Powered By Blogger

Sunday, June 26, 2022

'தல..தல...தல புராணம் ..!!'

 நண்பர்களே,

வணக்கம். சாமத்தில் டெக்ஸ் & கார்சனோடு கபடி ஆடிவிட்டுக் கட்டையைக் கிடத்தும் போது, கூர்க்காக்களின் விசில் சத்தங்களையெல்லாம் தாண்டிய பொழுதாகிப் போனதால் காலையில் கண்ணைத் திறக்க பெரும் பிரயத்தனமாகிப் போனது ! சும்மாவே நம்ம முழிகளானவை டாஸ்மாக் தங்கங்களாய் தோன்றிடும் அழகில், இப்போது கேட்கவே வாணாம் - ஆந்தைகளே மிரளும் ரேஞ்சுக்கு உள்ளன ! And இந்த ஞாயிறுக்கு நமது DTP பெண்கள் முழுநாளும் பணியாற்ற வருவர் என்பதால் பதிவினை short n sweet ஆக அமைத்து விட்டு, டெக்ஸ் ஆல்பத்தின் பாக்கிப் பக்கங்களுக்கு பேனாவைத் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தாக வேண்டி வரும் guys ; ஆகையால் இந்த ஞாயிறின் பதிவு கார்சனின் ஆட்டுத்தாடி நீளத்துக்கே இருந்திடும் ! 

To start off, இதோ - நான் மல்லுக்கட்டி வரும் 'தல' டபுள் ஆல்பத்தின் preview படலம் ! "புயலில் ஒரு புதையல் வேட்டை" - போனெல்லி குழுமத்தினில் அப்பாவும், பிள்ளையும் கதாசிரியர் அவதாரங்களில் மிளிர்ந்த பின்னே பொறுப்பேற்ற ஜாம்பவானான கிளாடியோ நிஸ்ஸியின் க்ளாஸிக் ! வழக்கம் போலவே நாலாவது பக்கத்திலேயே வில்லனை அறிமுகம் செய்து விட்ட பின்னரே 'தல' & தாத்தா entry தருகிறார்கள் !! 'வதம் செய்யவிருப்பது இவனைத் தான் !' என்று வாசகர்களிடம் இம்மித் தயக்கமுமின்றி வில்லப்பயல்களை கண்ணில் காட்டி விட்டு அதன் பின்னேயும் 224 பக்க நீளத்துக்கு ஒரு சாகசத்தை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்லும் அந்த பாணி டெக்சின் கதாசிரியர்களுக்கே உரித்தான அடையாளம் என்பேன் ! இம்முறை நமது ரேஞ்சர்கள் பயணம் செய்வது சதுப்புகளும், துறைமுகமும் கொண்ட  கால்வெஸ்டன் நகரினில் ! ஏதோவொரு கேப்டன் பிரின்ஸ் ஆல்பத்தினில் (உறக்கச்சொக்கில் என் பெயரே பால்பாண்டியோ ? சுடலைமுத்தோ ? என்ற சந்தேகம் எழும் நிலையில் - அந்த இதழின் பெயர் ஞாபகத்துக்கு வர மாட்டேக்கி !!)   சதுப்புகளில் முதலைகளுக்கு நடுவே பார்னேயும், பிரின்சும் செய்யும் அதிரடிகளைப் போல இங்கேயும் ஒரு action sequence மிரட்டுகிறது ! And இந்த சாகஸத்தின் பின்னணியாய் நிற்பது கொட்டித்தள்ளும் மழையும், ஒரு புயலுமே ! வழக்கமாய் சுட்டெரிக்கும் கதிரவனின் கீழே லொங்கு லொங்கென்று பயணிக்கும் நம்மவர்களோ, இம்முறை குளியல் போட்டபடிக்கே தோட்டாக்களைப் பறக்க விட்டுவருகின்றனர் ! இன்னமும் 55 பக்கங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் க்ளைமாக்ஸ் எவ்விதமென்று இன்னமும் எனக்கே தெரியாது ; ஆனால் பக்கங்களைப் புரட்டும் போது அதகளமாய்த் தென்படுகின்றது ! And இதோ - இந்த இதழின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியர் + டிசைனர் கோகிலாவின் கூட்டணியினில் :


பின்னணியினில் தெரிந்திடும் அந்தக் கட்டிடங்கள் எல்லாமே 1800-களின் பிற்பகுதியில் கால்வெஸ்டன் நகரில் இருந்த அசல் கட்டிடங்களின் நகல்களே ; in fact வரலாற்றில் இடம்பிடித்ததொரு மெகா புயலின் தாக்கத்தினைத் தொடர்ந்த நாட்களில் கால்வெஸ்டனில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இவை !And இதோ - உட்பக்க முதல்பார்வை : 

So 'தல' புராணம் இப்போதைக்குப் போதுமென்றபடிக்கே நமது அடுத்த நாயகரின் பக்கமாய் கவனங்களைத் திருப்பிடுவோமா ? எப்பா.....ALPHA ...கொஞ்சம் மேடைக்கு வாப்பா !!

காலனின் காகிதம் !! 

அறிமுக சாகசத்தில் 3 பாக நெடும் கதையினில் வலம் வந்த இந்த ஸ்டைலிஷ் நாயகர் இம்முறை ஒரு சிங்கிள் ஆல்பத்தில் சாகசம் செய்திருக்கிறார் ! ஸீன் நதியோரம் அஸ்ஸியா டோங்கோவாவை 'பச்சக்' அடித்ததையெல்லாம் "ஜாகஜம்" லிஸ்ட்டில் சேர்த்தால் தான் அந்த முதல் ஆல்பத்தினில் ஆல்பாவினை ஹீரோவாக சேர்த்திட முடியும் ; ஆனால் இங்கோ மனுஷன் மெய்யான ஹீரோவாய் சுற்றி வருகிறார் ! வழக்கம் போலவே (இரத்தப் படலம் இரண்டாம் சுற்றின் புகழ்) ஓவியர் Jigounov நம்மை டிக்கெட்டோ, விசாவோ இல்லாமலேயே, கிழக்கு ஜெர்மனி ; ஆம்ஸ்டர்டாம் ; பிரான்ஸ் என்று டூர் கூட்டிப் போகிறார் ! ஒவ்வொரு பிரேமிலும் ஓவியர் போட்டுள்ள உழைப்பைப் பார்க்கும் போது மெர்சலாகிறது ! அறிமுக ஆல்பம் ரேஞ்சுக்கு இங்கே வசனங்கள் லேது என்பதால், ஒன்றரை நாட்களில் இதன் மொழிபெயர்ப்பைக் கரை சேர்க்க சாத்தியப்பட்டது ! கணிசமான action sequences இருப்பதும் எனது பணியினை சுலபமாக்க உதவிய சமாச்சாரங்கள் ; வாழ்க டமால்-டுமீல் !! இதோ - உட்பக்க preview : 

So நம் மத்தியினில் ஆல்பா தொடர்வதா - வேண்டாமா ? என்ற கேள்விக்கு விடை தரவுள்ளது இந்த ஆல்பத்திற்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்போ / குட்டுக்களோ தான் ! So இயன்றமட்டுக்கு  உங்களின் இம்மாதத்து வாசிப்பினில் Jigounov சிருஷ்டித்திருக்கும் இந்த அழகரை முன்னிலைப்படுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ?

இ.ப. ஓவியர் பற்றிய mention வந்திடும் இந்தத் தருணத்தில் இதோ ஒரு இ.ப. update !! ஆல்பம் # 28-ன் பணிகளில் படைப்பாளிகள் மும்முரம் காட்டி வர, அட்டைப்படத்துக்கென இதோ அவர்கள் முயற்சித்துப் பார்த்திருக்கும் ஒரு variant !! "க்யூபா - எல்லாமே துவங்கிய இடம்" என்பது போல் தலைப்பிட்டிருக்கிறார்கள் ; ஆனால் அதுவும் சும்மா ஒரு டம்மி தலைப்புத் தான் ! ஆகஸ்ட்வாக்கில் தான் அசல் ராப்பரும், கோப்புகளும் ரெடியாகிடும் என்பது தற்போதைய நிலவரம் ! பார்க்கலாமே,,,,!! 

ரைட்டு...உறுமும் வயிற்றுக்கு கொஞ்சமாய் பெட்ரோல் போட்டு விட்டு ஆபீசுக்குக் கிளம்பும் முன்பாய் கொஞ்சம் updates :

1 .தருமபுரி புத்தக விழா வெள்ளியன்று துவக்கம் கண்டிட, முதல் நாள் மிதமான விற்பனை மட்டுமே ! ஆனால் நேற்றைக்கோ நிஜமாகவே ஆச்சர்யமூட்டும் விற்பனைகளைப் பார்த்திட முடிந்துள்ளது ! மொத்தமே 60 பதிப்பகங்கள் தான் எனும் போது பார்வையாளர்களுக்கு நிதானமாய் ஒவ்வொரு ஸ்டாலிலும் நேரம் செலவிட சாத்தியப்படுவதால் - நமது ஸ்டாலுக்கும் நல்ல வரவேற்பு ! எந்தெந்த புக்ஸ்  விற்பனையாகியுள்ளதென்பது தெரியலை ; ஆனால் விற்பனை ஆரோக்கியமானதொரு நம்பர் என்றமட்டுக்கு ஹேப்பி அண்ணாச்சி ! And மாஸ்க் போட்டபடிக்கே நம்ம அண்ணாச்சி தான் ஸ்டாலில் நடுநாயகம் !! எனக்குப் 10 வயதாய் இருந்த வேளையினில் வேலைக்கு வந்த மனுஷன்,......ஆண்டவன் அருளுடன் இன்னமும் சுறுசுறுப்பாய் நமது சக்கரங்களுள் முக்கியமானதொன்றாகச் சுழன்று வருகிறார் ! One of these days - நாம் சந்திக்க கொரோனா கொடூரன் மனது இழகிடும் ஒரு பொழுதினில் அண்ணாச்சி deserves a day in the sun !! யோசிப்போமா folks ?

2 .புத்தக விழா ஸ்பெஷல் தர்மபுரியில் லேதுவா ? என்ற கேள்விக்கு - "sorry no guys !" என்பதே பதிலாகிடும் ! தர்மபுரியில், ஒசூரிலும் என்ன எதிர்பார்ப்பதென்ற ஐடியாவே இல்லாது தான் நாம் களமிறங்கிடுகிறோம் என்பதால் அங்கு ஸ்பெஷல் ஏதும் திட்டமிடத் துணியவில்லை ! புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பற்றி இம்மாதத்து இதழ்களில் பார்த்திடப் போகிறீர்கள் ; so ஜூலை பிறக்கக் காத்திருங்களேன் ப்ளீஸ் !

3 அப்புறம் "ஈரோட்டில் வாசக சந்திப்பு இந்தாண்டினில் வேண்டவே வேண்டாமே ப்ளீஸ்" - என்று நமது செனா அனாஜி அறிவுறுத்திய ரீதியிலேயே - நமது வாசக குடும்பத்து டாக்டர்கள் மூவரும் (தனித்தனியாக) விளக்கமான மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர் ! ஆகஸ்டில் நிலவரம் எவ்விதம் இருக்கக்கூடுமென்று மருத்துவ வட்டத்தினுள் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி - "பொறுத்தது பொறுத்துவிட்டோம் - இந்த ஒற்றை வருடமும் பொறுத்துவிடுவோமே ; இளைஞர் அணியில் இடம்பிடிக்கும் சீனியர் எடிட்டர் ; அடியேன் ; கருணையானந்தம் அங்கிள் - என அனைவருக்குமே இந்த சூழல் உகந்ததாய் இராது ; பற்றாக்குறைக்கு நமது மூத்த வாசக நண்பர்களுமே இந்த ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட இந்த ஒற்றை வருடமும் நாம் வாய்ப்பேற்படுத்திட வேண்டாமே  !!" என்று செல்லும் அந்த மின்னஞ்சல்கள் பின்னுள்ள மருத்துவ நியாயங்களை புறம்தள்ள இயலவில்லை ! "கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனமாகவே இருந்துவிட்டாலுமே தப்பில்லை ; ஆனால் ஒரு சந்தோஷச் சந்திப்பினில் நெருடலோடு பங்கேற்பது யாருக்கும் ரசிக்காது" என்ற நமது டாக்டர் அபிமானிகளின் லாஜிக்கின் முன்பாக, ஆமோதிப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்ய தோன்றவில்லை ! So 2023 தான் ; 'தல' 75 தான் - நமது சந்திப்புக்கு ஏற்ற காலமோ / களமோ போலும் !! Sorry guys !! அந்நேரத்து சூழலுக்கேற்ப / பணிகளுக்கேற்ப  நான் மட்டும் ஈரோட்டிலும், கோவையிலும் வாரயிறுதியினில் எட்டிப்பார்க்க முயற்சிப்பேன் !

4 .ஒரு சுவாரஸ்ய நியூஸ் !! ரொம்பச் சமீபமாய் சென்னையிலிருந்து 2 டைரக்டர்கள் நம்மிடம் உள்ள FULL SET புக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளனர் !! கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெருமானம் - ஒரு full set ! அவற்றினை கூரியரில் அனுப்பும் கட்டணமே நான்காயிரமோ, என்னவோ !! அத்தனை காசு செலவிட்டுப் புறப்பட்டுள்ள 2 செட்கள் எந்த ரூபத்தில் வெள்ளித்திரையினில் ரவுண்டடிக்கக் காத்துள்ளனவோ - தெரியலை !! 

ரைட்டு...நேரமாச்சு கால்வெஸ்டன் பயணத்தினை நான் தொடர்ந்திட ! மீண்டும் சந்திப்போம் all ; have an awesome sunday ! See you around !!

Wednesday, June 22, 2022

தி நாட்டாமையின் தி தீர்ப்பு !

நண்பர்களே,

வணக்கம். அந்த வளைஞ்ச நாட்டாமை செருப்பை தேடிப் புடிச்சி  வாங்கிக்கலாம் போலும் ; 'புளிச்' என்று வெற்றிலைச் சாறைத் துப்பி வைக்க ஒரு அடைப்பப் பொட்டியையும் தேற்றிவிடலாம் போலும் ; உள்ளாற நீளமா ஒரு பட்டாப்பெட்டியைப் போட்டுக்கினு, இஸ்டராங்கா ராம்ராஜ் வேஷ்டிய கூட இடுப்பிலே செருகிக்கலாம் போலும் - ஆனால் ரண்டு சமாச்சாரங்கள் மட்டும் செம கஷ்டம் போலும் - நாட்டாமை வேஷம் கட்ட ! முதலாவது மேட்டர் - குடுமி போடும் நீளத்துக்கான அந்தக் கேசம் !! புதுசா கூடு கட்டப் பழகி வரும் குருவியோட மொத தயாரிப்பு சைசுக்கு இங்கன இருக்கிற கூந்தலைக் கொண்டு குடுமி ஒண்ணு தான் குறைச்சல் !! ரெண்டாவது மேட்டர் - தீர்ப்புச் சொல்றது !

அதுவும்,  தி டிரவுசரை தீர்மானமாய் கழற்றியே தீருவதென்ற முனைப்பில் பொங்கித் தள்ளும் நண்பர்களின் பிரவாகங்களின் மத்தியினில் தீர்ப்பெழுதுவது என்பது - ஆத்தாடியோவ் ரகப்பணி ! Anyways - ஏதேதோ பணிகளுக்கு மத்தியில், ஜாலியாய் இதற்கென நேரம் தந்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் !! You've made the last 2 days an absolute riot all !!! 😁😁பொறுமையாய் உங்களின் பொங்கல்ஸை 'ஏக் தம்மில்' பரிசீலனை செய்த போது கவனத்தை ஈர்த்த பெயர்கள் இவை :

 • Sankar C - TEX DIAMOND ஸ்பெஷல்
 • STV - The TEX 75 
 • ஈரோடு விஜய் - THE THALA 75 SUPER SPECIAL 
 • The Legend’s ஸ்பெஷல் -மகேந்திரன் பரமசிவம்.
 • The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன் 
 •  Tex Diamond Jubilee ஸ்பெஷல் - ராகவன் 
 • The Terrific Tex 75 - Giridharasudarsan
 • TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
 • The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai

முதலிரண்டு பெயர்கள் short & sweet ! 'நறுக்'கென சொல்ல வேண்டிய சமாச்சாரத்தைப் பறைசாற்றுகின்றன தான் ! Ditto with Tex Diamond Jubilee ஸ்பெஷல் - by ராகவன்ஜி ! வாழ்த்துக்கள் நண்பர் Sankar C & STV & Raghavan சார் ! ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் - ஒரு படத்தை அறிவித்த கையோடு 'தளபதி 65 " ; 'தல 70 " என்ற ரீதியினில் working title என்று அறிவித்து விட்டு பூஜையையும் போட்டு விட்டு, ஷூட்டிங்குக்கு கிளம்பிவிடுகிறார்கள் ! சாவகாசமாய் வேறொரு பெயர் சிக்கும் போது அந்த working title-ஐ காலி பண்ணிவிட்டு புதுசான பெயரைச் சூட்டிவிடுகின்றனர் ! TEX 75 என்பதும், DIAMOND SPECIAL / DIAMOND JUBILEE SPECIAL என்பதும் கிட்டத்தட்ட அந்த working title போலிருப்பதால் சற்றே அவை பின்தங்குகின்றன ! Sorry sirs !

தி பூனையை DP-யிலும், குசும்பை வரிகளிலும் கொண்டிருக்கும் ஆயிரம் பன் கண்ட அபூர்வ சிகாமணியின்  "தல 75 சூப்பர் ஸ்பெஷல்" செம மாஸ் தான் ! ஆனால் for obvious reasons அதனைத் தேர்வு செய்திடத் தயக்கம் மேலோங்குகிறது ! தமிழ் பேசும் நல்லுலகத்தின் முக்காலே மூன்றுவீசத்தினருக்கு 'தல' என்றாலே மனதுக்கு வருவது வேறொரு ஜாம்பவான் தானே ? So  சற்றே சிந்தனைகளோடே பரிசு லாரியை ஈரோட்டிலிருந்து திசைதிருப்பத் தீர்மானித்தேன் ! Sorry-ங்கோ ; புண்பட்ட மனதை, பண்பட்ட ஒரு டஜன் பன்னால் அடுத்தவாட்டி ஆற்றிடலாம் ! 

சரி, ரைட்டு...டெக்சஸ் தலைமகனின் சிறப்பிதழுக்கு LEGEND'S SPECIAL என்று பெயரிட்ட டெக்சஸ்காரவுகளுக்கே பரிசு வண்டியை அனுப்பிடலாமென்று நினைக்கும் தருணத்தில் இன்னொரு சமீபத்தைய (திரை) LEGEND கண்முன்னே வந்து வந்து போகிறார் ! 'ஆஹா....ஆஹாஹாஹா...நம்மாட்கள் மீம்ஸ் போட்டே ஒரு வழியாக்கிப்புடுவார்களே !!' என்ற பயத்தில் லாரியை ஜகா வாங்கிடத் தீர்மானித்தேன் ! Sorry again sir !

ஆக, 9 பெயர்கள் கொண்ட தேர்வினில் எஞ்சியிருப்பன 4 titles :

 • The Terrific Tex 75 - Giridharasudarsan
 • The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன் 
 • TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
 • The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai
நான்குமே அதனதன் விதங்களில் powerful ஆகத் தென்பட, இந்த நாலுக்குள் ஒன்றைத் தேர்வு செய்யுங்களேன் என்று பந்தை உங்கள் திக்கில் திருப்பிவிட நினைத்தேன் ! ஆனால் இன்னொருக்க 'தி பொங்கலோ-பொங்கல்' ஆரம்பித்தால், முக்கால்வாசிப் பேர் தி ஓட்டமோ-ஓட்டம் பிடித்துவிடுவார்கள் என்பதால் shortlist செய்திடும் பணியைத் தொடர்ந்தேன் !

நண்பர் கார்த்திகேயனின் THE MAGNIFICENT TEX ஸ்பெஷல் என்ற தலைப்பு சிறப்பென்றாலும், டெக்சின் 75-வது ஆண்டினைக் குறிப்பிட எதுவுமில்லை என்பதால் sorry சார் ! 

நண்பர் வழுக்குப்பாறை திருநாவுக்கரசு முன்மொழிந்துள்ள பெயரும் (TEX Seventy Five Sensational Special) நயமாய் இருப்பினும் - டெக்ஸ் சைசிலான புக்கில் இத்தனை நீளமான பெயரை எழுதுவதென்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் ! So அதனையும் பின்தங்க அனுமதிக்க நினைத்தேன் ! Sorry நண்பரே !

ஆக finals - நண்பர் கிரிதரசுதனின் The Terrific TEX 75-க்கும்  நண்பர் MKS. ராமின் TEX 75 - THE SUPREMO SPECIAL-க்கும் மத்தியினில் தான் என்றாகிறது ! த்ரிஷாவா ? நயன் தாராவா ? என்றெல்லாம் இன்னமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் விக்னேஷ் சிவன் விளக்குமாற்றால் சாத்துவார் என்பதால், சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தேன் - ரொம்பவே simple ஆனதொரு காரணத்தின்  பெயரைச் சொல்லி :

"Terrific Tex" - உச்சரிக்க, எழுத, வாசிக்க ரொம்பவே எளிதான பெயரே ! ஆனால் கொஞ்சம் plain ஆனதொரு பெயராக இருக்கக்கூடுமோ என்று லைட்டாக  நெருடியது  !! இங்கே பிரவாகமெடுத்திருந்த வேகங்களுக்கு ஈடு தரும் விதமாய் ; இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷான பெயராய் இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைத்தேன் ! 

அதற்கு 'நச்' என்று பொருந்தியதாய் நண்பர் MKS ராமின் "TEX 75 - THE SUPREMO SPECIAL" அமைந்தது போல்பட்டது ! கொஞ்ச வருடங்களுக்கு முன்பாய் வெளிவந்த "சர்வமும் நானே" இதழில் டெக்ஸ் & கோ.வுக்கு tough தந்த எதிராளிக்கு ஒரிஜினலில் "EL SUPREMO" என்று தான் பெயர் ! "சர்வ வல்லமை படைத்த தலைவன்" - என்ற பொருள்தரும் பெயரானது - நமது இரவுக்கழுகாருக்கு கனகச்சிதமாய்ப் பொருந்துவதாய் மனசில் தோன்றியது ! So - 2023-ல் காத்திருக்கும் 'தல 75 ' இதழுக்கு  :

TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல் !! என்ற பெயரினைச் சூட்டிடுவோமே folks ? 

வாழ்த்துக்கள் நண்பர் ராம் !! Sorry நண்பர் கிரி !

Phewwwwww !! ஒரு வழியாய் எனது பணியினைப் பூர்த்தி செய்தாச்சு ; இனி www.மூ.ச.com என்ற முகவரியில் என்னைத் தேடிப்பிடித்து தி மாலை மருவாதிகளைச் சிறப்பாகச் செய்திடலாம் guys !! I am waitingggggggg !! Bye for nowwwwwwwwww !! (வைகைப் புயலின் அவ்வ்வ்வ்வ்...மாடுலேஷனில் !!)


The உப-க்கு உப !!

 நண்பர்களே,

தி வணக்கங்கள் ! ஆல்பா புள்ளையாண்டானுக்குப் பேனா பிடிக்கும் பிசியில் ஒன்றரை நாட்கள் இங்கு எட்டிப் பார்க்க இயலாது போக, பணிகளை முடித்த சூட்டோடு இன்று காலை ஆஜரானால், உங்களின் தி ரவசுகள் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது ! இதுக்கு மேலேயும் பெயர் சூட்டும் விழாவினைத் தொடர்ந்தால் பூமி தாங்காது என்பதால் இன்றைக்கே, ரொம்பச் சீக்கிரமே இதற்கொரு தீர்ப்பினைச் சொல்லி விடலாமென நினைக்கிறேன் ! இரட்டைத் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவைக் கூட்டி, இந்தத் தேர்வினைச் செய்யச் சொல்லுவோமென்று பார்த்தால் - பலகட்ட இக்கட்டுக்கள் அதற்கிருப்பதை உணர முடிகிறது ! So முன்கூட்டியே தி மூ.ச.வுக்குள் போய் நிலைகொண்டுவிட்டு, தீர்ப்பை சொல்லும் வேலையை நானே செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன் ! இன்று பின்மதியத்துக்குள் நாட்டாமை முத்துவிசயனாரின் முத்தான தீர்ப்பைக் கண்டவுடன்  மூ.ச முன்னே லைனாக நின்று உங்களின் அன்புகளை பிரகடனப்படுத்திடலாம் !! (ஏய்...ஏய்...டபுள் குட்டுக்கு இப்போவே ரெடியாகிட்டு இருக்கது யாரு  ??)

மதியமாய், கைத்தாங்கலாய் இங்கே கூட்டியார மைதீனுக்குச் சொல்லிவிட்டு வர்றேன்னுங்க ! Bye for now ...! அப்புறம் இதுக்கு மேலே பொங்க வேணாமுங்க...இது வரையிலும் நீங்கள் முன்மொழிந்துள்ள பெயர்களைக் கொண்டு டெக்சின் கொள்ளுப் பேரப்பிள்ளையின் சஷ்டியப்தபூர்த்தி ஸ்பெஷல் வரைக்கும் தலைப்பு வைக்கலாம் ! ஆகையால் தி போதும் ப்ளீஸ் ! See you around !

Sunday, June 19, 2022

The உபபதிவு !!

நண்பர்களே,

வணக்கம். அது என்ன மாயமோ தெரியலை - ஆனால் காத்தாடும் சாயாக்கடையுமே 'தி தல' சார்ந்ததொரு பதிவெனில் அரை நாளுக்குள்ளேயே 'தி லோட் மோர்'-க்குள் புகுந்து விடுகிறது ! இம்முறை நண்பர்கள் ஏகமாய் தலைப்பிடும் ஆர்வங்களுடன் குமுறி வருவதையும், கவிஞரின் இடத்தினை தலீவர் பிடித்திட முனைவதையும் செம ஆர்வமாய் ரசித்து வருகிறேன் ! இதோ இந்த ஞாயிறின் குறைப் பொழுதுக்கும் பெயர் சூட்டும் வைபவத்தைத் தொடர்ந்திட்டால், நாளையே 2 பேர் கொண்டதொரு பரிசீலனைக் குழுவினை நியமனம் செய்து- இந்தக் குவியலிலிருந்து ஒரு தலைப்பை pick செய்திடச் சொல்லலாம் !! So 'தி தலைப்பு' தேடிய பயணம் தொடரட்டும் !

தலைப்புக்கே பட்டாசாய்த் தெறிக்கிறதே ..... தல பிறந்தநாள் மலர் வெளியாகிடவுள்ள பொழுதினில் என்ன மாதிரியான உற்சாகங்கள் கரைபுரண்டோடக் காத்திருக்குமோ ?!! Maybe அடுத்த வருடத்தின் நமது வாசகச் சந்திப்பினை செப்டெம்பர் 30-க்கென திட்டமிடணுமோ ? செம வாகாய் அதுவுமொரு சனிக்கிழமையாகவே அமைகிறது & மறுதினம் ஞாயிறு & தொடர்ந்திடும் திங்கள் - காந்தி ஜெயந்தி விடுமுறையே !! So எங்கேனும் ஒரு நகரினில் இந்த இதழின் 'தி ரிலீஸை' வைத்துக் கொள்ளலாமோ ? 

இப்போது தான் ஜூலையின் Alpha கதைக்கு ஒரு வசனம் எழுதிக் கொண்டிருந்தேன் - "குஞ்சி பொரிக்கும் முன்பாய் ரோஸ்டுக்கு மசாலா தடவுவானேன் ?" என்று !! ஒன்றரை ஆண்டுகள் தள்ளியுள்ளதொரு நிகழ்வுக்கென இப்போதே திட்டமிடுவதெல்லாம் - டூ..டூ..மச் தான் ; but உங்களின் உற்சாகங்களைக் கண்டு நமக்கும் லைட்டாக 'தி குஷி' கிளம்பிட்டூ !! இது பற்றிய உங்கள் சிந்தனைகளோடு தொடருங்கள் guys !! Bye for now ...see you around !!


P.S : கதை சொல்லும் காமிக்சின் சந்தா link இதோ : https://lioncomics.in/product/subscription-for-kathai-sollum-comicst-n/

ஒற்றை இதழாய் "பீன்ஸகோடியில் ஜாக்' வாங்கிடுவதெனில் லிங்க் : https://lioncomics.in/product/kathai-sollum-comics-beans-kodiyil-jack/

Saturday, June 18, 2022

ஜூலையினை எதிர்நோக்கி...!

 நண்பர்களே,

வணக்கம். 'ஜூன் போனால்.... ஜூலை காற்றே,,' என்ற பாட்டு தான் மண்டைக்குள் ஒலிக்கிறது - ஜூலை மாதத்துக்கும், லயனின் ஆண்டுமலருக்கும் நாம் தயாராகி வரும் இந்த நொடியினில் ! இளவரசியோடு இரண்டு ரூபாய்க்கான லயனின் முதல் இதழை ஏந்தியபடிக்கே தெற்கேயும், வடக்கேயும் குட்டி போட்ட பூனையாட்டம் நான் சுற்றி வந்து வருஷங்கள் 38 ஆச்சு !! "கிழிஞ்சது போ.......ஆரம்பிச்சுட்டாண்டா புராணத்தை !!" என்ற மைண்ட்வாய்ஸ்கள் ஆங்காங்கே அலாரமடிக்கத் துவங்கியிருப்பின், பயப்படேல் guys ; இது தம்மாத்துண்டு  fleeting மொக்கை மட்டுமே !

நேற்றுப் போலுள்ளது - "கத்திமுனையில் மாடஸ்டி" என்ற  அரைப்பக்க விளம்பரத்தை  கல்கண்டு வாரயிதழினில்  போடும் பொருட்டு,  ரூ.1800-ஐப்  புரட்ட குட்டிக்கரணம் அடித்த அந்த நாட்கள் ! மதுரையில் 'கல்பனா அட்வர்டைசிங்' என்றதொரு குட்டியூண்டு விளம்பர ஏஜென்சி மூலமாய் அந்த விளம்பரத்தை அனுப்புவதாக இருந்தோம் ; so விளம்பரத்துக்கான பாசிடிவைத் தூக்கிக் கொண்டு மதுரைக்கு பஸ் ஏறியிருந்தேன் ! அவர்களது ஆபீசுக்கு போகும் போதோ பாக்கெட்டுக்குள் இருந்தது ரூ.1700 தான் ! ஊர் திரும்ப பஸ்ஸுக்கு பத்தோ, இருபதோ ரூபாய்கள் தேவை ! ரவுண்டாக 50 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, அவர்களிடம் திக்கித் திக்கி, 150 ரூபாய் கடன் சொல்லிய கையோடு, தெற்கு மாசி வீதியில் ஒரு ஜிகர்தண்டாவைப் போட்டுப்புட்டு, மதுரை இஸ்பெஷலான தென்னங்குருத்தை வாங்கித் தின்னப்படிக்கே பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்த நாட்களை இன்றைக்கு நினைவு கூர்ந்தால் - சட்டித்தலையன் ஆர்ச்சியிடம் கால இயந்திரத்தை இரவல் வாங்கிக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடும் ஆசை அலையடிக்கிறது !!

அன்றைக்குத் தான் நமது திட்டமிடலில் எத்தனை சுலபத்தன்மை குடிகொண்டிருந்தது ?!! 

 • Black & white தான் நடப்பே  !
 • நியூஸ்பிரிண்ட் பேப்பர் போதும் !
 • ஆக்ஷன் / டிடெக்டிவ் / பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோ  கதைகள் மட்டுமே தான் நமது ராடார்களில் !
 • சின்ன விலைகள் ; நிறைந்த சர்குலேஷன் !
 • ஒரு நேர்கோட்டுக் கதைக்களம் ; நாலு fight ; ஆறு சேஸ் என்றிருந்தாலே ஏகமாய் மகிழ்ந்திருக்கும் mindset ! 
 • தானைத் தலைவர் ஸ்பைடரைப் பார்த்த நொடியில் சில்லறையைச் சிதற விடும் காதல்  !!

என்று (காமிக்ஸ்) வாழ்க்கை தான் என்ன மெரி ஒரு சுலபமாய் அந்நாட்களில் இருந்து வந்தது ?!! 

 • சீனாக்காரர்களின் புண்ணியத்தில் புளியம்கொம்பில் குந்தியிருக்கும் ஆர்ட் பேப்பர்களைத் தேடிடும் காவடிகள் அவசியமில்லை அன்றைக்கு ! 
 • 'அ.நா. ; ஆ.வன்னா ; கி.நா' - என்றெல்லாம் படிக்கும் அவசியங்கள்  பள்ளிக்கூடப்  பசங்களுக்கு மாத்திரமே இருந்தது அப்போது  ! 
 • அடுத்த மாசத்துக்கான கதையை நடப்பு மாசத்தின் 15-ம் தேதிக்கு மேலாய் வரவழைத்தாலுமே, "அட...ஜாவகாஜமாய் போட்டுக்கலாம் !!" என்ற பயமின்மை இருந்தது - புளியங்குச்சிகளோடு நிற்கும் வயசுகள் உங்களுக்கு அன்றில்லை என்ற  தைரியத்தினில் ! 
 • "அடுத்த வெளியீடா ? ஆங்க்க்க்க்..இந்த மாசம் ஆர்ச்சின்னா...அடுத்த மாசம் ஸ்பைடர்...மறு மாசம் இயவரசி.." என்று சிம்பிளாய் முடிச்சுக்கும் திட்டமிடல்கள் அப்போது ஓ.கே. !!
 • நமது கூர்மண்டைத்   தலைவர் அந்நாட்களில் சிரசாசன SMS அனுப்பினாலும், என்னைக் கட்டி வைத்து உதைக்க கோணிமூட்டைகளை தேடாது, ஜென்ம சாபல்ய சந்தோஷம் காண்பது சாத்தியப்பட்டது ! 
 • ஆயிரம் அளவுகோல்களைத் தாண்டிடும் அபூர்வ சீவக சிந்தாமணிகளாய் ஒவ்வொரு படைப்பும் அமைந்திட வேண்டிய அவசியங்கள் நஹி  !  அவற்றை அங்குலம் அங்குலமாய் அலசிடும்  பொதுவெளிகளும் லேது ! So 'ஜிலோ'வென்று கப்பல்களைப் பந்தாடும் சட்டித்தலையனும், நியூயார்க்குக்கு ரிவிட் அடித்து தண்ணீருக்கடியில் கட்டி இழுத்துப் போகும் ஸ்பைடரும் அசால்ட்டாய்க் கோலோச்சிய தினங்கள் possible !! 

Phewwwwwwww !! "பழைய நெனப்புடா பேராண்டி...!" என்ற ரீதியில் நான் இங்கு புலம்புவதற்கு ஒரு மினி காரணம் உண்டு guys ;  கடந்துள்ள பத்து நாட்களாய், ஜூலை பணிகளைக் கூட சற்றே ஓரம்கட்டி விட்டு, விடிய, விடிய நான் மொக்கை போட்டு வந்திருப்பது நமது 2023 அட்டவணையின் திட்டமிடலின் இறுதிக்கட்டத்தோடே !! 

 • 'காத்திருப்பது 'தல'யின் 75-வது ஆண்டு ; அழகாய் ஏதேனும் செய்தாகணுமே ! என்ற குடைச்சல் !
 • 'தல' பட்ஜெட் என்ன மாதிரி இருந்தாகணும் - without being an overkill ? என்ற மண்டை சொறியல் !
 • "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" போன்ற கார ஆந்திரா மீல்ஸாய் மட்டுமேவும் இருக்க கூடாது ; "விடாது வஞ்சம்" போன்ற கனமான பிரியாணியாகவும் இருக்கப்படாதே !! என்ற டெக்ஸ் கதைத் தேர்வின் இடியாப்பங்கள் !
 • 'கி.நா.' சாப்டர் கொஞ்ச காலத்துக்கு மூடப்பட்டதாகவே இருக்கணுமா - வாணாமா ?' என்ற கேள்வி !
 • 'புதுசாய் யாரையாச்சும் உள்ளாற புடிச்சு இழுத்திட்டு வரணுமே - அட்டவனைக்கொரு 'கிக்' ஏற்றிட !!' என்ற ஆதங்கம் !
 • 'ஸ்டெர்ன் உள்ளே....யார் வெளியே ?' என்ற ரோசனை !
 • 'பட்ஜெட் உதைக்குதே !...புக் எண்ணிக்கையைக் கம்மி பண்ணிப்பதா ? அல்லது கொஞ்சமேட்டும் சந்தாத் தொகைகளை ஏத்திக்கலாமா ? என்ற question !!
 • 'கென்யா' திறந்து விட்டிருக்கும் கதவினை பயன்படுத்திப் புதுசாய் இந்த அட்வென்ச்சர் ஜானருக்கும் முக்கியத்துவம் தரணுமா ?' என்ற சிந்தனை !
 • அத்தகைய கதவினைத் திறந்திடும் பட்சங்களில் இராட்சஸ மிருகங்கள் மாத்திரமன்றி, பட்ஜெட் எகிறும் சாத்தியங்களும் உள்ளே புகுந்திடுமே ! என்ற நெருடல் !

இதெல்லாம் இப்போது பழகிப் போய்விட்டுள்ளதொரு வருடாந்திரச்  சமாச்சாரமாகி விட்டது தான் ; ஆனால் ஆண்டுமலரின் சாக்கில் கொஞ்சமே கொஞ்சமாய் நோஸ்டால்ஜியாவுடன், துவக்க நாட்களை நினைத்துப் பார்த்த போது பெருமூச்சு விடாது இருக்க இயலவில்லை ! ஓராண்டின் அட்டவணையினை 'ஏக் தம்'மில் வெளியிடும் அவசியங்கள் இல்லாது, take it as it comes என்று ஜாலியாய் இதழ்களை on the go திட்டமிட்டு, சஸ்பென்சாய் வெளியிட்டால் எவ்விதமிருக்கும் ? என்றதொரு பகற்கனவே மேலுள்ள பத்திகளில் பிரதிபலித்துள்ளன ! Maybe இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு நமது நம்பகத்தன்மைகளையும், கதைத் தேர்வில் பாண்டித்துவதையும் வளர்த்துக் கொண்டான பிற்பாடு அது சாத்தியமாகிடுமோ - என்னவோ ! இந்த நொடிக்கோ, தற்சமயத்து நடப்பே சுகப்படுமென்று படுகிறது & in any case இந்த "கம்பி மேலே நடக்குது ஷாமியோவ் !!" என்ற வித்தை காட்டும் படலத்திலும் செம த்ரில் இல்லாதில்லை ! திட்டமிடலிலும், தேர்வுகளிலும் ஜெயம் நாடி, கஜினி முகமது போல திரும்பத் திரும்பப் படையெடுப்பதும் ஒரு வருடாந்திரப் பரீட்சை போலவே நெஞ்சைப் படபடக்கச் செய்யத் தவறுவதில்லை ! So புலம்பிக்கொண்டே தேடல்களுக்குள் இன்னும் ஒரு மீட்டர் உள்ளே புகுந்திடவே விழைவேன் ! 

Anyways காத்திருக்கும் ஆண்டின் 'தல 75'  சார்ந்த எல்லா இதழ்களும் தேர்வாகியாச்சு & திட்டமிடலும் இறுதி வடிவம் பெற்றாச்சு ! ஆனால் 2023 புலரும் போது, போனெல்லி ஏதேனும் அதிரடியாய் அறிவித்து, கட்டைவிரலைத் தொண்டைக்குள் செருகிக் கொள்ளும் முனைப்பை நமக்கு செமத்தியாய் மேலோங்கச் செய்தார்களெனில், நிச்சயமாய் இறுதி நிமிட மாற்றங்கள் - டெக்ஸ் கதைகளில் மட்டும் இருக்கலாம் ! But இந்த நொடிக்கு இத்தாலிய சந்தா all set ! And இங்கே தான் உங்களின் பங்களிப்பு அவசியமாகிடுகிறது !! செப்டெம்பர் 30,1948 தான் டெக்ஸ் உலகைப் பார்த்த பொழுது ! So சரியாக அந்த தினத்தினில் அவரது 75th பிறந்த நாள்மலரை நாம் வெளியிட வேண்டுமென்று எண்ணியுள்ளேன் ! அந்த ஸ்பெஷல் இதழுக்கு ஒரு ஸ்பெஷல் தலைப்பு சூட்டுங்களேன் - ப்ளீஸ் ! இந்த முறை நான் இந்த ஆட்டத்துக்கு வரவே போவதில்லை ; நடுவராய்க் குந்திக்கொண்டு மட்டுமே இருக்கவுள்ளேன் ! So நீங்கள் முன்மொழியும் பெயர்களில் ஏதேனும் best ஆனதைத் தேர்வு செய்வது மட்டுமே எனது வேலையாக இருந்திடும் ! தேர்வாகிடும் தலைப்பினை முன்மொழியும் நண்பருக்கு அந்த ஸ்பெஷல் இதழ் மாத்திரமன்றி, அடுத்த ஆண்டினில் லயன் லைப்ரரியில் வரக்கூடிய டெக்ஸ் மறுபதிப்புகளுமே நமது அன்புடன் விலையின்றி அனுப்பிடப்படும் ! (ஒரேயொரு கோவையில் உள்ள ஒரேயொரு இரும்புக்கவிஞருக்கு, போட்டியினில் இடம்பெறாமலே இந்தப் பரிசுகளைத் தந்து விடலாமென்று இருக்கிறேன் ; so கவிஞரே - மற்ற புள்ளீங்கோ பிழைச்சுப் போகட்டும் !!)  

சரி, ரைட்டு - நடப்புப் பொழுதுகளை பார்க்கலாமா இனி ? இதோ - காத்திருக்கும் 38-வது ஆண்டுமலரின் அட்டைப்பட முதற்பார்வை : 

முன் + பின் அட்டைகளும் ஒரிஜினல்களே ; நமது டிசைனர் கோகிலாவின் மெருகூட்டலில் ! இது ஹார்ட் கவர் இதழல்ல என்பதை இங்கே நினைவூட்டி விடுகிறேன் guys ; புக் வெளியான பிற்பாடு "ஏமாத்திப்புட்டே மாமே !!" என்ற விசனங்களுக்கு பதில் சொல்ல 'தம்' லேது என்பதால் ! எப்போதும் போலவே அந்த கேக் முன்னான சிங்கத்துக்கும் அட்டைப்படத்தினில் இடம் ஒதுக்கியுள்ளோம் ! And இதோ - 2 சாகஸங்களிலிருந்தும் தலா ஒரு பக்க டிரெய்லர்கள் :

"புத்தம் புது சிறையொன்று வேண்டும்" 

"நில்..கவனி...சிரி..!"

இன்னமும் எத்தனை ரகம் ரகமாய்க் கதைகளைப் பார்த்தாலுமே, எத்தனைக்குப் பேனா பிடித்தாலுமே - கார்ட்டூன்களுக்குள் உலவிடும் மனநிறைவு சத்தியமாய் வேறெதிலும் கிட்டுவதில்லை ! ஒரேயொரு வருஷம் மட்டும் முழுக்க முழுக்க கார்டூன்களோடே காலம் தள்ளலாமென்ற ஒரு வரம் மட்டும் கிடைத்தால்.....ஆகா...ஆகக்கா...' இன்னா மாரி இருக்கும் !!! 

போன மாசம் டெக்ஸ் பெயரைச் சொல்லி அந்த ஓ.கே. Corral துப்பாக்கி சண்டையினை revisit செய்திருந்தோம் என்றால், இம்மாதம் லக்கியின் உபயத்தில் அதே மோதலை ஒரு சிரிப்புப் பார்வையில் ரசித்திடவுள்ளோம் - நில்..கவனி...சிரி..!  ஆல்பத்தின் வாயிலாக ! And "புத்தம் புது சிறையொன்று வேண்டும்" வழக்கம் போல டால்டன்களின் ரவுசுகளால் தெறித்திடும் ஜாலி மேளா ! Don't miss them folks !!

இந்த வாரத்தின் நடுவே சத்தமின்றி வெளிவந்த குட்டீஸ் காமிக்ஸ் (பீன்ஸ்கொடியில் ஜாக்) உங்களின் கவனங்களை இன்னும் பெரிதாய் ஈர்க்கவில்லை என்பது அதன் துக்ளியூண்டுச் சந்தா எண்ணிக்கைகளிலேயே புரிகிறது ! விற்பனையில் சாதிக்கிறதோ இல்லையோ - வாசிப்புக்குப் புதியவர்களான குட்டீஸ்களை கொஞ்சமே கொஞ்சமாய் ஈர்த்திட்டாலும் எனக்கது போதும் தான் ! And தனது 8 வயது மகள் இந்தக் கதையினை வீட்டிலுள்ளோருக்குச் சொல்லும் வீடியோவை எனக்கும் பகிர்ந்திருந்தார் நண்பர் ஒருவர் ; அந்த அழகான கீச்சுக் குரலில் அந்தக் கதையைக் கேட்கும் போது சத்தியமாய் ஏதோ சாதித்த உணர்வு உள்ளுக்குள் ! நீங்கள் எதையெதையோ சிலாகிக்கும் போதெல்லாம் மண்டைக்குள் 'ஜில்லென்று' இருக்கும் தான் ; but அடுத்த நொடிக்கு மேல் அது தலைக்குள் தங்கிடாது  ! ஆனால் மழலைகளின் பார்வைகளில், நமது இந்தக் "கதை சொல்லும் காமிக்ஸ்" பணி சின்னதாயொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்கு ஏகமாய் மனநிறைவை தருகிறது !! கையைக் கடித்தாலும் பரவாயில்லை - இந்த முயற்சியினைக் கைவிடக்கூடாதென்ற அவாவே மேலோங்குகிறது ! புனித மனிடோ கைகொடுப்பாராக !!

Before I sign out, துவங்கிடவுள்ள புத்தக விழாக்களின் circuit பற்றி கொஞ்சமாய் :

1 காத்திருக்கும் 24 ஜூன் முதலாய் தர்மபுரியில் துவங்கிடவுள்ள புத்தக விழாவிற்கு மெய்யாகவே செம அழகான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் விழா ஏற்பாட்டுக் குழுவினர் ! தினமும் whatsapp குழுவினில் கிடைத்து வரும் தகவல்களும், போட்டோக்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன ! நமக்கு இந்தப் பகுதிகளில் சுத்தமாய் விற்பனைப் பரிச்சயங்களே நஹி எனும் போது, இந்த மாவட்டத்தோடு பழகிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய்க் காத்துள்ளோம் ! அந்தப் பகுதிகளில் நண்பர்கள் யாரேனும் உள்ளனரா ? Just curious !!

2 தர்மபுரிக்கு அடுத்ததாய் ஓசூர் !

3 அதனைத் தொடர்ந்து கோவை !

4 அதன் பிற்பாடு ஈரோடு !! 

ஈரோட்டில் இம்முறை புத்தக விழா புதியதொரு இலக்கில் என்பதால்,   நமது வாசக சந்திப்பை எங்கு வைத்துக் கொள்வதென்ற கேள்வி ஓடிடுகிறது ! 

 • புது இடத்திற்கு அருகிலுள்ள சின்ன மண்டபங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதா ? 
 • அல்லது வழக்கம் போலவே LE JARDIN ஹோட்டலின் பேஸ்மெண்ட் பக்கமாய் ஒதுங்குவதா ? 

பழைய இடமேவா ? குட்டியான மண்டபமா ? குளுகுளு மரத்தடியா ?  Your thoughts ப்ளீஸ் ? 

அந்த ஆகஸ்ட் 6 தேதிக்கு ஈரோட்டில் ஆஜராக உங்களில் எத்தனை பேருக்கு வசதிப்படுமென்ற கணக்கிற்கேற்ப திட்டமிடலை இறுதிப்படுத்திடலாம் என்று தோன்றுகிறது ! 

Bye all...see you around ! Have a fun weekend !

Saturday, June 11, 2022

ஒரு ஜம்போ சவாரி !

 நண்பர்களே,

வணக்கம். நவீன வெட்டியான் ஸ்கோர் செய்வாரென்று எனக்கு நம்பிக்கை இருந்தது தான் ; ஆனால் கென்யா மெகா ஆல்பத்துக்கு நிகராய் ஸ்டெர்னின் "மேற்கே...இது மெய்யடா..!"வும் பேசப்படும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை ! சமீப வரவான ஸ்டெர்னின் கதைகளின் மூன்றையுமே பொறுமையாய் கொஞ்சம் புரட்டும் போது ஒரேயொரு விஷயம் மட்டுமே பிரதானப்பட்டிருப்பது தெரிகிறது ; and அந்த ஒற்றை விஷயமானது - வாழ்க்கையைச் சொல்லும் முயற்சிக்கு கதை என்பது முக்கியமல்ல என்ற கதாசிரியரின் calculated gamble தான் ! Maybe "வழியனுப்ப வந்தவன்" அறிமுக ஆல்பத்தினில்  கதைக்கென கொஞ்சமாய் அடித்தளங்கள் இருந்திருக்கலாம் ; ஒரு புது தொடருக்கு வாசகர்களைப் பரிச்சயப்படுத்திட அது எப்படியும் அவசியம் தான் ! ஆனால் ஒரு சிறு நகரம், அதன் கரடு முரடான ஜனம் ; அவர்களோடு ஸ்டெர்ன், லென்னி...என்ற template அமைத்தான பிற்பாடு தொடர்ந்துள்ள ஆல்பம் # 2 & 3-ல் கதைக்கென கிஞ்சித்தும் மெனெக்கெடவில்லை என்பது கண்கூடு ! சொல்லப் போனால் நமது ஆபீஸ் முன்னான மறியல் போராட்டத்துக்கென தலீவருக்கு நம்மாட்கள் ரெடி பண்ணியிருந்த வேப்பிலை லங்கோட்டின் அளவு கூட இராது இரு ஆல்பங்களிலுமான storyline ! "காட்டான் கூட்டம்" ஆல்பத்தினில் ஸ்டெர்ன் தனது வாசிப்பு தாகத்தின் பொருட்டு கேன்சஸ் நகர் செல்லும் ஓரிரவே மொத்தக்கதையின் பின்னணி என்றால், இந்த "மே..இ.மெ" சொல்ல விழைவதோ ஒரு பிரச்சனையினை ஒரு சமூகம் கரம்கோர்த்துக் கையாளும் விதத்தினை மட்டுமே ! இவை எல்லாமே மிகையில்லா life like நிகழ்வுகளின் சித்தரிப்புகளே தவிர்த்து ஒரு முழுமையான ஹீரோ ; அவர் வசிக்கும் மண்ணில் முளைவிடும் ஒரு சிக்கல் ; அதனை ஹீரோ தீர்க்கும் படலம் - என்ற மாமூலான templates மருந்துக்கும் கிடையாது !  அதனால் தான் இந்த லேட்டஸ்ட் ஆல்பத்தினில் கூட நம்மாள் ஸ்டெர்ன் action block-களில் கூட டம்மி பீஸாய் வலம் வந்தால் தப்பில்லை என்று கதாசிரியர் அனுமதித்துள்ளார் ! அனல் பறக்கும் துப்பாக்கிச் சண்டையின் நடுவே கூட வாளியைக் கொண்டு ஒரு சாத்து ; சம்மட்டியைக் கொண்டொரு போடு என்பதோடு நாயகரின் பங்கு நிறைவுற்றாலும் இந்த பாணியிலான கதை நகர்த்தலுக்கு பங்கமில்லை என்ற படைப்பாளிகளின் நம்பிக்கை தான் இந்தத் தொடரின் அச்சாணியே ! 

So துப்பாக்கிகளைத் தூக்காமலும், சில்லு மூக்குகளுக்குச்  சேதாரங்கள் நிகழ்த்தாமலும், விவேக யுக்திகளைக் கையில் எடுக்காமலும், ஒரு Wild West நாயகர் தனது இருப்பினை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கும் ஸ்டெர்ன் - நீங்கள் தந்திருக்கும் அந்தத் தேடல் லைசென்சின் பலனே ! கிராபிக் நாவல் தடத்திலும், ஜம்போவின் free flowing தடத்திலும் நமக்குப் பரிச்சயப்பட்டு நிற்கும் நாயக / நாயக பாணிகளைத் தாண்டியும் கதைகளைத் தேடிப் பிடித்துக் கூட்டியார எனக்கு நீங்கள் தந்துள்ள அந்த சுதந்திரம் இருந்திராவிடின் நிச்சயமாய் வாய்ப்பே இருந்திராது ! கிராபிக் நாவலின் தடமோ கொஞ்சம் dark ; கொஞ்சம் அழுகாச்சி என்றிருக்க, கொரோனா தந்த முகாரி ராகங்களுக்கு மத்தியில் அந்த dark பாணிகள் மையிருட்டாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் !

ஜம்போ காமிக்ஸ் !! அழுகாச்சி லேது ; கதைக்கே முக்கியத்துவம் - என்ற பாணியிலான ஜம்போ - 2018 முதலாய் இந்த one shot தேடல்களுக்கு உரம் தந்த தனித்தடம் ! (அது ஏன் - "ஜம்போ காமிக்ஸ்" என்று பெயர் ?? என்ற கேள்வி அவ்வப்போது காதில் விழுமொரு வினவல் தான் ! VRS வாங்கிப்புட்டு டாட்டா சொல்லும் நாளொன்று புலரும் போது மறக்காமல் கேளுங்கோ ; நிச்சயமாய் பதில் சொல்லுவேன் !) ஜம்போ இதுவரைக்கும் 4 சீசன்களைப் பார்த்துள்ளதை STV உபயத்தில் பட்டியலாய்ப் பார்த்தாச்சு ! ஆனால்  SMASHING '70s வருகையினைத் தொடர்ந்து அடுத்த வருஷத்திலும் ஜம்போவுக்கு இடமிராது என்பதே (தற்போதைய) நிலவரம் ! So "இந்த one shot ஜம்போ கதைத்தேடல்கள் தொடரணுமா ? அல்லது இப்போதைக்கு ஓய்வெடுக்கட்டுமா ?" என்ற கேள்வியே இந்த வாரயிறுதியின் அலசலின் topic !!

ஸ்டாக்கில் உள்ள 20 ஜம்போ ஆல்பங்களை ஆபீசில் இன்றைக்கு காலையில் பார்த்த போது கலவையான சிந்தைகள் உள்ளுக்குள் !!  என்ன தான் பாசமான காக்காம்மாவாக இருந்தாலுமே, தங்கம் விற்கும் விலைக்கு,  தனது இளசுகளை பொன்குஞ்சுகளாய்க் கருதுவதெல்லாம்  இன்றைக்கு ரெம்போவே costly ஆன ஒப்பீடாகிடக்கூடும் ! So - 4 வருஷங்களின் இந்த "ஜம்போ" முயற்சியினை ஒட்டுமொத்தமாய்ப் பார்த்த உடனே "எனக்கு அவை அத்தனையுமே ஜூப்பர் டூப்பர் ஹிட்களாய்த் தென்பட்டன !" என்றெல்லாம் அள்ளிவிட மாட்டேன் !  மாறாக, அவற்றின் குறைகள் ; பிழைகள் ; இன்னும் better ஆக  செய்திருக்கலாமோ ? என்ற நினைப்புகளே மேலோங்கின !

Anyways - இதோ அந்த ரெண்டு டஜனின் பட்டியல் :

ஜம்போ - சீசன் 1 :

1.காற்றுக்கு ஏது வேலி?- இளம் டெக்ஸ்

2.ஒரு குரங்கு வேட்டை-ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன்

3.பனியில் ஓரு பிரளயம்-James Bond 007

4.Theஆக்சன் ஸ்பெசல்- Fleetway கதைத் தொகுப்பு 

5.பயணங்கள் முடிவதில்லை-ஜெரெமியா

6.நிழலும் நிஜமும்- James Bond 007

ஜம்போ சீசன் 2 :

8.தனியொருவன்...Lone ரேஞ்சர்

9.சிங்கத்தின் சிறுவயதில்...இளம் டெக்ஸ்

10.லக்கி லூக்கை சுட்டது யார் ?

11.சுறாவேட்டை...James Bond 007

12.அந்தியின் ஒரு அத்தியாசம...மார்ஷல் சைக்ஸ்

13.நில்..கவனி...வேட்டையாடு...Zaroff

ஜம்போ சீசன் 3 :

14.பிரிவோம் சந்திப்போம்...கி.நா.

15.நில்..கவனி..கொல்...James Bond 007

16.தனித்திரு தணிந்திரு...கி.நா.

17.மா.து.ஜே.சலாம்...கி.நா.

07.காலவேட்டையர்...கி.நா.

18.தகிக்கும் பூமி..Lone ரேஞ்சர் 

ஜம்போ சீசன் 4 :

20.ஒரு தலைவனின் கதை-..ஜெரோனீமோ

21.சித்திரமும் கொலைப்பழக்கம்..கி.நா.

22.ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்- அண்டர்டேக்கர்

23.போர் முனையில் தேவைதைகள்-கி.நா.

24.உளவும் கற்று மற- மாட்டா ஹாரி

25.மேற்கே இது மெய்யடா-ஸ்டெர்ன்

பட்டியலையும் சரி, புக்குகளையும் சரி, நிறைய நேரத்துக்கு  உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ! As always - ஒவ்வொரு ஆல்பத்தின்  பின்னணியிலும், ஆங்காங்கே போட நேர்ந்த மொக்கைகள் சார்ந்த நினைவுகள் 'சர்ர்ர்ர்..' என்று மின்னலாய் றெக்கை கட்டின ! நினைவுகளை சற்றே உறக்கம் கிடத்தி விட்டு, இந்த 24 இதழ்களை மூன்று பிரிவுகளாய்ப் பிரித்துப் பார்க்க முனைந்தேன்  - "சூப்பர் hits " ; "சுமார் ஹிட்ஸ்" & பீப்பீ ஹிட்ஸ் !" என்ற ரீதியில் !! Of course - இந்த முயற்சியினில் நீங்களும், நானும் பல இடங்களில் முரண்படக்கூடும் தான் ; but இது இந்த வாரயிறுதியின் எனது உரத்த சிந்தனைகள் மட்டுமே என்று எடுத்துக் கொண்டீர்களெனில் வேலை சுலபமாகிடும் !

முதலில் கண்ணில்படுவது  - கிட்டத்தட்ட ஒவ்வொரு சீசனிலும் இடம்பிடித்திருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007 தான் ஜம்போவில் கோலோச்சியுள்ளார் என்ற விஷயம் ! புதுயுக ஜேம்ஸ் பாண்ட் - புதிய பாணியிலும், முழுவண்ணத்திலும் தெறிக்க விட்டிருக்கும் ஆல்பங்கள் 4 வெளியாகியுள்ளன & அவற்றுள் ஒன்று ஏற்கனவே விற்றும் தீர்ந்து விட்டது !  விற்பனைகளில் ஒரு இதழ் சாதித்துள்ளதா ? சோதித்துள்ளதா ? என்பதே ஒரு ஹிட்டின் முதல் அளவுகோல் எனும் போது 007-ன் கலர் இதழ்கள் அனைத்துமே "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பெரிய மெனெக்கெடல்கள் ஏதுமின்றி புகுந்து விடுகின்றன ! நம்மிடம்  கைவசமுள்ள 3 இதழ்களை யாரேனும் இப்போவுமே வாங்கி வருகின்றனரா, என்பது தெரியலை ; ஆனால் வெளியான சமயத்தினில் செம சுறுசுறுப்பு காட்டிய இதழ்கள் இவை என்பது நினைவுள்ளது ! So சாகாவரம் பெற்ற இந்த சீக்ரெட் ஏஜெண்டுக்கு  "ஜம்போவின் தூண்களில் # 1 !!" என்ற முத்திரையை நல்குவதில் குழப்பங்கள் லேது !

4 ஹிட்களோடு முன்னணியில் நிற்பவர் மூத்தவர் ஜேம்ஸ் எனில், கீழ்க்கண்ட stats சகிதம் நிற்கும் 'சின்னவரை' சித்தே பாருங்களேன் :

இளம் டெக்ஸ் வில்லர் !

வெளியானவை - 2 இதழ்கள் !

வெளியான இரண்டே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்தவை - 2 இதழ்கள் !

அதிலும், ஜம்போவுக்குத் துவக்கம் தந்த "காற்றுக்கென்ன வேலி?" பற்றிச்  சிலாகிப்பதெனில், உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியும் ரேஞ்சுக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு என்னால் 'தம்' கட்டியபடியே காலட்சேபம் செய்து கொண்டே செல்ல முடியும் ! சொல்லி மாளா விற்பனையும், வரவேற்பும் பெற்ற இதழ் எதுவென்பதை ஒரு போதும் மறக்க இயலாது ! So "ஜம்போவின் தூண் # 2 " என்ற அடையாளத்தை அலட்டல் அல்லாது அள்ளி ஜோப்பியில் போட்டுக் கொள்பவர் "சின்னத் தல" - இளம் டெக்ஸ் தான் !

"சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பொட்டு வியர்வையும் சிந்திடாது, 'ஜிலோ'வென்று அடுத்ததாய் நுழையும் இருவருமே வெட்டியான் தொழில் செய்பவர்களே ; வன்மேற்கின் பிரதிநிதிகளே ; பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகின் பிள்ளைகளே & last சீசனில் ஜம்போவுக்குள் கால்பதித்த ஆசாமிகளுமே ! Enter - 'தி அண்டர்டேக்கர்" & "ஸ்டெர்ன்" !! 

"ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" - நடப்பாண்டில் தத்தித் தடுமாறிக் கொண்டிருந்த ஜம்போவுக்கு நிமிர்ந்து நிற்கவொரு திடம் தந்ததெனில், எழுந்து நின்ற ஜம்போ சீசன் 4-க்கு கேக் மீதான ஐசிங் ஆகிப் போன பெருமை ஸ்டெர்ன் தோன்றிய "மேற்கே...இது மெய்யடா!" வுக்கு நிச்சயம் உண்டு ! In fact - மும்பை இந்தியன்களின் லேட்டஸ்ட் IPL  வேட்டையைப்  போல முழுசுமாய் ஊற்றிக் கொள்ளாது, ஜம்போவின் சீசன் 4-க்குத் தலை தப்பிக்க ஒரு முகாந்திரம் தந்தவையே இந்த 2 இதழ்கள் தான் ! So இந்த காமிக்ஸ் வெட்டியான்களுக்கு, collective ஆக   "ஜம்போவின் தூண் # 3" என்ற அடையாளத்தையும், "சூப்பர் ஹிட்ஸ்" பட்டியலுக்குள் 2 இடங்களையும் வழங்கிடுவதில் நெருடல் இருக்கவில்லை ! 

அடுத்ததாய் "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் நுழையும் இதழ் - எக்கச்சக்க  சர்ச்சைகளை ஈட்டியதொரு ஆல்பமே ! பிரவாகமெடுத்த விமர்சனங்களின் பெரும்பான்மை பாசிடிவோ, நெகடிவோ - அதனை இம்மிகூடச் சட்டையே செய்திடாமல் விற்பனை எனும் அளவுகோலில் நூற்றுக்கு முன்னூற்றி நாற்பத்தியெட்டு மதிப்பெண்கள் பெற்றது - ஜெரெமியா தொடரின் "பயணங்கள் முடிவதில்லை" தான் ! பிரமாதமான தயாரிப்புத் தரம் ; புரட்டப் புரட்ட ஓவியத் தாண்டவங்களாய் விரியும் வண்ணப் பக்கங்கள் ; ஹார்ட்கவர் - என்று வெற்றிக்குத் தேவையான ஐட்டங்கள் நிறையவே இருந்தாலும்,  பத்தியச் சாப்பாடு ரேஞ்சில் காரமோ, வேகமோ இன்றி கதைக்களங்கள் 'தேமே' என்றிருந்ததை அலசல்களில் வெளுத்தெடுத்து இருந்தீர்கள் ! ஆனால் வெளுக்கும் வேகத்தில், வீட்டில் திருமதிகளின் பட்டுப் புடவைகளை துவைக்க Surf Excel வாங்குவதற்குப் பதிலாகவுமே  "ஜெரெமியா"வை வாங்கி வைத்தீர்களோ என்னவோ - புக்ஸ் ஆறோ, ஏழோ மாதங்களிலேயே காலியாகி விட்டிருந்தன ! (அப்புறமாய், ஆங்காங்கே புழக்கடைகளில் எத்தினி பேரின் சொக்காய்கள், திருமதியினரிடம் சிக்கிக் கிழிபட்டனவோ - தெரியலை !!) So சர்ச்சைக்குரிய இதழாய் இருந்தாலுமே, ஜம்போவின் ஒரே ஹார்ட்கவர் இதழ் என்ற கூடுதல் அடையாளத்துடன், ஜம்போவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டுக்குள் நுழைகின்ற தொடர் "ஜெரெமியா" !

தொடர்ந்து அந்த elite பட்டியலினுள் புகும் இதழ்கள் அனைத்துமே one shots தான் ! வெவ்வேறு ஜானர்களில் இருந்தாலும், அவை அனைற்றிற்குமே பொதுவான ஒரே சமாச்சாரம் - "கதைகளின் வலு" என்பது மாத்திரமே !

**ஒரு ஓய்ந்து போன நீதிக்காவலரின் உள்ளுக்குள்ளான போராட்டத்தை காட்டியது "அந்தியின் ஒரு அத்தியாயம்" !

**அமேசானின் பரந்து விரிந்த கானகப் பின்னணியில் மிரட்டும் சித்திரங்களுடன் ஒரு ஆடுபுலியாட்டத்தைப் பார்த்தோம் - "நில்..கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் !

**வன்மேற்கின் மனித முகத்தை தெறிக்கும் சித்திரங்களோடு சொல்ல முற்பட்டது "பிரிவோம்..சந்திப்போம் !"

**ஒரு தாயின் பாசப் போராட்டத்தை ஒரு சமகால யுத்த முன்னணியிலிருந்து கார்ட்டூன் பாணிச் சித்திரங்களோடு சொன்னது "மா..துஜே ஸலாம் !" 

இவை நான்குமே மாஸ் ஹிட்டடித்த இதழ்கள் & ஒவ்வொன்றுமே ஒரு விதத்தில் மனித மனதின் பரிமாணங்களை அளவிட முயன்றது கண்கூடு ! So "ஜம்போவின் தூண் # 4" என்ற ஸ்டிக்கரை இந்த ரகக்கதைகளின் மீது ஒட்டுமொத்தமாய் ஒட்டிடலாம் என்பேன் !

So சூப்பர் ஹிட்ஸ் லிஸ்டினில் இடம் பிடிப்பவை 4 + 2 + 2 + 1 + 4 = 13 இதழ்கள் !! 

Of course இந்த நம்பரில் உங்களில் நிறைய பேருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் தான் ; ஆனால் எனது அளவீடுகள் ரசனைகள் சார்ந்தவை மட்டுமே அல்ல எனும் போது this number of mine will stand up to scrutiny !!

*விற்பனை

*விமர்சனங்கள்

*வெளியான காலகட்டத்துக்குப் பின்புமான விற்பனை 

என்பனவே எனது அளவீடுகள் ! இவை ஒவ்வொன்றிலும், மேற்படிப் 13-ம்  தேறியுள்ளன !

"சுமார் ஹிட்ஸ்" பட்டியலில் இடம்பிடிக்கும் ஆல்பங்களின் சகலமுமே one shots - ஒற்றை நாயகர் LONE ரேஞ்சரைத் தவிர்த்து ! "தனியொருவன்" என்று கலரில் சீசன் 2-ல் ஆஜரான இந்த முகமூடிக்காரர் மீது நான் நிரம்பவே நம்பிக்கை கொண்டிருந்தேன் என்பது தான் நிஜம் ! இவர் நிச்சயமாய் நம் மத்தியில் ஒரு முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கை நிரம்பவே இருந்தது எனக்கு ! ஆனால் நெடும் சாகசங்களாய் இவரது கதைகள் இல்லாதது காரணமோ ; அல்லது - "ஞான் சுடும் ..பட்சே உன்னைக் காயப்படுத்தில்லா !" என்ற ஹீரோவின் அநியாய நல்லபிள்ளைத்தனம் காரணமோ தெரியலை - Lone ரேஞ்சர் எதிர்பார்த்த ஜெயத்தைத் தொடவில்லை !  2 ஆல்பங்கள் தொகுப்புகளாய் வெளிவந்தும் - was only an average success !

சுமாராய்ப் போன மீத ஆல்பங்களின் லிஸ்ட் இதோ :

தனித்திரு...தணிந்திரு..!

ஒரு குரங்குச் சேட்டை..!

போர்முனையில் தேவதைகள் !

இதனில் last mentioned - "போர்முனையில் தேவதைகள்" உங்கள் விமர்சனங்களில் சாத்து வாங்கியிருப்பினும் - விற்பனைகளில் did very decently ! So "பீப்பீ லிஸ்ட்" பிரஜையாகிடாது - மத்திம லிஸ்டுக்குள் மண்டையினை நுழைத்துக் கொண்டுள்ளது ! Which means - 5 books in the "சுமார் லிஸ்ட்" !

இறுதியான அந்த "பீப்பீ லிஸ்ட்"  முழுக்கவே one shots சமாச்சாரங்கள் தான் ! 

* லக்கி லூக்கைச் சுட்டது யார் ?

(கார்ட்டூன் நாயகரை கி,நா.பாணியில் பார்த்ததில் நம்மவர்கள் ஆகிப் போனார்கள் காண்டு ; இந்த இதழும் தலையில் போட்டுக்கொண்டது  துண்டு !!)

*கால வேட்டையர் 

( புய்ப்பங்களால் அநியாயத்துக்கு ஆளையே அமுக்கும் கதைக்களம் !!)

*சித்திரமும் கொலைப்பழக்கம்

(எனக்கு ஓ.கே,வென்று தோன்றிய கதை தான் ; ஆனால் ஓடவிட்டே சாத்து வாங்கித் தந்தது தான் பலனாகியது !)

*The ACTION ஸ்பெஷல் !

(சில புராதனங்கள் மியூசியங்களில் இருத்தலே தேவலாம் - என்ற யானைப்பாலை நீங்கள் எனக்குப் புகட்டிய இதழிது !)

*ஒரு தலைவனின் கதை!

(சில தலீவர்கள் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதே சாலச் சிறந்தது ! என்பதை புரிய வைத்த ஆல்பம் !)

"உளவும் கற்று மற !" 

(என்னா அடி !!! ஆத்தாடியோவ் !!)

So 6 இதழ்கள் இந்த பீப்பீ ஊதிய லிஸ்ட்தனில் !

ஆக, 55% செம ஹிட்ஸ் ; 20% சுமார் ஹிட்ஸ் & 25% சொதப்பல்ஸ் என்பதே ரிப்போர்ட் கார்ட் சொல்லும் தகவல் ! நிச்சயமாய் 55 சதவிகிதம் என்பது நல்லதொரு நம்பர் தான் ; மறுப்பதற்கே இல்லை ! But மெனுவில் ஒரு நூறு ஐட்டங்கள் இருந்தாலும், அந்த நூறையுமே ஒரே சுவைக்குத் தினம் தினமும் தயாரிக்கத் தெரிந்திருக்கும் A2B போலான தேர்ச்சி தான் நமது லட்சியம் எனும் போது 55% மகிழ்வூட்டவில்லை - at least எனக்கு ! அது மாத்திரமன்றி, இந்த வெற்றியின் பின்னுள்ள 4 இதழ்கள் - ஜேம்ஸ் பாண்ட் 007 எனும் கமர்ஷியல் நாயகர் + "இளம் டெக்ஸ்" எனும் சுனாமியின் உபயம் என்பதையும் மறக்கலாகாது ! டூரிங் டாக்கீஸ் டெண்டு கொட்டாயில் இவர்களது சாகசங்களை ஒட்டியிருந்தாலுமே வெற்றி நிச்சயம் அல்லவா ? So ஒட்டுமொத்த வெற்றிக்கு இவர்களைத் தவிர்த்தான இதர கதைகளின் பங்களிப்பையும் பாரபட்சமின்றிப் பார்த்திடல் அவசியம் என்ற தோன்றுகிறது எனக்கு !

Maybe தொடரும் காலங்களின் திட்டமிடல்களில் ஜம்போவுக்கும் இடித்துப் பிடித்தாவது இடம் கிட்டிடும் பட்சத்தில், கதைத்தேர்வினில் இரட்டிப்புக் கவனம் அவசியம் என்பதும் அப்பட்டமாய்ப் புரிகிறது ! பிராங்கோ-பெல்ஜிய மனிடோ கருணை காட்டுவாராக !!

So இந்த ஜம்போ அலசலின் இறுதியினில் எனது கேள்விகள் இவையே :

1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ? (டப்ஸா பதில் சொன்னால் ஜடாமுடி ஜானதன் தொகுப்புகள் உங்கள் கனவில் ஒவ்வொரு அமாவாசைக்கும் வரும் - கபர்தார் !!)
2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?
3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?
5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?
6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?

Before I sign out, ஒரு மகிழ்வான தகவல் : நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கென நாம் இணைந்து திரட்டிய நிதி - அவரது 2 புதல்விகளின் கல்விக்கு ; மேற்படிப்புக்கு ; திருமணத்துக்கு - என்ற உதவும் விதங்களில் தேர்வு செய்யப்பட ஷேம நிதிகளில் முதலீடு செய்தாச்சு ! துவக்கம் முதலே ஒத்தாசை செய்த டாக்டர் A.K.K.ராஜா அவர்களுக்கும், முதலீட்டுக்கு வழிகாட்டிய திருப்பூர் ப்ளூபெரிக்கும், இயன்ற நிதிகளைத் தந்த அன்புள்ளங்களுக்கும், பழனியின் குடும்பத்துக்காகப் பிரார்த்தித்த நெஞ்சங்களுக்கும், நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! இதோ, ரொம்பச் சமீபமாய்க் கூட, அந்தப் பிள்ளைகளின் கல்விக்கென ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் ஒரு தொகையினை வழங்கிட நண்பர் ஒருவர் முன்வந்திருக்கிறார் ! பழனி...நீங்கள் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தினை நிரப்பிட ஒரு வாசகக்குடும்பமே தன்னால் இயன்றதைச் செய்து வருகிறது !! ஒரு தூரத்து நாளில் உங்கள் பசங்கள் அழகாய்க் கற்றுத்தேர்ந்து, வாழ்க்கையில் ஒரு அழகான இடத்தினை எட்டிப் பிடித்திடுவதை கண்டு ரசிக்க ஒரு நூறு தாய்மாமன்கள் இங்கே காத்திருப்பதை நீங்கள் மேலிருந்து தரிசிக்காமல் போக மாட்டீர்கள் ! Rest in Peace Bro !`

Bye all...see you around ! Have a fun Sunday !!

P.S : கதை சொல்லும் காமிக்ஸ் - பீன்ஸ் கொடியில் ஜாக்  - 15-ம் தேதியன்று புறப்படும் !

Sunday, June 05, 2022

மேற்கில் மிகையில்லையடா !!

 நண்பர்களே,

வணக்கம்.  தற்செயல் நிகழ்வுகள் அவ்வப்போது சிந்திக்கச் செய்வது நமக்குத் புதிதே அல்ல தான் ; இதோ இந்த ஜூன் மாதத்துக்கென தற்செயலாய் அமைந்துள்ள 2 இதழ்கள் - வானவில்லின் இரு வெவ்வேறு முனைகளாய் நின்று ஒரு 'அடடே' போடச் செய்கின்றன !  

*கென்யா

*ஸ்டெர்ன் 

முந்தையது மிகையோ மிகையான கற்பனையின் பிள்ளை எனில் ; பின்னது யதார்த்தமோ யதார்த்தமான பதார்த்தம் ! இவை இரண்டுமே பிராங்கோ-பெல்ஜியப் புள்ளீங்கோ தான் ; இரண்டுமே பிரெஞ்சில் வெவ்வேறு பாணிகளில் ஹிட்டானவை தான் & எவ்விதத் திட்டமிடலுமின்றி நம் மத்தியில் ஒற்றை தேதியின் ரிலீஸ் கண்டுள்ளன ! கென்யா பற்றிய First Day First Show பாணியிலான நமது அலசல்களின் பெரும்பான்மை செம பாசிட்டிவ் என்பதில் ஐயங்களில்லை ! தொடரும் நாட்களிலும் ஒளிவட்டத்தினை இந்த இதழே குத்தகைக்கு எடுத்துத் தொடர்ந்திட்டால் வியப்பில்லை எனும் போது - நாம் இந்தப்பதிவினில் பாய்ச்சும் தண்ணீரானது, அந்த ஒல்லிப்பிச்சான் வெட்டியானின் திக்கில் ஓடட்டுமே என்று நினைத்தேன் !

ஒவ்வொரு 15 நாட்களுக்கும் நமது அயல் தேசத்துப் பதிப்பகங்களிலிருந்து, தொடரவுள்ள வாரங்களில் வெளியாகிடவுள்ள அவர்களின் ரிலீஸ்கள் பற்றி ஏகப்பட்ட சித்திரங்களுடன், விவரிப்புகளுடன் நீள நீளமாய் மின்னஞ்சல்கள் வந்து விழும் நாட்களில் - "செத்தாண்டா சேகரு !!" என்று தான் சொல்லத்தோன்றும் ! அந்த நாட்களில் வெள்ளையும், சொள்ளையுமாய், வீட்டிலிருந்து புறப்பட்டது நினைவிருக்கும் தான் ; ஆனால் வீடு திரும்பும் வேளையிலோ, புதுசாய் லாலிபாப் சாப்பிட்டுப் பழகும் பாப்பாவின் சொக்காயைப் போல, சகலமும் ஜொள்ளுமயமாகிக் கிடப்பது வாடிக்கை ! "ஐயோ...ஐயோ..அட்வென்ச்சர் கதைகள் !! ; யம்மம்ம்ம்மா...புது டிடெக்டிவ் தொடர்கள் ; ஆத்தாடிக்காத்தாடியோவ்...மிரட்டும் கி.நா......" என்ற ரீதியில் அந்தத் தருணங்களில் மறையைக் கழற்றி கையில் தந்து விடும் - படைப்பாளிகளின் அசாத்திய கதைகளின் ரேஞ் !! எங்கிருந்து தான் இப்படிப்பட்ட diverse கதைக்கருக்களைத் தேடிப் பிடிப்பார்களோ இந்த மஹானுபாவர்கள் ? என்ற கேள்வி தவறாது முன்னிற்பதுண்டு ! 

கொரோனா ; அதன் எதிரொலியாக அன்றாட அழுகாச்சிகள் என்று கடந்த 2 ஆண்டுகளின் பெரும் பகுதி இறுக்கமாகவே நகன்றதைத் தொடர்ந்து - "கமர்ஷியல் கதைகளுக்கே முன்னுரிமை ; no அழுகாச்சிகள் or புரியாத நொய்யு நொய்யு கதைகள்" என்ற தீர்மானத்துக்கு நம்மில் தொண்ணூறு சதவிகிதம் பேர் கை தூக்கியிருந்தாலுமே, இந்த "மின்னஞ்சல் நாட்களில்" எனது வைராக்கியங்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது ! "டயட்டில் இருக்கோம்...பசங்க இன்னிக்கு full கட்டு கட்டுற வேகத்திலே ஜூனியர் குப்பண்ணாக்குப் போய்க்கிட்டு இருந்தாலுமே, நாம கூட போறோம் ; நாசூக்கா ரெண்டே சப்பாத்தி வாங்குறோம் ; ஜென்டிலா சாப்டுட்டு கைய கழுவிடறோம் !" என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருப்போம் தான் ! ஆனால் அங்கே போய் மெனுவை வாசிக்கும் போதே உள்ளாற பெருக்கெடுக்கும் எச்சிலை லபக்கு லபக்கென்று விழுங்கி விட்டு - "ஆங்...அது வந்து...இந்த சப்பாத்தி...அந்த குருமா.!!" என்று ஆர்டர் சொல்லும் பொழுதுக்குள் பக்கத்து டேபிளில் சும்மா 'சர்ர்ர்ர்ர்' என்ற ஓசையுடன் எவனாச்சும் ஒரு Sizzler வாங்கி இருப்பான் !! 'அட..போங்கடா டேய்...என்றபடிக்கே சப்பாத்தியை கேன்சல் பண்ணி விட்டு, கண்ணுக்குச் சிக்கிய சகல heavyweight ஐட்டங்களுக்கும் ஆர்டர் பண்ணுவோமில்லையா - அதுவே தான் எனது பிழைப்புமே ! இதோ - சமீபத்தில் நான் பார்த்து வைத்திருக்கும் 2 கிராபிக் நாவல்கள் என்னை உறங்க விடாது வதைத்து வருகின்றன ! "கையில் காசு இல்லாத வேளையினில், எப்போ போடுவோம்னே தெரியாத கதைகளை வாங்கிக் குவிக்காதேடா மலைக்குரங்கே !!" என்று மண்டைக்குள் ஒரு குரல் கேட்டாலும் - "ச்சீ..பே அந்தாண்டை !!" என்ற பதில் குரலே சவுக்கு சங்கரின் மாடுலேஷனில் ஓங்கி ஒலிக்கும் ! பலன் ??  கொள்முதல்கள் எனும் தொடர்கதை !

அத்தகையதொரு கொலைவெறிக் கொள்முதல் மேளாவின் பலனே நமது ஸ்டெர்ன் ! முதல் பாகத்தினை இங்கிலீஷில் வாசித்த பொழுதிலேயே அந்த நாயகனுடன் ஏதோவொரு  இனம்புரியா சிநேகம் தோன்றியிருந்தது எனக்கு ! கபாலத்துக்கு 'டூ' விட்டுக் கிளம்பி இருந்த கேச பாணியில் நாங்கள் இருவருமே ஒன்றியிருந்தது தான் பின்னணிக் காரணமோ - என்னவோ !! ஏற்கனவே ஒரு சீரியஸ் சித்திர வெட்டியான் நம் மத்தியில் ஹிட்டடித்திருக்க, இந்த பென்சில் பாடி நாயகர் செமி கார்ட்டூன் சித்திரங்களில் வசீகரிப்பதாய் எனக்குப் பட்டதுமே இன்னொரு காரணமாய் இருந்திருக்கக்கூடும் ! Whatever - எனது முதல் எண்ணம் ஸ்டெர்னின் 3 கதைகளை 'ஏக் தம்மில்' ட்யுராங்கோ பாணியில் வெளியிடுவதே ! ஆனால் அது ஓவரோ ஓவரான விஷப்பரீட்சையாகிடுமோ ? என்ற பயமும் எட்டிப் பார்க்க, சடுதியில் அந்த எண்ணத்தைக் கை விட்டேன் ! 

ஆல்பம் # 1ம்  வெளியானது ; ஆனால் பெரிய ஆரவார வரவேற்பெல்லாம் இல்லை தான் !! எனக்கு கொஞ்சம் 'சப்'பென்று ஆகிப் போனது ! அதன் பின்பாய்த் தான் ஸ்டெர்னுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாமா ? என்ற opinion poll நடத்தியதெல்லாம் ! ஒரே இதழோடு மூட்டை கட்டும் அளவுக்கு இவர் ஜடாமுடி ஜானதன் ரேஞ்சுக்கு டப்ஸா பார்ட்டி அல்ல என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது ! அதிர்ஷ்டவசமாய் "இன்னொரு வாய்ப்புக்குத் தகுதியானவர் !!" என்ற ரீதியில் உங்களின் தீர்ப்பும் அமைந்திட, இந்தக் கலாச்சாரக் காதல வெட்டியானுக்கு இரண்டாம் வாய்ப்பும் சாத்தியமானது ! நிஜத்தைச் சொல்வதானால் - எனது பார்வையில் இந்தத் தொடரின் best - ஆல்பம் # 1 தான் ! இரண்டாம் ஆல்பத்தில் ஒரு கோவணத்துணி அளவிற்கே plot இருப்பதாய் எனக்குத் தோன்றிட, அதன் வெற்றி சார்ந்து பெருசாய் எதிர்பார்ப்புகளெல்லாம் என்னிடம் இருக்கவில்லை ! ஆனால் - ரைட்டிலே கை காட்டி, லெப்ட்டுக்கா இண்டிகேட்டரைப் போட்டு , நேரா போகும் கலையில் நீங்களுமே வல்லுநர்கள் என்பதை ஸ்டெர்ன் # 2 க்கு செம வரவேற்பளித்து நிரூபித்து விட்டீர்கள் ! "இது surefire hit " என்ற நம்பிக்கையை விதைக்கும் ரூபின் போலான தொடர்களின் வெற்றிகளைக் காட்டிலும், இது போன்ற off the beaten track நாயகர்களின் வெற்றிகள் எப்போதுமே என்னளவிற்காவது ஸ்பெஷல் ! So எப்போதோ வாங்கிப் போட்டிருந்த ஸ்டெர்ன் # 3 கதையை பரணுக்குள் திணித்திடும் அவசியம் இருந்திடாதென்ற நம்பிக்கை புலர்ந்த போதிலும், இவரை ஒரு mainstream சந்தா நாயகராய் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு நம்மில் நூற்றுக்கு நூறு சதவிகிதத்தினரை ஸ்டெர்ன் வசீகரித்து விட்டதான நம்பிக்கையும் எனக்குள் பிறந்திருக்கவில்லை ! At best - மெயின் டீமில் யாருக்கேனும் வவுத்தைக் கலக்கிடும் பட்சத்தில், அவர்கள் களத்தை விட்டுத் தாற்காலிகமாய்க் கிளம்ப நேரிடும் சமயங்களில், ஓசையின்றி கிரவுண்டுக்குள் நுழைய வேண்டிய 12 வது ஆட்டக்காரராக மட்டுமே இவரைப் பார்த்தேன் ! And அந்த வாய்ப்பும் இதோ, இப்போது ஜம்போ சீசன் # 4-ல் கிட்டியிருக்க, "மேற்கே ...இது மெய்யடா !" உங்கள் கைகளில் !

மேலோட்டமாய் இது சுலபமான நேர்கோட்டுக் களமாக தோன்றினாலும், உரிக்க, உரிக்க subtle ஆன பல லேயர்கள் இருப்பது தென்படக்கூடும் ! So  இதனில் பணியாற்றுவது சுலபமே அல்ல தான் ! மொழிபெயர்ப்பினில் அந்தக் கரடு முரடான பேச்சு வழக்கு பாணியே அமல் என்றாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் ஒரு விதத்தில் வித்தியாசமாய் குரல்களை கதாசிரியர் உருவகப்படுத்தி இருப்பதாய் எனக்குத் தோன்றியது ! ஸ்டெர்ன் அமைதியாய், ஆர்ப்பாட்டங்களின்றி ; நண்பன் லென்னியோ இன்னும் கொஞ்சம் refined ஆக ; ஊருக்குள் உள்ள அந்த பிராத்தல் பெண்கள் கொச்சையாக ; மேயரோ சவடாலாய், நக்கலாய், காமெடியாய்  பேசிட வேண்டுமென்று நினைத்தேன் ! Trust me - அதனில் நான் கரை சேர்ந்திருந்தேனா - இல்லையா ? என்பது தெரியாது ; ஆனால் குறுக்கைக் கழற்றியதென்பது மட்டும் தெரியும் ! பற்றாக்குறைக்கு பக்க எண்ணிக்கையுமே  72 / 74 எனும் பொழுது - எழுத, எழுத பக்கங்கள் முளைத்து வந்து கொண்டே இருப்பதாய்த் தோன்றியது ; moreso மூன்றே நாட்களின் அவகாசத்தினில் இதை பூர்த்தி செய்திட வேண்டிய கட்டாயம் இருந்ததால் ! இப்போதைக்கு உங்களில் சொற்பமானோரே இம்மாதத்து ஸ்டெரனுடன் அன்னம் தண்ணீர் புழங்கியுள்ளீர்கள் என்பது obvious ; ஆனால் பழகியிருக்கும் அந்தச் சிறு அணி நண்பர்களிடம் மனுஷன் ஸ்கோர் செய்திருப்பது புரிகிறது ! இன்னுமும் பரவலாய் விமர்சனங்களும், அலசல்களும் வந்தாலன்றி, "வெற்றி..வெற்றி" என்று கூவுவது வெட்டி வேலை தான் ! So  யார் மனதில் என்னவென்று அறிந்திட நிச்சயமாய்க் காத்திருப்போம் !! Fingers crossed as always !!

ரைட்டு..இக்கட ஒரு கேள்வியுமே : 

ஸ்டெர்ன் # 4 அடுத்த வருடத்தின் சந்தாவினில் ஒரு அங்கமாகிடலாமா ? அல்லது ஓரமாய் சைக்கிள் விட்டுக்கொண்டிருப்பவர் ஓரத்திலேயே பயணித்து வரட்டும் என்பீர்களா ? 

And நான் கிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே : 

SMASHING '70s நடப்பாண்டுக்கு ; அடுத்தாண்டினில் அதே க்ளாஸிக் நாயகர்களுடன் '60s  பயணம் என்பதால் - ஜம்போவின் சீசன் # 5 அறிவித்திடவில்லை ; and அறிவிக்கும் உத்தேசமும் இந்த நொடி வரை இல்லை ! பட்ஜெட் சார்ந்த விசனம் பிரதான காரணம் என்பதோடு - இந்த one shot வரிசைகளில்  கதைத்தேடல்களானவை இரு முனைகளும் கூரான கத்தி மீது கதக்களி ஆடுவதற்குச் சமானம் என்பதை சீசன் 4 நன்றாகவே உணர்த்தியிருந்தது - மாட்டாவும், ஜெரோனிமோவும் பொரித்த முட்டைகளின் ரூபங்களில் ! இங்கே தோல்விகளுக்கு கிஞ்சித்தும் இடங்களில்லை எனும் பொழுது, 200 % உத்திரவாதம் தரும் கதைகளாய் தொடரும் காலங்களில் தேடிட அவசியமாகிடும்  ...and அது சொல்வதற்குச் சுலபம் - நடைமுறையில் கஷ்டமோ, கஷ்டம் ! So வேணாமே விஷப்பரீட்சைகள் !! என்று safe ஆன ஜானர்களில் பயணிப்போமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் !

Bye all ...ஜூன் இதழ்களை தொடர்ந்து அலசிடலாமே - ப்ளீஸ் ! Have a cool Sunday ! See you around !


Wednesday, June 01, 2022

போவோமா கென்யாவுக்கு ?

நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் இல்ல 'விலா'வைச் சிறப்பிக்க கவிஞரின் பூர்வீகம் பக்கமாய்ப் போன இடத்தில், மருந்துக்கும் இன்டர்நெட் நஹி ! 2G டவரோடு மோதுவது - மெபிஸ்டோவுடன் மோதுவதைக் காட்டிலும் ஆபத்தானது என்பதால், இன்று மாலை வீடு திரும்பும் வரைக்கும் மௌனமே தேவலாம் என்றிருக்க வேண்டிப் போனது !! 

நேற்றைக்கே உங்களின் கூரியர் டப்பிக்கள் கிளம்பியிருக்க, இன்றைக்குப் பரவலாய் பட்டுவாடா ஆகியிருக்க வேண்டும் தான் ; ஆனால் இங்கே பதிவாகியுள்ள பின்னூட்டங்களைக் கொண்டு கணிக்கும் போது பூசாரிகள் வரம் அருள முனைந்திடவில்லை என்பது புரிகிறது ! So உங்களின் கென்யா flight tickets நாளைய காலையிலாவது கதவைத் தட்டி நிற்குமென்று எதிர்பார்த்திடுவோம் ! நமது டாக்டர் ராஜா சார் அதற்குள் கென்யப் பயணத்தைப் பூர்த்தி செய்து ; 'வெற்றி' என்று கொண்டாடிய கையோடு, sci-fi பாயசத்துக்கு ஜவ்வரிசி ; முந்திரி ; ஏலக்காய் ; சர்க்கரை என்று கொள்முதலும் செய்து முடித்து விட்டார் தான் ! ஆனால் அவரது வேகத்துக்கு நண்பர்கள் ஈடு கொடுத்தல் சுலபமே அல்ல எனும் போது, 'பெரும்பான்மைப் பாயசம்' என்ன மாதிரியான ரகமாய் இருக்கப் போகிறதென்பதைத் தெரிந்திட சற்றே பொறுத்திருக்க வேண்டும் தான் ! இயன்ற மட்டிலும் தத்தம் வாசிப்புகளின் வரிசைக்கிரமங்களில் கென்யாவினை முன்னணியில் இருத்திட்டால் - சட்டுப்புட்டென்று ரிஜல்ட்கள் தெரிந்திட வாய்ப்புண்டு ! Fingers crossed !! 

And இம்மாதத்தின் ஸ்டெர்ன் ஆல்பமுமே என்ன மாதிரியான ரியாக்ஷன்களை வரவழைத்திடவுள்ளதென்பதை அறிந்திட ஆவல் !  இது மாதிரியான off beat கதைகள் ஸ்கோர் செய்திட்டால், எப்போதுமே ஒரு எக்ஸ்டரா மிடறு குஷி ஆட்கொள்வதுண்டு ; இதுவோ செம off beat ஆல்பம் எனும் போது இங்குமே ஆர்வ மீட்டர் உச்சத்தில் ! So இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டுமாவது சிலபல அடுக்களைகளிலும், கிணற்றடிகளிலும் நம்மாட்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாய் சுதந்திரம் கிட்டிட புனித தேவன் மனிடோவை வேண்டிக் கொள்கிறேன் ! And கிடைக்கக்கூடிய அந்த அவகாசங்களில் செல்(ல)போன்களை நொண்டிடாது 'பொம்ம புக்' நோண்டல்களுக்குள் நீவிர் பிஸியாகிடவுமே வேண்டுதல்கள் ! 

Bye for now !! See you around...happy reading !!

P.S : இம்மாதத்து இதழ்கள் சார்ந்த உங்களின் பின்னூட்டங்கள் முந்தைய பதிவினில் இருப்பவற்றை சிரமம் பாராது இங்கே transfer ப்ளீஸ் !

And online listings நேற்று முதலே ரெடி

https://lioncomics.in/product/june-pack-2022/

https://lion-muthucomics.com/latest-releases/955-june-pack-2022.html