Powered By Blogger

Saturday, February 08, 2020

நில்..வாசி......சாத்து !

நண்பர்களே,

வணக்கம். கொஞ்ச காலமாகவே பகிர்ந்திட நினைத்து வரும் சமாச்சாரமிது ; 'அப்பாலே பாத்துக்கலாம் ; கொஞ்ச நாள் போகட்டுமே ! ' என்றே தள்ளிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்தாச்சு ! மண்டையைச் சொறிந்து கொண்டே இன்னமுமே இதனில் தயங்கி வந்தால் - மொத்தத்துக்கும் சொதப்பலாகிப் போகும் என்பதால் இந்தத் தருணத்திலாவது திருவாய் மலர நினைக்கிறேன் ! பல சமயங்களில் வாய் நிறைய பெவிகாலைப் பூசிக் கொள்ள  சமீப காலங்களில் பழகி விட்டிருந்தாலும், அந்தக் கட்டுப்பாடை இழக்கும் முதல் தருணத்தில் 'தத்து பித்தென்று' எதையாச்சும் உளறி வைத்து எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது உண்டு தான் ! எத்தனை கழுதை வயசானாலும் அந்த ஒரு சமாச்சாரத்தில் மட்டும் கவனம் பற்ற மாட்டேன்கிறது ! 'அட - என்னடாப்பா விஷயம் ? இத்தினி பில்டப் ஏதுக்கோசரம் ?' என நீங்கள் கடுப்பாகும் முன்னே மேட்டருக்கு வருகிறேன் !

எல்லாம் ஆரம்பித்தது போன ஆகஸ்டில்...நமது வாசக சந்திப்பின் போது ! ஏதேதோ அளவளாவல்கள் ; அலசல்கள் என்ற ஜாலியில் திளைத்துக் கிடந்த சமயம் அடுத்த (2020-ன்) ஈரோட்டு ஸ்பெஷல் பற்றிய topic தலைதூக்கியது ! "இளம் டைகர்' தொடரினில் எஞ்சியிருக்கும் 12 ஆல்பங்களையும் 'ஏக் தம்மில்' போட்டுத் தாக்கினால் என்ன ? என்று நண்பர்களுள் ஒரு அணி உற்சாகமாய் குரலெழுப்ப - உருமி மேளத்துக்கு மண்டையை ஆட்டும் பூம் பூம் மாடைப் போல நானும் சம்மதம் சொன்னேன் ! And அதனை "முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்" என்று 2020-ன் அட்டவணையோடும் சேர்த்தே விளம்பரப்படுத்தவும் செய்திருந்தோம் ! இதுவரையிலும் நீங்கள் அறிந்ததே !!

அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளோ - எனக்கும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கும் மாத்திரமே தெரிந்தவை  ! And அவையே இந்தப் பதிவின் துவக்கப் பத்தியினில் நான் மிடறு விழுங்கித் தவிக்கக் காரணமாகவும் இருந்துவிட்டு சமாச்சாரங்கள் ! 

To cut a long story short - நவம்பர் இறுதியிலேயே இளம் டைகர் ஆல்பம்  # 10 முதல் 21 வரையிலான கதைகளின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைத்து - மொழிபெயர்த்திடும் பொருட்டு நமது ஆஸ்தான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பியிருந்தேன் ! ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; but worth repeating again : கடந்த 19 ஆண்டுகளாய் நமது பிரெஞ்சுக் கதைகளின் சகலத்தையும் ஆங்கிலப்படுத்தித் தரும் அசாத்திய ஆர்வலர் கோவையைச் சேர்ந்த அந்தக் குடும்பத் தலைவியே !! அவரது வசதிக்கும், அந்தஸ்திற்கும், நாம் தந்திடும் பீற்றல் சன்மானத்துக்கு 'மாங்கு-மாங்கென்று' பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிடும் அவசியங்கள் கிஞ்சித்தும் கிடையாது ! ஆனால் கடந்த 2 தசாப்தங்களில் இதனை தனது அன்றாடத்தின் ஒரு அங்கமாக்கி அசத்தி வருகிறார் !  அனுப்பிடும் கதைகளை 'லொஜக்-மொஜக்' என்று மொழிபெயர்த்து அனுப்பிடுவதே பொதுவாய் அவரது வாடிக்கை ! ஆனால் கடந்த மூன்றாண்டுகளாய் தனது அபிப்பிராயங்களை அவ்வப்போது நாசூக்காய் வாட்சப்பில் கோடிட்டுக் காட்டிடுவது நிகழ்ந்து வருகிறது ! 

எல்லாம் ஆரம்பித்தது டிடெக்டிவ் ஜெரோமின் ஒரு சமீபத்துப் பணியிலிருந்து ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" இதழில் நாம் இந்த முட்டைக்கண் டிடெக்டிவை சந்தித்திருந்தது நினைவிருக்கலாம் ; and கதையின் மையக் கரு சற்றே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்தில் இருந்ததுமே நினைவிருக்கலாம் ! So அடுத்த ஆல்பமுமே இதே சிக்கலை நமக்குத் தந்திடலாகாதே என்ற முன்ஜாக்கிரதையில் - ஜெரோமின் அடுத்த பணிக்கொரு கதைச் சுருக்கம் கோரியிருந்தேன் ! தற்செயலாய் நான் அதைக் கேட்டு வைத்ததும் நல்லதாகப் போயிற்று  because அந்தக் கதையும் ஒரு தினுசான plot சகிதமிருந்தது ! அன்றைக்கு முதல் ட்யுராங்கோ ; ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; XIII போன்ற ரெகுலர் கதைகள் நீங்கலாய் புதுசுகள் ; one-shots ; கிராபிக் நாவல்களுக்கெல்லாமே அவரது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்க் கேட்டுக் கொள்வதை வழக்கமாக்கியிருக்கிறேன் ! அதற்காக அவர் "இதைப் போடுங்கோ ; இதைப் போடாதீங்கோ !" என்ற ரீதியில் வழிகாட்டலெல்லாம் செய்திடுவதில்லை ! "இன்ன மாதிரி...இன்ன மாதிரி கதை ஓடுது...இன்ன மாதிரி..இன்ன மாதிரி முடியுது !" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் ! So இறுதியாய்த் தீர்மானிப்பது எனது gutfeel மாத்திரமே ! 

And true to form - "இளம் டைகரின்"  ஆல்பங்களை வாசித்த கையோடு எனக்கு போன் அடித்தார் ! மாமூலான குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் 'அட...என்ன விஷயமோ ?' என்ற குறுகுறுப்பு என்னுள் ! சட்டென்று விஷயத்துக்கு வந்தவர் - "இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கலாமா ?"  என்று கேட்டார் ! ஒரு மெல்லிய தயக்கம் அவரது தொனியில் தென்பட்டது என் கவனத்தைத் தப்பவில்லை ; "ஏன்...ஏதேனும் நெருடுகின்றதா கதைகளில் ?" என்று படபடப்பாக நான் கேட்க - "வறட்சியாய் அந்த வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் தான் நெடுகப் பயணிக்கிறது !" என்றார் சுரத்தே இன்றி !  ;  "அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது ஒரிஜினல் கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி நிற்பது போலவும் படுகிறது !" என்றும் சொன்னார் ! வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது எனக்கு ; அதே நேரம் ஜோட்டாவால் என்னையே சாத்திக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது ! Simply becos 2016-ன் ஒரு உறக்கம் வரா வாரயிறுதியில் இந்த இளம் டைகர் தொடரின் எஞ்சி நிற்கும் ஆல்பங்கள் பற்றி இன்டர்நெட்டில் உருட்டோ உருட்டென்று உருட்டித் தள்ளியிருந்தேன் ! And நமது மொழிபெயர்ப்பாளர் தயங்கித் தயங்கி சொல்ல முனைந்த விஷயங்கள் யாவுமே உலகளாவிய டைகர் ரசிகர்களின் ஆதங்கக் குரல்களில் அன்றைக்கே கேட்டும் இருந்தேன் ! டெலிபோனில் நான் கேட்டுக்கொண்டிருந்த சமாச்சாரம் சகலமுமே எனக்குப் புதிதல்ல ! So 2016 முதலாய் "இளம் டைகர்" என்ற தலைப்பினை யார் துவக்கிட்டாலும்  'ஹி..ஹி..' என்றபடிக்குக்  கழன்று கொள்வதையே வாடிக்கையாக்கியிருந்தேன் - 2019-ன் ஆகஸ்டின் ஒரு தன்னிலை மறந்த பொழுதுவரையிலும் !

டெக்ஸுக்கு டைனமைட் ; தனிச்சந்தா ; MAXI தடம் என்று ஏதேதோ செய்ய சாத்தியப்படும் போது இந்த இளம் டைகரின் compilation - டைகர் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது போலிருக்குமே என்ற உத்வேகத்தில் தலையை ஆட்டி விட்டேன் ! ஆனால் நமது மொழிபெயர்ப்பாளரின் தயக்கம் எனக்குக் குளிர் ஜுரத்தைக் கொணராத குறையாய் நடுங்கச் செய்தது ! மேலோட்டமாய்க் கதைச் சுருக்கங்களை வாசிப்பது ; இன்டர்நெட்டில் விமர்சனங்களை அலசுவது என்பதெல்லாம் ஒருபக்கம் ; ஆனால் கதைகளை முழுமையாய், தெளிவாய்ப் படிப்பதென்பது இன்னொரு விஷயமன்றோ ? அதிலும் கடந்த 19 ஆண்டுகளாய் நம் ரசனைகளோடே பயணம் செய்பவருக்கு எவை சுகப்படும் ? எவை சுகப்படாது ? என்று தெரியாது போகுமா - என்ன ? So கடந்த ஒன்றரை மாதங்களாய் நான் தலைக்குள் பிசைந்து வரும் மாவு இதுவே : 
  1. கதாசிரியர் சார்லியே & ஓவியர் ஜிரோ - பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகில் ஜாம்பவான்கள் என்பதில் உலகுக்கே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ! அவர்களது கூட்டணியில் உருவான கேப்டன் டைகர் கதைகள் கௌபாய் கதைத்தொடர்களுக்கென நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இமயத்தின் உசரம் ! So அந்தப் பிதாமகர்கள் மறைந்த பிற்பாடு, கதைப் பொறுப்பை கையில் எடுத்திருக்கக்கூடிய writers அசாத்தியத் திறமைசாலிகளாக இருந்தாலுமே - அவர்கள் சதா நேரமும் போட்டி போட்டிட வேண்டியது இரு அசுரர்களின் நிழல்களோடு என்பதில் தான் சிக்கலே துவங்கிடுகிறது ! உச்சக் கதைகள் சகலத்தையும் மொத்தமாய் ரசித்தான பின்னே, "டைகர்" எனும் ஒரு ராட்சச பிம்பத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டான பிற்பாடு, நார்மலான கதைகளை ரசிப்பது எவ்விதமிருக்குமோ ? என்ற பயமே என்னை வாட்டுகிறது ! 
  2. அதிலும் நார்மல் இதழ்களாக அன்றி, முன்பதிவுக்கான ; குறைந்த பிரிண்ட் ரன்னுடனான இதழ் எனும் போது கிட்டத்தட்ட ரூ.1350 விலையில் வெளியாகிடக்கூடிய சமாச்சாரம் இது ! இந்த விலைக்கேற்ற நியாயம் செய்திட சார்லியேவுக்குப் பின்னான கதைகளுக்கு இயன்றிடுமா ? 
  3. "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த "ஈரோட்டு ஸ்பெஷல்" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே ? 
  4. And more than anything else - இந்தப் "பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா ? 

இவையே என்னை உலுக்கிடும் வினாக்கள் ! 

On the other hand - "அதெல்லாம் எனக்குத் தெரியாது ; எது எப்புடி இருந்தாலுமே ஆடலும், பாடலும் போட்டே தீரணும் ! அது சரியா இல்லாங்காட்டி அப்புறமா உன்னெ துவைச்சுத் தொங்கப்போட்டுக்குறோம் ! இப்போதைக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினா கண்ணை நொண்டிப்புடுவோம்  - கபர்தார் !" என்று கண்சிவக்க  டைகர் ஆர்வலர்கள்  தயாராக இருப்பர் என்பதும் புரிகிறது ! "காமிக்ஸ் நேசம்" எனும் சங்கதிகளில் அவரவரது பிடிவாதங்கள் ; கண்சிவத்தல்கள் தான் எத்தகையது என்பதை எண்ணற்ற தருணங்களில் தரிசித்திருக்கிறேனே ?!! Logic என்பதெல்லாம் லாலிப்பாப்புக்கு கூடப் பெறாது அத்தருணங்களில் என்பதில் எது இரகசியம் ?! So தொண்டை கிழிய  யதார்த்தங்களை இங்கே முன்வைக்க நான் முனைந்தாலுமே, no escaping the great மண்டகப்படி !! என்பது புரிகிறது ! 

"அப்படியே அண்ணாச்சி கிழிக்கிறது எல்லாமே மெகா ஹிட்டா  தான் கிழிப்பாராம் !! தெரியாதாக்கும் எங்களுக்கு !! அடப் போவியா ??" என்ற ரௌத்திரங்கள் மண்டகப்படி நிகழ்த்திடும் முனைப்பிலிருப்போரின் சிந்தைகளில் நிழலாடிடும் என்பதை யூகிக்க முடிகிறது ! ஆனால் சற்றே பொறுமையாய்ப் பின்னோக்கிப் போயின் - "ஜெரெமியா" நீங்கலாய் ஹிட்டாகிடா ஸ்பெஷல் இதழ்கள் நமது சமீபத்தைய பட்டியலில் லேது என்பது புரியும் ! அந்த வாடிக்கையைத் தொடர்ந்திடும் அவாவே இன்றைக்கு என்னைத் திருத் திருவென முழிக்கச் செய்து வருகிறது ! 

Make no mistake - இவை ஒரு மார்ஷல் டில்லானோ ; ஒரு கமான்சேவோ வலம் வந்திடும் தொடரின் கதைகளாக இருப்பின், துளித் தயக்கமும் இன்றி அறிவிப்பு-முன்பதிவு என்று மூட்டைகளை எப்போதோ பிரிக்கத் துவங்கியிருப்போம் ! ஆனால் "டைகர்" எனும் ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அசாத்தியருக்கு இந்த வீரியங்கள் ஒரு மிடறு குறைவாகத் தென்படுமே என்பதே எனது கவலை ! பற்றாக்குறைக்கு ஒரிஜினல் கதாசிரியரின் விலகலுக்குப் பின்பாய், உச்சம் கண்ட தொடர்களுமே கூட டாஸ்மாக் காதலனைப் போலத் தள்ளாடுவதை ஏற்கனவே  XIII-ன் சமாச்சாரத்திலும், இப்போது லார்கோவின் தொடரிலும் பார்த்திடும் அனுபவம் நமக்குள்ளதே ! அந்த மிரட்சியும் சேர்ந்து கொண்டு என்னை விடிய விடிய வாட்டுகிறது  ! 

இந்த பிராஜெக்டை இன்றைக்கே நான் ஒத்தி வைத்தால் - டைகரின் diehard ரசிகக் கண்மணிகளின் கரங்களால்  சுடச் சுட "சப்பல்ஸ் சூட்டுவிழா" அரங்கேறிடும்  என்பதில் no secrets ! அதே சமயம் இதனை நிஜமாக்கி, ரூ.1350+ விலையில் ஈரோட்டுக்கு  ஸ்பெஷல் இதழாகக் கொணர்ந்திடும் பட்சத்தில் - வாங்கிடும் / வாசித்திடும் அத்தனை பேரிடமும் ஏகோபித்த துடைப்பப் பூசை கிட்டிடும் என்பதையும் கணிக்க முடிகிறது ! 

இந்த நொடியில் பள்ளிக்கூடத்தில் ஒரு குறுந்தாடியை ஒட்டிக் கொண்டு இங்கிலீஷ் டிராமாவில்  நான் பேசிய ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" வசனம்  தான் நினைவுக்கு வருகின்றது  : 

"To be, or not to be, that is the question !" 

"இன்றைய சப்பல்ஸ் முடிசூட்டுவிழாவா ? ஆகஸ்டின் துடைப்பத் திருவிழாவா ?

மத்தளம் கொட்டி உங்களின் கடுப்புக்களைக் கொஞ்சமாய்த் தணித்துக் கொண்டான  பிற்பாடு, இதற்கு என்ன தான் தீர்வென்று சற்றே சாந்தமாய் சிந்திக்கத் தயாராகிடும் பட்சத்தில் - this is what I have to propose :

"பிரேத்யேகம் ; முன்பதிவு ; பெரிய விலைகள் ; பெரும் எதிர்பார்ப்புகள்"  என்ற நான்கு சமாச்சாரங்களும் கைகோர்க்கும் போதே ஒவ்வொரு முறையும் திரையில் ஒரு "பாட்ஷா"  விரிந்திடும் அவசியம் அரூபமாய்த் தலைதூக்குகிறது ! மாறாக - "ரெகுலர் தடம் ; எல்லோருக்குமே ; சிறு விலைகள்" என்ற முக்கூட்டணி சேர்ந்திடும் போது "பெரும் எதிர்பார்ப்புகள்" என்ற மாயை காணாது போய்விடக்கூடும் அல்லவா ? So 2021-ன் சந்தாவினில் "சந்தா T" என்று ஒரு சமாச்சாரத்தை கொணர்ந்து, மாதமொரு அத்தியாயம் என எஞ்சியிருக்கும் 12 பாகங்களையும் ஒரே ஆண்டில்  போட்டுத் தள்ளினால் என்ன ? 1975-ல் துவக்கம் கண்ட இந்த "இளம் டைகர்" தொடரின் 21 ஆல்பங்கள் வெளியாகிட 40 ஆண்டுகள் அவசியப்பட்டுள்ளது ஒரிஜினல் பிரெஞ்சில் ! ஆயுளின் பாதிக்கு மேலான காத்திருப்பையே ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு டைகர் ரசிகர்களின் அளவுக்கு அதீதப் பொறுமைசாலிகளாய் நாமிருக்கும் அவசியங்கள் இராதே ; பன்னிரெண்டே மாதங்களில் முழுச் சுற்றும் நிறைவுற்றிருக்குமே !! Rs.80 x 12 albums = Rs.960. What say guys ? இது OPTION : A 

(Maybe ..just maybe இவை black & white-ல் வெளியானால் கூட ஓ.கே தான் எனின் மாமூலான, ரெகுலரான ரூ.80 விலைக்குமே குறைவாய் விலை நிர்ணயம் செய்து - பெருசாய் பர்ஸைப் பதம் பார்க்காத விதமாய் வெளியிடவும் திட்டமிடலாம்  ! ஆனால் "குப்பனுக்கும், சுப்பனுக்கும் கலர் போடுவே ; எங்காளுக்கு black & white-ஆ ?" என்று என் சங்கை வாஞ்சையோடு ருசிக்க டைகரணி பாய்ந்திடும் என்பதால் டிக்கியை க்ளோஸ் செய்து கொள்கிறேன் கருப்பு-வெள்ளை முன்மொழிவினில் !

So சந்தா T ; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் !

"சரி, ஈரோட்டுக்கு டைகர் சுகப்படாதெனில் அதனிடத்தில் வேறென்ன போட உத்தேசம் ?" என்ற கேள்வி "எதை போட்டாலும் படிப்போம்" அணியினரின் உதடுகளில் துளிர்விடுவதையும் யூகிக்க முடிகிறது ! 

*கென்யா 
*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்
*Ars Magna 
*ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
*ஒரு sci -fi ஸ்பெஷல்
*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல் 

என்று ஏகப்பட்ட choice உள்ளது ! 

Of course - டெக்சின் ஸ்பெஷல் இதழ்களும் கைவசம் உள்ளன தான் ! ஆனால் "டைகரைக் கழற்றி விட்டதே அதிகாரியை உட்புகுத்தத்தான் !!" என்று செம காண்டாகிப் போய் என்னை காத்தைச் சேர்த்து அறைய பெரும் போட்டியே அரங்கேறிடும் என்பதால் - strictly a no-no to TEX for ஈரோடு ஸ்பெஷல் 2020 !! 

So மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம் !! 

Letting of steam இன்றைக்கும், தொடரும் சில நாட்களுக்கும் தவிர்க்க இயலா விஷயமாகிடும் என்பது புரிகிறது ! கடுப்பினில் -  "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது ! கொஞ்ச புக்னாலும்  பிரிண்ட் பண்ணி கையிலே தந்து தொலையேன் !! படிச்சா ஒரே பாகமாய் தான் படிக்கணும் " என்று விடாப்பிடியாய் last try வினாக்கள் எழும் என்பதையும் யூகிக்க முடிகிறது ! அதுவே பெரும்பான்மையின் எண்ணமாய் இருப்பின், ஈரோடு எனும் occasion-ஐ skip  செய்து விட்டு, முன்பதிவுகள் சேர்ந்திடவும், பணியாற்றவும் கூடுதலாய் அவகாசம் கொடுத்து  தீபாவளிக்கென ; அல்லது சென்னைப் புத்தக விழாவுக்கென முன்பதிவு இதழாக்கிடலாம் - "400" எனும் முன்பதிவு நிர்ணயத்தோடு ! நானூறை முன்பதிவினில் விற்றிட இயன்றால் இன்னொரு நானூறை எப்பாடுபட்டேனும் ஆன்லைனில் ; ஏஜெண்ட்களிடம் ; சென்னை புத்தக விழாக்களில் என்று காலி பண்ணிட முனைந்திடலாம் ! குரல்வளையை நெறிக்கும் விலையினை இயன்றமட்டிலும் தவிர்க்கவும் முனைந்திடலாம் ! இது OPTION : B ! 

இதற்கொரு offshoot நிச்சயமாய் இருக்குமென்பதையும் இங்கே யூகிக்க சிரமுமில்லை !! 

"அட்றா சக்கை...அட்றா சக்கை...இதே பாணியில் XIII spin-offs ஒரு பிரத்யேக இதழாய் வேணும் !!" ; "ஆர்ச்சியும், ஸ்பைடரும், மாண்ட்ரேக்கும், துப்பறியும் சாம்புவும் ; காக்கா காலியாவும் ஒரு ஸ்பெஷல் இதழாய் வேணும் !!" என்ற ரீதியிலான கோரிக்கைகள் ஒலிக்காது போகாதென்பதும் புரிகிறது ! ஈரோட்டில் வாயை விட்டு, ஆசை காட்டியது என் தவறே என்பதால் அதன் பொருட்டே இந்த  OPTION B எனும் பரிகார முன்மொழிவு ! If at all it happens - this will certainly be just an one-off !! ஆகையால் இதனை முன்னுதாரணமாக்கிடும் கோரிக்கைகள் மேற்கொண்டு வேண்டாமே ப்ளீஸ் ! சத்தியமாய் சக்தியில்லை - ! 

OPTION C : "இன்றைய பட்ஜெட்டில், இதுக்கு மேலே எங்க பையிலே டப்பு இல்லை ! அடுத்த வருஷமோ, அப்புறமோ பாத்துக்கலாம் ! டைகரும் ஓடிப் போகப் போவதில்லை ; நாங்களும் இங்கேயே தான் இருப்போம் ! இந்த பிராஜெக்டைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்க ஓகே. !! இதுவே உங்கள் மைண்ட்-வாய்சாய் இருப்பின், அதைக் குறிப்பிட்டும் பின்னூட்டமிடலாம் ! Will be the voice of practicality !

A ? B ? C ? உங்கள் தேர்வென்னவோ guys ? 

இங்கே பொதுவெளியில் உங்களின் தீர்மானங்களை வெளிப்படுத்துவது தேவையில்லா சர்ச்சைகளை கொணரும் என்று நினைத்திடும் பட்சத்தில் lioncomics@yahoo.com க்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடலாம் - வெறுமனே 'A' என்றோ ; 'B' என்றோ ; 'C' என்றோ குறித்து !! 

"கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next !" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ  ; "கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு ? அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் ? உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா ? எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது ! காலர் இல்லாத பனியன் போடப்படாது !..புரிஞ்சுதா ?!" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; "அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது !" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் ! 

விளக்க வேண்டிய சகலத்தையும் விளக்கி முடித்து விட்டதால் - இனி டபுள் கொட்டு வாங்கிக்க கிரவுண்டில் நிற்கும் வடிவேலைப் போல காத்திருப்பது தானே எனது பணி ? வேட்டைக்கான சீசன் ஆரம்பிச்சாச்சு folks ; ஜமாயுங்கோ !!

P.S : சாத்தி முடித்த பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் 'தம்' மிஞ்சி இருக்கும் பட்சத்தில் - நெட்டில் LA JEUNESSE DE BLUEBERRY என்று மட்டும் டைப் அடித்து, இந்த இளம் டைகர் தொடரின் அலசல்களின் ஆங்கில மொழியாக்கங்களை தேடிப் படித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! நிலவரம் ஸ்பஷ்டமாய்ப் புரிந்திடக்கூடும் ! இதை என் தரப்பின் வக்காலத்தாய்ச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக A  ? B ? C ? என்ற கேள்விக்கு விடையளிக்க உங்களுக்கு உதவிடும் கருவியாகிடக்கூடுமே என்ற எண்ணத்திலேயே சொல்கிறேன் ! Bye all ; see you around !! 

356 comments:

  1. Goodnight sir.. 10 kulla first time..

    ReplyDelete
  2. எனக்கு ஆப்ஷன் A ok சார். அப்படியே ஈரோட்டில் கென்யா and America thriller please. உங்கள் அறிவிப்பில் சிறிதும் எனக்கு வருத்தம் இல்லை.

    ReplyDelete
  3. Good morning (நாளைக்கு) to all.

    ReplyDelete
    Replies
    1. Good night பத்து சார். (இன்றைக்கு)

      Delete
  4. என் Mobile ல C என்கிற பொத்தானை கழட்டி தூக்கி வீசிட்டேன்.
    A அல்லது B எது நடந்தாலும் Ok.

    ReplyDelete
    Replies
    1. தல. First aa வந்துருக்கீங்க.
      அப்படியே
      ஆகஸ்ட்டுல
      மாடஸ்டிக்கு ஒரு குண்டுபுக்கு கேளுங்க.

      Delete
    2. பாபு ஏன் இந்த கொலை வெறி.

      Delete
    3. அவர் சரியாகத்தானே சொல்றார். மாடஸ்டிக்கு, ஒரு குண்டு புக் கேக்கறார். கொடுத்திடுங்களேன்.

      Delete
    4. பத்மநாபன் சார். செம🤣🤣‌

      Delete
  5. பத்துக்குள்ளே.....

    ReplyDelete
  6. படிச்சிட்டு வருவோம்...

    ReplyDelete
  7. Sorry sir..my anxiety... if tiger is not possible try xiii all spinoffs in hard binding......

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடு அருவாள.

      Delete
  8. வண்ணத்தில் 12 மாதம் ஆப்ஷன் A ஓகே சார்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே

    ReplyDelete
  10. //// So மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம்களமிறக்கலாம்..///

    என்னுடைய ஓட்டு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
    & sci -fi ஸ்பெஷலுக்கு சார்...

    ReplyDelete
  11. வண்ணத்தில் 12 மாதம் ஆப்ஷன் A ஓகே சார்

    ReplyDelete
  12. A OR B எதுவானாலும் ok.
    ஈ.பு.விக்கு ARS MAGNA (SUPERB SELECTION) AND KENYA!

    ReplyDelete
  13. No postponement.my option is B. அதுவே தீபாவளியாக இருந்தால் டபுள் ok.

    ReplyDelete
  14. சங்கத்து ஆளை அடிக்கிறதே இந்த கட்டத்துரைக்கு வேலையா போச்சி...

    ReplyDelete
    Replies
    1. :))))

      அடிச்சது அதிகாரியோட ஆளாச்சே!! ;)

      Delete
  15. ஆபரேசன் B சார்.
    முடிந்தால் கலரில். இல்லையேல் கருண்ணத்தில்...

    ReplyDelete
  16. ஆப்சன் A.. வருசம் பூரா தங்கத்தலைவன் வண்ணத்திலே... எங்காளு ஒன்னும் மத்தவங்க மாதிரி டிஎன்பிஎஸ்சிலே பிராடு பண்ணி ஆன அதிகாரி இல்லியே... ஆகவே பெரியோர்களே தாய்மார்களே..

    ReplyDelete
    Replies
    1. அதே அதே. வருடம் 12 டெக்ஸ் வந்தது அல்லவா அதே போல எங்க தலைவருக்கும் ஒரு 12 புத்தகங்கள். 2021 டைகர் இன் வருடம். எங்கள் கொடி பறக்கட்டும்.

      Delete
    2. கோடு போட்ட அன்ட்ராயரைத்தான் கொடியாக பறக்க விட்டிருக்கிறீர்களாமே?!! :)

      Delete
    3. பார்க்க தானே போகிறோம் யாருடைய டிராயர் பறக்கிறது என்று?

      Delete
    4. டெக்ஸ் மாதப்பிறப்பு மாதிரி. மாதம் ஒன்று. டைகர் வருடப்பிறப்பு மாதிரி. 12 மாதத்துக்கும் சேர்த்து ஒண்ணு.

      Delete
  17. தலைவா..... வந்துட்டியா....

    படிச்சுட்டு வாரேன்..

    ReplyDelete
  18. கென்யாவுக்கு பதிலாக அமெரிக்கா க்ரைம் திரில்லர் கூட OK சார்.
    ஆனால் ARS MAGNA அட்டகாசமான செலக்சன். Treasure hunting மற்றும் புதிர்கள் விடுவிப்பு என்னுடைய விருப்பமான ஜானர்.

    ReplyDelete
  19. ஒரு புது டிடெகடிவ் ஸ்பெஷல்
    ஒரு அமெரிக்க கிரைம் - திரில்லர்.
    முடிந்தால் இவை இரண்டும் சார்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஆப்சன் D :: போட்டா 12 பாக்ங்களையும் ஐக் தம்மா ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் லிமிடட் பிரிண்ட்டாக போடுங்க

    இல்லை

    ஆப்சன் E :: டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை களமிறக்குங்க

    இரண்டு ஆப்சன் புதுசா கொடுத்திருக்கோம். ஏதோ பார்த்து செய்யுங்க சாமி.

    ReplyDelete
  22. அனைவருக்கும் இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  23. டைகர் கண்டிப்பா வேண்டும் விஜயன் சார்

    மாதம் ஒண்ணு / 2 மாததத்துக்கு 2 / 3 மாதத்துக்கு 3 கலரோ அல்லத்து B/W

    இல்ல ஒரே செட்டா போடுவீங்களோ அது எனக்கு தெரியாது

    ஆனா
    டைகர் 20/20 இயர்ல வந்தே ஆகனும் ஆமா

    ReplyDelete
  24. புதையல் தேடல் ஆஹா ஆஹா. அப்ப ARS MAGNA vukku எனது ஓட்டும்.

    ReplyDelete
  25. ஆனா கென்யா போட்டே ஆகணும்.

    ReplyDelete
  26. சார் எனது முதல் தேர்வு option B.

    Option A எனும் போது தளபதியின் வருகை அனைத்து மாதங்களில் இருக்கும் ஆனால் டைகர் கதைகளின் சுவாரஸ்யமே கதைகளின் தொடர்ச்சி தான். அதை விடுத்து எந்த குறையும் இல்லை option A ல். So Option A க்கு பழகிடவேண்டும்.. will do that for Tiger..

    Option C is strictly no...


    எடிட்டர் சார் எப்படியாவது இளம் டைகர் ஐ இந்த வருடம் வரவையுங்கள்..

    நன்றி..

    ReplyDelete
  27. // பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த "ஈரோட்டு ஸ்பெஷல்" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே ? // ஏற்கனவே என் எதிர்பார்ப்பு விண் அளவு இருக்கிறது

    ReplyDelete
  28. // And more than anything else - இந்தப் "பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா ? // உண்மை நிச்சயமான உண்மை.

    ReplyDelete
  29. // சந்தா T; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் ! //

    +1 இது எனக்கு ஓகே. மூன்று மாத புத்தகங்கள் விற்பனை சரியில்லை மக்களுக்கு பிடிக்க வில்லை எனில் இதனை மூன்று மாதங்களில் நிறுத்தி விட்டு வேறுகதைகள வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. //+1 இது எனக்கு ஓகே. மூன்று மாத புத்தகங்கள் விற்பனை சரியில்லை மக்களுக்கு பிடிக்க வில்லை எனில் இதனை மூன்று மாதங்களில் நிறுத்தி விட்டு வேறுகதைகள வெளியிடலாம்.//


      இப்படி எதுவும் நடக்கக் கூடாத என்பதற்காகவே முழு புத்தகமும் ஒரே செட்டாக வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது.

      Delete
  30. ஈரோட்டில் கென்யா + ஒரு sci -fi ஸ்பெஷல் என இரண்டு புத்தகங்கள் கொடுங்கள் சார்.

    அப்புறம் கௌபாய் மற்றும் அதிகாரி கதைகளை ஈரோட்டில் தயவு செய்து இறக்க வேண்டாம்.

    ReplyDelete
  31. //புதையல் தேடல் ஆஹா ஆஹா. அப்ப ARS MAGNA vukku எனது ஓட்டும்.//

    ஆமாம் சார் டாவின்சி கோட் மாதிரி... செம ஸ்டோரி!

    ReplyDelete
  32. டைகரை தனித்தனியாக வெளியிட்டால் விற்பனை பாதிப்பு வரும் மீண்டும் குடோன் நிரப்பும் படலமாகிவிடும் அதனால் வாழ்வோ தாழ்வோ டைகரை ஒரே இதழாக வெளியிடுவதுதான் நல்லது

    ReplyDelete
    Replies
    1. அப்ப ஆப்ஷன் B. Chennai book fair. இப்போதே முன் பதிவை துவக்கி விடலாம்.

      Delete
    2. ////டைகரை தனித்தனியாக வெளியிட்டால் விற்பனை பாதிப்பு வரும் மீண்டும் குடோன் நிரப்பும் படலமாகிவிடும் ///

      +1 ரொம்பச் சரி!!

      Delete
  33. டைகர் இதழ்கள் தனித்தனியாக என்ற (விபரீத) முடிவு வேண்டாம் சார்.. கால தாமதாம் ஆனாலும் பரவாயில்லை ஒரே தொகுப்பாக வெளியிடலாம்...

    ReplyDelete
  34. கேப்டன் டைகர் கதைகளில் மின்னும் மரணம், தங்கக்கல்லறை, இரத்தக் கோட்டை மட்டுமே சிறப்பு வாய்ந்த கதைகள் மற்றதெல்லாம் ஆவ்ரெஜ் கதைகள்தான்! அதிலும் இளம் டைகர் கதைகள் ரொம்பவே ஆவ்ரெஜ்! 12 புக் சேர்த்து ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு சிலருக்கு வேண்டுமானால் சந்தோஷத்தை வழங்கியிருக்கலாம் பலருக்கு இது அதிருப்தியே ஏற்படுத்தியுள்ளது! ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அட்லாண்டாவில் ஆக்ரோஷம், வேங்கையின் சீற்றமெல்லாம் இன்னும் ஸ்டாக் இருக்கும் நிலையில் 1350 என்பது போகாத ஊருக்கு வழியை தேடுவது போல ஆகியிருக்கும்! இதை தள்ளிப்போட்டது மட்டற்ற மகிழ்ச்சியே! அடுத்த வருடம் ஆப்ஷன் T 80 ரூபாய் விலையில் போடவே பாருங்கள் விற்பனையிலும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஈரோடு புக் பேரில் அர்ஸ் மேக்னா & அமெரிக்கா த்ரில்லர் களம் இறக்கினால் நல்லாயிருக்கும் சார்

    ReplyDelete
  35. ஆப்சன் C.
    ஆசிரியர்
    ஆர்வத்தோடும், உத்வேகத்தோடும் வெளியிடும் கதைகளிலே நாலைந்து தடம் மாறி சொதப்புகிறது.இந்த நிலையில் ஆசிரியரே சுதி குறைந்த குரலில் மழுப்புகிறார் எனும்போது அது வேண்டாம் என்பதே என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. // ஆர்வத்தோடும், உத்வேகத்தோடும் வெளியிடும் கதைகளிலே நாலைந்து தடம் மாறி சொதப்புகிறது.இந்த நிலையில் ஆசிரியரே சுதி குறைந்த குரலில் மழுப்புகிறார் எனும்போது அது வேண்டாம் என்பதே என் எண்ணம். //

      +1

      Delete
  36. Option A., B, C எதுனாலும் ஓகே தான்.

    ReplyDelete
  37. Kenya, crime thriller, etc.etc.. posters , if posted here, can help us to say something

    ReplyDelete
  38. தனியே தன்னந்தனியே:

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட ஒரு வளைவில் புதிரான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தாயும் குழந்தையும் அந்த வழியாக செல்லும் போது காணாமல் போகிறார்கள். இதனை துப்பறியும் போது நெஞ்சை உலுக்கும் ஒரு குடும்பத்தின் மரணம் அதிலும் அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குழந்தையின் மரணம் மனதை கலங்க செய்வதாக இருந்தது: விபத்தில் அந்த பெண் குழந்தையின் முகம் கூரான மர கிளையில் மாட்டித் தொங்கியது.. அப்பா கொடூரம்.

    காணாமல் போன தாய் விபத்தில் இறந்து விட குழந்தை என்னவானது எப்படி தப்பியது என்பதை கொஞ்சம் திகில் கொஞ்சம் சஸ்பென்ஸ் சில அழகான முடிச்சுகள் என சுவாரசியமான கதையை கதாசிரியர் கொடுத்ததை பாராட்ட வேண்டும்.

    அரை உயிருடன் இருக்கும் சிறுவன் பாலை காப்பாற்ற பேயாக அலையும் அந்த சிறுமியின் முயற்சிகள் ஒரு தாயுள்ளத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. குழந்தைக்கு வேர்க்கும் என சட்டையை கழற்றி வைப்பது, தாகத்திற்கு நீர் கொடுப்பது குழந்தையை பிறர் எப்படியாவது மற்றவர்கள் பார்த்து காப்பாற்ற வேண்டும் என்று அதன் ஒரு ஷீவை கொண்டு செல்வது என அனைத்தும் அட போட வைக்கிறது.

    இதனை துப்பறியும் ஷெரீப்பின வயதான தாயார், அவரின் தாய் பாசம் மற்றும் தனது வேலைக்கு கொடுக்கும் மரியாதை; தனக்கு துணை வந்தால் தாயாரை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம் என தனது காதலை சில காலம் தள்ளி வைப்பது என அசத்தி விட்டார். கதையின் பல முடிச்சுகள் அவைகளை அழகாக அவிழ்த்தது துப்பறியும் நாவல் படித்த அனுபவத்தை கொடுத்தது.

    நமது காமிக்ஸில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குட்டிப்பேயின் ராஜாங்கம்.

    ReplyDelete
    Replies
    1. // குட்டிப்பேயின் ராஜாங்கம். // இப்படியே போனால் பேய் மீது பயம் போய் பாசம் வந்து விடும் போல.

      Delete
    2. நல்ல விமர்சனம் பரணி

      Delete
    3. ///இதனை துப்பறியும் ஷெரீப்பின வயதான தாயார், அவரின் தாய் பாசம் மற்றும் தனது வேலைக்கு கொடுக்கும் மரியாதை; தனக்கு துணை வந்தால் தாயாரை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம் என தனது காதலை சில காலம் தள்ளி வைப்பது என அசத்தி விட்டார். கதையின் பல முடிச்சுகள் அவைகளை அழகாக அவிழ்த்தது துப்பறியும் நாவல் படித்த அனுபவத்தை கொடுத்தது.///

      சூப்பர் PfB!! ரசித்துப் படித்திருக்கிறீர்கள்!

      Delete
    4. இந்த கதையின் மிகப்பெரிய பலம் கருப்பு வெள்ளை ஓவியம். அதுவும் அந்த பெண் குழந்தையின் முகம் மரக்கிளையில் குத்தி தொங்கும் காட்சி மிரட்டல்.

      Delete
    5. அருமையான விமர்சனம் பரணி...:-)

      Delete
  39. ஆப்ஷன் A. அது சரி.. லவ் ஸ்டோரி ஸ்பெஷலா??? அமெரிக்க கிரைம் திரில்லர், Sci-fi ஆக்ஷனுக்கு என் ஓட்டு.. எது எப்படியோ.. என் மனைவிக்கு லவ் ஸ்டோரிஸ் ரொம்ப பிடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ////என் மனைவிக்கு லவ் ஸ்டோரிஸ் ரொம்ப பிடிக்கும்..///

      சூப்பர்!!

      Delete
  40. Blueberry's plus itself is that it is not straightforward or predictable as other cowboy stories. I think its ok to read them even if they have less action sequences. Please don't chop them into multiple small books published every month. Bundle them all into one.

    Option B

    ReplyDelete
  41. ஆசிரியரின் சங்கடமான நிலைமை புரிகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான கேப்டன் டைகரை முழுதாக ஒரே புத்தகமாகவோ அல்லது ஒரே ஆண்டிலோ தொடராக தனித்தடத்தில் போடுவதோ எப்படி வந்தாலும் இரசிக்கத் தயார். அல்லது 3-மூன்று பாகங்களாக ஒரே ஆண்டில் வெளியிட்டாலும் சரி. ஆனால் கிடப்பில் மட்டும், பிறகு பார்க்கலாம் என்று விட்டு விட வேண்டாம்.

    நீங்கள் வாக்களித்தபடி, ஆகஸ்ட் 2020-ல் இருந்தே இதை தொடங்கினால் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  42. இளைய டவுசர் கதையைப் பொறுத்தவரை நீங்க என்ன முடிவெடுத்தாலும் ஹேப்பி. உங்களுக்கு தோதான சமயத்தில்மொத்தமா ஒரே புக்கா முன் பதிவுக்கு மட்டும்னு வந்தா ரிஸ்க் கம்மமியோன்னு தோணுது.

    அப்புறம் ரூட் 66 லிஸ்ட் அந்த அமெரிக்க க்ரைம் த்ரில்லர் பட்டய கிளப்பும்னு எனக்கு தோணுது. ஆகஸ்டில் அதை போட்டுத் தாக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. ////இளைய டவுசர் ////

      :))))))

      Delete
    2. ARS magna + அமெரிக்க க்ரைம் திரில்லர் + லவ் ஸ்டோரி

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

      Delete
  43. எடிட்டர் சார்
    இளம் டைகர் கதைகள் குறித்து நீங்கள் எடுத்த முடிவு சரியே.
    நானும் பிரெஞ்சில் இரண்டு கதைகள் படித்துள்ளேன். ரொம்ப போர்.
    தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு புது ஆப்ஷன் : இந்த தொடரில் ஒரே ஒரு கதையை மட்டும் வெளியிட்டு பார்க்கவும். அப்புறம் நம்ம ரம்மியே கூட அதிகாரி கதை கேட்டு அடாவடி பண்ணுவார் !

    ReplyDelete
    Replies
    1. +1

      இளம் டைகரின் முதல் கதையினை ஈரோட்டு புத்தகத்திருவிழாவிற்கே சர்ப்ரைஸ் இதழாக போட்டுப் பார்க்கலாம்.. அதன் விற்பனை மற்றும் வாசகர்களின் கருத்துக்கு ஏற்ப அடுத்த வருட வெளியீடு பற்றி யோசிக்கலாம்..

      ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு கண்டிப்பாக புது புத்தக வெளியீடு வேண்டும்..

      ARS MAGNA வும் அமெரிக்க திரில்லரும் சிறந்த தேர்வாக இருக்கும்..

      Delete
    2. Radja +1
      கருவூர் சரவணன் +1

      + மெல்லிய 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰

      Delete
    3. தொடரில் ஒரே ஒரு கதையை மட்டும் வெளியிட்டு பார்க்கவும். அப்புறம் நம்ம ரம்மியே கூட அதிகாரி கதை கேட்டு அடாவடி பண்ணுவார்

      ###

      :-)))))

      Delete
  44. Replies
    1. காமிக்ஸ் தளத்திற்கு இனிய காலை வணக்கம்.

      இந்த மாதத்து இதழ்கள் இதுவரையிலும் வாசிக்க தொடங்கவில்லை.
      அதனால் முந்தைய வெளியீடுகளில் ஒன்றின் மீது கவனத்தை பதிவிட முனைகிறேன்.

      Delete
    2. முனைக நண்பரே..:-)

      Delete
  45. கென்யா
    *ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்
    *Ars Magna
    *ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
    *ஒரு sci -fi ஸ்பெஷல்
    *ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல்

    அர்ஸ் மேக்னா மற்றும் ஒரு அமெரிக்க க்ரைம் திரில்லர்... இரண்டும் வேணும்..

    ReplyDelete
    Replies
    1. +888

      மேலே பதிவிட்டு கீழே வந்தால் ரம்மியும் இதையே கேட்டுள்ளார்.. அப்புறம் முடிவெடுக்க வேண்டியது, கட்டதுரைய அடிச்ச அதிகாரியோட அதிகாரிதான்..

      Delete
    2. அட...அதிகாரியின் அரூப ஆராதனையாளரின் கருத்து கூட சுவாரஸ்யமா இருக்குதே !

      Delete
  46. தனியே தன்னந்தனியே: பில்லியன் வளைவில் பேயாக அலையும் குழந்தை காரோட்டிகளின் உடன் வருபவர்களின் கண்களுக்கு மட்டும் காட்சி கொடுத்து விபத்து ஏற்படுவதை தவிர்த்து வந்தது.

    பால் தனது அம்மாவுடன் வரும் போது பால் கண்ணில் பட்டது ஆனால் அவன் குழந்தை என்பதால் தனது தாயாரை எச்சரிக்க முடியாமல் போய் இருக்கலாம். எனவே காரை ஓட்டி வந்த அவன் அம்மா கண்களுக்கு காட்சி கொடுத்து இருக்கலாம், தொடர்ந்து காரோட்டி வந்த அவனின் அம்மா பயந்து காரை மரத்தின் மேல் மோதி இறந்து விட்டார்.

    தன்னால் தான் இந்த விபத்து என்று உணர்ந்த குட்டி பேய் தனது தவறுக்கு கைமாறாக அந்த பாலை தாய் போல் கவனித்து காப்பாற்றி இருக்கலாம்.

    கடந்த பதிவில் பல நண்பர்கள் இந்த கதையை பற்றிய விவாதங்கள் நடந்த போது கலந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியர் இந்த கதை கருவை மையமாக கொண்டு சுற்றி உள்ள மற்ற விஷயங்களை எழுதி கதையை முழுமை செய்து இருப்பார் என நினைக்கிறேன்.

      Delete
    2. போகிற போக்கில் "புல்லியன் வளைவின் பெண்குட்டிப் பேய்ப்பேரவை" ஆரம்பிச்சிடலாம் போல் தோணுதே !!

      Delete
  47. Editor sir option A & love story special 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🧚🧚🧚

    ReplyDelete
    Replies
    1. ///love story special 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🧚🧚🧚///

      🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🧚🧚🧚

      Delete
  48. Editor sir Option A & love story book 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰

    ReplyDelete
    Replies
    1. 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰
      காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை...
      வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்..
      வானவில்லில் ஊஞ்சள் கட்டுங்கள்...
      😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰

      Delete
    2. ஆனா செயலரே காதல் கல்யாணத்துல முடிஞ்சவுன நடக்குற கதையும் யோசிச்சு பாருங்க..

      :-(

      Delete
    3. இந்தப் பாட்டெல்லாம் வாலிப உள்ளங்கள் பாடுனா ஓ.கே.ன்னு சொல்லலாம்.....!

      'வாலிப-வயோதிக நண்பர்கள்' பாடினாக்கா...... ?

      Delete
  49. சார் bதான் சரி....போதுமான முன் பதிவு இல்லன்னா கழட்டி விடவும்...
    ஆகஸ்டுன்னா ஈரோடுன்னா எதிர் பார்ப்பு அதிகமே....இரத்தப்படலம் மமின்னும் மரணம் ...இப்ப இளம் டைகர்னு ...மெய்யான குண்டுகளின் அணி வகுப்புமே காரணமம்....ஆகவே விலை குறித்து கவலைப் படா நண்பர்களின் சொர்க்கமும் ஈரோடுதானே...ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு குறயாம நல்ல கதயா விடுங்கள் . கௌபாய் கதயானாலும் சரி....
    டைகரின் இள வயது கதையும் சரி ஏன் பேரு டைகரும் சரி இதுவரை அட்டகாசமே என்னைப் பொறுத்த வரை....எட்டுநூரு விற்பது அதிசயமே...நானூறோ அறு நூறோ எனில் தேங்காது...இப வும் மிம வும் வேற லெவல் என்பதயும் கருத்தில் கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு ஓடணும்னா TNPSC மர்மத்தைப் பத்தி ஒரு காமிக்ஸ் போட்டா தான் உண்டு ஸ்டீல் !

      Delete
  50. ஈரோட்டில் அர்ஸ் மேக்னா & அமெரிக்க க்ரைம் த்ரில்லரோடு இந்த வருடம் வெளியிடுவதாக சொன்ன இளம் டெக்ஸ் கதையை (ஒரே இதழாக) யும் வெளியிட்டால் ஈரோட்டுக்கு சிறப்பு சேர்த்த மாதிரி இருக்கும்! விற்பனையிலும் சிகரம் வைத்த மாதிரியும் இருக்கும்! ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டுவதில் தப்பேயில்லை சார் 😜

    ReplyDelete
    Replies
    1. கலீல் நீங்களா இப்படி... மூன்று புத்தகங்கள் ஒரே நேரத்தில் :+)

      Delete
    2. 😳😳😳

      மூணு புக்கா...🤝🤝🤝🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

      Delete
    3. Parani from Bangalore
      ஈரோடு புக்பேரில் 1350 க்கு கேப்டன் டைகர் கதையை போடும் இடத்தில் நான் சொன்ன மூன்று கதைகளையும் போட்டால் கூட 1350 வராது என்றே நினைக்கிறேன் நண்பரே! அதுவும் டெக்ஸ் கதை அதிகபட்சம் 150 டூ 200 அமெரிக்க த்ரில்லர் 400 டூ 500 அர்ஸ் மேக்னா 300 போட்டால் கூட 900 க்குள்தான் அடங்கும்! இந்த கண்ணோட்த்தில் பாருங்களேன்! அதுவும் டெக்ஸ் கதைகளை பொருத்தவரை சொல்லவே தேவையில்லை! எத்தனை போட்டாலும் ஸ்டாக் தங்காது விற்பனையில் என்றுமே உச்சம்தான்! அதுவுமில்லாமல் டெக்ஸ் கதைக்காகவே சிலர் ஈரோடு வரவும் வாய்ப்பிருக்கிறது! இப்படி ஏகப்பட்ட ப்ளஸ் இருக்கல்லவா 😊

      Delete
    4. ரெகுலர் டெக்ஸ் இதழில் ஏதாவது ஒரு குண்டு புத்தகத்தை ஆசிரியர் எப்படியும் களமிறக்குவார். எனவே அவரை இந்த ஸ்பெஷல் ஆட்டத்தில் சேர்க்க வேண்டாம்.

      மொத்தம் மூன்று அதில் கார்சன் நண்பர் இல்லாமல் :-)

      Delete
    5. //டெக்ஸ் கதைக்காகவே சிலர் ஈரோடு வரவும் வாய்ப்பிருக்கிறது!//

      ஆமா...ஆமா...!! ஸ்லீப்பர் செல்கள் உட்பட !!

      Delete
    6. இளம் டெக்ஸ் கதைகள் ஒரே தொகுப்பாய், நடப்பாண்டில் சந்தா B -ல் வருகிறது சார் - அறிவிக்கப்பட்ட ஒரு ரெகுலர் டெக்சின் இடத்தினில் !

      Delete
    7. வாவ்..வாவ்...ஒரு பதிவா போடற செய்தியை இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டு போறீங்களே ..

      இது நியாயமாரே சார்..:-))

      Delete
  51. டைகர் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும் மின்னும் மரணம் மற்றும் தங்க கல்லரை கதை போல் எந்த கதைகளும் வர முடியாது, ஏன் டைகரின் வேறு கதைகள் கூட மேலே சொன்ன இரண்டு கதை தொடர்களை அடிச்சுக்க முடியாது என்று நன்றாக தெரியும்.

    கடந்த ஈரோட்டில் வருடம் ஒரு பெரிய குண்டு புத்தகங்கள் தேவை அதற்கு இந்த கதை சரிப்படும் என்ற மனநிலையில் கை தூக்கினேன், மற்றவர்கள் எண்ணமும் இதுவாக இருந்திருக்கலாம்.

    எனவே டைகரின் குண்டு புத்தகத்தை வேண்டாம் என விட்டு விடலாம். அல்லது அடுத்த வருடம் இந்த இளம் டைகரின் இரண்டு கதைகளை இணைத்து ஒரு புத்தகம் கொடுங்கள் வாசகர்களின் வரவேற்பு மற்றும் விற்பனை நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என நீங்கள் முடிவு எடுக்கலாம்.

    கடைசியாக வந்த என் பெயர் டைகர் பற்றி சாரி சார்.

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் PfB!

      Delete
    2. கடைசி வரியைத் தவிர!

      Delete
    3. //இந்த இளம் டைகரின் இரண்டு கதைகளை இணைத்து ஒரு புத்தகம் கொடுங்கள் வாசகர்களின் வரவேற்பு மற்றும் விற்பனை நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என நீங்கள் முடிவு எடுக்கலாம்.//

      Nopes...நிச்சயமாய் அது சரியான திட்டமிடலாய் இராது !

      Delete
  52. கென்யா என்னைத் தவிர யாரும் ஓட்டு போடவில்லை, ஒருவேளை எல்லோரும் அந்த கதையை படித்து விட்டார்களோ ;-)

    ReplyDelete
    Replies
    1. நான் போட்டேன் ஓட்டு. நானும் நீங்களும் மட்டும் தான் இன்னும் படிக்க வில்லை போல பரணி

      Delete
    2. ஒரு வித்தியாசமான தொடரின் மீது எழுந்திட வேண்டிய நியாயமான ஈர்ப்பை புதைத்து விட்டாச்சே !! யாரை நொந்து கொள்வதோ ?

      Delete
  53. ஹைய்யா புதுப்பதிவு..,..

    ReplyDelete
  54. எடிட்டர் சார்.. நான் எனது ஆப்ஷனை இங்கு வெளிப்படையாகத் தெரிவித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால், 'ஆப்ஷன் C' என்று டைப் செய்து உங்களுக்கு மெயிலில் அனுப்பியிருக்கிறேன்.. பார்த்துக் கொள்ளவும்!

    ReplyDelete
    Replies
    1. மோவாயிலே கை வைச்சபடிக்கே சீரியஸா சிந்திக்கிற மேரியான பொம்மை படத்தை நானுமே பதிலா அனுப்பியிருக்கிறதை இங்கே சொல்லிக்க போறதில்லே ! மின்னஞ்சலிலேயே படிச்சுக்கோங்க / பாத்துக்கோங்க !

      Delete
  55. கடசி முடிவு ஈரோட்டில் அதிகாரின்னு சொல்லி ஆட்டத்த முடிங்கப்பு.
    மத்தத நம்ம அண்ணாச்சி பாத்துப்பாரு.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இந்த டீலிங் செமையா தோணுதே !!

      Delete
  56. நில் வாசி சாந்து... சாத்து: வீட்டை சுத்தம் செய்ய இப்ப எல்லோரும் மெசின் வாங்கிட்டாங்களாம் எனவே சாத்து சாத்து என சாத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு :-)

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமே ஹெல்மெட் போட்டுக்கொண்டு தான் ஞாயிறு காலையில் பதிவுக்குள் கால் பதிக்க வேண்டி வருமென்று எதிர்பார்த்திருந்தேன் சார் !!

      Pleasantly surprised - இதுவரையிலாவது !!

      Delete
  57. எனது தேர்வு option "C".......

    ReplyDelete
  58. 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰 சார் இளம் டைகர் கதைகளுக்குப் பதிலா... 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰 இளம் லவ் ஜோடி கதைகள் போடலாம்.. 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰.. ஒரு மெல்லிய.. மனதை வருடும்... மனதுக்குள் பூ பூக்கவைத்திடும்... 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰

    ReplyDelete
    Replies
    1. அதுலாம் சின்னப் பசங்க..விடலைப் பசங்க படிக்கக்கூடிய புக் ஆச்சே ? அக்கட பூனையாருக்கு என்ன ஆர்வம் ?

      Delete
    2. அட லார்கோ ஷெல்டன் மற்றும் லேடி-sல் நீங்கள் பார்க்காத காதல் காட்சிகளா விஜய். புதிய காதல் கதைகள் கேட்பதற்கு பதில் இவர்களின் கதைகளை மீண்டும் மீண்டும் படியுங்கள் சந்தோஷமாக இருங்கள் :-)

      Delete
  59. *கென்யா
    *அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
    -இரண்டையும் 2020 ஈ.பு.வியில் களமிறக்கலாம் சார்......
    முடிந்தால்,புது டிடெக்டிவ் ஸ்பெஷல் இதழையும் இணைத்து கொள்ளலாம் சார்.....

    ReplyDelete
    Replies
    1. "பட்ஜெட்..பட்ஜெட்..." என்று மண்டைக்குள் அலாரம் ஒலிக்கிறது சார் !

      Delete
  60. ஸாரிசார் டைகருக்குஏன் தயங்கரீங்கன்னுசரியாபுரியலைங் சார் கதைக்களம் சரியில்லையா இல்லை கதைசுமாரான்னு. எப்படியிருந்தாலும்டைகருக்குமாதம்ஒருகதைஓக்கே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. பதிவை மறுக்கா படியுங்க சார் !

      Delete
  61. A OR B .. ரெண்டில் எதுனாலும் ஓகே சார் ...

    1.ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்

    2. Ars Magna ..

    3.ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர் ..

    மூன்றில் ஏதேனும் ரெண்டு for EBF ..

    ReplyDelete
    Replies
    1. சார்..நான் 3 கொண்ட சாய்ஸோடு கேள்வி கேட்டால், நீங்கள் 2 கொண்ட சாய்ஸோடு பதில் தந்தால் எப்புடி ? Only one பதில் ப்ளீஸ் !

      Delete
  62. தாங்கள்வழக்கம் போலஅதிகாரியோடுஈரோட்டில் களமிறங்குவது தான் எங்களுக்குஆகஸ்ட்டில் தீபாவளி கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. சில பல ஆட்டோ...சில பல உருட்டுக்கட்டைஸ்...ஈரோடு....!!

      ஏனோ தெரியலை சார்....மனத்திரையில் இவையே ஓடுகின்றன !

      Delete
    2. சில பல ஆட்டோ...சில பல உருட்டுக்கட்டைஸ்...ஈரோடு....!!//

      மொத்தம் ரெண்டு பேரு தான் சார் உருட்டுகட்டையோட வருவாங்க. அவங்களுக்கு அதிகாரியோட கதையை குடுத்தீங்கன்னா அதுக்கு விமர்சனம் எழுதனும்னு அதப் படிக்க அவசரமா கிளம்டுபிடுவாங்க .

      Delete
    3. ஷெரீஃப் செம்ம செம்ம

      Delete
  63. ஞாயிறு காலை வணக்கம் சார்
    நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  64. எடிட்டர் சார் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை போல எனவே சட் புட் என்று ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டு விட்டு அடுத்த மாத காமிக்ஸ் பணியை தொடரும் படி கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுபாட்டுக்கு அடுத்த மாதப் பணிகள் ஒருபக்கம் சத்தமின்றி ஓடிக்கொண்டுள்ளன நண்பரே ! சிக் பில் பிரிண்டிங்கே முடிந்தது !

      எட்டாவது மாதத்து சிந்தனைகளில் மூன்றாவது மாதத்தைக் கோட்டை விடுவோமா - என்ன ?

      Delete
  65. கென்யா
    ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்

    ReplyDelete
  66. இந்த பதிவை படிச்சதும் நியாபகத்து வர்றது முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்லும் இரண்டு டயலாக்குகள் தான்..தங்கதலைவனின் மைன்ட் வாய்சாக

    1. இவரே குண்டு வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்..
    2. என்னைய சமாளிக்கவே முடியலையில்ல..

    ReplyDelete
    Replies
    1. இது...இது...இதைத் தான் எதிர்பார்த்தேன் !

      Delete
  67. நீங்க கிண்டலுக்கு சொன்னாலும்...அந்த காக்கை காளி தொகுப்பு சாத்தியமா சார்?

    ReplyDelete
    Replies
    1. ஹை !! இந்த ஐடியா கூட நல்லாயிருக்கே !!

      Delete
    2. //பொம்மை படம் போட்ட சட்டைலாம் நேத்திக்கே உள்ளாற வைச்சுப் பூட்டிபுட்டேனே// சார் கீழே பொய் சொல்லிட்டீங்களே 😉

      Delete
  68. வணக்கம் ஆசிரியரே மற்றும் நண்பர்களே
    என்றும் ஜெயிக்கும் ஹீரோ எங்கள்XIII ஜேசன் மக்லேன்
    மட்டுமே. ரத்தப் படலம் என்ற ஒற்றைக் கதை மூலம் உலகை வென்ற நாயகன் எங்கள் ஜேசன்.
    இதற்கு முன் கருப்பு வெள்ளையில் வந்த ஜம்போ ஸ்பெஷல் புத்தகத்தை தவற விட்டவர்களும் 2018 ஆகஸ்டில் வண்ணமயமான ரத்தப் படலம் புத்தகத்தை வாங்க தவறியவர்களுக்கும் மீண்டும் ஏன் ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடாது. இந்த முறை
    குறைந்தபட்சம் 500 முன்பதிவு
    மேலும் முன் பதிவுதொகை முன்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தாலும் காத்திருக்கும் ஐந்து மாதங்களில் நிச்சயமாக எதிர்பார்க்கும் 500 முன்பதிவுகளை தாண்டி அசுர சாதனை படைக்கும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மேலும் இந்த முறை 18 பாகம் மற்றும் புலன் விசாரணை உள்ளடங்கிய மொத்த புத்தகத்தையும் ஒரே குண்டு புத்தகமாக வெளியிடுவதாக அறிவிப்பு செய்தால் வெற்றி நிச்சயம் என்பது உறுதி.
    டைகர் கதைகளை பொருத்தவரை
    தங்கக் கல்லறை மற்றும் மின்னும் மரணம் ஆகிய புத்தகங்களை தவிர இந்தக் கதையும் அவ்வளவாக பிரசித்தம் அடையவில்லை அப்படியே ஆக இருந்தால் ஒரே புத்தகமாக வெளியிட்டு முடித்துவிட கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இரத்தப்படலம் வண்ண இதழ் மீண்டும் வெளியிட தயக்கமாக இருந்தால் பதிமூன்று ஸ்பின் ஆப் கதைகளில் 4 வந்துவிட்டது ஒன்று வரப்போகிறது மீதமுள்ள 8 கதைகளையும் தனித்தனி புத்தகமாக அச்சிட்டு ஏற்கனவே வெளிவந்த நான்கு புத்தகங்களில் எஞ்சியுள்ள வற்றையும் தேவைப்பட்டால் மீண்டும் அச்சிடும் ஒரு பாக்கெட் ரெடி செய்து ஈரோடு புத்தக விழா சிறப்பு புத்தகமாக அறிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார்...."பதிமூன்று" என்ற நம்பருக்கு முன்னேயும் உலகம் இருந்தது ; பின்னேயும் இருக்கிறது ! இருப்பினும் அந்த ஒற்றை நம்பரைச் சுற்றியே நங்கூரமிட நீங்கள் விரும்பினால் அதனில் நிச்சயமாய் எனக்கு ஆட்சேபணைகள் கிடையாது ! ஆனால் நம்மையுமே அங்கேயே நிலைகொள்ளச் செய்யும் சிந்தைகளுக்கு - சாரி....NO என்பதை பதிலாக இருந்திடும் !

      Delete
    2. கணேஷ் சார், இப்படி ஒரு புத்தகம் வந்தால் வழக்கம் போல நான் 2 புத்தகம் வாங்குவேன் (உங்களுக்கு தெரிந்த விசயமே).
      ஆனால் CBFல் சூப்பர் ஹிட் அடித்தது 40 ரூபாய் மதிப்பில் வந்த '007'.
      எனது நீண்ட நாள் விருப்பம் 'காமிக்ஸ் என்பது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே'.
      'குறைந்த விலை, நிறைய நண்பர்கள்' என்பதே காமிக்ஸ் வளர்ச்சிக்கு சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

      Delete
  69. எனக்கு option N. "NO TIGER". ஈரோட்டில் இதற்கான வோட்டெடுப்பில் சத்தமாக வேண்டாம் என்று கூறினேன்.

    ஆசிரியருக்கு கண்டிப்பாக என்னுடைய கருத்து கேட்டு இருக்கும்.

    ஏன் கூறுகிறேன் என்றால் , நாளைக்கு டைகர் வந்த பிறகு ,துப்பாக்கி வச்சு செப்புடு வித்தை காட்டி லட்சக்கணக்கான பேரை ஒரே துப்பாக்கியில் கொன்று குவிக்கும் கதையை ரசிக்கும் ரசிகர் கூட்டம் , டவுசர் என்ற நிலையில் இருந்து இளம் ஜட்டி அல்லது இதைவிட கேவலமாக விமர்சனம் கூடும்.

    டைகர் உலக அளவில் பத்து சிறந்த கௌபாய் காமிக்ஸ் இடம் பிடித்தவர். அவரை நாம் அவமான படுத்த வேண்டாம்.

    உலகில் இருக்கும் கோடிக்கணக்கான நல்ல காமிக்ஸ் இன்னும் நாம் படிக்காமல் இருக்கிறோம். அவற்றில் எத்தனை காமிக்ஸ் நம் வாழ்நாள் முடிவதற்குள் படிக்க போகிறோம்?.
    அதேபோல் இளம் டைகரை படிக்காமலேயே விட்டு விடுவோம்.

    விற்பனை தான் இங்கு அளவுகோல். ஈரோட்டுக்கு பைபிள் சைசுக்கு டெக்ஸையே போட்டாலும் எனக்கு பிரச்சினை இல்லை.(முன்பதிவு என்பதால் பணம் கட்ட வேண்டிய தேவை இல்லை).
    இளம் டைகர் எந்த வடிவிலும் வேண்டவே வேண்டாம்.

    நீங்கள் கொடுத்த ஆப்ஷன் தான் என்ற பட்சத்தில் "மங்க" விற்கு எனது ஒட்டு.

    ReplyDelete
    Replies
    1. //உலகில் இருக்கும் கோடிக்கணக்கான நல்ல காமிக்ஸ் இன்னும் நாம் படிக்காமல் இருக்கிறோம். அவற்றில் எத்தனை காமிக்ஸ் நம் வாழ்நாள் முடிவதற்குள் படிக்க போகிறோம்?.//

      Voice of reality !!

      Delete
    2. உண்மை தான் கணேஷ் போக வேண்டிய தூரம் நிறைய

      Delete
  70. எனக்கு,
    Option Aன்னா, ஒரே ஒரு சந்தா.
    Option Bன்னா வழக்கம் போல 2 புக்கு.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாமே சார்....இந்தப் பதிவின் முடிவில் எந்த Option அதிகமாய் ஸ்கோர் செய்கிறதென்று !

      Delete
    2. சார், அப்படியே Option Aன்னா 'ஒரு ஓட்டு'
      Option Bன்னா '2 ஓட்டு'ன்னு கணக்கு எடுங்க சார்.

      Delete
    3. என்னோட 'ஓட்டு' கணக்கு மட்டும் சார்.

      Delete
  71. Ars magna and American crime thriller is good option.

    ReplyDelete
  72. ///கென்யா
    *ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்
    *Ars Magna
    *ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
    *ஒரு sci -fi ஸ்பெஷல்
    *ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல் ///


    கென்யா
    +
    அமெரிக்க க்ரைம் த்ரில்லர்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கென்யா தான். இதற்கு மேலும் தாமதம் வேண்டாம் சார். ஏற்கனவே ஸ்கேன் லேஷன் மூலம் நிறைய பேர் படித்து விட்டனர். தயவு செய்து ஈரோட்டில் முதல் புத்தகமாக கென்யா இருக்கட்டுமே. இரண்டாவது உங்கள் சாய்ஸ்.

      Delete
  73. ///
    "கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next !" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; "கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு ? அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் ? உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா ? எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது ! காலர் இல்லாத பனியன் போடப்படாது !..புரிஞ்சுதா ?!" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; "அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது !" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் ! ///


    நாட்டு நடப்பை அப்டியே சொல்லிகீறிங்கோ சார்..! :-)

    ReplyDelete
    Replies
    1. பொம்மை படம் போட்ட சட்டைலாம் நேத்திக்கே உள்ளாற வைச்சுப் பூட்டிபுட்டேனே !!

      Delete
  74. Sir option A NO. That too black & white a BIGGGGG NO. Option B lot better. We can wait a few more months. Subscription can be announced asap for booking that spl issue sir. For erode book fair sci fiction தவிர எதை வேண்டுமானாலும் போடலாம். உங்கள் சாய்ஸ் சொதப்பாது என்ற நம்பிக்கை என்றும் உண்டு 👍🙏

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் சாய்ஸ் சொதப்பாது என்ற நம்பிக்கை என்றும் உண்டு 👍🙏//

      நன்றிகள் சார் ! அந்த நம்பிக்கை பொய்க்கக் கூடாதே என்பதன் பொருட்டே இத்தனை மெனெக்கெடலுமே !!

      Delete
  75. ///Rs.80 x 12 albums = Rs.960. What say guys ? இது OPTION : A ///

    Option A வுக்கு எனது வோட்டு.!

    ReplyDelete
  76. Ars Magna இது என்ன மாதிரியான கதை சார்?

    ReplyDelete
    Replies
    1. பரணி சற்று மேல பாருங்கள். ஆசிரியர் சரவண குமார் பதில் கொடுத்து இருக்கிறார். புதையல் வேட்டை பற்றிய கதை.

      Delete
  77. //அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது// எனக்கென்னவோ வேற கதை மாத்தி போயிடுச்சின்னு ஒரு டவுட்😁😁😁

    ReplyDelete
  78. விஜயன் சார், ஸ்டீல் க்ளா ஸ்பெஷலில் இரண்டு கதைகளை இணைத்து போட படைப்பாளிகள் என்ன சொன்னார்கள்? அனுமதி கிடைத்ததா?

    ReplyDelete
  79. நமக்கு மெயில் எல்லாம் வேலைக்கு ஆகாது சார்..அதுவும் இல்லாமல் கலவரம் எல்லாம் நமக்கு சிவகாசி பன்னு சாப்பிடறாப்போல..அதனால் இங்கேயே சொல்லிடுறேன்...

    என்னை பொறுத்தவரைக்கும் இந்த பதிவிற்கு தாங்கள் எதிர்பார்க்கும் "சாத்து " எல்லாம் கிடையாது..ஒன்லி பூச்செண்டு வாழ்த்துக்கள் தான்..ஏற்கனவே இளம் டைகரை பாத்து வெந்து நொந்து போய் கிடக்குறப்ப ஈரோட்டுலியே இந்த தொகுப்பிறக்கு போராட்டம் வந்த பொழுது தலை சுற்றி போய்த்தான் அமர்ந்து இருந்தேன்..ஸ்லீப்பர் செல் வேறு என் அருகிலியே இருந்த காரணத்தால் தலைச்சுற்றலை கூட மறைத்து மலங்க மலங்க முழித்து கொண்டுத்தான் இருந்தேன்..எனவே நீங்க ஆடலும் பாடலை ஒத்தையா போட்டாலும் ,மொத்தமா போட்டாலும் ,ஆடல்பாடலையே ரத்து பண்ணினாலும் டைகரின் இதுவரை இருக்கும் மதிப்பு ,மரியாதையை காப்பாற்றுவது இதில் எதுவோ அதையே முடிவெடுங்கள்..

    அது எது என்பதை ஸ்லீப்பர் செல் ஊருக்கு போனவுன சத்தமா சொல்றேன் சார்..

    அப்புறம் ஈரோட்டில் என்னோட சாய்ஸ்..


    அமெரிக்க க்ரைம் த்ரில்லர்...

    புது டிடெக்டிவ் சாகஸம்

    இரண்டும்..


    ( அப்புறமா இந்த செயலர் பேச்சு கேட்டு காதல் ,காதல்ன்னு போய் காதல் பரத் மாதிரி ஆயிரக்கூடாது சார்..அதையும் மனசுல வச்சுக்குங்க..இது செயலருக்கு தெரியவேண்டாம் நமக்குள்ள இருக்கட்டும் சார்..)

    ReplyDelete
  80. Sci - fi த்ரில்லர்

    மாறுதலுக்கு

    அந்த லவ் ஸ்டோரி.

    ReplyDelete
  81. இளம் டெக்ஸ் கதைகள் ஒரே தொகுப்பாய், நடப்பாண்டில் சந்தா B -ல் வருகிறது சார் - அறிவிக்கப்பட்ட ஒரு ரெகுலர் டெக்சின் இடத்தினில்


    ####

    *ஓர் முக்கிய அறிவிப்பு*!

    ReplyDelete
  82. அந்த லவ் ஸ்டோரி...

    அதைப்பத்தி கொஞ்சம் விலாவரியா சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும் சார்.!

    முடிஞ்சா ஒண்ணு ரெண்டு பக்கங்கள் (முக்கியமான திருப்பங்கள் வளைவுகளோட) டீசர் மாதிரி வெளியிட்டா ஆதரவு அதிகமா கிடைக்க வாய்ப்பிருக்கும்னு என்னோட சிற்றறவுக்கு படுது சார்.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா.

      வளைவுகள் ரெம்பவே ஆபத்தானது என மார்கோவிலிருந்து, போன வாரம் வந்த சிறுமி பேய் வரை நிரூபணம் ஆயிடுச்சி..!

      ஆனாலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்க ஆர்வமாகவே இருக்கு.

      Delete
  83. எடிட்டரின் மைண்ட் வாய்ஸ்..!

    இளம் டைகரின் கதைகள் நிச்சயம் வரும்.

    தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    :-)

    ReplyDelete
    Replies
    1. இது வேற எதையோ குறிக்கிறா மாதிரி தெரியுதே G P..! :-)

      Delete