நண்பர்களே,
வணக்கம் ! மாதத்தின் இரண்டாம் தேதியே....! ஆனால் அதற்குள் நவம்பரின் இதழ்கள் வெளியாகி ஒரு யுகம் ஆனது போலான உணர்வு எனக்கு ! இன்னமும் கடைகளில் வாங்கிடும் வாசகர்களின் கைகளுக்கு புக் கிடைத்திருக்காதெனும் போது எனது அலசல்களை இப்போதே முன்வைப்பதும் பொருத்தமாகயிராது ! So எதைப் பற்றி எழுதுவதோ என்ற ரோசனை மெதுவாய் எட்டிப் பார்த்தது ! மறுக்கா துபாய் போன கதை...மறுக்கா உசிலம்பட்டி போன கதை என்று எதையாச்சும் அவிழ்த்து விடணுமோ ? என்று மோவாயை தடவிக்கொண்டிருந்த போது தான் அந்த மின்னஞ்சல் வந்து சேர்ந்தது ! சுவாரஸ்யமானதாக இருந்ததால் அதனை உங்களோடு பகிர்வதில் தவறிராதென்று நினைத்தேன் ! தவிர, இதே போன்ற சிந்தனைகள் கொண்ட நண்பர்களும் இங்கு (மௌனமாய்) இருப்பின், அவர்கட்கும் பதில் சொன்னது போலிருக்குமே என்று நினைத்தேன் ! இதோ அதன் முக்கிய வரிகள் :
"உலகெங்கும் காமிக்ஸ் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் நிலையில் நாம் டெக்ஸையே கட்டி அழுவானேன் ? பற்றாக்குறைக்கு இப்போது பல் போன ஜேம்ஸ் பாண்ட் 007-ஆ ? ஏகப்பட்ட புதுப்புது கதைகளை பற்றி நீங்களே அவ்வப்போது முன்னோட்டம்லாம் தந்துள்ளீர்கள் ; அதில் எதையாச்சும் உள்ளே நுழைப்பதற்குப் பதிலாக அரைத்த மாவையே அரைப்பானேன் ?! இதில் உங்களை மட்டும் குறை சொல்லமாட்டேன் ; ஜேம்ஸ் பாண்ட் என்ற உடனேயே இங்கே விசில் பறக்குதே ! வாசகர்கள் கேட்டதைத் தான் தருகிறீர்கள் என்று புரிகிறது, ஆனாலும் புதுசாய் வரக்கூடிய கதைகளுக்கு இந்தக் கிழட்டு ஹீரோக்கள் கேட் போடுவதில் வருத்தம் ! அதற்காக நான் டெக்ஸ் பிடிக்காதவன் இல்லை, நானும் அவருக்கு அடிமையே ! இருந்தாலும் ஒரு நப்பாசை !" என்ற ரீதியில் செல்கிறது !
ஏற்கனவே அட்டவணை வெளியான வேளையிலேயே நண்பர் J ப்ளஸ் ஓரிருவர் இதே ரீதியில் இங்கே எழுதியிருந்தது நினைவுள்ளது ! ஆனால் அவற்றிற்கு விரிவாய் பதில் சொல்ல நேரம் இருந்திருக்கவில்லை அப்போது ! So here goes :
ஒரு மாயையைக் கொஞ்சமே கொஞ்சமாய் உடைத்திட அனுமதியுங்களேன் guys !
:"அங்கே" ஆயிரமாயிரமாய் காமிக்ஸ் கொட்டிக் கிடப்பதென்னவோ நிஜம் தான் ; துளி கூட அதனில் மாற்றுக கருத்தே கிடையாது ! ஆனால் நமக்கு ஏற்புடையவற்றின் சதவிகிதம் அவற்றுள் எத்தனை என்பதில் தான் சிக்கலே ! அமெரிக்காவெனும் உலக காமிக்ஸ் சூப்பர்மார்க்கெட்டினுள் எட்டிப் பார்த்தால் அங்கு கோலோச்சும் முக்காலே மூன்றுவீசத்தினர் சூப்பர் ஹீரோக்களே ! BATMAN போன்ற மெகா ஸ்டார்கள் நம் எட்டும் எல்லைகளைத் தாண்டிய உச்சத்தில் இருப்பதால் அவரைப் பராக்கு மட்டுமே பார்க்க முடிகிறது ! அவர் நீங்கலாய் அங்கே அதகளம் செய்துவரும் இதர சூப்பர் நாயகர்களுக்கும் நமது ரசனைகளுக்கும் எத்தனாம் பொருத்தமென்று யோசிக்க ரொம்ப நேரம் தேவையே படுவதில்லை ! வெள்ளித்திரையில் மெர்சலூட்டும் X MEN ; AVENGERS இத்யாதியினரை காமிக்சில் நாம் ரசிக்க ரொம்பவே மாறிட வேண்டும் நம் ரசனைகளின் மீட்டர்களில் ! அட...சூப்பர் நாயகர்களை விட்டுத் தள்ளிவிட்டு ரெகுலரான ஆக்ஷன் நாயகர்களை பரிசீலனை செய்வோமே என்று சமீபமாய் ஹாலிவுட் திரைப்படமாக ஹிட்டடித்த JOHN WICK -ன் காமிக்ஸ் வார்ப்பினை ஆவலோடு பரிசீலித்தேன் ! ஆனால் இன்றைய நமது எதிர்பார்ப்புகளுக்கு அவர் தீனி போடமாட்ட்டாரென்றே தோன்றியது ; நிறைய action sequences ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்திட - 22 பக்கங்கள் கொண்டதொரு பாகத்தை ஐந்தே நிமிடங்களில் புரட்டி முடிக்க முடிந்தது ! So உலகின் டாப் காமிக்ஸ் மார்க்கெட்டினுள் நமக்கொரு பெரும் களம் காத்திருப்பதாய் தோன்றிடவில்லை ! At least என் பார்வையினில் !
அங்கிருந்து நேராக உலகின் இரண்டாம் மெகா மார்க்கெட்டான ஜப்பான் பக்கமாய் கவனத்தைத் திருப்பினால் "மங்கா...மக்கா !!" என்று தெறிப்பது புரிகிறது ! அந்த ரசனைகளுக்கு ; அந்தக் கதை பாணிகளுக்கு ; சித்திர பாணிகளுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் பரிச்சயம் கொண்டிட நிறையவே முயற்சிகள் தேவைப்படும் என்பதுமே புரிகிறது ! So அங்கிருந்து உலகின் மூன்றாம் பெரிய மார்க்கெட்டான பிரான்க்கோ-பெல்ஜிய தளம் பக்கமாய்ப் பாய முற்பட்டால் - அங்குள்ள scenario இதுதான் !
பிரெஞ்சில் மட்டும் குறைந்தது 20+ஓரளவுக்குப் பெரிய காமிக்ஸ் பதிப்பகங்கள் உள்ளன ! அவர்களின் முக்கால்வாசிப் பேரை எனக்குத் தெரியும் ! இந்தியா போன்றொரு புது மார்க்கெட்டில் தங்களின் ஆக்கங்கள் வெளியானால் மிகச் சந்தோஷம் என்பதே அவர்களுள் பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் ! ஆனால் உருட்டு-உருட்டென்று உருட்டினாலும், குறிப்பிட்ட ஐந்தாறு பதிப்பகங்கள் நீங்கலாய் பாக்கிப் பேரின் கேட்லாக்களிலிருந்து நமக்கு ஆகின்ற மாதிரியாய்ச் சமாச்சாரங்களைத் தேடித் பிடிப்பது குதிரைக் கொம்பே ! ஒன்று சித்திர பாணிகள் சுமாராயிருக்கும் ; அல்லது கதைக்களங்கள் நமக்கு அந்நியமாயிருக்கும் ! So நாசூக்காய் "ஊருக்குப் போயி கடுதாசி போடுறேன் !" என்று நான் கிளம்பிய தருணங்கள் நிறையவே ! இன்றைக்கு மொத்தமே 6 பிரெஞ்சுப் பதிப்பகங்களோடு மாத்திரமே நாம் பணியாற்றுகிறோம் - இன்னமுமே சிலபல வாயில்கள் நமக்குத் திறந்தே உள்ள போதிலும் ! இதுவே தான் இத்தாலியிலும் கதை ! போனெல்லியைப் போலவே black & white-ல் கதைகள் வெளியிடும் பதிப்பகங்கள் நிறையவே உள்ளன ! அவர்களுள் ஒரே ஒரு பதிப்பகம் மட்டும் நமக்கு பல்ப் தந்து விட்டது ! நாம் ரொம்பவே ஆர்வம் காட்டியும், ராயல்டிக்களில் துளியும் இறங்கி வராது போனதால் அவர்களோடு ஒத்துழைக்க சாத்தியப்படவில்லை ! அவர்கள் நீங்கலாய் பாக்கிப் பேர் willing to permit us to work with them ; ஆனால் அதற்கான சரக்கை அவர்களது ஆக்கங்களிலிருந்து என்னால் தேடித் திரட்ட இயலவில்லை !!
வெறும் வாய்வார்த்தையாய் நிறுத்திடாது - ஒரு உவமையோடுமே விளக்குகிறேனே ? THE GUANTANAMO KID என்ற பெயரில் ஒரு கிராபிக் நாவல் பிரெஞ்சில் உள்ளது ! ஒரு நிஜக் கதையின் காமிக்ஸ் ஆக்கமிது ! ஆப்பிரிக்காவில் வறுமையானதொரு குடும்பத்தில் பிறந்து - பிழைக்க வாய்ப்புக் கிட்டி பாகிஸ்தான் செல்கிறான் ஒரு இஸ்லாமியக் குட்டிப்பைய்யன் தனது பத்தாவது வயதிலோ- என்னவோ ! அங்கே வண்டி சுமூகமாய் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு தொழுகைவேளையில் 'திடு திடு'ப்பென உட்புகும் காவல் படைகள் நிறைய பேரை தீவிரவாதிகளென்ற சந்தேகத்தில் கைது செய்கிறது ! அதனில் இந்தச் சிறுவனும் சேர்த்தி ! போலீஸ் லாக்கப்பிலிருந்து பின்னர் அவர்கள் எல்லாமே அமெரிக்கர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர் - "அல் கைதா தீவிரவாதிகள் இவர்கள்" - என்ற முத்திரையோடு !! நமது பொடியனுமே இதனில் அடக்கம் ! அத்தனை பேரும் நாடுகடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு - அங்கே குவாண்டனாமோ எனும் உச்சபட்ச வதைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றனர் ! அங்கே சிறையில் அவன்பட்ட அல்லல்கள் ; அங்கு அரங்கேறிய வதைகள் ; அவன் பார்த்த கொடூரங்கள் ; நிஜவாழ்வில் உலகின் முதல் ஜனநாயகத்திலும் நிகழ்ந்திடும் மனிதயுரிமை மீறல்கள் என்று இந்த ஆல்பம் தெறிக்க விடுகிறது ! கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அங்கே சிறையிருக்கும் சிறுவன் ஒருமாதிரியாக வெளியே வந்து சேர்கிறான் ! அவனது சிறைவாழ்வை புத்தகமாக்கினர் ; பின்னே காமிக்ஸாகவும் உருவாக்கினர் ! வாழ்வியலின் இன்னல்கள் சார்ந்த அட்டகாசமானதொரு படைப்பு இது ! கதையின் அவுட்லைனைப் படித்த போதே "எப்படியிருந்தாலும் இதை வாங்கியே தீர வேண்டுமே !!" என்று உள்ளுக்குள் குடைந்தது !! So உரிமைகளையும் வாங்க துண்டை விரித்தோம் ! ஆனால் அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போது - சித்திர பாணிகள் ரொம்ப ரொம்ப ஏமாற்றமளித்தன ! நீங்களும், நானும் பென்சிலை எடுத்துக் கொண்டு படம் போட்டிருந்தால் எவ்விதமிருக்குமோ - அப்படியிருந்தது ! (இந்த புக்கின் ஆங்கிலப் பதிப்பு கூட அமேசானில் உள்ளது) 2020-ன் கிராபிக் நாவல் பட்டியலில் முதல் இதழாய் இது இடம்பிடித்திருக்க வேண்டியது - ஆனால் அந்த சித்திர பாணியின் நெருடல்கள் பிரேக் போட்டுவிட்டன ! இதே ரீதியில் நான் நிராகரித்துள்ள அட்டகாசக் கதைக்களங்களைப் பட்டியிலட வேண்டுமெனில் இந்த ஞாயிறு போதாது நண்பர்களே !
Of course - ஒரு சக்தி வாய்ந்த கதைக்கருவைச் சொல்லிட இந்தமட்டுக்குச் சித்திரங்கள் போதுமென்று படைப்பாளிகள் எண்ணியிருக்கலாம் ; and அதனில் வெற்றியும் கண்டிருக்கலாம் ! ஆனால் நமக்கோ தரமான சித்திரங்கள் ; முறையான பேனல்கள் என்று எல்லாமே கச்சிதமாய் இருந்திடல் அவசியமன்றோ ? "உலகைப் புரட்டிய கதை" என்று நான் விளம்பரப்படுத்தி உங்களை வாங்கவும் செய்திடலாம் நான் ; ஆனால் பக்கங்களைப் புரட்டவே நீங்கள் சிரமம் கொள்ளின், அதனில் நாம் காணப்போகும் பயன் என்னவாக இருக்கக்கூடும் ?
'ஐயா புண்ணியவானே...என்னளவுக்கு இதுவே போதும் ; இதிலேயே நான் படித்துக் கொள்வேன் !" என்று இங்கே நண்பர்களில் சிலர் அபிப்பிராயம் கொண்டிடலாம் தான் ; ஆனால் நான் பார்த்திட வேண்டியது பெரும்பான்மையின் பாதணிகளில் நின்றல்லவா ? If maybe we all want this - great !!
நம்மளவிலாவது ஒரு காமிக்ஸ் தொடர் / கதை வெற்றி கண்டிட மூன்று 'நி' க்கள் அவசியம் :
* நிறைவான கதைக்களம்
* நிறைவான சித்திரங்கள்
* "நிறைய" என்றில்லா ராயல்டி !!
இந்த மூன்று 'நி' க்களும் சங்கமித்தால் மாத்திரமே அங்கே நமக்கான சாத்திய வாயில்கள் திறந்திடும் என்பதே யதார்த்தம் !!
மலையாய்க் கதைகள் காத்துள்ளன என்று நிறையமுறைகள் இங்கு நான் சொன்னது நிஜமே ! ஆனால் நாம் நிறையவே ; நிறைய விஷயங்களில் மாறினாலொழிய அவற்றின் பக்கம் தலைவைக்க இயலாதென்பதுமே நான் சொல்லாத சேதி !!
* எக்கச்சக்கமாய் ஒற்றைப் பக்க gags கொண்ட அட்டகாச கார்ட்டூன்கள் உள்ளன ! எனக்கு அவற்றைப் பார்க்கும் போது நாவில் ஜலம் ஊறும் தான் ! ஆனால் 'முடியவே முடியாது ; ஒற்றைப் பக்க gags பக்கநிரப்பிகளாய்த் தவிர எங்களால் பார்க்கவே முடியாது !" என்று நீங்கள் தீர்மானமாய்ச் சொல்லிடும் போது அக்கட கேட் போட்டுவிடுகிறேன் !
* எக்கச்சக்கமான தொடர்கள் அட்டகாசமாய்ப் பயணிக்கின்றன ; இடையினில் திடுமென 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்களின் மிகுதிகளோடு ! சரி...கொஞ்சம் சென்சார் செய்து கொள்ளலாமா ? என்று அந்தப் படைப்பாளிகளிடம் கேட்டால் - "கத்திரி போட்டா முத டெட் பாடி நீ தான் !" என்று பதில்கள் வரும் போது அந்தத் தொடர்களுக்குப் பிரியாவிடையே தந்திட நேர்கிறது ! Not all creators are o.k. with censor !
* Esoterics என்பது காமிக்சில் ஒரு பெரும் கதைப்பிரிவு !மாயாஜாலம் ; ரசவாதம் என்ற பின்னணிகள் கொண்ட கதைகள் இவை ! இவை சார்ந்த நிறைய தொடர்கள் ; வண்டி வண்டியாய் ஆல்பங்கள் உள்ளன ; ஆனால் நமக்கவை ஒவ்வுமோ ? ஒவ்வாது ? என்ற பயத்தில் no thank you ! சொல்லிடுக்கிறோம் !!
* யுத்த கதைகள் காமிக்ஸ் பேழைகளின் ஒரு முக்கிய அங்கம் ! "யுத்தம் பக்கம் போனாக்கா சத்தமில்லாமல் குளோஸ் பண்ணிப்புடுவோம் !!" என்று நீங்கள் மிரட்டுவதால் - "ச்சீ..சீ..இந்தப் பயம் புயிக்கும் !!" என்று நடையைக் கட்டிவிடுகிறேன் !
* வரலாறு சார்ந்த காமிக்ஸ் படைப்புகள் again கொட்டிக் கிடக்கின்றன ! நம்மிடம் ஆர்வம் + பொறுமை அவசியமல்லவா - இத்தகைய ஆக்கங்களைப் படித்திட ? உதாரணம் சொல்கிறேனே ? நெப்போலியனின் அண்டத்தை வென்றிடும் படையானது மாஸ்கோவை நெருங்குகிறது ! வெகு விரைவில் வீழவுள்ள அந்தத் தலைநகரில் வசிக்கும் பெருங்குடி மக்கள் தீர்மானிக்கின்றனர் : இத்தனை காலம் நாம் வாழ்ந்த மாட மாளிகைகளும், சொகுசுகளும் தீக்கிரையானால் கூடப் பரவாயில்லை - எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிடக் கூடாதென்று !! So "மாஸ்கோவைக் கொளுத்துங்கள் " என்று உத்தரவிடுகின்றனர் ! இந்தப் பின்னணியில் ஒரு ஆல்பம் உருவாகியுள்ளது !
அதே நெப்போலியனின் படைகள் உருக்கும் சைபீரியக் குளிரில் மேற்கொண்ட நெடும் படையெடுப்பைச் சொல்லும் கதைகள் உள்ளன ! நமக்குத் பொறுமையும், வரலாற்றினில் ஆர்வமும் இருப்பின், இது போன்ற தேடல்கள் சாத்தியமே !! ஆனால் பள்ளிக்கூடத்திலேயே தலைமுழுகிய இஸ்திரியை இங்கே வந்து படிக்கணுமாடாப்பா ? என்ற கேள்விகளும் எழுமென்பதால் டிக்கியை மூடிக் கொண்டு நடையைக் கட்டுகிறேன் !
* Women-centric காமிக்ஸ் ஒரு வண்டியுள்ளன ! ஆனால் கையில் பிஸ்டலைத் தூக்கிப்புட்டு 'பிளாம்-பிளாம்' என்று ரகளை செய்யாட்டி - "ஐயே...இந்தப் புள்ளே தேறாது போலிருக்கே !!" என்று முத்திரை குத்திடுகிறோம் - LADY S ; ஜூலியாவுக்கு நேர்ந்தது போல !
* SCI-FI பற்றிச் சொல்லவே வேண்டாம் ; திரும்பிய திக்கிலெல்லாம் தெறிக்க விடுகிறார்கள் அங்கே ! நாமிங்கே முயற்சித்தால் தெறிக்கப்போகும் முதல் சில்லு மூக்கு யாருடையதாய் இருக்கும் என்று யூகிப்பது அத்தனை கஷ்டமா - என்ன ? ஆண்டாண்டு காலமாய் நண்பர் கரூர் டாக்டர் ராஜாவும் VALERIAN தொடரை முயற்சிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தானிருக்கிறார் ; but அதற்கென நாம் தயாராகியுள்ளோமா என்ற கேள்வி இன்னமும் பதிலின்றியே உலவுகிறதே !
* Ditto for Horror stories !! Vampires...Zombies....Walking Dead ..பிணம்தின்னிகள் போன்ற கதைகள் அயல்வாசகர்கட்குப் பிடிப்பதால் அவையும் ஆண்டொன்றுக்கு ஏராளமாய் வெளியாகின்றன ! ஆனால் அவற்றைப் பார்த்தாலே நாம் 'உவ்வே' எனும் போது "சுடுகாட்டோடு நிறுத்திக்கோங்கடாப்பா உங்க சங்காத்தத்தை" என்று சொல்ல வேண்டி வருகிறதல்லவா ?
'அப்டின்னா நமக்கு ஆகக்கூடிய கதைகளே வேற இல்லியா ?' என்ற கேள்வியும் இங்கு எழுமென்பது புரியாதில்லை ! Of course உள்ளன நண்பர்களே ; எனது கைவசமே தற்சமயம் குறைந்தது 5 சூப்பர் ஆல்பங்கள் உள்ளன - 'ஏக் தம்'மில் வெளியிட வேண்டிய நெடுந்தொடர்களாய் ! ஒற்றை இதழே ஐநூறு / அறுநூறு ரூபாய்களை விழுங்கிடும் என்பதால் ஏதேனும் வாகான தருணங்களில் அவற்றை சிறுகச் சிறுக இறக்கிடலாமே என்ற எண்ணத்தில், கங்காரூ தன குட்டியைத் தூக்கித் திரிவது போல இந்தக் கதைகளையும் சுமந்தே திரிகிறேன் ! ஐநூறு ரூபாய்க்கு ஒரு இதழ் எனுமிடத்தில் தற்போதைய சந்தா D-ன் முழுமையுமே (12 இதழ்கள் !!) அடங்கிடுமே எனும் போது தராசின் முள் அந்தப்பக்கம் சாய்கிறது ! So நிறைய நேரங்களில் நமக்குத் பிடிக்கக் கூடிய கதைகள் இருந்தாலும், இதுபோன்ற நடைமுறை நெருக்கடிகளுக்கும் தலைசாய்த்திட வேண்டியுள்ளதல்லவா ?
"டெக்ஸ் வில்லருக்கு ஒரு பெரிய குண்டு வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்னை !" என்று சில நண்பர்கட்குத் தோன்றிடலாம் ! ஆனால் மஞ்சளணிந்த மாய வாத்து இடும் பொன் முட்டையின் புண்ணியத்திலேயே, நம் பயணம் சாத்தியப்படுகிறது என்பதை அவர்கள் மறந்திட்டார்கள் என்பதற்காக நானும் மறந்திட இயலுமா ? இதுபற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் எனும் போது no more repeats !
காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது பொதுவாய் நாம் நம்முள் உள்ளதொரு template-லிருந்து அதிகமாய் விலகிட விரும்புவதில்லை என்பது கண்கூடு ! இதோ - அந்நாட்களது ஜேம்ஸ் பாண்ட் 007 மறுவருகைக்கு இத்தனை உற்சாகம் பிரவாகமெடுப்பதே அதற்கொரு உதாரணம் ! Over a period of time - அந்த உத்வேகம் குறையும் தான் ; மும்மூர்த்திகளின் நிலையைப் போல ! ஆனால் மும்மூர்த்திகளுக்கும் - ௦௦7-க்குமிடையே ஒரு சன்ன வேற்றுமையுள்ளது ! முன்னவர்கள் அதற்கும் முந்தய தலைமுறையினை மகிழ்வித்தவர்கள் ! பின்னவரோ - இன்று active வாசகர்களாய் உள்ளோரை சிறுவயதில் வசியம் செய்தவர் ! So மும்மூர்த்திகளை விட 007 ஒரு தலைமுறை later ஆசாமி என்பதால் அவரது சுவாரஸ்ய ஆயுட்காலம் சற்றே தீர்க்கமாய் இருக்குமென்று நம்பிடலாம் ! இந்தக் கதைகளுக்கான உரிமைகளை நான் வாங்கிடத் தீர்மானித்ததே அந்த நம்பிக்கையினில் தான் ! "End of the day - காமிக்ஸ் படிக்க நான் நினைப்பது எனக்குள் உள்ள இளைஞனை ; பாலகனை மீட்டெடுத்துக் கொள்ளவே ; so அதற்கு உதவிடும் சாகசங்களே மதி !" என்று சொல்ல கணிசமானோர் நம் வட்டத்தில் இருக்கும் போது அவர்களது லாஜிக்கில் நாம் குறை காண இயலாது தானே ?
மலையாய்க் காமிக்ஸ் குவிந்து கிடப்பது நிஜமே ; ஆனால் அவற்றுள் நமக்கு ஏற்புடையவை சொற்பமே என்பது தான் யதார்த்தம் ! GLENAT என்பது தான் பிரான்சின் இன்றைய மிகப்பெரிய காமிக்ஸ் பதிப்பகம் ! வரும் ஆண்டு முதல் அவர்களது படைப்புகளையும் நாம் வெளியிடவுள்ளோம் ! ஆண்டொன்றுக்கு அசாத்திய எண்ணிக்கையில் ; அசாத்தியத் தரத்தில் ஆல்பங்கள் வெளியிடுகிறார்கள் ! ஆனால் அவர்களோடு கரம்கோர்க்கும் நமக்கு அந்த அசாத்திய எண்ணிக்கையினுள் - நம் மார்க்கெட்டுக்கு ஆகிடக்கூடிய கதைகளை இனம் காண்பதென்பது சுலபக்காரியமே அல்ல என்பதை அனுபவத்தில் சொல்கிறேன் !! True - அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அற்புதமாய் உள்ளன தான் ; அவர்களது தரங்களில் துளியும் திகட்டல் 'நஹி' தான் ! ஆனால் நம் ரசனைகள் வெகு குறுகலானவை என்பதே பல நேரங்களில் சிக்கல் !
So "டெக்ஸ் நிறைய ஸ்லாட்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் ; அவரைப் போடுறதை நிறுத்திப்புட்டா இன்னும் நிறைய புதுசுக்கு வழி பிறக்கும் !!" ; "இதோ இப்போ ஜேம்ஸ் பாண்ட் 007 என்று சொல்றீங்க ; இவரும் புதுசாய் மடைதிறப்பதற்குத் தடை !" என்ற ரீதியிலான சிந்தைகளெல்லாமே ஒரு சோப் குமிழியே !
சின்னதாய் தொடர்ந்திடும் கேள்விகளை மட்டும் பரிசீலித்துப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு பதில் சொல்லுங்களேன் guys ?
1. இன்றைக்கு நமது வரிசையில் டிடெக்டிவ் கதைகள் என்று உருப்படியாய் எத்தனை உள்ளன ? CID ராபின் & ரிப்போர்ட்டர் ஜானி என்ற இருவரைத் தவிர்த்து - கடந்து 15 ஆண்டுகளில் வேறு யாரேனும் தலைகாட்டி ; சாதித்துக் காட்டியுள்ளனரா ?
2. அதே கேள்வி கார்ட்டூன் சார்ந்த நாயகர்கள் பற்றியும் !இன்றைக்கும் 1987-ல் நம் மத்தியில் அறிமுகமான லக்கி லுக் தானே கார்டூனின் கிங் ? அதன் பின்னே நாமும் 'தம்' கட்டி லியனார்டோ தாத்தா ; ஸ்மர்ப்ஸ் ; பென்னி ; அது இதுவென்று முயற்சித்துப் பார்த்தும் மண்ணைக் கவ்வியது தானே மிச்சம் ?
3. Repeat : இதே கேள்வி - இம்முறை லார்கோ வின்ச் என்ற நாயகரைக் கொண்டு ! ஆண்டொன்றுக்கு 5000+ ஆல்பங்கள் வெளியாகின்றன பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டில் ! 1990-ல் அறிமுகம் கண்டவர் லார்கோ ! அதன் பின்னே சுமார் 30 ஆண்டுகள் ஓட்டமெடுத்து விட்டன ; so சுமாராக 150,000 ஆல்பங்களும் இடைப்பட்ட இந்த 360 மாதங்களில் வெளியாகியிருக்க வேண்டும் ! அந்த ஒன்றரை லட்சத்தில் இன்னும் ஒரேயொரு லார்கோ clone கூடவா இருந்திராது போயிருப்பார் ? இன்னும் ஒரேயொரு இரத்தப்படல XIII இருந்திடாதா போயிடுவார் ? அதற்கான பதில் - எனக்குத் தெரிந்த மட்டிலாவது NO என்பதே !!
"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் நாம் தேடும் தரத்திலான டிடெக்டிவ்ஸ் மேற்கொண்டு கிட்டியிருப்பின் இத்தனை ஆண்டுகளில் நான் விட்டு வைத்திருப்பேனா guys ?
"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் சுகமான கார்ட்டூன் தொடர்கள் மிகுந்திருப்பின் கொஞ்சத்தையாவது இங்கே கொணர்ந்திருக்க மாட்டோமா guys ?
"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் இன்னொரு லார்கோ ; இன்னொரு XIII பதுங்கியிருப்பின் பிச்சை எடுத்தாவது அவர்களை இட்டாந்திருக்க மாட்டேனா ?
Yes, of course - TINTIN ; ASTERIX ; BATMAN போன்ற iconic நாயகர்கள் உள்ள போதிலும் அவற்றை நாம் தொடாதே இருக்கிறோம் தான் - simply becos அவர்கள் வீற்றிருப்பது நம் உசரங்களுக்கு எட்டா ஒரு உச்சத்தில் !
Yes, of course - இன்னமும் சில பதிப்பகங்களின் ராயல்டி எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருப்பதால் அவற்றினை முயற்சிக்க சிரமங்கள் உள்ளன தான் ! ஆனால் அற்புதமான கதைகளை இருப்பின் - காசைப் பற்றிக் கவலை வேண்டாம் ; எப்பாடுபட்டாவது வாங்கிடலாம் ! என்ற தீர்மானத்துக்கு நான் வந்தும் ஆண்டுகள் இரண்டாச்சு ! தற்போதைய ஹெர்லாக் ஷோம்ஸ் கார்ட்டூன் கதைகளுக்கான கட்டணங்களைக் கேட்டால் நம்ப மாட்டீர்கள் !! அட, அவ்வளவு ஏன் - மாடஸ்டிக்கே நாம் தந்து வருவது ஒரு பெரும் தொகையே ! So அவசியமெனில் ; தரமான கதைகள் கிட்டிடுமெனில், பணங்களை ஒரு தடையாகிட இப்போதெல்லாம் அனுமதிப்பதில்லை ! But அதையும் மீறிய டாப் கியர் ராயல்டி எதிர்பார்ப்புகளை நடைமுறையில் கொண்டு வரும் நிறுவனங்களை நாம் பெருமூச்சோடு பராக்கு மட்டுமே பார்த்திடுகிறோம் !
So சில ஜாம்பவான் பதிப்பகங்களின் exceptions நீங்கலாய், தரமான கார்ட்டூன்கள் ; தரமான டிடெக்டிவ்ஸ் ; தரமான ஆக்ஷன் ஹீரோக்கள் / கதைகள் என சிக்கியிருப்பின் - இன்னமும் அதே பழைய நாயகர்களோடு வலம் வந்து கொண்டிருப்போமா guys ? புதிதாய்க் கதைகள் இல்லை என்பதிலேயே ஒரு கதையும் புதைந்துள்ளதைச் சுட்டிக் காட்டவே இந்த பதிவு !! "TEX இடத்தை ஆக்கிரமிக்காட்டி வேறு படைப்புகள் கொட்டித் தீர்த்திடும் !" என்ற எண்ணங்கள் சரியல்ல என்பதையுமே சொல்லத் தான் ! Probably TEX ஸ்லாட்களைக் குறைத்திருந்தால் அந்த இடத்தில இன்னும் கொஞ்சம் மார்ட்டின் ; இன்னும் கொஞ்சம் ராபின் & ஜூலியா என்று வந்திருப்பார்கள் ; நீங்களும் இன்னும் கொஞ்சம் கழுவி ஊத்தி இருப்பீர்கள் !! கடைசி 7 ஆண்டுகளில் வெளியான மார்ட்டின் கதைகளுள் - "கனவுகளின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" & "மெல்லத் திறந்தது கதவு" நீங்கலாய் நினைவில் நின்ற கதைகள் எவையென்று எனக்கு நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? மிக உயரத்தில் அளவுகோல்களை நிறுத்திய பின்னே மனுஷன் சற்றே தடுமாறினாலும் ஒரு "நியூட்டனின் புதுஉலகம்" தானே பலனாகிறது ? சிலபல ஆளுமைகள் தாட்டியமாய் இடம்பிடித்திடும் வரை அவர்கள் தடைகளாய்த் தெரியக்கூடும் தான் ; ஆனால் கதிரவனின் கத்திரி உக்கிரத்திலிருந்து நம்மை மறைத்து நிற்கும் சிகரங்கள் அவர்கள் என்பது பொறுமையாய் யோசித்தால் புரியும் !
"இவுகளை வுட்டா வேற நாதியே கிடையாதாக்கும் ? வேற கதையே கிடையாதாக்கும் ? அட போவியா ?!!' என்ற மைண்ட்வாய்ஸ் ஆங்காங்கே ஒலிக்குமென்பது எனக்குப் புரியாதில்லை ! Of course - மொத்த காமிக்ஸ் உலகையே அளந்த வாமணனும் அல்ல நான் ; இன்னமும் எனக்குத் தெரிந்திரா பதிப்பகங்கள் / தொடர்கள் என நிறையவே இருக்கக்கூடும் தான் ! ஆனால் இன்றைக்கு நமது தேடல்களை சாத்தியமாக்குவது இந்த 52 வயசுக்காரனின் ஆற்றல்கள் மாத்திரமே எனும் போது - அதனுக்குட்பட்டவற்றையே செயல்படுத்திட இயலுமன்றோ ?
சில ஆண்டுகளுக்கு முன்பாய் நண்பர்கள் சிலர் ஏதோ சில சுவாரஸ்ய தொடர்களின் புக்குகளைக் காட்டி - "இவற்றை முயற்சித்துப் பார்க்கலாமே ?" என்று கேட்டார்கள் ! நானும் அவற்றின் உரிமையாளர்களைத் தேடிப்பிடித்து கேட்ட போது - 'சாரி...அந்தக் கதைகள் எவற்றையுமே டிஜிட்டலில் பத்திரப்படுத்தவில்லை ! So அவை இனி யாருக்கும் சாத்தியம் நஹி !' என்று கைவிரித்து விட்டார்கள் ! இதே அனுபவம் வெகு சமீபமாய் ஒரு மிகப்பெரிய பதிப்பகத்திடமுமே நேர்ந்தது ! அட்டகாசமாயொரு புது கவ்பாய் கார்ட்டூன் நாயகரை இனம்கண்ட மகிழ்ச்சியில் உரிமைகளுக்கோசரம் பேசத் துவங்கினால் - "அட...நாங்களே இப்படியொரு தொடரைப் போட்டிருப்பது இப்போது தான் தெரியுது ! வெரி சாரி...கோப்புகள் இல்லை !" என்று சொல்லிவிட்டார்கள் ! நானோ அதன் உரிமைகளை நிச்சயமாய் வாங்கிடலாமென்று பெயரெல்லாம் வைத்து விளம்பரமும் ரெடி செய்து விட்டேன் !! So நடைமுறை சிக்கல்களுக்கு இப்படியுமொரு பரிமாணம் உண்டு !
கடந்த 2 + ஆண்டுகளாய் கிராபிக் நாவல்களின் தடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நமது comfort zone-களிலிருந்து வெளியே வந்திடும் முயற்சிகளைச் செய்து தானே வருகிறோம் ? நடப்பாண்டின் சூப்பர்ஹிட்டான "பராகுடா" அந்த branching out -ன் பலன் தானே ? "முடிவிலா மூடுபனி ; முடியா இரவு ; என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" ; நிஜங்கள் நிசப்தம் போன்ற கதைகளெல்லாம் நம் வாசிப்புகளில் இடம்பிடித்திருப்பது மாற்று ஜானர்களையும் நாம் அரவணைக்க சிறுகச் சிறுகத் தயாராகி வருகிறோம் என்பதற்கான indicators தானே ? So ஒற்றை ராத்திரியில் டெக்ஸ் ; டைகர் ; ஜேம்ஸ் பாண்ட் என சகல கமர்ஷியல் நாயகர்களுக்கும் VRS தந்துவிட்டு முற்றிலும் புது வாசிப்புகளென்ற திக்கில் பயணிப்பது சாத்தியமாகாது என்பதை ஏற்றுக் கொள்வோமே guys !! வாசிப்பில் உசத்தி; கம்மி என்று ஏன் பாகுபாடெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பானேன் ? காலத்தில் பின்னோக்கிப் போயும், அங்கிருந்து முன்னோக்கி காலத்தில் பயணிக்கும் தோர்கல் கதைகளையும் நாம் பந்தாடத் தான் செய்கிறோம் எனும் போது நம் பயண திசையில் பிசகில்லை என்று நம்பிக்கை கொள்வோம் ! மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் ; but அவற்றை விரட்டி விரட்டிப் போய் அரவணைக்காது, take it as it comes என்று ஏற்றுக் கொண்டால் எல்லாம் சுகமே !! Just my two cents !!
And rest assured guys : நமக்கியன்ற கதைகளை / நமக்குகந்த கதைகளை / நமக்கு சாத்தியமாகிடும் கதைகளை ஓசையின்றித் தேடித் திரட்ட நான் முயன்று கொண்டேயிருப்பேன் ! Bye all !! See you around again !!
P.S : வரும் நாட்களில் "அந்தச் சந்தா ; இந்தச் சந்தா" என்ற பிரிவுகளே waste என்றாகிடும் போலும் !! கிட்டத்தட்ட 95 % சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா' சந்தாக்களே !! வெகு வெகு சொற்பமாய் இதர பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளோர் கண்ணில்படுகின்றனர் !! மனசுக்கு ரொம்பவே நிறைவைத் தரும் விஷயமிது !! Let's keep it going guys !!!