நண்பர்களே,
வணக்கம். புது அட்டவணை ; ஆஹா டெக்ஸ் !! ; ஒ நோ ப்ளூகோட்ஸ் !! டயபாலிக் நஹி...ஸ்டார்ட் மண்டகப்படி...!! டெக்ஸ் ஓவர்டோஸ் !! ; எடிட்டருக்கு விடு டோஸ் !! என்றெல்லாம் இரண்டு நாட்களாய் இங்கு தூள் பறக்க - எனக்கோ மண்டைக்குள் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே ! 'ஷப்பா....சுலபமானதொரு அட்டவணைக்கே இந்தப் பாடெனில் - ஏப்ரலின் heavyweight அட்டவணைக்கு இருக்குடா சாமி .." என்று !! And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் !! But கடந்த ஒன்றரை மாதங்களாய்க் கிடைக்கும் சைக்கிள் கேப்புகளில் எல்லாம் புதிய அட்டவணை பற்றிய யோசனைகள் ; இப்போது சந்தா Z -க்கான பாய் பிறாண்டல்கள் என நாட்கள் ஓடிடும் நிலையில் இந்தப் பதிவிலாவது (எனக்கே) ஒரு ஒய்வு தந்தால் தேவலாம் என்று தோன்றியது ! So இதுவொரு away from the beaten track பதிவு !
பிரான்க்பர்ட் புத்தக விழா அனுபவங்கள் பற்றியும், பிரான்கோ-பெல்ஜியக் கதைக்களங்கள் பற்றியும் காதில் இரத்தம் வருமளவுக்கு எழுதியுள்ளேன் தான் ; ஆனால் ஆயுத பூஜை லீவுகளில் வீட்டில் எனது புத்தக ஷெல்பை உருட்டிக் கொண்டிருந்த போது சிக்கிய ஆதிகாலத்து டயரி ஒன்று எக்கச்சக்கமாய் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது என்னுள் ! சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில் அடியேனின் ஐரோப்பியப் பயணம் நிறைவு பெற்று - தொங்கிய நாக்கோடு ஊர் திரும்பியிருந்தேன் என்பதை அந்த டயரி சொல்ல, சிலபல கேவாக் கலர் போட்டோக்களும் அதனுள் பழுப்பேறிக் கிடந்தன ! இது போதாதா உங்களைப் போட்டுத் தாக்க ? என்ற சிந்தனையே இந்த வாரப் பதிவின் ஒரு பகுதியாகிறது !
டயரியின் மேலே எழுதியிருந்த பெயரைப் பார்த்த போது சிரிப்புத் தான் வந்தது! உங்களில் ரொம்பப் பேருக்குத் தெரியாத விஷயம் - ஏன் என் வீட்டுக்காரிக்கே கூடத் தெரியாத விஷயம் சார்ந்தது அந்தப் பெயர் ! கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் "விஜயன்" என்று சுற்றித் திரியும் எனது முழுப் பெயர் - "ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்" !! 'அந்தக் காலத்தில் இது தான் ஸ்டைலா ? அல்லது இதிலெல்லாம் கஞ்சத்தனம் எதற்கு ? - புள்ளைக்கு நல்ல நீளமாய்ப் பெயர் வைப்போமே என்ற ஆர்வமா என் பெற்றோருக்கு ?' - நானறியேன் ! எனது பள்ளிக்கூட ரெகார்டுகள் முழுவதிலும் இது தான் பதிவாகியிருந்தது ! அந்நாட்களது டயரி என்பதால் அதன் முதல் பக்கத்திலும் இதே பெயரைத் தான் கொட்டை எழுத்துக்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பின்னாட்களில் - நான் தொழிலுக்குள் 'தொபுக்கடீர்' என்று குதிக்கத் தயாரான வேளையில் என் தந்தையே "விஜயன்" என்று சுருக்கமாய்ப் பெயரை எழுதச் சொல்ல - அப்புறமாய் அரசு கெசெட்டில் பெயர் மாற்றம் இத்யாதிகள் செய்து கொள்ள - துவக்க நாட்களது நீளமான பெயர் மறந்து / மறைந்து போனது ! ஆனால் இந்தப் பெயரே பிரான்க்பர்ட் பயணத்தின் பிள்ளையார்சுழி போடத் தொடங்கும் பொழுது சிக்கலாகி நிற்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நாங்கள் ! ஜெர்மனி போக பாஸ்போர்ட் தேவை ; பாஸ்போர்டில் உள்ள முகவரிக்குச் சான்றாய் பள்ளி சர்டிபிகேட் ; பிறப்புச் சான்றிதழ் etc தேவையென்று வரும் போது எல்லாமே "ஈஈஈ" என்று பல்லைக் காட்டின என் முழுப் பெயரோடு ! பாஸ்போர்டில் தந்தை பெயரும் சேர்ந்து வந்தாக வேண்டும் எனும் பொழுது என் பெயரை "SOUNDRAPANDIAN SRIKANTH MUTHUVIJAYAN " என்று எழுதுவதாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்போர்டையும் சேர்த்து வாங்கித் தான் எழுத வேண்டியிருந்திருக்கும் ! திருச்சியில் அப்போது இருந்த மண்டல பாஸ்போர்ட் ஆபீசில் போய் தேவுடு காத்து நின்று - அவர்கள் கேட்ட சமாச்சாரங்களைத் தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் ; அதன் பின்பாக 'விசா கிடைக்குமா?' ; "கிடைக்காதா?" என்ற யோசனையோடே கோட்-சூட் எல்லாம் தைத்து வாங்கி விட்டு கண்ணாடி முன்னே நின்று அழகு பார்த்த நாட்கள் அவை !
டயரியின் இண்டெக்சில் "A " என்ற பகுதியில் எழுதப்பட்டிருந்த முதல் பெயரைப் பார்த்தேன் - ARPANA KAUR என்றிருந்தது ! அந்தக் காலத்து சினிமாக்களில் வருவது போல் வளையம் வளையமாய் என் சிந்தனைகள் பிளாஷ்பேக் mode-ல் செல்ல - 1985-ல் செப்டெம்பர் இறுதியில் சென்று land ஆனேன் ! ஒரு மாதிரியாய் 'எல்லாம் தயார் .....புறப்படலாம் !' என்ற நிலையில் அப்போது டெக்ஸ் வில்லர் கதைகள் வாங்கிடும் பொருட்டு நாம் தொடர்பிலிருந்த இத்தாலிய எஜெண்டிடமிருந்து ஒரு லெட்டர் வந்திருந்தது ! புது டில்லியில் இருக்கும் அர்பனா கவுர் எனும் ஒரு இந்திய ஓவியரிடமிருந்து, வீட்டை அலங்கரிக்கும் விதமாய் custom made ஓவியங்களை அவ்வப்போது வாங்குவதாகவும் - பிரான்க்பர்ட் வரும் சமயம் அவரிடமிருந்து சின்னதொரு பார்சலை சேகரித்துக் கொண்டு வர முடியுமா ? என்றும் கேட்டிருந்தார் ! 'அட...இந்த உபகாரம் கூடச் செய்யாவிட்டால் எப்படி ?' என்று என் மண்டை சொல்ல - உடனே அந்த ஓவியரிடம் பேசி அவரது முகவரியெல்லாம் வாங்கிக் கொண்டேன் ! என்னை வழியனுப்ப என் தந்தையும் டில்லி வந்து சேர, இருவருமாய் அவர் வீட்டைத் தேடித் பிடித்துப் போனோம் ! போனால் ஜில்லென்று ஒரு கிளாஸ் ரஸ்னா கொடுத்து விட்டு, நீளமாய் ; தடிமனான ஒட்டரைக் குச்சிகள் போல் எதையோ என் கையில் தூக்கிக் கொடுத்தார் ! இதென்ன கண்றாவி ? என்று நான் முழிக்க - அப்புறம் தான் தெரிந்தது -அவை ஓவியத்தை நாலா பக்கமும் தாங்கிப் பிடிக்கும் சட்டங்கள் என்றும் ; விசேஷ மரத்தில், வேலைப்பாடுகளோடு செதுக்கப்பட்டவை என்றும் ; சித்திரத்தை மனுஷன் போன முறை நேரில் வந்திருந்த போதே வாங்கிச் சென்று விட்டார் என்றும் ; சட்டங்கள் சமீபமாய்த் தான் தயார் ஆயின என்றும் !!! என் தந்தை என்னை முறைக்க, எனக்கோ இதைத் தூக்கிக் கொண்டு ஏணிப்படி இறங்கவே முடியாதே ; இந்த இலட்சணத்தில் ஜெர்மனி வரைக் கொண்டு போவது எப்படியாம் ? என்ற சோகம் !! ஒரு மாதிரியாய் கீழே வந்து ஆட்டோவில் ஏற்றத் தடுமாறிய போதே, தெருக்கோடியில் சத்தமில்லாமல் தூக்கிப் போட்டு விட்டு ஓடி விடுவோமே என்று எனக்குத் தோன்றியது ! ஆனால் என் தந்தை இது போன்ற கோக்குமாக்கான வேலைகளைக் கூட எப்படியாவது சமாளித்து விடும் ஆற்றல் கொண்டவர் ! நேராக ஆட்டோவிலேயே விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விமானச் சரக்கக தளத்துக்குப் போனோம் ! Lufthansa ஜெர்மன் விமான சேவையின் கார்கோ பிரிவு அது ! ஒரு மாதேரே, இவரைப் பார்த்து ; அவரைப் பார்த்து - வாய்க்கு வந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி புக்கிங் செய்ய முயற்சித்தோம் ! அங்கே இருந்த ஆசாமிக்கோ நாம் கட்டைக்குள்ளே எதாச்சும் வைரம்- கீரம் கடத்துகிறோமோ என்ற சந்தேகம் போலும் - பேக்கிங்கைப் பிரித்து இந்தப் பக்கமாய் - அந்தப் பக்கமாய் லொட்டு லொட்டென்று தட்டித் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ! பிராங்கர்ட் புத்தக விழாவில் எங்கள் பதிப்பக டிசைன்களை ; சித்திரங்களை விளம்பரப்படுத்த இந்தச் சட்டங்களைக் கொண்டு போகவிருப்பதாக நாங்கள் விளக்கம் சொல்ல - அந்தாளோ என்னை மேலும், கீழும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார் ! அப்புறம் ஒரு மாதிரியாய் X -ரே சோதனைகள் எல்லாம் செய்த பிறகு அவற்றை கார்கோவில் புக்கிங் செய்ய ஒரு நூறு படிவங்களைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள் ! கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் ஆன பிற்பாடு அந்த ஓட்டரைக்கம்புகள் எங்கள் மடியிலிருந்து ஒரு மாதிரியாய்க் கிளம்பியிருந்தன ! ஷப்பா...இன்றைக்கு நினைத்தாலும் மண்டை காயச் செய்யும் அனுபவம் அது !!
இண்டெக்சைப் புரட்டினால் - B பகுதியில் Bannerjee (BI Publications Pvt Ltd ) என்று எழுதியிருந்தது - ஒரு கொல்கத்தா நம்பரோடு ! அதைப் பார்த்த போது கெக்கே பிக்கே வென அமைதியாய் ஒரு சிரிப்பு என்னுள் !! பிரான்க்பார்டில் சந்தித்திருந்தேன் ; அங்கிருந்த ஒரு வாரமும் இவரோடு தான் சாப்பிடப் போவது ; வாக்கிங் போவது என்று நெருங்கிய பழக்கம் ! இந்தியா திரும்பிய பிற்பாடு அந்த நட்பு நீடிக்கவில்லை - செல்போன் / இன்டர்நெட் / STD கால் வசதிகள் கூட இல்லாத அந்நாட்களில் - ஆனால் ஆசாமியை நான் மறக்கவே முடியாது ! பிரான்க்பார்டில் ஹோட்டல் ரூம் முன்பதிவு ஏதுமின்றி லார்ட் லபக்தாஸ் போலப் போயிறங்கி - லொட்டா அடித்துக் கொண்டிருந்த வேளையில் - ரூமே கிடைக்காவிட்டால் என்ன செய்ய ? என்ற கேள்வி என்னை வாட்டியது ! ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் இருக்கத் தான் செய்தன ; ஆனால் அவர்களது கட்டணங்கள் ஜன்னி வரச் செய்யும் விதமாய் இருந்ததால் - அந்த திசைக்கொரு கும்பிடு போட்டு விட்டு மூளையைக் கசக்கினேன். ஜேர்மனி கிளம்பும் முன்பாக - டில்லி வந்திருந்த என் தந்தை YHA என்று சொல்லப்படும் சர்வதேச யூத்ஹாஸ்டல் சங்கத்தில் என்னை மெம்பராகச் சேர்த்து விட்டிருந்தார் ! சின்னதொரு அடையாள அட்டையும், ஒரு மெம்பர் அடையாள டாலரும் கொடுத்திருந்தனர். அது நினைவுக்கு வர - பிரான்க்பார்டில் உள்ள யூத் ஹாச்டளைத் தேடித் புறப்பட்டேன். டாக்சி எடுக்க பயம் ; நம்மூர்களில் போல ஊரெல்லாம் சுற்றிக் காட்டி மீட்டரை தீட்டி விடுவார்களோ என்று ; so இங்கே விசாரித்து, அங்கே விசாரித்து டிராமில் போய் கொண்டிருந்தேன். நடுவில் ஒரு ஸ்டாப்பில் ட்ராம் மாற வேண்டுமென்பதால் அங்கே இறங்கிக் காத்திருக்க, சிவந்து போன கண்களோடு குள்ளமாய், கறுப்பாய் ஒரு இந்திய முகம் ஒரு காரிலிருந்து இறங்கியது - மொடாங்கு சூட் கேஸ் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ! இப்போது போல் இந்தியாவுக்கு வெளியே நம்மவர்களை சந்திப்பது அந்த நாட்களிலெல்லாம் ரொம்ப ரொம்ப அபூர்வமே ! நானே நாக்குத் தொங்கிப் போயிருந்த தருணமது என்பதால் தேசப்பற்று ஆறாய் ஓடியது எனக்குள் ! அவரும் என்னைப் பார்த்து விட்டு திபு..திபுவென்று ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டார் ! கொல்கத்தாவைச் சார்ந்த பிரிட்டிஷ் இந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாய் பிரான்க்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருப்பதாகவும் ; ஊருக்குள் போகும் போது வழிமாறி தப்பான திசையில் சென்று ஊர்கோடியில் தவித்ததாகவும், இரக்கப்பட்டு ஒரு உள்ளூர்காரர் அங்கே கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும் கதறாத குறையாகச் சொன்னார் ! தங்க ஹோட்டல் கிடைக்குமா ? என்று என்னைக் கேட்க - நான் என் சோகக்கதையை ஒப்பித்தேன் ! அப்புறம் இருவருமாய்ச் சேர்ந்து யூத் ஹாஸ்டல் சென்று 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற safety -க்கு ஆளுக்கொரு பெட் புக்கிங் செய்து கொண்டோம் - சொற்பத் தொகைக்கு ! ஹோட்டல் ரூமே கிடைக்காமலே போய் விட்டாலும் இன்றிரவு தெருவில் தூங்கப் போவதில்லை என்ற தெம்பு ரெண்டு பேருக்கும் வந்த பிற்பாடு - என் தந்தையின் நண்பரைப் பிடித்து ஊருக்கு வெளியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டதெல்லாம் fast forward -ல் நடந்தேறின ! பானெர்ஜியும், அங்கேயே ரூம் போட்டுக் கொள்ள, ஒரு வாரம் எங்கள் நட்பு பொங்கோ பொங்கென்று பொங்கியது ! புத்தக விழா முடிந்து நான் லண்டன் செல்வதாகச் சொன்ன பொழுது ஒரு ரசகுல்லா டின்னை கையில் திணித்தார் ! 'அட..மனுஷன் பாசக்காரன்யா !' என்று நான் மானசீக சர்டிபிகேட் கொடுக்கத் துவங்கியிருந்த போதே - இங்கிலாந்தில் Leicester நகரில் அவரது உறவினர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு போன் மட்டும் அடித்தால் - அவர்களே லண்டனில் நான் இருக்குமிடம் தேடி வந்து பெற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்ன போது மறுக்க முடியவில்லை ! ஆனால் பிற்பாடு - இங்கிலாந்து நுழைவு முனையில் விசா கொடுக்கப் பிடிக்காது immigration அதிகாரிகள் என்னையும், என் பைகளையும் தலைகீழாய் உலுக்கிய பொழுது அந்த ரசகுல்லா டின்னும் வெளிவந்து கழுத்தை அறுத்தது தனிக்கதை ! இங்கிலாந்தில் எனக்கு யாரையுமே தெரியாது - வேலை ஆன பின்னே ஊருக்குத் திரும்பி விடுவேன் என்று ஒப்பித்துக் கொண்டிருக்கும் போதே - இந்த ரசகுல்லாவை யாருக்குக் கொண்டு போகிறாய் ? என்று இன்னொரு அதிகாரி 'பிலு பிலு' வென்று பிடித்துக் கொண்டார் ! உள்ளதைச் சொன்னால் அது வேறு வில்லங்கமாகிப் போகுமோ என்ற பயத்தில் - 'எனக்கு ஸ்வீட் என்றால் உசுரு சார்..! சாப்பிடக் கையில் கொண்டு போகிறேன் !" என்று சொல்லி வைக்க - 'பக்கிப் பய !' என்ற ரீதியில் ஒரு பார்வையை வீசி விட்டுப் போனார் அவர் ! பற்றாக்குறைக்கு என் பயணப் பையின் சைடில் என் சகோதரி வாங்கிக் கொண்டு வந்து தந்திருந்த அம்மன்கோயில் திருநீறு ; குங்குமம் ; மஞ்சள் ஒரு தடிப் பொட்டலத்தில் இருக்க, அதையும் மனுஷன் பரக்கென்று பிரித்தார் ! இசகு பிசகாக அவர் கை, யூனிபார்ம் மேலெல்லாம் அந்தக் கலவை விழுந்து போக மனுஷன் செம கடுப்பாகிப் போனார் !! இது ஏதாச்சும் கஞ்சாவோ ; ஹெராயினொ என்றது போல என்னை முறைத்துக் கொண்டே - முகர்ந்து பார்த்தார் ! நான் விலாவாரியாய் விளக்க - அதுக்கும் கிடைத்தது ஒரு முறைப்பே ! அன்று முதல் ரசகுல்லாவைப் பார்த்தாலே டோவர் துறைமுகத்தில் என்னைத் துவைத்துக் காயப்போட்டதும், கொல்கத்தா பானெர்ஜியும் தான் நினைவுக்கு வருவது வழக்கம் !!
இண்டெக்சில் இன்னும் கொஞ்சம் புரட்ட - யாரென்றே மறந்து போயிருந்த பெயர்கள் கண்ணில் பட்டன ! அதன் பின்னே F பகுதியில் Mr Francois Printemps என்றதொரு பெயரைப் படித்த பொழுது ஒரு வண்டி சந்தோஷ நினைவுகள் அலையடித்தன ! அந்நாட்களில் DUPUIS என்ற பெல்ஜியப் பதிப்புலக ஜாம்பவானின் டாப் நிர்வாகியாக இருந்தவர் இவர் தான் ! நிச்சயமாய் 50+ வயதிருக்கும் ; தயங்கித் தயங்கி அவர்களது ஸ்டால் வாசலில் நான் பிராக்குப் பார்த்துக் கொண்டே நிற்பதைக் கவனித்த போதே என் பக்கமாய் சிநேகமாய் ஒரு பார்வையை வீசி விட்டு, அவரது உதவியாளரை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார் ! துளி கூட பந்தா இல்லாமல், குழந்தைப் புள்ளே போலிருந்த என்னை பேச விட்டு, பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார் ! ஒரு டஜன் ஆல்பங்களை என் முன்னே அடுக்கி வைத்து - கிட்டத்தட்ட ஒவ்வொன்றாய்க் கதை சொல்லாத குறை தான் !! அதிலிருந்து தேர்வு செய்தது தான் "பிசாசுக் குரங்கு" நாயகர் Paul Foran ; "சாவதற்கு நேரமில்லை" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே ! 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் ! பின்னாட்களில் DUPUIS நிறுவனமே வேறொரு காமிக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிப் போக - அவர் ஒய்வு நாடிச் சென்று விட்டாரா ? அல்லது பதவி உயர்வில் சென்று விட்டாரா ? என்று தெரியாது - but ஆரம்ப நாட்களில் எனக்கே என் காலடிகளை அடையாளம் காண உதவிய அற்புத மனிதர் !!
புரட்டிக் கொண்டே போகப் போக பிரான்க்பார்டில் நான் சந்தித்த ஆசாமிகளின் கம்பெனி பெயர்களும், லாண்ட் லைன் நம்பர்களும் இருக்க - அவர்களில் ஒரு பெரும்பகுதி இப்போது கடைமூடிப் போன பதிப்பகங்கள் என்பது புரிந்தது ! டைரிக்குள் செருகிக் கிடந்த இன்னொரு போட்டோவைப் பார்த்த போது திரும்பவும் வாயெல்லாம் பல்லாகிப் போனது எனக்கு ! இன்றைக்கும் நாம் வெளியிடும் ஏராளமான பிரெஞ்சுக் கதைகளின் தாய் வீடான LOMBARD எனும் பெல்ஜியப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகிகளுள் ஒருவரான Ms விவியன் ருசியுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோ அது ! இவர்களது ஸ்டாலுக்குச் சென்ற போது ஆரம்பத்தில் லேசான இறுக்கத்தோடு பேசியவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஜாலியாகி விட்டார் ! இந்தியாவின் கலாச்சாரங்கள் பற்றி ; கோவாவின் பீச்கள் பற்றி ; ராஜஸ்தானின் கோட்டைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்ததை விட அவருக்குக் கூடுதல் ஞானம் இருந்தது ! 'யெஸ்..யெஸ்..என்று நான் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே போக - தங்களது டாப் ஆல்பங்களைக் காட்டி அதனில் நமக்கு உதவக் கூடியவை என்று அவராகவும் ஒரு பட்டியல் போட்டுத் தந்தார் ! நட்போடு பழகினாலும் - பண விஷயங்களில் துளியும் சளைக்காது கறார் காட்டினார் !! But still - அவர்களிடமிருந்த கதைகள் அத்தனையும் லட்டு போல் எனக்குக் காட்சி தந்ததால் ஒ.கே. ..ஒ.கே. என்று சொல்லி வைத்தேன் ! பிரான்க்பர்ட் முடிந்த பின்னே, பெல்ஜியம் சென்ற போது அவர்களது பிரம்மாண்ட அலுவலகத்தில் அவரை சந்திக்கவும் செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அவரோடு பணியாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது ; அப்புறம் LOMBARD நிறுவனமும் ஒரு merger -ல் வேறு நிர்வாகம் வசம் சென்றிட - புதுசாய் ஆட்கள் வந்தனர் இவரிடதுக்கு ! கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு, "அவசரம்..உயிர் போகும் அவசரம்!" என்று டெலெக்ஸ் சேதி அனுப்பிக் கதைகளைக் கோருவதே நம் பிழைப்பு என்றாலும் முகம் சுளிக்காது கடைசி வரைக்கும் நம்மை ஆதரித்த நல்ல உள்ளம் !! (போட்டோவின் பின்னணியில் பாருங்களேன் - கமான்சே ; சிக் பில் ஆல்பங்கள் அப்போவே பளிச்சென்று வீற்றிருப்பதை !! )
நிறையப் பேரை சந்தித்தும், நிறைய நிறுவனங்களோடு ஒப்பந்தங்களும் செய்திருப்பினும், எனக்கு 1985-ல் பிரதானமாய்த் தெரிந்தது இவர்கள் இருவருமே என்பதால் பாக்கிப் பேர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ளக் கேட்கக் கூட தோன்றவில்லை ! அன்றைய கலர் நெகடிவ்களிலிருந்து போடப்பட்ட பிரிண்ட்கள் மங்கலாகிப் போயிருப்பினும், அந்த நினைவுகள் பிரகாசமாகவே இருப்பது தான் ஆச்சர்யம் ! என்ன ஒரே "குர்ர்" சமாச்சாரம் - அந்நாட்களின் வளமான சிகை !! ஹ்ம்ம்....என்னத்த சொல்லி...என்ன செய்திட !!
Back to the present - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் நேற்றைய செய்தித்தாள்களில் இருந்ததைக் கவனித்தீர்களா ? ASTERIX & OBELIX தொடரில் புதியதொரு ஆல்பம் தயார் ஆகியுள்ளது பற்றியும், அதன் விற்பனை நம்பர்கள் பற்றியும் நேற்றைய ஹிந்து பேப்பரில் படித்த பொழுது - பிரான்சில் நம் படைப்பாளிகள் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வந்தது ! ஆண்டுக்கு எவ்வளவு விற்பனை ஆகும் ? எந்த கம்பெனி எவ்வளவு விற்கும் ? என்றெல்லாம் நான் மொக்கை போட்டுக் கொண்டிருக்க புன்சிரிப்போடு அந்தப் பெண் சொன்னார் - "விற்பனை வகைகள் இரண்டு - பிரெஞ்சைப் பொறுத்தவரைக்கும் ! ஒன்று asterix வருஷம் ; இன்னொன்று - asterix இல்லா வருஷம் ! Asterix வருஷமெனில் விற்பனை graph செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து நிற்கும் ; பாக்கி ஆண்டுகள் தட்டையாக இருக்கும் !! விற்பனை புள்ளி விபரங்களைப் படித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும் !! பிரெஞ்சில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர் - முதல் பதிப்பிற்கு ; இதர முக்கிய மொழிகளின் இன்னொரு 20 இலட்சம் !!!! உலகம் முழுவதிலும் உள்ள Asterix காமிக்ஸ்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 365 மில்லியனாம் - அதாவது 36.50 கோடி !! இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் ! இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் !!
And அடுத்த மாதம் வெளி வரக் காத்திருக்கும் லார்கோவின் புது ஆல்பத்தின் பெயர் "20 நொடிகள் !" இதோ - அதன் அட்டைப்படம் ! இந்த ஆல்ப்பத்துக்குப் பின்பாய் இந்தத் தொடரில் கதாசிரியர் வான் ஹம்மே இருக்கப் போவதில்லை! ஓவியர் பிரான்க் கதை இலாக்காவையும் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கிறார் !!
நடையைக் கட்டும் முன்பாக - இதோ ஒரு வழியாக "என் பெயர் டைகர்" முன்பதிவுப் பட்டியல் ! உங்கள் பெயர்களையும் இங்கே நுழைத்திட ஆவன செய்திடலாமே - ப்ளீஸ் ? And 2016-ன் சந்தாக்களையும் சீக்கிரமே அனுப்பிடக் கோருகிறோம் guys - ப்ளீஸ் ?! மீண்டும் சிந்திப்போம் ! Bye for now !!
P.S: இது இந்த வாரத் துவக்கத்துப் பட்டியல் ; விடுதல்கள் ஏதேனும் தென்படும் பட்சம் உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்களேன் ? And பெயர்களை டைப் அடித்ததில் சொதப்பியிருப்பின் - apologies !!
P.S -2 : ஜூனியர் எடிட்டருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !
P.S -2 : ஜூனியர் எடிட்டருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !
P.S - 3 : பழசை நினைவு கூர்ந்து நான் சாதிக்க நினைப்பது ஏதுமில்லை ; உங்களின் பொது அறிவை வளர்க்கவும் இது உதவாது என்பதும் உறுதி ! அந்நாட்களது டைரி , சரியாக 30 ஆண்டுக்குப் பிந்தைய தருணத்தில் கையில் கிடைத்த ஆச்சர்யத்தையும், அது கொண்டு வந்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறேன் ! அவ்வளவே ! Good night !!