால் - National Geographic சேனலில் ஒரு ஹாலிவுட் படைப்பைப் பார்த்த effect இருக்கப் போகிறது !! "முட்டைக்கண்ணன் ஓவரா பில்டப்பை ஏத்துறானோ ?" என்று கெக்கேபிக்கே காட்டிட விழையும் அன்பர்களுக்கு தொடரும் images சந்தேக நிவர்த்திகளாய் அமைந்திடக்கூடும் ! Here are the previews :  

அட்டைப்படம் - அட்சரசுத்தமாய் ஒரிஜினலே !! என்ன ஒரே நெருடல் - முன்னட்டையில் ஐயாவும், பின்னட்டையில் அம்மாவும் வாயில் தம்மோடு காட்சி தருவது தான் !! தவிர்க்க இயலவில்லை !! 

Thus end the previews of MARCH '20 !! 

இங்கொரு சின்ன கவனக்கோரல் ப்ளீஸ் : இந்த ஜம்போ காமிக்ஸ் இதழானது - சீசன் 2-வின் இறுதி இதழே !! ஜம்போவின் மூன்றாவது சீசன் ஏப்ரல் முதலே துவக்கம் கண்டிடவுள்ளது ! ஆகையால் சீசன் 2-ன் சந்தாவினில் சேர்ந்திருக்கா நண்பர்கள் ; சீசன் 3-க்கு மட்டுமே சந்தா செலுத்தியுள்ள நண்பர்கள் - கண்சிவக்காதிருக்கக் கோருகிறேன் ! போன மாசமே - "அந்தியின் ஒரு அத்தியாயம்" எனக்கு வரலை !!! அது எப்படி அனுப்பாமே விட்டுப் போச்சு ?" என்று நம்மவர்களிடம் ருத்ரதாண்டவம் ஆடிய  நண்பர்கள் நிறையவே ! அவர்கட்குப் பொறுமையாய் விளக்குவதற்குள் ஒரு வழியாகிப் போனார்கள் நம்மாட்கள் ! So இம்மாதமும் அதே routine வேண்டாமே - ப்ளீஸ் ?

ஜம்போ சீசன் 3 - ஏப்ரல் 2020 முதல் - "பிரிவோம்....சிந்திப்போம்" ஆல்பத்துடன் துவங்குகிறது !! 

Before I sign off - சில குட்டியான updates : 
 1. 2020-ன் சந்தாதாரர்களுக்கான loyalty points-க்கு ஈடாய் வண்ண ஆர்ச்சி புக்கா ? டி-ஷர்ட்டா ? அல்லது பாய்ண்ட்களை முன்னெடுத்துச் செல்வதா ? என்ற choice தந்திருந்தது நினைவிருக்கலாம் ! இதுவரைக்கும் 66 பேர் மட்டுமே தமது தேர்வ்களை சொல்லியுள்ளனர் ! And அவற்றுள் 63 - ஆர்ச்சி புக்குக்கு 'ஜெ' போடும் குரல்கள் ! பாக்கிப் பேர் சற்றே சிரமம் பாராது தங்களின் தேர்வுகளைச் செய்தால் - ஏப்ரலின் இறுதிக்குள் வண்ணத்தில் சட்டித் தலையனை சட்டுப்புட்டென்று ரெடி பண்ணி  விடுவோம் !! Please guys ? 2020-ன் அன்பளிப்பை உங்களிடம் ஒப்படைக்கும் தினமே 2019-ன் பாய்ண்ட்ஸ்க்கான ஈடு என்னவென்பதையும் அறிவிக்க உதவிடும் !!   
 2. புதுசாய்க் கதைகள் ; புதுசாய்ப் பரிசீலனைகள் என்று ஒருபக்கம் ஓடிக் கொண்டேயுள்ளன ! ஒரே கொடுமை என்னவெனில், சமீபமாய்க் கண்ணில் பட்டு வரும் அத்தனை கௌபாய் கதைகளுமே செம தெறியாய் இருந்து வருகின்றன ! ஓவராய் அதே ஜானரைப் பிடித்துத் தொங்கித் திரிய வேண்டாமே என்று பார்த்தாலும் - இந்தப் புதுப் படைப்புகள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்புவதில் எதையுமே கழிக்க மனசு ஒப்ப மாட்டேன்கிறது ! "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ? 
 3. ஈரோட்டு ஸ்பெஷல் குறித்து உங்களின் மெஜாரிட்டி தேர்வுகள் ஒரே ரீதியில் இருந்ததைக் கவனித்தேன் ! So புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா ஒருங்கே ? 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான்...! 
 4. நடப்பாண்டின் முதல் 200 சந்தாதார்களுக்கொரு டி-ஷர்ட் நம் அன்புடன் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! அடுத்த பதிவில் அந்தப் பட்டியல் இடம் பிடித்திடும் ! 
இளவரசியின் black & white இதழ் மட்டுமே பாக்கி - எடிட்டிங்கை முன்னிட்டு ! So நான் அதனுள் மூழ்கிட நடையைக் கட்டுகிறேன் !! Bye all....Have a Super Sunday !! See you around !!

Wednesday, February 19, 2020

ஒரு மாறா பயணத் துணைவன் !

நண்பர்களே,

வணக்கம். முந்நூற்றிச் சொச்சம் பின்னூட்டங்கள் ; so கம்பெனி ரூல்ஸ்படி இதோவொரு உபபதிவு !! And இந்த உ.ப. நிச்சயமாய் சுவாரஸ்ய அலசல்களுக்குப் பஞ்சம் வைக்காதென்றொரு பட்சி சொல்கிறது ! 

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு கேள்வியுண்டு !! காமிக்ஸ் வாசிப்பினில், மொத்தமாய், துளியும் மீதங்களின்றி, துடைத்து எடுத்தார்போல - பழசுகளுக்கு ஓர் பெரும் டாட்டா சொல்லி விட்டு, புதுசுகளின்  பக்கம் மட்டுமே கவனங்களை செலுத்துவது நமக்கு என்றைக்கேனும் சாத்தியப்படுமா ? - என்பதே அந்தக் கேள்வி !!

எண்பதுகளில் பக்கிரிசாமி கடா மீசைகள்  ; தலைவாழை இலை சைஸுக்கான  காலர்கள், ஒரு செங்கல் அகலத்துக்கான பெல்ட்கள் இடையில் நெளிய, ஜமுக்காள நீளத்துக்கு அகன்று நிற்கும் பெல்பாட்டம் பேண்ட்களோடு சுற்றித் திரிவதற்கு பேஷன் என்று பெயர் ! இதில் குருவிமண்டை போல ஸ்டெப்கட்டிங் வேறு !! அக்காக்களின் திருமண போட்டோக்களை எடுத்துப் பார்க்கும் போது -  அந்நாட்களுக்கேற்ற மேற்படி இஷ்டைலில், பின்புலங்களில் நிற்கும் அடியேனைப் பார்த்தால் தரையில் உருண்டு, புரண்டு சிரிக்கத் தோன்றுகிறது !   

ஒரு எட்டுப் பத்து ஆண்டுகள் ஓட்டமெடுத்த வேளையில் பேண்ட்களின் விசாலம் சபக்கோவென்று வற்றிப் போய் tights ஆயின ! கிராமத்து மைனர் ரேஞ்சிலான பெல்ட்கள் தம்துண்டாகிப் போயின அகலத்தில் ! குருவிக்கூட்டுத் தலையலங்காரங்களும் போயே போச்சு  ! எட்றா - நம்ம கல்யாண போட்டோக்களை என்று ஆல்பத்தைப் புரட்டினால் - நாசருக்கும், நாகேஷுக்கும் இடைப்பட்டது போலொரு ஆசாமியே கண்ணில் பட்டான் ! மறுக்கா சிரிப்புப் படலமே ! 

ஆக இப்படி ஒவ்வொரு தசாப்தத்துக்கும்  நடை ; உடை ; சிகை ; என்று ஏதேதோ மாறிடுவதையும், புதியன வரும் நொடியில் பழையன கழிவதையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் ! ஒரு ஆர்வக் கோளாறில் எண்பதுகளின் பெல்பாட்டம் பேன்ட்டைப் போட்டபடிக்கே வீதியுலா போயின் - 'நேத்திக்கு வரைக்கும் நல்லா தானே இருந்தான் ??..அச்சோ ' என்ற உச்சுக் கொட்டும் படலங்களே மிஞ்சிடும் அல்லவா ?! 

ஆனால்...ஆனால்...காமிக்ஸ் வாசிப்பெனும் ஒரு குட்டியூண்டு வட்டத்துக்கு மாத்திரமே இந்தப் பொது விதி apply ஆகிட மறுக்கிறதே ?!!

இதோ 1984-ல் முதன்முறையாக வெளியிடும் போதே 'ஓவராய்..ரெம்போ ஓவராய்ப் பூச்சுற்றல் உள்ளதே'- என்று தலைசுற்றிட - அன்றைக்கே கொஞ்ச sequences-களில் கத்திரி போட அவசியமாகிட்ட  இரும்புமனிதன் ஆர்ச்சி - 36 ஆண்டுகளுக்குப் பிற்பாடு பிரெஷாக களம் காண்கிறான் - ஆரவாரமான வரவேற்போடு ! 

இதோ 1970-களில் உருவான இரும்புக்கையாரின் ஆல்பங்களை இன்றைக்கும் ஆசை ஆசையாய் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஒரு மூத்தோர் அணியே ரெடி !!

இப்போதும் நமது வலைமன்னன் ஸ்பைடராரை மறுக்கா கண்ணில் காட்டினால் - கண்ணெல்லாம் ஆனந்தக் கண்ணீரோடு உச்சி முகர ஒரு அணியே ரெடியாய் இருக்குமென்பது obvious !!

சரி, சூப்பர் ஹீரோக்களுக்குத் தான் இந்த மவுஸோ ? என்று நினைத்தால் நடு எண்பதுகளில் காமிக்ஸ் படிக்கத் துவங்கிய நண்பர்களணியோ - "ஜான் மாஸ்டர் மறுக்கா வருவாரா ? இரும்புக்கை நார்மன் வரில்லாவா ? இரட்டை வேட்டையர் ?? XIII மறுக்கா-மறுக்கா-மறுபதிப்பு கிடையாதா ? என்ற ரேஞ்சில் தாக்கிடுவதை பார்க்கிறோம் ! 

Oh yes - நோஸ்ட்டால்ஜியா ; பால்யத்தின் அடையாளங்கள் ; காலத்தில் திரும்பிப் போயிடும் யுக்தி என்றெல்லாம் இதற்கு விளக்கங்கள் சொல்லிடுகிறோம் ! ஆனால் "எனக்கு பழைய நெனப்பா கீதுச்சு ; so ஸ்டெப்கட்டிங் வெட்டிக்கினேன் !" என்று நாம் ஒருபோதும் வீட்டில் போய் நிற்பதில்லை தானே ?  (ஹி..ஹி...அதுக்கோசரம் மண்டையில் இன்னிக்கு கேசம் வேணுமே முதலில் !!' என்கிறீர்களா ?) தனிமையினில் இருக்கும் போது கூட பழைய பெல்பாட்டங்களை முயற்சித்து அழகு பார்க்க நினைப்பதில்லையே ? (தொந்தி அதற்கொரு பெரும் தடா என்பது வேறு விஷயம் !!) யோசித்துப் பார்த்தால் காமிக்ஸ் தவிர்த்து வேறு reading material களில் கூட பால்யங்களது சமாச்சாரங்களை நாமின்று இதே வேகத்தோடு சேகரிப்பதாய் (!!!) எனக்குத் தோன்றவில்லை ! "அம்புலிமாமா" ; " கோகுலம்" backissues இன்னமும் நமது வீட்டுச் சேகரிப்புகளில் உள்ளனவா - தெரியலை எனக்கு ! Of course சுஜாதாவின் நாவல்கள் ; அமரர் கல்கியின் படைப்புகள் போன்ற சில evergreens என்றைக்கும் நம்மை விட்டு அதிக தொலைவில் இருப்பதில்லை தான் ! ஆனால் அவையெல்லாமே முழுசுமாய் பால்யங்களது properties என்று சொல்லிட முடியாதல்லவா ? 

Whatever the reasons maybe - "பழமை" என்பது நம்மோடே பயணிக்கும் ஒரு நிரந்தரமாய் - காமிக்ஸ் வாசிப்பினில் மாத்திரமே தொடர்வதன் சூட்சுமம்  பற்றியெல்லாம் அலசிட 'தம்' இல்லை இக்கட ! நானும் 'கி.நா. ; அந்த.நா. ; இந்த நா.' என்று கூத்தடித்தாலும், அவ்வப்போது தாயைத் தேடிடும் கன்றைப் போல பழமைகளை நாடி U-டர்ன் அடிப்பதைத் தவிர்க்க வழி தெரியக்காணோம் !! So my question is : இதுவே தான் காலத்துக்கும் நமது comics template ஆக இருந்திடுமா ? 

Given a choice, பழசுகளை ஒட்டு மொத்தமாய் ஓரம் கட்டி விட்டு முழுக்க முழுக்கப் புதுசுகளுக்குள் மட்டுமே நீச்சலடிக்க விழைவேன் என்பதை நூற்றி பதிமூன்று தடவைகள் ஒப்பித்திருப்பேன் ! ஆனால் "விற்பனை" எனும் கெடுபிடியாளர் ஒரு பக்கம் ; உங்களின் "பழமை மோகம்" இன்னொரு பக்கமென முறைத்து நிற்கும் போது 'சரிங்கண்ணா !!' என்று மண்டையை ஆட்டிடுவதே சாத்தியமாகிறது ! So சும்மா ஜாலியாய் உங்கள் கற்பனைகளை ஓடவிட்டுச் சொல்லுங்களேன் - 2030-ல் நம் தேடல்கள் எவ்விதம் இருக்கக்கூடுமென்று ?  2030-ன் இதே நேரத்திலுமே  'ஆர்ச்சியார் for PM !!" ; "வருங்கால சனாதிபதி லூயி கிராண்டேல் வாழ்க !" ; அடுத்த ஐ.நா.சபைச் செயலாளர் அண்ணன் பதிமூன்றுக்கு ஜெ !!" என்று தான் கொடிபிடித்துக் கொண்டு நிற்போமா ?  Your thoughts on the future please guys ?

Saturday, February 15, 2020

கொஞ்சம் முன்னோட்டங்கள்..கொஞ்சம் கேள்விகள் !

நண்பர்களே,

வணக்கம். சீனத்துத் தென்னைமரத்தினில் கொட்டிடும் தேளானது தமிழகத்துப் பனைமரங்களிலுமே நெரி கட்டக் செய்யுமோ ? தூரத்து சீன வுஹான் பிரதேசத்தில் ரணகளத்தைத் துவங்கியுள்ள கரோனா வைரஸ் ஊரெல்லாம் ஏற்படுத்திடும் ஆரோக்கியக் கோளாறுகள் ஒரு சோகக் கதையெனில், அதன் எதிரொலியாய் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிடும் பொருட்களுக்குத் திடுமென விழுந்துள்ள பிரேக்கானது நமக்கும் குமட்டோடு ஒரு குத்து விட்டுள்ளது ! "அண்ணாச்சி...லயன் காமிக்சிலேர்ந்து பேசுறேன்...ஆர்ட் பேப்பர் ஒரு டன் வேணுமே ?" என்று வழக்கம் போல் போன் அடித்தால் மறுமுனையில் மௌனம் ! "சர்தான்...ரேட் கொஞ்சம் போல கூடியிருக்கும் போல !" என்று நினைத்துக் கொண்டே "இப்போ என்ன ரேட் அண்ணாச்சி ?" என்று கேட்டேன் ! தயங்கியபடியே மறுமுனையிலிருந்து ஒரு நம்பரைச் சொன்னார் ! எனக்கு காதில் லேசாய் ஈயத்தை ஊற்றியது போலிருந்தது !! "இன்னாது ? டன்னுக்கு அறுபத்தியெட்டாயிரமா ??????? அதுக்கு மேலே 12 % GST போடுவீங்கள்லே !!  போன மாசம் கூட இவ்ளோ இல்லியே ?" என்று அலறினேன் ! ரொம்ப காலம் உள்ளாற இருந்துவிட்டு வெளியே வரும் கவுண்டர் "ஒத்த ரூபாய்க்கு ஒரு தேங்கா குடு" என்றபடிக்கே கடைக்குப் போய் நிற்பாரில்லியா ? அவரைப் பார்த்த மாதிரியே என்னையும் பேப்பர்ஸ்டோர்காரரும் பார்த்திருக்க வேண்டும் ! "மூணு வாரமா சைனாலேர்ந்து சரக்கே வர்றதில்லீங்க அண்ணே ! புதுசா ஆர்டர் எதுவுமே எடுத்துக்க மாட்டேங்கிறாங்க ! இப்போ இது தான் ரேட்டு ! இனி அடுத்த மாசம் மார்க்கெட்டில் சரக்கே இருக்காது போல் தெரியுது - என்ன விலைக்குனாலும் !!" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் !! 

So இந்தப் பதிவை டைப்பும் அதே சமயத்தில் நம்மாட்கள் கடை கடையாய் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள் - இருபது நாட்களுக்கு முந்தைய விலைக்கே விற்றிட யாரேனும் நியாயவான் கண்ணில் தட்டுப்படுகிறாரா ? என்று கண்டறிய ! சத்தியமாய் அதற்கெல்லாம் சாத்தியம் இராதென்பது புரிகிறது தான் ; ஆனால் பாழும் மனசும், டைட்டான பட்ஜெட்டும் கேட்டுத் தொலைக்கணுமே ?!! எது எப்படியோ - ஒண்ணும் கிடைக்காத பட்சத்தில் "புரட்சித் தீ" கதையில் வருவது போல ஊருக்கொரு வெள்ளைப் பசு மாட்டைப் பிடித்து அதன் மீதாவது படங்களையும், வசனங்களையும் வரைந்து சந்தாதாரர்கள் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் இட்டுப் போவதென்றுள்ளேன் ! 'இந்தந்தத் தெருக்களில்  இத்தினி மணிலேர்ந்து இத்தினி மணிவரைக்கும் மாடார் நிற்பார் ; அஜீஸ் பண்ணிப் படிச்சுக்கோங்களேன் !!' என்று Facebook ; Instagram ; Twitter-ல் பதிவுகளை போட்டால் படிச்சிற மாடீர்களா...சாரி..சாரி..மாட்டீர்களா - என்ன ? இதிலே ஒரு கூடுதல் ப்ளஸ் என்னான்னா - "குண்டு புக்" பிரியர்களுக்கு செம திருப்தியா இருக்கும் !! தோராயமாய் 350 - 400 கிலோ எடை எனும் போது 'இதுக்கு மேலே குண்டு புக் போடணும்னா ஜம்போ சர்க்கசுலேர்ந்து ஆனையைத் தான் இரவல் வாங்கிக்கணும் folks" என்று சமாளித்துக் கொள்ள முடியுமே !  அப்புறம் "என் புக்கிலே பைண்டிங் சரி இல்லை ; அச்சுத் தரத்தைக் கூட்டலாம் ; hardcover இல்லியா ? !' போன்ற சங்கடங்களுக்கும் இடமிராது தானே ?! So மாடு பிடிக்க சந்தையைத் தேடி நான் இன்னொரு பக்கம் புறப்பட உத்தேசம் ! Jokes apart - இதில் கொடுமை என்னவெனில் இந்த கரோனா வைரஸ் என்ற தற்காலிகச் சிக்கல்கள் ஒரு சில மாதங்களில் சரியாகிவிட்டாலும் - 'ஏறின விலை, ஏறினது தான் !' என்று இங்குள்ள வியாபாரிகள் உடும்புப்பிடியாய் நின்று விடுவார்கள் !! திரும்பவும் சகஜத்துக்கு விலைகளைத் திரும்பிட அனுமதிப்பார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் !

Marching on, March is just around the corner ! இதோ - காத்திருக்கும் மாதத்தின் ஒரே black & white இதழினில் தலைகாட்டக்காத்திருக்கும் 'தங்கத் தலைவி பிளைசியின்' அட்டைப்பட முதல்பார்வை !
ஏற்கனவே நான் எழுதியது தான் ; but still இன்னொரு மறுஒலிபரப்பு  செய்தால் தப்பில்லை தான் ! அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுபக்கம் வசிக்கும் ஓவியையே தற்சமயமாய் நமது அட்டைப்படங்களுக்கு டிசைன் போட்டுத் தருகிறார் ! டிஜிட்டலாகவே வரைந்து, டிஜிட்டலாகவே வர்ணம் தீட்டுவதும் இவரது பாணி என்பதால் - அழகாய் ஒரு ஒரிஜினலை மட்டும் ஒப்படைத்தால், ஒரே வாரத்தில் பின்னியெடுத்து விடுகிறார்  ! இங்கொரு குட்டி இடைச்செருகல் : நடப்பு மாதத்தின் ஆர்ச்சி அட்டைப்பட டிசைனும் அவர் கைவண்ணமே ; ஆனால் background ரொம்பவே நாடக பாணியில் இருந்ததால், நமது DTP கோகிலா வேறொரு பின்னணியைப் புகுத்தி ; அந்த நட் + போல்ட் + பற்சக்கர டிசைனில் எழுத்துருக்களையும் ; கீழே ஸ்பான்னரில் "ஆர்ச்சி is back !" என்ற டிசைனையும் ரெடி செய்திருந்தார் ! அட்டைப்பட டிசைனை படைப்பாளிகளிடம் காட்டி approval வாங்கிட வேண்டியது அவசியம் என்பதால் மின்னஞ்சலில் லண்டனுக்கு அனுப்பினோம் ! மின்னல் வேகத்தில் ஓ.கே சொன்னவர்கள் - "இந்த டிசைன் ஏதேனும் பழைய Fleetway ஆக்கத்தின் மீது இப்போது வர்ணம் பூசியதா ?" என்று வினவினார்கள் ! "இல்லீங்கோ ; புதுசாய் இப்போது போட்டது !" என்ற போது மெய்யாலுமே சந்தோஷ ஆச்சர்யம் அவர்களுக்கு !! So கதைகள் தான் அசலூர் ; அயல்நாடு என்றால், இப்போதெல்லாம் அட்டைப்படங்களுமே made in மேல்நாடு தான் ! And அவரது திறனில் தயாராகியுள்ள இந்த மாடஸ்டி ராப்பர் - அந்த பெரிய சைசில் வெளியாகி, வழக்கமான மினுமினுக்கும் ஜிகினாக்களோடு கடைகளில் தொங்கிடும் போது நிச்சயமாய் காமிக்ஸ் ஆர்வலர்களைத் தாண்டியோரின் கவனங்களையும் ஈர்க்கும் என்றொரு நம்பிக்கை எனக்கு ! அப்புறம் இது ஒரு மாடஸ்டி வீடியோ கேஸட்டின் டிசைனை மறுக்கா வரைந்தது !! "அதை அப்டியே சுட்டுப்புட்டு அமெரிக்கால வரைஞ்சது ; ஆப்ரிகாலே வரைஞ்சதுன்னு கதை விட்றாண்டோய் !" என FB -ல் பறைசாற்றி மகிழ எண்ணும் நண்பர்கட்கு - sorry guys !! மாற்றி ; மறுக்கா வரைந்துள்ள image என்வசம் உள்ளதென்ற சேதியைச் சொல்லிக்கொள்கிறேன் ! கதையுமே இம்முறை fast paced & இந்த பெரிய சைசில் படிக்கும் போது ரொம்பவே ரசிக்க முடிகிறது - at least என்னளவில் ! So 'தங்கத் தலைவி' பேரவையினரைத் தாண்டியுமே இந்த ஆல்பம் ஹிட்டடிக்கும் என்று பட்சி சொல்கிறது ! And இந்த ஆல்பத்தைத் திறக்கும் போதே இன்னொரு சுவாரஸ்ய சேதி உங்களுக்குக் காத்திருக்கும் என்பது கொசுறுத் தகவல் !

மார்ச்சில் கார்ட்டூன் லூட்டியும் உண்டென்பது எனக்கும், சக கார்ட்டூன் காதலர்களுக்கும் ஜாலி நியூஸ் ! And இம்முறை ஆஜராகவிருப்பதோ உட்ஸிடியின் சிரிப்பு டீம் ! அடிக்கடி உச்சரிக்கும் வரிகளே ஆனாலும், இன்னொருக்கா இங்கே repeat செய்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன் ! பக்கத்துக்குப் பக்கம் ;  பிரேமுக்கு பிரேம் கிச்சு கிச்சு மூட்டலை எதிர்பாராது, அழகாய், இலகுவாய், ஜாலியாய்ப் பயணிக்கும் கதையினை, சித்திரங்களை ரசித்தபடிக்கே உள்வாங்கிட்டால் - ஒரு அரை மணி நேரத்துக்காவது காற்றில் பறக்கும் உணர்வு உத்தரவாதமாய் உண்டென்பேன் !  இதோ - நடப்பாண்டின் one & only கிட் ஆர்டின் + டாக் புல் சாகசத்தின் அட்டைப்பட preview !
ஒரிஜினல் டிசைன், சன்னமான வர்ண மாற்றங்களோடு என்பதால் இது கோகிலாவின் ஆக்கமே ! And உட்பக்கங்கள் எல்லாமும் ரெடியாகி, இந்த இதழ் அச்சாகியே ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது ! துரதிர்ஷ்டவசமாக உட்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புகளை வாங்கி வைக்க மறந்து போய் விட்டதால், உட்பக்கத்துப் preview இப்போது சாத்தியம் நஹி !

இனி தொடர்வது கொஞ்சம் கேள்விகள் guys !!

***நடப்பு மாதத்தில் வில்லரின் இடி முழக்கத்தை தாண்டியும் "தனியே தன்னந்தனியே" தனி ஆவர்த்தனம் செய்திருப்பதை நிரம்பவே ரசித்துப் பார்த்து வருகிறேன் ! நம்மைப் பொறுத்தவரையிலும் 'ஹாரர்' எனும் ஜானர் மறந்து போனதொன்றே ! கடைசியாய் எப்போது ஒரு அக்மார்க் திகில் கதையினை வெளியிட்டோம் என்று கூட சட்டென்று நினைவுபடுத்திப் பார்க்க எனக்கு இயலவில்லை ! So வரும் நாட்களில் இந்த ஓரம்கட்டப்பட்ட கதை பாணிக்கு முக்கியத்துவம் தந்து நம் தேடல்களை முடுக்கி விடலாமா ? என்ற சிந்தனை உள்ளுக்குள் ! What is your take on this folks ? "H " for ஹாரர் சுகப்படுமா ? அல்லது இப்போது போலவே ஒன்றிரண்டை மட்டும் கி.நா.சந்தாவினுள் அடைக்கலம் காணச் செய்வதே போதுமென்பீர்களா ? 

***ரொம்பவே சீக்கிரமே இந்தக் கேள்விக்கு ! ஆனால் கடந்த சில வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் வேகம் காணும் விற்பனை ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படலம்" + "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" ஆல்பங்களே ! கடைகளின் விற்பனை நிலவரம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை - but ஆன்லைனின் போக்கு கடைகளிலும் தொடரின், இந்த black & white ; மித விலை ; நேர்கோட்டுக் கதைகள் இன்னமும் கொஞ்சம் விரிவாக்கிடலாமா ? I mean - பக்க எண்ணிக்கையினை 48 ஆக்கி ; விலையினை அதற்கேற்ப சன்னமாய்க் கூட்டி விட்டு ; ஓரம்கட்டப்பட்டுள்ள சில பிரான்க்கோ-பெல்ஜியத் தொடர்களை b & w -ல் இதனுள் புகுத்திடலாமா ? சாகச வீரர் ரோஜர் ; LADY S ; கமான்சே ; டிடெக்டிவ் ஜெரோம் போன்றோர் பளிச் என நினைவுக்கு வருகின்றனர் ! உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? 

***"குண்டு புக் "மோகம் ; "ஏக் தம்மில் படித்து விட வேண்டும்" என்ற வேகம் - நமக்கு எப்போதுமே கையருகே உலவிடும் சங்கதிகள் ! ஆனால் எல்லாத் தொடர்களிலும், எல்லாத் தருணங்களிலும் இது நடைமுறை சாத்தியமாவதில்லை ! So அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாமே நான் செய்வது - அத்தகைய தொடர்களை நம் ரேடாருக்கே கொணராது விலகிப் போவதே ! ஆனால் ஒரே ஒருவாட்டி இந்தத் தொடர் பாணி எப்படித்தான் உள்ளதென்று பார்த்தல் என்ன guys ? Say ஆறு பாகங்கள் கொண்ட தொடர் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ; மாதமொரு பாகம் என 6 மாதங்களுக்கு இதனைத் திட்டமிட்டால், மாதா மாதம் ஒரு சஸ்பென்சோடு வாசிப்புகள் இருந்திடாதா ? முன்னாட்களில் ஆடிக்கும், அமாவாசைக்கும் நாம் பிக்குகள் வெளியிட்டு வந்த நிலையில் தொடர்கள் - தொ-ட-ர்-க-ள் ஆகிப் போகும் ஆபத்திருந்தது வாஸ்தவமே ! ஆனால் இப்போது நாம் பங்க்சுவாலிட்டி பரமானந்தங்களாய்ப் பரிணமித்துள்ள நிலையிலும்  இந்தத் தொடர் பாணி  ஒரு no-no என்றே சொல்லுவீர்களா ? 'மணந்தால் குண்டு புக் தேவி தான் !" என்ற நம் வைராக்கியங்களின் உபயத்தால் நிறையவே கதைகளை நாம் உதறிடுகிறோமோ ? என்ற நெருடல் என்னுள்  ! Hence இந்தக் கேள்வி ! 

***அப்பாலிக்கா சித்தே லைட்டான கேள்விகளும் : முதல் தபா சிவகாசிக்கு வந்தது ; முதல்வாட்டி புத்தக விழாக்களில் சந்தித்தது என்ற ரேஞ்சில் போன பதிவினில் அகஸ்மாத்தாய் ஆளாளுக்குப் பரிமாறிக் கொண்டது வாசிக்க சுவாரஸ்யமாக இருந்ததாய் நினைத்தேன் ! நீங்கள் வாசித்த (நம் குழுமத்து) முதல் காமிக்ஸ் இதழ் பற்றிக் கொஞ்சம் மலரும் நினைவுகளை எடுத்து விடுங்களேன் ? அதே போல நீங்கள் நேரில் சந்தித்த முதல் சக நண்பர் பற்றியும் கூடச் சொல்லுங்களேன் ? எங்கே ? எப்போது ? எந்தச் சூழலில் ? 

***Before I sign off - உங்களின் தேர்வு அவசியமாகிறது எனக்கு ! லக்கி லூக்கின் MAXI மறுபதிப்புகளில் அடுத்தாண்டிற்குத் தேவையான கதைகளை shortlist செய்து வருகிறேன் ! (Oh yes - 2021 அட்டவணை உருட்டல்கள் என்னளவிற்கு துவங்கியாச்சு !!) இப்போதைக்கு நான் குறித்து வைத்துள்ள பெயர்கள் "சூ..மந்திரகாளி " & "கௌபாய் எக்ஸ்பிரஸ்" ! இவை ஓ.கே. தானா ? அல்லது வேறேதேனும் ? 

Bye all...have a super weekend !! See you around !!

P.S.நாள்தோறும் லோகத்தில் நல்லது நடக்கிறதோ ; கரோனா கதை ஓடுகிறதோ - "அதைப்பற்றியெல்லாம்  கவலையில்லை எங்களுக்கு  !! கருமமே கண்ணாய் - நாளொன்றுக்கு இந்த வலைப்பக்கத்துக்கு 7000+ பார்வைகளைத் தந்து பம்ப் அடிப்பதை நாங்க விடுவதாக இல்லை !" என்று அந்த அனாமதேயப் பரோபகாரிகள் பிசியாக  இருக்கிறார்கள் ! கடந்த ஒற்றை மாதத்துப் பார்வைகள்  மட்டுமே  208,000 !! So ஐந்தே மாதங்களுக்கொரு மில்லியன் ஸ்பெஷல் போட நாங்கள் முஸ்தீபுகள் செய்தாகணும் போலும் !! பின்றீங்கோ சார்ஸ் !! 

Sunday, February 09, 2020

ஒரு மதியமும்...சில உரத்த சிந்தனைகளும்..!

நண்பர்களே,

வணக்கம். அவ்வப்போது இங்கே ஈயோட்ட நேரிடும் போதெல்லாம் சின்னதாய் ஒரு சந்தேகம் தலைதூக்கிக் கொண்டேயிருக்கும் - ஞாயிற்றுக்கிழமைகளின் சுறுசுறுப்புக்கள் என்றேனும் தளத்துக்குத் திரும்பிடுமா ? என்று !! And இதோ இளம் புலியாரின் புண்ணியத்தில் அந்த சுறு + சுறு +ப்பு back with a bang !! 

நிஜத்தைச் சொல்வதானால் இந்தப் பதிவை வியாழன்றே எழுதி, டைப்படிக்கவும் செய்து முடித்து விட்டேன் ! ஆனால் எழுதிய வேகத்தில் Publish பட்டனை அமுக்கத் தயக்கம் நிறையவே ஆட்கொண்டதால் - 2 நாட்கள் மனதில் இந்த இடியாப்பத்தை கையாள என்ன வழியென்று அசை போட்டபடியே தானிருந்தேன் ! Of course - "தீர்பெல்ல்லாம் முதலிலேயே எழுதிப்புட்டு  இங்கே  சும்மாகாச்சும் டிராமா போடுறாண்டோய் !" என்று அன்பொழுகும் கருத்துக்கள் கொண்ட நண்பர்களும் இருப்பர் என்பதை யூகிக்கவும் முடிந்ததுதான் ! ஆனால் ஒவ்வொரு சந்தேக விரல்நீட்டலுக்கும் நெஞ்சைத் திறந்து காட்டிட வேண்டுமெனில் open heart surgery-க்கென டாக்டர் செழியனை கையோடு கூட்டித் திரிய வேண்டுமே ! So ஆனது ஆகட்டும் - உள்ளதை, உள்ளபடிக்கே போட்டுடைப்போம் என்ற தகிரியத்தில் தான் நேற்றிரவு பதிவை பொதுவெளிக்குக் கொணர்ந்தேன் !

And truth to tell - இன்றைய பொழுது எனக்கு நிஜமான surprise தான் - உங்களின் புரிதல்களில் தென்பட்ட முதிர்ச்சிகளின் காரணமாய் ! யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, நான் முன்வைத்த options / முன்வைக்கத் தயங்கிய options என்று எதெதிலிருந்தோ   தேர்வுகளைச் செய்ததுள்ளதில் ரொம்பவே சந்தோஷமே ! To cut a long story short - கீழ்க்கண்ட விஷயங்களில் ஒரு ஒற்றுமையான புரிதலை அவதானிக்க முடிந்துள்ளது :

1 இளம் டைகர் கதைகள் - நாம் பழகியுள்ள சார்லியேவின் படைப்புகளோடு ஒப்பீடாகிடும் போது அடி வாங்கவே செய்கிறது !

2 ஈரோடெனும் உடனடி மைல்களுக்கு இந்த YOUNG TIGER தொகுப்பு சுகப்படாது தான் !

3 அதே நேரம் சந்தா : T : 12 மாதங்களில் 12 சிங்கிள் ஆல்பங்கள் என்ற திட்டமிடலுக்கு அத்தனை ஆர்வம் தெரியக் காணோம் ! 

4 "கையைத் தட்டிப்புட்டு கை கழுவிடலாம் " என்ற Option : C பெற்றுள்ள வாக்குக்கள் ஒற்றை இலக்கமே - இதுவரைக்குமாவது ! So அதனை ஒரு சாக்காக்கிக் கொண்டு கம்பி நீட்டுவதை நான் ரசிச்சில்லா !!

5 So எஞ்சியிருக்கும் Option B தான் இப்போதைக்கு லீடிங்கில் உள்ள வேட்பாளர் எனும் போது அவருக்கே நாமும் பொன்னாடை போர்த்தும் சூழல் எழுந்திடும் என்று கணிக்கலாம் - கரூர்க்காரின் திடீர் formula ஏதேனும் களம் காணாத வரைக்கும் !!

இணையத்துக்கு ; இந்த அளவளாவல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் வாசகர்களுமே ஏற்றுக் கொள்வார்களெனில் - here is what I have in mind guys !! (மார்ச் இதழில் இது குறித்ததொரு வினவல் இருந்திடும் - பரவலான ஒப்புதல் இதற்குக் கிட்டுகிறதா ? என்பதைக் கண்டறிந்திட ! )


இலக்கு : சென்னைப் புத்தக விழா 2021 

அமைப்பு :  12 அத்தியாயங்கள் - 2 வால்யூம்களாய் !!

விலை : உத்தேசமாய் ரூ.1200 + கூரியர் (முன்பதிவுகளுக்கு மட்டும் இந்த விலை ; ரெகுலர் விலை : ரூ.1350)

முன்பதிவு அத்தியாவசியம் : 400 புக்ஸ் 

பிரிண்ட் ரன் : 800 புக்ஸ் 

முன்பதிவுத் துவக்கம் : ஆகஸ்ட்  2020 

பணம் அனுப்பிட : 2 தவணைகள் 

For confirmation : ரூ.600 செப்டெம்பர் 30 க்கு முன்பாய். பாக்கித் தொகை : நவம்பர்'30 க்கு முன்பாய்  

ஏதேனுமொரு படு துரதிர்ஷ்ட நிகழ்வாய் - முன்பதிவில் வேகம் பிடிக்காது போய் ; முன்பதிவு இலக்கை எட்டிப் பிடிக்கத் தவறி விட்டோம் எனும் பட்சத்தில் செப்டம்பர் 30-ல் இந்தத் திட்டமிடலைக் கைவிட்டிடுவோம் ! நீங்கள் அனுப்பியிருக்கக்கூடிய முன்பதிவுத் தொகைகள் திருப்பி அனுப்பப்படும் ; அல்லது 2021-ன் சந்தாவினில் வரவு செய்யப்படும் ! முன்பதிவு செய்யும் பொழுதே இது குறித்து உங்களின் சாய்ஸ் என்னவென்று கேட்டறிந்து, பதிவு செய்து கொள்வோம் ! "இரண்டே மாதங்கள் தானா ?" என்ற கேள்வி ஆட்டோமேட்டிக்காக எழுந்திடும் என்பதும் புரிகிறது ! ஆனால் யதார்த்தம் என்னவென்பதை இதுவரையிலுமான முன்பதிவுகள் புட்டுப் புட்டு வைக்கின்றன :
 • எந்த இதழுக்காக முன்பதிவாய் இருந்தாலுமே, அறிவிப்பு செய்த முதல் 1 மாதத்துக்குள் கிட்டிடும் முன்பதிவுகள் - 60%
 • பாக்கி 25 % அடுத்த சில மாதங்களில் !
 • மீதம் 15 % இதழ் வெளியாகிடும் சமீபத்தில் ; அந்த வாரத்தில் !

So ஒரு புராஜெக்ட் தேறுமா ? தேறாதா ? என்ற கேள்விக்கான விடையறிய இந்த 60 நாள் அவகாசமே தாராளமாய்ப் போதும் ! "இல்லே...இல்லே....நீ வேணும்னே குறைச்சலா நேரம் குடுத்து ; முன்பதிவை சொதப்பலாக்கிட தான் வழி பண்ணுறே ! இது போங்கு !" என்று உஷ்ணம் காட்டிடக்கூடிய நண்பர்களுக்கு எனது பதில் ஒன்றே : அறிவிக்கப்பட்ட பிற்பாடு எந்தவொரு நாயகரது புராஜெக்டாய் இருந்தாலும், அது லயன் - முத்து குழுமத்தின் புராஜெக்டே !! அதன் வெற்றியிலும், தோல்வியிலும் முழு முதல் ஆர்வமும், அக்கறையும் என்னைத் தாண்டி வேறு எவருக்கும் இருத்தல் அசாத்தியம் !  

இந்த முயற்சியினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு சின்னச் சின்ன எண்ணங்களும் உள்ளுக்குள் :

12 அத்தியாயங்கள் !! Maybe நம்மிடையே எழுத்தாற்றல் உள்ள  12 ரசிகர்களுக்கு, ஆளுக்கொரு பாகத்தை தமிழாக்கம் செய்திடும் வாய்ப்பை  தந்திடலாமா ?! Of course - எல்லாமே எனது இறுதி approval & எடிட்டிங்குக்குப் பின்னே தான் களமிறங்கிடும் ! So மொழியாக்கங்களில் ஏற்ற இறக்கங்கள் பெரிதாய்த் தெரியாது பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு !

அட்டைப்பட டிசைனிங்கையுமே வாசகர்களிடம் ஒப்படைத்தாலென்ன என்ற எண்ணமும் உள்ளுக்குள் ! அதுவும் நடைமுறை காணின் -  இது முழுக்க முழுக்கவே "Made by Fans & Made for Fans" இதழாகிடாதா ? ஏதேதோ முயற்சித்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் ? 

"ரைட்டு...பேனா பிடிக்க 12 பேரை எவ்விதம் தேர்வு செய்வதாம் ?" என்ற கேள்வி next ! ஆகஸ்டில் ஈரோட்டில் வாசக சந்திப்பின் போதே இதற்கான தேர்வையும் செய்திட்டால் போச்சு ! இந்த இதழின் ஏதேனுமொரு  அத்தியாயத்தின் ஏதேனும்  6 பக்கங்களையும் ; அவற்றிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் நிறையவே xerox போட்டு எடுத்து வருகிறேன் ! சந்திப்பை அரை மணி நேரம் முன்னதாகவே ஆரம்பித்துக் கொள்வோம் ; so கூடுதலாய்க் கிடைக்கும் அந்த 30 நிமிஷங்களில் - பேனா பிடிக்க  விரும்பும் நண்பர்களுக்கு இந்த 5 பக்கங்கள் + english script தாட்களை வழங்கிடுவோம் ! அங்கேயே சீனியர் எடிட்டரும், நமது கருணையானந்தம் அவர்களும் தேர்வு செய்யட்டும் - top 12 பேனாக்காரர்களை !! நான் மருவாதையாய் ஓரமாய் நின்று பராக்கு மட்டும் பார்த்துக் கொள்கிறேன் - அங்கேயும் சந்தேகத்தின்   பேரில் சாத்து வாங்கும் படலத்தில் சிக்கிடாதிருக்க ! 

ஒட்டு மொத்தமாய் மறை கழன்று போன முயற்சியாகவும் இது தென்படலாம் ; அல்லது, அதகள சுவாரஸ்யத்துக்கு அடிக்கோலிடும் முயற்சியாகவும் இது தெரிந்திடலாம் ! Honestly I dont have the faintest clue which way this will sound to each one of you !! 

ஒருக்கால் "ஆளாளுக்கு எழுதுவதென்பதெல்லாம் விஷப் பரீட்சை ; வேண்டவே வேண்டாம் ! என்று  பெரும்பான்மைக் குரல்கள் ஒலிக்கும் பட்சத்தில், அட்டைப்பட டிசைனிங் பொறுப்பை மட்டும் உங்களிடம் ஒப்படைத்து விட்டு, பேனாப் படலங்களை எங்களதாகவே வைத்துக் கொள்வோம் ! 

இவை  ஒட்டு மொத்தமாகவே ஒரு மதியத்தின் உரத்த சிந்தனைகளன்றி வேறெதுவுமில்லை ; so உங்களின் reactions எதுவாய் இருப்பினும் let's keep them from extremes please !!

 இதோ - என்ன எதிர்பார்ப்பதென்றே தெரியாது இன்னொரு பதிவைக் களமிறக்கிவிட்டுப் பேந்தப் பேந்த முழித்து நிற்கிறேன் ஒற்றை நாளில் - இரண்டாவது தபாவாய் ! பார்த்துச் செய்யுங்கோ சார்ஸ் !! Bye for now ! 
பி.கு. : "வேண்டாமே - இந்த முயற்சியே !" என்று எண்ணிடும் நண்பர்கட்கு : உங்களின் சிந்தைகள் எனக்கும் புரிகின்றன தான் ! ஆனால் தேரை  லேசாய், அசைத்து, இழுக்க முற்பட்டதே நான் தான் எனும் போது - ஆளும் பேருமாய்ச் சேர்ந்து தேரை இழுத்து எல்லை கொணர்ந்து சேர்க்க  முடிகிறதாவென்று பார்ப்போமே - ப்ளீஸ் ? இல்லை - இது நம் சக்திக்கு அப்பாற்பட்டதென்று ஒட்டு மொத்தமாய் நாம் உணர்ந்திடும் தருணம் துரதிர்ஷ்டவசமாய்ப் புலர்ந்தால், வடத்தை அப்போது கீழே போட்டு விட்டுப் போவோமே ? அன்றைக்குமே எதும் இழந்திருக்க மாட்டோம் - முயற்சி செய்தோம் என்ற திருப்தி கிட்டியிருக்கும் வரையிலும் !! So நீங்களும் சேர்ந்தே வாங்களேன் - வடம் பிடிக்க !! 

Saturday, February 08, 2020

நில்..வாசி......சாத்து !

நண்பர்களே,

வணக்கம். கொஞ்ச காலமாகவே பகிர்ந்திட நினைத்து வரும் சமாச்சாரமிது ; 'அப்பாலே பாத்துக்கலாம் ; கொஞ்ச நாள் போகட்டுமே ! ' என்றே தள்ளிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்தாச்சு ! மண்டையைச் சொறிந்து கொண்டே இன்னமுமே இதனில் தயங்கி வந்தால் - மொத்தத்துக்கும் சொதப்பலாகிப் போகும் என்பதால் இந்தத் தருணத்திலாவது திருவாய் மலர நினைக்கிறேன் ! பல சமயங்களில் வாய் நிறைய பெவிகாலைப் பூசிக் கொள்ள  சமீப காலங்களில் பழகி விட்டிருந்தாலும், அந்தக் கட்டுப்பாடை இழக்கும் முதல் தருணத்தில் 'தத்து பித்தென்று' எதையாச்சும் உளறி வைத்து எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது உண்டு தான் ! எத்தனை கழுதை வயசானாலும் அந்த ஒரு சமாச்சாரத்தில் மட்டும் கவனம் பற்ற மாட்டேன்கிறது ! 'அட - என்னடாப்பா விஷயம் ? இத்தினி பில்டப் ஏதுக்கோசரம் ?' என நீங்கள் கடுப்பாகும் முன்னே மேட்டருக்கு வருகிறேன் !

எல்லாம் ஆரம்பித்தது போன ஆகஸ்டில்...நமது வாசக சந்திப்பின் போது ! ஏதேதோ அளவளாவல்கள் ; அலசல்கள் என்ற ஜாலியில் திளைத்துக் கிடந்த சமயம் அடுத்த (2020-ன்) ஈரோட்டு ஸ்பெஷல் பற்றிய topic தலைதூக்கியது ! "இளம் டைகர்' தொடரினில் எஞ்சியிருக்கும் 12 ஆல்பங்களையும் 'ஏக் தம்மில்' போட்டுத் தாக்கினால் என்ன ? என்று நண்பர்களுள் ஒரு அணி உற்சாகமாய் குரலெழுப்ப - உருமி மேளத்துக்கு மண்டையை ஆட்டும் பூம் பூம் மாடைப் போல நானும் சம்மதம் சொன்னேன் ! And அதனை "முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்" என்று 2020-ன் அட்டவணையோடும் சேர்த்தே விளம்பரப்படுத்தவும் செய்திருந்தோம் ! இதுவரையிலும் நீங்கள் அறிந்ததே !!

அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளோ - எனக்கும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கும் மாத்திரமே தெரிந்தவை  ! And அவையே இந்தப் பதிவின் துவக்கப் பத்தியினில் நான் மிடறு விழுங்கித் தவிக்கக் காரணமாகவும் இருந்துவிட்டு சமாச்சாரங்கள் ! 

To cut a long story short - நவம்பர் இறுதியிலேயே இளம் டைகர் ஆல்பம்  # 10 முதல் 21 வரையிலான கதைகளின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைத்து - மொழிபெயர்த்திடும் பொருட்டு நமது ஆஸ்தான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பியிருந்தேன் ! ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; but worth repeating again : கடந்த 19 ஆண்டுகளாய் நமது பிரெஞ்சுக் கதைகளின் சகலத்தையும் ஆங்கிலப்படுத்தித் தரும் அசாத்திய ஆர்வலர் கோவையைச் சேர்ந்த அந்தக் குடும்பத் தலைவியே !! அவரது வசதிக்கும், அந்தஸ்திற்கும், நாம் தந்திடும் பீற்றல் சன்மானத்துக்கு 'மாங்கு-மாங்கென்று' பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிடும் அவசியங்கள் கிஞ்சித்தும் கிடையாது ! ஆனால் கடந்த 2 தசாப்தங்களில் இதனை தனது அன்றாடத்தின் ஒரு அங்கமாக்கி அசத்தி வருகிறார் !  அனுப்பிடும் கதைகளை 'லொஜக்-மொஜக்' என்று மொழிபெயர்த்து அனுப்பிடுவதே பொதுவாய் அவரது வாடிக்கை ! ஆனால் கடந்த மூன்றாண்டுகளாய் தனது அபிப்பிராயங்களை அவ்வப்போது நாசூக்காய் வாட்சப்பில் கோடிட்டுக் காட்டிடுவது நிகழ்ந்து வருகிறது ! 

எல்லாம் ஆரம்பித்தது டிடெக்டிவ் ஜெரோமின் ஒரு சமீபத்துப் பணியிலிருந்து ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" இதழில் நாம் இந்த முட்டைக்கண் டிடெக்டிவை சந்தித்திருந்தது நினைவிருக்கலாம் ; and கதையின் மையக் கரு சற்றே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்தில் இருந்ததுமே நினைவிருக்கலாம் ! So அடுத்த ஆல்பமுமே இதே சிக்கலை நமக்குத் தந்திடலாகாதே என்ற முன்ஜாக்கிரதையில் - ஜெரோமின் அடுத்த பணிக்கொரு கதைச் சுருக்கம் கோரியிருந்தேன் ! தற்செயலாய் நான் அதைக் கேட்டு வைத்ததும் நல்லதாகப் போயிற்று  because அந்தக் கதையும் ஒரு தினுசான plot சகிதமிருந்தது ! அன்றைக்கு முதல் ட்யுராங்கோ ; ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; XIII போன்ற ரெகுலர் கதைகள் நீங்கலாய் புதுசுகள் ; one-shots ; கிராபிக் நாவல்களுக்கெல்லாமே அவரது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்க் கேட்டுக் கொள்வதை வழக்கமாக்கியிருக்கிறேன் ! அதற்காக அவர் "இதைப் போடுங்கோ ; இதைப் போடாதீங்கோ !" என்ற ரீதியில் வழிகாட்டலெல்லாம் செய்திடுவதில்லை ! "இன்ன மாதிரி...இன்ன மாதிரி கதை ஓடுது...இன்ன மாதிரி..இன்ன மாதிரி முடியுது !" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் ! So இறுதியாய்த் தீர்மானிப்பது எனது gutfeel மாத்திரமே ! 

And true to form - "இளம் டைகரின்"  ஆல்பங்களை வாசித்த கையோடு எனக்கு போன் அடித்தார் ! மாமூலான குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் 'அட...என்ன விஷயமோ ?' என்ற குறுகுறுப்பு என்னுள் ! சட்டென்று விஷயத்துக்கு வந்தவர் - "இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கலாமா ?"  என்று கேட்டார் ! ஒரு மெல்லிய தயக்கம் அவரது தொனியில் தென்பட்டது என் கவனத்தைத் தப்பவில்லை ; "ஏன்...ஏதேனும் நெருடுகின்றதா கதைகளில் ?" என்று படபடப்பாக நான் கேட்க - "வறட்சியாய் அந்த வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் தான் நெடுகப் பயணிக்கிறது !" என்றார் சுரத்தே இன்றி !  ;  "அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது ஒரிஜினல் கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி நிற்பது போலவும் படுகிறது !" என்றும் சொன்னார் ! வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது எனக்கு ; அதே நேரம் ஜோட்டாவால் என்னையே சாத்திக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது ! Simply becos 2016-ன் ஒரு உறக்கம் வரா வாரயிறுதியில் இந்த இளம் டைகர் தொடரின் எஞ்சி நிற்கும் ஆல்பங்கள் பற்றி இன்டர்நெட்டில் உருட்டோ உருட்டென்று உருட்டித் தள்ளியிருந்தேன் ! And நமது மொழிபெயர்ப்பாளர் தயங்கித் தயங்கி சொல்ல முனைந்த விஷயங்கள் யாவுமே உலகளாவிய டைகர் ரசிகர்களின் ஆதங்கக் குரல்களில் அன்றைக்கே கேட்டும் இருந்தேன் ! டெலிபோனில் நான் கேட்டுக்கொண்டிருந்த சமாச்சாரம் சகலமுமே எனக்குப் புதிதல்ல ! So 2016 முதலாய் "இளம் டைகர்" என்ற தலைப்பினை யார் துவக்கிட்டாலும்  'ஹி..ஹி..' என்றபடிக்குக்  கழன்று கொள்வதையே வாடிக்கையாக்கியிருந்தேன் - 2019-ன் ஆகஸ்டின் ஒரு தன்னிலை மறந்த பொழுதுவரையிலும் !

டெக்ஸுக்கு டைனமைட் ; தனிச்சந்தா ; MAXI தடம் என்று ஏதேதோ செய்ய சாத்தியப்படும் போது இந்த இளம் டைகரின் compilation - டைகர் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது போலிருக்குமே என்ற உத்வேகத்தில் தலையை ஆட்டி விட்டேன் ! ஆனால் நமது மொழிபெயர்ப்பாளரின் தயக்கம் எனக்குக் குளிர் ஜுரத்தைக் கொணராத குறையாய் நடுங்கச் செய்தது ! மேலோட்டமாய்க் கதைச் சுருக்கங்களை வாசிப்பது ; இன்டர்நெட்டில் விமர்சனங்களை அலசுவது என்பதெல்லாம் ஒருபக்கம் ; ஆனால் கதைகளை முழுமையாய், தெளிவாய்ப் படிப்பதென்பது இன்னொரு விஷயமன்றோ ? அதிலும் கடந்த 19 ஆண்டுகளாய் நம் ரசனைகளோடே பயணம் செய்பவருக்கு எவை சுகப்படும் ? எவை சுகப்படாது ? என்று தெரியாது போகுமா - என்ன ? So கடந்த ஒன்றரை மாதங்களாய் நான் தலைக்குள் பிசைந்து வரும் மாவு இதுவே : 
 1. கதாசிரியர் சார்லியே & ஓவியர் ஜிரோ - பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகில் ஜாம்பவான்கள் என்பதில் உலகுக்கே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ! அவர்களது கூட்டணியில் உருவான கேப்டன் டைகர் கதைகள் கௌபாய் கதைத்தொடர்களுக்கென நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இமயத்தின் உசரம் ! So அந்தப் பிதாமகர்கள் மறைந்த பிற்பாடு, கதைப் பொறுப்பை கையில் எடுத்திருக்கக்கூடிய writers அசாத்தியத் திறமைசாலிகளாக இருந்தாலுமே - அவர்கள் சதா நேரமும் போட்டி போட்டிட வேண்டியது இரு அசுரர்களின் நிழல்களோடு என்பதில் தான் சிக்கலே துவங்கிடுகிறது ! உச்சக் கதைகள் சகலத்தையும் மொத்தமாய் ரசித்தான பின்னே, "டைகர்" எனும் ஒரு ராட்சச பிம்பத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டான பிற்பாடு, நார்மலான கதைகளை ரசிப்பது எவ்விதமிருக்குமோ ? என்ற பயமே என்னை வாட்டுகிறது ! 
 2. அதிலும் நார்மல் இதழ்களாக அன்றி, முன்பதிவுக்கான ; குறைந்த பிரிண்ட் ரன்னுடனான இதழ் எனும் போது கிட்டத்தட்ட ரூ.1350 விலையில் வெளியாகிடக்கூடிய சமாச்சாரம் இது ! இந்த விலைக்கேற்ற நியாயம் செய்திட சார்லியேவுக்குப் பின்னான கதைகளுக்கு இயன்றிடுமா ? 
 3. "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த "ஈரோட்டு ஸ்பெஷல்" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே ? 
 4. And more than anything else - இந்தப் "பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா ? 

இவையே என்னை உலுக்கிடும் வினாக்கள் ! 

On the other hand - "அதெல்லாம் எனக்குத் தெரியாது ; எது எப்புடி இருந்தாலுமே ஆடலும், பாடலும் போட்டே தீரணும் ! அது சரியா இல்லாங்காட்டி அப்புறமா உன்னெ துவைச்சுத் தொங்கப்போட்டுக்குறோம் ! இப்போதைக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினா கண்ணை நொண்டிப்புடுவோம்  - கபர்தார் !" என்று கண்சிவக்க  டைகர் ஆர்வலர்கள்  தயாராக இருப்பர் என்பதும் புரிகிறது ! "காமிக்ஸ் நேசம்" எனும் சங்கதிகளில் அவரவரது பிடிவாதங்கள் ; கண்சிவத்தல்கள் தான் எத்தகையது என்பதை எண்ணற்ற தருணங்களில் தரிசித்திருக்கிறேனே ?!! Logic என்பதெல்லாம் லாலிப்பாப்புக்கு கூடப் பெறாது அத்தருணங்களில் என்பதில் எது இரகசியம் ?! So தொண்டை கிழிய  யதார்த்தங்களை இங்கே முன்வைக்க நான் முனைந்தாலுமே, no escaping the great மண்டகப்படி !! என்பது புரிகிறது ! 

"அப்படியே அண்ணாச்சி கிழிக்கிறது எல்லாமே மெகா ஹிட்டா  தான் கிழிப்பாராம் !! தெரியாதாக்கும் எங்களுக்கு !! அடப் போவியா ??" என்ற ரௌத்திரங்கள் மண்டகப்படி நிகழ்த்திடும் முனைப்பிலிருப்போரின் சிந்தைகளில் நிழலாடிடும் என்பதை யூகிக்க முடிகிறது ! ஆனால் சற்றே பொறுமையாய்ப் பின்னோக்கிப் போயின் - "ஜெரெமியா" நீங்கலாய் ஹிட்டாகிடா ஸ்பெஷல் இதழ்கள் நமது சமீபத்தைய பட்டியலில் லேது என்பது புரியும் ! அந்த வாடிக்கையைத் தொடர்ந்திடும் அவாவே இன்றைக்கு என்னைத் திருத் திருவென முழிக்கச் செய்து வருகிறது ! 

Make no mistake - இவை ஒரு மார்ஷல் டில்லானோ ; ஒரு கமான்சேவோ வலம் வந்திடும் தொடரின் கதைகளாக இருப்பின், துளித் தயக்கமும் இன்றி அறிவிப்பு-முன்பதிவு என்று மூட்டைகளை எப்போதோ பிரிக்கத் துவங்கியிருப்போம் ! ஆனால் "டைகர்" எனும் ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அசாத்தியருக்கு இந்த வீரியங்கள் ஒரு மிடறு குறைவாகத் தென்படுமே என்பதே எனது கவலை ! பற்றாக்குறைக்கு ஒரிஜினல் கதாசிரியரின் விலகலுக்குப் பின்பாய், உச்சம் கண்ட தொடர்களுமே கூட டாஸ்மாக் காதலனைப் போலத் தள்ளாடுவதை ஏற்கனவே  XIII-ன் சமாச்சாரத்திலும், இப்போது லார்கோவின் தொடரிலும் பார்த்திடும் அனுபவம் நமக்குள்ளதே ! அந்த மிரட்சியும் சேர்ந்து கொண்டு என்னை விடிய விடிய வாட்டுகிறது  ! 

இந்த பிராஜெக்டை இன்றைக்கே நான் ஒத்தி வைத்தால் - டைகரின் diehard ரசிகக் கண்மணிகளின் கரங்களால்  சுடச் சுட "சப்பல்ஸ் சூட்டுவிழா" அரங்கேறிடும்  என்பதில் no secrets ! அதே சமயம் இதனை நிஜமாக்கி, ரூ.1350+ விலையில் ஈரோட்டுக்கு  ஸ்பெஷல் இதழாகக் கொணர்ந்திடும் பட்சத்தில் - வாங்கிடும் / வாசித்திடும் அத்தனை பேரிடமும் ஏகோபித்த துடைப்பப் பூசை கிட்டிடும் என்பதையும் கணிக்க முடிகிறது ! 

இந்த நொடியில் பள்ளிக்கூடத்தில் ஒரு குறுந்தாடியை ஒட்டிக் கொண்டு இங்கிலீஷ் டிராமாவில்  நான் பேசிய ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" வசனம்  தான் நினைவுக்கு வருகின்றது  : 

"To be, or not to be, that is the question !" 

"இன்றைய சப்பல்ஸ் முடிசூட்டுவிழாவா ? ஆகஸ்டின் துடைப்பத் திருவிழாவா ?

மத்தளம் கொட்டி உங்களின் கடுப்புக்களைக் கொஞ்சமாய்த் தணித்துக் கொண்டான  பிற்பாடு, இதற்கு என்ன தான் தீர்வென்று சற்றே சாந்தமாய் சிந்திக்கத் தயாராகிடும் பட்சத்தில் - this is what I have to propose :

"பிரேத்யேகம் ; முன்பதிவு ; பெரிய விலைகள் ; பெரும் எதிர்பார்ப்புகள்"  என்ற நான்கு சமாச்சாரங்களும் கைகோர்க்கும் போதே ஒவ்வொரு முறையும் திரையில் ஒரு "பாட்ஷா"  விரிந்திடும் அவசியம் அரூபமாய்த் தலைதூக்குகிறது ! மாறாக - "ரெகுலர் தடம் ; எல்லோருக்குமே ; சிறு விலைகள்" என்ற முக்கூட்டணி சேர்ந்திடும் போது "பெரும் எதிர்பார்ப்புகள்" என்ற மாயை காணாது போய்விடக்கூடும் அல்லவா ? So 2021-ன் சந்தாவினில் "சந்தா T" என்று ஒரு சமாச்சாரத்தை கொணர்ந்து, மாதமொரு அத்தியாயம் என எஞ்சியிருக்கும் 12 பாகங்களையும் ஒரே ஆண்டில்  போட்டுத் தள்ளினால் என்ன ? 1975-ல் துவக்கம் கண்ட இந்த "இளம் டைகர்" தொடரின் 21 ஆல்பங்கள் வெளியாகிட 40 ஆண்டுகள் அவசியப்பட்டுள்ளது ஒரிஜினல் பிரெஞ்சில் ! ஆயுளின் பாதிக்கு மேலான காத்திருப்பையே ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு டைகர் ரசிகர்களின் அளவுக்கு அதீதப் பொறுமைசாலிகளாய் நாமிருக்கும் அவசியங்கள் இராதே ; பன்னிரெண்டே மாதங்களில் முழுச் சுற்றும் நிறைவுற்றிருக்குமே !! Rs.80 x 12 albums = Rs.960. What say guys ? இது OPTION : A 

(Maybe ..just maybe இவை black & white-ல் வெளியானால் கூட ஓ.கே தான் எனின் மாமூலான, ரெகுலரான ரூ.80 விலைக்குமே குறைவாய் விலை நிர்ணயம் செய்து - பெருசாய் பர்ஸைப் பதம் பார்க்காத விதமாய் வெளியிடவும் திட்டமிடலாம்  ! ஆனால் "குப்பனுக்கும், சுப்பனுக்கும் கலர் போடுவே ; எங்காளுக்கு black & white-ஆ ?" என்று என் சங்கை வாஞ்சையோடு ருசிக்க டைகரணி பாய்ந்திடும் என்பதால் டிக்கியை க்ளோஸ் செய்து கொள்கிறேன் கருப்பு-வெள்ளை முன்மொழிவினில் !

So சந்தா T ; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் !

"சரி, ஈரோட்டுக்கு டைகர் சுகப்படாதெனில் அதனிடத்தில் வேறென்ன போட உத்தேசம் ?" என்ற கேள்வி "எதை போட்டாலும் படிப்போம்" அணியினரின் உதடுகளில் துளிர்விடுவதையும் யூகிக்க முடிகிறது ! 

*கென்யா 
*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்
*Ars Magna 
*ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
*ஒரு sci -fi ஸ்பெஷல்
*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல் 

என்று ஏகப்பட்ட choice உள்ளது ! 

Of course - டெக்சின் ஸ்பெஷல் இதழ்களும் கைவசம் உள்ளன தான் ! ஆனால் "டைகரைக் கழற்றி விட்டதே அதிகாரியை உட்புகுத்தத்தான் !!" என்று செம காண்டாகிப் போய் என்னை காத்தைச் சேர்த்து அறைய பெரும் போட்டியே அரங்கேறிடும் என்பதால் - strictly a no-no to TEX for ஈரோடு ஸ்பெஷல் 2020 !! 

So மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம் !! 

Letting of steam இன்றைக்கும், தொடரும் சில நாட்களுக்கும் தவிர்க்க இயலா விஷயமாகிடும் என்பது புரிகிறது ! கடுப்பினில் -  "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது ! கொஞ்ச புக்னாலும்  பிரிண்ட் பண்ணி கையிலே தந்து தொலையேன் !! படிச்சா ஒரே பாகமாய் தான் படிக்கணும் " என்று விடாப்பிடியாய் last try வினாக்கள் எழும் என்பதையும் யூகிக்க முடிகிறது ! அதுவே பெரும்பான்மையின் எண்ணமாய் இருப்பின், ஈரோடு எனும் occasion-ஐ skip  செய்து விட்டு, முன்பதிவுகள் சேர்ந்திடவும், பணியாற்றவும் கூடுதலாய் அவகாசம் கொடுத்து  தீபாவளிக்கென ; அல்லது சென்னைப் புத்தக விழாவுக்கென முன்பதிவு இதழாக்கிடலாம் - "400" எனும் முன்பதிவு நிர்ணயத்தோடு ! நானூறை முன்பதிவினில் விற்றிட இயன்றால் இன்னொரு நானூறை எப்பாடுபட்டேனும் ஆன்லைனில் ; ஏஜெண்ட்களிடம் ; சென்னை புத்தக விழாக்களில் என்று காலி பண்ணிட முனைந்திடலாம் ! குரல்வளையை நெறிக்கும் விலையினை இயன்றமட்டிலும் தவிர்க்கவும் முனைந்திடலாம் ! இது OPTION : B ! 

இதற்கொரு offshoot நிச்சயமாய் இருக்குமென்பதையும் இங்கே யூகிக்க சிரமுமில்லை !! 

"அட்றா சக்கை...அட்றா சக்கை...இதே பாணியில் XIII spin-offs ஒரு பிரத்யேக இதழாய் வேணும் !!" ; "ஆர்ச்சியும், ஸ்பைடரும், மாண்ட்ரேக்கும், துப்பறியும் சாம்புவும் ; காக்கா காலியாவும் ஒரு ஸ்பெஷல் இதழாய் வேணும் !!" என்ற ரீதியிலான கோரிக்கைகள் ஒலிக்காது போகாதென்பதும் புரிகிறது ! ஈரோட்டில் வாயை விட்டு, ஆசை காட்டியது என் தவறே என்பதால் அதன் பொருட்டே இந்த  OPTION B எனும் பரிகார முன்மொழிவு ! If at all it happens - this will certainly be just an one-off !! ஆகையால் இதனை முன்னுதாரணமாக்கிடும் கோரிக்கைகள் மேற்கொண்டு வேண்டாமே ப்ளீஸ் ! சத்தியமாய் சக்தியில்லை - ! 

OPTION C : "இன்றைய பட்ஜெட்டில், இதுக்கு மேலே எங்க பையிலே டப்பு இல்லை ! அடுத்த வருஷமோ, அப்புறமோ பாத்துக்கலாம் ! டைகரும் ஓடிப் போகப் போவதில்லை ; நாங்களும் இங்கேயே தான் இருப்போம் ! இந்த பிராஜெக்டைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்க ஓகே. !! இதுவே உங்கள் மைண்ட்-வாய்சாய் இருப்பின், அதைக் குறிப்பிட்டும் பின்னூட்டமிடலாம் ! Will be the voice of practicality !

A ? B ? C ? உங்கள் தேர்வென்னவோ guys ? 

இங்கே பொதுவெளியில் உங்களின் தீர்மானங்களை வெளிப்படுத்துவது தேவையில்லா சர்ச்சைகளை கொணரும் என்று நினைத்திடும் பட்சத்தில் lioncomics@yahoo.com க்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடலாம் - வெறுமனே 'A' என்றோ ; 'B' என்றோ ; 'C' என்றோ குறித்து !! 

"கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next !" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ  ; "கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு ? அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் ? உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா ? எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது ! காலர் இல்லாத பனியன் போடப்படாது !..புரிஞ்சுதா ?!" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; "அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது !" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் ! 

விளக்க வேண்டிய சகலத்தையும் விளக்கி முடித்து விட்டதால் - இனி டபுள் கொட்டு வாங்கிக்க கிரவுண்டில் நிற்கும் வடிவேலைப் போல காத்திருப்பது தானே எனது பணி ? வேட்டைக்கான சீசன் ஆரம்பிச்சாச்சு folks ; ஜமாயுங்கோ !!

P.S : சாத்தி முடித்த பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் 'தம்' மிஞ்சி இருக்கும் பட்சத்தில் - நெட்டில் LA JEUNESSE DE BLUEBERRY என்று மட்டும் டைப் அடித்து, இந்த இளம் டைகர் தொடரின் அலசல்களின் ஆங்கில மொழியாக்கங்களை தேடிப் படித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! நிலவரம் ஸ்பஷ்டமாய்ப் புரிந்திடக்கூடும் ! இதை என் தரப்பின் வக்காலத்தாய்ச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக A  ? B ? C ? என்ற கேள்விக்கு விடையளிக்க உங்களுக்கு உதவிடும் கருவியாகிடக்கூடுமே என்ற எண்ணத்திலேயே சொல்கிறேன் ! Bye all ; see you around !! 

Tuesday, February 04, 2020

திருப்பூரில் மாயாஜாலம் !!

நண்பர்களே,

வணக்கம். திருப்பூர் புத்தக விழாவில் இன்று !!!

நண்பர் (ஆசிரியர்) சரவணன் இன்றைக்கு அடுத்த பேட்ச் மாணவ / மாணவியரை தன் சக ஆசியரோடு நமது ஸ்டாலுக்கு இட்டு வந்து, அனைவரும் இஷ்டமான காமிக்ஸ் இதழ்களை வாங்கிட ஏற்பாடு செய்திருக்கிறார் ! And கடுமையான பணிகளுக்கு மத்தியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களும் குழந்தைகளோடு ஸ்டாலுக்கு வந்திருந்தது icing on the cake !! ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நமது கரம்கூப்பிய நன்றிகள் !! We are truly humbled !!

Folks - பாருங்களேன் நம் துறையின் எதிர்காலத்தை !!! 

Sunday, February 02, 2020

அன்போடு அண்ணாத்தே !!

நண்பர்களே,

வணக்கம். பிப்ரவரியின் நான்கை  உங்களிடம் பிப்ரவரின் ஒன்றுக்கே ஒப்படைத்த கையோடு இந்த ஒற்றை வாரயிறுதியனை சற்றே லாத்தலாய்ச் செலவிட நினைத்தேன் ! So இம்முறை பதிவானது - 'பராசக்தி' வசனம் போலில்லாது - மணிரத்னம் பட டயலாக் போலவே இருந்திடும் ! ஆகையால் இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கும் பொறுப்பானது உங்களின் அலசல்களிடமே இம்முறை !!

ஆர்ச்சியின் மறுவருகையும், "தனியே,,,தனித்தனியே"-வின் novelty-ம் துவக்க கவனங்களைத் தமதாக்கியிருக்க, கார்சனின் நண்பரான அதிகாரியின் திசையில் ஸ்லீப்பர் செல்களைத் தவிர்த்து வேறு யாரும் பயணித்துள்ளதாய்த் தெரியக்காணோம் ! ஒரு பட்டாசு அங்கே காத்திருப்பதால் அதனுள் நீங்கள் புகுந்திடும் வேளை புலர்வதற்குக் காத்திருப்பேன் ! Maybe இந்த ஞாயிறு அந்தப் பொழுதாகின் - சூப்பர் தான் !

Very very early days yet - ஆனால் எதிர்பார்த்தபடியே அண்ணாத்தே ஆர்ச்சி கொணர்ந்திருப்பது இரு  வேறு துருவங்களிலான விமர்சனங்களையே ! பழமையை இன்னமும் ஒரு உத்வேகத்தோடு போற்றிட ; பாராட்டிட எண்ணும் நண்பர்கள் விட்டத்தைத் தொடக் குதிப்பது நிச்சயம்  ; and பழமையை மியூசியங்களோடு மட்டுமே முடிச்சுப் போட்டு வைத்திருக்கும் இன்றைய ஜனத்துக்கு, குளிர் காய்ச்சல் வராத குறையாய்த் தூக்கித் தூக்கிப் போடும் என்பதும் எனக்குத் தெளிவாகவே யூகிக்க முடிந்திருந்தது ! So இரு வேறு திக்குகளிலான extreme reactions தென்படுவதை பார்த்திடும் போது எனக்கு பெருசாய்த் தூக்கிவாரிப் போட்டில்லா ! And இதோ -இன்றைக்கு எனக்கு வந்திட்டதொரு மின்னஞ்சலின் சற்றே எடிட் செய்யப்பட பிரதி : 
------------------------------------------------------------------------------------------------------------
"ஆர்ச்சி இருக்க பயமேன்!"

லயன் காமிக்ஸ் நிறுவனத்தின்  ரூபாய் நாற்பது விலையிலான  இதழ். !!

முதலில்--

'அறிவு ஜீவி' என்ற   பட்டத்தோடு வாழும் மனிதரா  நீங்கள் ? கொஞ்சம் தள்ளிப் போங்கள் !!

புராணங்களின்  மூட்டை மூட்டையான  புளுகுகளையும், கட்டுக்கதைகளையும்  அப்படியே நம்பும் மனிதரா நீங்கள் ? ஆனால் ஜஸ்ட் ஒரு 'டைம் பாஸூக்காக' படிக்கும் காமிக்ஸ்களில் "அது நொட்டை !! இது சொட்டை !!" என்று சொல்லிடும்  மனிதரா நீங்கள் ?  நீங்களும்  தள்ளிப் போங்கள் - ப்ளீஸ் !!

மூத்தோர், முதியோரெல்லாம்  திரையில்  இன்றுவரை டூயட் பாடி நூறு பேரை  அடிப்பதையும், டூயட் காட்சியில் எவ்வளவுதான் ஓடினாலும் நாயகனும், நாயகியும் மூச்சிறைக்காமல் ஒரு வரிகூட மறக்காமல் பாட்டென்ற பெயரில் நம்மை வதம் செய்வதையும் ரசிப்பார்களாம் ! பாடலின்போது கற்பனையென்ற பெயரில்  வெளிநாட்டின் தெருக்களில் ஓடி ஆடி நம் நாட்டின் மானத்தை கப்பலேற்றுவதை குறை சொல்ல மாட்டார்களாம் ! இப்படி  பலப்பல  அபத்தங்களை பலநூறு செலவழித்து ரசிப்பார்களாம் ! ஆனால் ...........

ஒரு காமிக்ஸென்று வந்து விட்டால்  ஐம்புலன்களும் விழித்துக் கொள்வது நிகழ்ந்து பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு லாஜிக் பார்ப்பதே அரங்கேறிடுகிறது ! சாரி, நீங்கள் இந்த ரகமாயிருப்பின், இந்த இதழ் உங்கட்கு அல்ல !

இனி--

*ஓடும் ரயிலில் ஜன்னலோர இருக்கை, 
*பல்லில்லா பாட்டியின் மழலைப்பேச்சு
*வீதியில் உலா வரும் யானை 
*பாதங்களை தொட்டு விளையாடும் கடலலைகள்
*தள்ளுவண்டி   ஐஸ் க்ரீம் 

இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை இன்னமும் மறக்காமல் அனுபவித்து வாழும் மனிதரா நீங்கள் ? 

அப்படியானால் நீங்கள் மட்டும் வாருங்கள் !!
உங்களுக்காகத்தான் 'யாமிருக்க பயமேன்' ஆர்ச்சியின் கதை !!

ஆர்ச்சியைப் போல நாமும் கால யந்திரத்தில் ஏறி  நம் இளமைக்காலத்தை நோக்கி  பயணிக்கலாம் !! ஒரு ஆர்ச்சியின் கதையில் என்னென்ன இருக்க வேண்டுமோ அது அத்தனையையும் உள்ளடக்கி 'பளிச்' சென்ற அட்டைப் படத்தோடு நம் பர்ஸை அதிகம் பதம் பார்க்காமல் ஒரு ஜாலி ரவுண்டுக்கு கேரண்டி  நிச்சயம் !!! நம் வீட்டு சுட்டீஸ்களுக்கு விடுமுறை தினங்களை   ஜாலியாக்கவும்   உதவும். குழப்பங்களும், ட்விஸ்டுகளும் இல்லாத எளிமையான கதை. 

அறிவு பூர்வமாக எழுதும் எழுத்தாளர் என்று அறியப்பட்ட சுஜாதாதான் "பூக்குட்டி"யையும் எழுதினார். So வெகுஜன ரசனைகளுள் ஒரு அங்கத்தை   ஜாலியாக படிக்கலாம் வாங்க !!!
------------------------------------------------------------------------------------------------------------

இந்த மின்னஞ்சலை அனுப்பிய நண்பரும் இங்கே உலவிடும் ஒரு ரெகுலரான அங்கத்தினரே !  நெஞ்சுக்கு நெருக்கமானதொரு தலைப்பின் மீதான நேசத்தில் இங்கே அழுத்தமாய்ப் பதிவிட்டு விட்டு, அதன் நீட்சியாய் சர்ச்சைகள் / அர்ச்சனைகள் தேடிக் கொள்ள வேண்டாமே - என்ற முன்ஜாக்கிரதை நண்பருக்கு !  நியாயமாய்ப் பார்த்தால் எனக்கென நண்பர் அனுப்பியதை என்னோடே வைத்திருப்பதே நியாயமாக இருக்கக்கூடும் ; ஆனால் அவரது வரிகளின் வலிமை இங்கு பொதுவெளியிலும் தெறிப்பதில் தப்பில்லை என்று பட்டது ! So நண்பரே - உங்களின் மின்னஞ்சலை இங்கே பிரசுரிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டிருக்கிறேன் !!

Of course - 'மிடிலே ஆர்ச்சி !!" அணியினருக்கு இந்த மின்னஞ்சல் மீது நிறையவே மாற்றுக் கருத்துக்கள் ; வலுவான எதிர்சிந்தைகள் இருக்குமென்பது சர்வ நிச்சயம் ! Maybe எரிச்சலும் தோன்றிடலாம் தான் ! புளுகாமல் நிஜத்தைப் பேசுவதானால் - நானுமே அந்த 'மிடிலே ஆர்ச்சி" அணியினில் தான் இப்போது வரைக்கும் சவாரி செய்து வருபவன் !! முப்பது ஆண்டுகளுக்கு முன்னே ரசிக்க முடிந்ததை ஆயுளின் முக்கால்வாசியைத் தொட முனையும் தருவாயில் ரசிக்க முடியுமா  என்ன ? என்ற எண்ணம் கொண்ட sceptic நானுமே !! ஆனால் மேலுள்ள மின்னஞ்சலில் நண்பர் கொட்டியிருக்கும் உள்ளக்கிடக்கை போலவே நிறைய தருணங்களில் ; நிறைய புத்தக விழாக்களில் ; நிறைய சந்திப்புகளில் மடை திறந்த வெள்ளமாய் - ஏகப்பட்ட நண்பர்கள் கொட்டித் தீர்த்துள்ளதைக் கேட்டிருக்கும் காதுகள் என்னது ! Of course - "முன்னே நாலு அடி எடுத்து வைத்த கையோடு பின்னே ரெண்டு அடி எடுத்து வைப்பது போலாகிடாதா இந்தப் பழமைத் தேடல் ?" ; "கடலாய் காமிக்ஸ் குவிந்து கிடக்கும் போது, பழசுக்குள் விடாப்பிடியாய்க் கிண்டிக் கொண்டே காலத்தைப் பாழ் பண்ணுவானேன் ?" என்று நண்பர்களிடம் கேட்டும் உள்ளேன் ! ஆனால் அவர்களது கண்களில் துவக்கத்தில் தென்படும் உற்சாகமும், நான் மறுதளித்த பிற்பாடு தென்படும் ஏமாற்றமும் ரொம்பவே குறுகுறுக்கச் செய்திடும் என்னை ! ஏதோவொரு விதத்தில் ஒரு தம்மாத்துண்டு சந்தோஷத்தை, அந்தப் பழமைக் காதலர்க்குக் கொணரும் ஆற்றலை  பெரும் தேவன்மனிட்டோ எனக்கு அருளியிருக்க, நிர்தாட்சண்யமாய் நான் மறுப்பது சங்கடங்களைத் தரத் தவறியதே இல்லை ! And ஐம்பது+ இதழ்களை ஆண்டொன்றுக்குப் போட்டுத் தாக்கும் சூழலில்,  ஒன்றோ / இரண்டோ இதழ்களை மட்டுமேவாவது இந்த young at heart வாசகர்களின் புராதனைத் துழாவல்களின் பொருட்டுச் செலவிடுவதால் குடி முழுகிடாதென்று தீர்மானித்தேன் ! And இருப்பதில் குறைச்சலான விலையிலான இதழில் அதை நுழைத்தால் 'மிடிலே' அணிக்கும் பெருசாய் வருத்தம் நேர்ந்திடாதென்று நினைத்தேன் ! 

And இதோ - ஆர்ச்சியும் வெளிவந்து - காதில் புய்ப்ப கிட்டங்கியையே ஏற்றிவிட்டாலும், அதைக் குதூகலத்தோடு ரசிக்கும் நண்பர்களை ஓரமாய் நின்று மனநிறைவோடு ரசிக்கும் உணர்வு உள்ளுக்குள் !  பார் பாராட்டியதொரு கதையைக் கொணர்வதில் மட்டுமல்ல ; வாசகர்களின் சிறு கனவுகளை நனவாக்கிடும் கதைகளைக் கொணர்வதிலும் கூட ஒரு சுகமுண்டு என்பதை இந்த பிப்ரவரி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது !! அதற்காக "எட்றா வண்டிய ;போட்றா ரிவர்ஸ் கியரை !" என்றெல்லாம் நாம் ரூட் மாறப் போவதில்லை தான் ! ஆனால்  லாஜிக் அறியா இந்த சந்தோஷங்களின் பொருட்டு இக்ளியூண்டு சிந்தனையையாவது செலவிடுவதால் தப்பில்லை என்ற புரிதலும் நம்மிடம் இருக்கும் தான் ! Bye all !! See you around !! Have a beautiful Sunday !!

And do keep the Feb reviews going guys !! 
P.S : கனடாவின் டொரோண்டோ நகரின் Stoufeville பொது நூலகம் ஒன்றில் நமது காமிக்ஸ் இதழ்கள் இருப்பதை நண்பர் (சென்னை) மகேஷ் குமார் பார்த்திருக்கிறார் ! இவை அவர் க்ளிக் செய்த போட்டோக்கள் !! நூலகத்துக்கு இவற்றை வழங்கிய முகமறியா நண்பருக்கும், தகவல் தெரிவித்த நண்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக !!