நண்பர்களே,
வணக்கம். பக்கத்து வீட்டுப் பசுமாடு கன்று போட்டாலே 14 பத்தி எழுதுபவனுக்கு, ஆண்டின் இந்த “அட்டவணை மேளா” சிக்கும் போது சொல்லவும் வேணுமா – உற்சாகத்துக்கு ? வெல்கம் guys – கடந்த பத்தாண்டுகளாய் அக்டோபர்களில் அரங்கேறி வரும் “வாத்திக்கொரு தேர்வு” ரகளையின் லேட்டஸ்ட் பதிப்புக்கு !
2022 !! பேரிடர்களின் சம்மட்டியடிகளைக் கடந்து நம்பிக்கை நட்சத்திரமாய் மிளிரும் ஆண்டு ! "அலையடிக்கும்.....புயலடிக்கும்" என்ற doomsday கொரோனோ ஆரூடங்கள் இன்னமும் புழக்கத்தில் இருந்து வந்தாலும், ஏதோ ஒரு மூலையில் மனசில் நம்பிக்கை ததும்புகிறது – காத்திருக்கும் ’22 நிச்சயமாய் காவு வாங்கிடாது ; காலை வாரிடாது என்று ! நித்தமும் கோடிகளில் நடந்து வரும் தடுப்பபூசிப் படலம் தரும் தைரியமா அது? இயற்கையின் கனிவின் மீதான நம்பிக்கையா? அல்லது அசட்டுக் கற்பனையா? என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் அதள பாதாளங்களைப் பார்த்து விட்டான நமக்கு, இனியும் ஒரு bigger படுகுழியினைப் பார்க்க அவசியமிராது என்றே உள்ளுக்குள் சொல்லுகிறது! அந்த நம்பிக்கை நிஜமாகிட பெரும் தேவன் மணிடோவிடம் வேண்டியபடியே விஷயத்துக்குள் குதிக்கலாம் !
Oh yes – ஒவ்வொரு அட்டவணையின் போதும். வெளிச்ச வட்டத்தை ஆக்ரமித்திட டாப் நாயக / நாயகியர் மத்தியில் போட்டிகள் இருப்பதுண்டு தான் ! உச்சமாய் தல Vs. தளபதியின் மல்லுக்கட்டுக்களையும் பார்த்தவர்கள் தானே நாமெல்லாம்?! ஆனால் இந்த 2022-ல் நிலவரமே வேறு! துளிச் சந்தேகமுமின்றி இந்தப் 12 மாதங்களுக்குமே, தனது ஐம்பதாவது ஆண்டினைத் தொட்டு நிற்கும் நம் முத்து காமிக்ஸ் மீதும், அதன் பிதாமகரான சீனியர் எடிட்டர் மீதும், ஒளிவட்டம் நிலைத்திடுவது தானே பொருத்தமாக இருக்க முடியும்?! அரை நூற்றாண்டென்பது ஊடகத் துறையினில் ஒரு அசாத்திய மைல்கல்லாக இராது போகலாம் தான்; ஆனால் கொயந்தப் பசங்க படிக்க வேண்டிய பொம்ம புக்குகளோடு மட்டுமே 600 மாதங்களாய்க் குடித்தனம் செய்து வந்திருப்பது எத்தனை ரகளையான அனுபவமென்பது மெதுமெதுவாய் எனக்கே புரியத் துவங்குகிறது!
உள்ளதைச் சொல்வதானால் – ஒரு மாதத்துப் பணியிலிருந்து அடுத்த மாதத்துக்கென குரங்காட்டம் கடந்த பத்தாண்டுகளாய்த் தொடர்ந்து தாவி வந்திருக்கும் எனக்கு இந்தத் தருணத்தின் நிஜமான பரிமாணம் புரிந்திருக்கவில்லை தான் ! ”அடக்கமாய் ரூ.500/- விலையில் ஒரு ஸ்பெஷல் இதழ்“ என்பதே எனது ஒரிஜினல் திட்டமிடலாய் இருந்தது! ஆனால் நடப்பாண்டின் லாக்டௌன் தினங்களது தினப்படிப் பதிவு ரகளைகளின் போது உங்களின் வானளாவிய எதிர்பார்ப்புகள் அழுத்தம், திருத்தமாய் வெளிப்பட்ட போது, வேக வேகமாய்க் கோடுகளை அழித்து விட்டு, முதல்லேர்ந்து திட்டமிடத் திரும்பினேன்! எது எப்படிப் போனாலும் காத்திருக்கும் அட்டவணையின் highlight அந்த ஆண்டுமலர் #50 ஆகத்தானிருக்க முடியுமென்பதும் புரிந்தது! அதே சமயம் நடைமுறை யதார்த்தம், பட்ஜெட் சார்ந்த கட்டுப்பாடுகள்; இன்னமும் நார்மலுக்குத் திரும்பியிரா ஜீவனங்கள், என்ற சுடும் நிஜங்களுக்கும் மரியாதை தந்திட வேண்டுமென்ற புரிதலும் இல்லாது போகவில்லை! So நம்ம ஸ்டீல் அள்ளிவிடுவதைப் போல ”அஞ்சாயிரத்துக்கு பெஷல் புக்“ என்ற பகற்கனவில் திளைத்திடாது – சமீப ஆண்டுகளின் சந்தா பட்ஜெட்டுக்கு எகிறிடாது, அதற்குள்ளாகவே சகலத்தையும் அடக்கிட வேண்டுமென்பதே எனது முதல் இலட்சியமாயிருந்தது! அதனில் வெற்றி காண முடிந்தது எனக்கொரு சன்னமான திருப்தியை தந்த முதல் factor!
இரண்டாவதான ”திருப்தி factor“ வேறொரு மார்க்கத்தினில் ! 2012-ல் நாம் மறுவருகை செய்த போதே எனக்குள் ஒரு சிறுகுறிப்பைப் போட்டு வைத்துக் கொண்டேன் – “இனி வரக்கூடிய ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் நம்மை நாமே reinvent செய்திட வேண்டும்!” என்று ! சாணித் தாள்; கறுப்பு-வெள்ளை; தாமதத்துடன் கூட்டணி என்று இலக்கின்றித் திரிந்த நமக்கு – கடந்த 10 ஆண்டுகள் ஒரு மாற்றத்தைக் கண்ணில் காட்டியுள்ளதில் இரகசியங்கள் லேது! “ஹி…ஹி…ஆங்…” உங்க வேகம்லாம் ரெண்டு, மூணு மாசத்துக்குத் தொடருமா சார்? அப்பாலிக்கா பழைய முருங்கை மரத்தில் ஏறிடாமலா போவீர்கள்? என்று என் காதிலேயே நண்பரொருவர் ஓதிடும் அழகில் தான் இருந்தது – பத்தாண்டுகளுக்கு முன்பான நமது credibility ! But நல்ல பொழுதுகள்; கஷ்ட வேளைகள்; சந்தோஷத் தருணங்கள்; சங்கட நாட்கள்; புயல்கள்; வெள்ளங்கள்; பேரிடர்கள் என்று அத்தனைக்கும் மத்தியிலும் சொன்னதைச் சரியான நேரத்தில் செய்து காட்ட நமக்குமே முடியும் என்பதை இந்தப் பத்தாண்டுகளில் பிரதானமாய் எனக்கு நானே நிரூபித்துக் காட்டிக் கொண்ட திருப்தியுடன் – காத்திருக்கும் அடுத்த தசாப்தத்தில் செய்திடத் தேவைப்படக்கூடிய மாற்றம் என்னவாக இருக்கக்கூடுமோ? என்று யோசிக்க முனைந்தேன் ! கலரில் டீசன்டான தரத்தில் தற்போது கால்பதித்து நிற்பதால், அந்த திக்கில் எதுவும் நோண்ட பெரிதாய்த் தோணலை! வேறென்ன செய்யலாமென்று யோசித்த போது உறைத்தது தான் – நமது பொதுவான பயண திசையினில் சன்னமாய் – ரொம்ப சன்னமாய் மட்டும் செய்திடத் தேவைப்படக் கூடிய திசைமாற்றம் பற்றி! 2012-ல் பழைய பாணிக் கதை தேர்வுகளோடே ஆரம்பித்த நாம் – மெதுமெதுவாய் ஜானர்களில் பன்முகத்தன்மைகளை பரீட்சார்த்த முயற்சிகளாய் தொட்டு உரசிப் பார்க்க ஆரம்பித்தோம்! “கதையே நாயகன்” என்றாலுமே அவை கரை சேர்ந்திடும் என்ற நம்பிக்கையில் வெளியானவை தான் கீழ்க்கண்ட சிலபல கி.நா.க்கள்:
- சிப்பாயின் சுவடுகளில்
- வானமே எங்கள் வீதி
- தேவ இரகசியம் தேடலுக்கல்ல
- இரவே… இருளே… கொல்லாதே!
- க்ரீன் மேனர்
- Black & White கிராபிக் நாவல்கள்
- ஒரு தோழனின் கதை
etc… etc… etc…
அதன் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதோ போன வாரம் வெளிவந்திருக்கும் ”அந்தியும் அழகே!“ இவற்றுள் நிறைய பிரமாதமாய் வெற்றி கண்டுள்ளன & சம அளவிற்குச் சாத்துக்களும் பெற்றுள்ளன! விழுந்தால் அடிபடுமே என்ற பயத்தோடே நடமாடினால் உயரங்களைத் தாண்டிக் குதிக்க முடியாதே! என்பதே எனது சித்தாந்தமாய் இருந்து வந்தது – இந்தத் தேடல்களின் பின்னணியில்! ஆனால் a good 120 months down the line – ஒற்றை விஷயம் ரொம்பவே, ரொம்ப ரொம்பவே தெளிவாய்ப் புரிந்துள்ளது! அது தான் உங்களின் ரசனைகளின் ஸ்திரத்தன்மை!! இதோ இந்தக் கையிலொரு லேட்டஸ்ட் கி.நா. & மறு கையில் ஒரு வேதாளன் மறுபதிப்போ ; சுஸ்கி விஸ்கி மறுபதிப்போ எனில் – பத்துக்கு ஒன்பது பேராவது எதை அள்ள வேகம் காட்டுவார்களென்பதில் இரகசியங்கள் இல்லையே?! And 2 ஆண்டுகளைத் தொடப் போகும் இந்தப் பேரிடரின் தாக்க நாட்களின் நீட்சியாக – இருண்ட களங்கள் ; offbeat பாதைகள்; அழுகாச்சிப் படலங்கள் என்பனவெல்லாமே சற்றே விலகி நிற்க வேண்டிய சமாச்சாரங்களாய்த் தென்படுவதன் லாஜிக்கும் தெளிவாய்ப் புரிகிறது! கொஞ்ச காலத்துக்காவது feel good கதைகள்; கமர்ஷியல் கதைகள்; பாஸிட்டிவான உணர்வுகளை விதைக்கும் கதைகளே உங்களின் தேடல்களில் முக்கிய இடம்பிடித்திடும் என்பது புரிகிறது ! So காத்திருக்கும் அடுத்த கொஞ்ச ஆண்டுகளில் உங்கள் மனம்கவர் feel good நாயக / நாயகியரே நம் மத்தியினில் தூக்கலாய் இடம்பிடிப்பர்! “எனக்கு நேர்கோட்டுக் கதைகளே போதுமே!“ என்று நீங்கள் நெளிய நெளிய – நான் மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைகளையாய் போட்டுத் திணறடிப்பது வரும் காலங்களில் ரெகுலர் சந்தாக்களின் அங்கமே ஆகிடாது! பரீட்சார்த்த முயற்சிகள்; கிராபிக் நாவல்கள் etc… ஒட்டுமொத்தமாய் ஓரம்கட்டிடப்படாமல் – கிடைக்கும் ஆன்லைன் புத்தகவிழாத் தருணங்களில்; முன்பதிவுப் பதிப்பு ரூட்களில் மட்டுமே சின்னதொரு சதவிகிதத்தில் களம் கண்டிடும்! அதுக்காக “எட்றா சம்முவம் வண்டிய… போடுறா ஸ்பைடர் கதையை!” என்று ரிவர்ஸ் கியரெல்லாம் அடிக்கும் எண்ணமில்லை! And இது பற்றி நான் வாயால் சுடும் வடையைக் காட்டிலும், காத்திருக்கும் அட்டவணையானது ஒரு யதார்த்த விளக்கமாக இருந்திடக்கூடும்! So let’s get started!!
The Fifty & Forever Special ! சீனியர் எடிட்டரின் (இந்தப் பெயர்த் தேர்வே) புத்தாண்டினை நமக்கு அதிரடியாய்த் துவக்கித் தரவுள்ள முத்துவின் பொன்விழா ஆண்டுமலருக்கான பெயர் ! And லோகோவுமே சீனியரின் தேர்வுக்கே விட்டிருக்க அதற்கான வேலைகள் ஓடி வருகின்றன ! So பெயர் சார்ந்த விவாதங்களுக்குள் புகுந்திடாமல், கதைகள்; அமைப்பு பற்றியெல்லாம் பார்ப்போமா?
முதல் நாள் முதலாக - "ஒரே குண்டு புக்; NBS போலான கதம்ப ஸ்பெஷல்” என்பதே உங்களின் பெரும்பான்மையான அவாவாக இருந்து வந்துள்ளது! படைப்பாளிகள் இந்தக் கூட்டணியாட்சிகளுக்கு இப்போதெல்லாம் ‘தடா‘ போடுவதால் நானுமே “முடியாது… முடியாது… நஹி… not possible !!” என்றபடிக்கே சுற்றி வந்து கொண்டிருந்தேன்! So தனித்தனி இதழ்களாய் வெளியிட்டு, ஒரு ஸ்லிப் கேசில் மொத்தத்தையும் அடுக்கும் விதமாய் அமைக்கத் தான் வேண்டி வருமென்று நினைத்திருந்தேன்! ஆனால் மே மாத இறுதிவாக்கில் – “திசைக்கொன்றாய்க் கோரிக்கைகளை வீசித் தான் பார்ப்போமே… கிட்டினால் ஜெயம்; இல்லாங்காட்டி ‘மூச் காட்டாது ஸ்லிப் கேசில் ஐக்கியம் !‘ என்ற அசட்டு எண்ணம் தோன்றியது! அந்த ராத்திரிக்கே எழுந்து நமது பிரதான பப்ளிஷர்களுக்கெல்லாம் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் – Of course போனெல்லி நீங்கலாக! இத்தாலிய ஜாம்பவான் TEX – லயனின் பிள்ளை எனும் போது, அவரில்லாத பாக்கி நாயகர்களைக் கொண்டு திரட்டும் ஸ்பெஷல் இதழில் பெருசாய் வலு இராதென்பதால் இந்த ஆட்டத்துக்கு ப்ரெஞ்சு நாயக /நாயகியரை மட்டுமே சேர்த்துக் கொண்டிருந்தேன்!
வரிசையாய் – “சாரி… நோ!”; “ஊஹும்… இந்தக் கதாசிரியருக்கும், அந்த எழுத்தாளருக்கும் ஏழாம் பொருத்தம்; சம்மதிக்க மாட்டார்கள்!” என்ற ரீதியிலேயே பதில்கள் வந்தன! காற்றுப் போன பலூனாட்டம் ஆகிப் போன வேளையில் தான் நமது டாப் பப்ளிஷர்களுள் ஒன்றான லொம்பாவிலிருந்து பதில் கிட்டியது – ”சுவாரஸ்யமாய் தெரிகிறதே… கதைத் தேர்வுகளைப் பண்ணி விட்டுச் சொல்லுங்கள்; பார்க்கலாமே!” என்ற பதிலுடன்! சும்மாவே சாமியாடும் கோடங்கிக்கு இந்த ஊக்கம் போதாதோ – தொடர்ந்த பத்து நாட்களின் ராப்பொழுதுகளிலும் லொம்பா குழுமத்தின் படைப்புகளை அலசும் முனைப்பில் தூக்கங்களைத் தொலைத்தேன்! நமது தற்போதைய பட்டியலில் லொம்பா குழும நாயகர்கள் கீழ்க்கண்டவாறு:
- தோர்கல்
- ரிப்போர்டர் ஜானி
- சிக் பில்
- க்ளிப்டன்
So எனது ஆரம்பப் புள்ளி இவர்களிடமிருந்தே துவங்கியது! 2 தோர்கல் கதைகள் + ஒரு க்ளாஸிக் ஜானி + ஒரு புதுயுக ஜானி + ஒரு சிக்பில் + ஒரு கேரட் மீசைக்காரர் என்றபடிக்கே எழுதிவிட்டு அதை உற்று நோக்கிய போது எனக்கே பெருசாய் லயிக்கவில்லை ! தோர்கல் செம நாயகரே; வான் ஹாம் கற்பனைகளில் தெறிக்க விட்டு வருகிறார் தான்; ஆனால் நம் மத்தியில் இவர் இன்னமும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திற்கு உசந்திருக்கவில்லை என்பது நிஜமே! கடைசி 24 மாதங்களின் “தோர்கல்” விற்பனை விபரங்களை ஜுனியர் எடிட்டரின் சகாயத்தோடு தோண்டியெடுத்த போது, எனது அந்த gut feel நிஜம் தானென்பது புரிந்தது! சந்தா வட்டத்தைத் தாண்டிய casual வாசக வட்டத்தினர் தோர்கல் பக்கமாய்ப் பெரியதொரு ஆர்வங்களைக் காட்டிடுவதேயில்லை என்பதைக் கையிலுள்ள இருப்பு நிலவரமும் சொன்னது! தவிர, புதுயுக ஜானியையுமே நீங்கள் வெறிக்க வெறிக்க அணுகுவது தெரிந்த சமாச்சாரம் என்பதால் அதிலுமே நெருடியது! And to top it all – க்ளிப்டன் அட்டவணையில் இடம் பிடித்தாலே தெய்வச் செயல் என்றாகியிருக்கும் நிலையில் அவருக்கு இந்த landmark இதழில் இடமாாா??? என்று எனக்கு ரொம்பவே உதைத்தது! So இந்த லிஸ்டிலிருந்து கிட் ஆர்டினும் டாக்புல்லும் மட்டுமே இருந்து பெரிதாய் பிரயோஜனங்களிராது என்பது புரிந்தது!
கேப்டன் டைகரோ டார்கோ குழுமத்துச் சொத்து; ப்ளுகோட் & லார்கோவோ ட்யூப்பி குழும properties… and அவர்களெல்லாமே கூட்டணிக்கு ‘நோ‘ சொல்லிவிட்டிருந்தனர் ஏற்கனவே ! “ஆங்… இளம் டைகர் பாக்கி ஆல்பங்களையெல்லாம் திரட்டி ஒட்டேடடட புக்காக்கி அதகளம் பண்ணினாலென்ன?” என்ற மகாசிந்தனை அடுத்துத் தோன்றியது! வெவ்வேறு ஹீரோக்களை ஒன்று சேர்த்துக் கும்மியடிக்கத் தானே டார்கோ 'நோ' சொன்னார்கள் – இளம் டைகரை மட்டுமே தொகுப்பாக்கிட நிச்சயம் மறுப்பு இராதென்பதால் அந்த ரூட்டில் போகலாமென்றுபட்டது! பரபரவென நமது ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பாள மேடமுக்கு ஃபோன் அடித்தேன் – “இன்ன மாதிரி… இன்ன மாதிரி விஷயமுங்கோ… ஆகையால் அத்தியாயம் 9 to 21 வரைக்கும் மொழிபெயர்ப்பு பண்ணிடனுமே! என்று! கொஞ்ச நேரத்துக்கு மறுமுனையில் மௌனம்! “நல்லா யோசிச்சீட்டீங்களா விஜயன்?” என்று சுரத்தின்றிக் கேள்வி வந்த போதே எனக்குப் புரிந்து விட்டது! இடியாப்பச் சிக்கலான இரத்தப் படலக் கதைகளையோ; ஜானி கதைகளையோ; கிராபிக் நாவல்களையோ தயக்கங்களேயின்றிக் கையாண்டவருடன் ஒன்றரையாண்டுகளுக்கு முன்னமுமே இந்த இளம் டைகர் ஆல்பங்கள் பற்றிப் பேசியதும் நினைவில் இருந்தது! நாமோ பொழுதுக்கொரு புளியமரத்தில் ஏறும் வேதாளங்கள் எனும் போது, நமது ரசனைகளும், ரசனைசார் தீர்மானங்களும் வேளைக்கு வேளை மாற்றம் காண்பது சகஜமே! ஆனால் அவரோ இந்தப் பஞ்சாயத்துக்கெல்லாம் தலைநுழைப்பவரே கிடையாது; "இது ஓ.கே…. இது சுமார்…" என்பதோடு நிறுத்திக் கொள்வார்! So அவர் ஒன்றரையாண்டுகளுக்கு முன்னே சொல்லியிருந்த கருத்தையே இப்போதும் ஒப்பித்தார்: “பெருசாய் சுவாரஸ்யம் இல்லை; 12 பாகங்களை ஒட்டுமொத்தமாய்ப் படிப்பது எப்படி இருக்கும் என்பதை ஒரு தடவைக்கு ரெண்டுவாட்டி யோசித்துக் கொள்ளுங்கள்!“ என்று மட்டும் சொன்னார்… மறுக்கா பலூனில் காற்றுப் பிடுங்கப்பட்டது போலான உணர்வு தலைதூக்கியது! மறுக்கா நெட்டில் அலசல்கள் என்று நுழைந்த போது, தீவிர டைகர் ரசிகர்களுமே தங்களின் சங்கடங்களை இந்தத் தொடரின் பிற்பகுதியினில் வெளிப்படுத்தியிருப்பது உறுத்தலாய்க் கண்ணில் பட்டது! So maybe இன்னொரு தருணத்தில் முன்பதிவுக்கெனத் திட்டமிட்டு இந்த மீதக்கதைகளை மூன்றோ – நான்கோ இதழ்கள் கொண்ட தொகுப்புகளாய் வெளியிடுவதே வழி என்று தீர்மானித்தேன்!
மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்க; சாமி “குண்டு புக்“ வரம் கொடுத்துமே, கதைத் தேர்வெனும் பூசாரி சண்டித்தனம் செய்கிறாரே என்று பேய்முழி முழித்துக் கொண்டிருந்தேன்! அந்த நொடியில் தான், "புதுசு ; முற்றிலுமாய்ப் புதுசு" என்ற எண்ணம் லேசாய்த் துளிர்விட்டது ! எல்லா ஹீரோக்களுமே ஒரு காலத்தில் நமக்குப் புதியவர்களாக இருந்தவர்கள் தானே?! என்று மெதுமெதுவாய்த் தோன்ற ஆரம்பித்தது ! லார்கோ; ஷெல்டன் தொடர்களெல்லாம் effective ஆக நம்மளவில் ‘சுபம்‘ கண்டிருக்க, கௌபாய் அல்லாத ஆக்ஷன் நாயகர்களுக்கான வெற்றிடம் பெரிதாய் இருப்பதுமே புரிந்தது! கண்ணைச் சுழற்றிய தூக்கத்தை உதறிய கையோடு லொம்பா குழுமத்துக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் – ஒரு நீளமான லிஸ்டுடன்! அத்தனையுமே சமீப வருஷங்களில் அவர்கள் வெளியிட்டிருந்த ஆக்ஷன் ஆல்பங்கள்! அவற்றின் கோப்புகளைக் கோரியிருக்க, அடுத்த 2 நாட்களில் அத்தனையையும் அனுப்பி தெறிக்க விட – ஒரு வண்டிக் கதைகளின் கத்தை கையிலிருந்தது! சொற்பமாய் இங்கிலீஷில்; நிறைய ப்ரெஞ்சில் என்றிருக்க ஜுன் மாதத்தின் பெரும்பகுதி இந்த வாசிப்புக்கென ஓட்டமெடுத்திருந்தது! And ஒரு மாதிரியாய் அந்தப் பிரிண்ட்-அவுட் சமுத்திரத்திலிருந்து வெளிப்பட்ட போது காது to காது வரை ஒரு இளிப்பு விரவியிருந்தது என்னில்! To cut a hugely long story short – அன்றைய தேடலில் கிடைத்த totally fresh நாயக நாயகியரே காத்திருக்கும் FFS இதழின் முதுகெலும்பாகிட உள்ளனர்! இன்னும் சொல்லப் போனால், இவர்களது தொடர்கள் எல்லாமே சமகாலத்துத் தொடர்கள் & ஓரளவுக்குக் கணிசமான கதையிருப்பும் உள்ளதால் – அடுத்த சில ஆண்டுகளுக்காவது இந்தப் புதியவர்கள் நம் மத்தியில் உலாவிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்று படுகிறது! So இதோ அந்தப் புது வரவுககள்:
- CIA ஏஜெண்ட் ஆல்ஃபா!
- French Secret Service ஏஜெண்ட் சிஸ்கோ!
- ஆக்ஷன் ஸ்டார் டேங்கோ!
ஆல்ஃபா ஒரு 3 பாக சாகஸத்திலும்; சிஸ்கோ ஒரு டபுள் ஆல்ப சாகஸத்திலும், டேங்கோ சிங்கிள் சாகஸத்திலும் கரம் கோர்க்கின்றனர் ! இந்த 312 பக்க - 6 பாக ALL NEW சாகஸ சங்கமத்தோடு -
As always – ஒற்றை லட்டோடு நிறுத்திக் கொள்ளாமல், இரண்டாவதாயொரு லட்டைத் திட்டமிட நினைத்தேன் & அது நீங்கள் யூகித்திருந்த "ஒற்றை நொடி,..ஒன்பது தோட்டாக்கள்" தான் !! மொத்தம் 5 அத்தியாயங்கள் ; 270 பக்கங்கள் என அசுர வேகத்தினில் தட தடுக்கும் க்ரைம் த்ரில்லர் ! இது பற்றி ஏற்கனவே நிறையவே பில்டப் பண்ணியாச்சு எனும் போது, அது பற்றி மேற்கொண்டும் பாட்டுப் பாடிடத் தேவையிராதென்றே நினைக்கிறேன் !!
And of course - சீனியர் எடிட்டரின் தலையங்கம் ; சில சர்ப்ரைஸ் பக்கங்கள் ; உங்களின் மலரும் நினைவுகள் ; இதுவரையிலான இதழ்களின் பட்டியல் etc ..etc இடம்பிடித்திடவும் செய்யும், ஆல்பங்களுக்கும், இத்தருணத்துக்கும் அழகு சேர்க்கும் விதத்தினில் ! இரு hardcover ஆல்பங்களுமாய்ச் சேர்த்து மொத்தம் 582 பக்கங்கள் & ரூ.1199 விலை என்பதே திட்டமிடல் !
இந்த FFS இதழில் புதுவரவுகள் எல்லோருமே refreshingly different! எல்லோருமே சமகாலத்து நாயக / நாயகியர் & இன்றைய நவீன உலகில் சுற்றி வரும் சாகஸக்காரர்கள்! And for a change, யாருமே லொங்கு லொங்கென்று ‘குருத‘யிலே காடு, மேடு, பள்ளம், பாலைவனமென்று சுற்றித் திரியும் கௌபாய்களல்ல! அந்த Wild West கோட்டாவை நாம் துவையோ, துவையென்று துவைத்து விட்டதாகப் படுவதால் – இந்தப் புதுயுகத்தினருக்கு வாய்ப்புத் தந்து பார்ப்போமே என்று நினைத்தேன்!
ஆல்ஃபாவின் 3 பாக சாகஸம் பாரிஸில் துவக்கி, மாஸ்கோவுக்குத் தடதடக்கிறது – செம ரம்யமான சித்திரங்களின் பின்னணியினில்! இரத்தப் படல இரண்டாம் சுற்றின் ஓவியரான Jigounov தான் இங்கே ஓவியர் & அசத்தோ அசத்தென்று மனுஷன் அசத்துகிறார்! அதிலும் கதை நெடுகப் பயணிக்கும் அம்மணி பாரிஸ் & மாஸ்கோவை செம கலர்புல்லாக்குகிறார்! காத்திருக்கும் வாரங்களில் ட்ரெய்லர்களில் பார்த்திடலாம்!
ஆல்ஃபா C.I.A-வின் ஏஜெண்டெனில் – அடுத்த புதுவரவான வின்செண்ட் சிஸ்கோ ப்ரெஞ்ச் அதிகாரவர்க்கத்தின் அதிரடிக் காரியங்களை ஓசையின்றி நிறைவேற்றிடும் ஏஜெண்ட்! பாரிஸின் வீதிகளில் இவரோடு ஓடி முடிக்கையில் நம்ம ஜாம் பஜார் அளவுக்குப் பாரிஸுமே பரிச்சயமாகியிருக்கும்! கதையின் ஏதேனும் ஒரு இடுக்கில் நமது பாரிஸ் நண்பர்களை பார்க்க முடிந்தாலும் ஆச்சர்யப்படக் கூடாது போலும் - சும்மா பாரிஸை அங்குலம், அங்குலமாய் அளந்துள்ளனர் ! Very contemporary நாயகர் & very current தொடர்!
டேங்கோவோ வேறு மாதிரியானவர் & அவர் நமக்குக் கண்களில் காட்டிடவுள்ள பின்புலங்களுமே strikingly different! “என் பெயர் டேங்கோ” வில் தென்னமெரிக்காவின் பொலிவியா தேசமே பின்னணி! மாமூலான சீக்ரெட் ஏஜெண்ட் அல்ல இவர்; ஆனால் அதிரடிகளுக்குப் பஞ்சமே வைக்காதவர்! செம ரம்யமான சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஆல்பத்துக்கும் / தொடருக்கும் மெருகூட்டுகின்றன!
ஆக ஒருவழியாய் FFS சார்ந்த திட்டமிடல்கள் ஜுனில் இறுதிவடிவம் கண்டிருக்க, மொழிபெயர்ப்பினை யாரிடமும் ஒப்படைக்காது பகாசுரனாய் நானே பணியாற்றிடுவதென்று தீர்மானித்தேன்! So தொடர்ந்த ஒன்றரை மாதங்களில் தொலைந்து போன தூக்கங்களின் மத்தியில் TANGO நீங்கலாக பாக்கி சகலப் பணிகளையும் நிறைவு செய்திட எப்படியோ சாத்தியப்பட்டது! And here we are now!!
மேற்படித் திட்டமிடல்களில் கதைகளிலோ; கதைத் தேர்வுகளிலோ எவ்வித மாற்றங்களும் இருந்திடப் போவதில்லை; they are set in stone ! ஆனால் இந்த அட்டைப்பட அணிவகுப்பு விஷயத்தில் தான் என்னுள் முழுசாய்த் தெளிவில்லை ! இது வரையிலுமான 456 அட்டைப்படங்களும் இதழினில் 52 பக்கங்களில் வைத்திட நினைத்திருந்தேன் தான் &அதன் பொருட்டு நீங்களுமே என்னைப் போலவே ஆர்வமாக இருப்பீர்களென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அதற்கென சமவிகித எதிர்ப்பு பதிவாகிட, அதனை புக்கினில் ஒரு அங்கமாக்கிடும் தீர்மானத்தை drop பண்ணியாச்சு ! அதே சமயம் "வேணும்" என்போரின் மத்தியிலும் நிறையவே மாறுபட்ட எண்ணச் சிதறல்கள் !! "A4 சைசில் வேணும் ; ஒரிஜினல் சைசில் வேணும் ; முன்னும், பின்னும் சேர்த்தே வேணும் ; அட்டையில்லாத பக்குகளுக்கு இவற்றை ராப்பர்களாக்கிக் கொள்வோம் !" etc etc என்ற ரீதியினில் !! ஆனால் அதையெல்லாம் நடைமுறை செய்திட அபத்தமானதொரு பட்ஜெட் அவசியமாகிடும் என்பதால் - that's a total no - no too ! So 52 பக்க பிரத்யேக தனி இதழ் ; பக்கத்துக்கு 9 ராப்பர்கள் எனும் thumbnail format ; ரூ.60 விலை ' தேவையெனில் வாங்கிக் கொள்ளலாம் என்பதே திட்டமிடலாக இருந்திடும் ! So புக்கோடே சேர்த்தே இல்லியா ?? என்ற விநாவல்கள் வேணாமே - ப்ளீஸ் ?! நேற்றிங்கே பதிவான DEFINITE NO-க்களை உதாசீனம் செய்திட இயலாது தானே guys ?
So 11 அத்தியாயங்கள் கொண்டதொரு பாகுபலி இதழின் திட்டமிடல் இதுவே! For sure, “ப்ச்ச்… இதுக்கு தான் துரைப்பாண்டி பில்டப்பாக்கும்?! ஐயே… இந்தக் கதைகள்லாம் ரொம்ப சுமாராச்சே? எனக்கு முன்னமே தெரியுமே!” என்று உதட்டைப் பிதுக்க ஆர்வலர்கள் ஆரவாரமாய் இன்று முதல் கிளம்பிவிடுவர் என்பது தெரிந்த சமாச்சாரமே ! More power to them! ஆனால் கலரில் இந்த ஆக்ஷன் அதகளங்களை – ரகரகமான தேசங்களின் பின்னணியில் பார்க்கும் அனுபவம் அட்டகாச ரகம் என்பது எனக்குத் தெரியும்; ஜனவரியில் உங்களுக்கும் தெரிந்திடும்! So நவம்பரின் நடுவாக்கிலேயே அச்சுக்குத் தயாராகி விடுவோம் – நடப்புப் பணிகளுக்குச் சேதங்களின்றி!
And முத்திரை பதிக்க விழையுமொரு ஆல்பத்தில் நமது முதுகெலும்பாகிய உங்களின் முத்திரையின்றிப் போனால் ரசிக்காதே?! So – சந்தாவினில் இணைந்திடும் சகல நண்பர்களும் தங்களது ஃபோட்டோக்களை அனுப்பி வைத்தால், இந்த hardcover ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அவற்றை அச்சிட்டுவோம்! It will be your very own souvenir on a landmark occasion! என்ன ஒரே விஷயம்: டிசம்பர் 5-க்கு முன்பாய் உங்கள் போட்டோக்கள் அவசியமாகிடும்!
"சந்தா கட்டாதவன்லாம் மனுஷனா தெரியமாட்டானா?" என்று உடனே குரல் உசத்த எண்ணும் புயச்சீப் புயல்களுக்கு சற்றே 'ப்ரேக்' தந்த மாதிரியும் இருக்குமென்பதால் – சந்தாவில் இணைய இயலா நண்பர்களுக்குமே இந்த ஆப்ஷன் உண்டு – இந்த இதழுக்கு மட்டும் ரூ.1299 (கூரியர் சேர்த்து) முன்பணம் அனுப்பி, முன்பதிவு செய்திடும் பட்சத்தில்! அவர்களுமே முன்பதிவு செய்திட இறுதித் தேதி டிசம்பர் 5 !
Phew!! ஒரு மாதிரியாய் ஒரு டஜன் பக்கங்களில் ஒரு இதழை விவரித்து விட்டாயிற்று!! இனி let’s move on the rest of the stuff !
2022-ல் இன்னொரு highlight – “KENYA” இதழாகவே இருந்திடவுள்ளது என்பதில் எனக்குத் துளியும் ஐயங்களில்லை! கொரோனா இடர்கள் குறுக்கிட்டிராவிடின் 2 வருஷங்களுக்கு முன்னரே களம் கண்டிருக்க வேண்டிய தொகுப்பு இது; லேட்டானாலும் லேட்டஸ்டாய் கோடை மலராய் களம் காண்கிறது இந்த 230 பக்கத் த்ரில்லர்!
தொடரவுள்ள இதழ்களின் பெரும்பான்மை தம்மைத் தாமே தேர்வு செய்து கொள்கின்றன என்று தான் சொல்வேன்! ஆக்ஷன் ஜானரில்!
- க்ளாஸிக் ரிப்போர்டர் ஜானி
- தோர்கல்
- SODA
- ட்ரெண்ட்
- மார்ட்டின்
- மாடஸ்டி
- க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட்
- டெட்வுட் டிக்
ஆகியோர் தலா ஒரு ஸ்லாட்டைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்! ட்ரெண்ட் பற்றிய சந்தேகம் மெலிதாய்த் தலைதூக்கியிருந்தது தான்; ஆனால் “பகலறியா பூமி” தந்த ஊக்கம் இந்த சிகப்புச்சட்டை நாயகரை ஆட்டோமேடிக்காக உட்புகுத்திட உதவியது!
இளவரசி மாடஸ்டியின் ஸ்லாட்டுக்கோ ஒரு நெடுங்கால உத்திரவாதம் தந்துள்ளேன் & நடப்பாண்டின் “வெனிஸ் படலம்” சாகஸத்திலும் அம்மணி did well என்பதால் – அவரது தேர்வும் சுலபமானது! தவிர, ப்ளைசியையும், பாண்டையும் இணைக்கும் அந்த முயற்சியானது விற்பனையில் சோபித்த காரணத்தால் B&B ஸ்பெஷல் இனியொரு ரெகுலர் feature ஆகிடவுள்ளது! So க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 – இளவரசியின் தோள்களில் உப்பு மூட்டை!
டெட்வுட் டிக்கோ – “தேர்வு பண்றியா? சங்கைக் கடிக்கவா?” என்று மிரட்டும் தில்லை ஒரே இதழில் பெற்றிருக்க – “சரிங்க ஆபீஸர்!” என்று அவருக்கும் கேட்டைத் திறந்து விட்டாச்சு!
So ஆக்ஷன் ஜானரில் ட்யுராங்கோ நீங்கலாய் பாக்கிப் பேர் சகலமும் ஆஜர்! ட்யுராங்கோ தொடர் நிறைவுற்றதால் அவருக்கு இனி மனங்களில் மட்டுமே இடம் என்பதைச் சொல்லவும் வேணுமா – என்ன ?
கார்ட்டூனைப் பொறுத்தவரையிலும்:
- லக்கி லூக்
- சிக் பில்
- ‘எலி‘யப்பா (who's this ?????)
- ப்ளூகோட்ஸ்
- மேக் & ஜாக்
ஆகியோர் மாத்திரமே இடம்பிடிக்கின்றனர்! க்ளிப்டன் தாத்தாவுக்கு இந்த ஒற்றை வருஷம் ப்ரேக் தந்து விட்டு, 2023-ல் மறுக்கா யோசிப்போம் அவரது தேர்வு பற்றி! ஹெர்லக் ஷோம்ஸ் தொடரிலோ ஒரேயொரு சிறுகதை மட்டுமே மீதமுள்ளது என்பதால் அவரை உள்ளே நுழைக்க வழியில்லை! So நடப்பாண்டினில் extra ஆகிடும் சிரிப்புப் பார்ட்டி - "எலியப்பா" மட்டுமே ! இவரொரு சர்க்கஸ் யானை !! அங்கிருந்து தப்பி ஊருக்குள் புகுந்திட, அதற்குத் தஞ்சம் தருகின்றனர் குட்டீஸ் சிலர் ! வீட்டுக்கே கூட்டிப் போய் எளியப்பாவைப் பாத்துக்கிட்டு, தொடர்ந்திடும் ரகளைகள் 6 பக்க குட்டி சிரிப்பு வெடிகள் ! And இவை ரெகுலர் தடத்தில் அல்லாது வருகின்றார் ! அது பற்றி பதிவின் இறுதியினில் !
இன்னொரு சுவாரஸ்யம் - இன்னொரு கதம்ப இதழுடனான "முத்து கோடை மலர்" !! இங்கே 1 புதியவர் & 2 பழகியவர்கள் !! புதியவரான ரூபின் – சிகாகோ போலீஸ் டிபார்ட்மெண்டின் பெண் டிடெக்டிவ்! சித்திர பாணியில் சற்றே SODA-வைப் போல் இவர் காட்சி தந்தாலும், முழுக்க முழுக்கவே இவரொரு ஆக்ஷன் cop தான்! இவருக்குப் பின்னே ஒரு குட்டியூண்டு கொசுறு கதையும் உண்டு! ஆண்டுதோறும் பரிசீலனைகளுக்கென ஒரு குட்டி யானையில் ஏற்றும் அளவிற்கான புதுக்கதை printout-களை கோவையிலுள்ள நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் இல்லத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றை மேலோட்டமாய்ப் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லக் கோரிடுவது வழக்கம். 2020-ன் இறுதியிலும் அதே வேலையைச் செய்திருந்தோம் – ஜனவரி & பிப்ரவரி வாக்கில் அவர் தரக்கூடிய inputs-களை தொடரும் இதழ்களில் நடைமுறைப்படுத்தலாமென்ற எண்ணத்தில்! துரதிர்ஷ்டவசமாய் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிப் போக, அதனில் பிசியாகி விட்டார்! And அந்த சிகிச்சையின் தொடர்ச்சி ரொம்பவே சிரமமானதாய் இருந்து போக, ஜுலை வரையிலுமே ரொம்பவே தடுமாறிப் போய் விட்டார். So இந்த இடைப்பட்ட நாட்களில் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கென அவரை இம்சை பண்ணிடாமல் மாற்று ஏற்பாட்டினை செய்திருந்தேன்! அதன்படி ஒரு சென்னைப் பெண்மணி நமக்கு ஒத்தாசை செய்து வந்தார். ”ஆஹா… ஓஹோ..!” என்ற தரத்தில் இல்லாது போனாலும் மோசமில்லை என்றிருக்க, அதனைக் கொண்டே வண்டியோட்டி வந்தேன்! And அவருக்கு அனுப்பப்பட்டிருந்த கதைகளுள் ரூபீனின் இந்த சாகஸமும் சேர்த்தி! அவரும் எழுதியனுப்பியிருக்க, கடைசியாய் இதனில் பணியாற்ற எண்ணியிருந்தேன்! இதனிடையே நமது கோவை மொழிபெயர்ப்பாளர் நலம் பெற்றிருக்க, எனக்கு மெசேஜ் போட்டிருந்தார்! ”போர்… பெரும் அக்கப் போர்… எல்லாம் ஒருவழியாய் ஓய்ந்தது! எதையாவது எழுதணும் போலிருக்குதே!” என்றார்! எட்டும் தொலைவில் எழுபதைத் தொட்டிடவுள்ளவர்; ஆண்டவன் கருணையில் அற்புதமானமொரு குடும்பமும், அளப்பரிய செல்வமும் கொண்டவர்! நாம் தரும் பேரீச்சம்பழங்களுக்கென மாங்கு மாங்கென்று எழுதித் தள்ள சிஞ்சித்தும் அவசியமில்லாதவர்! ஆனால் கடந்த 22 ஆண்டுகளாய் இதனை ஒரு தவமாய் செய்து வரும் ஆற்றலாளர்!! ”புதுசா கதை அனுப்ப லேட்டாகும்னா சிரமப்பட வேணாம்; ஏற்கனவே என் கையிலே குவிஞ்சு கிடக்கிற புதுக் கதைகளிலேர்ந்து எதையாச்சும் எடுத்து எழுதட்டா?” என்று அவரே கேட்க; நான் ”ரைட்டு!” என்று மண்டையை ஆட்டி வைத்தேன்! மறுநொடியே – “அந்தப் பெண் போலீஸ் கதையை எழுதட்டுமா? ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது!” என்றார்! அவர் குறிப்பிட்டது ரூபீனைத் தானென்பது புரிந்தது & அந்த ஆல்பத்துக்கான மொழிபெயர்ப்பு ஏற்கனவே என் கைகளில் இருந்தது தான்! ஆனால் அவர் குரலிலிருந்த ஆர்வம் என் வாயை அடைத்தது! “ஓ.கே. மேடம்… அதைப் போட்டுத் தாக்குங்க!” என்று சொன்ன கையோடு, என்னிடம் ஏற்கனவேயிருந்த இங்கிலீஷ் ஸ்க்ரிப்டை ஓரம்கட்டி விட்டேன்! இதோ- இந்தப் பதிவுக்கு ஓரெயொரு நாள் முன்பாக கோவையிலிருந்து கூரியர் வந்துள்ளது !So இரண்டுவாட்டி மொழிபெயர்ப்பு கண்ட இந்த cop நமது மைல்கல் ஆண்டினில் மகளிர் கோட்டாவினை இளவரசியோடு திறமையாகப் பூர்த்தி செய்கிறார்!
அப்புறம் கிராபிக் நாவல் ஜானரினில் தாத்தாக்களின் ஒற்றை ஆல்பம் மாத்திரமே !
தாத்தாக்களின் தேர்வு உங்களின் வெகு சமீபத்தை வோட்டுக்களின் பலனே guys! ஓரிரு பிசிறடித்த குரல்கள் நீங்கலாகப் பாக்கிப் பேர் தாத்தாக்கள் அணிவகுப்பிற்கு வலு சேர்ப்பித்திருப்பதால், இந்தக் கிழ இளவரசர்கள் உட்புகுகின்றனர் – நம் மத்தியிலான இளவரசர்களுக்குப் பிடித்திருந்தாலும், இல்லாது போனாலும் ! கொஞ்ச காலத்துக்கேணும் அழுகாச்சிகள்; dark கதைகள் வேணாமே என்ற உங்களின் அபிப்பிராயங்களில் எனக்குமே உடன்பாடென்பதால் – கொஞ்ச காலத்துக்காவது கி.நா.தனித்தடம் will be on the backburner ! So கி.நா. ரசிகர்கள் மன்னிச்சூ !
So that leaves us with – TEX!!! தலைவாழை விருந்தின் நளபாகமே மஞ்சள்சட்டையார் தானெனும் போது, அவருக்கு எத்தனை ஸ்லாட்கள் என்பது மாத்திரமே கேள்வி! நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்களேன் guys! இளம் டெக்ஸ் கதைவரிசையும் தொடர்கிறது & அதன் அடுத்த ஸ்டாப் மெபிஸ்டோவுடனான மோதல் சாகஸமே எனும் போது, 2022-ன் தீபாவளி highlight அதுவாகவே இருக்கவுள்ளது – in color!! மாதமொரு டெக்ஸ் இல்லியா??? என்ற கேள்வி தொடரும் என்பது இந்த நொடியில் எனது யூகம்! And அதற்கான பதில் – பதிவின் back end-ல் உள்ளது! புத்தாண்டின் முழுமைக்கும் மாதமொரு TEX உண்டு என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிடுகிறேனே ?!
ஆக காத்திருக்கும் புத்தாண்டின் திட்டமிடல்கள் இவையே! நிஜத்தைச் சொல்வதானால் FFS தேர்வுகள் நடந்தான நொடியே அட்டவணையின் 90% முடிந்த மாதிரியிருந்தது – simply becos அதற்கொரு 1200 ரூபாய்; KENYA இதழுக்கொரு 500 ரூபாய்; அப்புறமேட்டுக்கு டெக்ஸ் இதழ்களுக்கென சுமார் ரூ.1600 எனும் போதே பட்ஜெட் மூவாயிரத்தைத் தாண்டி விட்டது! So பாக்கியிருக்கக்கூடிய ரூ.1800/-ல் சுடக் கூடிய வடைகளும் ஜாஸ்தியிருக்க முடியாது & அந்த வடைகளுமே பெரும்பாலும் தம்மைத் தாமே தேர்வு செய்து கொண்டு விடுகின்றன! Maybe “எந்த SODA ஆல்பத்தை தேர்வு பண்றது? எந்த லக்கி லூக்கைப் போடறது ?” என்ற ரீதியிலான கேள்விகள் மாத்திரமே எனக்கென எஞ்சி நின்றன! So பல விதங்களில் சுலபமான பணியே இம்முறை!
And சற்றே நிதானித்துப் பார்த்தால் – மாமூலான எனது ரிஸ்க் எடுக்கிற ரஸ்க் சமாச்சாரங்கள் இந்த அட்டவணையினில் மருந்துக்கும் இராதென்பது புரியும்! Of course – FFS-ன் முழுமையுமே புது வரவுகளே எனும் போது அவர்களின் தேர்வுகளின் பின்னணிகள் ரிஸ்க் இல்லாது போகாது தான்! ஆனால் அவை எல்லாமே நவீன யுகத் த்ரில்லர் படைப்புகளே எனும் போது – காலமாய் நாம் ரசித்து வரும் ஆக்ஷன் ஜானரினுள் ஐக்கியமாகிடச் சிரமங்களிராது என்பதே எனது யூகம்! மாறாக – பரீட்சார்த்தக் களங்கள் என்று சொல்லும் விதத்தினில் இந்த அட்டவணையினில் ஏதுமிராது என்பதே நான் அடிக்கோடிட விரும்பிய விஷயம்! இது பலருக்கு “ஷப்பாடி!” என்ற நிம்மதிப் பெருமூச்சையும், சிலருக்கு “ஷ்ஷ்ஷ்” என்ற ஏக்கப் பெருமூச்சையும் வரச்செய்திடும் என்பது புரிகிறது தான்! ஆனால் அடிப்படையில் ‘அண்ணனை எப்போ திண்ணையிலிருந்து கிளப்பலாம்? என்று ஏதேதோ காரணங்களின் பொருட்டு உஷ்ணங்கள் உலா வரும் வேளைதனில், அவர்கள் சுடப் பட்டாணிக் கடலைகளை நாமே வழங்குவானேன்? தவிர, ஒரு மைல்கல் ஆண்டின் பொழுதுகளை இயன்றமட்டுக்கு ஜாலியானதாய் அமைத்துக் கொள்ள – tried & tested ஆக்ஷன் ஜானரையே பிரதானமாய் பயன்படுத்திக் கொள்வோமே என்று நினைத்தேன்! Of course – ஆன்லைன் புத்தக விழாக்கள் இருக்கவே இருக்கின்றன – ரெகுலர் தடத்திற்குத் தொந்தரவுகள் இன்றி எனது பல்டிகளை முயற்சித்துப் பார்க்க!






















ரைட்டு… இனி வழக்கம் போலவே அந்தக் கேள்வியும் நானே… பதிலும் நானே segment!
1. இரத்தப் படலம் அடுத்த ஆல்பத்தைக் காணலியே?
- புதியது அக்டோபர் 2022ன் இறுதியில் தான் ரிலீசே ஆகிறது! So அது வரும் முன்பாய் நான் அறிவித்து வைத்து, அப்புறமாய் படைப்பாளிகளின் அட்டவணையில் தாமதம் ஏதேனும் நேர்ந்தால், இங்கே போராட்டக்களத்திற்கு ஆர்வமாய் ஆள் சேருவது தொடர்கதையாகிடும்! So அவர்கள் வெளியிடட்டும் முதலில்!
2. மாசமொரு TEX ஏன் இல்லே?
- பொறுமை ப்ளீஸ்… மாதமொரு டெக்ஸை நீங்கள் தரிசிக்காது, போக மாட்டீர்களென்பது எனது உத்தரவாதம்! எப்படி – எவ்விதம் என்ற பாடுகளை என்னிடம் விட்டு விடுங்களேன் guys! Have a set of plans in place for that !! உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையம் வித விதமாய் interpret செய்யப்படும் வேளைகளில், பேச்சைக் குறைப்பதில் தப்பில்லை தானே? So செயலில் பார்த்து விட்டுப் போவோமே ?
3. கார்ட்டூன் அம்புட்டுத் தேனா?
துரதிர்ஷ்ட நிஜம்! தொடரும் காலங்களில் லக்கி; சிக் பில்; ப்ளூகோட்ஸ் & மேக் & ஜாக் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நீச்சலடித்தாக வேண்டும்! முட்டி, மோதிப் பார்த்து விட்டேன் guys கடந்த 10 ஆண்டுகளில் !! இதற்கு மேல் வலுவில்லை என்னில் !!
4. க்ளாஸிக் நாயகர்கள் யாருமே கிடையாதா?
Smashing 70’s ஒரு கணிசமான கதைக்களஞ்சியமாய் உலா வரவுள்ளது 2022 & 2023-ல்! அங்கே மறுபதிப்புகள் + புதுசு என்று எல்லாமே இருந்திடும் – solid ஆன க்ளாஸிக் நாயகர்களுடன்! ஆகையால் பிரிட்டிஷ் க்ளாஸிக் நாயக உலாவிலிருந்து அமெரிக்கக் க்ளாஸிக் நாயக உலாக்களுக்கு for a change மாறித் தான் பார்ப்போமே?!
5. மாயாவி???
முதல் முத்து காமிக்ஸ் இதழான “இரும்புக்கை மாயாவி” ஆல்பத்தை அதே சைஸில் வெளியிடலாமா? என்று சில காலம் முன்பாகக் கேட்டிருந்த போது செம lukewarm response! யாருமே கண்டுகொண்டதாகவே தெரியவில்லை!
இதுவரையிலும் மறுபதிப்பு கண்டிராத “ஒற்றைக் கண் மர்மம்”; “ப்ளாக்மெயில்”; “பறக்கும் பிசாசு” போலான மாயாவி கதைகளின் ஒரிஜினல்களைப் படைப்பாளிகள் ரெடி செய்து முடிக்கும் வரையிலும் அவற்றை மறுபதிப்பிட வழியில்லை! So மாயாவியைப் பார்க்க வேண்டுமெனில் – ஏற்கனவே மறுபதிப்பு கண்டவற்றுள் இருந்தே தான் நமது தேர்வுகள் இருந்தாக வேண்டும். So அரைத்த மாவையே மேற்கொண்டும் அரைக்க வேண்டாமே?! But ஒரு மைல்கல் தருணத்தினில் மாயாவி வேணுமே....என்று நினைப்பீர்களெனில், முதல் மாயாவி புக்கை ரெடி செய்திட வேணும் தான் ! What say folks ?
6. ஜேம்ஸ் பாண்ட் 2.0???
ஒற்றை டபுள் ஆல்பம்; ரூ.250/- விலையில் என்பதே இவருக்கான திட்டமிடலாக இருக்க முடியும்! ஆனால் நடப்பு அட்டவணையில் இவரை நுழைப்பதாயின் – குறைந்தபட்சம் 3 ரெகுலர் இதழ்களையாவது கழற்றி விட வேண்டி வரும்! ஏற்கனவே இதழ்களின் மொத்த எண்ணிக்கை குறைச்சலாக உள்ள இந்த வேளையில் மேற்கொண்டும் குறைந்திட வேண்டாமே என்று ஜேம்ஸ் கதைகளை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு காத்துள்ளோம் – 2023-க்கென!
7. உயிரைத் தேடி…???
“உயிரைத் தேடி” கலரில் தயாராகி வருகிறது! தயாரான முதல் தருணத்தில் மொட்டை மாடியில் ஒரு புக் ஃபேர் போட்டுத் தாக்கிடலாம்! Again 2022-ன் agenda-வில் தவறாது இடம்பிடித்திடும்!
8. ஜம்போ சீஸன் 5??
அநேகமாய் Smashing 70’s நிறைவுறும் வரையிலும் ஜம்போவின் அடுத்த சீஸன் on hold இருந்திட வேண்டி வரும்! பணியாற்றவும் சரி; படிக்கவும் சரி; செலவிடவும் சரி 2022-ன் அறிவிப்புகளே தேவைக்கதிகம் என்ற எண்ணம் எனக்கு!
9. சந்தாப் பிரிவுகள்?
- எப்போதும் போலவே ஒரு `all-in` சந்தா!
- டெக்ஸ் இல்லாததொரு சந்தா!
என 2 பிரிவுகள் இருந்திடும்! இது தவிர-
“இல்லே… எனக்கு இதெல்லாம் சுகப்படாது; இஷ்டப்பட்டதை மட்டுமே நான் வாங்கிக்கணும்!” என்பது உங்களின் ஆசையா? பிரச்சனையே இல்லை தான்; ரூ.3000/- அனுப்பி வையுங்கள் – உங்கள் கணக்கில் வரவு செய்து, சந்தா நம்பர் ஒன்றையும் தந்து விடுவார்கள்! அந்தந்த மாதங்களில் நீங்கள் சாவகாசமாய் ஃபோன் செய்து “இது வேணும்; இது வேணாம்!” என்று சொன்னால் போதும்; புக்ஸ் அதற்கேற்ப அனுப்பிடப்படும்! உங்கள் கணக்கிலும் புக் கிரயங்கள் + கூரியர் கட்டணங்கள் கழிக்கப்பட்டு மீதத் தொகை முன்எடுத்துச் செல்லப்படும்! So “பிடிக்காததைத் தலையிலே கட்டிப்புட்டானுங்க” என விசனங்களுக்கு அவசியங்கள் இராது!
என்ன ஒரே கண்டிஷன் – ரெகுலர் டெஸ்பாட்ச் தினத்தன்றே இதனையும் செய்திடல் சாத்தியமாகிடாது! அது நிறைவுற்ற மறுநாளில் இந்தச் சந்தா கையில் எடுக்கப்படும்!
10.சீனியர் எடிட்டர் ???
"அந்தியும் அழகே.." என்று புத்தாண்டின் 12 மாதங்களுக்கும் சீனியர் எடிட்டர் தனது நினைவுகளைத் தட்டித் தர முயற்சிக்கவுள்ளார் - விலையில்லா சிறு இதழினில் !
ரைட்டு… இதற்கு மேலும் எழுதிக் கொண்டே போனால், டைப்படிப்பவர் சட்டையைக் கிழிப்பதும், வாசிப்போர் பாயைப் பிராண்டுவதும் நிகழக்கூடுமென்பதால் இங்கே ‘சுபம்‘ போட்டு விட்டுக் கிளம்புகிறேன்!
Of course – தொடரும் பொழுதுகளில் இந்த அட்டவணையின் நிறை + குறைகள் Surf எக்செல் போட்டு அலசிடப்படும் என்பதில் ஐயங்களில்லை எனக்கு! பார்வைக் கோணங்களுக்கேற்ப அவை ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் மாறுபட்டிடும் என்பதும் புரிகிறது! So உங்களின் take எதுவாகயிருப்பினும் – உஷ்ணமின்றிப் பதிவிடுங்களேன் guys!
And “எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல்; ஏமாந்து போனேன்!” என்ற ரீதியிலான பதிவுகள் வேணாமே ப்ளீஸ்? காத்திருப்பது கலரில் 2000+ பக்கங்கள் + black & white-ல் 2000+ பக்கங்கள் எனும் போது, மாதந்தோறும் சராசரியாய் 333 பக்கங்கள் காத்துள்ளன – உங்கள் வாசிப்புக்கென! அவற்றோடு ஜம்போ சீசன் 4 -ல் எஞ்சியுள்ள இதழ்கள் ; Smashing 70`s இதழ்கள்; திடீர் திடீரென்றான புக்ஃபேர் இதழ்கள் என்பனவற்றையும் சேர்த்துக் கொண்டால் இன்னமும் எண்ணிக்கை எகிறும்! இம்முறை புத்தக எண்ணிக்கை குறைவென்றாலும் பெரிய புக்ஸ்; குண்டு புக்ஸ் கணிசமோ கணிசம்! So ஆண்டவன் அருளோடு அடுத்த பயணத்துக்கு ரெடியாகிக் கொள்வோமா folks?
And before I sign out, எலியப்பா பற்றி !! இதோ - நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் !!
Bye all! See you around!! And thanks for reading this !!
சந்தாக்களின் ஆன்லைன் லிஸ்டிங்களும் போட்டாச்சு :
And புறப்படும் முன்பாய் இதோ :