Powered By Blogger

Friday, June 29, 2018

Hi ஜூலை ...!

நண்பர்களே,

வணக்கம். ஜூலையின் இதழ்கள் தயார் ! வியாழனின் கூரியரில் ஜம்போ + ஜூலை புக்ஸ் புறப்பட்டுவிட்டன என்பதால் காலையில் உங்கள் கைகளில் 4 இதழ்களும் இருந்திடும் !! (அதாவது ஜம்போவுக்கும் நீங்கள் சந்தா கட்டியிருக்கும் பட்சத்தில் !!

And இதோ - இதுவரையிலும் கண்ணில் காட்டியிருக்கா "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" இதழின் அட்டைப்படம் + வண்ண உட்பக்க previews :
முன் & பின் அட்டைகள் - ஹெர்மனின் ஒரிஜினல் படைப்புகளே ; நாமிங்கு செய்திருப்பது தமிழில் தலைப்பை அமைத்திடும் பணியினை மாத்திரமே ! And சமீப இதழ்களின் பாணியிலேயே, இம்முறையும் தலைப்பு கையால் எழுதப்பட்டுள்ளது - நம் மூத்த ஓவியர் சிகாமணியின் தூரிகையினால் !! இதழினைக் கையில் ஏந்திப் பார்க்கும் சமயம் அந்த எழுத்துக்களின் நளினத்தையும் சித்தே ரசித்திட நேரம் ஒதுக்கித் தான் பாருங்களேன் - சிறுகச் சிறுக மறைந்து போய் வரும் ஒரு கலையின் பரிமாணம் என்னவென்று புரியும் !! 

கதையைப் பொறுத்தவரையிலும். இதனை  ஏற்கனவே படித்த ஞாபகம் உங்களில் எத்தனை பேருக்கு உள்ளதோ நானறியேன் - ஆனால் எனக்குச் சுத்தமாய் நினைவு நஹி ! So புதுசாய்ப் படித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! வண்ணத்தில், பெரிய சைசில் புக்கைப் புரட்டுவதே ஒரு ரம்யமான அனுபவமாய் இருந்தது எனக்கு ! 
பிரின்ஸ் தானென்றில்லாது - இம்மாதத்து ஒட்டு மொத்த இதழ்களுமே ஒன்றுக்கொன்று போட்டியாய் அமைந்திருப்பதாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? அல்லது அதனில் உங்களுக்கும் உடன்பாடிருக்குமாவென்று அறிந்திட இக்ளியூண்டு ஆர்வம் பீறிடுகிறது ! So கூரியர் கைக்கு கிட்டிய சற்றைக்கெல்லாமே, இதழ்களின்  first look -க்கு உங்கள் ரேட்டிங்குகள் / மார்க்குகள் என்னவென்பதைத் தெரியப்படுத்த நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தால் - எங்களது டீமே ஹேப்பி அண்ணாச்சி ! அப்புறம் புக்குகளை ஒவ்வொன்றாய்ப் படிக்கத் துவங்கிய பிற்பாடு - அலசல்களை வைத்துக் கொள்ளலாம் !! 

அவ்வப்போது பெரிதாய் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமலே, சில மாதத்து இதழ்களின் combo சுவாரஸ்யமாய் அமைந்து போவதுண்டு !  இது அத்தகையதொரு கூட்டணி என்று மனதுக்குப் பட்டது ! 
 • லக்கியின் ஹார்ட் கவர் ஆல்பம் !
 • ஜம்போவின் முதல் இதழ் + Young டெக்சின் அதிரடி !
 • புது நாயகர் டிரெண்ட் !
 • அட்டைப்படங்களில் நீங்கள் பார்த்திடப்போகும்   நகாசு வேலைகள் !
என்று பேச நிறையவே topics இம்முறை இருக்குமென்ற பட்சியின் செய்தியோடு நான் புறப்படுகிறேன் folks ! மீண்டும் சந்திப்போம் ; Bye for now !  Happy Reading !!

P.S : ஆன்லைனில் வாங்கிட இங்கே க்ளிக் ப்ளீஸ் :  http://lioncomics.in/monthly-packs/517-july-2018pack.html

Thursday, June 28, 2018

கரம் கொடுப்போமே - ப்ளீஸ் ?

நண்பர்களே!

வணக்கம் !! சில மாதங்களுக்கு முன்னே நமது நண்பர் கரூர் ராஜசேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நம் நண்பர்களில் பலரும் அவருடைய சிகிச்சைக்கு தம்மால் இயன்ற நிதியுதவி +  அக்கறையான விசாரிப்பு + பிரார்த்தனைகளைச் செய்து நேசக்கரம் நீட்டியது நாமறிந்ததே!  அதன் பலனாய் இன்று அவருடைய உடல்நலம் வெகுவாகத் தேறியிருப்பதாக நமக்கு செய்திகள் வரும்போது இந்த "பொம்மை புக் " நட்பு வட்டத்தின் மகத்தான ஆற்றலை எண்ணி ஆயிரத்துஒன்றாவது தடவையாக வியக்காமல் இருக்கமுடியவில்லை!! சென்றமுறை ஈரோடு புத்தகவிழாவில் நாம் சந்தித்த அதே பழைய ராஜசேகராக மீண்டும் தன் உற்சாகப் பங்களிப்பை எதிர்வரும் நாட்களிலும் நண்பர் செய்யவார் என்று உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

நண்பர்கள் தம் நேசக்கரத்தை மீண்டும் ஒருமுறை நீட்டிடும் வேளை இதுவென்று தோன்றுகிறது! ஆனால், இம்முறை அது நம் நண்பர்களில் வேறொருவருக்கானது!

கோவையைச் சேர்ந்த நண்பர் 'ப்ளைஸி பாபு'வை உங்களில் பலரும் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்...!  சில நாட்களுக்கு முன்பு நண்பருக்கொரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு  குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்  அந்தக் குழந்தையின் இருதயத்தில் பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்! டாக்டருடைய பரிந்துரையின்பேரில் சிகிச்சைக்காக இன்று திருவனந்தபுரத்திலுள்ள SCT hospital-க்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார்கள் ! அங்கே குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வெள்ளியன்று வருகை புரியவிருக்கும் சிறப்பு மருத்துவர் குழுவுக்காகக் காத்திருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்களாம்!!

நண்பர் கரூர் குணா மூலமாக இந்தச் செய்தியை கேள்விப்பட்ட நம் நண்பர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை ஏற்கனவே செய்யத் தொடங்கிவிட்டதாக செய்தி வந்திருக்கிறது! நமது தளத்தில் இந்தச் செய்தி பரிமாறப்படுமானால் இன்னும் கூடுதலாக அவருக்கு உதவிகள் கிடைக்கக்கூடுமே என்று தோன்றியதாலேயே இந்தப் பதிவு!!

நண்பரின் குழந்தைக்கு நல்லமுறையில் சிகிச்சை பெற்று பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திப்போம்!

நண்பருக்கு உதவிட நினைப்பவர்கள் பின்வரும் வாட்ஸ்அப் எண்களில் தொடர்புகொண்டு அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றிடலாமே ! 

கரூர் குணா : 9786822001
ஈரோடு விஜய் : 7598325050
கிட்ஆர்டின் கண்ணன் : 9787222717

சிறு துளியும் பெரு வெள்ளமாகிடக்கூடும் தானே folks ? நண்பரின் இந்த இக்கட்டான தருணத்தில், நம்மால் இயன்றதைச் செய்திட முயற்சிப்போமே ?  நிதியில் உதவிடும் நிலையில் இல்லாதோர், தத்தம் பிரார்த்தனைகளில் அந்த மழலையை கொணர்ந்தாலும் கூட அதுவுமே   நிச்சயம்  உதவிடும் என்பது எனது நம்பிக்கை ! கரம் கொடுப்போமே - ப்ளீஸ் ? 

Saturday, June 23, 2018

ஒரு சேரன் சவாரி...!

நண்பர்களே,

வணக்கம். 'ஆல்-இன்-ஆல் அழகுராஜா சைக்கிள்கடை' என்றொரு போர்டைப் பார்த்த பின்னேயும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு, Autograph சேரன் பாணியில் flashback-க்குக்குள் போகாது இருப்போமா - என்ன ? என்னடா திடீர் விசேஷமென்று யோசிக்கிறீர்களா ? முந்தைய ஆபீசில் அலமாரி ஒன்று வருஷங்களாய்த் திறக்கப்படாமலே கிடந்தது ! அதை போன வாரத்தில் ஒரு நாள் திறந்து பார்த்தால் நமது துவக்க நாட்களது பில் புக்குகள் ; சில பல மக்கிப் போன பைல்கள் ; வவுச்சர்கள் என்று ஒடிந்து விழும் நிலையில் காகிதங்கள் ஒரு வண்டி இருந்தன ! கரையான்கள் பீடித்திருந்த அவற்றையெல்லாம் இறுதியில் தீமூட்டத் தான் முடிந்ததென்றாலும் - அவற்றோடு கை கோர்த்து வந்த நினைவுகளை  அசைபோடுவது   ஒரு இனம்புரியா அனுபவமாய் அமைந்தது !! 34 வருடங்களுக்கு முன்பாய் இந்த வேளையில் என்ன செய்து கொண்டிருந்தோமென்பதை நினைவூட்ட இது போல் சந்தர்ப்பங்கள் வாய்த்தால் யார் தான் வாடகைச் சைக்கிளில் தொற்றிட மாட்டார்கள் ?! இந்த ஆயிரத்து நூத்திப்  பதினாலாவது மலரும் நினைவுகள் படலமானது - கே.பி.சுந்தராம்பாள் காலத்துப் பாட்டு போலத் தோன்றிடலாம் தான் ; ஆனால் அந்தத் துவக்க நாட்களின் untold stories இன்னமுமே கொஞ்சம் மிச்சமுள்ளன என்றே தோன்றுகிறது ! அதிலும் நமது ஆண்டுமலர் கூப்பிடு தொலைவிலிருக்கும் இந்த வேளையில் லேசாய் ஒரு 'சேரன் சவாரி'போனால் தப்பில்லை என்று பட்டது ! ("ச்சை...எனக்கு இவன் போடுற மொக்கையே புடிக்காது " என்று feel பண்ணிடும் நண்பர்கள் நேராய் பதிவின் பின்பகுதிக்குப் பயணிக்கலாமே - ப்ளீஸ் ? ஜூலை இதழ்கள் பற்றிய preview -க்கள் ; இத்யாதிகள் அங்குள்ளன ! பிடிக்காததைப் படித்து விட்டு உம்மணாமூஞ்சி smurf போல் முகச்சுழிப்பை வெளிப்படுத்தும் சிரமம் கொள்வானேன் ? - என்றே இந்த suggestion )

நமது முதன் முதல் பணியாளருக்கு அன்றைக்குத் தந்த சம்பளத்தின் வவுச்சர்கள் ஒரு பைலில் பழுப்பேறிப் போய்க் கிடந்தன !  P .காளிராஜன் : மாதச் சம்பளம் ரூ.360 என்றிருந்ததைப் படித்த போது சிரிப்பதா - அழுவதா என்று தெரியவில்லை !! நாளொன்றுக்குப் பன்னிரண்டு ரூபாய் சம்பளம் ; அதுவும் ஒரு ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு !!  என் தந்தையிடம் அச்சகத்தில் அந்நாட்களில் பணிபுரிந்து வந்ததொரு மூத்த பணியாளரின் தம்பி பையன்  என்று அறிமுகமான காளிராஜனுக்கு, சிகாமணியைப் போலவோ ; மாலையப்பனைப் போலவோ இயற்கையாகவே ஓவியத் திறனெல்லாம் கிடையாது தான் ; ஆனால் ஆர்வத்தில் சிறுகச் சிறுக தானாய் வளர்த்துக் கொண்ட ஆற்றல், பின்னாட்களில் line drawing-களில் செம கில்லாடியென்ற நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது ! 1984-ல் வேலைக்குச் சேரும் போது காளிராஜனுக்கு என் வயது தான் இருக்கும் ; அவனும் ரூ.75 சம்பளத்துக்குப் பணி செய்த ஆபீஸ் பாயும் தான் நமது அப்போதைய ஒட்டு மொத்த அணி ; டீம் ; படை ; பட்டாளம் -எல்லாமே !! பத்துக்குப் பத்து ரூமும் , முன்னிருந்த முற்றமும்  தான் நமது  சாம்ராஜ்யம் ! 

கூரியர்கள் இல்லா அந்நாட்களில் - போஸ்ட்மேன் கொணர்ந்து ஒப்படைக்கும் கதைகளை, இந்த சூரப்புலியே மொழிபெயர்த்த கையோடு அந்நாட்களது முத்து காமிக்ஸில் பணியாற்றிய அச்சுக்கோர்ப்பு பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் ! அவையெல்லாம் முத்து காமிக்ஸ்  பெரும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நாட்கள் என்பதால் யாருக்கும் அங்கே வேலையில்லாது - பேப்பர் படித்துக் கொண்டு ஈயோட்டிக் கொண்டிருப்பார்கள் ! சும்மா இருப்பவர்களுக்கு ஏதோ வேலை கொடுத்த மாதிரியாச்சே என்று MC-ன் மேனேஜர் பாலசுப்ரமணியமும் சந்தோஷப்பட - எனக்கோ ஓசியில் வேலையினை ஒப்பேற்றிய சந்தோஷம் ! அந்த அச்சுக்கோர்ப்புகளை பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு போய் காளிராஜனிடம் கொடுத்து விட்டு அவன் முதுகுக்குப் பின்னே நட்டமாய் நின்றபடிக்கே அவன் வெட்டி, ஒட்டி, கருப்பு மசியைக் கொண்டு பபுள்களையும் ; கட்டங்களையும் போடுவதைப் பராக்குப் பார்ப்பேன் ! ஒரு மாதிரியாய் சகலமும் முடிந்த பின்னே பக்கங்களை பிலிம் எடுக்கத் தூக்கிக் கொண்டு நானும் காளிராஜனும் பிராசசிங் கூடத்துக்குப் படையெடுப்போம் ! அந்த நாட்களில் ஸ்பைடர் சைசிலான ஒரு முழு புக்குக்குமே சேர்த்து பிலிம் எடுக்கும் கிரயம் ரூ.450 தான் என்பதை பைலில் கிடந்த இன்னொரு பில்லில் பார்க்க முடிந்தது ! சுடச் சுட அப்போதே ரொக்கமாய் பட்டுவாடா செய்துவிடுவோம் என்பதால் நாங்கள்லாம் cash parties அந்நாட்களில் !! 

இன்னும் சொல்லப் போனால் முதல் 18 மாதங்களுக்கு கணக்கு-வழக்கு என்று எதுவுமே எழுதும் பழக்கமே கிடையாது நம்மிடம் ! ஏஜென்ட்கள் டிராப்ட் அனுப்பினால் மட்டுமே புத்தகங்கள் அனுப்புவோம் ; so அந்த வரவும், பற்றும் tally ஆகிப் போய்விடும் ! அவர்களுக்கென ஏடுகள் maintain செய்யும் அவசியமே இராது துளியும் ! சம்பளமா ? 10 நாட்களுக்கொரு தபா ரூ.145 கொடுத்தால் முடிந்தது பிரச்னை ! பேப்பர் கொள்முதலா ? வாங்கும் போதே சுடச் சுட செக்கும் கொடுத்து விடுவோம் என்பதால் அவர்களது கணக்கில் பாக்கி என்ன உள்ளதென்று பார்க்கும் அவசியங்கள் இராது ! பிரின்டிங் கூலியும் அதே கதை தான் ; பேப்பரைக் கொண்டு போய் எனது பெரியப்பாவின் ஆபீசில் இறக்கிய அடுத்த முப்பதாவது நிமிடமே அவர்களது கணக்குப்பிள்ளைகள் படையெடுத்து விடுவார்கள் - முன்கூட்டியே என்னிடமிருந்து அச்சுக் கூலியைக் கறந்து விடமுடியுமென்ற நம்பிக்கையில் ! மொத்தமே ரூ.1800 கூலி தான் வரும் - ஒரு முழு புக்கினில் 20,000 பிரதிகள் black & white-ல் அச்சிட !!!  எந்தச் சாமத்தில் போனாலும் முன்னுரிமையோடு நமது பணிகளை அச்சிட்டு வாங்கிட சாத்தியப்படும் என்பதால், நானுமே அவர்கள் கேட்க்கும் போதே நோட்டுக்களை நீட்டிவிடுவேன் ! So அங்கேயும் "லயன் காமிக்ஸ் முதலாளி" என்று ஒரு கெத்து !! பைண்டிங் பணிகளும் ஒட்டு மொத்தமாய் ரொக்கத்தில் மாத்திரமே செய்திடுவது வழக்கம் ! பாளையங்கோட்டையிலிருந்து ஒரு மூத்த பைண்டர் அந்நாட்களில் என் தந்தையின் அச்சகத்தில் காண்டிராக்ட் பணி செய்வதுண்டு ; அவரையே நாமும் பயன்படுத்திக் கொள்வோம் ! இன்றைக்கு வரையிலும் அவர் பெயர் தெரியாது ; "நைனா....பிரின்டிங் முடிஞ்சது ; கிளம்பி வாங்க" என்று ஒரு போன் அடித்தால் அடுத்த மூன்றாவது மணி நேரத்தில் மனுஷன் இங்கே ஆஜராகியிருப்பார் ! பைண்டிங் செய்ய பெரியப்பா ஆபீசில் இடம் இராதென்பதால் அது மாத்திரம் என் தந்தையின் ஆபீசில் வைத்து நடைபெறும். ஒரு மாதிரியாய்ப் பிரதிகள் தயாராகிய இரவே காளிராஜனின் சித்தப்பா மின்னல் வேகத்தில் பண்டல் போட்டுத் தருவார் நமக்கு ! அப்போதெல்லாம் ஆர்டர் புக்கும் கிடையாது ; ஒரு புடலங்காயும் இராது ! 'ஆங்...திண்டுக்கல் - 200 புக் ; மதுரை : 3000 ; ஈரோடு : 1500  : அறந்தாங்கி : 50 ; சோளிங்கர் : 35 ; புஞ்சைபுளியம்பட்டி : 25 etc..etc' என்று சகலமும் மனப்பாடமாக இருக்கும் என்னுள் ! பண்டல் ஒன்றுக்கு கூலி ரூ.2 & அவை சகலமும் ரயிலில் concession ரேட்டில் புக்காகி ஒவ்வொரு ஊருக்கும் பயணமாகிடும் - நான்கு ரூபாய்களுக்கும் ; ஐந்து ரூபாய்களுக்கும் !! மாலையில் ரயில்வே புரோக்கர் கை நிறைய பாஸ்களோடு ஆபீசுக்கு வரும் போது அட்ரஸ் எழுதி ரெடியாக இருக்கும் கவர்களில் அவற்றை மட மடவென திணித்து RMS எனும் ரெயில்வே போஸ்ட்டாபீஸில் போய் சேர்த்து விட்டு வருவேன் ! ஒற்றை ரூபாய் ஸ்டாம்ப் கூடுதலாய் ஓட்ட வேண்டும் அந்தச் சேவையைப் பயன்படுத்திட  - ஆனால் ரயிலில் போகும் போதே sorting செய்து மறுநாள் பட்டுவாடா செய்துவிடுவார்கள் ! பண்டல்கள் போய்ச் சேர ; பாஸும் தபாலில் வந்திட, சூட்டோடு சூடாய் இதழ்கள் கடைகளுக்குச் சென்றுவிடும் ! 

ஏஜெண்ட்களின் டிராப்ட்களை பேங்கில் கொண்டு போய்ச் சேர்ப்பது ; மாதாமாதம் ஏஜெண்ட்களுக்கு புது இதழ்கள் பற்றிய சுற்றறிக்கை அனுப்புவது ; வரும் கடிதங்களுக்குத் தத்தக்கா -புத்தக்கா என்று ஏதாச்சும் பதில் போடுவது என்று எஞ்சியிருக்கும் வேலைகள் சகலமும் என்னதே ! And இவை சகலத்தையும் என்னோடு இருந்து கொண்டே ஜாலியாய் வேடிக்கை பார்ப்பது எனது தாத்தாவின் பொழுதுபோக்காக இருந்திடும் ! மாதம் பிறந்துவிட்டால் போதும் - முதற்காரியமாக காத்தைப் பிடித்துத் திருகி உட்காரச் செய்து அப்போதைய லாப-நஷ்டக் கணக்குகளைப் பார்க்கச் செய்துவிடுவார் ! 1984 -ன் இந்த வேளையில் என்னிடம் அவர் ஒப்படைத்திருந்தது ரூ.40,000 ரொக்கம் !! ஒவ்வொரு மாதமுமே அந்தப் பணம் எந்த ரூபத்தில் உள்ளதென்ற சரி பார்க்கும் படலம் தவறாது நடந்து விடும். பேங்க்கில் இருப்பு எவ்வளவு ? கதைகள் கையிருப்பு எவ்வளவு ? புத்தக ஸ்டாக்கின் கிரயமென்ன ? பேப்பர் ஸ்டாக் இருப்பின், எவ்வளவுக்கு ? என்று ஒரு லிஸ்ட் போட்டு அதனை தாத்தாவிடம் காட்டியாக வேண்டும் ! முந்தைய மாதத்துக் கணக்கிலிருந்து மறு மாதத்துக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.ஐந்தாயிரமாவது ஜாஸ்தியாகிவிட்டிருந்தால் - "ஹை...இது தான் இந்த மாசத்து லாபமா ?" என்று எனது ஆந்தைவிழிகள் மேலும் விரியும் ! தாத்தாவும் திருப்தியோடு கிளம்பிவிடுவார்கள் ! ஆனால் ஏதாச்சும் சொதப்பி விட்டால் உட்கார வைத்து சகலத்தையும் மறுக்கா சரி பார்க்காது விட மாட்டார்கள் ! செப்டெம்பர் மாதவாக்கில் நான் அந்நேரம் ஓட்டிக் கொண்டிருந்ததொரு அலாவுதீன் காலத்து சைக்கிளை விற்று விட்டு, ரூ.970-க்கு ஒரு புது ஹெர்குலிஸ் சைக்கிளை வாங்கியிருந்தேன் ! எங்களது மாதாந்திர பட்ஜெட் மீட்டிங்கில் (!!!) இந்தக் கொள்முதல் எப்படியோ  விடுபட்டுப் போக - கணக்கில் ஆயிரம் ரூபாய் துண்டு விழுந்தது போல் தோன்றியது ! "ஆயிரம் ரூபாய் தானே ? என்றெல்லாம் விட தாத்தாவும் தயாரில்லை ; ஏதோ பெருசாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமென்ற கனவில் திரிந்த இந்தச் சுள்ளான் தொழிலதிபரும் தயாரில்லை ! ஒன்றரை மணி நேரம் அதே கணக்கை போடு போடென்று போட்டு - இறுதியில் சைக்கிள் சமாச்சாரமும் ஞாபகத்துக்கு வர - பேரனுக்கும், பெரியவருக்கும் முகமெல்லாம் மத்தாப்பூ !! 

முதன்முதலாய் நமது வங்கிக் கணக்கில் மட்டுமே ரூ.ஐம்பதாயிரத்துக்கு மேலானதொரு தொகை இருப்பில் நின்ற நாளில் எங்களிருவருக்கும் கிட்டிய புளகாங்கிதத்தை இன்றைக்கும் என்னால் அசைபோட முடிகிறது !! பேங்க் இருப்பே ஐம்பதாயிரம் ; அப்புறமாய் கையிலுள்ள ஸ்டாக்  ; இத்யாதி..இத்யாதியெல்லாம் சேர்த்து மொத்தம் தொண்ணூறாயிரம் தேறும் என்பது புரிந்த போது - போட்ட முதல் தொகையினை சேதாரமுமின்றி பயல் இரட்டிப்பாகி விட்டானென்ற சந்தோஷம் தாத்தாவுக்கு ! எனக்கோ அந்த பேங்க் பேஸ்புக்கை தலைமாட்டில் வைத்துப் படுத்துறங்காத குறைதான் !! ஆபீசில் இருக்கும்போது ஓசையின்றி மேஜையின் டிராயரைத் திறப்பேன் ; பாஸ்புக்கில் கிறுக்கலான கையெழுத்தில் பதிவாகியிருக்கும் அந்தத் தொகையினைப் பார்ப்பேன் ; சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு லேசாய் ஒரு இளிப்பு இளித்த கையோடு மறுபடியும் டிராயரிலேயே வைத்து விடுவேன் ! அதைவிடப் பெருங்கூத்து - அதுநாள்வரைக்கும் டப்பு-டப்பென்று payment பண்ணி வந்தவனுக்கு, எங்கே இந்த பேங்க் கையிருப்பு 50000-க்குக் கீழே கரைந்து விடுமோ ? என்ற பயத்தில் யாருக்கும் காசையே கண்ணில் காட்டாது, வரும் மணியார்டர் பணங்களிலேயே வண்டியை ஒட்டவும் முனைவேன் ! வாரயிறுதி ஆகிவிட்டால் - ஓவர்டைம் ரூ.60 வரும் ! அன்றைய  மணியார்டரில் அந்தப் பட்டுவாடாவை ஒப்பேற்றிய கையோடு, மிச்சமிருக்கக் கூடிய நூறையோ, இருநூறையோ பைக்குள் திணித்துக் கொண்டே  ஜாலியாய் இரவு ஒன்பது மணிக்கு ஆபீஸைப் பூட்டி விட்டு காளிராஜனும், நானுமாய்ப் புறப்படும் போது - வானமே எங்கள் காலடியில் என்பது போலொரு ஏகாந்தத்தை உணர முடியும் ! அவனும் என் வயதே என்பதால் - "அண்ணே..அண்ணே..!" என்று தான் கூப்பிடுவான் ; ரொம்பவே நட்பாகயிருப்பான் ! அவன் வீடு எங்கள் வீட்டைத் தாண்டித் தான் என்பதால் வழி நெடுக ஏதேதோ அரட்டையடித்துக் கொண்டே வீடு திரும்புவோம் ! பின்னாட்களில் சொந்தமாய்த் தொழில் செய்யும் பொருட்டு பணியிலிருந்து விலகியவனை,  போன வருடம் எதேச்சையாய் சந்தித்த போது ரொம்பவே சந்தோஷமாகயிருந்தது ! மூன்று பசங்கள் ; லாரி புக்கிங் ஏஜென்சி ; நிதானமான வாழ்க்கை என்று வண்டி நிறைவாய் ஓடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான் ! ஜுனியர் எடிட்டரின் கல்யாணத்தின் போது தேடித் பிடித்து அவனிடமும் ஒரு பத்திரிகையை ஒப்படைத்த போது ரொம்பவே சந்தோஷப்பட்டான் !! அந்த முதல் சம்பள வவுச்சரைப் பார்த்த போது ஏகமாகவே nostalgia - எனக்குள் !!

அலமாரியைக் கிண்டக் கிண்ட - அலாவுதீன் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதங்கள் போல் ஞாபகங்களுமே படையெடுத்தன ! "கபாலர் கழகம்" இதழின் டைப்செட்டிங் பில் (அது தீபாவளிமலர் மாதத்தில் வந்த இதழோ என்னவோ - முதன்முறையாக வெளியே கொடுத்து அச்சுக் கோர்த்து வாங்கினோம்) ; மாலையப்பனுக்கு பெயின்டிங் போடும் பொருட்டு நான் திரட்டிக் கொடுத்த டிசைன் மாதிரிகள் ; சென்னையில் Southern Distributors என்ற நமது அந்நாளைய ஏஜெண்டுக்கு, பணம் அனுப்பத் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான் கோபமாய் எழுதி அனுப்பி ஏழரையைக் கிளப்பிக் கொண்ட லெட்டரின் சாயம் போன நகல் ; பதிப்பகங்களுடனான மங்கிப் போன கடுதாசிப் பரிமாற்றங்கள் ; சிலபல "அடுத்த வெளியீடு" விளம்பரங்கள் ; என்று என்னென்னவோ இரைந்து கிடந்தன ! ஆனால் அத்தனையுமே தம் ஆயுள் முடிந்தநிலையில் ஒடிந்து விழாக் குறையாக ; கரையானுக்குத் தீனியாகிக் கிடக்க - அவற்றை நேற்றைக்குத் தான் எரித்து விட்டோம் ! நினைவுகளைக் கரையான்கள் அரிக்காதவரையிலும் உத்தமம் என்ற பெருமூச்சோடு ஆபீசுக்குத் திரும்பினேன் ! Phewww !!

நினைவுகள் சுகம்மாய் இருந்தாலும், நிதரிசனத்துக்குத் திரும்பிடல் அவசியமன்றோ ? So - இதோ ஜூலையில் காத்திருக்கும் வண்ண இதழ்களின் previews : "லூட்டி with லக்கி " - இந்தாண்டின் நமது ஆண்டுமலர் + டாப் கார்ட்டூன் நாயகரின் முதல் வருகை + அட்டகாசமான ஹார்டகவர் இதழும் கூட ! இரு புத்தம்புது சாகசங்கள் - முழுவண்ணத்தில் என்பதால் கார்ட்டூன் பிரியர்களுக்கு ஒரு கலக்கல் விருந்து காத்துள்ளது என்பேன் ! அதிலும் அந்த "திசைக்கொரு திருடன்" கதை செம ரகளையானது! டால்டன்கள் இரு ஆல்பங்களிலுமே பிரதான பங்கெடுக்கிறார்கள் என்றாலும் "தி.ஓ.தி" மாஸ் தான் ! டால்டன்கள் யோக்கியன்களாகவும், லக்கி முகமூடித் திருடனாகவும் மாறினால் - கூத்துக்குப் பஞ்சமிருக்குமா - என்ன ? State Bank of டால்டன் - இந்த மொள்ளமாறிச் சகோதரர்களை யோக்கியமான பேங்க்கர்களாக மாற்ற முற்படும் ஒரு தாய்மாமனின் கதை ! Again ஒரு சிரிப்பு மேளா தான் ! அட்டைப்படம் - ஒரிஜினல்கள் - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில். ஹார்டகவர் புக்காக்கிப் பார்க்கும் போது இது செமையாய் ஸ்கோர் செய்கிறது ! இதோ - உட்பக்கங்களிருந்தும் previews : 

State Bank of Dalton !!
"திசைக்கொரு திருடன்"

ஜூலையின் இன்னொரு கௌபாய் பற்றி இனி ! டிரெண்ட் தோன்றும் "பனிமண்டல வேட்டை" - இந்தப் புதியவரின் துவக்க சாகசம் ! இந்த ஆல்பத்தைப் புரட்டும் போது எனக்குத் தோன்றிய முதல் சிந்தனையே : கமான்சே தொடரில் எல்லா கதைமாந்தர்களும் பரட்டைகளாய் உலவியதற்கு இந்தத் தொடர் நேர் contrast ; சகலரும் படிய வாரிய தலைகளோடு நீட்டாய் காட்சியளிக்கிறார்கள் - என்பதே ! கதையுமே அழகாய், நேர்கோட்டில் பயணிக்கிறது - மயக்கும் சித்திரங்களோடும், வர்ணங்களோடும் ! இந்தத் தொடரின் அடுத்த 3 ஆல்பங்களையும் போன வாரம் படிக்க நேர்ந்தது ; remarkably refreshing என்பதே எனது எண்ணமாக இருந்தது ! ஆனால் நான் ஓவர் பில்டப் தந்து விட்டேனென்று பின்னாளில் துடைப்பங்களைத் தேடும் படலமெல்லாம் உங்களுக்கு வேண்டாமே என்பதால் - நீங்களே படித்து தீர்ப்புச் சொல்வது தேவலாம் என்றுபடுகிறது ! இதோ டிரெண்டின் previews : 


ஜூலையின் மூன்றாவது வண்ண இதழான "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" preview-க்களை புக் அனுப்பும் நாளின் பதிவில் கண்ணில் காட்டிவிடலாமென்றுள்ளதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! Bye all ; have an awesome weekend !! ஆங்....அந்த கலர் டெக்ஸ் 3 குட்டிக்கதைகள் இணைந்த தொகுப்பானது இந்த ஜூலையில் தயாராகியிருக்கும், என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன்  ! சந்தாவில் இல்லா நண்பர்கள் அவற்றை ஆன்லைனில் வாங்கிடலாம் - ஜூலை முதல்வாரத்தில்  !  See you around folks !!

Saturday, June 16, 2018

No frills...!

நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது ! இதழ் அச்சாகி பைண்டிங்கிலிருக்க, எதிர்பாரா திக்கிலிருந்து தாமதம் ! அது தான் கூரியர் அனுப்பும் டப்பிகளின் ரூபத்தில் ! ஒரேயொரு புக் என்பதால் நம்மிடம் எப்போதுமே ஸ்டாக்கில் உள்ள வழக்கமான டபராக்களைப் பயன்படுத்திட  வழியில்லை ! So இந்தக் குட்டியூண்டு டப்பாவைச் செய்து தர ஆளை பிடித்துக் கேட்டால் - "கொஞ்சம் லேட்டாகும்..பரால்லியா ?" என்றார்கள் ! "சாதாரண துணிக் கவரில் போட்டு அனுப்பிடுவோமே சார்  ?" என்று நம்மவர்கள் ஆபத்பாந்தவர்களாய் நிற்க - எனக்கோ முதுகில் இன்னொரு தபா நயம் நல்லெண்ணையைத் தடவிக் கொண்டு சாத்து வாங்கச் சத்தில்லை சாமிகளா !! என்று சொல்லி விட்டேன் !   So டப்பிக்கள் திங்கள் வர்றான்...புக்குகள் கிளம்புறான் !      

And இதோ - ஜம்போ # 1-ன் அட்டைப்பட முதல்பார்வை !! அட்டைப்படம் மாத்திரமன்றி அந்த லோகோவுமே புதுசு தான்! பெயர் சொல்ல  விரும்பா நண்பரொருவர் அனுப்பிய டிசைனை நமக்குத் தெரிந்தமட்டுக்குக் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து இங்கே கொணர்ந்துள்ளோம் ! அந்த யானை ஜோடியானது அட்டைப்படங்களின் வர்ணப் பின்னணிகளுக்கேற்ப  அவ்வப்போது நிறம் மாறிக் கொள்ளும் ! Hope you like it !! அட்டைப்படத்தைப் பொறுத்தவரை - இது நமது ஓவியரின் கைவண்ணம் + டிசைனரின் மெருகூட்டல் ! இளம் டெக்சின் யூனிபார்ம் & அந்த முகவெட்டு ஒரிஜினலுக்கு நியாயம் செய்யும் விதமாய் அமைந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது ! ஆனால் தீர்ப்பெழுதும் ஜூரிக்கள் ஒத்துப் போனாலே எனக்கு நிம்மதி ! (அந்த ரெண்டு கைகளிலும் உள்ளது ஏதோ ஒரு கையுறை மாதிரியான சமாச்சாரம் guys - நம்மவருக்கு சகதியில் காப்புப் போட்டு விட்டோமோ ? என்று ரோசிக்க அவசியமில்லை !!)
பின்னணி வர்ண சேர்க்கையில் இன்னும் ஒன்றிரண்டு variants முயற்சித்துப் பார்த்திருந்தோம் ; ஆனால் அவை ரொம்பவே 'ஜிங்கு-ஜாங்' என்றிருப்பது போல் எனக்குப் பட்டது ! Anyways - அவையும் உங்கள் பார்வைக்கு ! 

And அட்டைப்படத்தில் இயன்ற சிற்சிறு நகாசு வேலைகளும் செய்துள்ளோம் என்பதை இதழைக் கையில் ஏந்தும் வேளையில் புரிந்து கொள்வீர்கள் ! 

கதையைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் முன்னுரை தந்துள்ளேன் என்பதால் - மறுக்கா ரொம்பவே தமுக்கடிக்கப் போவதில்லை ! இதுவொரு flashback படலம் என்பதால் - அந்த வழக்கமான இரவுத்தீக்கு முன்னே அமர்ந்து கதை சொல்லும் / கேட்கும் பாணியே இம்முறையும் ! டெக்ஸ் தனது கடந்த காலத்தைப் பற்றி ; தான் ஒரு போக்கிரியாய் திரிந்த நாட்களைப் பற்றி பேசுகிறார் தன் சகாக்களிடமும், நம்மிடமும் !  நாம் ஆண்டாண்டு காலமாய்ப் பார்த்துப் பழகிய டெக்ஸ் அவதார் ஒரு நீதிக் காவலரது என்பதால் - இங்கே நாம் பார்க்கவிருக்கும் டெக்சிடம் லேசான வேறுபாடு இருந்திடும் ! And அந்த வேறுபாடே என் பெண்டையும் ஒரு வாரத்துக்குக் கழற்றிவிட்டது என்பதையும் சொல்லியாக வேண்டும் ! இது ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் நமது கருணையானந்தம் அவர்களால் எழுதப்பட்ட கதை என்பதால் - மேலோட்டமாய் டெக்ஸ் பன்ச் டயலாக்குகளை மட்டும் மாற்றி எழுதி வீட்டுக் கிளம்பி விடலாமென்ற மிதப்பில் சாவகாசமாகவே இதனை எடிட்டிங்குக்கு எடுத்தேன் ! ஆனால் பக்கங்களைப் புரட்டப் புரட்ட - எனது நெருடல்கள் வலுப்பெற்றுக்  கொண்டே சென்றன  ! வயதில் குறைச்சலான டெக்ஸ் ; சட்டத்தால் தேடப்படும் டெக்ஸ் ; வன்மேற்கில் அத்தனை பெரிய முத்திரையெல்லாம் பதித்திருக்கா டெக்ஸ் - என்பதே இந்தக் கதையில் நம்மவரின் profile ! ஆக அதற்கேற்றவாறு மொழியாக்கமும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிட வேண்டுமே என்பது எனது எதிர்பார்ப்பாய் இருந்தது ! ஆனால் - இளம் டெக்ஸுக்கு தாத்தா வயதிலான கூட்டாளி கூட "வாங்க..போங்க....வீரரே..தீரரே !" என்று சிலாகிப்பான மரியாதை தருவதும்  ; தற்போதைய (ரேஞ்சர்) டெக்ஸுக்கு பயன்படுத்தும் அதே பாணியிலான வரிகள்  கதை நெடுகிலும் இளம் டெக்ஸ்க்கும் தரப்பட்டிருப்பது எனக்கு ரொம்பவே உதைத்தது ! So திருத்தி எழுதும் படலம் தொடர்ந்தது ஒட்டு மொத்தமாய் 224 பக்கங்களுக்குமே !! புதுசாய் எழுதுவது ஒரு விதச் சிரமமெனில் - ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்போடு sync ஆகும் விதமாய் ஒட்டுமொத்தத் திருத்தங்கள் செய்ய முனைவது வேறொரு ரக நோவு ! பந்தாவாய் எடிட்டிங்கோடு கிளம்பலாமென்று நினைத்துத் திரிந்தவனுக்கு பிதுங்கின விழிகள் - இந்தக் கடைசி ஒரு வாரம் முழுசுக்குமே !! ஆனால் இந்த மாற்றங்களின்றி இளம் டெக்ஸை உங்களிடம் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை என்பதால் அதன் பொருட்டும் ஒரு சில நாட்கள் கூடுதலாய் எடுத்துக் கொண்டேன் !! இதோ - உட்பக்கங்களின் preview :
ஒரு முழு நீள ஆக்ஷன் மேளா காத்துள்ளது என்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம் ! அப்புறம் ஜம்போவில் துவக்கம் முதலே பின்பற்றவிருக்கும் பாணி பற்றியும் சொல்லிவிடுகிறேனே : "No Frills ...Only Thrills ..." என்பதே ஜம்போவின் தாரக மந்திரமாய் இருந்திடும் ! So குட்டியானதொரு அறிமுகம்....கதை....தொடரவிருக்கும் விளம்பரங்கள் என்பனவற்றைத் தாண்டி வேறெதுவும் இடம் பிடித்திடாது ! நான் ஆப்பம் சாப்பிட்ட கதை ; அல்வா வாங்கிய கதையென்றெல்லாம் இங்கே நீட்டி முளக்கப் போவதில்லை ! 

Moving on,காத்திருக்கும் ஜூலையில் No Tex என்பதே மெனு ; ஆனால் வேறு 2 கௌபாய் நாயகர்கள் களமிறங்குகிறார்கள்  ! அவர்களுள் ஒருவர் ஒல்லிப்பிச்சான் லக்கி - நமது லயனின் 34 -வது ஆண்டுமலரில் டபுள் சாகசம் செய்கிறார் ! அடுத்தவரோ - புது வரவான ட்ரெண்ட் !! கனடாவின் பணிமண்டலத்தில் இவரது சாகசங்கள் நமக்கொரு refreshing change ஆக இருக்குமெபென் ! பனிமண்டலம் ஒருபக்கமெனில் - தகிக்கும் எரிமலை இன்னொரு பக்கம் ! Yes - சந்தா D சார்பாய் மறுபதிப்பில் மிளிர்கிறார் கேப்டன் பிரின்ஸ் ! அட்டகாசமான புது ராப்பருடன் "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" வண்ணத்தில் மிரட்டத்த தயாராகி வருகிறது !  மூன்று  ஆல்பங்களுமே அடுத்த சில நாட்களில் அச்சாகவுள்ளன என்பதால் ஜூலை இதழ்கள் bang on time இருந்திடும் !! அதனைத் தொடர்ந்து ராட்சசனொருவன்காத்துள்ளான் என்பதால் இடைப்பட்ட சகலத்தையும்  முடித்துத் தள்ளுவதில் முனைப்பாகவுள்ளோம் ! 

நாளைய பொழுதுக்கு  திருமண வீட்டுச் சாப்பாடு ; அரட்டை என்று அட்டவணை காத்திருப்பினும், "டைனமைட் ஸ்பெஷல்" மிரட்டிக் கொண்டிருப்பதை மறக்க இயலவில்லை ! ஒரு நூறல்ல..இரு நூறல்ல....மொத்தமாய் எட்டு நூறுக்கு கொஞ்சமே குறைச்சலான பக்கங்கள் எனும் போது - எத்தனை அவகாசம் கிடைத்தாலும் பற்றாது போலவே தோன்றுகிறது ! அட...நம்மவர் ஒரு வருஷம் கழித்துப் பிறந்திருக்கலாமோ ? என்ற நினைப்பு எழாதில்லை !! Bye all ...See you around !! Have a lovely Sunday !

Sunday, June 10, 2018

ஒரு புலன்விசாரணை !

நண்பர்களே,

வணக்கம். வடக்கே – தெற்கே என்று ஏகமாய் பில்டப்பெல்லாம் தராமல், நேராகவே விஷயத்தை அணுகுகிறேன் இம்முறை ! ஒரு புலன் விசாரணை.......!

சமீப நாட்களில் – ஒற்றை இதழுக்காக இரு பக்கங்களிலிருந்தும் இத்தனை குரல்கள் ஒலித்ததாக சத்தியமாய் எனக்கு நினைவில்லை ! “நீ என்ன பண்ணுவியோ – ஏது பண்ணுவியோ தெரியாது ..ஆனா ஆடலும், பாடலும் போட்டேடடட தீரணும்!” என்றொரு அணியும்; “சவுண்ட் கொடுத்துத் தான் ஒரு இதழை வாங்க வேண்டுமா? ச்சை… எனக்கு சவுண்டும் புடிக்காது… அதன் பலனான இதழும் புடிக்காது!” என்று இன்னொரு அணியும் இந்த இதழுக்கென கொடி பிடித்து வந்ததில் இரகசியங்களில்லை ! And இந்த இதழினைப் பொறுத்தவரை எனது பெர்சலனலான நிலைப்பாடு என்னவென்பதிலும் ஒளிவு மறைவுகள் இருந்ததில்லை ! ஆனால்  ரசனை சார்ந்த விஷயங்களில் each to his / her own எனும் போது நான் அட்வைஸ் ஆராவுமுதனாக அவதாரமெடுப்பது குடாக்கு வேலை என்பது புரியாதில்லை ! அதே சமயம் கண்முன்னிருக்கும் சோலைகளை விட, கண்சிமிட்டித் தொலைவில் தென்படும் கானல்நீர்கள் மீதான மையல் என்றைக்குமே ஒரு விதப் புதிரான ஈர்ப்புடையது என்பதும் எனக்குப் புரியாதில்லை ! So  ‘வேண்டாமே...!‘ என்று நான் சொல்வதெல்லாம் – "ஏன் வேண்டாமாம் ?" என்ற வினாவை ஒரு மிடறு அதிகப்படுத்துவதாகவே இருப்பது புரிந்தது. சர்ச்சைகளை வளர்ப்பது யாருக்கும் ஆதாயம் தரப்போவதில்லை என்பதால்  அப்போதைக்கு அடுத்த பணிக்குள் நுழைந்து விட்டிருந்தாலும் – ஆகஸ்ட்டுக்கு முன்பாக இந்தச் சமாச்சாரத்துக்கொரு தீர்வு கண்டாக வேண்டுமென்பதில் தீர்மானமாகவே இருந்தேன்!

And இதோ – எங்கள் திட்டமிடல்களின்படி : இரத்தப் படலம் x 3 புக்குகளுமே அச்சாகி விட்டன ; அட்டைப்படங்களும் அச்சாகி விட்டன ; slipcase-க்கான டிசைனும் தயாராகி விட்டதால் அதனைத் தயாரிப்போரிடம் ஒப்படைத்து விட்டோம் ! இனி எஞ்சியிருப்பது பைண்டிங் வேலைகள் மாத்திரமே என்பதால் "நாளைக்குப் பாத்துக்கலாம் ; நாளான்னிக்குப் பாத்துக்கலாம் !" என்று தள்ளிப் போட்டு வந்த "பு.வி."இதழுக்கான மொழிபெயர்ப்புக் கத்தைகளை மேஜைக்கு வரவழைத்திட தடை லேது என்பது புலனானது ! And இதன் தமிழாக்கப் பணியில் நண்பர்கள் மூவர் ஈடுபட்டிருந்தனர் என்பதில் no secrets !! அந்தத் திட மனதுக்காரர்களின் பட்டியல் பின்வருமாறு : 
 • - திரு.கார்த்திகைப் பாண்டியன், கோவை
 • - J. என்ற திரு.ஜனார்த்தனன், குடந்தை
 • - திரு.கணேஷ்குமார், பெங்களுர்

"இந்த இதழை நனவாக்கிடலாமா ?" என்ற சிந்தனைக்குள் நுழைய இன்றைக்கு எனக்குக் கொஞ்சமேனும் சாத்தியமாகிறது என்றாலே அதன் ஒட்டுமொத்த க்ரெடிட்ஸ் மேற்படி மூன்று ஜென்டில்மென்களையே சாரும் ! 

நண்பர் கணேஷ்குமார் 59 பக்கங்களை மாத்திரமே எழுதி அனுப்பியிருந்தார் – நாம் தந்திருந்த அவகாசத்தினில் ! இது போன்ற பணிகளில் அனுபவம் குறைவு என்ற போதிலும் விடாப்பிடியாய் அவர் போட்டுள்ள முயற்சிகளுக்கு நாமெல்லாம் எழுந்து நின்று பாராட்ட வேண்டுமென்பேன் guys ! அசாத்திய விடாமுயற்சி !
முதலிரண்டு இடங்களுக்கு மல்லுக்கட்டியுள்ள நண்பர்கள் கா.பா. & J பற்றி என்ன சொல்லவென்று தெரியவில்லை! அவர்களது பணிகளின் நிஜப் பரிமாணத்தை புரியச் செய்வது வாய் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதொரு காரியம் என்பேன்! “கொஞ்சூண்டு கட்டுரைப் பக்கங்கள்; நிறைய காமிக்ஸ் பக்கங்கள் – இதை மொழிபெயர்க்க வலிக்குதாக்கும்?” என்று கணிசமான மைண்ட் வாய்ஸ்கள் – புலன் விசாரணை சார்ந்த சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்த வேளையில் ஒலித்ததை நாமறிவோம் ! “ப்பூ… இதை என்கிட்டே தந்தாக்கா பின்னிப்புடுவேன்லே !!” என்ற எண்ணங்களும் ஓடியிருக்கக் கூடும் தான் ! ஆனால் take it from me guys : வருஷம் முழுக்க இதே ஜோலியாய் இருக்கும் இந்த ஆந்தை விழியன் சொல்கிறேன் – இதுவொரு extraordinary effort ! சத்தியமாய் இந்தப் பணியை என்னால் செய்திருக்கவே முடியாது என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது  ! இதனை நான் ஆரம்பத்திலேயே வெளிப்படையாய்ச் சொல்லியிருந்த போதுமே, அல்வா கிண்டிட இதனை ஒரு காரணமாய்க் காட்டி நான் ஜகா வாங்குகிறேன் என்று நண்பர்கள் கருதி வந்ததில் ஏது இரகசியம் ? But இந்த நொடியில், கையில் 2 கத்தை மொழிபெயர்ப்புகள் தயாராக இருக்க, இரண்டையும் மாறி மாறி நான் பரிசீலிக்க – எனது நம்பிக்கை இருமடங்காகிறது – “ஆத்தாடியோவ்… இது நமக்குச் சுட்டுப் போட்டாலும் சரிப்பட்டிருக்காது!” என்று! நண்பர் கணேஷ்குமாருக்கு எழுந்து நின்று கரகோஷமெனில் – நண்பர்கள் கா.பா. & J-வுக்கு – சேர்கள் மீதோ ; சோபாக்கள் மீதோ; மேஜைகள் மீதோ; கட்டில்கள் மீதோ எழுந்து நின்று கைதட்டுவதே பொருத்தமாகயிருக்குமென்பேன் !! இந்தத் தருணம் வரையிலும் என்னுள் இரு மாதிரியான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது நிஜமே ! இதையும் வெளியிட்டு, கிட்டங்கியின் வலுவை மேற்கொண்டும் பரிசீலிக்கத் தான் வேண்டுமா ?  என்ற தயக்கம் என்னுள் நிலவவே செய்தது தான் !  ஆனால் நண்பர்களின் ஒட்டுமொத்தப் பணிகளின் பரிமாணங்களைத் தரிசித்த பின்பாக இப்போது மனதில் ஓடுவதைச் சொல்கிறேன்  : "புலன் விசாரணையை" எதற்காக வெளியிடுகிறோமோ இல்லையோ – இந்த உழைப்பு வீண் போகிடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காகவாவது நிச்சயம் வெளியிட்டே தீர வேண்டும் ! 

So – "Project புலன் விசாரணை” is on for sure ! 
 • என்ன சைஸில்? 
 • என்ன பக்க அளவில்? 
 • என்ன விலையில்? 
 • எப்போது? 
 • வண்ணத்திலா? 

என்பதற்கெல்லாம் “in due course சொல்கிறேனே…!” என்பது தான் இந்தத் தருணத்தில் எனது பதிலாக இருக்கும் ! 2018-ன் இறுதிக்கு முன்பாக என்பது மட்டும் எனது promise !
 • ஜெனரல் காரிங்டன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தார் ? 
 • ஷெரிடன் குடும்பத்தின் பெருசு முதல் சிறுசு வரையிலும் எங்கே வளர்ந்தார்கள் ? 
 • அவர்களது பழக்க வழக்கங்கள் என்ன ? 
 • கால்வின் வாக்சின் ஊர் எது? பூர்வீகம் எது ? 
 • கர்னல் ஆமோஸின் STD என்ன? பூகோளம் என்ன? 
 • ஜட்ஜ் ஆலன்பை பிழைப்புக்கு என்ன செய்தார் ? 
 • மேக்காலுக்குப் பிள்ளை குட்டிகள் உண்டா – கிடையாதா? எங்கே பணியாற்றியிருக்கிறார் ? 
 • ஜெனரல் ஸ்டாண்ட்வெல்லின் பட்டப்பெயர் என்ன ? 
 • அட்மிரல் ஹைடெஜர் எந்த வருஷம் முதல் அமெரிக்கப் பிரஜையானார் ? 
 • கிம் காரிங்டன் பள்ளிக்கூடத்தில் என்னவெல்லாம் படித்தாள் ? 
 • லெப்டினெண்ட் ஜோன்சின் இனிஷியல்கள் என்ன ?

உப்ப்ப்ப்….!! இது போன்ற தகவல்கள் ஓராயிரம் உள்ளன இந்தக் கட்டுரைப் பக்கங்களில்! டி.வி.யில் அடியில் ஓடும் scrolling news-களை முழுதாய்ப் படிக்கக் கூடப் பொறுமையில்லாத இந்நாட்களில் இது போன்ற XIII trivia தகவல்களை வாசிக்கவோ, நினைவில் இருத்திக் கொள்ளவோ நம்மில் எத்தனை பேருக்குப் பொறுமை இருக்குமோ – சொல்லத் தெரியலை எனக்கு ! ஆனால் இவை சகலத்தையுமே கர்மமே கண்ணாய் தமிழ்ப்படுத்தியுள்ள நண்பர்களின் பொருட்டாவது நீங்கள் படித்தீர்களானால் மகிழ்வேன் ! 

கையில் 2 மொழிபெயர்ப்புகள் இருக்க – அதனில் எதைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் எனக்குள் ! “பூ” என்று ஒருவரும்… “மலர்” என்று அடுத்தவரும் எழுதியிருக்க – “புய்ப்பம்” எங்கேயாச்சும் கண்ணில்படுமா ? அதைக் காரணமாக்கி எதையாவது இரண்டாமிடத்துக்கு அனுப்பிடலாமா ? என்று பரக்கப் பரக்க நான் முழித்தது தான் மிச்சம் ! But இறுதியில் நதீநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை போன்றதொரு உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்யப் போகும் மகாதிட்டத்தை வகுக்கத் தீர்மானித்தேன் ! அதாவது கட்டுரைப் பகுதிகளை நண்பர் கா.பா.வின் ஸ்க்ரிப்டிலிருந்து எடுத்துக் கொள்வதென்றும் ; காமிக்ஸ் பக்கங்களை நண்பர் J-வின் ஸ்க்ரிப்டிலிருந்து இரவல் வாங்கிக் கொள்வதென்பதே அந்த மகா சிந்தனை ! இது சரியா ? தப்பா ? என்றெல்லாம் ஓடவிருக்கும் பட்டிமன்றத்துக்கு  தீர்ப்புச் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! ஆனால் இரு இமாலயப் பிரயத்தனங்கள் முன்னிருக்க – அவையிரண்டையுமே இயன்றமட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு வேறு மார்க்கம் தென்படவில்லை ! அதிலும் நண்பர் கார்திகைப் பாண்டியன் ஒட்டுமொத்தத்தையுமே டைப்செட் செய்து அழகாய் அனுப்பி வைத்திருக்க, அது icing on the cake என்பேன் !  
போட்டியின் கடுமையையும், பங்கீட்டாளர்களின் முயற்சிகளின் மும்முரத்தையும் கணக்கில் கொண்டு, பரிசுத்தொகையை பத்திலிருந்து, பதினைந்தாயிரமாய் மாற்றிடத் தீர்மானித்தேன் ! அப்புறம் மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அதனைத் தட்டச்சும் செய்து அனுப்பிய நண்பர் கா.பா.வுக்கு நமது அன்பும், பரிசின் முக்கிய பங்காய் ரூ.9000/- ம் அறிவிப்பது பொருத்தமென்று நினைத்தேன். விடாப்பிடியாய் சகலத்தையும் அழகான கையெழுத்தில் எழுதியனுப்பியது மட்டுமன்றி, ஆங்காங்கே குட்டிக் குட்டிப் படங்களும், டிசைன்களும் போட்டு அனுப்பிய நண்பர் J-க்கு ரூ.6000/-ம் என்று சொல்ல  எண்ணினேன் ! ஈரோட்டில் நண்பர்களுக்கு நமது நன்றிகளுடன், இந்தக் காசோலைகள் இரண்டையும் தந்திடுவது சிறப்பாகயிருக்குமென்று என் தலையும் ; தற்சமயமாய் காற்று வாங்கி வரும் நமது வங்கிக் கணக்கும் முன்மொழிகின்றன ! ஓ.கே.வா all ? And congrats writers !!

நிறைகளைப் பார்த்த கையோடு – சன்னமாய்க் கண்ணில் பட்டதொரு குறை பற்றியும் சொல்லி விட்டால் தராசின் முள் நடுநிலையில் நின்றது போலாகிடும் என்றும் நினைத்தேன் !  அது வேறொன்றுமில்லை – காமிக்ஸ் சார்ந்த பக்கங்களில் நண்பர்கள் இருவருமே அவ்வப்போது – “உள்ளது உள்ளபடியே” என்ற பாணியில் தமிழாக்கம் செய்திருந்தனர். வார்த்தைகளை இடம் மாற்றுவது ; ஒரிஜினல் ஸ்கிரிப்டின் பொருளைத் தக்க வைத்துக் கொண்டு, வரிகளை / டயலாக்குகளை நமது பேச்சு வழக்குகளுக்கு ஒத்துப் போகும் விதமாக லேசாக மாற்றி அமைப்பது என்பனவெல்லாம் கதையின் ஓட்டத்துக்கு உதவிடும்  என்பது என் அபிப்பிராயம். அதனை மாத்திரம் நண்பர்களின் காமிக்ஸ் பக்கங்களின் translation-களில் அவ்வளவாய்ப் பார்த்திட முடியவில்லை. So ஆங்காங்கே மிகச் சன்னமான டிங்கரிங் மட்டும் நான் பார்த்து வருகிறேன் ! But "குறையென சுட்டிக் காட்ட ஏதேனும் இருந்தாகணுமே!” என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் மாத்திரமே இதுவெல்லாம் ஒரு விஷயமாகிடும். மற்றபடிக்கு  இதுவொரு  அதகளப் பணி என்பதில் இம்மியும் சந்தேகம் அவசியமில்லை  !!

சீக்கிரமே இதை நனவாக்கிடும் பொறுப்பு இனி என்னது ! அது வரையிலும் பொறுமை ப்ளீஸ் ! And ரைட்டோ – தப்போ இந்த ஒற்றை இதழின் பொருட்டு எழுந்துள்ள சலனங்கள் இதற்கு மேலேயும் வேண்டாமே – ப்ளீஸ் ? So – தொடர வேண்டிய திட்டமிடல்களைச் செய்யும் சுதந்திரத்தை என்னதாகத் தக்க வைத்துக் கொண்ட கையோடு, திட்டமிட, செயலாற்ற அவகாசமும் எடுத்துக் கொள்கிறேன் ; trust me guys – you won’t have reasons to be disappointed ! அதே போல - "சவுண்டுக்கு இதழா ? ச்சை..எனக்குப் புடிக்கவே புடிக்காது !" என்று இந்த இதழினைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ள நண்பர்களுக்கும் ஒரு கோரிக்கை : ஆகஸ்ட் சந்திப்பு வரைக்கும் இது மீதான உங்கள் தீர்ப்புகளை ஒத்தி வையுங்கள் - ப்ளீஸ் ! சந்திக்கும் வேளையில் இதுபற்றி பேசலாம் - நிச்சயமாய் !  ஏற்கனவே ஒற்றை ரூபாய் ஆமை வடை போல் சன்னமாயிருக்கும் நம் வாசக வட்டத்தை , ஏதேதோ காரணங்களுக்காய் எட்டணா உளுந்த வடை சைசுக்கு நாமாய்க் கொண்டு செல்ல அனுமதிப்பானேன் guys ? நம்புவோம்...நல்லதே நடக்கும் ! 

மீண்டும் சந்திப்போம் all ! Have a lovely weekend !! See you around !!

Saturday, June 02, 2018

ஹல்லோ ஆய்வாளர்களே....!!

நண்பர்களே,

உஷார் : இது மாமூல் பதிவல்ல !!! 

வணக்கம். நொய்-நொய்யென்று பத்தி பத்தியாய் பதிவுகளை எழுதித் தள்ளிடும் பழக்கத்திலிருந்து இந்த வாரம் ஒரு சின்ன பிரேக் ;  படங்களே இம்முறை  நமக்குப் புகலிடமாக இருந்திடப் போகின்றன !! என்ன படங்களென்று கேட்கிறீர்களா ? சொன்னால்ப் போச்சு !! 

சமீப காலங்களில் நமது காமிக்ஸ் ரசனைகளை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் வன்மேற்கின் முரட்டுக் கௌபாய்களே என்பதில் no secrets !! நம்ம உசிலம்பட்டிக்கு வழி தெரியுமோ இல்லையோ - நம்மில் பலருக்கு ஓக்லஹோமா எங்கிருக்கென்று தெரியும் ! இங்கிருக்கும் தாராபுரத்தைக் கண்ணில் கூடப் பார்த்திராதோருக்கும் டெக்ஸாஸ் ரொம்பவே பரிச்சயம் !  நெய்வேலிக்குப் பக்கத்து ஊரெது என்று தெரியாவிடினும், நமக்கு நெப்ராஸ்க்கா பற்றி நன்றாகவே தெரியும் ! So இந்த காமிக்ஸ் வன்மேற்கோடு ஊறிப் போன நமக்கு - அந்நாட்களது நிஜ வன்மேற்கையும் ஆராயப் பிடிக்குமென்று பட்டது !! அதன் பலனாய் நெட்டை நோண்டிய போது சிக்கியவைகளே  இந்தப் புகைப்படப் பொக்கிஷங்கள் !! ஜாலியாய் ஒரு ரவுண்ட் அடிப்போமா guys - ஸ்டேஜ்கோச் ஒன்றில் ஏறி ? 

சக்கரங்கள் 4 .....குதிரைகளும் 4 ...சவாரி செய்வோரோ....????

அமெரிக்கா ஒரு அகண்ட பூமி எனும் போது அங்கே பயணங்கள் துயரங்களுக்கான உத்திரவாதத்தோடு தான் வந்தன ! தண்டவாளங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றின் மீது ரயில் எஞ்சின்கள் தட தடக்கத் துவங்கிய வரையிலும், நெடுந்தொலைவுகளைக் கடக்க ஸ்டேஜ் கோச் ஒன்றே மார்க்கம் என்றாகிப் போனது !! காமிக்ஸ் கதைகளில் நாம் பார்த்து ரசிக்கும் சவுகரியமான சமாச்சாரங்களல்ல இவை என்பது தொடரும் போட்டோக்களைப் பார்க்கும் போதே புரிந்திடுமென்று நினைக்கிறேன் !! இம்மி இடம் கூட காலியிடம் இல்லாது - வண்டியின் உள்ளேயும் சரி, வெளியேவும் சரி ஜனம் நெருக்கியடித்து அமர்ந்திருப்பதைப் பாருங்களேன் ? "நடமாடும் நரகம்" இதழில் நமது 'தல' சிட்டிங்கில் வருவது ஏனென்று இப்போது புரிகிறது !!! கற்பனை பண்ணித் தான் பாருங்களேன் - இந்த முதல் போட்டோவிலுள்ள கோச்சு வண்டியில் நம்மவரை !! 

அது மாத்திரமன்றி, டாப்பில் ; டிக்கியில் என்று சரக்கு பண்டல்களைப் போட்டுக் குமிக்கும் இன்றைய நமது ஆம்னி பஸ்களுக்கு முன்னோடிகள் அந்நாட்களிலேயே இருந்ததும் தெளிவாகிறது ! வண்டியின் பின்பக்கம்  ஏற்றப்பட்டிருக்கும் பொதியினை பார்த்தாலே கிறுகிறுக்கிறது !! தகிக்கும் வெப்ப நாட்களில் பாலைவனங்களையும், பள்ளத்தாக்குகளையும் இவை லொடக்கு-லொடக்கென்று கடப்பதற்குள் அந்தப் பயணிகள் பட்டிருக்க வேண்டிய அவஸ்தைகளை கற்பனை செய்து பாருங்களேன் ? நாம் என்னடாவென்றால், இன்றைய AC ஸ்லீப்பர் பஸ்களில் மெத்தை சொகுசாயில்லை என்று விசனப்பட்டுக் கொள்கிறோம் !! 
 எத்தனை தபா ஜாலி ஜம்பரை இப்படிப் பார்த்துள்ளோம் ?!!


வன்மேற்கின் வசதிகள் !!

அதற்காக அந்நாட்களில் ஒட்டு மொத்தமாய் வாழ்க்கையே போராட்டமாய் இருந்ததென்றும் சொல்ல முடியாது போலும் ! பாருங்களேன் பளிச்சென்று டாலடிக்கும் அந்நாட்களது ஹோட்டல் ஒன்று ! Maybe டெக்ஸும், கார்சனும் இது போன்ற விடுதிகளில் தங்கித் தான் வறுத்த கறியை வெளுத்து வாங்குவரோ - என்னவோ ?


அந்நாட்களது வெள்ளையர் குடும்பத்தில் ஒன்று....! அபாச்சே பணியாளுடன் ! 
அன்றைய பள்ளிக்கூடம் !! இதில் தான் சுட்டி லக்கி படித்திருப்பானோ ?
சலூன்களில்....!

நகரங்களும், நாகரீகங்களும் வேர் விடத் துவங்கிய பிற்பாடு நமது கௌபாய்களுக்கு தாகசாந்தி முக்கியமன்றோ ? பொழுது போக்கென்று வேறெதுவும் இல்லா அந்நாட்களில் சலூன்களில் 'சரக்கடிப்பது' ; சீட்டாட்டம் ; சூதாட்டம் ; குத்தாட்டம் என்று ஏகமாய் ரகளை கட்டியுள்ளது ! அடுத்த முறை நமது கதைகளில் சலூனில் தகராறு அரங்கேறும் காட்சிகள் வந்தால், அவற்றை இன்னமும் தத்ரூபமாய் உருவகப்படுத்திட இந்த போட்டோக்கள் உதவிடுமென்று படுகிறது !! So ஒரு லக்கி லூக் பார் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சுடுவதையோ  ; ஒரு டைகர் சீட்டாட்ட மேஜையிலிருந்து கொண்டே ஏழரையை இழுத்து விடுவதையோ ; நம்ம  'தல' கம்பீரமாய் சவால் விடுவதையோ இந்த நிஜங்களோடு இணைத்திடும் போது, நிச்சயம் ஒரு சதவிகிதமாவது த்ரில் factor கூடிடும் - at least எனக்காவது !அன்றைய டான்ஸ் அழகிகள் !!

சட்டமும்....குற்றமும்...!

அந்நாட்களில் பூமியும் கரடுமுரடாயிருந்தது ; போக்கிரிகளும் கரடு முரடாயிருந்தனர்  ; சட்ட பரிபாலனமுமே அதே லட்சணத்தில் தான் இருந்துள்ளது ! சிக்கிடும் முதல் புளிய மரத்திலோ, ஆலமரத்திலோ கழுத்தில் சுருக்கைக் கட்டித் தொங்க விடுவது மக்களுக்கொரு ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளது ! கீழே உள்ள முதல் போட்டோவில் இருப்பது வன்மேற்கின் பிரசித்தி பெற்றதொரு நபரான ராய் பீன் எனும் நீதியரசரின் (!!!) நீதிமன்றம் ! அதாவது சலூனாய் இல்லாத நேரங்களில் நீதிமன்றமாக டபுள் ஆக்ட் கொடுத்ததென்று வைத்துக் கொள்ளலாம் ! சுவாரஸ்யமான இந்த ஆசாமியின் சட்ட ஞானமும் சரி ; தீர்ப்பு வழங்கும் துரிதமும் சரி - இன்றைய நீதியரசர்களைப் புல்லரிக்கச் செய்யும் ரகம் !! Revised Statutes of Texas என்ற ஒரேயொரு சட்டப் புத்தகம் மட்டுமே இவருக்குத் துணையாம் ; அதிலிருந்து மனுஷன் என்ன புரிந்து கொள்கிறாரோ - அதுவே அன்றைக்குத் தீர்ப்பு !! சட்டு புட்டென்று கேஸை முடித்து விட்டு சலூனை ஓட்டும் அவசரமோ - என்னவோ ? (இவர் சார்ந்ததொரு சாகசம் நமது லக்கி லூக் தொடரில் உள்ளது ; maybe அடுத்த வருஷம் அதை முயற்சித்துப் பார்க்கலாமா  ?) 
இந்த ஆசாமி யார் தெரியுமோ ? "கோச் வண்டியின் கதையில்" ஒரு வெள்ளை முகமூடி போட்டுக் கொண்டு கவிதை சொல்லியே கொள்ளையடிக்கும் ஒரு வில்லன் வருவானல்லவா ? அவனே இவன் ; இவனே அவன் !! பெயர் சார்லஸ் ஏர்ல் பௌல்ஸ் (அல்லது) ப்ளாக் பார்ட்)

ஜெஸ்ஸி ஜேம்ஸ்

1897 -ல் விர்ஜினியாவில் நடைபெற்ற கடைசி பொதுவெளித் தூக்குத்தண்டனை ! தூக்கு மேடைக்கு மேலேயும் சரி,,,கீழேயும் சரி, என்னவொரு கூட்டம் !!

வேகன் டிரெயின் ; அப்புறம் நிஜ டிரெயின் : 


ஒற்றை ஸ்டேஜ் கோச் பற்றாது ; குடும்பங்கள் மொத்த மொத்தமாய் இடம் பெயரும் அவசியங்கள் நேரும் போது - வேகன் டிரெயின்களே பயன்படுத்தப்பட்டன ! (லக்கி லூக் Newlook ஸ்பெஷலின் கதை நினைவுள்ளதா ?) வரிசை கோர்த்து வண்டிகளில் மக்கள் புலம் பெயர்ந்தது அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு கஷ்டப் பக்கம் ! அப்புறமாய் இரும்புக் குதிரைகள் தலைகாட்டத் துவங்கிய பின்னே, தூரங்களை ஓரளவேனும் சொகுசாய்க் கடக்க சாத்தியமானது ! அந்த ரயில் தடங்களை நிர்மாணிப்பதில் தான் எத்தனை போட்டி ? எத்தனை களேபரங்கள் ? எத்தனை பலிகள் ?!! 
தண்டவாளமிடுகிறார்கள்...!
1830 -ல் துவங்கியது அமெரிக்காவின் முதல் ரயில் சவாரி - பால்டிமோர் & ஒஹையோ ரெயில்ரோடு என்ற நிறுவனத்தின் புண்ணியத்தில் ! ஆரம்ப நாட்களில் - இந்த நீராவிப் பிசாசுகள் கடினமான ஏற்றங்களில் சொதப்பவே போகிறதென்று ஜனங்கள் ஏளனம் கொண்டிருந்தனர் ; ஆனால் விஞ்ஞானத்தின் வேகத்தில் அந்தக் கேலிச் சிரிப்புகள் சீக்கிரமே ஆச்சர்யக்குறிகளாய் மாறிப் போயின ! 


மண்ணைத் தேடி :

தொடர்வன நாம் ஓக்லஹோமா கதையிலும் சரி ; ஒரு பட்டாப் போட்டியிலும் சரி, பார்த்து ரசித்த அந்த நில முன்பதிவுக்கான முஸ்தீபுகள் ! தேசம் விரிந்து கொண்டே செல்ல, புதுப் புது பூமிகளை முதன்முதலில் சென்றடையும் மக்களுக்கே அவை சொந்தமாகிப் போயின ! பின்னாட்களில் ஏலம் கேட்கும் முறையும் அமலுக்கு வந்தது !! April 22' 1889 - வரலாற்றில் இடம்பிடித்த அந்த Oklohoma Land Run நிகழ்ந்த தினம் !!  
கலிபோர்னியாவில் ஏலம் - வருஷம் : 1904
"கௌபாய்"

இந்த வார்த்தையினை ஒரு லட்சம் தடவை உச்சரித்திருப்போம் தானே guys ? So இதோ சில நிஜ கௌபாய்க்கள் ! மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வது ; பத்திரமாய்த் திரும்பக் கொணர்ந்து தொழுவத்தில் அடைப்பது ; பண்ணையில் வேலை செய்வது ; விவசாயத்தில் ஒத்தாசை ; கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு செல்வது ; காவல் காப்பது - என்று இவர்களுக்கு ஏகமாய் முகங்களுண்டு !! தளரா மனங்களுக்கும் , அயரா உழைப்புக்கும் சொந்தக்காரர்கள் இந்த தொப்பிவாலாக்கள் !! 
இந்தத் தேடலுக்குள், ஆராய்ச்சிக்குள் நுழைய-நுழையத் தான் நாமெல்லாம் வன்மேற்கின் வரலாற்றோடு எத்தனை தூரம் ஒன்றிப் போயிருக்கிறோம் என்பது புரிகிறது ! So அடுத்த தபா நீங்கள் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும் போது யாரேனும் "ஹி..ஹி.." என்றால் - மூக்கோடு ஒரு குத்து வைத்து விட்டு - "American History-ல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேனாக்கும் !!"என்று சொல்லி விடுங்கள் !! நாமெல்லாமே வன்மேற்கின் ஆய்வாளர்களாக்கும் !! 


விடை பெறும் முன்பாய் கொஞ்சமாய் காமிக்ஸ் சேதிகளுமே :

1 .நெடு நாள் கழித்த லார்கோ சாகசம் என்பதாலா ? அல்லது லார்கோவின் கடைசி வான் ஹாம் சாகசம் என்பதாலா ? அல்லது பொதுவான "லார்கோ வசீகரம்" என்ற காரணமா ? சொல்லத் தெரியவில்லை ; ஆனால் ஆன்லைனில் ரொம்ப காலம் கழித்து நிஜமான விறுவிறுப்பு !! 

2 .இரு தினங்களுக்கு முன்பாய்த் தான் நமது ஜூலை வெளியீடுகளுள் ஒன்றான TRENT மீதான பணிகள் நிறைவுற்றன !! "ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது " என்பது அனுபவப் பாடம் என்றாலும், இந்தப் புது நாயகரின் முதல் ஆல்பம் முகத்துக்கு ஏகமாய்ப் பிரகாசத்தைக் கொண்டு வந்தது என்பதை பகிர்ந்திடாது இருக்க இயலவில்லை !! ரொம்பவே ரசித்தேன் guys !! More of it later !!!

3 . நடப்பாண்டின் அட்டவணையை எடுத்துப் புரட்ட நேரமிருப்பின் முயற்சித்துப் பாருங்களேன் ? அறிவித்துள்ள 36 இதழ்களுள் ஒரு கணிசத்தை ஏற்கனவே போட்டுத் தாக்கி விட்டோம் ! ஆண்டின் இறுதியினில் ஜம்போ தான் கைகொடுத்தாக வேண்டும் போலும் - ஒரு (காமிக்ஸ்) வறட்சியைத் தவிர்த்திட !! ரெகுலர் சந்தாவில் வெகு சொற்ப இதழ்கள் எஞ்சி நிற்கின்றன !!

4 . And the big news : இரத்தப் படலம் முழுமையும் அச்சாகி விட்டது folks !! ராப்பர்களின் டிசைனிங்குமே நிறைவுற்று விட்டதால் தொடரும் வாரத்தில் அவற்றையும் அச்சிட்டு - பைண்டிங்கைத் துவக்கிடத் திட்டமிட்டுள்ளோம் ! அப்புறம் அந்த slip case டிஸைனுமே அழகாய் வந்துள்ளதாய் மனதுக்குப் பட்டது ! உங்களிடம் மொத்தத்தையும் ஒப்படைக்கும் நொடியில் உங்கள் முகங்களும் மலர்ந்திடும் பட்சத்தில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தவற மாட்டோம் !! இனி அடுத்த வேலை அந்த "இரத்தப் படல" முதல் 200 Early Birds-களுக்கு ஒரு பேட்ஜை தயார் செய்வதே !!

5.  Lest I forget - அடுத்த வாரம் அந்தப் புலன்விசாரணை பற்றிச் சொல்கிறேன் !! நிறையவுள்ளது பேசிட !!

6 ஜூன் இதழ்களை review செய்திட நேரம் எடுத்துக் கொள்ளலாமே guys ? மூன்றுமே ஒவ்வொரு விதத்தில் பர பரப்பினை உண்டாக்கும் இதழ்கள் தானே ? For starters - நாளைய பொழுதை லார்கோவை அலசுவதில் செலவிடலாமா ஆய்வாளர்களே ? மாதந்தோறும் ஏதேனும் ஒரு புக்கைப் பிரதானமாய் அலசுவதை ஒரு வழக்கமாக்கிப் பார்த்தோமென்றால் பொழுதுகள் சுவாரஸ்யமாகிடக் கூடும் என்று நினைத்தேன் ! Let's try starting it off tomorrow - maybe பகலில்  ??

7.  ஜம்போவின் பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன !! அட்டைப்படம் ரெடி ; கதையுமே !! எனது எடிட்டிங் நிறைவுற்று விட்டால் அச்சிட வேண்டிய வேலை மட்டுமே பாக்கி ! இந்த ஞாயிறை இளம் டெக்ஸோடு செலவிட வேண்டியது தான் !! இன்னும் சந்தா செலுத்தியிருக்காத பட்சத்தில் - இன்றே அதற்கென திட்டமிடலாமே - ப்ளீஸ் ? 


இப்போதைக்கு கிளம்பும் முன்பாய் ஒரு வித்தியாசமான போட்டி ! இதோ - ஆங்கிலத்தில் ஒரு கவிதையுள்ளது - ஸ்டேஜ்கோச் பயணங்களை சிலாகித்தும், கலாய்த்தும் !! இந்தத் தேடல்களின் போது கண்ணில் பட்டது !! இதனை அழகாய்த்  தமிழாக்கிப் பார்ப்போமா ? ஆய்வாளர்களுக்குள்ளே கவிஞர்களும் உறைகிறார்களா என்று பார்த்தது போலிருக்குமல்லவா ? Bye for now...see you around !! 

Riding in a Stage

Creeping through the valley, crawling o’er the hill, 

Splashing through the branches, rumbling o’er the mill; 


Putting nervous gentlemen in a towering rage. 


What is so provoking as riding in a stage?


Spinsters fair and forty, maids in youthful charms, 


Suddenly are cast into their neighbors’ arms; 


Children shoot like squirrels darting through a cage- 


Isn’t it delightful, riding in a stage? 


Feet are interlacing, heads severely bumped, 


Friend and foe together get their noses thumped; 


Dresses act as carpets-listen to the sage;


"Life is but a journey taken in a stage.”


---From: Six Horses by Captain William Banning & George Hugh Banning, 1928---