நண்பர்களே,
வணக்கம். காமிக்ஸ் அல்லாத நம் பிற பணிகளுக்குக் கொஞ்சம் கூடுதல் அவகாசம் ஒதுக்கிடும் அவசியம் நேர்ந்ததால் கடந்த ஒரு வாரமாய் இங்கே தலை காட்ட இயலவில்லை ! இடைப்பட்ட நாட்களில் இங்கு உஷ்ணமாய் ; வருத்தமாய் பதிவுகள் பல நிறைந்திருப்பதை இன்று காலை தான் பார்த்திட்டேன். இன்னமும் முழுமையும் படித்திடவில்லை என்பது ஒரு பக்கமிருப்பினும், ஒரு பானை சோற்றின் ருசி அறிய ஒரு முழு விருந்து அவசியம் அல்ல தானே ?!
மொழிபெயர்ப்புப் போட்டி தொடர்பான எனது முடிவுகளில் உங்களுக்கு நேர்ந்த வருத்தங்கள் நியாயமானதே. ஆனால் - அங்கொன்றும், இங்கொன்றுமாய் நண்பர்களில் சிலர் பதிவு செய்துள்ளது போல - வழக்கமான பாணியிலான மொழிபெயர்ப்பினை எதிர்பார்த்து வந்திடும் (வலைக்கு அப்பாலுள்ள) இதர வாசகர்களுக்கு - நம் வலைப் போட்டியாளர்களின் எழுத்துக்கள் எத்தனை தூரம் ஏற்புடையதாய் இருக்குமோ என்ற ஆதங்கமே எனது முடிவின் பின்னணிக் காரணி. முன்பொரு காலம் "வாசகர் ஸ்பாட்லைட் " பகுதியினை அறிமுகம் செய்து நான் வாங்கிக் கட்டிக் கொண்ட உதைகள் ஆயுளுக்கு மறக்கா அனுபவம். ஆனால் இம்முறை நான் இந்த Kaun Banega Translator முயற்சிக்குத் தயாரானது நம் நண்பர்களின் ஆற்றல்களின் மீது எனக்குள்ள அசாத்திய நம்பிக்கையின் பொருட்டே !! மாற்றங்களை ஜாலியாய்க் கூட ஏற்றுக் கொள்ள விரும்பா வாசகர்களுக்கும் நம் போட்டியாளர்களின் எழுத்துக்களில் எவ்வித சஞ்சலமும் நேர்ந்திட வாய்ப்பிராது என்ற திட நம்பிக்கை தந்திட்ட தைரியமே !! லார்கோவின் இதழினை ஒரு ''ஆல்-கலர் இதழ்' என தீர்மானித்த மறு கணமே - இந்தப் போட்டியின் வெற்றி பெறும் மொழிபெயர்ப்பினை இணைத்திட இது வாகான வாய்ப்பென மனதுக்குப் பட்டது.அவசரமாய்-ஒரே வாரத்தில் போட்டியாளர்களிடமிருந்து மொழிபெயர்ப்பினைக் கோரியதன் காரணம் வெற்றி பெறும் எழுத்துக்களை மார்ச் இதழில் (லார்கோ) இணைத்திட வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே ! இதர பக்கங்கள் அச்சுக்குத் தயாராகி விட்ட நிலையில் - 'குட்டியான மந்திரியார் கதை தானே...? நண்பர்களுக்கு ஒரு வாரமே ஜாஸ்தி ! ' என்ற எண்ணத்தில் நான் விதித்த கால அவகாசமே - சிக்கலுக்கு வித்திட்டதென்று இப்போது புரிகிறது. இன்னும் சற்றே கூடுதலாய் அவகாசம் கொடுக்க சாத்தியப்பட்டிருக்கும் பட்சத்தில் - போட்டியாளர்களின் கைவண்ணம் நிச்சயம் ஒரு லெவல் உயரே சென்றிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
36 போட்டியாளர்களில், ஒரு பாதிக்கும் அதிகமானோர் முயற்சிக்கவே இல்லை என்ற போது ஆடுகளமே ரொம்பவும் குட்டியாகிக் போனது போல் பட்டது எனக்கு ! தவிரவும் அவசரத்தில் எழுதப்பட்டவை என்பதாலோ ; அல்லது மந்திரியாரின் கதைகள் நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே வந்திடுவதால் அதன் ஸ்டைலுக்குப் பரிச்சயம் கொண்டிடுவது சற்றே சிரமமாய் தோன்றியதாலோ, போட்டியாளர்களின் எழுத்துக்களில் சின்னதாய் ஒரு தயக்கத்தை பார்த்திட முடிந்தது. 'பரவாயில்லை..ஜாலியான போட்டி தானே ? ...அப்படியே வெளியிடுவோம்..!' என நான் தீர்மானித்திடும் பட்சத்தில் - 'காசு கொடுத்து வாங்குவது உம் தலையில் உதிக்கும் விஷப் பரீட்சைகளைப் படித்திடவா ?' என்ற ரீதியிலான காரசாரக் கடிதங்களுக்குப் பஞ்சமிராது என்று மனதுக்குப் பட்டதால் வேறு வழியின்றி அரக்கப் பறக்க எழுதி மந்திரியாரை அச்சுக்கு அனுப்பிட வேண்டியதாகிப் போனது !அந்த சடுதியில் நம் போட்டியாளர்களின் நிலைப்பாட்டிலிருந்து இந்த விஷயத்தை நான் ஒரு கணமேனும் அணுகிடத் தவறியது நிச்சயம் என் பிழையே !Sorry indeed guys !!
நடந்திட்ட நிகழ்வுகளின் நிஜ விளக்கம் இதுவே தவிர - இதன் பின்னணியினில் சத்தியமாய் வேறு thought process துளியும் செல்லவில்லை ! எனது / எங்களது எழுத்து ஆற்றல்களை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவோ ; 'எழுதிப் பார்த்தல் எத்தனை சிரமம் என்பதை நீங்களும் உணருங்கள் மக்கா' என்ற ரீதியினிலோ என் எண்ணங்கள் ஒரு போதும் பயணிக்கவில்லை. எழுதுவது தான் எங்கள் வேலை ; எங்கள் பணி எனும் போது - 'நாங்கள் பெரிய வஸ்தாதாக்கும் ; மகா சண்டியராக்கும்' என்றெல்லாம் பீற்றல் விடுவதற்கு வேலையே கிடையாதே என்ற school of thoughtஐ சேர்ந்திட்டவன் நான். வைத்தியம் தெரிந்தால் தானே அவர் ஒரு டாக்டர் ? ; எழுதத் தெரிந்தால் தானே எடிட்டரோ, இன்ன பிற அடைமொழிகளோ சாத்தியம் ?
இதனில் நான் எதிர்பார்த்ததெல்லாம் - கூட்டாஞ்சோறாய் இன்று அரங்கேறி வரும் நம் காமிக்ஸ் சமையலில், நண்பர்களின் கைப்பக்குவமும் சிறிதேனும் இருந்திட்டால் இன்னும் சுவை சேர்க்குமே என்பது மாத்திரமே ! இன்றில்லாவிடினும் - வரும் நாட்களில் அந்தக் கனவை நிஜமாக்கிடுவேன் ! அதன் முதல் படியாக - மார்ச் வெளியீடான "துரத்தும் தலைவிதி" இதழோடு ஒரு குட்டியான 8 பக்க black & white இணைப்பு, அதே மந்திரியாரின் கதையோடு - வெற்றி பெற்ற நண்பரின் மொழிபெயர்ப்போடு வெளியாகிடும் ! அவரது பெயர் இப்போதைக்கு suspense ஆக இருந்திடட்டுமே ?!மாற்றங்களை விரும்பிடா நண்பர்களுக்கும் சிக்கலின்றி ; போட்டியாளர்களின் ஆர்வத்தினையும் மதித்திட்டதொரு சிறு உபாயமாய் இது அமைந்திட்டால் நலமே !
இதனிலும் ஒரு flip side இல்லாதில்லை என்பதை மண்டை சுட்டிக் காட்டத் தான் செய்கிறது ! ' மொழிபெயர்ப்பில் ஏழு கழுதை வயசாகிட்ட உங்களின் எழுத்துக்களையும் ; அவசரத்தில் எழுதப்பட்ட வாசகரின் மொழிபெயர்ப்பையும் ஒருங்கே வெளியிட்டு - ஒப்பீட்டின் மூலம் மட்டம் தட்டப் பார்க்கிறீர்களா ?' என்ற கேள்விக்கு வாசல்கள் திறந்தே உள்ளன என்பதையும் நான் உணராதில்லை ! ஆனால் என் நோக்கம் அதுவல்ல என்பதை நண்பர்களுக்கு ஊர்ஜிதப்படுத்திட வேறு மார்க்கம் தெரியவில்லையே எனக்கு ! அதே சமயம், 'நண்பரது மொழிபெயர்ப்பு என்னதை விட சூப்பர்' என்று வாசகர்கள் கருதிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்ற உல்டா சிந்தனையில் எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்ளலாமோ ?! Anyways, ஒரு விவாதமில்லாவிடின் சுவாரஸ்யம் குன்றிடும் என்பதாலோ என்னவோ ; அவ்வப்போது சர்ச்சைகளை தேடிச் சென்று தழுவிடுவதில் எனது தேர்ச்சி levelகள் உயரே உயரே சென்று கொண்டே உள்ளன ! "இனியெல்லாம் சுபமே' என்று இந்த சங்கதிக்கு end card போடும் முன்னே - இதோ புதிய அறிவிப்பு 10319....!
தொடரும் மாதங்களில் ஆங்கிலத்தில் "The Green Manor" என்ற பெயரினில் வெளிவந்திட்ட ரொம்பவே மாறுபட்டதொரு சிறுகதைத் தொகுப்பு நம் இதழ்களில் வரவுள்ளது .எட்டு அல்லது பத்துப் பக்க நீளம் கொண்ட இப்புது ரக மர்மக் கதைகளை மொழிபெயர்த்திட ஆர்வமுள்ள நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! மந்திரியாரின் காமெடி தோரணம் ஒரு விதமென்றால், Green Manor தந்திடவிருக்கும் இருண்ட மர்மங்கள் முற்றிலும் மாறுபட்ட சவாலாய் இருந்திடும். "Translation -சீசன் 2" என்ற தலைப்போடு ஒரு மின்னஞ்சல் தட்டி விடும் நண்பர்களுக்கும், இப்போட்டியினில் பங்கேற்க விழையும் வலைக்கு அப்பாலுள்ள நம் வாசகர்களுக்கும் கதையின் செராக்ஸ் பக்கங்கள் மார்ச் 15 தேதியன்று அனுப்பிடப்படும். 15 நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு இம்முறை தூள் கிளப்பிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !
புதிய அறிவிப்பு : 163900 : இம்முறை (எனது கண்ணோட்டத்தில்) போட்டியினில் இரண்டாம் இடத்தை இணைந்து பிடித்துள்ள இரு நண்பர்களின் மொழிபெயர்ப்புகளும் இங்கே நம் வலைபக்கத்தில் லார்கோவின் இதழ் வெளியான பின்னே பிரசுரமாகும். (சித்திரங்களோடு அல்லாது ; வெறும் ஸ்கிரிப்ட் மாத்திரமே) ! So அவர்களது முயற்சிகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தது போல் இருக்குமென்று நினைத்தேன்.
இப்போதைக்கு ஏதாச்சும் ஒரு theme song ஐ சீட்டியடித்துக் கொண்டே நான் குதிரையில் சேணத்தைக் கட்டிடும் நேரமாகி விட்டது ! லார்கோவின் புதிய இதழ் மார்ச் முதல் வாரத்தில் உங்களை சந்திக்க வந்திடும் ! See you then guys ! Take care !