Powered By Blogger

Saturday, October 04, 2025

என்றென்றும் புன்னகை.....!!!

 நண்பர்களே,

வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே நேரத்தைக் குறிச்சுக்கோங்க ப்ளீஸ் -முழுசையும் படிக்க எவ்வளவு நேரமாகுது ? என்றறிய ஒரு கொயந்தப்புள்ள ஆசை !!  😎😎

வணக்கம்! 'In hindsight everybody is a genius' என்று சொல்வார்கள்! அதாவது- திரும்பிப் பார்த்து அசை போடுகையில் நாம் எல்லோருமே செம ஜீனியஸ்களாகி விடுவோமாம்! "அட.. இதை இப்படி பண்ணியிருக்கலாமோ ? அதை அப்படிப் புரட்டிப் போட்டிருக்கலாமே?!'' என்றெல்லாம் யோசனைகள் மடை திறந்த வெள்ளமாய் பாயுமாம்! அது எத்தனை உண்மை என்பதை கடந்த ஒரு டஜன் ஆண்டுகளின் இறுதிகளில் உணர்ந்து வருகிறேன்! ஒவ்வொரு முறையும் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்கான அட்டவணையினை "ஏக் தம்'மில் ரெடி பண்ணிடும் போது- "இது தான்டா தம்பி அல்டிமேட் அட்டவணை! இதை அடிச்சுக்க எதுவும் இருக்காதுடா!'' என்று தலைக்குள் VTV கணேஷின் கர கர  குரல் கேட்கும்! ஆனால், அதே அட்டவணையின் இதழ்களெல்லாம் களம் கண்டு முடிக்கும் நவம்பர்/டிசம்பர்வாக்கில் தலைக்குகள் ஒரு நூறு விசனங்கள் குடி கொண்டிருப்பதுண்டு! "ஜடாமுடி ஜானதனைல்லாம் செலக்ட் பண்ணியிருக்கியே - உன்ன ஜோட்டாவால் சாத்தாட்டி என்ன ? ; இந்த உப்மால்லாம் 12 மாசங்களுக்கு முன்னே உனக்கு நளபாகமாய் தெரிஞ்சது எப்புட்றா?'' என்ற ரீதியில் விசனக்குரல்கள் உள்ளே வறுத்தெடுப்பதுண்டு! So 12 மாதங்களுக்குப் பிற்பாடும்- "ஏ.. சூப்பரப்பு!'' என்று என்னை நானே மெச்சிக் கொள்ளவல்லதொரு வல்லி­ய அட்டவணையே நமது இரண்டாம் வருகையின் 2013 முதலாய் எனது கனவு ; இலட்சியம்; எல்லாமே! And truth to tell- இந்த நடப்பாண்டு 2025-ன் பெரும்பகுதி கடந்திருக்கும் நிலையில், இந்த வருஷத்தின் தேர்வுகள் குறித்து உள்ளுக்குள் பெருசாய் கொதிப்புடனான கூக்குரல்கள் கேட்கக் காணோம்! Maybe இந்த டிசம்பரின்  திரும்பிப் பார்க்கும் படலத்தின் போது, அதே feeling பரஸ்பரம் நமக்கு எழுந்திடும் பட்சத்தில் - 2025 might just be a job well done ! பார்ப்போமே ?! 

And காத்திருக்கும் இந்த 2026-ன் அட்டவணை நமது பயணத்தின் yet another மறக்கவியலா அத்தியாயத்துக்கான திறவுகோலாக அமையட்டுமே என சகல இஷ்ட தேவதைகளையும் வேண்டியபடியே இந்தப் பதிவுக்குள் புகுந்திட விழைகிறேன் folks!

எங்கிருந்து ஆரம்பிப்பது? எதி­லிருந்து துவங்குவது? எதையெல்லாம் விவரிப்பது? எவற்றையெல்லாம் விழுங்கி வைப்பது? என்று எப்போதும் போலவே மண்டைக்குள் ஒரு நூறு வினாக்கள் குறுக்கும் மறுக்குமாய் கௌஷிக்கைப் போல உலாற்றிடுகின்றன ! இந்த அட்டவணை என்னமோ, ஒரு அக்டோபரில் உங்கள் முன்னே ஆஜராகியிருக்கலாம் ; ஆனால், இந்தக் கோலத்துக்கான முதற்புள்ளி வைக்கப்பட்டதெல்லாம் ஒரு வண்டிப் பொழுதுகளுக்கு முன்பாகவே! நிஜத்தைச் சொல்வதானால் வருஷத்தின் ஏப்ர­ல் பாதி கடந்திருக்கும் போதே இந்த அட்டவணை ஆட்டங்கள் எனக்குள் துவங்கியிருக்கும்! So அந்தத் தருணம் முதலாகவே தோளில் ஒரு கோணிப்பையோடே உலாற்றத் துவங்கிடுவேன்- சிக்கிடும் புதுப் படைப்புகள் அம்புட்டையும் அள்ளிப் போட்டு விட முடியாதா? என்ற ஆர்வக் கோளாறுடன்! So ஏப்ரல் முதலாகவே "காதலி­க்க நேரமில்லை'' படத்தில் நாகேஷ் சாரைப் போல "படம் எடுக்கப் போறேன்- ஈரோயினியைத் தேடறேன்'' என்று திரியாத குறை தான்! ஏதாச்சுமொரு சாமத்தில் - "ஏலே... இந்த ஈரோக்குப் பதிலா- அந்த சாரை போட்றலாமா?'' என்ற நமைச்சல் தலைதூக்கிட்டால், நமது வாட்சப் கம்யூனிட்டியில் உடனே ஒரு Poll வைத்து உங்களது மனங்களை வாசிக்க முற்பட்டிருப்பேன்! இது தொடர்ச்சியாய் நாலைந்து மாதங்களுக்கு ஓடிடும் ஒரு process எனும் போது - மே மாதம் மஜாவாய் தென்பட்டதொரு நாயகர், ஜுன் - ஜுலைவாக்கில் மொக்கைப்பார்ட்டியாய் ஏதோவொரு காரணத்தினால் தென்படக் கூடும்! So ''you are unselected'' என்று கவுண்டர் ஸ்டை­லில் அந்த ஆசாமியை பிடரியோடு போட்டு விட்டிருப்பேன்! ஆக, "அந்த poll-ல் நாங்க போட்ட ஓட்டுக்கள் இங்கே பிரதிபலி­க்கக் காணோமே? அதெல்லாம் லுலாயிக்குத் தானா கோப்பால்ல்ல்???" என்று விசனம்ஸ் வேணாமே ப்ளீஸ்? ரசனைகள், விருப்பு- வெறுப்புகள் என்பதோடு "பட்ஜெட்'' என்ற பகாசுரனே ஏகப்பட்ட தீர்மானங்களின் பின்னணி என்பதையும் yet again நினைவூட்டிட விழைவேன் folks! சில நாயகப் பெருமக்களை ஓரம்கட்டிட கிஞ்சித்தும் காரணங்கள் இராது - அவர்களது சாகஸங்களின் நீளம் அதீதம் என்பதால் விலையும் அதிகமாகிடும் என்பதைத் தவிர! So அந்தக் கோணத்திலும் உங்கள் புரிதல்கள் எனக்குத் தேவை ப்ளீஸ்!

"பட்ஜெட்'' என்ற தலைப்பி­லிருக்கும் போது, அது சார்ந்த எனது பிலாக்கனத்துக்கும் ஒரு நொடியை கூடுதலாய் எடுத்துக் கொள்கிறேனே? விலைவாசிகள் பற்றியோ, எகிறிச் செல்லும் செலவினங்கள் பற்றியோ, நான் புதுசாய், பெருசாய் எதுவும் சொல்லத் தேவையிராது தான்! நமக்கெல்லாமே தான் தினப்படி அவை குறித்த சூடுகள் போடப்பட்டு வருகின்றனவே! ஆனால், நமது இந்தத் துறையினை நேரடியாகச் சம்மட்டியால் சாத்தும் இரண்டு விலையேற்றங்களை மட்டும் சுட்டிக் காட்டி விடுகிறேனே?!

* முதலும், பிரதானமானதும்- யூரோ மற்றும் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான நமது ரூபாயின் மதிப்பு வாங்கி வரும் உதை! போன வருஷம் இதே சமயம் ஒரு யூரோ நமது பணத்தில் ரூ.90/- என்றிருந்தது! இன்றைக்கோ அது ரூ.104/. So கதைகளுக்கான- ராயல்டி; அசல்நாடுகளில் போடப்படும் அட்டைப்பட டிசைன்களுக்கான கட்டணங்கள்; டிஜிட்டல் கலரிங்குக்கான பணங்கள் - என எல்லாமே யூரோக்களில் தான் பட்டுவாடா எனும் போது அந்தச் செலவுகள் எல்லாமே சில்லுமூக்கை பங்க்சராக்குகின்றன! தவிர, நாம் பயன்படுத்தும் பேப்பர், ப்ரிண்டிங் இங்க், அச்சுக்கான மூலப் பொருட்கள்- என சகலமும் இறக்குமதி செய்யப்படுபவை! So அவற்றின் விலைகளிலுமே இந்த வெளிநாட்டுப் பணமதிப்பு பிடாரிகளாய் பிரதிபலிக்கின்றன!

*And செப்டம்பர் 22 முதலாய் அமலுக்கு வந்துள்ள GST வரி விகித மாற்றங்கள் யாருக்கு என்ன சலுகைகளை வழங்கியுள்ளனவோ- தெரியலை; but நமக்கு இம்மியும் நஹி! பேப்பர் மற்றும் அட்டைகளின் கொள்முதல் மீது 12% என்றிருந்த G.S.T இனி 18% என்றாகிப் போச்சு! விற்பனையின் போது புக்ஸ்களுக்கு எவ்வித GST வரியும் வசூலிக்க சாத்தியமாகாது! So எப்போதுமே நாம் கட்டும் GST தொகைகள் ஆற்றோடு போன கதை தான்! இனி ஆற்றில் போடப் போகும் காசு கூடுதலாக இருந்திடப் போகிறது! ஆர்ட் பேப்பர்; அட்டைப்பட கெட்டி அட்டைகள் மாத்திரமன்றி, கூரியர் அனுப்பிடும் டப்பிகள் முதற்கொண்டு இனி தங்கத்திற்கு போட்டி தரப் போகின்றன- நமது கண்களிலாவது!

So இந்த இரண்டு நோவுகளையும் சமாளிக்க வேண்டி விலைகளைக் கொஞ்சமாய் அதிகம் பண்ண வேண்டியுள்ளது! நமது சொற்ப சர்குலேஷனில் இந்தச் செலவினங்களைச் சமாளிக்க வேறு மார்க்கங்களே தென்படவில்லை! இந்தச் சூழலில் நண்பரொருவர் நான் கருத்து சொல்லி­யே தீருவேனென்று அடம் பிடித்து வருகிறார் ! "விலைகளை முப்பது ரூபாய், நாற்பது  ரூபாய் ரேஞ்சுக்குக் குறைத்து, ரெம்பப் பேரிடம் விற்று விடுங்கள்! எக்கச்சக்க பேரைச் சென்றடைந்து விட்டால் உங்கள் சக்கரம் பேஷாய் சுற்றும்!'' என்பது அவரது ஆலோசனை! நாம் ஆரம்பித்ததெல்லாம் ரெண்டே ரூபாயில் தான் என்பதையோ; 2007-ல் 852 பக்க இரத்தப்படலம் Black & white தொகுப்பை வெளியிட்டதெல்லாம் ரூ.200/- விலையில் தான் என்பதையோ ; 126 முந்தைய இதழ்கள் சேர்ந்தான மொத்த பண்டலி­ன் விலையே 2012-ல் ரூ.1200/- தான்; என்பதையோ ; ரூ.10... ரூ.15.விலைகளில் புக்ஸ் வெளியிட்ட நாட்களிலும் மூவாயிரம் புக்ஸ் விற்கவே பழனிக்குக் காவடி எடுக்காத குறையாக லோல்பட்டதெல்லாம் அவருக்குத் தெரிவிக்க "தம்'' லேது என்பதால் "ஆகட்டும்ங்க சார்'' என்றபடிக்கே நகர்ந்து விட்டேன்! Hopefully 2026-ல் அவசியமாகிடும் சிறு விலையேற்றத்துக்கும், இதே ரீதியிலான ஆலோசனைகள் பெருக்கெடுக்காதிருக்க வேணும்! So எப்போதும் போலவே உங்களது புரிதல்களும், அனுசரணைககளும், ஆதரவும் வேண்டி நிற்கிறோம் folks! "இவன் பேசிட்டே இருக்கானே- வித்தை காட்டுவானா- மாட்டானா? என்று வேடிக்கை பார்க்க வந்த வடிவேல் ரேஞ்சுக்கு நீங்கள் யோசிப்பது புரிவதால் - let's get started :

நமது அட்டவணைகளில் ஸ்பெஷாலி­ட்டியே நமது variety தான் என்பதில் இரகசியமேது? So எப்போதும் போலவே - யாருக்கு சீட் கொடுப்பது? யாருக்கு மனசில் மட்டுமே இடம் தருவது? என்பது தான் சட்டையைக் கிழிக்கச் செய்த பஞ்சாயத்து! 

எது எப்படியோ- "யார் இருந்தாலும் சரி ; வனவாசம் போனாலும் சரி- நாங்க இல்லாது சக்கரங்கள் இம்மியும் சுற்றாதென்று'' சொல்லவல்ல அசகாயர் நமது இரவுக்கழுகார் & team தான் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாதே?! So எப்போதும் போலவே பிள்ளையார் சுழி போட்ட பேப்பரில் முத­லில் நிரப்பியது டெக்ஸ் வில்லர் & டீமின் சாகஸங்களையே! இங்கே என் முன்னே இருந்த ஒரே கேள்வி; "எத்தனை? என்பது மாத்திரமே! "ஓராண்டுக்கு எத்தனை டெக்ஸ் இதழ்கள் சரி வரும்?'' என்ற கேள்வியினை உங்கள் முன்பும் வைத்திருந்தேன்! ரகரகமாய் பதில்கள் வந்திருந்தன!  டெக்ஸைப் பொறுத்தவரையிலும் overkill என்ற பேச்சுக்கே இடம் லேது என்பதை அறிவோம் ! ஆனாலும், "பட்ஜெட்'' என்ற சமாச்சாரம் மாத்திரமன்றி, "ஸ்லாட்ஸ்' என்ற நடைமுறைச் சிக்கலும் இங்கே இடர்வது தான் நோவே! முப்பது, முப்பத்திரண்டு புக்ஸ் கொண்டதொரு yearly package-ல் ஒற்றை நாயகருக்கு ஒரு டஜன் ஸ்லாட்ஸ் ஒதுக்கிவிடும் போது, மீதமுள்ள இருபது சொச்சம் active நாயக/நாயகியருக்குப் பெருமாள் கோவில் தீர்த்தம் போல சிறு கரண்டியளவு வாய்ப்புத் தரவே போராட வேண்டிப் போகிறது! So 2026-க்கென டெக்ஸ் & டீமுக்கு ஒதுக்கியுள்ள ஸ்லாட்களின் எண்ணிக்கை : பத்து! பதினோராவது இதழாக 2026-ல் ஒரு மெகா அதிரடி காத்துள்ளது...!(அதுவா இருக்குமோ ? ஒரு வேள அதாவே இருக்குமோ ?) So ஒரேயொரு மாதத்தை மட்டும் டெக்ஸ் & டீம் இல்லா மாதமாய் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிப் போகும் folks! Maybe நான் குறிப்பிடும் அந்தப் பதினோராவது மெகா அதிரடி தரவுள்ள கிக் - இரண்டு மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்குமென்றும் நம்புவோம்!

"பத்து டெக்ஸ்" என்பது தீர்மானமான பின்னே next கேள்வி : கலர் எத்தினி? Black & white எத்தினி? என்பதே! 

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே வந்திருக்க வேண்டிய TEX-ன் 755-வது இதழ் கலரிலானது! "விதி எழுதிய வெற்றி வரிகள்" So அதை ஞாபகமாய் முத­ல் டிக் அடித்தேன்! 
  • அடுத்ததாக சில மாதங்களுக்கு முன்பாக ப்ரான்கோ-பெல்ஜிய பாணியில் உருவாகியிருந்ததொரு கலர் டெக்ஸ் கிராபிக் நாவலைக் கோரி நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டு சில நண்பர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்! So அடுத்த "டிக்'' அங்கே விழுந்தது. 
  • அப்புறமாய் "தீபாவளி'' என்றாலே சரவெடி வாங்கும் அதே வேகத்தில் - கலர் டெக்ஸ் ஆல்பங்களையும் வாங்கிடும் ஒரு உத்வேகம் பிறக்கிறதில்லையா? அதற்கு நியாயம் செய்யும் விதமாய் Rs.375 விலையினில் ஒரு கலர் ஆல்பம் மூன்றாவதாய் "டிக்'' பெற்றது! 
  • இவை தவிர்த்தான மீத ஏழு ஆல்பங்களுமே Black & white! 
  • அந்த Black & white ஆல்பங்களுள் ஒன்று- மாந்த்ரீகர் மோரிஸ்கோ கரம் கோர்த்திடும் ஒரு மாயாஜால சாகஸம்! இந்தத் தருணத்தில் பவ்யமாய் தலையைக் குனிந்து- டபுள் கொட்டாய் ஆளுக்கு ரெவ்வெண்டை கபாலத்தில் இறக்கத் தோதாக நிற்கிறேன் - becos மெபிஸ்டோவின் சாகஸம் 2026-ன் அட்டவணையினில் இடம்பிடிக்கச் செய்ய முடியுமாவென்று பார்ப்பதாக  வாக்குத் தந்திருந்தேன்! But மெபிஸ்டோ இல்லாமலே டெக்ஸுக்கான பட்ஜெட் ரூ.1740 வந்து விட்டது ! And மெபிஸ்டோ + யமா + இவர்களது திபெத்திய குரு பத்மாவின்  கதைகள் எல்லாவுமே குறைந்தது 275 to 375+ பக்கங்களில் ஆனவை !! 2023-ல் நாம் போட்ட அந்த "மீண்டு(ம்) வந்த மாயன்" - ஓட்டுக்கா 7 அத்தியாய நீளத்திலானது. முதல் 3 ஆல்பங்களில் அந்த மனநலக் காப்பகத்தில் அரங்கேறிடும் பட்டாசுகள் ! அதைத் தான்  நாம் வெளியிட்டிருந்தோம். அங்கிருந்து தப்பிச் செல்லும் அந்த மொள்ளமாரிப் பீஸ்களை பனிவனங்களில் முதலில், அப்புறம் பாலைவனத்தில் & இறுதியாய் ஒரு ஆளில்லாத தீவில் நம்மவர்கள் விரட்டிச் செல்வதோ இன்னொரு 462 பாகங்களுக்கு நீள்கிறது ! So இதற்குக் குறைந்தபட்சமாக இன்னொரு ரூ.375  பட்ஜெட் அவசியம் !! ஆக மெபிஸ்டோவை உட்புகுத்தினால் டெக்ஸ் கோரும் பட்ஜெட் மாத்திரமே ரூ.2100/-ஐ தாண்டிவிடும்! சென்னையின் மழைக்காலங்களில் நூடுல்ஸையும், ப்ரெட்டையும் சேமித்து வைத்து, இடுப்பளவுத் தண்ணீருக்குள் தவிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாய் பகிர்ந்தளிப்பதற்கு நிகரான கஞ்சனத்தனத்தைக் காட்ட வேண்டிய இக்கட்டு guys எனக்கு ! And இங்கே இன்னொரு காரணமும் இல்லாதில்லை ! அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருக்கும் பட்சத்தில், சாயந்திரமாயொரு மீட்டிங் போட்டு, பஜ்ஜியும், வடையும் வாங்கித் தந்த கையோடு, ஒரு சால்வையைப் போர்த்தி ரிட்டயர்மெண்டிற்குள் அனுப்பியிருக்கும் வயதில் yours truly இருக்கிறேன்! ஆனாலும் இன்னமுமே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இதழிலும் மொழிபெயர்ப்புப் பட்டி-டிங்கரிங்குக்கென அடிக்க அவசியமாகிடும் அந்த அந்தர்பல்டிகள் மட்டும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றன! 'இல்லி­யே.... எனக்குலாம் வ­லிக்க­லியே..!'' என்று ஒவ்வொரு தபாவும் நான் ரீல் விட்டாலும், நிஜ நிலவரம் வேறு மாதிரியானது! அதிலும் நடப்பாண்டினில் - அதுவும் கடந்த 2 மாதங்களாய் நான் செய்து கொண்டிருக்கும் heavy lifting-ஐ ஏதாச்சும் பளுதூக்கும் போட்டியில் செய்திருந்தால், காசியப்பன் பாத்திரக்கடைக் கப்பாவது கிடைத்திருக்கும் ! So முன்செல்லும் நாட்களில் முந்நூறு- நானூறு பக்க டெக்ஸ் கதைகளுக்குள் முத்துக் குளிப்பதை நினைக்கும் போது, "டர்''ராவது மறுக்கவியலா நிஜமே! Fresh legs நாடி விடாப்பிடியாய் தேடல்களைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறோம் தான் ; நம்ம மேச்சேரியார் கொஞ்சம், கொஞ்சமாய் ரெடியாகி வருகிறார்....அப்புறம் சமீபமாய் கிட்டியுள்ள Ms.P.சுகன்யாவைப் போலவே இன்னமும் ஓரிருவர் கிட்டி விட்டாலே போதும் - வூடு கட்டி அடித்து விடலாம்! எது எப்படியோ- "மீண்டு(ம்) வந்த மாயன்'' சாகஸத்தின் இறுதி 462 பக்கங்கள் for sure 2027-ன் அட்டவணையினில் உண்டு! 
  • அப்டின்னு எழுதி முடித்த நொடியில், பேனாவைக் கீழே போட்டுப்புட்டு சின்னதாய் ஒரு பிரேக் எடுத்தேன் ! அந்த நொடியினில் ஆங்காங்கே கொஞ்சமே கொஞ்சமாய் கடுப்பாகிப் போயிருக்கக்கூடிய சில வதனங்கள் என் கண்முன்னே வந்து வந்து போயின !!! எனக்கென்னமோ மெபிஸ்டோ விட்டலாச்சார்யா product போல் பட்டாலும், நண்பர்களில் நிறையப்பேருக்கு அவரொரு செம fire வில்லன் என்பது புரிகிறது ! நான் புரட்டாசி விரதம் என்பதற்காக தெருவில் குடியிருக்கும் அம்புட்டுப் பேருமே சைவமாகிடணும் என்று எதிர்பார்ப்பது ஒருவிதக் குடாக்குத்தனம் என்பதுமே புரிகிறது !! So .....so .....ஒரு கலர் TEX தீபாவளி மலருக்கென நான் போட்டிருந்த டிக்கை மறுக்கா உற்று நோக்கினால் - விலை ரூ.375 என்றிருந்தது ! அட, என்ன மாயாஜாலம் - மெபிஸ்டோ + யமா + பத்மாவின் அந்தத் த்ரில்லரின் க்ளைமாக்ஸான 464 பக்கங்களை black & white-ல் வெளியிடுவதாயின் தேவை சாட்சாத் அதே ரூ.375 தான் !!! பர்ர்...பர்ர்....என்று கலர் டிக்கை அழித்தேன்......464 பக்க மெபிஸ்டோ b&w சாகசத்தினை போன வருஷத்து தீபாவளி TEX-ன் பாணியில்  - 2 தனித்தனி இதழ்களாக முன் & பின் அட்டைகளில் 4 ஒரிஜினல் ராப்பர்களோடு - in a slipcase  என்று ரகளையாய் களமிறக்கத் தீர்மானித்தேன் !! மண்டையின் ஒரு மூலையிலோ...."ஏலே...464 பக்கங்கள்லே...!! ஒம்பாட்டுக்கு இப்போ பகுமானமா சொல்லிப் போட்டுப்புட்டுட்டே ....!! ஆனா எழுதுறப்போ குறுக்கு கழறப் போகுது, பாத்துக்கோ .....! அப்புறம் அந்நேரம் பொலம்புற ஜோலி ஆகாதுலே - ஆமா, சொல்லிடுத்தேன் !" என்றொரு குரல் ஒலிக்கவே செய்தது ! But நாம என்னிக்கி சொல்பேச்செல்லாம் கேட்ருக்கோம் ? இதில் icing on the cake என்ன தெரியுமோ ? ஒரிஜினலாய் நான் செலெக்ட் பண்ணியிருந்த சாகசத்தின் ஓவியர் சிவிடெல்லி தான் ! அவரது சித்திரங்களுக்காகப் பாதி அந்த ஆல்பத்தை டிக் அடித்திருந்தேன். And surprise ....surprise .....மெபிஸ்டோ கும்பலுக்கும் சாட்சாத் சிவிட்டெலி அவர்களே சித்திரம் போட்டுள்ளார் !! ஆண்டவனே மெபிஸ்டோ கதைகளின் ரசிகர் தான் போலுமென்று நினைத்துக் கொண்டேன் !! So இதுவரையிலுமான ஆகப் பெரிய சாகசத்துடன் ப்ரொஜெக்ட் மெபிஸ்டோ - தீபாவளி 2026-க்கு !! ஹேப்பியா guys ?
Moving on, ஒரு சந்தோஷப் புலம்பலுமே இடைச் செருகலாய்! Moreso எனது திட்டமிடலி­ல் நாக்கு தொங்கோ- தொங்கென்று தொங்கியதற்கு இந்த சந்தோஷ நோவு ஒரு முக்கிய காரணி! சின்னதாய் இந்த scenario-வைப் பாருங்களேன்!

புதுசாய் அறிமுகம் கண்டார் டின்டின்! இன்று அவரும் நமது அட்டவணைத் தூண்களில் ஒருவராகிவிட்டார்!

மிஸ்டர்.நோ- ஒரு சமீப வரவு தான்! But yes - நேர்கோட்டு ஆக்ஷனுக்கு மினிமம் க்யாரண்டி நாயகராகிவிட்டார்!

ஸாகுவாரோ நடப்பாண்டின் அறிமுகமே! But ஒற்றை ஆல்பத்திலேயே "இவர் நமக்கானவர்'' என்ற முத்திரை பதித்திருக்கிறார்!

சற்றே தயக்கத்தோடு வெளி வந்த சமுராய் டீம், வண்டி ஓடுமோ-ஓடாதோ? என்ற சிந்தனைகளைத் தவிடு பொடியாக்கி விட்டு நடப்பாண்டின் blockbuster பட்டியலுக்குள் ஐக்கியமாகியது மட்டுமன்றி, தொடரும் ஆண்டுகளிலும், இவர்கள் for sure வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கிவிட்டனர்!

அட.. ஏஜெண்ட் ராபின் 2.0-க்கு சின்னதாயொரு ப்ரேக் கொடுத்துவிட்டு, 2027-ல் அவரை வரவழைத்துக் கொள்ளலாமோ? என்ற நினைப்பு தலைக்குள் ஓட்டமெடுத்த அதே தருணத்தில்- V காமிக்ஸ் தீபாவளி மலர்'25ல் தெறிக்கவிடும் ஒரு புது யுகத் த்ரில்லரோடு மனுஷன் தாண்டவமாடியுள்ளார்! So இந்த நொடியில் அந்த அதிரடியின் அடுத்த அத்தியாயத்தினை 2026-க்குக் களமிறக்குவது காலத்தின் கட்டாயமாகி விடுகிறது!

டிடெக்டிவ் ரூபின்- மொச்சைக் கொட்டை சைஸிலான மூக்கோடு வலம் வந்தாலும் நமது அணிவகுப்பில் நிரந்தரமாய் துண்டு போட்டு இடம் பிடித்துவிட்டுள்ளார்! In fact புத்தகவிழாக்களிலும், ஆன்லைன் ஸ்டோரிலும் இவரொரு செல்லாக் குட்டி!

So என்ன தான் கார்ட்டூன் நாயகர்களையும், ஆல்பா, ஏஜெண்ட் சிஸ்கோ, IR$ போன்றோரையும் "ஜாவ்.. ஜாவ்..'' என்று வெளியே தள்ளிக் கதவைப் பூட்டியிருந்தாலும்- சந்தடிசாக்கில் உள்ளே புகுந்து சோபாவில் குந்திக் கொண்டிருக்கும் புது வரவுகளும் அநேகம்! ஆக, இந்திய க்ரிக்கெட் டீமில் நிலவிடும் அந்த சந்தோஷத் தலைவ­லி இங்கே எனக்கும் உள்ளது! அதன் விளைவாய்- டெக்ஸைத் தவிர்த்து, ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்லாட்களைப் பெரும் பாக்கியவான்ஸ் ரொம்பச் சிலரே!! இதோ அவர்களது ­very short லிஸ்ட்:

டின்டின் & கேப்டன் ஹேடாக் & ஸ்நோயி:

96 ஆண்டுகளாய் உலகையே கட்டி ஆண்டு வரும் இந்த பெல்ஜிய சூப்பர் ஸ்டார் நம்மையும் வசியம் செய்யாது போயிருப்பின் தான் ஆச்சர்யம் கொண்டிருப்பேன்! இதுவரையில் 5 ஆல்பங்கள் வெளிவந்திருக்க - ஐந்துமே தெறி ஹிட்ஸ்! சொல்லப் போனால் தொடரவுள்ள சென்னைப் புத்தவிழாவின் போது மறுபதிப்புகள் டின்டினுக்கு அவசியமாகிடும் போலும்! So இந்த டின்டின் & கோ.வுக்கு 2026-ல் இரண்டு வாய்ப்புகள்!

And இரண்டுமே சிங்கிள் ஆல்பங்கள்! "பாலைவனத்தில் பொன் நண்டு'' ஆல்பம் தான், டின்டினும், கேப்டனும் சந்தித்துக் கொள்ளும் முதல் ஆல்பமுமே! And இரண்டுக்குமே titles சூட்டச் சொல்லி­க் கோரியிருந்தேன்- நமது வாட்சப் கம்யூனிட்டியில்! என் மண்டை இருக்கும் கச்சா-முச்சாவில், பெயர்களை முன்மொழிந்த நண்பர்களின் பெயர்களை சரியாக நினைவுகூர்ந்திட இயலவில்லை! மன்னிச்சூ.. ப்ளீஸ்! அதை யாரேனும் சரிபார்த்துச் சொல்லிவிட்டால் "பன் சன்மானங்கள்'' முறைப்படிப் புறப்பட்டுவிடும்!

லக்கி லூக்:

இவருக்கு ஸ்லாட் ஒன்று தான் ; ஆனால், கடந்த நாலைந்து ஆண்டுகளின் நடைமுறைக்கேற்ப ஆண்டுமலரில் டபுள் ஆல்பம் சாத்தியமாகிடுகிறது! So இரண்டு சாகஸங்களுடன் நமது ஆதர்ஷ ஒல்­லியார் வலம் வரவிருக்கிறார்- லயனின் 42-வது ஆண்டுமலரில்! இங்கே ஒரு கதை லேட்டஸ்ட் உருவாக்கம் ; இன்னொன்று துவக்க காலத்திலானது! இங்குமே வாட்சப் கம்யூனிட்டியில் சைக்கிள் கேப்பில் ஒரு கடா வெட்ட முடிகிறதாவென்று முயற்சித்திருந்தேன் தான் : "லக்கி லூக் + ரின்டின் கேன் என்று இம்முறை ஆண்டுமலரில் முயற்சிக்கலாமா?" என்ற கேள்வியோடு! ஆனால், பலத்த எதிர்ப்பு என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட, நமது நாலு கால் ஞானசூன்யம் தனி ஆவர்த்தனம் செய்வதில் பெருசாய் ஒரு ஆர்வமும் இல்லையென்பது புரிந்தது! So வழக்கம் போலவே இரண்டு லக்கி கதைகளே!

Which means- பாக்கி நாயகப் பெருமக்கள் அனைவருக்குமே ஒற்றை ஸ்லாட்- அல்லது நெஞ்சினில் இடம்! ஒற்றை சீட் பெற்று கச்சிதமாய் ஸ்கோர் பண்ணிடக் காத்திருப்போரை முதலி­ல் பார்த்து விடுவோமே?!

1.சமுராய்ஸ் & குள்ள தாத்தா

லேட்டஸ்ட் வரவு & அபிஷேக் ஷர்மா ரேஞ்சுக்கு முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பியுள்ள இந்த அணி எனது துவக்கத் திட்டமிட­லின் போது, ரேடாரில் சிறு புள்ளியாகக் கூட இருந்திருக்கவில்லை! ஆனால், கிட்டத்தட்ட ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பிற்பாடு இவர்களது அடுத்த ஆல்பத்தின் மீது அடை காக்கவாவது முடியுமா? "ஓவர்னைட்டில் ஒபாமா" என்பது இவர்கட்கு தான் பொருந்தும் என்பேன் !! So "வதம் செய்வோம் வேங்கைகளே'' ரேஞ்சிலேயே "வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே!'' என இவர்களது அடுத்த அதிரடி களம் காணவுள்ளது- அதே அசாத்திய சித்திரத் தரத்தினில்! தொடரும் ஆண்டுகளிலும் சமுராய்ஸ் நம்மோடு பயணிப்பர் என்பது கொசுறுத் தகவல் ! 

2.இளம் வேங்கையார் !! 

இங்கேயும் மருவாதியாய் டபுள் கொட்டுக்கு நானே சிரத்தை ஒப்படைத்து விடுகிறேன் folks! Becos பௌன்சரா? இளம் டைகரா? என்ற கேள்வியை வாட்சப் கம்யூனிட்டியில் வைத்திருந்தேன் & ஆச்சர்யமூட்டும் விதமாக பௌன்சர், இளம் வேங்கையாரை விடவும் கூடுதலாய் வாக்குகள் பெற்றிருந்தார்! So எனது அட்டவணை draft-ல் பௌன்சரே இடம் பிடித்திருந்தார் - கணிசமான வாரங்களுக்கு! ஆனால், ஒரு சில வித்தியாசமான கௌபாய் அதிரடிகள் கண்ணில்பட்டு வைத்தன - செப்டம்பர் மாதத்தில்! இரண்டுமே செம violent & இரண்டுமே ரொம்பவே fresh ஆகத் தென்பட்டன! So ஒற்றை பௌன்சரை ரூ.400/-விலைக்குக் களமிறக்கும் சபலத்தை சற்றே அடக்கிக் கொண்டு அந்தக் காசுக்கு அந்த ரெட்டை fresh ஆல்பங்களுக்கு இடமளிக்கலாமென்று நினைத்தேன்!

தவிர, பௌன்சர் தொடரில் பெண்டிங் உள்ள இந்த ஒற்றை அதிரடிக்குப் பின்பாக கதாசிரியர் Jodorowski ஓய்வெடுத்திடுகிறார் & ஓவியரான Boucq தான் கதைப் பொறுப்பையும் இனி கையாளப் போகிறார் என்று கேள்விப்பட்டேன்! Plus பௌன்சருமே அந்தக் கருவாடாய் காய்ந்த வன்மேற்கி­லிருந்து, நகரங்கள் பக்கமாய் ஷிப்ட் ஆகிடவுள்ளதாகவும் ஒரு தகவல்! So அடுத்த டபுள் ஆல்பம் உருவாக எப்படியும் ரெண்டு ஆண்டுகளாவது எடுக்கும் எனும் போது, - 2027-ல் ஒற்றைக்கரத்தானை களமிறக்கிக் கொள்ளலாமென்று நினைத்தேன்!

So பௌன்சர் நஹி என்றான நொடியில், டைகர் IN என்றாகியது! தவிர, இன்னொரு factor-ம் தலைதூக்கியது ! தளபதியார் எப்போதுமே புத்தகவிழாக்களின் செல்லப்பிள்ளை ! பவுன்சரோ - கிட்டங்கியை உயிராய் நேசிப்பவர் ! துவக்கம் முதலான அத்தனை ஆல்பங்களும் ஒன்று பாக்கியில்லாமல் இன்னமும் ஸ்டாக்கில் இருக்கின்றன! தளபதியிடமோ 2025-ன் புக்ஸ் மட்டுமே கைவசமுள்ளன! அந்த வகையிலும் இளம் புலி­யார் முந்திக் கொண்டு உட்புகுந்தார் என்று சொல்வேன்!

"கரையெல்லாம் கண்ணீரே'' இந்த இளம் டைகர் சுற்றில் ஆல்பம்ஸ் 16 & 17..! இதன் அடுத்த இரு ஆல்பங்களும் (18+19) இணைந்து அடுத்த story arc ஆகிடும்! அதன் பின்பாய் ஆல்பம் 20 ஒரு one-shot ஆல்பம் and ஆல்பம் # 21 கூட one-shot தான்! அத்தோடு சுபம்! So மிஞ்சிப் போனால், 2028-வரை நம்மோடு இளம் பு­லியார் பயணிக்கட்டுமே! அதற்கிடையே 2017-ல் துவங்கி, முதல் பாகத்தோடே படைப்பாளிகள் அம்போவென்று விட்டுச் சென்ற டைகரின் இன்னொரு வரிசையானது புனர்ஜென்மம் கண்டால் தானுண்டு !! இல்லாவிடின் தளபதியார் நினைவுகளில் மட்டுமே தொடர்ந்திடுவார் !

"எல்லாம் ரைட்டு... அது யார்பா அந்த ஓலக மகா வெளியூர் ஆட்டக்காரக? எங்க பௌன்சரை ஓரம் கட்டுற விதமா என்னத்தைக் கிழிக்கப் போறாங்கன்னு காட்டு?!'' என்கிறீர்களா? Of course பதிவின் பின்பகுதியில் அவர்களுக்கு இடமுண்டு சாரே!

3.ஸ்டெர்ன்:

This was the battle of the வெட்டியான்ஸ்! நவீன வெட்டியான் ஸ்டெர்னும், க்ளாஸிக் வெட்டியான் அண்டர்டேக்கருமே இம்முறை களம் காணத் தயாராக இருந்தனர் தான் ! And இருவரையுமே ஒட்டுக்கா போட்டுத் தாக்கினால் என்ன? என்ற கேள்வியுமே என்னுள் இருந்தது தான்! எனக்குத் தெரிய இரண்டு வெட்டியான்களை அணிவகுப்பில் வைத்திருக்கும் ஒரே பதிப்பகம் இந்தியாவிலேயே நாமாகத் தானிருப்போம்! And இருவரையுமே ஆரவாரமாய் ரசிக்கும் ஒரே வட்டம் நீங்களாகத் தானிருப்பீர்கள்! But ஒரே வருஷத்தில் இருவரையும் முட்டிக்கச் செய்வது லேசான overkill ஆக இருந்திடுமோ? என்ற தயக்கம் தலைதூக்கியது! தவிர, அண்டர்டேக்கரின் புது (க்ளைமேக்ஸ்) ஆல்பம் 10 நாட்களுக்கு முன்னே தான் ரிலீஸ் ஆகியுள்ளது! இவரது அடுத்த கதைச்சுற்று தயாராகிட குறைந்த பட்சமாய் நான்கு ஆண்டுகளாவது எடுக்கும் (முதல் பாகத்துக்கு 2 years + க்ளைமாக்ஸ் பாகத்துக்கு 2 years) எனும் போது, வெகு சமீபத்தில் பிரெஞ்சில் வெளியாகியுள்ள அண்டர்டேக்கரை 2027-ல் பார்த்துக்கலாமே என்று நினைத்தேன்!

ஸ்டெர்னிலோ ஆல்பம் # 5 ஏற்கனவே ரெடியாகியிருக்க, அடுத்த கதையையுமே 2026-ன் துவக்கத்தில் வெளியிட்டு விடுவார்கள் போலும்! So ரொம்ப gap விடாமல் ஏற்நெற்றிக்காரரைப் பின்தொடரலாமே என்ற எண்ணத்தில் ஸ்டெர்னுக்கு ஓட்டுப் போட்டேன்! இங்கே சின்னதாயொரு சோம்பலும் பின்னணியில் உண்டு! இருவருக்குமே பேனா பிடிக்கப் போவது நான் தான் ; ஸ்டெர்ன் சற்றே breezy ஆக, ஜாலியாக உலாற்ற அனுமதிப்பார்! அண்டர்டேக்கரோ, dark ஆன, இறுக்கமான களம் எனும் போது, அங்கே குறுக்கை கூடுதலாய் வளைக்க வேண்டியிருக்கும்! So 2027-ல் வளைச்சுப்போமே?! என்று சொல்­லிக் கொண்டேன்! 

4.ஸாகுவாரோ:

வித்தியாசமான நாயகர்! வித்தியாசமான பார்வைக் கோணத்திலான கதைகள்! ப்ளஸ் காரசார ஆக்ஷன்! சில்விஸ்டர்  ஸ்டாலோனின் ராம்போவை நினைவூட்டும் விதத்திலான இந்த மனுஷரின் அடுத்த சாகஸமும் முதல் ஆல்பத்தைப் போலவே பரபர ரகம் தான்! So வழக்கமான "வோ'' போடும் அபாச்சேக்களுக்கு ஒரு மாற்றாக இந்த ஆக்ஷன் அபாச்சேவை அள்ளி வந்தாச்சு!

5 & 6 ஸாகோர் & ஏஜெண்ட் ராபின்2.0:

Truth to tell- கோடாரி மாயாத்மாவுக்கு ஒரு கலர் ஸ்லாட்+ ஒரு black & white ஸ்லாட் என ஒதுக்கியிருந்தேன் தான்! ஆனால், இந்தப் பதிவை எழுத ஆரம்பிப்பதற்கு 3 நாட்கள் முன்னே தான் ஏஜெண்ட் ராபினின் தீபாவளி மலர் அதிரடியில் பணி முடித்திருந்தேன்! And எனது ஒரிஜினல் ப்ளானிங்படி ராபின் 2026-ல் நஹி.. ; 2027-ல் தான் வந்திருக்க வேண்டியவர்! ஆனால், நடப்பு தீபாவளி மலரின் 3 பாக சாகஸத்தின் அனல் என் தீர்மானத்தை "பச்சக்'' என மாற்றச் செய்தது! ராபின் just has to be in என்று தீர்மானிக்க, யாரைக் கிளப்பி விட்டு, ராபினை உட்காரச் செய்யலாம் என்று நோட்டமிட்டேன்! அப்போது தான் ஸாகோர் டபுள் சீட்டில் பெட்டி, பைகளோடு குந்தியிருப்பது தெரிந்தது! அவரை ரொம்பவே request பண்ணி ஒற்றை சீட்டைக் காலி பண்ணி வாங்கி, அங்கே ராபின் 2.0 சாரை அமரச் செய்தாச்சு!

ஏஜெண்ட் ராபின் 2.0..! கடந்த பதிவிலேயே நிறைய எழுதிவிட்டேன் ; சிலாகித்தும் விட்டேன்! So 2025 தீபாவளி மலர் முப்பாக சாகஸத்தின் sequel ஆன அடுத்த இரண்டு பாகங்களோடு ஏஜெண்ட் ராபின் 2026-ல் வந்தேயாகணும் என்றாகிப் போச்சு! சர்வ நிச்சயமாய் தனது சீட்டுக்கு மனுஷன் நியாயம் செய்தே தீருவாரென்று நம்பலாம்!

So ஸாகோர் முழுவண்ணத்தில் V காமிக்ஸின் 2026 தீபாவளி மலரில் அதிரடி செய்திடவுள்ளார்! For sure இந்த நாயகருக்குக் கூடுதல் வாய்ப்புகள் அத்தியாவசியமே! ஆனால், 'பட்ஜெட்' என்று சாக்குமூட்டைக்குள் நின்றபடியே ரேஸ் ஓடும் போது, உசேன் போல்டின் துரிதங்கள் நமக்குச் சாத்தியமாவதில்லையே? அப்பத்தைப் பிரித்துத் தந்த குரங்கைப் போல ஸ்லாட்களை ரேஷன் பண்ணிப் பண்ணியே வழங்க வேண்டியுள்ளது! Maybe.. just maybe பட்ஜெட்களை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கொள்ளும் luxury நமக்குக் கிட்டிடும் பட்சத்தில் ஜாஸ்தி வாய்ப்புகள் பெற்றிடப் போகும் முதல் ஹீரோவாக ஸாகோரே இருப்பார்!

7.மர்ம மனிதன் மார்ட்டின்:

வருஷமாய் நம்மோடு பயணிக்கும் நிரந்திரர்! இவருக்கென ஒரு பிரத்தியேக ஸ்டைல் கதைகள் & இவருக்கென ஒரு பிரத்தியேக ரசிகர் வட்டமும் இருப்பதை நாமறிவோம்! So 2026-ல் கூட மார்ட்டின் + ஜாவா கூட்டணி உண்டு தான்! என்ன ஒரே வித்தியாசம்- இந்த முறை மனுஷன் கலரில் கலக்கிடவுள்ளார்! And அது முத்து காமிக்ஸின் தீபாவளி ஸ்பெஷலாகவும் இருந்திடவுள்ளது!

So 2026 தீபாவளிக்கு:

  1. லயனில்: TEX vs மெபிஸ்டோ  ஸ்பெஷல்
  2. Vகாமிக்ஸில்: ஸாகோர் ஸ்பெஷல்
  3. முத்து காமிக்ஸில் : மார்ட்டின் ஸ்பெஷல்

என போனெலி­யின் வர்ணத்தோரணங்கள் களை கட்டவுள்ளன! So 2026-ன் தீபாவளியுமே ரகளையானதொரு அனுபவத்தைத் தரவுள்ளது என்பது உறுதி! Fingers crossed!

8 & 9 &10 :  ரூபின்+ டேங்கோ+ ரிப்போர்டர் ஜானி கூட்டணி:

சமீப காலங்களாகவே கூட்டணி இதழ்களுக்குப் படைப்பாளிகள் பெரியதொரு "நோ'' சொல்­லி வரும் சூழ­லில், ஒரு மாதிரியாய் கெஞ்சிக் கூத்தாடி, லோம்பா நிறுவனத்தின் இசைவை மட்டும் பெற்றுவிட்டோம்! So 2026-ன் கோடை மலராக :

  • சிகாகோ டிடெக்டிவ் ரூபின்
  • லோன்ஸ்டார் டேங்கோ
  • சூப்பர் ரிப்போர்டர் ஜானி

என்ற கூட்டணி களம் காணவுள்ளது!

சமீப காலத்தின் surprise package என்றால் டிடெக்டிவ் ரூபினைத் தான் சொல்வேன்! ஏற்கனவே SODA சாத்து வாங்கிய சூழலி­ல் - இந்தக் கேரட் கேச அம்மணி எப்படித் தாக்குப் பிடிப்பாரோ? என்ற பயமிருந்தது எனக்கு ! அதுவும் SODA பாணியிலேயே இங்கேயும் கார்ட்டூன் மாதிரியான சித்திர பாணி! ஆனால், உருப்படியான கதைகள் இருந்தாலே போதும் - பரவை முனீம்மாக்கா கூட சாதித்து விடலாம் என்பதை அழகாய் establish செய்த பெருமை உங்களுக்கே! இதுவரை வெளிவந்துள்ள 4 ரூபின் சாகஸங்களுமே செம ஹிட்ஸ்! So இப்போதெல்லாம் மேட்ச் ஆடப் போகும் வீரர்களின் ­first லிஸ்டில் இவரது பெயரும் ரொம்பச் சீக்கிரமே இடம் பிடித்துவிடுகிறது!

TANGO!! சித்திரங்களும், கதைகள் அரங்கேறும் தென்னமெரிக்கப் பின்புலங்களும் இந்த ஸோலோ நாயகருக்குப் பெரும் வலு சேர்ப்பவை! தவிர, ஒருவிதமான ஒற்றைக் கழுகாய் பறக்கும் டேங்கோவின் ஸ்டைலில் ஒரு வசீகரம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை தான்! More than anything else- இது ரொம்பவே சமீப உருவாக்கம் எனும் போது, புராதன நெடிக்கு வாய்ப்பே லேது! 2017-ல் பிரெஞ்சில் துவங்கிய தொடரில் இதுவரை 8 ஆல்பங்கள் உள்ளன! 2026-ல் வரவிருக்கும் "நதி ஒன்று.. கரைகள் மூன்று''- தொடரின் ஆல்பம் # 6. So பெரியதொரு gap விடாது படைப்பாளிகளைப் பின்தொடரலாம் தானே folks?

புன்னகை மன்னன் ரிப்போர்ட்டர் ஜானி!! 1986 முதலாய் நம்மோடு travel பண்ணிடும் நாயகர்! And by now இவரது பாணி நமக்கு அத்துப்படி ஆகிப் போச்சு தான்! சொல்லப் போனால், நம்மில் ஒரு சிலருக்கு அந்த ஸ்டைல் லைட்டாக போரடித்தும் போயுள்ளதை மறுக்க மாட்டேன்! அதன் பொருட்டே ஜானி 2.0 கதைகளை உட்புகுத்த நானும் குட்டிக்கரணங்கள் அடித்துப் பார்க்கிறேன்- but பருப்பு நோ வேகிங்ஸ்! இரண்டுக்குமிடையே சித்திர பாணிகளில் ஏகமாய் வேற்றுமைகள் இருப்பதால் ஜானி 2.0-க்கு கேட் போட்டே வைக்கிறீர்கள்! Maybe நமது அழகன் ஜானியின் "செத்துச் செத்து விளையாடுவோமா?'' இறங்கியடிக்காத பட்சத்தில், 2027 முதலாய் அந்தப் புதுயுக ஜானி 2.0 கதைகளுக்கு முன்னுரிமை தந்து பார்க்க வேண்டியது தான் என்று நினைக்கிறேன்! "அவரு மூஞ்சியை சிரிச்சா மெரி வச்சுக்க மாட்டேங்குறாரு'' என்பதை மட்டுமே நவீனத்துக்கு ஒரு தடையாகக்  கொள்வதாயின், நம்மள்லே பாதிப்  பேரை கிட்டக்கவே சேர்த்துக்கவே முடியாதே ?  Your thoughts please folks?

11.மிஸ்டர்.நோ:

துரதிர்ஷ்டம் என்பது- இவர் போன்ற ஆற்றலாளருக்கெல்லாம் ஒற்றை ஸ்லாட்டை மட்டும் ஒதுக்கித் தந்து விடுவது தான் என்பேன்! மெய்யாலுமே he deserves more...! ஆனால், பண்டிகைக்கு முந்தின T-நகர் ரங்கனாதன் தெருவிற்கு நிகரான நாயக/ நாயகியர் நெரிசலுக்கு மத்தியில் வேறென்ன செய்வதென்றே தெரியவில்லை! 2027 முதலாய் இதற்கொரு தீர்வினைத் திட்டமிட்டுள்ளேன்! Hopefully அதனை நடைமுறைப்படுத்திப் பார்த்திடலாம்!

மிஸ்டர்.நோ வழக்கம் போலொரு சிங்கிள் ஆல்பத்தில் அமேசானில் சாகஸம் செய்யவிருக்கிறார்! And இந்த ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் - simply becos பெரியவர் போனெலி ­உருவாக்கிய இந்த நாயகரின் முதன்முதல் (அறிமுக) சாகஸம் இதுவே! நியாயப்படிப் பார்த்தால் இங்கிருந்து தான் நாம் ஆரம்பித்திருக்க வேணும்; but நம்ம மூக்கு புடைப்பானதாச்சே - தலைகீழாய் தான் குதிப்பேனென்று அடம்பிடிப்பது நமக்குப் புதுசில்லையே?!

12.உட்சிட்டியின் உட்டாலக்கடிப் பார்ட்டீஸ்!!

ஷெரீப் டாக்புல் & கிட் ஆர்டினும் இல்லாததொரு அட்டவணை சாத்தியமே அல்ல தானே guys? லக்கி லூக் அளவுக்கு இவர்களது வெற்றிகள் இல்லாவிடினுமே - இந்த சிரிப்புப் போலீஸ் டீம் ஒரு ஸ்லாட்டை தமக்கென நிரந்தரமாக்கி விட்டுள்ளனர் நம் மத்தியில்! So 2026-ல் இவர்களோடு yet again நாமும் ஜாலி­யாய் ரகளை பண்ணிடலாம்!

And சிக் பில்லில் இந்தக் கதையை ரீப்ரிண்ட் பண்ணலாமே ? அந்த ஆல்பத்தை மறுக்கா போடலாமே ? என்ற வினாக்கள் அவ்வப்போது எழத் தவறுவதில்லை தான் ! ஆனால் ரூ.5999 எனும் ஒரு அரூப கோட்டைச்சுவரை தாண்டப்படாது - என்ற கட்டாயத்தோடே ஒவ்வொரு அட்டவணையிலும் நாம் பயணிக்கும் போது, சிக் பில் என்ன ? டெக்ஸ் வில்லருக்கே ரீப்ரிண்ட் வாய்ப்புகள் பூஜ்யத்துக்கு மிக அருகில் தான் ! Absolutely no room for any reprints - in the ரெகுலர் சந்தாஸ் என்பது கட்டாயத்தின் சாசனமாகிறது ! மறுபதிப்புகள் எல்லாவுமே இனி புத்தக விழா ஸ்பெஷல்களாகவோ, இரத்தப் படல முன்பதிவுப் படலங்களாகவோ மட்டுமே இருந்திட இயலும் folks ! And அதற்கும் ஒரு திட்டமிடல் மண்டைக்குள் வெயிட்டிங் ! 2026-ன் நடுவாக்கில் அது பற்றிப் பேசலாம் !

13.நரகத்திற்கொரு புரவி:

நடப்பாண்டில் இன்னமும் நாம் சந்தித்திரா "குருதியில் பூத்த குருஞ்சி மலர்' கௌபாய் களத்தின் இரண்டாம் அத்தியாயமிது! அந்தப் புதுத் தொடர் பற்றி இதழ் வெளியாகும் தருணத்தில் விரிவாய் எழுதுகிறேனே! மிரட்டலான சித்திரங்கள்; செமத்தியான ஆக்ஷன் என்ற இந்த மினி தொடரில் மொத்தமே நான்கு ஆல்பங்கள் தான் ! So இந்தத் தொடரானது ரொம்ப காலமெல்லாம் ஜவ்வு இழுக்காது ; will be short & sweet!

14.ப்ளூகோட் பட்டாளம்

நிஜத்தைச் சொல்வதானால் polling-ல் நீங்கள் உத்வேகமாய் இவர்களை ஆதரித்திருக்காவிட்டால் இந்த நீலப்படை 2026-ல் களம் கண்டிருப்பது சந்தேகமே! எனக்கு பெர்சனலாக ரொம்பவே பிடித்த தொடர் தான்; but again சிக் பில் & கோவைப் போலவே லக்கி லூக்கின் உயரங்களை இவர்களுமே தொட்டதில்லை தான்! Perennial underachievers !! So இட நெருக்கடி நேர்ந்திடும் பட்சத்தில் காலி­யாகிடக் கூடிய சீட் இவர்களதாகத் தானிருக்குமென்று எண்ணியிருந்தேன்! ஆனால், ஏற்கனவே தேவாங்காய் திரியும் கார்ட்டூன் டிபார்ட்மெண்டை இதற்கும் மேலாக இளைக்கச் செய்ய மனம் ஒப்பவில்லை! ஏற்கனவே ஸ்பூன் & ஒயிட் ஜோடியை வோட் போட்டே வீட்டுக்கு அனுப்பிவிட்டோம் எனும் போது, இவர்களுக்கும் வேட்டு வைக்கலாகாது என்று தீர்மானித்தேன்! So யூனிபார்ம் போட்ட கவுண்டமணி & செந்தில் தொடர்ந்திடுகிறார்கள்!

15.தோர்கல்:

2026-ன் அட்டவணையில் நான் ஆகக் கூடுதலாய் யோசித்தது இந்த ஒற்றை நாயகரின் பொருட்டே! பொய் சொல்லப் போவதில்லை - for all money தோர்கலுக்கு டாட்டா சொல்­லிவிடுவதென்று தீர்மானமாகயிருந்தது! பதினோரு ஆண்டுகளின் ஓட்டத்தில் 29 பாகங்கள் என்ற luxury லக்கி லூக்குக்குக் கூட இது வரைக்கும் கிடைத்ததில்லை; ஆனால், தோர்கலாருக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டிருந்தது தான்! ஆனால் இன்னமுமே இந்த fantasy நாயகர் ஒரு hardcore ரசிக வட்டத்தைத் தாண்டிய reach பெற்றிருக்கவில்லை ! In fact இப்போதெல்லாம்பெரும்பாலான புத்தக விழாக்களில் இவர் வெறும் பார்வையாளர் மாத்திரமே! கதைகள் ஆங்காங்கே முற்றுப் பெற்றிடாமல் நெடும் சங்கி­லியாய் தொடர்வதால், புதியவர்களுக்கு இவற்றுள் ஐக்கியமாகிடத் திணறுவது புரிகிறது! And of course மூன்றோ-நான்கோ அத்தியாயங்கள் கொண்ட கதைகளைப் பிரித்துப் போட்டு நானுமே உங்கள் பாட்டைச் சிரமமாக்கியும் உள்ளேன் என்பதை மறுக்க மாட்டேன்! ஆனால், ''கடவுளரின் தேசம்''; ''அழகிய அகதி'' என்று தொகுப்புகளாய் தோர்கலை நாம்  போடாமல் இருக்கலை தான்! அவையுமே மொக்கை போட ஆரம்பித்த பின்பாகத் தான் சிக்கலே துளிர் விட்டது ! சரி, விலை கூடுதலில் இவர் வண்டி self எடுக்க மாட்டேன்கிறது ; நார்மல் விலைகளில், தனித் தனி ஆல்பங்களாக வெளியிடுவதென அதன் பின்புதான் யு-டர்ன் போட்டோம்! தொகுப்புகளில் தொய்வு ஏனென்பது இன்றுவரை எனக்குப் புரியாததொரு புதிரே ! Anyways ஆரிஸியாவின் ஆத்துக்காரருக்குத் தற்கா­லிகமாவாவது குட்பை சொல்லிடும் முடிவில் இருந்த போது, சில பல சிந்தனைகள் தலைக்குள் தாண்டவமாடின :

* தொடரின் ஆல்பம் # 29 பூர்த்தி செய்துள்ளோம். ஜோலன் தலையெடுக்கத் துவங்கும் அடுத்த கதைச்சுற்றில் மூன்று பாகங்கள் ஒருசேர ஒரு கதையாகிடும்! So தொடரின் # 30, 31 & 32-ஐ ஒரே புக்காக நானூற்றுச் சொச்சம் விலைக்குப் போட்டாக வேண்டியிருக்கும் ! அந்த விலையில் வருவதாகயிருந்தால் "டப்பக்கடீரென்று'' விற்பனையில் இளம் ஜோலன் சிக்ஸர் அடிப்பாரா? என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடியது!

* அதேசமயம் இந்த ஆஜானுபாகு அழகருக்கென நம்மிடையே தீவிர அபிமானம் இருப்பதும் எனக்குத் தெரியும்! "விற்க மாட்டேன்குது... அதனாலே டாட்டா சொல்லியாச்சு!' என்று ரமணா ஸ்டைலி­ல் சிலபல புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்திருந்ததால் அவர்கள் வேறு வழியின்றிப் புரிந்து கொண்டிருப்பார்கள் தான்! ஆனாலும், அனைவரின் மனதின் ஓரத்திலும் ஒரு வருத்தம் தொக்கி நிற்காது போயிடாதே என்பது நெருடியது!

* தவிர, "விற்பனை" எனும் புள்ளியிலி­ருந்து பார்க்கும் போது வேறொரு factor-ம் இடிக்குமென்பது புரிந்தது! ஒரு தொடர் live ஆக இருக்கும் போது தான், அதன் முந்தைய இதழ்கள் கொஞ்சமேனும் விற்பனை காணும் சாத்தியங்களுண்டு! ஒரு தொடருக்கு end card போட்டு விட்டோமெனில் கைவசமுள்ள ஸ்டாக்கை பேரீச்சம்பழத்திற்குப் போடுவதே கதியாகிப் போகும்! பௌன்சர் ' லார்கோ ; ஷெல்டன் ஆகியோரெல்லாம் இதற்கான உதாரணங்கள் ! மூவருமே மறுவருகை செய்த பிற்பாடே பழசு கொஞ்சமாய் விற்க ஆரம்பித்துள்ளது ! So அந்த ஆங்கிளிலும் குழப்பியது!

அப்போது தான் "தோர்க­லின் உலகம்'' என்ற தனித்தடத்தில் வெவ்வேறு கதாசிரிய / ஓவிய ஜாம்பவான்களின் கைவண்ணத்தில், ஆங்காங்கே முற்றுப்பெறும் 100+ பக்க ஆல்பங்களை 2023 முதலாய் படைப்பாளிகள் வெளியிட்டு வருவது நினைவுக்கு வந்தது! 2022-ன் அக்டோபரில் ஃப்ராங்பார்ட் புத்தக விழாவில் அவர்களைச் சந்தித்த போதே முதல் ஆல்பத்தைக் காட்டியிருந்தார்கள்! 104 பக்கங்கள் கொண்டிருந்த அந்தப் படைப்பு தீயாய் மிளிர்ந்தது! ரைட்டு... பக்கங்களும் ஜாஸ்தி; ஆனால், அத்தியாயம்- அத்தியாயமாய் நீண்டிடாது ஒரே சாகஸமாக இருந்திடும் & ரொம்பவே முக்கியமாய் - முற்றிலும் புதியவர்கள் இங்கே படைப்பின் பொறுப்பேற்றிருப்பதால், மெயின் தொடரின் பிற்பகுதியில் தலைதூக்கத் துவங்கியிருந்த அயர்ச்சி இக்கட தலைகாட்டாதென்று நம்பினேன்! என்ன தான் ஜாம்பவான் வான் ஹாமே மெயின் தொடரின் பொறுப்பிலி­ருந்தாலும்- ஒரே மாதிரியான ஆரிஸியாவின் அழுகாச்சிகள், அதே போலான வில் வித்தைப் போட்டிகள், என்ற சில சமாச்சாரங்கள் சன்னமாய் கொட்டாவியை என்னளவிற்காவது எழச் செய்திருந்தன! So fresh faces ; fresh ideas ; fresh approach நிச்சயமாய் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் "காவியத் தலைவன் தோர்கல்" என்ற நாமகரணத்துடன் வண்டியை புது உத்வேகத்துடன் கிளப்பியாச்சு!

தோர்கலுக்கு இதுவொரு இரண்டாம் வருகை எனலாம் !And முத்து காமிக்ஸின் 54-வது ஆண்டுமலராக இந்த ஆல்பத்தை களமிறக்கவும் திட்டமிடல்! So சென்னையில் சாதிப்பாரா தோர்கல் 2.0 என்பதொரு மில்லியன் டாலர் கேள்வி ! Fingers crossed !!!

16.இளவரசி ???

கேள்வி : டேய் காளிங்கராயா ...?  இளவரசியை எங்கேடா காணோம் ? கலர் கலரா, கலக்கலா கம்யூனிட்டியிலே பிலிம் காட்டுனதுலாம் சும்மா லுலாயிக்குத் தானா ?

பதில் : மாமா....! காத்திரு நீ...கண்ணாளா...!

கேள்வி : என்னாது ..?? காத்திருக்கவா ? எதுக்கு - 2027  பொறக்குற வரைக்குமா ?

பதில் : No ...மாமா....காத்திரு நீ...கண்ணாளா...!!

கேள்வி : டேய் ....என் லெப்ட்டு பத்தி தெரியும்லே ? ஒழுங்கா பதில் சொல்றியா-இல்லியா ?

பதில் : பதிலே அது தானுங்க மாமா !"காத்திரு நீ..கண்ணாளா..!" என்பது தான் அடுத்த மாடஸ்டியின் தலைப்பு ! கதையும் வந்தாச்சு ; அட்டைப்படமும் போட்டாச்சு !  And தொடரின் செம லேட்டஸ்ட் கதை இது என்பதால், கதை சொல்லலில் புராதனம் இராது ! அப்புறம் கருப்பு பெயிண்டுக்கோ, சுப்பிரமணி டெய்லருக்கோ கூட சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் கொஞ்சம் இருக்கும் போல தெரியுது ! இன்ன பண்ணலாம்னு சொல்லுங்கோ ? எது, எப்படியோ -இளவரசி இன்றி ஒற்றை வருஷமாச்சும் கடந்திடுமா - என்ன ? எனக்கும் உசிர் பயம் இருக்கும்லே ? So chill மக்கா ! 😎😎😎

ரைட்டு... இத்தோடு அட்டவணையின் ரெகுலர் குடித்தனக்காரர்களைப் பார்த்தாச்சு! இனி வழக்கம் போல புதுசாய் யார் குடி வரப் போறாங்க என்பதையுமே பார்க்கலாமா? 

இப்போதெல்லாம் எதையேனும் செய்து உங்களது கவனங்களை ஈர்த்தாக வேண்டுமென்பதில் நிறையவே மெனக்கெடத் தோன்றுகிறது! Shorts...Reels என்று 30 நொடிக்கொரு புது விஷயத்தைப் பார்த்துப் பழகிப் போய்விட்டன நமது மூளைகள்! ஆக, உடனுக்குடன், மூளைகளில் Dopamine என்றதொரு ஹார்மோன் சுரந்து நம்மை ஒருவிதப் பரவச நிலையிலேயே வைத்திருக்குமாம்! அந்த ரேஞ்களுக்கு முடியாட்டியும், நமது இந்த வருடாந்திர அட்டவணை அட்டூழியத்தினில், புதுசாய், எதையேனும் புகுத்தியே தீரணுமென்று தலைக்குள் ஒரு குறளி குரல் கொடுத்து கொண்டேயிருக்கிறது! அதன் பலனே இந்தப் புதியவர்கள் !

17.ரெட் கன்:

உள்ளூர் Bouncer கோஷ்டிக்கு tough தரப் போகும் வெளியூர் ஆட்டக்காரரில் முதலாமவர்! RED GUN என்ற இந்தத் தொடர் ரொம்ப ரொம்பச் சமீபப் படைப்பு & வன்மேற்கின் raw ஆனதொரு முகமே இதன் அடையாளம்! ஒவ்வொன்றுமே one-shot தான் & இதுவரை இரண்டு ஆல்பங்களே வெளி வந்துள்ளனன - with more to follow ! தமிழில் என்ன பெயர் வைக்கலாமென்று யோசித்தேன்- "சிவப்புத் துப்பாக்கி; சிகப்பு பிஸ்டல்" என்ற ரேஞ்சுக்குத் தான் மொக்கையாய் தோன்றியது ! ரைட்டு..."ரெட் கன்'' என்றே வைத்துக் கொண்டாலென்னவென்று பட்டது ! நிறைய இரத்தக் களரிகளோடு,  கணிசமான ஆக்ஷன் ரணகளங்களோடு அதிரடிகள் செய்யக் காத்திருக்கும் இந்த வெகுமதி வேட்டையனுக்கு  ரெட் கார்பெட் மருவாதி தரவுள்ளோமா  folks? "குருதியின் கூலி" இவரது debut ஆல்பமாக இருக்கவுள்ளது - நம் மத்தியில் !

18.புதைகுழிப் பூக்கள்:

வெளியூர் ஆட்டக்கார troupe-ன் இன்னொரு பகுதி இதுவே! உள்ளதைச் சொல்வதானால் இதுவொரு தொடரல்ல - மாறாக இதுவொரு ஒன்-ஷாட் ! Again ரணகள வன்மேற்கே கதைக்களம்! ஆனால், ஒற்றுமைகள் அத்தோடு கதம்! தொடர்வது எல்லாமே ரொம்பவே வித்தியாசமான கதை மாந்தர்கள் & கதை பாணி!

ஒரு கைவிடப்பட்ட அரிஸோனா சிறுநகரமே கதை அரங்கேறும் களம்! அங்கே குடியிருப்போர் 27 பெண்கள் மாத்திரமே! ஆம்பிளைகளின் சாவகாசமே வேணாமென்று ஒதுங்கி வாழும் இந்த மகளிர் அணி, பிழைப்புக்காக ஸ்டேஜ்கோச்களையும், கேரவன்களையும் சூறையாடும் போக்கிரிகளாக அவதார் எடுத்துள்ளனர்! கொள்ளையடிப்பது ; தேட்டையோடு தங்களது பேய் நகரில் போய் பதுங்கிக் கொள்வதென பிழைப்பு ஓடும் வேளையில், பல மாதங்களாய் அந்தக் கொள்ளைச் சம்பவங்களைத் துப்புத் துலக்கி வரும் ஒரு ஆம்பள டிடெக்டிவ் அவர்களிடம் சிக்கி, அந்த "மகளிர் மட்டும்'' ஊருக்குள் புகும் போது தான் ஏழரையே ஆரம்பமாகுது! வித்தியாசமான கதைக்களம் ; கதை நகர்வு ! ரொம்பச் சின்ன வயதிலான கதாசிரியரும் சரி, ஓவியரும் சரி- இங்கே பெண்மணிகளே! So மகளிரால், மகளிரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இதழினை நமது "மகளிர் தின ஸ்பெஷலாக'' போட்டு தாக்கிடலாமென்ற மகாசிந்தனை தோன்றியது! நமது டீமின் Ms.P.சுகன்யாவை பேனா பிடிக்கச் செய்துவிட்டால், மகளிர் டீம் முழுமையாகிடும் என்பேன்! What say folks?

பொதுவாக இவை போலான ஒன்-ஷாட்களை நமது ரெகுலர் அட்டவணைக்குள் ஜம்போ காமிக்ஸ் ஓடிக் கொண்டிருந்த வரை மட்டுமே நுழைத்து வந்தேன்! அது ஊற்றிக் கொண்டான பிற்பாடு இந்த வகைக் கதைகளை வெளியிட நாள் தேடறேன் ; நட்சத்திரம் தேடறேனென்று ஜவ்வு இழுத்தது மட்டுமே பலனாகி வருகிறது! ஒருவழியாய் 2026 அட்டவணையினில் ஒன்றையாவது இறக்கியே தீருவோமெனத் தீர்மானித்துள்ளேன்! மக்களே.. மகளிர் டீமை பார்த்துக் கொள்ளுங்களேன்!

அப்புறம் அந்தத் தலைப்பு பரால்லீங்களா? நாமளும் பஞ்சத்துக்குக் கவிஞர் தானுங்களே ?

19.லெப்டினெண்ட் ப்ரூஸ் J ஹாக்கர் by ஓவியர் வில்­யம் வான்ஸ்

இதுவொரு நெடுநாள் அவாவின் பலன் என்று சொல்லலாம்! "ஓவியர் வான்ஸ்'' என்ற பெயரும், அவரது சித்திர அற்புதங்களும் நமக்குப் பரிச்சயமான 1986-ல், "கண்ணா.. இன்னொரு லட்டு தின்ன ஆசையா?'' என்று லோம்பா நிறுவனத்தினர் கேட்டிருந்தனர்! "லட்டுன்னா ரெண்டு என்ன- ரெண்டு டஜன் கூட விழுங்க ரெடி!'' என்று ஆர்வம் பொங்கப் பதில் கடுதாசி போட்டிருந்தேன்! அப்போது அவர்கள் ஏர்-மெயில் பார்சலி­ல் அனுப்பியிருந்த மாதிரிப் பிரதிகள் ஒரு கப்பல் கேப்டனின் சாகஸங்களுடன், ஓவியர் வான்ஸின் சித்திரங்களில் மிரட்டின ! ஹார்ட்கவரில் இருந்த அந்த ஆல்பத்தை விரல் தேய அன்று புரட்டோ புரட்டென்று புரட்டியதெல்லாம் நினைவில் இன்னமும் உள்ளது!

அந்த நேரம் தான் அதே லோம்பா நிறுவனத்துடன் கேப்டன் பிரின்ஸ் தொடருக்கும் கான்டிராக்ட் போட்டிருந்தோம்! பரட்டை மண்டைகளும், கச்சா முச்சா மூஞ்சிகளுமான அந்தக் கேப்டனே நமக்கு ஓ.கே என்றாகியிருந்த போது, ஓவியர் வான்ஸ் அவர்களின் கம்பீரமான கடற்படை நாயகரும் ஆட்டோமேடிக்காக நமது அணிவகுப்பினுள் புகுந்திருக்க வேண்டும் தான்! ஆனால், கதைக்களத்தி­லிருந்த காலநிலைகளின் வேற்றுமை, 1987-ல்  என் வேகத்துக்கு ஸ்பீட்-ப்ரேக்காகிப் போனது! கேப்டன் பிரின்ஸோ சமகாலத்துக் கதை; நாடு-நாடாய்ப் போய் சாகஸம் செய்கிறார்; வில்லன்கள் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள்; சேஸிங் காட்சிகள் உண்டு...! So நமது அப்போதைய ஆக்ஷன் கதைகள் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்குப் பரட்டைப் பிரின்ஸ் குறையேதும் வைத்திடவில்லை! ஆனால், இந்த ப்ரூஸ் ஹாக்கரோ- உத்தேசமாய் 1800-களின் ஆரம்பத்திலான காலகட்டத்தைச் சார்ந்தவர்! So ப்ரிட்டிஷ் நேவியின் லெப்டினெண்டாகப் பணியாற்றும் ப்ரூஸ் J ஹாக்கரை 1986-87 வாக்கில் நம் வாசிப்புகளுக்கு உட்படுத்த ரொம்பவே தயக்கமிருந்தது என்னிடம்! தவிர, அற்புதமான கலரில் மிளிர்ந்த அந்த ஆழ்கடல் காட்சிகளை நமது அன்றைய சாணித் தாளில் black& white-ல் போட்டால் கோணங்கித்தனமாகயிருக்குமென்றும் பட்டது! So அந்த லட்டை வாசம் பிடிப்பதோடே காலத்தை நகர்த்திவிட்டேன்!

Cut-நமது இரண்டாம் இன்னிங்ஸில் கலரும் நிரம்பி வழிய, 2019-வாக்கில் "பராகுடா''வின் புண்ணியத்தில் கடல் கதைகளும் செம "ஹிட்'' அடித்த பிற்பாடு, டபரியி­லிருந்த லட்டு நினைவுக்கு வந்தது! 'ஆஹா.. ப்ரூஸ் ஹாக்கரை போட்டுத் தாக்கிடலாமா ஜம்போ காமிக்ஸில்?' என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்த வேளையில் கொரோனா கொடுமை சகலத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது! கொஞ்ச காலத்தில் ஜம்போ காமிக்ஸே "ஜம்ப்'' பண்ணி பரணில் ஐக்கியமாகிட, ப்ரூஸ் ஹாக்கரை மறந்தே போய்விட்டேன்!

And 2026-ன் திட்டமிடலுக்குள் தீவிரமாய்ப் புகுந்திருந்த தருணத்தில் ப்ரூஸ் J ஹாக்கரின் 2.0 சாகஸ வரிசை நினைவுக்கு வந்தது! சில ஆண்டுகளுக்கு முன்பாய் நவீன யுகப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் ப்ரூஸ் ஹாக்கரை புனர்ஜென்மம் எடுக்கச் செய்திருப்பதை கொஞ்ச காலமாகவே track செய்து வருகிறேன்! இந்தப் புதியவரைப் புகுத்தலாமா? என்று யோசித்த போது- மொத்தம் ஏழே ஆல்பங்கள் கொண்ட "தாய் தொடர்'' துவக்கப் புள்ளியாவதே பொருத்தமாகயிருக்குமென்று புரிந்தது! தலையை கண்ணில் காட்டாது, வாலில் இருந்து ஆரம்பிப்பானேன் ? என்று தீர்மானித்தேன் !

And here we are!!

ப்ரிட்டிஷ் நேவியில் நெப்போலி­யனை எதிர்த்து இங்கிலாந்து போர் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அரங்கேறுவது போலான கதைகள் இவை! And இவரது கதை arc மூன்று-நான்கு ஆல்பங்கள் கொண்டவையே! ஆனால், ஒவ்வொரு ஆல்பமும் ஒவ்வொரு இலக்கில் போய் நிற்க ; அதுவே ஒரு அதிரடியாக வாசிக்க வருகிறது! And நின்ற இடத்தி­ருந்து அடுத்த ஆல்பம் தொடங்குகிறது! So 2026-ன் பிற்பகுதியில் "கரை சேரா காவியம்'' துவங்கிடப் போகிறது & 2027-ன் துவக்க மாதங்களில் முதல் சுற்று முற்றுப் பெற்றுவிடும்!

"ஒரே புக்காய் போட்டுப்புடலாமே?'' என்ற கேள்வி உடனே எழும் தான்; ஆனால், மூன்று கம்பீரமான ஒரிஜினல் வான்ஸ் அட்டைப்படங்கள், மூன்று தனித்தனி இதழ்களில் மட்டுமே சாத்தியமாகிடும்! So மூன்றே மாதங்களில் மூன்று இதழ்களை படிப்பதில் பெருசாய் இன்ன­லிராது என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு!

So with that -we come to the end of the அட்டவணைத் திட்டமிடல் for 2026!! 

ரெகுலர்ஸ்; புதியவர்கள்-என இயன்ற மட்டும் அனைவருக்கும் இடம் தர முனைந்துள்ளோம்! And இயன்றமட்டுக்கு variety காட்டவும் பிரயாசைகள் எடுத்துள்ளோம்! Hopefully- அனைவரது ரசனைகளையும் balance பண்ணிட முயற்சிக்கும் இந்த planning- உங்களது thumbsup-களைப் பெறுமென்று புனித தேவன் மனிடோவிடம் மனு போட்டுக் காத்துள்ளோம்! இனி பந்து உங்கள் தரப்பில் folks! அப்புறம் இந்தாண்டு முதலாய் சந்தாதாரர்களுக்கு முதல் மருவாதி செய்திட சில திட்டங்கள்; அமலுக்கு வரவிருக்கின்றன ! அது பற்றி....!

சந்தாவினில் புதிதாக இணைந்திடும் நண்பர்களும் சரி, சந்தாவைப் புதுப்பித்திடும் நண்பர்களும் சரி, "Super Fans'' என்ற லெவ­லில் இனி பதிவு செய்யப்படுவார்கள்!

1.Super Fans-களுக்கு பிரத்தியேகமாய் ஆண்டின் முதல் மாத TEX கலர் இதழில் Family photo கலரில் அச்சிட்டு அனுப்பப்படும்!

2.Super Fans-களுக்கு ஆண்டின் ஏதேனுமொரு இதழ் மட்டும் variant கவர் சகிதம் exclusive ஆக உண்டு! அந்த ராப்பர் will be exclusively for the Super Fans!

3.Super Fans-களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.300/-க்கு ஒரு Gift வவுச்சர் வழங்கப்படும்! இந்த வவுச்சர்களை நமது புத்தகவிழா ஸ்டால்களிலோ, நேரடியாக நம்மிடமோ - 2020-க்கு முன்பான இதழ்களை வாங்கிடப் பயன்படுத்திக் கொள்ளலாம்! அல்லது உங்கள் சார்பில் யாருக்கேனும் அந்த ரூ.300 மதிப்புக்கு ஈடான புக்ஸை பிறந்தநாள் பரிசாகவோ, பள்ளி லைப்ரரிகளுக்கு அன்பளிப்பாகவோ அனுப்பிடவும் பயன்படுத்திடலாம்! (செலுத்த வேண்டி வரும்).

4.And நமது ஜுனியர் எடிட்டரின் எண்ணம், எழுத்து, ஆக்கத்தில் "கதை சொல்லும் காலெண்டர்'' என்றதொரு concept நடைமுறை காணவுள்ளது! உங்கள் இல்லங்களில் உள்ள ஜுனியர்களுக்கென exclusive ஆக ஒரு காலண்டர் தரவுள்ளோம்! காலெண்டரின் ஒவ்வொரு ஷீட்டிலும் ஒரு fairy tale-ன் ஒரு பகுதி அழகாய் டிசைன் செய்யப்பட்டு, அதற்கான கதை ஸ்க்ரிப்டோடு இருந்திடும்! ஆக, 12 ஷீட்களில் ஒரு கதை அழகாய் சொல்லப்பட்டிருக்கும்! And of course ஒவ்வொரு ஷீட்டினிலும் அந்தந்த மாதத்துத் தேதிகளுமே இருந்திடும்! அம்மணி மாடஸ்டியோ; ஐயா மாயாவியாரோ; இன்ன பிற நம்மாட்களோ இந்தக் காலெண்டரின் பக்கமே தலைகாட்டப் போவதில்லை! மாறாக- பிள்ளைகளுக்கு ரசிக்கும் விதமாய் ஒரு popular fairy tale-ன் கதையோட்டமே பக்கத்துக்குப் பக்கம் தொடர்ந்திடும்!

And இங்குமே இரண்டு variants இருந்திடவுள்ளன! உங்கள் வீட்டில் பத்து வயதுக்குட்பட்ட குட்டீஸ் இருக்கும் பட்சத்தில் -fairy tale காலெண்டர்!

சற்றே வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில்- அவர்களுக்கு சுவாரஸ்யமூட்டக் கூடிய விதமாய் ஒவ்வொரு ஷீட்டிலும் பொது அறிவு சார்ந்த சமாச்சாரங்கள் இடம்பிடித்திடும் ! Of course- மாதத்தின் தேதிகளுடனுமே! So சந்தா செலுத்தும் போதே உங்களுக்கான காலெண்டர் option எதுவெனவும் குறிப்பிட வேண்டியிருக்கும்! (Under 10 or Over 10)

5.And ''Super Fan 2026" என்றதொரு பேட்ஜும் அனுப்பப்படும்! (வாசக சந்திப்புக்கு பேட்ஜ் சகிதம் வருகை தருவோருக்கு ஒரு ரவுண்ட் பன் / லெக் பீஸ்  கூடுதலாய் தரச் சொல்லலாமோ?? 😀😀)

ஆக, தற்போதைய மகா சிந்தனைகள் இந்த மட்டுக்கே!

அப்புறம் ஒவ்வொரு சமீப அட்டவணைப் பதிவுகளிலும் FAQ (கேட்கத் தோன்றும் பரவலான கேள்விகள்) எவையென்ற யூகத்தில், அவற்றிற்கான பதில்களையும் முன்கூட்டியே நான் தருவது வாடிக்கை! So நியாயப்படிப் பார்த்தால் இங்கே அந்தப் பகுதி தான் தொடர்ந்தாக வேண்டும்! ஆனால், இன்னமுமே  ஒரு ட்விஸ்ட் கீதே folks! அட்டவணை நிறைவு பெற்றுவிட்டது! ஆனால், இன்னும் நிறைவு பெறவில்லை தான்! இன்னா மேன் குழப்புறே? என்கிறீர்களா? இருக்கே..... நம்மகிட்டே இன்னும் கொஞ்சம் திட்டமிடல்கள் இருக்கே! So அதையும் சொல்லி­ப்புடலாம்!

ஆண்டுகள் ஓடுகின்றன... நமது சுற்றளவுகளும், அகவைகளும் பெருக்கெடுத்து வருகின்றன! மாத பட்ஜெட்டில் இப்போதெல்லாம் மண்டைச் சாயங்களுக்கும், வருஷ பட்ஜெட்டில் கண் பார்வை டெஸ்டுக்கும், பவர் கண்ணாடிகளுக்கும் தொகைகள் ஒதுக்குவது அத்தியாவசியமாகிப் போய் வருகிறது! So ஒரு கட்டத்தில் நமக்கு "தம்'' இருக்கும் போதே, புதிய தலைமுறையினையும் இந்த "பொம்ம புக்'' லோகத்திற்கு ஆக்டிவாக இட்டார வேண்டியதொரு பொறுப்பு இருக்கிறதென்று பட்டது! So இதோ 2026-ல் வருகிறது - The GEN Z சந்தா! டிஜிட்டல் யுகத்தில் பிறந்த பிள்ளைகளை காமிக்ஸ் வாசிப்பினை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில்; Youtube ஷார்ட்ஸ்களுக்கும், Insta ரீல்ஸ் பொழுதுபோக்குகளுக்கும், சன்னமானதொரு addition-ஆக "லயன் மினி'' என்ற தனித் தட குட்டி புக்ஸ்களைத் திட்டமிட்டுள்ளோம்! (Oh yes....நம்ம அந்நாளைய மினி-லயன் லோகோவுடன் !!)

  • இவற்றில் நமது வழக்கமான மொழிநடை இருந்திடவே செய்யாது! இன்றைய தலைமுறைக்கு ரசிக்கக் கூடிய விதத்தில் சிம்பிளான language பாணிகளே கையாளப்படும்!
  • Compact ஆன.. க்யூட்டான சில சைஸ்களில் கலரில் லயன் மினி புக்ஸ் இருந்திடும்!
  • எதுவுமே "வள வள''வென நீண்டு செல்லாது! Crisp & very short கதைகள் மட்டுமே!
  • And இவற்றில் இடம் பெறப் போகும் கதைக் களங்களோ வித்தியாசமானவை !

ஜாக்கி போட்ட ஓநாய்

('ஜட்டி போட்ட ஓநாய்' என்றால் சற்றே விரசமாகயிருக்கக் கூடுமல்லவா?)

The Wolf in Underpants என்ற பெயரில் ஐரோப்பாவில் செம பிரசித்தம் - இந்த ஜாலியான மினி கதைகள்! இது பற்றி நம் மத்தியில் யாருக்கேனும் தெரிந்துள்ளதா? என்று பல்ஸ் பார்க்கவே அதன் கதாசிரியரோடு, ஓநாயை போட்டாவாக நமது வாட்சப் கம்யூனிட்டியில் போன மாதம் போட்டிருந்தேன்! ஆச்சர்யமூட்டும் விதமாய் யாருக்கும் பெரியளவில் தெரிந்திருக்கவில்லை ; but கொஞ்சம் கூகுள் பண்ணியான பின்னே, "இதனைப் போட்டே தீரணும்" என்ற ரீதியில் குரல்கள் கேட்டன தான்! நண்பர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது தான் - ஆனால், இந்தத் தொடருக்கான target audience தொப்பை வளர்த்த பிள்ளைகளல்ல என்பதால் நான் அடக்கியே அந்த நொடியில் வாசித்தேன்!

நம்ம தாத்தாஸ் தொடரில், பேத்தி சோஃபி நடத்திடும் பொம்மலாட்ட ஷோவின் ஈரோ தான் இந்த ஜட்டி போட்ட ஓநாய் என்றாலும், இதனை கதாசிரியர் Wilfrid Lupano தனித்தடத்தில் உருவாக்கியுள்ளது இளம் மனதுகளுக்காகவே! So சின்னதொரு போதனை; சமகால நடப்புகளின் பகடி என்ற ரீதியில் கதையை நகர்த்தியுள்ளார்! ப்ரெஞ்சில் இது ப்ளாக்பஸ்டர் ஹிட் - ஏழேகால் இலட்சம் பிரதிகளுக்குக் கிட்டே விற்றுள்ளார்கள்! நாமோ அவசரமாய் இதனை நமது ரெகுலர் வட்டத்திற்கென வெளியிட்டால், பரோட்டா எதிர்பார்த்திருக்கும் புள்ளீங்க வாயில் செரிலாக்கை கரைச்சுத்  திணிச்சது போலாகிவிடும் என்று நினைத்தேன் ! So நமது புது இலக்கான உங்கள் வீட்டு ஜுனியர்களே இந்த ஜாக்கி சார்வாளுக்குப் பொருத்தமான target audience ஆகிடுவர்! Of course "நான் பரோட்டாவும் சாப்டுவேன்; செரிலாக்கையும் விழுங்குவேன்'' எனும் வளர்ந்த குயந்தைகளும் can enjoy it as well! இதனை ரெகுலர் தடத்தில் புகுத்தி ஏழரையைக் கிளப்பிக் கொள்ளத் தான் மனமில்லையே தவிர, it will be a great choice for GEN Z சந்தா !

Team ஜுனியர் டிடெக்டிவ்ஸ் : 

ஹை-ஸ்கூல் மாணவர்களே இங்கு நமது நாயகர்கள்! ஸ்கூ­லில் ஆளாளுக்கு ஒரு பொழுதுபோக்கைத் தேர்வு பண்ணி, அதற்கொரு க்ளப் ஆரம்பித்து ஜாலி­யாக நேரங்களைச் செலவிட, ஒரு சிறு அணியோ தங்களை ஷெர்லாக் ஹோம்ஸின் வார்ப்புகளாகக் கருதுகின்றனர்! பக்கத்து வீட்டில் நள்ளிரவில் ஏதோ ஓலம் கேட்குதா? துப்பறியக் கிளம்பிடுகிறார்கள் நமது ஜுனியர் டிடெக்டிவ்ஸ் (ஜு.டி)! க்ளாஸில் புதுசாய் சேர்ந்திருக்கும் பையனிடம் ஏதோ மர்மமாய் தென்படுகிறதா ? - no worries...அதைப் புலனாய்வு பண்ண நம்ம ஜு.டி. ரெடி! இது போலான சின்னச் சின்ன சாகஸங்கள் அழகாய் குழந்தைகளின் உலகினில் அரங்கேறுகின்றன! சிம்பிளான நடையில், லயன் மினி இவற்றை சித்தரிக்கப் போகின்றது! ப்ரெஞ்சில் ரொம்பவே கவனத்தை ஈர்த்துள்ள சிறார் தொடரிது!

டைட்டானிக் தாத்தா & க்யூட் பேத்தி;

லோகத்தில் சதாநேரமும் குட்டிப் பசங்களைப் பார்த்துக் கொண்டும், மகிழ்வித்துக் கொண்டும் இருக்க ஒற்றையாளாய் கடவுளுக்கு முடியாதென்பதாலோ என்னவோ- தாத்தாக்களை அவர் படைத்து வைத்தார்! And பிறவியின் பயனே பேரப் பிள்ளைகளை புன்சிரிப்புகளோடு ஜீவிக்கச் செய்வதே என்று அந்தத் தாத்தாக்கள் இன்றளவிற்கு, உலகெங்கும் இயங்கி வருகிறார்கள்! அப்படிப்பட்டதொரு அழகான டைட்டானிக் தாத்தா & க்யூட் பேத்தியின் அட்வென்சர்களே இந்தக் குட்டிக் கதைகள்! "ஸ்கூலுக்கு லேட்டாச்சு தாத்தா.. காரை விரட்டுங்கள்'' என்று பேத்தியார் உத்தரவிட, ப்ரேக்கே இல்லாத காரையும் ஓட்டிக்கினு தாத்தா பறக்கிறார்! எ­லிசபெத் ராணிக்கு நோ சொல்லி­டலாம் - ஆனால், பேத்திகளுக்கு "நோ'' சொல்லவாவது முடியுமா? அழகான சித்திரங்களில், அழகான கலரில், அழகான மினி சாகஸங்கள்!

And ஹ்க்க்ம்ம்ம்.. 

மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்:

இந்தத் தேர்வின் பின்னுள்ள எனது லாஜிக்கைச் சொல்லி ­ விடுகிறேன் guys!அப்புறமாய் பாட்டா சப்பல்ஸுக்கு வேலை தரணுமா? வேணாமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

மாயாஜாலம்! பால்யங்களில் ரொம்பவே ஈர்த்திடும் ஒரு சமாச்சாரம்! பெருசாய் லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல், அந்த நொடியின் உற்சாகங்களை உணர்ந்திடும் பால்ய வாசகர்களை சன்னமாய் நமது main stream காமிக்ஸ் உலகினுள்ளும் ஈர்த்திடுவதே நமது long term goal! So சுலபமாய், நேர்கோட்டில், வன்முறைத் தாண்டவங்களின்றி, பிள்ளைகளுக்கு fantasy கலந்து  கதைகள் சொல்லி­ட, மாண்ட்ரேக்கின் imaginative களங்கள் நல்லதொரு சாய்ஸ் என்று மனசுக்குப் பட்டது! கரெண்ட் கம்பியைப் பிடித்துத் தொங்கி அரூபமாகிய மாயாவியாரை நாம் ரசித்தது பால்யங்களில் தானே? நியூயார்க் நகரையே கயிற்றால் கட்டி இழுத்துப் போக முற்பட்ட ஸ்பைடரை நாம் ரசித்ததும் அதே பால்யங்களில் தானே? கப்பலையே தூக்கிப் பந்தாடும் இரும்பு மனிதன் ஆர்ச்சியைக் கண்டு நாம் ஆர்ப்பரித்ததும் அதே பால்யத்தில் தானே?So மாண்ட்ரேக் அதே வியப்பை அடுத்த தலைமுறைக்கு சிம்பிளான கதைகள் மூலம் pass on செய்கிறாரா? என்று பார்ப்போமே? கவனமாய் தேர்வு செய்த இரண்டு கதைகளையே இதற்கென shortlist செய்துள்ளோம்! Finger crossed- இவையுமே GEN Z-க்கு மெருகூட்டுமென்று!

Of course மாண்ட்ரேக் கதைகளின் க்ளாஸிக் ரசிகர்கள் கண்சிவக்கக் கூடும் தான் - எங்காளை இப்படி குழந்தைகள் ரேஞ்சுக்கு இட்டுப் போயிட்டியே படுபாவின்னு?! But மற்ற நாயகர்களிடம் இல்லாத சில ப்ளஸ்கள் நமது மாயாஜால மன்னரிடம் இருப்பதால் மட்டுமே அவரைத் தேர்வு செய்துள்ளேன் என்பதை சற்றைக்கெல்லாம் புரிந்து கொள்வார்களென்ற நம்பிக்கை எனக்குள்ளது!



So இது தான் GEN Z திட்டமிடல்! இதற்கும் சந்தா செலுத்தும் பட்சத்தில்:

*ஒவ்வொரு மாதமும் உங்களது கூரியர் டப்பிகளுக்குள் பிள்ளைகளுக்கான GEN Z இதழ்கள், சின்னதொரு கவரில் வைக்கப்பட்டு அவர்களது பெயர் போட்டே பயணமாகிடும்!

*So ஒவ்வொரு மாதமும் உங்களது கூரியர் புக்ஸ்களைப் பார்க்க டப்பிகளைப் பிரிக்கிறீர்களோ- இல்லையோ- பசங்களுக்காகப் பிரிக்க வேண்டி வரும்! Or maybe மொத்தத்தையும் அவர்களே பிரித்து விட்டு உங்கள் ஐட்டங்களை வைத்து விட்டுப் போகவும் கூடும் !

*மாதம்தோறும் பிள்ளைகள்  தமிழில் வாசிப்பதை நாம் ரசிக்கவும், காமிக்ஸ்களின் flavor-களை சிறுகச் சிறுக உணர்ந்திடச் செய்யவும் இந்தப் புது முயற்சி உதவினால் சூப்பர்! ஏற்கனவே "கதை சொல்லும் காமிக்ஸ்" என்று முயற்சித்தோம் தான் - ஆனால் அவற்றை நம்ம வளர்ந்த குழந்தைகளே பிரதானமாய் கையில் எடுக்க நேர்ந்ததால் didn't quite take off !! இந்தவாட்டி பார்ப்போமே ?

*For a change பிள்ளைகள் படித்துவிட்டு நமக்குக் கதை சொல்லட்டுமே- அந்த சந்தோஷத்தையும் அனுபவித்து தான் பார்ப்போமே?

அப்புறம் GEN Z-ன் target audience நீங்கள் அல்ல எனும் போது, இதுக்கோசரம் அலசல்களில்  மெனக்கெட வாணாமே ப்ளீஸ்? பிள்ளைகளின் கருத்தறிவதற்காக ஒரு பிரத்தியேக Insta பக்கத்தைத் துவக்கி, அவர்களோடு நேரடியாய் interact செய்திட விழைவோம்! So 'இதில் உப்பு கம்மி, இங்கே காரம் தூக்கல்; இந்தாள் டுப்பாக்கியே தூக்க மாட்டேன்கிறானே? இந்தப் பாப்பா ஏன் ஹோம்ஒர்க் பண்ணலை?'' என்ற ரீதியிலான விசனங்களின்றி, இதனை பிள்ளைகளின் களமாக்கிடுவோமே? 

And yes, of course  -Tom & Jerry போடலாமே? டிஸ்னி கதைகளைப் போடலாமே? Scooby Doo ?? என்ற ரீதியிலான மகா ரோசனைகள் இங்கே கிட்டிடும் என்பதையும் யூகிக்க முடிகிறது! ஆனால், அந்த அமெரிக்க ஜாம்பவான்களை நமது துக்கடா சர்குலேஷன்களோடு எட்டிப் பிடிக்க வாய்ப்பில்ல ராஜா ! என்பதே bottomline !! இதோ - "ஜட்டி போட்ட ஓநாய்'' தொடருக்கான உரிமைகளைப் பெற்றிடவே நான் July முதலாய் உருளும் உருளு என்னவென்பதை நான் மட்டுமே அறிவேன்! ட்ரம்பாரின் தேசத்தில் பல தருணங்களில் நம்பர்களே முன்னுரிமை பெற்றிடுகின்றன! சமீபத்தில் கூட ஒரு டிடெக்டிவ் தொடருக்கு உரிமைகள் கோரி ஒரு பெரிய அமெரிக்கப் பதிப்பகத்திடம் முட்டி, மோதிப் பார்த்தாச்சு - "ப்ச்ச்.. எங்க டைரக்டர்கள் சம்மதிக்க மாட்டேன்கிறாங்க!!'' என்று கையை விரித்து விட்டார்கள்! இத்தனைக்கும் நாம் தந்திருந்த offer நமது சக்திகளுக்கு மீறியது! So சாத்தியமாகிடும் junior களங்களைக் கொண்டு முயற்சியினைத் துவக்கியுள்ளோம்! இந்த முயற்சி ஹிட்டாகிடும் பட்சத்தில் we'll definitely grow on the way! That's a promise!

ரைட்டு.. இப்போவே கேரா இருந்தாலும், ஒரே மட்டில் மீதப் பகுதியையும் எழுதி விடுகிறேனே! 

சோதியமும் ஞானே.. உத்தரமும் ஞானே..!

1.டைலன் டாக் எங்கேப்பா போனாரு ?? அவருக்கு என் ஸ்லாட் இல்லே ?? தலீவரோட வேப்பிலைப் போராட்டத்த பாக்கணும்னு ஆசையா ??

சமீப ஆண்டுகளில் டைலனின் graph உசக்கே ஏறிக் கொண்டிருப்பதை மறுக்கவே இயலாது! அதவும் கலரில் வந்த டைலன் சிறுகதைகள் புத்தகவிழாக்களில் பசங்களது favorite! And ஹாரர் கதைகள் கேட்டு வரும் புது வாசர்களுக்கும் டைலன் அடைக்கலம் தந்துவிடுகிறார் என்பதால், டைலனுக்கு ஒரு slot confirm. ஆனால் நடப்பாண்டில் சேலம் புத்தக விழா ஸ்பெஷலாக கலர் டைலனின் THE GOOD , THE BAD & THE UGLY வருவதாகத் திட்டமிடல் இருந்தது ! So அதெற்கென அட்டைப்படமெல்லாம் அச்சிட்டாச்சு ! பச்சே, "சாம்பலின் சங்கீதம்" சேலத்துக்கு ரிலீஸ் ஆகிடக்கூடும் எனும் போது டைலனின் அந்தத் கலர் ஆல்பமானது சென்னைப் புத்தக விழா'26 ஸ்பெஷல்களின் கூட்டணியில் ஐக்கியமாகிறது ! ஆக, ரெகுலர் அட்டவணையில் இடம் ஒதுக்காட்டியுமே, ஜனவரி 26-ல் நம்ம அமானுஷ்யத் துப்பறிவாளர் பிரெஷாக ஆஜராகியிருப்பார் !   

2. புதுசாய் ஒரு தொடர் கலரில் வருது.. பாகம் பாகமாய்! "தங்கத் தடம்.. செப்புக் குடம்னு'' எங்களை பெயர் வைக்கக் கூட கேட்டியே நைனா..? அது எங்கே காணோம்?

வேற ஒண்ணுமில்லீங்க சேட்டா... படைப்பாளிகள் முதல் மூன்று பாகங்களை சீரான இடைவெளிகளில் வெளியிட்ட பிற்பாடு, ஐரோப்பிய சம்மரில் சற்றே ப்ரேக் விட்டுள்ளனர்! So இன்னும் கொஞ்சமாய் அவர்கள் ஆல்பங்களை ரிலீஸ் பண்ணும் வரைக் காத்திருந்துவிட்டு, அப்புறமாய் தொற்றிக் கொள்ளலாமே என்று நினைனத்தேன்! உரிமைகள் வாங்கியாச்சு; but இங்கே ரொம்ப ஆறப் போடும் அவசியங்களின்றி பாகங்கள் ஒரு சீராய் ரெடியாகிடட்டுமே  என்பதற்காக மட்டுமே வெயிட்டிங்!

3.விஷம்?

Ms.P.சுகன்யா நிதானமாய் பேனா பிடித்து வர, அத்தியாயம் 4 முற்றுப் பெறும் தருவாயில் உள்ளது! இன்னும் ஒரு அத்தியாயம் அதன் பின்னே உள்ளது ! மொத்தமாய் முடித்த பிற்பாடு ; "சாம்பலி­ன் சங்கீதம்'' ரிலீஸும் பூர்த்தி கண்ட பிற்பாடு Project விஷம் தான் அடுத்து!

4..வாட்சப் கம்யூனிட்டியில் ஒண்ண கேட்கிறே.. நாங்களும்  ஒரு பதிலை சொல்லுறோம்.. நீயோ மூணாவதா ஒரு காரியத்தைப் பண்ணி வைக்கிறே? லூசாப்பா நீ?

அது ஒண்ணுமில்லீங்கணா... நவராத்திரிக்கு கொலு பொம்மைகளை வாங்க கடைக்குப் போறப்போ- மொத்தமா பார்க்கிறச்சே, "அட.. இது சூப்பரா கீதே?!'' என்று வாங்கியாந்திடறோம்! ஆனால், வீட்டாண்ட வந்து மற்ற பொம்மைகளோட சேர்த்து அடுக்கிப் பார்க்கிறப்போ, ஏதோ லைட்டா குறை இருப்பது போல் தெரிஞ்சா, புது பொம்மையாவே இருந்தாலுமே, அதைப் பின்வரிசையிலே அடுக்குறது உண்டு தானே? This is just about the same! தனியாய்- ஒற்றை இதழ் பற்றியோ; ஒற்றை நாயகர் பற்றியோ one-off கேள்வியாக எழுப்பும் போது, நீங்களும் in good faith பதில் சொல்லுகிறீர்கள்! அதன்படி நானுமே ஒரு draft அட்டவணை போட்டுப் பார்க்கத் தான் செய்கிறேன்! But ஒட்டுமொத்த package-ஆகப் பார்க்கும் போது, ஏதேதோ காரணங்களால் சில தீர்மானங்களை மாற்றியமைக்க அவசியமாகிப் போகின்றன! So அண்டர்டேக்கருக்குப் பதிலாக ஸ்டெர்ன்; பௌன்சருக்குப் பதிலாக இளம் டைகர்; என்ற ரீதியில் சில decisions! Sorry folks !!

5. இந்த வருஷமும் கார்ட்டூனுக்கு அரோகரா தானா?

நான் என்ன தான் பண்ணுவேன் guys ? ரொம்பக் குழந்தைத்தனம் என்று பென்னி, ஸ்மர்ஃப், ­லியனார்டோ தாத்தாவை ஓரம் கட்டினோம்! ரைட்டு.. சற்றே mature களத்தில் மேக் & ஜாக்கை கூட்டியாந்தோம்! ஊஹும்.. இது 1920-ல் நடக்கிற அரதப் பழசா கீதே என்றீர்கள்! விடாப்பிடியாய் சமகால டிடெக்டிவ்ஸ் ஸ்பூன் & ஒயிட்டை இழுத்து வந்தோம்! But பிடரியோடு போட்டு அவர்களையும் மூட்டை கட்டச் சொல்லிவிட்டீர்கள்! So இருக்கும் மூன்று சிரிப்புப் பார்ட்டீஸோடு முடித்துக் கொள்ள வேண்டியது தான் போலும்; மேற்கொண்டு இந்த ஜான்ராவுக்கென வலைவீசித் தேட திராணி நஹி!

On the flipside - ஜூனியர்களுக்கென நாம் முயற்சிக்க எண்ணியுள்ள நாயகர்கள் (மாண்ட்ரேக் நீங்கலாக) கார்ட்டூன் பார்ட்டீஸ் தான் ! So அங்கே க்ளிக் ஆகிடும் பட்சத்தில் நமது கார்ட்டூன் strength சற்றே மேம்படலாம் !!

அப்டின்னு எழுதிட்டு இங்கேயும் பேனாவைக் கீழே சித்தே கிடத்தினேன் !! விடாமுயற்சியாய் கார்ட்டூனுக்குக் கொடி பிடித்து வரும் நண்பர்களின் அலுத்துப் போன முகங்கள் மனக்கண்ணில் வந்து வந்து போயின ! அதுவும் துளி கூட அயர்ச்சியைக் காட்டிக் கொள்ளாது தொடர்ந்து கார்ட்டூனுக்கென கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டே இருக்கும் நண்பர் சங்கர் செல்லப்பனை ஒரு கணம் நினைத்துப் பார்த்த போது மனசு கேட்கலை !! ரைட்டு...சந்தாவில் போட்டா தானே மக்களின் பெரும்பான்மை சிரிப்புப் பார்ட்டிகளை reject என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுறாங்கோ ? மாறாக - ஏதேனுமொரு புத்தக விழா ஸ்பெஷலாகப் போட்டால் யாருக்கும் நோவுகள் லேது தானே ? என்று பட்டது ! சரி, அந்த புத்தக விழா ஸ்பெஷல் ஜனவரியின் சென்னையாகவே இருந்துப்புட்டா இன்னும் சுளுவாச்சே ? என்ற ரீதியில் சக்கரங்கள் மண்டைக்குள் சுழன்றன !! அப்புறமென்ன ? அறிமுகம் காண்கிறார் ஒரு வித்தியாசமான சிரிப்புப் பார்ட்டி : பால்கனி ரோமியோ !! இந்த மனுஷனின் ஆயுட்கால லட்சியமே எதிர்வீட்டில் குடியிருக்கும் தனது லவ்ஸ் ஜூலியட்டின் நைனாவையும் மீறி அம்மணியின் உதட்டில் ஒரு உம்மாச்சியைப் பதிப்பதே !! இது நெடுங்கதை அல்ல ; சிற்சிறு சிரிப்புத் தோரணங்களே ! ஆனால் ஜாலியாய் ; படிக்க செம smooth ஆக உள்ளன ! So இந்த விடாமுயற்சிக் காதலன் ஜனவரி '26 -ல் ஆஜராகிடுவார் !! ஹேப்பியா கார்ட்டூன் காதலர்களே ?

And இந்த ரெண்டில் ஏதேனும் ஒரு தலைப்பை மட்டும் செலெக்ட் பண்ணுங்களேன் - ப்ளீஸ் ?

"ரிஸ்க் எடுப்பான் ரோமியோ"

or 

"லட்சியமே லிப்லாக்" 

கூடுதலாய் ஒரு தகவலுமே : இனி வரும் ஒவ்வொரு சென்னைப் புத்தக விழாவிலும், ஏதேனுமொரு கார்ட்டூன் நாயகர் இடம் பிடித்திடுவார் ! ரெகுலர் தடத்திலிருந்து கல்தா தரப்பட்டவராகவே இருந்தாலும், Book fair ஸ்பெஷல் கோட்டாவில் அவர் உட்புகுந்திடுவார் ! 

6.XIII எங்கேப்பா- காணோம்?

ஏற்கனவே சொல்­லியுள்ள விஷயம் தான் ; XIII தொடரின் பிற்பகுதியிலாவது மொழிபெயர்ப்பு சார்ந்த பிழைகளின்றி வண்டியை ஓட்ட விழைகிறேன்! துவக்க ஆல்பங்களில் French to இங்கிலீஷில் சில பிழைகளும், கதையின் ஓட்டத்தை / இங்கிலீஷ் ஸ்க்ரிப்டை சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால் தமிழாக்கத்தில் சில பிழைகளும் புகுந்திருப்பதை மறுக்க மாட்டேன்! இரண்டாம் சுற்றிலாவது இது போலான பிசகுகள் நேரலாகாதே என்று ரொம்பவே மெனெக்கெட்டு வருகிறோம் ! And அதற்கென எனக்கு உதவிடுவது Cinebook-ன் ஆங்கிலப் பதிப்புகள் தான்! XIII தொடரை மட்டுமாவது Cinebook-ன் வாலைப் பிடித்தபடியே கையாள்வதே சாலச் சிறந்ததென்று சில வருஷங்களாகவே கருதி வருகிறேன்! அதற்கேற்ப XIII தொடரின் லேட்டஸ்ட் ஆல்பமான # 27-ஐ Cinebook நடப்பாண்டின் இறுதியில் தான் வெளியிடவுள்ளனர் ! So அந்த english ஸ்க்ரிப்ட் புத்தாண்டில் தான் நமக்குக் கைக்கு வந்து சேரும் ஆகையால், 2027-ல் அத்தியாயம் 27 என்று தீர்மானித்தேன்!

7.வேதாளரைக் காணோம்?

க்ளாஸிக் நாயகர்களை ரெகுலர் தடத்தினில் இனி கொணரப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளோம்! அவர்களுக்கென ஒரு தீவிர வட்டம் இருந்தாலும், ரெகுலர் தட வருகைகளால் தேவையற்ற விசனங்களையும், விமர்சனங்களையும் சந்திக்க நேர்கிறது! So தனித்தடம்; புத்தகவிழா ஸ்பெஷல்ஸ் என்ற ஸ்லாட்களே இனி க்ளாஸிக் பார்ட்டீஸின் ஜாகைகளாக இருந்திடும்! Ditto for reprints too !!

8.தாத்தாக்களை இந்தவாட்டியும் காணோமே?

தாத்தாக்களின் ஆல்பம்  # 5 மட்டுமன்றி, மேகி கேரிஸனின் இறுதி ஆல்பமும் கைவசம் ரெடி! So 2026 மே மாதத்தினில் இருவரையுமே for sure எதிர்பார்க்கலாம் folks - ஆன்லைன் மேளாவினில்! முழுக்கவே crisp வாசிப்புகள் & அழுத்தம் தரா கதைக்களங்கள் என ரெகுலர் தட புக்ஸ் இருந்திடவுள்ளன எனும் போது, heavy ஆன தாத்தாக்களை இங்கே உட்புகுத்தத் தோன்றவில்லை!

9.FATHER'S DAY ஸ்பெஷல் 2025-ல் வந்துச்சு! 2026-ல் கெடயாதா?

உறவுகளை சிறப்பிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் இனி தொடர்ந்திடும்! இம்முறை வேறொரு உறவை! அழகாயொரு கதையும் ரெடி... திட்டமிடலும் ரெடி...! உரிய சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்!

10.புதுசா வேற என்னவும் வெயிட்டிங்கா?

இன்னும் இரண்டு ஆக்ஷன் தொடர்களுக்குத் துண்டை விரிச்சு வைத்து மாதங்கள் இரண்டாச்சு! அவர்கள் எப்போதுமே சாவகாசமாய் பதில் சொல்லும் பழக்கம் கொண்டோர் என்பதால் இப்போது வரைக்கும் அதனில் முன்னேற்றமில்லை! And தோர்கல் Saga கதையினை நுழைப்பதென்று கடைசி நிமிடத்தில் தீர்மானித்த பிற்பாடு, புதியவர்களுக்கான பட்ஜெட்டும் அடிவாங்கி விட்டது! So அவசரப்படுத்த வாணாம்; அவர்களாகவே சொல்லட்டுமென்று சற்றே ஃப்ரீயாக விட்டுவிட்டேன்! Maybe 2027-ன் புதுவரவுப் பட்டியலி­ல் அவர்கள் இடம்பிடிக்கக் கூடும்!

11.SODA ; கமான்சே; Lady S......all பூட்ட கேஸ்கள் தானா?

கமான்சே ஒருவருக்கு மட்டும் கணிசமாகவே வாய்ப்புகள் தந்திருந்தோம் தான் ; அப்புறமும் சோபிக்கவில்லை என்ற போது, ஒதுங்கிக் கொண்டோம்! ஆனால், SODA & Lady S தலா மூன்றோ- நான்கோ வாய்ப்புகளோடு பரணுக்குப் பார்சலாகிவிட்டனர்! இவர்களாவது தேவலாம் போலும்- இதோ ஸ்பூன் & ஒயிட் இரண்டே ஆல்பங்களோடு pack up! இன்றைய ரீல்ஸ் & ஷார்ட்ஸ் லோகத்தில்- வந்தால் முதற்பந்திலி­ருந்தே அபிஷேக் ஷர்மாவைப் போல சிக்ஸர் அடித்தாக வேணும் போலும் ! நாலு பந்துக்குக் கட்டையைப் போட்டுவிட்டு ஆடலாமென்று எண்ணுவோருக்கு வாசல் கதவு நொடியில் காட்டப்படுகிறது! துரதிர்ஷ்டவசமான நிஜம் இது தான்! Add ஏஜெண்ட் சிஸ்கோ; CIA ஏஜெண்ட் ஆல்ஃபா to the list!!

ரைட்டு.. இதுக்கு மேலும் நான் எழுதிக் கொண்டே போனால் நீங்கள் பாவம்!! So கிட்டத்தட்ட 5 மாதங்களாய் மண்டைக்குள் போட்ட அசைகளை "ஏக் தம்மில்'' இறக்கி வைத்த திருப்தியில் நடையைக் கட்டுகிறேன்! Of course - கொத்தனார் கட்டும் மச்சி வீடு கூட அவருக்கு தாஜ் மஹாலாகவும்,புர்ஜ் கலீபாவாகவும் தெரியும் தான்! And அடியேனும் no different! "பின்னிட்டேடா மாப்ள..'' என்று எனக்கு நானே சால்வை போர்த்திக் கொண்டிருக்கும் நொடியில், பதம் தப்பிய மைசூர்பாகை வாயில் போட்டுவிட்டு முழிக்கும் நிலையில் நீங்கள் இருக்கலாம் என்பதும் புரியாதில்லை! எது எப்படியோ- டெம்போல்லாம் வச்சுக் கடத்திப் பண்ணியுள்ள மைசூர்பா இது..! பார்த்து நல்லதா ஒரு தீர்ப்பைச் சொல்­லிப் போடுங்க நாட்டாமைஸ் !

கிளம்பும் முன்பாய் இங்கு எனது வியப்பினையும்  பகிர்ந்து கொள்கிறேனே folks ? என்றோ ஒரு பால்ய வயதில் துவங்கிய பொம்ம புக் நேசம் தான் !! நடுவாக்கில் நாம கடையை மூடி விட்டுக் கிளம்பிய சமயங்களில் அந்த நேசம் வீரியமானதொரு தேடலாய் உருமாறி இருந்தது தான் ! And மறுவருகைக்குப் பின்பாய், புதுசாய் ஒரு பரிமாணத்தில் நமது இதழ்களையும், புதுப் புது வரவுகளையும் கண்டு களிப்புற்று ஆர்ப்பரித்ததும் மெய்யே ! But கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் into the second innings - நம் அனைவருக்குமே அகவைகளும், குடும்பப் பொறுப்புகளும், ஓட்டங்களும் கூடிப் போயிருப்பதில் no secrets too ! And இந்தக் கடைசிப் பத்தாண்டுகளில் நம்மைச் சுற்றி நிற்கும் பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் ஓராயிரம் மடங்கு விஸ்வரூபமெடுத்திருப்பதும் யதார்த்தம் ! Yet - இந்த அட்டவணை ரிலீஸை ஒரு தேர் திருவிழா போல் கொண்டாடிடும் உங்களின்  உற்சாகங்களையும், உத்வேகங்களையும் பார்க்கும் போது மெய்யாலுமே வயிற்றில் பட்டாம்பூச்சிகள்  நடனம் ஆடுவது போலுள்ளது folks !! இதனில் பங்கேற்கும் யாருமே, பொழுதுபோக்குக்கு மார்க்கங்கள் தேடிடும் பாலகர்களும் நஹி ! ஒவ்வொருத்தருமே வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் பிஸியாய் இருப்போர் & வெளியாகும் புக்ஸ்களை முழுமையாய் வாசிக்கவே நேரத்தைத் தேடி நிற்போரே !! ஆனால் இன்னமும் இந்த நொடியினைக் கொண்டாடிட நீங்கள் காட்டி வரும் அசாத்திய ஆர்வங்கள் simply mind blowing folks !! அதற்கொரு பெரும் நன்றி சொல்லாது நான் கடந்து போகிடவே முடியாது !!

ரைட்டு... நன்றி சொல்லும் படலத்தினை அப்படியே ஆழப்படுத்திடுவோமா ?ஒரு நெடும் பயணத்தின் லேட்டஸ்ட் அத்தியாயத்தினை உங்கள் முன் சமர்ப்பிக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்குப் பெரும் தேவன் மனிடோவுக்கு நமது நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக! அப்புறம் வத்தலாகவோ, தொற்றலாகவோ - உங்கள் வீட்டுப் பிள்ளை சுவற்றில் வரைந்து வைக்கும் சித்திரங்களை புன்னகையோடு பாராட்டும் அதே பெருந்தன்மையோடு சற்றும் அன்பு குறையா வாசகர்களாய் தொடர்ந்திடும் உங்கள் ஒவ்வொருவருக்குமே எங்களது ஆயுட்கால நன்றிகளும், வணக்கங்களும் உரித்தாகட்டும்! You have been a dream audience all along the way folks...and you never cease to amaze me ! 

இதோ- நான்கு நாட்களுக்கு முன்னே சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ராத்திரி 11.30க்கு ஊருக்குத் திரும்ப ரயிலைப் பிடிக்க கொட்டாவியோடு நின்று கொண்டிருந்த கணத்தில் "விஜயன் சார்!'' என்றபடியே வந்து கையைப் பிடித்துக் கொண்ட மதுரை வக்கீல் நண்பரின் முகத்திலும், பேச்சிலும் இழையோடிய கலப்படமில்லா நேசத்தை உணர முடிந்த போது, உள்ளுக்குள் லைட்டாக அடைத்தது! நண்பர்களை அடையாளம் தெரியாமல் நான் பேந்தப் பேந்த முழிப்பதும், அவர்கள் என்னை இனம் கண்டு நட்புப் பாராட்டுவதும் இது முதல் முறையே அல்ல தான்! Yet ஒவ்வொரு முறையும் உணர முடிகின்ற அந்த அன்பும், வாஞ்சையும் எனது ஆயுட்கால வரங்கள் என்பேன்! Truly Blessed & இந்த வரங்களுக்கு அருகதையுடையவனாய்த் தொடர்ந்திட ஆண்டவன் அருள்புரிவாராக! 

ஒரு பெரும் பரீட்சை எழுதி முடித்த கையோடு, நடையைக் கட்டுகிறேன் !! வாங்கப் போகும் மார்க்குகள் எவ்வளவோ ? என்றறிய நெஞ்சம் அடிச்சிங்ஸ் !! And of course - மார்க் போடுவது மாத்திரமன்றி, இந்தப் பயணத்தினை சாத்தியமாக்கி வரும் சந்தாக்கள் எனும் உந்துகோல்களை எப்போதும் போலவே ஆர்வமாய், அரவாரமாய் நல்கிடக் கோரி கரம் கூப்பி நிற்கிறோம் !! Please do chip in folks !! 

Bye all.. See you around! Have a great weekend....!! 


Questions பின்குறிப்பு:

1.பதிவை "ஏக் தம்மில்'' வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ?

2.பதிவைப் படித்து முடித்த முதல் நொடியில் உங்கள் ரியாக்ஷன் என்னவோ?

a) Oh wow b) Good job c) Ok job

3. பதிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

4.On a scale of ten - இந்த அட்டவணைக்கு நீங்கள் போடக் கூடிய மார்க்குகள் என்னவோ folks?

5.அலசல்களுக்குள் புகும் முன்பாய் ஒற்றை வார்த்தையில் ஒரு summary ப்ளீஸ்?

123 comments:

  1. ஒற்றை நொடி, ஒற்றை தோட்டா...

    ReplyDelete
  2. இனிய வணக்கம் சார் 🌹

    ReplyDelete
  3. பத்துக்குள்ளாற...

    ReplyDelete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. ஆஹா... ஒஹோ...


    பேஷ்... பேஷ்.... பேஷ்.

    ReplyDelete
  6. சந்தாவும் கட்டிப்புட்டேனுங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. நானும் பேமிலி சந்தா கட்டிவிட்டேன்

      Delete
    2. சூப்பர் சூப்பர் சார்.

      Delete
  7. வெளியே வேலையாக வந்தேன், வீட்டுக்கு சென்ற பிறகு பொறுமையாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. ஆசிரியரே சிறப்பான அட்டவணையைத் தந்துள்ளீர்கள்.இது முதல் பார்வையிலேயே புரிகிறது.

    உங்கள் மெனக்கெடல் புரிகிறது.

    அட்டவணையை போட்டு முடிக்கும் போது தலையில் கேசத்திற்கு சேதாரம் ஏற்பட்டிருக்குமே.

    ReplyDelete
  9. வேலையாக இருக்கிறேன்.. ரூமிற்கு வந்தப் பின் ரசித்து ருசித்து சுவைத்தபின் கலந்துரையாட வருகிறேன்... ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தான் எனது இனிய நாள். நமது பிளாக்கில்❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  10. 1.30 minutes 2.Wow 3.Yes 4.10 mark 5.Ilamai Puthumai arumai

    ReplyDelete
  11. படிக்க எடுத்த கொண்ட நேரம் 35 நிமிடங்கள்
    மறுக்கா நிதானமா படிக்கனும்

    ReplyDelete
  12. 2) Amazed
    நாங்கள் யூகிக்காததை அட்டவணையாக தருபவதில் என்றேன்றுமே நீங்க டாப்

    ReplyDelete
  13. படிக்கும் முன்னே எனது ரியாக்ஷன் “ Oh wow”. நீங்கள் எப்போதும் சிறந்ததையே தரும் சிறந்த காமிக்ஸ் ரசிகர் சார் நீங்கள்.

    ReplyDelete
  14. தோர்கல் மீள் வருகை மிகப்பெரிய ஆச்சரியம். 👏👏😁😁

    ReplyDelete
  15. 2) Oh wow!

    3) பதிவு அருமை. எதிர் பார்க்காத சில கதைகள் வர இருக்கிறது.

    4) 9/10.

    ஒரு சிலர் எதிர்த்ததற்க்காக ஸ்பூன் & ஒயிட் கை விடப்பட்டது பெரிய ஏமாற்றம்க்ஷ

    ReplyDelete
    Replies
    1. இங்கே இருக்கிறதே "ஒரு சிலர்" தான் என்பதை மறந்துட்டீங்களோ நண்பரே?!

      Delete
  16. 46 நிமிடங்கள்

    மீதி கேள்விகளுக்கு பதில்களை அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.. நாளை சாவகாசமாக சொல்கிறேன் சார்.

    Special thanks for Magi Garrison sir

    ReplyDelete
  17. மேலிருந்து கீழாக படம் பார்க்க மட்டும் 8 நிமிடங்கள் ஆனது.

    முதல் பார்வையில் அனைத்தும் அருமை!

    லயன் மினி அட்டகாச ஆரம்பம்.

    ப்ளூகோட் மறு வருகைக்கு நன்றி!

    அலிபாபா அல்லது சிந்துபாத் வரும் என எதிர்பார்த்தேன். லயன் மினியில் இவற்றை முயற்சிக்கலாம்.

    இரவு முழுவதும் படித்துவிட்டு எவ்வளவு நேரம் ஆனது என்று சொல்கிறேன்.

    ReplyDelete
  18. Replies
    1. 3) . பதிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
      Yes

      4.On a scale of ten - இந்த அட்டவணைக்கு நீங்கள் போடக் கூடிய மார்க்குகள் என்னவோ folks?

      8
      வருடா வருடம் திரும்ப திரும்ப பார்ப்பது இந்த அட்டவணை தான், கதை தலைப்பு, கதைகளுக்கான ஓரிரு சித்தீரங்கள், அந்த சித்திரங்கள் பேசிடும் கதைகள்
      அட்டவணைகள் மிக பிடித்த ஒன்று

      5.அலசல்களுக்குள் புகும் முன்பாய் ஒற்றை வார்த்தையில் ஒரு summary ப்ளீஸ்?

      புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்குங்க 😁😊

      Delete
  19. 1.பதிவை "ஏக் தம்மில்'' வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ?
    சரியாக 45 நிமிடங்கள்.

    2.பதிவைப் படித்து முடித்த முதல் நொடியில் உங்கள் ரியாக்ஷன் என்னவோ?

    a) Oh wow

    3. பதிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

    200% பூர்த்தி செய்தது

    4.On a scale of ten - இந்த அட்டவணைக்கு நீங்கள் போடக் கூடிய மார்க்குகள் என்னவோ folks?

    100/10

    5.அலசல்களுக்குள் புகும் முன்பாய் ஒற்றை வார்த்தையில் ஒரு summary ப்ளீஸ்?

    அட்டகாசம்

    ReplyDelete
  20. 1. 45 நிமிடங்கள் 👀
    2. Good job!💐
    3. யெஸ்!!😍😍
    4. 8/10😎
    5. காலத்திற்கேற்ற கச்சிதமான அட்டவணை!!🤝💐💐💐

    ReplyDelete
    Replies
    1. //காலத்திற்கேற்ற கச்சிதமான அட்டவணை!!🤝💐💐💐//

      +9

      Delete
  21. 😘Edi Sir🥰😘
    2026 Family Santha First Installment paid😘👍💐😄

    ReplyDelete
  22. வராது என்று நினைத்த தோர்கல் வருகிறது.

    வரும் என்று நினைத்த பெளன்ஸர் வரவில்லை.

    சத்திய சோதனைடா சரவணா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சகோ
      செம ட்விஸ்ட் வைத்து விட்டார்

      Delete
    2. தோர்கல் வந்திருப்பதற்கும், பௌன்சர் வராததற்கும் என் தரப்புக் காரணங்களை தெளிவாய் சொல்லியுள்ளேன் நண்பரே... அவற்றுள் ஏதேனும் பிசகாய் இருந்தால் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ்?

      Delete
  23. சார் அலுவலக வேலையாக வெளியில் இருக்கிறேன். வீட்டுக்கு வந்த பின் திரும்ப வருகிறேன்.

    I'm delighted with this அட்டவணை.

    Simply Superb Sir.

    ReplyDelete
  24. Bruce Hawker... செம்ம்ம்மமமம

    உங்களிடம் பல வருடங்களுக்கு முன்னர் இவரைப் பற்றிக் கேட்டுள்ளேன்... சமயம் கிடைக்கும் போது களம் இறக்கலாம் என்றீர்கள்...

    நன்றீஸ் பல பல...

    😍🌹🔥♥️

    ReplyDelete
    Replies
    1. வில்லியம் வான்ஸ் வாரே வா

      Delete
  25. ஜாக்கி போட்ட ஓநாய்!


    சிறுவர்களுக்காக தான் இவரை மெயினாக எதிர்பார்த்தேன்
    இவர் வருவதில் மிக்க மகிழ்ச்சி

    இவர் ஜெயித்திட வாழ்த்துகள்

    ReplyDelete
  26. // 1.பதிவை "ஏக் தம்மில்'' வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ? //
    01 மணி நேரம் 05 நிமிடங்கள் சார்...

    // 2.பதிவைப் படித்து முடித்த முதல் நொடியில் உங்கள் ரியாக்ஷன் என்னவோ? //

    a) Oh wow

    // 3. பதிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? //
    பெரும்பாலும் பூர்த்தி செய்தது சார்...

    // 4.On a scale of ten - இந்த அட்டவணைக்கு நீங்கள் போடக் கூடிய மார்க்குகள் என்னவோ folks? //
    95/100

    // 5.அலசல்களுக்குள் புகும் முன்பாய் ஒற்றை வார்த்தையில் ஒரு summary ப்ளீஸ்? //
    மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி...

    ReplyDelete
  27. Gen z
    இந்த புது முயற்சி மிக மிக அருமை சார்
    தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அருமை
    ❤❤❤❤❤

    ReplyDelete
  28. பதிவில் நுழைந்ததும் காமிக்ஸ்களின் போட்டோக்களை மட்டும் முதலில் பார்த்தேன்.
    மாடஸ்டி, மாண்ட்ரேக் எனும் எனது கிளாசிக் நாயக, நாயகி இருந்தது ஆறுதலித்தது.
    மற்றபடி, அப்புறம்தான் படிக்க முடியும்.

    ReplyDelete
  29. 1.பதிவை "ஏக் தம்மில்'' வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ?

    15 நிமிடங்கள்

    2.பதிவைப் படித்து முடித்த முதல் நொடியில் உங்கள் ரியாக்ஷன் என்னவோ?

    மகிழ்ச்சி

    a) Oh wow b) Good job c) Ok job

    Good job

    3. பதிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

    ஓரளவுக்கு. புத்தகத்திருவிழா ஸ்பெஷல்ஸ் யும் சேர்த்தா குதூகலம் ஆகிடும்னு நினைக்கிறேன் 😀

    4.On a scale of ten - இந்த அட்டவணைக்கு நீங்கள் போடக் கூடிய மார்க்குகள் என்னவோ folks?

    8

    5.அலசல்களுக்குள் புகும் முன்பாய் ஒற்றை வார்த்தையில் ஒரு summary ப்ளீஸ்?

    Balanced selections within budget constraints. Kudos

    ReplyDelete
  30. டெக்ஸ் வில்லர் தேர்வுகள் சூப்பர்
    மெபிஸ்டோ 🔥🔥🔥
    மோரிஸ்கோ 😊

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா 475 பக்க தீபாவளி தமாக்கா மொபிஸ்டோ

      Delete
  31. Question & Answer....
    1)சரியாக 1.15 நிமிடங்கள் பதிவை படிக்க...

    2) நிறைய ஆச்சரியம்+ மகிழ்ச்சி.
    கொஞ்சம் ஏமாற்றம்.
    But B) GOOD JOB.

    3)எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டது.

    4)100/100.

    ReplyDelete
    Replies
    1. பௌன்சர் லேது ; அண்டர்டேக்கர் நஹி, என்பது போலான இங்கி -பிங்கி சமாச்சாரங்கள் தவிர்த்து என்ன ஏமாற்றங்கள் என்று சொல்லுங்க பூனையாரே?

      Delete
  32. //காத்திரு நீ...கண்ணாளா...!!//


    🔥🔥🔥❤💛💙💚💜

    ReplyDelete
  33. 1.படிக்க 43நிமிடம். 2. Oh. Wow super sir. stern வருவது மிகப் பெரிய சந்தோசம் 3.எதிர் பார்ப்பை பூர்த்தி செய்தது 4.அட்டவணைக்கு மார்க் 10/க்கு 10

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க சார்.

      Delete

  34. வணக்கம் நண்பர்களே!

    6:11 க்கு ஆரம்பிச்சேன்... இன்னும் போயிட்டிருக்கு...

    தோர்கல் சாகா....

    ஹிப்... ஹிப்... ஹூர்ரே....!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா எதிர்பாராததை எதிர் பாருங்கள். செம்ம ஐசிங் ஆன் தி கேக்

      Delete
  35. // வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே!'' என இவர்களது அடுத்த அதிரடி களம் காணவுள்ளது- //
    இஷி தாத்தா தனி சாகஸமாங் சார்...

    ReplyDelete
  36. டின்டின்-மகிழ்ச்சி...

    மிஸ்டர்.நோ- மகிழ்ச்சி...

    ஸாகுவாரோ-மகிழ்ச்சி... (மேச்சிரியார் கலக்கவார்)

    ReplyDelete
  37. இப்போ எதையும் படிக்க போவதில்லை. வேலையை முடித்து விட்டு ஆர அமர மெதுவாய் ரசித்து ருசித்து படிக்க வேண்டும். எம்மாம் பெரிய பதிவு. Celebrations begins.

    ReplyDelete
  38. படிச்சு முடிச்சுட்டேன்... 7:05 கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்...

    சூப்பர் அட்டவணை..! 100%

    ஜென் ஜீ சந்தா செம்மையான பிளான்...

    ReplyDelete
  39. ஸ்டெர்ன்-மகிழ்ச்சி...
    ரூபின்+ டேங்கோ+ ரிப்போர்டர் ஜானி கூட்டணி-மகிழ்ச்சி...
    மர்ம மனிதன் மார்ட்டின்-மகிழ்ச்சி...
    லக்கி லூக்-மகிழ்ச்சி...
    ஸாகோர் & ஏஜெண்ட் ராபின்2.0-மகிழ்ச்சி...
    தோர்கல்-மகிழ்ச்சி...
    இளவரசி-மகிழ்ச்சி...
    மிஸ்டர்.நோ-மகிழ்ச்சி...
    ஸாகுவாரோ-மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. ஆக மொத்தம் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      Delete
  40. டெக்ஸ் சாகஸத்தில்,மோரிஸ்கோ,மெபிஸ்டோ,யமா வருவது மிக மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  41. இன்னும் படித்த பாடில்லை. இரவு சென்னை ரயிலை பிடித்து ஏறி படுத்து பின்னர் ஆசுவாசமாக படித்து ரசிக்க வேண்டும். ஆயிரம் குலோப் ஜாமூன்கள் ஆரவாரம் செய்யும் சத்தம் வாயில் மட்டுமல்ல காதிலும் இனிக்கிறது..

    ReplyDelete
  42. 1.லெப்டினெண்ட் ப்ரூஸ் J ஹாக்கர்,
    2.புதைகுழிப் பூக்கள்,
    3.ரெட் கன் புதிய வரவுகள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா கடல் கொள்ளையர், நமக்கு பிடித்த கௌபாய்கள்

      Delete
  43. தோர்கல் சாகா... சூப்பர்! நன்றிங்க சார்!

    டெக்ஸ் வித் மோரிஸ்கோ, ப்ளூகோட்ஸ், ஸ்டெர்ன் இதெல்லாம் நம்பவே முடியலை... எக்சைட்டட்...

    குட்டீஸ்களுக்கு தனிச்சந்தா....ஜென் ஜீ கலக்கல் ஐடியா!!

    SUPER FAN! அட்டகாசம்! சந்தாதாரர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ்!!

    ReplyDelete
  44. **** 😻😻😻😻😻****

    1. தோர்கலின் புதிய அவதாரம்!😻
    2. பத்து தல!! 😻🥰🥰🥰
    3. மூன்று தீபாவளி மலர்கள்!!😻😻
    4. புது வரவுகள் : ரெட் கன், ப்ருஸ் ஹாக்கர்!😻😻
    5. ஜென்-Z

    *** 😿😿😿😿😿*****

    1. மெயின் சந்தாவில் வெறும் 30 தே கதைகள்.😿
    2. திகில் கதைகள் நஹி ஹை!!😿
    3. Oneshot கி. நா க்கள் வெகு சொற்பம்! அல்லது கிட்டத்தட்ட இல்லை!😿
    4. ஒரே மாதிரியான தலைப்புகள்!
    'விதி எழுதிய வெள்ளை வரிகள்' ஐ தொடர்ந்து இப்போது இன்னும் இரண்டு 'விதி எழுதிய' தலைப்புகள்!!😰
    ஏற்கனவே 'விடை கொடு ஷானியா' இருக்கிறது! இப்போது 'விடை கொடு ஆரிஷியா!'😌
    'வதம் செய்வோம் வேங்கைகளே' யை தொடர்ந்து இப்போது 'வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே'!!! Why this ஒரே மாதிரி தலைப்புகள் எடிட்டர் சார்?🤔
    5. Gen-Z ல் மாண்ட்ரேக்கா?!!! 😰😰

    *** ரசிக்கச் செய்திடும் தலைப்புகள் ***
    1. கரையெல்லாம் கண்ணீரே!
    2. நகைக்கும் நரகம்!
    3. விடுமுறையில் விதி முடிப்போம்!
    4. நதி ஒன்று கரைகள் மூன்று!
    5. காத்திரு நீ கண்ணாளா!
    6. புதைகுழிப் பூக்கள்!
    7. கரை சேரா காவியம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... விதி தொடர்ச்சியா எழுதி வருது...

      Delete
    2. விடைகொடு ஆரிசியா...! இதுதான் அந்த கதைக்கான 100% பொருத்தமான தலைப்பு ஈ.வி!! படிச்சப்புறமா சொல்வீங்க...

      Delete
    3. 1.நடப்புச் சந்தாவில் எத்தினி ஒன் ஷாட் கி. நா. க்கள் உள்ளன இயவரசரே?

      2.நடப்புச் சந்தாவில் எத்தினி திகில் கதைகள் உள்ளன?

      கொஞ்சமா தேடிப் பாத்துச் சொல்லுங்களேன்?

      Delete
    4. யெஸ்!! பொருத்தமான தலைப்பாக இருக்கலாம் தான் SK ஜி! 👍

      கதை பொருத்தமாக இருந்தால் அடுத்த வருட அட்டவணையில் 'விடை கொடு வில்லி கார்வின்' னு ஒன்னு வந்தாலும் சரிதான்!😝

      Delete
    5. சார்..
      கி. நா க்கு தனி தடம்..
      திகிலுக்கு தனி தடம்.. னு கற்பனையில் கோட்டை கட்டி வச்சிருந்தோமே..
      கோட்டைய விடுங்க.. குடிசைய கூட காணோமே!!😰😒

      Delete
    6. //வதம் செய்வோம் வேங்கைகளே' யை தொடர்ந்து இப்போது 'வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே'!!! Why this ஒரே மாதிரி தலைப்புகள்?//

      ஒரு series க்கு ஒரே போலான பெயர்கள் இருப்பது ஒரு template ஆக செட் ஆகிடக் கூடும் என்ற அவாவில் தான்!

      Delete
  45. கேள்வியும் நானே....பதிலும் நானே
    😂😂😂😂😂

    இத்தனை வருட அனுபவத்தில் எப்படி எல்லாம எங்களிடம் இருந்து கேள்விகள் வரும் புரிந்து வைத்துள்ளீர்கள் சார் 😅😁

    ReplyDelete
    Replies
    1. ஆமா வாங்கிய அடி கொஞ்ச நஞ்சமா?

      Delete
  46. // The GEN Z சந்தா! //
    நல்ல யோசனை சார்,சிறப்பாய் நடந்தேறட்டும்...

    ReplyDelete
  47. நதி ஒன்று கரைகள் மூன்று!

    புதைகுழிப் பூக்கள்!

    வாரே... வாவ்!!

    ReplyDelete
  48. 2026 மொத்தச் சந்தாவிலேயே ஒரே ஒரு ஹார்ட் பைண்ட் இதழ் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருக்கு சார்,இருப்பினும் உங்கள் சூழல் புரிவதால் அதை வேறு வழி இல்லாமல் ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. சார்.... ஹார்ட் கவர் அவசியங்களுக்கு மாத்திரமே...!

      பைக்குள் இருக்கும் காசுக்கு வாரா வாரம் INOX -க்குப் படம் பார்க்கப் போகக் கட்டுபடி ஆகாதே சார்?!

      Delete
  49. 1, 45 நிமிடங்கள்,
    2, oh wow ,
    3, ஆம்,
    4, 100 / 100
    5 Super Sir🌟✨💐🌟🎆❤️🎉🥇🙏

    ReplyDelete
  50. இந்த சந்தாவில் வி காமிக்ஸ் 5 இதழ்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனவே சார்,அப்ப மீத இதழ்கள் ???!!!

    ReplyDelete
    Replies
    1. முத்து காமிக்ஸ் எத்தனை இருக்குன்னும் எண்ணிப் பார்த்துச் சொல்லுங்க சார்!

      Delete
  51. சரியாக 43 நிமிடங்கள் சார்...

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. மொழி பெயர்ப்பில் உதவி வரும் மேச்சேரி ஜமீனைய்யாவிற்க்கு வாழ்த்துக்கள்,&நன்றிகள்.

    ReplyDelete
  54. கதைகளின் தலைப்புகள் கவிதைகளாக பொழிகின்றன.

    ReplyDelete
  55. பத்துக்கு பத்து..

    மகிழ்ச்சி...

    ReplyDelete
  56. மற்ற இரு நாயகர்களுக்கு பதிலாக இளம் டைகர் வரவும் தோர்கல் வரவும் என இந்த ஒன்று மட்டுமே ஏமாற்றம் என்றாலும் தாங்களே அதற்கான காரணத்தையும் கூறி விட்டதால் அந்த ஏமாற்றம் மட்டுப்படுகிறது..

    மற்றபடி நூறு சதவீத திருப்தியான அட்டவணை...!

    ReplyDelete
  57. லட்சியமே லிப்லாக்..கார்ட்டூன் இதழுக்கு எனக்கு பிடித்த தலைப்பு சார்...

    ReplyDelete