Powered By Blogger

Monday, December 30, 2019

கடுப்பேத்தறாங்க மை லார்ட் !

நண்பர்களே,

வணக்கம். 'நல்ல சேதி-கெட்ட சேதி' என்ற ஒற்றைப் பக்கக் கார்ட்டூன்களை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம் ! அவற்றைத் தான் நினைவுகூர்ந்திடத் தோன்றியது இன்றைக்கு ! நல்ல சேதி என்னவென்றால் - சொன்னபடியே ஜனவரியின் இதழ்கள் ஐந்தையும் இன்றைக்குக் காலையே கூரியர்களிடம் ஒப்படைத்தாச்சு ! ஞாயிறன்றும் ; இன்றைக்கு மாலை வரையிலும் பணம் அனுப்பிய 18 நண்பர்களையுமே 2020-ன் சந்தாப் பட்டியலில் சூட்டோடு சூடாய் இணைத்து அவர்களுக்கும் டெஸ்பாட்ச்சும் செய்தாச்சு !!  கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது ! அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 250+ டப்பிகளில் வெறும் ஐம்பதை மட்டுமே இன்றைக்கு புக்கிங் செய்திட அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது ! பாக்கி 200+ பார்சல்களை புக் செய்யாமலே கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டனர் - எனக்கென்ன குடி முழுகிப்போச்சென்று !! இங்கு இயங்கி வந்த  2 கிளைகளில் ஒன்றை மூடிய கையோடு, மீதமிருக்கும் ஒற்றைக் கிளையிலும் ஒன்றோ இரண்டோ பணிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு நொண்டியடித்து வருகின்றனர் ! இது போல் மொத்தமாய் பார்சல்கள் புக்கிங் செய்திட வேண்டிய நாட்களில் மட்டும் வெளியிலிருந்து காண்டிராக்ட் பணியாளர்கள் ஓரிருவரை வரவழைத்துச் சமாளித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓராண்டாய் நடைபெற்று வரும் கூத்துத்தான் என்றாலும் ; இன்றைக்கு அந்த காண்டிராக்ட் பணியாளர்களும் தலைகாட்டக் காணோம் என்பதில் தான் தலைநோவே !! So இரவு ஒன்பதரைக்கு முன்பாய் கைக்குச் சிக்கிய முதல் 50 பார்சல்களை  மாத்திரமே புக்கிங் செய்து சிவகாசியிலிருந்து கிளப்பிவிட்டு, மீதத்தை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு நடையைக் கட்டி விட்டுள்ளனர் !  So அந்த 50 வாசகர்களுக்கு மட்டுமே ST நாளை பட்டுவாடா செய்திடுவர் ; பாக்கிப் பேர் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிவரும் !! 😔😔

பரிதாபமான இந்த சர்வீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு DTDC-க்கு மொத்தமாய் மாறிடலாமா ? என்று ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தேன் & அதே கேள்வியை இன்னொருவாட்டி முன்வைக்கிறேன் guys - இப்போதும் ! இந்த முனையில்  ST கூரியரின் சர்வீஸில் முன்னேற்றம் தென்படுவதற்கான சாத்தியங்கள், என் முன்மண்டையில் படித்துறைப் பாண்டிக்கு ஈடாய், சுருள் சுருளாய் கர்லிங் ஹேர் முளைக்கும் சாத்தியங்களை விடவும் குறைவே என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது  !! On the other hand - துளி திகட்டலுமின்றி இன்றைக்கும் கச்சிதமாய் டெஸ்பாட்ச் செய்துள்ளனர் DTDC ! ST உடன் மாதாமாதம் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாய் மொத்தமாய் DTDC-க்கு மாறிட்டால் என்ன folks ? 29 நாட்கள் ஏதேதோ சிக்கல்களைத் தாண்டிக் குதித்து, இதழ்களைத் தயார் செய்துவிட்டு கடைசி நாளில் இதுபோன்ற லீலைகளை சகிப்பது ரொம்பவே கடுப்பேற்றுகிறது !! 

So நாளைய தினம் DTDC-யினை தேர்வு செய்திருந்த நண்பர்கள் கையில் இதழ்களிருக்கும் & ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே ! பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் ; நாளை நம் ஆபீசுக்கு போன் செய்து ட்ராக்கிங் நம்பர் கேட்டால் 'பெப்பெப்பே' என்று தான் பதில் தர சாத்தியப்படும் ! Hope for your understanding all !!
ஆன்லைன் லிஸ்டிங் இதோ: http://lioncomics.in/home/673-december-pack-2019.html

And இன்னொரு தளத்தில் காலையில் லிஸ்டிங் இருக்கும்..!

Lest I forget - இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview-ம் :


Once again apologies for the கூரியர் சொதப்பல் folks ! புத்தாண்டுக்காவது புது இதழ்கள் அனைவரின் கைகளிலும் இருப்பதை உறுதி செய்திட நாளை ST கூரியரில் நம்மாட்களை டேரா போடச் செய்திட எண்ணியுள்ளேன் ! Bye for now !!

Sunday, December 29, 2019

தசாப்தத்தின் சகாப்தங்கள் !

நண்பர்களே,

வணக்கம். மாமூலான மொக்கைகளை ஆரம்பிக்கும் முன்பாய் முக்கிய தகவலைப் பட்டென்று சொல்லிட்டால் தேவலை தானே ? So here you go : புத்தாண்டின் முதல் மாதத்து இதழ்கள் ஐந்தும் ரெடி ! திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! So பத்தொன்பதிலேயே இருபதுக்கு ஸ்வாகதம் சொல்லிடலாம் folks ! And சந்தா எக்ஸ்பிரஸின் புதுப் பயணத்துக்கு இன்னமும் உங்களின் இருக்கைகளை உறுதி செய்திருக்கா பட்சத்தில் - no better time than now !! இந்த ஞாயிறன்றும், அதன் மறு நாளைய பகலிலும் கிட்டிடும் சந்தாக்களுக்குமே கூட, உடனடி டெஸ்பாட்ச் செய்யப்படும் என்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் - உங்களையும் சந்தாப் பட்டியலில் இணைத்திட  !! டிங்..டிங் .டிடிங்.....! 

கடை விரிக்கும் பொறுப்பு பூர்த்தியானபடியால் இனி இந்த வாரப் பதிவின் மையத்தை  நோக்கி focus செய்திடலாமா ? கடந்த ஒரு வாரமாய்க் கண்ணில்படும்  பேப்பர்களில் ; பத்திரிகைகளில் எல்லாமே பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஒற்றை விஷயத்தை ஆளாளுக்கு எழுதிக் குவித்து வருகின்றனர் ! கடந்த பத்தாண்டுகளின் வெற்றிப் படங்கள் ; வெற்றுப் படங்கள் ; சூப்பர் அணிகள் ; டப்ஸா அணிகள் ; சாதித்த மாந்தர்கள் ; சொதப்பிய மனிதர்கள் ; மறக்கவியலாத் தருணங்கள் ; மருகச் செய்த தருணங்கள் இத்யாதி..இத்யாதி என்ற ரீதியிலான 'தசாப்த அலசல்கள்' தான் அத்தனை ஊடகங்களிலும் அலசப்பட்டு வரும் பொதுவான சமாச்சாரம் - of course வேறு சில பற்றி எரியும் பிரச்னைகள் நீங்கலாக ! அந்தப் பத்தாண்டு அலசல்களை வாசித்த போது தான் பொறி தட்டியது - ஆஹா...ஒரு decade-க்கு விடைதரும் தருணமல்லவோ இதுவென்று !! நமக்குத் தெரிந்ததெல்லாம் காமிக்ஸ் குண்டுச்சட்டிக்குள் குருதை ஓட்டுவது மாத்திரமே எனும் போது, புத்தாண்டின் வாயிலில் நின்றவாறே - பறந்து சென்றிருக்கும் இந்தப் பத்தாண்டின் காமிக்ஸ் சவாரியினை நாமுமே ஜாலியாய் அலசிப் பார்த்தாலென்னவென்று தோன்றியது ! இங்கே எனது அலசல்களை விடவும், உங்களின் பங்களிப்புகளுக்கே அவசியங்கள் ஜாஸ்தி என்பதால் - இயன்றமட்டுக்கு இந்த ஒற்றைப் பதிவிலாவது மௌன நண்பர்களும் (கோபித்துக் கொள்ளாது) பங்கேற்றால் அற்புதமாக இருக்கும் ! முயற்சித்துப் பாருங்களேன் all ? ப்ளீஸ் ?

இந்த தசாப்தத்தின் துவக்கத்தில் லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு கல்லறைக் காவியங்கள் எழுத வேண்டிய வேலை மாத்திரமே பாக்கியிருந்தது என்பதில் ரகசியங்கள் லேது !  'இது ஆகிற வேலையாய்த் தெரியக்காணோம் !' என்று நானே மொத்தத்துக்குக் கைகழுவிடத் தயாராகி வந்தேன் என்பதுமே well documented ! 2011-ன் துவக்க நிலவரம் கூட இதுவே எனும் போது - தொடரக்கூடிய அடுத்த எட்டாண்டுகளில்  சுமார் 250 இதழ்களை நம் குழுமம் போட்டுச் சாத்தியிருக்கும் என்று யாரேனும் என்னிடம் ஆரூடம் சொல்லியிருந்தால், "அடடே...அப்டீங்களா ?" என்று நாசூக்காய்ச் சிரித்து விட்டு நடையைக் கட்டியிருப்பேன் தான் ! ஆனால் பெரும் தேவன் மனிடோ நமக்கொரு இரண்டாம் வாய்ப்பையும், அதனில் பணியாற்ற ஒரு இரண்டாம் 'தம்'மையும் தந்திடும் திட்டங்களைத் தீட்டி வைத்திருக்க - அவற்றைத் தாண்டிப் போயிடல் அசாத்தியமன்றோ ?

2012 ஜனவரியில் தான் effective ஆக நமக்கிந்த தசாப்தத்தின் அர்த்தம் தாங்கிய பயணம் துவங்கியது ! So அன்றைக்கு முதல் இன்றைக்கு வரைக்குமான இதழ்களுள் எனக்கு முக்கியமாய்த் தென்பட்ட இதழ்களைப்  பட்டியலிடுவதே இந்த வாரத்தின் நோக்கம் ! 'அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாங்க எந்தக் கோட்டையைப் புடிக்கப் போறோங்கண்ணா ?' என்று சிலபல மைண்ட்வாய்ஸ்கள் ஒலிக்கலாம் தான் ; அந்த நண்பர்கள் நேராக பதிவின் வால்பகுதியில் உள்ள புது இதழ்களின் preview நோக்கிப் பாய்ந்திடலாம்  ! மைண்ட்வாய்சை mute-ல் போட்டுக் கொள்ள சாத்தியப்படும் இதர நண்பர்களுக்காக இனி :

Of course - நமது மறுவருகையின்  முதல்படியானComeback ஸ்பெஷல் இந்தப் பட்டியலில் நிச்சயமாய் இடம்பிடிக்குமென்பதைக் குழந்தைப் பிள்ளை கூட யூகித்துவிடும் ! And இந்த இதழைப் பற்றிப் பல்வேறு தருணங்களில் அக்கக்காய் அலசியாகி விட்டதென்பதால் அதே மாவை மறுக்கா அரைக்க முனையப் போவதில்லை ! On the contrary - ஒரு முக்கிய மைல்கல்த் தருணத்தில் இன்னும் கொஞ்சம் தேஜஸான கதைகளைத் தேர்வு செய்திருக்கலாமோ ? என்ற ஆதங்கமே தலைதூக்குகிறது இன்றைக்கு ! லக்கி லூக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்" ஓ.கே ரகமே தவிர்த்து ஆஹா-ஓஹோ ரகமல்ல ! And கேப்டன் பிரின்ஸ் தொடரின் எஞ்சியிருந்த 2 புதுக் கதைகளுள் நாம் தேர்வு செய்திருந்த "கானகத்தில் களேபரம்" கூட சுமார் தான் ! அட்டைப்படமுமே இன்றைய அளவுகோல்களின் பார்வைகளில் so so தான் ! ஆனால் வண்ணத்தில் ; (அன்றைக்குப்) புதுசாய்த் தென்பட்ட template-ல் ; நெடும் இடைவெளிக்குப் பின்பாய் வெளியான இதழ் என்ற விதத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டீர்கள் !! இன்றைக்கு நம்பக் கஷ்டமாக உள்ளது folks - ஆனால் இதனில் நாம் அச்சிட்டது 3000 பிரதிகள் ; and 2012-ன் இறுதிக்கு முன்பாகவே ஸ்டாக் லேது ! இத்தனைக்கும் ஆன்லைன்  விற்பனை என்பதெல்லாம் என்னவென்றே நமக்குத் தெரிந்திரா நாட்களவை ! அது மட்டுமல்லாது அந்தாண்டின் புத்தக விழாவில் ஒரு குட்டியூண்டு ஸ்டாலில்  எக்கச்சக்கமான முந்தைய இதழ்களோடு கடைவிரித்திருந்த நிலையில், அங்கே நமது பிரதான விற்பனைகளே அந்த back issues bundles தான் ! So இந்த Comeback ஸ்பெஷல் இதழானது விற்பனையில் அதகளம் செய்ததன் மாயாஜாலம் என்னவென்றே  நினைவில்லை ! எது எப்படியோ - இன்றும் அதே எண்ணிக்கை மட்டும் விற்றிடச் சாத்தியப்பட்டால், செவ்வாய் கிரகத்தில் புத்தக விழா நடந்தால் கூட முதல் ஆளாய் ஆஜராகி நின்றிருப்போம் !! ஒரு புதுப் பயணத்துக்கு முன்னோடி ; புதுசாய்த் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள எனக்கொரு வாய்ப்புத் தந்த இதழ் ; தயாரிப்புத் தரங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளை புதுசாயோரு உயரத்துக்கு இட்டுச் சென்ற இதழ் என்ற விதத்தில் இந்த தசாப்தத்தின் TOP 20 பட்டியலுக்குள் Comeback  ஸ்பெஷலுக்குச்  சொல்லும்படியான ஒரு இடமுண்டு ! இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்  ?  

என் பெயர் கோடீஸ்வரர் !! என்று தெனாவட்டாய் அறிமுகம் செய்து கொண்ட லார்கோ வின்ச்சின் வருகை இந்த தசாப்தத்தின் ஒரு notable phase என்பேன் ! துப்பாக்கி கிடையாது ; டிடெக்டிவ் என்ற போர்வை கிடையாது ; நாடி நரம்புகள் புடைக்க பன்ச் பேசும் பாணிகளும் நாயகருக்குக் கிடையாது இங்கே ! And பற்றாக்குறைக்கு கதைகளின் அச்சாணியே - பெரும் குழுமங்களின் நிதி நிர்வாகம் ; பங்குச் சந்தை முதலீடுகள் ; அதில் அரங்கேறும் தில்லாலங்கடி ஆட்டங்கள் என்று எகனாமிக்ஸ் வகுப்பில் கொட்டாவிகளுக்கு மத்தியில் ஓடிடும் மேட்டர்கள் தான் ! அவற்றையெல்லாம் கதைகளுக்குள் லாவகமாய்ப் புகுத்தியதோடு,  வாசகர்கள் நெருடல்களேயின்றி உள்வாங்கிக்கொள்ளும் விதமாய்க் கதைகளை  கதாசிரியர் வான் ஹாம்  அற்புதமாய் உருவாக்கியிருப்பினும் , நம் மட்டிற்கு இவை எல்லாமே புத்தம் புதுசு தான் ! So அவற்றை நீங்கள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற இதழ் என்றென்றும் என் நினைவை விட்டு நீங்காது ! "புது யுகக் கதைகளுக்கு நாங்கள் ரெடி !!" என்ற அறைகூவல்  உரக்க ஒலித்தது  "என் பெயர் லார்கோ" இதழில் இருந்தே எனும் போது இந்த தசாப்தத்தின் memorable புக்ஸ் பட்டியலில் இது இடம்பிடிப்பதில் no surprises I guess !! இங்கே எனது கேள்வி : மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது  லார்கோவை ரசிக்க  முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?

"வித்தியாசங்களுக்கு வாசல் கதவைத் திறந்தே வைத்துள்ளோம் !" என்று நீங்கள் தண்டோரா போட்டுத் தெரிவித்த இன்னொரு memorable இதழ் WILD WEST ஸ்பெஷல் ! இங்கும் கதாசிரியர் வான் ஹாம் ; ஆனால் முற்றிலும் வித்தியாசமானதொரு வன்மேற்குக் கதைக்களத்தோடு ! ஓவியர் ரோசின்ஸ்கியின் semi கார்ட்டூன் ; semi classic பாணி  ஓவியங்கள் இந்த offbeat கதைக்கு வலு சேர்க்க - அந்தக் காலத்து கேவா கலர் போலான வர்ணச் சேர்க்கையும் தன பங்கிற்கு வேறுபடுத்திக் காட்ட, இந்த ஆல்பத்தை ஆங்கிலத்தில் CINEBOOK-ல் படித்த நொடியே எனக்குள் குடைச்சல் - இதனைத் தமிழுக்கு கொணர்ந்திட ! இன்றைய சூழலில்,உங்களின் வாசிப்புகளுக்கு  இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டரே என்பதில் no doubts ; ஆனால் 2012-ல் "எமனின் திசை மேற்கு" அனுபவத்திற்கு  நாம் தயாராகியிருந்தோமா ? இல்லையா ? என்ற கேள்வி பெரிதாகவே நின்றது என்முன்னே ! ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் நான் இதற்கு thumbs up தந்தேன் & and நீங்கள் இந்த பாணிக்கு ஒரு மெகா thumbs up  தந்து நம் பயணத்துக்குப் புதுசாயொரு பரிமாணத்தைத் தந்தீர்கள் ! இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய்  மறுபதிப்பிட்டால் தேறுமா

As milestones go - NBS இதழானது இன்னும் நிறைய காலத்துக்கு ஒரு மறக்க முடியா "கூட்டணி ஆல்பமாய்" தொடர்ந்திடுமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! In fact - கதம்ப (வண்ண) இதழ்களின் கடைசி முயற்சியாய் இதனைப் பார்த்திடலாம் ! இனியொரு தபா இப்படியொரு பன்முக நாயகக் கூட்டணியை ஒரே இதழில் ரசிப்பது அசாத்தியத்துக்கு அருகாமை என்பதால் NEVER AGAIN ஸ்பெஷல் என்று இதற்குப் பெயரிடலாம் ! And இது நிறையவாட்டி அலசப்பட்டதொரு ஆல்பம் என்பதால் - மறுக்கா பிளேடைப் போடுவதாயில்லை நான் !  இங்கு எனது கேள்வி : இந்த இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?

The next one's an easy guess too....க்ரீன் மேனர் !! அதுநாள் வரைக்கும் எவையெல்லாம் நமக்கு எட்டிக்காயாய்க் கசந்திருக்குமோ - அவற்றை ஒன்று பாக்கியின்றி திரட்டி நின்றது 'க்ரீன் மேனர்' ஆல்பமானது ! முழுநீளக் கதைகளன்றி துண்டும், துக்கடாவுமான எதுவும் நம் ரசனைகளுக்கு உகந்து இருந்ததில்லை ! ஆனாலிங்கோ அத்தனையும் சிறுகதைகளே !! கதை நெடுக ஒரே ஹீரோவோ ; ஹீரோயினா ட்ராவல் செய்தாலன்றி நமக்குப் பிடிக்கவே செய்யாது ! ஆனால் இங்கேயோ அத்தினி பயல்களும் வில்லன்களே தவிர்த்து - எவனும் ஹீரோ கிடையாது !  லக்கி லூக்கும், சிக் பில்லும், மந்திரியாரும் கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நமக்கன்று ஓ.கே. ; ஆனால் இங்கோ கொலைகாரர்களின் கூட்டத்தையே கார்ட்டூன் பாணியில் வடித்திருந்தார்கள் ! And விக்டோரிய மஹாராணியாரின் புராதன லண்டனே கதையின் backdrop ; அழுது வடியும் அந்தக் காலகட்டத்தையே கதையின் ஒரு கதாப்பாத்திரமாயும் அமைக்காத குறை தான் !  ஆனால் அதையும் ரசித்து ஏற்றுக் கொண்டீர்கள் ! எல்லாவற்றிற்கும் சிகரமாய் - பல்லெல்லாம் சுளுக்கிக் கொள்ளச் செய்யும் நாடக பாணி வசனங்கள் பக்கத்துக்குப் பக்கம் போட்டுத் தாக்கின ! But hey ...துளியும் மிரளாது அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் ! அது வரையிலுமான காமிக்ஸ் வாசிப்புக்  கோட்பாடுகள் சகலத்தையும் தெறிக்க விட்ட இதழ் என்ற வகையில் "மனதில் மிருகம் வேண்டும்" ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு ! And ஆறே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்து எங்களையே அசரடித்த இதழ் இது ! இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?

அவசரம் அவசரமாய் ; உருண்டு-புரண்டு ; காலில் வெந்நீரை ஊற்றியபடியே இரண்டே நாட்களில் உருவாக்கியதொரு இதழே இன்று வரையிலும் புது இதழ்களின் விற்பனைப் பட்டியலில் top of the heap !! அது எதென்று யூகிக்க முடிகிறதா ? Comic Con பெங்களூருக்கென கடைசி நொடியில் திட்டமிட்டுத் தயாரித்த டெக்சின் "நிலவொளியில் நரபலி" வண்ண இதழே அது !! ஒரு சனியிரவு எழுதத் துவங்கி,ஞாயிறு மாலைக்குள் 110 பக்கங்களையும் ஒப்பேற்றி ; ஞாயிறு காலை முதல் டைப்செட்டிங் பணிகளைத்  துவக்கி, திங்கள் காலைக்குள் சகலத்தையும் முடித்து வாங்கி அச்சுக்குத் தயாராகியது நிச்சயமாயொரு மறக்கவியலா ,அசுர அனுபவமே ! And விற்பனையில் இந்த இதழ் இப்போதுவரையிலும் செய்துவரும் சாதனைகள் in a league of its own !! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் "அதிகம் வாங்கப்படும் இதழ்" என்ற பெருமைக்குப் போட்டி போடும் ஆல்பம் இதுவாகத் தானிருக்கும் ! நார்மலான டெக்ஸ் இதழ்களை விடவும் மூன்று மடங்கு அதிகம் விற்றுள்ள இதழிது - நம்பினால் நம்புங்கள் !! And இங்கே எனது கேள்வி : "இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ? 

விற்பனை எண்ணிக்கையினையே அளவுகோலாக்கிட்டால் இன்னொரு இதழும் அசாத்தியமானதொரு உச்ச ஸ்தானத்தைச் சொந்தம் கொண்டாடிடுவதை பார்க்கலாம் ! அது வேறெந்த இதழும் அல்ல - இரும்புக்கை மாயாவியாரின் "நயாகராவில் மாயாவி" தான் !! 'மறுபதிப்புகள் மறுக்கா வருகின்றன' என்று 2013-ல் அறிவித்த சமயம் ஏனோ உங்களின் ரெஸ்பான்ஸ் அத்தனை விறு விறுப்பாய் இருந்திடவில்லை ! In fact வெறும் எழுபதோ - எண்பதோ முன்பதிவுகளே கிட்டியிருந்தன - என்னை மிரண்டு போகச் செய்யும் விதமாய் !  மூட்டை கட்டப்பட்ட அந்த மறுபதிப்புத் திட்டமானது 2015-ல் (or was it 2016 ??) மீண்டும் களம் கண்ட போதோ உங்களது ரியாக்ஷன்ஸ் திக்குமுக்காட செய்தன ! ஒரு ஞாயிறின் பதிவாய் இந்தச் சேதியை பகிர்ந்த போது 300 + பின்னூட்டங்களோடு நீங்கள் செய்த அதகளங்கள் இன்னமும் நினைவில் நிழலாடுகின்றன ! தொடர்ந்திட்ட சென்னைப் புத்தக விழாவில் 'நயாகராவில் மாயாவி' வெளியான வேலையின் விற்பனை விஸ்வரூபம் இதுவரையிலும் நாம் பார்த்திரா உச்சம் !! அந்நேரம் இது குறித்து நான் எழுதியது இதோ :

Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை  எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா  ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !

பரீட்சைக்குப் படிப்பவனைப் போல  ராவெல்லாம் கண் முழித்திருந்து  ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும்  செய்து இதழை வெளியிட்டுவிட்டு  ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில்  -

நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த  மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும்  போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?!  Take a bow - man with the steel claw !! Stunning show !!!

Post 2012 - இதுவரைக்குமான நமது இதழ்களுள் maximum விற்பனை கண்ட இதழ் என்ற  விதத்தில் 'ந.மா' ஒரு அசாத்திய நினைவுப் பேழை எனக்கு !! 

மறக்கவியலா நினைவுகள் சார்ந்த இன்னொரு இதழ் நமது LMS இதழ் ! முதன்முதலாய் அந்த சைசில் ஒரு hardcover இதழ் ; முதன்முதலாய் அத்தனை பக்கங்களுக்குள் பணி ; முதன்முதலாய் அத்தனை எடை கொண்டதொரு இதழ் - என நிறைய firsts உண்டு அந்த இதழுக்கு !! அத்தனைக்குப் பின்னேயும் ரூ.450 என்ற விலையை நியாயப்படுத்த - கூடுதலாய் ஒரு ரெகுலர் சைசிலான வண்ண இதழையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டதென அன்றைக்கு செய்த லூட்டிகள் ஆயுட்கால ஞாபகங்கள் !! ஒரு கட்டத்தில் பணிகளை காலத்தில் முடிக்க முடியுமோ-முடியாதோ என்ற  பயம் குரல்வளையை நெறிக்காத குறை தான் ! ஒவ்வொரு நாள் காலையும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதும் வயிற்றுக்குள் பயப்பந்து உருள்வதை மெய்யாக உணர முடிந்த அந்த ஜூலை மாதம் ஒரு போதும் மறவாது எனக்கு ! And அந்த இதழ் ஈரோட்டில் வெளியானதும் சரி ; விற்பனையில் ஒரு புது உத்வேகத்தைக் கண்டதும் சரி - மறக்கவே மறக்காது ! அப்புறம் இந்த இதழுக்கு இன்னமும் கூட 2 பெருமைகள் உண்டு ! அதுநாள் வரையிலும் "இஷ்டப்பட்ட வேளைகளில் பதிவு" - என்று சுற்றித் திரிந்தவனை "ஒவ்வொரு ஞாயிறுக்கும் பதிவு" என்ற template க்குள் அடைத்ததும் இந்த இதழே & இன்று வரைக்கும் page views எண்ணிக்கையில் அசைக்க இயலா உச்சத்தில் நிற்பதும் இது வெளியான சமயத்திலான 'தல..தளபதி' பதிவே !! LMS - first amongst many equals !! இங்கு எனது கேள்வி : பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !! 

"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இந்தப் பட்டியலுக்குள் இடம்பிடிக்கும் அடுத்த இதழ் ! இந்த இதழுக்கும் சரி, 'இரவே..இருளே..கொல்லாதே' இதழுக்கும் பெயர் வைக்க வழக்கத்தை விடவும் ஜாஸ்தி நேரம் எடுத்துக் கொண்டு மொக்கை போட்டதே இங்கு எனது முதல் memory !! ஏனோ தெரியலை - இந்த இரு கதைகளுக்கும் முதலில் எனக்குள் உருவான தலைப்புகள் எல்லாமே தெலுங்கு டப்பிங் படத் தலைப்புப் பாணிகளிலேயே அமைந்து போயின ! சரி..ஏதாச்சும் ஒரு "படலம்" என்று பெயர் வைக்க வேண்டியது தான் என்று அலுத்துப் போய் ஆபீசுக்கு கிளம்பியவனுக்கு, ரோட்டில் பைக் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் பெயர்கள் திடுமென உதித்தன மண்டைக்குள் ! And இந்த 2 இதழ்களின்  சூப்பர்-டூப்பர் வெற்றிக்கு அந்தத் தலைப்புகளின் பங்கு என்னவென்று தெரியாது - ஆனால் இன்றளவிற்கு வாசிக்கும் போது நெருடாத தலைப்புகளாய் அவை தொடர்கின்றன, என்மட்டிற்காவது   ! "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" தேர்வானது primarily - அந்த பெயின்டிங் ரக சித்திர பாணிகளுக்கே ! கதையின் ஓட்டத்தைக் கண்டு எனக்குள்ளே கொஞ்சம் மிரட்சியும் குடி கொண்டது நிஜமே - simply becos இரு சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகளுக்கு இங்கு புது வடிவம் தர முனைந்திருந்தார் கதாசிரியர் ! அதன் பலனாய் நிறைய இன்டர்நெட் அலசல்கள் ; தேடல்கள் என்று மூழ்கிய பின்னே தான் இந்த இதழின் எடிட்டிங் பணிகளை நிறைவு செய்திட எனக்கு முடிந்தது ! அப்புறமுமே கொஞ்சம் பயம் தொடர்ந்தது தான் - உங்களின் வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று !! ஆனால் தொடர்ந்த நாட்களில் என் பயங்களுக்கு அவசியம் லேது என்று நிலைநாட்டின உங்கள் உற்சாக வரவேற்புகள் ! "பொம்மை புக்" என்ற பிம்பங்களைத் தகர்க்க ஒத்தாசை செய்த இதழ்களுள் பிரதானமானது என்ற விதத்தில் இந்த தசாப்தத்தில் இதற்கொரு முக்கிய இடம் தர விழைகிறேன் ! இங்கே எனது கேள்வி : இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ? 

பட்டியலில் # 10 : பவுன்சரின் :"ரௌத்திரம் பழகு" ! நிறைய ஆக்ஷன் கதைகள் ; கொஞ்சம் கிராபிக் நாவல்கள் என்று அதுநாள்வரையிலும் பழகியிருந்த நமக்கு, முகத்தில் அறையும் Jodorowski பாணியிலான வன்முறைகளும் ; முதுகுத் தண்டில் பூரான் நெளிகிறதோ ? என்று மிரளச் செய்யும் கதை நகர்த்தல்களும் ரொம்ப ரொம்பப் புதுசு தான் ! நிறையவே தயக்கமும், சம அளவுக்கு பயமும் இந்தத் தேர்வின் பின்னே இருந்தன என்றாலும், அந்த ஒற்றைக் கை நாயகரிடம் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதாகவும், அவரது அந்தத் துவக்க ஆல்பத்தின் sheer audacity நம்மைக் கட்டுண்டு போகச்செய்யும் என்ற நம்பிக்கையும் எப்படியோ ததும்பிய என்னுள் ! அதன் பலனாகவே பவுன்சர் தமிழ் பேசத் தீர்மானித்தார் ! And ஒரு பெரும் ராயல்டி தொகை தந்து கதைகளை வரவழைத்த பின்னே மொழிபெயர்ப்பில் மொக்கை போடும் படலம் தொடர்ந்தது ! அமெரிக்காவில் சியாட்டிலில் பணியாற்றி வந்த நம் வாசக நண்பர் ஒருவர் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை எனக்கு அன்போடு ஓராண்டுக்கு முன்னரே அனுப்பியிருந்ததால் அந்தப் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பில் கரை சேர முடிந்தது எனக்கு ! Maybe இதனை பிரெஞ்சிலிருந்தே மொழிபெயர்த்து வாங்கி, அப்புறமாய் நான் பேனா பிடித்திருந்தால் கதையோட்டத்தில் புரிதல் முழுமையாய் இருந்திருக்குமா ? என்று சொல்லத் தெரியலை எனக்கு ! சியாட்டில் நண்பருக்கு மீண்டுமொரு thanks ! நம் ரசனைகளின் முதிர்ச்சி அடுத்த லெவெலுக்குப் பயணமாகியிருப்பதை உணர்த்திய இதழ் என்ற வகையில் "ரௌத்திரம் பழகு" finds a place in this list ! And இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?

இந்தப் பதிவினில் 10 இதழ்களைப் பார்த்துள்ள நிலையில்  ; அடுத்த பதிவினில் பாக்கிப் 10 பற்றிய நினைவுகூரலை வைத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன் - சரமாரியாக கிழியும் கொட்டாவிகளின் பொருட்டு ! அலாரம் வைத்து மார்கழியில் பதிவிடுவதில் சுண்டல் கிடைக்கிறதோ இல்லையோ - கொத்துக் கொத்தாய்க் கொட்டாவி நிச்சயம் கிட்டுகிறதே !! 

Before I sign off - ஜனவரியின் MAXI லயன் இதழ் பற்றிய preview இதோ  : 

இந்த அட்டைப்பட டிசைனிங்கின் பின்னணியில் உள்ள கதைகளை சொல்ல ஆரம்பித்தால் மதியமாகி விடும் என்பதால் - அதனை என்றேனும் ஒரு மழை நாளுக்கென வைத்துக் கொள்வோமே ? ஒரிஜினல் டிசைனுக்குள் கொஞ்சம் மாற்றங்கள் ; கொஞ்சம் மெருகூட்டல் என இயன்றதைச் செய்துள்ளோம் ! கதையின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாய் அட்டைப்படமும்  அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி !  And இதோ - உட்பக்க வண்ண டிரெய்லர் - மிரட்டலான அந்த மெகா சைஸ் பக்க அமைப்பினில் ! 

As usual, டப்பா டப்பாவாய் மஞ்சள் மசிக் கொள்முதலோடு மங்களகரமாய் இந்த இதழின் அச்சு அரங்கேறியதால் சில பல எதிர் முகாம் ஆபீசர்களுக்கு "மஞ்ச phobia" தாக்கிடும் சாத்தியங்கள் பிரகாசமே ! அதே போல "மஞ்சச்சட்டை ஆபீசரின்" அடாவடியும் ; ஆரஞ்சு சட்டை அண்ணாச்சியின் பரிதாபமும்" என்று சில பல நெடும் பின்னூட்டங்களும் தொடர்ந்திடக்கூடிய சாத்தியங்களும் இங்கே இல்லாதில்லை தான் ! So ஜனவரியில் லூட்டிகளுக்கு பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது ! அதைச் சொல்லிய கையோடு இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன் folks !! Have a cool Sunday !! See you around...bye for now !!

Sunday, December 22, 2019

ஒரு வலைப்பயணம் !!

நண்பர்களே,
வணக்கம். வருஷ இறுதி கூப்பிடு தொலைவில் நின்றிருக்க, உலகமே விமர்சையாய்க் கொண்டாடிடும் கிருஸ்துமஸ் பண்டிகை கூட தொட்டுவிடும் அண்மையில் !! 'ரைட்டு...ஜனவரியின் இதழ்களின் அறிமுகத்தைக் கொண்டே இந்த வாரத்தை ஒட்டிடலாமா ? அல்லது "ஆர்ச்சி" என்ற நொடியில் அயர்ச்சியைத் தூக்கிக் கடாசிவிட்டு 300+  பின்னூட்டங்களைப் போட்டுப் பின்னியெடுத்த உங்களின் "பழமைக் காதலை " சிலாகிக்கலாமா ?' என்ற சிந்தனையில் மூழ்கிக் கிடந்ததொரு  சோம்பலான தருணத்தில் இந்த வலைப்பக்கத்தின் flashback பக்கமாய் மனசும், ப்ரவுசரும் பயணித்தன !! கைக்குச் சிக்கும் முந்தைய பதிவுகளுக்குள் கோவை ஸ்டீல் க்ளாவின் வரிகளைப் போலவே ரைட்லேயும் , லெப்ட்லேயும்  ரவுண்ட் அடித்த போது தான் உரைத்தது -  2011-ன் இதே போன்றதொரு டிசம்பர்  தான் இந்த blog துளிர்விட்டுள்ளதென்பது ! விளையாட்டாய்த்  துவங்கிய நமது மறுவருகையும்  சரி ; அதனை சல்லிசானதொரு வழிமுறையில் உங்களுக்குத் தெரிவிக்க நான் முனைந்ததுமே சரி - சரியாக 96 மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள் என்பதை திரும்பிப் பார்க்கும் இந்த நொடியில் நம்பச் சிரமமாகவே உள்ளது ! So ஜனவரியின் இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை பாய விடும் முன்பாய் கொஞ்சமாய் இந்த 96 மாதங்களது "வலை நினைவுகளோடு" ஒரு வாடகைச் சைக்கிள் சவாரியினைச் செய்து கொளக்கிறேனே guys ? (ஆரம்பிச்சுட்டான்யா ; ஆரம்பிச்சுட்டான்யா !!)

எல்லாமே ஆரம்பித்தது ஒரு சிலுசிலுப்பான சனியன்று தான் ! 2011 கிருஸ்துமஸுக்கு முந்தைய அந்த மதியப் பொழுதில் ஜூனியரின் சிலபல நாட்களது நச்சரிப்புக்கு ஒரு சமாதானமாய் இருக்கட்டுமே என்று நாலைந்து வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் டைப் செய்து முதல் பதிவாய்ப் போட்டது ; 'என்னமோ சொல்றே ; போட்டுப்புட்டேன்' என்று வெளியே காட்டிக்கொண்டாலும் ஓசையின்றி நிமிஷத்துக்கு மூணுவாட்டி யாரேனும் கவனித்துள்ளார்களா என்று எட்டி, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது  ;   ஊஹூம்...ஒரு மணி நேரமாகியும்  no ஈ ; no காக்காய் என்றான பின்னே - 'பாத்தியா ? பாத்தியா ? இதுலாம் நமக்கு செட் ஆகாதுன்னு சொன்னேனிலே ?' என்று ஏமாற்றத்தை ஜூனியரிடம் பகிர்ந்துவிட்டு மூட்டையைக் கட்டி விட்டு சாப்பிடக் கிளம்பியது என்று அந்தப் பொழுதின் நிகழ்வுகள் எல்லாமே  இன்னமும் நினைவில் உள்ளன  ! மதியம், மாலை , இரவு என்று அந்த சனிக்கிழமையும் ஓட்டமெடுத்தது தான் மிச்சம் ; பெருசாய்ப் பருப்பு ஏதும் வேகவில்லை என்றான போது காலத்தில் கட்டையைக் கிடத்தினேன் ! அப்போதெல்லாம் சாமக் கோடாங்கி உத்தியோகம் தான் கிடையாதல்லவா ? So சாவகாசமாய் ஞாயிறு காலையில் எழுந்து பார்த்த போது 4 பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன ! "ஹைய்யோ ..தெய்வமே... மானம் கப்பலேறாது காப்பாற்றியதற்கு நன்றி !!" என்றபடிக்கு இங்கிலீபீஷில் முதன்முதலாய்ப் பதில் போட முனைந்ததுமே நினைவில் நிற்கிறது ! ஐந்தாறு பின்னூட்டங்களைக் கண்ட குஷியில் அந்த கிருஸ்துமஸ் பகலில் மேற்கொண்டு 2 பதிவுகளைப் போட்டுத்  தாக்கிய அந்த ரணகளத்தை இன்றைக்கு நினைவுகூர்ந்திடும் போது தரையில் புரண்டு சிரிக்காத குறை தான் !! மேற்கொண்டும் கொஞ்சூண்டு பின்னூட்டங்கள் வரவேற்பாகவும், பகடியாகவும் அன்றைய பகலில் பதிவான  போது, நிறைய யோசித்து ராவினில் தமிழில் பதிலிட ஜூனியரையே நாட வேண்டியிருந்தது - நேக்கு தமிழ் டைப்பிங் தெரியாதென்பதால் ! நான் சொல்லச் சொல்ல  ஜூனியர் டைப்படிக்க ஒரு மாதிரியாய் முக்கால் மணி நேரத்திற்குப் பிற்பாடு ஓரளவுக்கு நீளமானதொரு பின்னூட்டம் ரெடியாகியிருந்தது  ! அதைப் போட்ட கையோடு ஒரு இருபது தபாவாவது  வாசித்திருப்பேன் - பிழை ஏதும் கண்ணில் தென்படுகிறதாவென்று தேடிட !! அதற்குள்ளாக மூன்று பதிவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் வருகைகள் பதிவாகியிருக்க - "நாங்க தான் சொன்னோமிலே !!" என்ற ரீதியில் ஜூனியர் முகத்தில் புன்னகை !  தமிழில் டைப்படிக்க நானாய் எப்போது பழகினேன் என்பது நினைவில் இல்லை ; ஆனால் சீக்கிரமே கற்றுக்கொண்டேன் என்றே ஞாபகம் ! ஏதேதோ தலைக்குள் தோன்றிய சமாச்சாரங்களையெல்லாம் போட்டுத் தாக்கிட - ராக்கூத்துப் படலங்கள் துவக்கம் கண்ட முதல் தருணம் அதுவே !! அன்றைக்கு அகலமாய்த் திறந்த ஓட்டைவாய் இன்றுவரைக்கும் சலசலத்து வருகிறது - பதிவு ; உபபதிவு என்று !

சிறுகச் சிறுக ஏதேதோ எழுத்தில் பரிமாறிட, அதற்கு மத்தியில் நமது Comeback ஸ்பெஷல் இதழ் வெளியாகி அட்டகாச வரவேற்பினைப் பெற்றிருக்க - பொங்கல் 2012 க்கு "உஷார்...நீளமான பதிவு" என்று 30 வரிகளில் ஒரு பதிவைப் போட்டுத் தாக்கும் அளவுக்குத் தேறியிருந்தேன் !! இன்றைக்குப் படித்தால் இதனை உபபதிவு கிரேடில் கூடச் சேர்த்துக்க மாட்டீர்கள் என்றாலும் - அன்றைக்கு இதெல்லாம் மெகா சமாச்சாரங்கள் !! படித்துப் பாருங்களேன் :
=================================================================
உஷார்..சற்றே நீளமானதொரு பதிவு !!

நண்பர்களே,

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு நமது காமிக்ஸ்களை display செய்திட முடிவெடுத்த போது பெரியதொரு எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது..... விற்பனை ஆகிறதோ இல்லியோ, கொஞ்சமாவது ஒரு exposure கிடைக்குமே என்ற நம்பிக்கை மட்டுமே என்னுள்.அதுவும் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டால் பகிர்ந்து கொள்வதால், எவ்வளவு பிரதிகள் அங்கே எடுத்துச் செல்வது...எவ்வளவு விற்பனை ஆகும் என்றெல்லாம் சுத்தமாய் ஒரு கணக்கும் போடத் தெரியவில்லை என்பதே நிஜம்...!

முதல் நாள் 4600 ரூபாய் collection என்ற போது ,'சரி ...இது தான் ஒரு விற்பனை அளவுகோல் போல' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்.........

தொடர்ந்திட்ட நாட்களில் நீங்கள் காட்டிட்ட வரவேற்பு எங்களது wildest imaginationக்கும் அப்பாற்பட்டது !! அப்படியொரு ஆத்மார்த்தமான ; உற்சாகமான, துள்ளலான வரவேற்பு !

ஒவ்வொரு இரவும் நமது பணியாளர்கள் சொல்லும் 'கல்லாப்பெட்டி கணக்கை' விட, நான் மிக ஆவலாய் கேட்டிடுவது அன்றைய தினம் வந்திட்ட வாசக நண்பர்களின் பட்டியலை ...அவர்களது எண்ணங்களைப் பற்றியே !!

நம்மிடையே இருப்பது 'ஒரு பதிப்பகம்.....அதன் வாசகர்கள்' என்ற சராசரி உறவுச் சங்கிலி அல்ல என்பது எனக்கு முன்பே தெரியும் தான்..!ஆனால் கடந்த 10 நாட்களாய், அகன்ற விழிகளோடு நாங்கள் அனுபவித்து வரும் வெறித்தனமான இந்த அன்பு மழையை விவரித்திட, நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !

"Thanks everybody " என்று கூலாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நான் கிளம்பி விட்டால், 'ஆயுசுக்கும் தூர்தர்ஷன் டப்பிங் சீரியல்களைப் பார்க்கக் கடவது' என்ற தண்டனையை விட பாடாவதியான தண்டனைக்கு நான் தகுதியானவன் ஆகிடுவேன்...!!

So எங்களது நன்றிகளை வார்த்தைகளில் மட்டும் அல்லாது, செயலிலும்  காட்டிடுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி...!!

இந்த 2012 ஐ நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு மறக்க முடியா phase ஆக செய்திட என் மண்டையில் மிச்சம் மீதி இருக்கும் சொற்பமான கேசத்தை பிய்த்துக் கொண்டு இருக்கிறேன்! நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !  

 பின்குறிப்பு : 

புத்தகக் கண்காட்சி முடிவடைய இன்னும் 3  நாட்கள் உள்ள போதிலும் இந்தப் பகுதியை இப்போதே எழுதிடும் அவசியமென்ன என்று எண்ணிடலாம்...but மனதில் பட்டதை அப்போதே எழுத்தாக்கிப் பார்ப்பதும் ஒரு சுகமான திருப்தி தானே ! THANKS GUYS  .....THANKS FOR EVERYTHING !!!   பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்குறிப்பு -2 :


இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில் ! 
=================================================================

சிறுகச் சிறுக நண்பர் வட்டம் அதிகரிக்க, சிறுகச் சிறுக நம் பதிவுகளின் நீளங்களும் அதிகரிக்க, சிறுகச் சிறுக இங்கு நான் செலவிடத் துவங்கிய அவகாசங்களும் அதிகரிக்க ; சிறுகச் சிறுக உங்களின் பின்னூட்ட அலசல்களும் வீரியம் பிடிக்க, ஜாலியாக வண்டி ஓடிய அந்தத் துவக்க நாட்கள் இன்னமும் fresh in the mind ! எல்லோருக்கும் ; எல்லாக் கருத்துக்களுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டுமென்ற குடைச்சல் மண்டைக்குள் தீவிரமாய்க் குடியிருந்த நாட்களவை ! மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ, தாண்டிச் செல்லும் முதிர்ச்சியோ வீசம்படி எவ்வளவு ? என்று கேட்ட நாட்களுமே அவை ! So சிறுகச் சிறுக பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கைகளுமே அதிகமாகி வந்தது தவிர்க்க இயலா நிகழ்வுகளாகிப் போயின ! ஆனால் "காமிக்ஸ் நேசம்" எனும் சகலரோக சர்வநிவாரணி கையில் இருக்கப் போய் - வாங்கிடும் சாத்துக்களின் வடுக்கள் நொடியில் மாயமாகிடும் அதிசயமும் நிகழ்ந்தது ! குட்டியும், படுக்குட்டியுமாய் ஒரு 30 பதிவுகளைத் தள்ளுபடி செய்துவிட்டுப் பார்த்தால் இந்த 96 மாதப் பயணத்தினில் சுமார் 550 + பதிவுகள் ; அவற்றிற்கான உங்களின் பல்லாயிரப் பின்னூட்டங்கள் என்று ஏதேதோ ரகளைகளை அரங்கேற்றியுள்ளோம் என்பது அப்பட்டம் ! அதிலும் NBS ; LMS ; லயன் 250 ; மின்னும் மரணம் ; இரத்தப் படலம் ; டைனமைட் ஸ்பெஷல் ; என் பெயர் டைகர் ; ஈரோட்டில் இத்தாலி  போன்ற மெகா இதழ்களின் வெளியீட்டு வேளைகளிலும்  ; சென்னைப் புத்தக விழாக்கள் ; ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களிலும்  இங்கே நாம் நடித்துள்ள லூட்டிகள் one for the ages !! இன்றளவில் 'தல'...'தளபதி'...திருவிழா..' என்ற LMS  ரிலீஸ் சார்ந்த பதிவே பார்வைகளின் எண்ணிக்கைகளில் முதலிடம் பெற்று நிற்கிறது ! (http://lion-muthucomics.blogspot.com/2014/08/blog-post_2.html)

வண்டி வண்டியாய் நினைவுகள் ; வண்டி வண்டியாய் அனுபவங்கள் என்று வழங்கியுள்ள இந்தப் பதிவுப் பக்கத்தினில் இந்தாண்டு அக்டோபரில் ஒரே பதிவிற்கு ஆயிரம்+ பின்னூட்டங்கள் போட்டுத் தாக்கி நீங்கள் அடித்த கூத்துக்கள் மறக்கவியலா தருணங்களில் இன்னொன்று ! Moreso because அந்த கனடா பயணப் பதிவினை (பணியும்..பனியும்..!" : http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_34.html#comment-form ) எழுதிடும் போது ஆந்தை விழியனின் ஆரோக்கியம் சொல்லிக்கொள்ளும் விதமாய் இருந்திருக்கவில்லை ! And கையில் லேப்டாப்பும் இல்லாது வெளியூரில் சிகிச்சையின் பொருட்டு சிக்கிக் கிடந்தவனுக்கு அந்தப் பதிவை எழுதிட எப்போதையும் விட இருமடங்கு நேரம் எடுத்தது !! கவிழ்ந்தடித்துப் படுத்துக் கிடந்த போதிலும் எழுதிடத் துவங்கியது ஒரு சுவாரஸ்யமான பயணம் பற்றியது என்பதாலும், அன்றைக்கு எழுத்தினில் flow ஒரு மார்க்கமாய் அமைந்து போனதாலும்,  நீட்டி முழக்காது, பதிவினை சுருக்கமாய் முடிக்கவும் மனசு ஒப்பவில்லை  ! ஆனது ஆச்சு...உருப்படியாய் எழுதிடுவோமென்ற வைராக்கியத்தில் பேனா பிடித்தால் - பக்கங்கள் எகிறிக் கொண்டே சென்றன - மிரட்சியூட்டும் வேகத்தில் !! இந்தா முடிந்து விடும் ; அந்தா முடிந்து விடுமென்று பார்த்தால், நீள்கிறது - நீண்டு கொண்டே செல்கிறது - அசாத்தியமாய் ! நெருக்கமான கோடுகள் போட்ட A 4 பக்கங்களில் சுத்தமாய் 19 பக்கங்களுக்கோ ; 20 பக்கங்களுக்கோ ஓடிய அந்தப் பதிவை படுத்துக் கொண்டே எழுதி ஒரு வழியாய் முடித்து ஜூனியரைக் கொண்டு சாமத்தில் போட்டோ எடுக்கச் செய்து வாட்சப்பில் சிவகாசிக்கு அனுப்பி, அதனை டைப்படித்து வாங்கி, செல்போனிலேயே பிழைத்திருத்தங்கள் போட்டு upload செய்வதற்குள் சட்னியாகிப் போயிருந்தேன் ! எப்போதுமே இதுபோன்ற பணிகளை கம்பியூட்டர்களில் மட்டுமே செய்து பழகியவனுக்கு போனில் இவற்றைச் செய்து முடிப்பதற்குள் பிராணன் போகாத குறைதான் ! மறுநாள் காலையில் பதிவைப் படித்த கையோடு நீங்கள் ஆரவாரமான வரவேற்பினைத் தந்திருந்த போது நோவெடுத்த விரல்கள் தாளமிடத் துவங்கின ஜாலியாய் ! And பாதியில் நின்ற அந்தப் பதிவின் follow up ஐ எதிர்பார்த்து நீங்கள் ரணகளம் செய்து கொண்டிருந்த ராவினில் ஆயுதபூஜை விடுமுறைகளின் பொருட்டு சிவகாசியில் 2 நாட்களுக்கு ஆளில்லை என்பதால் டைப்படிக்க  வழியின்றிப் போனது ! So ஊருக்கு நான் திரும்பிய பிற்பாடே அந்த இறுதி பாகத்தை 4 நாள் இடைவெளிக்குப் பின்பாய் உங்கள் கண்களில் காட்ட சாத்தியமானது ! அந்தப் பதிவினை எழுதும் போதுமே வலிக்குப் பஞ்சமிருக்கவில்லை தான் என்றாலும், பூசி மெழுகி ஒப்பேற்றப் பிடிக்கவில்லை ! ஆரம்பித்ததை எப்படியேனும் உருப்படியாய் முடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகத்தில் இன்னொரு ஆஞ்சநேய வால்ப் பதிவை மாங்கு மாங்கென்று எழுதிய அனுபவம் இப்போதைக்குள் மறவாது ! அந்த ரகளைகள் அரங்கேறிய 2 வாரங்களுக்குள்ளாகவே 2020-ன் அட்டவணைப் பதிவுமே due என்ற போது அங்கொரு 27 பக்கங்களை எழுதித் தள்ளி இந்த அக்டோபர் 2019-ஐ ஒரு "பேப்பர் துவம்ச மாதம்" ஆக்கியது எனது இந்தாண்டின் நினைவலைகளுள் ஒரு முக்கிய பங்கு வகித்திடும் !! Phew !!

வயதாக வயதாக நோவுகள் கைகோர்த்துக் கொள்ளும் நாட்கள் அதிகமாவதெல்லாம் இயல்பே என்பதால் அன்றைக்கே இதையெல்லாம் பதிவினில் ஒப்பித்து, உங்களது அன்றைய விடுமுறைப் பொழுதுகளை நொய் நொய்யென்று ஆக்கிட மனசு கேட்கவில்லை ! இன்றைக்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் தான் - ஆனால் இந்தத் 96 மாதப் பதிவுப் பயணத்தினில் எனது சந்தோஷங்கள் ; சங்கடங்கள் ; உச்சங்கள் ; பாதாளங்கள் ; ஏமாற்றங்கள் ; ஏற்றங்கள் என சகலத்தையும் பகிர்ந்திட முனைந்துள்ளேன் !  என்றைக்கேனும் இந்தப் பதிவுகளை எல்லாம் ஓய்வாய் வாசிக்கும் தருணம் புலரும் போது ஒரு டயரியைப் போல எனது பொழுதுகளை நினைவுகூர்ந்திட சாத்தியப்படும் என்பது எனது நம்பிக்கை ! So அந்த "ஆயிரம் பின்னூட்ட அதிசய ராப்பொழுது" சார்ந்த நினைவுகளோடு எனது backend அனுபவத்தினையும் இணைத்துள்ளேன் ! Nothing more than that guys ! பதிவுகளுடன் ஆன இந்தப் பயணத்தினை நினைவுகூர்ந்திடும் பொருட்டு random ஆக முந்தைய பதிவுகளுக்குள் புகுந்திடும் போது ஏராளமான சந்தோஷ நினைவுகள் துள்ளிக் குதிக்கின்றன ! நண்பர்கள் டிசைன் செய்த அட்டைப்படங்கள் ; செய்த மொழிபெயர்ப்புகள் ; உருவாக்கிய போஸ்டர்கள் ; எழுதிய captions ; அடித்த காமெடி தோரணங்கள் ; செய்துள்ள வீரிய அலசல்கள் என்று மெர்ச்சலூட்டுகின்றன உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளும் ! இதோ - சின்னதாயொரு recap !!
















பழசுக்குள் புகுந்தால் மூச்சிரைக்கிறது உங்களின் பங்களிப்புகளை பார்த்திடும் போது ! லட்சங்களில் சர்குலேஷன் கொண்டிருக்கும் நிறைய பத்திரிக்கைகளுக்கு கூட இது போன்ற ரகளையான வாசக வட்டம் அமைந்திராதென்பது திண்ணம் ! Thanks for all the riveting fun & rocking memories guys !! தொடரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் கலக்குங்கள் ! And நடுவே ஏதேதோ காரணங்களின் பொருட்டு கழன்று கொண்ட நண்பர்களுக்கும் நமது நன்றிகளின் ஒரு பகுதியேனும் உரித்தாகட்டும் !  ஊர்கூடி இழுத்துவரும் தேர் இது ; so வடம்பிடித்த கரங்கள் அனைத்துமே நம் அன்புக்குரியவைகளே !

Before I sign out - இதோ ஜனவரியின் மௌன அதிரடிக்காரரின் ஹார்ட் கவர் ஆல்பத்தின் முதல் பார்வை !! நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது ! As always - அட்டையில் ஏகமாய் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ; புக்கைக் கையில் ஏந்திப் பார்த்திடும் போது உணர்ந்திட முடியும் !! And உட்பக்க டிரெய்லருமே இங்குள்ளது ! மூன்றே ஆண்டுகளை நமது அட்டவணையினில் ஒரு fixture ஆகி விட்டுள்ள ட்யுராங்கோ இந்த ஜனவரியை light up செய்திட்டால் - ஆண்டுக்கொரு அட்டகாசமான துவக்கம் கிட்டியது போலிருக்கும் ! Fingers crossed !!

அச்சு முழுக்கவே முடிந்து பைண்டிங் துவங்கியுள்ளது ஜனவரியின் எல்லா இதழ்களுக்கும் ! ஆண்டின் இறுதி என்பதால் டயரி ; தினசரி காலெண்டர் பணிகளென்று சிவகாசியே பிசியோ-பிசி !! முன்கூட்டியே அச்சை முடித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டதால் இம்மாதத்தின் இறுதித் தேதியிலேயே 2020 -ன் முதல் கூட்டணியை உங்கள் கைகளில் ஒப்படைத்திட சாத்தியப்படுமென்று நம்புகிறேன் ! Fingers crossed again !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful weekend ! And அட்வான்ஸ் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

P.S : சந்தா நினைவூட்டலுமே !!!

Monday, December 16, 2019

அண்ணனுக்கொரு சீட் !!

நண்பர்களே,


வணக்கம். A for Archie என்று போடச் சொன்னால் - A for அதகளம் என்றும் பிரித்து மேய்ந்துள்ளீர்கள் ! என்ன தான் கி.நா. ; கோ.நா. என்று நாம் முயற்சித்தாலும், back to the evergreen memories என்ற நொடியிலேயே  நெடும் மௌனத்திலிருக்கும் நண்பர்கள் கூடத் துள்ளி எழுவதைப் பார்க்கும் போது பிரமிக்காது இருக்க இயலவில்லை ! காதிலே புய்ப்பமோ - இல்லியோ ; பால்யம் சார்ந்த சமாச்சாரங்களெனும் போது எங்கிருந்தோ பிரவாகமெடுக்கும் அந்த உற்சாக ஊற்றின் நதிமூலத்தைக் கண்டறிய இயன்றால் தான் எத்தனை அட்டகாசமாய் இருக்கும் !! 

அதே சமயம் - பால்யங்களைத் தாண்டியது, தாண்டியது தான் ; மறுக்கா அரை நிஜார்களுக்குள் புகுந்திட முனைந்து நம்மை நாமே நோகடித்துக் கொள்வானேன்? என்ற யதார்த்தவாதிகளின் அணி சிறுபான்மையில் இருந்தாலும் அவர்களது குரல்களையும் உதாசீனம் செய்வது முறையாகாது ! So அவர்களை ஓவராய் சோதிக்கவும் கூடாது ; அதே சமயம் ஆர்ப்பரிக்கும்  இந்த சட்டித் தலையன் காதலுக்கும் முதல் மரியாதை செய்தாக வேண்டும் என்பதே நிலவரம் ! ஆகையால் ஒரேயொரு சாகசத்தோடு அண்ணாத்தே ஆர்ச்சியை தற்போதைக்கு சந்தா D-ல் ரசித்துக் கொள்வோமே ?! And அதையுமே ரொம்பத் தள்ளிப் போடாது பிப்ரவரியிலேயே என்று வைத்துக் கொள்ளலாம் ! கைவசமுள்ள  பாக்கிக் கதைகளை நெருடாத விதத்தில் நடுநடுவே போட்டுத் தாக்கிக் கொள்ளலாம் ! So சிகப்பு மண்டையனின் பக்தாள்ஸ் : பொறுமையோடு பயணிப்போமே ப்ளீஸ் ? 

எது எப்படியோ - ஒரு விதத்தில் எனக்கு குஷி !! அது எப்படி என்கிறீர்களா ? ஆர்ச்சி பற்றிய சேதிக்கு உங்களில் யார் யார் - எவ்விதம் ரியாக்ட் செய்வீர்களென்பதை ஒரு யூகமாய் உருவகப்படுத்தியிருந்தேன் ! And அட்சர சுத்தமாய் அந்த யூகத்துக்கு வெற்றி ! ஆர்ப்பரிக்கப் போவோர் யார் ? மிரண்டு ஓடப் போவோர் யாரென்று நான் எதிர்பார்த்தேனோ - அதனில் 90 % சரியாகவே இருந்தது ! 

அப்புறம்  ஆர்ச்சியை ஒற்றை ஸ்லாட்டுக்குள் புகுத்திய பிற்பாடு, எஞ்சியிருக்கக்கூடிய 3 காலி ஸ்லாட்களுக்குள் யார் யாரைப் போடலாமென்று ஏகமாய்ப் பரிந்துரைகளையும் கவனித்தேன் தான் ! ஆனால் ஆர்வ மிகுதியினில் நம்மிடம் இந்த இதழ்களுக்கென  கைவசம் இருப்பது (தலா) ரூ.40 பட்ஜெட் மட்டுமே என்பதையும் , சின்ன சைஸிலெனில் 64 பக்கங்களும் ; பெருசிலெனில் 32 பக்கங்களும் மாத்திரமே என்பதை நிறைய பேர் கருத்தில் கொள்ளத் தவறி விட்டிருந்தார்கள் ! அதே போல அந்நாட்களிலேயே பெருசாய் உயரங்களைத் தொடாத விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகியோரை nostalgia காரணமாய் இன்று பரிந்துரைப்பதையுமே கவனித்தேன் ! Sorry guys - வேண்டாமே அந்த ரூட்டிலான பயணம் ! இளம் டெக்ஸ் விட்டுள்ள வெற்றிடத்தை பொருத்தமான கதைகளால் ரொப்பிட எனக்குத் தேவை கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் மாத்திரமே ! Stay assured please !! 

அப்பாலிக்கா கடந்த பதிவின் வாலில் நண்பர் கிரி நாராயணன் பதிவிட்டிருந்ததைப் பார்த்த போது ஆர்ச்சிக்கு thumbsdown தந்த நண்பர்களுக்கெல்லாம் ஜெர்க்கோ ஜெர்க் அடித்திருக்குமென்பது நிச்சயம் !! For those who missed it :


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விக்டர்: தாம்சன்! அழைப்பு வரும் போல் தெரிகிறது, ஆர்ச்சியை தயார் செய்.


தாம்சன்: நான் எப்பவோ தயார் செய்து விட்டேன். அது ஏனோ தயங்குகிறது.

விக்டர்: ஏன்?

தாம்சன்: அது மேல பாசம் காட்டின சின்ன பசங்க எல்லாம் இப்ப பெரியாளா ஆகியிருப்பாங்க. பழைய பாசம் காட்டுவாங்களா என்று யோசிக்கிறது.

விக்டர்: முடிந்த வரை முயற்சிப்போம் என்று சொல். அதற்கு மேல் விதி விட்ட வழி.

ஆர்ச்சி: நண்பர்களே! எனது சக போட்டியாளன் ஸ்பைடரும் வந்தால் கொஞ்சம் தெம்பாக உணர்வேன்.

தாம்சன் & விக்டர்: ஸ்பைடருக்கும் அழைப்பு வரும்.முதலில் நீ களத்தில் இறங்கு.

ஆர்ச்சி ரசிகர்கள் : ஆர்ச்சி இங்கே வா! வா! ஆசை முத்தம் தா! தா !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு தெறிக்கும் கற்பனையாய் ஸ்பைடரையும், ஆர்ச்சியோடு  களமிறக்கினால்  எவ்விதமிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் !! இந்தக் குளிரிலும் வியர்த்துப் போய் விட்டது !! 

Bye guys..."மேக் & ஜாக்" இறுதிக்கட்டப் பணிகள் காத்திருப்பதால் நடையைக் கட்டுகிறேன் ! See you around ! 

Saturday, December 14, 2019

மாற்றம் இங்கே நிரந்தரம் !

நண்பர்களே,

வணக்கம். பத்தொன்பது வரலாறாகி, இருபது யதார்த்தமாகிட இருபதே நாட்களுக்கும் குறைவாயிருக்க - லைட்டாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த மாடுகளை வண்டியில் பூட்டி, இதோ பயணம் போகும் முஸ்தீபுகளைத் துவக்கியாச்சு ! அதுவும் ஆண்டின் முதல் மாதத்தினில் புதுசும், பழசுமாய்ச் சேர்ந்து 5 இதழ்கள் இடம்பிடித்து நிற்க - பணிகளுக்குப் பஞ்சமே லேது ! "மைதீன் ...அந்த ராப்பர் அச்சுக்குப் போயாச்சா ? மைதீன் ...இந்தப் பக்கங்களைக் கரெக்ஷன் போட்டுட்டாங்களா ?....மைதீன் ....அந்தக் கதையை ஸ்பைரல் பைண்டிங் போட்டுத் தரக் கேட்டிருந்தேனே.....மைதீன்...வால்போஸ்டருக்கு டிசைன் என்னாச்சு ? மைதீன்....அந்த லேமினேஷன் என்னாச்சு ?  !" என்று நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜாவின் குடலின் நீள-அகலங்களை நித்தமும் அலசி வருகிறேன் ! நமது DTP அணியுமே அநியாயத்துக்கு பிசி ! அட்டைப்பட வடிவமைப்பில் இப்போதெல்லாம் முழுநேரத்துக்கு மண்டையை நுழைத்தபடிக்கே - "ஆங்...இதை  சிகப்பாக்கு ; அதை பச்சையாக்கு ; ஆட்டைத் தூக்கிக் குட்டியோட போடு...குட்டியைத் தூக்கி ஆட்டோட போடு !" என்று சதா நேரமும் ஏதாவது யோசனை சொல்லியபடியே திரிய, என்னை நடுமூக்கில் ஓங்கிக் குத்தும் ஆவலை அடக்கியபடியே பெண்களும் பணியாற்றி வருகின்றனர் ! என்ன தான் ஜனவரியின் பணிகளெல்லாம் , டிசம்பரின் நார்மலான தொடர்ச்சியே என்றாலும், ஏதோ புதுசாய் ஒரு ஊரில் குடித்தனம் துவக்கிடுபவனைப் போல ஒரு பரபரப்பு உள்ளுக்குள் ! And இம்முறை கொஞ்சமாய் பதட்டமுமே ததும்புகிறது - simply becos 2019 ஒரு "தலைதப்பிய ஆண்டு" என்ற பெருமையை ஈட்டியிருக்கும் போது தொடரவிருக்கும் நாட்களானவை ஒரு மிடறேனும் உசத்தியாய் இருத்தல் அவசியமென்ற புரிதல் ! பற்றாக்குறைக்கு  ஆண்டினில் 12 இதழ்கள் தாங்கி வரவுள்ள சந்தா D (for Delightful Light Reading) சார்ந்த ஆவல் நம்மிடையே நிரம்பவே நிலவிடும் போது, அதற்கு இயன்ற நியாயம் செய்தாக வேண்டுமே என்ற ஆதங்கமுமே ! So இவ்வாரத்துப் பதிவின் பின்னணியே சந்தா D தான் ; and here she goes :

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசையுண்டு ! ஆண்டின் ஐம்பது+ இதழ்களைத் தேர்வு செய்து அறிவித்த கையோடு அவை சகலத்தையும் 'ஏக் தம்'மில் கொள்முதல் செய்து ; சரசரவென மொழிபெயர்க்க ஏற்பாடுகளைச் செய்து - கதைகளின் முழுமையையும் முன்கூட்டியே படித்துப் / பரிசீலித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் ? என்பதே அந்த அவா ! ஆனால் அதற்கு ரொம்பவே ஒரு முரட்டுத் தொகையினைப் புரட்டிட அவசியமாகும் எனும் போது - கைக்குப் பணம் கிடைக்கக் கிடைக்க, மும்மூன்று மாதங்களின் இதழ்களின் கதைகளை வரவழைப்பதே நடைமுறை ! என்ன தான் நான் அக்டோபர் இறுதியிலேயே புதுச் சந்தா இதழ்களை அறிவித்தாலும் - கிட்டத்தட்ட பிப்ரவரி வரையிலுமே சந்தாப் படலம் தொடர்ந்திடுமெனும் போது, அது சார்ந்த பண வரத்தானது கோடையின் காவேரி நீர் வரத்துப் போலவே இருப்பது வாடிக்கை ! So கதைக் கொள்முதல் சதா காலங்களிலும் தவணை முறைகளிலேயே !! ஆனால் இம்முறை ஒரு சன்னமான சந்தோஷ மாற்றம் / முன்னேற்றம்  ! சந்தா சேர்க்கைகளின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிடுகின்றன டிசம்பரின் முதல் வாரயிறுதியினில் ! So வாடிக்கையான அந்த மும்மூன்று மாதங்களின் கதைக் கொள்முதல் என்பதை இம்முறை சற்றே கூடுதலாக்கிட முடிந்துள்ளது ! And அதற்கான பலன் கைமேல் தெரிகிறது !

சந்தா D-ல் நாம் அறிவித்திருந்த 4 x  Young TEX கதைகளையும் ஒரே நேரத்தில் வாங்கிடும் பட்சத்தில், அவற்றை இத்தாலிய மொழியிலிருந்தும் ஒரே தவணையில் மொழிபெயர்த்து வாங்கிடலாம் என்ற ஞானோதயம் பிறந்தது எந்தச் சாமி புண்ணியத்திலோ தெரியலை ; ஆனால் எட்டுத் திக்கிலும் அதன் பொருட்டு நன்றி தெரிவித்துப் பெருசு பெருசாய், சரமாரியான  கும்பிடுகள் போட்டு வருகிறேன் இங்கே ! கதைத் தேர்வின் போது TEX WILLER என்ற பிரேத்யேகத் தடத்தில் வெளிவரத் துவங்கியுள்ள இந்த இளம் டெக்ஸ் கதைகளின் ஆல்பங்கள் தலா 62 / 64 பக்கங்களிலானவை என்றும்  ; ஒரு சங்கிலித் தொடராய்ப் பயணித்தாலும், ஆங்காங்கே நோவின்றி தனித்தனிக் கதைகளாய்ப் பிரிந்து நின்றிடுகின்றன என்றும் காதில் வாங்கியிருந்தேன் ! So முதல் 4 இதழ்களை 2020-ன் சந்தாக்குள் நுழைத்திட துளியும் தயங்கிடவில்லை !  In fact - குறைந்த பக்கங்கள்  ; light reading களம் ; குறைந்த விலை - என்றதொரு சமாச்சாரத்தை ஜூனியர் எடிட்டர் முன்மொழிந்த போது - சிவனே என இந்த Young TEX கதைகளை மட்டுமே மாதந்தோறும் ஒன்று என்ற ரீதியில் களமிறக்கினாலென்ன ? என்ற நினைப்பு கூட என்னுள் நிழலாடியிருந்தது ! போனெல்லி வெளியிடும் வேகத்திலிருந்து வெறும் ஒரு டஜன் வித்தியாசத்தில் நாமும் வால் பிடித்துப் பயணித்தது போலிருக்குமே என்ற நினைத்தேன் ! அப்புறம் நாலைந்து நாட்களின் அசைபோடலுக்கு அப்பாலிக்கா அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் - "இளம் அதிகாரி" அரங்கத்தையே தனதாக்கிக் கொண்டு அராஜகம் செய்கிறார் என்ற புகார்ப்பட்டியலை சீட்டாட்டத்தைப் பெயரிலேயே வைத்திருக்கும் நண்பரும் ; இன்ன பிற சேலம் ; கோபி ; பெங்களூரு நண்பர்களும் பாடிடக் கூடுமென்று தோன்றியதால் !  ஆனால் இத்தொடரின் முதல் 4 இதழ்களை மட்டுமேனும் சந்தா D-ல் நுழைப்பின் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு "சின்னவர்  கதை" சாத்தியமாகிடுமே என்று திட்டமிடலை மாற்றிக் கொண்டேன் ! தவிர, ஆரம்பம் முதலே நமது அடையாளமே variety தான் எனும் போது - ஒரே தொடரோடு பயணிப்பதும் உங்களுக்கு போர் அடித்திடக்கூடுமென்று நினைத்தேன் ! So ஜேம்ஸ் பாண்ட் ; AXA ; தோட்டா தேசம் ; ரிப் கிர்பி என களம் விரிவானது அதன் நீட்சியாகவே !

To cut a long story short - இளம் டெக்சின் முதல் 4 கதைகளின் ஒரிஜினல்களும் வந்து சேர்ந்தன  !! வேக வேகமாய் அவற்றை மின்னஞ்சல் மூலமாய் நமது இத்தாலிய மொழிபெயர்ப்பு அம்மணிக்கு அனுப்பச் செய்த கையோடு, சாவகாசமாய் கதைகளின் பக்கங்களைப் புரட்டிய போது தான் லைட்டாகப் புளியைக் கரைத்தது ! 62 / 64 பக்கங்களில் கதைகளில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அறிகுறியே தென்படவில்லை !  மாறாக ஒரு நெடும் சாகஸத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் 'சுபம்' போடப்பட்டு, அடுத்த புக்கில் அதன் தொடர்ச்சி ஓட்டமெடுக்கிறது என்பது சிறுகச் சிறுகப் புரிந்தது ! இத்தாலியில் ஒவ்வொரு மாத இடைவெளியில் இவற்றை இந்த பாணிகளில் படித்து ரசிப்பதில் வாசகர்கட்கு சிரமம் இருப்பதில்லை தான் ; ஆனால் நமக்கோ அது ஒத்து வராதே ? இவற்றை தனித்தனி இதழ்களாய் இத்தாலிய பாணியில் வெளியிட முயற்சிப்பது - இளம் டைகரின் ஒற்றை knot -ல் பயணிக்கும் ஆல்பங்களைப் பிரித்து வெளியிட்டது போலாகிடும் என்பது தெளிவாய்ப் புரிந்தது !! அதுவும் புதிதாய் ஒரு தடத்தில் இவற்றை வெளியிட நினைத்திருக்கையில் இந்த bits & pieces பாணியானது நிச்சயமாய் சுகப்படாது என்ற பீதி கலக்கியெடுத்தது ! இதற்கிடையே ஏற்கனவே டிசம்பரின் இதழ்களுள் "அடுத்த வெளியீடு" என்று Young டெக்சின் முதல் சாகசத்தை விளம்பரப்படுத்தி, அச்சிட்டு முடித்திருந்தோம் ! And "சூது கொல்லும்" இதழின் உள் அட்டையிலும் இந்த விளம்பரம் இடம்பிடித்திருந்தது மண்டைக்குள் ஓடியது !! "ஆஹா....மாற்றுத் திட்டமிடல் என்னவென்பதெல்லாமே அடுத்தது ; முதலில் இந்த விளம்பரங்கள் மீது ஸ்டிக்கரைப் போட்டு ஓட்டுங்க டீம்" என்றபடிக்கே யோசனைகளுக்குள் மூழ்கினேன் ! அதே கையோடு, இளம் டெக்சின் துவக்க சாகசமானது எத்தனை பக்கங்களில் முழுமையடைகின்றதோ - அதற்கேற்ப ஒரு முழு இதழாகத் திட்டமிட்டு எங்கேனும் வாகான ஸ்லாட்டில் நுழைப்பதென்று தீர்மானித்தேன்  ! ஆனால் சந்தா D-ல் காலியாகிடும் 4 ஸ்லாட்களை எவ்விதம் பூர்த்தி செய்வதென்ற முக்கிய வினா மட்டும் விடை கோரிக் காத்து நின்றது !

பொதுவாய் ஆண்டின் மித வேலைப்பளு நாட்களில் out of the syllabus தேடல்களுக்குள் தலைவிட்டுக் கிடப்பதும் ; 'எப்போதேனும் வெளியிட்டுக் கொள்ளலாம்' என்ற ரகத்திலான கதைகளை வாங்கி ஓசையின்றிச் சேமித்து வைப்பதும் உண்டு ! இது போன்ற மழைநாட்களில் குடையாக அக்கதைகள் பயன்படக்கூடுமே என்ற நம்பிக்கையில் தான் அந்தச் சேகரிப்பை வளர்த்து வருகிறேன் ! சரி....இந்த நொடியின் அவசரத் தேவையினைப் பூர்த்தி செய்திட ஏதேனும் கிட்டுகிறதா ? என்ற அவாவில் அந்தப் பேழையினுள் துளாவத் துவங்கிய முதல் நொடியில் என் கைகளில் சிக்கியது - ஒரு பழைய நண்பனின் கதைத் தொடரே ! இன்னமுமே உள்ளத்தினில் பாலகர்களாய் உலவிடும் நம் நண்பர்களில் ஒரு பகுதியினர் அதனைக் கடந்த நாலைந்து ஆண்டுகளாய் வேண்டி, விரும்பிக் , கோரி வருகின்றனர் ! அரை நிஜார் அணிவித்து அந்த உசரமான பாலகர்களை மறுக்கா பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிடும் பட்சத்தில், அங்கே  A for APPLE என்று டீச்சர் கற்பித்தால், இவர்களோ "A for ARCHIE" என்று தான் வாசிப்பார்கள் !! அத்தகைய அழும்பு செய்வோர் - அண்ணன் அதிமேதாவி ஆர்ச்சியின் பாசறையைச் சார்ந்தோராய் இருப்பது தானே இயல்பு ? Oh yes - நமது அந்நாட்களது ஜிகிடி தோஸ்தான இரும்பு மனிதன் ஆர்ச்சியின் புதுக் கதைகளுக்கான உரிமைகள் நம்மிடம் உள்ளன ! கி.நா. ; கடற்கொள்ளையர் கதைகள் ; ஹாரர் ; என்று வேறொரு லெவெலில் வண்டி தற்சமயமாய் ஓடிக்கொண்டிருக்கையில் - மறுக்காவும் ஒரு ரிவர்ஸ் கியரைப் போட்டு புய்ப்ப அலங்காரங்களைக் காதில், கழுத்தில் என்று சுற்றிக் கொள்வானேன் ? என்ற நினைப்பில் தான் இதை பற்றி வாய் திறக்காதே திரிந்தேன் ! புத்தக விழாக்கால சந்திப்புகளின் போது அண்ணாத்தே ஆர்ச்சியின் பாசறையினர் ஆதங்கமாய் வினவிடும் போதும் சிரித்து மழுப்பிடுவது வாடிக்கை ! ஆனால் தற்சமயமாய் light reading என்பதே களம் & எதிர்பாரா விதத்தில் கொஞ்சம் காலியிடம் உருவாகியுள்ளதெனும் போது சட்டித் தலையனைக் களமிறக்கினாலென்ன ? என்று தோன்றியது ! Maybe just 2 albums in சந்தா D ?

"இல்லீங்கோ ....மறுக்கா புய்ப்பச் சரங்களைக் காதிலே கோர்ப்பதாய் இருந்தால் நாங்க ஜார்கண்ட் பக்கமாய்க் குடி மாற உள்ளோம் !" என்று நீங்கள் தெறிப்பதாக இருப்பின் - no worries !! ஆர்ச்சிக்கு வேறேதேனும் pre-booking களமமைத்துக் கொள்ளலாம் - பின்னொரு நாளில் ! And தற்போதைய இந்த 4 காலி ஸ்லாட்களை வேறேதேனும் நார்மலான கதைகளைக் கொண்டு ரொப்பிடுவதும் கடினக்காரியமே அல்ல ! காரிகன் உள்ளார் கைவசம் ; AXA காத்திருக்கிறார் ஓரமாய் ; ஒய்யாரமாய்  !

On the contrary - ஆர்ச்சியின் வருகைக்கு "அட்ரா  சக்கை...அட்ரா சக்கை...!!" என்பதே உங்களின் ரியாக்ஷன்களாக இருப்பின் சந்தா D-ல் இந்தச் சிகப்பு  மண்டையனை சட்டென்று இறக்கி விடலாம் - 2 ஸ்லாட்களினை ஆக்ரமிக்க ! பாக்கி 2 ஸ்லாட்களில் ஒன்றை AXA-விற்கும் ; இன்னொன்றை maybe காரிகனுக்கும் தந்திடலாம் !

எதுவாகயிருப்பினும் - உங்களின் பெரும்பான்மையின் தீர்ப்பே இங்கு செயல்வடிவம் கண்டிடும் guys ! ஆகையால் சிரமம் பாராது உங்கள் வாக்குகளை பதிவிடுங்களேன் பின்னூட்ட வடிவில் ! And no டுபாக்கூர் வாக்குகள் ப்ளீஸ் !!

*** "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஆர்ச்சி வாழ்க !" என்றெண்ணுவோர் - "A" என்று மட்டும் பின்னூட்டமிட்டால் கூடப் போதும் !

*** "அய்யா...மிடிலே......வேண்டாமே !!" என்று ஈனஸ்வரத்தில் பதிவிடுவோர் "Z" என்று ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப் பதிந்தாலும் போதும் !

And நேர்ந்துள்ள இந்தக் குளறுபடிக்கு கரம் கூப்பிய மன்னிப்புக் கோருகிறேன் ! Sorry all....!!

டெக்ஸ் முதல் ஆல்பத்தினில் இடம்பிடிக்கவில்லை என்ற நொடியே - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ அங்கு களமிறக்கத் தயாரானேன் ! இதோ "பட்டாம்பூச்சிப் படலம்" இதழின் அட்டைப்பட முதற்பார்வை :
பொதுவாய் நாம் வண்ணத்தில் வெளியிடும் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளுக்கும், இத்தாலிய டெக்ஸ் கதைகளுக்கும் ஒரிஜினல் ராப்பர்கள் அம்சமாய் உண்டென்பதால் அவற்றை கொஞ்சமாய் மெருகேற்றி நம் டேஸ்டுக்கு ஏற்ப மாற்றிடுவது சுலபம் ! ஆனால் இந்த ஜேம்ஸ் பாண்ட் ; மாடஸ்தி பிளைசி போன்ற newspaper strips-களுக்கு அட்டைப்படங்களே லேது ; நாமாகத் தான் ரெடி செய்திட வேண்டும் ! And மூப்பு காரணமாய் நமது ஓவியர் மலையப்பன் out of order என்பதால் இந்த அட்டைப்பட உருவாக்கங்களுக்கொரு மாற்று ஏற்பாடு செய்திட ரொம்பவே நாக்குத் தள்ளிப் போனது ! ஆங்காங்கே கிட்டியோர் எல்லோருமே டிஜிட்டலில் படம் போடும் வல்லுனர்களாயிருக்க - அது நமக்கு சுகப்படாதே என்று தயங்கி நின்றேன் ! ஒரு மாதிரியாய் கடல் கடந்த அமெரிக்க மண்ணில் ஒரு ஓவியரைத் தேடிப்பிடிக்க சாத்தியமாகிட - நம் வேண்டுகோள்களுக்கேற்பப்  பணியாற்றி அழகாயொரு டிசைனை அனுப்பினார் ! அதனை நமது DTP கோகிலாவைக் கண்டு அப்பாலிக்கா கொஞ்சம் பட்டி-டிங்கேரிங் பார்த்த போது decent ஆனதொரு அட்டைப்படம் ரெடியாகி நிற்பது போல் பட்டது ! உங்களுக்கும் ரசிப்பின் - ஹேப்பி !! And here is a preview of the inner page :
இன்னமும் பிழைதிருத்தம் செய்தியா பக்கமிது ! 
இயன்றமட்டுக்கு நீட்டி முழக்கா வசன நடையைக் கையாள முயற்சித்தது மட்டுமன்றி, எழுத்துருவவிலுமே  (font) உங்களது அந்நாட்களது வாசிப்பினை நினைவூட்டும் ஸ்டைலை பின்பற்றவும் முயற்சித்துள்ளேன் ! Fingers crossed - உங்களின் வாசிப்பு களைகட்டிட !!

மலையாய்க் குவிந்து கிடைக்கும் பணிகளுக்கும் மூழ்கிட நான் நடையைக் கட்டுகிறேன் folks !! Have an awesome weekend !! See you around !! Bye for now !

Saturday, December 07, 2019

திரும்பியும் பார்க்கணும்லே ?!

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் "அந்தப்" பொழுதில் குஷியாய் நிற்கிறேன்...! "எந்தப்" பொழுது ? என்கிறீர்களா ?  டி-வியில் நிறையவே பார்த்திருப்பீர்களே....கோட் சூட்டையெல்லாம்  அந்து உருண்டைகளிலிருந்து தூசு தட்டி எடுத்து வந்து, சேரில் நடுநாயகமாக பந்தாவாய் அமர்ந்தபடிக்கே - "இந்தாண்டின் திரைப்படங்கள்" என்று அலசுவார்கள் அல்லவா ? அதே மாதிரியானதொரு வாய்ப்பு இந்த நொடியில் நேக்கு - "இந்தாண்டின் நமது இதழ்கள்" என்ற அலசல்களுக்குள் புகுந்திட ! என்ன ஒரே வித்தியாசம் - கல்யாணத்துக்கு வாங்கிய கோட்டுக்குள் இப்போது நுழைய முயற்சித்தால் தொந்தியின் விஸ்தீரணம் தடங்கலாய் இருப்பதால் - குளிருக்காகப் போட்டு நிற்கும் குரங்கு குல்லாயோடு அலசல் படலத்தை ஆரம்பிப்பதாகவுள்ளேன் !! So here goes :

ஜம்போவின் சீசன் ஒன்றின் ஓரிரு இதழ்களும் இந்தாண்டில் இடம்பிடித்திட, இரண்டாம் சீஸனின் சில பல இதழ்களும் இக்கட பாய் போட்டிருக்க - திடுமென நுழைந்த MAXI லயன் இன்னொருபுறமிருக்க, ஈரோட்டில் ஸ்பெஷல் இதழ்கள் காரமும், தித்திப்பும் சேர்த்திருக்க  - 2019-ன் மொத்த இதழ்களின் எண்ணிக்கை விபரம் இதோ :

**வண்ணத்தில் : 35

**கருப்பு-வெள்ளையில் : 13

**மொத்தப் பக்க எண்ணிக்கை : 3158 + 2554 = 5712 pages !!

'வச்சா குடுமி...அடிச்சா மொட்டை' என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லியோ - நமக்கு சிறப்பாகவே பொருந்தும் தானே ? வருஷத்துக்கே  நாலு புக் போட்ட நாளும் உண்டு ; மாசத்துக்கு நாலைப் போட்டுத் தாக்கும் நாளும் உண்டு எனும் போது - இந்த இரண்டாம் வருகையின் வேகத்துக்குப் பின்னணிகள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்திட ஓரிரு நிமிடங்களை செலவிடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் !   "மாதம் ஒன்று - கலக்கல் கலரில்" என்று 2012 -ல் துவங்கிய template எத்தனை காலத்துக்கு நீடிக்குமோ ? என்ற கேள்வி என்னுள் மாத்திரமன்றி, உங்களுள்ளேயும் இருந்திருக்கும் என்பதில் no ரகசியம்ஸ் ! சரி, முடிந்தமட்டுக்கு வண்டியை ஓட்டுவோம் என்று பயணித்தவனுக்கு சிறுகச் சிறுக சிறகுகளைத் தந்தது உங்களின் நிபந்தனைகளற்ற அன்பும், காமிக்ஸ் காதலுமே !  இங்கே வாசிக்கும் வட்டம் சின்னதாயிருப்பினும், விட்டம் கிடுகிடுக்கும்  விசில்கள் கிட்டுவது சாத்தியமே என்பது புரியத் துவங்கிய போது - அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டது ! And here we are - ஏழு ஆண்டுகளில் சுமார் 275 புக்குகள் என்ற புள்ளிவிபரத்தோடு !! இந்த 84 மாதங்களில் ஏகமாய் அனுபவங்கள், நினைவுகள், பணிகள், பல்டிக்கள் என்றெல்லாம் அரங்கேறியுள்ள போதிலும், நடப்பாண்டின் 12 மாதங்கள் தந்துள்ள பயண அனுபவம் கொஞ்சம் ஸ்பெஷல் என்றே சொல்லுவேன் ! "எலே...பீத்திக்காதே ! சொதப்புனதை எல்லாம் காந்தி கணக்குலேயா எழுதிக்கிறது ?"  என்ற அன்பொழுகும் மைண்ட்வாய்ஸ்களும் ஒலிப்பது கேட்காதில்லை ! ஆனால் "ஹிட்ஸ் vs சொதப்ஸ்" என்ற போட்டியில் முன்னது முந்தி நிற்பது போலத் தெரிவதால் 2019 மீது கொஞ்சம் கூடுதல் வாஞ்சை !! 

ஆண்டின் ஒவ்வொரு இதழையும் நினைவு கூர்ந்து அலசும் வேலையை அந்தந்த மாதங்களிலேயே நீங்களும் செய்துள்ளீர்கள் ; நானும் செய்துள்ளேன் என்ற மட்டில் அதே ரூட்டில் இன்னொருக்கா பயணிக்கப் போவதில்லை ! மாறாக - பணிகளினூடே பயணித்த வேளையினில் நினைவுச் சுவடுகளாய் எதையேனும் விட்டுச் சென்ற இதழ்களைப் பற்றியும் ; இந்தாண்டின் சில memorable moments பற்றியும்  அளவளாவ நினைத்தேன் ! As memories go - இந்தாண்டின் ஆரம்பமே தோர்கலின்புண்ணியத்தில் நெட்டுக்கா take off ஆனது மறக்கவியலா ஒரு அனுபவம் ! அது பற்றி நிறையவே அலசி, ஆராய்ந்து தொங்கப் போட்டு விட்டோம் என்ற போதிலும் இன்னமும் என்னுள் ரீங்காரமிடும் சிந்தனை ஒன்றே !! அது தான் - ஒரு குட்டியூண்டு வாசக வட்டமான நாம் அந்த ஸ்பைடர் ; ஆர்ச்சி நாட்களிலிருந்து எத்தனை தொலைவு பயணித்துள்ளோம் என்ற புரிதல் !! Oh yes - இன்னமுமே சட்டித் தலையனுக்கும் , வலைமன்னனுக்கும் கொடிப் பிடிக்க நாம் தயாரே - yet ஒரு ஆழமான / மாறுபட்ட களம் எதிர்நோக்கும் போது நமது ரியாக்ஷன்ஸ் simply stupendous !!

சந்தேகமின்றி நடப்பாண்டின் big story - பராகுடா தொடரின் தாக்கம் சார்ந்ததே ! சொல்லப்போனால் நிறைய வாசகர்களின் ஏடுகளில் இந்தாண்டின் டாப் ஆல்பமாய்த் தேர்வாகக் கூடிய ஆற்றல் இந்தக் கடற்கொள்ளையர் கதைக்கே என்று தோன்றுகிறது ! இந்தத் தொடரின் பின்னணியில் பணியாற்றிய போது எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! கார்ட்டூன்களில் கூட லாஜிக் ; ஒரு நம்பக்கூடிய கதை இருந்தால் தேவலாமென்று கருதிடும் வட்டம் நாம் ! So கணிசமான புய்ப்பச் சுற்றல் க்ளைமாக்சில் அரங்கேறுவதையும் சரி ; கதையின் நடுவே  தமிழ் சினிமா பாணியிலான சென்ட்டிமென்ட் ; காதல் ; காமெடி இழையோடுவதையும் சரி - நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற டர் என்னுள் நிறையவே இருந்தது ! ஆனால் கதை சொன்ன அந்த அசாத்திய பாணிக்கும், சித்திரங்களின் அதகளத்திற்கும் நாம் மயங்காது போக மாட்டோம் என்ற நம்பிக்கையே என்னை உந்தித் தள்ளியது ! கிராபிக் நாவல்கள் என்றதொரு தனித் தடம் மாத்திரம் இல்லையெனில் இத்தகைய கதைகளைக் களமிறக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்திருக்குமா ? என்பது சந்தேகமே !! An experience to savour !!

கிராபிக் நாவல் வரிசையிலேயே இன்னொரு இதழும் சுவாரஸ்யமான அலசல்களை ஆண்டின் முற்பகுதியினில் உருவாக்கியதும் இங்கே நினைவு கூர்ந்திட லாயக்கான விஷயம் என்பேன் ! 'முடிவிலா மூடுபனி' தான் நான் குறிப்பிடும் அந்த இதழ் ! இதனை மொழிபெயர்க்கும் சமயம் என்னை தீண்டிய சிந்தனை இன்னமுமே நினைவில் நிற்கிறது ! பொதுவாய் நாம் focus செய்து வந்துள்ள அந்த ஆக்ஷன் ; டிடெக்டிவ் & கௌபாய் ஜானர்களில் கதைக்களங்கள் எல்லாமே  உலகின் பெருநகரங்களையோ ; வன்மேற்கின் பாலைகளையோ சுற்றிச் சுற்றி இருப்பதே வாடிக்கை ! நியூயார்க்கும் ; பாரிஸும் ; இலண்டனும் ; அரிஸோனாவும் ; டெக்சாசும் நமக்கு கொட்டாம்பட்டி ; சிலுக்குவார்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயம் தானே guys ? அதே போல கௌபாய் உலகின் மீதான அந்த romance காரணமாய் வரலாற்றின் அந்தப் பக்கங்களைப் புரட்ட சம்மதிக்கும் நாம், பாக்கி நேரங்களில் சமகாலப் படைப்புகளைத் தாண்டி வேறெதெற்கும் வாயிலைத் திறந்து வைத்திருந்ததில்லை ! உலகப் போர் பக்கமாய் வண்டியைத் திருப்ப முனைந்தால் கூட - "உன் அக்கப்போர் தாங்கலைப்பா சாமி !!' என்று மண்டையில் குட்டு விழுவது தானே வாடிக்கை ?!  ஆனால் இன்றைக்கோ - ஒரு பிரெஞ்சுக் குக்கிராமப் பின்னணியோடு ; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பான புராதனத்தைக் கண்முன்னே கொணரும் கதைகளைக் கூட வரவேற்கும் பாங்கு நம்மிடையே துளிர்விட்டிருப்பதை அகன்ற விழிகளோடு ரசித்தேன் ! Winds of change...!!

அதே நேரம் இன்னொரு வித்தியாசக் காலத்தைக் / களத்தைக் கண்முன்னே காட்டும் முயற்சியைத் தெளியத் தெளிய வைத்துச் சாத்தியதுமே இந்தாண்டெனும் வானவில்லின் இன்னொரு பரிமாணம் ! அது தான் 'ஜெரெமியா' தொடருக்கு எதிராய் நீங்கள் வழங்கியுள்ள, சந்தேகங்களுக்கு இடமிலா thumbs down ! எதிர்காலம் ; ஒரு மகாயுத்தத்துக்குப் பின்பான சேதம் கண்ட பூமி ; அதனில் உலவும் இரு நாடோடி இளைஞர்களின் யதார்த்த சாகசங்கள் எனும் போது நிச்சயமாய் நமக்கு ரசித்திருக்க வேண்டும் தான் ! ஆனால் இனம்சொல்ல இயலா ஏதோவொன்று அந்தக் கதைகளில் குறைவதாக எண்ணம் என்னையுமே ஆட்டிப்படைக்க - உங்களின்அழுத்தமான  "NO !!" க்களை நோண்டிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு சாத்தியப்படவில்லை !! Maybe தொடரும் ஆல்பங்களில்  முத்திரை பதிக்கும் கதைகளோடு ஜெரெமியா கோலோச்சக்கூடுமோ என்னவோ - இப்போதைக்கு நாம் விலகி நிற்க தீர்மானித்ததும் இந்தாண்டின் ஒரு முக்கிய தருணம் - என்னளவில் !

நடப்பாண்டின் சொதப்ப்ஸ் பற்றிய தலைப்பில் லயித்திருக்கும் சமயம் முடி நீண்ட ஜானதன் கார்ட்லெண்டை பற்றிப் பேசாது போக இயலாதே !! சில பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடையே தலைகாட்டியிருக்க வேண்டியவர் இவர் ! ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திட 'கமான்சே'  முந்திக் கொள்ள - கார்ட்லெண்ட் பின்தங்கியிருந்தார் ! சரி, லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் சாகசம் செய்யட்டுமே என்ற எண்ணத்தில் இவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டேன் ! என் பாணியிலேயே ரொம்பச் சங்கடமானதொரு பகுதி ஒன்று உண்டென்றால் - அது ஓமக்குச்சி நரசிம்மன் என்பது புலனான பின்னேயும் மென்று, விழுங்கி, அவரை WWF பயில்வானாய்ச் சித்தரிக்க முயன்றிட வேண்டிய அவசியத்தையே சொல்வேன் ! சில சுமார் கதைகளின்  எடிட்டிங்கினுள் புகுந்திடும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம்  - புது ஆத்துக்காரி செய்த உப்பும், புளிப்பும்  ததும்பும் பாயாசத்தைக்  குடித்தது  போல பேஸ்தடித்துக்  கிடப்பேன் தான் !! ஆனால் "ஆங்...ஜுப்பரப்ப்பு !! இன்னா டேஸ்டு ; இன்னா மணம் !! பேஷா இன்னொரு கிளாஸ் குடிக்கலாமே !!" என்று பில்டப் தரும் கட்டாயம் தவிர்க்க இயலாது போகும் !! அந்தக் கதைகளைப் படித்த பிற்பாடு ஆளாளுக்கு ரூம் போட்டுத் திட்டுவீர்கள் என்பதும் தெரிந்திருந்தாலும் - வேறு வழி இராது எனக்கு ! குளிர்காலக் குற்றங்கள் ; நீரில்லை.நிலமில்லை....நியூட்டனின் புது உலகம் ...விசித்திர உலகமிது (மார்ட்டின்) - டக்கென்று இந்த category-ல் நினைவுக்கு வருகின்றன ! ஏதேதோ காரணங்களின் பொருட்டு, தேர்வுகளின் சமயம் 24 காரட் தங்கமாய்த் தோற்றம் தரும் கதைகளானவை - கிட்டக்கே போய்ப் பார்க்கும் சமயம் 'கல்யாணி கவரிங்' ஆகப் பல்லிளிக்கும் மாயையை தவிர்க்க நானும் ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறேன் guys !! Anyways தெரிந்தே கூசாமல் புளுகியுள்ளமைக்கு சாரி guys !!

நடப்பாண்டினில் 'தல' கூட சில பல so so சாகசங்களில் தலைக்காட்டியதையும் மறுப்பதற்கில்லை !! "சாத்தானின் சீடர்கள்" இதழை ஜனவரிக்கென அவசரம் அவசரமாய்த் தயாரிக்க முனைந்த போது அந்நாட்களது ஹீரோ ஜெய்ஷ்ங்கரும், வில்லன் அசோகனும் மனக்கண்ணில் மாறி மாறி ஆஜராகி, நிஜக்கண்களை வேர்க்கச் செய்ததும் தான் நடந்தது ! அந்நாட்களின் 'துணிவே துணை' படத்தில் டெக்ஸுக்கு ஒரு கவுரவ ரோல் தந்தது போலான கதைக்களம், நிச்சயமாய் உங்களை இம்ப்ரெஸ் செய்திடாது என்பதை யூகிக்க நான் கில்லாடியாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லையே ?! அதே போல வண்ண மறுபதிப்பாய் வெளியான "வைகிங் தீவு மர்மம்" கூட என் கேசமிலா கபாலத்தைக் காயச்  செய்தது ! பற்றாக்குறைக்கு அந்நாட்களில் black & white-ல் வெளியான இந்த இதழை செம சுமாரானதொரு மொழிபெயர்ப்பில் நாம் சிலாகித்து ரசித்திருப்பதை நினைவு கூர்ந்திட்ட போது அழுகாச்சி அழுகாச்சியாய் வந்தது !

Same அழுகாச்சி - same காரணம் - கேப்டன் பிரின்சின் "மரண வைரங்கள்" ப்ளஸ் MAXI லயனின் "பழி வாங்கும் பாவை" இதழ்களில்  தொடர்ந்ததைக் குறிப்பிட்டால் தேவலாம் என்றும்  நினைக்கிறேன் ! ஒரிஜினலாய் பாக்கெட் சைசில் வெளியாகிய இந்த 2 இதழ்களுமே அந்நாட்களில் runaway hits ! ஆனால் இன்றைக்கோ ஏகப்பட்ட மாஸான கதைகளைப் படித்தான பிற்பாடு இவை ஒரு மாற்றுக் குறைவாய்த் தென்பட்டது எனக்கு மட்டும் தானா - no idea !! ஆனால் எது எப்படியோ - இந்தாண்டின் விற்பனையில் தெறிக்கும் வேகம் காட்டிய வகையில் MAXI லயனின் இரு இதழ்களும் அற்புதமான ஆரம்பங்கள் ! இந்த இதழ்களின் திட்டமிடல்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் என்பதால் அரைத்த அதே மாவையே மறுக்கா அரைக்கப் ப்ரியமில்லை ! மாறாக - இங்கே ஒரேயொரு கேள்வி மட்டும் !! 2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? அவ்விதம் நுழைப்பதாயின் - நீங்கள் பார்த்திட விரும்பும் சாகசம் எதுவாக இருக்குமோ ?

MAXI லயனோடு கைக்கோர்த்துக் களம் கண்ட "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" நடப்பாண்டின் TOP இதழ் என்ற போட்டியில்  வேகமாய் ஓடிடும் வேட்பாளர் என்பதிலும் no secrets ! இந்த இதழும் கூட  நமது எக்கச்சக்க அலசல்களுக்கு ஏற்கனவே உட்பட்டுள்ளது என்பதால் - அது விட்டுச் சென்றுள்ள நினைவுகளை மாத்திரமே கிளறிப் பார்க்க விழைகிறேன் ! நமக்குத் துளியும் தொடர்பிலா ஒரு தேசத்தின் துப்பாக்கிக் கலாச்சாரம் ; அதற்கு அனுமதி தந்திடும் அரசியல் சாசனம் ; அதனில் அவசியமாகிடும் திருத்தங்கள் - என்பனவே ஒரு 4 பாக ஆல்பத்தின் கதைக்கருவாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நமது வாசிப்புக்களத்தில் அமைந்திருப்பின், நமது ரியாக்ஷன்கள் எவ்விதம் இருந்திருக்குமோ ? என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன் ? பற்றாக்குறைக்கு இங்கே அதிரடி ஹீரோ என்று யாரும் கிடையாது ; கோமாளிகள் போன்ற வடிவமைப்பில் வலம் வந்திடும் கதை மாந்தர்கள் மாத்திரமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் !! அத்தகையதொரு ஆக்கத்தை நாம் கொண்டாடியிருக்கும் வாய்ப்புகள் பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் என்று தான் இருந்திருக்கும் ! ஆனால் இன்றைக்கோ  அதனை ஹார்டகவரோடு, ஒரு மிக முக்கிய தருணத்தின் ஸ்பெஷல் இதழாய் வெளியிடும் தகிரியம் எனக்கு சாத்தியப்படுகிறதெனில் - நாற்கால்ப் பாய்ச்சலில் பயணித்திருக்கும் நமது ரசனைகளை தவிர்த்து வேறெதனை சிலாகிப்பது ? பிஸ்டலுக்குப் பிரியாவிடை - நம் பயணத்தின் ஒரு HUGE மைல்கல் !

பி.பி.வி. இதழோடு வெளியான "நித்தமொரு யுத்தம்" கூட மாமூலான stereotypes-களை சன்னமாய் முறியடித்த சாகசம் என்பேன் ! ஆக்ஷன் பின்னணியில் மெலிதான உணர்வுகளோடு பயணித்த இந்த DAMOCLES டீமானது கண்டுள்ள வெற்றி - நம் காமிக்ஸ் வாசிப்புகளின் பன்முகத்தன்மைக்கு இன்னொரு சான்று ! 'நாலு சாத்து சாத்தாமல் இந்தப் பாப்பா என்னமோ வசனமா பேசிட்டே திரியுதே ?" என்ற கடுப்ஸ் காட்டாது அழகாய்க் கதையோடு ஒன்றிட நம் அனைவருக்கும் இயன்றுள்ளது - "காமிக்ஸ் வாசகாள்ஸ் 2.0" எத்தனை மாறுபட்டவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்திடும் சமாச்சாரமாய் நான் பார்த்திடுகிறேன் !

2019-ன் சற்றே கவலையான legacy ஒன்றுள்ளதெனில் அது இன்றைய கார்ட்டூன் வறட்சியினை அத்தனை பெரியதொரு சமாச்சாரமாய்ப் பெரும்பான்மை பார்த்திருக்கா அந்தப் பாங்கையே குறிப்பிடுவேன் ! ஆண்டுக்கு ஆறே கார்ட்டூன்கள் என்ற தீர்மானத்தை "எடுத்தேன்" என்பதை விட - "எடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்" என்பதே நிஜமாக இருந்திருக்கும் ! இந்தத் தீர்மானம் அமலாகும் பொழுதினில் போராட்டங்கள் வெடிக்கும் ; சாலைகளில் உண்ணும் விரதங்கள் அரங்கேறும் ; வேப்பிலையினை மட்டுமே உடுப்பாக்கி தலீவரை உருட்டி விட்டு கண்டனங்களைப் பதிவு செய்வீர்களென்றெல்லாம் எதிர்பார்த்தேன் ! ஆனால் ஒரு இக்ளியூண்டு "கார்ட்டூன் காதலர் கும்பலின்" சன்னமான வருத்தக்குரல்களைத் தாண்டி - மூச் காட்டக் கூட  நாதியின்றிப் போனது சோகத்திலும் சோகம் ! கபாப் ; பீட்சா ; டக்கிலோ என்று ஆண்டின் வித விதமான பதார்த்தங்களின் லயிப்பில், சிம்பிளான கேசரியின் சுவையை அவ்வளவாய் யாருமே மிஸ் செய்திடவில்லை எனும் போது - தொடரவுள்ள ஆண்டுக்குமே அதனையே template ஆக்கிடும் சூழலே பலனானது ! இதோ - இந்த நவம்பரின் ஆன்லைன் ஆர்டர்களை பார்த்தால் கூட  - கேரட் மீசைக்காரர் நீங்கலாய் பாக்கி இதழ்கள் பெரும்பான்மையான ஆர்டர்களில் இடம் பிடித்திருப்பது புலனாகிறது ! பெருமூச்சு விட்டபடிக்கே கல்யாண வீட்டுப் பந்திகளில் தான் கேசரிகளை ஒரு பிடி பிடிக்க முடிகிறது இப்போதெல்லாம் !! Truly sad..!!

நடப்பாண்டின் இன்னொரு அதிரடி ஹிட் - வெகு சமீபத்தைய "தீபாவளி மலர்" ! 'தல' வழிநடத்த - போனெல்லியின் இன்ன பிற நாயக / நாயகியர் செய்த அதிரடிகள் ஒற்றை குண்டு புக்காகிடும் போது ரகளைகளுக்குப் பஞ்சமிலாது போய் விடுகிறது ! அதிலும் ஜூலியா + டைலன் டாக் version 2.0 சாதித்துக் காட்டியது சூப்பர் சந்தோஷ நொடிகள் ! இங்கு இடம்பிடித்திருந்த டெக்ஸ் & மார்ட்டின் இன்னமும் ஒரேயொரு மாற்றுக் கூடுதலாய் ஜொலித்திருப்பின் - கச்சேரி இன்னமுமே களை கட்டியிருக்கும் !

நடப்பாண்டின் இன்னொரு highlight தருணமாய் நான் நினைத்தது அகஸ்மாத்தாய் மூன்று மெகா இதழ்கள் ஒரே மாதத்தில் துண்டை விரிக்க நேர்ந்த மே மாதத்தை ! ட்யுராங்கோவின் tight த்ரில்லர் ; தி Lone ரேஞ்சர் + பராகுடா க்ளைமாக்ஸ் பாகம் என 3 பயில்வான்கள் ஒருசேர ஆஜராகிடும் பொழுதில் உடல் சுகவீனமும் என்னைத் தேடி வந்திருந்தது ! ஆஸ்பத்திரிவாசம் உறுதி என்று ஊர்ஜிதம் ஆன நொடியில் இந்த 3 இதழ்களுக்குள்ளும் பணியாற்றும் பிசாசு போன்ற உத்வேகத்தைத் தந்த பெரும் தேவன் மனிடோவை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது ! மேஜை முழுக்க கலவையாய் மூன்று இதழ்களையும் பரப்பிப் போட்டுக் கொண்டு ஏப்ரலின் துவக்கத்தில் அடித்த கூத்து - one for the memories !! அதுவும் பராகுடாவின் க்ளைமாக்ஸ் பாகம் + தனியொருவன் இதழ்களின் மொத்த மொழிபெயர்ப்பையும் மூன்றோ / நான்கோ நாட்களில் நிறைவு செய்ததை மண்டையைச் சொரிந்தபடிக்கே நினைத்துப் பார்க்கிறேன்  !
As dark as they come - என்பதற்கு அடையாளமாய் இந்தாண்டினில் நின்ற 2 கிராபிக் நாவல்களுமே பேனா பிடித்த தருணங்களில் ரொம்பவே வித்தியாசமான அனுபவங்களைத் தந்தன எனக்கு ! "நித்திரை மறந்த நியூயார்க்" & "கதை சொல்லும் கானகம்" - இந்த 2 கதைகளையும் தேர்வு செய்த போதே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது - இங்கே இறுக்கமும், இருளுமே கோலோச்சப் போகின்றன என்று ! And இரு கதைகளிலுமே காலத்தில் முன்னே & பின்னே பயணிக்கும் கதை சொல்லும் யுக்தி கையாளப்பட்டிருக்க - இத்தாலிய மொழியிலிருந்து மாற்றம் கண்டான அந்த ஆங்கில ஸ்கிரிப்ட்களையும், கூகுள் தேடல்களையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றியது செம வித்தியாச அனுபவம் ! இரு கதைகளுக்குமே எந்த மாதிரியான தொனியில் வசன நடையினை உருவாக்கினால் ஒரிஜினலுக்கு நியாயம் செய்தது போலிருக்கும் என்பதை யூகிக்கவே மொக்கை போட்டேன் ! And தற்போதைய தமிழாக்கங்களில் எனக்கு நூறு சதவிகிதம் திருப்தி என்றெல்லாம் இல்லையெனினும் - அந்த இருண்ட களங்களுக்குள் தட்டுத் தடுமாறி பணியாற்றிய ராப்பொழுதுகளை அத்தனை சீக்கிரத்தில் மறக்க மாட்டேன் தான் !

இந்தாண்டின் pleasant surprises பட்டியலில் ஜூலியா ; டைலன் தவிர்த்து ட்ரெண்டுக்கும் ஒரு இடமுண்டு என்பேன் ! "சாலையெலாம் ஜ்வாலைகளே' ஹிட்டடிக்கும் வரையிலும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரின் நம்மிடையிலான எதிர்காலம் சின்னதொரு கேள்விக்குறியோடே தொங்கிக்கொண்டிருந்தது ! ஆனால் நடப்பாண்டின் 2 ட்ரெண்ட் சாகசங்களும் செம decent என்ற விதத்தில் இவரை நம்மிடையே ஒரு நிரந்தரமாக்கியுள்ளன !!

"நிரந்தரம்" எனும் போது - நம்மிடையே தற்சமயம் குடிகொண்டுள்ள கிராபிக் நாவல் காதலையும் அந்த "நிரந்தர' பட்டியலினுள் நுழைக்கலாம் என்றே தோன்றுகிறது -  "இருளின் ராஜ்யத்தில்" (அண்டர்டேக்கர்) + "வஞ்சம் மறப்பதில்லை"  இதழ்களின் வெற்றியினைப் பார்க்கும் போது !! இரண்டுமே நேர்கோட்டுக் கதைகள் தான் என்றாலும், கதை சொன்ன பாணியினில் இரு ஆல்பங்களும் மிரட்டியிருந்தது - made for awesome reading !! "வஞ்சம் மறப்பதில்லை" இதழின் அந்த painted சித்திர பாணிகள் கூடுதலாய் ஒரு ப்ளஸ் தானன்றோ ? அந்த இரத்தப் பொரியல் சற்றே தூக்கலான கோங்குராக் காரமாய்த் தென்பட்டிருக்கலாம் தான் - ஆனால் சில தருணங்களில் காரமும் நலம் தான் என்பதை தெலுங்கானா போலீசார் தான் காட்டு காட்டென்று காட்டியுள்ளனரே ?!! "வஞ்சம் மறப்பதில்லை" என்பதைத் தான் மனசுக்குள் சொல்லிக்கொள்ளத் தோன்றியது செய்தியைப் படித்த போது !!

`லுக்கி லூக்கின் ரெகுலர் சாகசங்கள் ; அவரது not so regular சாகசம் (லக்கி லூக்கைச் சுட்டது யார் ?") ; ப்ளூகோட்   பட்டாளம் ; சிக் பில் & கோ. ; க்ளிப்டன் என்று இந்தாண்டை light ஆக்கிட உதவிய சில பல கார்ட்டூன் படலங்களும் நினைவில் ஓடுகின்றன !! அந்த சந்தோஷ நினைவுகளோடே ஓராண்டுக்கு விடை தந்திட எண்ணுகிறேன்  - உங்களிடம் எப்போதும் போல் சில கேள்விகளை முன்வைத்தபடிக்கு !! அதற்கு முன்பாய் ஒரு thanksgiving படலம் பாக்கியுள்ளதல்லவா ? என்ன தான் 'அமெரிக்கால சொன்னாகோ...ஆப்ரிக்காலே சொன்னாகோ...சப்பான்லே சொன்னாகோ ' என்று நான் கூரையில் ஏறி நின்று கூவினாலும், அவற்றையெல்லாம்  நிதானமாய்ப் பரிசீலித்து ; படித்து ; ரசித்து ; சிலாகித்து ; குட்ட வேண்டிய நேரங்களில் குட்டி ; கைபிடித்துத் தூக்கி விட வேண்டிய வேளைகளில் தூக்கி விட்டு அசாத்தியங்களை சாத்தியமாக்கிக் காட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் yet another பயண ஆண்டின் இறுதியில் கரம் கூப்பிய நன்றிகள் folks !! நீரின்றி இங்கு எதுமில்லை....நீவிரின்றியும் தான் !! Thanks a ton & more...!!

கேள்விகள் இதோ :

1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?

2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?

3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?

4.  உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?

5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?

6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?

Bye all...இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் - ஜனவரியின் "மேக் & ஜாக்" கார்ட்டூனுக்குள்ளும், ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படல"த்தினுள்ளும் கால்பதித்திட ! அடுத்த ஞாயிறின் பதிவில் 2019-ன் எனது ஜாலியான தருணங்கள் பற்றிப் பார்த்த கையோடு இன்னொரு ஜாலியான செய்தியையும் சொல்ல முயற்சிக்கிறேனே !! See you around !! Have a breezy weekend all !!

And சந்தாவினில் இணைந்திடவோ ; புதிப்பிக்கவோ கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?