Powered By Blogger

Monday, January 26, 2015

சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

நண்பர்களே,

வணக்கம். குடியரசு தின வாழ்த்துக்கள் ! விடுமுறை நாளான இன்று பௌன்சரின் அடுத்த ஆல்பத்தின் மொழிபெயர்ப்புக்கு நடுவே கொஞ்சமாய் இங்கே கரை ஒதுங்கியுள்ளேன் - சில பல உரத்த சிந்தனைகளோடு !  மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்த சில வேளைகளில் புலர்ந்த இந்தக் கேள்விகளுக்கு - நீங்கள் ஏதாவது ஒரு தினுசில் பதில் சொல்ல முயற்சித்திடலாமே ?   

மல்லாக்கக் கேள்வி # 1 : 

நேற்றைய பதிவிற்கான உங்களின் பின்னூட்டங்களில் கரை புரண்டோடும் உற்சாகத்தின் பாதிக் காரணம் மறுபதிப்புகள் பற்றிய அறிவிப்புகள் என்பதை மறுக்க இயலாது ! அட..என்ன தான் புதுக்கதைகள் ; புது பாணிகள் என்று நான் தொண்டை நரம்பு புடைக்க சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்று என்று ஆற்றி வந்தாலும் - பழசுக்குள்ள மவுசை துளியும் அடித்துக் கொள்ள முடிய மாட்டேன்கிறதே...! இது பற்றி வண்டி வண்டியாய்ப் பேசியும், எழுதியும்  விட்டோம் தான் ; ஆனாலும் இந்த தேவ இரகசியத்தின் சில சூட்சமங்கள் எனக்குப் பிடிபடவில்லை ! என் கேள்வி இது தான் :  ஒரு லார்கோ போன்ற டாப் தொடரில் "வேட்டை நகரம் வெனிஸ்" போன்ற சிறு சறுக்கல் நிகழ்ந்தால் கூட -  'அய்யே..இது ரொம்ப சுமார் ரகம் !' என்று முகம் சுளிக்கும் நாம் - "சாக்கடைப் புழுவே !" என்று ஆர்டினியின் பிட்டத்தில் உதை விடும் ஸ்பைடர் அண்ணாத்தையையும் ; உசிலம்பட்டிக்கும், ஓட்டஞ்சத்திரத்துக்கும் ஷண்டிங் அடிப்பது போல கோட்டையில் ஏறி காலப் பயணம் செய்யும் அண்ணார் ஆர்ச்சி அவர்களையும் நாம் வாஞ்சையோடு அரவணைப்பதன் மர்மம் தான் என்னவோ ? அந்த mindset மாற்றம் நிகழ்வது எவ்விதமோ ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!  

மல்லாக்கக் கேள்வி # 2 : 

"பால்யங்களின் நினைவூட்டல்" ; "வாடகை சைக்கிளில் ஏறி பின்னோக்கிய பயணம்" ; "பழசை அசை போடுவதன் சுகமே அலாதி"...போன்ற பதில்கள் கிட்டுமென எதிர்பாராது இல்லை தான் ; ஆனாலும் நம் இளம் வயதுகளின் carry overs நிறையவே இருக்கக் கூடும் தானே ?  ;  அவற்றின் மீதெல்லாம் வைக்காத அந்தப் பிரியத்தை காமிக்ஸ் மீது மட்டும் அழுத்தமாய்த் தொடரச் செய்வது எதனால் ?  சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

மல்லாக்கக் கேள்வி # 3 : 

நேற்றைய பால்யங்கள்...நேற்றைய காமிக்ஸ் வாசிப்புப் பழக்கங்கள்....!
இன்றைய வாலிப / வயோதிகங்கள்.ஆனால் தொடரும் அதே காமிக்ஸ் நேசம் ! சூப்பர் !! 

ஆனால் - 

இன்றோ நிலைமையே வேறு....! காமிக்ஸ் படிக்கும் பழக்கம் கொண்டோரின் சராசரி வயதுகள் 25+ என்று வைத்துக் கொள்ளலாமா ? So இந்தக் கால கட்டங்களில் காமிக்ஸ் படிக்கத் துவங்கும் இந்தப் புதுத் தலைமுறைக்கு இன்னுமொரு 20 /25 ஆண்டுகள் கழிந்த பின்னே நாம் கொண்டாடும் இது போன்ற காமிக்ஸ் nostalgia இருக்குமென்று நினைக்கிறீர்களா ? அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற காமிக்ஸ் சேகரிப்பு ஆர்வம்   ; உத்வேகம் எல்லாம் இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறதா     ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!

மல்லாக்கக் கேள்வி # 4 : 

உங்கள்  இல்லத்தில் உங்களைத்  தவிர காமிக்ஸ் படிக்கும் பழக்கம்  கொண்டோர் வேறு யாரேனும் உண்டா ? குறிப்பாக இளம் தலைமுறையினில் ? அல்லது நீங்களொரு டைனோசார் நகலா  - அழிந்து போகும் பிராணிகளின் வரிசையில் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க...!


மல்லாக்கக் கேள்வி # 5:

கலர் கலராய் உள்ளன...ஓகே . ! லார்கோ...ஷெல்டன்...பௌன்சர்.. கமான்சே என்று பெயரெல்லாம் இங்கிலீஷ் பட டைட்டில் போல மெர்சலாக உள்ளது..டபுள் ஒ.கே..! ஆர்ட் பேப்பரில் ; கனமான அட்டையோடு  வருவதால் இது லேசுக்குள் பாழாய்ப் போக வாய்ப்பில்லை - ட்ரிபிள் ஒ.கே. ! ஆனால் முன்பைப் போலில்லாது இன்றைக்கு காமிக்ஸ் மழையாகக் கொட்டுகிற போது - படித்த ஒரு கதையை மறு முறை புரட்டத் தோன்றுகிறதா ?   அட...மறு முறை என்ன மறு முறை..? முதல் முறையே எல்லா இதழ்களையும் படிக்கவாச்சும் நேரம் ஒதுக்க முடிகிறதா ? வெளிப்படையான பதில்கள் ப்ளீஸ் !  

மல்லாக்கக் கேள்வி # 6:

முத்தக் காட்சிகள் வந்தால் சூர்யகாந்திப் பூக்களை உரசவிடும் அந்தக் காலத்து தமிழ் சினிமா பாணியில் -கோஷாப் பெண்ணாய் இது காலம் வரை இருந்து வந்துள்ள நமது இதழ்களில் - இதழ் to  இதழ் சமாச்சாரங்கள் ஜஸ்ட் லைக் தட் அரங்கேறுகின்றன ! இப்போதெல்லாம் 'நச்' என்ற sound effect -ஐ எழுதுவது போலவே   "இச்"  என்றும் எழுத வேண்டியாகிறது ! இது கால  மாற்றத்தின் பிரதிபலிப்பென்று சுலபமாய் எடுத்துக் கொள்ள முடிகிறதா guys ? 

மல்லாக்கக் கேள்வி # 7:

சின்னதோ - பெரிதோ ; காமிக்ஸ் பற்றிய எண்ணப் பரிமாற்றங்களுக்கு இன்று ஆங்காங்கே குழுக்களாய் நண்பர்கள் இணைந்து வருவது கண்கூடு ! Watsup -ல் ; facebook -ல் ; இன்னும் பிற வலைப்பூக்களில் ; அப்புறம் ஒரே ஊரில் இருக்கும் நண்பர்களின் சந்திப்புகள் மார்க்கமாய் இந்த நட்புகள் தழைத்து வருவது நிதர்சனம் ! அந்த அளவளாவல்களின் போது - பழசைப் பற்றிய பேச்சே ஜாஸ்தியாக இருப்பது வாடிக்கையா ? அல்லது சமீபத்தைய இதழ்களுக்கும் முக்கியத்துவம் கிட்டிடுமா ? Just curious...!!!

மல்லாக்கக் கேள்வி # 8:

2012-க்குப் பின் வெளியாகியுள்ள இதழ்களுள் TOP 3 என்று சொல்வதாயின் எவற்றைத் தேர்வு செய்வீர்கள்  ?  And the BOTTOM 3 ?

மல்லாக்கக் கேள்வி # 9:

"இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா ??" என்ற புருவ உயர்த்தல்களை சந்திக்கும் தருணங்கள்  இன்னமும் உங்களுக்கு நிகழ்கின்றனவா ? வெளியிடங்களில் (தமிழ்) காமிக்ஸ் படிக்கும் "தைரியம்' கொண்டவரா நீங்கள் ? 

மல்லாக்கக் கேள்வி # 10:

Last but not the least : உங்கள் காமிக்ஸ் காதலால் வீட்டினுள் நீங்கள் சந்திக்கும் சங்கடங்கள் ஏதேனும் ? பண விரயம்; பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதில்லை என்ற ரீதியில் அர்ச்சனைகள் அரங்கேறுவது அடிக்கடி நிகழ்வுகளா ? அல்லது - உங்கள் ரசனைக்கு மதிப்பளித்து உங்களை சுதந்திரமாய்  (தண்ணீர் தெளித்து) விட்டு விடுகிறார்களா  ? 

உலகை உலுக்கப் போகும் இந்த வினாக்களுக்கு (.ஹி..ஹி...)  மனதில் தோன்றும் நிஜ அபிபிராயங்களைச் சொன்னால் விமர்சனங்களுக்கு ஆளாகலாம் என்ற தயக்கங்களின்றி - 'பளிச்' என பதில் சொல்லிடலாமே folks ?! Look forward to your answers !! Bye for now !!

Sunday, January 25, 2015

வந்துட்டார்யா...வந்துட்டார் !

நண்பர்களே,

வணக்கம். 30 ஆண்டுகளாய் தொலைத்ததொரு விஷயத்தைத் தேடித் திரியும் ஒரு பாவப்பட்ட ஜீவன் மறுவருகை தரும் வேளையிது ! Yes - மலங்க மலங்க விழித்து நிற்கும்  நண்பர் XIII -ன் entry -க்கான பில்டப் தான் இது என்பதை யூகிக்க பெரியதொரு விஷய ஞானம் அவசியமில்லை தான் ! இதோ பிப்ரவரியில் வரக் காத்திருக்கும் இரத்தப் படலம் பாகம் 22 & 23 இணைந்த நமது இதழின் அட்டைப்பட first look & உட்பக்க டீசர்கள் ! 

முன்னட்டையில் எழுத்தின் அளவிலும் (சற்றே சின்னதாக) ; பின்னட்டையில் படைப்பாளிகளின் பெயர் தாங்கிய copyright notice-ம் இணைக்கப் பெற்ற ராப்பரின் இறுதி வடிவ பைலை என்னிடம் தருவதற்குப் பதிலாய் - அதற்கு முந்தய version -ஐ என்னிடம் நம்மவர்கள் தந்துள்ளனர் ! So நீங்கள் இதழினில் பார்க்கப் போகும் ராப்பரில் குட்டிக் குட்டியான அந்த மாறுதல்கள் இருந்திடும் ! மற்றபடிக்கு அழகான 2 ஒரிஜினல் அட்டைப்படங்களையும் இம்மி கூட மாற்றமின்றி அப்படியே வழங்கியுள்ளோம் !  
அதே போல இந்த உட்பக்க டீசர்களில் எழுத்துக்கள் லேசாய் அடைந்து இருப்பது போல் தோன்றுவதன் காரணம் மொக்கையாக இருந்த ஒரிஜினல் டிஜிட்டல் பக்கங்களை நான் குட்டியாக்கிட பயன்படுத்திய சாப்ட்வேரின் புண்ணியமே - இதழில் ஸ்பஷ்டமாய் வாசிக்க இயலும் ! 

Software எனும் பேச்சிலிருக்கும் சமயத்திலேயே சமீபமாய் நேர்ந்துள்ளதொரு பிரச்சனையைப் பற்றியும் சொல்லிடுகிறேனே ! ஜனவரியின் மறுபதிப்பான "பெய்ரூட்டில் ஜானி" இதழில் கதை முழுமையிலும் 'லி' என்ற எழுத்து விடுபட்டுப் போயிருப்பதை பலரும் சுட்டிக் காட்டி இருந்தனர் ; நானும் கூட நமது proof reader விட்ட கோட்டை தான் அது என்று நினைத்திருந்தேன். ஆனால் 4 நாட்களுக்கு முன்பாய் நடந்த விஷயம் அந்த அபிப்ராயத்தை முற்றிலுமாய் மாற்றியது ! ஷெல்டனின் புதுக் கதைக்கான எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது கதையின் முதல் copy என்னிடம் வந்திருந்தது. வழக்கம் போல் பிழை திருத்தங்கள் , கடைசி நிமிட வசன மாற்றங்கள் இத்த்யாதிகளைச் செய்து விட்டு மீண்டும் நமது டைப்செட்டிங் பிரிவுக்கு அனுப்பியிருந்தேன். அந்த இறுதிக் கட்ட வசன சேர்க்கைகளை சரி பார்க்கும் பொருட்டு இரண்டாவது copy-யையும் வரவழைத்து இருந்தேன் - சமீப மாதங்களின் பழக்கத்துத் தொடர்ச்சியாய் ! அதனை வாசிக்கத் தொடங்கிய போது ஒற்றை இடத்தில் கூட 'லி' பதிவாகவே இல்லை என்பதை கவனித்த போது 'பகீரென்று' இருந்தது ! 'அட..கண்ணும் டொக்காகிப் போச்சா நமக்கு ?' என்ற கவலையோடு  அவசரமாய் முதல் பிரதியினை மீட்டெடுத்து சரி பார்த்தால் அதனில் எல்லா இடங்களிலுமே பிழையின்றி 'லி' வியாபித்து நிற்கின்றது ! இது என்ன புது வித விட்டலாச்சார்யா மர்மமாக உள்ளதே என்று நம்மவர்களை விசாரித்த போது தான் விஷயமே புரிந்தது ! தமிழில் வேலை செய்துள்ள பைல்களை Corel Draw 12 என்ற சாப்ட்வேர்-ஐ  பயன்படுத்தி  திறக்கும் சமயம் பிரச்சனையின்றி வண்டி ஓடி விடுகிறது ; ஆனால் Corel Draw Graphics Suite X 4 என்றதொரு மென்பொருளில் அதே பக்கத்தை ஓபன் பண்ணும் போது அத்தனை 'லி' க்களும் காற்றில் கரைந்து போய் விடுகின்றன !!  நம்மிடம் உள்ள 4 கம்பியூட்டர்களில் இரண்டில் இந்த X 4 சமீபமாய் ஏற்றப்பட்டு உள்ளது போலும் ! So சென்ற மாதத்து பெய்ரூட்டில் ஜானி பணி செய்யப்பட்டது CDR 12-ல் ; ஆனால் இறுதி வடிவம் save செய்யப்பட்டது இந்த X 4 மென்பொருளில் என்பதையும் ; கதை நெடுக  'லி' பஞ்சம் தலைவிரித்தாடியது இந்த சாப்ட்வேர் குளறுபடியின் காரணமாய் தான் என்பதையும் அப்புறம் தான் உணர முடிந்தது ! Sorry guys...and of course a sorry to our proof reader too ! 

கம்பியூட்டர்களைப் பொறுத்த வரை எனது ஞானம் பூஜ்யத்துக்கு வெகு அருகாமையில் என்பதால் நம்மவர்கள் விளக்கிச் சொன்ன போது 'பூம் பூம்' மாடு போல் தலையாட்டி விட்டு - அதில் எனக்குப் புரிந்ததை இங்கே எழுதியிருக்கிறேன் ! இதனை இன்னும் கொஞ்சம் அலசுவதை  இதனில் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் பொறுப்பில் விட்டு விடுவதே சாலச் சிறந்தது என்பது என் அபிப்பிராயம் ! என் பங்குக்கு இப்போதெல்லாம் அச்சுக்குத் தயாராகும் சமயங்களில் பேப்பரில் உள்ள வர்ணங்களைப் பார்ப்பதற்கு முன்பாய் எங்கேனும் 'லி' குடிகொண்டிருக்கும் சொற்கள் உள்ளனவா ? ; அவற்றில் திருவாளர் 'லி' ஆஜராகி நிற்கிறாரா ? என்பதே சரி பார்த்தலின் முதல் கட்டமாய் உள்ளது !

வர்ணங்கள் என்று mention பண்ணும் வேளையில் இரத்தப் படலத்தின் உட்பக்க கலரிங் பற்றி சிலாகிக்காது இருக்க இயலவில்லை! வெள்ளிக்கிழமை நடந்த அச்சுப் பணிகளின் போது நானும் அச்சுக்கூடத்திலேயே டேரா அடித்து விட - ஒவ்வொரு பக்கத்தின் கலரிங் ஜாலங்களையும்  அருகிலிருந்து ரசித்திட முடிந்தது ! வித விதமாய் pastel shade வர்ணங்கள் ; சில பின்னணி வானங்களின் நீலத்தில் அட்டகாசமான வேறுபாடுகள் ; கண்ணாடிகளுக்குப் பின்பாய் நிற்பது போல் வரும் இடங்களில் அந்த glass effect காட்டுவது என்று கலரிங் ஆர்ட்டிஸ்ட் அசத்தோ அசத்தென்று அசத்தியுள்ளார் ! நம்மவர்களின் பிரிண்டிங்கும் இம்முறை அட்டகாசமாய் வந்துள்ளதை சீக்கிரமே பார்த்திடப் போகிறீர்கள் ! 

XIII-ன் இந்த இரண்டாம் சுற்றுக் கதைக்களம் இந்தாண்டு நவம்பர் 30-ல் வரக் காத்திருக்கும் பாகம் இருபத்தி நான்கோடு நிறைவு பெறுகிறது ! மூக்கைத் தொட முன்னூறு மைல் பயணம் செய்யும் இந்தக் கதையினை 'திடும்'மென எவ்விதம் முடிக்கப் போகிறார்களோ நானறியேன் - ஆனால் நிச்சயமாய் சீசன் 3 என்ற இன்னுமொரு பை-பாஸ் பயணத்துக்கு சின்னதான சாளரத்தைத் திறந்தே வைத்திடுவார்கள் என்பதே என் அபிபிராயம் ! 'ஆஹா...தப்பிச்சோம்டா சாமி !!' என்றும்  ; 'அடடே..அதுக்குள்ளாகவா ?' என்றும்...'அப்படியானால் பாகம் 1-ல் துவங்கி கலரில் மறுபதிப்பு போடலாமே ?' என்றும் விதம் விதமாய் மைண்ட் வாய்ஸ்கள் உற்பத்தியாகும் என்று தோன்றுகிறது ! ஒரே ஒரு சின்ன word of caution ...XIII கதைகளை இந்த இதழ் துவக்கம் - முதல்முறையாகப் படிக்கப் போகும் வாசகராய் நீங்கள் இருப்பின் 1.5 ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்ட பாகம் 20 & 21-ன் தொகுப்பினையாவது குறைந்த பட்சமாகப் படித்து விடக் கோருகிறேன் ; இல்லையேல் வீணாய் நிறைய கேச இழப்புக்குக் காரணமாகிடலாம் ! 

இம்மாதத்தின் இன்னொரு வண்ண இதழான (ஷெல்டன் ) "ஆதலினால் காதல் செய்யாதீர் !"-ம் அட்டகாசமாய் தயாராகி வருகிறது ! செவ்வாய்க்கிழமை அச்சுக்குச் செல்லும் இந்த இதழ் ஒரு slam - bang அதிரடி ! நிச்சயமாய் ஷெல்டனுக்கு இன்னும் கொஞ்சம் ரசிகர்களை ஈட்டித் தர இக்கதை உதவும் என்பது உறுதி ! 

இதழ் # 3 - (ஜனவரி மாதத்து விடுதலான) நம் கூர்மண்டையர் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" - black  & white -ல் ! ஸ்பைடர் கதை வரிசையில் முதல் முழுநீள படைப்பு இதுவே ! இதற்கு முன்பாய் வெளியான ஸ்பைடர் கதைகள் சகலமும் - வார இதழ்களில் வெளியான 2 பக்க தொடர்களின் தொகுப்புகளே ! முதன்முறையாக ஸ்பைடரைக் கொண்டு Fleetway ஒரு முழுநீள காமிக்ஸ் ஆல்பம் உருவாக்கியது "The Professor of Power " என்ற இந்த சாகசத்தின் வழியாகவே ! 1985-ல் நமது முதலாம் ஆண்டுமலரில் ஆர்ச்சியோடு இந்தக் கதை வெளியானது நமது சமீபத்து வாசகர்கள் அறிந்திருக்க இயலாச் செய்தி ! 30 ஆண்டுகளுக்கு முன்னே இந்த "டபுள் சூப்பர் ஸ்டார் இதழ்" வெளியான சமயம் கிடைத்த வரவேற்பும் ; விற்பனையும் அதகளம் தான் ! செவிகளில் 'புஷ்பச் செருகல்' ஒரு லாரி லோடு நிறைய என்று இருப்பினும், நமது பால்யங்கள் அவற்றை ஏகாந்தமாய் ஏற்றுக் கொள்ள அனுமதித்தது ! இன்று மீண்டும் ஒரு முறை ஸ்பைடர் & கோ. ஹெலிகார் நிறைய ரொப்பிக் கொண்டு வரும் மலர்களையும் அந்த பால்ய  நினைவுகளின் மறுவருகை ஏற்றுக் கொள்ள இடம் தருமா guys ?  சென்னைப் புத்தக விழாவின் 'மாயாவி' விற்பனையை ஒரு அளவுகோலாக்கிப் பார்த்திடும் பட்சத்தில் பதில் ஒரு emphatic "யெஸ்" என்பதாகத் தானிருக்கும் ! பார்ப்போமே ...!!! உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு இது போன்ற  "புஷ்பங்களுக்குள் காது" கதை பாணிகள் பிடித்திடும் பட்சத்தில் - இரவில் கதை சொல்ல ஒரு சூப்பர் துவக்கம் இது !! 'நன்றி மறந்தவன் ! ; ஏற்றி விட்ட ஏணியை நையாண்டி செய்கிறான் !" என்றெல்லாம் நமது தீவிர கூர்மண்டையர் ரசிகர்கள் இந்நேரத்துக்கு முணுமுணுப்பதை நான் அறியாதவனல்ல ; so இதற்கு மேல் தலைவருக்கு பில்டப் வேண்டாமென்று ஓரம் கட்டிக் கொள்ளுகிறேன் ! இந்தாண்டின் அடுத்த செட் மறுபதிப்புகளை நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம் ; 2015-க்கான இறுதியான 4 மறுபதிப்புகளுக்கு உங்களின் choice என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் ! காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களில் வெளியாகா இதழ்களை மட்டுமே மையப்படுத்திடாமல் - 
 • Best of மாயாவி....? 
 • Best of CID லாரன்ஸ் & டேவிட் ...? 
 • Best of ஜானி நீரோ...? 
 • Best of ஸ்பைடர் ...? 
என உங்கள் தேர்வுகளைச் செய்திடலாமே folks ? அதே போல - அந்நாட்களது மொழியாக்கத்தில் தென்படும் அந்தப் புராதனத்தையாவது கொஞ்சமாய் களைய முயற்சிப்போமா ? அத்தனை கதைகளிலும் என்றில்லாது - அட் லீஸ்ட் ஆரம்பத்து மாயாவி கதைகளுக்காவது ஒரு புது மொழிநடை என்று தந்து கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டிட முடிகிறதா என்று பார்த்தாலென்ன? அதனையும்  நாங்களே கையில் எடுத்துக் கொண்டு எங்கள் அட்டவணைகளை மேலும் நெருசலாக்கிக் கொள்வதற்குப் பதிலாய் - அந்தப் பணியை வாசகர்களிடம் ஒப்படைத்தால் எவ்விதமிருக்கும் - பரிசு - ரூ.3000 என்ற அறிவிப்போடு ? 'அய்யகோ...மாற்றமா ? அபச்சாரம் !!' என்பது உங்களின் முதல் reaction ஆக இருந்தாலும் கூட -  இந்தக் கதைகளை இன்று முதல்முறையாகப் படிக்கக் கூடிய புது வாசகர்களின் கண்ணோட்டத்திலும் சற்றே நிதானமாய் பார்த்திடலாமே? What say all ? 

Before I sign off, பழையன மீதுள்ள நம் மோகங்கள் சில சமயங்களில் ஏற்படுத்தும் விரயங்களை நான் நேரில் உணர ஒரு வாய்ப்புக் கிட்டியது - வெகு சமீபமாய் நம் அலுவலகத்தில் என்னை சந்தித்ததொரு வாசகரின் ரூபத்தில் ! என் வயதை ஒத்தவர் என்ற விதத்தில் உலக அனுபவமில்லாதவர் என்று நிச்சயம் சொல்லிட இயலாது ;  'ரொம்பப் பெரிய சம்பளம் வாங்குபவனும் அல்ல நான் !' என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டதால்  - பொழுதுபோக்கிற்காக பணத்தை இரைக்கும்  திறன் கொண்டவருமல்ல என்பதும் புரிந்தது ! ஆனால் - சீரியசாகவே என்னிடம் ஒரு 30 முந்தைய இதழ்களின் பட்டியலைக் கொடுத்து - "இவற்றையெல்லாம் வாங்க நாயாய்ப் பேயாய் அலைகிறேன்...இவையனைத்தையும் வைத்திருக்கும் ஒரு comics collector ரூ.50,000 கேட்கிறார் ;  ஒரு முறை உங்களை சந்தித்து இவற்றை மறுபதிப்பு செய்யும் திட்டமுள்ளதா ? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்திருக்கிறேன்" என்றார் மூச்சிரைக்க ! எனக்குக் கொஞ்ச நேரம்  பேந்தப் பேந்த முளிப்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! ரூ.50,000 எனும் நம்பரைத் தாண்டி - அத்தனை செலவழித்தாவது இதழ்களை வாங்கியே தீர வேண்டுமென்ற அந்த காமிக்ஸ் நேசம் மலைப்பைத் தந்தாலும் - இது நிச்சயம் ஓவரோ ஓவர் என்ற சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை ! அதிலும் இந்தாண்டு சென்னை விழாவின் போது நம் காமிக்ஸ் காதல நண்பர்களின் இல்லத்தரசிகள் சிலரிடமும் பேச வாய்ப்புக் கிட்டிய போது லேசானதொரு நெருடலை உணர முடிந்தது ! நிறைய சமயங்களில் காமிக்ஸ் வாசிப்பு ; காமிக்ஸ் கலந்துரையாடல் ; பதிவிடுதல் ; போன்ற நமது ஆதர்ஷப் பொழுதுபோக்குகளின் பொருட்டு நாம் எடுத்துக் கொள்ளும் நேரங்கள் -  இதற்கு அப்பால் நிற்கும் துணைவிகளுக்கு லேசானதொரு எரிச்சலை உண்டாக்குவது இயல்பு தானே ?! அப்படியொரு சூழலில் ரூ.50,000 செலவழித்து 30 பழைய இதழ்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு போனால் அங்கே நண்பருக்கு மாத்திரமே மகிழ்ச்சி இருந்திட முடியும் ; இல்லத்தரசிக்கு தலையில் ஒரு கல்லைத் தூக்கிப் போடும் ரௌத்திரம் எழுந்தால் அத்தனை குற்றம் சொல்ல முடியாதன்றோ ? உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பு என்பது ஒரு பெரிய பொழுதுபோக்கு ; அதற்கென நிறைய நேரம்,பணம், மெனக்கெடல் அவசியம் என்பதை நான் அறிவேன் ! அதன் சுகத்தையும் அறிவேன் ! அதே சமயம் நம் பட்ஜெட் ; குடும்ப சூழல் என்பனவும் ஒரு முக்கிய விஷயம் தானே ? இப்போதே ஆண்டுக்கு ரூ.5000 அளவுக்கு வேட்டு வைக்கிறோமே என்ற உறுத்தல் எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருக்கின்றது ; இந்த நிலையில் நண்பர் இந்தக் கோரிக்கையோடு என் முன்னே அமர்ந்த போது சங்கடமாய் இருந்தது ! 

அந்தப் பட்டியலை வாங்கி பத்திரப்படுத்தி விட்டு - தொடரும் ஆண்டுகளில் இவற்றுள் உள்ள சிறப்பான கதைகளை நிச்சயமாய் மறுபதிப்பு செய்வோம் ; ஆகையால் பொறுமை காத்திடலாமே - ப்ளீஸ் ! என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன் ! 'என்னமோ சொல்றீங்கே...ஹ்ம்ம்..!' என்ற பார்வையோடு புறப்பட்ட நண்பர் நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரா ? - அல்லது இந்நேரத்துக்கு ஒரு கட்டு பச்சை காந்தி நோட்டுக்கள் கை மாறியிருக்குமா நானறியேன் ! But if you are reading this - நான் சொன்னது உங்களை சந்தோஷப்படுத்தும் வெற்று promise அல்ல ; நிச்சயமாய் மறுபதிப்புகள் என்ற தனித் தண்டவாளம் இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரும் ! And எப்போதும் போல - அவை ஒரு option என்று மாத்திரமே இருந்திடும் ! இது ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள  தீர்மானம் என்பதால் உங்களை குஷிப்படுத்தும் பொருட்டு நான் சொல்ல அவசியமே கிடையாது ! So என்னை சந்தித்த நண்பர்  மட்டும் தானன்றி - பழைய இதழ்களின் பொருட்டு காத்துக் கிடக்கும் இதர நண்பர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கலாமே  ..? 

'மொத்த கல்லாவையும் இவனே கட்டப் பார்க்குறாண்டா டோய் !!' என்ற சிந்தனைக்கு வெகு சிலருள் இது இடம் தந்திட்டாலும் கூட - இந்த மறுபதிப்பு மனமாற்றத்தின் காரணம் என்னவென்று நாம் அறிவோம் தானே ? அந்த நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் இப்போது !  மீண்டும் சிந்திப்போம் ! Enjoy the long weekend folks !! 

Sunday, January 18, 2015

200..!!

நண்பர்களே,

வணக்கம். பரபரப்பான சென்னைப் புத்தக விழாவினில் நண்பர்களோடு அட்டகாசச் சந்திப்பு ; அழகான விற்பனைகள்;  பொங்கல் விடுமுறைகள் ; தொடரும் மாதத்துப் புது இதழ்களுக்கான பணிகள் ; புதிது புதிதான படைப்பாளிகளுடன் தொடர்புகள் என கடந்த 7 தினங்களும் நம் கோலிவுட்டின் ஒரு கனவுக் காட்சி போல் கட்டவிழ்ந்தன ! (என்ன ஒரே வித்தியாசம் - மரத்தைச் சுற்றி நான் டான்ஸ் ஆடும் போது, என்னோடு சேர்ந்து கொள்வது கார்சனும், ஜிம்மியும் ; சைமனும் தானே தவிர - ஹன்சிகாவோ ; சமந்தாவோ  அல்ல !)  சொல்லப் போனால் - கடந்த 7 தினங்கள் மட்டுமே என்றில்லாமல் ஆண்டுகள் மூன்றாய் நம் இதழ்களின் அட்டவணையிலும் சரி ; இங்கு இந்த வலைப்பூவிலும் சரி - அரங்கேறி வரும் நிகழ்வுகளின் சகலமும் கூட ஒரு High Definition அற்புதக் கனவாய்த் தான் எனக்குத் தோற்றம் தருகின்றது ! 'இனி இழக்க என்னவுள்ளது ?'' என்ற mindset-ல் ஜனித்த நமது மறுவருகை - பத்திரிகை உலகை புரட்டிப் போடும் பிரம்மாண்டமாய் இல்லாது போனாலும், அது நாள் வரை நாம் பழகிப் போயிருந்த காமிக்ஸ் இலக்கணங்களை லேசாக  மாற்றி எழுதும் விதமாய் அமைந்துள்ளது நிஜம் என்று சொல்லலாம் தானே ?! அந்த மாற்றம் நிகழ்வதன் மையப் பின்னணி இந்த வலைப்பக்கமும், இங்கே சங்கமிக்கும் உங்கள் சகலரின் positive energy-ம் தான் என்பதை எந்த மேடை கிடைத்தாலும் என் வெண்கலத் தொண்டையில் சொல்லத் தயங்க மாட்டேன் நான் ! 'போடறான்டா டேய்..! பயல் வகையாய் சோப் போடறான் !' என இதுவொரு முகஸ்துதிப் படலமாய் ஒரு குட்டியான சதவிகிதத்தினருக்குத் தோற்றம் தரக்கூடும் என்பதை நான் உணராது இல்லை ; ஆனால் end of the day நான் சொல்வதன் நிஜம் புரியாது போகாது என்ற நம்பிக்கையுள்ளது நிறையவே ! ஒரு "இரத்தப் படலம்" முழுத் தொகுப்பினை எடிட்டிங் செய்ய மட்டுமே மூன்றரை மாதங்கள் எடுத்துக் கொண்ட எனக்கு - இன்று மாதம்தோறும் ஏதாவதொரு 'கடவாய்க்குள் கட்டைவிரல் படலம்' சாத்தியமாகிறது என்றால் - அதன் பின்னணியில் நிச்சயமாய் நான் அமர்ந்திருக்கக்கூடிய போதி மரங்களோ ;  திடீர் சூப்பர் சக்திகளை நல்கக் கூடிய பாஷாணங்களோ காரணமாகிடாது ! எத்தனை கரணமடித்தாலும் அதனை ரசிப்பதற்கும், கரணம் தப்ப நேரிட்டால் என்னைத் தாங்கிப் பிடிக்கவும் நீங்கள் சதா சர்வ காலமும் காத்திருக்கிறீர்கள் என்ற புரிதலே இன்றைய மாற்றங்களுக்குப் பின்புலம் எனும் போது - no amount of thanks can ever be enough !! 

குற்றால அருவி போல் ஆர்ப்பரிக்கும் சமூக வலைத்தளக் குரல்களின் இன்றைய உலகினில் - '200' எனும் ஒரு குட்டியான மைல்கல்லின் நிஜப் பரிமாணம் எத்தகையதோ - நானறியேன் ! ஆனால் "காமிக்ஸ் காதல்" மாத்திரமே நம் ஒற்றை agenda என்றான பின்னே, இத்தனை காலமாய் ; இத்தனை பதிவுகளாய் அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், சமயத்தில் எனக்கே ரீங்காரமடிக்கும் என் எழுத்துக்களில் இன்னமும் சுவாரஸ்யம் கண்டு வருவதும் சுலபமான சமாச்சாரங்கள் அல்ல என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமே இருக்க இயலாது ! இப்போதெல்லாம் ஒவ்வொரு பதிவையும் உங்களின் அதகளப் பங்களிப்புகளால் ஒரு திருவிழாவாக்கும் அந்தப் பாணியின் பலனாய் பதிவுகளை உருவாக்கும் வேலைகளை / வேளைகளை ஒரு சிரமமாய்க் கருதவே தோன்றுவதில்லை !  எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல - காமிக்ஸ் வாசிப்பு ; ரசனைகள்  ; மாற்றங்கள்; பரிமாற்றங்கள் என்பதையெல்லாம் தாண்டி இங்கு உதயமாகிடும் புதுப் புது நட்புகளை நேரில் தரிசித்திட இயலும் போது ஒரு தட்டு நிறைய வறுத்த கறியைப் பார்க்கும் கார்சனைப் போல ஏகாந்தமாய் உணர்கிறேன் !! எங்கெங்கோ நிலைகொண்டிருக்கும் நம் வாசகக் குடும்பத்தை ஒரெட்டு நெருங்கி வரச் செய்ததே இந்த வலைப்பக்கத்தின் நிஜ சாதனை என்பதில் நிச்சயம் நமக்குப் பெருமிதமே ! Thanks for being such awesome comics lovers & such wonderful people !!!!

"சரி...'200' -ஐ எட்டியாச்சு ; விஷயம் / விசேஷம் என்னவோ ? " என்ற உங்களின் எண்ணவோட்டம் உரக்கவே எட்டுகிறது என் செவிகளை !! Truth to tell - உங்களில் பலரும், இந்த இருநூறாவது பதிவு எதைப் பற்றியதாக இருந்திடும் என்பதை யூகித்து இருப்பது நிச்சயம் ! ஒரு நம்பருக்கான பதிலாய் இன்னொரு நம்பரை நோக்கி விரலைக் காட்டி விட்டால் இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேறிடாதா ? So - 200 ? என்ற கேள்விக்கு - 350 !! என்பதையே பதிலாக்குகிறேன் ! நான் குறிப்பிடுவது இந்தாண்டின் பிற்பகுதியில் வரக்காத்திருக்கும் முத்து காமிக்ஸின் 350-வது இதழைப் பற்றித் தான் என்பதைப் புரிந்திருப்பீர்கள் ! நாம் தற்போதிருப்பது இதழ் நம்பர் 337-ல் தான் எனினும், இந்தாண்டில் (மும்மூர்த்திகளின்) மறுபதிப்புகள் கணிசமானதொரு எண்ணிக்கைக்கு வித்திடவிருப்பதால் - 350-ஐ எட்டிப் பிடிக்க கஷ்டம் ஏதும் இருந்திடப் போவதில்லை தான் ! So லயனின் 250-வது இதழும் ; முத்துவின் 350-வது இதழும் ஒரே ஆண்டினில் அரங்கேறும் சந்தோஷங்கள் காத்துள்ளன 2015-ல் ! 

லயன் # 250-ல் 'தல' அதகளம் செய்யவுள்ள போது - முத்து # 350-ல் யாருடைய 'ரவுசு' காத்திருக்குமென்று நான் சொல்லவும் தான் வேண்டுமா - என்ன ?!! Oh yes.... நம் அபிமானத் 'தளபதி' - முற்றிலும் புதியதொரு கதைபாணியில் கலக்கக் காத்திருக்கும் - "என் பெயர் டைகர் !"  முத்துவின் 350-வது இதழாக அதிரடி செய்யக் காத்துள்ளது ! கேப்டன் டைகரின் கதைவரிசைகளில் 4 தனித்தனிப் பாணிகள் உண்டென்பதை இணையப் பரிச்சயம் அதிகமிலா நண்பர்களின் பொருட்டு சொல்லுவது அவசியமாகிறது !

 • நாம் தற்சமயம் வெளியிட்டு வருவன - டைகரின் இளம் வயது சாகசங்கள் தாங்கிய : YOUNG BLUEBERRY தொடர் !
 • 'தங்கக் கல்லறை' ; 'மின்னும் மரணம்' உட்பட - டைகரின் கிளாசிக் சாகசங்களைக் கொண்டவை - LT .BLUEBERRY தொடர் !
 • LMS இதழில் துவங்கிய ஓவியர் வான்சின் சித்திரங்கள் தாங்கிய (மினி) தொடரானது MARSHALL BLUEBERRY !
இந்த மூன்றைத் தவிர - MISTER BLUEBERRY என்ற நான்காவது கதை வரிசையொன்றும் உள்ளது ! அதனில் மொத்தம் 5 ஆல்பம்கள் உள்ளன ! இவை அனைத்துமே - டைகர் கதைகளின் ஓவியரான Jean Moebius Giraud-ன் solo கைவண்ணங்கள் ! கதை + சித்திரங்கள் - என இரண்டுமே அவரது பொறுப்பில் இருந்திட 1995-2005 என்றதொரு 10 ஆண்டுக் காலகட்டத்தினில் இந்த 5 ஆல்பம்களும் தயாராகின !  மொத்தம் 252 பக்கங்களை ஆக்கிரமிக்கின்ற இந்த Mr .BLUEBERRY 'ஏக் தம்மில்' வெளியாகப் போவதே நமது முத்துவின் இதழ் # 350 !! முழு வண்ணத்தில் - வழக்கமான பெரிய சைசில் - hardcover பைண்டிங்கோடு வரக்காத்திருக்கும் இந்த இதழுக்கு அவகாசம் நிறையவே உள்ளதால் இப்போதைக்கு அறிவிப்போடு நிறுத்திக் கொண்டு - முன்பதிவுகளை இதழின் வெளியீட்டுக்கு 90 நாட்களுக்கு முன்பாய்த் துவக்கிடுவோம் !  ஏற்கனவே சென்ற பதிவில் நான் கோடிட்டிருந்த "கார்ட்டூன் ஸ்பெஷல்" இதழும் கூட சந்தாவிற்கு சம்பந்தமிலா புது வரவு என்பதால் கா.ஸ்பெ + மு.கா.350 ஆகிய இரு இதழ்களுக்குமாய் சேர்த்து    புக்கிங் செய்யும் எற்பாடைச் செய்யலாம் ! 

"என் பெயர் டைகர்" கதைகள் நானே இன்னமும் படித்திராதவை என்பதால் அவற்றின் ஆழங்களைப் பற்றியோ ; சுவாரஸ்யங்களைப் பற்றியோ சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்பதே நிஜம் ! ஆனால் 'மின்னும் மரணங்களையும்' ; தங்கக் கல்லறைகளையும்' அளவுகோல்களாக வைத்திராது இவற்றை நாம் படிக்க நேரிட்டால் நிச்சயமாய் தூள் கிளப்பும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! டின்டினின் கர்த்தாவான ஹெர்ஜுக்கு அடுத்தபடியாக பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுள் சிலாகிக்கப்படும் ஜிரௌவின் ஆற்றல்களில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாதென்பதால் முழுக்க முழுக்க அவரது கைவண்ணத்தில் உருவான இந்தத் தொடர் சோடை போகாது என்பது உறுதி ! இந்தக் கதைவரிசையோடு எனக்கொரு சிறு personal அனுபவம் கூட உள்ளது ! 1995-ன் இறுதிகளில் இதன் முதல் ஆல்பம் பிரான்சில் வெளியான சமயம், பாரிசின் முக்கிய வீதிகளுள் ஒன்றான Champs d ' Elysee -ல் உள்ள FNAC என்றதொரு பிரம்மாண்டமான புத்தகக்கடைக்கு ஜிரௌ அவர்கள் வருவதாக இருந்தார்  - முதல் நாள் விற்பனையின் போது ஆட்டோகிராப் போட்டுத் தரும் பொருட்டு ! நான் பாரிஸ் செல்லும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போவது வாடிக்கை என்ற முறையில் அன்றைய தினம் தற்செயலாக அங்குதானிருந்தேன் - பராக்குப் பார்த்துக் கொண்டு ! மக்கள் பொறுமையாய், லைனில் நிற்பதைக் கவனித்த போது 'ஹ்ஹ்ம்ம்ம்...' என்ற பெருமூச்சு மட்டுமே வெளியானது என்னிடம் !  அவர் வரும் வரைக் காத்திருக்க எனக்கு அவகாசமில்லை என்பதால் வேடிக்கை பார்த்து விட்டு நடையைக் கட்டினேன் ! நேரம் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் ஒரு ஆல்பத்தை வாங்கிக் கொண்டு நானும் கூட்டத்தில் ஐக்கியமாகி இருப்பேன் ! (அவர் ஏதேனும் பிரெஞ்சில் பேசி இருந்தால் - பெ..பெ..பெ.. தான் பதிலாகிப் போயிருக்கும் என்பது வேறு கதை !) இதோ அந்த 5 ஆல்பங்களின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் :


இந்தக் கதைவரிசையை ஒரே இதழாய் வெளியிடுவதற்கும் காரணமுண்டு ! துவக்க சாகசங்களைத் தாண்டிய பின்னாட்களது டைகர் ஆல்பம்களில் ஒரே கருவானது கதை to கதை தொடர்வதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது ! So ஆண்டுக்கு 2 அல்லது மூன்று கதைகள் என நம் வழக்க பாணியில் வெளியிடும் போது கதைகளின் continuity விடுபட்டுப் போவதால் - கதைகளின் வேகம் சற்றே மட்டுப்பட்டுத் தெரிகிறது ! ஆனால் இது போல் ஒரே stretch -ல் வெளியிட்டு விட்டால் நிச்சயமாய் அந்த சிக்கல் எழாது என்ற மகா சிந்தனை சமீப மழை நாளொன்றில் என் மண்டைக்குள் உதித்ததால் அன்றே உதயமானது "எ.பெ.டை" !!

மார்ச் மாதம் மார்ஷல் டைகரின் பாக்கி நிற்கும் இரு கதைகள் (வேங்கைக்கு முடிவுரையா ? & ரணகள ராஜ்ஜியம்)வெளியாவதோடு அந்தக் கதைவரிசை முற்றுப் பெறும் !

ஏப்ரலில் - மின்னும் மரணம் - The Complete Saga வாயிலாக அதன் இறுதிப் பாகமான "கானலாய் ஒரு காதல்" வெளியாகும் சமயம்  LT .BLUEBERRY தொடரும் நிறைவு பெற்றிருக்கும் !

முத்து 350 இதழின் வருகையினைத் தொடர்ந்து MISTER BLUBERRY தொடரானது துவக்கத்தையும், முற்றுபுள்ளியையும் ஒரே தருணத்தில் கண்டிருக்கும்   !

எஞ்சி நிற்கும் YOUNG BLUEBERRY தொடரினில் இது வரை 20 ஆல்பம்கள் வெளியாகியுள்ளன ; நாமோ பாகம் 9-ல் தற்சமயம் நிற்கிறோம் ! பாக்கியுள்ள  11 பாகங்களையும் கூட அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் இதே டெம்போவில் வெளியிட்டு விட்டால் டைகரின் தொடரில் சகலத்தையும் போட்டு முடித்திருப்போம் !! பாருங்களேன் இந்தாண்டில் காத்திருக்கும் டைகர் மெனுவை :
 • மார்ஷல் டைகர்- 2 கதைகள்  - 90 pages
 • மி.ம.-11கதைகள் - 536 pages
 • என் பெயர் டைகர் - 5 கதைகள் - 252 pages
ஆக மொத்தம் - 878 பக்கங்களில் - 18 கதைகள் !!!

லேட்டாக வந்தாலும் அதகள லேட்டஸ்ட் தான் 'தளபதி'யின் பாணியோ ?!! Let's celebrate guys !! ஸ்டார்ட் the மியூசிக் !!

Moving on, ஏப்ரலில் காத்திருக்கும் "மின்னும் மரணம்" இதழின் ரிலீசோடு - லயனின் இதழ் # 250-ஐக் கூட வெளியிட்டிடலாம் என்ற எண்ணம் கொஞ்சமாய் என் மனதில் ஓடியது ! ஆனால் ஒரே வேளையில் இரு பெருந்தலைகளும் வெளியாகும் தருணமெனில் - ஒளிவட்டம் பகிரப்படும் என்பதும் புரிகிறது ! நான்கு இலக்க விலையினில் ஒரு தமிழ் காமிக்ஸ் வெளியாகும் முதல் சந்தர்ப்பத்தையும் ; தளபதியின் moment under the sun -ஐயும் வேறு எந்த விஷயத்தாலும் மட்டுப்படுத்திட வேண்டாமெனத் தீர்மானித்தேன் ! தவிரவும், இரு மெகா இதழ்களையும் ஒரே சமயத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டால் டிரௌசர் சந்தேகத்துக்கு இடமின்றிக் கிழிந்தே போகும் என்பதையும் உணர்ந்தேன் ! So - ஏப்ரலில் சென்னையில் நடக்கவிருக்கும் "சென்னைப் புத்தக சங்கமம்" விழா வேளையில் இந்த ரிலீசை வைத்துக் கொள்வோமா ? What say folks ?

தற்போது நடந்து வரும் சென்னைப் புத்தக விழாவில் நமக்கு highlight என்று நான் சொல்ல விரும்புவது ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்று விஷயங்களை ! பௌன்சரின் வெளியீடு ; ஒரு சர்ச்சைக்குரிய கதைத்தொடரின் ஆரம்பம் என முதல் highlight நாம் அனைவருமே எதிர்பார்த்ததே !

Highlight # 2 என்று சொல்ல வேண்டியது இந்தாண்டில் நம் ஸ்டாலில் மகளிரணியின் அற்புத உத்வேகமே !! பொறுமையாய் இதழ்களைப் புரட்டியதோடு - கை பிடித்து அழைத்து வந்திருந்த தத்தம் குட்டீஸ்களுக்கு புத்தகங்களை அள்ளியது பரவசம் தந்த காட்சி ! ஒரு இல்லத்தலைவி காமிக்ஸ் ஈடுபாட்டோடு இருப்பின், நமக்கு இன்னொரு தலைமுறை புது வாசகர்கள் நிச்சயம் அன்றோ ?

Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை  எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா  ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !

பரீட்சைக்குப் படிப்பவனைப் போல  ராவெல்லாம் கண் முழித்திருந்து  ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும்  செய்து இதழை வெளியிட்டுவிட்டு  ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில்  -

நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த  மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும்  போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?!  Take a bow - man with the steel claw !! Stunning show !!!

முகம் நிறைய வழியும் அசடைத் துடைத்துக் கொண்டே சென்னை விழாவின் போட்டோ படலத்தைத் தொடர்கிறேன் !!  
போராட்டக் குழுத் தலைவருடன் ரகசிய உடன்படிக்கை ??"டயபாலிக்" சண்முகசுந்தரம் அவர்தம் துணைவியோடு..! 
78 இவரது birth certificate சொல்லும் வயது ! 18 நம் கணிப்பு ! 
Before I sign off : சில சந்தோஷச் சேதிகள் :

 • LMS இன்னமும் 50 பிரதிகள் மட்டுமே கையிருப்பு என்ற நிலையைத் தொட்டு விட்டோம் !! 
 • "பூத வேட்டை" முழுவதுமாய்க் காலி ! "சிகப்பாய் ஒரு சொப்பனம்" ரொம்பக் குறைவான கையிருப்பு நிலையில்..! 
 • இம்மாத டயபாலிக் இதழில் 55 பிரதிகள் இத்தாலியப் பயணம் மேற்கொள்கின்றன - அவர்களது ரசிகர் மன்றத்திற்கு !
 • இரு வாரங்களுக்கு முன்பாய் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைகழகத்தைச் சார்ந்த இரு மூத்த புரபசர்கள் நம்மை சந்திக்க சிவகாசி வருகை தந்திருந்தனர் ! அவர்களது வளாகத்தில் உள்ள நூலகத்தில் - உலகின் மிகப் பிரம்மாண்டமான காமிக்ஸ் சேகரிப்புகளில் ஒன்று உள்ளதாம் ! "ஆசிய துணைக்கண்டத்தின் காமிக்ஸ் வெளியீடுகள்" பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் - தமிழில் உள்ள இதழ்களைப் பற்றி ஆய்வு செய்திடவும், அவர்களது லைப்ரரிக்கு அவற்றை சேகரிக்கவும் நம்மை சந்தித்திருந்தனர் ! ஆய்வுக் கட்டுரையை உருவாக்கும் மூத்த புரபசர் Dr.ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் தமிழர் என்ற வகையில் நமக்குக் கூடுதல் பெருமை ; ஏராளமான தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டார் ! அவரும் நம் வலைப்பூவை சமயம் கிட்டும் போதெல்லாம் வாசிப்பவர் என்பதைக் கேட்ட போது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றியது !! We are indeed honored Sir!!  எல்லாவற்றையும் விட அவர்களுக்கு நமது ஓவியர் மாலையப்பனின் எண்ணற்ற அட்டைப்பட டிசைன்கள் பிரமிப்பின் உச்சத்தைத் தந்தது என்றே சொல்லலாம் ! பகல் பொழுது முழுவதையும் நம் அலுவலகத்தில் செலவிட்டவர்கள் புறப்படும் வேளை வந்த போது நம் இதழ்களின் கையிருப்பு அனைத்திலும் ஒன்றை - மாலையப்பனின் ஒரிஜினல் சித்திரங்களில் ஒரு சிறு கத்தையோடு சேர்த்து pack செய்து கொடுத்த போது அவர்கள் முகங்களில் தாண்டவமாடிய சந்தோஷத்துக்கு நிச்சயம் விலையே கிடையாது !  Michigan பல்கலை நூலகத்தில் நம் இதழ்களும், அங்கேயே உள்ள காமிக்ஸ் மியூசியத்தினில் மாலையப்பனின் ஓவியங்களும் பெருமையோடு அமரப் போகின்றன  guys !! கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த கௌரவத்தை நமக்கு நல்கியுள்ள Dr.ஸ்வர்ணவேல் அவர்களுக்கும், Dr.சிதார்த் சந்திரா அவர்களுக்கும் நம் நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக! 
கூட்டாய் நாமெல்லாம் வடம் பிடித்து இழுக்கும் இந்தத் தேர் மெள்ள மெள்ளவேனும் ஒரு சந்தோஷமான பாதையில் பயணம் செய்வது ஆண்டவனின் கருணையே ! அந்த நன்றியோடு தூங்கப் புறப்படுகிறேன் guys !!  Take care !! 

Sunday, January 11, 2015

புதுப் புது அர்த்தங்கள் !

நண்பர்களே,

வணக்கம். தமிழகராதியின் சில சொற்களுக்கு நமது பிரத்யேக உலகினில்  துளி கூட அர்த்தமில்லை என்பதை நேற்றைய தினமும், அதன் முந்தைய மாலையும் எனக்கு உணர்த்தியுள்ளன ! "எல்லைகள்"..... "வேலிகள்".... "அரண்கள்" ..."கட்டுப்பாடுகள்.." என்ற சொற்களுக்கெல்லாம் நம் செம்மொழி ஒரு பொருளை உணர்த்தினாலும் - காமிக்ஸ் எனும் மாய உலகினுள் உலவும் நம் மாயாத்மாக்கள் அந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஒரு புதுப் புது அர்த்தத்தை எழுதி வருகிறார்கள் என்பது நிதர்சனம்  ! ஒவ்வொரு முறையும் ; ஒவ்வொரு நகரிலும் நாம் பங்கேற்கும் ஒவ்வொரு புத்தக விழாவினிலும் ஆங்காங்கேயுள்ள நண்பர்களின் அன்புச் சாரலில்  நனையும் பாக்கியான்கள் நாம் என்பதில் இரகசியம் கிடையாது ! So எல்லாவற்றையும் தான் பார்த்து ரசித்து விட்டோமே ; நண்பர்களின் ஆற்றலையும், அளப்பரிய அன்பையும் எக்கச்சக்க முறைகள் தரிசித்து ; அனுபவித்து ; உணர்ந்து விட்டோமே - இனி புதிதாய் பார்த்திட உயரங்கள் தான் என்ன இருந்திடக் கூடும் என்ற சிந்தனையோடு சென்னையில் வெள்ளி மாலை துவங்கிய புத்தக விழாவிற்கு மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பி வந்தோம் ! அதற்கேற்ப அன்றைய மாலையில் நிகழ்ச்சியின் அரங்கமே பாதி மேக்கப் போட்ட கலைஞனைப் போல காட்சி தர - 'சரி தான்...இந்தாண்டு நம் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக் கொள்வதே ஏமாற்றத்தைத் தவிர்க்கும் சாலையாக இருக்கும் !" என்ற மௌனத் தீர்மானம் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது ! முதல் சுற்றின் பெயர் அச்சில் நமது ஸ்டால் பெயர் விடுபட்டுப் போயிருந்ததால் முதல் நாளின் முழுமைக்கும் ; மறு நாளின் பெரும்பகுதிக்கும் நமது ஸ்டால் வேறு ஜூடோ டேவிட்டின் மண்டையைப் போல 'மொழுக்கடீர்' என்று காட்சியளித்தது !  வெள்ளிக்கிழமை மாலை நம் நண்பர்களின் வருகை கூட அத்தனை வேகமாய் இல்லை என்ற போது காற்று வாங்கிய மொத்த அரங்கினில் நாமும் ஜாலியாக ஐக்கியமாகிக் கொண்டோம் ! ஆனால் இம்முறை நம்மிடமுள்ள டைட்டில்களின் எண்ணிக்கை சற்றே அதிகம் ; விலைகளும் அதிகம் என்பதால் மிதமான கூட்டமே வந்திருந்த போதிலும் பில் தொகைகள் ஆரோக்கியமாய் இருப்பதை உணர முடிந்தது ! காலையிலேயே நம் ஸ்டாலில் ஆஜராகி பண்டல்களைப் பிரித்து, இதழ்களை அடுக்கி வைப்பதில் துவங்கிய நண்பர்களின் அசாத்திய உதவிகள், மாலையில் பில்லிங்கில் ; பாக்கிங்கில் என்று அதகளமாய்த் தொடர்ந்தது ! இராதாகிருஷ்ணன் தற்போது பணியில் இல்லை என்ற நிலையில் - புதிய பணியாளருக்கு சென்னை விழாவும், அதன் பிரம்மாண்டமும் முற்றிலும் பரிச்சயமற்றவை ! நண்பர்களின் உதவியின்றி நாம் நிச்சயமாய்த் தத்தளித்திருப்போம் என்பது உறுதி ! முதல் நாள் வருகை தந்த வாசகர்களின் பெரும்பகுதி புதியவர்கள் என்பதால் 2013-ன் வெளியீடுகள் எவை ? '14-ன் புத்தகங்கள் எவை ? என்ற ரீதியில் தொடர் கேள்விகளை முன்வைக்க நம் நண்பர்கள் அணி  அதனையும் திறன்பட சமாளித்து வர - நான் சற்றே புஷ்டியான சோளக் கொல்லை பொம்மை போல ஓரமாய் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! புது வாசகர்களின் வேட்டை ஒரு பக்கமெனில், சென்னையைச் சார்ந்த நம் ரெகுலர் வாசகத் தம்பதி கையில் கொண்டு வந்திருந்ததொரு நீளமான பட்டியலோடு புத்தகங்களை தேர்வு செய்து,  'டிக்' அடித்துக் கொண்டே அள்ள - தயாராய்க் காத்திருந்த கட்டைப்பை தள்ளாடியது !  அதிரடியாய் செல்லாவிடினும் ஒன்பது மணிக்கு ஸ்டாலுக்கு மூடாக்குப் போடும் சமயத்தினில் - 3 நண்பர்களின் சந்தாவையும் சேர்த்து வசூல் ரூ. 60,000 -ஐத் தொட்டிருந்த போது - 'அடடே' என்று மனசுக்குள் குட்டியாய் ஒரு ஆச்சர்ய உணர்வு தோன்றியது ! விளக்கை அணைத்து ; கணக்கு முடித்து நாம் கிளம்பும் நொடி வரை சென்னை நண்பர் உடனிருந்து உதவி நெகிழச் செய்தார் ! Day 1 சாந்த அவதாரம் எனும் போது இரண்டாம் நாளின் ரூபம் எவ்விதம் இருக்குமென்ற மெல்லிய சிந்தனையோடு ஜூனியரும், நானும் நடையைக் கட்டினோம் ! சனிக்கிழமை காலையில் ஈரோடு ; சேலம் ; திருப்பூர் பகுதிகளில் இருந்து நண்பர் பட்டாளம் கிளம்பி வருவதாலும், வார இறுதி எனும் போது உள்ளூரில் வசிக்கும் நண்பர்களின் வருகையும் நிச்சயம் இருக்கும் என்பதாலும் Day 2 நிச்சயமாய் lively ஆக இருக்குமென்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருக்க, அசதியில் தூக்கம் ஆளைச் சாய்த்தது ! And what a day the saturday was !!!!

சென்றாண்டைப் போலவே சன் நியூஸ் டி.வி.யினில் தலை காட்ட நண்பர் விஷ்வா மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. நெல்சன் சேவியரின் சகாயங்களில் நமக்கொரு வாய்ப்பு கிட்டியிருந்தது ! சென்னைப் புத்தக விழாவினில் வெளியாகும் பலதரப்பட்ட புது இதழ்களில் முக்கியமானவைகளை டி.வி. அரங்கினில் வெளியிடுவது போலான பிரோக்ராமில் "காமிக்ஸ்" என்ற genre -ன் பிரதிநிதியாய்  நமது "பௌன்சர்" இதழை முன்னிறுத்தி வைத்திருந்தோம் !  தமிழ் ஓவிய உலகின் அசாத்தியத் திறமைசாலிகளில் முக்கியமானவரான திருமிகு. மணியம் செல்வன்  அவர்கள் இதழினை வெளியிடுவதாக ஏற்பாடாகியிருந்தது! So சனி காலையில் நானும், ஜூனியரும் வீட்டிலிருந்து கிளம்பி சன் ஸ்டுடியோவிற்குச் சென்றிட, புரோக்ராமில் கலந்து கொள்ளும் பொருட்டு வாசக அணியும் தங்கள் லாட்ஜிலிருந்து சன் குழுமத்தின் பிரம்மாண்ட ஆபீஸ் நோக்கிப் புறப்பட்டனர் ! சென்றாண்டும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு தருணத்தில் 'ஸ்ட்ராங்கான பில்டிங்கோடும் ; வீக்கான பேஸ்மன்டோடும்' அங்கே அடி வைத்திருந்த நாட்கள் நினைவுக்கு வர - "அட...ஓராண்டின் ஓட்டம் இத்தனை வேகமா ?" என்று நினைக்கச் செய்தது ! சென்றாண்டைப் போல நான் மாத்திரம் தனியாக 'பெ பெ பெ ...பெ பெ பெ..' என்று மேடையில் அமர்ந்து ஓசை தரும் சூழலாக இல்லாது - இம்முறை ஓவியர் ம.செ அவர்களும்,நண்பர்களும் கலந்துரையாடுவது போலான ஏற்பாடு என்பதாலும் ; நிகழ்ச்சியின் நோக்கமே பௌன்சரை பற்றிய சிறு அலசல் என்பதாலும் முட்டிகால்கள் ஜாஸ்தியாய் பிரேக் டான்ஸ் ஆடவில்லை ! தவிர, பௌன்சர் இதழினை அதுவரை பார்த்திருந்த நண்பர்கள் அனைவருமே அதன் தரம் ; தயாரிப்பு பற்றி ஆர்ப்பாட்டமாய் சிலாகித்திருக்க,எனக்குள் ஒரு குட்டியான நம்பிக்கை குடிகொண்டிருந்தது ! 

சற்றைக்கெல்லாம் ஓவியர் திரு. ம.செ. அவர்களும் ஸ்டுடியோவிற்கு வந்திட ஷூட்டிங் நடக்கும் தளத்துக்குச் சென்றோம் ! சன் டி.வி.யின் பிரம்மாண்டம் புதிதாய் வருவோரை மிரளச் செய்யும் பாணி என்ற போதிலும், எங்கு சென்றாலும் அதகள முத்திரை பதிக்கும் நம் வாசகர்களுக்கு அதுவொரு பொருட்டாகவே இருந்திடவில்லை ! முன்பக்கம் 'தல' டெக்ஸ் & பின்பக்கம் 'தளபதி' டைகர் என்ற படங்களோடு அட்டகாசமான டி-ஷர்ட்களில் நண்பர்கள் ஆஜராக வழக்கம் போல அந்த ஏரியாவில் களை கட்டியது ! ஏற்கனவே இன்னொரு புத்தக வெளியீட்டு விழாவின் ஷூட்டிங் ஓடிக் கொண்டிருந்ததால் பக்கத்து அறையில் காத்திருந்த வேளையில் திரு.ம.செ அவர்களை தங்கள் கேள்விகளாலும், அன்பு மழையாலும் நண்பர்கள் நனையச் செய்யத் துவங்கினர் ! எனக்கும் இதுவொரு புது அனுபவம் என்பதால் திரு ம.செ அவர்கள் பௌன்சரின் ஒவ்வொரு பக்கத்தையும் பொறுமையாய் புரட்டிக் கொண்டே, ஒவ்வொரு பக்க சித்திர நுணுக்கங்களையுமொரு topnotch ஓவியரின் பார்வையில் விளக்கிச் செல்ல / சொல்ல எனக்குள் பிரமிப்பை அடக்க இயலவில்லை ! கிட்டத்தட்ட 2 மாதங்களாய் நான் தினமும்  பார்த்து வந்த சித்திரங்கள் இன்று அவரது பார்வைக் கோணங்களில் புதுப் புது அர்த்தங்களை நல்குவதை உணர்ந்த போது - ஒரு நிஜமான கலைஞனின் ஆற்றலை / உயரத்தை உணர முடிந்தது ! திறந்த வாய் மூடா நிலையில் நானும், நண்பர்களும் ஓவியர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொநிருக்க நேரம் ஓடியதே தெரியவில்லை ! நண்பர்களின் உற்சாகம் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டிருக்க - செட்டிற்குச் சென்று மைக் மாட்டிக் கொண்டு மேடையில் அமரத் தயாரான போது சென்றாண்டைப் போல வாயெல்லாம் சோற்றுக் கற்றாழையை முழுசாய் கபளீகரம் செய்த உணர்வு எழவில்லை ! 'நான் வேடிக்கை பார்க்க மட்டுமே வருவேன் ; என்னை தெரியாத்தனமாய் கூட மேடையேற்றி விடக் கூடாது !' என்ற கண்டிஷனோடு வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த ஜூனியரையும் நண்பர்கள் குழாம் குண்டுக்கட்டாய் மேடைக்கு பார்சல் செய்து வைக்க அழகான பின்னணியிலான செட்டில் ஷூட்டிங் தொடங்கியது ! 

நிகழ்ச்சிக்கொரு திறமையான தொகுப்பாளர் என் தரப்பில் அமர்ந்திருக்க 'கணீர்' குரலில் அவர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் ! மூத்த தலைமுறையின் ஆசீர்வாதங்களோடு திரு.ம.செ அவர்கள் இதழை வெளியிட, இளைய தலைமுறையின் பிரதிநிதியாய் ஜூனியர் அதனைப் பெற்றுக் கொண்ட போது எனக்குள் ஓடியது ஒரு பதிப்பாளனின் நிஜமான சந்தோஷமா - அல்லதொரு தந்தையின் மட்டற்ற பெருமிதமா ? என்ற பட்டிமன்றமே நடத்தியிருக்கலாம் ! நான் பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க,  பௌன்சர் கதையின் கர்த்தாவைப் பற்றி விஷ்வா சிலாகிக்க, சிறப்பு விருந்தினரான திரு.ம.செ அவர்கள் கிராபிக் நாவல்களைப்  பற்றியும் ; இந்தக் கதைக்கான ஓவிய பாணிகள் பற்றியும் அற்புதமாய்ப் பேசத் துவங்கினார் ! வாசகர்கள் கொஞ்சமாய் கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புத் தந்து, அதற்கான பதில்களையும் நாங்கள் தரும் விதமாய் நிகழ்ச்சி அழகாய் ஓடியது !  இந்த 20 நிமிட புரோக்ராமை ஒரு மெகா சீரியல் நீளத்துக்குக் கொண்டு போயிருக்கக் கூடிய அளவில் நம்மவர்கள் ஒரு பரீட்சைப் பேப்பர் நிறைய கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தது வேறு விஷயம் !! பெரிதாய் ஒரு ரீ-டேக் எடுக்க அவசியமின்றி நிகழ்ச்சி முடிந்த பின்னே மேடையில் போட்டோக்கள் எடுத்து தூள் கிளப்பத் தொடங்கி விட்டனர் நண்பர்கள் ! காமிக்ஸ் எனும் காதலின் பின்னே இத்தனை வீரியமானதொரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்பதை திரு ம.செ அவர்கள் நிச்சயம் யூகித்திருக்க இயன்றிருக்காது என்ற விதத்தில் அவரும் திக்குமுக்காடிப் போய் விட்டார் இந்த அன்பு மழையில் ! என்றேனும் நாமொரு அழகான ஸ்கிரிப்ட் தயார் செய்திடும் பட்சத்தில் ஒரு 16 பக்கக் கதைக்கு தான் நிச்சயம் சித்திரங்கள் போட்டுத் தருவதாய் திரு. ம.செ. அவர்கள் முன்வந்த போது எனக்கு அந்த நாளே ஒரு புதுப் பரிமாணத்தில் காட்சி தந்தது ! நம் நன்றிகளை பணிவோடு சமர்ப்பித்து விட்டு அவரை வழியனுப்பி விட்டு - புத்தக விழாவிற்கு நடையைக் கட்டினோம்..!

அங்கே..! நாளின் பாதிப் பொழுதை டி.வி.நிலையத்தில் கழித்தான பின்னே, கொஞ்சமாய் அவர்களது பாணியைக் கடைபிடித்தால் தப்பில்லை என்று தோன்றுவதால் -இப்போதைக்கு ஒரு short commercial (breakfast) break !! வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டான பின்னே இந்தப் பதிவு தொடரும் - ஒரு சஸ்பென்ஸ் அறிவிப்போடு ! Stay tuned folks !

Post Break Post : 

மாலை 4 மணிக்கு நம் ஸ்டாலுக்குச் சென்ற போதே சரியான கூட்டம் ! நம் போராட்டக் குழுத் தலைவர் பில் போடும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்க, அவருக்கு இணையாய் வருகை தரும் ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி ; இதழ்களை சேகரித்து ; pack செய்து கொடுத்து அசத்திக் கொண்டிருந்தனர் மற்ற நண்பர்கள் ! எப்போதும் போலவே பந்தியில் காலியான முதல் பதார்த்தம் 'தல'யின் இதழ்களே !! KING SPECIAL & "கார்சனின் கடந்த காலம்" நொடியில் காலியாகிப் போயின ! மறுபதிப்புகள் இன்னொரு பக்கம் ஜரூராய் அள்ளப்பட - "நயாகராவில் மாயாவி" ஆளுக்கு முந்தி out of stock அட்டையை மாட்டிக் கொண்டார் ! "ஸ்பைடர் வரலையா ?" என்ற கேள்வி ஒரு தொடர் ரீங்காரமாகிட - போஸ்டரில் இருந்து நம் கூர்மண்டையன் எகத்தாளமாய்ச் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போல் பட்டது ! "காலங்கள் மாறினாலும்..சில காதல்கள் மாறாது !" என்ற குற்றச் சக்கரவர்த்தியின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காத குறை தான் !  இன்னொரு பக்கம் தமிழக டீக்கடைகளின் ஆஸ்தான ஆயுதங்களான வடையும், பஜ்ஜியும் போல் LMS சுறுசுறுப்பாய் விற்பனையாகிட, மாலைக்குள் அதுவும் அம்பேல் ! பௌன்சரும் அனைவரது கண்ணையும் பறித்திட - விற்பனை முன்னணியில் இந்த ஒற்றக்கையரும் சேர்த்தி ! "என் பெயர் லார்கோ " இன்னொரு hotseller என்றால் - குட்டீஸ் மத்தியில் லக்கி லூக் வழக்கம் போல் popular ! அழகான ஆச்சர்யம் என்னவெனில் நேற்று 2 குட்டி வாசகர்கள் (10-11 வயதுக்குள்ளான cutiepies) வேகமாய் ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் கதைகளை அள்ளியதே ! இருவருமே, இதுவரையிலான ஸ்கூபி-ரூபி கதைகளை படித்து விட்டதாகவும், லக்கிக்கு இணையாக இதையும் ரசித்தோம் என்று சொன்னதும் எனக்கு வியப்பாக இருந்தது ! இன்றைய வாண்டுகளின் ஆற்றல்களை எடைபோட்டிட அளவுகோல்களே கிடையாது போலும் என்று எண்ணிக் கொண்டேன் !   முதல் நாள் மாலையின் சுமார் கூட்டம் என்னை சற்றே மெத்தனமாய் இருக்கச் செய்து விட்டதென்பென் ; இல்லையேல் எல்லா இதழ்களிலும் கூடுதலாய் ஸ்டாக் ஏற்றி இருந்திருப்போம் தான் !   காலியாகிப் போன எல்லா இதழ்களுமே இன்று காலை  சிவகாசியிலிருந்து கணிசமாய் வரவழைக்கப்பட்டு விட்டதால் - we should be o.k. today ! டபுள் த்ரில் special இதழும் இன்று கிடைக்கும் என்பது கொசுறுச் சேதி !

நேரம் செல்லச் செல்ல நண்பர்களின் வருகையும் கூடிக் கொண்டே செல்ல - வழக்கம் போல் நம் ஸ்டாலில் ஒரு buzz தொற்றிக் கொண்டது ! அதிர்ஷ்டவசமாய் நமக்கு நடைபாதையை ஒட்டியதொரு ஸ்டால் என்பதால் அங்கே கொஞ்ச நேரம் ; இங்கே கொஞ்ச நேரமென ஒதுங்கி நின்று - பக்கத்து ஸ்டால்களின் உஷ்ணங்களைச் சம்பாதிக்கவில்லை ! நிறைய நண்பர்கள் துணைவியரோடு ஆஜரானது சந்தோஷம் எனில் ; மனைவியரும் இந்தக் காமிக்ஸ் காதலுக்குத் தடை போடாது,  தத்தம் கணவர்கள் கால இயந்திரங்களில் ஏறிப் பின்னோக்கிச் செல்வதை புன்சிரிப்போடு ரசித்து நின்றது நிறைவாக இருந்தது ! அது மட்டுமன்றி நேற்றைய புதுப் பார்வையாளர்களுள் மகளிரும் ஒரு கணிசமான எண்ணிக்கையிலானவர்களே ! இதுநாள் வரை ஒரு ஆர்வத்தில் உள்ளே புகுந்த பின்னே, டபுள் ஸ்பீடில் ரிவர்ஸ் கியர் போட்ட பெண்களே அதிகம் ! ஆனால் இம்முறையோ ஒவ்வொருவரும் நிதானமாய் நம் இதழ்களைப்  புரட்டியதும் சரி ; ஏதாவதொரு இதழையாவது வாங்கியதும் சரி - தவறாது நடந்தது ! வண்ண இதழ்களை மட்டும் தான் என்றில்லாது, தற்போதைய மறுபதிப்புகளையும் ஆற அமர அவர்கள் புரட்டிய போது - என்றேனும் ஒருநாள் மகளிரின் கோட்டைக்குள்ளும் நம் காமிக்ஸ் ராஜ்ஜியம்  நுழைந்திட வாய்ப்புகள் பிரகாசமே என்று நினைத்துக் கொண்டேன் !
வருகை தந்திருந்த நண்பர்கள் நொடிக்கொரு கேள்வியும், நிமிடத்துக்கொரு போட்டோவுமாய் தூள் கிளப்பிக் கொண்டிருப்பது ஒரு பக்கமெனில் - சென்னை வர இயலாது போயிருந்த இதர நண்பர்கள் தத்தம் ஊர்களில் இருந்தே இங்குள்ள நிலவரங்களை கால் மணி நேரத்துக்கொருமுறை வினவி வந்ததைக் கண்டிட முடிந்தது ! 'கூட்டம் எப்படி உள்ளது ?" ; "விற்பனை எவ்விதமுள்ளது ?" ; "வரவேற்பு எப்படியுள்ளது ? " "நண்பர்கள் யார்யாரெல்லாம் ஆஜர் ?" என்று தங்கள் வீட்டு விசேஷத்தைப் போன்ற நிஜமான அக்கறையோடு ஒவ்வொருவரும் போன்களில் கேள்விக்கணைகளை தொடுத்து வந்ததை மௌனமாய் ரசித்து வந்தேன் ! நாகர்கோவிலில் இருந்து வருகை ;  ஹைதராபத்தில் இருந்து வருகை ; புதுவையிலிருந்து வருகை ; பெங்களூரிலிருந்து வருகை என ஒவ்வொருவரும் இதற்கென எடுத்துக் கொண்டுள்ள மெனக்கெடலும் ; செலவும் நிச்சயமாய் நம்மை ஆயுளுக்கும் கடனாளிகளாக்கும் நிகழ்வுகள் என்பதை மறக்கவோ ; மறுக்கவோ இயலாது ! துளித் துளியாய் துவங்கியதொரு நேசம் சிறுகச் சிறுக பிரவாகம் எடுக்குமொரு அற்புதம் நம்மைச் சுற்றி அரங்கேறி வருவதை ஆண்டவின் கருணை என்றல்லாது வேறு எவ்விதம் வர்ணிக்கவோ - தெரியவில்லை ! 

நேற்றைய பொழுது நண்பர்களில் பலரும் முன்வைத்த பல கோரிக்கைகளுள் ஒன்று மட்டும் 'மறு ஒளிபரப்பாகவே ' தொடர்வதைப் பார்த்திட முடிந்தது ! 'கார்ட்டூன் கதைகளுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்லாட் ஒதுக்கினால் எங்களுக்கும், எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் குதூகலமாய் இருக்குமே ! 'என்ற ஆதங்கக் குரல்களே அவை ! ஒரு லக்கி லூக் ; ஒரு சிக் பில் என்ற மினி மெனு எங்களின் கார்ட்டூன் பசிக்குச் சோளப் பொரியாக மட்டுமே காட்சி தருகிறது என்பதை அனைவரும் சொல்வதை நேற்றுக் கேட்க முடிந்தது ! சுவாசமாய் நம்மை நேசிக்கும் நெஞ்சங்களின் கோரிக்கை ; அதிலும் நம் அடுத்த வாசகத் தலைமுறையின் பொருட்டுமான கோரிக்கை எனும் போது அதற்கு செவி சாய்க்காது இருத்தல் சாத்தியமாகுமா ? So 2015-ன் போக்கினில் ஒரு அட்டகாசமான கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினைத் தயாரிப்பதென்ற தீர்மானம் நேற்றே என் தலைக்குள் உருவெடுத்து விட்டது ! இதன் கதைத் தேர்வுகள் ; பணி மேற்பார்வைகள் என முக்கிய வேலைகள் நம் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமாக இருக்கப் போகிறது என்பதும் அவனே இப்போதைக்கு அறிந்திருக்காத் தகவல் ! விலை ; கதைகள் ; சைஸ் போன்ற basic சமாச்சாரங்கள் பற்றிய திட்டமிடலை நேற்றைக்கு வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே துவங்கி விட்டேன் ; படைப்பாளிகளிடம் இது தொடர்பாய் பேசிட மட்டும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு மார்ச் இதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியாகச் செய்வேன் ! கலக்கக் காத்திருக்கும் இந்த காமெடி மேளாவிற்கு என்ன பெயர் சூட்டலாமென்பது உங்கள் choice - முழுக்க முழுக்க !! So give it your best guys !!

மாலைப் பொழுது ஓடிய சுவடே தெரியாமல் கடை மூடும் நேரமும் நெருங்கிய போது - ஊருக்குத் திரும்பும் நண்பர்கள் நெகிழ்வாய் கைகுலுக்கி விட்டு கிளம்பிய தருணம் ஒரு சிறு மௌனம் சூழ்ந்து கொண்டது ! மயிலாடுதுறையில் வசிக்கும் நம் நண்பர் தான் கொண்டுவந்திருந்த சின்னதொரு பரிசை எனக்குத் தந்த போது அந்த gift wrapped பார்சலை ஆவலைப் பிரித்தேன் ! உள்ளே இருந்த பொருளைப் பார்த்த போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அஞ்சல்துறையில் பணியாற்றும் நண்பர் என் படத்தோடு கூடியதொரு நிஜ தபால்தலையை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார் !!! இந்திய தபால்துறை சமீபமாய் இது போன்றதொரு திட்டத்தைத் துவக்கியிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன் தான் ; ஆனால் நானே அதன் ஒரு முகமாய் மாறிடும் ஒரு நாள் புலரும் என்றெல்லாம் நான் கனவு காணக் கூடத் தயாராக இருந்ததில்லை ! அதனுடன் 2 பக்கக் கடிதமொன்றை இணைத்துத் தந்த நண்பரை என்சொல்லி நன்றி பாராட்ட என்று இப்போது வரை எனக்குத் தெளிவு ஏற்பட்ட பாடில்லை ! 

ஒன்றே ஒன்று மட்டும் சொல்லியாகணும் guys ...போன ஜென்மமென்று ஒன்று இருந்திருப்பின் அதனில் நான் மலைக்குரங்காய்ப் பிறந்திருந்தால் கூட , நிறையவே புண்ணியம் செய்த குரங்காகத் தான் இருந்திருக்க வேண்டும் !   இல்லையெனில் காலைப்பனி போன்ற இந்த நேசங்களை இன்று அனுபவிக்கும் இது போன்ற பாக்கியங்கள்  எனக்கெவ்விதம் கிட்டிடும் ?  ஒவ்வொரு நாளும் . ஒவ்வொரு விதமான காமிக்ஸ் ரசனையினாலும், ஒவ்வொரு அன்பின் வெளிப்பாட்டின் மூலமும் வாமண அவதாரம் எடுத்து வரும் இந்த வாசகக் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாய் இருப்பது என் ஆயுளுக்கொரு அர்த்தம் தரும் தருணம் ! அனைத்திற்கும் நன்றிகள் நண்பர்களே !! See you again today ! Bye for now ! 

P.S : நண்பர்களே...நேற்றைய போடோக்களில் இன்னமும் கொஞ்சம் அனுப்புங்களேன்...இங்கே வலையேற்றம் செய்து விடுவோமே !! 

Friday, January 09, 2015

கார்முகிலும் அழகே..!

நண்பர்களே,

வணக்கம். பெரிய பீடிகைகள் இல்லாமல் சொல்வதாயின் -   இது பௌன்சர் நேரம் !! நேற்றைய மாலையில் கூரியரில் நாங்கள் சேர்ப்பித்த சந்தாப் பிரதிகள் உங்களை எட்டிடும் போது - 'பர பர'வென டப்பாவைப் பிரித்து "ரௌத்திரம் பழகு" இதழினை மட்டுமன்றி - மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் மூன்றையும் அவசரம் அவசரமாய் அழகு பார்த்து விட்டு - புயல் வேகத்தில் பௌன்சரின் கிராபிக் நாவலைப் படித்தான பின்னே உங்களின் reactions எவ்விதம் இருக்குமென்று கொஞ்சமாய் நானே மனக்கண்ணில் ஓடச் செய்து பார்த்தேன்...!

"வாவ்....ஆக்ரோஷமான கதைக்களம் !! என்னவொரு அசாத்திய சீற்றம்....வேகம் !! வித்தியாசமான சித்திரங்களும், வர்ணங்களும், அதகள ஆக்ஷனுமாய் இதுவொரு  no holds barred அதிரடி தான் !!" என்பது ஒரு சாராரது ரசனையின் வெளிப்பாடாய் இருந்திடக் கூடும்  !

இன்னொரு பக்கமோ - முகமெல்லாம் எள்ளும்,கொள்ளும் வெடிக்க,  "இதைப் படித்து விட்டு லோகத்தில்  என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வெளியிட்டீர்களோ சாமி ?" என்ற காரசாரக் கேள்வியோடு நண்பர்களின் தரப்பு # 2 வரிந்து கட்டிக் கொண்டு நிற்கக்கூடும் !

மூன்றாம் தரப்போ - 'அட போய்யா....!! மனுஷன் என்னென்னவோ பார்த்தாச்சு....படிச்சாச்சு..! இந்தக் கதைலாம் எங்களுக்கு சப்பை மேட்டர்...! இதுக்கு தான் இத்தனை பில்டப்பாக்கும்  ? ஹக்கும்!'  என்ற விசனத்தை வெளிப்படுத்திடவும் வாய்ப்புள்ளது ! 

School of thought # 4 - ' 'இங்கிலீஷில் படித்த கதை தான் ! ஆனால் அதிலிருந்த டெம்போ தமிழில் மிஸ்ஸிங் ...இன்னும் சிறப்பாகப் பண்ணியிருக்கலாம் !' என்ற ரீதியில் இருக்கவும்  கூடும் !! 

Last but not the least, - "அட..போங்க சார்..! இதே நேரத்திற்கு இதுவொரு 'தல' சாகசமாகவோ ; 'தளபதி' சாகசமாகவோ இருந்திருந்தா தூள் கிளப்பியிருக்கும் !! கௌபாய் கதைகள் என்றாலே அவர்கள் தான் டாப் ! "என்பது இன்னுமொரு அபிப்ராயச் சங்கிலியாகவும் இருக்க வாய்ப்புகள் பிரகாசம் ! 

நீங்கள் எந்த நம்பரின் சிந்தனைக்குச் சொந்தக்காரராக இருப்பினும், ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையான பீலிங் inevitable என்றே சொல்லுவேன் ! பிடித்தாலும் ; பிடிக்காது போனாலும் இம்மாதத்து  ஒற்றைக்கை ஆசாமியிடம் ஒரு வித வசீகரம் இருப்பதை நாம் நிச்சயமாய் மறுக்க வாய்ப்பில்லை என்பதே அந்த common thought ! சமீப காலங்களில் வேறு எந்தவொரு அறிமுக நாயகனைச் சுற்றியும் இது போன்றதொரு buzz இருந்ததாகவோ ; எதிர்பார்ப்பு கிளம்பியிருந்ததாகவோ எனக்கு நினைவில்லை ! அந்த வகையில் பார்த்தால் களமிறங்கும் முன்பாகவே  மனுஷன் அரைசதம் போட்டு விட்டார் ! கதையும் ; இந்தக் கதை பாணியும் உங்களுக்குப் பிடித்துப் போயிடும் பட்சத்தில் அந்த அரை சதம் ஒரு செஞ்சுவரி ஆகிடும் ! So துவக்க மேட்சிலேயே அண்ணன் '100' போடப் போகிறாரா - என்ற கேள்விக்கு விடையறிய ஆள் காட்டி விரலின் மீது நெளிந்து நிற்கும் நடுவிரலோடு காத்திருக்கிறோம் ! 

இந்த இதழின் பக்கங்களைப் புரட்டிடும் போது உங்களை முதலில் தாக்கிடப் போவது அந்த சித்திர பணியும், ஒரு மாறுபட்ட வர்ணப் பாங்குமே என்று தான் சொல்லுவேன் ! 'பளீர்' பளீர்' கலர்களுக்கு  இடமின்றி - அந்நாட்களது உலகை rustic colors வாயிலாக வெளிக்காட்ட முயற்சித்துள்ளனர் படைப்பாளிகள் ! நம் ஆற்றலுக்கு இயன்றவரை அந்த வர்ணக் கலவைகளுக்கு நம் அச்சுப் பணியாளர்கள் நியாயம் செய்திருக்கிறார்கள் என்பதை கதையைப் படிக்கும் போது புரிந்திட இயலும் ! 'அட..இங்கே ஏன் நீலம் கம்மியாகத் தெரிகிறது ? இங்கே ஏன் சிவீரென்று உள்ளது ?' போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திடும் பட்சத்தில் - please be assured ஒரிஜினல் கலரிங் பாணியே இது தான் என்று  !! 

அட்டைப்படத்தைப் பொறுத்தவரை முன்னட்டை டிசைன் ஒரிஜினலின் பிரதிபலிப்பே  - சற்றே மித வர்ணங்களோடு ! பின்பக்கமும் கூட கதையினுள் இருந்து எடுக்கப்பட்ட frame -ல் உருவாக்கப்பட்ட டிசைனே ! அட்டை to அட்டை இந்த இதழில் பௌன்சரும் ;  அவனது கதைகள் தொடர்பான விளம்பரங்களும் மட்டுமே இடம் பிடித்து நிற்பதை நீங்கள் பார்த்திடப் போகிறீர்கள்! In fact - அந்த முதல்பக்கத்து ஹாட்லைன் கூட ஒரு கடைசி நிமிடச் சிந்தனையின் பலனே ! இக்கதையின் பாணி என்னவென்ற முன்னறிவிப்பின்றி புதுசாய் உள்ளே நுழையக் கூடிய வாசகர்களுக்கு சின்னதொரு caution ஆக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதனை நுழைத்து வைத்தேன் ! 
Chennai Bookfair Banner.....
இறுதியாக - கதை ! ....அந்தக் கதையைப் பற்றி..! நிச்சயமாய் இது உலகை உலுக்கப் போகும் ஒரு one of a kind ரகமெல்லாம் கிடையவே கிடையாது தான் ! சொல்லப் போனால் ஒரு காரசாரமான  தெலுங்குப் படத்துக்கு இதன்  கரு சுலபமான தேர்வாகிப் போகக் கூடும் ! ஆனால் காமிக்ஸின் கௌபாய் உலகிற்கென உள்ள   சில எழுதப்படா விதிகளை காலுக்குள் போட்டு நசுக்கித் தாண்டவமாடுவதில் தான் இந்தத் தொடர் வேறுபட்டுத் தெரிகிறது என்பது எனது அபிப்ராயம் ! ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் ஒரு டெக்ஸ் வில்லரோ ; கேப்டன் டைகரோ ; சிஸ்கோ கிட்டோ ; கமான்சேவோ நல்லவர்கள் - வல்லவர்கள்- நீதியின் அண்மையில் நிற்பவர்கள் என்ற லேபிலைச் சுமந்திருப்பதே மாமூல் ! ஆனால் பௌன்சரின் உலகில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் குறைகளைச் சுமந்து நிற்கும் ஆசாமிகள் ! உடலிலோ ; மனதிலோ ; குணத்திலோ ஒவ்வொருவனிடமும் ஒரு இருண்ட பக்கம் 'பளிச்' பிரதானமாய் இருக்கக் கூடும் ! இது போன்ற கதைமாந்தர்களை ஒட்டுமொத்தமாய் இணைத்து ஒரு தொடரை உருவாக்குவதென்பது தினசரி நிகழ்வல்ல - நிச்சயமாய் !  அதிலும் கௌபாய் கதையுலகின் ஜாம்பவானான கேப்டன் டைகரை உருவாக்கியவரிடமே பாராட்டைப் பெறும் விதமாய் அந்தத் தொடர் அமையும் போது அதனில் நிச்சயம் ஏதோ ஒரு X  FACTOR இருந்திட வேண்டும் !! அது என்னவாக இருக்குமென்ற தேடலில் தான் நாம் தற்போது நிற்கின்றோம்..! 

Bouncer பரீட்சையில் நமக்குக் காத்திருக்கும் மதிப்பெண்கள் எத்தனையாக இருப்பினும் - அவை நம் தேடலுக்கொரு தடை போடப் போவதில்லை ! 'ரிஸ்க் இல்லா கதைக்களங்களுக்குள்ளே  பிரயாணம் செய்வதே போதும் ... பரீட்சையெல்லாம்  எதற்கு ?' என்ற சிந்தனை சொகுசாய்த் தோன்றினாலும் - சோம்பலுக்குள்ளே கால் பதிக்கச் செய்யும் ஆபத்துக்கும் அது வித்திடக்கூடும் தானே ?! எல்லாவற்றிற்கும் மேலாக  - பரீட்சைக்குத் தயாராவது ; அந்தப் படபடப்பை ரசிப்பது ; மதிப்பெண்களை எதிர்நோக்கி 'திக் திக்' இதயத்தோடு காத்திருப்பது ; வெற்றியாயின் லயிப்பது - தோல்வியாயின் அதனிலிருந்து படிப்பது என இதுவொரு வித்தியாச அனுபவம் - ஒவ்வொருமுறையும் !! மின்சார ஓட்டைக்குள்ளே விரலை விட்டு மாயமாகும் மனிதனின் கதையை ஆயிரத்தோராவது தடவையாய் வெளியிடும் சொகுசு ஒரு பக்கமெனில் - இந்த கிராபிக் நாவலின் அனுபவங்கள் வானவில்லின் மறு முனையல்லவா ? So ஒரு வசந்த காலத்துக் காலையை இதமாய் ரசிப்பது சுகமெனில் - மழை மேகத்துடனான ஒரு கார்முகில் நாளின் லயிப்பையும் கூட இன்னொருவிதமான ரசனையாய் எடுத்துக் கொள்ளலாம் தானே ?! பொறுமையாய் பௌன்சரை படித்தான பின்னே அதனை அங்குலம், அங்குலமாய் நீங்கள் ஆராய்வுக்கு ஆட்படுத்தப் போவது நிச்சயம் ; அதனை சுவாரஸ்யத்தோடு உள்வாங்கிடக் காத்திருப்போம் !

Moving on, மும்மூர்த்திகளின் 3 மறுபதிப்பு இதழ்களும் கூரியர் பார்சலில் சேர்த்தி ! துரதிர்ஷ்டவசமாய் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" இதழினை மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்திட இயலாது போய் விட்டது ; அடுத்த வாரம் தயாராகிடக் காத்துள்ள இந்த இதழை பிப்ரவரி மாதத்து இதழ்களோடு அனுப்பிட உங்கள் அனுமதி கோருகிறோம் ! சீசனின் உச்சத்தில் எக்கச்சக்கப் பணிகளுக்கு மத்தியினில் பைண்டிங் நண்பர்  விழிபிதுங்கி நிற்பதைப் பார்க்கும் போது நம்மாட்களுக்கே இதற்கு மேலே அவரை குடலை உருவ மனம் வரவில்லை என்பதே நிலவரம் ! We hope for your understanding !

முதல்முறையாக மறுபதிப்புக் காணும் "நயாகராவில் மாயாவி " இதழும் சரி ; இதர 2 இதழ்களும் சரி - வழக்கமான காகிதத்தை விடத் 'திக்'கான தாளில் ; 'திக்'கான அட்டையில் அழகாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ! ஒரிஜினல்களில் உள்ளது போலவே விச்சு கிச்சு ; புதிர் பக்கங்கள் என்று பக்கங்களை நிறைத்துள்ளேன் - எனது 'பீப்பீ' களை இதனிலும் நுழைத்து ஊதிடாமல் ! So இவை ஒரிஜினலைப் போன்ற இதழ்கள் என்பது மட்டுமன்றி ; இன்று உலகினில் வேறெங்கும் ; வேறெந்த மொழியிலும் உலவிடா; உலவிடச் சாத்தியமே இலா இதழ்கள் என்பது மிகைப்படுத்தல் இல்லா நிஜம் ! இந்தக் கதைவரிசைகளுக்கான ஒரிஜினல்கள் டிஜிடல் கோப்புகளாய் படைப்பாளிகளால் பத்திரப்படுத்தப்படவில்லை என்பதால் நம்மிடம் உள்ளவையே இனி என்றேனும் ; எப்போதேனும் வரக்கூடிய வேற்று மொழிப் பதிப்புகளின் ஆதாரமாகவும் இருந்திடப் போகின்றன ! இதன் பொருட்டு அந்நாட்களில் நமக்கு வந்திருக்கக் கூடிய ஆங்கில ஒரிஜினல்களின் spare prints களிலிருந்து ஸ்கேன் செய்து படைப்பாளிகளுக்கு அனுப்பவிருக்கிறோம் !

இன்று மாலை துவங்கக் காத்திருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நம்மாட்கள் நேற்றே ஆஜராகி புத்தகங்களை அடுக்கத் தொடங்கி விட்டனர் ! காலி இடமே தெரியாது ஸ்டாலை banner களால் நிரப்புவதாய் உத்தேசம் இம்முறை ! பாருங்களேன் அவற்றில் சிலவற்றை :
உங்களின் வருகைகளை எதிர்நோக்கிக் காத்திருப்போம் !! Please do drop in all !!See you later this evening !

பின்குறிப்பு : ஜனவரி பிறக்கும் வரை சந்தா செலுத்தாதிருந்த நண்பர்கள் புது இதழ்களின் வருகைகளைத் தொடர்ந்து - அவசரம் அவசரமாய் பணம் அனுப்பி விட்டு பிரதிகள் அனுப்பியாச்சா ? என்ற கேள்விகளோடு நமது போன் லைன்களை 24 x 7 மும்முரமாக வைத்துள்ளனர் ! பண வரவை சரி பார்த்து விட்டு ; புதுச் சந்தாக்களை நடைமுறைப்படுத்திட எங்களுக்கு ஒரு நாள் அவகாசமேனும் தேவை - ப்ளீஸ்  ! So சற்றே பொறுமை அவசியமாகிடுமே இத்தருணத்தில் ! கடந்த 2 நாட்களில் மாத்திரமே தினமும் சராசரியாய் 200 அழைப்புகள் - வெவ்வேறு காரணங்களுக்காக எனும் போது 2 பெண்களால் அவற்றிற்கு சரி வர பதில் சொல்லி ; புதிய இதழ்களின் டெஸ்பாட்ச் வேலைகளையும் பார்த்திடுவது மிகச் சிரமம் என்றாகிறது ! So நேற்றைய கூரியர்களின் டிராக்கிங் நம்பர்கள் பற்றிய வினவல்களை இன்று ஒரே ஒரு நாள் மட்டும் சற்றே மட்டுப்படுத்தினால் - தொங்கலில் நிற்கும் நிறைய வேலைகளை அவர்கள் நிறைவு செய்திட எதுவாக இருக்கும் ! இன்னமும் கூடுதலாய் ஒரு front office assistant பணியமர்த்திட முயற்சித்து வருகிறோம் ; அது வரை உங்களின் புரிதலுக்கும் பொறுமைக்கும்  எங்களின் அட்வான்ஸ் நன்றிகள் !! 

Sunday, January 04, 2015

ஞாயிறும்..ஜூரியும்.....!

நண்பர்களே,

வணக்கம் ! ஒரு சந்தோஷச் செய்தியின் பகிர்வோடு இவ்வார ஞாயிறுப் பதிவிற்கொரு பிள்ளையார் சுழி போடுகிறேனே ! இன்னமும் ஐந்தே நாட்களில்  துவங்கவிருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நமக்கொரு தனி ஸ்டால் ஒதுக்கப்பட்டிருப்பதாய் நேற்று பின்னிரவில் ஒரு SMS வாயிலாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் ! கடவுளின் கருணையும், அமைப்பாளர்களின் பெருந்தன்மையும், நண்பர்களின் முயற்சிகளும் , ஒன்றாய்க் கைகோர்க்க 2015-ன் ஜனவரியில் நாம் சென்னையில் ஜாகை போட அழகாய் ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது ! மூவருக்கும் நம் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக ! நமது ஸ்டாலின் எண் : 150. இன்னமும் ஸ்டால் லே-அவுட் இல்லாத நிலையில் இது ஓரமாய் உள்ளதா ; நடுவில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள வழியில்லை ! ஆனால் பஞ்சு மிட்டாய் கடைக்குப் பக்கத்திலோ ; பாவ் பாஜி மேடைக்கு முன்புறமோ கொட்டகை போட அனுமதி கிடைத்திருந்தால் கூட "அய்ய்..சூப்பரு !" என்று குதூகலிக்கும் நிலையில் உள்ள நமக்கு இது ஒரு பெரிய விஷயமே !! So - சென்னைக்கு டிக்கெட் போட்டுள்ள நண்பர்கள் திட்டப்படியே பயணங்களை மேற்கொள்ளவும் ; இனி திட்டமிட எண்ணியிருக்கும் நண்பர்கள் அவசரமாய் ரயிலையோ ; பஸ்ஸையோ ; ஹெலி-காரையோ பிடித்து சென்னை நந்தனம் YMCA வந்து சேர்ந்திடவும் அன்போடு கோருகிறோம் ! We would love to see you all there !! 

அருகாமையிலிருக்கக் கூடிய சக கடைக்காரர்களின் சாபங்களையும், அமைப்பாளர்களின் கோபங்களையும் மீண்டுமொருமுறை சம்பாதிக்க வேண்டாமே என்ற ஒரே நோக்கோடு தான் சென்னை புத்தக விழாவின் வேளையினில்  "மின்னும் மரணம்" போன்றதொரு பெரிய இதழின் ரிலீஸ் என்ற ஏற்பாடை செய்திட எனக்கு தைரியம்  எழுந்திடவில்லை ! ஆனால் "I want more emotions..' என்று எதிர்பார்த்திடும் நண்பர்களுக்கு சென்னை விழா 'சப்' பென்று போய்விடக் கூடாதே என்பதாலேயே "10 இதழ்கள்" என்ற சத்துக்கு மீறிய முயற்சியை இழுத்து விட்டிருந்தேன் ! ஆனால் அதன் பின்னணியில் டப்பா இத்தனை பெரிய டான்ஸ் ஆடும் விதமாய்  பணிகள் அமைந்திடுமென்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை ! ஒரு NBS : ஒரு LMS மெகா இதழினில் கூட ஒரே புக்..ஒரே அட்டைப்பட டிசைன் ; ஒரே பைண்டிங் என சாலை சீராய் தோன்றியது ! ஆனால் இம்முறையோ 10 அட்டைப்பட டிசைன்களை 30 நாட்களுக்குள் முடித்து வாங்குவதற்குள்ளாகவே எனக்கு மனக்கண்ணில் காவி வேட்டி ; காசி / இராமேஸ்வரப் புண்ணிய ஸ்தலங்கள் ; ஜடாமுடி (அதற்கு வாய்ப்பே இல்லையோ.?!!) ; மரத்தடிக் கடுந்தவம் என்று ஏதேதோ கலர் கலராய் வந்து போயின ! நல்ல நாளைக்கே நமது டிசைனர் பொன்னனிடம் வேலை வாங்குவது என்பது ஆவ்ரெல் டால்டனுக்குப் பசிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்று கடினமோ கடினமான பணி ; இந்த அழகில் 10 டிசைன்களை மொத்தமாய் ஒரே நபரிடம் ஒப்படைத்தால் கதை கந்தலாகிப் போகும் என்பதால் 'உள்ளே-வெளியே' என்று ஏதேதோ சர்க்கஸ் செய்தோம் ! இதோ - காத்திருக்கும் மறுபதிப்புகளின் அட்டைப்படங்களின் முதல்பார்வைகள் ! 
இதோ - முதன்முறையாக நமக்கென பிரத்யேகமாய் வரையப்பட்டதொரு அயல்நாட்டு கவர் டிசைன் ! சில வாரங்களுக்கு முன்பாய் இதன் பென்சில் ஸ்கெட்ச் மாத்திரமே பார்த்திருந்தீர்கள் ; அதன் முழு வண்ண பிரதியைப் பார்த்திடும் போது உங்களின் முதல் impression என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் ! இது லாரன்ஸ் டேவிட் கதைக்கான ராப்பர் என்றாலும் அட்டையில் நிற்கும் ஆசாமி அவர்களில் எவரையும் போல் தெரியக் காணோமே என்ற உங்களின் மனதின் குரல் எழுந்திடும் முன்பாகவே அதற்கொரு சமாதானமும் சொல்லி விடுகிறேன் ! கதையின் உட்பக்கங்களுள் ஒரு ஏழெட்டுப் பக்கங்களைத் தேர்வு செய்து, ஐரோப்பாவில் வசிக்கும் இந்த ஓவியருக்கு அனுப்பிவிட்டு அதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவராகவே ஒரு டிசைனை உருவாக்கச் சொல்லிக் கோரியிருந்தோம் ! அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை - இந்த வித்தியாசமான பாணியிலான டிசைனைத் தயார் செய்து அனுப்பினார் ! எனக்கும் கூட காலம் காலமாய் அறைத்த அதே மாவை நமது ஓவியரைக் கொண்டு அறைப்பதன் மத்தியினில் இதுவொரு refreshing change ஆகப்பட்டது ! தவிரவும் ஒரிஜினலாய் Fleetway இந்தக் கதைகளை வெளியிட்ட நாட்களில் நாயகர்களுக்கும், கதைக்கும், அட்டைப்பட ஸ்டில்களுக்கும் துளி கூட சம்பந்தம் இருந்ததாய் எனக்கு நினைவில்லை ! So அவரது டிசைனுக்கு நமது கதையின் பெயரினை மட்டுமே இணைப்பாய் அமைத்து விட்டு முன்னட்டையைத் தயார் செய்து விட்டோம் ! பின்பக்கத்திலாவது நமது ஆசாமிகள் தலை காட்டினால் தேவலை என்பதால் இரு கட்டங்களுக்குள் அவர்களை போட்டு விட்ட போது - பிரமாதமாக உள்ளதோ, இல்லையோ - மாமூலான நமது பாணியிலிருந்து சற்றே விலகித் தெரியும் ஒரு ராப்பர் உருவாகியிருப்பது போல் எனக்குப் பட்டது ! உங்களின் தீர்ப்புகள் என்னவோ கணம் ஜூரியார் அவர்களே ?!    
தொடர்வது நம் ஓவியரின் கைவண்ணம் + கம்பியூட்டர் நகாசு வேலைகளோடு மாயாவியின் ராப்பர் ! (இதன் ஒரிஜினலில் ப்ளூ வர்ணம் அழுத்தமாய் வந்துள்ளது ; ஏனோ தெரியவில்லை எனக்கு வந்திருக்கும் இந்த பைலில் மட்டும் ப்ளூ weak ஆக உள்ளது ! ராப்பரில் depth நிறையவே உள்ளது !) என்ன தான் நாம் முயற்சித்தாலும் அந்த ஐரோப்பிய முக ஜாடைகளை நம் ஓவியரால் அப்படியே கொண்டு வருவது சிரமக் காரியமாய் இருப்பதால் - மாயாவியின் முகத்தை மட்டும் கதையின் உட்பக்கங்களில் இருந்து இரவல் வாங்கிக் கொண்டு அதன் மீது வண்ணப் பூச்சு செய்து அவரது உடலோடு பொருத்தியுள்ளோம் ! இந்த இணைப்பும், ஓவியமும்  புலிகேசி வடிவேலின் மகாசிந்தனை ரேஞ்சில் உள்ளதா ? என்ற தீர்ப்பும் இந்தக் கோர்ட்டின் ஜூரிப் பெருமக்களாகிய உங்களின் முன்னே நிற்கிறது ! (ஏதோ பார்த்து கவனிச்சுப் போடுங்க சார்வாள் !! )

மீண்டுமொரு மாலையப்பன் ஸ்பெஷல் - முன்னட்டைக்கு - முக இணைப்போடு  ! ஜானி நீரோவின் அழகான முகத்தை சேதம் செய்திடாமல் வரைவது சுலபமல்ல என்பதால் கதையின் inner pages-லிருந்து அவரது முகத்தை ஆட்டையைப் போட்டான பின்னே  - வழக்கமான கம்பியூட்டர் ஜோடனைகள் சேர்ந்து கொள்ள முன்னட்டை உங்கள் முன்னே ! பின்னட்டைக்கோ அந்நாளைய "பெய்ரூட்டில் ஜானி"-க்கு முத்து காமிக்ஸில் உருவாக்கியிருந்த அதே டிசைனைப் பயன்படுத்தியுள்ளோம் ! "நயாகராவில் மாயாவி" + "வான்வெளிக் கொள்ளையர்" இதழ்களுக்கும் கூட  இதே பாணியில் முந்தைய முனட்டைகளை எங்கேயாவது நுழைக்க வழியுள்ளதா என்று பார்க்கத் தான் செய்தேன் ; ஆனால் அவற்றின் ஒரிஜினல்கள் ரொம்பவே வீக் என்பதால் அது சாத்தியமாகவில்லை ! ஜானியின் cover - தேறுமா ? ஜூரிக்கு தோன்றிடும் முதல் அபிப்ராயங்கள் என்னவோ ?

Last of the lot, நம் அபிமான (ஒரிஜினல்) கூர்மண்டையர் ஸ்பைடரின் அட்டைப்படம் ! இதற்கென துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாமல் ஒரிஜினலின் அட்டைப்படத்தையே பயன்படுத்திக் கொண்டு விட்டோம் ! இத்தனை அழகான ஒரிஜினல் உள்ள போது நாம் விஷப் பரீட்சைகள் செய்திட வேண்டாமே என்ற காரணம் பிரதானமாய் நின்றது ! சைத்தான் விஞ்ஞானி தான் ஸ்பைடர் தொடரின் முதல் கதையும் கூட எனும் போது நமது மறுபதிப்புப் படலதிற்கும் அதுவே முதல் கதையாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று தோன்றியது ! ( இராட்சசக் குள்ளன் - அடுத்த மறுபதிப்பாய் வந்திடும்) ! பின்னட்டைக்கு நாம் 1985-ல் பயன்படுத்திய அதே டிசைன் இப்போதும் பத்திரமாய் இருந்தது என்பதால் அதனையே ஸ்கேன் செய்து போட்டு விட்டோம் ! இளிக்கும் அந்த குற்றச் சக்கரவர்த்தியின் அட்டைப்படத்துக்கு ஜூரிக்கள் thumbs up தரப் போகிறீர்களா என்பதை ஆவலோடு அறிந்திடக் காத்திருப்பேன் ! 

மும்மூர்த்திகளின் மறுபதிப்புகளின் உட்பக்கங்கள் வழக்கத்தை விடவும் திக்கான வெள்ளைக் காகிதத்தில் பிரமாதமாக வந்துள்ளன என்பதை சொல்லியே ஆக வேண்டும் ! பழைய தமிழுக்குப் பதிலாய் புதுத் தமிழ் (கவனிக்க : தமிழ் மட்டுமே புதுசு யுவர் ஆனர் !!) ; எப்போதையும் விடப் பெரிய சைஸ் ; திக் தாள் ; திக் ராப்பர் என இவை படித்திட ; பாதுகாத்திட சூப்பராய் இருக்குமென்பது உறுதி ! வான்வெளிக் கொள்ளையர் & பெய்ரூட்டில் ஜானி கதைகள் அச்சாகி விட்டன ! மாயாவி நாளைய தினம் அச்சுக்குச் செல்வார் எனும் போது தொடரும் நாட்களில் நமது பைண்டிங் நண்பர் விழி பிதுங்கப் போகிறார் என்பது சர்வ நிச்சயம் ! ஸ்பைடரையும் அதன் பின்னே முடித்து வெள்ளிக்கிழமைக்குள் சென்னைக்குக் கொண்டு வர என்ன பல்டியடிக்கக் காத்துள்ளோமோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! ஏதோ ஒரு எதிர்பாரா சுணக்கம் நேர்ந்திடும் பட்சத்தில் ஸ்பைடர் மட்டும் நாலைந்து நாள் கழித்து சென்னை விழாவுக்கு வந்திடுவார் ! பௌன்செர் & மும்மூர்த்திகள் முதல் பந்தியிலேயே பரிமாறிடப்படுவர் - சர்வ நிச்சயமாய் ! 

And by the way, பௌன்சர் நிஜமாகவே பிரமாதமாக வந்துள்ளது - அச்சிலும், தயாரிப்பிலும் ! வெள்ளிக்கிழமை காலையில் பதிவாகவும், சந்தாப் பிரதியாகவும் அவர் உங்கள் முன்னே ஆஜராகி நிற்பார் ! இனி பைண்டிங்கில் நம்மவர்கள் காவல் கழுகுகளாய் நின்றிடும் தருணத்தில் நம் ஸ்டாலின் banner தயாரிப்புக்குள் நான் தலைவிடப் புறப்பட்டாக வேண்டும் ! So bye for now folks ! See you around !

P.S : ரேடியோ விளம்பரத்துக்கான பணிகள் துவக்கியுள்ளோம் ; catchy -யாக ஏதேனும் வாசகங்கள் சொல்லுங்களேன் guys  ? தற்போதைக்கு என் மண்டை 'கஜினி' சஞ்சய் ராமசாமியின் மண்டையைப் போல 'ஞே' என்று blank ஆக உள்ளது ! Your suggestions would help !! 


Update: STALL MAP !